Thursday, December 30, 2021

538. துறவியுடன் ஒரு உரையாடல்!

"சாமி! எனக்கு ஆன்மீகத்தில நம்பிக்கை இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா என்னோட பிஸியான வாழ்க்கையில அதுக்கெல்லாம் நான் நேரம் ஒதுக்கல!" என்றார் பச்சையப்பன்.

"பின்னே என்னை ஏன் உங்க வீட்டில தங்க வச்சிருக்கீங்க?" என்றார் துறவி அருட்செல்வம் சிரித்துக் கொண்டே!

"உண்மையைச் சொல்லணும்னா, என் நண்பர் மாணிக்கம்தான் இந்த ஏற்பாட்டைப் பண்ணினாரு. ஏன்னா, இந்த ஊர்லேயே பெரிய வீடு என்னோடதுதான். நீங்க தங்கறதுக்காக என் வீட்டு மாடி முழுக்க ஒதுக்கி இருக்கேன். நீங்க தங்க வசதியான அறை. அறைக்கு வெளியில நீங்க இப்ப உட்கார்ந்து இருக்கிற பெரிய லவுஞ்ஜ். நிறைய பக்தர்கள் உக்காந்து உங்க பேச்சைக் கேக்கலாம். நீங்க இங்கே தங்கி இருக்கிற மூணு நாளும் வசதியாத் தங்கி இருக்கவும், உங்களைப் பாக்க வரவங்க சௌகரியமா வந்து உங்களைப் பார்க்கவும், உங்க பேச்சைக் கேக்கவும் இவ்வளவு வசதியான இடம் இந்த ஊர்லேயே என் வீட்டில மட்டும்தான் இருக்கு!" என்றார் பச்சையப்பன் பெருமையுடன்.

"உங்க வாழ்க்கையைப் பத்தி சுருக்கமா சொல்லுங்களேன்!" 

"சொல்றேன்!" என்று உற்சாகமாக ஆரம்பித்த பச்சையப்பன், வீடு வீடாகப் போய்ப் பழைய பொருட்களை வாங்கி விற்கும் மிகச் சிறிய தொழிலைத் துவங்கிய தான் இன்று ஒரு இரும்பு உருக்காலை, பாத்திரங்கள் தயாரித்தல் என்று பல்வேறு தொழிற்சாலைகளை நடத்தி வரும் பெரிய தொழிலதிபராக வளர்ந்ததைப் பெருமை பொங்க விவரித்தார்.

"நல்லது!" என்ற அருட்செல்வம், "உங்க குடும்பத்தை நல்லாப் பாத்துக்கறீங்களா?" என்றார்.

"பாத்துக்காம? என் மனைவிக்கும், பையங்களுக்கும் மாசா மாசம் சம்பளம் மாதிரி ஒரு பெரிய தொகையைக் கொடுத்துடறேன். அவங்க எங்கே வேணும்னாலும் போகலாம், எதை வேணும்னாலும் வாங்கலாம்!"

"அவங்களோட சுற்றுப்பயணம் எல்லாம் போறதுண்டா?"

"அதுக்கெல்லாம் எனக்கு ஏதுங்க நேரம்? அதான் காசு கொடுத்தடறேன் இல்ல? அவங்க எங்கே வேணும்னா போயிக்கலாம்."

"சினிமா டிராமான்னு ஏதாவது?"

"எங்கே வேணும்னாலும் அவங்க போயிக்கலாம். என்னைக் கட்டி இழுக்காதீங்கன்னு சொல்லிட்டேன், ஏன், வீட்டில அவங்களோட உக்காந்து டிவி கூடப் பாக்கறது இல்ல."

"கோவிலுக்கெல்லாம் போவீங்களா?"

"அதான் சொன்னேனே சாமி! கடவுள், ஆன்மீகம் இதையெல்லாம் பத்தி நான் நினைச்சுப் பாக்கறதில்லேன்னு. கடவுள்னு ஒத்தர் இருக்காரா, இல்லையான்னு கூட நான் யோசிச்சதில்ல."

