அதிகாரம் 57 - வெருவந்த செய்யாமை

திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை
(அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடாமை)

561. தண்டனை போதாது!

"மன்னரே! அரண்மனைக்குள் திருட வந்தவனைப் பிடித்து விட்டார்கள்" என்றார் அமைச்சர்.

"ஆமாம். அதுதான் நீதிபதி அவனுக்கு தண்டனை அளித்து விட்டாரே! இதை என்னிடம் சொல்லவா ஒற்றர்படைத் தலைவருடன் வந்தீர்கள்?"

"அரசே! நீதிபதிக்குக் குற்றத்தின் தீவிரம் தெரியாது. அரண்மனையில் புகுந்து திருடப் பார்த்தான் என்றுதான் அவன் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் நீதிபதி அவனுக்கு ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறார்."

"அப்புறம் என்ன?"

"மன்னரே! இவன் அரண்மனைக்குள் எப்படி நுழைந்தான் தெரியுமா?"

"அதுதான் இவனுக்கு உதவியதற்காக இரண்டு காவலர்களும் பிடிக்கப்பட்டு விட்டார்களே!" 

அமைச்சர் ஒற்றர்படைத் தலைவரைப் பார்த்தார். உடனே ஒற்றர் படைத் தலைவர் அரசரைப் பார்த்து, "அரசே! அவன் அரண்மனைக்குள் நுழைந்தது நிலவறை வழியாக" என்றார் தயக்கத்துடன்.

"என்னது நிலவறை வழியாகவா? அரண்மனையிலிருந்து கோட்டைக்கு வெளியே செல்லும் இந்த நிலவறைப் பாதை இருப்பது அரண்மனையில் இருக்கும் ஒரு சிலருக்குத்தானே தெரியும்? வெளியிலிருந்து ஒருவன் எப்படி அதற்குள் நுழைந்து உள்ளே வந்தான்?" என்றார் அரசர் கோபத்துடன்.

"தெரியவில்லை அரசே! நிலவறைப் பாதையைப் பயன்படுத்தி யாரோ கோட்டைக்கு வெளியே வந்திருப்பதை அவன் பார்த்திருக்கக் கூடும். அந்த இடத்திலிருந்து எப்படியோ அவன் வழியைக் கண்டுபிடித்து உள்ளே வந்து விட்டான்."

"அவனால் எப்படி உள்ளே வர முடியும்? அரண்மனைக்குள் நுழையும் இடத்தில் ஒரு கதவு இருக்கிறதே!"

"அவன் அரண்மனைக்குள் வரவில்லை அரசே! அந்தக் கதவுக்குப் பின்னே சிக்கிக் கொண்டு உள்ளே வரவும் முடியாமல் இருட்டில் வழியைக் கண்டுபிடித்து வெளியே போகவும் முடியாமல் அவன் கதவை வேகமாகத் தட்டி இருக்கிறான். அந்தச் சத்தத்தைக் கேட்டு அரண்மனைக்குள்ளிருந்த இரண்டு வீரர்கள் கதவைத் திறந்து கொண்டு போய் அவனைப் பிடித்து விட்டார்கள்!"

"நல்ல வேளை! அப்படியானால் அவனுக்கு உதவி செய்ததாக இரண்டு வீரர்களைப் பிடித்து வைத்திருப்பதாக்க் காவல்படைத் தலைவர் அறிவித்திருப்பது?"

"மன்னிக்க வேண்டும் அரசே! நான்தான் அவரை அப்படிச் சொல்லச் சொன்னேன்!" என்றார் அமைச்சர்.

"ஏன் அப்படிச் சொன்னீர்கள்?"

"அரண்மனைக்குள் புக முயன்றான் என்று கூறி ஒருவனைப் பிடித்து விட்ட செய்தி தலைநகர் முழுவதும் பரவி விட்டது. காவலை மீறி அவன் எப்படி அரண்மனைக்குள் நுழைந்தான் என்ற கேள்வி மக்கள் மனிதில் எழுமே! அதைப் போக்கத்தான் அவனுக்கு இரண்டு வீரர்கள் உதவியதாகவும் அவர்களும் பிடிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்குமாறு படைத்தலைவரிடம் கூறினேன்."

"நல்லது! இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?"

"அரசே! இந்தக் குற்றத்துக்கு ஐந்தாண்டு சிறை போதாது. ஐந்தாண்டுக்கு மேல் சிறை தண்டனை அளிக்க நீதிபதிக்கு அதிகாரம் கிடையாது. எனவே நீங்கள் அவன் தண்டனையை அதிகரிக்க வேண்டும்."

"அரண்மனையில் திருடினால் அதிக தண்டனை, சாதாரண மக்களிடம் திருடினால் குறைந்த தண்டனை என்ற விதியை உண்டாக்க நான் விரும்பவில்லை" என்றார் அரசர்.

அமைச்சர் மௌனமாக இருந்தார்.

"சரி ஒன்று செய்யலாம். திருடுவதற்கான தண்டனையையே அதிகப்படுத்தி விடலாம்!"

"ஐந்தாண்டு என்பதைப் பத்தாண்டு என்று ஆக்கி விடலாம்."

"பத்தாண்டுகள் என்று ஆக்கினால் போதாது அமைச்சரே! ஆயுள் தண்டனை என்று ஆக்கி விடலாம்."

"ஆயுள் தண்டனையா? அது மிக அதிகம் இல்லையா?"

"திருட்டு என்பதை ஒரு கொடிய குற்றம் என்று நாம் ஏன் கருதக் கூடாது? கொடிய குற்றத்துக்குக் கடுமையான தண்டனை! இதனால் திருடுவதற்கே பலரும் அஞ்சுவார்கள் அல்லவா? அதனால் நாட்டில் திருட்டுக் குற்றம் குறையும்."

"அப்படியே செய்து விடலாம் அரசே!" என்றார் அமைச்சர் சற்றுத் தயக்கத்துடன்.

"அமைச்சரே! உங்கள் தயக்கம் எனக்குப் புரிகிறது. ஆயுள் தண்டனை கொடியதுதான். சிறை தண்டனையே கொடியதுதான். ஆயினும் சிறைக்குப் போனால் மீண்டும் வெளியே வர முடியாது, நம் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடும் என்ற பயம் இருந்தால் திருட்டுக் குற்றங்கள் குறையலாம் அல்லவா? சிறையில் அதிகம் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ.அல்லது வேறு குடும்பக் காரணங்களுக்கோ சிலருக்கு நாம் கருணை அடிப்படையில் விடுதலை அளிக்கலாம். அத்தகைய நடைமுறைகள் இப்போதே இருக்கின்றவே! எனவே தண்டனையைக் கடுமையாக்கி அதன் மூலம் குற்றங்களைக் குறைப்பதுதான் சிறந்தது என்று எனக்குத் தோன்றுகிறது."

"அப்படியே செய்து விடலாம் அரசே! உங்கள் முடிவுகள் எப்போதுமே அறிவுசார்ந்தும், நியாயமாகவும்தான் இருக்கும். அப்படியானால் அரண்மனைக்குள் புக முயன்றவனுக்கும் ஆயுள் தண்டனை அளித்துத் தாங்கள் அறிவித்து விடுங்கள்."

"இல்லை அமைச்சரே! சட்டங்கள் அவை இயற்றப்பட்ட நாளிலிருந்துதான் செயல்படுத்தப்பட வேண்டும். நேற்று நடந்த ஒரு குற்றத்தை இன்று போடப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் தண்டிப்பது முறையாக இருக்காது! எனவே நீதிபதியால் அவனுக்கு அளிக்கப்பட ஐந்தாண்டு தண்டனை அப்படியே இருக்கட்டும்"

"அரசே! இப்போதுதான் சொன்னேன். தங்கள் முடிவுகள் அறிவு சார்ந்து இருப்பதுடன் நியாயமாகவும் இருக்குமென்று. அதை உடனேயே நிரூபித்து விட்டீர்கள்!" என்றார் அமைச்சர் பெருமிதத்துடன்.

குறள் 561:
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

பொருள்: 
நடந்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக்குற்றம் நடைபெறாதபடி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.   

                                       562. மன்னிக்க முடியாது!

பொது மேலாளர் கஜேந்தரனின் முன்பு தலையைக் குனிந்தபடி நின்றான் பார்த்திபன்.

"மிஸ்டர் பார்த்திபன்! உங்களுக்கு மானேஜர் பொறுப்புக் கொடுத்தது உங்கள் டிபார்ட்மென்ட்டை நீங்கள் பொறுப்பாகப் பார்த்துக்கணுங்கறதுக்காக. உங்க பதவியைப் பயன்படுத்தி நீங்கள் பணம் சம்பாதிக்கறதுக்காக இல்ல."

