திருக்குறள்
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 96
குடிமை
951. அரசரின் தேர்வு
"அரசே! காவல்துறைத் தலைவராக நியமிக்க இரண்டு பேரை நான் தேர்வு செய்திருக்கிறேன். இருவரில் ஒருவரைத் தாங்கள் நியமிக்க வேண்டும்" என்றார் அமைச்சர்."இருவர் பற்றிய விவரங்களை என்னிடம் கொடுங்கள். நான் பார்த்து விட்டுச் சொல்கிறேன்" என்றார் அரசர்.
"அவர்களைத் தாங்கள் நேரில் பார்த்து விசாரிக்க வேண்டாமா?"
"தேவைப்பட்டால் பார்க்கிறேன்" என்றார் அரசர்.
ஒரு வாரம் கழித்து, அரசர் அமைச்சரை அழைத்து, "நீங்கள் தேர்ந்தெடுத்த இருவரில், சந்திரசூடனையே காவல்துறைத் தலைவராக நிமித்து விடுங்கள்" என்றார்.
"சரி, அரசே! ஆனால், தாங்கள் அவர்கள் இருவரையும் நேரில் பார்கவில்லையே?" என்றார் அமைச்சர்.
"அவசியமில்லை. நீங்கள் பார்த்து விசாரித்திருப்பீர்களே! நீங்கள் தேர்ந்தெடுத்த இருவருமே இந்தப் பதவிக்குத் தகுதி உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை!"
"தாங்கள் எந்த அடிப்படையில் இந்த இரண்டு பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று நான் அறிந்து கொள்ளலாமா?"
"நீங்கள் கொடுத்த விவரங்களை ஒற்றர்படைத் தலைவரிடம் கொடுத்து, இருவரின் குடும்பப் பின்னணி பற்றி விசாரிக்கச் சொன்னேன். சந்திரசூடன் நல்ல குடும்பத்தில் பிறந்தவர். மற்றொருவரின் தந்தை நேர்மையானவர் அல்ல என்று தெரிந்தது. அதனால்தான் சந்திரசூடனைத் தேர்ந்தெடுத்தேன்."
"மன்னிக்க வேண்டும், அரசே! நான் இருவரையும் தேர்வு செய்தது அவர்கள் கல்வி, அறிவு, அனுபவம், கடந்தகாலச் செயல்பாடு இவற்றை வைத்துத்தான். அவர்கள் எந்தக் குடியில் பிறந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டுமா?" என்றார் அமைச்சர்.
"நிச்சயமாக, அமைச்சரே! காவல்துறைத் தலைவராக இருப்பவர் நேர்மையானவராக, நடுநிலையுடன் செயல்படுபவராக இருக்க வேண்டும். இந்த குணம் பலரிடமும் இருக்கும். ஆனால், இன்னொரு முக்கியமான குணமும் அவருக்கு வேண்டும். அது தவறு செய்தால் அதற்காக வெட்கப்படுதல். இந்த குணம் இருப்பவர்கள்தான் தவறு செய்யாமல் இருப்பார்கள். ஒருவேளை தவறு செய்தாலும், அதற்காக வெட்கப்பட்டு, மீண்டும் அத்தகைய தவறைச் செய்யாமல் இருப்பார்கள். இந்த குணம் நல்ல குடியில் பிறந்தவர்களிடம் மட்டுமே இருக்கும் என்பது என் கருத்து. ஏன், நீங்களே அத்தகைய குடிப்பெருமை உள்ளவராக இருப்பதால்தான் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள்!" என்றார் அரசர், சிரித்துக் கொண்டே.
குறள் 951:
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
குறள் 952:
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
சண்முகநாதனைப் பார்க்க அவருடைய அலுவலகத்துக்கு வந்த அவருடைய நண்பர் வேலாயுதம், "என்ன சண்முகநாதா, உன் மாப்பிள்ளை மன்மதன் மாதிரி அழகா இருக்கணும்னு பாக்கறியா?" என்றார், கேலியாக.
"நான் பாக்கறது குணத்தைத்தான்!" என்றார் சண்முகநாதன்.
"ஒத்தரோட குணம் எப்படி இருக்கும்னு எப்படி மதிப்பீடு செய்யறது?" என்றார் வேலாயுதம்.
