Saturday, December 31, 2022

737. மழைவளமும் மண்வளமும்

சாந்தவி தன் மகன் அனந்தனுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவளைக் காண வந்த கருவேலர், உள்ளே நுழையும்போதே "அன்னையே! தங்கள் மகன் அரியணை ஏறும் காலம் வந்து விட்டது!" என்று கூறிக் கொண்டே வந்தார்.

"என்ன சொல்கிறீர்கள் கருவேலரே! என் மைத்துனர் மருதர் மனம் மாறி இளவரசனான என் மகன்தான் அரியணை ஏற வேண்டும் என்று முடிவு செய்து அவனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறாரா என்ன?" என்றாள் சாந்தவி.

"மருதனாவது மனம் மாறுவதாவது? பதவி வெறி பிடித்து இளவரசரைக் கொலை செய்ய முயன்றவன்தானே அந்தக் கருநாகம்?" என்றார் கருவேலர் கோபத்துடன்.

"அரசராக இருந்த என் கணவர் மறைந்ததும், அனந்தன் சிறுவன் என்பதால் அவன் அரியணை ஏறும் வயது வரும் வரை தான் தற்காலிக அரசராக இருப்பதாகக் கூறிப் பதவியேற்ற என் கணவரின் தம்பி மருதர் என் மகன் அனந்தனை நயவஞ்சகமாகக் கொல்ல முயன்றபோது, தாங்கள் அந்த முயற்சியை முறியடித்து எங்கு இருவரையும் நாட்டின் எல்லைப்புறத்தில் இருக்கும் இந்தப் பகுதிக்கு அழைத்து வந்து எங்க்ளை இங்கே ரகசியமாக வைத்துப் பதுகாத்து வருகிறீர்கள். இந்த நிலையில் என் மகன் அரியணை ஏறும் காலம் வந்து விட்டது என்று திடீரென்று கூறினால் நான் என்ன புரிந்து கொள்வது?" என்றாள் சாந்தவி.

"அன்னையே! இந்தப் பகுதி நம் நாட்டின் ஒரு பகுதி என்றாலும் மருதன் முறையற்ற விதத்தில் அரியணை ஏறினான் என்பதால் இங்குள்ள மக்கள் மருதனை மன்னராக ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. ஆரம்ப முதலே அவர்கள் மருதனை எதிர்த்து வந்திருக்கிறார்கள். இந்தப் பகுதியில் மருதனின் படை வீரர்கள் எவரும் நுழைய இப்பகுதி மக்கள் அனுமதிக்கவில்லை. 

"அது மட்டுமல்ல. மருதனின் அரசுக்கு வரி கட்ட மறுத்து உள்ளூரிலேயே சிலர் வரி வசூலித்து இந்தப் பகுதி மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். அதாவது இந்தப் பகுதி மருதனின் ஆட்சிக்கு உட்படாத ஒரு தனி நாடாகவே இருந்து வந்திருக்கிறது. 

"இளவரசர் இங்கே இருப்பதை அறிந்து கொண்ட இப்பகுதி மக்கள் சிலர் இந்தப் பகுதிக்கு அரசராக நம் அனந்தனே முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள்! இதை இங்குள்ள எல்லா மக்களும் ஒருமனதாக ஏற்றுக் கொள்வார்கள் என்று அவர்கள் உறுதிபடக் கூறுகிறார்கள் "

சாந்தவி ஒரு நிமடம் கண்ணை மூடிக் கொண்டு யோசிப்பது போல் இருந்தாள்.

"என்ன அன்னையே! இந்த நாட்டையே ஆள வேண்டிய அரசகுமாரன் அனந்தன் இந்தச் சிறுபகுதிக்கு அரசனாக இருக்க வேண்டுமா என்று யோசிக்கிறீர்களா?" என்றார் கருவேலர்.

"இல்லை கருவேலரே! இந்தப் பகுதி எவ்வளவு உயர்வானது! இந்தப் பகுதியில் மழை பருவம் தவறாமல் பெய்து இந்த மண்ணை வளமாக்குகிறது. மறுபுறம் எங்கும் நிறைந்திருக்கும் நிலத்தடி நீர் ஊற்றாகப் பெருகி வளம் சேர்க்கிறது. அடர்ந்த மலைப்பகுதி, அதிலிருந்து பெருகி வரும் ஆறு என்று இயற்கையின் செல்லப் பிள்ளை போல் அல்லவா விளங்குகிறது இந்தப் பகுதி! ஒருபுறம் மலைகள், இருபறம்  காடுகள், இன்னொரு புறம்  ஆறு என்று நாற்புறமும் அரண்கள் கொண்ட பகுதி அல்லவா இது? இதை ஒரு நாடாக அறிவித்து அதற்கு என் மகன் அரசனாகப் போவதை நினைத்தால் எனக்குப் புளகாங்கிதம் ஏற்படுகிறது. இந்தப் பகுதி மக்களுக்கு எங்கள் மீது இருக்கும் அன்பை எண்ணிக் கண்ணை மூடி அவர்களுக்கு நன்றி செலுத்தினேன். உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள். சிறிய நாடாக இருந்தாலும் சிறந்த நாடான இதற்கு என் மகனை அரசனாக்க நீங்கள் செய்த முயற்சிகளுக்கு நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன்!" என்றாள் சாந்தவி.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு

குறள் 737:
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

பொருள்: 
ஊற்றும் மழையும் ஆகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Friday, December 30, 2022

736. பகைவரும் நண்பராகலாம்!

பல ஆண்டுகளாக சாலிய நாட்டுடன் பகை உணர்வு கொண்டிருந்த சுந்தர நாட்டு மன்னன் கலிவரதன் திடீரென்று சமாதானத்தை விரும்பி சாலிய நாட்டு மன்னன் மகிழ்வாணனுக்கு தூது அனுப்பினான்.

கலிவரதனின் சமாதானக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மகிழ்வாணன் கலிவரதனைத் தன் நாட்டுக்கு விருந்தாளியாக வரும்படி அழைத்தான்.

தன் நாட்டுக்கு விருந்தாளியக வந்த கலிவரதனுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பளித்த மகிழ்வாணன் கலிவரதனைத் தன் நாட்டின் பல பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று காட்டினான்.

"மகிழ்வாணரே! தங்களைச் சந்தித்து நம் பிரச்னைகளைப் பேசித் தீர்க்கத்தான் நான் தங்கள் அழைப்பை ஏற்றுத் தங்கள் நாட்டுக்கு வந்தேன். ஆனால் தாங்கள் என்னைத் தங்கள் நாடு முழுவதற்கும் சுற்றுப்பயணம் அழைத்துச் சென்று விட்டீர்களே!" என்றான் கலிவரதன் மகிழ்ச்சியுடன்.

மகிழ்வாணன் புன்னகை செய்தபடி, "எங்கள் நாடு எப்படி இருக்கிறது கலிவரதரே!" என்றான்.

"மிகவும் வளமாக இருக்கிறது. மக்களிடையே உற்சாகத்தைப் பார்க்க முடிகிறது. விவசாயமும், தொழில்களும் சிறப்பாக நடந்து வருவதாகத் தோன்றுகிறது!" என்ற கலிவரதனின் முகம் சட்டென்று வாடியது.

"என்ன ஆயிற்று கலிவரதரே!"

"இல்லை மகிழ்வாணரே! என் நாட்டின் நிலையை நினைத்துப் பார்த்தேன். அடிக்கடி நிகழும் போர்களால் எங்கள் நாடு சீரழிந்திருக்கிறது. மக்களிடையே வறுமை மிகுந்திருக்கிறது. ஆனால் நீங்களும்தானே போர்களில் ஈடுபட்டு வந்திருக்கிறீர்கள்? உங்கள் நாட்டில் போரினால் பாதிப்பு ஏற்படவில்லையா?"

"ஏற்பட்டது. ஆனால் அவற்றைச் சரிசெய்து விட்டோம். நாங்கள் போரைத் தவிர்க்கவே விரும்புகிறோம். உங்கள் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டுடனும் போர் செய்யும் அவசியம் எங்களுக்கு ஏற்படவில்லை!" என்று கூறி கலிவரதனின் முகத்தைப் பார்த்தான் மகிழ்வாணன்.

"புரிகிறது. ஆனால் நாங்கள் எங்கள் அண்டை நாடுகள்பலவற்றுடனும் போரில் ஈடுபட்டு வந்திருக்கிறோம். அடிக்கடி நடக்கும் போர்களால் எங்கள் நாடு சீரழிந்து வருவதை உணர்ந்துதான் இனியாகிலும் போரைத் தவிர்க்க வேண்டும் என்று சமாதான முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறேன்!" என்றான் மகிழ்வாணன். அவன் குரலில் அவமான உணர்ச்சி தொனித்தது.

"கடந்த காலத்தில் என்ன நிகழ்ந்திருந்தாலும் இனி போரைத் தவிர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு நீங்கள் வந்ததற்கு உங்களைப் பாராட்டுகிறேன். துணிச்சலுடனும், மனத் தெளிவுடனும் இந்த முடிவை எடுத்ததற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும். நீங்கள் என் நண்பர் ஆகி விட்டது குறித்து நானும் பெருமைப்படுகிறேன்!" என்றான் மகிழ்வாணன் கலிவரதனின் தோள்களை நட்புடன் பற்றியபடி. 

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு

குறள் 736:
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.

பொருள்: 
பகைவரால் கேடு ஏற்படாததாய், கேடு ஏற்பட்டபோதும், வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்..
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Thursday, December 29, 2022

735. நாடு அதை நாடு!

 

அரசவைக்கு வந்த கபிலரை மரியாதையுடன் வரவேற்றான் அரசன்.

"கபிலர் பெருமானே! தங்களைப் போன்ற ஒரு அறிஞர் எங்கள் நாட்டுக்கு வருகை தந்திருப்பது நாங்கள் செய்த புண்ணியம்!" என்றான் அரசன்.

"அதெல்லாம் எதுவும் இல்லை அரசே! நான் ஒவ்வொரு நாடாகச் சென்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் சில மாதங்கள் தங்கி அந்த நாடு பற்றி அறிந்து கொள்வதே என் பணி" என்றார் கபிலர்.

"தாங்கள் விரும்பும் வரை இந்த நாட்டில் எங்கே வேண்டுமானாலும் தங்கலாம். தங்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து தரச் சொல்லி இருக்கிறேன். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் சென்று வரலாம். அதற்கான பயண ஏற்பாடுகளைச் செய்து தர அரண்மனை ஊழியர் ஒருவர்  உங்களுடனேயே இருப்பார்!" என்றான் அரசன்.

சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அரசனைச் சந்திக்க அரண்மனைக்கு வந்தார் கபிலர்.

"என்ன கபிலரே! நாட்டைச் சுற்றிப் பார்த்தீர்களா? எங்கள் நாட்டைப் பற்றி என்ன அறிந்து கொண்டீர்கள்? அடுத்து எந்த நாட்டுக்குச் செல்ல விரும்புகிறீர்கள்?" என்றான் அரசன்.

"அரசே! நான் உங்கள் நாட்டிலேயே தொடர்ந்து வசிக்க விரும்புகிறேன். நீங்கள் அனுமதி அளித்தால் என் மீதமுள்ள வாழ்நாட்களை உங்கள் நாட்டிலேயே கழிக்க விரும்புகிறேன்!" என்றார் கபிலர்.

"அது என் பாக்கியம் அறிஞரே! தாங்கள் இந்த நாட்டிலேயே நிரந்தரமாகத் தங்க வேண்டுமென்று நானே தங்களைக் கேட்டுக் கொள்ள நினைத்தேன். ஆனால் தாங்கள் ஒரு நாட்டுக்குச் சென்று அங்கே சில மாதங்கள் தங்கி அந்த நாட்டைப் பற்றி அறிந்து கொண்டு விட்டுப் பிறகு இன்னொரு நாட்டுக்குச் செல்வது என்ற பழக்கம் உள்ளவர் என்று கூறியதால்தான் அவ்வாறு கேட்கவில்லை. இப்போது தாங்களே இங்கே நிரந்தரமாகத் தங்க விரும்புவது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது."

"அரசே! என்னை அறிஞர் என்று சிலர் கூறுகிறார்கள். உண்மையில் நான் கற்றது சிறிதளவே. ஆயினும் நான் கற்றறிந்ததை வேறு சிலருக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் மூலம் அதைப் பல நாடுகளிலும் உள்ள மக்களுக்கும் பரப்ப விரும்புகிறேன். இந்தப் பணியைச் செய்ய எனக்கு ஒரு அமைதியான இடம் வேண்டும். 

"நான் பிறந்த நாட்டில் அரசருக்கு நெருக்கமாக இருந்த பலரே அவருக்கு எதிராகச் சதி புரிந்து வந்தார்கள். அரசர் அதை உணராமல் இருந்தார். அந்த நாட்டில் நிலையான அரசாட்சி இருக்காது என்பதால் அமைதியான ஒரு இடத்தைத் தேடி இன்னொரு நாட்டுக்குச் சென்றேன். 

"நான் நாட்டை விட்டு வெளியேறிய சிறிது காலத்திற்கெல்லாம் நான் எதிர்பார்த்தபடியே அரசரைக் கவிழ்த்து வேறொருவர் ஆட்சிக்கு வந்து விட்டார். அவரலும் நிலையாக ஆள முடியாது என்பதால் அங்கே குழப்பம் நீடிக்கிறது.

"நான் குடிபுகுந்த நாட்டில் அரசர் வலுவாக இருந்தாலும், நாட்டில் பல்வேறு குழுக்கள் இருந்தன.அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அதனால் அங்கு அமைதி இல்லாத சூழ்நிலை நிலவியது.

"எனவே அந்த நாட்டை விட்டு வெளியேறி இன்னொரு நாட்டுக்கு வந்தேன். அங்கே குற்றங்கள் அதிகமாக இருந்தன. குற்றவாளிகளைப் பிடித்து தண்டனை கொடுப்பதே அரசரின் முக்கியமான பணியாக இருந்தது.

"அதன் பிறகு உங்கள் நாட்டுக்கு வந்தேன். உங்கள் நாட்டில் நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியாததால்தான் இங்கே சில நாட்கள் மட்டுமே தங்கப் போவதாக உங்களிடம் கறினேன்.