"சார்! நான் செஞ்சது தப்புதான். ஆனா இதுதான் நான் செஞ்ச முதல் தப்பு. இதுதான் கடைசியாகவும் இருக்கும். நான் எந்த விதிமீறலையும் செய்யல. அந்த கான்டிராக்டர் தானே வந்து எனக்குப் பணம் கொடுத்தாரு. 'எல்லாருக்கும் வழக்கமாக் கொடுக்கறதுதான், இதுக்காக உங்ககிட்ட நான் சலுகை எதையும் எதிர்பார்க்க மாட்டேன், இதுக்கு முன்னால இருந்தவங்களுக்கும் நான் கொடுத்திருக்கேன்'னு சொல்லி நான் வேண்டான்னு சொன்னப்பறமும் வற்புறுத்தி என் கையில கவரைக் கொடுத்துட்டுப் போயிட்டாரு..."

"கேட்டு வாங்கினா என்ன, கேக்காம வாங்கினா என்ன, கான்டிராக்டர்கிட்ட பணம் வாங்கறது குற்றம்தானே? லஞ்சம் வாங்கிட்டு எந்த விதிமீறலையும் செய்யலேன்னு சொல்றீங்க! அந்த கான்டிராக்டரோட நாம செஞ்சுக்கிட்ட ஒப்பந்தத்தை ரத்து செஞ்சுட்டேன். இப்ப உங்களுக்கு தண்டனை கொடுக்கணும். நியாயமாப் பாத்தா, உங்க மேல போலீஸில புகார் கொடுத்து உங்களை ஜெயிலுக்கு அனுப்பணும்!"

"அப்படியெல்லாம் செஞ்சுடாதீங்க சார்! நான் இதுவரையிலும் எந்தத் தப்பும் செஞ்சதில்ல. இனிமே செய்யவும் மாட்டேன். இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சுடுங்க சார்!" என்றான் பார்த்திபன், கெஞ்சும் குரலில்.

"தப்பு செஞ்சவங்களை மன்னிச்சுடலாம்னா அப்புறம் தண்டனை கொடுக்கிற நடைமுறை எதுக்கு இருக்கு? குறைஞ்சது உங்களை சஸ்பெண்ட் பண்ணணும். ரெண்டு நாள் எந்த வேலையும் செய்யாம சும்மா உக்காந்திருங்க. ஆர்டர் வரும். நீங்க போகலாம்" என்றார் கஜேந்திரன் கண்டிப்பான குரலில்.

பார்த்திபன் ஏதோ பேச வாயெடுத்து பிறகு எதுவும் பேசாமல் அறையிலிருந்து வெளியேறினான்.

டுத்த நாள் மதுரையிலிருந்த கிளை அலுவலகத்துக்கு கஜேந்திரன் மாற்றப்பட்டிருப்பதாக அவனுக்கு ஒரு கடிதம் வழங்கப்பட்டது.

சஸ்பென்ஷன் உத்தரவை எதிர்பார்த்து அச்சத்துடன் இருந்த கஜேந்திரனுக்கு அந்த வேலைமாற்றல் உத்தரவு ஒரு எதிர்பாராத ஆறுதலாக இருந்தது. ஆயினும் அவனுடைய மேலாளர் பதவி பறிக்கப்பட்டிருப்பதும் மதுரை அலுவலகத்தின் மேலாளரின் கீழ் அவன் ஒரு சாதாரண அதிகாரியாகத்தான் பணியாற்ற வேண்டும் என்பதும் தனக்கான தண்டனைதான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். ஆயினும் போலீஸ் புகார், சஸ்பென்ஷன் போன்ற கடுமையான நிலைகளுக்கு அவனை உள்ளாக்காததே பொது மேலாளர் கஜேந்திரனின் கருணைதான் என்பதை உணர்ந்தான்.

பொது மேலாளரைப் பார்த்து நன்றி தெரிவித்து விட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் செல்ல அவன் முயன்றபோது அவனைப் பார்க்க கஜேந்திரன் மறுத்து விட்டார்.

"சார்! பிஸியா இருக்காரு. இப்ப அவரைப் பாக்க முடியாது, உங்களை உடனே மதுரை ஆஃபீஸ்ல போய் ஜாயின் பண்ணச் சொன்னாரு" என்றான் பொது மேலாளரின் பியூன்.

துரை அலுவலகத்தின் மேலாளர் பூபதிக்கு பொது மேலாளர் கஜேந்திரனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்கள் இருவரும்  அந்த நிறுவனத்தில் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றுபவர்கள், நண்பர்கள் கூட.

"சொல்லு கஜேந்திரா!" என்றார் பூபதி.

"உன் ஆஃபீசுக்கு பார்த்திபன்னு ஒரு அதிகாரியை இங்கேந்து மாத்தி இருக்கேன். அவர் நல்ல திறமையான அதிகாரிதான். ஆனா ஏதோ கொஞ்சம் தடுமாறி ஒரு தப்புப் பண்ணிட்டாரு. அதனால இப்ப அவருக்கு மானேஜர்ங்கற அந்தஸ்து இல்ல. ஆனா நீ அவருக்கு முக்கியமான பொறுப்பு கொடுத்து உனக்கு அடுத்த இடத்தில அவர் இருக்கற மாதிரி வச்சுக்க. அநேகமா இனிமே அவர் எந்தத் தப்பும் பண்ணாம பொறுப்பா நடந்துப்பாருன்னு நினைக்கிறேன். அடுத்த வருஷம் நீ ரிடயர் ஆகும்போது உன்னோட இடத்தில அவரை மானேஜரா ஆக்கலாம்னு பாக்கறேன் - அவர் நல்லா வேலை பார்த்து நீயும் சிபாரிசு பண்ணினாத்தான்!" என்றார் கஜேந்திரன். 

குறள் 562:
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.

பொருள்: 
ஆட்சியை நீண்ட நாள் வைத்திருக்க விரும்புபவர் கடுமையாக தண்டிப்பது போல் துவங்கி தண்டனையை மென்மைப்படுத்த வேண்டும்.

563. தோற்றது ஏன்?

மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

"ஆளும் கட்சி செய்யற அட்டூழியங்களைப் பத்தி நாம மக்கள்கிட்ட எவ்வளவோ பிரசாரம் பண்ணிட்டோம். பொதுக்கூட்டங்கள்ள நாம் பேசறதையெல்லாம் மக்கள் ஆர்வமாக் கேக்கறாங்க, கை தட்டறாங்க. ஆனா தேர்தல்கள்ள அவங்கதான் வெற்றி பெற்றுக்கிட்டே இருக்காங்க. இது எப்படின்னு எனக்குப் புரியல" என்றார் கட்சியின் தலைவர் சிவராஜ்.

"அவங்களுக்கும் நமக்கும் அஞ்சு சதவீதம்தான் ஓட்டு வித்தியாசம். அடுத்த தேர்தலுக்குள்ள இதை நாம் சரி செஞ்சுடலாம்" என்றார் ஒரு மூத்த உறுப்பினர்.

"அப்படியெல்லாம் நாம குருட்டுத்தனமா நம்பிக்கிட்டு சும்மா இருக்க முடியாது. நம்ம ஆட்சியில இருந்த சின்னக் குறைகளையெல்லாம் பெரிசாக்கி அவங்க பதவிக்கு வந்தாங்க. ஊடகங்களும் நமக்கு எதிரா பிரசாரம் பண்ணினாங்க. ஆனா இந்த ஆட்சியில மக்களுக்கு எதிரா இவ்வளவு அக்கிரமங்கள் நடக்குது. நாட்டில வளர்ச்சியே இல்லை. விலைவாசி ஏறிக்கிட்டே இருக்கு. விவசாயத்தைச் சீரழிச்சுட்டாங்க, தொழில் வளர்ச்சி இல்லை, இருக்கற தொழில்களையும் மூடிக்கிட்டிருக்காங்க. படிச்சவங்க படிக்காதவங்க யாருக்கும் வேலை இல்லை. ஆனா ஊடகங்கள் இதையெல்லாம் வெளிப்படுத்தாம ஆளும் கட்சிக்கு ஜால்ரா போட்டுக்கிட்டிருக்காங்க. அதனாலதான் மக்களுக்கு உண்மையான நிலைமை புரியல. நாம பிரசாரத்தைத் தீவிரப்படுத்தறதைத் தவிர வேற வழி இல்லை" என்றார் இன்னொரு உறுப்பினர்.

