Thursday, June 30, 2022

606. முருகனின் நண்பர்

"ஏண்டா, ஒரு வேலை வெட்டிக்குப் போகாம எப்ப பாத்தாலும் வீட்டில வெட்டியா உக்காந்துக்கிட்டிருக்க. ராத்திரி முழுக்கத் தூங்கிட்டு, அப்புறம் பகல் தூக்கம் வேற!

"அப்பப்ப  வாசல் திண்ணையில உக்காந்துக்கிட்டு தெருவில போறவங்களையெல்லாம் கூப்பிட்டு வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டிருக்கே. இப்படியே இருந்தா எப்படி உருப்படறது?" என்று முத்துலட்சுமி தன் மகனிடம் பலமுறை சொல்லிப் பார்த்து விட்டாள்.

"அதான் அப்பா நமக்கு நிறைய சொத்து விட்டுட்டுப் போயிருக்காரே! நான் எதுக்கு வேலைக்குப் போகணும்!" என்பான் முருகன்.

"குந்தித் தின்றால் குன்றும் கரையும்னு சொல்லுவாங்க."

"குன்று கரையக் கொஞ்ச நாள் ஆகும் இல்ல? அது கரைஞ்சப்பறம் பாத்துக்கலாம்!"

திருமணம் ஆனதும், அவன் மனைவி உமாவும் இதையேதான் சொல்லி வந்தாள். ஆயினும், முருகன் தன் இயல்பை மாற்றிக் கொள்ள முயலவில்லை.

ஒருநாள் முருகன் வீட்டு வாசலில் நான்கைந்து கார்கள் வந்து நின்றன.

கார் சத்தத்தைக் கேட்டு முருகன் புருவத்தை உயர்த்தினான். ஆனால் எழுந்து வாசலுக்குச் சென்று பார்க்க முயலவில்லை. 

உமா பரபரப்புடன் வாசலுக்குச் சென்று பார்த்தாள். 

முன்னால் இருந்த கார்களிலிருந்து இரண்டு போலீஸ் அதிகாரிகள் இறங்க, மத்தியில் இருந்த காரிலிருந்து இறங்கியவரைப் பார்த்ததும் உமாவுக்கு அதிர்ச்சி.

முதலமைச்சர்!

உமாவுக்கு வணக்கம் தெரிவித்த முதல்வர், "முருகன் வீடு இதானே? இருக்காரா?" என்றார்.

"இருக்காரு...வாங்க!" என்றாள் உமா தடுமாற்றத்துடன். அவளுக்கு எதுவும் புரியவில்லை.

உமா வீட்டுக்குள் நுழைய, அவள் பின்னே இரண்டு போலீஸ் அதிகாரிகளும், முதல்வரும் சென்றனர்.

வீட்டுக்குள் அவர்கள் நுழைந்ததும், அவர்களைப் பார்த்த முருகன் வியப்புடன் சட்டென்று எழுந்து நின்று, "செல்வம், நீயா?" என்றான்.

"நான்தான் முருகா! எப்படி இருக்கே?" என்றார் முதல்வர் செல்வம்.

பிறகு உமாவைப் பார்த்துச் சிரித்தபடி, "நானும் முருகனும் பள்ளியில் ரெண்டு வருஷம் சேர்ந்து படித்தோம். அப்புறம் அவன் குடும்பம் இந்த ஊருக்கு வந்துடுச்சு. சொல்லி இருப்பானே! அப்போது நாங்க நெருக்கமான நண்பர்கள். இப்பவும்தான்!" என்ற செல்வம், முருகனைப் பார்த்துச் சிரித்து விட்டு, "இல்லையாடா?" என்றார்.

"ஆமாம்" என்றான் முருகனும் சிரித்தபடியே.

சிறிது நேரம் முருகனிடம் பேசி விட்டுக் கிளம்பிய செல்வம், முருகனிடம், "உனக்கு எந்த உதவி வேணும்னாலும் எங்கிட்ட கேளு. நீ எப்ப ஃபோன் பண்ணினாலும் உடனே எங்கிட்ட ஃபோனைக் கொடுக்கணும்னு என் உதவியாளர்கிட்ட சொல்லிடறேன்" என்றார்.

உமாவைப் பார்த்து, "கும்பகோணத்துக்குக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்தபோது, பக்கத்தில இருக்கற இந்த ஊர்ல முருகன் இருக்கான்னு நினைவு வந்தது. அதனால அவனைப் பாத்துட்டுப் போகலாம்னு உடனே வந்துட்டேன். முன்னறிவிப்பு இல்லாம வந்தது உங்களுக்குத் தொந்தரவா இருந்திருக்கும். நீங்க கொடுத்த காப்பி ரொம்ப நல்லா இருந்தது, வரேன், வணக்கம்!" என்று சொல்லி விட்டுச் சென்றார்.

முதல்வர் சென்ற பிறகு, உமா முருகனிடம், "முதல்வர் செல்வம் உங்களோட படிச்சவர்னு நீங்க சொல்லவே இல்லையே!" என்றாள்.

"அதை ஒரு முக்கியமான விஷயமா நான் நினைக்கல!" என்றான் முருகன்.

'எந்த உதவி வேண்டுமானாலும் கேள், எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்!' என்று முதல்வர் சொல்லி விட்டுப் போனதை நினைத்துப் பார்த்தாள் உமா.

ஒரு தொழிலோ, வியபாரமோ தொடங்கினால், அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கக் கூடும். அப்படி இல்லாவிட்டால் கூட, முருகன் முதல்வரின் நண்பன் என்று இப்போது பலருக்கும் தெரிந்து விட்டதால், அதுவே அவர்களுக்கு ஒரு மதிப்பையும் அங்கீகாரத்தையும் கொடுக்கும். அவர்கள் செய்யும் எந்த முயற்சிக்கும் அது உதவும்.

ஆனால் இதைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை உயர்த்திக் கொள்வதற்கான, அல்லது குடும்பத்தை முன்னேற்றுவதற்கான செயல் எதிலும் முருகன் ஈடுபடுவான் என்ற நம்பிக்கை உமாவுக்கு இல்லை.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 606:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

பொருள்:
நாட்டை ஆளும் தலைவருடைய உறவு தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

605. விஸ்வநாதா, வேலை தேடு!

"ஏண்டா படிப்பை முடிச்சுட்டே. வேலைக்கு முயற்சி பண்ண வேண்டாமா?" என்றார் அருணாசலம்.

"பண்ணிக்கிட்டுத்தானேப்பா இருக்கேன்?" என்றான் விஸ்வநாதன்.

"என்னத்தை பண்ற? பரீட்சை எழுதினவுடனேயே பேப்பரைப் பாத்து அப்ளிகேஷன் போடுன்னு சொன்னேன். நீ கேக்கல?"

"ரிசல்ட் வந்தப்பறம்தானே அப்பா அப்ளை பண்ண முடியும்?"

"ரிசல்ட்டை எதிர்பார்க்கறவங்க கூட விண்ணப்பிக்கலாம்னு எத்தனையோ விளம்பரங்கள்ள வந்திருக்கு. நான் அதைப் பாத்துட்டு உங்கிட்ட எடுத்துக் கொடுத்திருக்கேன். ஆனா நீ எல்லாத்துக்கும் விண்ணப்பிக்கல. ஒண்ணு ரெண்டுக்குத்தான் விண்ணப்பம் போட்ட!"

"பரீட்சை முடிஞ்சப்பறம் கொஞ்ச நாள் ரிலாக்ஸ்டா இருக்கலாம்னு நினைச்சேன்!"

"வேலை தேடிக்கிறது வாழ்க்கையில முக்கியம் இல்லையா? வேலை கிடைச்சப்பறம் ரிலாக்ஸ்டா இருக்கலாமே! உன் ஃபிரண்ட் ரகுவைப் பாரு. பரீட்சை முடிஞ்ச அடுத்த நாள்ளேந்து பேப்பர்ல விளம்பரங்களைப் பாத்து தனக்குப் பொருத்தமான வேலை அத்தனைக்கும் விண்ணப்பம் போட்டான். இப்ப அவனுக்கு ஒரு நல்ல கம்பெனியிலேந்து இன்டர்வியூ வந்திருக்கு!"

"அவன் ஒரு புத்தகப் புழுப்பா, காலேஜில படிக்கறப்ப புத்தகங்களைப் படிச்சுக்கிட்டிருந்தான். இப்ப பேப்பர்ல விளம்பரங்களைப் படிச்சுக்கிட்டிருக்கான். வேலை  கிடைச்சாலும் இன்னும் நல்ல வேலை கிடைக்குமான்னு பேப்பர் விளம்பரங்கள்ள தேடிக்கிட்டிருப்பான். ரிடயர் ஆனப்பறம் கூட அப்படித்தான் பண்ணுவான். அவனை மாதிரி என்னால இருக்க முடியாது!"

"அவனை மாதிரி இருக்க வேண்டாம். பரீட்சை முடிஞ்சு ரெண்டு மாசம் ஜாலியா இருந்துட்ட. பத்து மணி வரையிலும் தூங்கின, ஊரைச் சுத்தின. இப்ப ரிசல்ட் வந்து புரொவிஷனல் சர்ட்டிஃபிகேட் கூட வாங்கியாச்சு. தினம் ஒரு அரை மணி நேரம் பேப்பர்ல வேலை விளம்பரங்களைப் பாக்கலாம் இல்ல? 

"நான் பாக்கறப்பல்லாம் பேசும் படம், பொம்மைன்னு சினிமாப் பத்திரிகைகளைப் படிச்சுக்கிட்டிருக்க. பொது அறிவை வளர்த்துக்க எதையாவது படிச்சா உபயோகமா இருக்கும்! நான் பேப்பர்ல தேடிப் பார்த்து விளம்பரங்களைத் தேடி எடுத்து உங்கிட்ட காட்டினா அதுக்கும் அப்ளிகேஷன் போட மாட்டேங்கற!"

"நீங்க காட்டினதுக்கெல்லாம் விண்ணப்பம் போட்டேனே அப்பா!"

"எங்க போட்ட? நான் பத்து காட்டினா, அதில ரெண்டு, மூணுக்குத்தான் போடற. அதுவும் நான் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தனதால. சில சமயம் மறந்துட்டேன்னு சொல்லுவ. அதுக்குள்ள கடைசித் தேதி முடிஞ்சிருக்கும். 

"நீ படிப்பை முடிச்சு அஞ்சு மாசம் ஆச்சு. உன்னோட படிச்சவங்கள்ள ஏழெட்டு பேரு வேலைக்குப் போயிட்டாங்க. எனக்குத் தெரியாதவங்க இன்னும் சில பேரு கூடப் போயிருக்கலாம். 

"காலையில பத்து மணிக்குத்தான் எழுந்திருக்கற. அப்புறமும் உருப்படியா ஒண்ணும் செய்யாம சோம்பேறித்தனமா இருக்க. செய்ய வேண்டிய விஷயங்களை நேரத்தில செய்யாம, மறந்து போயிட்டேன்னு சாதாரணாமா சொல்ற! 

"இப்படியே போனா உன் எதிர்காலம் எப்படி இருக்குமோன்னு எனக்குக் கவலையா இருக்கு!" என்றார் அருணாசலம் கவலையுடனும், வருத்தத்துடனும்.

"இனிமே சுறுசுறுப்பா இருக்கேம்ப்பா. என்னை மாத்திக்கறேன்!" என்றான் விஸ்வநாதன்.

ஆனால் விஸ்வநாதன்.தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யவில்லை.

விஸ்வநாதன் படிப்பை முடித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவில்லை. இப்போதெல்லாம்  அருணாசலம் தன் மகனுக்காக வேலை விளம்பரங்களைப் பார்ப்பதில்லை. சலிப்படைந்து ஓய்ந்து விட்டார்.

"பப்ளிக் செக்டார்ல புதுசா ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கறாங்க. நிறைய பேரை வேலைக்கு எடுக்கப் போறாங்க. இன்னிக்கு பேப்பர்ல விளம்பரம் வந்திருக்கு. இதுக்கு அப்ளை பண்ணினா நமக்கு வேலை கிடைக்க நல்ல வாய்ப்பு இருக்கு. நல்ல கம்பெனி, நல்ல வேலை. நல்ல சம்பளம். வாழ்க்கையில செட்டில் ஆயிடலாம்! நான் இன்னிக்கே அப்ளை பண்ணப் போறேன். நீயும் பண்ணிடு" என்றான் விஸ்வநாதனின் நண்பன் குமார்.

"பண்ணிடறேன்!" என்றான் விஸ்வநாதன்.

வீட்டுக்குப் போனதும் பேப்பரை எடுத்து அந்த விளம்பரத்தைப் பார்க்க நினைத்த விஸ்வநாதன், வீட்டில் அப்பா இருந்ததால் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான். அப்பாவுக்குத் தெரிந்தால் இன்றைக்கே விண்ணப்பம் போடச் சொல்லி அவசரப்படுத்துவார். 

அதுதான் நேரம் இருக்கிறதே என்று அடுத்த இரண்டு மூன்று நாட்கள் பேசாமல் இருந்து விட்டான். 

அதன் பிறகு வீட்டுக்கு யாரோ உறவினர்கள் வந்து இரண்டு நாட்கள் தங்கி விட்டுப் போனதில் விஸ்வநாதனின் கவனம் சிதறியது. உறவினர்கள் சென்ற பிறகு, விஸ்வநாதனுக்கு அந்த விஷயம் மறந்தே போய் விட்டது.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த விஷயம் நினைவுக்கு வந்ததும் விளம்பரம் வந்த பேப்பரைத் தேடினான் விஸ்வநாதன். அது எந்தத் தேதி என்று நினவுக்கு வரவில்லை. பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பிருந்தே ஒவ்வொரு பேப்பராக எடுத்துத் தேடினான்.

விளம்பரம் கிடைக்கவில்லை.

குமார் விளம்பரத்தை வெட்டி வைத்திருப்பான். ஆனால் அவன் ஊரில் இல்லை.

