Saturday, June 13, 2020

413. கேள்வி என்னும் வேள்வி

"மன்னா, நீ  இந்த வேள்வியைச் செய்வது பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பல மன்னர்கள் தங்கள் அரச குடும்பத்துக்கு நன்மையை வேண்டியும், போரில் வெற்றியை வேண்டியும்தான் வேள்விகள் செய்கிறார்கள். உன் நாட்டு மக்களுக்கு நன்மையை  வேண்டி நீ  இந்த வேள்வியைச் செய்வது உன் உயர்ந்த சிந்தனையைக் காட்டுகிறது" என்றார் கௌதம முனிவர்.

:முனிவரே! வேள்விகள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. என் குருவின் யோசனைப்படிதான் நான் இதைச் செய்கிறேன். இந்த வேள்வியை நடத்திக் கொடுக்கத் தங்களை அணுக வேண்டும் என்று கூறியவரும் அவர்தான்" என்றான் மன்னன்.

"உன் வெளிப்படைத் தன்மையைப் பாராட்டுகிறேன். உன் வேள்வியை நானே நடத்தி வைக்கிறேன். இந்த வேள்வி நிச்சயம் உன் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும். அதனால் உனக்கும் நன்மை விளையும்."

"முனிவரே! எனக்கு ஒரு ஐயம். நான் முன்பே சொன்னபடி எனக்கு வேள்விகள் பற்றி எதுவும் தெரியாது. வேள்வி செய்வதால் எப்படி நன்மை ஏற்படும்? என் கேள்வி தவறாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்."

"உன் கேள்வியில் தவறு எதுவும் இல்லை. வேள்வி செய்யுமுன் அது பற்றி அறிந்து கொள்வது நல்லது. வேள்வி என்பது வானுலகில் உள்ள தேவர்களை மகிழ்விப்பதற்காகச் செய்யப்படுவது. 

"தேவர்களிடம் ஒரு குறிப்பிட்ட பலனை வேண்டி நாம்  செய்வது வேள்வி. வேள்வியில் உணவுகள் உட்படப் பல பொருட்களை நாம் தேவர்களுக்கு வழங்குகிறோம்.அவற்றை நாம் வேள்வித் தீயில் சேர்க்கும்போது அக்னி பகவான் அவற்றை எடுத்துச் சென்று தேவர்களிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. 

"வேள்வியில் நாம் வழங்கும் பொருட்களை அவி என்று கூறுவர். வடமொழியில் ஹவிஷ் என்று  சொல்வார்கள். நாம் அளிக்கும் அவியால் மகிழ்ந்து தேவர்கள் நாம் எதை வேண்டி வேள்வி செய்கிறோமோ அதை நமக்கு அளிப்பார்கள்" என்று விளக்கினார் கௌதம முனிவர். 

வேள்வி சிறப்பாக நடந்து முடிந்தது. 

"மன்னா! வேள்வி நிறைவடைந்து விட்டது. நீ அளித்த அவி தேவர்களைச் சென்றடைந்திருக்கும். இப்போது இங்கே கூடியிருக்கும் வேத விற்பன்னர்கள், பண்டிதர்கள், அறிஞர்கள் ஆகியோருக்கு நீ பரிசுகள் வழங்க வேண்டும்" என்றார் கௌதமர்.

"தாங்கள் கூறியபடி பொற்காசுகள், பட்டாடைகள்  ஆகியவற்றைப் பரிசளிப்பதற்காகத் தயாராக வைத்திருக்கிறேன். முதலில் தங்களுக்குப் பரிசளித்து கௌரவிக்க விரும்புகிறேன்" என்றான் மன்னன்.

"இல்லை. நான் இந்த வேள்வியை நடத்திக் கொடுத்ததால் நானும் உன்னைத் சேர்ந்தவன். எனவே இந்தப் பரிசுகளை நான் பெறக் கூடாது. இங்கே குழுமி இருக்கும் மற்ற முனிவர்கள், விற்பன்னர்களுக்குக் கொடு."

"சரி, முனிவரே. முதலில் யாருக்குக் கொடுப்பது என்று தெரிவித்தீர்களானால்..."

"கொஞ்சம் இரு" என்று சுற்றுமுற்றும் பார்த்த கௌதமர் பார்வையாளர்களின் வரிசையில் இருந்த சாதாரண மனிதர் போல் தோற்றமளித்த ஒருவரை அழைத்தார்.

