Saturday, November 27, 2021

534. அண்ணனும் தம்பியும்!

"வாங்கற சம்பளத்தில பாதியை இது மாதிரி வேண்டாத விஷயங்களுக்கே செலவழிக்கறீங்க!" என்றாள் பார்க்கவி.

"எது வேண்டாத செலவு? கொசுவிரட்டியை ஆன் பண்ணி வைக்கறதா?" என்றான் மனோகர்.

"கொசுவிரட்டி மட்டும் இருந்தா பரவாயில்ல. ஏற்கெனவே அறை ஜன்னலையெல்லாம் வலை போட்டு மூடி காத்து வர விடாம பண்ணி இருக்கீங்க. கொசுவலைக்குள்ளதான் படுத்துத் தூங்கறீங்க. உடம்பு முழுக்க கிரீமை வேற தடவிக்கிட்டுத் தூங்கறீங்க. கொசுவுக்கு இவ்வளவு பயப்படணுமா என்ன?" என்ற பார்க்கவி, 'உங்களுக்குக் கொசுகிட்ட மட்டுமா பயம்? தெனாலி சினிமா நாயகன் மாதிரி எல்லாத்துக்கும்தான் பயம்!' என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள்.

"என்ன செய்யறது? இவ்வளவு செஞ்சும் ஒண்ணு ரெண்டு கொசு கடிக்குது. இனிமே கொசுவத்திச் சுருளும் ஏத்தி வைக்கலாமான்னு பாக்கறேன்."

"பேசாம முனிவர்கள் மாதிரி நாலு பக்கமும் நெருப்பு ஏத்தி வச்சுட்டு நடுவில தூங்குங்க! வீடு பத்தி எரிஞ்சாலும் பரவாயில்ல. கொசு கடிக்காது!" என்றாள் பார்க்கவி எரிச்சலுடன்.

"நீ நெருப்புன்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது. ஒரு ஃபயர் எக்ஸ்டிங்விஷர் வாங்கி இருக்கேன். நாளைக்கு வரும்!" 

"இந்த சினிமா தியேட்டர்ல எல்லாம் வச்சிருப்பாங்களே அது மாதிரியா?"

"ஆமாம், சின்னதா வீடுகளுக்குன்னு தயாரிக்கறாங்க."

"ஏன் தயாரிக்க மாட்டாங்க? உங்களை மாதிரி பயந்து சாகறவங்க இருக்கறப்ப அவங்களுக்கு வியாபாரம் பிரமாதமா நடக்குமே! நீங்க வாங்கற சம்பளத்தையெல்லாம் இது மாதிரி பாதுகாப்புக்காகவே செலவழிச்சுக்கிட்டிருக்கீங்க. உங்க அண்ணனைப் பாருங்க. வாழ்க்கையில எவ்வளவு மேல போயிட்டாருன்னு! இன்னொரு வீடு கட்டிட்டாரு. அடுத்த வாரம் கிரகப் பிரவேசம்" என்றாள் பார்க்கவி பெருமூச்சுடன்.

னோகரின் அண்ணன் தயாநிதியின் கிரகப் பிரவேசத்துக்குப் போய்விட்டு வந்ததும், பார்க்கவி மனோகரிடம் சொன்னாள் "உங்க அண்ணன் நல்ல வசதியா இருக்காரு, அதனால அண்ணனும் அண்ணியும் சந்தோஷமா இருப்பாங்கன்னு நினைச்சேன். அப்படி இல்ல போலருக்கு!" என்றாள்.

"ஆமாம் தயா கொஞ்சம் டல்லாத்தான் இருந்தான். கிரகப் பிரவேசத்துக்கு ரொம்ப பேர் வரல. சாப்பாடெல்லாம் நிறைய மீந்து போச்சுன்னு சொல்லி வருத்தப்பட்டான்."

"எப்படி வருவாங்க? உதவி செஞ்சவங்களை அடியோட மறந்துட்டு இது மாதிரி விசேஷங்களுக்கு மட்டும் தன் பெருமையைக் காட்டிக்க அவங்களைக் கூப்பிட்டா அவங்க வருவாங்களா?"

"அப்படியா? உனக்கு யார் சொன்னது?"