சரியாகப் பார்த்திருக்க மாட்டோம் என்று நினைத்து மீண்டும் தேட நினைத்தான். சோம்பலாக இருந்ததால் அடுத்த நாள் தேடலாம் என்று நினைத்து அன்றைய தேடலை முடித்துக் கொண்டான்.

அடுத்த நாள் மீண்டும் பொறுமையாகத் தேடியபோது விளம்பரம் கிடைத்தது.

'அப்பாடா!' என்று நிம்மதியடைந்து விளம்பரத்தைப் பார்த்தபோதுதான் ஒரு விஷயம் புரிந்தது.

வேலைக்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற, தபால் தலை ஒட்டிய உறையைடன் டில்லியில் இருக்கும் அந்தப் பொதுத்துறை நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர்களிடமிருந்து விண்ணப்பப் படிவம் வந்ததும், அதைப் பூர்த்தி செய்து, சான்றிதழ்களின் நகல்களையும், பத்து ரூபாய் போஸ்டல்  ஆர்டரையும் இணைத்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்கள் சென்றடைவதற்கான கடைசித்தேதிக்கு ஐந்து நாட்கள்தான் இருந்தன. டெல்லி அலுவலகத்துக்கு தபால்தலை ஒட்டிய உறையை அனுப்பி அவர்களிடமிருந்து விண்ணப்பம் வர குறைந்தது நான்கு நாட்கள் ஆகும். 

அதற்குப் பிறகு அன்றே விண்ணப்பத்தை அனுப்பினாலும் அது டில்லி அலுவலகத்தை அடையக் குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும். இடையில் ஒரு ஞாயிற்றுக் கிழமை வேறு வருகிறது. அதனால் விண்ணப்பம் போய்ச் சேரும்போது கடைசித்தேதி தாண்டி இருக்கும்!

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது இயலாத செயல் என்று நினைத்து பேப்பரை மூடி வைத்தான் விஸ்வநாதன். 

கொஞ்சம் சோம்பல் படாமல் இருந்திருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கலாமே என்ற இலேசான வருதம் அவன் மனதில் எழுந்தது.

அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த அருணசலம், மகன் பழைய பேப்பர்களை எடுத்து வைத்து விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, 'பரவாயில்லை. இப்பவாவது இவனுக்குப் பொறுப்பு வந்திருக்கே!' என்று நினைத்துக் கொண்டார்.

மூன்று மாதங்கள் கழித்து குமாருக்கு அந்தப் பொதுத்துறை நிறுவனத்திலிருந்து வேலை நியமன உத்தரவு வந்தது.

"எனக்கே இந்த வேலை கிடைச்சிருக்கறப்ப உனக்கு இது நிச்சயமாக் கிடைச்சிருக்கும். என்னை விட நீ எல்லா விதத்திலேயும் பிரைட்டாச்சே! நீ ஏண்டா அப்ளை பண்ணாம விட்டே?" என்றான் குமார்.

தன் சோம்பேறித்தனத்தால் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற எண்ணம் முதல் முறையாகத் தோன்றி விஸ்வநாதனின் மனதை அழுத்தியது.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 605:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

பொருள்:
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாகும்.

குறள் 606 (விரைவில்)
      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Monday, June 27, 2022

795. வேண்டாம் நட்பு!

"நாம ஒத்தர்கிட்ட உதவி கேட்டா, முடிஞ்சா நமக்கு உதவி செய்யணும், இல்லேன்னா முடியாதுன்னு சொல்லணும். 

"அதை விட்டுட்டு  எனக்கு உபதேசம் பண்றான். உபதேசம் பண்ண இவன் யாரு? என் அப்பாவா, அண்ணனா? அவனோட உபதேசத்தை நான் கேக்கலேங்கறதுக்காக என்னைக் கண்டபடி பேசிட்டான், அதுவும் அவன் மனைவி முன்னாலேயே! அவமானத்தில எனக்கு அழுகையே வந்துடும் போல ஆயிடுச்சு" என்றான் செண்பகராமன் ஆத்திரத்துடன்.

சொல்லும்போதே அவன் தொண்டை அடைத்துக் கொண்டது. 

"'யாரைச் சொல்றீங்க? என்ன நடந்தது?" என்றாள் அவன் மனைவி மஞ்சுளா.

"எல்லாம் என் நண்பன் அமுதனைப் பத்தித்தான்.அமுதன்னு பேரை வச்சுக்கிட்டு விஷத்தைக் கக்கிட்டான். அவனை என் நண்பன்னு சொல்லிக்கவே எனக்கு அவமானமா இருக்கு. இதோட அவன் நட்புக்குத் தலை முழுகிட்டேன்."

"என்ன நடந்தது"

"இந்த கிரிப்டோ கரன்சின்னெல்லாம் சொல்றாங்க இல்ல?"

"ஆமாம். நான் கேள்விப்படிருக்கேன். ஆனா அது என்னன்னு புரியல. ஏதாவது வெளிநாட்டு கரன்சியா?"

"வெளிநாட்டு கரன்சியெல்லாம் இல்ல. பிட்காயின் தெரியுமா?"

"பேர்தான் தெரியும். ஆனா பாத்ததில்ல. கோல்ட் காயின்தான் பாத்திருக்கேன்!" என்றாள் மஞ்சுளா.

"அதைப் பாக்க முடியாது. அதையெல்லாம் வர்ச்சுவல் கரன்சிம்பாங்க. அதாவது இல்லாத ஒண்ணை இருக்கற மாதிரி வச்சுக்கறது!"

"இல்லாததை இருக்கற மாதிரி வச்சுக்கிட்டு என்ன பண்றது?" என்றாள் மஞ்சுளா அப்பாவித்தனமாக.

"இப்ப பிட்காயின், லூனா, இன்னும் சில கிரிப்டோகரன்சி எல்லாம் இருக்கு, எல்லாமே வர்ச்சுவல் கரன்சிதான். இப்ப ரிலயன்ஸ், மாருதி மாதிரி கம்பெனி ஷேர்களையெல்லாம் பங்குச் சந்தையில வாங்கி விக்கற மாதிரி, கிர்ப்டோகரன்சிக்கும் ஒரு எக்ஸ்சேஞ்ச் இருக்கு. அதுல இதையெல்லாம் வாங்கி வித்தா நல்ல லாபம் வரும்."

"'யாருக்கு?"

செண்பகராமன் மஞ்சுளாவை முறைத்துப் பார்த்தான். மனைவிக்குத் தெரியாத ஒரு விஷயத்தை அவளுக்கு விளக்கும் உற்சாகத்தில் சற்றே மறக்கப்பட்டிருந்த கோபமும், வருத்தமும் மீண்டும் மேலெழுந்தன.

'இவள் தெரியாமல் கேட்கிறாளா, அல்லது என்னைக் கிண்டல் செய்கிறாளா?'

"எல்லாருக்கும்தான். ஆனா சில சமயம் லாபம் வரும், சி சமயம் நஷ்டம் வரும். ஸ்டாக் மார்க்கெட்ல வர மாதிரிதான்."

"ஏங்க, ஸ்டாக் மார்க்கெட்ல ஒரு கம்பெனிக்கு நல்ல லாபம் வந்தா அதோட விலை ஏறும். நஷ்டம் வந்தாலோ, இல்ல லாபம் குறைஞ்சாலோ விலை இறங்கும். இந்த வர்ச்சுவல் கரன்சி விலையெல்லாம் எப்படி ஏறி இறங்கும்?"

"அமுதன் கேக்கற மாதிரியே நீயும் கேக்கறியே! நீ நினைக்கிற மாதிரி ஸ்டாக் மார்க்கெட்ல விலை ஏறுவது, இறங்குவதெல்லாம் ஒரு கம்பெனியோட லாப நஷ்டத்தை மட்டும் வச்சு இல்ல. டிமாண்ட், சப்ளைன்னெல்லாம் இருக்கு. பொருளாதாரம் படிச்சிருந்தாதான் அதெல்லாம் புரியும்!"

"அது சரிதான். நான் படிக்கல. ஆனா நீங்க கூட ஃபிசிக்ஸ்தானே படிச்சிருக்கீங்க? பொருளாதாரம் படிக்கலியே! அது இருக்கட்டும். நான் கேட்ட மாதிரிதான் அமுதனும் கேட்டார்னு சொன்னீங்க. அவர் எதுக்கு இப்படிக் கேட்டாரு? உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடந்ததுன்னு நீங்க சொல்லவே இல்லையே!" என்றாள் மஞ்சுளா.

"கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்ல முதலீடு பண்ணினா நல்ல லாபம் கிடைக்கும்னு தோணிச்சு. அதுக்குத்தான் அவங்கிட்ட இருபத்தையாயிரம் ரூபாய் கடன் கேட்டேன். அதுக்குத்தான் இப்படியெல்லாம் கேட்டு, எனக்கு உபதேசம் பண்ணி, ஏதாவது மியூசுவல் ஃபண்ட்ல எஸ் ஐ பி மாதிரி மாசம் ஆயிரம் ரூபா போட்டாக் கூட, அதிக ரிஸ்க் இல்லாம ஓரளவு லாபம் வர வாய்ப்பு இருக்குன்னு எனக்கு உபதேசம் பண்றான். 

"அதைச் சொல்ல இவன் எதுக்கு? அதுதான் டிவியில தோனி கூடச் சொல்றாரே! பணம் கொடுக்காட்டாக் கூடப் பரவாயில்ல, என்னை பொறுப்பில்லாதவன், ஒரு விஷயத்தில ஈடுபடறதுக்கு முன்னால கொஞ்சம் கூட யோசனை பண்ணாம கண்ணை மூடிக்கிட்டு பள்ளத்தில விழற அவசரக் குடுக்கைன்னெல்லாம் கண்டபடி திட்டிட்டான். 

"நம்மகிட்ட சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்த ஒரு நண்பன் இப்படியெல்லாம் பேசினது எனக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருந்தது தெரியுமா? இன்னும் அஞ்சு நிமிஷம் அங்கே இருந்திருந்தேன்னா அழுதே இருப்பேன். 'போடா, உனக்கும், எனக்கும் நடுவில இனிமே எந்தப் பேச்சும் இல்லே'ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்."

நடந்ததை மனைவியிடம் பகிர்ந்து கொண்டதும் மனச்சுமை சற்றே குறைந்தது போல் இருந்தது செண்பகராமனுக்கு.

"என்னங்க! கிரிப்டோகரன்சி சந்தையில பெரிய வீழ்ச்சியாமே! எல்லா கரன்சியும் ரொம்ப விலை குறைஞ்சுடுச்சாமே! நீங்க சொன்னீங்களே லூனாவோ, ஏதோ ஒண்ணு, அதோட விலை பூஜ்யத்துக்கிட்ட வந்துடுச்சாமே! டிவியில சொன்னாங்க!" என்றாள் மஞ்சுளா.

செண்பகராமன் மௌனமாக இருந்தேன்.

"அன்னிக்கு நீங்க சொன்னபோதே நினைச்சேன், உங்க நண்பர் உங்களோட நன்மைக்காகத்தான் உங்ககிட்ட அப்படிப் பேசி இருப்பாருன்னு. கடுமையாப் பேசினாதான், நீங்க இதில இறங்காம இருப்பீங்கன்னு நினைச்சுக் கூட அப்படிப் பேசி இருக்கலாம். ஆனா, அன்னிக்கு நீங்க அவர் மேல கோபமா இருக்கச்சே நான் உங்ககிட்ட எதுவும் சொல்ல விரும்பல. அவர் சொன்ன மாதிரியே நடந்திருக்கு. நீங்க முதலீடு பண்ணி இருந்தா, உங்களுக்குப் பெரிய நஷ்டம் வந்திருக்கும். மறுபடி அதோட விலைகள்ளாம் ஏறுமான்னு தெரியாது. 

"வேணுங்கறவங்கதான் அழ அழச் சொல்லுவாங்கன்னு ஒரு பழமொழி இருக்கு. நமக்கு நல்லது நினைக்கிறவங்கதான் நாம மனசு வருத்தப்பட்டாலும் பரவாயில்லேன்னு நினைச்சு நம்ம நன்மைக்காக நம்மகிட்ட கடுமையாப் பேசுவாங்க. அமுதன் மாதிரி ஒரு நண்பர் உங்களுக்கு மட்டும் இல்ல, எல்லாருக்குமே வேணும். இந்த ரெண்டு மாசத்தில உங்க நண்பர் உங்களுக்கு நிறைய தடவை ஃபோன் பண்ணினாரு. நீங்க ஃபோனை எடுக்கல. நீங்களே ஃபோன் பண்ணி அவர்கிட்ட பேசி பழையபடி நட்போட இருங்க."

மஞ்சுளா கணவனின் முகத்தைப் பார்த்தாள். செண்பகராமன் மௌனமாக இருந்தான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல் 

குறள் 795:
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

பொருள்: 
நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லித் தடுத்தும், தவறைக் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செயல்படும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Monday, June 20, 2022

794. விலக்கிக் கொள்ளப்பட்ட டெண்டர்!

"ஏன் சார் கடைசி நிமிஷத்தில டெண்டரை வித்டிரா பண்ணச் சொல்றீங்க? நாமதான் குறைவா கோட் பண்ணி இருக்கோம்னு நினைக்கிறேன். நமக்குத்தான் ஆர்டர் கிடைக்கும்" என்றார் மானேஜர் பலராமன்.

"நாம வித்டிரா பண்ணினா அடுத்தாப்பல யாருக்கு ஆர்டர் கிடைக்கும்னு நினைக்கிறீங்க?"என்றார் மானேஜிங் டைரக்டர் சிவராம்.

"அநேகமா பூர்ணிமா இண்டஸ்டிரீஸுக்குக் கிடைக்காலாம். அவங்க பெரிய க்ரூப். ஆனா அவங்களை பீட் பண்ணி நாம ஜெயிச்சா, நமக்கு அது ஒரு பெரிய கிரடிட் ஆச்சே!"