"ஆனால் மற்ற நாடுகளில் நான் பார்த்த நிலைமைகள் இங்கு இல்லை. நீங்கள் வலுவாக இருக்கிறீர்கள். நாட்டு மக்களிடையே ஒற்றுமை நிலவுகிறது. நாட்டில் குற்றங்கள் அதிகம் இல்லை. சில மாதங்கள் உங்கள் நாட்டைச் சுற்றிப் பார்த்து இவற்றை அறிந்து கொண்டதால்தான் இங்கேயே நிரந்தமாகத் தங்கி என் கல்விப்பணியைத் தொடங்க முடிவு செய்தேன்."

"கபிலரே! தாங்கள் இங்கேயே வசிக்க முடிவு செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றால், தாங்கள் இங்கே கல்விப்பணியைத் துவக்கப் போவது எனக்குப் பெருமிதத்தை அளிக்கிறது. தங்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து தர ஏற்பாடு செய்கிறேன். எங்கள் நாட்டை நாடி வந்ததன் மூலம் தாங்கள் என்னையும் இந்த நாட்டு மக்களையும் பெருமைப்படுத்தி விட்டீர்கள்!" என்றான் அரசன் பெருமிதத்துடன்,

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு

குறள் 735:
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.

பொருள்: 
முரண்பட்ட கருத்துக்கள் கொண்ட பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் உட்பகை, அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கும் குற்றம் புரிவோர் ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Tuesday, December 27, 2022

734. ஐந்து அமைச்சர்கள்!

தர்மபிரகாஷ் அந்த நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தன் அரசின் அமைச்சர்களை நியமித்தார். ஆனால் முக்கியமான ஐந்து துறைகளுக்கு அவர் அமைச்சர்களை உடனே நியமிக்கவில்லை. இது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

"முக்கியமான துறைகளான நிதி, மருத்துவம், விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய ஐந்து துறைகளுக்கு நீங்கள் ஏன் அமைச்சர்களை நியமிக்கவில்லை?" என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "விரைவிலேயே நியமித்து விடுவேன்!" என்றார் தர்மபிரகாஷ், சிரித்துக் கொண்டே.

அடுத்த சில நாட்களுக்கு தர்ம்பிரகாஷை அவர் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களும், வேறு சிலரும் சந்தித்துப் பேசினர். அவர்கள் அனைவருமே தர்ம்பிரகாஷால் அழைக்கப்பட்டவர்கள் என்று கூறப்பட்டது. அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த கட்சித் தலைவர்கள் பலருக்கு அழைப்புக் கிடைக்கவில்லை.

ஒரு வாரம் கழித்து அந்த ஐந்து துறைகளுக்குமான அமைச்சர்களின் பெயர்களை அறிவித்தார் தர்மபிரகாஷ்.ஐந்து பேரில் இரண்டு பேர் கட்சிக்காரர்கள், மற்ற மூன்று பேரும் குறிப்பிட்ட துறைகளில் நிபுணர்கள்.

மைச்சரவைக் கூட்டம் அதிபர் தர்மபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர்களை வாழ்த்தி வரவேற்றபின் தர்மபிரகாஷ் கூறினார்:

"நாம் தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கோம். அதையெல்லாம் நிறைவேற்ற வண்டியது முக்கியம்தான். ஆனா அதைவிட முக்கியமா நாம் செய்ய வேண்டிய மூணு விஷயங்கள் இருக்கு. இந்த மூணு விஷயத்தையும் நாம் குறிப்பா நம் தேர்தல் வக்குறுதிகளாக் கொடுக்கல. ஆனா இவற்றை நிறைவேற்றினாலே மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றின மாதிரிதான். ஏன்னா இந்த மூணும் நாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படையான விஷயங்கள்!"

தர்மபிரகாஷ் பேச்சை நிறுத்தி விட்டு அனைவரையும் பார்த்தார். பிறகு தொடர்ந்து பேசினார்.

"எல்லாருக்கும் அடிப்படையான ரெண்டு விஷயங்கள் உணவு, உடல்நலம். பட்டினி, நோய் இந்த இரண்டு கேடுகளும் நாட்டில இல்லாம செய்யறதுதான் எந்த ஒரு அரசாங்கத்துக்கும் முதல் குறிக்கோளா இருக்கணும். ஆனா இதைச் செய்யறது சுலபம் இல்லை. ஆழமா சிந்திச்சு முறையாத் திட்டம் போட்டுச் செயல்பட்டாத்தான் ஓரளவுக்காவது இதை நிறைவேற்ற முடியும். 

"நம் பதவிக்காலமான நாலு வருஷத்துக்குள்ள எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு இந்தப் பணியை செஞ்சு முடிக்கணும். அதனாலதான் உணவு உற்பத்தி, மருத்துவம் இவற்றில் நிறைய அறிவும் அனுபவமும் உள்ள நிபுணர்கள் சில பேரை அழைச்சு அவங்ககிட்ட என் எதிர்பார்ப்புகளைப் பற்றிச் சொல்லி அவற்றை அவங்க எப்படி நிறைவேற்றுவாங்கன்னு அவங்ககிட்ட கேட்டு அவங்க சொன்ன பதிலை வைச்சு, அவங்களுக்குள்ள சிறந்தவங்கன்னு நான் கருதின நபர்களை விவசாயம் மற்றும் உணவு மற்றும்  மருத்துவத் துறைகளுக்கு அமைச்சர்களா நியமிச்சேன். எல்லாத்துக்கும் நிதிதானே அடிப்படை? அதனாலதான் நிதி அமைச்சரா ஒரு பொருளாதார நிபுணரை நியமிச்சிருக்கேன்!"

"மூணு விஷயம்னு சொன்னீங்களே! பசி, நோய் இரண்டும் இல்லாத நிலையை உருவாக்கணும்னு சொன்னீங்க. அந்த மூணாவது விஷயம் என்ன?" என்றார் ஒரு மூத்த அமைச்சர்.

"நம் மக்களைப் பாதுகாப்பா இருக்க வைக்கறதுதான். நம் எதிரி நாடுகள்கிட்டேந்து நமக்கு அச்சுறுத்தல் இல்லாம பாத்துக்கணும். அதுக்கு உலக நாடுகள் எல்லாவற்றோடும் நாம நட்பா இருக்கற சூழ்நிலையை உருவாக்கணும். கூடியவரையிலும் எல்லா நாடுகளோடயும் நட்பா இருந்து நம் அண்டை நாடுகள்கிட்ட ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டா கூட, அவற்றைப் பேசித் தீர்க்க வகை செய்யணும். அதையும் மீறி போர் ஏற்படற சூழ்நிலை ஏற்பட்டா, பல நாடுகள் நமக்கு ஆதரவா இருக்கற நிலையை உருவாக்கணும். அதுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் திறமையானவரா, சிறப்பா செயல்படறவரா இருக்ணும். அப்படிப் போர் வந்தா நமக்கு எதிராப் போர் தொடுக்கற நாட்டை முறியடிக்கத் தேவையான படை வலிமையும், ஆயுத வலிமையும் நமக்கு இருக்கணும். அதற்கு நமக்கு ஒரு திறமையுள்ள பாதுகாப்பு அமைச்சர் இருக்கணும்!"

ஒரு நிமிடம் மௌனமாக அனைவரையும் பர்த்த தர்மபிரகாஷ், "இந்த மூணு விஷயங்களுக்காக சிறப்பான கவனம் செலுத்த ஐந்து அமைச்சர்கள் இருந்தாலும் இந்த மூணு விஷயங்களையும் நிறைவேற்றுவதில் நம் எல்லாருக்குமே பொறுப்பு உண்டு. அதனாலதான் இதைப் பற்றி உங்க எல்லார்கிட்டயும் விளக்கமாச் சொன்னேன்!" என்றார். 

பொருட்பால் 
அரணியல்
அதிகாரம் 74
நாடு

குறள் 734:
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

பொருள்: 
பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு ஆகும்..
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Monday, December 26, 2022

664. வழிகாட்டி

"எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்குப்பா!" என்றார் சுந்தரம். 

'சுந்தரம் விஷயம் தெரிந்தவர். எந்த ஒரு செயலையும் எப்படிச் செய்வது என்பதை நன்றாக அறிந்தவர். 

அவரிடம் ஆலோசனை கேட்டால் அவர் சரியாக வழிகாட்டுவார்' என்று என் அப்பா என்னிடம் சொல்லி இருந்ததால் என் நண்பன் செல்வத்தின் சொத்து பிரச்னை தொடர்பாக ஆலோசனை கேட்க அவனை அவரிடம் அழைத்துச் சென்றேன். 

செல்வம் தன் பிரச்னையைக் கூறி அதற்குத் தீர்வு உண்டா என்று அவரிடம் கேட்டபோதுதான் அவர் இப்படிச் சொன்னார்.

"நாம ஒரு செயலைச் செய்ய நினைக்கிறது ஒரு உயரமான இடத்துக்குப் போற மாதிரி. ஒரு கட்டிடத்தோட எந்த ஒரு மேல் தளத்துக்கு போகணும்னாலும் படியேறிப் போகலாம். முதல் மாடின்னனா படிகள் குறைவா இருக்கும். சுலபமா சீக்கிரமாப் போயிடலாம். பத்தாவது மாடின்னா அதிகப் படிகள் ஏறணும். கடினமா இருக்கும். அதிக நேரம் ஆகும். ஆனா போக முடியும். படியேற முடியலேன்னா லிஃப்ட் மாதிரி வசதிகள் சில சமயம் கிடைக்கும். அதுக்கு அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும்! படிகளே இல்லேன்னா, கயிறு போட்டு மேல ஏறுகிறது மாதிரி குறுக்கு வழிகளைப் பயன்படுத்தணும். இது எல்லாராலும் முடியாது. முடியும்னாலும் எல்லாருமே செய்யவும் மாட்டாங்க. இதெல்லாம் சட்ட விரோதமான வழிகள் மாதிரி. அதனால ஒரு வேலையைச் செஞ்சு முடிக்க என்னென்ன படிகள் இருக்கு, அந்தப் படிகள்ள ஏறிப் போக என்னென்ன செய்யணுங்கற ஒரு புளூபிரின்ட்டை முதல்ல தயாரிச்சுக்கிட்டா அப்புறம் வேலையை செஞ்சு முடிச்சுடலாம்!"

இந்த நீண்ட விளக்கத்துக்குப் பிறகு சுந்தரம் செல்வத்தின் சொத்து விஷயத்துக்கு வந்தார்.

"உங்க பிரச்னை கொஞ்சம் சிக்கலானதுதான். பாகம் பிரிக்காத குடும்பச் சொத்து, நிறைய வாரிசுகள், வாரிசுகள்ள சிலபேர் இறந்துட்டாங்க - இது மாதிரி பிரச்னை எல்லாம் இருக்கு. நீங்க வரிசையா என்னென்ன செய்யணும்னு சொல்றேன், எழுதிக்க!" என்ற சுந்தரம், செல்வம் செய்ய வேண்டியவற்றைப் படிப்படியாகக் குறிப்பிட்டார்.

"அவ்வளவுதான். செஞ்சு முடிக்க நேரம் ஆகும். நிறைய அலைச்சல், பணச்செலவு எல்லாம் ஏற்படும். ஆனா ஒவ்வொண்ணா செஞ்சுக்கிட்டு வந்தா செஞ்சு முடிச்சுடலாம். அஞ்சாறு மாசம் ஆகலாம். ஆனா  செஞ்சு முடிச்சப்பறம் எவ்வளவு பெரிய வேலையை எப்படி அழகா செஞ்சு முடிச்சுட்டோம்னு உனக்கே பெருமையா இருக்கும்!" என்றார் சுந்தரம்.

செய்ய வேண்டியவற்றை அவர் எளிமையாக, படிப்படியாக விளக்கிச் சொன்னதைக் கேட்டதும், வேலையைச் செய்து முடித்து விடலாம் என்ற நம்பிக்கை செல்வத்துக்கு ஏற்பட்டது 

"ரொம்ப நன்றி சார்!" என்று விடைபெற்றான் செல்வம். நானும் எழுந்தேன்.

"இருங்க. நம்ம வீட்டுக்கு வந்தவங்க காப்பி சாப்பிடாம போகக் கூடாது. காப்பி வந்துக்கிட்டிருக்கு. சாப்பிட்டுட்டுப் போங்க!" என்றவர் கைக்கடியாரத்தைப் பார்த்து விட்டு, "நான் ஒரு இடத்துக்குப் போகணும். அதனால கிளம்பறேன். நீங்க இருந்து காப்பி குடிச்சுட்டுப் போங்க!" என்று எங்கள் இருவரையம் பார்த்துச் சொல்லி விட்டு எழுந்தார். பிறகு செல்வத்திடம் திரும்பி, "ஏதாவது சந்தேகம் இருந்தா நீ எப்ப வேணும்னாலும் எங்கிட்ட வந்து கேக்கலாம்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.

ஒருசில நிமிடங்களில் காப்பியுடன் வந்த சுந்தரத்தின் மனைவி, என்னைப் பார்த்து, "என்ன தம்பி! நல்லா இருக்கியா? அப்பா அம்மா எப்படி இருக்காங்க?" என்று விசாரித்தாள்.

அனைவரும் நலம் என்று கூறி விட்டு, "இவன் என் நண்பன் செல்வம். இவன் குடும்ப சொத்துல ஒரு பிரச்னை. அதை எப்படிச் செய்யறதுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கத்தான் சாரைப் பாக்க வந்தோம். செய்ய வேண்டிய விஷயங்களை சார் ரொம்பத் தெளிவா விளக்கினாரு" என்றேன் நான்.

"ஆமாம், ஆன்ட்டி!" என்றான் செல்வம்.

"அதெல்லாம் வக்கணையா சொல்லுவாரு. ஆனா அவரால எந்த வேலையையும் உருப்படியா செய்ய முடியாது!" என்றாள் அவள் அலுத்துக் கொண்டே.

"ஏன் ஆன்ட்டி இப்படிச் சொல்றீங்க?" என்றேன் நான் புரியாமல்.