"உங்க அண்ணியே இதைச் சொல்லி வருத்தப்பட்டாங்க. உங்க அண்ணனுக்கு எத்தனையோ பேர் உதவி செஞ்சுதான் அவர் இந்த அளவுக்கு முன்னேறி இருக்காராம். ஆனா அவங்க கிட்டல்லாம் ஒரு மரியாதைக்குக் கூட அவர் தொடர்பு வச்சுக்கறது இல்லையாம். உங்க அண்ணி யாரையாவது குறிப்பிட்டு சொன்னாக் கூட, 'யார் அது? ஓ, அவரா? அவரு எப்பவோ ஒரு உதவி செஞ்சாரு. அதைக் காலம் முழுக்க நினைவு வச்சுக்கிட்டிருக்கணுமா என்ன? நீ சொன்னப்பறம்தான் அவர் ஞாபகமே எனக்கு வருது' ன்னு பதில் சொல்வாராம். அவரோட இந்த குணத்தால அவங்களுக்கு யாருமே நெருக்கமா இல்லாம போய் வாழ்க்கையே வெறுமையா இருக்குன்னு அவங்க சொல்லி வருத்தப்பட்டாங்க... ஆமாம் நீங்க எங்க போறீங்க?"

"மணி அஞ்சாச்சே! எல்லா ஜன்னலையும் சாத்தணும். இல்லாட்டா கொசு உள்ளே வந்துடும்!" என்று விரைந்தான் மனோகர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 54
 பொச்சாவாமை (அலட்சியத்தால் ஏற்படும் மறதி)

குறள் 534:
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

பொருள்:
உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

Thursday, November 25, 2021

533. கண்டு பிடித்தது எப்படி?

"சில வருஷங்களுக்கு முன்னால நடந்தது இது. ஒரு அரசியல் கட்சியில ஒரு தலைவர் கீழ்மட்டத்திலேந்து வேகமா முன்னேறி மேல வந்துக்கிட்டிருந்தாரு. அந்தக் கட்சியோட மூத்த தலைவர் திடீர்னு இறந்ததும் அவர் கட்சித் தலைவராகவும் ஆயிட்டாரு. அப்ப அந்தக் கட்சி ஆட்சியில இல்ல, ஆனா அடுத்த தேர்தல்ல அவங்கதான் ஆட்சிக்கு வருவாங்கன்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க. அவர்தான் அடுத்த முதல்வர்னு எதிர்பார்க்கப்பட்ட நிலையில தேர்தல்ல அவர் கட்சி ஜெயிச்சுடுச்சு. ஆனா அவரால முதல்வர் ஆக முடியல!"

"ஏன்?"

"ஏன்னா அவர் போட்டியிட்ட தொகுதியில அவர் தோத்துட்டாரு, அதுவும் அதிக வாக்கு வித்தியாசத்தில மோசமாத் தோத்துட்டாரு."

"அப்புறம்?"

"அப்புறம் என்ன? அதோட அவர் அரசியல் வாழ்க்கை முடிஞ்சுடுச்சு!"

"இன்டரஸ்டிங்! அவர் தோத்ததுக்கு  என்ன காரணம்னு நான் கேட்க மாட்டேன், ஏன்னா அது எனக்குத் தெரியும்!"

"உனக்கு எப்படித் தெரியும்? நான் குறிப்பிட்ட தலைவர் யார்னே உனக்குத் தெரியாதே! இது எந்த மாநிலத்தில நடந்ததுன்னும் உனக்குத் தெரியாது. உனக்கு அரசியல்ல ஆர்வமே கிடையாதே!"

"அவர் யார்னு எனக்குத் தெரியாதுதான். ஆனலும் நான் சொல்றேன். சரியான்னு பாரு. அவர் வேகமா முன்னேறி வந்ததுக்கு அவருக்குப் பல கட்டங்கள்ள பல பேர் உதவி செஞ்சிருப்பாங்க. ஆனா வெற்றியோட மதர்ப்பில அவர் அவங்களையும் மறந்திருப்பாரு. அவங்க செஞ்ச உதவிகளையும் மறந்திருப்பாரு. அதனாலதான் அவர் தேர்தல்ல போட்டி போட்டப்ப கட்சிக்காரங்க அவருக்காக ஆர்வமா வேலை செஞ்சிருக்க மாட்டாங்க. அப்படித்தானே?"

"அடப்பாவி! நாங்கள்ளாம் களத்துக்குப் போய் ஆய்வு பண்ணி கண்டு பிடிச்சதை கண்ணால பார்த்த மாதிரி சொல்றியே! எப்படி?"

