Wednesday, November 29, 2023

1034. பஞ்ச காலத்தில் ஒரு அன்னதானம்!

அரசன் வீரவர்மன் அமைச்சருடன் மாறுவேடம் அணிந்து கொண்டு நகர்வலம் கிளம்பினான்.

இருவரும் நெடுந்தூரம் நடந்து ஒரு கிராமப் பகுதிக்கு வந்தனர். 

அந்த ஊரில் இருந்த ஒரு கோயிலின் வாசலில் இருவரும் அமர்ந்தனர்.

கோயில் பூட்டப்பட்டிருந்தது.

"ஏன் அதற்குள் கோயிலைப் பூட்டி விட்டார்கள்? இன்னும் நண்பகல் நேரம் வரவில்லையே!" என்றான் வீரவர்மன்.

"அரசே! இந்தப் பகுதியில் கடும் பஞ்சம் நிலவுகிறது. அதனால் கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். அதனால் அர்ச்சகர் கோயிலைச் சீக்கிரமே பூட்டி விட்டு வீட்டுக்குப் போய் விட்டாரோ என்னவோ!" என்றார் அமைச்சர்.

"பல நாடுகளை வென்று ஒரு குடையின் கீழ் கொண்டு வந்திருப்பவன் என்ற பெருமை எனக்கு இருந்து என்ன பயன்? பஞ்சத்தில் வாடும் மக்களின் துயரை என்னால் தீர்க்க முடியவில்லையே!" என்றான் வீரவர்மன் வருத்தத்துடன்

"அரசே! தங்களால் இயன்ற உதவிகளைத் தாங்கள் செய்துதான் வருகிறீர்கள். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வரியை ரத்து செய்து விட்டீர்கள். அரண்மனை தானியக் கிடங்கிலிருந்து தானியங்களை வழங்கி வருகிறீர்கள். இயற்கையின் விளைவுகளுக்கு ஓரளவுக்குத்தான் நிவாரணம் செய்ய முடியும்!"

அப்போது அங்கே கோயில் அர்ச்சகர் வர, அவரைத் தொடர்ந்து கையில் பெரிய பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு சிலர் வந்தனர். சற்று தூரத்தில் இன்னும் பலர் கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அரசரும் அமைச்சரும் எழுந்து நின்றனர்.

அவர்களைப் பார்த்த அர்ச்சகர், "வாருங்கள்? வெளியூர்க்காரர்களா? அன்னதானம் நடகப் போகிறது. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!" என்றார் கோயிலின் பூட்டைத் திறந்தபடியே.

"அன்னதானமா? இந்தப் பஞ்ச காலத்தில் யார் அன்னதானம் செய்கிறார்கள்?" என்றார் அமைச்சர் வியப்புடன்.

"இந்த ஊரில் உள்ள விவசாயிகள்தான். தினமும் ஒருவர் என்று முறை வைத்துக் கொண்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள்" என்றார் அர்ச்சகர்.

"மழை பெய்யாததால் விளைச்சலே இல்லை என்றார்களே!"

"விளைச்சல் இல்லைதான். ஆயினும் தங்களிடம் இருப்பில் உள்ள தானியங்களைக் கொண்டுதான் அவர்கள் இவ்வாறு அன்னதானம் செய்கிறார்கள். அத்துடன் மழை இல்லாதபோதும் உலர்நிலத்தில் விளையக் கூடிய தானியங்களைப் பயிர் செய்து அவர்கள் விவசாயம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்!" என்றார் அர்ச்சகர்.

"நன்றி ஐயா! நாங்கள் ஏற்கெனவே உணவு உண்டு விட்டோம். வருகிறோம்" என்று அங்கிருந்து கிளம்பினார் அரசர்.

சிறிது தூரம் வந்ததும், "அமைச்சரே! பல குடைகளின் கீழ் உள்ள நாடுகளை ஒரு குடைக்கீழ் ஆளும் என்னைப் போன்ற பல அரசர்களும் இந்த ஊரில் உள்ள ஒரு விவசாயியின் குடையின் கீழ்தான் வர வேண்டும்" என்றான் வீரவர்மன்.

குறள் 1034:
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

பொருள்: 
உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1033. தொழிலதிபரின் செயல்!

"நம்ம கம்பெனியோட இருபத்தைந்தாவது ஆண்டு விழாவை எப்படிக் கொண்டாடலாம்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்" என்றார் தாமோ இண்டஸ்டிரீஸின் நிர்வாக இயக்குனர் தாமோதரன்.

"பிரமாதமாக் கொண்டாடிடலாம் சார். யாராவது ஒரு வி ஐ பியை சிறப்பு விருந்தினரா அழைக்கலாம்" என்றார் பொதுமேலாளர் ராஜேந்திரன்.

"விஐபியைத்தான் கூப்பிடணும். ஆனா வேறு வகை விஐபி!" என்றார் தாமோதரன் சிரித்துக் கொண்டே.

தாமோ இண்டஸ்டிரீஸின் இருபத்தைந்தாவது ஆண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.

தாமோதரன் மைக் முன் வந்தார்.

"நான் படிச்சுட்டு ஒரு தொழிலை ஆரம்பிச்சு நடத்திக்கிட்டிருக்கேன். ஆனா என்னோட பள்ளியில படிச்ச கேசவன் விவசாயத்தில ஈடுபட்டிருக்கார். என்னோட வேண்டுகோளுக்கு இணங்க அவர் இந்த விழாவுக்கு வந்திருக்கார். அவரை மேடைக்கு அழைக்கிறேன். எங்கள் பொது மேலாளர் ராஜேந்திரன் அவரை மேடைக்கு அழைத்து வருவார்."

தாமோதரன் சைகை காட்ட, ராஜேந்திரன் கீழே இறங்கிச் சென்று முதல் வரிசையில் அமர்ந்திருந்த கேசவனை மேடைக்கு அழைத்து வந்து அமரச் செய்தார்.

கேசவன் இருக்கையில் அமர்ந்ததும், அவர் அருகில் சென்ற தாமோதரன் யாரும் எதிர்பாராத விதத்தில் அவர் காலில் விழுந்து வணங்கினார்.

பதறிப் போய் இருக்கையிலிருந்து எழுந்த கேசவன், "தாமோதரா, என்னடா இது?" என்றார் தாமோதரனைத் தூக்கி நிறுத்தியபடி.

மீண்டும் மைக்குக்கு வந்த தாமோதரன், "உலகில் மக்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் உழவுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் மட்டும்தான் தங்களுக்கான உணவைத் தாங்களே உற்பத்தி செய்வதுடன் மற்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் உணவை உற்பத்தி செய்து வழங்குகிறார்கள். ஆனால் மற்ற துறைகளில் இருப்பவர்கள் மற்றவர்களுக்குச் சேவை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் உணவுப் பொருட்களை வாங்கித்தான் உண்ண வேண்டும். ஒரு தொழில் நடத்தி வரும் நான் கூட என் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்துதான் உணவு உண்ண முடியும். அதனால் உணவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லோராலும் வணங்கப்பட வேண்டியவர்கள். இதை எடுத்துக் காட்டத்தான் என் நண்பனாக இருந்தாலும் உழவுத் தொழில் செய்து எல்லோருக்கும் உணவளிப்பவன் என்பதால் கேசவனின் காலில் விழுந்து வணங்கினேன்!" என்றார்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு

குறள் 1033:
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

பொருள்: 
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Sunday, November 26, 2023

1032. சந்தனுவின் தேர்வு

"இந்தக் கூட்டணியில நாமதான் ரெண்டாவது பெரிய கட்சி. நாம ஒரு நல்ல இலாகாவைக் கேட்டு வாங்கிடணும்" என்றார் கட்சியின் பொதுச் செயலாளர் மனோஜ் குமார்.

"ஆமாம் தலைவரே. நம்ம கட்சிக்கு எவ்வளவு அமைச்சர் பதவி கொடுக்கப் போறாங்கன்னு தெரியல. ஆனா உங்களுக்கு நிதி, உள்துறை, பொதுப்பணித் துறை மாதிரி ஒரு முக்கியமான துறையை நாம கேட்டு வாங்கிடணும்" என்றார் கட்சியின் துணைத்தலைவர்.

"பார்க்கலாம்" என்றார் கட்சித் தலைவர் சந்தனு.

ந்தனுவின் கட்சிக்கு  அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. சந்தனு துணை முதல்வராக ஆக்கப்பட்டார். அவர் கட்சிக்கு நிதி, பொதுப்பணித் துறை, போக்குவரத்து, விவசாயம் ஆகிய துறைகள் வழங்கப்பட்டன.

"என்ன தலைவரே இது? முக்கியமான துறைகளை மத்தவங்களுக்குக் கொடுத்துட்டு நீங்க விவசாயத் துறையை எடுத்துக்கிட்டிருக்கீங்க! துணை முதல்வர்னா ஒரு சக்தி வாய்ந்த துறை உங்ககிட்ட இருக்க வேண்டாமா?" என்றார் தாமோதர். 

"இல்லையே! ரொம்ப முக்கியமான துறையைத்தானே நான் எடுத்துக்கிட்டிருக்கேன்!" என்றார் சந்தனு.

"என்ன சொல்றீங்க? விவசயத்துறை அமைச்சரா உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கும்?"

"ஒரு வண்டி ஓட சக்கரங்கள் மற்ற பாகங்கள் எல்லாம் வேணும். ஆனா வண்டியில ரொம்ப முக்கியமான பாகம் அதோட அச்சாணிதான். அச்சாணி இல்லேன்னா வண்டி ஓடாது. பல தொழில்கள் செய்யற மக்கள் இருக்காங்க. அவங்க எல்லாரையும் தாங்கிப் பிடிக்கறது விவசாயிகள்தான். அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு வேணுங்கறதை செஞ்சு கொடுத்து விவசாயத்தை வளம் பெற வச்சு அதன் மூலமா எல்லா மக்களுக்குமே நன்மை செய்யக் கூடிய வாய்ப்பு இந்தத் துறையிலதானே இருக்கு? அதனாலதான் விவசாயத் துறையை நான் தேர்ந்தெடுத்தேன்" என்றார் சந்தனு.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு

குறள் 1031:
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

பொருள்: 
உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Saturday, November 25, 2023

1031. சென்னையில் ஒரு வேலை

"என்னப்பா, உங்கப்பாவை வயல்ல தனியாப் பாடுபட விட்டுட்டு நீ சென்னைக்குப் போய் வேலை தேடப் போறியாமே!" என்றார் சக்திவேல்.

"மாமா! நாங்க சின்ன விவசாயிங்க. எங்களுக்கு விவசாயம் கட்டுப்படியாகல. நானும் நாலைஞ்சு வருஷமா எங்கப்பாவோட சேர்ந்து வயல்ல வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன். விளைச்சல் நல்லா இருந்தாலே கையில ஒண்ணும் நிக்கறதில்ல. விளைச்சல் சரியா இல்லேன்னா கடன்காரங்களாத்தான் ஆக வேண்டி இருக்கு. அப்புறம் அந்தக் கடனைத் தீர்க்கவே ரெண்டு மூணு வருஷம் பாடுபட வேண்டி இருக்கு. அதுக்குள்ள மறுபடி விளைச்சல் பாதிக்கப்பட்டா கடன் அதிகமாகிக்கிட்டே போகுது. இதுக்கு ஒரு விடிவு வேண்டாமா?" என்றான் பழனி.

"இது எல்லா விவசாயிகளுக்கும் இருக்கிற பிரச்னைதாம்ப்பா."

"இருக்கலாம் மாமா. நான் சென்னைக்குப் போய் ஏதாவது வேலை செஞ்சு சம்பாதிச்சா குடும்பத்துக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்."

"சரி. செய். உன் அப்பாவோட நண்பன்ங்கறதால உன் அப்பா தனியே கஷ்டப்படுவானேங்கற கவலையில உங்கிட்ட பேசினேன். சென்னையில உனக்கு நல்ல வேலை கிடைச்சு நீ நிறைய சம்பாதிக்கணும்னு வாழ்த்தறேன்" என்றார் சக்திவேல்.

சென்னையில் பழனிக்கு ஒரு தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. சுமாரான சம்பளம்தான். ஆயினும் எட்டு மணி நேர வேலைக்குப் பிறகு தங்கும் அறைக்கு வந்து நிம்மதியாகப் பொழுதைக் கழிக்கும் வாழ்க்கை பழனிக்குப் பிடித்திருந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு தொழிற்சாலையில் பணிகள் குறைய ஆரம்பித்தன. வியாபாரம் சரியாக இல்லாததால் தொழிற்சாலை விரைவிலேயே மூடப்படும் என்று தொழிலாளர்களிடையே பேச்சு எழுந்தது. சில தொழிலாளர்கள் வேறு வேலே தேடிக் கொண்டு போய் விட்டனர்.

