திருக்குறள்
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)
1051. மாலதியின் யோசனை
"இந்த மாசம் உங்களுக்கு வருமானமே இல்ல. செலவு நிறைய இருக்கு. என்ன செய்யப் போறோம்?" என்றாள் மாலதி.'என்ன செய்யப் போறீங்க?' என்று கேட்காமல், 'என்ன செய்யப் போறோம்?' என்று கேட்ட மனைவியின் பொறுப்புணர்ச்சியை மனதுக்குள் வியந்த பாலு, "அதான் யோசிச்சுக்கிட்டிருக்கேன்" என்றான்.
"சுப்பிரமணிகிட்ட கேட்டுப் பாருங்களேன்!"
"சுப்பிரமணிகிட்டயா?"
"நீங்கதானே சொல்லி இருக்கீங்க, உங்க அப்பாதான் அவரைப் படிக்க வச்சாருன்னு? அவரும் இதை ரெண்டு மூணு தடவை சொல்லி இருக்காரு. அவர் இப்ப வசதியா இருக்காரு. உங்க அப்பா மேல இருக்கற நன்றிக்காக, அவர் உங்களுக்கு உதவி செய்யலாம் இல்ல?"
"அவன் எனக்கு உதவி செய்வான்னு எனக்குத் தோணல. நீ சொல்றதுக்காக வேணும்னா கேட்டுப் பாக்கறேன்" என்று மனைவியிடம் கூறி விட்டுக் கிளம்பினான் பாலு.
வீட்டுக்குத் திரும்பிய பாலுவின் முகத்திலிருந்த சோர்வைப் பார்த்தே என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொண்ட மாலதி, உள்ளே சென்று ஒரு தம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தாள்.
தண்ணீரை மடமடவென்று குடித்து முடித்த பாலு, "கேட்டேன். கொஞ்சம் கூட தாட்சண்யம் இல்லாம, முடியாதுன்னுட்டான்!" என்றான், கோபத்துடன்.
"பரவாயில்ல. வேற எங்கேயாவது கிடைக்கும். கவலைப்படாதீங்க!" என்றாள் மாலதி.
"இப்ப இப்படிச் சொல்ற! அப்புறம் எதுக்கு அவன்கிட்ட போய் உதவி கேக்கச் சொன்ன? எனக்கு எவ்வளவு அவமானமா இருந்தது தெரியுமா?" என்றான் பாலு, கோபம் குறையாமல்.
"இதில அவமானப்படறதுக்கு எதுவும் இல்லீங்க. நமக்கு உதவி தேவைப்பட்டது. அவர் உதவி செய்யற நிலைமையில இருக்காரு. அவருக்கு உங்க அப்பா உதவி செஞ்சருக்கறார்ங்கறதால, அவர்கிட்ட உதவி கேக்கறது தப்பு இல்லேன்னு நினைச்சோம். அதுவும் கடன்தான் கேட்டோம். உங்க நிலைமை சரியானப்பறம், ரெண்டு மூணு மாசத்தில திருப்பிக் கொடுக்கப் போறீங்க! இந்த நிலைமையில உங்களுக்கு அவர் உதவ மறுத்துட்டாருன்னா, அது அவருக்குத்தான் இழுக்கு. உங்களுக்கு இதில எந்த அவமானமும் இல்ல!" என்றாள் மாலதி, உறுதியான குரலில்.
குறள் 1051:
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.
ஏதும் இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிறதோ, அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால், பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.
"வாங்க" என்ற மீனா, "உள்ள வந்து உக்காருங்க. அவர் குளிச்சுக்கிட்டிருக்காரு. வந்துடுவாரு" என்று கூறி விட்டு, உள்ளே சென்றாள். சில நிமிடங்கள் கழித்துக் கையில் காப்பி தம்ளருடன் வந்தாள்.
"எதுக்குங்க இதெல்லாம்?" என்று சங்கடத்துடன் காப்பி தம்ளரைப் பெற்றுக் கொண்டான் தனஞ்சயன்.
அதற்குள் தலையைத் துண்டால் துவட்டியபடியே வந்த கதிரேசன், "வாடா! எங்கே, ரொம்ப நாளா ஆளையே காணோம்!" என்று சொல்லி விட்டு, "ஒரு நிமிஷம். இதோ வந்துடறேன்!" என்றபடியே, உடைமாற்றிக் கொள்ள உள்ளே சென்றான்.
தனஞ்சயன் காப்பி குடித்து முடித்தும், "நீங்க பேசிக்கிட்டிருங்க. எனக்கு உள்ளே கொஞ்சம் வேலை இருக்கு" என்று அவனிடம் கூறி விட்டு, காப்பி தம்ளரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் மீனா.
உடை மாற்றிக் கொண்டு வந்த கதிரேசன், தனஞ்சயனுக்கு எதிரே உட்கார்ந்தான். "அப்புறம் எப்படி இருக்கே?"
கதிரேசன் தனஞ்சயனின் ஒன்று விட்ட சகோதரன் - இரண்டு விட்ட சகோதரன் என்றும் கூறலாம், ஏனெனில் தனஞ்சயனின் தந்தையும், கதிரேசனின் தந்தையுமே ஒன்று விட்ட சகோதரர்கள்தான்! கதிரேசனே பலமுறை தனஞ்சயனை 'செண்ட் கசின்' என்றுதான் குறிப்பிடுவான்.
ஆயினும், இருவருக்குமிடையே உறவைத் தாண்டிய ஒரு நட்பு இருந்தது. அதனால், கதிரேசனுக்குத் தன் மற்ற உறவினர்களுடன் இல்லாத நெருக்கம் தனஞ்சயனிடம் இருந்தது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்துக் கொள்வதில்லை என்றாலும், அவ்வப்போது தொலைபேசியில் உரையாடிக் கொள்வார்கள்.
"உன் பிசினஸ் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?" என்றான் கதிரேசன்.