"இல்லை. வித்டிரா பண்ணிடுங்க, வேற எத்தனையோ டெண்டர்கள் இருக்கு! பாத்துக்கலாம்"  என்றார் சிவராம் சுருக்கமாக.

பலராமன் புரியாமல் சிவராமைப் பார்த்தார்.

சிவராமின் நிறுவனம் டெண்டரை விலக்கிக் கொண்ட பிறகு, டெண்டர்கள் திறந்து பார்க்கப்பட்டதும், பூர்ணிமா இண்டஸ்ட்ரீஸின் டெண்டர் தொகை  எல்லாவற்றுக்குள்ளும் குறைவாக இருந்ததால் அவர்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டது.

"பூர்ணிமா இண்டஸ்ட்ரீஸோட சேர்மன் மதுசூதனன் எனக்கு ஃபோன் பண்ணினாரு!" என்றார் சிவராம்.

"அப்படியா? ஆச்சரியமா இருக்கே! அவரு ரொம்ப பிசியானவர், அவரைப் பாக்க அப்பாயின்ட்மென்ட் கிடைக்கறது கஷ்டம்னு சொல்லுவாங்களே!" என்றார் பலராமன்.

"நாம டெண்டரை விலக்கிக்கிட்டது அவருக்குக்  கொஞ்சம் ஆச்சரியமா இருந்திருக்கும்னு நினைக்கிறேன். அதனால நாம எவ்வளவு கோட் பண்ணினோம் ஏன் விலக்கிக்கிட்டோம்னு கேட்டாரு. நாம கோட் பண்ணின தொகையைச் சொன்னதும், அப்படின்னா உங்களுக்குத்தான் டெண்டர் கிடைச்சிருக்கும், ஏன் விலக்கிக்கிட்டீங்கன்னு கேட்டாரு" என்று சொல்லி நிறுத்தினார் சிவராம்.

";நீங்க என்ன சொன்னீங்க?" என்றார் பலராமன் காரணத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்.

";நான் அவர்கிட்ட சொன்னது இருக்கட்டும். காரணத்தை உங்ககிட்ட சொல்றேன். நான் டெண்டரை விலக்கிக்கச் சொன்ன காரணம் மதுசூதனனோட தொடர்பு ஏற்படுத்திக்கணும்னுதான். நாம கடைசி நிமிஷத்தில டெண்டரை விலக்கிக்கிட்டா அது ஏன்னு தெரிஞ்சுக்க அவர் முயற்சி செய்வாரு, அப்ப அவரோட தொடர்பு ஏற்படுத்திக்கலாம்னு நினைச்சேன். ஆனா அவரே ஃபோன் பண்ணுவார்னு எதிர்பாக்கல!" என்றார் சிவராம்.

"அவரோட எதுக்கு சார் தொடர்பு ஏற்படுத்திக்கணும்? அவங்க நம்ம காம்பெடிடர் ஆச்சே?" என்றார் பலராம்.

"அவங்க பெரிய நிறுவனம். நாலைஞ்சு தலைமுறையா இருக்காங்க. நல்ல பேரோட கௌரவமா இருக்காங்க. நம்மளோடது ரொம்ப சின்ன நிறுவனம். நமக்கும் அவங்களுக்கும் போட்டின்னு சொல்ல முடியாது. எப்பவாவது இது மாதிரி சில டெண்டர்கள்ள போட்டி வரலாம். மத்தபடி அவங்க மார்க்கெட் வேற, நம்ம மார்க்கெட் வேற. 

"மதுசூனன் ஒரு நல்ல தொழில் பரம்பரையில வந்தவர்ங்கறதோட ஒரு நேர்மையான மனிதர். ஒரு தடவை ஒரு அமைச்சரோட உதவியாலதான் அவருக்கு ஒரு அரசாங்க ஆர்டர் கிடைச்சதுன்னு ஒரு பத்திரிகையில செய்தி போட்டாங்க. 

"அமைச்சர் அந்தப் பத்திரிகை மேல வழக்குப் போடப் போறதாச் சொன்னதும் அந்தப் பத்திரிகை ஆதாரம் இல்லாம அந்தச் செய்தியைப் போட்டுட்டதாச் சொல்லி மன்னிப்பு கேட்டுது. ஆனா மதுசூதனன் அந்த ஆர்டரை வேண்டாம்னுட்டாரு. 

"முதலமைச்சர், சில பெரிய தொழிலதிபர்கள் உட்பட பல பேர் சொல்லியும் அவர் தன் முடிவை மாத்திக்கல. இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்தப்பறம் அந்த ஆர்டரை எடுத்து செய்ய விரும்பலன்னு சொல்லிட்டாரு. அதனால  தன் கம்பெனிக்குக் கிடைக்க வேண்டிய லாபம் கைவிட்டுப் போனதைப் பத்திக் கூட அவர் கவலைப்படல. 

"பழிக்கு அஞ்சற ஒரு நல்ல மனிதரோட நட்பு கிடைக்கட்டும்னுதான் இந்த டெண்டர்லேந்து விலகச் சொன்னேன். அதனால நமக்குக் கிடைக்கக் கூடிய லாபம் கைநழுவிப் போனதைப் பத்தி நான் கவலைப்படல!" என்றார் சிவராம்.

"ஒரு விதத்தில நீங்களும் மதுசூதன்ன் மாதிரிதான் நடந்துக்கிட்டிருக்கீங்க. அவரு பழிக்கு அஞ்சி, கிடைச்ச ஆர்டரை விட்டாரு. நீங்க அவரோட நட்புக்காக, கிடைக்க வேண்டிய ஆர்டரை விட்டுட்டீங்க! ஆனா, அவர் உங்ககிட்ட ஃபோன்ல பேசினதால அவரோட நட்பு உங்களுக்குக் கிடைக்கும்னு என்ன நிச்சயம்?" என்றார் பலராமன்.

"அவரு என்னை நாளைக்கு அவர் வீட்டுக்கு டின்னருக்குக் கூப்பிடிருக்காரே! என் மனைவியையும் அழைச்சுக்கிட்டு வரச் சொல்லி இருக்காரே!" என்றார் சிவராம் உற்சாகத்துடன்."

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல் 

குறள் 794:
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

பொருள்: 
நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Saturday, June 18, 2022

604. தடைபட்டுப் போன சடங்கு!

"என்னை மாதிரி வறுமையான குடும்பத்தில பிறந்து, படிப்பு இல்லாம இருக்கிறவங்க பொழைக்கறதுக்காகத் திருட்டுத் தொழில்ல ஈடுபடறது சகஜம்தான். மாட்டிக்காம இருக்கணும். ஆனா நான் மாட்டிக்கிட்டேன். ரெண்டு வருஷம் உள்ளே போட்டுட்டாங்க. ஆமாம், நீ என்ன தப்பு பண்ணிட்டு உள்ளே வந்தே?" என்றான் சத்யா, மாணிக்கத்தைப் பார்த்து.

மாணிக்கம் மௌனமாக இருந்தான்.

"அவரு எல்லாம் வேற விதம்ப்பா! நம்மை மாதிரி பிக் பாக்கெட் அடிக்கிறது, வீடு புகுந்து திருடறது எல்லாம் இல்ல. ஜென்டில்மேன்னு சொல்வாங்களே,அது மாதிரி ஆளு அவரு!" என்றான் சேகர் என்ற மற்றொரு கைதி.

மற்ற கைதிகள் இதைக் கேட்டுச் சிரித்தனர்.

"ஓ, ஒயிட் காலர் கிரைம்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரிக் குற்றம் செஞ்ச ஆளா நீ" என்றான் ஓரளவு படித்திருந்த ஒரு கைதி.

மாணிக்கம் தலை குனிந்தபடி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

மாணிக்கத்தைப் பார்க்க சிறைக்கு வந்திருந்த அவன் அம்மா மங்களம், "உனக்கு ஏண்டா இந்த கதி!" என்று அழுதாள்.

சற்று நேரம் மகனுடன் பொதுவாகப் பேசிய பிறகு, "அடுத்த வாரம் உன் அப்பாவோட சடங்கு வருது. அவரு போனதிலேந்து அஞ்சு வருஷமா ஐயரை வச்சு முறையா அவருக்கு சடங்கு செஞ்சுக்கிட்டிருந்தே. இந்த வருஷம் அது நடக்காது!" என்றாள் வருத்தத்துடன்.

மாணிக்கம் தன் தந்தையைப் பற்றி நினைத்துப் பார்த்தான் எவ்வளவு பெரிய மனிதர் அவர்! ஊரில் அவருக்கு எவ்வளவு மதிப்பு இருந்தது!

தன் அப்பாவின் நற்பெயரே தனக்கு ஒரு பெரிய சொத்தாக இருந்தும், அப்பா மறைந்த பிறகு, சோம்பலினால் நீண்ட காலம் வேலைக்கு முயற்சி செய்யாமல் இருந்து விட்டு, பிறகு குடும்ப நிலை மோசமானதும் வேறு வழி இல்லாமல் ஒரு சிறிய வேலையில் சேர்ந்து, வருமானம் போதாததால், முதலாளியின் கையெழுத்தைப் போட்டுக் காசோலையையை மாற்ற முயன்று மாட்டிக் கொண்டு இப்போது சிறையில் இருக்கும் நிலைமைக்கு வந்திருப்பதை நினைத்தான்.

'அப்பாவோட பேருக்குக் களங்கம் ஏற்படுத்தி நான் அவருக்கு செஞ்சிருக்கிற துரோகத்தோட ஒப்பிடறப்ப, அவருக்கு சடங்கு செய்ய முடியாம போறது பெரிய விஷயம் இல்லை!' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் மாணிக்கம்.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 604:
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு..

பொருள்:
சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Thursday, June 16, 2022

603. அரசர் ஏன் அப்படிச் சொன்னார்?

"அரசே! உங்கள் முன்னோர்கள் யாரும் செய்யாத அளவுக்கு உங்கள் சாம்ராஜ்யத்தை விஸ்தரித்திருக்கிறீர்கள். சரித்திரத்தில் உங்கள் பெயர் நிச்சயம் இடம் பெறும்!" என்றார் அமைச்சர் மழவராயர்.

"சரித்திரம் என்பது ஒரு தொடர் நிகழ்வு. கடந்த காலம் மட்டும் சரித்திரம் இல்லை. எதிர்காலமும் சரித்திரத்தில் இடம் பெறுமே!" என்றார் அரசர் சூரிய கீர்த்தி.

"ஆம் அரசே! ஆனால் அதைப் பற்றி என்ன?"

"ஒன்றுமில்லை!" என்றார் சூரியகீர்த்தி விட்டத்தைப் பார்த்தபடி.

அமைச்சர் அரசரைச் சற்றுக் குழப்பத்துனும், மிகுந்த கவலையுடனும் பார்த்தார்.

பல நாடுகளை வென்று தன்னை ஒரு பேரரரசராக நிலை நாட்டிக் கொண்ட பிறகும், அரசர் சூரியகீர்த்தி சிறிது காலமாக ஏதோ கவலையுடன் இருப்பதையும், தன் கவலையைப் புதிரான பேச்சுக்களால் வெளிப்படுத்துவதையும் அமைச்சர் கவனித்தார். 

ஆனால் அதற்கான காரணம் அமைச்சருக்குப் புரியவில்லை. அரசரிடம் நேரே கேட்பதற்கும் தயக்கமாக இருந்தது. 

அரசரே ஒருநாள் தன்னிடம் தன் மனக்கவலையைப் பற்றி விரிவாகக் கூறுவார் என்று அமைச்சர் எதிர்பார்த்தார்.ஆனால் அந்த சந்தர்ப்பம் வரவில்லை. விரைவிலேயே சூரியகீர்த்தி காலமாகி விட்டார்.

"அரசே! உங்கள் தந்தை சில நாடுகளை வென்று நம் நாட்டுடன் இணைத்து விட்டார். வேறு சில நாடுகளை நாம் வென்ற பின், அந்த மன்னர்கள் நமக்கு சிற்றரசர்களாக மாறி நம் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். அந்த நாடுகளுக்கெல்லாம் உங்கள் தந்தை அவ்வப்போது சென்று மக்களைச் சந்தித்து வருவார். அதனால் அந்த மக்களும் மன்னர் மீது அன்பு கொண்டிருந்தனர். இப்போது நீங்கள் அந்த நாடுகளுக்குச் சென்று சிற்றரசர்களையும், மக்களையும் சந்திக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நம் மீது தொடர்ந்து அன்பும் விஸ்வாசமும் இருக்கும்" என்றார் அமைச்சர் புதிய மன்னர் வீரமானிடம்.

"அவையெல்லாம் தேவையற்றவை அமைச்சரே! எல்லா ஊர்களிலும் அரசு அதிகாரிகள் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள் அல்லவா, அது போதும்" என்றான் வீரமான்.

சற்று விட்டுப் பிடிக்கலாம் என்று நினைத்து அமைச்சர் சிறிது காலம் கழித்து மீண்டும் இது பற்றி வீரமானிடம் பேசினார். ஆனால் அப்போதும் வீரமான் அதற்கு இணங்கவில்லை.

வீரமான் அரண்மனைக்குள்ளேயே அடைந்திருந்து அறுசுவை உணவு, மது, மாது என்று உல்லாச வாழ்க்கையிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தான்.

"அரசே! சில சிற்றரசர்கள் சிறிய அளவில் தொந்தரவு கொடுக்க ஆரம்பத்திருக்ககிறார்கள். நாட்டின் சில பகுதிகளில் கலகங்களும் ஏற்படத் துவங்கி இருக்கின்றன. நீங்கள் ஒருமுறை அந்த இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தால் கலகங்கள் அடங்கி விடும். குழப்பம் விளைவிக்கும் சிற்றரசர்களையும் நீங்கள் ஒருமுறை நேரில் சந்தித்தால் அவர்கள் அடங்கி விடுவார்கள்" என்றார் அமைச்சர்.

