Saturday, April 24, 2021

477. செக் புத்தகம்

"சார்! போன வருஷம் நம்ம வியாபாரம் குறைஞ்சு, லாபமும் குறைஞ்சுடுச்சு."

"ஆமாம்."

"இந்த வருஷமும்..."

"ஆமாம். இந்த வருஷம் வியாபாரம் இன்னும் கீழே போய்க்கிட்டிருக்கு  அக்கவுன்ட்ஸ் பாக்கறது நீங்கதான்னாலும், நிலவரம் எனக்குத் தெரியுமே!" என்றார் புருஷோத்தமன் சற்று எரிச்சலுடன்.

அந்தச் சிறிய நிறுவனத்தின் முதலாளி புருஷோத்தமன். கண்ணன் அக்கவுன்டன்ட்

"அதில்ல சார்! உங்க நல்ல மனசுக்கு நீங்க தர்ம காரியங்களுக்கு நிறையக் கொடுத்துக்கிட்டு வரீங்க. நல்ல விஷயம்தான். ஆனா இப்ப நிலைமை சரியா இல்லாதப்ப அதையெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கலாம் இல்லையா?" என்றார் கண்ணன், சற்றுத் தயக்கத்துடன்.

"கண்ணன்! வாடகை, மின் கட்டணம் மாதிரி எந்தச் செலவையும் நம்மால குறைக்க முடியாது. நம்மகிட்ட வேலை செய்யறவங்களுக்குக் கொடுக்கற சம்பளத்தையும் நம்மால குறைக்க முடியாது. தர்ம காரியங்களுக்குக் கொடுக்கறதை மட்டும் குறைக்கணுமா?"

"சார்! நான் சொல்றதைத் தப்பா எடுத்துக்காதீங்க. அக்கவுன்டன்டங்கற முறையில இதைச் சொல்ல வேண்டியது என் கடமை. நீங்க சொன்ன மாதிரி நம்மால செலவுகளைக் குறைக்க முடியாதுதான். ஆனா தர்ம காரியங்களுக்குக் கொடுக்கறதை நம்மால கட்டுப்படுத்த முடியுமே! இது மாதிரி விஷயங்களுக்கு நீங்க ரொம்ப தாராளமாக் கொடுத்துக்கிட்டு வரீங்க. வருமானம் அதிகமா இருந்தப்ப அதைச் செய்ய முடிஞ்சது. இப்ப வருமானம் குறைஞ்சப்பறம் அதைக் கொஞ்சம் குறைச்சுக்கலாமே! இப்பல்லாம் அப்பப்ப பண நெருக்கடி வருது. நம்ம சப்ளையர்களுக்குப் பணம் கொடுக்க தாமதமாகுது. அவங்கள்ளாம், 'என்னங்க, ரொம்ப தாமதப்படுத்தறீங்களே'ன்னு எங்கிட்ட ஃபோன்ல வருத்தப்படறாங்க."

கண்ணன் பேச்சை நிறுத்தி விட்டு புருஷோத்தமனின் முகத்தைப் பார்த்தார்.

ஒரு நிமிடம் யோசனை செய்த புருஷோத்தமன், "சரி. ஏற்கெனவே தொடர்ந்து உதவி செய்யறதா சொன்னவங்களுக்கு மட்டும் உதவி செய்வோம். புதுசா யாருக்கும் செய்யல. சரியா?" என்றார் சிரித்தபடி.

ஏதோ இந்த மட்டுமாவது ஒப்புக் கொண்டாரே என்று நிம்மதி அடைந்தார் கண்ணன்.

ஆயினும், புருஷோத்தமன் புதிதாகச் சில நபர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் அவ்வபோது உதவித்தொகையாகக் காசோலைகள் கொடுத்து வந்தார். 

காசோலை கொடுத்த பிறகு, அந்த விவரங்களை செக் புத்தகத்தின் கவுன்ட்டர்ஃபாயிலில் எழுதிக் கண்ணனுக்கு அனுப்புவார். அந்தக் காசோலைகளுக்கான பணத்தை ஏற்பாடு செய்வது கண்ணனுக்குச் சவாலாக இருந்து வந்தது.

"சார்! ஒரு தப்பு நடந்து போச்சு" என்றார் கண்ணன்.

"என்ன ஆச்சு?" என்றார் புருஷோத்தமன் பதட்டத்துடன்.

"நம்ம பாங்க் அக்கவுன்ட் கொஞ்ச நாளாவே ரொம்ப டைட்டா இருந்துக்கிட்டிருக்கு. பல சமயம் நான் பாங்க் மானேஜர் கிட்ட கெஞ்சிக் கூத்தாடித்தான் சில செக்கை பாஸ் பண்ணச் சொல்ல வேண்டி இருக்கு. நேத்து நம்ம முக்கியமான சப்ளையர் ஒத்தருக்கு நாம கொடுத்த செக்கை பாங்க்ல திருப்பி அனுப்பிட்டாங்க. பொதுவா இது மாதிரி சந்தர்ப்பங்கள்ள எனக்கு ஃபோன் பண்ணுவாங்க. நான் ரொம்பக் கெஞ்சிக் கேட்டுக்கிட்டப்பறம் 'என்ன சார் எப்பவும் இப்படியே பண்றீங்க?'ன்னு சலிச்சுக்கிட்டே செக்கை பாஸ் பண்ணுவாங்க. ஆனா இப்படி அடிக்கடி நடக்கறதால இந்த முறை எங்கிட்ட சொல்லாமயே செக்கைத் திருப்பி அனுப்பி இருக்காங்க. சப்ளையர்கிட்டேந்து இன்னிக்கு எனக்கு ஃபோன் வந்தப்பறம்தான் எனக்கே தெரியும். இவ்வளவு வருஷமா இப்படி நடந்ததே இல்லையேன்னு அவரு எங்கிட்ட ரொம்ப வருத்தப்பட்டாரு. ஏதோ தவறுதலா நடந்துடுச்சு, இனிமே இப்படி நடக்காதுன்னு அவர் கிட்ட நான் உறுதியாச் சொல்லி அவரை சமாதானப்படுத்தினேன்..."

"ஓ! பெரிய தப்பாச்சே இது! இனிமே இப்படி நடக்கக் கூடாது" என்று சொல்லி ஒரு நிமிடம் யோசித்த புருஷோத்தமன், தன் மேஜை இழுப்பறையைத் திறந்து அதிலிருந்த செக் புத்தகத்தை எடுத்துக் கண்ணனிடம் கொடுத்தார்.