"உன்னை மாதிரி நானும் ஒரு பத்திரிகையாளன்தானே! நீ அரசியல்ல கவனம் செலுத்தற. நான் தொழில், வியாபாரம் இவற்றில கவனம் செலுத்தறேன். இதே மாதிரி ஒரு தொழிலதிபருக்கு நடந்தது. அவர் சின்னதா ஒரு தொழிலை ஆரம்பிச்சு முன்னேறி பெரிய தொழிலதிபரா ஆனவர். ஆனா அவருக்கு ஆர்டர் கொடுத்து, கடனுக்குப் பொருள்கள் கொடுத்து, வங்கியில கடன் வாங்க உதவி செஞ்சு இது மாதிரி பல பேர் பல விதங்கள்ள உதவி செஞ்சிருக்காங்க. ஆனா அவர் அதையெல்லாம் நினைச்சுப் பாக்கல. தன்னோட வெற்றியோட மமதையில இருந்தாரு. தனக்கு உதவி செஞ்சவங்ககிட்ட அவர் நன்றியோடயும் இல்ல, அவங்களோட நெருக்கமாகவும் இல்ல. அதனால அவருக்கு நண்பர்களே இல்லாம போயிட்டாங்க. பின்னால அவருக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டப்ப அவரால யார்கிட்டேயும் போய் உதவி கேட்கக் கூட முடியல. பரமபத விளையாட்டில ஏணியில ஏறி பாம்பில சறுக்கற மாதிரி சறுக்கிக் கீழே விழுந்துட்டாரு. அந்த உதாரணத்தை வச்சுத்தான் நீ குறிப்பிட்ட தலைவர் விஷயத்தில என்ன நடந்திருக்கும்னு ஊகிச்சேன்."

"ஆச்சரியமா இருக்கே! துறைகள் வெவ்வேறா இருந்தாலும் நிகழ்வுகள் ஒரே மாதிரி இருக்கே!"

"வேற பல துறைகளை நெருக்கமா ஆய்வு செய்யறவங்களைக் கேட்டாலும் அவங்ககிட்டேயும் இதே மாதிரி உதாரணங்கள் கிடைக்கலாம். வாழ்க்கையோட உண்மைகள் எல்லா இடங்களிலேயும் ஒரே மாதிரிதானே இருக்கணும்!"

"பத்திரிகையாளனா இருந்து இப்ப ஒரு தத்துவஞானியாவும் ஆயிட்ட போல இருக்கே!"

இருவரும் சிரித்தனர்,

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 54
 பொச்சாவாமை (அலட்சியத்தால் ஏற்படும் மறதி)

குறள் 533:
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு..

பொருள்:
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை. இது உலகில் எல்லாத் துறைகளிலும் உள்ள அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

Tuesday, November 23, 2021

532. யார் அவர்?

பரத் எஞ்ஜினியரிங் படிப்பு முடித்துப் பல மாதங்கள் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை.

அப்போது ஒருநாள் அவன் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பத்மநாபன் அவனைப் பார்க்க வந்தான்.

பத்மநாபன் ஒரு தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்கிறான் என்பது மட்டும்தான் பரத்துக்குத் தெரியும். அவன் பரத்தை விட ஐந்தாறு வருடங்கள் பெரியவனாக இருப்பான்.

"என்ன பரத் உனக்கு ஏதாவது வேலை கிடைச்சிருக்கா?" என்றான் பத்மநாபன்.

"இல்லை" என்றான் பரத் எரிச்சலுடன், இவன் எதற்கு தன்னிடம் இதைப் பற்றிப் பேசுகிறான் என்று நினைத்தபடியே.

"நான் வேலை செய்யறது ஒரு சின்ன கம்பெனிதான். ஆனா, எங்க முதலாளி புதுசா ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கப் போறாரு. அதுக்கு எஞ்ஜினியர் எல்லாம் எடுக்கப் போறதாச் சொன்னாரு. அவர்கிட்ட உன்னைப் பத்தி சொன்னேன். வரச் சொல்லு பாக்கலாம்னாரு. நாளைக்கு நான் வேலைக்குப் போகறப்ப என்னோட வந்தேன்னா உன்னை அவர்கிட்ட அறிமுகப்படுத்தி வைக்கறேன்" என்றான்.

பரத் ஒரு நிமிடம் பேச்சு வராதவனாக பத்மநாபனைப் பார்த்தான். பிறகு, "ஓ, ரொம்ப நன்றி அண்ணே!" என்றான்.

அடுத்த நாள் பத்மநாபன் தன் முதலாளிக்கு பரத்தை அறிமுகப்படுத்திய சில நிமிடங்களிலேயே பரத்துக்கு வேலை கிடைத்து விட்டது.