"உங்க பெற்றோர்கள் இருக்காங்களா?"

"இல்லை. ரெண்டு பேருமே போய்ச் சேந்துட்டாங்க."

"அவங்களுக்கு சடங்குகள் எதுவும் செய்யறதுண்டா?"

"அவங்களுக்கு ஈமச் சடங்குகள் செஞ்சதுக்கப்பறம் எந்தச் சடங்கையும் செய்யல. அவங்க இறந்த நாளைக் கூட நான் நினைச்சுப் பாக்கறதில்ல. எப்பவாவது தோணும், ஓ இன்னிக்கு ஆகஸ்டு 17 ஆச்சே, இன்னிக்குத்தானே அப்பா காலமானார்னு. ஆனா அந்த நினைப்பை அதோட விட்டுடுவேன்."

"ஏழைகளுக்கு உதவறது, அது மாதிரி எதுவும் செய்யறீங்களா?"

"சாமி! ஒவ்வொத்தரும் அவங்க வாழ்க்கையை அவங்களேதான் பாத்துக்கணும். மத்தவங்களுக்கு உதவறதுங்கற எண்ணமே தப்பானதுன்னுதான் நான் நினைக்கிறேன்."

ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்ட அருட்செல்வம், "சரி. மாணிக்கத்தை வரச் சொல்லுங்க!" என்றார்.

"எதுக்கு சாமி? ஏதாவது வேணும்னா கேளுங்க, நான் செஞ்சு தரேன்!" என்றார் பச்சையப்பன்.

"பெரியவங்க சொன்ன எந்த விஷயத்தையும் நீங்க செய்யல. உங்க குடும்பத்தினர் கிட்ட அன்பா இருக்கறதைக் கூடச் செய்யல. உங்க வீட்டில தங்கறது சரின்னு எனக்குத் தோணல. மாணிக்கத்துக்கிட்ட சொல்லி வேற எங்கேயாவது இடம் பார்க்கச் சொல்லணும். மரத்தடியா இருந்தாக் கூடப் பரவாயில்ல!" என்றார் அருட்செல்வம்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 54
 பொச்சாவாமை (அலட்சியத்தால் ஏற்படும் மறதி)

குறள் 538:
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

பொருள்:
சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களைப் போற்றிச் செய்ய வேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

Sunday, December 19, 2021

537. செவ்வாயும், புதனும்!

"முத்துசாமி சாரைக் கூப்பிடு!" என்றான் ராகவ் என்ட்டர்பிரைசஸ் அதிபரான ராகவன்.

முத்துசாமி வந்ததும், "உக்காருங்க" என்ற ராகவன், அவர் இருக்கையில் அமர்ந்ததும், "பில்டர் மாரிமுத்துவைப் போன வாரம் பாத்தீங்களே, அப்ப உங்களை என்னிக்கு வரச் சொன்னாரு?" என்றான்.

"அடுத்த புதன்கிழமை வாங்கன்னு சொன்னாரு..." என்ற முத்துசாமி, அன்றுதான் புதன்கிழமை என்பதை உணர்ந்தவராக, "இன்னிக்குத்தான்!" என்றார் தாழ்ந்த குரலில்.

"இன்னிக்குப் போனீங்களா?"

"இல்ல. இப்பவே போய்ப் பாத்துட்டு வந்துடறேன்" என்று எழுந்தார் முத்துசாமி.

"உக்காருங்க!" என்று அவரை அமர்த்திய ராகவன், "காலை நேரத்திலதான் அவரைப் பார்க்க முடியும். இப்ப அவரு இருக்க மாட்டாரு. ஏன் காலையிலேயே போகல? மறந்துட்டீங்களா?" என்றான்.

முத்துசாமி சங்கடத்துடன் மௌனமாகத் தலையாட்டினார்.