"இந்தாங்க! செக் புக் உங்ககிட்டயே இருக்கட்டும். யாருக்காவது செக் கொடுக்கணும்னா உங்ககிட்ட சொல்றேன். நீங்க செக் எழுதிக் கொடுங்க. அப்புறம் நான் கையெழுத்துப் போடறேன். பொருளாதார நிலைமையைப் பாத்து செக் கொடுக்க முடியாதுன்னா தயங்காம சொல்லிடுங்க. அதை நான் ஏத்துக்கறேன்" என்றார் புருஷோத்தமன்.

இந்த முறையை முதலாளி சரியாகப் பின்பற்றுவார் என்று கண்ணன் நம்பினார். அவரால் வேறு என்ன செய்ய முடியும்?

அரசியல் இயல்
அதிகாரம் 48 
 வலியறிதல் 
குறள் 477
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

பொருள்:
நம் பொருளாதார நிலையை அறிந்து ஈகை செய்யவும். அதுவே பொருளைக் காத்துப் பிறர்க்கு வழங்கும் முறையாகும்.
                                     
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Friday, April 23, 2021

476. எங்கிட்ட மோதாதே!

"நம்ம கிட்ட வேலை செஞ்சவன், நமக்குப் போட்டியா அதே தொழிலை ஆரம்பிச்சு, நம்ம வாடிக்கையாளர்களையே இழுக்கப் பாக்கறான்னா எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! அந்த சங்கரன் பயலை நினைச்சாலே... " என்று குமுறினார் பரமசிவம்.

"அவனை சொந்தப் பையன் மாதிரி நடத்தி எல்லாப் பொறுப்பையும் அவங்கிட்ட ஒப்படைச்சீங்க. உங்களோட ஆதரவு இருக்குங்கற திமிர்ல அவன் எங்களையெல்லாம் கூட மதிக்காம நடந்துக்கிட்டான். இப்ப உங்களுக்கே போட்டியா வந்துட்டானே!" என்றார் மாணிக்கம்.

பரமசிவம் புதிதாக வந்த ஒரு சின்னப் பையனுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தன்னைப் போன்ற மூத்த ஊழியர்களைப்  புறக்கணித்த வருத்தத்தை மாணிக்கம் மறைமுகமாக வெளிப்படுத்தியது பரமசிவத்துக்குப் புரிந்தது.

"அவன் மேல அளவுக்கதிகமா நம்பிக்கை வச்சது என் தப்புத்தான்.ஆனா என்னைப் பத்தி அவன் சரியாப் புரிஞ்சுக்கல. என் அனுபவம் என்ன, தொடர்புகள் என்ன! இன்னும் மூணு மாசத்தில அவனை தொழிலை விட்டே விரட்டிக் காட்டறேன் பாருங்க!" என்றார் பரமசிவம்.

ரமசிவம் சொன்னபடி அவரால் சங்கரனை மூன்று மாதங்களில் தொழிலை விட்டு விரட்ட முடியவில்லை, ஆனால் ஆறு மாதங்களில் அதைச் செய்து விட்டார்!

அவருடைய வியாபார உத்திகள், வியாபாரத் தொடர்புகள், பண பலம், தொழில் அனுபவம் அனைத்தையும் பயன்படுத்தி, சங்கரனின் தொழிலில் சரிவையும், இழப்புகளையும் ஏற்படுத்தி, ஆறு மாதங்களில் அவன் தொழிலை மூடும்படி செய்து விட்டார்.

துவக்கத்தில் தனக்கு ஏற்பட்ட வியாபாரப் பின்னடைவுகளயும், பொருளாதார இழப்புகளையும் சரிக்கட்டி ஆறு மாத முடிவில் தன் தொழிலை ஆறுமாதத்துக்கு முன்பிருந்ததை விட இன்னும் வலுவான நிலைக்குக் கொண்டு வந்து விட்டார் பரமசிவம்.

சில மாதங்கள் கழித்து, பரமசிவத்திடம் வந்த மாணிக்கம்,"சார்! சங்கரன் வேற ஒரு தொழில் ஆரம்பிச்சுட்டானாமே!" என்றார்.

"ஆமாம். நானும் கேள்விப்பட்டேன்!" என்றார் பரமசிவம்.

"உங்களுக்குத் தெரியுமா? வெட்ட வெட்ட துளிர்த்துக்கிட்டே இருக்கானே! அவனோட இந்தத் தொழிலையும் ஒண்ணுமில்லாம செய்யணும்!" என்றார் மாணிக்கம்.

"மாணிக்கம்! அவன் எங்கிட்ட மோதினான். அதுக்கு அவனுக்குப் பாடம் கற்பிச்சாச்சு. அவன் வேற ஏதாவது தொழில் செஞ்சா அதைப்பத்தி நமக்கென்ன?" என்றார் பரமசிவம்.

"என்ன சார் இது! அவன் உங்களுக்கு எப்படிப்பட்ட துரோகம் பண்ணினான்? அவனைச் சும்மா விட்டுடலாமா?" என்றார் மாணிக்கம்.

"மாணிக்கம்! நம்மை ஒத்தன் தாக்கறப்ப நம்ம மொத்த பலத்தையும் பயன்படுத்தி அவனைத் திருப்பித் தாக்கி அவனோட தாக்குதலை முறியடிக்க வேண்டியதுதான். அதுக்கப்பறமும் அவனைத் துரத்தித் துரத்தித் தாக்கிக்கிட்டா இருந்தா அது நமக்குத்தான் கெடுதலா முடியும்! தங்களோடவலிமையைக் காட்டறதா நினைச்சு, தேவையில்லாம மற்ற அரசர்களோட போருக்குப் போய்த் தங்களை அழிச்சுக்கிட்ட அரசர்கள் கதை சரித்திரத்தில இருக்கு.அப்படி ஒரு அழிவைத் தேடிக்கற செயல்ல நான் எப்பவுமே இறங்க மாட்டேன்" என்றார் மாணிக்கம் உறுதியுடன். 

அரசியல் இயல்
அதிகாரம் 48 
 வலியறிதல்  
குறள் 476
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

பொருள்:
ஒரு மரக்கிளையின் நுனி வரை ஏறியவர், அதற்கும் மேலே ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Monday, April 19, 2021

475. சோர்வா? எனக்கா?

"வேலையில இருந்தப்ப இருந்ததை விட ரிடயர் ஆனப்பறம் ரொம்ப பிஸி ஆயிட்ட போலருக்கே!" என்றார் சுந்தரேசன்.

"ஆமாம். எனக்குப் பிடிச்ச வேலைகளை செய்யறதால அலுப்போ, சலிப்போ வரதில்ல" என்றார் ராஜு.

"என்ன வேலையெல்லாம் செய்யற?"