"அதுதான் கஷ்டமா இருக்கு. நல்ல குடும்பத்தில பொறந்தவனா இருக்கானான்னுதான் பாக்கறேன்" என்றார் சண்முகநாதன்.
அப்போது ஒரு இளைஞன் தயங்கிக் கொண்டே, சண்முகநாதனின் அறைக்குள் வந்தான்.
"வா, முரளி!" என்றார் சண்முகநாதன்.
அலுவலக விஷயமாக ஒரு சந்தேகத்தை சண்முகநாதனிடம் கேட்டுத் தெளிந்து கொண்டு விட்டு, அறையை விட்டு வெளியேறினான் முரளி.
"இந்தப் பையன் உன் கம்பெனியில வேலை செய்யறானா?" என்றார் வேலாயுதம்.
"ஆமாம். ஏன் இவனை உனக்குத் தெரியுமா?"
"ஒரு அனாதை இல்லத்தில நடந்த ஒரு நிகழ்ச்சியில இவனைப் பார்த்தேன். இவன் வாலன்ட்டியரா இருந்தான் போல இருக்கு. அந்த நிகழ்ச்சிக்கு வந்த முக்கியமானவங்களை வரவேற்கறது, பார்வையாளர்களுக்கு வழிகாட்டி சரியா உட்கார வைக்கறதுன்னு ரொம்ப சுறுசுறுப்பா இருந்தான். அங்கே நாலைஞ்சு வாலன்ட்டியர்கள் இருந்தாங்க. இவனை நான் கவனிச்சதுக்குக் காரணம் இவன் சிரிச்ச முகத்தோட, கோபப்படமா பொறுமையா இருந்தான். குழந்தைகள்கிட்டேயும் அப்பப்ப சிரிச்சுப் பேசி, அவங்களை உற்சாகப்படுத்திக்கிட்டிருந்தான். மற்ற வாலன்ட்டியர்கள் சில சமயம் கோபமா, சிடுமூஞ்சியா, எரிஞ்சு விழுந்தாங்க. இவன் வித்தியாசமா இருந்ததாலதான் இவனை கவனிச்சேன்!"
"ஓ, அப்படியா? ஏதோ ஒரு அனாதை இல்லத்துக்குத் தொடர்ந்து நன்கொடை கொடுத்துக்கிட்டிருக்கானு தெரியும். ஆனா, வாலன்ட்டியரா இருந்ததெல்லாம் தெரியாது" என்ற சண்முகநாதன், யோசனை செய்வது போல் தோற்றமளித்தார்.
"என்ன யோசனை?" என்றார் வேலாயுதம்.
"என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாத்துக்கிட்டிருக்கேன் இல்ல? கையில வெண்ணெயை வச்சுக்கிட்டு நெய்க்கு அலையற மாதிரின்னு சொல்லுவாங்க. எங்கிட்ட வேலை செய்யறாங்கறதால, இவனைப் பத்தி நான் யோசிக்கல. நான் எதிர்பாக்கற நல்ல குணங்கள் எல்லாம் இவன்கிட்ட இருக்கே!"
"பையனோட குடும்பப் பின்னணியையெல்லாம் பாப்பியே?"
"சிரிச்ச முகம், இனிமையாப் பேசறது, கொடை குணம், மத்தவங்களை இகழ்ந்து பேசாத குணம் இதெல்லாம் இருக்குன்னா, அவன் நல்ல குடும்பத்திலதான் பிறந்திருக்கணும். அவன்கிட்ட பேசிப் பாக்கறேன். அவனுக்கும் என் பெண்ணுக்கும் ஒத்தரை ஒத்தர் புடிச்சிருந்தா, கல்யாணத்தை முடிச்சுட வேண்டியதுதான்!" என்றார் சண்முகநாதன், உற்சாகத்துடன்.
குறள் 953:
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
"அட்ஜஸ்ட் பண்றதுன்னா?" என்றான் முருகேசன். சில நாட்கள் முன்புதான், அவன் அந்த அரசுத் துறையில் வேலைக்குச் சேர்ந்திருந்தான்.
"இங்கே பல ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பிப்பாங்க. விதிமுறைப்படிப் பார்த்தா, ஒரு குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்குத்தான் வேலை கொடுக்கும்படியா இருக்கும். ஆனா, மேலதிகாரிகள் வேற ஒரு ஒப்பந்ததாரருக்கு வேலை கொடுக்கணும்னு விரும்புவாங்க."