அந்த மனிதர் எதுவும் புரியாமல் தயக்கத்துடன் அருகில் வர, "மன்னா! இவரே முதலில் பரிசு பெறத் தகுதி உள்ளவர்" என்றார் கௌதமர்.

அரசன் சற்றுத் தயங்கி விட்டு, அவருக்குப் பரிசுகளை வழங்க, அவரும் குழப்பத்துடன் அவற்றை வாங்கிக் கொண்டு முனிவரையும், அரசனையும் வணங்கி விட்டுச் சென்றா. 

முனிவரின் சீடர்களும், மற்ற அறிஞர்களும் குழப்பத்துடனும், ஏமாற்றத்துடனும் முனிவரைப் பார்த்தனர். 

"ஒரு சாதாரண மனிதக்கு முதல் மரியாதை  கொடுக்க வேண்டும் என்று நான் சொன்னது உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கலாம். நீங்கள் எல்லாம் கல்வியில் தேர்ந்த அறிஞர்கள். ஆனால் சாதாரண மனிதராகத் தோன்றும் அவர் கேள்வியில் தேர்ந்தவர். 

"ஆமாம். கடந்த பல வருடங்களாக நான் உபதேசம் செய்யும் இடங்களுக்கெல்லாம் அவர் வந்து அமர்ந்திருப்பதை நான் கவனித்திருக்கிறேன். சமீபத்தில் அவரை அழைத்து நான் உரையாடினேன். என்னைத் தவிர இன்னும் பல முனிவர்கள், அறிஞர்களின் உரைகளை அவர் பல ஆண்டுகளாகக் கேட்டு வருகிறார் என்று தெரிந்து கொண்டேன். 

"அவரிடம் பேசியதில் அவர் செய்து வரும் கேள்வி என்ற வேள்வியின் காரணமாக அவரிடம் அபரிமிதமான ஞானம் இருப்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய கேள்வி ஞானத்தை அடைந்துள்ள அவர் இந்த வேள்வியின் அவியைப் பெறும் தேவர்களுக்கு ஒப்பானவர். 

"எனவே இந்த வேள்வியில் முதல் மரியாதை அவருக்குத்தான் செய்யப்பட வேண்டும் என்று முன்பே தீர்மானித்து அவரை இந்த வேள்விக்கு வரச் சொன்னேன். கேள்வியறிவின் மேன்மையை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்" என்றார் கௌதம் முனிவர். 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 42
கேள்வி 
குறள் 413:
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

பொருள்:
செவி உணவு என்னும் கேள்வி ஞானம் உள்ளவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், யாகங்களில் அளிக்கப்படும் அவியை உண்ணும்  தேவர்களுக்கு ஒப்பானவர்கள்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

Thursday, June 11, 2020

412. கான்ட்டீன்

"இன்னிக்கு ஒரு இலக்கிய விழா இருக்கு. போகலாம், வரியா?" என்றார் விட்டல்.

விட்டல் என் பக்கத்து வீட்டில் வசிப்பவர். என்னை விடப் பத்து வயது மூத்தவர் என்ற போதிலும் எங்களுக்குச் சில விஷயங்களில் பொதுவான ஆர்வமும், கருத்துக்களும் உண்டு என்பதால் அவர் என்னை ஒரு நண்பனாகவே நடத்தி வந்தார். 

நான் சற்றுத் தயங்கினேன்.   

"இது வருஷத்துக்கு ஒரு தடவை நடக்கிற விழா. ரொம்ப அருமையா இருக்கும். ஒவ்வொரு பேச்சும் அற்புதமா இருக்கும். காலையிலேயே ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதுக்கு என்னால போக முடியல. மாலை நிகழ்ச்சி இன்னும் அருமையா இருக்கும். சாயந்திரம் 4 மணியிலேந்து 9 வரைக்கும். நேரம் போறதே தெரியாது. வா, போயிட்டு வரலாம்" என்றார்.

நான் இன்னும் தயங்கியதைக் கண்டு, "அந்த சபால விஜயா பவன்காரங்கதான் கான்ட்டீன் நடத்தறாங்க!" என்றார் விட்டல்.  

"சரி சார். வரேன்" என்றேன் நான்.

நாங்கள் நான்கு மணிக்கு அரங்கத்தில் நுழையும்போதே கான்ட்டீனிலிருந்து அருமையான மணம் வீசியது. 