"உனக்குத்தான் தெரியுமே, கொஞ்ச நாளா எதுவும் சரியா இல்ல. வேலையை விட்டுட்டு ஏன் பிசினஸ் ஆரம்பிச்சேன்னு அம்மா தினமும் புலம்பிக்கிட்டிருக்காங்க."
"கவலைப்படாதே! எல்லாம் சரியாயிடும். எங்கேயோ போயிடுவ, பார்!" என்றான் கதிரேசன், ஆறுதலாக.
சற்று நேரம் மௌனமாக இருந்த தனஞ்சயன், "கதிரேசா! என்னைத் தப்பா நினைச்சுக்காதே! உங்கிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன்" என்றான்.
"என்ன உதவி?"
"பிசினஸ் சரியா இல்லாததால, நிறைய கேஷ்ஃப்ளோ ப்ராப்ளம்... இன்னும் ரெண்டு நாளைக்குள்ள என் பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும். எவ்வளவோ முயற்சி பண்ணியும், என்னால பணம் புரட்ட முடியல!"
தனஞ்சயன் பேசிக் கொண்டிருக்கும்போதே, அவன் கையைப் பிடித்த கதிரேசன், "எவ்வளவு வேணும்னு மட்டும் சொல்லு!" என்றான்.
"முப்பதாயிரம்" என்றான் தனஞ்சயன், பலவீனமான குரலில்.
அதற்குள்ளேயே கைபேசியை எடுத்து இயக்க ஆரம்பித்து விட்ட கதிரேசன், சில விநாடிகளில், "ஜீபே பண்ணிட்டேன். இதுக்காகவா இவ்வளவு தயங்கின? எங்கிட்ட கேக்கறதில உனக்கு ஏன் இவ்வளவு தயக்கம்?" என்றான்.
"இல்லை. நாம நெருக்கமாப் பழகினாலும், உங்கிட்ட இதுவரையிலும் நான் எந்த உதவியும் கேட்டதில்லை!"
"அதனால என்ன? எல்லாத்துக்கும் முதல் தடவைன்னு ஒண்ணு இருக்கு இல்ல? உனக்கு வேற எந்த உதவி வேணும்னாலும், தயங்காம எங்கிட்ட கேளு!"
கதிரேசனின் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, சில நிமிடங்களுக்கு முன் தயக்கத்துடனும், அவமான உணர்வுடனும் உள்ளே சென்ற தான், இப்போது மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும், ஒருவகைப் பெருமையுடனும் கூட வெளியேறுவதை நினைத்தபோது, தனஞ்சயனுக்கு வியப்பாக இருந்தது.
குறள் 1052:
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
"அப்படி இருக்க முடிஞ்சா, அது பெரிய விஷயம்தான்!" என்றான் அவன் நண்பன் அசோக்.
மனோகரின் கொள்கைக்குச் சோதனையாக அமையும் ஒரு காலம் வந்தது.
மனோகரின் அம்மா உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும், அதற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் சொன்னார்கள்.
மனோகரிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லை. புரட்டுவதற்கான வழியும் இல்லை.
"இப்ப என்ன செய்யப் போற? இது மாதிரி சமயத்தில, யார்கிட்டேயாவது உதவி கேட்டுத்தானே ஆகணும்? யார்கிட்ட கேட்கப் போற?" என்றான் அசோக்.
மனோகர் சற்று யோசித்து விட்டு, "கனகராஜ் சார்கிட்ட!" என்றான்.
சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் அது.
அலுவலகத்தில் மனோகருக்குக் கீழே பணியாற்றிய ஒரு உதவியாளன் ஒரு மோசடி செய்து விட்டான். மோசடி கண்டறியப்பட்டு, அவன் வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.
நிறுவனத்தின் பொது மேலாளர் கனகராஜ், மனோகரைத் தன் அறைக்கு அழைத்தார்.
"மிஸ்டர் மனோகர்! உங்க அசிஸ்டன்ட் பண்ணின தப்புக்கு நீங்களும் பொறுப்பு ஏற்கணும். உங்க கண் முன்னால இந்த மோசடி நடந்திருக்கு. நீங்க அதை கவனிக்காம விட்டிருக்கீங்க. கொஞ்சம் கவனமா இருந்திருந்தா, இந்த மோசடியை நீங்க ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம், அல்லது, அவனை முன்னாலேயே பிடிச்சிருக்கலாம். ஆடிட்டர்கள் வந்து கண்டுபிடிச்சப்புறம்தான், இந்த மோசடி வெளியில வந்திருக்கு. அதனால, உங்களுக்கு தண்டனையா ஒரு இன்க்ரிமென்ட் கட் பண்ணி இருக்கேன்!" என்றார் கனகராஜ்.
"சார்! எனக்கு இதில பொறுப்பு இருக்குன்னு ஒத்துக்கறேன். ஆனா, அதுக்காக எனக்கு இன்க்ரிமென்ட் கட் பண்றது நியாயம் இல்லை. நான் எந்தத் தப்பும் பண்ணலையே!" என்றான் மனோகர், பணிவுடன்.
"தப்புப் பண்ணாட்டாலும், நடந்த தப்புக்குப் பொறுப்பு நீங்கதானே? அதை எப்படி தண்டிக்காம விட முடியும்?"
"சார்! அப்படிப் பார்த்தா..." என்று ஆரம்பித்த மனோகர், "சரி சார். உங்க இஷ்டம்" என்று கூறி, அவர் அறையிலிருந்து வெளியேற எத்தனித்தான்.
"ஒரு நிமிஷம்!" என்று அவனை அழைத்த கனகராஜ், "'அப்படிப் பாத்தான்னு' நீங்க என்ன கேக்க வந்தீங்கன்னு எனக்குத் தெரியும்!" என்றார்.
"இல்லை சார்..."
"அப்படிப் பார்த்தா, உங்களையெல்லாம் நிர்வகிக்கிற எனக்கும்தானே இதில பொறுப்பு இருக்கணும்? இதுதானே நீங்க கேட்க நினைச்சது?"