"இப்ப சமீபத்தில ஒரே நாடு ஒரே சீருடைங்கற பேரில கிண்டர்கார்டன்லேயிருந்து கல்லூரி வரை எல்லா மாணவ மணவர்களுக்கும் ஒரே மாதிரி சீருடைன்னு சட்டம் போட்டிருக்காங்க. பச்சையும் சிவப்பும் கலந்து ஆளும் கட்சியோட கொடி நிறத்தில சீருடை இருக்கு. இதனால மாணவர்கள் எல்லாம் கொதிச்சுப் போயிருக்காங்க. இந்த நிறங்கள் வேற மாணவர்கள் யாருக்கும் பிடிக்கல. சீக்கிரமே பெரிய போராட்டம் வெடிக்கும்னு நினைக்கிறேன். மாணவர்கள் போராட்டம்தான் பல ஆட்சிகளைக் கவிழ்த்திருக்கு. நாம காத்திருந்து பார்க்கலாம்" என்றார் மற்றொரு உறுப்பினர்  

ஆனால் மாணவர்கள் போராட்டம் எதுவும் நடக்கவில்லை. மாணவர்களிடையே அதிருப்தியும் எதிர்ப்பும் இருந்தாலும் அவர்கள் போராட்டம் எதிலும் ஈடுபடவில்லை. ஓரிரு வாரங்களில் முணுமுணுப்புகள் கூட அடங்கி விட்டன.

"என்ன ஐயா இது? தேர்தல் ஆலோசகர்ன்னு சொல்லி இவ்வளவு ஃபீஸ் வாங்கினீங்க. நாமதான் ஜெயிக்கப் போறோம்னு அடிச்சு சொன்னீங்க. இப்ப இப்படி ஆயிடுச்சே! உங்களுக்குக் கொடுத்த பணத்தை வேற விதமா செலவழிச்சிருந்தா நாங்க ஜெயிச்சிருப்போம் போல இருக்கே!" என்றார் தேர்தலில் தோல்வி அடைந்து பதவியை இழந்திருந்த மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் இந்திரகுமார்.

"சார்! தேர்தலுக்கு அப்புறம் நாங்க ஒரு ஆய்வு நடத்தினோம். பல வாக்காளர்களை அவங்க வீடுகள்ள சந்திச்சு அவங்க யாருக்கு ஓட்டுப் போட்டாங்க ஏன் ஓட்டுப் போட்டாங்கன்னு ஒரு சர்வே நடத்தினோம். இதை போஸ்ட் போல் சர்வேன்னு சொல்லுவாங்க. இந்த சர்வேயை நாங்க மக்களை அவங்க வீட்டுக்குள்ள சந்திச்சுக் கேள்விகள் கேட்கறதால அவங்க பெரும்பாலும் தைரியமா வெளிப்படையாப் பேசுவாங்க. அதனால இந்த சர்வே முடிவுகள் பெரும்பாலும் சரியாக இருக்கும்..." என்று தேர்தல் ஆலோசகர் விளக்கிக் கொண்டிருந்தபோதே அவரை இடைமறித்த இந்திரகுமார், "சர்வேயில என்ன கண்டு பிடிச்சீங்க? அதைச் சொல்லுங்க!" என்றார் பொறுமையில்லாமல்.

"சார்! மூணு வருஷம் முன்னால நீங்க எல்லா மணவர்களுக்கும் ஒரே சீருடைன்னு உங்க கட்சி கொடி கலர்ல சீருடையைத் திணிச்சீங்க."

"வார்த்தையை அளந்து பேசுங்க. சீருடைகள் எங்க கட்சிக் கொடி நிறத்தில இருந்ததுன்னு சொல்றதும் தப்பு, நாங்க அதைத் திணிச்சோம்னு சொல்றதும் தப்பு!" என்றார் இந்திரகுமார் கோபத்துடன்.

"சார் எல்லாம் முடிஞ்சு போச்சு. இப்ப நீங்க அதிகாரத்தில இல்ல. இருக்கறதை இல்லேன்னு எங்கிட்ட சொல்றதால எந்தப் பயனும் இல்ல. நான் சொல்ல வரதைச் சொல்ல விடுங்க. மாணவர்களுக்கு இது பிடிக்கல. அவங்க ரொம்ப கோபமா இருந்தாங்க, உங்க திணிப்பினால காயப்பட்டும் இருந்தாங்க. ஆனா வேற வழியில்லாம அமைதியா இருந்தாங்க. அவங்கள்ள 18 வயது ஆகி ஓட்டுரிமை கிடைச்ச எல்லோரும் மொத்தமா உங்களுக்கு எதிரா ஓட்டுப் போட்டிருக்காங்க. ஓட்டுப் போடற வயதை அடையாத மாணவர்கள் கூட தங்கள் பெற்றோர்கள்கிட்ட சொல்லி உங்களுக்கு எதிரா ஓட்டுப் போடச் சொல்லி இருக்காங்க. இதெல்லாம் சேர்ந்து உங்க எதிர்ப்பு ஓட்டுக்கள் அதிகமாகி அதெல்லாம் மொத்தமா எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சிக்குப் போயிடுச்சு. அவங்க ஜெயிச்சுட்டாங்க. அவங்களே இதை எதிர்பார்க்கல. என் அனுபவத்தில..."

"என்ன உங்க அனுபவத்தில?" என்றார் இந்திரகுமார் கோபம் தணியாமல்.

'என் அனுபவத்தில எல்லா சர்வாதிகாரிகளும், கொடுங்கோலர்களும் ரொம்ப வலுவா இருக்கற மாதிரி இருந்தாலும் ஏதோ ஒண்ணு அவங்களைக் கவுத்துடும்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட ஆலோசகர், "என் அனுபவத்தில இது மாதிரி ஸ்விங் எல்லாம் பலமுறை நடந்திருக்கு" என்றார்.

குறள் 563:
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்..

பொருள்: 
குடிகள் அஞ்சும்படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசன் விரைவில் கெடுவது திண்ணம்.

564. வந்தார்,சென்றார்!

"பது ஜெனரல் மானேஜர் ரொம்பத் திறமையானவர் போல இருக்கே!" என்றார் ரீஜனல் மானேஜர்.கங்காராம்.

"அப்படியா சொல்றே?" என்றார் பொது மேலாளரின் தனிச் செயலர் மூர்த்தி, சிரித்துக் கொண்டே.

இரண்டு மூத்த அதிகாரிகளும் தங்கள் இளம் வயதில் இணைந்து பணியாற்றியவர்கள்.

"உனக்கு இது நல்லா தெரியணுமே! அவரோட எக்சிக்யூடிவ் செகரட்டரிங்கற முறையில நீ எப்பவும் அவர் பக்கத்திலேயே இருக்கியே! நான் இப்பதான் அவரை முதல்ல சந்திக்கிறேன்" என்றார் கங்காராம்.

அப்போது மூர்த்தியின் இன்டர்காம் ஒலித்தது. அதை எடுத்துக் கேட்ட மூர்த்தி, "சரி சார்!" என்று சொல்லி விட்டு கங்காராமைப் பார்த்து, "சார் உன்னை உள்ளே வரச் சொல்றாரு. ஆல் தி பெஸ்ட்!" என்றார் சிரித்துக் கொண்டே.

த்து நிமிடங்களுக்குப் பிறகு பொது மேலாளரின் அறையிலிருந்து வெளியே வந்த கங்காராமின் முகம் சிவந்திருந்தது. கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டே வந்தார்.

"என்ன கங்கா? உள்ளே ஏசி வேலை செய்யலியா?" என்றார் மூர்த்தி, சிரிப்பை அடக்க முடியாமல் வாயைக் கையால் மூடிக் கொண்டே.

"உள்ளே நுழைஞ்சப்ப ஏசி ரொம்ப அதிகமா இருக்கிற மாதிரி இருந்தது. அஞ்சு நிமிஷத்துக்குள்ள அறை சூடாயிடுச்சு!" என்ற கங்காராம், மூர்த்தியின் அருகில் வந்து, "என்ன மனுஷன் இப்படிக் காய்ச்சி எடுக்கறாரு! நான் இப்பதான் அவரை முதல்ல பாக்கறேன். எல்லாரும் அவரைப் பத்தி ரொம்பப் புகழ்ந்து பேசினாங்க. ஆனா மனுஷன் வாய்க்குள்ள எரிமலையே இருக்கே! அவர் வாயிலேந்து பேச்சு வெளியில வரச்சே எரிமலைக் குழம்பு மாதிரி இருக்கு, ஆனா வெளியில வந்தப்பறம் சாக்கடைத் தண்ணி மாதிரி நெடி அடிக்குது! ஒரு சினிமாவில விவேக் சொல்லுவாரே வாய்க்குள்ள ஒரு கூவத்தையே வச்சிருக்காங்கன்னு, அது மாதிரி இருக்கு! நீ எப்படி சமாளிக்கிற?" என்றார் மெல்லிய குரலில்.