"மிஸ்டர் பரத்! இன்னிக்கு நீங்க ஒரு சிறந்த தொழிலதிபரா இருக்கீங்க. நிறைய அவார்ட் எல்லாம் வாங்கி இருக்கீங்க. உங்களைப் பத்தி ஊடகங்கள்ள நிறைய செய்தி வருது. அடுத்தாப்பல நீங்க என்ன செய்யப் போறீங்கன்னு தொழில் உலகமே உங்களைப் பாத்துக்கிட்டிருக்கு. நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க?" என்றார் தொலைக்காட்சியில் அவருடன் உரையாடிய நெறியாளர்.

"ரொம்ப சந்தோஷமா இருக்கு!" என்ற பரத், இது போதுமான பதிலாக இருக்காதோ என்று நினைத்து, "நான் போக வேண்டிய பாதை இன்னும் ரொம்ப தூரம் இருக்கு!" என்றான், இது கொஞ்சம் அடக்கமான பதிலாக இருக்கும் என்று நினைத்து!

"மிஸ்டர் ராமநாதனை உங்களுக்கு நினைவு இருக்கா?" என்றார் நெறியாளர்.

"அவரை எப்படி மறக்க முடியும்? அவர்தான் எனக்கு முதல்ல வேலை கொடுத்தவர். அவர் போட்ட விதைதான் இன்னிக்கு இவ்வளவு பெரிய மரமா வளர்ந்திருக்கு." 

"பத்மநாபனை நீங்க அடிக்கடி சந்திக்கறதுண்டா?"

"யார் பத்மநாபன்?"

"அதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னால, ஒரு விஷயம் சொல்றேன். உங்களை பேட்டி காண்றதுக்கு முன்னால உங்களுக்கு முதல்ல வேலை கொடுத்த ராமநாதன் சார் கிட்ட உங்களைப் பத்திக் கேட்டோம். அவர் சொன்னதில ஒரு விஷயத்தை இப்ப நாங்க போட்டு காட்டப் போறோம்" என்றார் நெறியாளர்.

அங்கிருந்த திரையில் ஒரு காணொளி காட்டப்பட்டது. அதில் தோன்றிய ஒரு முதியவர், "பரத்தோட வளர்ச்சியைப் பார்க்க எனக்குப் பெருமையா இருக்கு. முப்பது வருஷம் முன்னால, என் தொழிற்சாலையில வேலை பார்த்த பத்மநாபன்கற தொழிலாளி எங்கிட்ட வந்து, 'சார்! என் பக்கத்து வீட்டில ஒரு பையன் எஞ்ஜினியரிங் படிச்சுட்டு வேலை தேடிக்கிட்டிருக்கான். நீங்க புதுசா ஆரம்பிக்கப் போற தொழிற்சாலையில அவனுக்கு வேலை கொடுக்க முடியமா'ன்னு கேட்டப்ப வரச் சொல்லுன்னு சொன்னேன். ஒரு சிறந்த வருங்காலத் தொழிலதிபருக்கு முதல் வேலை கொடுக்கப் போறேன்னு அப்ப எனக்குத் தெரியாது..."

காணொளி நிறுத்தப்பட்டு திரை கருப்பாகியது.

பரத் உறைந்து போனவனாக உட்கார்ந்திருந்தான். 'எப்படி பத்மநாபன் யாரென்று சட்டென்று நினைவு வராமல் போயிற்று?'

"இப்ப ஞாபகம் வருதா?" என்றார் நெறியாளர். இலேசாகச் சிரித்தபடி.

 'வெற்றிச் சிரிப்பு சிரிக்கிறார் போலும்!'

பரத் மௌனமாகத் தலையாட்டினான். உடனே, "சாரி! நீங்க திடீர்னு அவர் பெயரைச் சொன்னதும் சட்னு ஞாபகம் வரல" என்றான் சமாளிக்கும் விதமாக.

"அவரை கடைசியா எப்ப பாத்தீங்க?"

"வேலை கிடைச்சதும் வேற வீட்டுக்குப் போயிட்டேன். அப்புறம் அவரோட தொடர்பு விட்டுப் போச்சு."

"அவரையும் தேடிப் பிடிச்சு நாங்க பேட்டி கண்டோம். அவர் ரொம்ப வரறுமையிலதான் இருக்காரு. ஆனா உங்களை நினைச்சுப் பெருமைப்படறாரு" என்றார் நெறியாளர் தொடர்ந்து.

இந்தப் பேட்டியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்தபோது பரத்தின் உடல் முழுவதிலும் ஒரு அவமான உணர்ச்சி பரவியது.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 54
 பொச்சாவாமை (அலட்சியத்தால் ஏற்படும் மறதி)

குறள் 532:
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

பொருள்:
நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்று விடும்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

Monday, November 22, 2021

531. அம்மாவின் கடிதம்!