வேலை போய் விட்டால் என்ன செய்வது என்ற கவலையில் பழனி இருந்தபோது ஒருநாள் அவன் முதலாளி அவனைத் தன் அறைக்கு அழைத்தார்.

"இன்னும் கொஞ்ச நாள்ள இந்தத் தொழிற்சாலையை மூடிடுவோம். அதுக்கப்புறம் உங்களுக்கெல்லாம் இங்கே வேலை இருக்காது. வேலை போனவங்களுக்கு சட்டப்படி நஷ்ட ஈடு கொடுப்போம். ஆனா நீ சமீபத்திலதான் வேலைக்கு சேர்ந்ததால உனக்கு நஷ்ட ஈடா எதுவும் கிடைக்காது. நீ நல்லா வேலை செய்யறதா மானேஜர் எங்கிட்ட சொல்லி இருக்காரு. நீ கிராமத்திலேந்து வந்தவன், விவசாயத்தில அனுபவம் இருக்கு. செங்கல்பட்டுக்குப் பக்கத்தில எனக்குப் பண்ணை நிலம் இருக்கு. அங்கே உனக்கு வேலை கொடுக்கறேன். நீ ஊர்ல பார்த்த மாதிரி விவசாய வேலை. இதே சம்பளம். என்ன சொல்ற?" என்றார் முதலாளி.

"என்னடா அதுக்குள்ள திரும்பி வந்துட்ட?" என்றார் பழனியின் தந்தை வியப்புடன்.

"இந்த உலகம் விவசாயத்தை நம்பித்தான் இயங்குது. டவுனுக்குப் போனாலும் விவசாயத்தை விட்டுட்டு இருக்க முடியாதுன்னு புரிஞ்சுக்கிட்டேம்ப்பா. இனிமே உன்னோடயே சேர்ந்து நம்ம நிலத்தைப் பார்த்துக்கறேன்" என்றான் பழனி.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு

குறள் 1031:
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

பொருள்: 
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Friday, November 24, 2023

1030. உன்னைப் போல் ஒருவன்!

"பெரியம்மா, எப்படி இருக்கீங்க?" என்றான் சீனு.

"வாப்பா! நீ எப்படி இருக்க?" என்றாள் முத்துலட்சுமி.

"நல்லா இருக்கேம்மா" என்ற சீனு, சற்றுத் தயங்கி விட்டு, "பெரியப்பா போய் ஆறு மாசம் ஆயிடுச்சு இல்ல?" என்றான்.

"ஆமாம். எனக்கு ஆறு வருஷம் ஆன மாதிரி இருக்கு. ஒவ்வொரு நாளும் போகறதுக்குள்ள ஒரு யுகமே போற மாதிரி இருக்கு."

"முருகன், பிரபாகர் எங்கே?"

"அவங்க எப்ப வீட்டில இருந்திருக்காங்க? எங்கேயாவது ஊர் சுத்திக்கிட்டிருப்பாங்க!" என்றாள் முத்துலட்சுமி சலிப்புடன்.

"வேலைக்குப் போறாங்க இல்ல?"

"எங்கே? எங்க மேல இரக்கப்பட்டு ஒத்தர் முருகனுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தாரு. ரெண்டே மாசத்தில அதை விட்டுட்டு வந்துட்டான். பிரபாகர்கிட்ட ஏதாவது வேலைக்குப் போடான்னா நல்ல வேலை கிடைச்சாதான் போவானாம். பிளஸ் டூ கூட பாஸ் பண்ணாதவனுக்கு நல்ல வேலை எங்கே கிடைக்கும்?"

"எப்படிப் பெரியம்மா சமாளிக்கிறீங்க?"

"இருக்கறதை வச்சு ஏதோ ஓட்டிக்கிட்டிருக்கேன். இது எத்தனை நாளைக்கு ஓடும்னு தெரியல. இப்படியே போனா நடுத்தெருவுக்கு வந்துடுவோமோன்னு பயமா இருக்கு. ஆனா என் ரெண்டு பிள்ளைகளுக்கும் இந்தக் கவலை கொஞ்சம் கூட இல்லையே!" என்றாள் முத்துலட்சுமி, பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு.

"பெரியம்மா! தப்பா நினைச்சுக்காதீங்க. இதைச் செலவுக்கு வச்சுக்கஙுக. என்னால முடிஞ்ச சின்னத் தொகை இது" என்றபடியே சில ரூபாய் நோட்டுக்களை முத்துலட்சுமியிடம் நீட்டினான் சீனு.

"உங்கப்பா சின்ன வயசிலேயே போய்ச் சேர்ந்துட்டாரு. ஆனா சின்னப் பையங்களா இருந்த நீயும் தனராஜும் எவ்வளவு பொறுப்பா குடும்பத்தைப் பாத்துக்கறீங்க! கஷ்டப்படற எனக்குக் கூட உதவி செய்யற! என்னோட பிள்ளைகளுக்கு அந்தப் பொறுப்பு இல்லையே! நீ நல்லா இருக்கணும்ப்பா!" என்று கூறியபடியே சீனு கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டாள் முத்துலட்சுமி.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல்வகை

குறள் 1030:
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி

பொருள்: 
துன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத குடும்பம் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டும்போது சாய்ந்து விடும் மரம் போல் விழுந்து விடும்.
குறள் 1031 (விரைவில்)
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Tuesday, November 21, 2023

1029. ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி


"பரம்பரையா நாம வாழ்ந்துக்கிட்டு வர வீடு இப்ப ஏலத்துக்கு வரப் போகுது. நம்மால ஒண்ணுமே செய்ய முடியாதா?" என்றாள் ருக்மிணி.

சீதாராமன் மௌனமாக இருந்தான்.

"வீட்டை அடமானம் வச்சு எதுக்குடா பணம் வாங்கின?" என்றாள் ருக்மிணி கோபத்துடன்.

"பிசினசுக்காக வாங்கினேன். பிசினஸ்ல நஷ்டம் வந்துடுச்சு. அதுக்கு என்ன செய்ய முடியும்?" என்றான் சீதாராமன் அலட்சியமாக.

"எத்தனையோ தலைமுறையா வாழ்ந்த வீட்டை ஏலம் போக விடறது பெரிய பாவம்டா!"

"ஏங்க, அத்தை இவ்வளவு வருத்தப்படறாங்க. வீடு ஏலம் போகாம இருக்க எதுவும் செய்ய முடியாதா?" என்றாள் சீதாராமனின் மனைவி ரமா.

"எங்கேயாவது அஞ்சு லட்ச ரூபா புரட்டிக் கொடு. வீட்டை மீட்டுடலாம்" என்ற சீதாராமன், "அது சரி.இந்த சிவாவை எங்க காணோம்?" என்றான் பேச்சை மாற்றும் விதமாக

"அவனுக்கு ஜுரம்னு படுத்துக்கிட்டிருக்கான். உனக்குதான் வீட்டில என்ன நடக்குதுன்னே தெரியாதே!" என்றாள் ருக்மிணி.

"இல்லை அத்தை. ஜுரத்தோடயே எங்கேயோ வெளியில போயிருக்கான்" என்றாள் ரமா.

"நானும் பத்து நாளா பாத்துக்கிட்டிருக்கேன். வேலைக்குப் போயிட்டு வந்ததும் எங்கேயாவது வெளியில போயிடறான். இன்னிக்கு வேலைக்குப் போகாம வெளியில எங்கேயோ சுத்தப் போயிருக்கான். பொறுப்பு இல்லாத பய!" என்றான் சீதாராமன் கோபத்துடன்.

"பரம்பரையா வந்த வீட்டை அடமானம் வச்சுட்டு அது ஏலம் போகிற நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிற நீ பொறுப்பைப் பத்திப் பேசற. இந்த வீடு மட்டும் ஏலத்துக்குப் போச்சு, நான் விஷத்தைக் குடிச்சு செத்துடுவேன்" என்றாள் ருக்மிணி.

"வீடு ஏலம் போறதைத் தடுக்க முடியாதும்மா!"

"அப்படின்னா என்னை இப்பவே விஷத்தைக் குடிக்கச் சொல்றியா?"

அப்போது அவர்கள் வீட்டுத் தொலைபேசி அடித்தது.

தொலைபேசியை எடுத்துப் பேசிய சீதாராமன், பேசி முடித்து ரிசீவரை வைத்தபின், "சிவா ரோட்டில மயக்கம் போட்டு விழுந்துட்டானாம். ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்களாம்" என்றான் பதற்றத்துடன்.

மூவரும் உடனே மருத்துவமனைக்கு விரைந்தனர்.

"ரொம்ப வீக்கா இருக்காரும்மா. ஜுரம் இருக்கு. அதோட ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்கிட்டிருப்பாரு போல இருக்கு, டீஹைட்ரேட் ஆகி மயக்கம் போட்டு விழுந்திருக்காரு. டிரிப்ஸ் ஏத்தி இருக்கோம். நாளைக்கு வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போகலாம். உடம்பைக் கொஞ்சம் நல்லாப் பாத்துக்கங்க. இந்தச் சின்ன வயசில இவ்வளவு பலவீனமா இருக்கக் கூடாது!" என்றார் மருத்துவர்.

"அவன் குழந்தையா இருந்ததிலிருந்தே ரொம்ப பலவீனமா இருக்கான், டாக்டர். அடிக்கடி உடம்புக்கு ஏதாவது வந்துடுது" என்றாள் ரமா.

"ரெண்டு மூணு நாள் நல்ல ஓய்வு எடுத்துக்கட்டும். அப்புறமா செக் அப்புக்கு அழைச்சுக்கிட்டு வாங்க. என்னன்னு பார்த்து சரி பண்ணிடலாம்" என்றார் மருத்துவர்.

கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த சிவாவின் அருகில் மூவரும் சென்றனர்.

"ஏண்டா ஜுரத்தோட இப்படி அலைஞ்சு உடம்பை இன்னும் கெடுத்துக்கிட்ட?" என்றாள் ரமா ஆதங்கத்துடன்.

சிவா மூவரையும் பார்த்து, "உங்க எல்லாருக்கும் ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி இருக்கு. எதை முதல்ல சொல்லட்டும்?" என்றான்.

"கெட்ட செய்திதான் வந்துக்கிட்டே இருக்கே! நல்ல செய்தி என்ன? அதைச் சொல்லு முதல்ல" என்றாள் ரமா.

"பத்து நாளா அலைஞ்சு என்னோடநண்பர்கள் பல பேரைப் பார்த்து ஒவ்வொருத்தர்கிட்டயும் கொஞ்சம் கடன் வாங்கி அஞ்சு லட்ச ரூபா சேத்துட்டேன். அந்தப் பணத்தை பாங்க்ல கட்டி வீட்டை மீட்டுட்டேன். எல்லாம் முடிஞ்சப்புறம் உங்ககிட்ட சொல்லலாம்னு நினைச்சேன். பாங்க்லேந்து வீட்டுக்கு வரப்பதான் மயங்கி விழுந்துட்டேன். அப்பா! நாளைக்கு நீங்க பாங்க்குக்குப் போய் வீட்டுப் பத்திரத்தை வாங்கிக்கிட்டு வந்துடுங்க" என்றான்.

"இவ்வளவு பொறுப்பா இருந்து குடும்ப மானத்தைக் காப்பாத்தின பிள்ளைக்கு ஏன் உடம்பு இப்படிப் படுத்துதுன்னு தெரியல. கடவுள் புண்ணியத்தில இனிமே உன் உடம்பும் சரியாயிடணும்" என்று கூறிப் பேரனின் கரங்களை அன்புடன் பற்றிக் கொண்டாள் ருக்மிணி.

"அது சரி. கெட்ட செய்தின்னு சொன்னியே, அது என்ன?" என்றாள் ரமா கவலையுடன்.

"இனிமே என்னால வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுக்க முடியாது. என் சம்பளப் பணம் பூராவும் கடனை அடைக்கத்தான் போகும்!"

"கெட்ட செய்தி என்னவா இருக்குமோன்னு பயந்துக்கிட்டிருந்தேன். என் வயத்தில பாலை வார்த்த. உன் அப்பா கொடுக்கற பணத்திலேயே குடும்பத்தை நடத்திக்கறேன். நீ கடனை அடைச்சு வீட்டை ஏலம் போகாம தடுத்ததே பெரிய விஷயம். உன் உடம்பு சரியாகி நீ நல்ல தென்போட இருக்கணுங்கறதுதான் இப்ப என்னோட ஒரே கவலை" என்றாள் ரமா." 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல்வகை

குறள் 1029:
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.

பொருள்: 
தன் குடிக்கு வரக் கூடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.
குறள் 1030 (விரைவில்)
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Monday, November 20, 2023

1028. பகுதி நேர வேலை

"முகுந்தன் எங்கே போயிருக்கான்?" என்றார் பாலகிருஷ்ணன்.

"வேலைக்கு!"என்றாள் அவர் மனைவி தங்கம்.

"வேலைக்கா? அவன் கம்பெனியில நைட் ஷிஃப்ட் இருக்கா என்ன?"