"அவங்க ஏன் அப்படி விரும்பணும்?"
"அப்பாவியா இருக்கியே!" என்று சிரித்த குமார், பணத்தை எண்ணுவது போல் விரல்களைக் கசக்கிக் காட்டி விட்டு, "விதிமுறைகளைப் பத்திக் கவலைப்படாம, மேலதிகாரிகளோட விருப்பப்படி நாம பேப்பர் தயார் பண்ணணும்!" என்றான்.
பிறகு முருகேசனிடம் குனிந்து, "எப்படியும் சராசரியா, ஒரு மாசத்தில நம்ம சம்பளத்தைப் போல ரெண்டு மடங்கு கூடுதல் வருமானம் நமக்குக் கிடைக்கும்!" என்றான்.
முருகேசன் மௌனமாக இருந்தான். அவன் தந்தை அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் அவனுக்கு நினைவு வந்தது.
"திருமாலடியார்னு ஒரு புலவர் இருந்தாரு. அவர் திருமால் மேல நிறையப் பாடல்கள் எழுதி இருக்காரு. அவரோட பாடல்களைக் கேட்டுட்டு, அந்த நாட்டு அரசர் அவரைத் தன்னோட அவைப் புலவரா நியமிக்கறதா சொன்னார். அவைப் புலவர்னா, அரசரைப் புகழ்ந்து பாடல்கள் எழுதணும். நிறைய பொற்காசுகள் கிடைக்கும். ஆனா, அவர் மாட்டேன்னுட்டாரு. 'திருமாலை மட்டும்தான் பாடறதுன்னு விரதம் எடுத்துக்கிட்டிருக்கேன், அதனால மனுஷங்களைப் பாட முடியாது'ன்னு சொல்லிட்டாரு. உண்மையில, அவர் பணத்துக்காக மன்னரைப் புகழ்ந்து பாட விரும்பல. அவரோட பரம்பரையில வந்தவங்க நாம். எந்த ஒரு செயலா இருந்தாலும், அது சரியானதுன்னா மட்டும்தான் அதைச் செய்யணும். ஒரு விஷயம் தப்புன்னு நமக்குத் தோணினா, நமக்கு அதனால எவ்வளவு பணம் கிடைச்சாலும் சரி, வேற நன்மைகள் கிடைசாலும் சரி, அதைச் செய்யக் கூடாது."
தன் பரம்பரைப் பெருமையை நிலைநாட்டும் விதத்தில், குமாரின் தந்தையும் ஒரு நேர்மையான மனிதராகத்தான் வாழ்ந்து வந்தார்.
"என்னப்பா, நான் அவ்வளவு தூரம் சொன்னேன்! அப்படியும் விதிப்படிதான் நடப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிறியாமே! நம்ம அதிகாரி எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாரு. உனக்கு புத்தி சொல்லச் சொன்னாரு. உனக்கு இதில எந்த பிரச்னையும் இல்லை. அதிகமா சம்பாதிக்க சுலபமான வழி இருந்தும், ஏன் அதைப் பயன்படுத்திக்க மாட்டேங்கற?" என்றான் குமார்.
'நாங்க அப்படித்தான்!' என்று சொல்ல நினைத்த குமார், "நான் அப்படித்தான்!" என்றான் சுருக்கமாக.
குறள் 954:
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
"ஒவ்வொரு மாசமும் நடக்கறதுதானே இது? சமாளிச்சுக்கலாம்!" என்றான் ஶ்ரீகாந்த், சிரித்துக் கொண்டே.