முரளி படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த ஒரு வாரத்தில் அவன் தந்தை இறந்து விட்டார்.

முரளிக்கும் அவன் தாய் சகுந்தலாவுக்கும் அது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

"உன்னை நல்லா படிக்க வச்சு பெரிய ஆளாக்கணுங்கறதுக்காக உன் அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டாரு! இப்ப நீ முதல் மாசச் சம்பளம் வாங்கறதைக் கூடப் பாக்காம போய்ச் சேர்ந்துட்டாரே!" என்று புலம்பினாள் சகுந்தலை.

ஒரு மாதப் பயிற்சிக்குப் பிறகு முரளிக்கு நாக்பூரில் வேலை வழங்கப்பட்டது.

சகுந்தலா கிராமத்தை விட்டு வர விரும்பாததால் முரளி மட்டும் நாக்பூருக்குச் சென்றான். 

முரளி நாக்பூருக்குக் கிளம்புவதற்கு முன், "முரளி! உன் படிப்புக்காக உன் அப்பா அவரோட நண்பர் காசிகிட்ட பத்தாயிரம் ரூபா கடன் வாங்கி இருக்காரு. வட்டி கிடையாது. நீ வேலைக்குப் போனதும் உன் சம்பளத்திலேந்து கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைக்கறதா பேச்சு. இது மாதிரி எல்லாம் யாரும் கடன் கொடுக்க மாட்டாங்க. காசி ரொம்ப நல்லவரு. உன் அப்பா மேல அவருக்கு ரொம்ப மதிப்பு உண்டு. அதனாலதான் கடன் கொடுத்தாரு. அப்பாவும் யார்கிட்டேயும் போய்க் கடன் கேக்கறவர் இல்ல. காசிகிட்ட கூட வட்டிக்குத்தான் கடன் கேட்டாரு. அவருதான் வட்டிவேண்டாம்னுட்டாரு. காசி நல்லவர்னாலும் கோபக்காரர். அதனால நீ மாசம் ஆயிரம் ரூபாய் அவருக்கு பாங்க்ல டி டி எடுத்து அனுப்பிடு" என்றாள் சகுந்தலா.

"நிச்சயமா!" என்றான் முரளி.

முதல் மாதச் சம்பளம் வாங்கியதும், முரளி சகுந்தலாவுக்கு இருநூறு ரூபாய் மணி ஆர்டர் அனுப்பினான்.

"உன் முதல் மாசச் சம்பளத்தில் எனக்கு இருநூறு ரூபாய் அனுப்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது. காசிக்குப் பணம் அனுப்பி இருப்பாய் என்று நினைக்கிறேன்" என்று பதில் எழுதி இருந்தாள் சகுந்தலா.

கடிதத்தைப் படித்ததும் முரளிக்குக் கோபம் வந்தது.

'இப்பதான் சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கேன். மகன் கொஞ்ச நாளைக்கு இஷ்டப்படி செலவழிச்சு சந்தோஷமா இருக்கட்டுமே என்கிற எண்ணம் இல்லாம இப்படி தொந்தரவு பண்றாங்களே! வட்டி இல்லாக் கடன்தானே! கொஞ்சம் முன்னே பின்னே கொடுத்தால் என்ன?' என்று நினைத்துக் கொண்ட முரளி, 'காசிக்கு அடுத்த மாதத்திலிருந்து பணம் அனுப்பி விடுகிறேன். நீ மறுபடி இது பற்றி எழுத வேண்டாம்!" என்று சற்றுக் கோபமாகவே பதில் எழுதினான்.

அடுத்த மாதமும் முரளி காசிக்குப் பணம் அனுப்பவில்லை. நண்பர்களுடன் உல்லாசமாகச் சுற்றியது, விலை உயர்ந்த உடைகள் வாங்கியது போன்ற செலவுகளால் அதிகம் செலவாகி விட்டது. அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான்.

உல்லாச வாழ்க்கையும், அதிகச் செலவுகளும் தொடர்ந்ததால் அதற்கு அடுத்த மாதத்தில் காசிக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்ற சிந்தனையே அவனுக்கு எழவில்லை. அடுத்து வந்த சில மாதங்களில் அவன் அது பற்றி மறந்தே போனான். அவனுடைய சற்றே கடுமையான கடிதத்துக்குப் பிறகு சகுந்தலாவும் அனுக்கு எழுதிய கடிதங்களில் இது பற்றி எழுதவில்லை.

