Wednesday, December 13, 2023

1039. முருகனின் அலட்சியம்!

"என்னடா, நிலத்தைப் போய்ப் பாத்துட்டு வந்துக்கிட்டிருக்கியா?" என்றார் செல்லப்பா.

"போய்ப் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன். நல்லாத்தான் இருக்கு" என்றான் அவர் மகன் முருகன் எரிச்சலுடன்.

"நான் கேட்டா உனக்கு எரிச்சலாத்தான் இருக்கும். நிலத்தில விதை விதைச்சுத் தண்ணி ஊத்திட்டு வந்துட்டா பயிர் தானா வளராது. நிலத்தை அடிக்கடி போய்ப் பார்த்து செய்ய வேண்டியதை செஞ்சுட்டு வரணும். எனக்கு உடம்பு முடியாம படுத்திருக்கறதால உங்கிட்ட சொல்ல வேண்டி இருக்கு!" என்றார் செல்லப்பா.

"யார்கிட்ட சொல்லிக்கிட்டிருக்கீங்க? அவன் போய்ப் பத்து நிமிஷம் ஆச்சு!" என்றார் செல்லப்பாவின் மனைவி தையல்நாயகி.

"கட்டின பொண்டாட்டியைப் பாத்துக்கற மாதிரி நிலத்தைப் பாத்துக்கணும். இவன்தான் கட்டின பொண்டாட்டியை சரியா கவனிக்காம அவ கோவிச்சுக்கிட்டுப் போயிட்டாளே, நிலத்தை எங்கே பாத்துக்கப் போறான்? கிட்டேந்து தகவல் ஏதும் வந்ததா?"

"ஒண்ணும் வரலை. அவ கோவிச்சுக்கிட்டுப் போய் அவ அம்மா வீட்டில உக்காந்திருக்கா. அவளோட அப்பா அம்மாவும் அவளுக்கு புத்தி சொல்லி இங்கே அனுப்பி வைக்கற மாதிரி தெரியல!" என்றாள் தையல் நாயகி சலிப்புடன்.

"எனக்கு உடம்பு நல்லா இருந்தா, நானே போய் அவளைச் சமாதானப்படுத்தி அழைச்சுக்கிட்டு வந்திருப்பேன். அவ வீட்டுக்குப் போய் அவளை அழைச்சுக்கிட்டு வரச் சொல்லி முருகன்கிட்ட சொன்னியா?"

"சொல்லாமயா இருப்பேன்? எத்தனையோ தடவை சொல்லியாச்சு. அவன் காதில போட்டுக்கிட்டாத்தானே!" என்ற தையல்நாயகி, "இருங்க. யாரோ கூப்பிடறாங்க. போய்ப் பாத்துட்டு வரேன்" என்று கூறி விட்டு வாயிற்புறம் சென்றாள்.

சில விநாடிகளில் அவள் உள்ளே வந்தபோது,அவளுடன் செல்லப்பாவின் நண்பர் அம்மையப்பனும் வந்தார்.

"என்ன செல்லப்பா, உடம்பு எப்படி இருக்கு?" என்றார் அம்மையப்பன்.

"இருக்கு. எழுந்து நடமாடமுடியலியே!" 

"உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். உன்னோட வயல்ல பூச்சி வந்திருக்கு. உன் பையன் பாக்கல போலருக்கு. முன்னாலேயே பாத்திருந்தா கட்டுப்படுத்தி இருக்கலாம். இன்னிக்கு உன் வயல் பக்கம் போறப்பதான் பாத்தேன். பயிர்ல பெரும்பகுதி பூச்சி அரிச்சிருக்கும் போலருக்கே!" என்றார் அம்மையப்பன்.

"என்னத்தைச் சொல்றது? அடிக்கடி வயலுக்குப் போய்ப் பாத்துட்டு வான்னு அவன்கிட்ட எவ்வளவோ தடவை சொல்லிட்டேன். பாத்துட்டுத்தான் வரேன்னு எங்கிட்ட பொய் சொல்லிட்டு ஊரைச் சுத்திக்கிட்டிருக்கான் போல இருக்கு. கஷ்டப்பட்டு வளர்த்த பயிர் எல்லாம் பாழாயிடுச்சு. எல்லாம் என் தலை விதி" என்றார் செல்லப்பா, பொங்கி வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டு..

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு

குறள் 1039:
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

பொருள்: 
நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Friday, December 8, 2023

1038. விளையும் பயிர்!

அன்று பள்ளி விடுமுறை என்பதால் தன் தந்தை ஐயப்பனுடன் வயலுக்குச் சென்றான் சுரேன்.