"எல்லாவற்றையும் மன்னர்தான் செய்ய வேண்டுமென்றால்  அதிகாரிகள், அமைச்சரான நீங்கள் எல்லாம் எதற்கு" என்று கேட்டு விட்டு வீரமான் அந்தப்புரத்துக்குள் சென்று விட்டான்.

வீரமான் நாட்டைப் பாதுகாப்பான் என்று நம்புவது முட்டாள்தனம் என்று அமைச்சருக்குப் புரிந்தது. தானே தன்னால் முடிந்த அளவுக்கு ஏதாவது செய்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் பேரரசர் சூரியகீர்த்தி உருவாக்கிய இந்த சாம்ராஜ்யம் அவர் புதல்வர் காலத்திலேயே அழிந்து விடக் கூடும்.

சூரியகீர்த்தி "சரித்திரம் என்பது கடந்த காலம் மட்டுமல்ல, எதிர்காலமும் சேர்ந்ததுதான்" என்று ஒருமுறை கூறியது அமைச்சருக்கு நினைவு வந்தது.

அதன் பொருள் அவருக்கு இப்போது புரிந்தாற்போல் இருந்தது. தன் மகனைப் பற்றி அறிந்திருந்ததால்தான் சூரியகீர்த்தி அப்படிச் சொல்லி இருக்கிறார். அவர் கவலைக்கும் காரணம் அதுதான். 

தான் உருவாக்கிய சாம்ராஜ்யம் தன் மகனின் காலத்திலேயே அழிந்து விடுமோ என்ற அச்சத்தினால்தான் அவர் எதிர்காலமும் சரித்திரத்தில் இடம் பெறுமே என்று கவலையுடன் கூறி இருக்கிறார்.

சூரியகீர்த்தியின் அச்சம் உண்மையாகி விடக் கூடாதே என்று கவலைப்படத் தொடங்கினார் அமைச்சர். 

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 603:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.

பொருள்:
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.

குறள் 604 (விரைவில்)
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Tuesday, June 14, 2022

793. நல்லவரா, கெட்டவரா?

"உன்னோட சினேகிதம் எல்லாம் சரியில்ல. பார்த்து நடந்துக்க!" என்றார் சிவப்பிரகாசம், தன் மகன் முருகேஷிடம்.

"ஏங்க, அவன் வளர்ந்த பையன். அவனுக்குத் தெரியாதா? அவனுக்குப் போய் உபதேசம் பண்ணிக்கிட்டிருக்கீங்க!" என்றாள் அவர் மனைவி செண்பகம்.

"ஏன், பெரியவனாயிட்டான்னா பெத்தவங்க அவனுக்கு புத்தி சொல்லக் கூடாதா? காலம் காலமா பெரியவங்க சொல்லிட்டுப் போனதைத்தான் நான் அவனுக்குச் சொல்றேன். இதையெல்லாம் நம்மை மாதிரி பெரியவங்க சின்னவங்களுக்குச் சொல்லலேன்னா அவங்களுக்கு எப்படித் தெரியும்?"

"பரவாயில்ல சொல்லுங்கப்பா. என்னோட எந்த நண்பனைப் பத்தி நீங்க சொல்றீங்க?" என்றான் முருகேஷ்.

"நீ வேலைக்குப் போக ஆரம்பிச்சப்பறம் நண்பர்கள்னு நாலைஞ்சு பேரை வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்கே. அவங்க யாருமே சரியில்ல!ம என்றார் சிவப்பிரகாசம்.

"சரியில்லேன்னா?"

"அவங்க நல்ல  குடும்பத்தைச் சேர்ந்தவங்களா எனக்குத் தெரியல. அது எப்படி எனக்குத் தெரியும்னு கேக்காதே! அவங்க பேச்சு, நடந்துக்குற முறை இதையெல்லாம் வச்சு சொல்றேன்!"

"அப்பா! அவங்கள்ளாம் ஏழைக் குடும்பத்தைச் சேந்தவங்க. அதனால அவங்க நாகரீகமா இல்லாதவங்க மாதிரி தெரியலாம். அதுக்காக அவங்களையெல்லாம் தப்பானவங்கன்னு முடிவு கட்டிட முடியுமா?" என்றான் முருகேஷ்.

"அவங்க தப்பானவங்கன்னு நான் சொல்லல. ஒத்தரோட நட்பு வச்சுக்கறதுக்கு முன்னாடி அவரோட குடும்பப் பின்னணி, குணம், தன்னைச் சுத்தி இருக்கறவங்ககிட்ட அவர் எப்படி நடந்துக்கிறாரு இதையெல்லாம் பாக்கணும்! இது நான் சொல்றதில்ல. பெரியவங்க சொல்லி இருக்காங்க" என்றார் சிவப்பிரகாசம்.

"அப்பா! பெரியவங்க சொல்றதையெல்லாம் நாம அப்படியே பின்பற்றுவது இல்ல. சில விஷயங்களைக் காலத்துக்கு ஏத்தவாறு மாத்திக்கிறோம், சிலவற்றைத் தப்புன்னு உணர்ந்து மாத்திக்கறோம். குடும்பப் பின்னணியைப் பாக்கறது சரின்னு நான் நினைக்கல. ஆனா மத்த விஷயங்களை ஒத்துக்கறேன். அவங்க குணம், அவங்களைச் சுத்தி இருக்கிறவங்ககிட்ட அவங்க நடந்துக்கற விதம் இதையெல்லாம் பார்க்கணும்னு நான் ஒத்துக்கறேன். இதில ஏதாவது எனக்கு தப்பாத் தெரிஞ்சா நான் அவங்க நட்பை முறிச்சுப்பேன்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் முருகேஷ்.

"இந்தக் காலத்துப் பிள்ளைங்கள்ளாம் தங்களுக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சுக்கறாங்க. பெரியவங்க சொல்றதையே கேள்வி கேக்கறாங்க!" என்று சலித்துக் கொண்டார் சிலப்பிரகாசம்.

"எனக்கென்னவோ முருகேஷ் நல்லா தெளிவா யோசிக்கிறான்னுதான் தோணுது!" என்றாள் செண்பகம்.

"என்னப்பா, உங்க நண்பர் கருணாகரனை அவர் கம்பெனியில ஏதோ மோசடி செஞ்சுட்டார்னு கைது செஞ்சுட்டாங்களாமே!" என்றான் முருகேஷ்.

"ஆமாம். அவனை நல்லவன்னு நினைச்சுத்தான் இத்தனை நாள் பழகினேன். அவன் இப்படிப் பண்ணுவான்னு எதிர்பாக்கல!" என்றார் சிவப்பிரகாசம்.

"இப்படிப்பட்ட மோசமான ஆளை எப்படி உங்க நண்பாரா வச்சுக்கிட்டீங்க? அன்னிக்கு முருகேஷுக்கு உபதேசம் பண்ணினீங்களே, கருணாகரனோட நட்பு வச்சுக்கறதுக்கு முன்னால, நீங்க அவர் குடும்ப்ப் பின்னணி, குணம் இதையெல்லாம் பாக்கலியா?" என்றாள் செண்பகம், கேலியான குரலில்.

சிவப்பிரகாசம் அடிபட்டவர் போல் மனைவியைப் பார்த்தார்.

"என்னம்மா இது? அவர் குடும்பப் பின்னணி எல்லாம் நல்லாத்தான் இருந்திருக்கும். நல்ல குடும்பத்தில பிறந்தவங்க தப்பு பண்றதில்லையா? அவர் தப்பு பண்ணி இருக்கலாம். ஆனா அப்பாவுக்கு எந்தக் கெடுதலும் பண்ணலியே! அப்பாவுக்கு நல்ல நண்பராத்தானே இருந்திருக்காரு?" என்றான் முருகேஷ்.

தனக்கு ஆதரவாகப் பேசிய மகனை வியப்புடன் பார்த்த சிவப்பிரகாசம், அன்று செண்பகம் சொன்னது போல் முருகேஷ்  தெளிவாகத்தான் சிந்திக்கிறான் என்று நினைத்துக் கொண்டார். 

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல் 

குறள் 793:
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு..

பொருள்: 
ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Monday, June 13, 2022

602. நந்தனின் திட்டங்கள்!

"என்ன சார், எம் டி என்ன சொல்றாரு?" என்றான் சுகுமார் நிர்வாக இயக்குனர் அறைக்குச் சென்று வந்த ஜெனரல் மானேஜர் பிரபுவைப் பார்த்து.

சீனியாரிடி காரணமாக பிரபுவுக்கு ஜெனரல் மானேஜர் என்ற பதவி அளிக்கப்பட்டிருந்தாலும் அந்தச் சிறிய நிறுவனத்தில் மற்ற ஊழியர்களுடன்  கிட்டத்தட்ட சமமான நிலையில்தான் இருந்தார் அவர்.

"தினம் புதுசு புதுசா ஏதோ திட்டங்களைச் சொல்றாரு. அதையெல்லாம் எப்படி நிறைவேற்றப் போறார்னு தெரியல. எனக்குத் தலையை சுத்துது!" என்றார் பிரபு.

"உங்களை அதையெல்லாம் நிறைவேற்றச் சொல்றாரா?"

"அப்படிச் சொல்லல. தன் மனசில உள்ளதை யார்கிட்டேயாவது சொல்லணும்னு நினைக்கிறாரு. அதுக்காக என்னைப் பயன்படுத்தறாருன்னு நினைக்கிறேன். ஆனா எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு?"

"என்ன பயம்?"

"அவரோட திட்டங்களை நிறைவேற்ற முயற்சி எடுக்கிற அளவுக்கு எனக்குத் திறமையோ, அனுபவமோ கிடையாது. ஒருவேளை நான் பிரயோசனமில்லைன்னு நினைச்சு என்னை வேலையை விட்டு அனுப்பிட்டு வேற யாரையாவது நியமிச்சுடுவாரோன்னுதான்!"

"அப்படியெல்லாம் நடக்காது. நீங்க அவர் அப்பா காலத்திலேந்தே இருக்கீங்க. உங்களையே தூக்கிடுவார்னா, என் கதியெல்லாம் என்ன ஆறது?" என்று பிரபுவின் பயத்தை அதிகப்படுத்தினான் சுகுமார்.

"இவரோட அப்பா ஒரு பெரிய சாதனையாளர். தான் பாத்துக்கிட்டிருந்த நல்ல வேலையை விட்டுட்டு இந்தத் தொழிலை ஆரம்பிச்சாரு. எவ்வளவோ சோதனைகளை சந்திச்சுத் தொழிலை இந்த அளவுக்கு வளர்த்திருக்காரு. இப்ப தொழில் ரொம்ப ஸ்டெடியாப் போய்க்கிட்டிருக்கு. ஆட்டோபைலட்ன்னு சொல்லுவாங்க. அது மாதிரி நாம ஒண்ணுமே செய்யாட்டாக் கூடத் தொழில் பிரமாதமாப் போகும். ஆனா இவரு தன் பங்குக்கு ஏதோ செய்யணும்னு நினைக்கிறார் போல இருக்கு!"

"என்னோட அப்பா இப்படி ஒரு நிறுவனத்தை உருவாக்கி இருந்தார்னா, நான் ஜாலியா உக்காந்துக்கிட்டு வருமானத்தை வாங்கிக்கிட்டு வாழ்க்கையை அனுபவிச்சுக்கிட்டிருப்பேன்!" என்றான் சுகுமார் பெருமூச்சுடன்.

"பிரபு சார்! சில நாட்களா  உங்க்கிட்ட என்னோட திட்டங்களைப் பத்தி சொல்லிக்கிட்டிருக்கேன் இல்ல, அதையெல்லாம் பத்தி என்ன நினைக்கிறீங்க?" என்றான் நிர்வாக இயக்குனர் நந்தன்.

"ரொம்ப பிரமிப்பா இருக்கு சார்! ஆனா இதெயெல்லாம் செயல்படுத்த நமக்கு ஒரு செட் அப் வேணுமே!" என்ற பிரபு சற்றுத் தயங்கி விட்டு, "இப்பவே நம்ம கம்பெனி சிறப்பாத்தானே சார் போய்க்கிட்டிருக்கு?"

"நீங்க சொன்ன  ரெண்டுமே கரெக்ட்தான். நம் கம்பெனி நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு. என் அப்பா இதை  ரொம்ப நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விட்டுட்டுத்தான் போயிருக்காரு. நான் கையைக் கட்டிக்கிட்டு உக்காந்துக்கிட்டிருந்தாலே போதும்தான். ஆனா, நம் பெற்றோர்களை நாம பின்பற்றி நடந்துக்கணும், அவங்க செஞ்சு வச்சதை அனுபவிச்சுக்கிட்டிருந்தா மட்டும் போதாதுன்னு நான் நினைக்கிறேன். அதனால நம் நிறுவனத்தை விரிவுபடுத்தலாம்னு நினைச்சுத்தான் அது தொடர்பா என் யோசனைகளை உங்ககிட்ட சொன்னேன்."

தான் ஏதாவது சொன்னால் தவறாகி விடுமோ என்று நினைத்து பிரபு மௌனமாக இருந்தார்.

"ஆனா, நீங்க சொன்ன மாதிரி, அதுக்கான செட் அப் நம்மகிட்ட இல்ல. இப்ப இருக்கிற செட் அப்பை வச்சுக்கிட்டு அதைச் செய்ய முடியாது. அதனால புது செட் அப் ஒண்ணை உருவாக்கப் போறேன். முதல்ல ப்ராஜக்ட் மானேஜர் ஒத்தரை நியமிக்கப் போறேன்."

நந்தன் தொடரந்து என்ன சொல்லப் போகிறானோ என்ற பயத்துடன் பிரபு காத்திருந்தார்.