ழெட்டு மாதங்களுக்குப் பிறகு முரளிக்கு அவன் தாயிடமிருந்து வந்த கடிதத்தில் இவ்வாறு இருந்தது.

"...காசிக்குப் பணம் அனுப்புவது பற்றி நான் உனக்கு எழுத வேண்டாம் என்று நீ எழுதியதால் அப்புறம் உனக்கு நான் இது பற்றி எழுதவில்லை. நீ அவருக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருப்பாய் என்று நினைத்தேன். ஆனால் நேற்று காசி நம் வீட்டுக்கு வந்து கோபமாகப் பேசிய பிறகுதான் நீ அவருக்குப் பணம் அனுப்பவில்லை என்று தெரிந்தது. நீ எனக்கு அனுப்பியிருந்த பணத்தில் நான் சேர்த்து வைத்திருந்த ஐநூறு ரூபாயை அவரிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.

"அவர் நம் வீட்டுக்கு வந்து கோபமாகப் பேசியது எனக்கு அவமானமாகத்தான் இருந்தது. அவர் இரைந்து பேசியது அக்கம்பக்கத்தாருக்குக் கூடக் கேட்டிருக்கும். ஆனால் நீ அவர் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமையையே மறந்து அலட்சியமாக இருந்தது எனக்கு அவமானமாக இருக்கும் அளவுக்கு அவர் கோபத்தில் பேசிய வார்த்தைகள் அவமானமாக இல்லை."

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 54
 பொச்சாவாமை (அலட்சியத்தால் ஏற்படும் மறதி)

குறள் 531:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

பொருள்:
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

Saturday, November 6, 2021

530. மீண்டும் துளிர்த்த நட்பு

"அரசே! வருண தேசத்து அரசரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது" என்றார் அமைச்சர்.

"என்ன? நம் நாட்டின் மீது படை எடுக்கப் போகிறானாமா?" என்றான் அரசன் மகிழ்வாணன்.

"இல்லை மன்னா! நம் நட்பை நாடித்தான் ஓலை அனுப்பி இருக்கிறார் அசோகவர்மர். கடந்த காலத்தில் நம்முடன் நட்பாக இருந்தது போல் மீண்டும் இருக்க விரும்புகிறாராம். இடையில் நம்மை எதிர்த்துச் செயல்பட்டதற்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார்."

"நம்மிடம் நட்புடன் இருந்தவர்கள் காரணமில்லாமல் நம்மிடம் பகை பாராட்டும்போது நமக்கு ஏற்படும் வலி மிகக் கொடியது. அசோகவர்மரால் அந்த வலியை நான் அனுபவித்தேன். இப்போது அவர் மனம் மாறி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றான் மகிழ்வாணன்.

முதலில் அசோகவர்மன், அவன் இவன் என்று மரியாதையற்ற விளிப்புகளைப் பயன்படுத்திய அரசர் இப்போது அவர் இவர் என்று மரியாதையாகக் குறிப்பிட்டதை அமைச்சர் கவனித்தார்.

"அப்படியானால்...?" என்றார் அமைச்சர்.

"வருண நாட்டை எப்போதுமே நாம் நட்பு நாடாகத்தான் கருதி வந்திருக்கிறோம் என்றும், அசோகவர்மரின் மனமாற்றத்தை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் பதில் ஓலை அனுப்பி விடுங்கள்" என்றான் அரசன்.

சில நாட்களுக்குப் பிறகு அரசனிடம் வந்த அமைச்சர், "மன்னா! தவறாக நினைக்க வேண்டாம். அசோகவர்மரின் மனமாற்றத்துக்கான காரணத்தைக் கண்டறியாமல் அவருடைய நட்பை நாம் ஏற்றுக் கொண்டு விட்டோமோ என்ற ஐயம் எனக்கு உண்டு. ஆனால் இப்போது அவர் நாட்டுக்குப் படைகளை அனுப்ப முடிவு செய்திருக்கிறீர்களே, இது முரணாக இல்லையா? இது அசோகவர்மரை நம் மீது மீண்டும் பகை கொள்ள வைக்குமே!" என்றார் அமைச்சர்.

"அமைச்சரே! நம்முடன் நட்பாக இருந்த அசோகவர்மர் நமக்கு எதிராகத் திரும்பியதற்குக் காரணம் நம் இருவருக்கும் அண்டைநாடாக இருக்கும் சென்னி நாடுதான் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். நரிக்குணம் கொண்ட சென்னி நாட்டு மன்னன் சூதவர்மன்தான் அசோகவர்மரின் மனதில் நம்மைப் பற்றிய தவறான அச்சங்களை விளைவித்து அவரை நமக்கு எதிராகச் செயல்பட வைத்தான் என்பதையும் நாம் அறிவோம்.