"வேலைன்னு சொல்லக் கூடாது. எனக்குத் தோட்ட வேலை செய்யறது பிடிக்கும். அதனாலதான் ஊருக்கு வெளியில தோட்டதோட இருக்கற இந்த வீட்டை வாங்கினேன். அதில எனக்குப் பிடிச்ச செடிகளை வச்சுப் பராமரிக்கறேன். தோட்டம் சின்னதுதான். அதனால வீட்டு மொட்டை மாடியிலேயும் தோட்டம் போட்டிருக்கேன். அப்புறம் சமூக சேவை செய்யறதில எனக்கு ஈடுபாடு உண்டு. அதனால ஒரு முதியோர் இல்லத்துக்கு அப்பப்ப போய் என்னால முடிஞ்சதை செஞ்சுட்டு வருவேன்."

"என்ன மாதிரி உதவிகள்?"

"கணக்கு எழுதறது, கடைக்குப் போய் பொருட்கள் வாங்கிட்டு வரது, அங்கே தங்கி இருக்கறவங்கள்ள முடியாதவங்க சில பேரை கையைப் பிடிச்சு வாக்கிங் அழைச்சுக்கிட்டுப் போறது, அவங்களுக்குத் தேவையான வேற சில உதவிகள் செய்யறது இது மாதிரி பல வேலைகள்."

"அடேயப்பா! எனக்கும் உனக்கும் ஒரே வயசுதான். ஆனா என்னால இப்படியெல்லாம் உடம்பை வருத்திக்கிட்டு இயங்க முடியாதுப்பா" என்றார் சுந்தரேசன்.

"மனசுக்குப் பிடிச்ச வேலைகளை செய்யம்போது மனசில சந்தோஷமும்,திருப்தியும் இருக்கும். அதனால உடம்பில களைப்பு தெரியாது" என்றார் ராஜு.

சுந்தரேசன் கிளம்பிச் சென்றதும், ராஜுவின் மனைவி உமா அவரிடம், "நான் உங்ககிட்ட அடிக்கடி சொல்லிக்கிட்டிருக்கறதைத்தான் உங்க நண்பரும் சொல்றாரு. வேலை பாக்கறப்பல்லாம் ஞாயிற்றுக்கிழமை வந்தா சாப்பிட்டுட்டுப் படுத்துடுவீங்க. சாயந்திர நேரத்தில என்னையும், குழந்தைகளையும் வெளியில அழைச்சுக்கிட்டுப் போகணும்னா கூட உங்களுக்கு அலுப்பாவும், களைப்பாவும் இருக்கும். இப்ப என்னன்னா ஒரு பண்டிகை நாள் அன்னைக்குக் கூட ஓய்வு எடுத்துக்காம சேவை செய்யறேன்னு எங்கேயோ போயிடறீங்க. வீட்டில இருக்கற நேரத்திலேயும் வெய்யிலைக் கூடப் பொருட்படுத்தாம தோட்டத்தில போய் கொத்திக்கிட்டோ, தண்ணி ஊத்திக்கிட்டோ இருக்கீங்க. உடம்பு என்னத்துக்கு ஆகும்?" என்றாள்.

"சுந்தரேசனுக்குச் சொன்ன பதில்தான் உனக்கும். நமக்குப் பிடிக்கிறதை செய்யறப்ப களைப்போ, சோர்வோ எப்படி வரும்?" என்றார் ராஜு சிரித்துக் கொண்டே.

"என்னவோ போங்க!" என்றாள் உமா சலிப்புடன்.

சில நாட்களுக்குப் பிறகு, ராஜு சேவை செய்து வந்த நிறுவனத்திலிருந்து உமாவுக்கு ஃபோன் வந்தது. ராஜு திடீரென்று தனக்கு மார்பு வலிப்பதாகக் கூறியதால் அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருப்பதாகக் கூறினார்கள்.

உமா அவசரமாக அந்த மருத்துவமனைக்கு விரைந்தாள்.

ராஜு படுக்கையில் சோர்வுடன் படுத்திருந்தான். அவன் மணிக்கட்டின் பின்புறத்தில் ஊசி செருகப்பட்டு மேலே தொங்க விடப்பட்டிருந்த பாட்டிலிலிருந்து அவன் உடலில் மருந்து ஏறிக் கொண்டிருந்தது.

"ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்மா! கவலைப்படாதீங்க. மைல்ட்தான்! ரெண்டு நாள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டி இருக்கும். ஆனா அதுக்கப்பறம் கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கணும். பாத்துக்கங்க" என்றார் டாக்டர் உமாவிடம்.

உமா கவலையுடனும், 'ரொம்ப ஸ்டிரெயின் பண்ணிக்காதீங்கன்னு படிச்சுப் படிச்சு சொன்னேனே, கேட்டீங்களா?' என்று கோபமாக வினவும் முகபாவத்துடன் கட்டிலில் படுத்திருந்த கணவனைப் பார்த்தாள்.

'நீ எவ்வளவோ சொல்லியும் கேக்காதது என் தப்புதான்' என்ற சங்கடத்துடனும், குற்ற உணர்வுடனும், மனைவியின் பார்வையைத் தாங்க முடியாதவன் போல் பார்வையைச் சற்றே வேறொரு புறம் திருப்பிக் கொண்டான் ராஜு.

அரசியல் இயல்
அதிகாரம் 48 
 வலியறிதல் 
குறள் 475
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

பொருள்:
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அதை அளவு கடந்து வண்டியில் ஏற்றினால், வண்டியின் அச்சு முறிந்து விடும்.
                   குறள் 474                    
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Sunday, April 11, 2021

474. சுந்தரின் நிர்வாகம்

காசிலிங்கம் திடீரென்று இறந்ததும் அவருடைய நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அவர் மகன் சுந்தரிடம் வந்தது. 

சுந்தர் அப்போதுதான் பட்டப்படிப்பை முடித்திருந்தான். பள்ளியிலும், கல்லூரியிலும் புத்திசாலித்தனமான மாணவன் என்று அவன் ஆசிரியர்களாலும், சக மாணவர்களாலும் மதிக்கப்பட்டான். அத்துடன் அவன் ஆங்கிலப் புலமையும் சிறப்பாக இருந்தது.

அதனால் தன்னால் தன் அப்பாவின் நிறுவனத்தை நன்கு நிர்வகிக்க முடியும் என்ற நம்பிக்கை சுந்தருக்கு இருந்தது.

சுந்தர் பொறுப்பேற்றுக் கொள்ளும் முன், அவன் அம்மா கௌரி, அவனிடம், "சுந்தர்! உன் அப்பாகிட்ட வேலை செய்யறவங்க ரொம்ப விஸ்வாசமானவங்க, அனுபவம் உள்ளவங்க. அவங்களை நல்லாப் பயன்படுத்திக்க!" என்றாள் .

