Friday, March 31, 2023

747. "பாதுகாப்பு வல்லுனர்"

"அரசே! பாதுகாப்பு வல்லுனர் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் இந்த மனிதரின் ஆலோசனையை நாம் கேட்க வேண்டுமா என்ன?" என்றார் அமைச்சர்.

"இதற்கு முன் இரண்டு நாடுகளுக்குப் பாதுகாப்பு அமைப்பு பற்றி ஆலோசனை கூறி இருப்பதாகவும், அவர் யோசனையைக் கேட்டு அவர்கள் தங்கள் கோட்டைகளை வலுப்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறுகிறார். அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுக் கொள்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். அவரை வரச் சொல்லுங்கள். உங்களையும், என்னையும் தவிர, கோட்டைத் தலைவரும், படைத் தலைவரும் கூட இருக்கட்டும்!" என்றான் அரசன்.

"அரசே! ஒரு கோட்டை இரண்டு விதங்களில் பாதுகாப்பு அளிக்க வேண்டும். எதிரி நாட்டுப் படைகளால் தாக்கப்படமுடியாத அளவுக்கு வலுவாக இருக்க வேண்டும். அதனால் தாக்க வரும் படைகள் கோட்டையை முற்றுகை இடுவார்கள். அந்த முற்றுகையை நீண்ட காலம் தாக்குப் பிடிக்கும் அளவுக்குக் கோட்டைக்குள் வசதிகள் இருக்க வேண்டும்.

"இரண்டாவதாக, ஒருவேளை எதிரி நாட்டுப் படைகள் நம் கோட்டைக்குள் நுழைந்து விட்டால், அர்களுடைய தாக்குதலை எதிர்கொள்ளும் வலுவும் நமக்கு இருக்க வேண்டும்!"

"அற்புதமான யோசனைகள் வல்லுனரே! ஆனால் எல்லா நாட்டின் கோட்டைகளுமே இந்த இரண்டு நோக்கங்களையும் கருத்தில் கொண்டுதானே அமைக்கப்பட்டிருக்கும்?" என்றான் அரசன்.

"உண்மைதான் அரசே! ஆயினும் கோட்டைகளைக் கட்டமைக்கும்போது சில பலவீனங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். கோட்டையைச் சுற்றி பார்க்க என்னை அனுமதித்தால் நான் அந்த பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றைப் போக்குவதற்கான வழிகளைக் கூறுவேன்" என்றார் வல்லுனர்.

"அப்படியே செய்து விடலாம். கோட்டைத் தலைவரே! வல்லுனருக்குக் கோட்டையைச் சுற்றிக் காட்டுங்கள். அப்போதுதான் அவர் கோட்டையில் உள்ள அமைப்புகளை  நன்கு பார்த்து அவற்றை நம் எதிரி நாட்டு மன்னரிடம் எடுத்துச் சொல்ல முடியும்!" என்றான் அரசன் சிரித்தபடி.

"அரசே!" என்றார் வல்லுனர் திடுக்கிட்டு.

"வல்லுனரே! கோட்டையை முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ தாக்குவதைத் தவிர மூன்றாவதாக ஒரு வழி இருக்கிறது. அதுதான் வஞ்சனை மூலம் கோட்டையின் ரகசியங்களைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது. அதற்காகத்தான் எங்கள் எதிரி ஒற்றரான உங்களை ஒரு வல்லுனர் போல் அனுப்பி இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் மன்னர் உங்களிடம் சற்று விளையாடிப் பார்க்க நினைத்தார். அவ்வளவுதான்!" என்றார் அமைச்சர் சிரித்தபடி.

"துரதிர்ஷ்டவசமாக உங்களால் கோட்டையைப் பார்க்க முடியாது. நீங்கள் பார்க்கப் போவது எங்கள் பாதாளச் சிறையைத்தான். உங்கள் நாட்டுச் சிறை அளவுக்கு அது வசதியாக இருக்குமா என்று தெரியாது" என்ற அரசன் கோட்டைத் தலைவனைப் பார்த்துக் கண்ணசைக்க, கோட்டைத் தலைவன் "வல்லுனரை" சிறைக்கு அழைத்துச் செல்லக் காவலர்களை அழைத்தான்.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்

குறள் 747:
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.

பொருள்: 
முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

 


 

690. தோளில் விழுந்த வெட்டு!

"பொன்னி நாட்டுக்குத் தூது போகும் உனக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகளைத் தெரிவிக்க வேண்டியது என் கடமை!" என்றார் அமைச்சர்.

"ஆபத்துகள் பற்றி எனக்கு அச்சம் இல்லை அமைச்சரே!" என்றான் தூது செல்லத் தேர்ந்தெடுக்கட்ட காத்தவராயன்.

"காத்தவராயா! உனக்கு அச்சம் இல்லை என்பதை நான் அறிவேன். அதனால்தான் உன்னைத் தூதனாக அனுப்ப அரசரிடம் பரிந்துரை செய்தேன். ஆயினும் வரக் கூடிய  ஆபத்துகளை முன்பே அறிந்திருப்பதுதானே புத்திசாலித்தனம்!"

அமைச்சர் கூறியவற்றை கவனமாகக் கேட்டுக் கொண்டான் காத்தவராயன்.

"பாராட்டுக்கள் காத்தவராயா! உன் தூதை வெற்றிகரமாக முடித்திருக்கிறாய். நாம் அனுப்பிய சமாதான யோசனையைப் பொன்னி நாட்டு மன்னர் ஏற்றுக் கொண்டு உன் மூலமே பதில் ஓலை அனுப்பி இருக்கிறாரே! போரைத் தவிர்த்து விட்டோம். இது நம் நாட்டு மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் செய்தி!" என்றார் அரசர்.

"அரசே! தூதர் தங்களை ஒரு கையால் வணங்கினாரே, அது தவறு இல்லையா?" என்றார் அமைச்சர்.

"காத்தவராயர் தன் தூதை வெற்றிகரமாக முடித்துப் பொன்னி நாட்டு மன்னரிடமிருந்து ஒரு நல்ல செய்தியுடன் வந்திருக்கிறார். அவர் ஒரு கையால் வணங்கியதை நான் கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் பொருட்படுத்தி இருக்க மாட்டேன். காத்தவராயர் மரியாதை தெரிந்தவர்.  அவர் ஒரு கையால் வணங்குகிறார் என்றால் இன்னொரு கையில் சுளுக்கு ஏற்பட்டிருக்கலாம்!" என்றார் மன்னர் சிரித்தபடி.

"சுளுக்கு இல்லை அரசே! அவருடைய வலது தோளில் வாளால் வெட்டப்பட்ட காயம் உள்ளது!" என்றார் அமைச்சர்.

"என்ன, வாள் வெட்டா? அது எப்படி நேர்ந்தது?" என்றர் அரசர் அதிர்ச்சியுடன்.

"அரசே! பொன்னி நாட்டு அரசருக்கு எதிராகச் செயல்படும் அவருடைய உள்நாட்டு எதிரிகள் சிலர் நம் இரு நாடுகளிடையே போரை விரும்புகிறார்கள். அப்படி ஒரு போர் நடந்தால், பொன்னி நாட்டு மன்னர் போரில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது அரண்மனையில் உள்ள சில சதிகாரர்கள் உதவியுடன் அவரைச் சிறைப்பிடித்து விட்டு தங்களில் ஒருவர் அரசுக் கட்டிலில் அமரலாம் என்று அவர்கள் திட்டமிட்டிருப்பதை ஒற்றர்கள்  மூலம் நான் அறிந்தேன். அதனால் நம் சமாதான முயற்சியைச் சீர்குலைக்க அவர்கள் முயல்வார்கள் என்றும், அதன் ஒரு பகுதியாக, அவர்கள் நம் தூதரின் உயிருக்கே ஆபத்து விளைவிக்க முயல்வார்கள் என்றும் நான் எதிர்பார்த்தேன். அதனால் இங்கிருந்து கிளம்பும்போதே காத்தவராயரை எச்சரிக்கை செய்துதான் அனுப்பினேன்" என்றார் அமைச்சர்.

"ஆனால் உங்கள் எச்சரிக்கை பயனளிக்காமல் போய் விட்டதே! தூதர் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்றால் அவரை அனுப்பியதையே தவிர்த்திருக்கலாமே!" என்றார் அரசர்.

"நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு, போரைத் தவிர்ப்பதற்கான முயற்சியில், தூதரை அனுப்ப வேண்டியது அவசியமாக இருந்தது. அவருடைய உயிருக்கு நேரக் கூடிய ஆபத்து பற்றியும், அதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் காத்தவராயரிடம் அவர் கிளம்புவதற்கு முன்பே விரிவாக விளக்கினேன். தன் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று தெரிந்துதான் அவர் தூது செல்ல ஒப்புக் கொண்டார். ஆபத்தை உணர்ந்து அவர் எச்சிரிக்கையுடன் இருந்ததால்தான் அவர் மீது நடந்த தாக்குதலிலிருந்து அவர் உயிர் தப்பினார். அத்துடன் காத்தவராயர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி அறிந்த பொன்னி நாட்டு அரசர் சதிகாரர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்து விட்டார். அதனால் அவர் பதவிக்கு ஏற்படவிருந்த ஆபத்தும் நீங்கி விட்டது. காத்தவராயர் தாக்கப்பட்டது ஒரு விதத்தில் பொன்னி நாட்டுக்கு நன்மை பயத்திருக்கிறது! தனக்குக் காயம் ஏற்பட்டது பற்றித் தங்களிடம் கூற வேண்டாம், அது தங்களுக்கு மனவருத்தம் ஏற்படுத்தும் என்று காத்தவராயர் என்னிடம் கேட்டுக் கொண்டார். ஆயினும் அவர தன் உயிருக்கு ஏற்படக் கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாமல் தூது சென்று வந்தது தங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதால்தான் அவர் தங்களை ஒரு கையால் வணங்கினார் என்று அவர் மீது குற்றம் கூறுவது போல் ஆரம்பித்து உங்களிடம் அவர் தாக்கப்பட்டதைக் கூறினேன்!" என்றார் அமைச்சர்.

"தன் உயிருக்கு ஏற்படக் கூடிய ஆபத்தைப் பற்றி அஞ்சாமல் தூது சென்று தன் பணியைச் சிறப்பாக முடித்து இரு நாடுகளுக்குமே பெரும் நன்மையை விளைவித்திருக்கும் காத்தவராயருக்கு எத்தகைய பரிசை வழங்கினாலும் தகும்!" என்றார் அரசர் காத்தவராயனைப் பெருமையுடன் பார்த்தபடி.

அரசியல் இயல்
அதிகாரம் 69
தூது

குறள் 690:
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

பொருள்:
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித் தருபவரே நல்ல தூதர்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Wednesday, March 29, 2023

689. சொல்ல நினைத்து...

தூதனாக வந்த சிரவணன் தான் கொண்டு வந்த செய்தியை மன்னன் அபிஷேகவல்லபனிடம் சொல்லி முடித்து விட்டான். மன்னனுக்கு சிரவணனை மிகவும் பிடித்துப் போய் விட்டது.

அதனால் சிரவணனை இருக்கையில் அமரச் செய்து அவனிடம் சற்று நேரம் உரையாடினான் மன்னன்.

பேசிக் கொண்டிருந்தபோது, அபிஷேகவல்லபன், "உங்கள் மன்னருக்கு அவருடைய ஒன்று விட்ட சகோதரர்கள் பிரச்னை கொடுத்துக் கொண்டிருக்காறார்கள் போலிருக்கிறதே!" என்றான்.

"அப்படியெல்லாம் என்றுமில்லை" என்றான் சிரவணன் தங்கள் நாட்டு அரச குடும்பத்தின் விஷயங்களை இன்னொரு நாட்டு மன்னனிடம் பேச விரும்பாமல்.

"உங்கள் மன்னரின் ஒன்று விட்ட சகோதரர் சூரியகேசி தனக்கு எதிராகச் சதி செய்து வருவதாக உங்கள் மன்னரே என்னிடம் கூறி இருக்கிறாரே!" என்றான் அபிஷேகவல்லபன் விடாமல்.

"எனக்குத் தெரியாது அரசே! எங்கள் அரசருக்கு மக்கள் ஆதரவு நிறைய இருக்கிறது. ஏனெனில் அவர் முறையாக..." என்று ஆரம்பித்த சிரவணன் தான் செய்யவிருந்த தவற்றை உணர்ந்து "முறையாக ஆட்சி செய்து வருகிறார்!" என்று புன்னகையுடன் கூறி முடித்தான்.

'நல்ல வேளை! 'எங்கள் மன்னன் முறையாகப் பிறந்தவர்!' என்று நான் சொல்ல ஆரம்பித்ததைச் சொல்லி முடித்திருந்தால், தன் தந்தைக்கு முறையாகப் பிறக்காமல் அவருக்கு முறையாகப் பிறந்த இளவரசரைக் கொன்று விட்டு ஆட்சிக்கு வந்த அபிஷேகவர்மன் அதைத் தன்னைக் குத்திக் காட்டுவதாக எடுத்துக் கொண்டிருப்பான். அதனால் நான் வெற்றிகரமாகச் செய்து முடித்த தூது பயனில்லாமல் போய் இரு நாடுகளுக்கும் விரோதம் கூட ஏற்பட்டிருக்கும். ஒரு பெரும் அபாயத்திலிருந்து என்னையும், என் நாட்டையும் காத்து விட்டேன். உரிய நேரத்தில் என் சிந்தனையைச் சரியாகச் செயல்பட வைத்து நான் செய்ய இருந்த தவறைத் தடுத்த இறைவனுக்கு நன்றி!' என்று நினைத்துக் கொண்டான் சிரவணன்.