"இல்லை. இது வேற வேலை. ஒரு கால் சென்ட்டர்ல பார்ட் டைம் வேலை. ராத்திரி 8 மணியிலேந்து 12 மணி வரைக்கும்."

"அவனுக்கு புத்தி கெட்டுப் போச்சா என்ன? பகல்ல வேலை பார்த்துட்டு ராத்திரியிலேயும் வேலை பாக்க முடியுமா என்ன?"

"அவன் வேலை காலையில ஒன்பது மணியிலேந்து சாயந்திரம் அஞ்ச மணி வரைக்கும்தானே? ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்துடறான். எட்டரை மணிக்கு கால் சென்ட்டர்லேந்து கார் வந்து அழைச்சுக்கிட்டுப் போயிடும். பன்னிரண்டரை மணிக்குக் கொண்டு விட்டுடும். அதுக்கப்புறம் ஏழு மணி நேரம் தூங்கலாமே, அது போதாதான்னு கேக்கறான்."

"அவன் ஒரு கம்பெனியில மானேஜரா இருக்கான். அப்படி ஒரு பதவியில இருந்துக்கிட்டு கால் சென்ட்டர்ல பார்ட் டைம் வேலை பாக்கறது கௌரவமாவா இருக்கு?"

"கௌரவத்தைப் பார்த்தா காசு வராது. ஆனா இதில கௌரவக் குறைச்சலா எதுவும் இல்லை. அந்த கால் சென்ட்டர்ல ஃபிரெஞ்ச் தெரிஞ்சவங்க வேணும்னு விளம்பரம் கொடுத்திருந்தாங்க. இவன் காலேஜில ஃபிரெஞ்ச் படிச்சதால அந்த வேலைக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கான். அவங்க இன்டர்வியூவுக்குக் கூப்பிட்டாங்க. இன்ட்டர்வியூவில, என்னால ராத்திரி 8 மணியிலேந்து 12 மணி வரையிலேயும்தான் வேலை செய்ய முடியும்னு சொல்லி இருக்கான். அவங்களும் ஒத்துக்கிட்டு வேலை கொடுத்திருக்காங்க."

"என்ன இருந்தாலும் ஒரு கம்பெனியில மானேஜரா இருந்துக்கிட்டு இது மாதிரி கால் சென்ட்டர்ல பார்ட் டைம் வேலை செய்யறது கௌரவமானது இல்லை. பணம் கிடைக்குதுங்கறதுக்காக இப்படிச் செய்யலாமா? அதோட, அவன் முதலாளிக்கு இது தெரிஞ்சா அவர் அவனை வேலையை விட்டு அனுப்பிடுவாரு."

"அவன் வேலை பாக்கறது ஒரு சின்ன கம்பெனி. மானேஜர்னு பேர்தான். ஆனா சம்பளம் குறைச்சல். அதனால கூடுதல் வருமானத்துக்காக இதைச் செய்யறான். அவன் முதலாளிகிட்ட சம்மதம் வாங்கினப்புறம்தான் இந்த வேலைக்குப் போறான். அதனால அவன் வேலைக்கு ஒண்ணும் ஆபத்து வராது. அது சரி. நீங்க போயிட்டு வந்த விஷயம் என்ன ஆச்சு?"

"வேலை கிடைக்கல" என்றார் பாலகிருஷ்ணன் சோர்வுடன்.

"உங்க மேலதிகாரியோட சண்டை போட்டுட்டு ஒரு நல்ல வேலையை விட்டுட்டு வந்துட்டீங்க. வேற வேலை கிடைக்க மாட்டேங்குது. வருமானம் இல்லாம குடும்பம் எப்படி ஓடும்? அதனாலதான் முகுந்தன் தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல, குடும்பம் நல்லா இருக்கணுங்கறதுக்காக ராத்திரியிலேயும் வேலைக்குப் போறான். நீங்க அதில குற்றம் கண்டுபிடிக்கறீங்க!" என்றாள் தங்கம் ஆற்றாமையுடன்..

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல்வகை

குறள் 1028:
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.

பொருள்: 
குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமை கெடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Sunday, November 19, 2023

1027. கடைக்குட்டி!

சங்கரனின் குடும்பத்துக்கு அன்றைய காலைப் பொழுது நல்லதாக விடியவில்லை.

காலை ஆறு மணிக்கு வாசல் கதவு தட்டப்பட, கதவைத் திறந்தாள் சங்கரனின் மனைவி கல்யாணி.

வாசலில் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் சிரித்துக் கொண்டே "சார் இருக்காரா?" என்றான்.

"நீங்க யாரு?"

"சாருக்கு ரொம்ப வேண்டியவங்க. நாகராஜ்னு சொல்லுங்க, தெரியும்!" என்றான் அவன்.

"உள்ளே வாங்க" என்ற கல்யாணி, அவர்களை முன்னறையில் உட்காரச் சொல்லி விட்டு தூங்கிக் கொண்டிருந்த சங்கரனை எழுப்ப உள்ளே சென்றாள்.

தன்னை நாகராஜ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன் மட்டும் சோ்பாவில் உட்கார, மற்றொருவன் நின்று கொண்டிருந்தான்..

முன்னறையில் அமர்ந்திருதவர்களைக் கண்டதும், தூக்கத்திலிருந்து எழுந்து வந்த சங்கரனின் முகம் வெளிறியது.

"ஏன் வீட்டுக்கு வந்தீங்க?" என்றார் சங்கரன் பலவீனமான குரலில்.

"பின்னே? கடன் வாஙு்கி சீட்டாடிட்டுக் கடனைத் திருப்பிக் கொடுக்காம நீ வீட்டுக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டிருந்தா, நான் சும்மா உக்காந்துக்கிட்டிருக்கணுமா? பணத்தை எப்ப திருப்பிக் கொடுக்கப் போற?" என்றான் நாகராஜ்.

"கொடுத்துடறேன். நீங்க முதல்ல கிளம்புங்க, என் மனைவி மகன்களுக்குத் தெரிஞ்சா என்னைக் கேவலமா நினைப்பாங்க."

"நீ கேவலமனவன்தானேடா? நானே அவங்களைக் கூப்பிட்டுச் சொல்றேன். உள்ளே யாரு? எல்லாரும் வெளியில வாங்க!" என்று உரத்த குரலில் கூறினான் நாகராஜ்.

உள்ளிருந்து கல்யாணியும் சங்கரனின் மூன்று மகன்களும் முன்னறைக்கு வந்தனர்.

"இந்தப் பெரிய மனுஷன் கடன் வாங்கி சீட்டாடிக்கிட்டிருந்தான். எனக்கு மொத்தம் அம்பதாயிரம் ரூபா தரணும். அதை உடனே கொடுக்கலேன்னா என்ன ஆகும் தெரியுமா?" என்றான் நாகராஜ்.

சங்கரன் தலைகுனிந்து நிற்க, மற்ற நான்கு பேரும் பயத்துடன் நாகராஜின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நாகராஜ் தன் அருகில் நின்று கொண்டிருந்த ஆளைக் காட்டி, "இவன் இந்த ஊரிலேயே பெரிய ரௌடி. கடனை வசூலிக்கிறதில கில்லாடி. சில பாங்க்ல கூட இவனைப் பயன்படுத்தறாங்க. இவன்கிட்ட பொறுப்பைக் கொடுத்துட்டேன்னா, இவன் என்ன செய்வான்னு எனக்குத் தெரியாது. உங்க வீடு இப்ப இருக்கற மாதிரி இருக்காது. நீங்களும் இப்ப இருக்கற மாதிரி இருக்க மாட்டீங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும். உங்களுக்கு ஒரு வாரம் டயம். வர திங்கட்கிழமைக்குள்ள எனக்குப் பணம் வந்து சேராட்டா, செவ்வாய்க்கிழமை காலையில இவன் உங்க வீட்டுக்கு வருவான்" என்ற நாகராஜ், "வாடா போகலாம்" என்று தன்னுடன் வந்தவனைப் பார்த்துக் கூறி விட்டு எழுந்தான்.

"ஒரு நிமிஷம்!"

நாகராஜ் திரும்பிப் பார்த்தான்.

சங்கரனின் மூன்று மகன்களில் இளையவனாக இருந்தவன்தான் பேசினான்.

"இன்னும் ஒரு வாரத்தில நானே உங்க வீட்டுக்கு வந்து பணத்தைக் கொடுக்கறேன். எங்க வீட்டுக்கு வரது, ரௌடியை வச்சு மிரட்டறது இதெல்லாம் வேண்டாம்!" என்றான் அவன்.

"நீ யாருடா சின்னப்பய? உன் பேச்சை நான் நம்பணுமா?" என்றான் நாகராஜ்.

"மரியாதை வேணும் தம்பி. அப்பதான் உனக்கு மரியாதை கிடைக்கும். இப்பவே என்ன ஆச்சு பாரு. உங்கிட்ட மரியாதையாப் பேசிக்கிட்டிருந்த என்னையே வா, போன்னு பேச வச்சுட்ட. முதல்ல இடத்தைக் காலி பண்ணு!" என்றான் சங்கலனின் இளைய மகன்.

நாகராஜ் பேசாமல் அங்கிருந்து அகன்றான்.

நாகராஜ் சென்றதும், கல்யாணி தன் இளைய மகனைப் பார்த்து, "ஏண்டா மணி, உன்னோட ரெண்டு அண்ணன்களும் சும்மா இருக்காங்க. நீ பாட்டுக்குப் பணம் தரேன்னு சொல்லிட்ட. எப்படிக் கொடுக்கப் போற!" என்றாள்.

"ஆமாம். இவர் பெரிய வேலையில இருக்காரு இல்ல? இவருக்கு பாங்கல பர்சனல் லோன் கொடுப்பாங்க. அதை வாங்கி அந்த ரௌடிகிட்ட கொடுத்துக் கடனை அடைச்சுடுவாரு!" என்றான் சங்கரனின் இரண்டாவது மகன் சுதாகர்.

"நீங்க ரெண்டு பேரும் நல்ல வேலையில இருக்கீங்க. எனக்குப் படிப்பு வராத்தால ஒரு மெகானிக் ஷாப்ல வேலை செய்யறேன். நான் ரொம்ப நல்லா வேலை செய்யறதைப் பார்த்துட்டு என் முதலாளி, 'உனக்கு எந்த உதவி வேணும்னாலும் கேளு, செய்யறேன். ஆனா வேலையை விட்டுப் போயிடாதே' ன்னு எங்கிட்ட அடிக்கடி சொல்லுவாரு. அதனால அவர்கிட்ட அம்பதாயிரம் ரூபா அட்வான்ஸ் கேட்டாக் கண்டிப்பாக் கொடுப்பாரு. அஞ்சாறு மாசம் சம்பளமே வாங்காம கூட அந்தக் கடனை அடைச்சுடுவேன்" என்றான் மணி.

அனைவரும் மௌனமாக இருந்தனர்.

மணி தன் அப்பாவிடம், "அப்பா! இந்த சீட்டாடறதையெல்லாம் இனிமே விட்டுடுங்க. இன்னிக்கு நடந்த மாதிரி இன்னொரு தடவை நடக்கக் கூடாது" என்றான் சற்று கடுமையான குரலில்.

"ஆமாம்ப்பா! மணி சொல்றதைக் கேளுங்க. அவன் நம்ம குடும்பத்தோட மானத்தைக் காப்பாத்தி இருக்கான். அவன் கடைக்குட்டியா இருந்தாலும் உங்ககிட்ட  இப்படிச் சொல்ல எங்க ரெண்டு பேரை விட அவனுக்குத்தான் அதிக உரிமை இருக்கு!" என்றான் சங்கரனின் மூத்த மகன் தனசேகர் தம்பியைப் பெருமையுடன் பார்த்தபடி.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல்வகை

குறள் 1027:
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.

பொருள்: 
போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல்தான் பொறுப்பு உள்ளது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Friday, November 17, 2023

1026. அல்லி ராஜ்ஜியம்!

"மூத்த பையன்னு பேரு. ஆனா எனக்கு இந்த வீட்டில எந்த மதிப்பும் இல்லை. இங்கே அல்லி ராஜ்ஜியம்தானே நடக்குது!" என்றான் சரவணன்.

"இரைஞ்சு பேசாதேடா. பவித்ரா காதில விழுந்துடப் போகுது!" என்றாள் அவன் தாய் திலகவதி.

"விழுந்தா என்ன? அவகிட்ட எனக்கு என்ன பயம்? அவ என் தங்கைதானே?"

"உன் தங்கைதான். ஆனா நீ அல்லி ராஜ்ஜியம்னெல்லாம் சொன்னா அவ சும்மா இருப்பாளா? எனக்கே கோவம் வருதே!"

"உனக்கு ஏன் கோபம் வரணும்?"

"அது என்ன அல்லி ராஜ்ஜியம்? பெண்கள் ஆளக் கூடாதா?  இந்தக் காலத்தில கூட இப்படியெல்லாம் பேசுவாங்களா?"