"இன்டர்காம் ஆன்ல இருக்கு! நீ பேசினதெல்லாம் சார் காதுல விழுந்திருக்குமே!" என்றார் மூர்த்தி தொலைபேசியின் வாயைக் கையால் மூடியபடி.

"ஐயையோ!" என்றார் கங்காராம் பதற்றத்துடன்.

"பதட்டப்படாதே! சும்மா சொன்னேன். உன் அலறலைக் கேட்டு சார் வெளியில வந்துடப் போறாரு!" என்றார் மூர்த்தி சிரித்தபடி.

"நல்லவேளை. இப்படியா பயமுறுத்துவ!"

"சார் என்ன சொன்னார்?"

"எல்லா ரீஜனையும் விட என் ரீஜன்லதான் விற்பனை அதிகம், லாபமும் அதிகம். ஆனா என்னோட செயல்பாடு ரொம்ப சராசரியா இருக்குன்னு  சொல்றாரு. நான் மாட்டு வண்டி வேகத்தில போறேனாம். இவரு ஜெட் வேகத்தில பறக்கறவராம்.  அவரோட ஜெட்ல ஏறணும்னா நான் மாட்டு வண்டியைத் தூக்கிப் போட்டுட்டு ஜெட் வேகத்தில பறக்கணுமாம்! இதுக்கு என்ன அர்த்தம்னே எனக்குப் புரியல" என்று பொரிந்து தள்ளினார் கங்காராம்.

"அவரு சொன்னா சொல்லிட்டுப் போறாரு! நீ மாடுகளுக்கு புண்ணாக்கு, தண்ணி எல்லாம் கொடுத்து நல்லா பாத்துக்க. இல்லேன்னா, உன் வண்டி ஓடாது!"

"நான் ஏற்கெனவே கொதிச்சுப் போயிருக்கேன். நீ வேற என்னைக் கிண்டல் பண்றியா? ஆனா மத்த ரீஜனல் மானேஜர்லாம்  இவரை ரொம்பப் புகழ்ந்து பேசினாங்களே, அது எப்படி?"

"எல்லாம் வால் அறுந்த நரி கதைதான். நீ மட்டும் என்ன செய்யப் போற? உன் ஆஃபீசுக்குத் திரும்பிப் போனப்பறம், ஜி எம் ரொம்ப டைனமிக், என்னை நல்லா உற்சாகபடுத்தினாருன்னு சொல்லப் போற!" என்றார் மூர்த்தி.

"அது என்னவோ உண்மைதான்! இவரோட எப்படி குப்பை கொட்டப் போறேன்னு தெரியலியே!" என்றார் கங்காராம்.

"குப்பையெல்லாம் நீ கொட்ட வேண்டாம். அவரே கொட்டுவாரு, உன் மேல! உன் மேல படாம நீ ஒதுங்கிக்கணும். அவ்வளவுதான்!" என்ற மூர்த்தி சற்றுக் குனிந்து, "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த ஆளு இது மட்டும் அஞ்சாறு கம்பெனி மாறிட்டாரு. இவரால எங்கேயுமே நிலைச்சு நிக்க முடியல!" என்றார் ரகசியமாக.

"ஆமாம். நீ எப்படி சமாளிக்கற?" என்று கங்காராம் கேட்டுக் கொண்டிருந்தபோதே மூர்த்தியின் இன்டர்காம் ஒலித்தது. 

"போய் சமாளிச்சுட்டு வரேன்" என்றபடியே உள்ளே சென்றார் மூர்த்தி.

சில மாதங்கள் கழித்து ஒருநாள் கங்காராம் தன் அலுவலகத்தில் இருந்தபோது அவருக்கு மூர்த்தியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

"என்ன? ஜி எம் என்னை வரச் சொல்றாரா?" என்றார் கங்காராம்,பாதி வேடிக்கையாகவும், பாதி கவலையாகவும்.

"இனிமே அவர் உன்னை வரச் சொல்ல மாட்டாரு. அவரே போகப் போறாரு!"

"என்ன ஆச்சு?"

"இவரு வந்தப்பறம் கம்பெனி செயல்பாடு மோசமா ஆயிடுச்சு. ரீஜனல் மானேஜர்கள் எல்லாம் டீமோடிவேட் ஆயிட்டாங்க. அதனால விற்பனையும் குறைஞ்சுடுச்சு, லாபமும் குறைஞ்சுடுச்சு. இவரோட அவமரியாதையான பேச்சையெல்லாம் பத்தி சில ரீஜனல் மானேஜர்கள் டைரக்டர்கள் கிட்ட முறையிட்டிருக்காங்க. எங்கிட்ட கூட சில டைரக்டர்கள் விசாரிச்சாங்க. நேத்திக்கு நடந்த போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் மீட்டிங்கில அவரைப் பதவியை விட்டு நீக்க முடிவு பண்ணிட்டாங்க. ரீஜனல் மானேஜர்கள்ள சீனியரா இருக்கற சங்கரை தற்காலிக ஜி எம்மா நியமிச்சிருகாங்க. அவர் செயல்பாடு நல்லா இருந்தா அவரே தொடர்ந்து நீடிப்பாரு. இப்பதான் எனக்கு ஃபேக்ஸ் வந்தது. சங்கர் பதவி ஏத்துக்கிட்ட அப்புறம்தான் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். உனக்குத்தான் முதல்ல சொல்றேன். வாழ்த்துக்கள்!" என்றார் மூர்த்தி.

"எனக்கு எதுக்கு வாழ்த்துகள்? அவர் பிடியிலேந்து விடுபட்டதுக்கா? அப்ப உனக்குத்தான் முதல்ல  வாழ்த்து சொல்லணும். ஆனா நம்ம கம்பெனிக்கே நல்லது நடந்திருக்கே! நாம ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம கம்பெனிக்கு வாழ்த்து சொல்லுவோம்!" என்றார் கங்காரம். 

குறள் 564:
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.

பொருள்: 
நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

565. அண்ணனிடம் கேட்ட உதவி

"ஏங்க, உங்க அண்ணன்கிட்ட நீங்க இதுவரையிலும் எந்த உதவியும் கேட்டதில்லை. இந்த ஒரு தடவை கேட்டுப் பாருங்களேன். நம்ம பையனோட படிப்புக்காகத்தானே கேக்கப் போறோம்?" என்றாள் சரளா.

"ஒரே வீட்டில என்னோட சிரிச்சுப் பேசி, விளையாடி சண்டை போட்டு நெருக்கமா இருந்த அண்ணன்தானா இவன்னு எனக்கே சந்தேகமா இருக்கு. அந்த அளவுக்கு மாறிட்டான். அவன் வீட்டுக்குப் போறதுக்கே எனக்குத் தயக்கமா இருக்கு!" என்றான் குமரன்.

"சின்ன வயசில இருந்த மாதிரியே எப்பவுமே இருப்பாங்களா? என்ன இருந்தாலும் தம்பிங்கற பாசம் அவருக்கு இல்லாம இருக்காது. நீங்க போய் கேட்டுத்தான் பாருங்களேன்" என்றாள் சரளா.

"பாசமா, அவனுக்கா? அதெல்லாம் பணம் வரத்துக்கு முன்னாடி. கையில நாலு காசு வந்ததும் பணத்தைப் பாதுகாக்கிற பூதம் மாதிரி ஆயிட்டான் அவன்! அம்மான்னு நான் ஒருத்தி இருக்கறதையே அவன் மறந்துட்டான். அம்மா தம்பி வீட்டில இருக்காளே, நம்ம வீட்டில கொஞ்ச நாள் வந்து இருக்கச் சொல்லணுங்கற எண்ணம் கூட அவனுக்கு இல்ல. நானா அங்கே போன கூட ஏதோ வேண்டாத விருந்தாளி வந்துட்ட மாதிரி முகத்தை கடுகடுன்னு வச்சுப்பான். எங்கிட்ட ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டான். அவன் பொண்டாட்டிதான் என்னை மதிச்சு சோறாவது போடுவா! அதனாலதான் நான் அங்கே போறதையே நிறுத்திட்டேன். அவன் உனக்கு உதவி செய்யப் போறானா என்ன?" என்றாள் குமரனின் தாய் காந்திமதி, ஆற்றாமையுடன்.