அரசியல் இயல்
அதிகாரம் 69
தூது

குறள் 689:
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.

பொருள்:
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய் தவறிக் கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

688. தூதரைப் பின்தொடர்ந்து...

"சித்திரச் செல்வனை முதல்முறையாக தூதராக அனுப்புகிறோமே, அவர் சரியாகச் செயல்படுவாரா?" என்றான் அரசன்.

"எவருக்கும் முதல்முறை என்று ஒன்று இருக்கிறது அல்லவா அரசே? நந்தி நாடு நம் நட்பு நாடுதானே! அங்கே சென்று வரும் அனுபவம் அவருக்குப் பயனுள்ளதாக இருக்கும்" என்றார் அமைச்சர்.

"சரி. போய்விட்டு வரட்டும். பார்க்கலாம்!" என்றார் அரசர்.

"அமைச்சரே! சித்திரச் செல்வன் தூது சென்று வந்து விட்டார். அவர் தன் பணியைச் சரியாகச் செய்திருப்பதாகத்தான் தோன்றுகிறது!" என்றான் அரசன்.

"ஆம் அரசே! அதை என்னால் உறுதியாகவே சொல்ல முடியும்" என்றார் அமைச்சர்.

"அது எப்படி?"

"அரசே! என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் அனுமதி இல்லாமல் தூதரைக் கண்காணிக்க ஒரு ஏற்பாடு செய்தேன்!" என்றார் அமைச்சர்.

"அது என்ன ஏற்பாடு?"

"நந்தி நாட்டில் இருக்கும் நம் ஒற்றன் ஒருவனிடம் சித்திரச் செல்வனைக் கண்காணிக்கச் சொல்லிச் செய்தி அனுப்பினேன். சித்திரச் செல்வன் நந்தி நாட்டில் அடி வைத்தது முதல் அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் அந்த ஒற்றன் கண்காணித்திருக்கிறான். சித்திரச் செல்வன் திரும்பி வருவதற்குள் சங்கேத மொழியில் அந்த ஒற்றன் அனுப்பிய ஓலை எனக்கு வந்து சேர்ந்து விட்டது."

"தூதரை ஒற்றன் மூலம் கண்காணிக்கச் செய்தது முறையற்றதல்லவா?"

"உண்மைதான் அரசே! ஆனால் முதல்முறை தூதராகச் செல்பவர் எப்படிச் செயல்படுகிறார் என்று அறிந்து கொள்ள வேண்டாமா? நீங்கள் கூட இது பற்றிக் கவலை தெரிவித்தீர்களே!" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"சரி, இருக்கட்டும். ஒற்றன் சொன்ன தகவல்களைக் கூறுங்கள்."

"நந்தி நாட்டில் இருந்தபோது தன் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் சித்திரச் செல்வன் மிகவும் முனைப்பாக இருந்திருக்கிறார். என் ஒற்றனே அவரிடம் ஒரு விலைமகளை அனுப்பி அவரைச் சோதித்திருக்கிறான். சித்திரச் செல்வன் அவளிடம் மயங்காமல் அவளைத் திருப்பி அனுப்பி விட்டார்.

"இரண்டாவதாக, அந்த நாட்டில் தனக்கு உதவ, அறிவும், துணிவும் மிகுந்த ஒரு உள்ளூர் மனிதருடன் சித்திரச் செல்வன் நட்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

"மூன்றாவதாக நந்தி நாட்டு மன்னரிடம் தாங்கள் அனுப்பிய செய்தியைச் சொல்லும்போது துணிவுடன் செயல்பட்டிருக்கிறார். மன்னர் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான விடைகளைக் கூறி இருக்கிறார். அவர் தெரிவிக்கக் கூடாத சில விவரங்களை மன்னர் துருவிக் கேட்டபோது அவை தனக்குத் தெரியாது என்றும், தெரிந்தாலும் தான் அவற்றை வெளிப்படுத்த மாட்டேன் என்றும் துணிவுடன் கூறி இருக்கிறார்."

"நல்லது அமைச்சரே! தூதரைப் பற்றிய இந்த விவரங்களை நீங்கள் கண்டறிந்தது பற்றி மகிழ்ச்சி. ஆயினும் தூதரைப் பின்தொடர்ந்து ஒரு ஒற்றரை அனுப்பினீர்களே, அதை..." என்றான் அரசன்.

அமைச்சர் மௌனமாக அரசரின் முகத்தைப் பார்த்தார்.

"அதை என்னால் குற்றம் என்று கருத முடியாது. ஏனெனில் நானும் அதே குற்றத்தைச் செய்திருக்கிறேன்!" என்றான் அரசன்.

"என்ன சொல்கிறீர்கள் அரசே?" என்றார் அமைச்சர் குழப்பத்துடன்.

"தூதரின் செயல்பாட்டைக் கண்காணிக்க நீங்கள் ஒரு ஒற்றனை அனுப்பியது போல் நானும் ஒரு ஒற்றனை அனுப்பினேன்.  நான் அனுப்பிய ஒற்றனும் நீங்கள் அனுப்பிய ஒற்றன் கூறிய அதே தகவல்களைத்தான் கூறினான்" என்றான் அரசன் சிரித்தபடி.

பொருட்பால்
அதிகாரம் 69
தூது

குறள் 688:
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

பொருள்:
தூய ஒழுக்கம், நல்ல துணை, துணிவு இம்மூன்றுடன் சேர்ந்த வாய்மை இவற்றைக் கொண்டு தூதுரைப்பதே தூதரின் பண்பு.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Tuesday, March 28, 2023

687. தூதனின் உடல்நிலை

"மரகத நாட்டிலிருந்து தூதர் வந்திருப்பதாகச் சொன்னீர்களே!" என்றான் அரசன் சுபகீர்த்தி.

"ஆம் அரசே! நேற்று இரவு வந்தார். அவரை நம் விருந்தினர் விடுதியில்தான் தங்க வைத்திருக்கிறோம். இன்று காலை தங்களைச் சந்திக்கலாம் என்று கூறி இருந்தோம். ஆனால் இன்று காலை திடீரென்று அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது. அதனால் நாளைதான் அவரை அரசவைக்கு அழைத்து வர முடியும் என்று நினைக்கிறேன்."

"உடல்நிலை சரியில்லாவிட்டால் என்ன? அரசவைக்கு வந்து செய்தி சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே!" என்றான் சுபகீர்த்தி சற்று எரிச்சலுடன்.

"அவருக்குக் கடுமையான வயிற்றுப் போக்கு அரசே!" என்றார் அமைச்சர் சற்றுத் தயக்கத்துடன்.

டுத்த நாளும் தூதர் வரவில்லை. அரண்மனை வைத்தியர் அவருக்கு மருந்து கொடுத்தும் அவருடைய வயிற்றுப் போக்கு நிற்கவில்லை என்று தகவல் வந்தது.

"அப்படியானால் நீங்களே அவரைச் சந்தித்துச் செய்தி என்ன என்று கேட்டு அறிந்து வாருங்கள்!" என்றான் அரசன், அமைச்சரிடம்.

"அதற்கு முயற்சி செய்தேன் அரசே! ஆனால் செய்தியைத் தங்களிடம்தான் சொல்ல வேண்டும் என்று மரகத நாட்டு மன்னர் அவரிடம் கூறி இருப்பதாகச் சொல்கிறார்!" என்றார் அமைச்சர்.

"அப்படியானால் ஒன்று செய்யலாம். இன்று மாலை நானே விருந்தினர் விடுதிக்குச் சென்று அவரைப் பார்த்து மரகத நாட்டு மன்னர் அவரிடம் சொல்லி அனுப்பியுள்ள செய்தியைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்!" என்றான் சுபகீர்த்தி.

"அரசே! தூதர் இருக்கும் இடத்துக்குத் தாங்கள் செல்வது பொருத்தமாக இருக்காது!"

"ஏலத்தீவு யாருக்குச் சொந்தம் என்பது பற்றி நமக்கும் மரகத நாட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில் மரகத நாட்டு மன்னர் என்ன செய்தி சொல்லி அனுப்பி இருப்பார் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்" என்றான் அரசன்.

"என்ன தூதரே, உடல்நிலை எப்படி இருக்கிறது?" என்றான் அரசன்.

கட்டிலில் படுத்திருந்த தூதன் மேகநாதன் திடுக்கிட்டவனாக,"அரசே! தாங்களா?" என்றபடி தலையைத் தூக்கி எழுந்திருக்க முயன்றான்.

"சிரமப்பட வேண்டாம். படுத்த நிலையிலேயே நீர் கொண்டு வந்த செய்தியைச் சொல்லும்!" என்றான் சுபகீர்த்தி அதிகார தொனியில்.

"அரசே! தாங்கள் நின்று கொண்டிருக்கும்போது, நான் படுத்துக் கொண்டு தங்களிடம் பேசுவது..."

அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்த அரசன் "இப்போது சொல்லும்!" என்றான்.

மேகநாதன் மெல்லிய குரலில் பேசியது அரசனுக்குக் காதில் சரியாக விழாததால் குனிந்து மேகந்தனின் வாயருகில் காதை வைத்துக் கொண்டு கேட்க வேண்டி இருந்தது.

மேகநாதன் பேசி முடித்ததும் அரசனின் முகம் சிவந்தது. கோபத்தில் வாளை உருவப் போனவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு எழுந்தான்.

அகிலிருந்த அமைச்சர் அரசனின் படபடப்பைப் பார்த்து விட்டு, "அரசே! தூதர் கூறிய செய்தி என்ன?" என்றார் தயக்கத்துடன்.

"ஏலத்தீவு மகத நாட்டுக்குச் சொந்தமானதாம். அங்கிருக்கும் நம் படைகளை நாம் உடனே விலக்கிக் கொள்ளாவிட்டால், மரகதநாட்டின் கப்பல் படையை அனுப்பி அந்தத் தீவில் இருக்கும் நம் மொத்தப் படைகளையும் அழித்து விடுவானாம்! இந்தச் செய்தியை இவன் நம் அரசவையில் கூறி இருந்தால் எனக்குப் பெருத்த அவமானமாகி இருக்கும். அந்த நிலையில் இவனை என்ன செய்திருப்பேனோ தெரியாது. இவனுக்கு உடல்நிலை சரியனாலும், சரியாகாவிட்டாலும், இவனை நாளைக் காலை நம் நாட்டின் எல்லைக்கு வெளியே கொண்டு விடச் செய்யுங்கள்!" என்று அமைச்சரிடம் கூறி விட்டுக் கோபமாக வெளியேறினான் சுபகீர்த்தி.

மேகநாதனின் முகத்தைப் பார்த்த அமைச்சருக்கு அவன் இதழோரத்தில் ஒரு புன்னகை தவழ்ந்ததாகத் தோன்றியது. 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 69
தூது

குறள் 687:
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.

பொருள்:
தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தைக் கருத்தில் கொண்டு, தக்க இடத்தையும் ஆராய்ந்து செய்தியைச் சொல்கின்றவனே தூதன்.

குறள் 688 
      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Monday, March 27, 2023

686. தேவை ஒரு தூதர்

"நாம் தூதரை அனுப்பப் போவது களஞ்சிய நாட்டுக்கு. களஞ்சிய நாட்டு மன்னன் சேர்வராயன் அறிவாளி. நூல்கள் பல கற்றவன். அதனால் நம் தூதரிடம் நியாயமாகப் பேசுவது போல் வாதிடுவான். பல சரித்திர நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி தர்க்கம் செய்வான். 

"அதனால் அவனிடம் உண்மைகளை எடுத்துக் கூறவும், அவன் வாதங்களுக்கு பதில் கூறவும் நாம் அனுப்பும் தூதர் நல்ல கல்வி அறிவு உள்ளவராக இருக்க வேண்டும். அவனிடம் நம் கருத்துக்களைத் துணிவாகவும், தெளிவாகவும் எடுத்துச் சொல்லக் கூடியவராக இருக்க வேண்டும். 

"சேர்வராயனிடம் இன்னொரு குணம் உண்டு. தன் வாதங்கள் எடுபடாமல் போனாலோ, மற்றவர் தன் கருத்தில் உறுதியாக இருந்தாலோ அவர்களை அச்சுறுத்த நினைப்பான். தூதர்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்கக் கூடாது என்ற மரபு இருந்தாலும் தன் கோபமான பார்வையாலும், அச்சுறுத்தும் பேச்சுக்களாலும் துதராக வந்தவரை மிரட்டப் பார்ப்பான். இவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய ஒருர்தான் தூதராகச் செல்ல வேண்டும்."

அரசன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர் பதில் கூறவில்லை.

"என்ன அமைச்சரே! நான் குறிப்பிட்ட தகுதிகள் உள்ள யாரும் உங்கள் கவனத்துக்கு வரவில்லையா?"

"ஒருவர் இருக்கிறார் அரசே! ஆனால் அவரைத் தூதராக அனுப்ப முடியுமா என்று தெரியவில்லை!" என்றார் அமைச்சர் தயக்ககத்துடன்.

"யார் அவர்? அவரை ஏன் அனுப்ப முடியாது?"

"தாங்கள் விருப்பப்பட்டால் அனுப்பலாம். ஆனால் அவர் இப்போது சிறையில் இருக்கிறார்!" என்றார் அமைச்சர்.