மனோகர் மௌனமாக இருந்தான்.
"நீங்க கேட்க நினைச்ச கேள்வி நியாயமானதுதான். அதனாலதான், எனக்கும் ஒரு இன்க்ரிமென்ட் கட் பண்ணணும்னு ஹெட் ஆஃபீசுக்கு ரெகமெண்ட் பண்ணி இருக்கேன்!" என்றார் கனகராஜ்.
மனோகர் அவரை வியப்புடன் பார்த்தான்.
"ஏண்டா, யார்கிட்டேயும் உதவி கேட்க மாட்டேன், அதுதான் என் கொள்கைன்னு சொன்ன. இப்ப உன்னோட பாஸ்கிட்ட உதவி கேக்கறேன்னு சொல்றியே, அதுல உனக்கு அவமானம், வருத்தம் எதுவுமே இல்லையா?" என்றான் அசோக்.
"இல்லை. கனகராஜ் மாதிரி ஒரு உயர்ந்த மனிதர்கிட்ட உதவி கேக்கறதுல எனக்கு சங்கடம் எதுவும் இல்ல. அவர் உதவி செய்யாட்டாலோ, இல்ல, 'எங்கிட்ட எப்படி நீ உதவி கேக்கலாம்?'னு கோவிச்சுக்கிட்டாலோ கூட நான் வருத்தப்பட மாட்டேன்!" என்றான் மனோகர்.
குறள் 1053:
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.
"அரசே! தாங்களே குறிப்பிட்டது போல், அவர் ஒரு வள்ளல். பலனை எதிர்பாராமல், தன் செல்வம் குறைந்து விடுமே என்று கவலைப்படாமல், வாரிக் கொடுப்பவரை மக்கள் மதிப்பது இயல்புதானே?" என்றார் அமைச்சர்.
"ஏது? நீங்களே அவரைப் புகழ்ந்து தள்ளி விடுவீர்கள் போலிருக்கிறதே!"
"உண்மையைச் சொன்னேன், அரசே!"
"எது உண்மை? நம் நாட்டு மக்களுக்கு நான் எவ்வளவு நன்மை செய்திருக்கிறேன்! மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்பட்டாலும் சரி, வெள்ளம் வந்து மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்தாலும் சரி, அவர்களுக்கு எவ்வளவு உதவி இருக்கிறேன்! என்னை விட அதிகம் உதவி விட்டாரா அந்த சபாபதி?"
"அரசே! மக்களின் துயரைப் போக்குவது மன்னரின் கடமை. அத்துடன்..."
"அத்துடன்?"
"இல்லை, மன்னரே! வேறொன்றும் கூற விரும்பவில்லை."
"பரவாயில்லை, சொல்லுங்கள்."
"ஒரு மன்னர் அரசுக் கருவூலத்திலிருந்து பொருளை எடுத்து மக்களுக்கு அளிக்கும்போது, அவர் தன் சொந்தப் பணத்தை் கொடுக்கவில்லை. நாட்டுக்குச் சொந்தமான, சொல்லப் போனால், மக்களுக்குச் சொந்தமான பணத்தைத்தான் கொடுக்கிறார். இதையும், ஒரு தனி மனிதர் தனக்குச் சொந்தமான பொருளைப் பிறருக்கு வாரி வழங்குவதையும் எப்படி ஒப்பிட முடியும்?"
தான் சொன்னதை அரசர் எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறாரோ என்று நினைத்தபடியே, தயக்கத்துடன் அரசரை ஏறிட்டுப் பார்த்தார் அமைச்சர்.
"அமைச்சரே! மனதில் உள்ளதை மறைக்காமல் கூறும் உங்கள் குணத்தை நான் போற்றுகிறேன். நீங்கள் கூறியது சரிதான். ஆயினும் சபாபதியைக் கொஞ்சம் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன்!" என்றான் கஜவர்மன்.
"இறைவன் பக்தர்களைச் சோதிப்பது போலவா?" என்றார் அமைச்சர், சிரித்துக் கொண்டே.
"அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன்!" என்ற அரசன் சற்று யோசித்து விட்டு, "ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, சபாபதியைக் கைது செய்து அழைத்து வாருங்கள்" என்றான்.
"அரசே! அவரை ஏன் கைது செய்ய வேண்டும்? ஒரு தவறும் செய்யாத ஒருவரை என்ன காரணத்துக்காகக் கைது செய்ய முடியும்?" என்றார் அமைச்சர், சற்று அதிர்ச்சியுடன்.
"உங்களால் முடியாதுதான். தளபதியிடம் சொல்லி, அவரைக் கைது செய்து அழைத்து வரச் சொல்கிறேன். ஆனால், அவரை அரசவையில் நான் விசாரிக்கும்போது, நீங்களும் அரசவையில் இருக்க வேண்டும்" என்றான் அரசன்.
அரசவையில் கைதியாக நிறுத்தப்பட்டிருந்த சபாபதியைப் பார்த்து, "சபாபதி! உங்களை எல்லோரும் வள்ளல் என்று புகழ வேண்டும் என்பதற்காக, நீங்கள் பலருக்கும் பொருள் கொடுத்து உதவி வருகிறீர்கள். அதனால், உங்களிடம் உதவி பெறுபவர்கள் சோம்பேறிகளாகி விட்டார்கள். வேலையே செய்வதில்லை. தங்கள் தேவைகளுக்கு, உங்கள் முன் வந்து நிற்கிறார்கள். நீங்களும் அவர்களுக்குப் பிச்சை போடுவது போல் எதையோ விட்டெறிந்து, அவர்களைச் சிறுமைப்படுத்துகிறீர்கள். அதனால், அவர்கள் தொடர்ந்து சோம்பேறிகளாகவே இருக்கிறார்கள். இதன் மூலம், மக்களிடையே சோம்பேறித்தனத்தை வளர்க்கிறீர்கள், மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி, அவர்களை அவமானப்படுத்துகிறீர்கள் என்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் உங்கள் மீது வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு உங்கள் பதில் என்ன?" என்றான் அரசன்.
