Monday, May 13, 2019

394. ஒரு புதிய அனுபவம்!

தணிகாசலத்துக்கு அந்த மாநாட்டுக்கு அழைப்பு வந்தபோது அவனுக்கு அது பற்றிப் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. 

ஒரு கிராமத்துப் பள்ளியில் சரித்திர ஆசிரியராகப் பணி புரிந்து வந்த அவன் இதற்கு முன் சில பயிற்சிகள், மாநாடுகளுக்குப் போயிருக்கிறான். 

அவற்றிலெல்லாம், அரசு அதிகாரிகள் மற்றும் சில பெருந்தலைகள் வந்து மணிக்கணக்கில் பேசி விட்டுப் போவார்கள். மாநாடு எப்போது முடியும் என்று பொறுமையிழந்து காத்திருக்கும் அளவுக்கு அவை சலிப்பூட்டுபவையாகவும், அயர்ச்சியை உண்டாக்குபவையாகவும் இருக்கும்.

ஆனால் இந்த மாநாட்டை சற்று வித்தியாசமான முறையில் அமைத்திருந்தார் மாநாட்டை ஏற்பாடு செய்த மாவட்டக் கல்வி அதிகாரி. 

மாவட்டத்தின் பல பள்ளிகளிலிருந்து வந்திருந்த சரித்திர ஆசிரியர்கள் பாடங்கள், பாடம் நடத்தும் முறைகள், பாடம் நடத்துவதில் ஏற்படும் சவால்கள், மாணவர்களைப் பாடத்தில் ஆர்வம் கொள்ளச் செய்யும் வழிகள் என்று பல்வேறு நடைமுறைத் தலைப்புகளில் தங்களுக்குள் கலந்துரையாடல் செய்து, தங்கள் அனுபவங்கள், பிரச்னைகள் இவற்றைப் பகிர்ந்து கொண்டு, தீர்வுகளையும், ஆலோசனைகளையும் தங்களுக்குள் விவாதிக்கும் வகையில் அந்த மாநாட்டை அவர் வடிவமைத்திருந்தார்.

மாநாட்டின் துவக்கத்தில் மாநாட்டின் வழிமுறை பற்றிக் கல்வி அதிகாரி அரை மணி நேரம் விளக்கி விட்டு மாநாட்டில் பங்கு பெற்ற ஆசிரியர்களை 15 நபர்கள் கொண்ட குழுக்களாகப் பிரித்தார். 

ஒவ்வொரு குழுவும் என்னென்ன தலைப்புகளில் எவ்விதங்களில் விவாதங்கள், கலந்துரையாடல்கள், மாதிரி வகுப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை, குறிப்பிடப்பட்ட கால அளவைப் பின்பற்றி, கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களின்படி நடத்த வேண்டும் என்பதை அவர் தன் துவக்க உரையில் விளக்கி இருந்தார்..

ன் குழு உறுப்பினர்களைப் பார்த்ததும் தணிகாசலத்துக்கு முதலில் சற்று பயம் ஏற்பட்டது. அவன் குழுவில் பெரும்பாலானோர் அவனை விட  புத்திசாலிகளாகவும், திறமை உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பதாகத் தோன்றியது. 

தன்னை இவர்கள் மதிப்பார்களா, இவர்கள் முன் தன்னால் பேச முடியுமா என்ற ஐயம் அவனுக்கு எழுந்தது. அதிலும் அவன் குழுவில் ஆங்கிலப் புலமை கொண்டவர்கள் இருந்தால் அவர்கள் தட்டுத் தடுமாறி ஆங்கிலம் பேசும் தன்னை அடியோடு மதிக்க மாட்டார்கள் என்று அவன் நினைத்தான்.

முதல் நாள் முற்பகலில் நடந்த விவாதத்தின்போது தணிகாசலம் சற்று ஒதுங்கியே இருந்தான். அவனைப் போன்று இன்னும் இரண்டு மூன்று பேரும் அதிகத் தயக்கம் காட்டினர். தான் பயந்தது போல்தான் நடக்கும் என்று அவனுக்குத் தோன்றியது.

மதிய உணவு இடைவேளையின்போது கூட தணிகாசலம் தன் குழு உறுப்பினர்களைத் தவிர்த்து விட்டு, மற்ற குழுக்களில் இருந்த அவனைப் போன்ற இயல்புடைய சிலரிடம் மட்டுமே பேசினான்.

ஆனால், பிற்பகலில் இறுக்கம் தளர்ந்து குழு உறுப்பினரிடையே சற்று நெருக்கம் ஏற்படத் துவங்கியது. தன்னை மதிக்க மாட்டார்கள் என்று அவனால் கருதப்பட்ட சிலர் அவனைப் பார்த்துப் புன்னகை செய்து அவனிடம் நட்பாகப் பழக ஆரம்பித்தனர். 

ஆயினும் ஓரிருவர் இன்னும் இறுக்கமாகவே இருந்ததாகத் தோன்றியது. அதுவும் குறிப்பாக, சற்று நவீனப் போக்கு கொண்டவள் போல் தோன்றிய சுதா என்ற பெண் அவன் பக்கமே திரும்பாமல் பேசிக் கொண்டிருந்தாள்.

பாடம் நடத்தும் உத்திகள் பற்றி ஒவ்வொருவராகப் பகிர்ந்து கொண்டபோது, தான் பேசியதை அனைவரும் கூர்ந்து கவனித்ததாகத் தணிகாசலத்துக்குத் தோன்றியது. சுதா கூட அவன் பேசுவதை கவனித்தாள். "கொஞ்சம் இரைஞ்சு பேசுங்க. காதில சரியா விழலை" என்று கூடச் சொன்னாள்.