" பின்னே என்ன? இவரோட அம்மா பேரில ஒரு சொத்து இருக்கு. அதை அவங்க இவருக்குக் கொடுக்கப் போறதா சொல்லி இருக்காங்க. இவரோட கூடப் பிறந்தவங்களுக்கு அது தெரியும். அவங்களும் இதுக்கு சம்மதிச்சுட்டாங்க. ஆனா அவங்க உயில் ஏதும் எழுதி வைக்காம இறந்துட்டாங்க. சொத்தை இவர் பேருக்கு மாத்திக்கிட்டாத்தான் எங்களால அதில உரிமை கொண்டாடவோ, விக்கவோ முடியும். 'லீகல் ஹேர் சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டு, என்னோட கூடப் பிறந்தவங்க நாலு பேரும் அந்த சொத்தை எனக்கு விட்டுக் கொடுக்கறதா பத்திரம் எழுதி ரிஜிஸ்டர் பண்ணிட்டா சொத்தை என் பேர்ல மாத்திக்கலாம்'னு இவரு சொன்னாரு. இவர் கூடப் பிறந்தவங்களும் பத்திரத்தில கையெழுத்துப் போட்டு ரிஜிஸ்டர் பண்ணிக் கொடுக்கத் தயாரா இருக்காங்க. இவர் அம்மா போயி மூணு வருஷம் ஆயிடுச்சு. இவரு செஞ்சுடலாம், செஞ்சுடலாம்னு காலத்தை ஓட்டிக்கிட்டே இருக்காரு. அவர் அதை செஞ்சு முடிப்பார்ங்கற நம்பிக்கையே எனக்குப் போயிடுச்சு. பத்து லட்சம் ரூபா மதிப்புள்ள சொத்து அம்போன்னு போயிடப் போகுதோன்னு எனக்கு பயமா இருக்கு!" என்று புலம்பினாள் சுந்தரத்தின் மனைவி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்

குறள் 664:
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

பொருள்:
ஒரு செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது, சொல்லியபடி செய்து முடித்தல் அரியது..

குறள் 663

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, December 25, 2022

663. சொல்லாதது ஏன்?

"ஏண்டா, எத்தனை நாளைக்குத்தான் இந்த வேலையிலேயே இருந்துக்கிட்டிருப்ப? வேற நல்ல வேலைக்கு முயற்சி பண்ண மாட்டியா?"

நந்தகுமாரைப் பார்த்து அவன் நண்பர்கள் பலரும் அடிக்கடி கேட்கும் கேள்வி இது.

நந்தகுமாரின் அம்மாவும்தான்!

"ஏண்டா! பள்ளிக்கூடத்திலேயும், கல்லூரியிலும் நீ நல்லாப் படிக்கறவன்னு பேர் வாங்கினவன். 'எங்க வகுப்பிலேயே எல்லாரையும் விட நந்தகுமார்தான் புத்திசாலி'ன்னு உன் நண்பர்கள் சொல்றப்ப எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கும்.. இப்ப அவங்கள்ளாம் நல்ல வேலையில இருக்காங்க. நீ ஒரு சின்ன கம்பெனியில குறைஞ்ச சம்பளத்துக்கு வேலை பாத்துக்கிட்டிருக்கே. வேற வேலைக்கு முயற்சி செய்ய மாட்டேங்கற! எனக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்குடா!" என்று அடிக்கடி அலுத்துக் கொள்வாள் அவன் தாய் திரிபுரசுந்தரி.

""முயற்சி பண்ணிக்கிட்டுத்தாம்மா இருக்கேன்!" என்பான் நந்தகுமார்.

"எனக்கு அப்படித் தெரியலையே! நீ ஒரு இன்டர்வியூவுக்குப் போய்க்கூட நான் பாத்ததில்ல."

"இப்பல்லாம் ஆன்லைன் இன்டர்வியூதாம்மா! நேரில போக வேண்டியதில்லை."

"இன்டர்வியூவில எல்லாம் கலந்துக்கறேன்னா ஏன் உனக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்கல?"

"கிடைக்கும்மா! கொஞ்ச நாள் பொறுமையா இரு!"

"என்னை ஆசீர்வாதம் பண்ணும்மா! நான் சொந்தத் தொழில் ஆரம்பிக்கப் போறேன்!" என்றபடி தன் தாயில் காலில் விழுந்து வணங்கினான் நந்தகுமார்.

"என்னடா இது, திடீர்னு! என்ன தொழில்? எப்படி ஆரம்பிக்கப் போற? பணம் ஏது உங்கிட்ட?" என்று கேள்விகளை அடுக்கினாள் திரிபுரசுந்தரி.

"அம்மா! கல்லூரியில படிக்கறப்பவே புதுசா ஒரு பொருளைத் தயாரிக்க எனக்கு ஒரு யோசனை வந்தது. படிப்பு முடிஞ்சப்பறம் சில பெரிய தொழிலதிபர்கள்கிட்ட அதைப் பத்திப் பேசினேன். ஆனா அவங்க யாருமே அதில ஆர்வம் காட்டல. 

"அப்புறம் வேலை தேடறப்ப இப்ப நான வேலை பாக்கற கம்பெனிக்கு இன்டர்வியூவுக்குப் போனப்ப அவர்கிட்ட என் ஐடியாவைப் பத்தி சொன்னேன். அவருக்கு அது ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நான் தொழில் ஆரம்பிக்க அவரே உதவி செய்யறதா சொன்னாரு. 

"அவர் முதல் போடுவாரு. மானேஜிங் டைரக்டரா இருந்து கம்பெனி நிர்வாகத்தை நான் பாத்துக்கணும், எனக்கு சம்பளம் உண்டு. அதைத் தவிர .லாபத்தில முப்பது சதவீதம் பங்கும் உண்டு. 

ஆனா அந்தப் பொருளை சின்ன அளவில தயாரிச்சு அது எப்படி வருதுன்னு பாக்கணும். அதை மாரர்க்கெட்ல கொடுத்து அதைப் பயன்படுத்தப் போறவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கணும். அதுக்கப்பறம்தான் அந்தப் பொருறைத் தயாரிக்க ஆரம்பிக்கணும். அதுக்கு ஒண்ணு ரெண்டு வருஷம் ஆகும். 

"அதனால ஆரம்பத்தில அவர் நிறுவனத்தில நான் சம்பளத்துக்கு வேலை பாத்துக்கிட்டு இந்தப் பொருளை சின்ன அளவில தயாரிக்கற வேலையில ஈடுபடணும்னு சொன்னாரு. ஒருவேளை அது சரியா வராட்டா நான் வேற வேலை பாத்துக்கலாம். அதன்படிதான் ஒரு வருஷத்துக்கு மேல அங்கே வேலை செஞ்சுக்கிட்டு அந்தப் பொருளை சின்ன அளவில தயாரிக்கற  அமைப்பை உருவாக்கறதிலேயும் ஈடுபட்டிருந்தேன்.

"பொருளை மார்க்கெட்ல கொடுத்து டெஸ்ட் பண்ணினோம். மார்க்கெட்ல அதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அதனால இப்ப புதுசா ஒரு கம்பெனி ஆரம்பிச்சு அந்தப் பொருளைத் தயாரிக்கப் போறோம். இனிமே உன் பிள்ளை மானேஜிஙு டைரக்டர்!"

நந்தகுமார் சொல்லி முடித்ததும் "என்னடா திடீர்னு இப்படிச் சொல்ற? என்னால நம்பவே முடியல. சந்தோஷத்தில திக்குமுக்காட வச்சுட்டியே!" என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறிய திரிபுரசுந்தரி, "ஏண்டா! இதைப் பத்தி எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல? ஏதோ சின்ன கம்பெனியில குறைஞ்ச சம்பளத்துக்கு வேலை செய்யறதா சொல்லி என்னை ஏமாத்திக்கிட்டு வந்திருக்கியே!" என்றாள் சற்றுக் கோபத்துடன்.

"மன்னிச்சுக்கம்மா. உங்கிட்ட மட்டும் இல்ல, என்னை ஏன் வேற வேலைக்குப் போகலேன்னு என் நண்பர்கள் துருவித் துருவிக் கேட்டப்பக் கூட அவங்ககிட்ட உண்மையைச் சொல்லாம  கஷ்டப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டேன்.  இதை செஞ்சு முடிக்கிற வரைக்கும் இதைப் பத்திப் பேசக் கூடாதுன்னு உறுதியா இருந்தேன். ஒருவேளை இதை வெளியில சொன்னா, 'இதெல்லாம் வேண்டாம், நல்லதாஒரு  வேலையைப் பாத்துக்கிட்டு வாழ்க்கையில செட்டில் ஆற வழியைப்பாரு'ன்னு நீயோ வேற யாராவது சொல்லிடுவீங்களோன்னு பயம். அதனாலதான் ரொம்ப கஷ்டப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டிருந்தேன். அப்படி இருந்ததாலதானே இதைச் செஞ்சு முடிச்சு உன்னை சந்தோஷப்படுத்த முடிஞ்சுது!" என்றான் நந்தகுமார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்

குறள் 663:
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.

பொருள்:
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப் பற்றி வெளிப்படுத்தாமல் இருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்து விட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக் கூடும்.

குறள் 664 (விரைவில்)

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Saturday, December 24, 2022

733. அரசரின் பெருமிதம்!

"அரசே! சங்க நாட்டிலிருந்து தினமும் பலர் நம் நாட்டுத் தென் எல்லையைத் தாண்டி நம் நாட்டுக்குள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். நம் வீரர்கள் அவர்களை அங்கேயே முகாம்கள் அமைத்துத் தங்க வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து மக்கள் வந்து கொண்டே இருப்பது கவலை அளிக்கிறது" என்றார் அமைச்சர்.

"என்ன செய்யலாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?" என்றார் அரசர்.

"சங்க நாட்டில் இன வெறியர்கள் சிறுபான்மை இன மக்களைப் படுகொலை செய்து வருகிறார்கள். சங்க நாட்டு அரசர் ராஜபத்மரும்  இனவெறியர்களைக் கட்டுப்படுத்தாமல் அவர்கள் நிகழ்த்தும் வன்முறைச் செயல்களுக்குத்  துணை போகிறார். எனவே அச்சுறுத்தலுக்குள்ளான சிறுபான்மை இனத்தினர் நம் நாட்டில் அடைகலம் புகுவதில் வியப்பில்லை. தாங்கள் அனுமதி அளித்தால் எல்லைப்பகுதியில் உள்ள முகாம்களில் இருப்பவர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கே தங்க வைக்க ஏற்பாடு செய்யலாம். அங்கே உள்ள சத்திரங்களில் அவர்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யலாம். அதற்கான செலவுக்கு அரண்மனைப் பொக்கிஷத்திலிருந்து நிதி அளிக்கத் தாங்கள் அனுமதிக்க வேண்டும்!" என்றார் அமைச்சர் சற்றுத் தயக்கத்துடன்.

"அப்படியே செய்யுங்கள். ஆனால் அதற்கு அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்!" என்றார் அரசர் சிரித்துக் கொண்டே.

"ஏன் அரசே? சங்க நாட்டில் இனப்படுகொலை தடுக்கப்பட்டு விரைவிலேயே அமைதி திரும்பி விடும் என்று எதிர்பார்க்கிறீர்களா?" என்றார் அமைச்சர் குழப்பத்துடன்.

"ராஜபத்மன் அரசனாக இருக்கும் வரையில் அந்த நாட்டில் அமைதி ஏற்பட வாய்ப்பு இல்லை. நான் நம் நாட்டு மக்களின் இயல்பை வைத்துச் சொல்கிறேன்!"

அரசர் சொன்னது புரியமல் அமைச்சர் அகன்றார்.

"அரசே! சங்க நாட்டு அகதிகளை நாம் குடியமர்த்தி அவர்களுக்கு உணவளிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நம் நாட்டு மக்களே  எல்லைப்புறத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் அகதிகள் குடி இருக்கத் கொட்டகைகள் அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு உணவளித்தும் வருகிறார்கள். இதைத்தான் தாங்கள் எதிர்பார்த்தீர்களா?" என்றார் அமைச்சர்.

"ஆமாம். வந்தாரை வாழ வைக்கும் நாடு என்பது நம் நாட்டைப் பற்றி நாமே பெருமையாகக் கூறிக் கொள்ளும் சொற்றொடர் இல்லை. போர், நோய், இயற்கை நிகழ்வுகள் போன்ற பல்வேறு காரணங்களால் பிற நாடுகளிலிருந்து  பல்வேறு காலங்களில் இங்கே வந்து அடைக்கலம் புகுந்து நம் நாட்டில் ஐக்கியமாகி விட்ட மக்கள் நன்றியுடன் நமக்கு அளித்திருக்கும் பட்டம் இது!" என்றார் அரசர் பெருமுதத்துடன்.

"ஆனால் மக்களால் எவ்வளவு நாள்  இவ்வாறு செய்ய முடியும்?"

"நம் மக்கள் பாலைப் போன்றவர்கள். எவ்வளவு நீரை உற்றினாலும் உள்வாங்கிக் கொள்வார்கள். ஆயினும் மக்கள் மீதான சுமையைக் குறைக்க நாம் உதவ வேண்டும். கொட்டகைகளில் தங்கி இருக்கும் மக்களுக்கு உணவளிக்க அரசு தானியக் கிடங்கிலிருந்து தானியங்கள் கொடுத்து உதவுவோம்."

"செய்யலாம் அரசே! ஆனால் எனக்கு இன்னொரு கவலை இருக்கிறது!" என்றார் அமைச்சர். 

"உங்கள் கவலை என்னவென்று எனக்குப் புரிகிறது அமைச்சரே! ஒன்று நிகழுமோ என்று கவலைப்படுவதை விட அது நிகழும்போது எதிர்கொள்வதுதான் சிறப்பாக இருக்கும்!" என்றார் அரசர்.

"அரசே! நம் நாட்டு மக்கள் சங்க நாட்டு அகதிகளுக்கு உதவி வருவதால் அவர்களுக்கு அதிக பொருட்செலவு ஏற்படுகிறது. அதனால் அவர்களால் வரிகளைச் சரியாகச் செலுத்த முடியாது. நம் வரி வருமானம் குறைந்து விடும் என்ற கவலை எனக்கு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு வரி வசூலும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகளை வழக்கம் போல் செலுத்தி இருக்கிறார்கள். இது எனக்கு வியப்பாக இருக்கிறது!" என்றார் அமைச்சர்.

"எனக்கு வியப்பாக இல்லை அமைச்சரே! நம் நாட்டு மக்களின் உதவும் குணம், அவர்கள் தியாக மனப்பான்மை, அரசாங்கத்துக்குச் செலுத்த வண்டிய வரிகளை முறையாகச் செலுத்தினால்தான் அரசாங்கத்தால் சிறப்பாக இயங்க முடியும் என்ற உணர்வினால் உருவான கடமை உணர்வு ஆகிய இயல்புகள் பற்றிய என் கணிப்பு தவறாகவில்லை. நம் நாட்டு மக்களைப் பற்றி எனக்குப் பெருமையாக இருக்கிறது!" என்றார் அரசர். 