"சரிம்மா! நான் அல்லி ராஜ்ஜியம்னு சொன்னது தப்புதான். ஆனா பொதுவா ஒரு குடும்பத்தில மூத்த பையனுக்கோ, மூத்த பொண்ணுக்கோதானே அதிக மதிப்பு இருக்கணும்? ஆனா இந்த வீட்டில எல்லாரும் என்னை ஒதுக்கிட்டு என் தங்கைக்குத்தானே முக்கியத்துவம் கொடுக்கறீங்க?"

"உன்னை யாரும் ஒதுக்கி வைக்கலடா! உன் தங்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கறோம்னா அவ இந்தக் குடும்பப் பொறுப்பைத் தானே முன்வந்து ஏத்துக்கிட்டா. நீ அப்படிச் செய்யலியே!"

சரவணன்  மௌனமாக இருந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் அவன் மனிதில் வந்து போயின.

ப்போது சரவணன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். பவித்ரா பள்ளி இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். சரவணனின் தந்தை பரமசிவம் தினமும் குடித்து விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சம்பளத்தைத் திலகவதியிடம் கொடுத்தாலும், குடிப்பதற்கு அவளிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பணத்தைக் கேட்டு வாங்கிக் கொள்வார்.

ஒருநாள் பவித்ரா திலகவதியிடமிருந்து மொத்தப் பணத்தையும் வாங்கி வைத்துக் கொண்டாள். "இனிமே யாருக்கு என்ன செலவுன்னாலும் எங்கிட்டதான் கேட்டு வாங்கிக்கணும்!" என்றாள்.

குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்ட பரமசிவம், பணம் தன் பெண்ணிடம் போய் விட்டது என்று தெரிந்ததும், அவளிடம் சென்று கேட்டார்.

"குடிக்கறதுக்குப் பணம் கிடையாது அப்பா! அதோட இல்ல, இனிமே நீ குடிச்சுட்டு வந்தா, நான் உன்னோட பேச மாட்டேன்" என்றாள்.

"என்னம்மா குழந்தை மாதிரி பேசற?" என்றார் பரமசிவம்.

ஆனால் மனைவியிடம் காட்டிய அதிகாரத்தையும், கடுமையையும் அவரால் மகளிடம் காட்ட முடியவில்லை..

அதற்குப் பிறகு பரமசிவம் சில சமயம் நண்பர்களிடம் கடன் வாங்கிக் குடித்து வந்தார். ஆனால் பவித்ரா தான் சொன்னபடியே அவரிடம் பேசாமல் இருந்தது நாளடைவில் அவரைக் குடிப் பழக்கத்தைக் கைவிட வைத்தது.

"அவ பொண்ணுங்கறதால அப்பா கேட்டுக்கிட்டார். அதையே நான் சொல்லி இருந்தா கேட்டிருப்பாரா? என்னை அடிச்சுப் பணத்தைப் பிடுங்கிக்கிட்டுப் போயிருக்க மாட்டாரா" என்றான் சரவணன்.

"சும்மா சாக்கு சொல்லாதேடா! நீ அதற்கான முயற்சியே செய்யல. ஆனா இப்படியே போனா நம்ம குடும்பம் சீரழிஞ்சுடும்னு நினைச்சு, பவித்ரா துணிச்சலாச் செயல்பட்டா. அதனாலதான் நானும் அப்பாவும் அவ பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கறோம். அதுக்காக உனக்கு முக்கியத்துவம் கொடுக்காம இல்ல. ஏன், பவித்ராவே உனக்கு நிறைய மதிப்புக் கொடுத்துக்கிட்டுத்தான் இருக்கா" என்றாள் திலகவதி.

அப்போது உள்ளிருந்து வந்த பவித்ரா, சரவணனிடம், "அண்ணா! நாளைக்கு காலேஜ் லீவு. என் நண்பர்கள் என்னை சினிமாவுக்குக் கூப்பிடறாங்க. போயிட்டு வரட்டுமா?" என்றாள்.

"என்னை ஏன் கேக்கற?" என்றான் சரவணன்.

"என்ன அண்ணா இது? அப்பா ஊர்ல இல்ல. நீதானே பெரியவன்? உன்னைத்தானே கேட்கணும்?" 

"சரி, போயிட்டு வா. என்ன சினிமா?" என்றான் சரவணன்.

"அல்லி அர்ஜுனா" என்றாள் பவித்ரா.

அதைக் கேட்டு அம்மாவும், அண்ணனும் ஏன் சிரித்தார்கள் என்று அவளுக்குப் புரியவில்லை.

பொருட்பால்
குடியியல்ன் தாய் திலகவதி
அதிகாரம் 103
குடிசெயல்வகை

குறள் 1026:
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

பொருள்: 
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வதாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Thursday, November 16, 2023

1025. இன்னும் ஒரு கடமை

"சண்முகம்! உங்கப்பா பொறுப்பு இல்லாம இருந்தான். நீதான் சின்ன வயசிலேந்தே பொறுப்பேத்துக்கிட்டுக் குடும்பத்தை கவனிச்சுக்கிட்ட. உன் தம்பியையும், தங்கையையும் படிக்க வச்சுக் கல்யாணம் பண்ணி வச்ச. உங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே போய்ச் சேந்துட்டாங்க. உனக்கும் வயசாகிக்கிட்டு இருக்கு. நீயும் ஒரு கல்யாணம் பண்ணிக்க வேண்டாமா?" என்றாள் தனலட்சுமி.

"பண்ணிக்கறேன் பாட்டி. எனக்கு இன்னும் ஒரு கடமை இருக்கு. அதை முடிச்சுட்டுப் பண்ணிக்கறேன்" என்றான் சண்முகம்.

"வேற என்ன கடமை?"

"சித்தி பொண்ணு கமலாவுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டாமா?"

"உங்கப்பா விவஸ்தை இல்லாம சின்ன வீடு வச்சுக்கிட்டான். இப்ப அவனே போய்ச் சேர்ந்துட்டான். அவளோட பொண்ணுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டியது உன் பொறுப்பு இல்லை. தேவையில்லாம அதையெல்லாம் இழுத்து விட்டுக்காதே!" என்றாள் 

"இல்லை பாட்டி. அப்பா இருந்திருந்தா அவரோட பொண்ணுக்கு அவர் கல்யாணம் செஞ்ச வச்சிருக்க மாட்டாரா? அவர் இல்லாதப்ப அவரோட கடமையை நான் நிறைவேற்ற வேண்டாமா?" என்றான் சண்முகம்.

அப்போது அவர்கள் தெருவில் இருந்த ஒரு வீட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து, "அண்ணா! அம்மா ஸ்வீட் பண்ணினாங்க. உங்களுக்குக் கொஞ்சம் கொடுத்து அனுப்பி இருக்காங்க" என்றபடியே சண்முகத்திடம் ஒரு டப்பாவை நீட்டினாள்.

'ஊர்ல இருக்கறவங்கள்ளாம் என் பேரனை சொந்தக்காரனா நினைச்சு அன்பு செலுத்தறாங்கன்னா அவன் அவங்கிட்ட அந்த அளவுக்கு அன்பு காட்டிக்கிட்டிருக்கான்னு அர்த்தம். அப்படி இருக்கறவன் சொந்தக் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாம இருப்பானா என்ன?' என்று தன் பேரனைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொண்டாள் தனலட்சுமி.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல்வகை

குறள் 1025:
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

பொருள்: 
குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1024. புவனாவின் வியப்பு!

புவனாவுக்குப் பதினைந்து வயதானபோது அவளுடைய தாய் இறந்து போனாள்.

புவனாவின் தம்பி ரவீந்திரனுக்கு வயது பன்னிரண்டு. அவனுக்குக் கீழ் பத்து வயதில் மாலதி, ஏழு வயதில் சேகர். 

புவனாவின் தந்தை கோவிந்தன் ஒரு சாதாரண வேலையில் இருந்தார். தன் சம்பளத்தை அவர் மனைவியிடம் கொடுத்து விடுவார். அவள்தான் அவர் கொடுத்த சிறு தொகையை வைத்துக் கொண்டு எப்படியோ குடும்பச் செலவுகளைச் சமாளித்து வந்தாள்.

மனைவி இறந்ததும், குடும்பத்தை நடத்த முடியாமல் கோவிந்தன் தத்தளித்தார். தான் கொடுத்து வந்த சிறிய தொகையில் மனைவி எப்படிக் குடும்பச் செலவுகளைச் சமாளித்து வந்தாள் என்று அவருக்கு வியப்பாக இருந்தது.

ஒருபுறம் குடும்பப் பொருளாதாரத்தைச் சமாளிக்க வேண்டிய சவால், மறுபுறம் நான்கு குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு.

த்தாம் வகுப்புப் பரீட்சை எழுதியதும், வீட்டு நிர்வாகத்தை புவனா ஏற்றுக் கொண்டாள்.

பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் ,புவனா தான் மேலே படிக்கப் போவதில்லை என்று தன் தந்தையிடம் கூறி விட்டாள்.

"பிளஸ் டூ வரையிலாவது படிக்க வேண்டாமா?" என்றார் கோவிந்தன்.

"வேண்டாம்பா. வீட்டைப் பாத்துக்க ஒரு ஆள் வேண்டாமா? நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்னுதான் நான் இந்த முடிவை எடுத்திருக்கேன்!" என்றாள் புவனா.

வீட்டு நிர்வாகத்தை புவனா கவனித்துக் கொண்டது கோவிந்தனுக்குப் பெரிய சுமை குறைந்தது போல் இருந்தது. 

தன் பதினெட்டாம் வயதில் தானே முயன்று ஒரு வேலை தேடிக் கொண்டாள் புவனா. ஒரு சிறிய நிறுவனத்தில் பியூன் வேலை.

"நீ சின்னப் பொண்ணு. அதுக்குள்ள வேலைக்குப் போகறேங்கற. அதுவும் பியூன் வேலைக்கு ஆண்களைத்தான் எடுப்பாங்க. உன்னை ஏன் எடுத்திருக்காங்கன்னு தெரியல" என்றார் கோவிந்தன்.

"அப்பா! இந்த கம்பெனியோட எம் டி. ஒரு பெண்மணி. வேலை செய்யறவங்கள்ள நிறைய பேர் பெண்கள்தான். பியூன் வேலைங்கறது ஆஃபீசுக்குள்ளேயே ஃபைல்களை எடுத்துக்கிட்டுப் போறது, அடுக்கி வைக்கறது, பேப்பர்களை ஃபைல்ல போடறது மாதிரியான வேலைகள்தான். கஷ்டமான வேலை இல்லை. உக்காந்து வேலை செய்ய எனக்கு ஒரு மேஜையும் நாற்காலியும் கூடக் கொடுக்கறதா எம் டி சொல்லி இருக்காங்க. சம்பளம் குறைச்சல்தான்னாலும் நம்ம குடும்பத்துக்கு உதவும் இல்ல?" என்றாள் புவனா.

புவனாவுக்கு முப்பது வயதானபோது, ரவீந்திரன் படிப்பை முடித்து வேலைக்குப் போய் விட்டான். மாலதிக்குத் திருமணம் ஆகி விட்டது. சேகரும் படிப்பை முடித்து வேலைக்குப் போகத் துவங்கி இருந்தான்.

"நினைச்சுப் பார்த்தாலே எனக்கு மலைப்பா இருக்கும்மா! உங்கம்மா போனப்புறம் உங்களை எல்லாம் எப்படிக் காப்பாத்தி முன்னுக்குக் கொண்டு வரப் போறேன்னு கவலையா இருந்தது. உன் பதினைஞ்சு வயசிலேயே நீ குடும்பப் பொறுப்பை ஏத்துக்கிட்டு, பதினெட்டு வயசில வேலைக்குப் போய் தம்பி தங்களகளைப் படிக்க வச்சு, மாலதிக்குக் கல்யாணம் செஞ்சு வச்சு... இதெல்லாம் எப்படி நடந்ததுன்னே எனக்கு ஆச்சரியமா இருக்கு!" என்றார் கோவிந்தன்.

"எனக்குக் கூட ஆச்சரியமாத்தான் இருக்குப்பா. அம்மா போனப்புறம், அம்மா இடத்தில இருந்து இந்தக் குடும்பத்தைப் பாத்துக்கணும்னு எனக்குத் தோணிச்சு. அதன்படி செயல்பட ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் எல்லாம் தானே நடந்த மாதிரிதான் எனக்குத் தோணுது. இப்ப கூடப் பாருங்க. படிப்பு இல்லாம, பியூனா இருந்த என்னை எங்க எம் டி தன்னோட பிஏவா வச்சுக்கிட்டிருக்காங்க. இதெல்லாம் எனக்கே ஆச்சரியமா இருக்குப்பா!" என்றாள் புவனா. 

"இனிமே நீ கல்யாணம் செஞ்சுக்கணும்மா! 'அக்காவுக்குக் கல்யாணம் ஆனப்புறம்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்' னு ரவீந்திரன் கண்டிப்பா சொல்லிட்டான்."