"சார்! கான்ட்டீன்ல டிஃபன் சாப்பிட்டுட்டுப் போயிடலாமே!" என்றேன் நான்.

"இப்ப நிகழ்ச்சி ஆரம்பிச்சுடுமே! அப்பறம் வந்து சாப்பிட்டுக்கலாம், வா!" என்று என் கையைப் பிடித்து இழுக்காத குறையாக உள்ளே அழைத்துச் சென்றார் விட்டல்.

விட்டல் சொன்னது போல், சொற்பொழிவுகள் அருமையாகத்தான் இருந்தன. வலிந்து கூறப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளோ, அரசியல், சினிமா பற்றிய குறிப்புகளோ இல்லாமல் இலக்கியச் சுவையை மட்டுமே அறுசுவை விருந்துகளாக வழங்கி கொண்டிருந்தார்கள் பேச்சாளர்கள். 

பேச்சுக்கள் சுவையாக இருந்தாலும் என் மனதில் கான்ட்டீனிலிருந்து வந்த மணம் திரும்பத் திரும்ப வந்து போனது. 

இரண்டு மூன்று முறை விட்டலிடம், "சார்! கான்ட்டீனுக்குப்  போயிட்டு வந்துடலாமா?" என்று மெதுவாகக் கேட்டுப் பார்த்தேன். 

"இருப்பா! இவ்வளவு அருமையாப் பேசிக்கிட்டிருக்காரு. இப்ப எப்படிப் போறது?"என்று என்னை அடக்கி விட்டார். 

'சரிதான். ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி முடிந்ததும்தான் கான்ட்டீனுக்குப் போகப் போகிறோம். அப்போது கான்ட்டீனில் எல்லாம் தீர்ந்து போய் கான்ட்டீனை மூடிக் கொண்டிருப்பார்கள். நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!' என்று நினைத்துக் கொண்டேன்.  

குறிப்பிட்ட ஒரு பேச்சாளர் பேசி முடித்ததும் அடுத்த பேச்சாளரின் பெயரை அறிவித்தார்கள். விட்டல் சட்டென்று என் கையைப் பிடித்து அழுத்தி, "வா, போகலாம்!" என்று எழுந்தார்.  

விறுவிறுவென்று கான்ட்டீனுக்கு நடந்தார். 

கான்ட்டீனில் போய் அமர்ந்ததும், "என்ன சார்! இவ்வளவு நேரம் வர மாட்டீன்னீங்க. இப்ப மட்டும் எப்படி எழுந்து வந்தீங்க? ரொம்பப் பசி வந்துடுச்சோ?" என்றேன் கேலியாக.

"இவ்வளவு அருமையான பேச்சுக்கள் காது வழியே உள்ளே போய்க்கிட்டிருக்கச்சே, பசி எப்படி வரும்?"

"பின்னே, இப்ப மட்டும் எப்படி வந்தீங்க?'

"இந்தப் பேச்சாளர் பேச்சை நான் முன்னால கேட்டிருக்கேன். அவர் அவ்வளவு நல்லாப்  பேச மாட்டார். அதனாலதான் இந்த சமயத்தில வயத்தையும் கொஞ்சம் கவனிச்சுக்கலாம்னு வந்தேன். இவர்  இருபது முப்பது நிமிஷம் பேசுவார்னு நினைக்கிறேன். இவர் பேசி முடிச்சு அடுத்த பேச்சாளர் வரத்துக்குள்ள நாம சாப்பிட்டு முடிச்சுட்டு உள்ள போயிடணும். சீக்கிரமா ஆர்டர் பண்ணு. இப்ப கான்ட்டீன்ல கூட்டம் இல்ல. ஆனா இவர் பேச ஆரம்பிச்சதும் கொஞ்சம் கொஞ்சமா எல்லாரும் எழுந்து கான்ட்டீனுக்கு வர ஆரம்பிச்சுடுவாங்க! அப்புறம் நாம ஆர்டர் பண்ணினது வர லேட் ஆயிடும்" என்றார் விட்டல். 