"எதுக்கும் நான் ஒரு தடவை அவனைப் பார்த்து உதவி கேட்டுட்டு வரேன். சின்ன வயசில என்கிட்ட எவ்வளவோ பாசமா இருந்தவன்தானே! அதில கொஞ்சம் கூடவா மீதி இல்லாம போயிடும்?" என்றான் குமரன்

"ரமேஷுக்கு எஞ்சினீரிங் காலேஜ்ல அட்மிஷன் கிடைச்சிருக்கு. ஆரம்பத்தில நிறைய பணம் கட்ட வேண்டி இருக்கு. அதுக்கு மட்டும்  பணம் தேவைப்படுது. அடுத்த செமிஸ்டர் எல்லாம் நானே பாத்துப்பேன். ஆஃபீஸ்ல பி எஃப் லோன் போட்டிருக்கேன். அடுத்த மாசம் வந்துடும். வந்ததும் உன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துடறேன்!" என்றான் குமரன்.

"குமரா! பிசினஸ்காரங்கன்னா கட்டு கட்டா கையில பணம் வச்சுக்கிட்டிருக்கறதா எல்லாரும் நினைக்கிறாங்க. அது தப்பு. நானே பாங்க்ல கடன் வாங்கித்தான் பிசினஸை நடத்திக்கிட்டிருக்கேன். உன் அண்ணி வீட்டுச் செலவுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கேட்டா கூட சில சமயம் எங்கிட்ட இருக்காது. சில சமயம் பிசினஸ்ல நான் பணம் கொடுக்க வேண்டியவங்களுக்கு செக் கொடுத்துட்டு அந்த செக் பாங்க்குக்கு வரப்ப என் மானேஜர் பாங்க்குக்குப் போய் அந்த செக்கை பாஸ் பண்ணச் சொல்லி பாங்க் மானேஜர்கிட்ட கெஞ்ச வேண்டி இருக்கும், நீ பையனை எஞ்சினியரிங் காலேஜில சேர்த்துட்டு ஃபீஸ் கட்ட பணம் தேடிக்கிட்டிருக்கியே அந்த மாதிரி!" என்றான் குமரனின் அண்ணன் ஆதி.

குமரனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அப்போது ஒரு வேலையாள் தயக்கத்துடன் அங்கே வந்து, "ஐயா! அந்த அனாதை இல்லத்திலேந்து மறுபடியும் வந்திருக்காங்க!" என்றான்.

"போன தடவை வந்தப்பவே முடியாதுன்னு சொல்லி அனுப்பி இருக்கணும்! அடுத்த மாசம் வாங்கன்னு ஒரு பேச்சுக்குச் சொன்னதைப் பிடிச்சுக்கிட்டு கரெக்டா வந்துட்டாங்க! நான் வெளியூருக்குக் கிளம்பிக்கிட்டிருக்கேன், இப்ப பாக்க முடியாதுன்னு சொல்லிடு" என்று வேலைக்காரனிடம் கூறிய ஆதி, குமரனிடம் திரும்பி  "அப்புறம், குமரா! வீட்டில எல்லாரும் சௌக்கியம்தானே! அம்மாவை நல்லாப் பாத்துக்க. நான் கொஞ்சம் வெளியல போகணும். அப்புறம் பாக்கலாம்" என்று சொல்லி விட்டு எழுந்தான்.

'புதையலைக் காக்கிற பூதம் மாதிரி என்று தன் அம்மா சொன்னது எவ்வளவு பொருத்தம்!' என்று நினைத்துக் கொண்டே எழுந்தான் குமரன்.

குறள் 565:
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.

பொருள்: 
எளிதில் காணமுடியாத தன்மையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்ணில் பட்ட செல்வத்தைப் போன்றது.

566. தடுப்புச் சுவர்

"சார்! கிராமத்துக்காரங்க உங்களைப் பாக்க வந்திருக்காங்க!" என்றார் தொழிலதிபர் செல்லையாவின் உதவியளர் ஜீவா.

"என்னை எதுக்கு அவங்க பாக்கணும்? அதான் ஜி எம்மைப் பாத்துப் பேசிட்டாங்களே!" என்றார் செல்லையா கடுகடுப்புடன்.

"அவர்கிட்ட பேசினதில அவங்களுக்குத் திருப்தி இல்லையாம். உங்களைப் பாக்காம போக மாட்டோம்னு தொழிற்சாலை கேட் வாசல்ல உக்காந்துக்கிட்டுப் போராட்டம் பண்றாங்க.

"பிச்சைக்காரப் பசங்க! தலைவர் சொன்ன மாதிரி நாட்டில போராட்டம் பண்ணியே பிழைப்பு நடத்தறவங்களோட எண்ணிக்கை அதிகம் ஆகிக்கிட்டே இருக்கு. சரி. அவங்க தலைவனை வரச்சொல்லு. எங்கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டாத்தான் அவனுக்கு சோறு இறங்கும்னா அப்படியே நடக்கட்டும்!"  என்றார் செல்லையா.

ந்து கிராமவாசிகள் செல்லையாவின் அறைக்குள் நுழைய அவர்களுடன் கலவரமடைந்த முகத்துடன் ஜீவாவும் உள்ளே நுழைந்தார். உள்ளே வந்த ஐந்து பேரில் ஒரு பெண்ணும் இருந்தாள்.

"ஒத்தரைத்தானே வரச் சொன்னேன்! எதுக்கு அஞ்சாறு பேர் உள்ள வரீங்க?" என்றார் செல்லையா சீற்றத்துடன்.

"ஒரு ஆளா வந்து பேச முடியாது ஐயா. கிராமம் முழுக்க பாதிக்கப்பட்டிருக்கு. எல்லோரும் உள்ளே வந்து உங்ககிட்ட பேசணும்னு துடிக்கிறாங்க. நாங்கதான் அவங்களைக் கட்டுப்படுத்திட்டு ஒரு அஞ்சு பேர் வந்திருக்கோம்" என்றார் உள்ளே வந்த ஐந்து பேரில் ஒருவர்.

"என்ன வேணும் உங்களுக்கு?" என்றார் செல்லையா கோபம் குறையாத தொனியில்.

"ஏற்கெனவே உங்க தொழிற்சாலைக்காக ஆத்திலேந்து தண்ணி எடுத்துக்கறதுக்காகக் கால்வாய் வெட்டி இருக்கீங்க. நாங்க அதை எதிர்த்தே போராடிக்கிட்டிருக்கோம். இப்ப என்னன்னா எங்க கிராமத்திலேந்து ஆத்துக்குப் போற பாதையை அடைச்சு ஒரு தடுப்புச் சுவர் எழுப்பி இருக்கீங்க.நாங்க எப்படி ஆத்துக்குப் போறது?"

"ஆத்துக்கு ஏன் போறீங்க? ஊருக்குள்ள குளம் இருக்குல்ல?"

"நாங்க குளிக்கிறது, குடிக்கிறது, பாசனத்துக்குத் தண்ணி எடுக்கறது எல்லாமே இந்த ஆத்துத் தண்ணியைத்தான். இப்ப ஆத்துக்குப் போக நாங்க அஞ்சு மைல் நடக்கணும். எங்க ஊருல வந்து நாங்க ஆத்துக்குப் போற பாதையை அடைக்கிற மாதிரி சுவர் கட்டி இருக்கீங்களே இது அக்கிரமம் இல்லையா?"

"இந்த ஆத்துத் தண்ணியை நம்பிதான் இங்கே தொழிற்சாலை அமைச்சிருக்கோம். எங்களுக்கு அரசாங்கத்தோட ஆதரவு இருக்கு. தொழிற்சாலை ஆரம்பிச்சப்பறம் கழிவுத் தண்ணியை ஆத்திலதான் விடுவோம். அதனால உங்களால ஆத்துத் தண்ணியை எப்படியும் பயன்படுத்த முடியாது. ஊருக்குள்ள குளம் இருக்கு. அந்தத் தண்ணி பத்தாதுன்னா, கிணறுகள் வெட்டிக்கங்க. மறுபடி இங்கே வராதீங்க. ஊரில ஏதாவது திருவிழா மாதிரி விசேஷம்னா தொழிற்சாலை மானேஜர் கிட்ட கேட்டீங்கன்னா ஆயிரம் ரெண்டாயிரம் கொடுப்பாரு. இன்னொரு தடவை என்னைப் பாக்க வந்து என் நேரத்தை வீணாக்காதீங்க!" என்றார் செல்லையா கடுமையாக.

"கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாம பேசறீங்க. உங்க்கிட்ட பணம் இருக்குங்கற திமிர்தானே! அதெல்லாம் அழிஞ்சு போயிடும். நாங்க பாக்கத்தானே போறோம்!" என்றாள் ஐந்து பேரில் ஒருவரான அந்தப் பெண் அடக்க முடியாத கோபத்துடன்.

"ஜீவா! எங்க போயிட்ட? செக்யூரிட்டியைக் கூப்பிட்டு இவங்களை வெளியில தள்ளச் சொல்லு!" என்று கத்தினார் செல்லையா.

டுப்புச் சுவர் இடிக்கப்பட வேண்டுமென்று கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வழக்குப் போட்டனர். கீழ்நீதி மன்றமும் உயர்நீதி மன்றமும்  தொழிற்சாலைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தன.  

அரசாங்கமும் தொழிற்சாலைக்கு ஆதரவாக இருந்தது. "இப்படி எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் நாட்டில் எந்த வளர்ச்சியும் ஏற்படாது" என்று ஒரு அமைச்சர் கூறினார்.

ரண்டு வருடங்களுக்குப் பிறகு வந்த தேர்தலில் வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், கிராம மக்களுக்கு இடையூறாகக் கட்டப்பட்ட சுற்றுச் சுவர் இடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றம் அந்த உத்தரவுக்குத் தடை பிறப்பிக்க மறுத்து விட்டதால் சுவர் இடிக்கப்பட்டது.

செல்லையா தன் வேறு தொழில்களுக்காக வாங்கிய கடன் தொகை கட்டப்படாததால் சில வங்கிகள் அவருடைய சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கையைத் தொடங்கின. 

செல்லையா வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்வார் என்ற சந்தேகத்தால் அரசாங்கம் விரைவாகச் செயல்பட்டு செல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கியது.

சீட்டுக்கட்டு அடுக்கிலிருந்து ஒரு சீட்டு விழுந்தால் அதைத் தொடர்ந்து எல்லா சீட்டுக்களும் சரிவது போல் செல்லையாவின் எல்லா நிறுவனங்களும் சரியத் தொடங்கின. அவருடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 

செல்லையா விரைவிலேயே கைது செய்யப்படுவார் என்றும் பல மாதங்களுக்கு அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன.

குறள் 566:
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.

பொருள்: 
கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் (முக தாட்சண்யம்) இல்லாதவனாய் உள்ளவனுடைய பெருஞ்செல்வம் நிலைத்து நிற்காமல் விரைவிலேயே கெடும்.

567. கூர் மழுங்கிய ஆயுதம்

"சந்திரபிரகாஷ் நம்ம கட்சியில ஒரு மூத்த உறுப்பினர். எந்தப் பதவியையும் எதிர்பாக்காம பல வருஷங்களா நம்ம கட்சிக்காக உழைக்கறவரு. உன் அப்பாவுக்கு வலது கையா இருந்தவரு. அவரோட ஆலோசனைகளுக்கு உன் அப்பா ரொம்ப மதிப்பு கொடுப்பாரு. தன்னோட அரசியல் வெற்றிகள் எல்லாத்திலேயும் சந்திரபிரகாஷுக்கு ஒரு முக்கியமான பங்கு உண்டுன்னு உன் அப்பா வெளிப்படையா பல தடவை சொல்லி இருக்காரு. அப்படிப்பட்ட ஒத்தரை கடுமையா கண்டிச்சு நீ அறிக்கை விட்டது ரொம்ப தப்பு!" என்றார் ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் சர்மா.

வயது, அனுபவம் காரணமாக சர்மாவுக்கு அந்தக் கட்சியில் ஒரு தனி மரியாதை உண்டு. கட்சியின் பொதுச் செயலாளரும், கட்சியில் எல்லா அதிகாரமும் படைத்தவருமான ராகவ் உட்பட அனைவரையும் சர்மா ஒருமையில்தான் பேசுவார், உரிமையுடன் கண்டிப்பார்.

"அவரு நான் கட்சியை சரியா வழிநடத்தலேன்னு தொலைக்காட்சியில வெளிப்படையா பேட்டி கொடுக்கறாரு. நான் அவரை கண்டிக்கக் கூடாதா?" என்றார் கட்சியின் பொதுச் செயலாளர் ராகவ். அவர் தந்தை இறந்த பிறகு அவர் வகித்த பொதுச் செயலாளர் பதவிக்குக் கட்சியால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகவ் 

."அவரு அப்படிச் சொல்லல. சமீபத்தில நடந்த இடைத்தேர்தல்கள்ள கட்சி தோத்ததுக்கு தலைமைதான் காரணமான்னு பேட்டி எடுத்தவர் கேட்டதுக்கு, 'தோல்விக்குப் பல காரணங்கள் இருக்கு' ன்னு பொதுவா சொல்லி மழுப்பிட்டாரு.  உனக்கு சாதகமான பதில்தான் அது!"

"ஆளும் கட்சியோட அதிகார துஷ்பிரயோகத்தாலதான் அவங்க இடைத்தேர்தல்கள்ள வெற்றி அடைஞ்சாங்கன்னு நான் சொல்லிக்கிட்டிருக்கச்சே, அவரும் அதையேதானே சொல்லி இருக்கணும்? குறைஞ்சது தலைமை காரணம் இல்லைன்னு எனக்கு ஆதரவாப் பேசி இருக்கணும் இல்ல? பல காரணங்கள் இருக்குன்னு சொன்னா என்ன அர்த்தம்?" என்றார் ராகவ் கோபமாக.

"ராகவ்! அடுத்த தேர்தல்ல நாம ஜெயிக்கணும். அதுக்கு நீ கட்சியை வலுப்படுத்தணும். சந்திரபிரகாஷ் தேர்தல் உத்திகளை வகுக்கறதில பெரிய சாணக்கியர். உன் அப்பா பொதுச் செயலாளரா இருந்தப்ப சந்திரபிரகாஷ்தான் அவருக்கு அடுத்த இடத்தில இருந்தாரு. ஆனாலும் உன் அப்பாவுக்குப் பிறகு நீதான் கட்சியைத் தலைமை தாங்கி நடத்தணும்னு உன்னை உறுதியா ஆதரிச்சவர் அவர். அவரோட உதவி உனக்கு கண்டிப்பா வேணும். நீ அவரை அவமதிக்கிற மாதிரி அறிக்கை விட்டா அவரு ஒதுங்கிப் போயிடுவாரு. அது கட்சிக்குத்தான் நஷ்டம்."

"அவர்கிட்ட நான் மன்னிப்புக் கேக்கணும்னு சொல்றீங்களா?"

"மன்னிப்பு கேட்க வேண்டாம். அவர் ரொம்ப பெருந்தன்மை உள்ளவர். அதையெல்லாம் எதிர்பார்க்க மாட்டாரு. இனிமே நீ அவரை மதிச்சு நடந்துகிட்டா போதும். நீ வருத்தப்பட்டதா நான் அவர்கிட்ட சொல்றேன்" என்றார் சர்மா.

"அதெல்லாம் வேண்டாம். இனிமே இது மாதிரி நடக்காது!" என்றார் ராகவ்.

ஆயினும் பல மூத்த தலைவர்கள் ராகவ் மற்றும் அவருக்கு நெருக்கமாக இருப்பவர்களால் அவமானப்படுத்தப்படுவதும், கடுமையாக விமரிசிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்தது.

டுத்த தேர்தலில் ராகவின் ஜனநாயக மக்கள் கட்சிதான் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஒரு தேர்தல் வியூக நிபுணர் ராகவின் கட்சிக்கு உத்திகளை வகுத்துக் கொடுத்தார். கடந்த காலத்தில் அந்த நிபுணரின் ஆலோசனை பெற்ற கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றிருந்ததால் அவருடைய ஆலோசனை ஜனநாயக மக்கள் கட்சியின் வெற்றிக்குப் பெரிதும் உதவும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத விதத்தில் அமைந்தன. ஜனநாயக மக்கள் கட்சி தோல்வியைத் தழுவியது. தோல்வியின் விளிம்பில் இருந்த ஆளும் கட்சி எப்படியோ கரையேறி மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட்டது.

"தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் சொல்றாரு உன் ஆலோசகர்?" என்றார் சர்மா.

"அவர் என்னோட ஆலோசகர் இல்ல, கட்சியோட ஆலோசகர். கட்சியோட செயற்குழு அனுமதி கொடுத்துத்தான் அவரை நியமிச்சோம். ரெண்டு சதவீதத்தில நாம வெற்றியை இழந்துட்டோம்! இது ஒரு பெரிய இழப்பு இல்லை" என்றார் ராகவ்.