"பாக்கலாம்ப்பா! இவ்வளவு விஷயங்கள் தானா நடந்தப்ப அதுவும் நடக்கலாம்!" என்றாள் புவனா சிரித்தபடி.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல்வகை

குறள் 1024:
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

பொருள்: 
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச்செயல் தானே நிறைவேறும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Tuesday, November 14, 2023

1023. தந்தை சொல் மந்திரமில்லை!

"படிச்சு முடிச்சுட்ட. என்ன செய்யப் போற?" என்றார் முகுந்தனின் தந்தை சுப்பிரமணியன்.

"வேலைக்கு முயற்சி பண்ணணும்" என்றான் முகுந்தன்.

"உன்னோட பி ஏ படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்? நான் வேலை செஞ்ச கம்பெனியிலேயே உனக்கு வேலை கொடுக்கறதா சொல்லி இருக்காங்க. அங்கேயே சேந்துக்க!"

"அப்பா, அங்கே சம்பளம் ரொம்ப குறைச்சலா கொடுப்பாங்க. கேரியர் டெவலப்மென்ட்டே இருக்காது. அது மாதிரி சின்ன கம்பெனியில வேலை செஞ்சா அந்த அனுபவத்தை வச்சு வேற நல்ல வேலைக்கும் முயற்சி பண்ண முடியாது."

"அம்பானியும், அதானியுமா உன்னைக் கூப்பிட்டு வேலை கொடுக்கப் போறாங்க? ஒத்தர் வேலை கொடுக்கறேன்னு சொல்றப்ப, அந்த வேலையை ஏத்துக்கறதுதானே புத்திசாலித்தனம்?" 

"எனக்கு ஆறு மாசம் டைம் கொடுங்கப்பா. அதுக்குள்ள எனக்கு நல்ல வேலை கிடைக்கலேன்னா உங்க கம்பெனியிலேயே சேந்துக்கறேன்" என்றான் முகுந்தன்.

"உனக்காக அந்த வேலை காத்துக்கிட்டிருக்குமா என்ன? எப்படியோ போ!" என்றார் சுப்பிரமணியன் கோபத்துடன். 

"நீ சொன்னபடி ஆறு மாசம் ஆச்சு. உனக்கு இன்னும் வேலை எதுவும் கிடைக்கல. என்ன செய்யப் போற?" என்றார் சுப்பிரமணியன்.

"அப்பா! நீங்க கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வச்சீங்க. இனிமேயாவது நாம வசதியா இருக்கணும், உங்களையும், அம்மாவையும் நல்லா வச்சுக்கணும்னு ஆசைப்படறேன். உங்க கம்பெனியில வேலையில சேர்ந்தா, நம்ம வாழ்க்கையில எந்த முன்னேற்றமும் இருக்காது. ஆறு மாசத்தில எனக்கு வேலை கிடைக்கும்னு நினைச்சேன். கிடைக்கல. இன்னும் கொஞ்ச நாள் பார்க்கலாமே!" என்றான் முகுந்தன்.

"நீ சொல்றது சரிதான். ஆனா நமக்கு வேற வழி இல்லையே! உனக்கு வேலை கிடைக்காம போயிடுமோங்கற கவலையிலதான் அப்படிச் சொன்னேன்" என்றார் சுப்பிரமணியன்.

"கவலைப்படாதீங்கப்பா! முயற்சி செஞ்சுக்கிட்டே இருந்தா அதுக்குப் பலன் கிடைக்காம போகாது" என்றான் முகுந்தன்.

அடுத்த மாதமே ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடனான ஒரு வேலைக்கு முகுந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக வேலை உத்தரவு வந்தது.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல்வகை

குறள் 1023:
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

பொருள்: 
என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1022. திலீபனின் முடிவுகள்

திலீபன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவன் தந்தை பரந்தாமன் இறந்து போனார்.

பரந்தாமன் ஊரில் ஒரு கௌவமான மனிதர். அவருக்கு ஊரில் சிறிதளவு நிலம் இருந்தது. அவர் வேலை எதுவும் பார்க்கவில்லை. நிலத்திலிருந்து வந்த வருமானத்தை வைத்து அவர் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

ஒருபுறம் நிலத்திலிருந்து வந்து கொண்டிருந்த வருமானம் குறைந்து கொண்டே இருக்க, செலவுகள் அதிகரித்துக் கொண்டே போவது அவன் தாய் சகுந்தலாவுக்குக் கவலை அளித்தது. தன் கவலையை அவள் பல சமயம் தன் கணவனிடம் வெளிப்படுத்தி வந்தாள். ஆனால் பரந்தாமன் அதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. "எல்லாம் பாத்துக்கலாம்!" என்பார்.

இந்தப் பேச்சுகள் திலீபனின் காதில் விழுந்து அவற்றின் பொருள் அவனுக்குப் புரிந்தும், புரியாமலும் இருந்தது.

தந்தை இறந்த சில நாட்களுக்குப் பிறகுதான் தன் தாயின் கவலை எவ்வளவு தீர்க்கதரிசனமானது என்பது திலீபனுக்குப் புரிந்தது. பரந்தாமன் இருந்தபோது எப்படியோ ஓடிக் கொண்டிருந்த குடும்பம், அவர் மறைவுக்குப் பிறகு தத்தளிக்கத் தொடங்கியது.

பரந்தாமன் அவ்வப்போது பலரிடம் கடன் வாங்கித்தான் குடும்பச் செலவுகளைச் சமாளித்து வந்திருக்கிறார் என்பது அவர் மரணத்துக்குப் பிறகுதான் தெரிந்தது. அவர் மறைவுக்குப் பிறகு கடன்காரர்கள் நெருக்க, நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் சகுந்தலா தடுமாறினாள்.

"அம்மா! நான் பள்ளிக் கூடத்திலேந்து நின்னுக்கறேன். தேவராஜ் ஐயா அவரோட மளிகைக் கடையில என்னை வேலைக்கு சேத்துக்கறதா சொல்லி இருக்காரு. நான் அங்கே வேலைக்குப் போறேன்!" என்றான் திலீபன் தன் தாயிடம்.

"படிப்பு முக்கியம்டா! படிப்பை நிறுத்தினா உன் எதிர்காலம் என்ன ஆறது?"என்றாள் சகுதலா.

"இப்ப நம்ம குடும்பத்தோட எதிர்காலம்தாம்மாமுக்கியம். நான் படிக்காட்டாலும், என் தம்பியும், தங்கையும் படிக்கறதுக்கு என்னால உதவ முடியுமே!" என்றான் திலீபன்.

திலீபன் மளிகைக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கடைக்குப் பொருட்களை விற்பனை செய்தவர்களுடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள் பொருட்களை மொத்த வியாபாரிகளிடம் விலைக்கு வாங்கி கடைகளுக்கு லாபத்தில் விற்று வந்ததாக அவன் அறிந்து கொண்டான். 

தானும் அது போன்ற ஒரு தொழிலைச் செய்யலாமே என்ற ஆர்வம் திலீபனுக்கு ஏற்பட்டது.

திலீபனின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட ஒரு சில்லறை வியாபாரி அவனை ஒரு மொத்த வியாபாரிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த மொத்த வியாபாரி அவனுக்குப் பொருட்களைக் கடனுக்குக் கொடுக்க ஒப்புக் கொண்டார்.

கடை வேலையைத் துறந்து விட்டு மொத்த விற்பனையளரிடம் பொருட்களை வாங்கி அவற்றை சைக்கிளில் எடுத்துச் சென்று அருகிலிருந்த ஊர்களில் இருந்த மளிகைக் கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கினான் திலீபன்.

"உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்குடா! திடீர்னு உன் அப்பா போனப்பறம் எப்படிக் குடும்பத்தை நடத்தறதுன்னு நான் தவிச்சுக்கிட்டிருந்தப்ப, உன்னைப் பத்தி யோசிக்காம, குடும்ப நலம்தான் முக்கியம்னு நினைச்சு, படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போன. அப்புறம், கடை வேலையை விட்டுட்டு மளிகைப் பொருட்களைக் கடைகளுக்கு சப்ளை செய்யற தொழிலை ஆரம்பிச்ச. இன்னிக்கு நீ ஒரு பெரிய விநியோகஸ்தனா இருக்க. உன் தம்பியையும், தங்கையும் நல்லாப் படிக்க வச்சு, கல்யாணமும் செஞ்சு வச்சுட்ட. உன் தொழிலைப் பெரிசாக்கினதோட, வீடு, நிலம்னு சொத்துக்கள் வாங்கி, கல்யாணம் பண்ணிக்கிட்டு சிறப்பா வாழ்த்தை நடத்தற. உன்னால நம்ம குடும்பத்துக்கே பெருமைடா!" என்றாள் சகுந்தலா.

"என்னோட சின்ன வயசில நீ அப்பாகிட்ட நம்ம எதிர்காலத்தைப் பத்திக் கவலைப்பட்டுப் பேசிக்கிட்டிருந்ததைக் கேட்டப்ப, நம்ம குடும்பத்தை உயர்த்த ஏதாவது செய்யணுங்கற எண்ணம் என் மனசில அப்பவே உண்டாயிடுச்சு. அப்புறம் அப்பா திடீர்னு காலமானதும், ஏதாவது செஞ்சே ஆகணுங்கற உத்வேகம் வந்து சில முடிவுகளை எடுத்தேன். அதெல்லாம் நல்லபடியா முடிஞ்சதால நம்ம குடும்பம் இப்ப நல்லா இருக்கு. அதுதாம்மா எனக்குத் திருப்தியா இருக்கற விஷயம்!" என்றான் திலீபன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல்வகை

குறள் 1022:
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.

பொருள்: 
முயற்சி, நிறைந்த அறிவு என்ற இந்த இரண்டின் இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Sunday, November 12, 2023

1021. தேர்த் திருவிழா

கோவில் தேரோட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

"தேரோட்டம் ரொம்ப சிறப்பா நடந்தது. இவ்வளவு சிறப்பான தேரோட்டத்தை நான் பார்த்ததில்லை" என்றார் ரகுபதி.

"நீங்க இந்த ஊருக்குப் புதுசா வந்திருக்கீங்க. இது எப்பவுமே இப்படித்தான் நடக்கும். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவங்க எத்தனையோ வருஷமா இதை நடத்திக்கிட்டிருக்காங்க" என்றார் அந்த ஊரைச் சேர்ந்த பசுபதி.

"ஆமாம். சொன்னாங்க. பலராமன்னு ஒத்தர்தான் இந்தத் திருவிழாவோட முழுச் செலவையும் ஏத்துக்கிட்டு நடத்தறாருன்னு.அவரை நான் பாக்கலியே!"

"அவரு வரலை."

"ஏன்?"

"அவருக்குத் தொழில்ல நஷ்டம் ஏற்பட்டு ரொம்ப நெருக்கடியில இருக்காராம். அதனால அவரு சென்னையிலேயே இருக்க வேண்டி இருக்காம். ஒருநாள் கூட விட்டுட்டு வர முடியாத நிலைமை. அதனால, எப்படியோ பணத்தை மட்டும் ஏற்பாடு செஞ்சு அனுப்பிட்டு 'எல்லாத்தையும் வழக்கம் போல சிறப்பாச் செய்யுங்க. என்னால வர முடிஞ்சா வந்து கலந்துக்கறேன்' னு சொல்லிட்டாரு. ஆனா அவரால வர முடியல."

"இந்தத் திருவிழாவுக்கு நிறைய செலவாகி இருக்குமே! அவ்வளவு பணக் கஷ்டத்திலேயும் இந்தத் திருவிழாவுக்கான செலவை ஏத்துக்கிட்டிருக்காரே, பெரிய விஷயம்தான்."

"அவர் நிலைமை தெரிஞ்சு 'இந்த வருஷம் நாங்க யாராவது பாத்துக்கறோம். அடுத்த வருஷத்திலேந்து பழையபடி நீங்களே நடத்தலாம்'னு ஊர்ல சில பேர் அவர்கிட்ட சொல்லி இருக்காங்க. அதுக்கு அவரு 'இல்லை. இந்த விழாவை நடத்தறது எங்க குடும்பத்துக்குக் காலம் காலமா இருந்துக்கிட்டு வர பெருமை. என் குடிப் பெருமையை நான் காப்பாத்த வேண்டாமா? எனக்கு எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் நான் உயிரோட இருக்கற வரை இந்தத் திருவிழாவை எப்படியோ நடத்திடறேன்னு சொன்னாராம்" என்றார் பசுபதி.

"இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவிலேயும் தன் குடும்பத்தோட பெருமையைக் காப்பாத்தணும்னு நினைக்கிறது பெரிய விஷயம்தான். எத்தனை பேர் இப்படி இருப்பாங்க?" என்றார் 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல்வகை

குறள் 1021:
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.