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு

குறள் 733:
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.

பொருள்: 
போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்


Friday, December 23, 2022

853. பேசக் கூடாது!

ஒரே கல்லூரியில் படித்து ஒரே ஊரில் வேலை பார்க்கும் அந்த எட்டு நபர்கள் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒன்று கூடிப் பேசுவார்கள். 

இந்தச் சந்திப்புகள் பெரும்பாலும் அவர்களில் சிலர் உறுப்பினர்களாக இருக்கும் கிளப்பில் நடக்கும். 

சனிக்கிழமை மாலையில் நடக்கும் இந்தச் சந்திப்புகள் சில மணி நேரம்  அரட்டைக்குப் பிறகு இரவு உணவுடன் முடியும்.

அத்தகைய ஒரு சந்திப்பு முடிந்து நரேஷும், குமரனும் விடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவர் வீடுகளும் அந்த கிளப்பிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்குள்ளேயே அமைந்திருந்ததால் சந்திப்பு முடிந்ததும் இருவரும் தங்கள் வீடுகளுக்கு நடந்தே செல்வார்கள்.

"ஆமாம். இன்னிக்கு ஒண்ணு கவனிச்சேன். நீ வேணுகிட்ட சரியாவே பேசலையே! அவனே வலுவில வந்து உங்கிட்ட பேசினப்ப கூட நீ சரியா பதில் பேசலையே! என்ன விஷயம்? உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாவது சண்டையா? அவன் அப்படிக் காட்டிக்கலையே!" என்றான் குமரன் நரேஷிடம்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை!" என்றான் நரேஷ்.

"மழுப்பாதேடா! எங்கிட்ட சொல்றதில உனக்கு என்ன தயக்கம்?"

"அவன் என்னை அப்படிப் பேசினப்பறம் அவங்கிட்ட என்னால எப்படி சுமுகமா இருக்க முடியும்?"என்றான் நரேஷ் சட்டென்று வெடித்தபடி.

"என்ன பேசினான்? எப்ப பேசினான்? எனக்குத் தெரியாம எப்ப இப்படி நடந்தது?" என்றான் குமரன் வியப்புடன்.

"உனக்குத் தெரியாம என்ன? நீயும்தானே வாட்ஸ்ஆப் க்ருப்ல இருக்க!"

"வாட்ஸ்ஆப்பா?...ஓ...அதுவா?" என்று பெரிதாகச் சிரித்தான் குமரன்.

"என்னடா சிரிக்கற? அவன் என்னை எப்படியெல்லாம் எகத்தாளமாப் பேசினான்னு நீயும்தானே படிச்சிருப்ப?" என்றான் நரேஷ் கோபத்துடன்.

"படிச்சேன். அரசியல்ல  உனக்கு ஒரு கருத்து இருக்கு, அவனுக்கு வேற ஒரு கருத்து இருக்கு. அதனால.ரெண்டு பேருக்கும் அடிக்கடி கருத்து மோதல் ஏற்படறதை கவனிச்சிருக்கேன். அதுக்காக நீ அவன்கிட்ட விரோதம் பாராட்டற அளவுக்கு என்ன நடந்தது?"

"விரோதம் பாராட்டலைடா. கருத்துப் பரிமாற்றம் செஞ்சுக்கறப்ப அவன் ரொம்ப கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினான். அதையெல்லாம் படிச்சப்பறம் என்னால எப்படி அவன் மேல கோபப்படாம இருக்க முடியும்?"

"நரேஷ்! மனிதர்களுக்கு இடையில கருத்து வேறுபாடுகள் இருக்கறது இயல்பான விஷயம்தான். எந்த ரெண்டு பேரை எடுத்துக்கிட்டாலும் அவங்களுக்குள்ள ஏதாவது ஒரு விஷயத்தில கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஒருத்தரோட நமக்கு இருக்கற கருத்து வேறுபாடு மனக்கசப்பாகவோ, விரோதமாகவோ ஆகாம பாத்துக்கணும். அப்படி இருந்தாதான் நம்மால எல்லோரோடயும் நல்லாப் பழக முடியும். மனக்கசப்பை வளர்த்துக்கிட்டா நமக்கு மத்தவங்களோட நல்ல உறவு இருக்காது. அப்புறம் வாழ்க்கையில நம்மால எப்படி மகிழ்ச்சியா இருக்க முடியும்?" என்றான் குமரன்.

"அது சரிதான். ஆனா கருத்துக்களை விவாதிக்கறப்ப ஒத்தர் நம்மைக் கடுமையாப் பேசினா நமக்குக் கோபம் வராதா?"

"வரும்தான். இதை சமாளிக்க ரெண்டு வழிதான் இருக்கு. ஒத்தர் எவ்வளவு கடுமையாப் பேசினாலும், அவர் நம்ம கருத்தைத்தான் விமரிசிக்கிறாரு, தம்மை இல்லன்னு புரிஞ்சுக்கிட்டு அவர் மேல கோப்பபடாம இருக்கற முதிர்ச்சி இருக்கணும்.  இது ஒரு வழி. இன்னொரு வழி..." என்று சொல்லி நிறுத்தினான் குமரன்.

"இன்னொரு வழி என்ன?" என்றான் நரேஷ் ஆவலுடன்.

"கருத்து வேறுபாடு இருக்கற விஷயங்களைப் பேசாமலே இருக்கறது!"

"அது எப்படி முடியும்? பேசும்போதோ, வாட்ஸ்ஸப் உரையாடலின்போதோ எல்லா விஷயங்களும் வரத்தான் செய்யும்.  நம்ம கருத்தைச் சொல்லாமயே எப்படி இருக்கறது?"

"நான் இருக்கேனே!"

"என்னடா சொல்ற?"

"என்னோட அரசியல் கருதுகள் உன்னோட கருத்துக்களுக்கு எதிர்மறையானவைதான். ஆனா அதையெல்லாம் பேசி, அதனால நமக்குள் கசப்பு வரக் கூடாதுங்கறதுக்காகத்தான் நான் இதுவரை ஒரு தடவை என்னோட அரசியல் கருத்துக்களை உங்கிட்ட பேசினதில்ல. நீ ஏதாவது பேசறப்ப அதை மறுக்கணும்னு எனக்குத் தோணும். ஆனா அப்படிச் செய்யக் கூடாதுன்னு என்னையே கட்டுப்படுத்திக்கிட்டு இருப்பேன்!" என்றான் குமரன்.

நரேஷ் தன் நண்பனை ஒரு புதிய மரியாதையுடன் பார்த்தேன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல்

குறள் 853:
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.

பொருள்: 
மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Wednesday, December 21, 2022

732. தேச விரோதி!

தேசவிரோதக் குற்றம் சாட்டப்பட்ட பரதன் கைது செய்யப்பட்டு அரசவைக்கு அழைத்து வரப்பட்டான்.

கைது செய்யப்பட்டவன் செய்த குற்றங்களைக் காவலர் தலைவர் படித்துக் காட்டினார்.

"இந்த அவையின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் பரதன் என்ற இந்த இளைஞன் தன் ஊரில் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வந்தான். அந்த கிராம மக்களும் இவன் பேச்சைக் கேட்டு நம் நாட்டு விதிகளுக்குப் புறம்பான செயல்களைச் செய்து வந்திருக்கின்றனர். அதனால் அவன் தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டிருக்கிறான்."

"பரதா! நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?" என்றார் அரசர்.

"அரசே! என்னை தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் காவலர் தலைவர் கூறி இருக்கிறார். நான் தேசத்துரோகி என்றால் தாங்களும் தேசத்துரோகிதான்!" என்றான் பரதன்.

அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பரதனைப் பிடித்துக் கொண்டிருந்த காவலர் அவனை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு மன்னர் என்ன கூறப் போகிறார் என்று மன்னரைப் பார்த்தார்.

மன்னர் சிரித்தபடி, "சொல்லு பரதா! நான் செய்த தேசத்துரோகக் குற்றம் என்ன?" என்றார்.

"அரசே! தாங்கள் முடிசூட்டிக் கொண்ட பிறகு அரண்மனையின் உப்பரிகையில் நின்று ஆற்றிய உரையைக் கேட்ட மக்களில் நானும் ஒருவன். அப்போது தாங்கள் கூறியவை தங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன்!" 

'என்ன இவன் மன்னர் என்ற மரியாதை இல்லாமல் தனக்குச் சமமான ஒருவருடன் பேசுவது போல் பேசுகிறானே!' என்று அவையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்திருக்க, மன்னர் சிரித்துக் கொண்டே, "நினைவிருக்கிறது பரதரே! ஆயினும் அதைத் தங்கள் வாயால் கேட்க விரும்புகிறேன்!" என்றார்.

மன்னர் அவனை 'பரதரே!' என்று மரியாதையாக விளித்துப் பேசியது மன்னர் பரதன் மீது கடும் கோபத்தில் இருப்பதையும் அவர் அவனுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப் போவதையும் காட்டுவதாகப் பலரும் நினைத்தனர்.

"அரசே! நம் நாடு செல்வச் செழிப்புடன் விளங்க வேண்டும். மற்ற நாட்டில் வசிப்பவர்கள் கூட நம் நாட்டின் வளத்தைப் பறிக் கேள்வியுற்று இங்கே வந்து வசிக்க விரும்ப வேண்டும், குற்றங்கள், நோய்கள் போன்ற தீமைகள் முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும், இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக நம் நாட்டில் உள்ள நிலவளத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி நம் தேவைக்கு அதிகமாக விளைபொருட்களை விளைவித்து மிகுதியைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பொருள் ஈட்ட வேண்டும், இவற்றை நிறைவேற்றுவதுதான் என் லட்சியம் என்று தாங்கள் கூறினீர்கள்!" என்றான் பரதன்.

"ஆமாம், கூறினேன். இதைத்தான் தேசவிரோதச் செயல் என்று கூறுகிறாயா?"

":தாங்கள் கூறிய இதே விஷயங்களை என் கிராமத்தில் நிறைவேற்ற நான் செய்த முயற்சிகளைத்தானே தேசத்துரோகம் என்று கூறிக் காவலர்கள் என்னைக் கைது செய்திருக்கிறார்கள்!"

அரசர் காவலர் தலைவரைப் பார்த்தார்.

"அரசே! இவன் ஊர் மக்களை விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழில் செய்யும்படி தூண்டி இருக்கிறான். ஊருக்குப் பொதுவாக இருக்கும் நிலங்களை அரசு அதிகாரியின் அனுமதியின்றி ஆக்கிரமிக்கும்படி ஊர் மக்களைத் தூண்டி இருக்கிறான். அனுமதியின்றிக் கால்வாய்களை அமைத்து ஆற்று நீரைத் திசை மாற்றி இருக்கிறான். ஊரில் நடக்கும் குற்றங்களை ஊர் மக்களே விசாரிக்கும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறான். இது போன்ற தகாத செயல்களைத் தன் ஊரில் செய்த்து மட்டுமின்றி பக்கத்து ஊர்களில் உள்ள மக்களையும் இதுபோல் செய்யத் தூண்டி இருக்கிறான்!" என்றார் காவலர் தலைவர்.

"என் சக தேசத்துரோகி பரதர் என்ன செய்திருப்பார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆயினும் அதை அவர் வாயாலேயே சொல்லக் கேட்க விரும்புகிறேன்!" என்றார் அரசர் புன்முறுவல் மாறாமல்.

பரதன் சற்று வியப்புடன் அரசரைப் பார்த்து விட்டுப் பிறகு துணிவு பெற்றவனாகப் பேசத் தொடங்கினான், 

"அரசே! எங்கள் ஊரில் விளைநிலங்கள் சில தரிசாகக் கிடக்கின்றன. அவை பொதுநிலம் என்பதால் அவை பண்படுத்தப்படாமல் கிடக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த அனுமதி கேட்டு அரசு அதிகாரிகளை அணுகினேன். ஆனால் அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை. அதனால் அவற்றை ஊர் மக்கள் தாங்களே பண்படுத்திப் பயிர் செய்து அரசாங்கத்துக்கு உரிய வரியைச் செலுத்தி விட்டு மிகுதியுள்ள விளைச்சல் வருமானத்தை ஊருக்குப் பொதுவாக வைத்துக் கொள்ளலாம் என்று ஊர் மக்களிடம் கூறினேன். 

"இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கான கூலியைத் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து கொடுக்கச் சில செல்வந்தர்கள் முன் வந்தனர். அவர்கள் செலவழித்த பணத்துக்கு ஈடாக விளைச்சலிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பதாக ஏற்பாடு. இதனால் ஊரும் வளம் பெறும், அரசாங்த்துக்கும் வரி வருமானம் கிடைக்கும். 

"ஊரில் உள்ள ஆற்றுநீரைச் சரியாகப் பயன்படுத்த முடியாததால் அவற்றில் வரும் நீர் வீணாகிறது. ஒருசில பெருநிலக்காரர்கள் தங்கள் நிலத்துக்கு மட்டும் நீர் வரும்படி கால்வாய்களை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை ஊரில் பலருக்கும் பயன்படும்படி மாற்றி அமைத்தோம். 

"ஊரில் உள்ள அனைவரும் விவசாயத்திலேயே ஈடுபடுவதை மாற்றித் திறமையும், முனைப்பும் உள்ள சிலரை வேறு தொழில்கள், வியாபாரங்களில் ஈடுபடும்படி ஊக்குவித்தேன். 

"ஊரில் நடக்கும் குற்றங்களை ஊர்ப் பெரியவர்களே விசாரித்து, குற்றம் செய்தவர்களைச் சிறைக்கு அனுப்பாமல் அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவதற்கான ஒரு அமைப்பை ஊரில் உருவாக்கினோம். 

"எங்கள் ஊரில் நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலனளிப்பதைப் பார்த்து பக்கத்து ஊர்க்காரர்கள் சிலர் தாங்களும் இதேபோல் செயல்பட உதவும்படி எங்களை அணுகினர். அவர்களை எங்கள் ஊருக்கு வரவழைத்து நாங்கள் செயதவற்றை அவர்களுக்குக் காட்டினோம். அந்தத் திட்டங்களை அவர்கள் தங்கள் கிராமங்களிலும் செயல்படுத்த முனைந்திருக்கிறார்கள்!"

"இப்படியே போய்க் கொண்டிருந்தால் இதுபோல் எல்லா ஊர்க்காரர்களும் செய்ய ஆரம்பிப்பார்கள். அப்புறம் நாடே வளம் பெற்றதாக ஆகி விடாதா? எவ்வளவு பெரிய தேசத்துரோகச் செயல் இது!" என்றார் அரசர்.