சற்று நேரம் மௌனமாக இருந்த ராகவன், "நான் இந்தத் தொழிலை ஆரம்பிச்சு ஓரளவுக்கு அதை நல்லா நடத்திக்கிட்டிருக்கறதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?" என்றான்,

"உங்களோட கடினமான உழைப்புதான்" என்றார் முத்துசாமி, இதை ஏன் இவர் தன்னிடம் கேட்கிறார் என்று புரியாதவராக.

"இருக்கலாம். ஆனா என்னோட வெற்றிக்குக் காரணமா நான் எப்பவுமே நினைக்கிறது ஒத்தரைத்தான்!"

"உங்க அப்பாவா?"

ராகவன் சிரித்து விட்டு, "சென்ட்டிமென்ட்டலா வேணும்னா அப்படிச் சொல்லலாம். ஏதாவது பேட்டியில இப்படிச் சொன்னா இவன் பெற்றோர் மேல எவ்வளவு மதிப்பு வச்சுருக்கான் பாருன்னு பல பேர் என்னை உயர்வா நினைக்கலாம். பெற்றோர்ங்கறது பொதுவான ஒரு பதில். எல்லார் வாழ்க்கையிலுமே பெற்றோர்கள் முக்கியமானவர்கள்தான். அதைச் சொல்ல வேண்டியதே இல்லை. ஆனா குறிப்பா சில பேரோட தாக்கம் நம் வாழ்க்கையில இருக்கும் இல்லையா? அப்படிப்பட்ட ஒத்தரைத்தான் நான் சோன்னேன். அவர் பேரு தண்டபாணி. ஆரம்ப காலத்தில நான் வேலை கிடைக்காம திண்டாடிக்கிட்டிருந்தபோது யாரோ ஒத்தரோட சிபாரிசில அவரைப் போய்ப் பார்த்தேன். "

"அவர்தான் உங்களுக்கு முதல்ல வேலை கொடுத்தாரா?"

"வேலை கொடுக்கல! அதனாலதான் அவரைக் குறிப்பிட வேண்டி இருக்கு! முதல்ல நான் அவரைப் பார்த்தப்ப இப்ப பில்டர் மாரிமுத்து உங்களை புதன்கிழமை வரச் சொன்ன மாதிரி அவரு என்னை செவ்வாய்க்கிழமை வரச் சொன்னாரு.

"ஆனா செவ்வாய்க்கிழமை நான் போகல. அவர் வரச் சொன்னதையே நான் மறந்துட்டேன். அன்னிக்கு ராத்திரி தூங்கறதுக்கு முன்னாலதான் ஞாபகம் வந்தது. அடுத்த நாள் காலையிலே அவரைப் போய்ப் பார்த்தேன். 'உன்னை செவ்வாய்க்கிழமை இல்ல வரச் சொன்னேன்? இன்னிக்குத்தான் செவ்வாய்க்கிழமையா?' ன்னு கேட்டாரு. 'சாரி சார், மறந்துட்டேன்' னு சொன்னேன். 'சாரி! மறதியை நான் மன்னிக்கறதில்லே' ன்னு சொல்லி என்னை அனுப்பிட்டாரு.

"செவ்வாய்க்கிழமை நான் போயிருந்தா ஒருவேளை அவர் எனக்கு வேலை கொடுத்திருக்கலாம். என்னோட மறதியாலேயும் அலட்சியத்தாலேயும் அந்த வாய்ப்பை இழந்துட்டேனேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். அதுவும் அப்ப வேலை கிடைக்காம கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தப்ப கைக்குக் கிடைச்ச ஒரு வாய்ப்பை கைநழுவப் போக விட்டுட்டோமேன்னு நான் பட்ட வேதனை எவ்வளவு ஆழமானதுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். 

"அப்புறம் என் வாழ்க்கை வேற விதமா மாறிட்டாலும் அந்த அனுபவத்தை நான் மறக்கல. அதிலிருந்து நான் கத்துக்கிட்ட பாடம் அலட்சியத்தாலயும் மறதியினாலேயும் நாம செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாம இருந்துடக் கூடாதுங்கறது. அதனால தண்டபாணிங்கற அந்த மனிதரை ஒரு வழிகாட்டியா நான் எப்பவுமே நினைக்கிறேன்."