அவர் சொல்லி முடித்தபோதே, ஒரு சிலர் கான்ட்டீனுக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 42
கேள்வி 
குறள் 412:
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

பொருள்:
செவிக்கு கேள்வி என்றஉணவு இல்லாதபோது, வயிற்றுக்குச் சிறிது உணவு அளிக்கப்படும்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

Monday, June 8, 2020

411. தேர்வு முடிவுகள்

"வருஷம் பூரா கல்லூரியில படிக்கிறோம். கடைசியில மூணு மணி நேரப் பரீட்சையில் நாம என்ன எழுதறமோ அதுதான் நம்ம விதியைத்  தீர்மானிக்குது. இந்த முறை அநியாயமாத் தோணலே?" என்றான் ஜெயந்த்.

"சில இடங்கள்ள தொடர் மதிப்பீடுன்னு ஒரு முறை இருக்கு. வருஷம் முழுக்க  நாம எழுதற பல டெஸ்ட் மார்க்குகளை மொத்தமா பார்த்து நம்ம கிரேடைத் தீர்மானிக்கற முறை அது. அது பரவாயில்லையா?" என்றான் கண்ணன்.  

"ஐயையோ! வேண்டாம். வருஷத்துக்கு ஒரு தடவை பரீட்சை எழுதற முறையே பரவாயில்லை!" என்றான் நடராஜன்.

நெருங்கி வரும் ஆண்டு இறுதிப் பரீட்சை தரும் அழுத்தத்தைக் குறைக்க, அந்த நண்பர்கள் படிப்புக்கிடையே அவ்வப்போது இது போன்று பேசிச் சிரித்துத் தங்களைக் கொஞ்சம் இளக்கிக் கொள்வார்கள்.  

தேர்வில் யார் அதிக மதிப்பெண்கள் வாங்குவார்கள் என்று அவர்களுக்குள் ஒரு விவாதம் நடந்தது. 

"சந்தானம், சிவராமன் ரெண்டு பேர்ல ஒத்தார்தான். இதில என்ன சந்தேகம்?" என்றான் நடராஜன்.

"அது தெரியும். ஆனா ரெண்டு பேர்ல யாரு?" என்றான் ஜெயந்த் .

"எனக்கென்னவோ சிவராமன்தான் வருவான்னு தோணுது. அவன்தான் விழுந்து விழுந்து படிக்கிறான். சந்தானம் நம்ம மாதிரி கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கற மாதிரி இருக்கு" என்றான் கண்ணன்.

"டே, அவனை நம்மோட ஒப்பிடாதேடா. அவன் எங்கே, நாம எங்கே?" என்றான் ஜெயந்த்.

"இல்லை. அவங்க ரெண்டு பேர்ல சந்தானம் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கான்னு சொல்றேன்."

"இருக்கலாம். சரி, விடு. நாம படிக்கிறதை விட்டுட்டு அடுத்தவங்க எப்படிப் படிக்கறாங்கன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கோம்!" 

தேர்வுகள் நடந்து முடிந்தன. பொதுவாக அனைவருக்குமே பௌதிக கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்தது. 

பரீட்சை முடிவுகள் வந்தபோது பௌதிகத் தேர்வில் சிவராமனை விட சந்தானம் 10 மதிப்பெண்கள் கூடுதலாக வாங்கி இருந்தான்.

"எப்படிடா? நான் ரொம்பக் கஷ்டப்பட்டுப் படிச்சேன்.ஆனா பரீட்சையில் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் புத்தகத்திலேயே இல்லை. நீ எப்படி இவ்வளவு மார்க் வாங்கின? வேற புத்தகம் ஏதாவது படிச்சியா?" என்றான் சிவராமன் சந்தானத்திடம்.

"வேற புத்தகம் எதுவும் படிக்கல. ஆனா இதையெல்லாம் நம்ம ப்ரொஃபஸர் வகுப்பிலே விளக்கமா சொல்லி இருக்காரு. அதெல்லாம் முக்கியம்னும் சொல்லி இருக்காரு. அதனால அதையெல்லாம் நோட்ல குறிச்சு வச்சிருந்தேன். அது உபயோகமாக இருந்தது" என்றான் சந்தானம்.

சிவராமன் மௌனமாக இருந்தான். புத்தகத்தில் படித்துக் கொள்ளலாம் என்ற அலட்சியத்துடன் தான் பல வகுப்புகளுக்குச் செல்லாமல் இருந்தது தன்னை எப்படி பாதித்திருக்கிறது என்று புரிந்ததது. தன் அளவுக்கு விழுந்து விழுந்து படிக்காமல் சிவராமனால் எப்படித் தன் அளவுக்கும், சில பாடங்களில் தன்னை விட அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற முடிந்தது என்றும் புரிந்தது.  

