Saturday, January 19, 2019

391. அதிகப் பிரசங்கி!

"ஏம்ப்பா மெஷின் செட் அப் பண்றதுன்னா என்னன்னு தெரியுமா உனக்கு?" என்றான் ப்ரொடக்‌ஷன் எக்சிக்யூடிவ் சுதாகர்.

"தெரியும் சார்!" என்றான் மணி அமைதியாக.

"நீ இங்க ஒரு ட்ரெயினி. அது தெரியுமா உனக்கு?"

மணி பதில் சொல்லவில்லை.

"உனக்கு ஏதாவது தெரியலேன்னா எங்கிட்ட கேட்டுக்கணும். நீயா அதிகப் பிரசங்கித்தனமா எதுவும் செய்யக் கூடாது."

"நான் எதுவும் செய்யல சார். புது பேட்ச் போடறப்ப ஏன் மெஷினை மறுபடி செட் அப் பண்ணலேன்னு ஆபரேட்டர் கிட்ட கேட்டேன். அவ்வளவுதான்!" என்றான் மணி. 

"அதைத்தான் அதிகப் பிரசங்கித்தனம்னு சொன்னேன். உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா எங்கிட்ட கேட்டுக்க. மெஷின் ஆபரேட்டர் கிட்ட போய்ப் பேசறதெல்லாம் வேண்டாம்."

மணி மௌனமாக அங்கிருந்து சென்றான்.

"என்ன நீலகண்டன்?" என்றார் ப்ரொடக்‌ஷன் மானேஜர் மூர்த்தி, தயக்கத்துடன் தன் முன் வந்து நின்ற மெஷின் ஆபரேட்டர் நீலகண்டனிடம்.

"சார்! ஒரு விஷயம். நீங்க தப்பா நினைச்சுக்கக் கூடாது" என்றான் நீலகண்டன்.

"சொல்லு" என்றார் மூர்த்தி.

"புதுசா ஒரு இன்ஜினீயர் வந்திருக்கார் இல்ல?"

"ஆமாம் மணின்னு ஒரு பையன், ட்ரெயினியாப் போட்டிருக்கோம் அவனை. ஏன் அவன் ஏதாவது பிரச்னை பண்றானா?"

"அதெல்லாம் இல்லை சார். அவரு நேத்திக்கு எங்கிட்ட வந்து புது பேட்ச் போடறப்ப ஏன் மெஷினை செட் அப் பண்ணலேன்னு கேட்டாரு."

"ஏன் நீ செட் அப் பண்ணலியா?"  

"சார்! ப்ரொடக்‌ஷன் எக்சிக்யூடிவ் சொல்றபடிதானே சார் நான் செய்ய முடியும்? முன்னெல்லாம் ஒவ்வொரு பேட்ச்சுக்கும் மெஷின் செட் அப் பண்ணிக்கிட்டிருந்தோம். இந்த ப்ரொடக்‌ஷன் எக்சிக்யூடிவ் வந்தப்பறம், 'ஒவ்வொரு பேட்ச்சுக்கும் மெஷினை செட் அப் பண்ணினா டைம் வேஸ்ட் ஆகும். மாசத்துக்கு ஒரு தடவை செட் அப் பண்ணினா போதும்னு சொன்னாரு. அதனால அப்படித்தான் செஞ்சுக்கிட்டிருக்கோம்."

"சரி. இதை ஏன் எங்கிட்ட வந்து சொல்ற?"

"கொஞ்ச நாளா, குவாலிட்டி கன்ட்ரோல்லேந்து ரீவொர்க் பண்றதுக்காக வர பீஸ்களோட எண்ணிக்கை அதிகமா இருக்கு. ஒருவேளை மெஷின் செட் அப் பண்ணாததாலதான் இந்தப் பிரச்னையோன்னு எனக்கு ஒரு சந்தேகம். புது இன்ஜினியர் வந்து ஏன் செட் அப் பண்ணலேன்னு கேட்டதும் என் சந்தேகம் சரியாயிருக்குமோன்னு தோணிச்சு. ப்ரொடக்‌ஷன் எக்சிகியூடிவ்கிட்ட சொன்னா அவர் காதில போட்டுப்பாரான்னு தெரியல. அதான் உங்ககிட்ட வந்து சொன்னேன்" என்றான் நீலகண்டன்.