"அரசே! துன்பத்தில் வாடுபவர்களுக்கு என்னால் இயன்ற அளவில் நான் உதவுகிறேன். வேலை செய்ய முடியாதவர்கள், அல்லது வேலை கிடைக்காதவர்களுக்குத்தான் நான் உதவுகிறேன். யாரையும் சோம்பேறியாக இருக்க நான் ஊக்குவிப்பதில்லை. மேலும், மற்றவர்களுக்கு உதவும்போது, நான் பணிவாகத்தான் நடந்து கொள்கிறேன். யாரையும் சிறுமைப்படுத்தவில்லை" என்றார் சபாபதி.
"இல்லை, சபாபதி. மற்றவர் முன் கையேந்தி உதவி கேட்பது எவ்வளவு அவமானகரமானது என்பது உங்களுக்குப் புரியவில்லை. நீங்களே இதை உணர்ந்து பார்த்தால்தான் உங்களுக்குப் புரியும். அதனால், உங்களுக்கு நான் ஒரு தண்டனை கொடுக்கிறேன். நீங்கள் கைது செய்யப்பட்டு, இரண்டு நாட்களாக உணவில்லாமல் இருக்கிறீர்கள். நீங்கள் இந்த அவையில் உள்ள யாராவது ஒருவரிடம் சென்று, 'ஐயா! நான் இரண்டு நாட்களாகச் சாப்பிடவில்லை. பசி என் உயிரை வாட்டுகிறது. ஏதாவது கொடுத்து உதவுங்கள்' என்று பிச்சை கேட்க வேண்டும். அப்படி நீங்கள் கேட்டால், அதற்குப் பிறகு, உங்களை விடுதலை செய்து விடுவேன். உங்களிடம் உதவி பெறுபவர்கள் எப்படிக் கூனிக் குறுகி அவமானப்படுகிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்!" என்றான் அரசன்.
சற்று நேரம் மௌனமாக இருந்த சபாபதி, அவையிலிருந்த அனைவரையும் பார்த்து விட்டு, அமைச்சரை நோக்கிச் சென்றார்.
"அமைச்சரே! நான் சாப்பிட்டு இரண்டு நாட்களாகி விட்டன. பசியின் கொடுமை தாங்கவில்லை. எனக்கு ஏதாவது கொடுத்து உதவுங்கள்" என்றார் சபாபதி, அமைச்சரைப் பார்த்துக் கைகூப்பியபடியே.
அமைச்சர் திகைத்துப் போய், என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டிருந்தபோதே, அரசர் சைகை காட்ட, ஒரு சேவகன் தன் கையிலிருந்த பழத்தட்டை அமைச்சரிடம் கொடுக்க, அமைச்சர் அந்தத் தட்டை சபாபதியிடம் கொடுத்தார்.
பழத்தட்டை வாங்கிக் கொண்ட சபாபதி, அரசனைப் பார்த்தார்.
"அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து, பழங்களை அருந்திப் பசியாறுங்கள், வள்ளலே!" என்றான் அரசன்.
சபாபதி இருக்கையில் அமர்ந்து, ஓரிரு பழங்களை அருந்திப் பசி தீர்த்துக் கொண்டதும், "நன்றி, அரசே!" என்றார்.
"இப்போது சொல்லுங்கள், வள்ளலே! நீங்கள் அமைச்சரிடம் யாசிக்கும்போது, எப்படி உணர்ந்தீர்கள்? இரண்டாவதாக, யாசிப்பதற்கு அமைச்சரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?" என்றான் அரசன்.
"அரசே! நீங்கள் கேட்ட இரண்டு கேள்விகளுக்குமான பதில்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. நான் பிறருக்குக் கொடுக்கும்போது என் மனதில் தோன்றும் பெருமித உணர்வுதான் அமைச்சரிடம் இரந்தபோது எனக்கு ஏற்பட்டது. அதற்குக் காரணம், நான் யாசித்தது, தன் மனதில் இருப்பதை மறைத்துப் பேசாத இயல்புடையவர் என்று அறியப்பட்டுள்ள அமைச்சர்பிரானிடம்!" என்றார் சபாபதி, அமைச்சரைப் பார்த்து வணங்கியபடியே.
குறள் 1054:
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.
மணிமாறன் பதில் சொல்லவில்லை.
மணிமாறனின் தங்கை கிருத்திகாவின் மாமனார் இறந்து விட்டார். அவருடைய இறப்புக்குப் பின்னான சடங்குகளுக்கு, இவன் சீர் செய்ய வேண்டுமாம்! என்ன ஒரு நடைமுறையோ தெரியவில்லை. ஒரு பெண்ணின் பிறந்த வீட்டை மொத்தமாகச் சுரண்டுகிற வழக்கங்கள்!
சாவுக்குப் போனபோதே, கிருத்திகா சொல்லி விட்டாள். "அண்ணே! உன் நிலைமை எனக்குத் தெரியும். ஆனாலும், முறைப்படி செய்ய வேண்டியதை செஞ்சுடு. இல்லேன்னா, என் மாமியாரும், மத்த சொந்தங்களும் ஆயுள் முழுக்க சொல்லிக் காட்டிக்கிட்டே இருப்பாங்க"
அவர்கள் எதிர்பார்க்கும் சீர்களைச் செய்ய குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாய் ஆகும். பணத்துக்கு எங்கே போவது?
"உங்க நண்பர் சுந்தர்கிட்ட கேட்டுப் பாருங்களேன். அவர் வசதியாத்தானே இருக்காரு!" என்றாள் பாக்யலட்சுமி.