"சிறையில் இருக்கிறாரா? யார் அவர்?"

"உங்கள் ஒன்று விட்ட சகோதரர் நந்திவர்மர்!" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"நந்திவர்மனா? ராஜதுரோகக் குற்றத்துக்காகச் சிறையில் இருக்கும் அவன்தான் உங்களுக்குக் கிடைத்தானா?" என்றான் அரசன் கோபத்துடன்.

"அரசே! தாங்கள் அவருக்கு நிர்வாகத்தில் ஒரு பொறுப்புக் கொடுத்தீர்கள். ஆனால் அவர் செய்த சில விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் அவரைக் கூப்பிட்டு விசாரித்தபோது அவர் தன் பக்கத்து நியாயங்களை உங்களிடம் எடுத்துக் கூறினார். அவர் கருத்துக்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

"தனக்குச் சரியென்று தோன்றும் விதத்திலும் நாட்டு நலனுக்கு எது உகந்தது என்று சிந்தித்தும்தான் செயல்படுவதாக அவர் கூறினார். நீங்கள் கோபமடைந்து அவரைப் பதவிநீக்கம் செய்ததுடன் சிறையிலும் அடைத்து விட்டீர்கள். அவர் தங்களுக்கு எதிராகவோ, நாட்டு நலனுக்கு எதிராகவோ எதையும் செய்யவில்லை. தங்கள் கோபத்துக்கு அஞ்சாமல் தன் கருத்துக்களில் உறுதியாக இருந்ததுதான் அவர் செய்த குற்றம். 

"யோசித்துப் பார்த்தால் தூதராகச் செல்பவருக்கு இருக்க வேண்டிய குணங்கள் அவரிடம் இருப்பதை உணர்வீர்கள். தாங்கள் அவரைச் சிறையிலிருந்து விடுவித்து தூதராக அனுப்புவதுடன் அரசுப் பணிகளில் அவரைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வது தங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது என்பது என் பணிவான கருத்து!"

அமைச்சர் தன் கருத்தைக் கூறி விட்டு அரசன் என்ன சொல்லப் போகிறானோ என்ற தயக்கத்துடன் நின்றார்.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த அரசன், "அமைச்சரே! உங்கள் பேச்சைக் கேட்டதும், தூதருக்கு இருக்க வேண்டும் என்று நான் குறிப்பிட்ட குணங்கள் நந்திவர்மனிடம் மட்டுமல்ல, உங்களிடமும் இருக்கின்றன என்று அறிந்து கொண்டேன். நந்திவர்மனை விடுதலை செய்து மரியாதையுடன் அழைத்து வரச் சொல்லுங்கள். நானே அவனிடம் பேசுகிறேன்!" என்றான் அரசன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 69
தூது

குறள் 686:
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.

பொருள்:
கற்க வேண்டியவற்றைக் கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்துக்குப் பொருத்தமானதை அறிந்து செயல்படுபவனே தூதன்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, March 26, 2023

746. ஒற்றர்கள் அளித்த செய்தி

"அரசே! மந்தார நாட்டின் கோட்டைக்குள் சென்று பார்த்த நம் ஒற்றர்களிடமிருந்து ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது!" என்றான் ஒற்றர்படைத் தலைவன்.

"என்ன செய்தி?" என்றான் குந்தள நாட்டு அரசன் ரவிவர்மன்.

"மந்தார நாட்டின் கோட்டை வலுவாகக் கட்டப்பட்டிருக்கிறது. அதை வெளியிலிருந்து தகர்ப்பது கடினம்..."

"ஆயினும்...?" என்றான் அரசன் மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன்..

"ஆனால் கோட்டைக்குள் நிலைமை மிகவும் பலவீனமாக இருக்கிறது. பொதுவாக ஒரு கோட்டைக்குள் பெரும் தானியக் கிடங்குகள் இருக்கும் முற்றுகைக் காலத்தில் பயன்மடுத்துவதற்காக அவற்றில் நிறைய தானியங்களைச் சேமித்து வைத்திருப்பார்கள்."

"நம் நாட்டில் அப்படித்தானே செய்திருக்கிறோம்!"

"ஆனால் குந்தள நாட்டின் கோட்டைக்குள் பெரிய தானியக் கிடங்குகள் எதுவும் இல்லை. அத்துடன் கோட்டைக்குள் படைவீரர்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறார்கள்.  படைக்கலங்களுக்கான கிடங்கும் சிறிதாகவே இருக்கிறது. எனவே நாம் முற்றுகையிட்டால், உள்ளே தானியச் சேமிப்பு இல்லாத நிலையில் அவர்களால் அதிக நாள் தாக்குப் பிடிக்க முடியாது. அத்துடன் குறைந்த அளவு படைக்கன்களையும், குறைவான எண்ணிக்கையில் படைவீரர்களையும் வைத்துக் கொண்டு அவர்களால் நம்முடன் போரிடவும் முடியாது!" என்றான் ஒற்றர்படைத் தலைவன் உற்சாகத்துடன்.

"அப்படியானால், மந்தார நாட்டின் மீது உடனே படையெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!" என்றான் அரசன் படைத்தலைவனைப் பார்த்து.

ந்தார நாட்டின் கோட்டைக்கு வெளியே குந்தள நாட்டுப் படைகள் முற்றுகையிட்டிருந்தன.

நான்கு நாட்களுக்கு கோட்டைக்குள்ளிருந்து எந்த எதிர்த் தாக்குதலும் வரவில்லை. கோட்டை வலுவாக இருந்ததால் கோட்டையைத் தகர்க்கும் முயற்சியில் குந்தள நாட்டுப் படைத்தலைவன் ஈடுபடவில்லை.

"எப்படியும் முற்றுகையைச் சமாளிக்க முடியாமல் மந்தார நாடு நம்மிடம் சரணடையத்தான் போகிறது. சில நாட்கள் காத்திருப்போம்!" என்றான் படைத்தலைவன் படையின் முன்னணித் தலைவர்களிடம்.

ஐந்தாம் நாள் அதிகாலையில் கோட்டைக்குள்ளிருந்து அம்புகளும், ஈட்டிகளும் பறந்து வந்தன. கூடாரங்களில் உறங்கிக் கொண்டிருந்த குந்தள நாட்டுப் படைவீரர்கள் அலறி அடித்துக் கொண்டு எழுந்து தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

"நாம் நினைத்தது சரிதான். தானிய இருப்பு நான்கு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் நம்மை அச்சுறுத்தலாம் என்று எண்ணித் தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் அதிக வீரர்களோ, படைக்கலன்களோ இல்லை. அதனால் இந்தத் தாக்குதலை அவர்களால் நீண்ட காலம் தொடர முடியாது. விரைவிலேயே அவர்கள் சரணடைந்து விடுவார்கள். தைரியமாகப் போராடி அவர்கள்  தாக்குதலை முறியடிப்போம்!" என்றான் படைத்தலைவன்.

ஆனால் இரண்டு நாட்கள் முடிவில் குந்தள நாட்டுப் படைகளுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது. மந்தார நாட்டு வீரர்கள் தொடர்ந்து கோட்டைக்குள்ளிருந்து தங்கள் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தனர்.

மூன்றாம் நாள் மாலை தங்கள் படையில் கணிசமான வீரர்களை இழந்த நிலையில் குந்தள நாட்டுப்படை முற்றுகையை முடித்துக் கொண்டு தங்கள் நாட்டுக்குத் திரும்பியது.

"குந்தள நாட்டுப் படையின் முற்றுகையை நாம் வெற்றிகரமாக முறியடித்து விட்டோம். நம் படைத்தலைவருக்கும் வீரர்களுக்கும் பாராட்டுக்கள்!" என்றார் மந்தார நாட்டு அமைச்சர்.

"இதற்கு முக்கிய காரணம் நம் அமைச்சரின் தீக்கதரிசன சிந்தனைதான்!" என்றான் மந்தார நாட்டின்  படைத்தலைவன்.

"ஆமாம். கோட்டைக்குள் இருக்கும் வீரர்களில் பெரும்பாலானோரைச் சாதாரணக் குடிமக்கள் போல் கோட்டைக்குள் தங்க வைத்து, அவர்கள் விடுகளுக்குள்ளேயே தானியங்களைய்ம், ஆயுதங்களையும் சேமித்து வைப்பதற்கான சிறிய கிடங்குகளை ஏற்படுத்தி, கோட்டைக்குள் வந்து பார்க்கும் எவருக்கும் கோட்டைக்குள் தானிய சேமிப்புக் கிடங்குகளோ, ஆயதக் கிடங்குகளோ இல்லை, கோட்டைக்குள் அதிக வீரர்களும் இல்லை என்ற தவறான புரிதலை ஏற்படுத்தி, முற்றுகை இடுபவர்களைச் சில நாட்கள் காத்திருக்க வைத்து அதன் பிறகு அவர்களை அதிர்ச்சி அடையும் விதத்தில் தாக்குவது என்ற அமைச்சரின் உத்தியின்படி கோட்டை அமைப்பை உருவாக்கியதால்தானே நம்மால் குந்தள நாட்டின் பெரிய படையின் முற்றுகையை முறியடித்து அவர்களைப் பின்வாங்கச் செய்ய முடிந்தது!" என்றான் அரசன் அமைச்சரைப் பெருமையுடன் பார்த்து.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்

குறள் 746:
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.

பொருள்: 
உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

 

Sunday, March 19, 2023

744. முற்றுகை விலகியது!

வடுக நாட்டிலிருந்த பழைய கோட்டை சிதிலமடைந்து விட்டதால், புதிதாக ஒரு கோட்டையை  வடிவமைக்க மன்னன் மதுரநாயகன் ஒரு சிற்பியை அழைத்தான்..

 "கோட்டை வெளியே பார்ப்பதறகுப் பெரிதாக இருக்க வேண்டும், பெரிய பரப்பை வளைத்துக் கோட்டையின் சுற்றுச் சுவர்களைக் கட்ட வேண்டும், ஆனால் கோட்டைக்குள் கட்டிடங்கள் மிகக் குறைவாகவே இருக்க வேண்டும், உள்ளே அரண்மனையைச் சேர்ந்தவர்கள், கோட்டையைக் காவல் செய்யும் வீரர்கள்.சில முக்கியமன கடைகள் தவிர வேறு யாரும்/ எதுவும் இருக்கக் கூடாது" என்று சிற்பி கூறியபோது அந்த யோசனை மன்னனுக்கு முதலில் விந்தையாகத் தோன்றியது.

"ஏன் அப்படி?" என்று கேட்டான் மன்னன்.

"அரசே! கோட்டை என்பது மன்னரையும் முக்கியமான வேறு சிலரையும் படையெடுத்து வரும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும் இடம். பாதுகாக்கப்பபட வேண்டியவர்கள் இருக்கும் இடம் சிறிதாக இருந்தால்தான் அதைச் சிறப்பாகப் பாதுகாக்க முடியும். கோட்டை பெரிதாக இருக்க வேண்டும். கோட்டைச் சுவர் அதிக சுற்றளவைக் கொண்டிருந்தால் அது தாக்குவதற்குக் கடினமானது என்ற தோற்றத்தைக் கொடுக்கும்.

"சுவர்களில் பல இடங்களில் சிறு ஓட்டைகள் மூலம் வெளியே சுழ்ந்திருக்கும் படைகளை உள்ளிருந்து தாக்குவதற்கான வசதிகளை அமைத்துக் கொள்ளலாம். இவற்றில் ஏதோ ஓரிரண்டு இடங்களிலிருந்து தாக்குதல் நடத்தினால் கூட வெளியே இருக்கும் படை மிரண்டு விடும். அடுத்தாற்போல் எந்தப் பகுதியிலிருந்து தாக்குதல் வரும் என்று தெரியாமல் அவர்கள் அச்சத்திலும், குழப்பத்திலும் இருப்பார்கள். 

"கோட்டைக்குள் மையப்பகுதியல் மட்டும் குறைவான கட்டிடங்களை உருவாக்கி, சுற்றுச் சுவரிலிருந்து கட்டிடங்கள் உள்ள மையப்பகுதிக்கு முன் வரை வெட்ட வெளியாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒருவேளை எதிரிப்படைகள் கோட்டைக்குள் நுழைந்து விட்டாலும், வெட்டவெளியைத் தாண்டி மையப்பகுதிக்கு அவர்கள் வருவதற்குள் அவர்களைப் பல இடங்களிலிருந்தும் தாக்கிப் பின்வாங்கச் செய்ய முடியும்."

சிற்பியின் விளக்கத்தைக் கேட்ட பிறகு, சிற்பி கூறியபடியே கோட்டையைக் கட்டமைத்தான் மன்னன்.

"என்ன இது, இவ்வளவு பெரிய கோட்டை! இதை நாம் எதிர்பார்க்கவே இல்லையே!" என்றான் வடுக நாட்டின் மீது படையெடுத்து வந்திருந்த விசாக நாட்டின் படைத்தளபதி..

"ஒரு சிறிய நாடு இவ்வளவு பெரிய கோட்டையை அமைத்திருப்பது விந்தையாக இருக்கிறது!" என்றான் துணைத்தளபதி .

அப்போது எங்கிருந்தோ விரைந்து வந்த சில அம்புகள் படையின் முன்னணியிலிருந்த சில குதிரை வீரர்களைத் தாக்க, அவர்கள் குதிரைகளிலிருந்து விழுந்தனர். அதனால் குதிரைகள் அச்சமடைந்து தறிகெட்டு ஓட, அதன் விளைவாகப் படையின் பல பகுதிகள் நிலைகுலைந்தன.