அவன் பேசி முடித்ததும், சிலர் அவன் பாடம் நடத்தும் உத்திகளை வெளிப்படையாகப் பாராட்டினர்.

தன்னை மதிக்க மாட்டார் என்று அவன் நினைத்த இன்னொரு நபர், "அது சரி சார். உங்க முறைப்படி பாடம் நடத்தினா, பையன்களுக்குப் பாடம் கேக்க சுவாரசியமாத்தான் இருக்கும். ஆனா, பரீட்சை எழுத இல்ல அவங்களை நாம தயார் செய்ய வேண்டி இருக்கு? உங்க முறை அதுக்கு உதவுமா?" என்றார். 

அவர் கேள்வியை ஆமோதித்துப் பலரும் தலையாட்டினார்.

"சார்! பையன்களுக்கு சப்ஜெக்ட்ல ஆர்வம் வந்தா, அவங்க பாடத்தைப் படிப்பாங்க. பரீட்சை எழுதவும் தங்களைத் தயார் செஞ்சுப்பாங்க. நாமதான் கேள்விகள் எல்லாம் கொடுத்து பதில் எழுதப் பயிற்சி கொடுக்கறமே!" என்றான் தணிகாசலம்.

அன்றைய இறுதி நிகழ்ச்சியாக, வகுப்பறையில் தான் எப்படிப் பாடம் நடத்துகிறோம் என்பதை ஒவ்வொருவரும் பத்து நிமிடம் நடத்திக் காட்டினார். தணிகாசலம் பாடம் நடத்திய விதம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

"நீங்க முதல்ல உங்க பாடம் நடத்தற முறையைச் சொன்னபோது அது சரியா வருமான்னு எனக்குச் சந்தேகம் இருந்தது. இப்ப நீங்க நடத்திக் காட்டினப்பறம்தான் உங்க முறை எனக்குப் புரிஞ்சது. நானும் இதைப் பின்பற்றிப் பார்க்கப் போறேன்" என்றாள் சுதா.

"தாங்க்ஸ் மேடம்" என்றான் தணிகாசலம் பொங்கி வந்த மகிழ்ச்சியுடனும், நன்றி உணர்வுடனும்.

"மேடம்லாம் வேண்டாம். நான் உங்களை விட வயசில சின்னவளாத்தான்  இருப்பேன். என்னைக் கிழவியா  ஆக்கிடாதீங்க!" என்று சுதா சொன்னதும் அனைவரும் சிரித்தனர்.

ரண்டாம் நாள் காலை அவர்கள் கூடியபோது, நெருங்கிய நண்பர்கள் கூடிப் பேசுவது போன்ற உணர்வுடன் இருந்தனர். முதல் நாள் இருந்த தயக்கம் போய், அன்றைய விவாதங்களில் அனைவரும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கலந்து கொண்டனர். 

மாலை நிகழ்ச்சி முடிந்தபோது, அன்றைய நாள் மிக வேகமாக ஓடி விட்டது போல் தோன்றியது.

கல்வி அதிகாரியின் சுருக்கமான முடிவுரைக்குப் பிறகு அனைவரும் பிரியும் நேரம் வந்தது.

"இதுக்கு முன்னாடி சில மாநாடுகளுக்குப் போயிருக்கேன். ஆனா இந்த முறை இருந்த மாதிரி இவ்வளவு சந்தோஷமும் திருப்தியும் இருந்ததில்லை" என்றான் தணிகாசலம்.

"ஆமாம். இதுவரைக்கும் நாம கலந்க்கிட்ட மாநாடுகளில, அதிகாரிகளோ, வேற பெரிய மனுஷங்களோ பேசறதை பொறுமையாக் கேட்டுக்கிட்டு எப்படா விடுதலை கிடைக்கும்னு உட்கார்ந்திருந்தோம். இப்ப நாம நம்ப சப்ஜெக்டைப் பத்திப் பேசி நிறைய விஷயங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கிட்டது ரொம்ப திருப்தியான அனுபவமா இருந்ததில ஆச்சரியமில்லையே!" என்றார் இன்னொருவர்.

"ரெண்டு நாள் இவ்வளவு சுவாரசியமா பல பயனுள்ள விஷயங்களைப்  பேசினதில நமக்குள்ள ஒரு நெருக்கம் வந்துடுச்சு. இப்ப உங்க எல்லாரையும் பிரியணும்னு நினைச்சா வருத்தமா இருக்கு" என்றாள் சுதா.

"நாம எல்லாரும் எல்லாரோட முகவரிகளையும் வாங்கி வச்சுப்போம். ஒவ்வொத்தரும் நம்ம முகவரியை ஒரு பேப்பர்ல எழுதி அதை வரிசையா எல்லாருக்கும் சர்க்குலேட் பண்ணுவோம். அதை மத்தவங்க எல்லாரும் எழுதிக்கட்டும். யார் வீட்டிலேயாவது ஃபோன் இருந்தா, அவங்க ஃபோன் நம்பரையும் எழுதுங்க. வாய்ப்புக் கிடைச்சா மறுபடி சந்திக்கலாம்" என்றான் தணிகாசலம்.

அனைவரும் அவன் சொன்னதை ஆமோதிப்பது போல் தங்கள் முகவரியை எழுத பேப்பர்களையும் பேனாக்களையும் எடுத்தனர்.

பொருட்பால்
அரசியல் இயல் 
அதிகாரம் 40
கல்வி
குறள் 394:
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

பொருள்:
மகிழ்ச்சியுடன் ஒன்று கூடி, வருத்தத்துடன் பிரிதல் புலவர்களின் இயல்பான செயலாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம். தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்ம...