"ஆனா, அது இப்ப இருக்கிற செட் அப்பை பாதிக்கக் கூடாது. அதனால ஒரு புது டிவிஷனை உருவாக்கி அதுக்கு ப்ராஜக்ட் மானேஜரை பொறுப்பானவரா போடப் போறேன். இந்த ஆஃபீஸ் பக்கத்தில புதுசா ஒரு கட்டிடம் கட்டி அதை ப்ராஜக்ட் ஆஃபீஸா ஆக்கப் போறேன். அப்பதான் உங்க ஆஃபீஸுக்கும் அதுக்கும் தொடர்பு இல்லாம இருக்கும். ஆனா உங்க ஆஃபீஸ்லேயும் சில மாற்றங்களைக் கொண்டு வரணும்!"

மாற்றங்கள் தன்னை எப்படி பாதிக்குமோ என்ற கவலையில் பிரபு காத்திருந்தார்.

"உங்களுக்கு ஜெனரல் மானேஜர்னு டெசிக்னேஷன் கொடுத்திருந்தாலும், உங்களுக்கு ஒரு கேபின் கூட இல்லை. அதனால உங்களுக்கு ஒரு கேபின் கொடுத்து, உங்களுக்கு சில அதிகாரங்கள் கொடுத்து, மற்றவங்களுக்கும் பொறுப்புகளை வரையறுத்துச் சில மாறுதல்களைச் செய்யணும். என்ன சொல்றீங்க?" என்றான் நந்தன்.

"உங்க அப்பா  உருவாக்கினதை இன்னும் பெரிசா, சிறப்பா ஆக்கணுங்கற உங்க சிந்தனை ரொம்ப உயர்ந்தது யார்!" என்றார் பிரபு.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 602:
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

பொருள்:
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Sunday, June 12, 2022

792. புதிதாகக் கிடைத்த நட்பு!

நெருக்கமான நண்பர்கள் என்று யாரும் மனோகருக்கு இருந்ததில்லை. பள்ளி, கல்லூரி நட்புகள் எல்லாம் விரைவிலேயே தேய்ந்து மறைந்து விட்டன. 

வேலை பார்த்த இடத்திலும் அலுவலகத்துக்கு வெளியே நீண்ட நட்பு எதுவும் ஏற்படவில்லை.

அதனால்தானோ என்னவோ ரவியின் நட்பு கிடைத்ததும் அவனிடம் மிகவும் நெருங்கிப் பழக ஆரம்பித்து விட்டான் மனோகர்.

எங்கோ பொது இடத்தில் சந்தித்த ரவியை "வீட்டுக்கு வரீங்களா?" என்று ஒரு மரியாதைக்கு மனோகர் அழைத்தபோது, "வரியான்னு கூப்பிட்டா வருவேன். மரியாதை கொடுத்து வரீங்களான்னு கேட்டா எப்படி வருவேன்?" என்று ரவி சிரித்துக் கொண்டே கூறியபோது அவன் தனக்கு நெருக்கமாகி விட்டதாக மனோகர் உணர்ந்தான்.

ஆனால் எதனாலோ மாதவிக்கு ரவியைப் பிடிக்கவில்லை.

அவன் முதல் தடவை வீட்டுக்கு வந்தபோதே, "எங்கே பிடிச்சீங்க இவரை?" என்றாள் மனோகரிடம்.

"ஏன் அப்படிக் கேக்கற?" என்றான் மனோகர்.

"எனக்கு என்னவோ அவரைப் பிடிக்கல. இன்னிக்கு வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்ததோட போதும், இனிமே அவரோட பழகாதீங்க!"

மனோகர் மௌனமாக இருந்தான்.

ஆனால் சில நாட்களுக்குப் பிறகு ரவி அவர்கள் இருவரையும் தங்கள் வீட்டுகு வரச் சொல்லிக் கூப்பிட்டதால், இருவரும் ரவியின் வீட்டுக்குச் சென்றனர். 

திரும்பி வந்ததும், "நான் நினைச்சது சரியாப் போச்சு. ரவியோட மனைவி நிர்மலா சந்தோஷமாவே இல்லை. எங்கிட்ட அவங்க சரியா கூடப் பேசல. ரவி கிட்ட ஏதோ தப்பு இருக்கு!" என்றாள் மாதவி.

மனோகர் பதில் சொல்லவில்லை. 

அதற்குப் பிறகு ரவி அவர்கள் வீட்டுக்கு வரவில்லை. ஒருவேளை மனோகர் ரவியை வெளியே எங்காவது சந்திக்கிறானோ என்னவோ! ஆனால் இதைப் பற்றி மனோகரிடம் கேட்க மாதவி விரும்பவில்லை. தானே எதற்கு ரவியைப் பற்றி மனோகருக்கு நினைவு படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

ருநாள் ரவி இரவில் மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்தான்.

"ஏன் இவ்வளவு லேட்? எனக்கு ரொம்ப கவலையாயிடுச்சு!" என்று மனோகரிடம் மாதவி கேட்டபோதே, அவனிடமிருந்து மது வாடை வருவதை கவனித்தாள்.

"குடிச்சிருக்கீங்களா?" என்றாள் மாதவி அதிர்ச்சியுடன். "இத்தனை வருஷமா உங்களுக்கு இந்தப் பழக்கமே இருந்ததில்லையே?"

மனோகர் மௌனமாக இருந்தான்.

"ரவியோட சேர்ந்துதானே குடிச்சீங்க?" என்றாள் சட்டென்று.

மனோகர் பதில் சொல்லவில்லை.

"அன்னிக்கு அவர் வீட்டுக்குப் போனப்ப அவர் மனைவியோட சோகத்தைப் பார்த்தப்பவே இது மாதிரி ஏதாவது இருக்கும்னு நினைச்சேன். இப்ப உங்களுக்கும் பழக்கி வச்சுட்டாரா? நான் சொல்றதைக் கேளுங்க. மறுபடி அவரைப் பாக்காதீங்க. அவரோட பழகாட்டா உங்களுக்கு இந்தப் பழக்கமெல்லாம் வராது. இதுவே முதலும் கடைசியாகவும் இருக்கட்டும்!" என்றாள் மாதவி கெஞ்சும் குரலில்.

ஆனால் அது முதலாக மட்டும்தான் இருந்தது, மனோகருக்கு ரவியுடனான நட்பும், குடிப்பழக்கமும் தொடர்ந்தன. 

மாதவி பலமுறை சொல்லிப் பார்த்து விட்டு ஓய்ந்து விட்டாள். 

சில மாதங்கள் கழித்து மனோகரின் குடிப்பழக்கத்தால் குடும்ப்ப் பொருளாதராம் பாதிக்கப்படுவதைப் பற்றி அவள் கவலைப்பட வேண்டி இருந்தது. ஒரு சில வருடங்களுக்குப் பிறகு  மனோகரின் உடல்நிலை பற்றியும் கவலைப்பட வேண்டி இருந்தது.

"குடல் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கும்மா. இப்ப டிரீட்மென்ட் கொடுத்து அனுப்பறோம். இந்தப் பழக்கம் தொடர்ந்தா உயிருக்கே ஆபத்து. ஜாக்கிரதையாப் பாத்துக்கங்க!" என்றார் டாக்டர்.

திடீரென்று ஒருநாள் மனோகர் ஏற்படுத்திக் கொண்ட நட்பு சில வருஷங்களில் அவன் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டதே என்று நினைத்தபோது பெருகி வந்த துயரம் மாதவியின் தொண்டையை அடைத்தது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல் 

குறள் 792:
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்..

பொருள்: 
திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

601. நூலக உதவியாளர்!

"அவங்க பரம்பரைப் பணக்காரங்களாம். அதோட ஊர்ல அவங்க குடும்பத்து மேல ரொம்ப மரியாதை வச்சிருக்காங்க. யாரைக் கேட்டாலும், 'அவங்களா? அவங்க மாதிரி நல்ல மனுஷங்களைப் பாக்கவே முடியாதே!' ன்னு சொல்றாங்க. இந்த மாதிரி ஒரு சம்பந்தம் கிடைக்க நாம கொடுத்து வச்சிருக்கணும்!" என்றார் அய்யாசாமி.

"அது சரி. மாப்பிள்ளை என்ன செய்யறாரு?" என்றாள் அவர் மனைவி லட்சுமி.

"மாப்பிள்ளை படிச்சிருக்காரு. ஆனா வேலைக்குப் போகல. அவங்க  பெற்றோருக்கு ஒரு பையனும், பொண்ணும்தான். பொண்ணுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. அவங்க அப்பா போனப்பறம் மாப்பிள்ளை சொத்துக்களைப் பாத்துக்கிட்டு ஊரிலேயே இருக்காரு. வெளியூருக்குப் போனா சொத்துக்களை யார் பாத்துக்கறது?" என்ற அய்யாசாமி, "நீ என்னம்மா சொல்றே?" என்றார் மகள் தங்கத்தைப் பார்த்து.

"நீங்களாப் பார்த்து என்ன செஞ்சாலும் சரி அப்பா!" என்றாள் தங்கம்.

திருமணம் ஆகித் தங்கம் கணவன் வீட்டுக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. தன் கணவன் தண்டபாணி பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதை அவள் கவனித்தாள்.

ஒருநாள் அவனிடம், "ஏங்க,  நீங்க வயலுக்குப் போய்ப் பார்க்க வேண்டாமா?" என்றாள்.

"நான் எதுக்குப் போகணும்? நிலத்தையெல்லாம் குத்தகைக்குத்தானே விட்டிருக்கோம்? அறுவடை ஆனதும் நெல்லை வாங்கிப் போட்டுக்கறதுதான் நம்ம வேலை. அது கூட நமக்கு சாப்பாட்டுக்கு வேணுங்கற நெல்லை மட்டும் கொடுத்துட்டு மீதி நெல்லை வித்து எங்கிட்ட பணமாக் கொடுத்துடுவாரு குத்தகைக்காரரு!" என்றான் தண்டபாணி பெருமையுடன்.

'உரிச்ச வாழைப்பழம்!' என்று தனக்குள் முணுமுணுத்த தங்கம், "ஆமாம், நமக்கு ரைஸ்மில் இருக்கே, அங்கே கூட நீங்க போறதில்லையே?" என்றாள்.

"ரைஸ் மில்லுக்கு மானேஜர்னு ஒத்தரை எதுக்குப் போட்டிருக்கோம்? அவரு தினம் சாயந்திரம் வந்து எங்கிட்ட கணக்கு கொடுத்துட்டு அன்னிக்குக் கிடைச்ச வருமானத்தைக் கொடுத்துட்டுப் போறாரே, பாக்கலியா?"

"உங்க அப்பா, தாத்தா காலத்திலேந்தே இப்படித்தானா?"

"எங்க தாத்தா நிலங்களை அவரேதான் பாத்துக்கிட்டிருந்தாரு. என் அப்பா நிலங்களைக் குத்தகைக்கு வித்துட்டு ரைஸ் மில் ஆரம்பிச்சு அதைப் பாத்துக்கிட்டிருந்தாரு. இப்ப அது நல்லா ஓட ஆரம்பிச்சுட்டதால நான் அதுக்கு ஒரு மானேஜரைப் போட்டு நடத்திக்கிட்டிருக்கேன்!" என்றான் தண்டபாணி பெருமையுடன்.

"நீங்க புதுசா ஏதாவது தொழில் ஆரம்பிக்கப் போறீங்களா என்ன?" என்றாள் தங்கம்.

"இல்லையே! எதுக்குக் கேக்கற?"

"உங்க தாத்தா நிலங்களைப் பாத்துக்கிட்டிருந்தாரு. உங்க அப்பா ரைஸ் மில் ஆரம்பச்சு நடத்தினாரு. நீங்க ரெண்டையுமே பாத்துக்கறதில்லையே அதான் கேட்டேன்!"

"அதுதான் உன்னைப் பாத்துக்கறேனே, அது போதாதா?" என்றான் தண்டபாணி.

சில நாட்கள் கழித்து, "என்னங்க, இந்த ஊர்ல ஒரு இலவச நூலகம் இருக்கு இல்ல?" என்றாள் தங்கம்.

"ஆமாம். ஒரு வயசான அம்மா நடத்திக்கிட்டிருக்காங்க. நான் கூடப் போய்ப் பார்த்தேன். ஆனா எனக்குப் புத்தகங்கள் படிக்கிறதில ஆர்வம் இல்ல. அதனால சும்மா பாத்துட்டு வந்துட்டேன். ஆனா நல்லா நடத்தறாங்க. இவ்வளவு புத்தகங்களை எப்படி வாங்கினாங்கன்னு தெரியல. எதுக்கு ஒரு லைப்ரரி வச்சு அதை எல்லாரும் படிக்கறதுக்கு இலவசமாக் கொடுக்கறாங்கன்னும் தெரியல! ஆனா வயசான காலத்தில ரொம்ப் கஷ்டப்பட்டு இதைச் செய்யறாங்க."

"ஆமாம். அவங்களுக்கு கஷ்டமாத்தான் இருக்காம். உதவிக்கு யாராவது இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. நான் அங்கே போய் அவங்களுக்கு உதவி செய்யலாம்னு பாக்கறேன்!" என்றாள் தங்கம்.

"உனக்கு எதுக்கு இந்த வேலை? நமக்குப் பணம் தேவையில்ல. அவங்களால அதிகமா சம்பளம் கொடுக்கவும் முடியாது!" என்றான் தண்டபாணி.

"சம்பளத்துக்கு இல்லேங்க. சும்மாதான் அவங்களுக்கு உதவியா இருக்கலாம்னு பாக்கறேன்."

"ஏன், வீட்டில உனக்குப் பொழுது போகலியா? பொழுது போகலேன்னா அந்த லைப்ரரியிலேந்து புத்தகம் வாங்கிப் படி!"