"அசோகவர்மர் நீட்டிய நட்புக்கரத்தை நான் நல்லெண்ண அடிப்படையில் உடனே ஏற்றுக் கொண்டாலும் அவர் மனமாற்றத்துக்குக் காரணத்தை அறியுமாறு நம் ஒற்றர் படைத்தலைவரிடம் கூறினேன். 

"நம்மிடமிருந்து அசோகவர்மரைப் பிரித்தபின் அவருடைய வருண நாட்டைக் கபளீகரம் செய்ய சென்னி நாட்டு மன்னன் சூதவர்மன் திட்டமிட்டிருப்பதை அறிந்துதான் அசோகவர்மர் தான் செய்த தவறை உணர்ந்து நம்மிடம் திரும்பி வந்திருக்கிறார் என்ற உண்மையை ஒற்றர்கள் மூலம் அறிந்து என்னிடம் தெரிவித்தார் ஒற்றர்படைத் தலைவர்.

"நம்முடன் நட்பாக இருந்தால் சென்னி நாடு அவர்கள் மீது படையெடுத்தால் நாம் வருண நாட்டுக்கு உதவுவோம் என்பதுதான் அசோகவர்மரின் எதிர்பார்ப்பு. எனவே அவருடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதத்தில்தான் வருண நாட்டுக்கு நம் படைகளை அனுப்பி இருக்கிறேன்."

பேச்சை நிறுத்திய அரசன் அமைச்சரின் முகத்திலிருந்த குழப்பத்தைப் பார்த்து, "நம் படைகள் வருண நாட்டுக்குச் சென்றிருப்பது உண்மைதான். ஆனால் அவை வருண நாட்டின் மீது படையெடுத்துச் செல்லவில்லை. வருண நாட்டுக்கு உதவத்தான் சென்றிருக்கின்றன. வருண நாட்டுக்க்குள் சென்னி நாட்டின் எல்லைப்பகுதிக்கு அருகில்தான் அவை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இது பற்றி அசோகவர்மருக்கு முன்பே தகவல் அனுப்பி விட்டேன். 

"எல்லைப்பகுதியில் நம் படைகள் இருப்பதால் சென்னி நாட்டு மன்னன் சூதவர்மன் வருண நாட்டின் மீது படையெடுக்கத் துணிய மாட்டான். அசோகவர்மர் எதற்காக நம்மிடம் திரும்பி வந்தாரோ அந்த நோக்கத்தை நாம் நிறைவேற்றிக் கொடுத்து விட்டதால் அவர் இனி எப்போதுமே நம்மிடம் நட்பாக இருப்பார்" என்றான் அரசன் சிரித்துக் கொண்டே.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 53
 சுற்றந்தழால்

குறள் 530:
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.

பொருள்:
தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒரு காரணத்தினால் திரும்பி வந்தவனை, அரசன் அவன் வந்த காரணம் குறித்த உதவியை அவனுக்குச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.

 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

Monday, November 1, 2021

529. என் அண்ணன்

சுதாகர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய உடனேயே, "உங்க அண்ணன் கிட்டேருந்து கடிதம் வந்திருக்கு" என்றாள் அவன் மனைவி மீனா.

"மணி ஆர்டர் வரும்னு பாத்தா கடிதம் வந்திருக்கு! என்ன, விளைச்சல் இல்லாதனால பணம் அனுப்ப முடியாதுன்னு எழுதி இருக்காரா?" என்றான் சுதாகர் மனைவியிடமிருந்து கடித உறையைக் கையில் வாங்கியபடியே.

"ஏங்க, நீங்க படிச்சிருக்கீங்க. டவுன்ல இருந்துகிட்டு வேலை பாக்கறீங்க. உங்க அண்ணன் படிக்கல, கிராமத்தில இருந்துகிட்டு நிலங்களைப் பாத்துக்கறாரு. விளைச்சலைப் பொருத்து, வர வருமானத்தில உங்களுக்கும் ஒரு பங்கை அனுப்பறாரு. நமக்கு இது கூடுதல் வருமானம்தான். அவரை ஏன் குத்தம் சொல்லிக்கிட்டே இருக்கீங்க?"