"என்னப்பா செய்யப் போற?" என்றான் சுரேன், தந்தை உர மூட்டையைப் பிரிப்பதைப் பார்த்து.

"வயலை உழுதாச்சு. இப்ப  உரம் போடணும்" என்றான் ஐயப்பன்.

"உரம் எதுக்குப்பா?"

"உரம் போட்டாதான் பயிர் நல்லா வளரும்."

"பள்ளிக்கூடம் இல்லாத நாள்ள எல்லாம் நான் வயலுக்கு வந்து பாக்கறேம்ப்பா!"

"பாரேன்!" என்றான் ஐயப்பன்.

ஆயினும், அதற்குப் பிறகு பரீட்சை நெருங்கி வந்ததால், சுரேனால் சில வாரங்களுக்குப் பிறகுதான் தந்தையுடன் வயலுக்குச் செல்ல முடிந்தது.

அப்போது பயிர்கள் வளர்ந்திருந்தன.

"அதுக்குள்ள இவ்வளவு உயரம் வளர்ந்துடுச்சே!" என்றான் சுரேன் வியப்புடன்.

"பயிர்கள் எல்லாம் வேகமாத்தான் வளரும்" என்றான் ஐயப்பன்.

வயலில் சில பெண்கள் களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

"ஏம்ப்பா, அவங்க செடிகளைப் பிடுங்கிப் போட்டுக்கிட்டிருக்காங்க?"

"அவங்க களை எடுக்கறாங்க."

"அப்படின்னா?"

"நாம விதைச்ச பயிர்களுக்கு நடுவில சில வேண்டாத பயிர்கள் தானே முளைக்கும். அதைத்தான் களைன்னு சொல்லுவாங்க. அதையெல்லாம் பிடுங்கி எடுத்தாத்தான் பயிர் நல்லா வளரும். இல்லேன்னா நாம பாய்ச்சற தண்ணி, போடற உரம் எல்லாத்தையும் களைகள் எடுத்துக்கிட்டு வளரும். பயிர்களுக்குத் தேவையான தண்ணி, உரம் இதெல்லாம் போதுமான அளவு கிடைக்காது. அதனாலதான் களை எடுக்கறோம்."

"பயிர் செய்யறதில இவ்வளவு விஷயம் இருக்கா? சரி. அடுத்தது என்ன?"

"அப்புறம் கொஞ்ச நாள் தண்ணி பாய்ச்சிக்கிட்டிருக்கணும். அதுக்கப்புறம் பயிர்கள் நல்லா வளர ஆரம்பிச்சுடும். அப்புறம் நமக்கு அதிக வேலை இருக்காது!"

"அப்படின்னா, அதுக்கப்புறம் நீ வயலுக்கு வர வேண்டாம் இல்ல? எனக்குப் பள்ளிக்கூடத்தில லீவு விடற மாதிரி உனக்கும் லீவு. அப்படித்தானே?" என்றான் சுரேன்.

ஐயப்பன் சிரித்து விட்டு, "விவசாயிக்கு ஏது லீவு? பயிர்கள் வளற ஆரம்பிச்சப்புறம் அதைப் பாதுகாக்கணுமே! அது ரொம்ப முக்கியம்" என்றான்.

"பாதுகாக்கறதுன்னா?"

"ஆடு மாடுகள் வந்து பரை மேஞ்சுடாம பாத்துக்கணும். பயிர்ல பூச்சி வராம இருக்கான்னு பாத்துக்கணும். பயிர்கள் முற்றி அறுவடை செய்யற வரையிலும் தினமும் வயல்ல வந்து பாத்துக்கிட்டுதான் இருக்கணும். இல்லேன்னா இவ்வளவு நாள் செஞ்சதுக்கெல்லாம் பயன் இல்லாம போயிடும்!" என்றான் ஐயப்பன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு

குறள் 1038:
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

பொருள்: 
ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்து களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல் காத்தல் நல்லது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Saturday, December 2, 2023

1037. விவேகனின் விஞ்ஞான ஆர்வம்!

செல்வரத்தினத்தின் மகன் விவேகனுக்குச் சிறு  வயதிலிருந்தே விஞ்ஞான ஆர்வம் உண்டு. பள்ளிப் பாடங்களில் தான் படித்த விஞ்ஞான விஷயங்களைப் பற்றி அவன் தன் தந்தையிடம் பேசுவான்.

மகன் கூறுவதைப் பொறுமையாகக் கேட்டுக் கொள்ளும் செல்வரத்தினம், "நீ சொல்றதைக் கேக்க எனக்குப் பெருமையா இருக்கு, ஆனா எனக்கு இதெல்லாம் அதிகமாப் புரியல. நான் படிக்காதவன். எனக்குத் தெரிஞ்சது விவசாயம் மட்டும்தான்" என்பார்.

