காலை ஆறு மணிக்கு வாசல் கதவு தட்டப்பட்டது. சங்கரனின் மனைவி கல்யாணி கதவைத் திறந்தாள்
வாசலில் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், "சார் இருக்காரா?" என்றான், ஒரு மாதிரியாகச் சிரித்துக் கொண்டே
"நீங்க யாரு?"
"சாருக்கு ரொம்ப வேண்டியவங்க. நாகராஜ்னு சொல்லுங்க, தெரியும்!" என்றான் அவன்.
"உள்ளே வாங்க" என்ற கல்யாணி, அவர்களை முன்னறையில் உட்காரச் சொல்லி விட்டு, தூங்கிக் கொண்டிருந்த சங்கரனை எழுப்ப, உள்ளே சென்றாள்.
தன்னை நாகராஜ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன் மட்டும் சோஃபாவில் உட்கார, மற்றவன் நின்று கொண்டிருந்தான்..
முன்னறையில் அமர்ந்திருந்தவர்களைக் கண்டதும், தூக்கத்திலிருந்து எழுந்து வந்த சங்கரனின் முகம் வெளிறியது.
"ஏன் வீட்டுக்கு வந்தீங்க?" என்றார் சங்கரன், பலவீனமான குரலில்.
"பின்னே? கடன் வாஙு்கி சீட்டாடிட்டுக் கடனைத் திருப்பிக் கொடுக்காம, வீட்டுக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டிருந்தா, நான் சும்மா உக்காந்துக்கிட்டிருக்கணுமா? பணத்தை எப்ப திருப்பிக் கொடுக்கப் போற?" என்றான் நாகராஜ்.
"கொடுத்துடறேன். நீங்க முதல்ல கிளம்புங்க, என் மனைவி மகன்களுக்குத் தெரிஞ்சா, என்னைக் கேவலமா நினைப்பாங்க."
"நீ கேவலமானவன்தானேடா? நானே அவங்களைக் கூப்பிட்டுச் சொல்றேன். உள்ளே யாரு? எல்லாரும் வெளியில வாங்க!" என்று உரத்த குரலில் கூவினான் நாகராஜ்.
உள்ளிருந்து கல்யாணியும், சங்கரனின் மூன்று மகன்களும் முன்னறைக்கு வந்தனர்.
"இந்தப் பெரிய மனுஷன் எங்கிட்ட கடன் வாங்கி சீட்டாடி இருக்கான். எனக்கு மொத்தம் அம்பதாயிரம் ரூபா தரணும். அதை உடனே கொடுக்கலேன்னா என்ன ஆகும் தெரியுமா?" என்றான் நாகராஜ்.
சங்கரன் தலைகுனிந்து நிற்க, மற்ற நான்கு பேரும், பயத்துடன் நாகராஜின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நாகராஜ் தன் அருகில் நின்று கொண்டிருந்த ஆளைக் காட்டி, "இவன் இந்த ஊரிலேயே பெரிய ரௌடி. கடனை வசூலிக்கிறதில கில்லாடி. சில பாங்க்ல கூட இவனைப் பயன்படுத்தறாங்க. இவன்கிட்ட பொறுப்பைக் கொடுத்துட்டேன்னா, இவன் என்ன செய்வான்னு எனக்குத் தெரியாது. உங்க வீடு இப்ப இருக்கற மாதிரி இருக்காது. நீங்களும் இப்ப இருக்கற மாதிரி இருக்க மாட்டீங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும். உங்களுக்கு ஒரு வாரம் டயம். வர திங்கட்கிழமைக்குள்ள எனக்குப் பணம் வந்து சேராட்டா, செவ்வாய்க்கிழமை காலையில, இவன் உங்க வீட்டுக்கு வருவான்" என்ற நாகராஜ், "வாடா போகலாம்" என்று தன்னுடன் வந்தவனைப் பார்த்துக் கூறி விட்டு எழுந்தான்.
"ஒரு நிமிஷம்!"