"முதலில் நாம் இங்கிருந்து திரும்ப வேண்டும். சற்றுத் தொலைவில் எங்காவது நின்று என்ன செய்வதென்று ஆலோசிக்கலாம்" என்ற தளபதி  படை முழுவதையும் திரும்பிச் செல்ல ஆணையிட்டான்.

சற்று தூரத்தில் ஒரு திறந்த வெளியில் படைகளை நிறுத்தி விட்டு படைத்தளபதி துணைத்தளபதியுடன் கலந்தாலோசித்தான்.

"இந்தப் படையெடுப்பே தவறான முடிவு. இவ்வளவு பெரிய கோட்டையைத் தாக்கி உள்ளே செல்லக் கூடிய வலிமை நம் படைகளுக்கு இல்லை. நாம் திரும்பிச் செல்வதுதான் உத்தமம்!" என்றான் துணைத்தளபதி.

"மன்னருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் நாம் கோட்டையை முற்றுகையிட்டால். நம்மால் கோட்டையைப் பிடிக்கவும் முடியாது, உயிரோடு திரும்பிச் செல்லவும் முடியாது. மன்னரிடம் விளக்கிச் சொல்வோம். நமக்கு வேறு வழியில்லை!" என்றான் தளபதி.

"நம் மீது படையெடுத்து வந்த விசால நாட்டுப் படைகள் திரும்பச் சென்று விட்டன!" என்று அரசரிடம் தெரிவித்தான் வடுக நாட்டின் கோட்டைத் தளபதி.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்

குறள் 744:
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.

பொருள்: 
காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

 

Saturday, March 18, 2023

743. புலவர் சொன்ன செய்தி

"வாருங்கள் புலவரே! செண்பக நாட்டுச் சுற்றுப் பயணம் எப்படி இருந்தது?"

"சிறப்பாக இருந்தது அரசே! செண்பக நாட்டு மக்களின் விருந்தோம்பல் அற்புதமாக இருந்தது."

"செண்பக நாட்டு மக்களின் விருந்தோம்பலைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக உங்களை நான் அங்கே அனுப்பி வைக்கவில்லை என்று நினைக்கிறேன்!"

"மன்னிக்க வேண்டும் அரசே! செண்பக நாட்டைத் தாக்குவதற்கு முன்னேற்பாடாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளை ஆய்வு செய்யத்தான் ஒரு சுற்றுப் பயணி போல் அங்கே சென்று வரும்படி நீங்கள் என்னை அனுப்பினீர்கள் என்பதை நான் மறக்கவில்லை."

"அப்படியானால் அதைப் பற்றிப் பேசுங்கள்!"

"மன்னிக்க வேண்டும் அரசே! நான் சொல்லப் போவது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காது. அதனால்தான் பீடிகையாக அந்நாட்டு மக்களின் விருந்தோம்பலைப் பற்றி ஆரம்பித்தேன்!"

"சீதையைத் தேடிச் சென்ற அனுமன் 'கண்டேன் சீதையை' என்று ரத்தினச் சுருக்கமாக  ராமனுக்குச் செய்தி சொன்னது போல், நீங்களும் 'மகிழ்ச்சி அளிக்காது' என்ற இரண்டு சொற்களிலேயே எனக்கான செய்தியைச் சொல்லி விட்டீர்கள்! அப்படியானால் செண்பக நாட்டைப் போரில் வெல்வது அரிது என்று சொல்கிறீர்கள்?"

"அரிது என்று சொல்வதை விட இயலாது என்று சொல்வதுதான் உண்மை நிலைக்கு நெருக்கமாக இருக்கும்!"

"செண்பக நாடு ஒரு சிறிய நாடு. அதைப் போரில் வீழ்த்துவது எளிது என்று நினைத்தேன். சரி. அவர்களைப் போரில் வெல்ல முடியாது என்று ஏன் சொல்கிறீர்கள்?"

"அந்த நாட்டுக்கு அரணாக இருக்கும் கோட்டையை வைத்துத்தான். எவ்வளவு உயரம்! சுவர்கள் எவ்வளவு அகலம்! செயற்கையாக ஒரு மலையையே உருவாக்கியது போல் கோட்டையைக் கட்டி இருக்கிறார்கள். அதை எப்படிக் கட்டினார்கள் என்று தெரியவில்லை. அதன் பழமையைப் பார்க்கும்போது அது மிகவும் உறுதியாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பல முறை அந்தக் கோட்டையின் மீது தாக்குதல்கள் நடந்திருப்பதாகவும், எல்லாத் தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் கோட்டைக்குள் உள்ள கல்வெட்டுகளில் பொறித்து வைத்திருக்கிறார்கள். கோட்டை முற்றுகை இடப்பட்டால் நீண்ட காலம் கோட்டைக்குள்ளேயே இருந்து கொண்டு  முற்றுகையிட்டிருக்கும் படைகளை உள்ளிருந்தே தாக்கி முற்றுகையை எதிர்கொள்வதற்கான பல அமைப்புகளும் சாதனங்களும் கோட்டைச் சுவர்களில் அமைக்கப்பட்டுள்ளன."

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால்  செண்பக நாட்டை வெற்றி கொள்ள எளிதான ஒரு வழி இருப்பது போல் தோன்றுகிறதே!"

"என்ன அரசே அது? அப்படி எதையும் நான் கூறவில்லையே!"

"அவர்கள் விருந்தோம்பலைப் பற்றிக் கூறினீர்களே! அவர்களுடன் நட்பு கொண்டு அவர்கள் மனங்களை வென்று அவர்களுடைய விருந்தோம்பலை ஏற்றுக் கொள்ளும் வழியைத்தான் சொன்னேன்!"

தன் செய்தி அளித்த ஏமாற்றத்தைப் போக்கிக் கொள்ள அரசர் நகைச்சுவையை நாடி இருக்கிறார் என்பது புலவருக்குப் புரிந்தது.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்

குறள் 743:
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.

பொருள்: 
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

742. நால்வகை அரண்கள்!

"அரசே! நீங்கள் இத்தனை ஆண்டுகள் இந்தக் காட்டில் ஒளிந்து வாழ்ந்து ஒரு நல்ல சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தது வீண் போகவில்லை. ருத்ரபதியின் கொடுங்கோல் ஆட்சியைத் தாள முடியாமல் மக்களே அவனை விரட்டி அடித்து விட்டனர். ருத்ரபதியால் சதி செய்து விரட்டப்பட்ட உங்களை மீண்டும் அரியணையில் அமர வைக்க மக்கள் ஆவலாக உள்ளனர்" என்றார் அமைச்சர். 

அமைச்சருடன் வந்திருந்த பிற அரசு அதிகாரிகள் அமைச்சர் கூறுவதை ஆமோதித்துத் தலையாட்டினர். 

"மக்கள் விருப்பபடி மீண்டும் அரசனாவதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் ஒரு நிபந்தனை!" என்றான் மகரபூபதி.

"என்ன நிபந்தனை அரசரே!" என்றார் அமைச்சர்.

"நான் இந்த இடத்திலிருந்தே ஆட்சி புரிய விரும்புகிறேன்!"

"இந்தக் காட்டிலிருந்தா? அரசே! ஒரு அரசர் எப்போதுமே பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டுதான் ஆட்சி புரிய வேண்டும். கோட்டைக்குள் இருக்கும் அரண்மனையில் இருந்தபடி நீங்கள் ஆட்சி புரிவதுதான் பொருத்தமாக இருக்கும்" என்றார் அமைச்சர்.

"அமைச்சரே! இத்தனை ஆண்டுகளாக நான் இங்கேதான் வழ்ந்து கொண்டிருந்தேன். இங்கே தன் படைகளை அனுப்பி என்னைக் கொல்லவும், சிறைபிடிக்கவும் ருத்ரபதி எத்தனையோ முறை முயற்சி செய்தான். ஆனால் அவனால் முடியவில்லை. காரணம் இந்த இடமே ஒரு இயல்பான அரணாக அமைந்திருப்பதுதான். அந்தப் பக்கம் மலைத் தொடர். படையெடுத்து வரும் எவரும் அந்த மலையைக் கடந்துதான் வர வேண்டும். அந்த முயற்சியில் யாராவது ஈடுபட்டாலே நம்மால் அதை இங்கிருந்தே முறியடித்து விட முடியும். இது மலை கொடுக்கும் பாதுகாப்பு.

"இங்கே ஓடும் ஆற்றில் நீர் எப்போதும் வற்றுவதில்லை. அதனால் இங்குள்ள மக்களுக்கு விவசாயத்துக்கும், உணவுக்கும் இன்றியமையாததான நீர்வளம் இங்கே இருக்கிறது. அதனால் ஒருவேளை எதிரிகள் மலைக்கருகே முற்றுகையிட்டால் கூட இங்குள்ள மக்கள் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருக்கும் மக்களைப் போல் பாதுகாப்பாக இருக்கலாம். இது நீர் கொடுக்கும் பாதுகாப்பு.

"இன்னொரு புறம் அடர்ந்த காடு. அந்தக் காட்டுக்குள்தான் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். காட்டுக்கு அந்தப் புறத்தில் உள்ள நடுகளிலிருந்து எவரும் இந்தக் காட்டைக் கடந்து வந்து நம்மைத் தாக்க முடியாது. இது காடு கொடுக்கும் பாதுகாப்பு.

"நான்கவதாக, அருகே இருக்கும் பரந்த வெளி. அதைத் தாண்டிப் பகைவர்கள் வருவதற்குள் நம் படைகள் அந்தப் படைகளைப் பார்த்து விட்டு அவற்றை விரட்டி அடித்து விடுவார்கள். அத்துடன் நம் வீரர்கள் வெளியே வந்து போர் செய்யவும் இந்த வெட்ட வெளி மிகவும் ஏற்புடையது. இது நிலம் கொடுக்கும் பாதுகாப்பு.

"இவ்வாறு மலை அரண், நீர் அரண், வன அரண், நில அரண் என்று நான்கு வகை அரண்களைக் கொண்ட இந்த இயற்கை அரணை விட அதிகப் பாதுகாப்பான இடம் வேறு எதுவாக இருக்க முடியும்?"

அரசன் கூறியதை ஏற்றுக் கொள்வது போல் அமைச்சர் தலையசைத்தார். 

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்

குறள் 742:
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.

பொருள்: 
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

685. கதிர்வேந்தனின் கேள்விகள்!

 "தூது போகிறவர்கள் தனியாகத்தானே போவார்கள்? " என்றான் கதிர்வேந்தன்.

"பொதுவாக அப்படித்தான். ஏன் கேட்கிறாய்?" என்றான் குமாரவிசயன்.

"இல்லை. நீங்கள்தான் தூதர். என்னை ஏன் உங்களுடன் அனுப்பி இருக்கிறார்கள்?"

"நீ எனக்கு உதவியாக இருப்பாய் என்று நினைத்து அனுப்பி இருப்பார்கள்!"

"ஆனால் நான் உங்களுக்கு எந்தவிதத்திலும் உதவவில்லையே! அதற்கான தேவையோ, வாய்ப்போ கூட ஏற்படவில்லையே!"

"அப்படியானால் உன்னை ஏன் என்னுடன் அனுப்பி இருக்கிறார்கள் என்பதை நீயே சிந்தித்துத் தெரிந்து கொள்!"

"அதற்கான அவசியத்தைக் கூட அமைச்சர் எனக்கு விட்டு வைக்கவில்லை. உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளத்தான் என்னை உங்களுடன் அனுப்பி வைப்பதாகவும், வாயை மூடிக் கொண்டு உங்கள் பின்னால் சென்று, நீங்கள் பேசுவதையும், செய்வதையும் மட்டும் கவனிக்கும்படி கிளம்பும்போதே அமைச்சர் என்னிடம் சொல்லி விட்டார்!"

"அப்படியானால் என்னிடம் ஏன் கேட்கிறாய்?"

"ஒருவேளை நீங்கள் வேறு ஏதேனும் காரணம் சொல்வீர்களோ என்று நினைத்தேன். உங்களிடம் என்னைப் பற்றி அமைச்சர் என்ன சொன்னார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?"

"ஓ! நிச்சயமாக. 'இந்தப் பையன் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தூதனாக வருவான். அப்போது நீ உயிருடன் இருப்பாயோ, என்னவோ! அதனால் இப்போதே அவனைப் பார்த்துக் கற்றுக் கொள்!' என்று சொல்லி அனுப்பினார்!"

"கேலி வேண்டாம் குமாரவிசயரே! உங்களிடம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருக்கிறது. உங்களிடம் சில கேள்விகளையும், விளக்கங்களையும் கேட்கலாமா?"

"தாராளமாகக் கேட்கலாம். ஆனால் அமைச்சர் உன்னை வாயை மூடிக் கொண்டு இருக்கச் சொன்னதாக நீதானே சொன்னாய்!"

"மறுபடியும் கேலியா? உங்களிடம் கற்றுக் கொள்ளும் ஆவலில்தானே கேட்கிறேன்!"

"சரி, கேள்."

"முதலில் என் வியப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொல்ல வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் மிகவும் அழகாக, சுருக்கமாகத் தொகுத்துக் கூறினீர்களே! இந்நாட்டு மன்னர் கூட நீங்கள் சொன்ன விதத்தைக் கேட்டு வியந்தார் என்பதை கவனித்தேன்."