தங்கம் சற்றுத் தயங்கி விட்டு,"அதுக்கில்லீங்க. நம்ம குடும்பத்துக்கு ஊர்ல நல்ல மதிப்பு இருக்கு. உங்க அப்பா, தாத்தா எல்லாரும் தொழிலையோ, விவசாயத்தையோபாத்துக்கிட்டிருந்தாங்க. ஆனா நீங்க ரெண்டையுமே பாக்கல. எதுவும் செய்யாம நாம சும்மா உக்காந்துக்கிட்டிருந்தா நம்ம குடும்பத்துக்கு இருக்கிற நல்ல பேரும், மரியாதையும் கொஞ்சம் கொஞ்சமாத் தேஞ்சுடும். நாம ஏதாவது ஒரு செயல்ல ஈடுபட்டுக்கிட்டிருந்தாதான் நம் குடும்பத்துக்கு இருக்கிற மதிப்பு தொடர்ந்து இருக்கும். அதனால நீங்க உங்களை ஏதாவது ஒரு வேலையில ஈடுபடுத்திக்கற வரையில நான் இது மாதிரி சின்னதா ஏதாவது வேலை பார்க்கலாம்னு நினைக்கிறேன்" என்றாள். 

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 601:
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்..

பொருள்:
ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்..

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Saturday, June 11, 2022

600. அப்பா வளர்த்த மரங்கள்!

"வயசு இருபத்தைஞ்சு ஆகப் போகுது! இன்னும் ஒரு வேலையைத் தேடிக்காம உக்காந்திருக்கியே!" என்றாள் திலகம்.

"தேடிக்கிட்டுத்தானே இருக்கேன்!" என்றான் நடராஜன்.

"என்னத்தைத் தேடற? அதிகம் படிக்காத நான் பேப்பர்ல வர வேலை அறிவிப்புகளைப் பாத்து உனக்கு ஏற்றதா இருந்தா அப்ளை பண்ணச் சொல்லி உங்கிட்ட சொல்ல வேண்டி இருக்கு. அதிலேயும் நீ ஒண்ணு ரெண்டுக்குத்தான் அப்ளை பண்றே!"

"எனக்கு ஏற்ற வேலைன்னு எனக்குத்தானே அம்மா தெரியும்? நீ சொன்னதுக்காக எல்லா வேலைக்கும் நான் அப்ளை பண்ண முடியாது."

"சரி, தெரிஞ்சவங்க யார்கிட்டயாவது சொல்லி அவங்க மூலமா ஏதாவது வேலை தேடிக்கலாம் இல்ல? நான் யார்கிட்டயாவது சொன்னாலும் நீ அவங்களைப் போய்ப் பாக்க மாட்டேங்கற!"

"நீ சொல்ற ஆட்களையெல்லாம் போய்ப் பாத்து அவங்ககிட்ட நான் வேலைப் பிச்சை கேட்க முடியாது!" என்றான் என்றான் நடராஜன் கோபத்துடன். தொடர்ந்து, "இப்ப என்ன நாம சாப்பாட்டுக்கு இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டா இருக்கோம்?" என்றான்.

"இப்படியே இருந்துட முடியுமா? நாளைக்கே உனக்குக் கல்யாணம் ஆகி, குடும்பம் உண்டாயிடுச்சுன்னா நிலையான வருமானம் வேண்டாமா? சின்ன வயசிலேயே உன்னை எங்கிட்ட விட்டுட்டு உங்கப்பா போய்ச் சேர்ந்துட்டாரு. நான் கஷ்டப்பட்டு உன்னை வளர்த்தேன். படிக்கிற காலத்திலேயுயும் ஒழுங்காப் படிக்க மாட்டேன்னுட்ட. உன்னை காலேஜில படிக்க வைக்கணும்னு கஷ்டப்பட்டு காசு சேர்த்தேன், ஆனா நீ பள்ளிக் கூடத்தைத் தாண்டல. இப்ப வேலைக்கும் சரியா முயற்சி செய்ய மாட்டேங்கற. உன் எதிர்காலத்தை நினைச்சா எனக்கு பயமா இருக்கு. ஆனா உனக்கு அந்த பயம் கூட இல்லையே!" என்று பொரிந்து தள்ளினாள்.திலகம்.

நடராஜன் கோபத்துடன் எழுந்து சென்று விட்டான்.

திலகம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சிவகாமி வந்தாள்.

"என்ன திலகம் உன் பையனுக்கு வேலை கிடைச்சுதா?" என்றாள் சிவகாமி.

"இல்லை. இன்னும் தேடிக்கிட்டிருக்கான்!" என்றாள் திலகம்.

"இந்த மரம் எல்லாம் நல்லா வளர்ந்துடுச்சே!" என்றாள் சிவகாமி.

"எல்லாம் அவர் இருந்தப்ப வச்ச செடிகள். இப்ப மரமா வளர்ந்துடுச்சு!" என்றாள் திலகம். அப்போது வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த நடராஜனைப் பார்த்த திலகம் அவனுக்கும் இந்த மரங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நினைத்துக் கொண்டாள்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

குறள் 600:
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.

பொருள்:
ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Friday, June 10, 2022

599. முருகன் என்று ஒருவன்!

அந்தச் சிறிய கிராமத்தில்தான் முருகன் தன் பிரசாரத்தைத் தொடங்கினான்.

அருகில் இருந்த நகரத்துக்கு வந்து, அங்கிருந்த ஒரு சிறிய ஹோட்டலில் தங்கினான். அங்கிருந்து பஸ் பிடித்து அந்த ஊரில் வந்து இறங்கிய முருகன் அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்றான். 

அங்கே டீ வாங்கி அருந்தியபடியே அங்கே இருந்தவர்களிடம் இயல்பாகப் பேச ஆரம்பித்தான். அவர்கள் அவன் சொன்னதை வியப்புடன் கேட்டனர். 

டீக்கடை உரிமையாளரும் ஆர்வத்துடன் கேட்டார். டீக்குக் காசு கொடுக்கும்போது, டீக்கடை உரிமையாளரிடமும் பேசினான். அவர் தயக்கத்துடன் தலையாட்டினார்.

பிறகு, அங்கு வந்த பஸ்ஸைப் பிடித்து உடனே நகரத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று விட்டான் முருகன்.

மாலை ஆறு மணிக்கு முருகன் மீண்டும் அந்த கிராமத்துக்கு பஸ்ஸில் வந்து இறங்கியபோது பஸ் நிறுத்தத்துக்கு அருகே அவனுக்காகக் காத்திருப்பது போல் பதினைந்து இருபது பேர் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு அவர்களுடன் சென்றான் முருகன்.

ஒரு பெரிய தெருவுக்கு அவனை அவர்கள் அழைத்துச் சென்றனர். அங்கே ஐம்பது அறுபது பேர் கூடி இருந்தனர்.

முருகன் அவர்களுக்கு முன்னால் நின்று பேச ஆரம்பத்தான். அப்போது அருகிலிருந்த ஒரு பெரிய வீட்டில் அமர்ந்திருந்தவர், "இந்தத் திண்ணையில உக்காந்துக்கிட்டுப் பேசுங்க. அப்பதான் உங்களை எல்லாராலயும் பாக்க முடியும்" என்றார்.

முருகன் அந்தத் திண்ணையில் அமர்ந்து பேச ஆரம்பித்தான்.

"வணக்கம். என் பெயர் முருகன். நான் இந்த ஊர்க்காரன் இல்ல. ஆனா இந்த நாட்டுக் குடிமகன். அந்த உரிமையிலதான் இந்த ஊருக்கு வந்திருக்கேன். இந்த்த் தொகுதியிலேந்து ஜெயிச்ச தலைவர் நாலரை வருஷமா பதவியில இருக்காரு. 

"அவர் மக்களுக்கு எந்த நன்மையும் செஞ்சதில்ல. ஆனா எல்லாரையும் நல்லா ஏமாத்திக்கிட்டிருக்காரு. யாராவது அவரை எதிர்த்துப் பேசினா அவங்களைப் பத்தி அவதூறுப் பிரசாரம் பண்ணுவாரு, தன்னோட அதிகாரத்தை வச்சு அவங்களை  சிறையில தள்ளுவாரு, அவங்க நாட்டுக்கே எதிரின்னு சித்தரிப்பாரு. 

"கொஞ்சம் பெரிய அளவில எதிர்ப்பு வந்தா மக்களுக்குள்ள பிரிவினைகளை ஏற்படுத்தி  சில பேர் மேல வெறுப்பை விதைச்சு அந்த வெறுப்பு வெள்ளத்தில கரையேந்தி வந்துடுவாரு.

"அரசியல்ல அவரை எதிர்க்க வேண்டியவங்க ஏனோதானோன்னு செயல்படறதால அவர் வலுவாகிக்கிட்டே போறாரு. அடுத்த தேர்தல்லேயும் அவர்தான் ஜெயிக்கப் போறாருன்னு பேசிக்கறாங்க. 

"அவர் விலை கொடுத்து வாங்கின ஊடகங்களும், அவரால் மிரட்டப்பட்ட ஊடகங்களும் அவர் செஞ்ச தப்புகளை மறைச்சு அவர் செய்யாத நல்லதையெல்லாம் செஞ்சதா சொல்லி அவருக்கு லாலி பாடிக்கிட்டிருக்காங்க.

"ஒரு சமூகத்தில ஒரு தப்பான விஷயம் நடக்கும்போது, அதைத் தொடர்ந்து நடக்க விட்டா அது அந்த சமூகத்துக்குக் கேடு, அவமானம். அந்த அவமானம் நடக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன். என்னை மாதிரி நினைக்கிறவங்க உங்கள்ளேயும் பல பேர் இருப்பீங்க. அப்படி நினைக்காதவங்களுக்கு உண்மையைச் சொல்லிப் புரிய வைக்கிறது என்னோட கடமைன்னு நினைக்கிறேன்.

"ஒரு பூனை மாதிரி அமைதியா உள்ளே வந்தவரு இன்னிக்கு ஒரு யானை மாதிரி வளர்ந்து, மதம் பிடிச்சுப் போய் எல்லாத்தையும் மிதிச்சு நாசமாக்கிக்கிட்டிருக்காரு. 

"பூனைக்கு யார் மணி கட்டறதுன்னு ஒரு பழமொழி இருக்கு. பூனைக்கு மணி கட்ட எலிகள் பயப்படறது நியாயம்தான். ஆனா யானையைக் கண்டு சிங்கம், புலி எல்லாம் பயப்படக் கூடாது இல்ல? ஆனா நம்மைச் சுத்தி இருக்கறவங்க எலி மாதிரி ஒடுங்கிக்கிட்டுத்தானே இருக்காங்க. நாம் எல்லாம் எலிகள் இல்லை, புலிகள், நம்மால மதம் பிடிச்ச யானையை அடக்க முடியும்!

"உங்களை ஏமாத்திக்கிட்டிருக்கிற தலைவரை எதிர்த்து அடுத்த தேர்தல்ல நான் நிக்கப்போறேன். நான் தனி ஆள்தான். சக்தி உள்ள கட்சிகள் ஒண்ணும் செய்யாம கையைப் பிசைஞ்சுக்கிட்டு உக்காந்திருக்கறதால மதம் பிடிச்ச யானையை மக்கள் சக்தியைத் திரட்டி அடக்கற முயற்சியை நான் துவங்கி இருக்கேன். 

"இன்னிக்கு நான் யாரோ ஒரு ஆள்தான். தேர்தலுக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு. அதுக்குள்ள மக்கள்கிட்ட உண்மையை எடுத்துச் சொல்லி நிலைமையை மாத்த முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

"அவரோட தொகுதியில இந்தத ஊர்ல நான் என் பிரசாரத்தைத் தொடங்கினதுக்குக் காரணம் இந்த ஊரோட பேரு சத்தியபுரின்னு இருக்கறதுதான். இது சத்தியத்துக்கான போராட்டம். அதை சத்தியபுரில தொடங்கறதுதானே பொருத்தமா இருக்கும்?

"இப்ப நான் ஒரு ஆளாத்தான் இருக்கேன். 'நூறு இளைஞர்களைக் கொடுங்க, இந்த நாட்டையே நான் மாத்திக் காட்டறேன்' னு விவேகானந்தர் சொன்ன மாதிரி நூறு பேர் என்னோட இருந்தா போதும், என்னால என் முயற்சியில வெற்றி அடைய முடியும்னு நம்பறேன். இன்னிக்கு இந்த ஊர்லேந்து ஒத்தர் கிடைச்சாக் கூடப் போதும். அதையே ஒரு வெற்றிகரமான ஆரம்பம்னு நான் நினைப்பேன்!"

முருகன் தன் பேச்சை நிறுத்தியதும் ஐந்து பேர் கையைத் தூக்கினார்கள்.

"நீங்க கண்டிப்பா ஜெயிப்பீங்க தம்பி!" என்று கூட்டத்தில் பின்னால் நின்றிருந்த ஒருவர் உரத்துக் கூவினார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

குறள் 599:
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

பொருள்:
யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையான கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்..

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Thursday, June 9, 2022

598. உதவி செய்ய விரும்பியும்...

"நான் வேலையில இருந்தப்ப  சில அனாதை ஆசரமங்கள், முதியோர் இல்லங்கள்  இதுக்கெல்லாம் மாசாமாசம் ஒரு தொகையை நன்கொடையாக் கொடுத்துட்டு இருந்தேன். ஆனா இப்ப அப்படி கொடுக்க முடியல!" என்றான் கதிரேசன்.

"ஏன், இப்பதான் சொந்தத் தொழில் செஞ்சு முன்னை விட அதிகமா சம்பாதிக்கிறீங்களே, இப்ப ஏன் கொடுக்க முடியலை?" என்றாள் அவன் மனைவி குமாரி.

"அதுதான் எனக்கும் புரியல. கணக்குப் பாத்தா வேலையில இருந்தப்ப எனக்குக் கிடைச்ச சம்பளத்தை விட சொந்தத் தொழில்ல வர வருமானம் நிச்சயமா அதிகமாத்தான் இருக்கு. ஆனா எந்த ஒரு கமிட்மென்ட்டும் வச்சுக்கத் தயக்கமா இருக்கு!"