சுந்தர் பொறுப்பேற்றுக் கொண்ட சில நாட்களிலேயே அவன் உணர்ந்தது அவன் நிறுவன ஊழியர்கள் அதிகம் படிக்காதவர்கள், அறிவுக் கூர்மை இல்லாதவர்கள் என்பதுதான்.

நிறுவனத்தின் மானேஜராக இருந்த குணசேகரனைத் தன் அறைக்கு அழைத்தான் சுந்தர்.

"மிஸ்டர் குணசேகரன்! நம்ப ஊழியர்கள் யாரும் சரி இல்ல. ஒத்தருக்குக் கூட இங்கிலீஷ் தெரியல. ஒரு சின்னக் கடிதம் கூட தப்பு இல்லாம எழுதத் தெரியல. இவங்களையெல்லாம் வச்சுக்கிட்டு எங்கப்பா எப்படித்தான் சமாளிச்சாரோ தெரியல!" என்றான் சுந்தர்.

"தம்பி! தப்பா நினைக்காதீங்க..."

"மிஸ்டர் குணசேகரன். நான் உங்க முதலாளி. இந்தத் தம்பின்னு கூப்பிடறதெல்லாம் வேண்டாம். சார்னே கூப்பிடுங்க."

"சாரி சார்! இங்கே வேலை செய்யறவங்க எல்லாரும் வேலையில கெட்டிக்காரங்க. இங்கிலீஷ் தெரியாததைப் பெரிய குறையா நினைக்காதீங்க. நம்ப தொழிலுக்கு அது அவ்வளவு முக்கியம் இல்ல!" என்றார் குணசேகரன்.

"தப்பு தப்பான இங்கிலீஷ்ல கடிதங்கள் போனா பாக்கறவங்க சிரிக்க மாட்டாங்க?"

"சரி சார்! வேணும்னா கடிதங்கள் எழுத ஒரு படிச்ச ஆளை கரெஸ்பாண்டன்ஸ் கிளார்க்கா நியமிக்கலாம்."

"அது கூடுதல் செலவுதானே! அதெல்லாம் வேண்டாம். நீங்கதானே கடிதங்கள்ள கையெழுத்துப் போட்டு அனுப்பறீங்க? கடிதங்களை டைப் பண்ணினப்பறம் எனக்கு அனுப்புங்க. நான் கரெக்ட் பண்ணிக் கொடுக்கறேன். அப்புறம் அதை மறுபடி டைப் பண்ணச் சொல்லி, அப்புறம் நீங்க கையெழுத்துப் போட்டு அனுப்புங்க" என்றான் சுந்தர்.

வியாபாரத்தை கவனிக்க வேண்டிய முதலாளி கடிதங்களில் உள்ள ஆங்கிலப் பிழைகளைத் திருத்திக் கொண்டிருப்பது என்ன வகையான நிர்வாகம் என்று தன் மனத்தில் தோன்றிய கேள்வியை அடக்கிக் கொண்டு "சரி சார்" என்றார் குணசேகரன்.

சுந்தர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள் கௌரி அவனிடம் கேட்டாள்: "பிசினஸ் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?"

"நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு" என்றான் சுந்தர்.

"எங்கிட்ட உண்மையை மறைக்காதே சுந்தர். நம்ப ஊழியர்கள் சில பேர் ரெண்டு மூணு தடவை வீட்டுக்கு வந்து எங்கிட்ட பேசினாங்க..."

"அவங்க எதுக்கு வீட்டுக்கு வந்து உன்னைப் பாக்கணும்?" என்றான் சுந்தர் கோபமாக.

"தன்கிட்ட வேலை செய்யறவங்க எல்லாரையும் தன் குடும்ப உறுப்பினர்கள் மாதிரிதான் உங்கப்பா நடத்தினாரு. அதனால அவங்களுக்கும் தொழில் நல்லா நடக்கணுங்கறதில அக்கறை இருக்கு. நீ சில வாடிக்கையாளர்கள் கிட்ட சரியா நடந்துக்காததால அவங்க நம்மளை விட்டுட்டுப் போயிட்டாங்க. அதனால ரெண்டு மூணு மாசமா வியாபாரமும் குறைஞ்சிருக்கு. அதனாலதான் அவங்க கவலைப்பட்டு எங்கிட்ட வந்து சொன்னாங்க. நீ அவங்க சொல்றதைக் காது கொடுத்துக் கேக்க மாட்டேங்கறதாலதான் அவங்க எங்கிட்ட வந்தாங்க. நீ ஊழியர்களைச் சரியா நடத்தாததால ரெண்டு பேர் வேலையை விட்டுப் போயிட்டாங்க. இப்படியெல்லாம் இருக்கச்சே தொழில் நல்லா நடக்குதுன்னு நீ எப்படிச் சொல்ற?" என்றாள் கௌரி சற்றுக் கடுமையாக.

"என்னம்மா நீ சொல்றது? அப்பா தொழிலை நடத்தின முறை வேற, நான் நடத்தற முறை வேற. அதனால ஆரம்பத்தில சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுப் பாரு, நம்ம கம்பெனி எங்கேயோ போயிடும்."

"நடக்கறதைப் பாத்தா ரெண்டு வருஷத்தில நீ நம்ம கம்பெனியையே இல்லாம பண்ணிடுவியோன்னு தோணுது. உனக்கு இந்தத் தொழில் புதிசு. ஏற்கெனவே அங்கே இருக்கற அனுபவஸ்தர்கள் கிட்ட நீ எல்லா விவரங்களையும் தெரிஞ்சுக்கிட்டு அதுக்கப்பறம் எப்படி இம்ப்ரூவ் பண்ணலாம்னு யோசிச்சு நீ செயல்பட்டிருக்கணும். கல்லூரியில படிச்சுப் பட்டம் வாங்கினதாலேயே உனக்கு எல்லாம் தெரியும்னு நீ நினைச்சுக்கிட்டிருக்க. அங்கே வேலை செய்யறவங்களா இருந்தாலும் சரி, வாடிக்கையாளர்களா இருந்தாலும் சரி அவங்களை அனுசரிச்சுப் போக உனக்குத் தெரியல. நீ கம்னியை நிர்வாகம் செஞ்சது போதும். நீ வேற ஏதாவது வேலைக்குப் போ. ரெண்டு மூணு வருஷம் வெளியில வேலை செஞ்ச அனுபவம் கிடைச்சப்பறம் நீ நம்ம கம்பெனியைப் பாத்துக்கலாம்" என்றாள் கௌரி.

"அதுவரையிலேயும்? குணசேகரனே பாத்துப்பாரா?" என்றான் சுந்தர் கேலியாக.