"சாரி சார்! இன்னிக்குப் போக மறந்தது என்னோட தப்புதான். இனிமே இப்படி நடக்காம பாத்துக்கறேன்" என்றார் முத்துசாமி.

"என்னோட அனுபவத்தை உங்ககிட்ட பகிர்ந்துகிட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு. நம்ம ஆஃபீஸ் சின்னது. இங்கே வேலை செய்யறவங்க பெரும்பாலும் இளைஞர்கள். வயசிலேயும் அனுபவத்திலேயும் மூத்தவரா இருக்கறவரு நீங்க ஒத்தர்தான்.

"நான் அவங்ககிட்ட ஏதாவது சொன்னா ஏதோ முதலாளி சொல்றாருன்னு கேட்டுப்பாங்களே தவிர அதை மனசில வாங்கிக்கிட்டு தங்களை மாத்திக்க மாட்டாங்க. ஆனா அவங்களோட நெருங்கிப் பழகற நீங்க சொன்னா அவங்க கேட்டுப்பாங்க. செய்ய வேண்டிய எதையும் மறக்காம, செய்ய வேண்டிய நேரத்தில செய்யற பழக்கத்தை அவங்ககிட்ட உருவாக்குங்க. அவங்க அப்படிச் செய்ய ஆரம்பிச்சாங்கன்னா அதனால நம்ம பிசினசுக்கு நன்மைகள் ஏற்படும்கறதை விட அவங்களோட தனிப்பட்ட வாழ்க்கையில அவங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். என் அனுபவத்திலேந்து இதை என்னால உறுதியாச் சொல்ல முடியும்" என்றான் ராகவன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 54
 பொச்சாவாமை (அலட்சியத்தால் ஏற்படும் மறதி)

குறள் 537:
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.

பொருள்:
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், ஒருவரால் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

Tuesday, December 14, 2021

536. முதல்வரின் டயரி

"முதல்வரோட காலை நிகழ்ச்சி முடிஞ்சு போச்சு. பிற்பகல்ல அரசு விருந்தினர் விடுதியில ஓய்வு. மாலையில ஒரு பொதுக்கூட்டம். அங்கேயிருந்து நேரே விமான நிலையம் வந்துடுவாரு. இதுதான் அவரோட நிகழ்ச்சி நிரல்" என்றார் முதல்வரின் தனி உதவியாளர் சண்முகம். 

பாதுகாப்பு அதிகாரி தலையாட்டி விட்டு, "பிற்பகல்ல ரெண்டு மூணு மணி நேரம் நாங்க கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கலாம்னு சொல்லுங்க!" என்றார் மெதுவாகச் சிரித்துக் கொண்டே.

"ஓய்வில்லாம வேலை செய்யற முதல்வர்கிட்ட வேலை செய்யற நமக்கு ஓய்வு கிடைக்கிறதும் அபூர்வமாத்தான் இருக்கு! என்ன செய்யறது?" என்றார் சண்முகம்.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்த ஓய்வு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மதிய உணவுக்குப் பிறகு ஒரு பழைய நண்பரைப் பார்க்க வேண்டும் என்று கிளம்பி விட்டார் முதல்வர். 

அவர் போகப் போகும் இடம் எப்படிப்பட்டது என்று தெரியாததால் ஓய்வை எதிர்பார்த்த பாதுகாப்பு அதிகாரிக்குக் கூடுதல் பணிச்சுமை வந்து சேர்ந்தது. முதல்வர் செல்லப் போகும் பகுதிக்கு ஆட்களை முன்பே அனுப்பி அங்கே பாதுகாப்பான நிலையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார் அவர்.