"நீ சிரிக்கற! எனக்கு வயித்தெரிச்சலா இருக்கு. எப்படிப்பட்ட பரம்பரை நம்மோடது! உங்க தாத்தா காலத்தில, வெளியூர்க்காரங்க, உள்ளூர்காரங்கன்னு தினமும் பத்து பேர் நம்ம வீட்டில வந்து சாப்பிட்டுட்டுப் போவாங்க. கல்யாணமாகி வந்த புதுசில நானே பாத்திருக்கேன். உங்க தாத்தா காலத்திலேயே சொத்தெல்லாம் கரைய ஆரம்பிச்சு, உங்க அப்பா காலத்திலே ஒண்ணுமில்லாம ஆயிடுச்சு. அப்படியும், உங்கப்பாகிட்ட யாராவது உதவி கேட்டா, சட்டைப் பையில இருக்கற காசை எடுத்துக் கொடுத்துடுவாரு. அப்ப, நாலணா எட்டணாவுக்கெல்லாம் கூட நிறைய மதிப்பு இருந்ததே! இப்ப, நீ சம்பாதிக்கற பணம் போதாம, மாசாமாசம் பற்றாக்குறை பட்ஜெட் போடற நிலைமைக்கு வந்துடுச்சு!" என்றாள் ஶ்ரீகாந்த்தின் தாய் கல்யாணி.
"பழசைப் பேசி என்னம்மா பிரயோசனம்?" என்றான் ஶ்ரீகாந்த்.
அப்போது அழைப்பு மணி அடிக்கவே, கதவைத் திறந்து பார்த்தான் ஶ்ரீகாந்த். அங்கே ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
கல்யாணியும், மீனாவும் உள்ளே சென்று விட்டனர்.
சற்று நேரம் கழித்து முன்னறைக்கு வந்த மீனா, "வந்தது யாருங்க?" என்றாள் ஶ்ரீகாந்த்திடம்.
"காலேஜில படிக்கற பையன். வசதி இல்லாதவன் போல இருக்கு. காலேஜ் ஃபீஸ் கட்டப் பணம் இல்லை, உதவி செய்யுங்கன்னு கேட்டான். அவனோட ஐ.டி, காலேஜிலேந்து வந்திருந்த ஃபீஸ் டிமாண்ட் நோட்டீஸ் எல்லாம் வச்சிருந்தான். ஜெனுவைன் கேஸ்தான்!" என்றான் ஶ்ரீகாந்த்.
"என்ன செஞ்சீங்க?" என்றாள் மீனா.
"ஐநூறு ரூபா கொடுத்தேன். நம்மால முடிஞ்சது அவ்வளவுதானே?"
"நாமே கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கோம். பட்ஜெட்ல ஆயிரம் ரூபாய் துண்டு விழுதுன்னு இப்பதான் பேசிக்கிட்டிருந்தோம். இது அவசியம்தானா?" என்றாள் மீனா, சற்றுக் கோபத்துடன்.
"ஆயிரத்தைந்நூறு ரூபாய் துண்டு விழுதுன்னு வச்சுக்க வேண்டியதுதான்!" என்றான் ஶ்ரீகாந்த், சிரித்துக் கொண்டே.
"உதவி செய்யணும்னு நினைச்சா, ஒரு நூறு ரூபாய் கொடுத்து அனுப்பி இருக்கலாமே?" என்றாள் மீனா, கோபம் குறையாமல்.
"அவன் கட்ட வேண்டிய ஃபீஸ்ல, நாம கொடுத்த ஐநூறு ரூபாயே ஒரு சின்னப் பகுதிதான். மீதிப் பணம் அவனுக்குக் கிடைக்கணுமேன்னு நான் கவலைப்பட்டுக்கிட்டிருக்கேன்!"
"என்னவோ போங்க!" என்றபடியே, உள்ளே போகத் திரும்பினாள் மீனா.
அப்போது, உள்ளிருந்து முன்னறைக்கு வந்த கல்யாணி, "அவனால கொடுக்காம இருக்க முடியாது. அவன் உடம்பில ஓடற ரத்தம் அப்படி!" என்றாள் பெருமையும், வருத்தமும் கலந்த குரலில்.
குறள் 955:
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
குறள் 956:
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
கருணாகரன் பதில் கூறவில்லை.
கடந்த சில நாட்களாகவே, அவனுக்குத் தெரிந்தவர்கள் பலரும் அவனை ஒரு மாதிரி பார்த்தனர், அல்லது, இது போன்ற கேள்விகளைக் கேட்டனர்.
அதற்குக் காரணம் சில நாட்கள் முன்பு நடந்த ஒரு சம்பவம்.
கருணாகரன் காரில் சென்று கொண்டிருந்தபோது, வழியில் காவல் துறையினர் அவன் காரை நிறுத்தி ஆவணங்களைச் சோதித்தனர். அப்போது அவனிடம் மது அருந்தி இருந்ததற்கான சோதனையைச் செய்தபோது, அவன் மது அருந்தி இருப்பதாகக் கண்டறிந்தனர்.