"சொல்ல வேண்டியவற்றைச் சுருக்கமாக, கோர்வையாக, எதையும் விட்டு விடாமல் தொகுத்துச் சொல்ல வேண்டியது ஒரு தூதனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் திறமை. நீ ஒரு தூதனாக வேண்டுமென்றால் இதை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்!"

"சரி. நம் நாட்டு வளங்கள் எப்படி இருக்கின்றன என்று அந்த மன்னர் கேட்டதற்கு, இந்த ஆண்டு பருவ மழை அதிகம் பெய்து, பயிர்களில் ஒரு பகுதி சேதமாகி விட்டதால் விவசாயப் பொருள் உற்பத்தி சற்று குறைந்து விட்டதாகக் கூறினீர்கள். உண்மையில் இந்த ஆண்டு நம் நாட்டில் விளைச்சல் அமோகமாக இருந்திருக்கிறதே!"

"உண்மைதான். வரும்போது கவனித்தேன். இவர்கள் நாட்டில் ஓரளவு வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில் நம் நாட்டில் விளைச்சல் அமோகம் என்று சொன்னால் தங்கள் நாட்டில் வறட்சி நிலவும்போது இவர்கள் நாட்டில் மட்டும் விளைச்சல் அமோகமாக இருந்திருக்கிறதே என்ற எண்ணம் இந்த மன்னர் மனதில் தோன்றக் கூடும். ஒருவர் எவ்வளவு நல்ல மனிதரக இருந்தாலும், இது போன்ற ஒப்பீடுகளும், அதனால் சில எதிர்மறை எண்ணங்களும் ஏற்படத்தான் செய்யும். நம் நாட்டிலும் சிறிது பாதிப்பு இருக்கிறது என்பது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். இது மனித இயல்பு. அதனால் நிலைமையை சற்றே மாற்றிச் சொன்னேன். இது பொய் கூறுவதல்ல!"

"புரிகிறது. ஆனால் ஒரு பொய்யையும் நீங்கள் கூறி இருக்கிறீர்கள்!"

"என்ன பொய் அது?"

"நாம் வரும் வழியில் எல்லாம் இந்த நாட்டு மக்கள் நமக்கு உணவும், உறைவிடமும் அளித்ததாகவும் இந்த நாட்டு மக்களின் விருந்தோம்பல் பண்பை வியப்பதாகவும் கூறினீர்கள். அப்படி யாரும் நமக்கு விருந்தோம்பல் அளிக்கவில்லையே! கிடைத்ததை உண்டு அரைப்பட்டினியுடன்தானே பயணம் செய்தோம்?"

"மன்னரிடம் அவர் நாட்டு மக்களைப் பற்றி உயர்வாகச் சொன்னால் அவர் மனம் மகிழாதா? அவர் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தால் நாம் சொல்பவ ற்றை அமைதியுடன் கேட்டு நமக்கு ஆதரவான பதிலைக் கூற வாய்ப்பு அதிகம் உள்ளது அல்லவா?"

"அப்படித்தானே நடந்திருக்கிறது! தன் நாட்டுக்கு நன்மை பயக்கும் விதத்தில் ஒரு தூதர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்களுடன் வந்த இந்த ஒரு பயணத்திலேயே நிறையக் கற்றுக் கொண்டேன்!" என்றான் கதிர்வேந்தன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 69
தூது

குறள் 685:
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.

பொருள்:
அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், அவருக்கு வெறுப்பூட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் அவர் மனம் மகிழும்படி பேசியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடித் தர வேண்டியது தூதரின் பண்பாகும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

684. அமைச்சரின் பரிந்துரையை ஏற்காதது ஏன்?!

எதிரி நாட்டுக்குத் தூது சென்று திரும்பிய அறிவானந்தம் அரசரைச் சந்தித்து எதிரி நாட்டு அரசரிடம் தான் பேசியதையும் அவர் கூறிய பதிலையும் கூறினார்.

அறிவானந்தம் சென்றதும் அமைச்சரை அழைத்த அரசர், "அமைச்சரே! தூது சென்ற அறிவானந்தம் திரும்ப வந்து விட்டார். நாம் கூறிய யோசனையை பரிதி நாட்டு மன்னர் கதிர்வேலர் ஏற்றுக் கொண்டு விட்டார்" என்றார்.

"மிக்க மகிழ்ச்சி அரசே!" என்றார் அமைச்சர்.

"உங்கள் வார்த்தையில் தொனிக்கும் மகிழ்ச்சி உங்கள் முகத்திலோ, குரலிலோ பிரதிபலிக்கல்லையே!"என்றார் அரசர் சிரித்தபடி. 

"அப்படி ஒன்றும் இல்லை மன்னரே!" என்றார் அமைச்சர்.

"எனக்குத் தெரியும் அமைச்சரே! நீங்கள் பரிந்துரைத்த ராமதாசரை நான் தூதராக அனுப்பவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருப்பது நியாயம்தான்!"

"அப்படி எதுவும் இல்லை அரசே! ராமதாசர் அறிவுக் கூர்மை மிகுந்தவர், நிறைந்த கல்விப் புலமை அமைந்தவர். அப்படிப்பட்ட ஒருவர் தூதராகச் சென்றால் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். அவ்வளவுதான்."

"நீங்கள் கூறியபடி ராமதாசரை அழைத்து அவரை தூதுவராகப் போகும்படி சொன்னேன். அவர்தான் அந்தப் பணிக்குத் தான் பொருத்தமாக இருக்க மாட்டேன் என்று கூறி அறிவானந்தத்தைப் பரிந்துரைத்தார். அறிவானந்தத்துக்கு தூது செல்வது பற்றி ராமதாசர் விரிவாக ஆலோசனைகள் கூற வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். அதன்படியே ராமதாசரிடம் ஆலோசனை பெற்றுதான் அறிவானதம் தூதராகச் சென்று வந்து தன் பணியை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்! நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததால் உங்களிடம் இந்த விவரங்களை நான் முன்பே கூறவில்லை" என்று விளக்கினர் அரசர்.

 "ராமதாசர் தான் இந்தப் பணிக்குப் பொருத்தமானவர் இல்லை என்று ஏன் கூறினார் என்பது எனக்கு விப்பாக இருக்கிறது அரசே! அப்படி அவர் தன்னைப் பொருத்தமானவர் இல்லை என்று கருதினால் தூதராகச் செல்பவருக்கு அவர் ஆலோசனை வழங்கியது மட்டும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்?" என்றார் அமைச்சர் குழப்பத்துடன்.

"அமைச்சரே! ராமதாசரிடம் தூதருக்கு இருக்க வேண்டிய அறிவுக் கூர்மை, கல்வி இரண்டும் அவரிடம் நிரம்ப இருப்பதால் அவர்தான் தூது செல்லத் தகுதியானவர் என்று நீங்கள் கூறியதை அவரிடம் சொன்னபோது அவர் என்ன சொன்னார் தெரியுமா?"

"என்ன சொன்னார்? "

" 'தூதராக இருப்பவருக்கு இன்னொரு தகுதியும் இருக்க வேண்டும் - தோற்றப் பொலிவு! அது என்னிடம் இல்லை. என் மீது கொண்ட அன்பினால் அமைச்சர் அதைப் பொருட்படுத்தவில்லை போலும்! ஆனால் தோற்றப் பொலிவும் தூதருக்கு முக்கியம். அறிவுக் கூர்மை, தோற்றப் பொலிவு, கல்விப் புலமை மூன்றும் நிறைந்த ஒருவர்தான் தூது செல்லத் தகுந்தவர்' என்று கூறி அறிவானந்தத்தைப் பரிந்துரைத்தார்!" என்று கூறி அமைச்சரின் முகத்தைப் பார்த்தார் அரசர்.

ராமதாசரின் அம்மை வடுக்கள் நிறைந்த முகம் அமைச்சரின் மனதில் வந்து போக, அதைத் தான் எப்படிக் கருத்தில் கொள்ளாமல் போனோம் என்று வியந்தார் அமைச்சர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 69
தூது

குறள் 684:
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

பொருள்:
தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Friday, March 17, 2023

683. தூது செல்லப் பொருத்தமானவர்

"கந்தர்வ நாடு நம் நாட்டின் மீது படையெடுக்கும் எண்ணத்தில் இருப்பதாக நம் ஒற்றர்கள் மூலம் செய்தி வந்திருக்கிறதே! அவர்களை எதிர்த்து நம்மால் வெற்றி பெற முடியும் என்றாலும் போர் இரண்டு நாட்களுக்குமே கேடு விளைக்கும் என்பதால் போர் நடப்பதைத் தடுக்க நாம் முயல வேண்டும். என்ன செய்வது?" என்றான் அரசன் நீதிவர்மன்.

"கந்தர்வ நாட்டுக்கு உடனே ஒரு தூதரை அனுப்பிப் போரைத் தடுக்க முயல வேண்டும்" என்றார் அமைச்சர்.

"அவர்கள் போர் தொடுக்கப் போகிறார்கள் என்று அறிந்து நாம் தூதரை  அனுப்பினால் அதை நம் பலவீனமாக அவர்கள் நினைக்க மாட்டார்களா? நாம் போருக்கு அஞ்சுகிறோம் என்று கூட அவர்கள் நினைக்கலாம்."

"அப்படித்தான் நினைப்பார்கள். ஆனால் ஒரு திறமையான தூதரால் அந்த எண்ணத்தை மாற்றி, நம் இரு நாடுகளின் நலனைக் கருதித்தான் நாம் போரைத் தடுக்க விரும்புகிறோம் என்ற எண்ணத்தை உருவாக்க முடியும். ஏன், போரைத் தவிர்ப்பது அவர்களுக்குத்தான் அதிக நன்மை பயக்கும் என்ற எண்ணத்தைக் கூட ஏற்படுத்த முடியும்!"

"நீங்கள் சொல்வது சரிதான் அமைச்சரே! அதனால் நாம் பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை தூதராக அனுப்ப வேண்டும்!" என்றான் நீதிவர்மன் அமைச்சரைப் பார்த்துச் சிரித்தபடி.

"அந்தப் பொருத்தமான நபர் யார் என்பது குறித்து எனக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. தாங்கள் அதை ஏற்றுக் கொண்டால் அவரையே அனுப்பலாம்!" என்றார் அமைச்சர் புன்னகை செய்தபடி.

"நீங்களும் நானும் நினைப்பது ஒரே நபரைப் பற்றித்தான் என்று நினைக்கிறேன். அந்தப் பொருத்தமான நபர்..."

"சொல்லுங்கள் அரசே!"

"நீங்களேதான்! உங்கள் பெயரை நீங்களே சொல்லத் தயங்குவது எனக்குப் புரிகிறது!" என்றான் அரசன்."

"இல்லை அரசே! நான் நினைத்தது இன்னொரு நபரை."

"யார் அந்த நபர்?"

"இளவரசர்தான்!"

"இளவரசனா? அவனுக்கு அனுபவம் போதாது. தூதனாகச் செல்வதற்கு அவன் எப்படிப் பொருத்தமானவனாக இருப்பான்?" என்றான் அரசன்.

"அரசே! கந்தர்வ நாட்டு மன்னிடம் இரண்டு செய்திகளைச் சொல்ல வேண்டும், நம் நாடு எப்போதுமே போரை விரும்பியதில்லை. நம்மை விடச் சிறிய நாடுகளுடன் கூட நாம் நட்பாகவே இருக்க விரும்பி இருக்கிறோம். நம் முயற்சிகளையும் மீறிப் போர் ஏற்பட்டபோதெல்லாம் நாம்தான் வெற்றி பெற்றிருக்கிறோம் . இந்த இரண்டு செய்திகளையும் வலாற்றுப் பின்னணியில் புலவர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் எழுதி வைத்துள்ள நூல்களை ஆதாரம் காட்டி அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். தூதராகச் சென்று இதைச் செய்ய இந்த இளம் வயதிலேயே பல நூல்களைப் பயின்று ஆய்ந்த அறிவுடன் விளங்கும் நம் இளவரசரை விடப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்?" என்றார் அமைச்சர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 69
தூது

குறள் 683:
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

பொருள்:
வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

682. வெளிநாட்டு தூதர்

"ஒரு பெரிய நாட்டுக்கு தூதரா போற வாய்ப்பு யாருக்குக் கிடக்கும்னு தெரியல. மூணு பேரை ஷார்ட்லிஸ்ட் பண்ணி இருக்காங்களாம். ஆனா மூணு பெயர்களையும் பார்த்த உடனேயே யாருக்கு இந்தப் பதவி கிடைக்கும்னு நான் ஊகிச்சுட்டேன்!"

"யாருக்குக் கிடைக்கும்?"

"சந்திரமூர்த்திக்குத்தான்!"

"எதை வச்சு சொல்றீங்க?"

"சந்திரமூர்த்தி பிரதமருக்கு நல்லா தெரிஞ்சவரு. பிரதமர் நிதி அமைச்சரா இருந்தப்ப, சந்திரமூர்த்தி நிதித்துறைச் செயலரா இருந்தாரு. அப்ப ரெண்டு பேரும் ரொம்ப இணக்கமா பணியாற்றினாங்க."

"மற்ற ரெண்டு பேரும் கூட திறமையும் அனுபவமும் உள்ளவங்கதானே?"

"மூணு பேருமே சிறந்த கேண்டிடேட்ஸ்தான். அதனலதானே அவங்களை ஷார்ட்லிஸ்ட் பண்ணி இருக்காங்க! ஆனாலும் சந்திரமூர்த்திக்குத்தான் கிடைக்கும். நீங்க வேணும்னா பாருங்க!"