பள்ளி விடுமுறை நாட்களில் தந்தையுடன் வயலுக்குச் சென்று அவர் செய்யும் வேலைகளை கவனிப்பான் விவேகன். 

கொஞ்சம் பெரியவன் ஆனதும் வயல் வேலைகளில் தந்தைக்கு உதவ விவேகன் முன்வந்தபோது, "நீ முதல்ல படிப்பை முடி. அதுக்கப்புறம் உனக்கு விவசாயத்தில ஆர்வம் இருந்தா என்னோட வந்து வேலை செய். இப்ப வேண்டாம். இப்ப படிப்பில மட்டும் கவனத்தைச் செலுத்து" என்று அவனைத் தடுத்து விட்டார் செல்வரத்தினம்.

விவேகன் பதினொன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் வயலுக்கு வந்தான். செல்வரத்தினம் கலப்பையில் உழுது கொண்டிருந்ததை அருகில் வந்து பார்த்தான்.

"அப்பா! இந்தக் கலப்பை கோடு போடற மாதிரி போகுது. இப்படி உழுதா வயல் முழுக்க உழுது முடிக்க ரொம்ப நாள் ஆகுமே. கலப்பை இன்னும் அகலமா இருந்தா நல்லா இருக்குமே!" என்றான்.

"அகலமா இருந்தா ஆழமா உழ முடியாது. ஆழமா உழுதாத்தான் நிலத்தைத் தோண்டி அடியில இருக்கற மண்கட்டிகளை எல்லாம் உடைச்சுப் பொடியாக்க முடியும். அப்பதான் மண்ணு தண்ணியை நல்லா உறிஞ்சிக்கும். மண்கட்டிகளை உடைச்சுப் பொடியாக்கற அளவுக்கு உழுதா, உரம் போடாமயே நிலம் நல்லா விளையும்னு என் தாத்தா சொல்லி இருக்காரு" என்றார் செல்வரத்தினம்.

"எதுக்குப் பொடியாக்கணும்? கட்டியா இருந்தா என்ன? மண்கட்டிதானே? அதுக்குள்ள தண்ணி போகும் இல்ல?"

"அது எனக்குத் தெரியாது. என் முன்னோர்கள் சொன்னபடி நான் செஞ்சுக்கிட்டிருக்கேன்" என்றார் செல்வரத்தினம்.

சில நாட்கள் கழித்து மழை பெய்தது.

மழை பெய்த அடுத்த நாள் இருவரும் வயலுக்குச் சென்றனர்.

"அப்பா! இங்கே பாரு. நீ உழுத இடத்தில தண்ணியே தேங்கல. எல்லாம் நிலத்துக்குள்ள போயிடுச்சு. நீ பாதி உழுத இடங்களில மண்கட்டிகளுக்கு இடையில தண்ணி தேங்கி இருக்கு பாரு. அதுதானே நல்லது?" என்றான் விவேகன்.

"அது எனக்குத் தெரியாது. ஆனா நல்லா உழுத இடத்திலதான் நல்லா விளையுங்கறது மட்டும் எனக்குத் தெரியும்!" என்றார் செல்வரத்தினம்.

சில நாட்கள் கழித்து விவேகன், "அப்பா! இப்பதான் பாடத்தில படிச்சேன். ஒரு பொருளைப் பொடி பண்ணினா அதோட சர்ஃபேஸ் ஏரியா, அதாவது பரப்பு அதிகமாகுமாம். அதிகப் பரப்பு இருந்தா அதில தண்ணி உறிஞ்சிக்கிற அளவு அதிகமா இருக்கும் இல்ல? அதுதான் நல்லது. அன்னிக்கு நாம பார்த்தப்ப நீ நல்லா உழுத இடங்களில மண்ணு பொடியா இருந்ததால அது அதிகமா தண்ணியை உறிஞ்சிக்கிட்டிருக்கு. அதனாலதான் அங்கே தண்ணி தேங்கல. கட்டியா இருந்த மண்ணு தண்ணியை அதிகம் உறிஞ்சாததால அங்கே தண்ணி தேங்கி இருந்தது. அந்தத் தண்ணி ஒண்ணு ஆவியாயிடும், இல்லை பூமிக்குப் போயிடும். பொடி மண்ணில உறிஞ்சப்பட்டிருக்கிற தண்ணி பயிர்களுக்குப் போய் அதை நல்லா வளர வைக்கும். மண்கட்டி எல்லாம் பொடியா ஆற மாதிரி உழுதா உரம் இல்லாம கூட நல்ல விளைச்சல் கொடுக்கும்னு உன் தாத்தா சொன்னது சரின்னு இப்பதான் எனக்குப் புரியுது" என்றான்.