"நிலத்தில எவ்வளவு விளையுதுன்னு யாருக்குத் தெரியும்? அவர் சொல்றதுதான் கணக்கு! ஏதோ செலவுக் கணக்கு காட்டிட்டு, தனக்குன்னு ஒரு பங்கை எடுத்துக்கிட்டு மீதியை எனக்கு அனுப்பறாரு. அவரு என்னை ஏமாத்தறாறோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு. அவர் கொடுக்கற கணக்கில ஏதாவது சந்தேகம் கேட்டா, அண்ணன் மேலயே சந்தேகப்படறியான்னு கோவிச்சுக்கறாரு. அவர் மேல எனக்கு நம்பிக்கை இல்லை."

"உங்க ஊர்லேந்து இங்கே வரவங்க உங்ககிட்ட எதையோ சொல்லிட்டுப் போறாங்க. நீங்க அதை நம்பி உங்க அண்ணன் மேலேயே சந்தேகப்படறீங்க. முன்னெல்லாம்  நாம ஊருக்குப் போனா உங்க அண்ணனும் அண்ணியும் நம்மகிட்ட எவ்வளவு அன்பா நடந்துப்பாங்க! இப்ப சில வருஷமா உங்க அண்ணன் மேல கோவிச்சுக்கிட்டு நீங்க ஊருக்கே போறதில்ல!" என்றாள் மீனா.

மீனா பேசிக் கொண்டிருந்தபோதே கடிதத்தைப் பிரித்து அதைப் படித்து முடித்து விட்ட சுதாகர், "நிலத்தில விளைச்சல் எல்லாம் குறைஞ்சுக்கிட்டே வருதாம். விவசாயத் தொழில் இனிமே லாபமா இருக்காது, அதனால நிலத்தையெல்லாம் வித்துடலாம்னு சொல்றாரு. விலை பேசி முடிக்க என்னை ஊருக்கு வரச் சொல்லி இருக்காரு" என்றான்.

"நல்லதாப் போச்சு. மொத்தமா கொஞ்சம் பணம் வந்தா பாங்க்ல போட்டு வச்சுக்கலாம். இனிமே உங்க அண்ணன் உங்களை ஏமாத்தறார்னு நீங்க நினைக்க வேண்டி இருக்காது" என்ற மீனா, "நாம, குழந்தைங்க எல்லாரும்தானே போகப் போறோம்?" என்றாள்.

"நீங்கள்ளாம் எதுக்கு? நான்தான் என் அண்ணன் உறவே வேண்டாம்னு பாக்கறேனே! நான் மட்டும் போய் நிலம் விக்கறதைப் பேசி முடிச்சு பத்திரத்தைப் பதிவு பண்ணி ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல அண்ணனோட சேர்ந்து கையெழுத்துப் போட்டுட்டு வந்துடறேன். நிலத்தை வித்தப்பறம் அவர் யாரோ நான் யாரோ!" என்றான் சுதாகர்.

ருக்குப் போய் விட்டு வந்த சுதாகர், "நிலத்தை எல்லாம் வித்தாச்சு. இப்ப இருக்கிற நிலைமையில நமக்கு நல்ல விலை கிடைச்சிருக்கறதா ஊர்ல எல்லாரும் சொன்னாங்க. இதோட சொந்த ஊருக்கு குட்பை, அண்ணன்கற சொந்தத்துக்கும் குட்பை!" என்றான் சுதாகர்.

ழெட்டு மாதங்களுக்குப் பிறகு சுதாகரின் அண்ணனிடமிருந்து சுதாகருக்கு இன்னொரு கடிதம் வந்தது. அது அவன் அண்ணன் மகளின் திருமணப் பத்திரிகை!

பத்திரிகையைப் பார்த்த சுதாகர், "கல்யாணத்துக்கு நாம எல்லாருமே போகலாம். அண்ணன் வீட்டில பத்து நாள் இருந்துட்டு வரலாம். ஆஃபீசுக்கு லீவ் போட்டுடறேன்" என்றான் உற்சாகத்துடன்.

அவனை வியப்புடன் பார்த்த மீனா, "என்ன திடீர்னு அண்ணனோட உறவு கொண்டாடறீங்க?" என்றாள்.

"நிலத்தினாலதானே என் அண்ணன் மேல சந்தேகம் வந்து உறவுல விரிசல் வந்தது? இப்பதான் நிலத்தை வித்தாச்சே! இனிமே என் அண்ணனோட எனக்கென்ன பிரச்னை? கடந்த காலத்தில ஒருவேளை என் அண்ணன் என்னை ஏமாத்தி இருந்தாலும் இனிமே நான் அதைப் பத்தி நினைக்கப் போறதில்ல" என்றான் சுதாகர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 53
 சுற்றந்தழால்

குறள் 529:
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்..

பொருள்:
முன் சுற்றத்தாராக இருந்து பின் ஒரு காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.

 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...