"வசதியாத்தான் இருக்கான். ஆனா கேட்டா, இப்ப கையில பணம் இல்லைன்னு சொல்லிடுவான். எப்பப் பார்த்தாலும் பஞ்சப் பாட்டுப் பாடுவான். அவன் புலம்பறதைக் கேட்டா, நானே அவனுக்கு நூறு ரூபா கொடுத்துட்டு வரலாம் போல இருக்கும்!"
"நீங்க உரிமையாக் கேக்கக் கூடியவர் அவர் ஒத்தர்தான். வேற யார்கிட்ட போய் நீங்க கேக்க முடியும்?"
சற்று நேரம் ஏதோ யோசித்த மணிமாறன், ஒரு முடிவுடன் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினான்.
"எங்கே கிளம்பிட்டீங்க?" என்றாள் பாக்யலட்சுமி.
"ராத்திரிக்குள்ள வந்துடுவேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் மணிமாறன்.
இரவு 9 மணிக்கு வீட்டுக்குத் திரும்பினான் மணிமாறன்.
"எங்கே போயிட்டு வரீங்க? போறப்பவே கேட்டேன், சொல்லவே இல்லையே!" என்றாள் பாக்யலட்சுமி.
"எங்க மாமா வீட்டுக்குத்தான்!" என்றபடியே, தன் சட்டைப்பையிலிருந்த ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக் காட்டினான் மணிமாறன்.
"உங்க தங்கை வீட்டுக்கு சீர் செய்ய, அவர்கிட்ட கடன் வாங்கிட்டு வந்திருக்கீங்களா? ஏற்கெனவே, போன வருஷம், நம்ம பொண்ணு படிப்புக்காக, அவர்கிட்டதான் கடன் வாங்கினீங்க."
"அதைத்தான் திருப்பிக் கொடுத்துட்டேனே!"
"அதுக்காகத் திரும்பத் திரும்ப அவர்கிட்ட போய்க் கடன் கேக்கறது உங்களுக்குக் கஷ்டமா இல்ல? உங்க நண்பர்கிட்டயே கேக்க மாட்டேன்னுட்டீங்க. அவர்கிட்ட போய் மறுபடியும் எப்படிக் கேட்டீங்க?"
"ஏன்னா, அவர் இருந்தா கொடுப்பாரு, இல்லேன்னா இல்லேன்னு சொல்லிடுவாரு. வச்சுக்கிட்டு இல்லேன்னு சொல்ல மாட்டாரு. இப்படிப்பட்ட மனுஷங்க சில பேராவது உலகத்தில இருக்கறதாலதான், நம்ம மாதிரி ஆட்களுக்கு உதவி தேவைப்படும்போது, அவங்ககிட்ட போய் உதவி கேட்க முடியுது!" என்றான் மணிமாறன், பெருமூச்சுடன்.
குறள் 1055:
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.
தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன், "சும்மாதான். பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்" என்றார்.
பரமசிவம் பாலனுடன் ஒரே கிராமத்தில் வசித்தவர். பாலன் ஒரு விவசாயி. பரமசிவம் ஒரு நெல் வியாபாரி.
கிராமத்தில் இருந்து கொண்டு நெல் வியாபாரம் செய்தது அவ்வளவு லாபகரமாக இல்லை என்பதால், பரமசிவம் அருகிலிருந்த நகரத்துக்குக் குடி பெயர்ந்து விட்டார். நகரத்துக்கு வந்த பிறகு, தன் வியாபாரத்தை விரிவாக்கி, ஓரளவு வருமானம் பெற்று வந்தார்.
பாலன் நகரத்துக்கு வரும்போதெல்லாம், பரமசிவத்தை வந்து பார்த்து விட்டுப் போவார்.
சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு, "ஆமாம். இது விதைக்கிற பருவமாச்சே! உங்க நிலத்தில விதை போட்டுட்டீங்களா?" என்றார் பரமசிவம்.
"இல்லை. போன வருஷம் விளைச்சல் குறைவா இருந்ததால, விதை நெல்லைக் கூட சேமிச்சு வைக்க முடியல. இப்ப, பணம் கொடுத்துத்தான் விதை நெல் வாங்கணும். எங்கிட்ட இப்ப பணம் இல்லை. நான் உங்களைப் பார்க்க வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம்" என்றார் பாலன், தயக்கத்துடன்.
"எவ்வளவு வேணும்?"
"முப்பதாயிரம் இருந்தா நல்லா இருக்கும்."
"இப்ப எங்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே!" என்றார் பரமசிவம், யோசித்தபடியே.
அதற்குள் உள்ளிருந்து பரமசிவத்தின் மனைவி தங்கம் அவரை உள்ளே வருமாறு அழைக்க, பரமசிவம் உள்ளே சென்றார்.
ஓரிரு நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்த பரமசிவத்தின் கை நிறைய ரூபாய் நோட்டுகள் இருந்தன, முகம் நிறைய மகிழ்ச்சி இருந்தது.
"இந்தாங்க, முப்பதாயிரம் ரூபாய்!" என்றபடியே, நோட்டுகளை பாலனின் கையில் கொடுத்தார் பரமசிவம்.
'இப்போதுதானே பணம் இல்லையென்று சொன்னார்? அதற்குள் எப்படிப் பணம் வந்தது?' என்ற பாலனின் கேள்வியை அவருடைய முகக்குறிப்பிலிருந்து புரிந்து கொண்ட பரமசிவம், "எங்க பொண்ணு வயசுக்கு வந்தா, அவளுக்கு சடங்கு செய்யணுங்கறதுக்காக எனக்கே தெரியாம, என் மனைவி கொஞ்சம் பணம் சேர்த்து வச்சிருக்கா. நான் பணம் இல்லேன்னு சொன்னதும், என்னை உள்ளே கூப்பிட்டு, இந்தப் பணத்தைக் கொடுத்தா!" என்றார், பெருமையுடன்.