"நீ சொல்றது எனக்குப் புரியல. ஆனா என் தாத்தா சொன்னது சரிங்கறதை நான் அனுபவத்தில பாத்திருக்கேன். நீ படிச்ச விஞ்ஞானத்திலேந்து இதைச் சரின்னு புரிஞ்சுக்கிட்டு சொல்றதைக் கேக்க எனக்கு சந்தோஷமா இருக்கு!" என்றார். 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு

குறள் 1037:
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

பொருள்: 
ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காய விட்டால், ஒரு பிடி எருவும் இட வேண்டாமல் அந்நிலத்தில் பயிர் செழித்து விளையும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Friday, December 1, 2023

1036. மௌன விரதம் முறிந்தது!

 காட்டுக்கு வேட்டையாடச் சென்றபோது அரசன் அந்தத் துறவியைப் பார்த்தான். ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த அந்தத் துறவியைச் சுற்றிச் சில சீடர்கள் அமர்ந்திருந்தனர்.

துறவியை வணங்கி விட்டுக் கிளம்பிய அரசன் சற்றுத் தொலைவு சென்றதும் சட்டென்று நின்றான்.

ஏதோ ஒரு முடிவுடன் துறவி இருந்த இடத்துக்குத் திரும்பச் சென்ற அரசன், துறவியின் அருகில் சென்று, "முனிவரே! தாங்கள் இந்த மரத்தடியில் அமர்ந்திருப்பதைப் பார்த்து என் மனம் வேதனைப்படுகிறது. அருகிலேயே உங்களுக்கு ஒரு ஆசிரமம் கட்டித் தர விரும்புகிறேன். அதற்குத் தாங்கள் அனுமதிக்க வேண்டும்" என்றான்.

முனிவர் சைகையினால் தன் அருகிலிருந்த சீடரிடம் ஏதோ சொல்ல, அந்தச் சீடர் அரசனிடம் வந்து, "அரசே! முனிவர் ஒரு மண்டலம் மௌன விரதம் அனுஷ்டித்து வருகிறார். அதனால் அவர் சைகையில் என்னிடம் தெரிவித்ததைத் தங்களிடம் சொல்கிறேன். இந்தக் காட்டுக்குள் ஆசிரமம் கட்டுவது இயலாது. அத்துடன் அவருக்கு ஆசிரமம் தேவையில்லை. ஆயினும் தன் சீடர்களின் வசதிக்காக ஆசிரமம் அமைப்பது நல்லதுதான், அதை இந்தக் காட்டுக்கு அருகில் உள்ள ஒரு நிலப்பகுதியில் அமைத்துக் கொடுத்தால் நலம் என்று அவர் கருதுகிறார்" என்றார்.

சீடர் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த முனிவர் அவர் சொன்னது சரிதான் எனபது போல் தலையசைத்தார்.

"அப்படியே செய்கிறேன் முனிவரே!" என்று முனிவரிடம் கூறிய அரசன் ஒரு வீரனை அருகில் அழைத்து அவனிடம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தான்.

"அரசே! தங்கள் கட்டளைப்படி நாங்கள் ஆசிரமம் அமைக்க இடத்தைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அங்கே ஆசிரமம் அமைக்கும் பணிகளைத் துவக்குமுன் முனிவரின் சீடர்கள் அங்கே வந்து எங்களைத் தடுத்து விட்டனர். முனிவர் தங்களைக் காண வேண்டும் என்று விரும்புவதாவும் அவர்கள் எங்களிடம் கூறினர்" என்றான் படைவீரன்.

அரசன் முனிவர் அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்றான்.

அரசனைக் கண்டதும், முனிவர், "வாருங்கள் அரசே! எனக்காக நீங்கள் ஆசிரமம் அமைத்துக் கொடுக்க முயல்வது பாராட்டுக்கு உரியதுதான். ஆனால் அதற்காக ஒரு விவசாயியின் நிலத்தையா தேர்ந்தெடுப்பது?" என்றார். 

"முனிவரே! என் வீரர்கள் எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. அது விவசாய நிலமாக இருந்தால் அந்த நிலத்துக்கான மதிப்புக்கு அதிகமாகவே அந்த விவசாயிக்குப் பொற்காசுகளை வழங்கி விடுவோம்" என்றான் அரசன்.