முதல்வர் தன் வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்காத முதல்வரின் பழைய நண்பர் சற்றுத் தடுமாறிப் போனார். அவரிடம் சற்று நேரம் தங்கள் பழைய நாட்களைப் பற்றிப் பேசி விட்டு விடைபெற்றார் முதல்வர்.

முதல்வர் விருந்தினர் விடுதிக்குத் திரும்பி வந்ததும் அவருடன் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, சண்முகம் அவரிடம் கேட்டார்: "ஐயா இப்ப பாத்துட்டு வந்தீங்களே இந்த நண்பர் யார்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

"முதல்ல இந்த  ஊர்லதான் ஒரு சின்ன நிறுவனத்தில நான் வேலைக்குச் சேர்ந்தேன். அவரு அந்த நிறுவனத்தில வேலை செஞ்சுக்கிட்டிருந்தாரு. அப்ப இங்கே எனக்குத் தங்க இடம் கிடைக்கறது கஷ்டமா இருந்தது. எனக்கு வீடு கிடைக்கிறவரை எனக்கு அவர் வீட்டில தங்க இடம் கொடுத்தார். என்னை அவருக்கு முன்னே பின்னே தெரியாது. நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்ததும் அவருக்கு ஏதாவது உதவி செய்யணும்னு அப்பவே நினைச்சுக்கிட்டேன். அதுக்கு இப்பதான் சந்தர்ப்பம் கிடைச்சது. அவருக்கு என்ன உதவி வேணும்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். சட்டப்படி என்ன செய்யமுடியுமோ அதைச் செய்யணும்!" என்றார் முதல்வர்.

"முன்னால கூட வேற ஊர்கள்ள சில பேரை இப்படிப் பாத்துட்டு வந்தீங்களே அவங்க கூட..."

"அவங்களும் எனக்கு உதவி செஞ்சவங்கதான். எல்லாரையும் சந்திச்சுக்கிட்டு என்னால முடிஞ்ச பதில் உதவிகளை செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கேன்!"

"எப்பவோ உதவி செஞ்சவங்களையெல்லாம் இவ்வளவு வருஷம் கழிச்சு ஞாபகம் வச்சுக்கிட்டு பதில் உதவி செய்யறீங்களே, ஆச்சரியமா இருக்கு!"

"ஞாபகத்தை மட்டும் நம்பி இருந்தா சில பேர் விட்டுப் போகலாம். அதனால எனக்கு யாராவது உதவி செஞ்சா அதையெல்லாம் உடனே இந்த நோட்டில குறிச்சு வச்சிப்பேன். இதை அடிக்கடி பாப்பேன். அவங்களுக்கு உதவி செய்யக் கூடிய சந்தர்ப்பம், நேரம் வரும்போது உதவி செய்வேன். பல ஊர்களுக்குப் போகும்போது அங்கே இருக்கறவங்களை சந்திச்சு அவங்க தேவை என்னன்னு கேட்டு நிறைவேற்றுவேன்" என்றபடியே தன் கைப்பையிலிருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து சண்முகத்திடம் காட்டினார் முதல்வர்.

"ஐயா! உங்க கையில இந்த நோட்டு இருக்கறதை அடிக்கடி பாத்திருக்கேன். ஆனா அது உங்களோட டயரின்னு நினைச்சேன்" என்றார் உதவியாளர்.

பெரிதாகச் சிரித்த முதல்வர், "நீங்க அப்படி நினைச்சதில ஆச்சரியம் இல்ல. சில வருஷங்களுக்கு முன்னால என் வீட்டில வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினாங்க. நீங்க அப்ப இல்ல. அதனால உங்களுக்கு அது தெரிஞ்சிருக்காது. அவங்களுக்கு எதுவும் கிடைக்கல. இந்த நோட்டு மட்டும்தான் கிடைச்சது. ஒரு ரகசிய டயரின்னு நினைச்சு அதை எடுத்துக்கிட்டுப் போனாங்க. அதைப் படிச்சுப் பாத்துட்டு அதில அவங்க எதிர்பார்த்த விஷயம் எதுவும் இல்லேன்னு தெரிஞ்சதும் ஒரு வாரம் கழிச்சு திருப்பிக் கொடுத்திட்டாங்க!" என்றார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 54
 பொச்சாவாமை (அலட்சியத்தால் ஏற்படும் மறதி)

குறள் 536:
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.