"சரி, போ. நான் பாத்துக்கறேன்" என்று நீலகண்டனை அனுப்பி வைத்தார் மூர்த்தி.

ப்ரொடக்‌ஷன் மானேஜர் அழைக்கிறார் என்றதும் சற்று பயந்து கொண்டேதான் அவர் அறைக்குச் சென்றான் மணி.

"நீ எந்த இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சே?" என்றுதான் முதலில் கேட்டார் மூர்த்தி. 

மணி தான் படித்த கல்லூரியின் பெயரைச் சொன்னதும், "அது அவ்வளவு நல்ல காலேஜ் இல்லியே?" என்ற மூர்த்தி, சில வினாடிகள் கழித்து, "ஆனாலும் நீ நல்லாத்தான் படிச்சிருக்க போலருக்கு!" என்றார். 

"சார்!" என்றான் மணி எதுவும் புரியாமல். 

"ஒவ்வொரு தடவை புது பேட்ச் போடறப்பவும் மெஷினை செட் அப் பண்ணணும்னு நீ சொன்னது சரிதான். ஆனா உனக்கு இதை யார் சொன்னாங்க?"

"சார்! ப்ரொடக்‌ஷன் மேனுவல்ல போட்டிருக்கே சார்!"

"எனக்குத் தெரிஞ்சு நம்ப கம்பெனியில வேலைக்கு சேந்தவங்கள்ள, மேனுவலைப் படிச்ச ஒரே ஆளு நீதான்! நான் கூட மேனுவலை சரியாப் படிச்சதில்லை. நான் ப்ரொடக்‌ஷன் எக்சிக்யூடிவ்கிட்ட பேசறேன். நீ இதைக் குறிப்பிட்டுச் சொன்னதுக்கு உன்னைப் பாராட்டத்தான் கூப்பிட்டேன். வெல் டன்!" என்றார் மூர்த்தி.  

பொருட்பால்
அரசியல் இயல் 
அதிகாரம் 40
கல்வி
குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

பொருள்:
கற்க வேண்டிய விஷயங்களைப் பிழையில்லாமல் கற்க வேண்டும். அதற்குப் பிறகு, தான் கற்ற கல்விக்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால் 

Monday, January 7, 2019

390. பொன்னம்பலம்- சிற்றம்பலம்

"அஞ்சு வருஷம் மோசமான அரசாங்கத்துக்கப்புறம் வேற ஒரு கட்சி ஆட்சிக்கு வந்திருக்கு. எப்படி இருக்கோ பாக்கலாம்" என்றார் சிற்றம்பலம்.

"எல்லா அரசாங்கமும் ஒரே மாதிரிதான். ஆளுங்கதான் மாறுவாங்களே தவிர, ஆட்சி மாறாது" என்றார் பொன்னம்பலம்.

"என்னங்க, ஆட்சி மாறி ஆறு மாசம் ஆச்சே, இப்ப என்ன சொல்றீங்க, புது அரசாங்கத்தைப் பத்தி?" என்றார் சிற்றம்பலம். 

"நிறைய வரிச் சலுகை கொடுத்திருக்காங்க. அதனால மக்கள் கையில புழங்கற பணம் அதிகரிக்கும். இது நல்ல விஷயம்தான். ஆனா, மத்த விஷயங்கள்ள எப்படி நடந்துக்கறாங்கன்னு பாக்கலாம்" என்றார் பொன்னாம்பலம்.

"ஒரு வருஷம் ஆச்சு. எனக்கென்னவோ இந்த அரசாங்கம் நல்லா செயல்படற  மாதிரிதான் தோணுது. நீங்க என்ன நினைக்கறீங்க?" என்றார் சிற்றம்பலம்.