பொருள்: 
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Saturday, November 11, 2023

1020. அதிகாரம் செய்தவன்!

 தீபாவளிக்காக உடைகள் வாங்க அந்தக் கடைக்குப் போனபோது அங்கே கூட்டம் அதிகமாக இருந்தது. கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள், விற்பனையாளரின் கவனத்தைப் பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.

தன் மனைவியுடன் வந்திருந்த ஒரு மனிதர் மட்டும் கடை ஊழியர்களை அதிகாரம் செய்து கொண்டு தன்னை முதலில் கவனிக்க வேண்டும் என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு வழியாக உடைகளை வாங்கிக் கொண்டு காருக்கு வந்தோம்.

காரில் வரும்போது என் கணவரிடம், "நாம இவ்வளவு பேரு பொறுமையாக் காத்துக்கிட்டிருந்தோம். ஒத்தர் மட்டும் அதிகாரம் பண்ணி சண்டை போட்டுக்கிட்டிருந்தாரே! இப்படியா நடந்துப்பாங்க?" என்றேன்.

"அவன் அப்படித்தான் நடந்துப்பான்!" என்றார் என் கணவர்.

"அவரை உங்களுக்குத் தெரியுமா?"

"எனக்கு மட்டும் இல்ல, இந்த ஊர்ல பல பேருக்குத் தெரியும். ஊர் முழுக்கக் கடன் வாங்கிட்டு, இன்சால்வன்சி கொடுத்து எல்லாரையும் ஏமாத்தினவனாச்சே அவன்!"

"அப்படியா? இன்சால்வன்சி கொடுத்தவர்னா, எப்படி இந்த மாதிரி கடைக்கு வந்து ஆயிரக்கணக்கா பணம் கொடுத்து உடைகள் வாங்கிக்கிட்டுப் போறாரு?"

"அவன்தான் இன்சால்வன்ட். அவன் மனைவிகிட்ட நிறையப் பணம் இருக்கே!"

"அப்படின்னா, அந்தப் பணத்தை  அவரு தன்னோட கடன்களைத் தீர்த்திருக்கலாமே!"

"இவ்வளவு அப்பாவியாவா இருப்ப? திட்டம் போட்டுத்தான் பணம், சொத்து எல்லாம் மனைவி பேர்ல இருக்கற மாதிரி செஞ்சு, தன்கிட்ட பணமோ, சொத்தோ இல்லைன்னு சொல்லிக் கடன்காரன்களை ஏமாத்தி இன்சால்வன்ட் கொடுத்தான் அவன்!"

"அடப்பாவி! இப்படி எல்லாமா பண்ணுவாங்க! வாங்கின கடனைக் கொடுக்க முடியலையேங்கற அவமான உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாம இப்படி நடமாடிக்கிட்டிருக்ரு. இதில, தன்னைத்தான் முதல்ல கவனிக்கணும்னு அதிகாரம் வேற!" என்றேன் நான் வெறுப்புடன்.

"இந்த கார்ல ஒரு பொம்மை கட்டி வச்சிருக்கு இல்ல? கார் ஓடறப்ப அது ஆடுதே, அதுக்கு உயிர் இருக்குன்னு அர்த்தமா என்ன? இவனை மாதிரி ஆட்கள் எல்லாம் உலகத்தில நடமாடறதும் அப்படித்தான்! ஒரு மனுஷனுக்கு மானம் போனப்புறம் அவன் வாழ்க்கையில என்ன மீதி இருக்கும்?" என்றார் என் கணவர்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை

குறள் 1020:
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.

பொருள்: 
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Friday, November 10, 2023

1019. இரண்டாவது தவறு

கட்சியின் பெண் நிர்வாகி ஒருவருடன் நவநீதன் அந்தரங்க உறவில் ஈடுபட்டிருந்ததைக் காட்டிய அந்தக் காணொளி சமூகத் தளங்களில் பரவியதும் பல்வேறு தரப்பினரிடையேயும் அது பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும் ஏற்படுத்தியது.

"இவனோட அப்பா ஒரு ஒழுக்கமான மனுஷர். அவர் பணக்காரரோ, பெரிய பதவியில இருந்தவரோ இல்ல. ஆனா, அவரோட, நேர்மை, நல்லொழுக்கம், பண்பான நடத்தை இதுக்காகவெல்லாம் அவரை ஊர்ல எல்லாரும் மதிச்சாங்க. அவருக்குப் பிள்ளையாப் பிறந்தவன் இப்படியா நடந்துப்பான்?" என்பது பலரின் விமரிசனமாக இருந்தது.

"அது ஒரு போலியான காணொளி," "அது மார்ஃபிங் செய்யப்பட்டது," "அதில் இருப்பது நான் இல்லை" போன்ற நவநீதனின் விளக்கங்களை யாரும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

கட்சித் தலைமையின் அறிவுரைப்படி சில மாதங்கள் எந்தச் செயல்பாட்டிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தான் நவநீதன்.

ஆயினும் சில மாதங்களுக்குப் பிறகு வந்த சட்டமன்றத் தேர்தலில் நவநீதன் ஒரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டான்.

"ரொம்ப நாள் கழிச்சு என்னைப் பார்க்க வந்திருக்கே. என்ன விஷயம்?" என்றான் நவநீதனின் நண்பன் செல்வம்.

நண்பனின் பேச்சில் எப்போதும் இருக்கும் நட்புணர்வு இல்லை என்பதை கவனித்த நவநீதன், "சாரி! அரசியல்ல ஈடுபட்டப்புறம் உன்னை மாதிரி நல்ல நண்பர்களோட தொடர்பு விட்டுப் போயிடுச்சு. என்னோட தப்புதான். மன்னிச்சுடு" என்றான்.

"இப்ப நீ அரசியல்ல இருக்கியா, இல்லையா?"

"தேர்தல்ல நான் தோத்தப்புறம் கட்சித் தலைமை என்னை ஒதுக்கிடுச்சு. அரசியல்ல இனிமே எனக்கு எதிர்காலம் கிடையாதுன்னு நினைக்கிறேன்."

"பிசினஸ் பண்ணிக்கிட்டிருந்தியே, இனிமே அதில கவனம் செலுத்து."

"இல்லைடா. நான் பண்ணின தப்பால என் பிசினசும் போயிடுச்சு. பழைய வாடிக்கையாளர்கள் எல்லாம் என்னைப் பார்க்கக் கூட மாட்டேங்கறாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல!"

"பணம் ஏதாவது சேத்து வச்சிருக்கியா?"

"சேர்த்து வச்சிருந்த பணத்தை எல்லாம் தேர்தல்ல எனக்கு சீட் வாங்கவும், தேர்தல் பிரசாரத்துக்காகவும் செலவழிச்சேன். இப்ப எல்லாம் போச்சு. நான் பண்ணின தப்பு இந்த அளவுக்கு என் வாழ்க்கையைச் சீரழிக்கும்னு நினைக்கல."

"எந்தத் தப்பு?"

"என்னடா ஒண்ணும் தெரியாதவன் மாதிரி கேக்கற?"

"நீ பண்ணினது ரெண்டு தப்பு. அதனாலதான் இந்த பாதிப்புக்குக் காரணம் எந்தத் தப்புன்னு கேட்டேன்! முதல் தப்பு அந்தப் பெண்ணோட உறவு வச்சுக்கிட்டது. அந்தத் தப்பால உன் பேர் மட்டும்தான் கெட்டுப் போச்சு. அப்பவே நீ ஒதுங்கிப் போயிருந்தேன்னா உனக்கு இந்த அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. உன் ரெண்டாவது தப்புதான் உன்னோட இந்த நிலைமைக்குக் காரணம்?"

"ரெண்டாவது தப்புன்னு எதைச் சொல்ற? தேர்தல்ல நின்னதையா"

"ஆமாம். தப்புப் பண்ணிட்டு முதல்ல நீ ஒதுங்கி இருந்த. ஆனா நீ தேர்தல்ல நின்னது தப்பு செஞ்சதைப் பத்தி உனக்கு அவமான உணர்ச்சியே இல்லைங்கற எண்ணத்தை எல்லார் மனசிலேயும் உருவாக்கிடுச்சு. நீ தேர்தல்ல தோத்ததுக்கு அதுதான் காரணம், உன் பிசினஸ் வாடிக்கையாளர்கள் உன்னை விட்டு விலகிப் போனதுக்கும் அதுதான் காரணம்" என்றான் செல்வம்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை

குறள் 1019:
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.

பொருள்: 
ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Tuesday, November 7, 2023

1018. வேண்டாம் இந்த ஆர்டர்!

ஒரு சிறு தொழிலை நடத்திக் கொண்டிருந்த ராகவன் ஆர்டர் கேட்பதற்காக அந்த நிறுவனத்துக்குச் சென்றான்.

நிறுவனத்தின் உரிமையாளர் மூர்த்தியைச் சந்தித்துப் பேசினான். அவர் அவனுக்கு ஆர்டர் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார்.

மூர்த்தியைப் பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது ராகவன் மனதில் ஆர்டர் கிடைத்த மகிழ்ச்சி இல்லை. மனதை ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டிருந்தது.

தன் அலுவலகத்துக்குத் திரும்பியதும்தான் ராகவனுக்குத் தன் மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயம் என்னவென்று புரிந்தது.

மூர்த்தியை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருக்கிறோம் என்ற உணர்வுதான் அந்த உறுத்தலுக்குக் காரணம்.

மூர்த்தியின் நிறுவனம் பற்றி சமீபத்தில் யாரோ சொன்ன பிறகுதான் ராகவனுக்கு அந்த நிறுவனம் பற்றித் தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான் அவன் அவரைப் பார்க்கப் போனான். அப்படி இருக்கும்போது, அவரை இதற்கு முன் எங்கே பார்த்திருக்க முடியும்?

தன் நண்பன் பொன்ராஜுக்கு ஃபோன் செய்தான் ராகவன். பொன்ராஜ் தகவல்கள் சேகரிப்பதில் நிபுணன்.

"மூர்த்தின்னு ஒத்தர் மூர்த்தி இண்டஸ்ட்ரீஸ்னு ஒரு கம்பெனி நடத்திக்கிட்டிருக்காரு. அவரைப் பத்திக் கொஞ்சம் விசாரிச்சு சொல்லேன்!"என்றான் ராகவன்.

அன்று மாலையே பொன்ராஜ் ராகவனுக்கு ஃபோன் செய்தான்.

"டேய்! மூர்த்தி யாரு தெரியுமா? ரெண்டு வருஷம் முன்னால ஒரு அரசு அதிகாரி ஒரு கான்டிராக்டரை ஓட்டல்ல சந்திச்சு அஞ்சு லட்சம் ரூபா லஞ்சம் வாங்கினப்ப லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரைப் பிடிச்சாங்களே, ஞாபகம் இருக்கா?" என்றான் பொன்ராஜ்.

"ஆமாம். ஞாபகம் இருக்கு. அவர் பேரு கணேசமூர்த்தின்னு ஞாபகம்."

"அவரேதான். தன் பேர்ல ரெண்டாவது பாதியான மூர்த்திங்கறதை வச்சுக்கிட்டுத் தொழில் பண்ணிக்கிட்டிருக்காரு போலருக்கு!"

"நீ சொன்னப்புறம்தான் எனக்கு ஞாபகம் வருது. அப்ப அவர் ஃபோட்டோ டிவியில வந்தது. அப்பதான் பாத்திருக்கேன். அடப்பாவி மனுஷா!" 

"அவர் பாவியா இருந்தா உனக்கென்ன? தன்னோட சொந்த கம்பெனியில ஆர்டர் கொடுக்க உங்கிட்டலஞ்சம் கேக்க மாட்டார்னு நினைக்கறேன்! நீ அவரோட ஆர்டரை செஞ்சு கொடுத்துட்டுப் பணத்தை வாங்கிக்கிட்டுப் போய்க்கிட்டே இரு!" என்றான் பொன்ராஜ்.

"இல்லைடா! அப்ப அவரோட வீடியோ தமழ்நாடு முழுக்கப் பரவிடுச்சு. கையும் களவுமா மாட்டிக்கிட்டாரு. வேலையை விட்டு நீக்கிட்டாங்க. கேஸ் கூட நடந்துக்கிட்டிருக்குன்னு நினைக்கறேன். அதுக்கப்புறமும் கொஞ்சம் கூட அவமான உணர்ச்சி இல்லாம ஒரு தொழிலை நடத்திக்கிட்டிருக்காருன்னா அவர்கிட்ட நேர்மையோ, பண்போ இருக்காது. அப்படிப்பட்ட மனுஷனோட நான் எந்த வியாபாரத் தொடர்பும் வச்சுக்க விரும்பல" என்றான் ராகவன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை

குறள் 1018:
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

பொருள்: 
வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Sunday, November 5, 2023

1017. வேலை போய் விடுமோ?