"அவரே பாத்துப்பாருதான். உங்கப்பாகிட்ட இருந்தவராச்சே! அவருக்கு எல்லாம் தெரியும். ஆனா கம்பெனி நம்பளோடதாச்சே! நமக்குப் பொறுப்பு இருக்கணும் இல்ல? அதனால ரெண்டு மூணு வருஷத்துக்கு நானே கம்பெனியைப் பாத்துக்கலாம்னு இருக்கேன்!" என்றாள் கௌரி. 

அரசியல் இயல்
அதிகாரம் 48 
 வலியறிதல்  
குறள் 474
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

பொருள்:
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னைப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Thursday, April 8, 2021

473. ஆற்றுப் பாலம்

"இத்தனை வருஷமா இந்த பிசினஸ் பண்ணிக்கிட்டிருக்கோம். இவ்வளவு பெரிய கான்டிராக்ட் நமக்குக் கிடைச்சதில்ல!" என்றார் செல்வகுமார் பெருமிதத்துடன்.

"செல்வா! நம்மால இதை எடுத்துச் செய்ய முடியுமா?" என்றார் அவருடைய பார்ட்னர் பாலசந்திரன்.

"இதில என்ன இருக்கு பாலா? வீடு கட்டறது, பாலம் கட்டறது எல்லாம் ஒரே மாதிரி சிவில் ஒர்க்தானே! அதே இரும்பு, செங்கல், கருங்கல், மணல், சிமென்ட் சமாசாரம்தானே!"

"நமக்கு இதில அனுபவம் இல்ல. இதை நாம எடுத்துச் செய்யறது ரிஸ்க் இல்லையா?"

"ரிஸ்க் இல்லாம பிசினஸே இல்ல. திட்டம் போட்டுப் பண்ணினா செய்ய முடியாதது எதுவும் இல்ல."

"என்னோட பாயின்ட் அதுதான். நாம பெரும்பாலும் வீடுகள்தான் கட்டிக்கிட்டிருக்கோம். சில கால்வாய்கள்ள மதகுகள் கட்டி இருக்கோம். இது மாதிரி பெரிய பாலம் கட்ட நாம அனுபவம் உள்ள எஞ்சினியர்களை வேலைக்கு எடுத்து விரிவாத் திட்டம் போட்டுக் கட்டணும். தேர்தல் வரதால மூணு மாசத்துக்குள்ள இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்கணும்னு அவசரப்படறாங்க. நமக்கு அனுபவம் இல்லாத வேலையில, அதுவும் இப்படி ஒரு குறைஞ்ச அவகாசத்தில செய்ய வேண்டிய வேலையை, நாம எடுத்துக்கிட்டு செய்ய முடியாம போனா நம்ம நிறுவனத்தோட பேரு கெட்டுடும். இன்னும் நாம ஒர்க் ஆர்டரை ஏத்துக்கல. நமக்கு வேற கமிட்மென்ட்கள் இருக்கறதால இதை எடுத்துக்க முடியாதுன்னு சொல்லிடலாம்."

"முடியாது செல்வா! அமைச்சரோட உறவினருக்குக் கிடைச்ச கான்டிராக்ட் இது. அவரால இதைச் செய்ய முடியாதுங்கறதால அவர் இதை எனக்கு சப்-கான்டிராக்டா கொடுத்திருக்காரு. உங்களுக்கு விருப்பம் இல்லேன்னா இதை நான் என் பேர்ல எடுத்துச் செய்யறேன்" என்றார் செல்வகுமார்.

"நல்லது செல்வா, அப்படியே . நாம செஞ்சுக்கிட்டிருக்கற மத்த வேலைகளை முடிச்சப்பறம் நம்ம பார்ட்னர்ஷிப்பைத் தொடரணுமான்னு நாம முடிவு செய்யலாம்" என்று சொல்லி விட்டு எழுந்தார் பாலசந்திரன்.

பாலம் கட்டியதில் அனுபவம் உள்ள ஒரு எஞ்சினியரைத் தேடிப் பிடித்து நியமிக்கவே செல்வகுமாருக்கு இரண்டு வாரம் ஆகி விட்டது. அதுவரை தனக்குத் தெரிந்தவரை பாலம் கட்டுவதற்கான அடித்தளம் அமைப்பதற்கான வேலைகளைத் துவங்கிச் செய்து கொண்டிருந்தார் செல்வகுமார்.

இதற்கிடையில் அரசு கான்டிராக்டை எடுத்திருந்த அமைச்சரின் உறவினர் வேறு அவரை அவசரப்படுத்திக் கொண்டிருந்தார். 

"தேர்தல் தேதி அறிவிக்கிறதுக்குள்ள வேலையை முடிச்சாகணும். இல்லேன்னா இது தேர்தலுக்காக செய்யறதுன்னு எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் பிரசாரம் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. உங்க வேலை ரொம்ப மெதுவாப் போய்க்கிட்டிருக்காப்பல இருக்கே!" என்றார் அவர்.

"கவலைப்படாதீங்க. மூணு மாசத்துக்குள்ள முடிச்சுடுவோம்" என்று செல்வகுமார் அவரிடம் உறுதியளித்தாலும் உள்ளுக்குள் அவருக்கும் இதைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியுமா என்ற கவலை ஏற்பட்டிருந்தது.

எஞ்சினியர் பொறுப்பேற்றுக் கொண்டதும் அடித்தள வேலைகள் சரியில்லை என்று கூறிச் சில இடங்களில் மிண்டும் தோண்டியும், சில வேலைகளைத் திரும்பச் செய்யவும் வைத்ததால் இன்னும் சில நாட்கள் விரயமாகின.

"இவ்வளவு குறைஞ்ச காலத்தில இதைச் செய்ய முடியாது சார். இதுக்கு நீங்க ஒத்துக்கிட்டிருக்கக் கூடாது" என்றார் எஞ்சினியர்.

"அதையெல்லாம் ஒத்துக்கிட்டு ஒப்பந்தத்தில கையெழுத்துப் போட்டாச்சு. அதுக்குள்ள முடிச்சுத்தான் ஆகணும். எப்படிச்  செய்யலாம்னு திட்டம் போட்டு செய்யுங்க!" என்றார் செல்வகுமார்.

"ஐ வில் டூ மை பெஸ்ட். ஆனா சில வேலைகளுக்குக் குறைஞ்ச பட்ச காலம்னு இருக்கு. அதுக்கு முன்னால முடிக்க முடியாது!" என்றார் எஞ்சினியர்.