"ஒரு விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. இந்த அரசாங்கம் எல்லா விஷயத்தையும் ரொம்பப் பரிவோடு அணுகுது. முன்னால இருந்த அரசாங்கம் அடக்குமுறையைக் கையாண்டது. ஆனா இந்த அரசாங்கம் பேச்சு வார்த்தை மூலமா பிரச்னைகளைத் தீர்க்க முயற்சி செய்யுது. அதுக்காக எல்லாத்துக்கும் சரின்னு சொல்லாம சில விஷயங்கள்ள உறுதியாவும் இருக்கு. புதுத் துடைப்பம் நல்லாப்  பெருக்கும்னு சொல்லுவாங்க. பார்க்கலாம்!" என்றார் பொன்னம்பலம்.

"என்னங்க, ரெண்டரை வருஷம் ஆயிடுச்சு. பாதி டர்ம் முடிஞ்சு போச்சு. இப்பவாவது இந்த அரசாங்கத்துக்கு பாஸ் மார்க் கொடுப்பீங்களா?" என்றார் சிற்றம்பலம். 

"பாஸ் மார்க் கண்டிப்பாக் கொடுக்கலாம். ஆனா இந்த அரசாங்கம் எண்பதுக்கு மேல மார்க் வாங்கும்னு நினைக்கறேன். வாங்கணும்னு எதிர்பாக்கறேன். அந்த அளவுக்கு எல்லாமே நல்லாப் போயிட்டிருக்கு. இந்த அரசாங்கத்தோட இன்னொரு சிறப்பான விஷயம் என்னன்னா எல்லார் விஷயத்திலேயும் ஒரே மாதிரி நியாயமா நடந்துக்கறாங்க. ஆளுங்கட்சிக்காரங்க தப்பு செஞ்சா அவங்க மேலயும் நடவடிக்கை எடுக்கறாங்க. அதனால அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் பயந்து தப்பு பண்ணாம இருக்காங்க. இது ரொம்ப அபூர்வம். நான் இதை மனசாரப் பாராட்டறேன்" என்றார் பொன்னம்பலம்.

"நாலு வருஷம் ஆயிடுச்சே, இப்ப எண்பது மார்க் கொடுப்பீங்களா?" என்றார் சிற்றம்பலம்.

"எண்பது என்ன, தொண்ணூறே கொடுக்கலாம். எல்லா அரசாங்கமும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. ஏன்னா, வளர்ச்சி இருந்தாத்தான் அரசாங்கத்துக்கு வருமானம் வரும். ஆனா, வளர்ச்சியோட பலன் எல்லாருக்கும் போய்ச் சேரணும்கறதுக்காக, இந்த அரசாங்கம் எல்லா மக்களுக்கும் உதவற  விதத்தில கிராமப்புற, நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டங்கள் மாதிரி நிறைய திட்டங்களை உருவாக்கி இருக்கு. மக்களைக் காப்பாத்தறது தன்னோட கடமைன்னு நினைச்சு செயல்படுது இந்த அரசாங்கம். பாராட்டப்பட வேண்டிய விஷயம்"  என்றார் பொன்னம்பலம்.

"வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி!" என்றார் சிற்றம்பலம்.

"ஒத்தர் பிரம்மரிஷியா இருந்தா, வசிஷ்டரா இருந்தா என்ன, வேற யாரா இருந்தா என்ன, அதை ஏத்துக்கிட்டுத்தானே ஆகணும்!" என்றார் பொன்னம்பலம்.

(குறிப்பு: இது எந்த ஒரு அரசாங்கத்தையும் குறித்த கதை அல்ல. ஒரு கற்பனை அரசாங்கம் குறித்தது. என்றோ ஒருநாள் இப்படி ஒரு அரசு அமையும் என்று நாம் கனவு காணத்தான் முடியும்!)

அரசியல் இயல் 
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)
குறள் 390:
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

பொருள்:
கொடை, அருள், செங்கோல், நலிந்த மக்களைக் காத்தல் ஆகிய நான்கு பண்புகளும் உள்ள அரசன் அரசர்களுக்கெல்லாம் ஒளி போன்றவன்.
அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால் 















1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம். தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்ம...