"குதிரைப் பந்தயத்தில ஜெயிக்க, குதிரை மூக்கை மட்டும் நீட்டி இருந்தாக் கூடப் போதும்! தேர்தலும் அப்படித்தான். ஆனா இந்த ரெண்டு சதவீதத்தை நாம இழந்ததுக்கு ரெண்டு காரணம் இருக்கு."

"என்ன ரெண்டு காரணம்?"

"கட்சிக்கு உண்மையா உழைச்சவங்களை அற்பக் காரணங்களுக்காகக் குத்தம் சுமத்தி கட்சியை விட்டு வெளியேத்தினது, சந்திரபிரகாஷ் மாதிரி மூத்த தலைவர்களைக் கடுமையாப் பேசி அவங்களை ஒதுங்கிப் போக வச்சது. இதெல்லாம் நம் ஆயுதங்களைக் கூர் மழுங்க வச்சுடுச்சு கூர் மழுங்கின ஆயுதங்களோட ஒரு அரசன் போர்ல  இறங்கினா, பலம் இல்லாத எதிரி கூட அவனைத் தோக்க அடிச்சுடுவானே!" என்றார் சர்மா.  

குறள் 567:
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.

பொருள்: 
கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.

568. தயாளனின் கோபம்!

தன் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் மூவரையும் தன் அறைக்கு அழைத்தார் நிர்வாக இயக்குனர் தயாளன். .

"ரெண்டு வருஷமா நம்ம லாபம் குறைஞ்சுக்கிட்டே வருது. இதைப் பத்தி சண்முகசுந்தரம் நேத்திக்குத்தான் எங்கிட்ட சொன்னாரு. ரெண்டு வருஷமா என்ன பண்ணிக்கிட்டிருந்தார்னு தெரியல..." என்று தயாளன் ஆரம்பித்தபோது, "சார்! நான் ஏற்கெனவே உங்ககிட்ட..." என்று ஆரம்பித்த அக்கவுண்ட்ஸ் மானேஜர் சண்முகசுந்தரத்தை இடைமறித்தார் தயாளன்.

"குறுக்கே பேசாதீங்க. ஏற்கெனவே எங்கிட்ட சொல்லி இருக்கிறதா சொல்லி நீங்க பொறுப்பிலேந்து தப்பிக்க முடியாது. செல்வம்! நீங்கதான் சேல்ஸ் மானேஜர். இதுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?"

"சார்! லாபம் வராத ஆர்டர்களை எடுக்க வேண்டாம்னு நான் சொன்னேன். ஆனா நீங்க உங்க நண்பரோட நிறுவனத்துக்குக் குறைஞ்ச விலைக்கு சப்ளை பண்ணச் சொன்னீங்க. அவங்ககிட்டேந்து பணம் கூட முழுசா வரலை!" என்றார் சேல்ஸ் மானேஜர் செல்வம் சற்றுத் தயக்கத்துடன்.

"செல்வம்! இது என்னோட கம்பெனி. நான் யாருக்கு வேணும்னா கொடுப்பேன், என்ன விலைக்கு வேணும்னா கொடுப்பேன், அதைக் கேக்க நீங்க யாரு?" என்றார் தயாளன் கோபத்துடன்.

"அதில்ல சார்! லாபம் குறைஞ்சுடுச்சுன்னு நீங்க கேட்டதால சொன்னேன்" என்றார் செல்வம் மன்னிப்புக் கேட்கும் குரலில்.

"உங்க எல்லோருக்கும் சொல்றேன். இது என் கம்பெனி. நான் எனக்குத் தோணினதைச் செய்வேன். உங்ககிட்ட கலந்தாலோசிக்கணுங்கற அவசியம் எனக்கு இல்ல. ஆனா உங்களை நிச்சயமா கேள்வி கேட்பேன். நீங்க பொறுப்பிலேந்து தப்பிக்க முடியாது. இப்ப எல்லாரும் எழுந்து வெளியில போங்க!" என்றார் தயாளன் கோபம் குறையாமல்.

மூவரும் தயாளன் அறையிலிருந்து வெளியில் வந்ததும், மற்ற இருவரையும் ஒரு ஓரமாக அழைத்துச் சென்ற சண்முகசுந்தரம், "ஒரு விஷயம் சொல்றேன்.ரெண்டு வருஷமா லாபம் குறைஞ்சுக்கிட்டே வந்தது. இந்த வருஷம் நிச்சயமா நஷ்டம்தான் வரும். வரவு செலவுகளைப் பாக்கறப்ப எனக்கு அப்படித்தான் தெரியுது. அவரு நம்மகிட்ட எதையும் கேக்க மாட்டாரு, நாம ஏதாவது சொன்னாலும், கோபமாக் கத்துவாரே தவிர, நாம சொல்ற விஷயத்தைக் கேட்டுக்க மாட்டாரு. அவரா ஏதாவது செய்வாரு, ஆனா நாமதான் பொறுப்புன்னு சொல்லுவாரு! இப்படியே போனா கம்பெனியால தாக்குப் பிடிக்க முடியாது. அடுத்த வருஷம் கம்பெனி இருக்குமாங்கறதே சந்தேகம்தான். நாம வேற வேலை பாத்துக்கிட்டுப் போறதுதான் நல்லது" என்றார் ரகசியமாக.

குறள் 568:
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு..

பொருள்: 
அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து பேசி சிந்தித்துச் செயல்படாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.
569. கூட்டணிக் கணக்குகள்!

"ம.ந.க. கட்சித் தலைவர் உங்களை சந்திக்கணும்னு தூது அனுப்பிக்கிட்டே இருக்காரு" என்றார் விகாஸ்.

"இத்தனை வருஷமா நம்ம எதிரிகளோட சேந்துக்கிட்டு நமக்கு எதிரா எல்லா வேலையும் பண்ணிக்கிட்டிருந்தவரு இன்னிக்கு அவங்களோட உறவு முறிஞ்சதும் இப்ப நம்மகிட்ட வராரா? நான் அவரை சந்திக்கப் போறதில்ல!" என்றார் கட்சித் தலைவரும் அந்த நாட்டின் அதிபருமான சுரேந்தர்.

"அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே?" என்றார் விகாஸ்.

"தேர்தலுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கே! இப்ப அவரால நமக்கு எந்தப் பயனும் இல்ல. இப்போதைக்கு அவருக்கு எந்த பதிலும் சொல்லாம நாம புறக்கணிப்போம். கொஞ்ச நாளைக்கு அவரைத் தவிக்க விடுவோம்!"

"தலைவரே! எதிர்க்கட்சித் தலைவர் பல கட்சிகளைச் சேத்துக்கிட்டு ஒரு பலமான கூட்டணியை அமைக்க முயற்சி செஞ்சுக்கிட்டிருக்காரு. நாமும் நம்மை பலப்படுத்திக்க வேண்டாமா?"

"நாம ஆட்சியில இருக்கோம். பலமா இருக்கோம். அவங்க பலவீனமா இருக்காங்க. அஞ்சாறு கட்சிகளோட கூட்டணி வச்சுக்கிட்டா சில இடங்களிலாவது ஜெயிக்க முடியுமான்னு பாக்கறாங்க! பலம் இல்லாதவங்க செய்யறதை நாம எதுக்கு செய்யணும்?" என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சுரேந்தர்.

"தேர்தலுக்கு ரெண்டு மாசம்தான் இருக்கு. நிலைமை எப்படி இருக்கு?" என்றார் சுரேந்தர்.

"கருத்துக் கணிப்புகள் எல்லாம் கடுமையான போட்டி இருக்கும்னு சொல்லுது. உண்மையில நம் உளவுத்துறையோட அறிக்கைப்படி நமக்கு வெற்றி வாய்ப்பே இல்லை. ஊடகங்கள் நமக்கு பயந்துகிட்டு நாம தோத்துடுவோம்னு சொல்லாம கடுமையான போட்டின்னு கருத்துக் கணிப்பை கொஞ்சம் மாத்தி வெளியிட்டுக்கிட்டிருக்காங்க!" என்றார் விகாஸ் கவலையுடன்.

"கடுமையான போட்டின்னாலும் நாம ஜெயிச்சுடலாம். அதிகாரம் நம்ம கையிலதானே இருக்கு? எதுக்கும் நம்ம கூட்டணியை வலுப்படுத்திக்கலாம். ம.ந.க. கட்சி ரொம்ப நாளா நமக்கு தூது விட்டுக்கிட்டிருக்காங்களே! அவங்களுக்கு என்னை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கொடுங்க. அவங்களை சேத்துக்கிட்டா தராசு நம்ம பக்கம் சாஞ்சுடும்!" 