பாலத்தில் அடித்தூண்கள் கட்டப்பட்டு அவற்கு மேல் தளம் அமைக்கப்பட வேண்டிய நிலையில், "சார். இன்னும் அஞ்சு நாள் கழிச்சுத்தான் தளம் போடணும். கான்கிரீட் தூண்களுக்கெல்லாம் இன்னும் சில நாள் க்யூரிங் கொடுக்கணும்" என்றார் எஞ்சினியர்.

"இத்தனை நாள் கொடுத்த க்யூரிங் போதும். தளத்தைப் போட்டு கைப்பிடிச் சுவர் கட்டி வேலையை முடிக்கணும். நமக்கு நேரம் இல்ல" என்றார் செல்வகுமார்.

"அப்படியெல்லாம் அவசரப்பட்டுச் செய்ய முடியாது சார்!" என்றார் எஞ்சினியர்.

"நீங்க எஞ்சினியரிங் படிச்சிருக்கலாம். நான் அனுபவம் உள்ள கான்டிராக்டர். நான் சொல்றபடி செய்யுங்க" என்றார் செல்வகுமார் எரிச்சலுடன்.

"சாரி சார்! அப்படிச் செய்ய முடியாது.நான் வேலையை விட்டு விலகிக்கறேன்" என்றார் எஞ்சினியர்.

"போங்க.எல்லாத்தையும் தாமதப்படுத்தினதுதான் நீங்க செஞ்ச வேலை! உங்களை வேலைக்கு வச்சதே தப்பு. நானே முன்னெடுத்து செஞ்சிருந்தா இத்தனை நேரம் வேலை முடிஞ்சிருக்கும்" என்றார் செல்வகுமார் கோபத்துடன்.

எஞ்சினியர் பதில் பேசாமல் வெளியேறினார்.

செல்வகுமார் தானே முன்னின்று வேலைகளைத் தொடர்ந்தார்.

பாலத்தின் கைப்பிடிச் சுவர் கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது பாலத்தின் தூண்கள் ஒன்றில் ஒரு விரிசல் தோன்றியது. இதைப் பலரும் படம் பிடித்துப் பத்திரிகைகள்,தொலைக் காட்சி சானல்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் வெளியிட இது ஒரு பெரும் பேசும் பொருளாகி அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை உருவாக்கியது.

அமைச்சரின் உறவினரிடமிருந்து செல்வகுமாருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. "உங்களை நம்பி இந்த வேலையைக் கொடுத்ததுக்கு இப்படிப் பண்ணிட்டீங்களே! அமைச்சர் என்னக் கண்டபடி பேசறாரு" என்றார் அவர் பதட்டத்துடன்.

"அது ஒண்ணும் இல்ல சார். அதை சரி செஞ்சுடலாம்" என்றார் செல்வகுமார்.

"சரி செய்யறதா? பாலம் கட்டி முடிக்கறதுக்கு முன்னேயே அதைத் தாங்கிகிட்டு இருக்கற தூண்ல வெடிப்பு வந்தா அந்தப் பாலம் பாதுகாப்பா இருக்குங்கற நம்பிக்கை வருமா? தேர்தல் வரதால அரசாங்கம் ஸ்டிரிக்டா இருக்கறதாக் காட்டிக்கறதுக்காக எனக்குக் கொடுத்த கான்டிராக்டை கான்ஸல் பண்ணிட்டாங்க. அதனால நீங்க வேலைகளை உடனே நிறுத்துங்க. உங்க ஆளுங்க யாரும் அங்கே போகக் கூடாது" என்றார் அமைச்சரின் உறவினர்.

"சார்! நான் செலவழிச்சிருக்கற பணம்? நான் கொடுத்திருக்கிற பில்களுக்கான பேமென்ட் இதெல்லாம்?"

"நஷ்ட ஈடா நீங்கதான் ஒரு பெரிய தொகை கொடுக்க வேண்டி இருக்கும்" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் அமைச்சரின் உறவினர். 

அரசியல் இயல்
அதிகாரம் 48 
 வலியறிதல் 
குறள் 473
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

பொருள்:
தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடர முடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.
          குறள் 472          
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Wednesday, April 7, 2021

472. தள்ளி வைக்கப்பட்ட தேர்தல்!

"என்னங்க நமசிவாயத்துக்கு எதிரா சங்கர்னு ஒரு சின்னப்பையனை நிறுத்தி இருக்கீங்க? வலுவான வேட்பாளரைப் போட வேண்டாமா?"

கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இந்தக் கருத்தைத் தெரிவித்தாலும், கட்சித் தலைவர் குமரவேல் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

"நாம வலுவா பிரசாரம் பண்ணினா, சங்கரையே நம்மால ஜெயிக்க வைக்க முடியும்" என்றார் குமரவேல்.

நமசிவாயம் 15 வருடங்களாக அமைச்சராக இருப்பவர். குமரவேல் முதல்வராக இருந்தபோது அவரால் அமைச்சராக்கப்பட்டவர்தான் நமசிவாயம். ஆனால் ஐந்து ஆண்டுகள் முடிவில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அவர் குமரவேல் கட்சியிலிருந்து விலகி எதிர்க் கட்சியில் சேர்ந்து  தேர்தலில் வென்று அந்தக் கட்சி தேர்தலில் வென்றதால் அவர்கள் ஆட்சியில் அமைச்சராகவும் ஆகி விட்டார்.

அந்தக் கட்சி அடுத்த தேர்தலிலும் வென்று ஆட்சியைப் பிடிக்க. நமசிவாயமும் தேர்தலில் வென்று அமைச்சராகத் தொடர்ந்தார்.

நடக்க இருக்கும் தேர்தலில் குமரவேலின் கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் நமசிவாயம் அவர் தொகுதியில் வெற்றி பெறுவார் என்று கருதப்பட்டது. 

நமசிவாயத்தைத் தோற்கடிப்பது கடினம் என்று கருதப்பட்ட நிலையில் குமரவேல் கட்சியிலிருந்து ஒரு வலுவான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது ஒரு அனுபவமற்ற இளைஞனை குமரவேல் நிறுத்தியது அவரது கட்சியினருக்கு மட்டுமின்றி ஊடகங்கள், அரசியல் விமரிசகர்கள், பொதுமக்கள் அனைவருக்குமே வியப்பை அளித்தது.

தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்தபோது, நமசிவாயத்தைத் தோற்கடிக்கும் நோக்கில் குமரவேல் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

குமரவேல் இதை வலுவாக மறுத்ததுடன், தன் கட்சியைப் பற்றிய பொய்யான தகவல்களை வெளியிடும் ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துக் காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். ஆயினும் இது  போன்ற செய்திகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தன.