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 42
கேள்வி 
குறள் 411:
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

பொருள்:
செவியால் கேட்டு அறியும் செல்வம் செல்வங்களில் ஒன்றாகும். அந்தச் செல்வம் எல்லாச் செல்வங்களிலும் தலை சிறந்தது.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

Friday, June 5, 2020

410. புலன் விசாரணை!

தேவராஜனுக்குத் திரைப்படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் இல்லை. அவன் மகன் குரு தொலைக்காட்சியில் ஏதோ திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்னடா படம் அது?" என்றான் தேவராஜன்.

"ஏழாம் அறிவு. நல்ல படம்ப்பா இது" என்றான் குரு, தான் அந்தப் படத்தைப் பார்ப்பதை நியாயப்படுத்தும் விதமாக. 

"ஏழாம் அறிவா? அறிவுங்கறது ஒண்ணுதானே? அதில ஏது ஏழாம் அறிவு , எட்டாம் அறிவெல்லாம்?"

"இல்லப்பா. நமக்கெல்லாம் ஆறறிவு இருக்குல்ல?"

"ஆறு அறிவா? எல்லாருக்கும் மண்டைக்குள்ள மூளைன்னு ஒண்ணுதானே இருக்கு?"

"கொஞ்சம் இருப்பா. படம் ஓடிக்கிட்டிருக்கு. நடுவில விளம்பரம் வரும் இல்ல, அப்ப சொல்றேன்" என்று குரு சொல்லிக் கொண்டிருக்கும்போதே விளம்பர இடைவேளை வந்து விட்டது.

"சொல்லு. தெரிஞ்சுக்கறேன். நான்தான் படிக்கலியே!" என்றான் தேவராஜன்.

"அப்பா! மூளைங்கறது ஒரு உறுப்பு. அறிவுன்னு சொல்றது நமக்கு இருக்கற... சக்திகளை, அதாவது... இப்ப ஐம்புலன்கள்னு சொல்றோம் இல்ல?"

"ஐம்புலன்னா?"

"கண், காது, மூக்கு, நாக்கு, தோல் இதைத்தான் புலன்கள்னு சொல்றோம்."

"அதுதான் எல்லோருக்கும் இருக்கே. ஆடுமாடு, பூச்சி, புழுக்கெல்லாம் கூட இருக்கே?"

"இல்லப்பா. புழு பூச்சிக்கெல்லாம் ஐம்புலன்கள் இருக்கறதா சொல்ல முடியாது."

"ஏன் அதுங்களும்தான் பாக்குது, சாப்பிடுது."

"அப்படி இல்லப்பா. சில உயிரினங்களுக்கு ஒரு அறிவு அதாவது தொடு உணர்ச்சி மட்டும்தான் இருக்கும் - உதாரணமா மரம், செடி, கொடி, புல், பூண்டு மாதிரி உயிர்கள்."

"சரி."

"மீன், நத்தை, சங்கு மாதிரி உயிர்களுக்குத் தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சின்னு ரெண்டு அறிவுகள்தான் இருக்கு."

"அட, ஆச்சரியமா இருக்கே!" என்றான் தேவராஜன்.

தந்தையின் ஆர்வத்தால் உந்தப்பட்டு குரு உற்சாகமாகத் தொடர்ந்தான்.

"அப்புறம், எறும்பு, கரையான், அட்டை மாதிரி உயிர்களுக்கு சுவை, மணம், தொடு உணர்ச்சிங்கற மூணு புலனைறிவுகள் உண்டு. அடுத்த நிலையில, நண்டு, தும்பி, வண்டு மாதிரி உயிர்களுக்கு பார்வையையும் சேர்த்து நான்கு புலனறிவுகள். மிருகங்கள், பறவைகளுக்கு கேட்கும் சக்தியையும் சேர்த்து ஐம்புலன்கள்."

"சரி. ஆறாவது அறிவுங்கறது?"

"அதுதான் சிந்திக்கிற சக்தி. அது மனுஷங்களுக்கு மட்டும்தான் இருக்கு."

"ஓ, அறிவுங்கறதில இவ்வளவு விதம் இருக்கா? எனக்குத் தெரியலியே!"

"ஆமாம்ப்பா. அப்புறம் ஏழாவது அறிவுன்னா.."