"சார்! ம.ந.க. கட்சியை நாம ரொம்ப நாளா புறக்கணிச்சதால அவங்க விரக்தியில இருக்காங்க. நம்ம மேல கோபமாவும் இருக்காங்க. இதைப் பயன்படுத்திக்கிட்டு எதிர்க்கட்சித் தலைவர் அவங்களை சமாதானப்படுத்தி மறுபடியும் தங்களோட கூட்டணியில சேர்க்க முயற்சி செஞ்சுக்கிட்டிருக்காருன்னு தகவல் வருது. ரெண்டு மூணு சீட் அதிகமாக் கொடுத்தா ம ந க அவங்களோட போயிடும்!"

"அப்படியா?" என்றார் சுரேந்தர் சற்றுக் கவலையுடன்.

"அதோட, ரொம்ப நாளா நம்மோட இருக்கற ம.வி.மு. கட்சி கூட எதிர் அணிக்குப் போக முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கு. கொஞ்ச நாளா அவங்க தலைவர் என் ஃபோனையே எடுக்கறதில்ல. அவரை நேரில பாக்கவும் முடியல!" என்றார் விகாஸ் சற்றுத் தயக்கத்துடன்.

"அப்படியா?" என்றார் சுரேந்தர் சற்றே அதிர்ச்சியுடன். "ம.வி.மு. நமக்கு ரொம்ப பயனுள்ள கூட்டணிக் கட்சியாச்சே! நம்மோட ரொம்ப நாளா இருக்காங்க. அவங்க நம்மை விட்டுப் போனா அது வாக்காளர் மத்தியில நாம பலவீனம் அடைஞ்சுக்கிட்டு வர மாதிரி பிம்பத்தை உருவாக்கும். அதை நாம தடுத்தாகணும்."

"சார்! ம.வி.ம. தலைவருக்கு நீங்க அவரை மதிக்கறதில்லன்னு ரொம்ப நாளா ஒரு குறை இருக்கு. அவரைக் கூப்பிட்டுப் பேசச் சொல்லி நான் கூட பல தடவை உங்ககிட்ட சொல்லி இருக்கேன். அவரும் உங்களைச் சந்திக்க சில முறை முயற்சி செஞ்சாரு. ஆனா அவரால உங்களைச் சந்திக்க முடியல. அதனால அவரும் வருத்தத்தில இருந்துக்கிட்டிருக்காரு. அதைப் பயன்படுத்திக்கிட்டு, அவரையும் எதிர்க்கட்சித் தலைவர் வளைச்சுப் போட்டுட்டார்னு நினைக்கிறேன்."

"அப்படின்னா நாம ஜெயிக்கறது ரொம்ப கஷ்டம்தான்" என்றார் சுரேந்தர் கவலையுடன், நிலைமையை அப்போதுதான் புரிந்து கொண்டவராக.

குறள் 569:
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.

பொருள்: 
முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

570. படிக்காதவர்கள்!

"இந்த அரசங்கம் வந்ததிலேந்து நிறைய விஷயங்களைத் தலைகீழா மாத்திக்கிட்டிருக்காங்க" என்றார் பொன்னையா.

"மாற்றங்கள் நல்லதுதானே! மாற்றங்கள்னாலே முன்னேற்றம்தானே?" என்றார் சின்னையா.

"அப்படியா? இப்ப நான் ஒரு வேலையில இருக்கேன். இதை விட்டுட்டு இதை விட கஷ்டமான, இன்னும் குறைவான சம்பளத்துக்கு வேற ஒரு வேலைக்குப் போனா, அது மாற்றம்தான். ஆனா அது முன்னேற்றமா?"

"நீ சொல்ற உதாரணம் இந்த அரசாங்கம் செய்யற மாற்றங்களுக்குப் பொருந்தாது. அவங்க எல்லா மாற்றங்களையும் ஆலோசகர்களோட யோசனைகளைக் கேட்டு அல்லது கமிட்டிகளைப் போட்டு அவற்றோட அறிக்கைகள் அடிப்படையிலதானே செய்யறாங்க?"

"ஆலோசகர்கள்கள் இருந்தா எல்லாம் சரியா இருக்கணுமா என்ன? ஹிட்லருக்குக் கூட ஆலோசகர்கள் இருந்திருப்பாங்க! ஒரு ஜனநாயக நாட்டில கொடுங்கோல் ஆட்சி செய்யறவங்க தாங்க ரொம்ப சரியா செயல்படறதாக் காட்டிக்கறதுக்காக இது மாதிரி ஆலோசகர்கள் கமிட்டிகள் இவங்களோட ஆலோசனையைக் கேட்டுச் செயல்படற மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்குவாங்க! நம் அரசாங்கம் போட்டிருக்கிற கமிட்டிகள்ள இருக்கறவங்க பெரும்பாலும் ஆளுங்கட்சிக்காரங்க, மீதிப்பேரு இந்த அரசாங்கத்தோட அத்துமீறல்களையெல்லாம் ஆதரிச்சுக் குரல் கொடுக்கறவங்க!"

"எப்படி இருந்தா என்ன? இந்த மாற்றங்களால நாட்டில முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு இல்ல?"

"முன்னேற்றம் ஏற்பட்டிருக்கா? இந்த மாற்றங்களால நிறையப் பின்னடைவுகள்தான் ஏற்பட்டிருக்குன்னு புள்ளி விவரங்கள் சொல்லுது. ஆனா அதையெல்லாம் முன்னேற்றம்னு இந்த அரசாங்கமும் அவங்க கட்டுப்படுத்தி வச்சிருக்கிற ஊடகங்களும் சொல்லிக்கிட்டிருக்காங்க!"

"இல்லையே! பிரச்னைகள் இருக்கு, ஆனா அதெல்லாம் காலப்போக்கில சரியாயிடும், மக்கள் கொஞ்ச காலம் காத்திருக்கணும்னு சில ஆலோசகர்கள் சொல்றாங்களே!"

"எவ்வளவு காலம்? நூறு வருஷமா? இதெல்லாம் ஏமாத்து வேலைன்னு உனக்குப் புரியல?"

"ஒரு அரசாங்கம் படிச்சவங்களையும், விஷயம் தெரிஞ்சவங்களையும், நிபுணர்களையும் வச்சு கமிட்டிகள் போட்டு அவர்களோட ஆலோசனைகள்படி சில மாற்றங்களைச் செய்யுது. இதில எங்க தப்பு இருக்கு?"

"முதல்ல நீ சொல்ற கமிட்டியில இருக்கிற பல பேர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள். படிப்புக்கும் இவர்களுக்கும் அதிக தொடர்பு இல்ல. அவங்கள்ள சில பேரு பட்டப் படிப்போ வேற படிப்போ படிச்சிருந்தாலும், இவங்க பேசறதை, செய்யறதை எல்லாம் பார்க்கும்போது இவங்களைப் படிச்சவங்களா ஏத்துக்க முடியாது. விஷயம் தெரிஞ்சவங்களா, நிபுணர்களா இருக்கிற சில பேரும் இந்த அரசாங்கம் செய்யற அட்டூழியங்களைக் கண்ணை மூடிக்கிட்டு ஆதரிக்கிறவங்களா இருக்காங்க. சாதாரண மக்கள் படற கஷ்டங்களைப் புரிஞ்சுக்க இவங்க மறுக்கறாங்க. அதாவது தங்கள் கல்வியையும் அறிவையும் பயன்படுத்தவே மறுக்கறாங்க. அதனால இவங்களையும் படிக்காதவங்களாத்தான் கருதணும்!"

"அதாவது இது ஏற்கெனவே ஒரு கொடுங்கோல் ஆட்சி. இவங்க படிக்காதவங்களைத் தங்களுக்குத் துணையா வச்சுக்கிட்டு செயல்படறது இன்னும் கொடுமை. இதானே நீ சொல்ல வரது?" என்றார் சின்னையா கேலியான குரலில்.

"ரொம்ப சரியா சொன்ன! திருவள்ளுவரால கூட இவ்வளவு சுருக்கமாவும், தெளிவாகவும் சொல்லி இருக்க முடியாது!" என்றார் பொன்னையா, பாதி உண்மையாகவும், பாதி கேலியாகவும்.

குறள் 570:
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.

பொருள்: 
கொடுங்கோல் அரசு கல்லாதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும். அதைப் போல பூமிக்கு பாரம் வேறு எதுவுமில்லை.
                                              அதிகாரம் 56 - கொடுங்கோன்மை                                                                 அறத்துப்பால்                                              காமத்துப்பால்   

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...