அப்போது, கருணாகரன் காவல்துறையினரிடம் வாதத்தில் ஈடுபட்டதுடன், ஒரு அதிகாரியை அடிக்கக் கையை ஓங்கி விட்டான்.
அதனால், மதுபோதையில் காரோட்டியது, காவலரைத் தாக்கியது ஆகிய குற்றங்களுக்காகக் காவலர்கள் கருணாகரனைக் கைது செய்து விட்டனர்.
அடுத்த நாள், கருணாகரனின் வக்கீல் வந்து, காவல் அதிகாரிகளிடம் பேசி அவர்களைச் சமாதானப்படுத்திய பிறகு, அவர்கள் அவன் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், அவனை எச்சரித்து வெளியே விட்டு விட்டனர்.
ஆயினும், கருணாகரன் ஒரு இரவு சிறையில் இருந்த செய்தி வெளியே பரவி விட்டது.
"ஊர்ல எத்தனையோ பேர் குடிச்சுட்டுக் கார் ஓட்டறாங்க. ஏதோ நான் ஒத்தன்தான் இப்படி செஞ்சுட்ட மாதிரி எல்லாரும் பேசறாங்களே!" என்றான் கருணாகரன், தன் நண்பன் அசோகனிடம்.
'உங்கப்பா மதுவிலக்குப் போராட்டம் நடத்தி சிறைக்குப் போனாரு. அவரோட பையனான நீ, மது அருந்திட்டுக் கார் ஓட்டினதுக்காக சிறைக்குப் போயிருக்கேங்கறது பெரிசா, தனியாத் தெரியும்தான்' என்று நினைத்துக் கொண்ட அசோகன், "இனிமே இது மாதிரி பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காம கவனமா நடந்துக்க!" என்றான்.
குறள் 957:
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
"கம்பெனி நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு. ஆனா, அங்கே சூழ்நிலை சரியில்லை" என்றார் கங்காதரன், சுருக்கமாக.
"நான் கேள்விப்பட்டேன். உறுதிப்படுத்திக்கத்தான் உங்களைக் கேட்டேன். சிவகுமார் ரொம்பக் கடுமையா நடந்துக்கறாரு, மனிதாபிமானம் இல்லாம இருக்காருன்னு சில பேர் சொல்லக் கேட்டிருக்கேன்"
கங்காதரன் மௌனமாக இருந்தார்.
"சரி. நான் பாக்கறேன். உங்ளை மாதிரி உயர் பதவியில இருக்கறவங்களுக்கு வேற வேலை கிடைச்சுடும். கீழ்நிலையில இருக்கறவங்களுக்குத்தான் கஷ்டம். வெளியில போகவும் முடியாது, அங்கே வேலை செய்யவும் முடியாது" என்றார் மார்க்கபந்து.
"நீங்க சொல்றது சரிதான், சார். கீழ்நிலை ஊழியர்கள் சில பேர் வேற வேலை தேடிக்காமயே, வெறுத்துப் போய், வேலையை விட்டுட்டுப் போயிட்டாங்க!" என்றார் கங்காதரன்.
கங்காதரன் சென்றதும், மார்க்கபந்துவின் உதவியாளன் முத்து, "சார் சிவகுமாரோட பையன் என் நண்பன்தான். தன் மனைவி, பிள்ளைகள்கிட்டக் கூட அவர் அன்போ, கருணையோ இல்லாம நடந்துக்கறாருன்னு அவன் எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டிருக்கான். 'என் மேலேயோ, என் அம்மா, தங்கை மேலேயோ கொஞ்சம் கூடப் பாசம் கிடையாது அவருக்கு. தனக்கு என்ன வேணுங்கறதைமட்டும்தான் பார்ப்பாரு. எங்களையெல்லாம் விரோதிகள் மாதிரிதான் நடத்தறாரு. அவர் கம்பெனியில வேலை செய்யறவங்க அவர்கிட்ட வேலை செய்யப் பிடிக்காம வேலையை விட்டுப் போயிடறாங்க. நாங்க எங்கே போறது?'ன்னு எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டிருக்கான் சார்!" என்றான்.
"அடப்பாவமே! அவ்வளவு மோசமான ஆளா அவரு?"