"நீங்க சொல்றது சரியா இருக்கலாம். ஆனா எனக்கென்னவோ மத்த ரெண்டு பேர்ல ஒத்தருக்குத்தான் கிடைக்கும்னு தோணுது!"

"மத்த ரெண்டு பேர்ல யாரு?"

"ரெண்டு பேரில யாரா வேணும்னா இருக்கலாம். ஆனா சந்திரமூர்த்தியை விட அவங்க ரெண்டு பேர்ல ஒத்தருக்குத்தான் அதிக வாய்ப்புன்னு எனக்குத் தோணுது!"

"எதனால அப்படி நினைக்கிறீங்கன்னு சொல்ல மாட்டீங்களா?"

"சொல்லலாம். மூணு பேருக்கும் பொதுவா ரெண்டு குணங்கள் இருக்கு. மூணு பேருமே அறிவாளிகள், விஷயம் தெரிஞ்சவங்க, மத்தவங்ககிட்ட அக்கறையோட இனிமையாப் பழகுவாங்க. ஆனா இன்னொரு முக்கியமான குணம் சந்திரமூர்த்திகிட்ட இல்ல. மத்த ரெண்டு பேர்கிட்டேயும் இருக்கு. அதனாலதான் அவங்க ரெண்டு பேர்ல ஒத்தருக்குத்தான் வாய்ப்புன்னு நான் நினைக்கறேன்!"

"அது என்ன குணம்?"

"அதை இப்ப நான் சொன்னா சரியா இருக்காது. ஒருவேளை சந்திரமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டா, அந்த குணத்தைப் பத்தி என்னோட புரிதல் தப்புன்னு நினைச்சுப்பேன். வேற ஒத்தர் தேர்ந்தெடுக்கப்பட்டா என்னோட புரிதல் சரின்னு ஆகும். அந்த குணம் என்னங்கறதை அப்ப நான் சொல்றேன்!"

"இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள அறிவிப்பு வரும்னு சொல்றாங்க. அறிவிப்பு வந்தவுடனே நான் உங்களுக்கு ஃபோன் பண்றேன்." 

"ஹலோ! கங்கிராசுலேஷன்ஸ்! உங்க கணிப்பு சரியாயிடுச்சு. சந்திரமூர்த்தி தேர்ந்தெடுக்கப்படல. சந்திரமூர்த்திகிட்ட இல்லைன்னு நீங்க குறிப்பிட்ட அந்த குணம் என்னன்னு இப்ப சொல்றீங்களா?"

"சொல்றேன். ஒரு தூதருக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்கள், ஒண்ணு - மத்தவங்ககிட்ட அன்போடயும், புரிதலோடயும் நடந்துக்கறது, இரண்டாவது - நுணுக்கமான அறிவு, மூணாவது - பேசும்போது ஆராய்ந்து பேசறது. இந்த மூணாவது குணம் சந்திரமூர்த்திகிட்ட அவ்வளவு வலுவா இல்லேன்னு நினைக்கிறேன். அதனாலதான் அவர் தேர்ந்தெடுக்கப்படற வாய்ப்பு குறைவுன்னு நினைச்சேன்."

"சந்திரமூர்த்திகிட்ட இந்த குணம் இல்லேன்னு எப்படி சொல்றீங்க?"

"நீங்களே சொன்னீங்க இல்ல, பிரதமர் நிதி அமைச்சரா இருந்தப்ப சந்திரமூர்த்தி நிதித்துறைச் செயலரா இருந்தாரு, அப்ப ரெண்டு பேரும் ரொம்ப இணக்கமா செயல்பட்டாங்கன்னு?"

"ஆமாம். அது அவருக்கு சாதகமான விஷயம்னுதானே நான் சொன்னேன்?"

"ரெண்டு பேரும் இணக்கமா இருந்தது உண்மைதான். ஆனா சந்திரமூர்த்தி சில சமயங்கள்ள சரியா யோசிக்காம தெரிவித்த சில கருத்துக்களினால அன்றைய நிதி அமைச்சருக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டன. மத்தவங்க அதை மறந்திருக்கலாம். ஆனா அப்ப நிதி அமைச்சரா இருந்து இப்ப பிரதமரா இருக்கறவரு அதையெல்லாம் மறந்திருக்க மாட்டார், இல்ல? வெளிநாட்டு தூதரா இருக்கறப்ப கவனக் குறைவா ஒரு வார்த்தை பேசினாலும் பெரிய பிரச்னை ஆயிடுமே! அதனாலதான் சந்திரமூர்த்தி தேர்ந்தெடுக்கப்படறதுக்கான வாய்ப்பு குறைவுன்னு நான் நினைச்சேன்!"

"மறுபடியும் வாழ்த்துக்கள் உங்களோட ஆழமான பார்வைக்காக!"

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 69
தூது

குறள் 682:
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

பொருள்:
அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

குறள் 683 (விரைவில்)
      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

741. எதிர்பாராத படையெடுப்பு

"அரசே! நம் அண்டை நாட்டு மன்னர் வீரகேசரி கோட்டையிலிருந்து பல குடும்பங்களை வெளியேற்றி அவர்களைக் கோட்டைக்கு வெளியே குடியமர்த்திக் கொண்டிருக்கிறாராம்" என்றார் அமைச்சர்.

"இதற்கான காரணம் உங்களுக்குப் புரிகிறதா அமைச்சரே?" என்றான் மன்னன் கீர்த்திவளவன்.

"நாம் அவர்கள் மீது படையெடுக்கப் போகிறோம் என்று அஞ்சுகிறார் என்று நினைக்கிறேன். அதனால்தான் கோட்டைக்குள் குறைவான எண்ணிக்கையில் நபர்கள் இருந்தால் கோட்டைக்குள் அதிக காலம் இருந்து கொண்டு நம் முற்றுகையைச் சமாளிக்க முடியும் என்று நினைத்துத் திட்டமிடுகிறார் என்று எண்ணுகிறேன்" என்றார் அமைச்சர்.

"சரியாகச் சொன்னீர்கள் அமைச்சரே! பெயர்தான் வீரகேசரி. ஆனால் உண்மையில் பெரிய கோழை. நமக்கு அவர்கள் மீது  படையெடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. ஆனால் அப்படி நினைத்துக் கொண்டு அவர்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கட்டும். அவர்கள் பயத்தை நாம் ரசித்துக் கொண்டிருக்கலாம்!" என்றான் கீர்த்திவளவன் உரக்கச் சிரித்தபடி.

"என்ன அமைச்சரே இது? திடீரென்று வீரகேசரி நம் மீது படையெடுத்து வந்திருக்கிறான்! நாம் இதை எதிர்பார்க்கவில்லையே! நம் ஒற்றர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?" என்றான் கீர்த்திவளவன் அதிர்ச்சியுடனும், கோபத்துடனும்..

"நாம் நினைத்தது போல் வீரகேசரி நம் படையெடுப்பை எதிர்பார்த்து பயந்து கோட்டையிலிருந்து பலரை வெளியேற்றவில்லை, நம் மீது படையெடுப்பதற்கான ஏற்பாடுகளை ரகசியமாகச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் சாதாரண மக்களைக் கோட்டைக்குள்ளிருந்து வெளியேற்றி விட்டு, ஆயுதங்கள் தயாரித்தல், படைகளுக்குப் பயிற்சியளித்தல் போன்றவற்றை மட்டும் கோட்டைக்குள் செய்து கொண்டிருந்திருக்கிக்கிறார். போருக்கான எல்லா ஏற்பாடுகளும் கோட்டைக்குள் நடந்ததாலும், சாதாரண மக்கள் ஒரு சிலரே கோட்டைக்குள் இருந்ததாலும் கோட்டைக்குள் நடப்பவற்றை நம் ஒற்றர்களால் கண்டறிய முடியவில்லை!" என்று கூறிய அமைச்சர், 'கோட்டைஎன்பது எதிரியின் படையெடுப்பின்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இடம் மட்டுமல்ல, எதிரியின் மீது போர் தொடுப்பதற்கான ஏற்பாடுகளை சத்தமில்லாமல் செய்யும் இடம் கூட என்பதை வீரகேசரி புரிந்து வைத்திருக்கிறார்!" என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்..

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்

குறள் 741:
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.

பொருள்: 
பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

745. கோட்டை முற்றுகை!

"இப்படி ஒரு கோட்டையை எப்படிக் கட்டினார்கள் என்றே தெரியவில்லை. தகர்க்க முடியாத வலிமை, உள்ளே படைக்கலங்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றைச் சேமித்து வைக்க ஏராளமான இடம், நூற்றுக் கணக்கான போர் வீரர்கள் தங்க வசதி, அரசருக்கான அரண்மனை, அதைத் தவிர பொதுமக்களுக்கான குடியிருப்புக்கள்!" என்று வியந்து பாராட்டினார் தர்மசேனர்.

தர்மசேனர் பல நாடுகளுக்கும் சென்று வரும் பயணி. தான் சமீபத்தில் சென்று வந்த குமார தேசத்தின் தலைநகரில் இருந்த கோட்டையைப் பற்றித்தான் இன்னொரு நாட்டில் பயணம் செய்து கொண்டிருந்தபோது சில பயணிகளிடம் அவர் இவ்வாறு கூறிக் கொண்டிருந்தார்.

சற்றுத் தள்ளி நின்று தர்மசேனர் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதன், அவர் அருகில் வந்து அவருடைய கையை இறுக்கமாகப் பிடித்து, அவர் காதுக்குள், "ஐயா! நான் அரசாங்க ஒற்றன். குமார தேசத்தின் கோட்டையைப் பற்றிய பெருமையை மன்னரே உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறார். என்னுடன் வருகிறீர்களா?" என்று கூறி அவரை அழைத்துச் சென்றான்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு தர்மசேனர் அரண்மனை சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தபோது அவர் உடலில் காயங்கள் இருந்தன.

"படைத்தலைவரே! குமார தேசத்துக்குச் சென்று வந்த பயணியிடமிருந்து அந்த நாட்டின் தலைநகரில் உள்ள கோட்டையைப் பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டு விட்டோம். அவர் எதையும் மறந்து விடாமல் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்பதற்காக அவரைக் கொஞ்சம் அதிகமாகவே கவனிக்க வேண்டி இருந்து விட்டது!அவரிடமிருந்து கிடைத்த விவரங்களை வைத்து நாம் அந்தக் கோட்டையைத் தாக்க முடியும் அல்லவா?" என்றான் அரசன்.

"நிச்சயமாக அரசே! கோட்டை அமைப்பைப் பார்க்கும்போது குமார தேசத்து மன்னர்கள் எப்படிப்பட்ட கோழைகளாக இருந்திருக்கிறர்கள் என்று தெரிகிறது. யாராவது போர் தொடுத்தால் பல மாதங்கள் கோட்டைக்குள்ளேயே ஒளிந்திருந்து வெளியே நிற்கும் படைகள் சலிப்படைந்து திரும்பிப் போக வேண்டும் என்ற நோக்கில் கட்டப்பட்டிருக்கிறது அந்தக் கோட்டை. நாம் பல மாதங்கள் காத்திருக்கும் அளவுக்கு நம்மைத் தயார் செய்து கொண்டு கோட்டைக்கு வெளியே காத்திருந்தால் சரணடைவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை!" என்றான் படைத்தலைவன்.

"அப்படியனால் விரைவிலேயே குமார தேசத்துக் கோட்டையை முற்றுகை இடுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்குங்கள்" என்றான் அரசன்.

"என்ன படைத்தலைவரே! கோட்டையை முற்றுகையிட்டு, பல மாதங்கள் ஆனாலும் பொறுமையாகக் காத்திருந்து கோட்டைக்குள் ஒளிந்திருப்பவர்களைச் சரணடையச் செய்வேன் என்று சொல்லி விட்டுப் போனீர்கள். இப்போது முற்றுகையைக் கைவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடி வந்திருக்கிறீர்களே!" என்றான் அரசன் கோபத்துடனும், எகத்தாளத்துடனும்.

"மன்னிக்க வேண்டும் அரசே! ஒரு பயணி சொன்ன விவரங்களை வைத்து நாம் அந்தக் கோட்டையை முற்றுகையிட்டது தவறாகப் போய் விட்டது. அந்தக் கோட்டை உள்ளே இருப்பவர்களின் பாதுகாப்புக்காக மட்டும் கட்டப்படவில்லை. வெளியே முற்றுகை இடுபவர்களைப் பல்முனைகளிலிருந்தும் தாக்க உதவும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. கோட்டையின் மேற்புறத்திலிருந்து தூரத்திலிருந்து தெரியாத துளைகள் மூலம் நம் படைகள் மீது அம்பு மழை பொழிந்தது. நாம் சுதாகரித்துக் கொள்வதற்குள் கோட்டைக்குள்ளிருந்த ரகசிய சுரங்கப் பாதை வழியே வெளியே வந்த தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களைக் கொண்ட ஒரு சிறிய படை பூமியிலிருந்து முளைப்பது போல் திடீரென்று நம் படைகளுக்கு நடுவே வந்து நம் படைகளைத் தாக்கத் துவங்கி விட்டது. தாக்குதலை நம் படைகளால் சமாளிக்க முடியவில்லை!" என்று தலையைக் குனிந்து கொண்டே கூறினான் படைத்தலைவன்.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்

குறள் 745:
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.