தேர்தலுக்கு ஓரிரு தினங்கள் முன்பு, அமைச்சர் நமசிவாயம் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடு செய்வதாகச் செய்திகள் வரத் தொடங்கின. தேர்தல் அதிகாரிகளின் சோதனையின்போது நமசிவாயத்தின் கட்சியினரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள்  கைப்பற்றப்பட்டன.

நமசிவாயம் போட்டியிட்ட தொகுதியில் பெருமளவில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டுப் பெரிய தொகையும் கைப்பற்றப்பட்டாதால் அந்தத் தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் முடிந்து ஓட்டுக்கள் எண்ணப்பட்டதும், குமரவேலின் கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியது.

குமரவேலும் கட்சியில் இவருக்கு நெருக்கமான பரமசிவமும் தனியே பேசிக் கொண்டிருந்தனர்.

"நல்ல வேளை, நமசிவாயம் தொகுதியில தேர்தல் தள்ளிப் போச்சு. இல்லேன்னா அவரு ஜெயிச்சிருப்பாரு! இப்ப  நாம ஆட்சிக்கு வந்துட்டதால அவர் தொகுதிக்கு மட்டும் தனியா தேர்தல் நடக்கறப்ப, மக்கள் அவருக்கு ஓட்டுப் போட மாட்டாங்க. நாமதான் ஜெயிப்போம்!" என்றார் பரமசிவம்.

"இது எப்படி நடந்ததுன்னு நினைக்கிறீங்க?" என்றார் குமரவேல் சிரித்தபடி.

"நமசிவாயம் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து மாட்டிக்கிட்டதாலதான்."

"அதுக்கு முன்னால, நாம பணம் கொடுக்கறதா செய்திகள் வந்ததில்ல?"

"ஆமாம். என்ன ஒரு அபாண்டம்! வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கக் கூடாதுங்கற கொள்கையை நாம எவ்வளவு உறுதியாக் கடைப்பிடிச்சுக்கிட்டிருக்கோம்! இது ஊடகங்களுக்குத் தெரியாதா? அப்படி இருந்தும் நம்மைப் பத்தி இப்படி ஒரு செய்தி வந்தது எனக்கு வருத்தம்தான்."

"பரமசிவம்! எனக்குத் தெரிஞ்ச ஊடக நண்பர்கள்கிட்ட சொல்லி இப்படி ஒரு செய்தியை வெளியிடச் சொன்னதே நான்தான்!" என்றார் குமரவேல் சிரித்துக் கொண்டே.

"நீங்களா? ஏன் இப்படிப் பண்ணினீங்க?"

"பரமசிவம்! நமசிவாயத்தைத் தோற்கடிக்கறது கஷ்டம்னு எனக்குத் தெரியும். என்னதான் நாமதான் ஜெயிக்கப் போறோம்னு கருத்துக் கணிப்புகள் சொன்னாலும், என்ன நடக்கப் போவுதுங்கறது யாருக்கும் உறுதியாத் தெரியாதுல்ல? அதனால, ஒருவேளை அவங்க கட்சி ஜெயிச்சா அவரு அமைச்சராவாருன்னு நினைச்சு மக்கள் அவருக்குத்தான் ஓட்டுப் போடுவாங்க.

"இப்ப இருக்கிற நம்ம மாநிலத் தேர்தல் அதிகாரி ஸ்டிரிக்டா இருக்கறவரு. பணப் பட்டுவாடா நடக்கறதாத் தெரிஞ்சா, தேர்தலை நிறுத்திடுவாருன்னு தெரியும். நாம பணம் கொடுக்க மாட்டோங்கறதால நமசிவாயம், தான் சுலபமா ஜெயிச்சுடலாம்னு நினைச்சு ஆரம்பத்தில பணம் கொடுக்காமதான் இருந்தாரு.

"நாம பணம் கொடுக்கறதா செய்தி வந்ததும் பயந்து போய் அவரும் பணம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாரு. பணம் எங்கேந்து எப்படி வருதுன்னு நம் ஆட்களைக் கண்காணிக்கச் சொல்லித் தகவல் சேகரிச்சு தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்ல வச்சேன். அவங்களும் பணத்தைப் புடிச்சுட்டாங்க. 

"நான் எதிர்பார்த்த மாதிரி மாநிலத் தேர்தல் அதிகாரி தேர்தலைத் தள்ளி வைக்கணும்னு மத்திய அதிகாரிகளுக்குப் பரிந்துரை செஞ்சு அவங்களும் தேர்தலைத் தள்ளி வச்சுட்டாங்க. நீங்க சொல்ற மாதிரி, இப்ப நம்ம ஆட்சி வந்துட்டதால, தனியா நடக்கற தேர்தல்ல மக்கள் நமக்குத்தான் ஓட்டுப் போடுவாங்க" என்றார் குமரவேல் உற்சாகத்துடன்.

"செய்ய முடியாதுன்னு எல்லாரும் நினைச்ச காரியத்தைச் செஞ்சு காட்டிட்டீங்களே!" என்றார் பரமசிவம் குமரவேலின் உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டு.

அரசியல் இயல்
அதிகாரம் 48 
 வலியறிதல்  
குறள் 472
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

பொருள்:
ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Sunday, April 4, 2021

471. போருக்குத் தயாரா?

"இந்த மந்திராலோசனை எதற்கு என்பது உஙகள் அனைவருக்கும் தெரியும். நம் அண்டை நாடான விகாச நாட்டின் மீது படையெடுப்பது பற்றி ஆலோசிக்கத்தான். சேனாதிபதி! நம் படைகள் போருக்கு ஆயத்தமாக உள்ளனவா?" என்றார் மன்னர்.

" உள்ளன, அரசே! எப்போது வேண்டுமானாலும் போருக்குக் கிளம்ப நம் வீரர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்" என்றார் படைத்தலைவர்.

"சேனாதிபதி! நம் படைகளின் எண்ணிக்கை என்ன?" என்றார் அமைச்சர்.

தேர், கரி, பரி, காலாள் என்று ஒவ்வொரு படைப்பிரிவிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையை சேனாதிபதி கூறினார்.

"அரசே! நம் ஒற்றர்கள் கொடுத்துள்ள தகவல்களின்படி விகாச நாட்டுப் படையின் எண்ணிக்கை இதை விட மிகவும் குறைவுதான்" என்றார் அமைச்சர்.

"அப்புறம் என்ன? நாம் படையெடுத்துச் செல்லலாம் அல்லவா?" என்றார் மன்னர் உற்சாகத்துடன்.

"இன்னும் சில விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் மன்னா!" என்றார் அமைச்சர்.

"என்ன விஷயங்கள்?"

"நாம் விகாச நாட்டின் மீது படையெடுத்தால் அவர்களுக்கு ஆதரவாகக் கொன்றை நாடு போரில் கலந்து கொள்ளக் கூடும்."