"ஆமாம், சார். இதில என்ன ஆச்சரியம்னா, சிவகுமாரோட பரம்பரை ஊருக்கே உதவின பரம்பரைன்னு இன்னிக்கும் சொல்றாங்க. எல்லார்கிட்டேயும் அன்பு காட்டி உதவி செஞ்சவங்க பரம்பரையில வந்த ஒருத்தர் எப்படி சார் இப்படி இருக்க முடியும்?"
"நீ சொல்றதைப் பார்த்தா. அவர் அந்தப் பரம்பரையில பிறந்தவரான்னே சந்தேகப்பட வேண்டி இருக்கு!" என்றார் மார்க்கபந்து.
குறள் 958:
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
"குடும்பப் பின்னணி பத்தி அவங்களோட ரெஸ்யூமேவிலேய இருக்குமே சார்?" என்றார் பொது மேலாளர் நந்தகோபால்.
"அது போதாது. அவரோட பெற்றோர்கள் யாரு, எப்படிப்பட்டவங்கன்னு விசாரிக்கணும். முடிஞ்சா, அவங்க பரம்பரை பத்தியும் விசாரிக்கணும்."
"அது எதுக்கு சார்? அதுவும் இந்தக் காலத்தில பரம்பரை பத்தி எல்லாம் விசாரிக்கறது சரியா இருக்குமா சார்?" என்றார் நந்தகோபால், தயக்கத்துடன்.
"ஒத்தரோட அப்பா, தாத்தா எப்படிப்பட்டவங்க, என்ன செஞ்சாங்க, அவங்களைப் பத்தி மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கறது கஷ்டம் இல்லையே? நம்மால முடியலேன்னா, ஏதாவது ஒரு ஏஜன்சி மூலமா இதைச் செய்யலாம்" என்றார் வேலாயுதம்.
அதற்குப் பிறகும் நந்தகோபாலிடம் தயக்கம் இருப்பதை கவனித்த வேலாயுதம், "உங்களை வேலைக்கு எடுக்கறதுக்கு முன்னால, உங்க குடும்பப் பின்னணி பத்தி விசாரிச்சிருக்கேன்!" என்றார், சிரித்தபடி.
"நாம இன்டர்வியூவுக்குக் கூப்பிடறவங்களோட குடும்பப் பின்னணியை விசாரிக்கணும்னு முன்னே எல்லாம் சொல்லுவீங்க. இப்ப ஏன் சார் அதை வேண்டாம்னு சொல்றீங்க?" என்றார் நந்தகோபால்.
"அது அவசியம் இல்லைங்கறதாலதான்!" என்றார் வேலாயுதம்.
"குடும்பப் பின்னணி முக்கியம்கற உங்க கருத்தை மாத்திக்கிட்டீங்களா, சார்?"
"மாத்திக்கலை. இன்டர்வியூவில ஒத்தர் பேசறதிலிருந்தே அவரோட குடும்பப் பின்னணியைத் தெரிஞ்சுக்கலாம்னு புரிஞ்சுக்கிட்டேன். அதனாலதான்!"
"எப்படி சார்?"
"ஒத்தரை இன்டர்வியூ பண்ணும்போது, அவர் எப்படிப் பேசறார்ங்கறதை கவனிப்பேன். சில பேர் ரொம்பப் பணிவா, கண்ணியமா, நேர்மையா, பொருத்தமாப் பேசுவாங்க. அவங்களோட குடும்பப் பின்னணி ரிப்போர்ட்டைப் பார்த்தா, அவங்க குடும்பப் பின்னணி சிறப்பானதா இருக்கும். பொருத்தமில்லாமலோ, போலியாவோ, பண்பாடு இல்லாமலோ பேசறவங்களோட குடும்பப் பின்னணி ரிப்போர்ட்டைப் பார்த்தா, அது அவ்வளவு நல்லா இருக்காது. ஒத்தர் பேசறதை வச்சே அவர் நல்ல குடியில் பிறந்தவரா இல்லையாங்கறதை சுலபமாக் கண்டறிய முடியும்போது, எதுக்கு குடும்பப் பின்னணியை விசாரிக்கணும்? அதுதான் தேவையில்லைன்னு சொன்னேன்!" என்றார் வேலாயுதம்.