அனைவரும் குழப்பத்துடன் அரசரைப் பார்க்க, அரசர் அமைச்சரைப் பார்த்து, "அமைச்சரே! உங்களுக்கு உதவியாளராக அறிவும், திறமையும் கொண்ட ஒரு நபர் வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தீர்களே, இந்த பரதனை விடச் சிறந்த மனிதர் உங்களுக்குக் கிடைக்க மாட்டார்!" என்றார்.

மன்னரின் சமிக்ஞையைப் புரிந்து கொண்டு பரதனைப் பிணைத்திருந்த சங்கிலிகளைக் காவலர்கள் விடுவித்தனர்.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு

குறள் 732:
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

பொருள்: 
மிக்க பொருள்வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்


852. சாரதியின் பிரச்னை!

ராகவன் அந்த வீட்டின் ஒரு போர்ஷனுக்குக் குடிபோனபோது, பக்கத்து போர்ஷனில் சாரதி என்றவரின் குடும்பம் இருந்து வருவதாக வீட்டுச் சொந்தக்காரரிடமிருந்து அறிந்து கொண்டான்.

சாரதி தன் போர்ஷனிலிருந்து வெளியே வந்தபோது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கையை நீட்டினான் ராகவன். ஆனால் அவர் அவனுடன் கைகுலுக்காமல்  தலையை ஆட்டி விட்டுப் போய் விட்டார்.

சில நாட்கள் அனுபவத்தில் சாரதி தன்னிடம் நட்பாக இருக்க விரும்பவில்லை என்பதை ராகவன் புரிந்து கொண்டான். அத்துடன் தன் மனைவி, குழந்தைகளையும் ராகவன் குடும்பத்தினரிடம் பழக வேண்டாம்  என்று அவர் சொல்லி வைத்திருப்பது போல் தோன்றியது. ஏனெனில் ராகவனின் மனைவியும் மகளும் சாரதியின் குடும்பத்தினருடன் பழக முயன்றபோது அவர்கள் ஒதுங்கியே இருந்தனர்.

இன்னும் சில நாட்களுக்குப் பிறகு ராகவன் குடும்பத்தினர் தனக்குத் தொல்லை கொடுப்பதற்காகவே தன் போர்ஷனுக்கு பக்கத்து போர்ஷனில்  குடி வந்து விட்டது போல் நடந்து கொண்டார் சாரதி. பல பிரச்னைகளைக் கிளப்பி  சண்டை போடத் தொடங்கினார்.

ஒருமுறை ராகவனின் மனைவி தன் விட்டு வாசலில் நீர் தெளித்துக் கோலம் போடும்போது, சாரதியின் வீட்டு வாசலில் பேப்பர் போடுபவர் போட்டு விட்டுப் போயிருந்த செய்தித்தாளின் ஓரத்தில் ஈரம் பட்டு விட்டதாகப் புகார் செய்தார்.

இரவு நேரத்தில் ராகவன் வீட்டில் அடிக்கடி நாற்காலிகள் இழுக்கப்படுவதாகவும், அதனால் தங்களால் தூங்க முடியவில்லை என்றும் சாரதி வீட்டுச் சொந்தக்காரரிடம் புகார் செய்தார். 

வீட்டுச் சொந்தக்காரர் சிரித்துக் கொண்டே இதை ராகவனிடம் தெரிவித்தபோது, "என்ன சார் இப்படியெல்லாம் சொல்றாரு1 பத்து மணிக்கெல்லாம் நாங்க மூணு பேரும் தூங்கிடுவோம். அடுத்த நாள் காலை ஆறு மணிக்குத்தான் எழுந்திருப்போம்! எங்க வீட்டில நாற்காலி எதுவும் இல்லை. சோஃபா மட்டும்தான் இருக்கு. ராத்திரியில அதை யாராவது இழுத்துக்கிட்டே இருப்பாங்களா என்ன? அவர் சொல்ற மாதிரியெல்லாம் எதுவும் நடக்கல!" என்றான் ராகவன் கோபத்துடன்.

"அது எனக்குத் தெரியும் சார். அவர் சொன்னதை உங்ககிட்ட சொன்னேன். அவ்வளவுதான்!" என்றார் வீட்டுக்காரர்.

"அவர் ஏன் சார் இப்படி இருக்காருழ என்னை அவருக்குப் பிடிக்கலையா, இல்லை எல்லார்கிட்டேயும் இப்படித்தான் இருப்பாரா?" என்றான் ராகவன்.

"பொதுவா அவர் சண்டை போடற ஆளுதான். எங்கிட்டயே அடிக்கடி வீட்டைப் பத்தி ஏதாவது குறை சொல்லி, சண்டை போடுவாரு. நான் அதைப் பொருட்படுத்தறதில்ல. உங்களுக்கு முன்னால இருந்தவர் தனியா இருந்தாரு. அவருக்குக் குடும்பம் இல்ல. அவரு காலையில போனா ராத்திரிதான் வீட்டுக்கு வருவாரு. ஞாயிற்றுக்கிழமைகள்ள கூட வீட்டில இருக்க மாட்டாரு. அதனால அவரோட சண்டை போட சாரதிக்கு சந்தர்ப்பம் கிடைக்கலையோ என்னவோ!" என்றார் வீட்டுச் சொந்தக்காரர்.

"இன்னிக்கு ஆஃபீஸ்லேந்து வீட்டுக்கு வந்துக்கிட்டிருக்கறப்ப வழியில ஒரு ஸ்கூட்டரை ஒரு போலீஸ்காரர் நிறுத்தி விசாரிச்சுக்கிட்டிருந்தாரு. யாருன்னு பாத்தா நம்ம சாரதி!" என்றான் ராகவன் தன் மனைவியிடம்.

"ஏன் போலீஸ்காரர்கிட்ட ஏதாவது சண்டை போட்டுக்கிட்டிருந்தாரா?" என்றாள் அவன் மனைவி.

"ஒன்வேயில போயிட்டாராம். ஐநூறு ரூபா ஃபைன் போட்டிருக்காங்க. அவர்கிட்ட பணம் இல்லை. 'ஆட்டோல வீட்டுக்குப் போய்ப் பணம் எடுத்துக்கிட்டு வந்து ஃபைன் கட்டிட்டு ஸ்கூட்டரை எடுத்துட்டுப் போங்க'ன்னு போலீஸ்கார் சொல்லி இருக்காரு. அவர் வீட்டிலேயும் பணம் இல்லையாம். நாளைக்கு பாங்க்லேந்து பணம் எடுத்துத்தான் கட்ட முடியும்னு சாரதி சொல்லி இருக்காரு. 'அப்படின்னா ஸ்கூட்டரை எடுத்துக்கிட்டுப் போய் போலீஸ் ஸ்டேஷன்ல வச்சுடுவோம், நாளைக்கு ஸ்டேஷனுக்கு வந்து பணம் கட்டிட்டு ஸ்கூட்டரை எடுத்துக்கிட்டுப் போங்க'ன்னு போலீஸ்காரர் சொல்லிக்கிட்டிருந்தாரு!"

"அடப்பாவமே! உங்ககிட்ட பணம் இருந்திருக்குமே1 நீங்க ஃபைன் கட்டி உதவினீங்க இல்ல?" என்றாள் மனைவி.

"அப்படித்தான் செஞ்சேன்.என்னதான் அவர் காரணம் இல்லாம நம்ம மேல விரோதமா இருந்து நமக்கு எரிச்சல் வர மாதிரி நடந்துக்கிட்டிருந்தாலும் அவருக்கு ஒரு கஷ்டம் வரும்போது உதவி செய்யறதுதானே மனிதாபிமானம்!  நான் அப்படித்தான் செஞ்சிருக்கணும்னு நீயும் சொல்றதைக் கேக்கறப்ப ரொம்ப திருப்தியா இருக்கு!" என்றான் ராகவன்.

"பின்ன? நம்மகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருக்காருங்கறதுக்காக அவருக்கு ஒரு பிரச்னை ஏற்படும்போது, நல்லா கஷ்டப்படடடும்னு விட்டுட்டு வந்திருக்க வேண்டியதுதானேன்னு சொல்லுவேன்னா எதிர்பார்த்தீங்க?" என்றாள் ராகவனின் மனைவி."

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல்

குறள் 852:
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.

பொருள்: 
நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவர் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவரைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

662. புதிய கிளை திறப்பு விழா

அந்த நிறுவனத்தின் புதிய கிளை அலுவலகத்தின் கிளை மேலாளராக நாகராஜன் நியமிக்கப்பட்டபோது அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, அவன் உடனே கிளம்பி ஆந்திர மாநிலத்தில் உள்ள அந்த நகரத்துக்குச் சென்று அலுவலகத்துக்கான இடம் பார்த்து வாடகைக்கு எடுத்து, அலுவலகத்தைக் கட்டமைத்து இரண்டு மாதங்களுக்குள் அலுவலகம் திறகப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பொது மேலாளர் கூறியதைக் கேட்டதும் சவாலாக மாறி சற்றுக் கவலையையும் அளித்தது.

மொழி தெரியாத ஊரில் போய் இரண்டு மாதங்களுக்குள் எல்லா ஏற்பாடுகளையும் செய்வது எப்படி என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

"இது ஆந்திராவில நாம ஆரம்பிக்கிற முதல் கிளை. நம் சேர்மன் ஆந்திராக்கரர்ங்கறதால அவர் இதில ரொம்ப ஆர்வமா இருக்காரு. தானே வந்து கிளையைத் திறந்து வைக்கறதாச் சொல்லி இருக்காரு!" என்றார் பொது மேலாளர்.

நாகராஜனுக்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றியது.

"சார்! எனக்குத் தெலுங்கு தெரியாது. நம்ம ரங்கநாதம் சாரை என்னோட அழைச்சுக்கிட்டுப் போகலாமா சார்? பிராஞ்ச் ஆஃபீஸ் திறந்தப்பறம் அவர் இங்கே திரும்பி வந்துடலாம்!" என்றான் நாகராஜன்.

பொது மேலாளர் சற்று யோசித்து விட்டு, "உங்களுக்கு உதவியா உள்ளூர்லேந்தே ஒத்தரை நியமிச்சுக்கச் சொல்லலாம், பிராஞ்ச் திறந்தப்பறம் அவர் அங்கேயே தொடர்ந்து வேலை செய்யலாம்னு நினைச்சேன். பரவாயில்லை. ரங்கநாதம் சரின்னு சொன்னா அழைச்சுக்கிட்டுப் போங்க. நான் ஆஃபீஸ் ஆர்டர் போட்டுடறேன்!" என்றார்.

ரங்கநாதம் முதலில் சற்றுத் தயங்கினாலும், பிறகு ஒப்புக் கொண்டார். அவர் நாகராஜனை விட சீனியர். ஆனால் பதவி உயர்வில் அவருக்கு ஆர்வம் இல்லை. எனவே நாகராஜன் கிளை மேலாளராகப் பதவி உயர்வு பெற்றதில் அவருக்கு வருத்தம் இல்லை.

ந்த ஊருக்குச் சென்றதும் ஒரு ஓட்டல் அறையில் தங்கிக் கொண்டு தன் பணிகளைத் துவக்கினான் நாகராஜன். தெலுங்கு தெரிந்த ரங்கநாதத்தின் உதவியுடன் ஒரு வாரத்தில் அலுவலகத்துக்கான ஒரு கட்டிடத்தைத் தேர்ந்தெடுத்தான்.

பொது மேலாளரிடம் தகவலைத் தொலைபேசியில் தெரிவித்ததும் அவர் "சரி, கட்டட உரிமையாளர்கிட்ட லீஸ் அக்ரிமென்ட் போடணும். அதுக்கு முன்னால உரிமையாளர் அவர்தானான்னு சரி பாக்கணும். நீங்க கட்டட உரிமையாளரோட டாகுமென்ட்ஸ் காப்பி எல்லாம் வாங்கி அனுப்புங்க. நம்ம லீகல் அட்வைசர்கிட்ட கொடுத்து அப்ரூவல் வாங்கிடலாம்!" என்றார் \

"சார்!  இஃப் யூ டோன்ட் மைண்ட், இதுக்கு ரொம்ப டைம் ஆகும் சார். லீகல் அட்வைசரை இங்கே வரச் சொன்னா ரெண்டு நாள்ள வேலை முடிஞ்சுடும்!" என்றான் நாகராஜன்.

பொது மேலாளர் அவன் யோசனையை ஒப்புக் கொண்டார்.

"நீ பெரிய ஆள்தாம்ப்பா! முதல்ல ஜி எம்கிட்ட சொல்லி உதவிக்கு என்னைக் கூப்பிட்டுக்கிட்ட. இப்ப லீகல் அட்வைசரையே இங்கே அனுப்பச் சொல்லி அதுக்கும் ஒப்புதல் வாங்கிக்கிட்டியே!" என்றார் ரங்கநாதம் சிரித்துக் கொண்டே.

"செய்யற வேலையை சரியாச் செய்ய வேண்டாமா சார்? டாகுமென்ட்டையெல்லாம் வக்கீல் நேரில பாத்துட்டார்னா அப்புறம் பிரச்னை வராது இல்ல? வேலையைக் குறிப்பிட்ட நேரத்திலயும் முடிக்கணும், தவறுகள் நேராம சரியாவும் செஞ்சு முடிக்கணும் இல்ல? சரி. கிளம்புங்க. ஆஃபீசுக்குள்ள பார்ட்டிஷன்ஸ்,  ஃபர்னிஷிங் எல்லாம் பண்ண ஆளைப் பிடிக்கணும்!"  என்றான் நாகராஜன்.

அலுவலகம் திறக்க வேண்டிய நாளுக்கு ஒரு வாரம் முன்பே அலுவலக வாசலில் போர்டை மாட்டி தெலுங்கில் ஒரு பெரிய பேனரையும் வைக்கச் செய்தான் நாகராஜன்.

"இப்பவே எதுக்குப்பா போர்டு, பேனர் எல்லாம்? ஒரு நாள் முன்னால வச்சா போதாதா?" என்றார் ரங்கநாதம்.

"தெருவில போறவங்க நிறைய பேரு பாப்பங்க இல்ல. 'அனைவரும் வருக' ன்னு தெலுங்கில எழுதி இருக்கோம். அதனால சில பேர் ஆர்வத்தில வரலாம். இன்னிக்கே ரெண்டு மூணு பேர் உள்ள வந்து இது என்ன ஆஃபீஸ்னு கேட்டுட்டுப் போனாங்க!"