திகைத்து நின்ற பாலன், "யாராவது உதவி கேட்டா, நிறைய பேர் கையில் பணம் இருந்தா கூட இல்லேன்னு சொல்லுவாங்க. உங்க மனைவி உங்களுக்கே தெரியாம தான் சேர்த்து வச்சிருக்கற பணத்தைக் கொடுத்து உதவி செய்யறாங்க. இந்தாங்க, இந்தப் பணத்தை அவங்ககிட்ட கொடுத்துடுங்க. அவங்க அதை ஒரு நோக்கத்துக்காக வச்சிருக்காங்க. அதை நான் வாங்கிக்கக் கூடாது!" என்று கூறி, தான் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.
அதற்குள் உள்ளிருந்து வந்த தங்கம், "உங்களுக்கு விதை நெல்லு வாங்கப் பணம் வேணும்னு கேட்டீங்களே! அது முக்கியம் இல்லையா? பணத்தை வாங்கிக்கங்க!" என்றாள்.
"இல்லம்மா! உங்களை மாதிரி நல்ல மனசு உள்ளவங்க இருக்கறப்ப, என்னோட பிரச்னை தானே சரியாயிடும்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. எனக்கு வேற விதத்தில பணம் கிடைக்கும். உங்க நல்ல மனசை நான் எப்பவுமே மறக்க மாட்டேன்!" என்று இருவரிடமும் கைகூப்பி விடைபெற்றார் பாலன்.
குறள் 1056:
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
"ஆமாம். ஒண்ணா சேர்ந்து தொழில் ஆரம்பிச்சோம். இப்ப, ஒரே நேரத்தில பிரச்னையை சந்திச்சுக்கிட்டிருக்கோம். இந்த ஒற்றுமையை நினைச்சா ஆச்சரியமாத்தான் இருக்கு. ஆமாம், உன்னோட திட்டம் என்ன?" என்றார் மணிவண்ணன்.
"இது மாதிரி நிலைமைகள்ள, வங்கிகள்தான் உதவணும். ஆனா, அவங்க ஏற்கெனவே கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு கெடுபிடிதான் பண்றாங்க. எனக்குத் தெரிஞ்ச ஒரு பெரிய மனுஷன் இருக்காரு. அவர்கிட்ட ஐம்பது லட்சம் ரூபாய் கடன் கேக்கப் போறேன். அவர் கொடுத்து உதவினா, நிலைமையை சமாளிச்சு, அஞ்சாறு மாசத்துக்குள்ள இயல்பு நிலைக்கு வந்துடலாம்னு நினைக்கிறேன்."
"நீ சொல்றது சரிதான். இந்த மாதிரி சமயத்தில உதவி கிடைச்சா, நம்மால மீண்டு வர முடியும். ஆனா, உதவி கிடைக்கிறது கஷ்டம்தான். நான் உதவி கேக்கறதுக்குக் கூட ஒத்தர் இருக்காரு. ஆனா, அவர்கிட்ட உதவி கேட்க எனக்குத் தயக்கமா இருக்கு" என்றார் மணிவண்ணன்.
"நம்ம நிலைமை மோசமா இருக்கறப்ப, தயக்கத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டுக் கேக்க வேண்டியதுதான். இது நமக்கு வாழ்வா சாவாங்கற பிரச்னையாச்சே!" என்றார் கதிரேசன்.
ஒரு வாரம் கழித்து, கதிரேசன் மணிவண்ணனுக்கு ஃபோன் செய்தார். "என்ன மணிவண்ணா, ஏதேனும் செய்தி உண்டா?" என்றார்.
"நான் சொன்னேனே, எனக்குத் தெரிஞ்ச ஒத்தர் இருக்காருன்னு, அவர் எனக்கு உதவி செய்யறதா சொல்லிட்டாரு. இன்னும் ரெண்டு நாள்ள பணம் கிடைச்சுடும்!" என்றார் மணிவண்ணன், உற்சாகமாக.
"அவர்கிட்ட உதவி கேக்கறதுக்குத் தயக்கமா இருக்குன்ன, இப்ப இவ்வளவு உற்சாகமாப் பேசற!"
"தயக்கமாத்தான் இருந்தது. அவர் என்னோட தூரத்து உறவினர். அவர்கிட்ட கடன் கேட்டா, என்னை இளப்பமா நினைப்பாரோன்னு தயங்கினேன். ஆனா, அவர் ரொம்பப் பெருந்தன்மையா நடந்துக்கிட்டாரு. வியாபாரத்தில இது மாதிரி நிலைமைகள் வரது இயல்புதான்னு சொல்லி, உடனே கடன் கொடுக்க ஒதுக்கிட்டாரு. நீ இப்படி இருக்கணும், அப்படி இருக்கணுங்கற உபதேசம் எதுவும் செய்யல. என்னை நம்பி நான் கேட்ட உதவியைச் செய்யறதாதான் காட்டிக்கிட்டாரு. அவரைச் சந்திக்கப் போகும்போது தயக்கத்தோட போனவன், திரும்பி வரும்போது உற்சாகத்தோட வந்தேன். ஆமாம், உன் விஷயம் என்ன? உனக்குத் தெரிஞ்ச பெரிய மனுஷன் ஒத்தர் இருக்கார்னு சொன்னியே, அவர்கிட்ட கேட்டியா?"
"கேட்டேன், கொடுத்துட்டாரு!"
"கொடுத்துட்டாரா? ரொம்ப நல்லது. ஆனா, இதை ஏன் இவ்வளவு உற்சாகம் இல்லாம சொல்ற?"
"என்ன செய்யறது? உனக்குக் கடன் கொடுத்தவர் நடந்துக்கிட்ட மாதிரி எனக்குக் கொடுத்தவர் நடந்துக்கலையே! முதல்ல, என்னோட அலட்சியத்தாலதான் இந்த நிலைமை வந்துச்சுங்கற மாதிரி பேசினாரு. அப்புறம், பணம் கொடுக்கறேன்னு சொல்லிட்டு, சின்னக் குழந்தைக்கு செய்யற மாதிரி ஏகப்பட்ட உபதேசம்! வெளியில வரப்ப, கடன் கிடைச்சதேங்கற சந்தோஷத்தை விட, அவர் பேசின பேச்சினால ஏற்பட்ட எரிச்சலும், அவமானமும்தான் அதிகமா இருந்தது" என்றார் கதிரேசன்.