தான் எப்போதோ ஒருமுறை ஒரு திருமணத்தில் சந்தித்த தனது தூரத்து உறவினர் கோவர்த்தனன் தன் வீட்டுக்கு வந்தது பகீரதனுக்கு வியப்பாக இருந்தது.

ஒரு வேலை விஷயமாக அந்தப் பகுதிக்கு வந்ததாகவும், பகீரதன் அங்கே இருப்பதால் அவனைப் பார்க்கலாம் என்று எண்ணி ஒரு உறவினரிடம் அவன் விலாசத்தை வாங்கிக் கொண்டு அவனைப் பார்க்க வந்ததாகவும் கூறினார் கோவர்த்தனன்.

சற்று நேரம் பொதுவாகப் பேசிய பிறகு, பகீரதனின் வேலையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் கோவர்த்தனன்

"இருபது வருஷமா இந்த நிறுவனத்தில வேலை செய்யறீங்க. உங்க முதலாளிக்கு நீங்க நெருக்கமானவரு அப்படித்தானே?" என்றார் அவர்.

"இருபது வருஷமா வேலை செய்யறேன். உண்மையா உழைக்கிறேன். அதனால அவரு என் மேல நம்பிக்கை வச்சிருக்காரு. நெருக்கமானவர்னு சொல்ல முடியாது" என்றான் பகீரதன்.

"அப்ப ரொம்ப நல்லதாப் போச்சு. நீங்க உங்க முதலாளிக்கு நெருக்கமானவரா இருப்பீங்களோன்னு நினைச்சேன்!"

"நல்லதாப் போச்சுன்னு ஏன் சொல்றீங்க? நெருக்கமா இருந்தா தப்பா என்ன?" என்றான் பகீரதன்.

"நீங்க அவருக்கு நெருக்கமானவரா இருந்தா நான் சொல்லப் போறதைக் கேட்க உங்களுக்கு சங்கடமா இருக்கலாம்!" என்று பீடிகை போட்டார் கோவர்த்தனன்.

"என்ன சொல்லப் போறீங்க?"

நான் வெளிப்படையாச் சொல்லிடறேன். நான் ஒரு தொழில் ஆலோசசகர். என்னோட ஸ்பெஷலைசேஷன் பிசினஸ் இன்டலிஜன்ஸ். கம்பெனிகளுக்கு மார்க்கெட் பத்தியும், அவங்களோட போட்டியாளர்கள் பற்றியும் விவரம் சேகரிச்சுக் கொடுப்பேன்" என்றார் கோவர்த்தனன்.

அவர் மேலே என்ன சொல்லப் போகிறார் என்று அறிய விரும்பி பகீரதன் மௌனமாக இருந்தான்.

"நான் இப்ப சந்தோஷ் இண்டஸ்ட்ரீசுக்கு ஆலோசகரா இருக்கேன்!" என்றார்.

"அவங்க எங்க போட்டியாளராச்சே!" என்றான் பகீரதன்.

"ஆமாம். உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். அவங்க ரொம்ப வேகமா வளர்ந்துக்கிட்டிருக்காங்க. உங்க வாடிக்கையாளர்கள் சில பேர் அவங்களுக்கு மாறிட்டாங்க" என்றார் கோவர்த்தனன்.

"சார்! நீங்க நான் வேலை செய்யற நிறுவனத்தோட போட்டி நிறுவனத்தோட ஆலோசகர். அதனால இதைப் பத்தி நாம பேச வேண்டாமே! வேற ஏதாவது விஷயம் இருந்தா சொல்லுங்க!" என்றான் பகீரதன் சற்றே கடுமையான குரலில்.

"இருங்க. நான் சொல்லி முடிச்சுடறேன். சந்தோஷ் இண்டஸ்டிரீசோட போட்டியைச் சமாளிக்க முடியாம உங்க கம்பெனி திணறிக்கிட்டிருக்கிறது உங்களுக்குத் தெரியும். உங்க கம்பெனியால ரொம்ப நாள் தாக்குப் பிடிக்க முடியாது. எப்படியும் ரெண்டு மூணு வருஷத்தில உங்க கம்பெனியை மூட வேண்டிய நிலை ஏற்படும். அப்ப உங்களுக்கு வேலை போயிடும். அப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிச்சீங்களா?"

"அந்த நிலைமை வந்தா நான் சமாளிச்சுக்கறேன். நீங்க வேற ஏதவது விஷயத்தைப் பத்திப் பேசறதுன்னா பேசுங்க. இல்லாட்டா..."

"கிளம்புங்கங்கறீங்க! கிளம்பத்தான் போறேன். உங்களுக்கு ஒரு ஆஃபர் கொடுத்துட்டுக் கிளம்பறேன். உங்க கம்பெனி பத்தி சில விவரங்கள் சந்தோஷ் இண்டஸ்டிரீசுக்கு வேணும். அந்த விவரங்களை நீங்க என் மூலமா கொடுத்தா போதும். இன்னும் ஆறு மாசத்தில சந்தோஷ் இண்ஸ்ட்ரீஸ்ல உங்களை ஒரு உயர்ந்த பதவியில நீங்க இப்ப வாங்கற சம்பளத்தைப் போல ரெண்டு மடங்கு சம்பளம் கொடுத்து வேலையில எடுத்துப் பாங்க. இந்த ஆறு மாசத்திலேயும் நீங்க கொடுக்கற தகவல்களுக்காக உங்களுக்குத் தனியாப் பணம் வாங்கிக் கொடுத்துடறேன். எல்லாம் என் மூலமா நடக்கறதால உங்க மேல யாருக்கும் சந்தேகம் வராது. என்ன சொல்றீங்க?" என்றார் கோவர்த்தன்ன்.

"வீட்டுக்கு வந்த விருந்தாளியை மதிக்கணுங்கறதுக்காக இவ்வளவு நேரம் பொறுமையா இருந்தேன். தயவு செஞ்சு கிளம்புங்க,. இனிமே இங்கே வராதீங்க!" என்றான் பகீரதன் கோபத்தை அடக்கிக் கொண்டு.

"உங்க கம்பெனியை மூடப் போறது நிச்சயம். அப்புறம் உங்க குடும்பத்தை எப்படிக் காப்பாத்துவீங்கன்னு யோசிச்சுப் பாருங்க!" என்று கூறியபடியே எழுந்தார் கோவர்த்தனன்.

"நீங்க சொல்றபடியே என் கம்பெனியை மூடி, எனக்கு வேலை போய், நாங்க எல்லாரும் பட்டினி கிடந்து செத்தாலும் பரவாயில்லை. நீங்க சொல்ற மானங்கெட்ட வேலையை நான் எப்பவும் செய்ய மாட்டேன். கழுத்தைப் புடிச்சுத் தள்றதுக்கு முன்னால நீங்களே வெளியிலே போயிடுங்க!" என்றான் பகீரதன் கோபத்துடன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை

குறள் 1017:
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.

பொருள்: 
நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1016. வேண்டாம் பதவி உயர்வு!

"இத்தனை நாளா இந்த கம்பெனியில ஒரு கிளார்க்கா இருந்துட்ட. இப்ப உனக்குப் பதவி உயர்வு கொடுத்து உன்னை ஒரு அதிகாரியா .ஆக்கி இருக்கேன். ஒரு அதிகாரிக்கு உரிய பொறுப்போட நடந்துக்கணும்" என்றார் சுந்தர் என்டர்பிரைசஸ் முதலாளி சோமசுந்தரம்.

"நிச்சயமா சார்!" என்றான் ரத்னகுமார்.

"மூத்த அதிகாரி தனசேகர் உன்னோட வேலைகளைப் பத்தி விளக்கி, உனக்குப் பயிற்சி கொடுப்பாரு. அவர் சொல்றபடி நடந்துக்க."

"என்னப்பா, எல்லாரும் பதவி உயர்வு வேணும்னு ஆசைப்படுவாங்க. நீ என்னன்னா, பதவி உயர்வு கிடைச்ச ஒரு மாசத்துக்குள்ள, இந்தப் பதவி உயர்வு வேண்டாம், பழையபடி கிளார்க்காவே இருக்கேன்னு சொல்றியே!" என்றார் சோமசுந்தரம்.

"இல்லை சார்! என்னால இந்தப் பொறுப்பை சரியா நிறைவேற்ற முடியும்னு எனக்குத் தோணல. கிளார்க்கா இருக்கறதே எனக்குத் திருப்தியா இருக்கு" என்றான் ரத்னகுமார்.

"உன் இஷ்டம்!"

"முட்டாளாடா நீ? கிடைச்ச புரொமோஷனை வேண்டாம்னுட்டு வந்திருக்க. பதவி உயர்வோட அதிக சம்பளம், அதிகாரம் கௌரவம் எல்லாம் வருமே!" என்றான் ரத்னகுமாரின் நண்பன் சதானந்த்.

"எல்லாம் வரும். அதோட தப்பான காரியங்களைப் பண்றமேங்கற  அவமான உணர்வும் வரும். அதோட என்னால வாழ முடியாது!"

"ஏன் அவமான உணர்வு வரணும்?"

"இத்தனை நாளா ஒரு கிளார்க்கா ஆஃபீஸ்ல உக்காந்து வேலை செஞ்சுக்கிட்டிருந்தேன். அதிகாரின்னா என்னென்ன வேலைகள் செய்யணும்னு என்னோட சீனியர் எனக்குப் பயிற்சி கொடுத்தப்பத்தான் தெரிஞ்சுது."

"அப்படி என்ன வேலைகள்? ரொம்பக் கஷ்டமான வேலைகளா?"

"அரசாங்க அதிகாரிகளைப் பல விஷயங்களுக்காக அடிக்கடி பார்க்கணும், அவங்களுக்கு லஞ்சம் கொடுத்து எங்களுக்கு வேண்டியதைச் செய்ய வைக்கணும். எங்ககிட்ட பொருட்கள் வாங்கற கம்பெனிகள்ள இருக்கற மூத்த அதிகாரிகளுக்கு அவங்க ஆர்டர் கொடுத்ததுக்காகக் கமிஷன்ங்கற பேரில ரகசியமா லஞ்சம் கொடுக்கணும்!"

"லஞ்சம் வாங்கறவங்கதானேடா அவமானப்படணும்? உனக்கு என்ன அவமானம் வந்தது?"

"என்னடா இப்படிச் சொல்ற? சட்டத்துக்கும், நியாயத்துக்கும் விரோதமான எந்தச் செயலைச் செய்யறதுக்கும் வெட்கப்பட வேண்டாமா? வெட்கமோ, கூச்சமோ இல்லாம என்னால அப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய முடியாது."

"சரி. என்ன செய்யப் போற? ஆயுசு முழுக்க கிளார்க்காவே இருக்கப் போறியா?" என்றான் சதானந்த்.

"இல்லை. சீக்கிரமே வேற ஒரு வேலையைத் தேடிக்கப் போறேன் - இது மாதிரி சங்கடங்கள் இல்லாத வேலையை" என்றான் ரத்னகுமார்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை

குறள் 1016:
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்

பொருள்: 
பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Saturday, November 4, 2023

1015. சாரதி சொன்ன கதை

"நம்ம கம்பெனியில அதிகாரிகளுக்கெல்லாம் ஏதாவது பார்ட்டி இருந்துக்கிட்டே இருக்கும். ஆனா நம்மை மாதிரி கீழ்நிலை ஊழியர்களுக்கு அது மாதிரி வாய்ப்பு கிடைக்கறதில்லை. அதனால, நாம அஞ்சாறு மாசத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு ஹோட்டல்ல ஒரு பார்ட்டி வச்சுப்போம்" என்று அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் சொன்ன யோசனையின்படி, சில வருடங்களாக அது போன்ற ஒரு பார்ட்டி நடந்து வந்தது.

அப்படி நடந்த ஒரு பார்ட்டிதான் அது.

"என்ன சார்! நாங்க சின்னப் பசங்க எல்லாம் ஜாலியாப் பேசிக்கிட்டிருக்கோம். உங்களை மாதிரி சீனியர்கள் எல்லாம் அமைதியா இருக்கீங்களே!" என்றான் நிதீஷ்.

"நாங்க பேசற பழங்கதை எல்லாம் உங்களுக்குப் பிடிக்காதே!" என்ற சாரதி, "பல வருஷங்களுக்கு முன்னால நம்ம ஆஃபீஸ்ல நடந்த ஒரு சுவாரசியமான விஷயத்தை சொல்றேன்!" என்றார் தொடர்ந்து.

"சொல்லுங்க சார்!" என்று இளைஞர்கள் உற்சாகப்படுத்த, சாரதி சொல்ல ஆரம்பித்தார்.

"நான், சுகுமாரன், கமலக்கண்ணன் எல்லாம் வேலைக்குச் சேர்ந்த புதுசு அது. அப்ப வேலையில இருந்த பல பேர் இப்ப ரிடயர் ஆயிட்டாங்க. நாங்க மூணு பேர்தான் இருக்கோம், ஹேமான்னு ஒரு பொண்ணு பிராஞ்ச் மானேஜரோட செகரட்டரியா இருந்தா.