"அது சரி. 11.30 க்கு டீன்னு போட்டிருக்கியே. வரவங்களுக்கெல்லாம் காப்பி டீ கொடுக்கப் போறமா என்ன? கட்டுப்படி ஆகுமா"

"ஆமாம். காப்பி, டீக்காகவே சில பேர் நிகழ்ச்சிகளுக்கு வரதை நான் பாத்திருக்கேன்! எவ்வளவு பேர் வரப் போறாங்க? நூறு பேர் வந்தா அதிகம். பக்கத்து ஓட்டல்லல நூறு காப்பி, நூறு டீ கொண்டு வரச் சொல்லி இருக்கேன். அதோட மூணு ரூபா பிஸ்கட் பாக்கெட் முன்னூறு வாங்கி வைக்கப் போறோம். வரவங்களுக்கு காப்பி, டீ பிஸ்கட் பாக்கெட் கொடுத்தா அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும், நம்ம பட்ஜெட்டுக்குள்ளதான் வரும். நாம எல்லாத்தையும் பாத்துப் பாத்துத்தானே செலவழிக்கிறோம்?" என்றான் நாகராஜன்.

எல்லாவற்றையும் செய்வது நாகராஜன்தான், தான் ஒரு மொழிபெயர்ப்பாளராக  மட்டுமேஇருக்கிறோம் என்பதை ரங்கநாதம் உணர்ந்திருந்தாலும் நாகராஜன் ஒவ்வொரு விஷயத்திலும்  'நாம் செய்கிறோம்' என்று தன்னையும் சேர்த்துக் கூறியது ரங்கநாதத்துக்குப் பெருமிதத்தையும் மகிழ்ச்சியும் அளித்தது.

கிளை திறப்பு பற்றி ஐயாயிரம் நோட்டீஸ் அடித்து அவற்றை நகரின் பல இடங்களிலும் முதல்நாள் மாலை விநியோகிக்க ஏற்பாடு செய்தனர்.

அந்த ஊரின் உள்ளூர் தினப்பத்திரிகையில் இன்றைய நிகழ்ச்சிகள் என்ற பகுதியைப் பலரும் பார்ப்பார்கள் என்று அறிந்து திறப்பு விழா நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை அதில் விளம்பரமாக வெளியிடவும் ஒரு விளம்பர ஏஜன்சி மூலம் ஏற்பாடு செய்தனர்.

திறப்பு விழா அன்று காலை உள்ளூர் பத்திரிகையைப் பார்த்த நாகராஜனுக்கு அதிர்ச்சி! பத்திரிகையின் 'இன்றைய நிகழ்ச்சிகள் பகுதியில் அவர்கள் நிறுவனக் கிளை திறப்பு விழா நிகழ்ச்சி இடம் பெறவில்லை.

ரங்கநாதம் மூலம் பத்திரிகைக்கு ஃபோன் செய்து கேட்டபோது, சில சமயம் இடப் பற்றாக்குறையால் சில நிகழ்ச்சிகள் விட்டுப் போகும் என்றும் அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திருப்பி அளித்து விடுவதநாகவும் பத்திரிகையிலிருந்து பேசியவர் குறிப்பிட்டார்.

"பணத்தைத் திருப்பிக் கொடுத்து என்ன பிரயோசனம்? அதைப் பார்த்து நிறைய பேர் வருவாங்கன்னு நம்பிக்கையா இருந்தோமே! சேர்மன் வரப்ப கூட்டம் இல்லாம இருந்தா நல்லா இருக்காதே!" என்றான் நாகராஜன்.

"விடுப்பா. நீ எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துத்தான் செஞ்சே. உன்னையும் மீறி நடந்த விஷயம் இது. இந்தத் தப்புக்கு நீயோ நானோ பொறுப்பு இல்ல. நாம ஏற்கெனவே நிறைய பேருக்கு இந்தத் தகவல் போகும்படி செஞ்சிருக்கோம். எத்தனை பேர் வராங்களோ வரட்டும்! நாம என்ன செய்ய முடியும்?" என்றார் ரங்கநாதம்.

"இப்ப மணி ஒன்பது. சேர்மன் பதினோரு மணிக்கு மேலதான் வருவாரு. நல்ல வேளை அவரு தன் சொந்த ஊருக்குப் போயிட்டு அங்கேந்து கார்ல வரதா சொல்லிட்டாரு. அதனால அவரை வரவேற்க நாம எங்கேயும் போக வேண்டாம். கூட்டத்தை எப்படிக் கூட்டறதுன்னு யோசிக்கலாம்!" என்றான் நாகராஜன்.

"தெருவில போய் நின்னு ஒவ்வொத்தரையா வாங்க வாங்கன்னு கூப்பிடப் போறமா என்ன?"

"கரெக்ட். அப்படியே செய்யலாம்! நாம அடிச்ச நோட்டீஸ் கொஞ்சம் மீதி இருக்கு இல்ல?"

"ஆமாம், ஒரு ஐநூறு அறுநூறு நோட்டீஸ் மீதி இருக்கும்."

"அதை எங்கிட்ட கொடுங்க. பத்து மணிக்கு மேல மெயின் ரோடில நின்னுக்கிட்டு, இந்த நிகழ்ச்சிக்கு வரக் கூடியவங்க யாருன்னு பாத்துக் கொடுக்கறேன். அதில கொஞ்சம் பேராவது வராமலா போவாங்க?"

"என்னப்பா இது? நீ பிராஞ்ச் மானேஜர். நீ போய் தெருவில நின்னு நோட்டீஸ் கொடுக்கறேங்கற?" என்றார் ரங்கநாதம் தயக்கத்துடன்.

"முத ல்ல பிராஞ்ச் திறக்கணும். அப்புறம்தானே பிராஞ்ச் மானேஜர்? நீங்க இங்கேயே இருந்து பாத்துக்கங்க. நான் போய் நோட்டீஸ் கொடுத்துட்டு வரேன்!" என்றான்  நாகராஜன் சிரித்துக் கொண்டே.

"திறப்பு  விழா ரொம்ப பிரம்மாண்டமா நடந்துடுச்சு. பிரமாதமா செஞ்சுட்டப்பா! நீ கஷ்டப்பட்டது வீண் போகல. நூறு பேருக்கு மேலயே வந்துட்டாங்க. சேர்மனுக்கு ரொம்ப சந்தோஷம். இனிமே நீ இந்த பிராஞ்ச்சை பிரமாதமா நடத்தப் போற பார்!" என்றார் ரங்கநாதம் உணர்ச்சிப் பெருக்குடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்

குறள் 662:
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

பொருள்:
செய்யும் செயல்களில் தவறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, தவறு ஏற்பட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Tuesday, December 20, 2022

851. சிலரை மட்டும்...

அவர்கள் அந்தக் கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டன. புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள் என்ற நிலை சிறிது சிறிதாக மாறி எல்லாம் பெருமளவுக்கு இயல்பாக மாறி விட்டன.

"கல்லூரியில சேர்ந்தப்பறம் வாழ்க்கையே மாறிட்ட மாதிரி இருக்கு, இல்ல?" என்றான் மாதவன்.

"ஆமாம். பள்ளிக்கூட சூழ்நிலை வேற, கல்லூரிச் சூழ்நிலை வேற. இத்தனை நாளா பெற்றவர்களோட அரவணைப்பில கவலையோ, பொறுப்போ இல்லாம இருந்தோம். இப்ப நாம பெரியவங்களா நம் வாழ்க்கையை நாமே தீர்மானிச்சு, செயல்பட்டு வாழற நிலைக்குப் பக்கத்தில வந்துக்கிட்டிருக்கோம்!" என்றான் கௌதம்.

"டேய்! பேருக்கேத்த மாதிரி புத்தர் மாதிரி பேச ஆரம்பிச்சுடாதே! நான் சொன்னது நமக்குப் புது நண்பர்கள் கிடைச்சு நாம ரொம்ப உற்சாகமா ஒரு புது வாழ்க்கை வாழறதைப் பத்தி!"

"அது சரிதான். நம்ம வகுப்பில உனக்கு எத்தனை நண்பர்கள் இருக்காங்க?"

"ஒரு பத்து பேர் இருப்பாங்க" என்றான் மாதவன்.

"நம்ம வகுப்பில மொத்தம் அறுபது பேர் இருக்கோம். பத்து பேர் நண்பர்கள்னா மீதி அம்பது பேர்?"

"எதிரிகளான்னு கேக்கறியா?"

"இல்ல. பத்துப்பேர் நண்பர்கள்னா மீதி அம்பது பேரோட உன்னோட ரிலேஷன்ஷிப் எப்படின்னு கேக்கறேன்."

"ஒரு அஞ்சாறு பேரைத் தவிர மத்தவங்களோட  இணக்கமாத்தான் இருக்கேன். ஆனா நெருக்கமா இருக்கறது பத்து பேர்தான். ஏன் கேக்கற?"

"அஞ்சாறு பேரைத் தவிரன்னு சொன்னியே, ஏன் அப்படி?" என்றான் கௌதம்

"ஏன்னா அவங்களை எனக்குப் பிடிக்கல. அவங்களைப் பாத்தாலே எனக்குப் பிடிக்கல. ஒப்புக்கு ஹலோன்னு சொன்னாக் கூட மனசுக்குள்ள அவங்க மேல ஒரு வெறுப்பு இருக்கு. வகுப்பு விஷயமா ஏதோ கேக்கணும், அப்ப பக்கத்தில வேற யாருமே இல்ல, அவங்கள்ள ஒத்தர்கிட்டதான் கேக்கணும்னா கூட, இவங்ககிட்டயா கேக்கணும்னு நினைச்சு கேக்காமயே கூட இருந்துடுவேன்!" என்றான் மாதவன்.

"ஏன் அப்படி? அவங்க உனக்கு ஏதாவது கெடுதல் செஞ்சாங்களா?"

"சேச்சே! அப்படியெல்லாம் எதுவும் இல்ல. என்னவோ தெரியல. அவங்களைப் பாத்தா எனக்குப் பிடிக்கல. அவங்களை அவாயிட் பண்ணணும்னு தோணுது. அது இருக்கட்டும், என்னைக் குடைஞ்சு குடைஞ்சு கேகறியே, உனக்கு இது மாதிரி தோணலியா?" என்றான் மாதவன் நண்பனை மடக்குவது போல்.

"நிச்சயமா தோணுது. கிட்டத்தட்ட உன்னை மாதிரிதான். சில பேரோட பழக எனக்குப் பிடிக்கல. அவங்க உனக்குப் பிடிக்காத நபர்களா இல்லாம வேற சிலராக் கூட இருக்கலாம். ஏன் இப்படின்னு யோசிச்சதாலதான் எனக்கு மட்டும்தான் இப்படி இருக்கா, இல்லை எலாருக்குமே இப்படித்தானான்னு தெரிஞ்சுக்கதான் உன்னைக் கேட்டேன்!" என்றான் மாதவன்.

"இவ்வளவுதானா? எந்த மனுஷனை எடுத்துக்கிட்டாலும் அவனுக்கு சில பேரைப் பிடிக்காமதான் இருக்கும். அதுக்குக் காரணமே இருக்காது. ஆனா அவங்களோட இணக்கமா அவனால இருக்க முடியாது. பல பேர் சேர்ந்து வேலை செய்யற அலுவலகங்கள்ள ஊழியர்களுக்குள்ள பிரச்னை வரதுக்கு இந்த மனப்பான்மை கூட ஒரு காரணமா இருக்கும்னு நினைக்கறேன்!" என்றான் மாதவன்.

"என்னை புத்தர் மாதிரி பேசறேன்னு சொல்லிட்டு நீதான் தத்துவஞானி மாதிரி பேசற!" என்ற கௌதமன், "ஆனா என்னால எல்லாரோடயும் இணக்கமாப் பழக முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு நினைச்சுப் பாக்கறேன். அதுக்கு முயற்சி செய்யப் போறேன்!" என்றான் தொடர்ந்து.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல்

குறள் 851:
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.

பொருள்: 
இகல் என்பது மற்ற உயிர்களுடன் பொருந்தி வாழ்தல் என்ற பண்பு இல்லாமை ஆகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Monday, December 19, 2022

661. மிஸ்டர் டைனமிக்!

பரந்தாமனை அவன் அலுவலகத்தில் 'மிஸ்டர் டைனமிக்' என்றுதான் அழைப்பார்கள். அவனிடம் எப்போதும் இருக்கும் வேகம், உற்சாகம், சக்தி இவற்றைப் பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள், அவன் சொல்லுக்கு அனைவரும் தங்களை அறியாமலே தலை வணங்குவார்கள்.

பரந்தாமனின்  சக ஊழியனும் அவனுடைய நண்பனுமான கண்ணன் அடிக்கடி அவனிடம் சொல்லுவான், "நான் ஏதாவது சொன்னா என் அசிஸ்டன்ட் கூடக் கேக்க  மாட்டேங்கறான்! நீ ஏதாவது சொன்னா ஜி எம் கூட பயந்து பணிவாக் கேக்கற மாதிரி கேக்கறாரே!" என்று.

அவர்கள் நிறுவனத்தில் துணைப் பொது மேலாளர் பதவி காலியானபோது, நான்கு டிபார்ட்மென்ட் மானேஜர்களில் ஒருவர்தான் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், பரந்தாமனுக்குத்தான் அந்தப் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் ராமமூர்த்தி என்ற மற்றொரு டிபார்ட்மென்ட் மானேஜருக்கு அந்தப் பதவி கிடைத்தது.

பரந்தாமனுக்குப் பெரிய அதிர்ச்சி. 

"ஏண்டா இப்படிப் பண்ணினாங்க? ராமமூர்த்தி இருக்கற இடமே தெரியாம இருப்பாரு. என்னை மாதிரி துடிப்பா இருக்கற ஆளை விட்டுட்டு அவருக்கு புரொமோஷன் கொடுத்திருக்காங்க. ஜி எம் பொதுவா நியாயமா நடந்துக்கறவராச்சே! ஒருவேளை சேர்மன் சொல்லி இப்படி செஞ்சிருப்பாங்களோ?" என்றான் பரந்தாமன் கண்ணனிடம்.

"இல்லடா! இது ஜி எம்மோட முடிவுதான்"  என்றான் கண்ணன்.

"உனக்கு எப்படித் தெரியும்?"

"ஜி எம்மே எங்கிட்ட சொன்னார்!" என்றான் கண்ணன் தயக்கத்துடன்.