குறள் 1057:
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.
"பாக்கலாம். டியூ டேட்டுக்கு இன்னும் 10 நாள் இருக்குல்ல, கட்டிடலாம்!" என்றான் மகேஷ்.
"எங்கேந்து கட்டுவீங்க? சம்பளப் பணம் முழுக்க செலவழிஞ்சு போயிடுச்சு. மாசம் முடியற வரைக்கும், மீதிச் செலவுக்கே பணம் இல்ல. இதில, கிரடிட் கார்ட் பில் கட்டப் பணம் எங்கேந்து வரும்?"
மகேஷ் மௌனமாக இருந்தான்.
"இந்தா, ஐயாயிரம் ரூபா. வீட்டுச் செலவுக்கு வச்சுக்க!" என்றான் மகேஷ்.
பணத்தை வாங்கிக் கொண்ட கிரிஜா, "கிரடிட் கார்ட் பில் கட்டணுமே!" என்றாள்.
"கட்டியாச்சு!"
ஒரு நிமிடம் மௌனமாக இருந்த கிரிஜா, "யார்கிட்ட கடன் வாங்கினீங்க?" என்றாள்.
"யார்கிட்டேந்து வாங்கினா என்ன? கடன் கிடைச்சது. கிரடிட் கார்ட் பில் கட்டியாச்சு. வீட்டுச் செலவுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்துட்டேன். அவ்வளவுதான்!"
"கேக்கறேனேன்னு தப்பா நினைக்காதீங்க. இப்படி, அடிக்கடி யார்கிட்டேயாவது கடன் வாங்கிக்கிட்டே இருக்கீங்களே, உங்களுக்கு இது அவமானமாத் தெரியலையா?" என்றாள் கிரிஜா, சற்றுத் தயக்கத்துடன்.
"அவமானமோ, இல்லையோ, உலகத்தில சில பேர் மத்தவங்ககிட்ட உதவி கேக்கத்தான் வேண்டி இருக்கு. உதவி செய்யறவங்களுக்கும் அதனால திருப்தியும், சந்தோஷமும் கிடைக்குது. உதவி கேக்கறவங்க இல்லைன்னா, உதவி செய்யறவங்களுக்கு வாழ்க்கையில சுவாரசியம் இருக்காது. உதவி கேக்கறவங்களுக்கும்தான்! வாழ்க்கையில சுவாரசியம் இல்லேன்னா, மனுஷங்க பொம்மைகள் மாதிரிதான் வாழ வேண்டி இருக்கும்!" என்றான் மகேஷ்.
"நல்லா இருக்கு, மத்தவங்ககிட்ட உதவி கேட்டுக்கிட்டே இருக்கறதை நீங்க நியாயப்படுத்தறது!" என்றாள் கிரிஜா.
குறள் 1058:
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.
"அதான் நல்ல மார்க் வாங்கி இருக்கானே, நல்ல காலேஜ் எதிலேயாவது அவனுக்கு சீட் கிடைச்சுடும்" என்றான் பார்த்திபன்.
"நான் சீட் கிடைக்கறதைப் பத்திக் கேக்கல. அட்மிஷன் கிடைச்சா, ஃபீஸ் கட்டணுமே, அதுக்கு என்ன செய்யப் போறீங்க?"
"அதைப் பத்தித்தான் விசாரிச்சுக்கிட்டிருக்கேன்!"
"விசாரிக்கிறீங்களா? என்ன விசாரிக்கறீங்க? "
"கொஞ்ச நாள் வெயிட் பண்ணு. சொல்றேன்!" என்று பேச்சை முடித்தான் பார்த்திபன்.
"குமாரோட காலேஜ் ஃபீசைப் பத்திக் கவலைப்பட்டியே, ஏற்பாடு பண்ணிட்டேன்" என்றான் பார்த்திபன்.
"என்ன ஏற்பாடு? பாங்க்ல எஜுகேஷன் லோன் தரேன்னுட்டாங்களா என்ன?" என்றாள் நிர்மலா.
"நமக்கு அது மாதிரி லோன் எல்லாம் கிடைக்காது. நம்மை மாதிரி வசதி இல்லாதவங்களுக்கு உதவறதுக்குன்னே, சில நல்ல மனுஷங்க டிரஸ்ட் வச்சு, அதன் மூலமா உதவி செய்யறாங்க. அது மாதிரி டிரஸ்ட்களைப் பத்தித்தான் விசாரிச்சுக்கிட்டிருந்தேன். அப்படி ஒரு டிரஸ்டில அப்ளிகேஷன் போட்டேன். அவங்க உதவி செய்யறதா சொல்லிட்டாங்க. குமார் காலேஜ்ல படிக்கற நாலு வருஷமும், காலேஜ் ஃபீஸ், புத்தகச் செலவு எல்லாத்துக்கும் அவங்க பணம் கொடுத்துடுவாங்க!"
"ஆச்சரியமா இருக்கே! இப்படி எல்லாம் உதவி செய்யறவங்க உலகத்தில இருக்காங்களா என்ன?" என்றாள் நிர்மலா, வியப்புடன்.
"இருக்காங்களே!"
"நல்ல வேளை! இப்படி சில பேர் இருக்கறதாலதான், நம்மளை மாதிரி இருக்கறவங்களால சமாளிக்க முடியுது!"