"இப்ப எதுக்கு அது?" என்றார் சுகுமாரன். ஆனால் சாரதி அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

"பிராஞ்ச் மானேஜருக்கு ஹேமா மேல ஒரு கண்ணு. அவளை அடிக்கடி தன்னோட ரூமுக்குக் கூப்பிட்டு ரொம்ப நேரம் லெட்டர் டிக்டேட் பண்ணுவாரு. அவ்வளவு நேரம் லெட்டர் டிக்டேட் பண்றதுக்கு எதுவும் இல்ல. தான் லெட்டர் டிக்டேட் பண்றப்ப தன் ரூம் பக்கமே யாரும் வரக் கூடாதுன்னு பியூன்கிட்ட ஸ்டிரிக்டா சொல்லிட்டாரு. அதனால அவர் லெட்டர்தான் டிக்டேட் பண்ணினாராங்கறதை நீங்களே தீர்மானிச்சுக்கலாம்!"

சாரதி கண்ணைச் சிமிட்டிக் கொண்டு சிரிக்க, இளைஞர்கள் உற்சாகத்துடன் சிரித்தபடியே, தொடர்ந்து கேட்க ஆவலாக இருந்தனர்.

"ஆனா அந்த ஹேமாவுக்கு எங்களோட வேலை செஞ்சுக்கிட்டிருந்த கார்த்திக் மேல காதல். ஹேமா மானேஜர் அறையில இல்லாதப்பல்லாம், அவளும் கார்த்திக்கும் ஒண்ணா உக்காந்து சிரிச்சுப் பேசிக்கிட்டிருப்பாங்க."

"அப்புறம் எப்ப சார் லெட்டர் எல்லாம் டைப் பண்ணுவாங்க?" என்று ஒருவன் கேட்க, கொல்லென்று சிரிப்பு எழுந்தது.

"மானேஜர் ரூமுக்குள்ள ஹேமா மணிக்கணக்கா இருந்தாலும், ஒரு நாளைக்கு நாலைஞ்சு லெட்டருக்கு மேல அவ டைப் பண்ண வேண்டி இருக்காது. அது அரைமணி நேர வேலைதான். இதிலேந்தே மானேஜர் அவளுக்கு எவ்வளவு லெட்டர்கள் டிக்டேட் பண்ணி இருப்பார்னு தெரிஞ்சுக்கலாம்!" என்று சாரதி சொல்ல, மீண்டும் சிரிப்பு எழுந்தது.

"சொல்லுங்க சார்!" என்றான் ஒரு இளைஞன் கதை கேட்கும் ஆவலில்.

"ஹேமாவும் கார்த்திக்கும் காதலிச்சது மானேஜருக்குத் தெரிய வந்ததா சார்?" என்றான் மற்றொருவன்.

"அதுக்குத்தானே வரேன், கிளைமாக்சே அதுதானே!" என்ற பீடிகையுடன் தொடர்ந்தார் சாரதி.

"ஒருநாள் மானேஜர் எதுக்கோ ரிகார்ட் ரூமுக்குள்ள போயிருக்காரு. அந்த ரூம் ரொம்ப இருட்டா இருக்கும். அவர் லைட்டை ஆன் பண்ணி இருக்காரு. அங்கே ஹேமாவும், கார்த்திக்கும் கட்டிப் புடிச்சுக்கிட்டு இருந்திருக்காங்க. மானேஜர் உடனே 'எல்லாரும் வாங்க' ன்னு கூச்சல் போட எல்லாரும் ஓடிப் போய்ப் பார்த்தோம்.

"அங்கே ஹேமாவும், கார்த்திக்கும் அரைகுறை ஆடையோட நின்னுக்கிட்டிருந்தாங்க. எல்லாரும் பதறிப் போய் உடனே அங்கே ஓடிப் போனதால அவங்க ரெண்டு பேருக்கும் தங்களோட உடைகளைச் சரிபண்ணிக்கக் கூட நேரம் இல்லை."

"அப்புறம்?"

"அப்புறம் என்ன? மானேஜர் கார்த்திக்கை வேலையை விட்டு அனுப்பிட்டாரு. ஹேமா அதுக்கப்புறம் ஆஃபீசுக்கே வரலை. தபாலிலேயே ராஜினாமாக் கடிதத்தை அனுப்பிட்டா!"

"அடப்பாவமே!" என்றான் ஒருவன் பரிதாபத்துடன்.

"என்ன சாரதி இது? கொஞ்சம் கூடக் கூச்சம் இல்லாம இந்தக் கதையை எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டிருக்கே?" என்றார் சுகுமாரன் கோபத்துடன்.

"இதில எனக்கென்ன கூச்சம்? நானா தப்பு பண்ணினேன்?" என்றார் சாரதி.

"அன்னிக்கு அந்த சம்பவத்தைப் பார்த்தப்ப எனக்கு எவ்வளவு அவமானமா இருந்தது தெரியுமா? நம்மோட வேலை செய்யற ஒத்தன் இப்படிப் பண்ணிட்டானே நினைச்சு நான் பல நாள் அவமானமா உணர்ந்திருக்கேன். இவ்வளவு வருஷம் கழிச்சு இதை நீ ஞாபகப்படுத்தச்சே, இப்பவும் நான் அவமானமா உணரறேன். நீ ஏதோ இதை ஒரு பெருமை மாதிரி எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டிருக்க! சாரி, நான் கிளம்பறேன். இந்த மனநிலையில என்னால இங்க தொடர்ந்து இருக்க முடியாது" என்று எல்லோரையும் பார்த்துக் கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினார் சுகுமாரன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை

குறள் 1015:
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.

பொருள்: 
தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Thursday, November 2, 2023

1014. நண்பர் வாங்கிய கடன்

புண்யமூர்த்தி வார்த்தை கொடுத்தால் தவற மாட்டார் என்பது அந்த ஊர் மக்களின் உறுதியான நம்பிக்கை.

யாராவது அவரிடம் உதவி கேட்டு, அவர் செய்கிறேன் என்று சொல்லி விட்டால், அதை எப்படியாவது செய்து விடுவார்.

ஒருமுறை அந்த ஊர் துவக்கப் பள்ளியின் கட்டிடம் பழையதாகி விட்டதால் புதிதாகக் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஊரில் யாரும் அதற்குப் பொருளுதவி செய்ய முன்வராதபோது, புண்யமூர்த்தி புதிய கட்டிடத்துக்கான முழுச் செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

புண்யமூர்த்தி ஓரளவுக்கு வசதி படைத்தவர்தான் என்றாலும் பெரிய செல்வந்தர் அல்ல. ஒரு நல்லெண்ணத்தில்தான் அவர் வ்வாறு அறிவித்தார். பள்ளிக் கட்டிடத்துக்கான செலவு அவர் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக கி விட்டது. ஆயினும் தான் ஒப்புக் கொண்டபடி கட்டிடத்துக்கான முழுச் செலவையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

இதனால் அவர் குடும்பத்தினர் அவர் மீது மிகவும் கோபமடைந்ததாக ஊரில் பேசிக் கொண்டனர்.

'நம்ம பையங்க ரெண்டு பேரும் படிச்சு வேலைக்குப் போயிட்டாங்க. அவங்க வெளியூர்ல இருக்காங்க. அவங்க குழந்தைங்க யாரும் இந்தப் பள்ளிக்கூடத்தில வந்து படிக்கப் போறதில்ல. உங்களுக்கு எதுக்கு இந்த வேலை?" என்று அவர் மனைவி அவரைக் கடிந்து கொண்டாள்.

இதன் விளைவாகவோ என்னவோ, புண்யமூர்த்தியின் சொத்துக்களை அவர் மகன்கள் தங்கள் பெயர்களுக்கு எழுதி வாங்கிக் கொண்டு விட்டனர்.

"உங்களுக்கு இருக்க வீடு இருக்கு. உங்க ரெண்டு பேர் செலவுக்கு நாங்க பணம் கொடுக்கறோம். வேற எந்தச் செலவு வந்தாலும் நாங்க பாத்துக்கறோம்" என்று அவரது இரண்டு மகன்களும் அவருக்கும், அவர் மனைவிக்கும் உறுதி அளித்தனர்.

ந்த ஊரில் இருந்த கோவிந்தசாமி என்ற செல்வந்தர் வட்டிக்குப் பணம் கொடுப்பவர். அவர் சண்முகம் என்ற ஒரு சிறு வியாபாரிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார். சண்முகம் புண்யமூர்த்தியின் நண்பர் என்பதால் புண்யமூர்த்தி அந்தக் கடனுக்கு உத்தவாதம் அளித்துக் கையெழுத்திடிருந்தார்.

சண்முகத்துக்கு வியபாரத்துக்காகத் தொடர்ந்து பணம் வேண்டி இருந்ததால் அவர் அசலைத் திருப்பிக் கட்டாமல் மாதாமாதம் வட்டியை மட்டும் கட்டிக் கொண்டிருந்தார். மாதாமாதம் வட்டி வந்து கொண்டிருந்ததால் கோவிந்தசாமியும் அசலைத் திருப்பிக் கேட்கவில்லை. இது பல வருடங்களாக நடந்து வந்தது. 

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சண்முகத்திடம் கோவிந்தசாமி புதிதாகக் கடன் பத்திரம் எழுதி வாங்கிக் கொள்வார். அதில் புண்யமூர்த்தியின் கையெழுத்தையும் அவர் தவறாமல் வாங்கிக் கொள்வார்.

திடீரென்று சண்முகம் இறந்து விட்டார். அவர் பணமோ, சொத்தோ சேர்த்து வைக்கவில்லை. அதனால் கோவிந்தசாமியிடம் அவர் வாங்கிய கடனைத் தங்களால் திருப்பிக் கொடுக்க முடியாது என்று சண்முகத்தின் மனைவி கைவிரித்து விட, கோவிந்தசாமி புண்யமூர்த்தியை அணுகினார்.

புண்யமூர்த்தியிடம் பணம் இல்லை.  அவர் பணத்தையே கையாள முடியாதபடியான ஒரு ஏற்பாட்டை அவருடைய மகன்கள் செய்திருந்தனர்.

"என்னிடம் பணம் இல்லை. என் மகன்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்" என்றார் புண்யமூர்த்தி.

யாரோ வாங்கிய கடனை நாம் ஏன் செலுத்த வேண்டும் என்று கூறி அவருடைய மகன்கள் அவருக்குப் பணம்  மறுத்து விட்டனர்.

"நீ ஒரு பெரிய மனுஷன்னு நினைச்சு உன்னை நம்பித்தானே ஐயா அந்த சண்முகத்துக்குக் கடன் கொடுத்தேன்? இப்படி ஏமாத்திட்டியே!  நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனா?" என்று புண்யமூர்த்தியின் வீட்டு வாசலில் நின்று கத்தி விட்டுப் போனார் கோவிந்தசாமி. 

சொத்து எதுவும் இல்லாத புண்யமூர்த்தியிடமிருந்து தன் கடனைவசூலிக்க முடியாது என்பது கோவிந்தசாமிக்குப் புரிந்து விட்டதால் பலர் காதுகளிலும் விழும்படி புண்யமூர்த்தியை அவமானமாகப்  தன் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார் அவர்.

"புண்யமூர்த்தி இப்பல்லாம் வீட்டை விட்டு வெளியிலேயே வரதில்லையாமே!"

"எப்படி வருவாரு? ஷ்யூரிட்டி கையெழுத்துப் போட்டுட்டு கடனைக் கட்ட முடியலியேங்கற கூச்சம் அவருக்கு!"

"கடன் வாங்கினவரு யாரோ ஒத்தரு. இவரு பாவம் நண்பர்ங்கறதுக்காக ஷ்யூரிட்டி கையெழுத்துப் போட்டாரு. சண்முகம் உயிரோட இருந்திருந்தா கடனைக் கட்டி இருப்பாரு. இதுவரைக்கும் கோவிந்தசாமிக்கு அசலைப் போல ரெண்டு பங்கு வட்டி வந்திருக்கும். அதனால அவருக்கு ஒண்ணும் பெரிய நஷ்டம்னு சொல்ல முடியாது. ஆனா இந்த நல்ல மனுஷன் தான் ஏதோ தப்புப் பண்ணிடதா நினைச்சு வெளியில வரவே சங்கடப்படறாரு!"

"கடன் வாங்கினவங்களே பல பேரு கடனைத் திருப்பிக் கொடுக்கறதைப் பத்திக் கவலைப்படாம சுத்திக்கிட்டிருக்காங்க. இவரு என்னன்னா நண்பருக்காக ஷ்யூரிட்டி கையெழுத்துப் போட்டதால வந்த கடனைக் கட்ட முடியலியேன்னு அவமானப்பட்டுக்கிட்டிருக்காரு. இப்படியும் மனுஷங்க இருக்காங்க!" 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை

குறள் 1014:
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை

பொருள்: 
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ?
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...