"உங்கிட்ட சொன்னாரா? எதுக்கு? என்ன சொன்னார்?" என்றான் பரந்தாமன் வியப்புடன்.

"நேத்திக்கு ராமமூர்த்திக்கு புரொமோஷன்னு அறிவிச்ச உடனேயே ஜி எம் என்னைக் கூப்பிட்டார். 'கண்ணன்! பரந்தாமனுக்கு புரொமோஷன் கிடைக்காதது அவர் மாதிரியே அவரோட நண்பரான உங்களுக்கும் அதிர்ச்சியாத்தான் இருக்கும். அதுக்கு முக்கியமான காரணம் பரந்தாமனோட செயல்பாடுதான், பரந்தாமன் ரொம்ப டைனமிக்காத் தெரிஞ்சாலும் அவர்கிட்ட ஒரு குறை இருக்கு. அவரு எந்த வேலையையும் சரியா முடிக்கறதில்ல. ரொம்ப உற்சாகமா ஒரு வேலையை எடுத்துப்பாரு. ஆனா அதை முடிக்காம டைவர்ட் ஆகிப் போயிடுவாரு. மானேஜ்மென்ட்ல என்ன ரிசல்ட் வருதுன்னுதான் பாப்போம். அப்படிப் பாக்கறப்ப பரந்தாமனோட பல செயல்பாடுகள் முடிவு பெறாம அந்தரங்கதில தொங்கிக்கிட்டிருக்கறதைத்தான் நாங்க பாக்கறோம். இதைப் பத்தி பரந்தாமன்கிட்ட நான் பல தடவை சொல்லி இருக்கேன். அவர் 'முடிச்சுடறேன் சார்'ன்னு சொல்லுவாரு. ஆனா முடிக்க மாட்டாரு. அவர் கவனம் பல விஷயங்கள்ள சிதறி இருக்கு. அவர்கிட்ட ஃபோகஸ் இல்ல. டைனமிஸம்ங்கறது வேகம் காட்டறதில மட்டும் இருந்தா போதாது, செய்ய வேண்டிய வேலைகளை செஞ்சு முடிக்கறதிலயும் இருக்கணும். ராமமூர்த்தி அமைதியா இருந்தாலும் செய்ய வேண்டிய வேலைகள்ள கவனம் செலுத்தி செஞ்சு முடிச்சுடுவாரு. அதனாலதான் அவருக்கு புரொமோஷன் கிடைச்சது. நான் பல தடவை சொல்லியும் பரந்தாமனுக்கு அவரோட குறைபாடு புரியல. நீங்க அவர் நண்பர்ங்கறதால நீங்க அவர்கிட்ட சொன்னா அவர் புரிஞ்சுப்பார்னு நினைக்கிறேன். அவர் தன் பிரச்னையைப் புரிஞ்சுக்கிட்டு செய்ய வேண்டிய வேலைகள்ள உறுதியான கவனம் வச்சு வேலைகளை செஞ்சு முடிக்கப் பழகிக்கிட்டா அவருக்கு இருக்கிற திறமைக்கு அவர் நல்லா முன்னுக்கு வரலாம். செயல்பாடுகள் சரியா இல்லாட்டா மற்ற திறமைகள் இருந்தும் பயன் இல்லாம போயிடும். அவர்கிட்ட இதைச் சொல்லிப் புரிய வையுங்க. இந்த தடவை மிஸ் ஆன புரொமோஷன் அடுத்த தடவை கிடைக்கறது அவர் கையிலதான் இருக்கு' ன்னு சொன்னார்!"

கண்ணன் சற்றுத் தயங்கி விட்டு, "அவர் சொன்னப்பறம் அவர் சொன்னதில உண்மை இருக்குன்னுதான் எனக்கும் தோணுது!" என்றான்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்

குறள் 661:
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.

பொருள்:
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்பட மாட்டா.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, December 18, 2022

660. வந்த வழியும் சென்ற வழியும்!

"என் காரை விக்கறதுக்காக ஆன்லைன்ல விளம்பரம் கொடுத்திருந்தேன். அதைப் பாத்து ஒத்தர் ஃபோன் பண்ணினாரு. விலையெல்லாம் பேசி முடிச்சுட்டோம். மொபைல்ல ஏதோ கட்டம் கட்டமா படம் மாதிரி ஒண்ணு அனுப்பினாரு. அந்த க்யூ ஆர் கோடை நான் ஸ்கேன் பண்ணினா என் பாங்க் விவரங்கள் அவருக்குத் தெரிய வருமாம். அப்புறம் என் கணக்குக்குப் பணம் வந்துடும். அடுத்த நாள் வந்து காரை டெலிவரி எடுத்துக்கறேன்னு சொன்னாரு" என்றான் மகாதேவன்.

அவன் புகாரைக் கேட்டுக் கொண்டிருந்த சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சிரித்துக் கொண்டே, "அவன் சொன்னது சரிதான். நீங்க அந்த கோட்-ஐ ஸ்கேன் பண்ணினதும் உங்க பாங்க் விவங்கள் அவனுக்குத் தெரிய வந்திருக்கும் - உங்க பாஸ்வேர்ட் உட்பட. அதான் உங்க அக்கவுண்ட்ல இருந்த மொத்தப் பணத்தையும் எடுத்துட்டான். எவ்வளவு போச்சு? என்றார்.

"இருபத்தெட்டு லட்ச ரூபாய்!"

"அவ்வளவு பணத்தை ஏன் அக்கவுன்ட்ல வச்சிருந்தீங்க?"

"எப்பவுமே பிசினஸுக்காக ரெண்டு மூணு லட்ச ரூபா அக்கவுன்ட்ல இருக்கும். அதைத் தவிர இருபது லட்ச ரூபாய்  ஃபிக்சட் டெபாசிட் மெசூர் ஆகிப் பணம் அக்கவுன்ட்டுக்கு வந்தது. ரெண்டு மூணு  நாள்ள அதை எங்கேயாவது முதலீடு செய்யலாம்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா கண்மூடித் திறக்கறதுக்குள்ள அடிச்சுக்கிட்டுப் போயிட்டானே! எப்படி சார் இது சாத்தியம்?  நான் ஓடிபி கொடுக்காம எப்படி என் அக்கவுன்ட்லேந்து பணம் போகும்? பாங்க்ல கேட்டா ஓடிபி கொடுத்தப்பறம்தான் கணக்கிலேந்து பணம் போயிருக்குன்னு சொல்றாங்க!" என்றான் மகாதேவன்.

"இது க்யூ ஆர் கோட் ஸ்காம்னு புதுசா வந்திருக்கு. இது எப்படி நடக்குதுன்னு நாங்க ஆய்வு செஞ்சுக்கிட்டிருக்கோம். அந்த க்யூ ஆர் கோட் மூலமா உங்க வங்கி பேரு, கணக்கு எண், பாஸ்வேர்ட், இருப்பு  எல்லாம் அவனுக்குத் தெரிஞ்சிருக்கும். அவன் உங்க கணக்கிலேந்து பணத்தைத் தன்னோட கணக்குக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிடுவான். உங்களுக்கு ஓடிபி வந்திருக்கும். உங்க  மொபைலைப் பாத்தா தெரியும். அதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க. ஆனா அது உங்க மொபைல்லேந்து அவனோட மொபைலுக்குத் தானாகவே ஃபார்வர்ட் ஆகிப் போயிருக்கும். அதை வச்சு அவன் டிரான்ஸ்ஃபரை கன்ஃபர்ம் பண்ணிப் பணத்தைத் தன் கணக்குக்கு மாத்தி இருப்பான்" என்று விளக்கினார் இன்ஸ்பெக்டர்.

"பணம் எந்த அக்கவுன்ட்டுக்குப் போயிருக்குங்கறதை வச்சு அவனைக் கண்டுபிடிக்க முடியாதா சார்?"

"பொதுவா இந்த மாதிரி மோசடி பண்றவங்க பொய்யான விவரங்களைக் கொடுத்துத்தான் பாங்க்ல கணக்குளைத் துவக்குவாங்க. ஒரு நாள்ள எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏமாத்தி சம்பாதிச்சுட்டு பணத்தை .வேற கணக்குக்கு பாத்திடுவாங்க. நாங்க அவனை டிரேஸ் பண்ணி கண்டுபிடிக்கறதுக்குள்ள அவன் வேற எங்கேயாவது போய், வேற யாரையாவது ஏமாத்திக்கிட்டிருப்பான். என்னிக்காவது ஒருநாள் பிடிபடுவான். புத்திசலியா இருந்தா ஓரளவு சம்பாதிச்சதும் நிறுத்திட்டு எல்லாத் தடயங்களையும் அழிச்சுட்டு மறைஞ்சு போயிடுவான். ஒருவேளை அவனைப் பிடிச்சாலும் உங்க பணம் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கறது கஷ்டம்தான். இது மாதிரி மோசடிகளையெல்லாம் குறிப்பிட்டு யாரும் ஏமாறாதீங்கன்னு நாங்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கோம். ஆனா அதையெல்லாம் கவனிக்காம உங்களை மாதிரி நிறைய பேர் ஏமாந்துக்கிட்டுத்தான் இருக்கீங்க. ஆமாம். நீங்க என்ன பிசினஸ் செய்யறீங்க?" என்றார் இன்ஸ்பெக்டர்.

"கமிஷன் ஏஜன்ட்" என்றான் மகாதேவன் சற்றுத் தயக்கத்துடன்.

"அதை ஏன் தயங்கிக்கிட்டே சொல்றீங்க? .இவங்களை மாதிரி மத்தவங்களை ஏமாத்திப் பிழைக்காம நேர்மையா ஒரு பிசினஸ் செஞ்சு பணம் சம்பாதிக்கறதைப் பத்தி நீங்க பெருமை இல்ல படணும்!"

'நான் அப்படிச் சம்பாதிக்கலையே! பல சின்ன ஊர்கள்ள போய்க் கொஞ்ச நாள் இருந்துக்கிட்டு அங்கே இருந்த சின்ன வியாபாரிகள்கிட்ட எல்லாம் அவங்க வியாபாரத்துக்கு சில தனிநபர்கள்கிட்டேயிருந்து குறைஞ்ச வட்டியில கடன் வாங்கித் தரதாச் சொல்லி, அவங்ககிட்ட அஞ்சாயிரம், பத்தாயிரம்னு முன்பணமா வாங்கிக்கிட்டு கொஞ்ச நாள்ள அந்த ஊரை விட்டு ஓடி வந்து வேற ஊருக்குப் போய் அங்கேயும் இது மாதிரி  செஞ்சு சம்பாதிச்ச பணம்தானே இது! அஞ்சாயிரம், பத்தாயிரம் என்பதால யாரும் போலீசுக்குப் போக மாட்டாங்கங்கற தைரியத்தில பல பேரைத் தொடர்ந்து ஏமாத்தி, அப்புறம் அதையெல்லாம் கமிஷன் வியாபாரத்தில கிடைச்ச பணம் மாதிரி கணக்குக் காட்டி... இப்படி அநாயாயமா சம்பாதிச்சதாலதான் மொத்தப் பணமும் ஒரே நாளில் இது மாதிரி போயிடுச்சோ!' என்று தனக்குள் புலம்பினான் மகாதேவன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை

குறள் 660:
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

பொருள்:
வஞ்சனையான வழியால் பொருளைச் சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Saturday, December 17, 2022

850. நீக்கப்பட்ட காணொளிகள்

"மக்கள் இவ்வளவு முட்டாள்களா இருப்பாங்கன்னு என்னால நம்பவே முடியல!" என்றான் சுதீஷ்.

"எதைச் சொல்றீங்க?" என்றாள் அவன் மனைவி கல்பனா.

"கொரோனான்னு ஒரு புரளியை யாரோ கிளப்பி விட்டு உலகம் முழுக்க மக்கள் அதை நம்பிக்கிட்டிருக்காங்களே, அதைச் சொல்றேன்."

"என்ன இப்படிச் சொல்றீங்க? ஒவ்வொரு நாட்டிலேயும் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படறாங்கனு செய்தி வருதே, அதெல்லாம் புரளியா?"

"ஜுரம், இருமல் எல்லாம் எப்பவும் இருக்கறதுதான். இப்ப திடீர்னு அதுக்கு கொரோனான்னு ஒரு பேர் வச்சு பயமுறுத்தி, எல்லாரையும் ஆஸ்பத்திரியில படுக்க வச்சு, ஊரடங்குன்னு சொல்லி எல்லாரையும் வீட்டுக்குள்ள சிறை வச்சு என்னென்னவெல்லாம் செய்யறாங்க பாரு!"

"வெளியில யார்கிட்டயாவது இப்படிப் பேசாதீங்க. உங்களைப் பைத்தியம்னு சொல்லிடுவாங்க!" என்றாள் கல்பனா.

"நீ இப்படிச் சொன்னதும் எனக்கு ஒரு யோசனை வந்திருக்கு. இதைப் பத்தி நான் பேசி வீடியோ எடுத்து யூடியூபில போடப் போறேன்!" என்றான் சுதீஷ்.

"' கொரோனா ஒரு புரளி. அது ஒரு சாதாரண ஜுரம்தான். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏகப்பட்ட பணம் செலவழித்து ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கி மூக்கில் வைத்துக் கொள்ளாதீர்கள். காற்றோட்டமான இடத்தில் போய் நின்று காற்றை சுவாசியுங்கள். அல்லது வீட்டில் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்தாலே காற்று வரும். காற்றில் ஆக்ஸஜன் இல்லையா என்ன?' என்றெல்லாம் சுதீஷ் பேசிய காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின. அவன் கருத்தை ஒரு சிலர் ஆதரித்தாலும், பெரும்பாலோர் அவன் கருத்துக்களைக் கண்டித்துப் பதிவுகளை வெளியிட்டனர்.

கொரோனா பற்றி மக்களிடம் தவறான கருத்துக்களைப் பரப்பும் சுதீஷைக் கைது 'செய்ய வேண்டும் என்று ஒரு சில அரசியல்வாதிகள் அறிக்கைகள் வெளியிட்டனர்.

"ஏன் உங்க வீடியோவையெல்லாம் எடுத்துட்டீங்க?" என்றாள் கல்பனா.

"நான் சொன்ன விஷயங்களுக்கு வந்த எதிர்வினைகளைப் பாத்தப்ப இந்த உலகமே எனக்கு எதிராத் திரும்பிட்ட மாதிரி இருந்தது. தப்பு பண்ணிட்டோம்னு நினைச்சுதான் எதுக்கு இந்த வம்புன்னு வீடியோக்களை டிலீட் பண்ணிட்டேன்!" என்றான் சுதீஷ். 