பொருள்:
யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காத தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

Wednesday, December 8, 2021

535. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

"ரசாயனத் தொழிற்சாலைக்குக் கழிவுக் கட்டுப்பாடு முக்கியம். கழிவுப் புகை, கழிவு நீர் ரெண்டுமே பெரிய பிரச்னையா இருக்கும். உங்க தொழிற்சாலையிலே புகைப் பிரச்னை இல்லை. ஆனா கழிவு நீர் பிரச்னையா இருக்கும். அதனால முழு அளவில கழிவு நீர் சுத்திகரிப்பு பிளான்ட் நிறுவ வேண்டியது முக்கியம்" என்றார் தொழில் ஆலோசகர்.

"அதற்கு எவ்வளவு முதலீடு செய்யணும்?" என்றான் தொழிற்சாலை அதிபரான உதயகுமார்.

ஆலோசகர் கூறிய மதிப்பீட்டுத் தொகையைக் கேட்டதும், "அவ்வளவு பெரிய தொகை முதலீடு செய்யணுமா? தொழிற்சாலைக்கான முதலீடோட, வருமானம் கொடுக்காத இந்த முதலீடு வேறயா? வேற வழி இருக்கா?" என்றான்.

ஆலோசகர் சற்றுத் தயங்கி விட்டு, "குறைஞ்ச முதலீட்டில கழிவு நீரை சுத்தம் செய்யலாம். ஆனா அது நீண்ட காலம் சரியா செயல்படாது. ரெண்டு மூணு வருஷத்தில அதோடசெயல்திறன் குறைஞ்சுடும். அப்புறம் நீங்க வெளியேற்றுகிற கழிவு நீரோட மாசுத்தன்மை கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்கும். அதனால ரெண்டு வருஷம் கழிச்சு நீங்க இந்த கழிவு நீர் சுத்தகரிப்பு பிளான்ட்டை அப்கிரேட் பண்ண வேண்டி இருக்கும். ஆரம்பத்திலேயே நான் சொன்ன மாதிரி கொஞ்சம் பெரிய முதலீட்டில பிளான்ட்டை போட்டுட்டா அது நீண்ட காலத்துக்குப் பயனுள்ளதா இருக்கும்" என்றார்.

"வேண்டாம் சார். இப்ப பெரிய தொகையை முதலீடு செஞ்சு அப்படி ஒரு பிளான்ட்டைஅமைக்க விரும்பல. நீங்க சொன்ன மாற்று வழிப்படி குறைஞ்ச முதலீட்டில ஒரு பிளான்ட்டைப் போட்டுக்கலாம். ரெண்டு வருஷம் கழிச்சு அப்கிரேட் பண்ணிக்கலாம்" என்றான் உதயகுமார்.

திவுத் தபாலில் வந்திருந்த அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தான் உதயகுமார்.

அவனுடைய தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு அதிகமாக இருப்பதால் அவன் தொழிற்சாலையை அந்தக் கடிதம் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் மூட வேண்டும் என்று அரசாங்கத்தின் மாசுக்கட்டுப்பாட்டு நிறுவனத்திலிருந்து கடிதம் வந்திருந்தது.

ஆலோசகர் கூறியபடி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தாமல் பல மாதங்களாக அசட்டையாக இருந்து விட்ட தன் அலட்சியத்தை நினைத்துத் தன்னையே நொந்து கொண்டான் உதயகுமார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 54
 பொச்சாவாமை (அலட்சியத்தால் ஏற்படும் மறதி)

குறள் 535:
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.

பொருள்:
வரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வரும்போது தன் பிழையை நினைத்து வருந்துவான்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...