"நான் கூட முன்னேயெல்லாம் நகைச்சீட்டு போட்டுக்கிட்டிருந்தேன். இப்ப நகைச்சீட்டில சேரவே தயக்கமா இருக்கு. குறிப்பிட்ட தேதிக்குள்ள மாசாமாசம் பணம் கட்டணும். உங்க்கிட்ட கேட்டா நீங்க கொடுப்பீங்களான்னு தெரியல. இப்ப பணம் இல்ல. ஒரு பெரிய ஆர்டரை எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன். அது வந்தப்பறம்தான் கையில பணம் புரளும்னு சொல்லிட்டீங்கன்னா?" 

தான் சிலமுறை இவ்வாறு சொல்லி இருப்பது நினைவு வந்ததால் கதிரேசன் பேசாமல் இருந்தான்.

திரேசன் தன் நண்பன் தனசேகரனைப் பார்க்கச் சென்றிருந்தான். தனசேகரனும் சொந்தத் தொழில் செய்பவன்தான். ஆனால் கதிரேசனுடன் ஒப்பிடும்போது அவன் தொழில் சிறியது, வருமானமும் குறைவுதான்.

தனசேகரனின் நிறுவனத்தில் அவன் அறையில்  தனசேகர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அவனைப் பார்க்க ஒருவர் வந்தார்.

"ஒரு நிமிஷம்" என்று கதிரேசனிடம் சொல்லி விட்டு அவரிடம்  சில வார்த்தைகள் பேசிய தனசேகரன் அவரிடம், "கொஞ்சம் வெளியில உட்காருங்க. மானேஜர்கிட்ட சொல்லி செக் கொடுக்கச் சொல்றேன்" என்றான்,

பிறகு மானேஜரை அழைத்தான்.

"எங்க ஊர் கோவில்ல ஆடி மாசம் நடக்கிற அன்னதானத்துக்கு எப்பவும் நன்கொடை கொடுப்போம் இல்ல, அவரு வந்திருக்காரு. பத்தாயிரம் ரூபாய்க்கு அவருக்கு செக் போட்டுடுங்க" என்றான் தனசேகரன் மானேஜரிடம்.

மானேஜர் சற்றுத் தயங்கி விட்டு, "சார்! இப்ப நிலைமை ரொம்ப டைட்டா இருக்கு" என்றபடியே அவன் அருகில் வந்து ஒரு கணக்குப் புத்தகத்தைக் காட்டினார்.

சற்று யோசித்த தனசேகரன், மானேஜரிடம் சில விவரங்களைக் கேட்டு விட்டு, "ஒரு நிமிஷம் இருங்க!" என்றவன் அறைக்கு வெளியே போய் விட்டு சில விநாடிகளில் திரும்பி வந்தான்.

மானைஜரைப் பார்த்து, "பத்து நாள்  கழிச்சுப் பணம் கிடைச்சாப் போதும்னு அவரு சொல்றாரு. அதனால நான் சொன்னபடி நீங்க போஸ்ட் டேடட் செக் கொடுத்துடுங்க" என்றான்.

மானேஜர் வெளியே சென்றதும், தனசேகரன் கதிரேசனைப் பார்த்து,"என்னடா, பசிக்கு சோறு கேட்டா பத்து நாள் கழிச்சு வான்னு சொல்ற மாதிரி, அன்னதானத்துக்கு நன்கொடை கேட்டா இவன் போஸ்ட் டேடட் செக் கொடுக்கறானேன்னு நினைக்காதே! நான் உன்னை மாதிரி பெரிய பிசினஸ்மேன் இல்ல. எங்கிட்ட பணப்புழக்கம் கம்மிதான். ஆனா நல்ல விஷயங்களுக்கு உதவணுங்கற எண்ணம் இருக்கு. அதனால இது மாதிரி ஏதாவது அட்ஜஸ்ட் பண்ணித்தான் உதவி செய்ய முடியுது. ஆனா உதவணும்னு உறுதி இருக்கிறதாலேயோ என்னவோ, எனக்குத் தேவையான பணம் கிடைச்சுடுது. இப்ப பத்து நாள் தள்ளித் தேதி போட்டு செக் கொடுத்திருக்கேன்னா அந்த செக் என் பாங்க்குக்கு வரப்ப எனக்கு ஏதாவது பணம் வந்திருக்கும். இதுவரையிலேயும் ஒரு தடவை கூட பாங்க்ல பணம் இல்லாம போய், 'தயவு செஞ்சு இந்த செக்கை பாஸ் பண்ணிடுங்க சார்'னு பாங்க் மானேஜர்கிட்ட கெஞ்சற நிலைமை வந்ததில்ல!" என்று சொல்லிச் சிரித்தான்.

நண்பனை வியப்புடன் பார்த்தான் கதிரேசன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

குறள் 598:
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.

பொருள்:
ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்..

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Wednesday, June 8, 2022

791. அம்மா சொன்ன பொய்!

"ரகு இல்லையா?" என்றான் ஆதி.

"இல்லை. அவன் பெரியப்பா வீட்டுக்குப் போயிருக்கான்" என்றாள் ரகுவின் அம்மா மரகதம்.

"இப்ப வந்துடுவான் இல்ல?" என்றபடியே சோஃபாவில் உட்காரப் போனான் ஆதி.

"இல்லை. அவன் பெரியப்பாவோட யாரையோ பாக்கப் போகப் போறதா சொன்னான். சாயந்திரம்தான் வருவான்."

"அப்படியா?" என்ற ஆதி ஏமாற்றத்துடன் வெளியே போகத் திரும்பினான். "என்னோட சினிமாவுக்கு வரதா சொல்லி இருந்தானே?" என்றான் தொடர்ந்து.

"சினிமா எங்கே போகுது? இது முதல் வாரம்தானே? அடுத்த ஞாயிற்றுக்க்கிழமை போய்க்கங்க. டிக்கட்டும் சுலபமாக் கிடைக்கும்!" என்றாள் மரகதம் சிரித்தபடி.

"அடுத்த வாரம் இந்தப் படம் இருக்குமோ, தூக்கிடுவாங்களோ!"

"அப்படி ஒரு வாரத்திலேயே தியேட்டரை விட்டு ஓடிடும்னா அந்தப் படத்தைப் பாக்காம இருக்கிறதே நல்லதாச்சே!" 

தன் நகைச்சுவைப் பேச்சைத் தானே ரசித்து மரகதம் பெரிதாகச் சிரித்தாள். ஆதி எதுவும் பேசாமல் வெளியேறினான்.

ற்று நேரத்துக்கெல்லாம் அவசரமாக வீட்டுக்குள் நுழைந்த ரகு, "ஆதி இன்னும் வரல? சினிமாவுக்குக் கிளம்ப நேரமாயிடுச்சே!" என்றான்.

"வந்தான். நீ உன் பெரியப்பா விட்டுக்குப் போயிருக்கே, சாயந்திரம்தான் வருவேன்னு சொல்லி அனுப்பிட்டேன்!" என்றாள் மரகதம்.

"ஏம்மா? சினிமாவுக்குப் போகப் போறோம்னு சொன்னேன் இல்ல?"

"ஒரு ஞாயிற்றுக்கிழமை தவறாம ரெண்டு பேரும் சினிமாவுக்குப் போயிடறீங்க. சில சமயம் வார நாள்ள கூட எங்கிட்ட சொல்லாமயே ஆஃபீஸ்லேந்து நேரா அவனோட ஈவினிங் ஷோக்குப் போயிடற. நான் ராத்திரி பத்து மணிக்கும் நீ வரலியேன்னு தவிச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்கேன். சினிமா பாக்கறதுக்குன்னு ஒரு சிநேகமா? உலகத்தில வேற விஷயமே இல்லை?" என்றாள் மரகதம் கோபத்துடன்.

"வாரத்தில ரெண்டு மூணு சினிமா பாத்தா ஒண்ணும் ஆயிடாதும்மா. எங்கிட்ட வேற கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது!"

"இதுவரையிலும் இல்ல. இனிமே வராதுன்னு எப்படிச் சொல்ல முடியும், ஆதி மாதிரி நண்பர்கள் இருக்கறச்சே?"

"அம்மா! ஆதிக்கு சிகரெட் பழக்கம் இருக்கறது உண்மைதான். அது உனக்கு எப்படித் தெரிஞ்சதுன்னு தெரியல. ஆனா நான் அதையெல்லாம் பழக்கிக்க மாட்டேன்."

"ஓ, அவனுக்கு சிகரெட் பழக்கம் இருக்கா? அது எனக்குத் தெரியாது. ஆனா ஒண்ணு தெரியும். ஆதி ஏதாவது சொன்னா உன்னால மாட்டேன்னு சொல்ல முடியாது. ஒருநாள் கூட அவன் சினிமாவுக்குக் கூப்பிட்டு நீ போகாம இருந்ததில்லையே! அவன் கூப்பிட்டாங்கறதுக்காக உனக்கு இஷ்டமில்லாதப்ப கூட நீ அவனோட போனதை நான் கவனிச்சிருக்கேன். அதனலதான் அவனோட நீ சிநேகம் வச்சிக்கறது ஆபத்தானதுன்னு நினைக்கிறேன். இது மாதிரி மோசமான நட்பிலேந்து  விடுபட முடியாது. நான் பாத்திருக்கேனே!" என்றாள் மரகதம் பெருமூச்சுடன்.

"என்ன பாத்திருக்க? உனக்கு மோசமான சிநேகிதிகள் யாராவது இருந்தாங்களா என்ன?" என்றான் ரகு கேலியான குரலில்.

"எனக்கு இல்லடா, உங்கப்பாவுக்கு! நல்லா சம்பாதிச்சு நல்லா வாழ்ந்துக்கிட்டிருந்த அவருக்கு ராஜுன்னு ஒரு நண்பன் வந்து வாய்ச்சான், உனக்கு இந்த ஆதி வந்து வாய்ச்ச மாதிரி! அவருக்கு சூதாட்டத்தைப் பழக்கி விட்டு அவரோட சொத்தையெல்லாம் அழிச்சுட்டான். தான் போற வழி தப்புன்னு அவர் கொஞ்ச நாளிலேயே புரிஞ்சுக்கிட்டு அவங்கிட்டேந்து விலகி இருக்க முயற்சி செஞ்சாரு. ஆனா அவனோட நட்பை அவரால விட முடியல, அவன் வந்து கூப்பிடறப்ப போகாமயும் இருக்க முடிஞ்சதில்ல. ராஜுவோட சிநேகிதத்தால குடும்பத்தையே அழிச்சுட்டேனேன்னு கடைசி வரையிலேயும் நொந்துக்கிட்டேதான் வாழ்ந்தாரு அவரு!" மரகதத்தின் குரல் கம்மியது.

"அம்மா அது வேற..." என்று ஆரம்பித்தான் ரகு.

"வேற மாதிரி இருந்தாலும் இதுவும் அதுதான்! அடிக்கடி சினிமா பாக்கறது பெரிய விஷயம் இல்ல. அதை நீ மாத்திக்க முடியும். ஆனா ஆதி வந்து கூப்பிடறப்ப உன்னால போகாம இருக்க முடியலியே! அதுதான் ரொம்ப ஆபத்தான விஷயம். இன்னும் ரெண்டு மூணு வாரத்துக்கு ஆதி கண்ணில படாம இரு. நல்ல வேளையா நம்  வீட்டில ஃபோன் வசதி இல்லை. அதனால அவனால உன்னைத் தொடர்பு கொள்ள முடியாது. அப்புறம் அவனே ஒதுங்கிடுவான். அதுதான் உனக்கு நல்லது! எனக்கு நீ செய்யற உதவியும் கூட!" என்றாள் மரகதம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல்

குறள் 791:
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

பொருள்: 
நட்பை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Tuesday, June 7, 2022

597. மகேஷ் செய்த மோசடி

"நிலைமை இவ்வளவு மோசமாயிடுச்சே, என்ன செய்யப் போறீங்க?" என்றாள் பரிமளா.

பரந்தாமன் பதில் சொல்லவில்லை.

ஐந்து ஆண்டுகளாகச் செய்து வந்த தொழிலில் கடந்த சில மாதங்களாகப் பல பின்னடைவுகள்.

அவன் நிறுவனத்தில் மானேஜராக இருந்து தொழிலை கவனித்துக் கொண்ட மகேஷ் திடீரென்று வேலையை விட்டுப் போவதாக அறிவித்தான். காரணம் கேட்டதற்கு ஏதோ குடும்பப் பிரச்னை என்று சொன்னான்.

மகேஷை நம்பிப் பல பொறுப்புகளை விட்டு விட்டுத் தொழிலை விரிவாக்குவதில் கவனம் செலுத்தி வந்த பரந்தாமன் மகேஷ் பார்த்துக் கொண்டிருந்த அன்றாட வேலைகளைப் பார்க்க ஆரம்பத்தபோதுதான் ஒரு அதிர்ச்சியான உண்மை அவனுக்குப் புரிந்தது.

அவர்கள் தொழிலில் பல பரிவர்த்தனைகள் ரொக்கத்திலேயே நடந்து வந்ததால், அதைப் பயன்படுத்தி மகேஷ் பல மோசடிகளைச் செய்திருந்தான். சில வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வரவு வைக்கப்படவில்லை. பணம்  நிலுவையில் இருப்பது பற்றி அவர்களிடம் கேட்டபோது, ஏற்கெனவே மகேஷிடம் பணம் கொடுத்து விட்டதாகக் கூறினார்கள்.

ஒரு சிலர் கோபித்துக் கொண்டு தொழில் உறவை முறித்துக் கொண்டனர். "ரொக்கப் பரிவர்த்தனை நடக்கிற இடத்தில நம்பிக்கைதான் முக்கியம். கொடுத்த பணத்தை இல்லைன்னு சொல்ற உங்களோட எப்படித் தொழில் செய்ய முடியும்?" என்றார்கள். 