பொருள்: 
பகைவரால் கைப்பற்ற முடியாததாய், கோட்டைக்குள் இருப்போர்க்குத் தேவையான அளவு உணவுப் பொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

681. கம்சனின் தூதர்

"கிருஷ்ணனைக் கொல்ல நான் செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. பூதகி, சகடன், திரிணவர்த்தன், அகன், பகன், வடன் என்று நான் அனுப்பிய பல அசரர்களையும் கொன்று விட்டான் அந்த கிருஷ்ணன். இப்போது அவன் பல தீரச் செயல்கள் செய்தவனாக நம் யாதவ குலத்தினரின் அன்பையும் மதிப்பையும் பெற்றுத் திகழ்கிறான். அவனை இனியும் நான் கொல்ல முயற்சி செய்தால் நம் யாதவ குலத்தினர் ஒட்டு மொத்தமாக நமக்கெதிராகத் திரும்பி விடுவார்கள்" என்றான் கம்சன் கவலையுடன்.

"நீங்கள் சொல்வது சரிதான்.இனி அவனை வஞ்சகமாகத்தான் கொல்ல வேண்டும்" என்றான் கம்சனின் நண்பனும், ஆலோசகனுமான சாணூரன்.

"எப்படி?"

"அரசே! இவ்வளவு காலம் நீங்கள் கிருஷ்ணன் இருக்கும் இடத்துக்குச் சிலரை அனுப்பி அவனைக் கொல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டீர்கள். அவை தோல்வி அடைந்து விட்டன. கிருஷ்ணனை நம் இடத்துக்கு வரவழைத்தால் அவனை எப்படியாவது கொன்று விடலாம்!"

"அவனை எப்படி இங்கே வரவழைப்பது? வரவழைத்தபின் எப்படிக் கொல்வது?"

"கொல்வதற்குப் பல வழிகள் உள்ளன. கிருஷ்ணன் நம் அரண்மனைக்கு வரும் வழியிலேயே நம்மிடம் இருக்கும் மதம் பிடித்த யானையான குவலயபீடத்தை அவன் மீது ஏவி அவனைக் கொல்ல வைக்கலாம். அதை ஒரு விபத்து என்றுதான் அனைவரும் கருதுவார்கள். ஒருவேளை அவன் யானையிடமிருந்து தப்பித்து விட்டால், அவனை மல்யுத்துக்கு அழைக்கலாம். மல்யுத்ததில் என்னை வெல்ல யாரும் இல்லையே! என்னுடன் அவனை மல்யுத்தம் செய்ய அழைத்து நான் அவனைக் கொன்று விடுவேன்!" என்றான் சாணூரன் உற்சாகத்துடன்.

"நீ சொல்வது நல்ல யோசனைதான். ஆனால் கிருஷ்ணனை இங்கே எப்படி வரவழைப்பது?" என்றான் கம்சன் யோசனையுடன்.

"நம் தலைநகரில் தனுர்யாகம் (வில்லை வளைத்து நாணேற்றும் போட்டி) நடக்க இருக்கிறதல்லவா? அதற்கு கிருஷ்ணனையும் பலராமனையும் வரும்படி அழைப்பு விடுப்போம்!"

"நல்ல யோசனைதான். ஆனால் ஒரு தூதரை அனுப்பி முறையாக அழைப்பு விடுத்தால்தான் அவர்கள் வருவார்கள்" என்றான் கம்சன்.

"நம் வீரர்களில் ஒருவனிடம் ஓலை அளித்து அனுப்பி அவர்கள் இருவரையும் இங்கு அழைத்து வரச் செய்யலாம்!" என்றான் சாணூரன்.

"யாராவது ஒரு வீரனை தூதனாக அனுப்ப முடியாது. தூதராகச் செல்லச் சில தகுதிகள் வேண்டும்!" .

"அவை என்ன தகுதி கள்?"

"தூதருக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணம் அன்புடன் நடந்து கொள்வது. வேறு சில குணங்களும் வேண்டும்!"

"அவை என்ன குணங்கள்?"

"நல்ல குடியில் பிறந்தவராக இருக்க வேண்டும். அரசர்கள் பாராட்டக் கூடிய பண்பு இருக்க வேண்டும்" என்றான் கம்சன்

"அத்தகைய குணங்கள் உள்ள யாராவது நம்மிடையே இருக்கிறார்களா?" என்றான் சாணூரன்.

"ஒருவர் இருக்கிறார். அமைச்சர் அக்ரூரர்!"

"அவர் மிகவும் மென்மையானவராயிற்றே?"

"அவருடைய இயல்பான குணங்களான அன்பு, பண்பு இவற்றினால் வரும் மென்மைதான் அது. அவர் என் சிறிய தகப்பனாரின் புதல்வர். கிருஷ்ணனுக்கும் தாய்மாமன் முறை. அதனால் அவர் கூறுவதை கிருஷ்ணன் ஏற்றுக் கொள்வான். அவரையே தூதராக அனுப்பி கிருஷ்ணனையும், அவன் அண்ணன் பலாமனையும் அழைத்து வரச் சொல்கிறேன்" என்றன் கம்சன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 69
தூது

குறள் 681:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

பொருள்:
அன்பான குணமும், நல்ல குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக் கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Thursday, March 16, 2023

680. முடிவை மாற்றிக் கொண்ட மன்னன்

"கப்பம் கட்டுவதா? போரிட்டு நாம் அனைவரும் மடிந்து போனாலும் சரி, இன்னொரு நாட்டுக்குக் கப்பம் கட்டுவது என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது!" என்றான் ராஜவர்மன்

"அரசே! தாங்கள் கூறுவது சரிதான். ஆனால் நம் நாடு சிறியது. சோளிங்க நாடு நம் மீது படையெடுத்தால் நம் படைகளால் இரண்டு நாட்கள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது. சோளிங்க நாட்டுடன் சமாதானமாகப் போனால் நீங்கள் நம் நாட்டின் மன்னராகத் தொடரலாம்!" என்றார் அமைச்சர்.

"சோளிங்க நாட்டுக்குக் கப்பம் கட்டிக் கொண்டு இந்த நாட்டு மன்னன் என்ற பெயரில் அவர்களுடைய அடிமையாக ஆட்சி செய்ய நான் விரும்பவில்லை!" என்றான் ராஜவர்மன்.

"அமைச்சரே! நீங்கள் அன்று சொன்னதுதான் சரி. சோளிங்க நாட்டுடன் சமாதானமாகப் போவதென்று முடிவு செய்து விட்டேன்!" என்றான் ராஜவர்மன்.

"நல்ல முடிவுதான் அரசே! ஆனால் இந்த முடிவுக்கு நீங்கள் வந்ததற்கான காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா?" என்றார் அமைச்சர்.

"நிச்சயமாக அமைச்சரே! அன்று உங்களிடம் என் முடிவைக் கூறிய பிறகு, நம் நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள நான் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றேன். பல்வேறு மக்கள் பேசிக் கொண்டதைக் கேட்டேன். நாம் போரில் தோற்று நம் நாடு சோளங்க நாட்டின் வசம் வந்து விட்டால் அவர்கள் ஆட்சி எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதைப் பற்றிப் பலரும் அச்சமும், கவலையும் கொண்டிருப்பதை அறிந்தேன். 'நாம் வேண்டுமானால் அதிக வரி கொடுத்து விடலாம், அந்தப் பணத்தை வைத்து நம் அரசர் சோளிங்க நாட்டுக்குக் கப்பம் செலுத்தி விட்டு, அவரே நம்மை ஆண்டால் நாம் நிம்மதியாக இருக்கலாமே!' என்று மக்கள் பேசிக் கொண்டதைக் கேட்டபோது, மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும், அன்பையும் கண்டு பெருமையாக இருந்தாலும், மக்களுக்கு இத்தகைய அச்சம் இருக்கும்போது எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் சோளிங்க நாட்டின் ஆட்சிக்குக் கீழ் வருவதற்கு நான் அனுமதிக்கக் கூடாது என்று முடிவுக்கு வந்தேன். கப்பம் கட்டுவது இழிவு என்றாலும், நம் மக்களின் நலம் கருதி, அவர்கள் அச்சத்தைக் கருத்தில் கொண்டு, சோளிங்க நாட்டுடன் சமாதானமாகப் போவது என்று முடிவு செய்து விட்டேன்" என்றான் ராஜவர்மன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 680:
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.

பொருள்:
சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி, பலன் கிடைக்குமானால் அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

679. கேட்காமலே செய்த உதவி!

"ரெண்டு நாளா உனக்கு ஃபோன் பண்ணிக்கிட்டிருந்தேன். நீ எடுக்கல!" என்றான் ராமசாமி, குற்றம் சாட்டும் தொனியில்.

"சாரி! நீ கேட்ட உதவியை என்னால செய்ய முடியல. முயற்சி செஞ்சுக்கிட்டிருந்தேன். பணம் கிடைச்சப்பறம் ஃபோன் செய்யலாம்னு நினைச்சுதான் உன் ஃபோனை எடுக்கல!" என்றான் மாதவன்.

"நீ ஒரு தடவை கூட இல்லைன்னு சொல்லதில்லையே! உன்னை ரொம்ப நம்பிக்கிட்டிருந்தேன்!" என்றான் ராமசாமி ஏமாற்றத்துடன்.

"இந்த ஒரு தடவை இல்லேன்னு சொல்லும்படி ஆயிடுச்சு. மன்னிச்சுக்க!" என்று கூறி ஃபோனை வைத்தான் மாதவன்.

"அவரு உங்க நண்பர். வியாபாரத்துக்காகத்தானே பணம் கேட்டாரு?  கொடுத்து உதவி இருக்கலாமே!" என்றாள் மாதவனின் மனைவி பாரு.

"பணம் இல்லேன்னுதானே இத்தனை நேரம் அவங்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன்?"

"நீங்கதான் எங்கேயாவது புரட்டிக் கொடுப்பீங்களே, அது மாதிரி செஞ்சிருக்கலாம் இல்ல?"

"புரட்ட முடிஞ்சா புரட்டிக் கொடுத்திருக்க மாட்டேனா? சில சமயம் இப்படித்தான் ஆகும்!" என்று பேச்சை முடித்தான் மாதவன்.

"நீங்க செஞ்ச உதவியை நான் எந்தக் காலத்திலேயும் மறக்க மாட்டேன்!" என்றான் மாணிக்கம்.

"கந்து வட்டிக்கெல்லாம் கடன் வாங்கவே கூடாது. வாங்கினா இப்படித்தான் ஆகும்!" என்றான் மாதவன்.

"நீங்க சொல்றது சரிதான். ஏதோ அவசரத்துக்கு வாங்கிட்டேன். வட்டியெல்லாம் ஒழுங்காத்தான் கட்டிக்கிட்டிருந்தேன். ரெண்டு மாசம் வட்டி கட்டலேன்னதும் எப்படி நெருக்கடி கொடுத்தாங்க! கதி கலங்கிப் போயிட்டேன். பெண்டாட்டி பிள்ளைங்களைக் கூடக் கடத்திடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். உங்களுக்கும், எனக்கும், வியாபாரத்தில போட்டி, விரோதம் எல்லாம் இருந்தாலும், அதையெல்லாம் பாக்காம யார் மூலமோ விஷயத்தைக் கேள்விப்பட்டு எப்படியோ பணத்தைப் புரட்டிக் கொடுத்து என்னைப் பெரிய ஆபத்திலேந்து காப்பாத்தி இருக்கீங்க. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நீங்க கொடுத்து உதவின பணத்தை எப்படியாவது திருப்பிக் கொடுத்துடறேன்!" என்றான் மாணிக்கம் மாதவனின் கைகளைப் பற்றிக் கொண்டு.

"எனக்குப் பணத்தைக் கொடுக்கறதுக்காக மறுபடி கந்து வட்டிக்குக் கடன் வாங்காதீங்க!" என்று சிரித்துக் கொண்டே கூறிய மாதவன், "ஆனா நான் உங்ககிட்ட ஒரு உதவியை எதிர்பாக்கறேன்!" என்றான்.

"சொல்லுங்க மாதவன்! எதுவானாலும் செய்யறேன்!"

"என் நண்பன் ஒத்தன் வியாபாரத்துக்காகப் பணம் கேட்டான். எப்பவும் அவனுக்குக் கொடுத்து உதவற நான் இந்த முறை  உங்களுக்கு உதவி செய்யணுங்கறதுக்காக அவனுக்குக் கூட உதவல!"

மாதவன் என்ன சொல்லப் போகிறான் என்று எதிர்பார்த்து மாணிக்கம் காத்திருந்தார்.

"நான் உங்களுக்கு உதவி செஞ்சதுக்கான காரணம் நமக்குள்ள இனிமே விரோதம் இருக்கக் கூடாதுங்கறதுக்காகத்தான். தொழில்ல நாம போட்டியாளர்களா இருப்போம். ஆனா தனிப்பட்ட விரோதம் வேண்டாம். அதுதான் நான் உங்ககிட்ட கேட்டுக்கறது!" என்றான் மாதவன்.

"நீங்க இவ்வளவு பெரிய உதவி சஞ்சப்பறமும் நான் உங்ககிட்ட விரோதம் பாராட்டினா நான் மனுஷனே இல்லை. நீங்க சொல்றபடி நாம வியாபாரத்தில போட்டியாளர்களா இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நண்பர்களாகவே இருக்கலாம்!" என்றான் மாணிக்கம்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 679:
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

பொருள்:
நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

678. கொல்கத்தாவுக்குப் போ!