"வேண்டாம் அரசே! விவசாயி தன் பணியைச் செய்யாவிட்டால் என் போன்ற முற்றும் துறந்த முனிவர்களால் கூட இயங்க முடியாது. எனவே அந்த இடம் வேண்டாம். வேறு ஏதாவது தரிசு நிலம் இருந்தால் பாருங்கள். அப்படி இல்லாவிட்டால் எனக்கு ஆசிரமமே வேண்டாம். நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்."

"தங்கள் விருப்பப்படியே வேறு இடம் பார்க்கச் சொல்கிறேன்" என்ற அரசன் சற்றுத் தயங்கி விட்டு, "தங்கள் மௌன விரதம் முடிந்து விட்டதா?" என்றான்.

"முடியவில்லை அரசே! முறிந்து விட்டது. அதை முறித்தவன் நான்தான். உங்கள் வீரர்கள் ஆசிரமம் கட்டத் தேர்ந்தெடுத்த நிலத்தின் சொந்தக்காரரான விவசாயி என்னிடம் வந்து முறையிட்டபோது, அவருடைய நிலம் பறி போகாது என்று அவருக்கு உறுதி அளிப்பதற்காக என் மௌன விரதத்தை முறித்துக் கொண்டு அவரிடம் பேசினேன்" என்றார் முனிவர்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு

குறள் 1036:
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை

பொருள்: 
உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டு விட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1035. வாடிய பயிர்

"எதுக்கு சும்மா வயலுக்குப் போயிட்டு வரீங்க? அதான் மழை பெய்யாம பயிர்கள் காஞ்சு கிடக்கே, அதை தினமும் போய்ப் பார்த்துட்டு வரணுமா என்ன?" என்றாள் விசாலாட்சி.

"நம்ம பிள்ளைங்க யாருக்காவது உடம்பு சரியில்லைன்னா மனசு இருப்புக் கொள்ளாது இல்ல? அது மாதிரிதான் இருக்கு எனக்கு. அதான் தினம் போய்ப் பயிர்களைப் பார்த்துட்டு, மழை வராதான்னு மானத்தையும் பார்த்துட்டு வரேன்!" என்றார் அழகிரி.

"நாம இப்ப ரொம்ப கஷ்டமான நிலைமையில இருக்கோம். உங்க தம்பிதான் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறாரே, அவர்கிட்ட உதவி கேட்டா செய்ய மாட்டாரு?"

"செய்வான். ஆனா நான் கேக்கப் போறதில்ல!"

"ஏன்? கடன்தானே கேக்கப் போறீங்க? அடுத்த வருஷம் மழை பேஞ்சு விளைச்சல் நல்லா வந்தப்புறம் கடனைத் திருப்பிக் கொடுத்துடப் போறீங்க!"

"பாங்க்ல கடன் வாங்கினா, அது கடையில போய்ப் பொருள் வாங்கற மாதிரி. ஆனா சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்ககிட்ட கடன் கேட்டா அது உதவி கேட்டு யாசிக்கிற மாதிரிதான். உழவுத் தொழில் செய்யறவங்க உலகத்துக்கே உணவு கொடுக்கறவங்க. அவங்க மத்தவங்ககிட்ட போய் யாசகம் கேக்கக் கூடாது!"

"என்னவோ நீங்களும் உங்க நியாயமும். சரி. கடைக்குப் போய்க் கொஞ்சம் எண்ணெய் வாங்கிட்டு வாங்க. தாளிக்கக் கூட எண்ணெய் இல்லை" 

"ஒரு நிமிஷம்" என்று அழகிரி ஏதோ சொல்ல ஆரம்பித்ததைக் காதில் வங்கிக் கொள்ளாமல் உள்ளே சென்ற விசாலாட்சி சில நிமிடங்களில் திரும்பி வந்து, "மாடத்தில ஒரு இருநூறு ரூபா நோட்டு இருந்ததே, காணோம்! ஏதாவது செலவுக்கு எடுத்துக்கிட்டீங்களா?" என்றாள்.

"நம்ம வரதன் சாப்பாட்டுக்கு அரிசி கூட இல்லைன்னு கேட்டான். அவனுக்குக் கொடுத்துட்டேன். நம்ம வயல்ல வேலை செய்யறவன்தானே! அவனுக்கு ஒரு கஷ்டம்னா நாம்தானே உதவணும்? இன்னிக்கு ஒரு நாளைக்குத் தாளிக்கலேன்னா பரவாயில்லை. நாளைக்குப் பார்க்கலாம்!" என்றார் அழகிரி.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு

குறள் 1035:
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

பொருள்: 
தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்க மாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...