நாகராஜ் திரும்பிப் பார்த்தான்.
சங்கரனின் மூன்று மகன்களில் இளையவனாக இருந்தவன்தான் பேசினான்.
"இன்னும் ஒரு வாரத்தில நானே உங்க வீட்டுக்கு வந்து பணத்தைக் கொடுக்கறேன். எங்க வீட்டுக்கு வரது, ரௌடியை வச்சு மிரட்டறது இதெல்லாம் வேண்டாம்!" என்றான் அவன்.
"நீ யாருடா சின்னப்பய? உன் பேச்சை நான் நம்பணுமா?" என்றான் நாகராஜ்.
"மரியாதை வேணும், தம்பி. அப்பதான் உனக்கு மரியாதை கிடைக்கும். இப்பவே என்ன ஆச்சு பாரு. உங்கிட்ட மரியாதையாப் பேசிக்கிட்டிருந்த என்னையே வா, போன்னு பேச வச்சுட்ட. முதல்ல இடத்தைக் காலி பண்ணு!" என்றான் சங்கரனின் இளைய மகன்.
நாகராஜ் பேசாமல் அங்கிருந்து அகன்றான்.
நாகராஜ் சென்றதும், கல்யாணி தன் இளைய மகனைப் பார்த்து, "ஏண்டா மணி, உன்னோட ரெண்டு அண்ணன்களும் சும்மா இருக்காங்க. நீ பாட்டுக்குப் பணம் தரேன்னு சொல்லிட்ட. எப்படிக் கொடுக்கப் போற!" என்றாள்.
"ஆமாம். இவர் பெரிய வேலையில இருக்காரு இல்ல? இவருக்கு பாங்க்ல பர்சனல் லோன் கொடுப்பாங்க. அதை வாங்கி அந்த ரௌடிகிட்ட கொடுத்துக் கடனை அடைச்சுடுவாரு!" என்றான் சங்கரனின் இரண்டாவது மகன் சுதாகர்.
"நீங்க ரெண்டு பேரும் நல்ல வேலையில இருக்கீங்க. எனக்குப் படிப்பு வராததால, ஒரு மெகானிக் ஷாப்ல வேலை செய்யறேன். நான் ரொம்ப நல்லா வேலை செய்யறதைப் பார்த்துட்டு, என் முதலாளி, 'உனக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளு, செய்யறேன். ஆனா, வேலையை விட்டுப் போயிடாதே'ன்னு எங்கிட்ட அடிக்கடி சொல்லுவாரு. அதனால, அவர்கிட்ட அம்பதாயிரம் ரூபா அட்வான்ஸ் கேட்டா, கண்டிப்பாக் கொடுப்பாரு. என் சம்பளத்திலேந்து மாசம் அஞ்சாயிரம் பிடிச்சுக்கச் சொல்லி, ஒரு வருஷத்துக்குள்ள அந்தக் கடனை அடைச்சுடுவேன்" என்றான் மணி.
அனைவரும் மௌனமாக இருந்தனர்.
மணி தன் அப்பாவிடம், "அப்பா! இந்த சீட்டாடறதையெல்லாம் இனிமே விட்டுடுங்க. இன்னிக்கு நடந்த மாதிரி இன்னொரு தடவை நடக்கக் கூடாது" என்றான், சற்றுக் கடுமையான குரலில்.
"ஆமாம்ப்பா! மணி சொல்றதைக் கேளுங்க. அவன் நம்ம குடும்பத்தோட மானத்தைக் காப்பாத்தி இருக்கான். அவன் கடைக்குட்டியா இருந்தாலும், உங்ககிட்ட இப்படிச் சொல்ல எங்க ரெண்டு பேரை விட அவனுக்குத்தான் அதிக உரிமை இருக்கு!" என்றான் சங்கரனின் மூத்த மகன் தனசேகர், தம்பியைப் பெருமையுடன் பார்த்தபடி.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல் வகை
குறள் 1027:
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
No comments:
Post a Comment