"சார்! நான் ரிடயர் ஆக இன்னும் ரெண்டு வருஷம்தான் இருக்கு. இப்ப என்னை கொல்கத்தாவுக்கு மாத்தி இருக்கீங்களே!" என்றார் ராமகிருஷ்ணன்.

"என்ன செய்யறது ரமகிருஷ்ணன்! உங்களை மாதிரி சீனியர் ஒத்தரோட தேவை கொல்கத்தா பிராஞ்ச்சுக்கு வேண்டி இருக்கே!" என்றார் நிர்வாக இயக்குனர் தயாளன்.

"என் பெண் காலேஜில படிக்கறா, பையன் ஸ்கூல் முடிக்கப் போறான். என் குடும்பத்தை அங்கே அழைச்சுக்கிட்டுப் போக முடியாது!"

"வயசான காலத்தில ரெண்டு வருஷம் பேச்சிலர் லைஃபை அனுபவிங்க! குடும்பம் இங்கேயே இருக்கட்டும். கொல்கத்தாவில உங்களுக்குத் தங்க ஆஃபீஸ்லேயே ரூம் கொடுத்திருக்கோம். அலவன்ஸ் வேற வரும். அதனால செலவு ஒரு பிரச்னையா இருக்காது!" என்றார் நிர்வாக இயக்குனர்.

"ரிடயர் ஆனப்பறம் என்ன செய்யறதுங்கற கேள்வி எல்லோருக்குமே வரும். ஆனா ரிடயர் ஆனப்பறம் என்ன செய்யணுங்கறதை நான் பல வருஷங்கள் முன்னாலேயே தீர்மானிச்சுட்டேன்!" என்றார் ராமகிருஷ்ணன்.

"என்ன செய்யணும்னு?" என்றார் அவருடைய நண்பர் ராகவன்.

"ஆன்மீகச் சொற்பொழிவு செய்யறதுன்னு!"

"உனக்கு ஆன்மீகத்தில நிறைய ஈடுபாடு இருக்குங்கறது எனக்குத் தெரியுமே! நீ நிறைய ஆன்மீகப் புத்தகங்கள் படிச்சு ஆன்மீக அறிவை வளர்த்துக்கிட்டேங்கறதும் எனக்குத் தெரியும். ஆனா படிச்சதையெல்லாம் வச்சுக்கிட்டு ஆன்மீகச் சொற்பொழிவாளர் ஆயிட முடியுமா?" என்றார் ராகவன்.

"முடியாது. ஒரு நல்ல ஆன்மீக சொற்பொழிவாளர்கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டாதான் ஒரு நல்ல சொற்பொழிவாளரா உருவாக முடியும்னு  நினைச்சேன். ஆனா வேலையில இருந்துக்கிட்டே அது மாதிரி பயிற்சி எடுத்துக்க முடியல. ஆஃபீஸ்லேந்து வீட்டுக்கு வந்தப்பறமும் வீட்டு விஷயங்களை கவனிக்கத்தான் நேரம் சரியா இருக்கும். என்ன செய்யறதுன்னு யோசிச்சுக்கிட்டிருந்தப்பதான் என் கம்பெனியில எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தாங்க!"

"என்ன வாய்ப்பு அது?"

"ரிடயர் ஆறதுக்கு ரெண்டு வருஷம் இருக்கறப்ப என்னை கொல்கத்தாவுக்கு மாத்தினாங்க. முதல்ல அதை ஒரு பிரச்னையா நினைச்சேன். அப்புறம் அதை ஒரு வாய்ப்பாப் பயன்படுத்திக்கிட்டேன்" என்றார் ராமகுருஷணன்.

"எப்படி?"

"பல வருஷங்கள் இங்கே பிரபலமா இருந்த ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளர் கொல்கத்தாவில செட்டில் ஆகி இருக்கார்னு கேள்விப்பட்டேன். அவரைப் போய்ப் பார்த்தேன். அவர் எனக்குப் பயிற்சி கொடுக்க ஒத்துக்கிட்டாரு. எனக்கு எப்ப நேரம் கிடைக்குமோ அப்பல்லாம் வரலாம்னு சொன்னாரு. பெங்களூரு மாதிரி பக்கத்தில இருக்கற ஊரா இருந்தா வார இறுதியில எல்லாம் வீட்டுக்கு வந்திருப்பேன். கொல்கத்தா தூரத்தில இருந்ததால அடிக்கடி சென்னைக்கு வர முடியாது. அதனால வார இறுதிகள்ள நிறைய நேரத்தைப் பயிற்சிக்காகப் பயன்படுத்திக்கிட்டேன். இப்ப ரிடயர் ஆகி ஊருக்கு வந்தாச்சு. உடனேயே என்னோட ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்ச்சிகளை ஆரம்பிச்சுடலம்!" என்றார் ராமகிருஷ்ணன் உற்சாகத்துடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 678:
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

பொருள்:
ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Wednesday, March 15, 2023

677. குழுவில் ஒரு புதிய உறுப்பினர்

"இந்தியாவில இந்த புராஜக்டை நாமதான் முதல்ல செய்யப் போறோம்" என்றான் புராஜெக்ட் மானேஜர் அரவிந்த் பெருமையுடன்.

தொழிலதிபர் குமார் மௌனமாகச் சிரித்தார்.

"நம்ம குமார் சார்தான் தைரியமா இந்த புராஜெக்ட்டை ஆரம்பிச்சிருக்காரு. இவனை புராஜெக்ட் மானேஜராப் போட்டிருக்காரு. இவன் என்னவோ தான்தான் இந்த புராஜெக்டை நிறைவேத்தற மாதிரி பெருமைப்பட்டுக்கிட்டிருக்கான்!" என்று அக்கவுண்ட்ஸ் மானேஜர் சண்முகம் தன் அருகில் அமர்ந்திருந்த அட்மினிஸ்ட்ரேஷன் மானேஜர் சக்திவேலின் காதில் முணுமுணுத்தார்.

"அரவிந்த் சில புராஜெக்ட்களை வெற்றிகரமா நிறைவேற்றின அனுபவம் உள்ளவர்ங்கறதாலதானே குமார் சார் அவரை புராஜெக்ட் மானேஜராப் போட்டிருக்காரு? அவருக்கு அந்தப் பெருமிதம் இருக்கத்தான் செய்யும்!" என்றார் சக்திவேல்.

"சரி. இந்த மீட்டிங் முடியப் போகுது. இந்த புராஜெக்ட் இம்ப்ளிமென்டேஷன் குரூப்ல இப்ப எட்டு பேர் இருக்கோம். இந்தக் குழுவில இன்னொரு உறுப்பினரையும் சேர்த்திருக்கேன். அவரு நாளைக்கு வேலையில சேரறாரு. அவர் அரவிந்தோட இணைஞ்சு வேலை செய்வாரு. இனிமே நடக்கற புராஜெக்ட் குழு கூட்டங்களில் அவரும் கலந்துப்பாரு!" என்றார் குமார்.

குமாரின் இந்த அறிவிப்பு அனைவருக்குமே வியப்பாக இருந்தாலும், அரவிந்துக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது என்பதை அவனுடைய முகமாற்றத்திலிருந்து தெரிந்தது.

"புராஜெக்ட் வெற்றிகரமா முடிஞ்சு போச்சு. டிரையல் புரொடக்‌ஷன் சிறப்பா வந்திருக்கு. இனிமே கமர்ஷியல் புரொடக்‌ஷன் ஆரம்பிக்க வேண்டியதுதான்! இந்த புராஜெக்ட் செயல்பாட்டுக் குழுவில உறுப்பினர்களா இருந்து சிறப்பாப் பணி செஞ்ச உங்கள் எல்லோருக்கும் என்னோட பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!" என்றார் குமார்.

அனைவரும் மௌனமாகத் தலையசைத்துப் புன்னகைத்தனர்.

குமாரின் அறைக் கதவைத் தட்டி அனுமதி பெற்று அவர் அறைக்குள் நிழைந்தான் அரவிந்த்.

"வாங்க அரவிந்த்! புராஜெக்டை வெற்றிகரமா முடிச்சதுக்கு உங்களைத்தான் சிறப்பாப் பாராட்டணும். எல்லோரும் இருக்கறப்ப உங்களைத் தனியாப் பாராட்டினா நல்லா இருக்காதுங்கறதாலதான் மீட்டிங்கில உங்களைத் தனியாப் பாராட்டல" என்றார் குமார்.

"நன்றி சார்! ஆனா எனக்கு ஒரு வருத்தம் உண்டு!" என்றார் அரவிந்த்.

"அது எனக்குத் தெரியுமே! புராஜெக்ட் மானேஜரா உங்களைப் போட்டுட்டு, நீங்க இன்னொருத்தரோட சேர்ந்துதான் பணியாற்றணும்னு சொன்னா உங்களுக்கு வருத்தமா இருக்குங்கறதை என்னால புரிஞ்சுக்க முடியாதா?"

அப்புறம் ஏன் சார்..." என்று ஆரம்பித்த அரவிந்த், உடனே பேச்சை மாற்றி "சுந்தர் நிறைய விஷயம் தெரிஞ்சவராவும், அனுபவம் உள்ளவராகவும் இருந்ததால அவரோட இணைஞ்சு வேலை செஞ்சது ரொம்ப உற்சாகமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. இந்த புராஜெக்ட்ல அவரோட பங்களிப்பு ரொம்ப அதிகம். ஆனா எங்க ரெண்டு பேர்ல ஒத்தரை மட்டும் வச்சே நீங்க இந்த புராஜெக்டை முடிச்சிருக்கலாங்கறது என்னோட தனிப்பட்ட கருத்து. தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க" என்றான்.

"சுந்தரோட பங்களிப்பு அதிகமா இருந்ததா நீங்கதான் இப்ப சொன்னீங்க. இந்த புராஜெக்ட்ல உங்க ரெண்டு பேரோட பங்களிப்பும் இருந்திருக்கு இல்ல? ஒத்தரோட பங்களிப்பு மட்டும் இருந்திருந்தா இந்த புராஜெக்ட் இவ்வளவு சிறப்பா வந்திருக்கும்னு சொல்ல முடியுமா? " என்றார் குமார்.

"நீங்க சொல்றது உண்மையா இருக்கலாம் சார்! ஆனா சுந்தரோட பின்னணசி பற்றி நீங்க எங்க யார்கிட்டயும் எதுவுமே சொல்லல. அவரோட பின்னணி பற்றி அவர்கிட்ட யாரும் கேட்கக் கூடாதுன்னும் சொல்லிட்டீங்க. ஏன் சார் அப்படி? அவர் யாரு? அவருக்கு இந்த புராஜெக்டைப் பத்தி எப்படி இவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கு? இதையெல்லாம் நீங்க இப்பவாவது சொல்லாம் இல்லையா?" என்றான் அரவிந்த்.

"அரவிந்த்! இந்தியாவில இந்த புராஜெக்டை நாமதான் முதல்ல செய்யறோம்னு நீங்க அடிக்கடி சொல்லுவீங்க. உங்க பேச்சை நான் மறுத்ததில்ல. ஆனா அது உண்மையில்ல. நமக்கு முன்னால ஏற்கெனவே இந்த புராஜெக்டை செய்ய சில பேர் முயற்சி செஞ்சிருக்காங்க!"

"முயற்சி செஞ்சிருக்காங்க சார்! ஆனா யாரும் செஞ்சு முடிக்கலையே1 அதைத்தான் நான் சொன்னேன்" என்றான் அரவிந்த்.

"ஒரு முயற்சியை ஆரம்பிக்கும்போது எல்லோருமே அதை செஞ்சு முடிக்கப் போறோம்னு நினைச்சுத்தான் ஆரம்பிப்பாங்க. நாமும் அப்படித்தான் ஆரம்பிச்சோம். இதை செஞ்சு முடிச்சப்பறம்தானே நம்மால முடிச்சுட்டோம்னு சொல்லிக்க முடிஞ்சது? பல பேர் இந்த புராஜெக்டை முயற்சி செஞ்சிருந்தாலும், அஞ்சு வருஷம் முன்னால ஒத்தர் ரொம்பக் கடுமையா முயற்சி செஞ்சு கிட்டத்தட்ட செஞ்சு முடிக்கிற நிலைக்கு வந்துட்டாரு. ஆனா கடைசி நிமிஷத்தில ஏற்பட்ட சில எதிர்பாராத சிக்கல்களால அவரால அந்த புராஜெக்டை முடிக்க முடியல. அதானால அவரோட அனுபவத்தைப் பயன்படுத்திக்கலாம்னு நினைச்சேன்!"

"அப்படீன்னா...?"

"ஆமாம். நீங்க நினைக்கிறது சரிதான். சுந்தர்தான் அந்த நபர். நீங்க சில புராஜெக்ட்களை வெற்றிகராமா செஞ்சு முடிச்சதால ஒரு புராஜெக்டை செஞ்சு முடிக்கிற வழிமுறைகள் உங்களுக்குத் தெரியும். சுந்தர் இந்த புராஜெக்டையே செஞ்ச அனுபவம் உள்ளவர்ங்கறதால அவரோட அந்த அனுபவமும் இந்த புராஜெக்டுக்குத் தேவைங்கறதாலதான் அவரையும் நம் டீம்ல இணைஞ்சுக்கச் சொல்லிக் கேட்டுக்கிட்டேன்!" என்றார் குமார். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 677:
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.

பொருள்:
ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறை, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்து இவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...