"வேண்டாம். நான் படிக்காததவன். எனக்கு ஆறாவது அறிவு இருக்கான்னே எனக்குத் தெரியல. மிருகங்களுக்கு இருக்கற அஞ்சு அறிவுதான் எனக்கும் இருக்கும் போலருக்கு. இப்ப ஏழாவது அறிவு எதுக்கு? படம் ஆரம்பிச்சுடுச்சு. நீ பாரு!" என்று சொல்லி எழுந்து சென்றான் தேவராஜன். 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 41
கல்லாமை 
குறள் 410:
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

பொருள்:
அறிவு விளங்குவதற்குக் காரணமான நூல்களைக் கற்றவர்களுக்கும், கல்லாதவர்களுக்கும் உள்ள ஒப்புமை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள ஒப்புமையைப் போன்றது.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

Thursday, June 4, 2020

409. மாற்று ஏற்பாடு!

"உன் அப்பா இந்த ஊருக்கு ஒரு நல்லது செய்யணுங்கறதுக்காக இந்தச் சின்ன ஊர்ல இப்படி ஒரு தொழிற்சாலையை ஆரம்பிச்சாரு. நீ அதை மூடப் பாக்கறியே!" என்றார் சிவசாமி.

ஊரில் செல்வாக்குள்ளவர் என்பதால் அவரைக் கலந்தாலோசிக்காமல் ஊரில் யாரும் எதுவும் செய்வதில்லை.

"என் அப்பா பாலிடெக்னிக்கில படிச்சாரு. அவருக்கு எஞ்சினியரிங்கில ஆர்வம் இருந்தது. அதனால தன் சொத்தையெல்லாம் வித்து இந்த ஸ்டீல் ரோலிங் மில்லை ஆரம்பிச்சாரு. அது ஓரளவுக்கு வளர்ந்து இன்னிக்கு முப்பது பேர் அதில வேலை செய்யறாங்க. ஓரளவுக்கு வருமானமும் வருதுதான். 

'ஆனா நான் படிக்கல. எனக்கு இந்தத் தொழிற்சாலை விஷயம் எதுவும் புரியறதில்ல. மானேஜரை நம்பி நான் எல்லாம் செய்ய வேண்டி இருக்கு. அவர் சொல்றது சரியா தப்பான்னு கூட எனக்குப் புரியறதில்ல. இந்தக் கணக்கு வழக்கும் எனக்குப் புரியல. 

"ஒரு மாசம் நிறையப் பணம் வருது, ஒரு மாசம் குறைச்சலா வருது. கேட்டா மார்க்கெட்ல இரும்பு விலை குறைஞ்சுடுச்சுங்கறாங்க, இல்லேன்னா கலெக்‌ஷன் குறைச்சல்ங்கறாங்க. என்னை ஏமாத்தறாங்களான்னு கூட என்னால கண்டு பிடிக்க முடியல. 

"மெஷினெல்லாம் பழசாயிடுச்சு. ஆனா ஜெர்மன் மெஷின்கறதால அதையெல்லாம் ஓரளவுக்கு நல்ல விலைக்கு வாங்கிக்கறேன்னு வெளியூர்ல ஃபாக்டரி வச்சுருக்கறவரு ஒத்தரு சொல்லி இருக்காரு. நான் தொடர்ந்து ஓட்டினா ரெண்டு மூணு வருஷத்தில புது மெஷின் வாங்க வேண்டி இருக்கலாம். அதிலல்லாம் நான் முதலீடு செய்ய விரும்பல. 

"மெஷின்களை அவர் கிட்ட வித்துட்டு, நிலத்தையும் வித்தா 25 லட்ச ரூபா வரும். பணத்தை பாங்க்ல போட்டுட்டு மாசா மாசம் வட்டியை வாங்கிக்கிட்டு வீட்டில உக்காந்திருக்கலாம்" என்றான் குமார்.

"தொழிற்சாலையை நடத்தினா, அதை விட அதிக வருமானம் வருமேப்பா!"

"அதான் சொன்னேனே! என்னால அதையெல்லாம் பாத்துக்க முடியாது. எனக்கு வீடு இருக்கு, நிலம் இருக்கு. பாங்க்ல வர வட்டி எனக்குப் போதும்."

"30 பேர் வேலை செய்யறாங்களே, அவங்க கதி?"

"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?" என்றான் குமார்.

குமாரின் தொழிற்சாலையில் வேலை செய்யும் கோவிந்தன்  சிவசாமியைச் சந்தித்து, "என்னங்க, குமார் இப்படிப் பண்றேங்கறாரு?" என்றான்.