சற்று யோசித்த பார்த்திபன், "நீ சொல்றது சரிதான். ஆனா, இதை இப்படியும் பாக்கலாம். நம்மளை மாதிரி உதவி கேக்கறவங்க இருக்கறதாலதான், இது மாதிரி பெரிய மனுஷங்களால, நமக்கு உதவி செஞ்சு, நல்ல பேர் வாங்க முடியுது! அவங்க நமக்குப் பணம் கொடுத்து உதவறாங்க. நாம அவங்களுக்குப் பெருமை வாங்கிக் கொடுக்கிறோம்! நாம இல்லேன்னா, அவங்களுக்கு இந்தப் பெருமை எப்படிக் கிடைக்கும்?" என்றான், சிரித்துக் கொண்டே.
குறள் 1059:
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.
"யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம் கட்டலேன்னா, நகைகள் ஏலத்துக்குப் போயிடுமே!" என்றாள் அவன் மனைவி மல்லிகா, கவலையுடன்.
"நம்ம சொந்தக்காரங்க யாரும் நமக்கு உதவற நிலையில இல்ல. என் நண்பர்களும் அப்படித்தான்!"
சற்று நேரம் மௌனமாக இருந்த மல்லிகா, "உங்க மூர்த்தி சித்தப்பாகிட்ட கேட்டுப் பாக்கலாமா?" என்றாள், தயக்கத்துடன்.
"அவர் என்னோட சொந்த சித்தப்பா கூட இல்ல, ஒண்ணு விட்ட சித்தப்பாதான். அவர்கிட்ட எப்படிப் போய்க் கேக்கறது?"
"ஒண்ணு விட்ட சித்தப்பாவா இருந்தா என்ன? உங்க அப்பாகிட்ட நெருக்கமா இருந்தவர்தானே?"
"அப்பா போய் மூணு வருஷம் ஆச்சு. அதுக்கப்பறம், மூர்த்தி சித்தப்பாவோட நமக்குத் தொடர்பே இல்லையே! போன வருஷம் ஒரு கல்யாணத்தில பாத்தப்ப, 'எப்படி இருக்கே?'ன்னு விசாரிச்சாரு. அதோட சரி!"
"இருந்தா என்ன? இப்ப நமக்கு உதவறதுக்கு வேற யாரும் இல்லேங்கறப்ப, அவர்கிட்ட உதவி கேக்கறதில தப்பு இல்லையே!"
சற்று நேரம் யோசித்த பரந்தாமன், "சரி. நீ சொல்றதுக்காக, அவரைப் போய்ப் பார்த்துட்டு வரேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.
வீட்டுக்குத் திரும்பிய பரந்தாமனின் முகத்தைப் பார்த்தே, அவன் முயற்சி பயனளிக்கவில்லை என்று புரிந்து கொண்ட மல்லிகா, அவனிடம் எதுவும் கேட்காமல் மௌனமாக இருந்தாள்.
உள்ளே வந்து அமர்ந்து கொண்ட பரந்தாமன், "அவர்கிட்ட உதவி கேக்கக் கூடாதுன்னு நான் முதல்லேயே நினைச்சேன். நீ சொன்னதைக் கேட்டு, அவரைப் போய்ப் பார்த்துட்டு வந்தேன். கையை விரிச்சுட்டாரு!" என்றான், ஏமாற்றத்துடன்.
"காரணம் ஏதாவது சொன்னாரா?"
"காரணம் என்ன காரணம்? இல்லேன்னு சொல்றவங்க 'உனக்கு உதவ எனக்கு இஷ்டமில்லை'ன்னா சொல்லுவாங்க? அவர்கிட்ட பணம் இல்லையாம். "
மல்லிகா ஏதும் கூறாமல் மௌனமாக இருந்தாள்.
"'நகையை மீட்டு உங்ககிட்ட கொடுத்துடறேன். பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டு நகையை வாங்கிக்கறேன்'னு கூட சொன்னேன். 'என்னப்பா இப்படி சொல்ற? எங்கிட்ட பணம் இருந்தா நான் கொடுத்திருக்க மாட்டேனா?'ன்னு வருத்தப்பட்டுப் பேசற மாதிரி பேசினாரு."
"ஒருவேளை, உண்மையாகவே அவர்கிட்ட பணம் இல்லையோ, என்னவோ!" என்றாள் மல்லிகா.
"என்ன பேசற நீ? ஒரு லட்சம் ருபாயெல்லாம் அவருக்கு ஒரு தொகையே இல்லை. அவருக்குக் கொடுக்க இஷ்டம் இல்லை. அவ்வளவுதான்!"
"அப்படி இல்லைங்க. நம்மையே எடுத்துக்கங்க. நாம எவ்வளவோ வசதியா இருந்தவங்கதான். உங்களுக்கு திடீர்னு தொழில்ல நெருக்கடி ஏற்பட்டு, நமக்குப் பணத் தட்டுப்பாடு வந்துடுச்சு. நம்ம சொந்தக்காரங்க யாராவது இப்ப உங்ககிட்ட வந்து பத்தாயிரம் ரூபா கடன் கேட்டா, உங்களால கொடுக்க முடியாது இல்ல? அது மாதிரி, அவருக்கும் இப்ப ஏதாவது கஷ்டமான நிலைமை இருக்கலாம். அதனால, அவரால உண்மையாகவே நமக்கு உதவ முடியாம இருக்கலாம் இல்ல?" என்றாள் மல்லிகா.
வியப்புடன் மல்லிகாவைப் பார்த்த பரந்தாமன், "நீ சொல்றது உண்மையா இருக்கலாம். நீ இப்படி சொன்னப்பறம்தான், நான் கவனிச்ச ஒரு விஷயம் புரியுது. அவர் எப்பவும் ரொம்ப உற்சாகமா இருப்பாரு. நான் போனப்ப, அவர்கிட்ட அந்த உற்சாகம் இல்லை. அதைப் பத்தி, அப்ப நான் யோசிக்கல. பாவம், அவருக்கும் ஏதோ பணக் கஷ்டம் இருக்கும் போல இருக்கு!" என்றான் பரந்தாமன்.
குறள் 1060:
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.
இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக் கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே!
No comments:
Post a Comment