தவறு நடந்து விட்டதாக பரந்தாமன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதை ஓரிருவர் மட்டும்தான் ஏற்றுக் கொண்டனர். அவர்களும் இனி தன்னுடன் நம்பிக்கையுடன் இருக்க மாட்டார்கள் என்று பரந்தாமனுக்குப் புரிந்தது.

அது போல் பொருட்கள் சப்ளை செய்திருந்த சிலருக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கணக்கில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொடுக்கப்பட்டவில்லை என்பது அவர்கள் பணம் கேட்டபோதுதான் தெரிந்தது.

அது போல் செலவுகளிலும் பண மோசடிள் நடந்திருந்தன. சில தொழிலாளர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டதாகக் கணக்கு எழுதப்பட்டு பணம் கையாடப்பட்டிருந்தது.

வேலையை விட்டுப் போன மகேஷைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. வீடு மாறி விட்டான். எங்கே போனான் என்று தெரியவில்லை. திட்டமிட்டு ஏமாற்றி இருக்கிறான் என்று தெரிந்தது.

"போலீஸ்ல புகார் கொடுக்க முடியாதா?" என்றாள் பரிமளா.

"எதையுமே நிரூபிக்க முடியாதே! போலீஸ்ல அவனைப் பிடிச்சாலும் கொஞ்ச நாள் உள்ளே வச்சு விசாரிச்சுட்டு வெளியில விட்டுடுவாங்க. கோர்ட்ல கேஸ் நிற்காது. எல்லாத்துக்கும் மேல அவங்கிட்டேந்து ஒரு ரூபா கூடத் திரும்ப வாங்க முடியாது. நேரம்தான் வீணாகும்!" என்றான் பரந்தாமன்.

"என்னவோ பக்கம் பக்கமா எழுதிக் கிட்டிருக்கீங்களே! அவன் கையாடின விவரங்களைத்தானே எழுதிக்கிட்டிருக்கீங்க?"

"அதையெல்லாம் எழுதி என்ன பிரயோசனம்? போனது போனதுதான். அவன் இது மாதிரி மோசடிபண்ணக் காரணம் நான் ஆஃபீஸ்ல சரியான சிஸ்டத்தை உருவாக்காததுதான். ஒரு மகேஷ் போயிட்டான்னா ஒரு ரமேஷையோ, சுரேஷையோ வச்சுத் தொழிலை நடத்தித்தானே ஆகணும்? அப்பதானே என்னால தொழிலை விரிவாக்கறதில கவனத்தைச் செலுத்த முடியும்.? அப்ப மறுபடி இது மாதிரி தப்பு நடக்கக் கூடாது இல்ல? இனிமே இது மாதிரி நடக்காம இருக்க ஆஃபீஸ்ல சில சிஸ்டம்ஸ், ஒழுங்குமுறைகளைக் கொண்டு வரணும். அதையெல்லாம்தான் யோசிச்சு விவரமா எழுதிக்கிட்டு இருக்கேன்!" என்றான் பரந்தாமன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

குறள் 597:
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

பொருள்:
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானை தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Monday, June 6, 2022

790. நண்பனே, நண்பனே!

"எனக்கும் என் ஆருயிர் நண்பர் சேதுபதிக்கும் இடையே இருக்கும் நட்பு மிக ஆழமானது. ஒருமுறை நான் கைது செய்யப்பட்டபோது, அவர் எனக்காகக் கடவுளிடம் வேண்டி ஒருநாள் முழுவதும் உணவு உட்கொள்ளாமல் விரதம் இருந்து பூஜை அறையில் அமர்ந்திருந்தார். அதுபோல் அவர் உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது நான் பூஜை செய்யவில்லை. ஏனெனில் எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை! ஆனால் ஒருநாள் முழுவதும் காப்பி, டீ கூட அருந்தாமல் மருத்துவமனையில் அமர்ந்திருந்தேன். இதுதான் எங்கள் இருவருக்கிடையே உள்ள நட்பு!"

தலைவர் பேசியதும், கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்துக் குதூகலித்தது.

தொலைக்காட்சியில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கர் "என்ன இது? நட்புங்கறது ரொம்ப பர்சனாலான விஷயம். அதை இப்படியா கொச்சைப்படுத்தறது?" என்றான் தன் மனைவி வசந்தியிடம்.

"அவரு உங்களுக்குப் பிடிச்ச தலைவராச்சே! அவர் பேச்சையே தப்புன்னு சொல்றீங்க?" என்றாள் வசந்தி.

"அதுக்காக அவர் சொல்ற எல்லாத்தையும் நான் சரின்னு ஒத்துக்க முடியாது."

"ஏன் ஒத்தர் தன் நண்பர்கிட்ட தனக்கு எவ்வளவு அன்பு இருக்கு, தன்கிட்ட தன் நண்பருக்கு எவ்வளவு அன்பு இருக்குன்னு சொல்லக் கூடாதா?"

"ஒத்தரை தன் நெருங்கிய நண்பர்னு சொன்னா போதாதா? எவ்வளவு நெருக்கம்கறதை விவரமா சொன்னா அது அந்த நட்போட சிறப்பையே குறைக்கிற மாதிரி எனக்குப் படுது!" 

"இருக்கறதைச் சொன்னா அது எப்படித் தப்பா ஆகும்?" என்றாள் வசந்தி.

"எங்கிட்ட ஏதாவது நல்ல விஷயம் இருந்தா அதை இன்னொருத்தர் சொன்னா அது நல்லா இருக்கும். என்னோட சிறப்பைப் பத்தி நானே சொன்னா கேக்கறவங்களுக்கு அது அருவருப்பாத்தானே இருக்கும்? அது மாதிரிதான் இதுன்னு நினைக்கிறேன்" என்ற சங்கர் சற்றுத் தயங்கி விட்டு, "கணவன் மனைவி உறவுக்கும் இது பொருந்தும்னு நினைக்கிறேன். தன் கணவன் தனக்காக என்னவெல்லாம் செய்வான்னு ஒரு மனைவியோ, தன் மனைவி தனக்கு என்னவெல்லாம் செய்வான்னு ஒரு கணவனோ சொல்றதைக் கேக்கறப்ப, இவங்களுக்குள்ள உண்மையான அன்பு இல்லையோ, அப்படி இருக்கிற மாதிரி காட்டிக்கத்தான் இப்படியெல்லாம் பேசறாங்களோன்னு எனக்குத் தோணும்!" என்றான்.

"நீங்க சொல்றது சரிதாங்க. எனக்குக் கூட அப்படித் தோணி இருக்கு!" என்றாள் வசந்தி.

ந்தத் திருமண நிகழ்ச்சியில் பலர் ஒன்று கூடி இருந்தனர்.சங்கர் தன் நண்பர்கள் சிலருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். வசந்தி சற்றுத் தள்ளி அமர்ந்து வேறு சிலருடன் பேசிக் கொண்டிருந்தாள்.

சங்கரின் நண்பன் மணி தங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

"சங்கரும் நானும் சின்ன வயசிலேந்தே ரொம்ப நெருக்கம். எனக்கு பம்பாயில வேலை கிடைச்சப்ப சங்கரை விட்டுப் பிரியணுமேங்கறதுக்காக அந்த வேலைக்குப் போக வேண்டாம்னே முதல்ல முடிவு செஞ்சுட்டேன். அப்புறம் என் அப்பா வற்புறுத்திச் சொன்னதாலதான் போனேன். இப்பவும் அவனை அடிக்கடி பாக்க முடியலியேன்னு எனக்கு வருத்தம் உண்டு. வீட்டில அடிக்கடி அவனைப் பத்திப் பேசுவேன். ஏன் மனைவி கூட அலுத்துப்பா. சங்கரும் என்னை மிஸ் பண்ணி இருப்பான்னு நினைக்கிறேன். இல்லையாடா சங்கர்?" என்றபடியே சங்கரைப் பார்த்தான் மணி.

சங்கர் சிரிக்காமல் இலேசாகத் தலையாட்டினான்.

இந்தப் பேச்சு காதில் விழுந்ததும் வசந்தி புன்னகையுடன் சங்கரைத் திரும்பிப் பார்த்தாள். சங்கரும் அவளைத் திரும்பிப் பார்த்து இலேசாகப் புன்னகை செய்தான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு 

குறள் 790:
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

பொருள்: 
இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Sunday, June 5, 2022

596. விற்பனை இலக்கு

"இந்த வருஷமும் வழக்கம் போல பக்கத்தில போக முடியாத அளவுக்கு சேல்ஸ் டார்கெட் கொடுத்திருக்காரு நம் எம் டி!"

"ஒவ்வொரு வருஷமும் இந்தக் கதைதானே நடக்குது! ஆனா கடந்த காலத்திலேந்து அவர் பாடம் எதுவும் கத்துக்கிட்ட மாதிரி தெரியலியே!"

"இதெல்லாம் முடியாது சார்னு நம்ம சேல்ஸ் மானேஜர் தைரியமா சொல்லணும்! ஆனா அவரு எம் டியை எதிர்த்துப் பேச முடியாம மௌனமா உக்காந்திருந்தாரு. ஆனா டார்கெட்டை  சொல்லி சொல்லி நம் உயிரை எடுப்பாரு!"

விற்பனை பட்ஜெட் கூட்டம் முடிந்து வெளியே வந்த விற்பனைப் பிரதிநிதிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டவை இவை.

"சார்! மீட்டிங்ல எதுவும் சொல்ல வேண்டாம்னு பேசாம இருந்தேன். ஆனா நாம கொடுத்த டார்கெட் ரொம்ப அதிகம்னு தோணுது" என்றார் சேல்ஸ் மானேஜர் விக்கிரமன்.

"ரொம்ப அதிகம்னு நீங்க சொல்றதைக் கேக்க சந்தோஷமா இருக்கு. கொஞ்சம் அதிகம்னு சொல்லியிருந்தீங்கன்னா, அடாடா, இன்னும் அதிகமாக் கொடுத்திருக்கலாமேன்னு நினைச்சிருப்பேன்!" என்றார் நிர்வாக இயக்குனர் செந்தில் சிரித்துக் கொண்டே.

"சார்! நான் சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க. ஒவ்வொரு வருஷமும் நாம பெரிய டார்கெட் கொடுக்கறோம். ஆனா அதில ஐம்பது அல்லது அறுபது சதவீதம்தான் நம்மால விற்பனை செய்ய முடியுது. இது விற்பனைப் பிரதிநிதிகளை டிஸ்கரேஜ் பண்ணாதா?"

"விற்பனை இலக்கை எட்டலை என்பதற்காக நாம யாரையும் வேலையை விட்டு அனுப்பல, அவங்களுக்கு நல்ல இன்க்ரிமென்ட் கொடுக்கறோம். கடந்த மூணு வருஷங்கள்ள ஒண்ணு ரெண்டு பேரைத் தவிர வேற யாரும் வேலையை விட்டுப் போகவும் இல்ல" என்றார் செந்தில்.

"ஆமாம் சார்! நீங்க ரொம்பப் பெருந்தன்மையா, தாராளமா நடந்துக்கிறீங்கன்னு விற்பனைப் பிரதிநிதிகள் பல பேர் எங்கிட்ட சொல்லி இருக்காங்க. அவங்க உங்களுக்கு விஸ்வாசமாத்தான் இருக்காங்க. ஆனா டார்கெட் அன்ரியலிஸ்டா இருக்கக் கூடாதுன்னு ஒரு பிரின்சிபிள் இருக்கு இல்ல?"

"இருக்கு. ஆனா நான் பின்பற்றுவது வேற பிரின்சிபிள். நம் இலக்குகள் உயர்வா இருக்கணும்கறது என் பிரின்சிபிள்!" என்று சொல்லிச் சிரித்தார் செந்தில்.

"அது நடைமுறைக்கு சரியா வராதே சார்!"

"உங்ககிட்ட ஒரு விஷயத்தைப் பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன். நான் வாழ்க்கையில பல விஷயங்களுக்கு எயிம் பண்ணியிருக்கேன். ஆனா, பெரும்பாலும், எனக்குக் கிடைச்சது நான் எயிம் பண்ணினதை விட ரொம்பக் குறைவாத்தான் இருக்கும். ஆனா மறுபடியும் நான் இன்னொரு பெரிய விஷயத்துக்குத்தான் குறி வைப்பேன். 

"ஆரம்பத்தில நான் ஒரு நிறுவனத்தில வேலை பார்த்தேன்.நான் வேலை பார்த்த நிறுவனத்திலேயே மேலே வரணும்னு முயற்சி பண்ணினேன். ஆனா ஓரளவுக்குத்தான் என்னால மேல வர முடிஞ்சது அப்புறம்தான் சொந்தத் தொழில் ஆரம்பிச்சேன். ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனமா வரணுங்கறது என்னோட இலக்கு. ஆனா நாம இன்னும் ஒரு சின்ன நிறுவனமாத்தான் இருக்கோம்.

"ஆனா இன்னும் என் இலக்கை நான் கைவிடல. சிறு நிறுவனங்களுக்குள்ளேயே நாம ஓரளவு பெரிய நிறுவனமா இருக்கோம்னா அதுக்கு என்ட உயர்வான இலக்குகள்தான் காரணம்னு நான் நினைக்கிறேன்!"

"நீங்க சொல்றது சரியா இருக்கலாம் சார். ஏன்னா, நம்ம செயல்பாடு நம் இலக்கை விடக் குறைவா இருந்தாலும், நம் வளர்ச்சி இந்தத் தொழிலோட சராசரி வளர்ச்சியை விட அதிகமா இருக்கு. நீங்க சொன்னதைக் கேட்டப்புறம்,  உங்களோட உயர்ந்த இலக்குகள்தான் இதற்குக் காரணமா இருக்கும்னு தோணுது!" என்றார் விக்கிரமன். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

குறள் 596:
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

பொருள்:
எண்ணங்கள் எல்லாம் உயர்வாகவே இருக்க வேண்டும். அவை  கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக் கூடாது.

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...