"நான் சொல்லிப் பாத்துட்டேன். கேக்கல. என்ன செய்ய முடியும்? உன் பையன் படிச்சுட்டு சென்னையில வேலை செய்யறானே, நீ அவனோட போய் இருந்துக்க வேண்டியதுதான்!" என்றார் சிவசாமி.

"அப்படி இல்லீங்க. மத்தவங்களும் பாதிக்கப்படறாங்களே! சரி. என் பையன்கிட்ட ஃபோன் பண்ணி அவன் யோசனையைக் கேக்கறேன்."

டுத்த நாளே கோவிந்தனின் மகன் கார்த்திக் சென்னையிலிருந்து கிளம்பி வந்து விட்டான். 

அடுத்த சில நாட்களில் ஊரில் பலரிடமும் கார்த்திக் பேசினான். 

முன்று நாட்களுக்குப் பிறகு சிவசாமியுடன் சென்று குமாரைச் சந்தித்தான் கார்த்திக்.

"குமார்! நீ உன் மெஷின்களையும், தொழிற்சாலை நிலத்தையும்  யார்கிட்டயும் விற்க வேண்டாம். 25 லட்ச ரூபாய் கொடுத்து இவனே உன் தொழிற்சாலையை வாங்கிப்பான். ஒரு மாசம் அவகாசம் மட்டும் கொடு!" என்றார் சிவசாமி.

"எப்படி? உன்கிட்ட அவ்வளவு பணம் இருக்கா என்ன?" என்றான் குமார் கார்த்திக்கிடம் வியப்புடன்.

"என்கிட்ட இல்லை ஐயா. ஆனா நான் ஒரு ஏற்பாடு செஞ்சிருக்கேன். இந்தத் தொழிற்சாலையை நடத்த ஒரு கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப் போறோம். இந்த ஊர்ல இருக்கற ஆயிரம் குடும்பங்களும் ஆளுக்கு 1000 ரூபா முதல் போடுவாங்க. அதில ஒரு 10 லட்சம் ருபா வரும். அதைத் தவிர இந்தத் தொழிற்சாலையில வேலை செய்யற 30 பேரும் ஆளுக்கு 10,000 ரூபா போடுவாங்க. அவங்கள்ள சில பேர் கிட்ட பணம் இல்லாட்டாலும் கடனோ ஏதோ வாங்கி முதலீடு செய்ய ஒத்துக்கிட்டிருக்காங்க. ஏன்ன அது அவங்க வாழ்க்கைப் பிரச்னை ஆச்சே! அதில ஒரு 3 லட்ச ருபா வரும். மீதி 12 லட்ச ரூபாயை நான் முதலீடு செய்யப் போறேன்" என்றான் கார்த்திக்.

"நீ வேலைக்குப் போய் ஒரு வருஷம்தானே ஆகியிருக்கும்? உங்கிட்ட அவ்வளவு பணம் இருக்கா?" என்றான் குமார்.

"இல்லதான். ஆனா நான் ஒரு நல்ல வேலையில இருக்கறதால பாங்க்ல எனக்கு 10 லட்ச ரூபா பர்சனல் லோன் கொடுப்பாங்க. கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் அடைக்கணும். சமாளிக்க முடியும்னு நினைக்கறேன். இன்னும் ரெண்டு லட்ச ரூபா குறையுது. அதை ஐயாவே முதலீடு செய்யறேன்னு சொல்லி இருக்காரு!" என்று சொல்லி சிவசாமியைப் பார்த்தான் கார்த்திக்.

"ஆமாம் குமார். இவன் பம்பரையில இதுவரை யாரும் படிச்சதில்ல. படிச்ச முதல் ஆளு இவன் தான். இவனை அவன் அப்பன் படிக்க வச்சது வீண் போகல!" என்றார் சிவசாமி. 

அவர் குமாரைப் பார்த்த பார்வையில், 'ஆனா படிச்ச பரம்பரையில வந்த நீ, படிக்காததால இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க பாரு!' என்று சொல்வது போல் இருந்தது.
பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 41
கல்லாமை 
குறள் 409:
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.

பொருள்:
உயர்ந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும் ஒருவர் கல்லாதவராக இருந்தால், தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்வி கற்றவரை விடப்  பெருமையில் குறைந்தவர்தான்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...