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)

குறள் 850:
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.

பொருள்: 
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்..
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

659. பறிபோன பண்ணை வீடு

நான் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி இல்லை. ஆயினும் ஒரு மூத்த அதிகாரி என்ற நிலையில் இருந்து வந்தேன். 

ஐயா முதல்வரானபோது என்னை அவருடைய தனிச் செயலர்களில் ஒருவராக நியமித்துக் கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. (அவரை ஐயா என்றுதான் சொல்வார்கள். எனவே நானும் அவர் பெயரைக் குறிப்பிடாமல் அவரை ஐயா என்றே குறிப்பிடுகிறேன்)

பெரும்பாலும் ஐயா தன்னைச் சுற்றித் தன் துதிபாடிகளையும், சட்டத்தையோ, விதிகளையோ பற்றிக் கவலைப்படாமல் தான் விரும்பியதைச் செய்பவர்களையோதான் வைத்துக் கொள்வார். வளைந்து கொடுக்காதவன் என்று கருதப்பட்ட என்னை ஏன் வைத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.

ஐயா என்னைத் தன் வீட்டு அலுவலகத்தில் நியமித்துக் கொண்டார். அவர் வீட்டில் பல்வேறு சந்திப்புகள் நிகழும், பல்வேறு பரிவர்த்தனைகளும் நடக்கும். அவற்றை நான் வெளியில் சொல்ல மாட்டேன் என்ற நம்பிக்கையில்தான் என்னைத் தன் வீட்டு அலுவலகத்தில் நியமித்துக் கொண்டார் என்று நான் பிறகுதான் புரிந்து கொண்டேன்.

ஐயாவின் வீட்டில் தங்கப்பன் என்ற அவருடைய தூரத்து உறவினர் ஒருவரும் தங்கி இருந்தார். அவர்தான் பெரும்பாலான பரிவர்த்தனைகளை நிகழ்த்தியவர். பல தொழிலதிபர்களும், ஒப்பந்ததாரர்களும் பெரிய சூட்கேஸ்களைக் கொண்டு வந்து இறக்குவதும், தங்கப்பன் அவற்றைத் திறந்து பார்த்து விட்டு அவருக்கு நம்பிக்கையான வேலையாட்கள் மூலம் அவற்றை உள்ளே கொண்டு வைக்கச் சொல்வதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்.

நான் இவற்றையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்தேன்.

ஒருமுறை ஒரு விடுமுறை நாளில் நான் ஒரு பூங்காவில் அமர்ந்திருந்தபோது என் அருகில் ஒருவர் வந்து அமர்ந்தார். என்னை ஓரிரு முறை உற்றுப் பார்த்து விட்டு, "சார்! நீங்க ஐயா வீட்டில இருக்கறவருதானே?" என்றார்.

"முதல்வரோட வீட்டு அலுவலகத்தில வேலை செய்யற ஒரு அதிகாரி நான்" என்றேன் நான்.

"உங்களைப் பாத்திருக்கேன் அங்கே. என்ன சார் இப்படிப்பட்ட அநியாயம் எல்லாம் பண்றாங்க?" என்றார் அவர் ஆத்திரத்துடன்.

"என்ன விஷயம்? ஏதாவது பிரச்னைன்னா குறை தீர்க்கற அலுவலகத்துக்கு எழுதிப் போடுங்க."

"ஐயா செஞ்ச அக்கிரமத்தைப் பத்தி குறை தீர்க்கற அலுவலகத்தில சொல்ல முடியுமா என்ன?"

"சார், இதையெல்லாம் எங்கிட்ட சொல்லாதீங்க!" என்று நான் கூறியதைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

பல வருடங்களுக்கு முன் அவர் புறநகர்ப் பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி அதில் பண்ணை அமைத்து ஒரு பண்ணை வீட்டையும் கட்டிக் குடி இருந்து வந்தாராம். 

ஐயாவின் வீட்டுக்கு அவரை வரவழைத்து ஐயாவும் தங்கப்பனும் அவரை மிரட்டி அந்த நிலத்தையும் வீட்டையும் மிகக் குறைந்த விலையில் தங்களுக்கு விற்க வைத்து விட்டார்களாம்.

"அவங்க கொடுத்த பணத்தில என்னால ஒரு ஃபிளாட் கூட வாங்க முடியாது சார். இனிமே நானும் என் குடும்பமும் நடுத்தெருவிலதான் நிக்கணும்" என்று கூறி அவர் விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டார்.

"நீங்க விற்க முடியாதுன்னு சொல்லி இருக்கலாமே!" என்றேன் நான், அவரை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல்.

"எப்படி சார்? என் குழந்தையைக் கடத்திக்கிட்டுப் போய்க் கொலை செஞ்சுடுவேன்னு மிரட்டினாங்க. ஏற்கெனவே ஒத்தரோட குழந்தையைக் கடத்திக்கிட்டுப் போய் மிரட்டி அவர் சொத்தை எழுதி வாங்கி இருக்காங்கன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். அப்படி இருக்கறப்ப நான் எப்படி அந்த மிரட்டலுக்குப் பணியாம இருக்க முடியும்?" என்றவர் திடீரென்று கோபத்துடன் எழுந்து, "நான் இப்ப சொல்றேன் சார்! இவங்க நல்லா இருக்க மாட்டாங்க. என்னோட கண்ணீரும், என்னை மாதிரி பாதிக்கப்பட்ட பலரோட கண்ணீரும் இவங்களை சும்மா விடாது!" என்று சாபமிடுவது போல் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

ப்போது நான் ஓய்வு பெற்று விட்டேன்.

அன்று எனக்கு என் வழக்கறிஞரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பல வருடங்கள் முன்பு ஒரு கிராமத்தில் நான் வாங்கி இருந்த சிறிதளவு நிலத்தைச் சிலர் போலிப் பத்திரம் தயாரித்து விற்று விட்டதை எதிர்த்து நான் போட்டிருந்த வழக்கில் எனக்குச் சாதகமாக தீர்ப்பு வந்துள்ள செய்தியை அவர் தெரிவித்தார்.

"ரொம்ப நன்றி சார்!" என்றேன் நான்.

"நன்றியெல்லாம் எதுக்கு சார்? நீங்க நியாயமா சம்பாதிச்ச சொத்து உங்களை விட்டு எப்படிப் போகும்? அதான் திரும்பிக் கிடைச்சுடுச்சு!" என்றவர்< தொடர்ந்து, "ஆமாம். ஐயாவோட சொத்தையெல்லாம் ஏலம் விடப் போறாங்களாமே!" என்றார்.

""ம்" என்றேன் நான். நான் ஐயா பற்றிப் பேசுவதில்லை என்றாலும் என்னிடம் பேசுபவர்கள் ஐயா பற்றிப் பேசாமல் இருப்பதில்லை!

"கொஞ்ச அக்கிரமா பண்ணினாங்க ரெண்டு பேரும்? சொத்தக் குவிப்பு வழக்கில ரெண்டு பேருக்கும் அஞ்சு வருஷ சிறை தண்டனை கிடைச்சப்பறம் சொத்துக்களைப் பறிமுதல் செய்யறதும் ஆரம்பிச்சுடுச்சு. எத்தனை பேர் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டாங்களோ!" என்றார் வக்கீல்.

அன்று பூங்காவில் என் பக்கத்தில் அமர்ந்து புலம்பி சாபம் விட்ட அந்த மனிதரின் முகம்  என் நினைவில் நினைவு வந்தது.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை

குறள் 659:
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.

பொருள்:
பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய் விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Friday, December 16, 2022

849. கிரடிட் கார்ட்

ஓட்டலில் உணவருந்திய பின் பில்ல்லுக்குப் பணம் கொடுக்க தாமோதரன் பர்சைத் திறந்தபோது அதில் பல கிரடிட் கார்டுகள் இருந்ததை மணி பார்த்தான்.

"என்னடா இவ்வளவு கிரடிட் கார்டு வச்சிருக்க?" என்றான் மணி.

"ஆமாம். தினம் பத்து பாங்க்லேந்து ஃபோன் பண்ணி கிரடிட் கார்டு வாங்கச் சொல்றாங்க. சரின்னு சிலதை வாங்கிக்கிட்டேன். பார்த்தா பத்து கார்டு சேர்ந்து போச்சு. இதோட போதும்னு நிறுத்திட்டேன்!"

ஓட்டலிலிருந்து கிளம்பி இருவரும் மணியின் வீட்டுக்கு வந்தனர்.

"இவன் மணி. கல்கத்தால ஒரு பெரிய கம்பெனியில ஃபைனான்ஸ் மானேஜரா இருக்கான்!" என்று தன் மனைவிக்கு நண்பனை அறிமுகப்படுத்திய தாமோதரன் நண்பனைத் தன் அறைக்கு அழைத்துக் கொண்டு போனேன்.

சற்று நேரம் பொதுவாகப் பேசிய பின், மணி, "டேய்!  இவ்வளவு கிரடிட் கார்டெல்லாம் வச்சுக்காதே. உன்னை அறியாமலே அதிகமா செலவு பண்ணி பிரச்னை ஆயிடும்" என்றான் மணி.

"டேய் மணி! நான் ஒரு பிசினஸ்மேன். சில சமயம் வாடிக்கையாளர்களோட எங்கேயாவது போகறப்ப நிறைய செலவழிக்க வேண்டி இருக்கு. கார்டு இருந்தா சௌகரியமா இருக்கு."

"அதுக்கு ஒரு கிரடிட் கார்டு போதுமே. வேணும்னா ரெண்டு வச்சுக்க. அதுக்கு மேல வச்சுக்கறது டேஞ்ஜர்!"

"டேஞ்ஜரா?" என்று பெரிதாகச் சிரித்த தாமோதரன், "ஆமாம். நீ எத்தனை கார்டு வச்சிருக்கே?" என்றான்.

"ரெண்டு. ஆனா ஒண்ணைத்தான் அதிபம் பயன்படுத்தறேன்" என்றான் மணி.

"அதான் உனக்குத் தெரியல! நான் என்ன செய்வேன் தெரியுமா? ஒரு கார்டில பணம் கட்ட வேண்டிய சமயத்தில அதில உள்ள கடன் பாக்கியை பாலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மூலமா இன்னொரு கார்டுக்கு மாத்திடுவேன். அதை ஆறு மாசத்திலேயோ, ஒரு வருஷத்திலேயோ கொஞ்சம் கொஞ்சமா கட்டிக்கலாம். ஒரு பர்ஸன்ட்தான் வட்டி போடுவாங்க!"

"ப்ராசஸிங் சார்ஜுன்னு ஒண்ணு போடுவாங்களே?"

"ஆமாம். அது ஐநூறோ. ஆயிரமோ கோடுவாங்க. அதை நான் பொருட்படுத்தறதில!" என்றான் தாமோதரன் அலட்சியமாக.

"இதுல ரெண்டு மூணு விஷயம் இருக்கு. உன்னோட கடன் நிலுவைத் தொகைகொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சுக்கிட்டே போகும். ப்ராசஸிங் சார்ஜ் வட்டின்னே ஏகப்பட்ட பணம் போகும். நீ நிறைய கார்டு வேற வச்சிருக்கறதால, இன்னொரு கார்டில வாங்கலாம்னு இறங்குவே. சில மாதங்கள்ள கடன் தொகை கட்டுக்கடங்காம போயிடும். வட்டியா வேற ஏகப்பட்ட பணம் கொடுத்துக்கிட்டிருப்ப. ஒண்ணு அல்லது ரெண்டு கார்ட் வச்சுக்கிட்டாதான் கிரடிட் கார்டை கட்டுப்பாட்டோட பயன்படுத்த முடியும்!"

"மணி! நீ சம்பளம் வாங்கறவன். உனக்கு நிலையான வருமானம்தான். எனக்கு அப்படி இல்ல. திடீர்னு ஒரு பெரிய தொகை வரும். அப்ப எல்லா கிரடிட் கார்ட் தொகைகளையும் ஒரே நேரத்தில அடைச்சுடுவேன்!"

"நிலையான வருமானம் இல்லாதப்பதான் இன்னும் கவனமா இருக்கணும். நீ சொல்ற மாதிரி உனக்கு திடீர்னு நிறைய பணம் வரலாம். அது மாதிரி சில சமயம் பணம் வரதுக்கு தாமதாமான கேஷ் ஃப்ளோ இல்லாம கூட இருக்கும். எங்க கம்பெனி ஒரு பெரிய கம்பெனின்னாலும் அங்கேயே இதெல்லாம் நடக்குதே! அதனாலதான் ஜாக்கிரதையா இருந்துக்கச் சொல்றேன்!" என்றான் மணி.

மணி சென்றதும், "பெரிய கம்பெனியில ஃபைனான்ஸ் மானேஜரா இருக்கான். ஆனா கிரடிட் கார்டுகளை எப்படி புத்திசாலித்தனமாப் பயன்படுத்தறதுன்னு தெரியல. இந்த லட்சணத்தில எனக்கு வேற அட்வைஸ் பண்றான்!" என்றான் தாமோதரன் தன் மனைவியிடம்.

"அவர் என்ன சொன்னார்னு எனக்குத் தெரியாது. ஆனா ரெண்டு மூணு மாசமா நான் கவனிக்கிற ஒரு விஷயத்தை சொல்றேன். நீங்க மாசா மாசம் கிரடிட் கார்டுக்குக் கட்டற தொகை அதிகமாகிக்கிட்டே போகுது. அதனால வீட்டுச் செலவுக்குக் கூடப் பணத்தைக் குறைச்சுட்டீங்க. சரி, கடனையெல்லாம் அடைச்சுக்கிட்டிருக்கீங்க போலருக்குன்னு நினைச்சேன். ஆனா கிரடிட் கார்ட் பில்லையெல்லாம் பாத்தா மாசா மாசம்  கடன் பாக்கி அதிகமாகிக்கிட்டே போகுது. கிரடிட் கார்ட் பயன்படுத்தறதை நிறுத்துங்க. இல்லேன்னா இது எங்கே போய் முடியும்னே  தெரியல!" என்றாள் அவன் மனைவி.

'அவன்தான் அறிவில்லாம பேசிட்டுப் போறான்னா, நீயுமா?' என்று நினைத்துக் கொண்டான் தாமோதரன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)

குறள் 849:
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.

பொருள்: 
அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததையே அறிவாக எண்ணுவான்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...