குறள் 959:
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
"ஏன், தப்பா ஏதாவது பேசினேனா என்ன?" என்றான் ரமேஷ்.
"ஸ்டாஃப் மீட்டிங்ல நமக்கு ஏதாவது பிரச்னைகள் இருந்தாலோ, ஆலோசனைகள் இருந்தாலோ, அதையெல்லாம் சொல்லச் சொன்னாங்க. மத்தவங்க அப்படித்தான் செஞ்சாங்க. நீ மட்டும்தான் உன்னோட பெருமைகளைப் பத்திப் பேசின."
"எனக்கு சொல்றதுக்குப் பிரச்னைகள், ஆலோசனைகள் எதுவும் இல்லை. அதனால என்னோட சாதனைகளைப் பத்திப் பேசினேன். அட்மினிஸ்டிரேஷன் டிபார்ட்மென்ட்ல இருந்தப்ப நல்ல நடைமுறைகளைக் கொண்டு வந்தேன். இப்ப சேல்ஸ் எக்சிக்யூடிவா இருக்கறப்ப அதிகமா விற்பனை செய்யறேன். பல மாசங்கள் நான்தான் டாப்ல இருக்கேன். இதைச் சொல்லிக்கறதில என்ன தப்பு இருக்கு?" என்றான் ரமேஷ்.
"அதை மட்டுமா சொன்ன? ஆஃபீசுக்கு வெளியில நீ செய்யற காரியங்களைப் பத்தியும்தான் பேசின! ஒரு கிளப்புக்கு செகரட்டரியா இருக்கறது, விடுமுறை நாட்கள்ள சமூக சேவை செய்யறது, இது மாதிரி பல விஷயங்களைப் பத்திப் பேசினியே!"
"நான் சொன்னதெல்லாம் உண்மைதானே?"
"உண்மையா இருக்கலாம். ஆனா, உன்னோடபெருமைகளைப் பத்தி நீயே பேசிக்கிட்டா, மத்தவங்க எப்படி அதை ரசிப்பாங்க? கம்பெனி விஷத்திலேயே, நீ செஞ்சதை மத்தவங்கதான் சொல்லிப் பாராட்டணும். அதையெல்லாம் நீயே சொல்லிக்கிட்டதும் இல்லாம, உன் தனிப்பட்ட வாழ்க்கையில செஞ்ச விஷயங்ளைப் பத்தியும் பெருமையாப் பேசின. நீ பேசினதைக் கேட்டுட்டு சில பேர் என்ன சொன்னாங்க தெரியுமா"
"என்ன சொன்னாங்க?"
"என்ன, இவ்வளவு அல்பத்தனமா இருக்கான்? இவன் பேசறதைக் கேட்டா, கௌரவமான குடும்பத்தில பொறந்தவன் மாதிரி தெரியலியேன்னு பேசிக்கிட்டாங்க!" என்றான் பாலு, சற்றுத் தயக்கத்துடன்.
"யார் அப்படிப் பேசினது? என் குடும்பத்தைப் பத்தி அவங்களுக்கு என்ன தெரியும்?" என்றான் ரமேஷ், கோபத்துடன்.
"ரமேஷ்! நான் சொல்றதைப் புரிஞ்சுக்க. மத்தவங்க நம்மகிட்ட சிலவற்றை எதிர்பாக்கறாங்க. நமக்கு நல்லது நடக்கணும்னா, கொஞ்சம் பணிவா, அடக்கமா இருக்கணும். நம்மோட பெருமையைப் பத்திப் பேசக் கூச்சப்படணும். ஒத்தன் பணிவா, அடக்கமா இருந்தா, அவன் நல்ல குடும்பத்தில பொறந்திருக்கான், அதான் பண்போட இருக்கான்னு சொல்லுவாங்க. அப்படி இல்லேன்னா, நல்ல குடும்பத்தில பொறந்திருக்க மாட்டான்னுதான் பேசுவாங்க. இது உலகத்தோட இயல்பு. உன்னோட குறையை நான் எடுத்துச் சொல்றது உனக்குப் பிடிக்காதுன்னாலும், இதை நீ புரிஞ்சுக்கணும்னுதான், உங்கிட்ட இதைச் சொல்றேன்" என்றான் பாலு.
குறள் 960:
நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
No comments:
Post a Comment