"அவர்கள் எப்படி வருவார்கள்? ஓராண்டுக்கு முன்தானே நம் மீது போர் தொடுத்துத் தோல்வி அடைந்து ஓடினார்கள்?"

"அதனாலேயே அவர்கள் நம் மீது ஆத்திரத்தில் இருக்கிறார்கள். இத்தகைய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடும்."

"ஏன், நமக்குத் துணையாக வரக் கூடிய நாடுகள் இருக்கின்றனவே!"

"இருக்கின்றன அரசே! ஆனால் நாம் முதலில் அவர்களிடம் தூதர்களை அனுப்பி அவர்கள் நமக்குத் துணையாகப் போருக்கு வருவார்கள் என்பதை உறுதிப் படுத்திக் கொள்வது உசிதம் என்று நான் நினைக்கிறேன்."

"அப்படியானால், நாம் உடனே போர் தொடுக்க முடியாதா?" என்றார் அரசர் எரிச்சலுடன்.

"நம் நட்பு நாடுகளின் உதவியை உறுதி செய்து கொண்டு இன்னும் சில ஏற்பாடுகளையும் செய்து கொண்ட பின் நாம் போரில் இறங்குவதுதான் நமக்கு நன்மை பயக்கும் என்பது என் பணிவான கருத்து" என்றார் அமைச்சர், மென்மையான தொனியில்.

"வேறு என்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும்?" 

படைத்தலைவரைப் பார்த்த அமைச்சர், "படைத்தலைவர் ஒரு விஷயத்தைச் சொல்லத் தயங்குகிறார் என்று நினைக்கிறேன். ஓராண்டுக்கு முன்தான் நாம் ஒரு போரில் ஈடுபட்டதால், போரில் சேதமடைந்த ஆயுதங்கள் செப்பனிடப்படும் பணி இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. புதிதாக ஆயுதங்கள் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. போரில் காயமடைந்து, சிகிச்சை பெற்று குணமடைந்த விரர்களால் அதற்குள் இன்னொரு போரில் முழு வலிமையுடன் ஈடுபட முடியாது. அதனால் படையில் புதிய விரர்கள் சிலரைச் சேர்த்து அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் நிறைவு பெறச் சில மாதங்கள் பிடிக்கலாம்."

"சில மாதங்கள் கழித்துப் போருக்குக் கிளம்புவதென்றால், அதற்குள் போர் செய்ய அவசியமே இல்லை என்ற நிலை ஏற்படலாமே!"

"தாங்கள் கூறுவது சரிதான் மன்னா! இந்தப் போருக்கான தேவை கூட இல்லாமல் போகலாம்!"

"என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே?"

"கௌரவர்களுடன் போர் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாது என்ற நிலையிலும் பாண்டவர்கள் போரைத் தவிர்க்கும் முயற்சியாகக் கண்ணனைத் தூது அனுப்பவில்லையா? முதலில் நாம் விகாச நாட்டுக்கு ஒரு தூதரை அனுப்பி சமாதான முயற்சியில் ஈடுபடலாம். அது வெற்றி பெற்றால் போருக்கான அவசியமே இல்லாமல் போகலாம். அது வெற்றி பெறாவிட்டால் படைவீர்கள், ஆயுதங்கள், நட்பு நாடுகளின் உதவி பற்றிய உறுதி ஆகியவற்றை நாம் தயார் செய்து கொண்டு வலுவான நிலையில் போருக்குச் செல்லலாம்." 

மன்னர் யோசனையில் ஆழ்ந்தார்.

அரசியல் இயல்
அதிகாரம் 48 
 வலியறிதல் 
குறள் 471
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

பொருள்:
செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவோர் வலிமை  இவற்றை எல்லாம் நன்கு ஆராய்ந்தே ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
       குறள் 470       
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Friday, April 2, 2021

470. தேர்தல் முடிவு!

"உங்களைப் போன்றவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரணும் ஐயா!"  என்றார் கார்மேகம்.

"எனக்கு எதுக்குங்க அரசியல்? நான் ஏதோ என் தொழில் உண்டு, என்னோட கல்லூரி நிறுவனங்கள் உண்டுன்னு இருந்துக்கிட்டிருக்கேன்" என்றார் கலியமூர்த்தி.

"உங்களை மாதிரி தகுதி உள்ளவங்கள்ளாம் நமக்கு ஏன் அரசியல்னு ஒதுங்கி இருக்கறதாலதான் அரசியல் மோசமாப் போயிட்டிருக்கு."

"நீங்க ஒரு அரசியல் கட்சித் தலைவர். நீங்களே இப்படிச் சொல்றீங்களே!"

"இருந்தா என்ன? நான் எப்பவுமே உண்மையைப் பேசத் தயங்க மாட்டேன். தேர்தல்ல நிறுத்தி வைக்க நல்ல ஆளுங்க கிடைக்காததாலதான் நானே பல மோசமான ஆளுங்களை நிறுத்த வேண்டி இருக்கு" என்ற கார்மேகம், "இந்தத் தொகுதியில நம்ம கட்சி வேட்பாளரா நீங்கதான் நிக்கறீங்க!" என்றார்.

"இல்லீங்க, வேண்டாம். எனக்கு தேர்தலைப் பத்தி எதுவும் தெரியாது" என்றார் கலியமூர்த்தி.

"உங்களுக்கு எதுவும் தெரியாட்டா என்ன? நீங்க எதுவும் செய்ய வேண்டாம். வேட்பு மனு தாக்கல் செய்யறதிலேந்து பிரசாரம் பண்றது ஓட்டு கேக்கறது எல்லாத்தையும் நாங்க பாத்துப்போம். நீங்க சும்மா சிரிச்சுக்கிட்டு, கையைக் கூப்பிக்கிட்டு நின்னாப் போதும்" என்றார்.

கலியமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்து, கட்சியினர் உதவியுடன் பிரசாரத்தைத் துவங்கினார்.

தொழிலதிபரும், புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களின் தலைவருமான தான் எல்லோரையும் வணங்கி ஓட்டுக் கேட்பது முதலில் கலியமூர்த்திக்குச் சற்றுச் சங்கடமாக இருந்தாலும், ஒரு சமூக சேவையாகத்தானே தான் இதைச் செய்கிறோம் என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டார்.

ஆயினும் பிரசாரத்தில் அவருடன் வந்த கட்சித் தலைவர்களின் செயல்பாடுகளும், பிரசாரக் கூட்டங்களில் அவர் அருகில் இருக்கும்போதே பிற கட்சித் தலைவர்களையும்,சில ஜாதித்தலைவர்களையும் அவர்கள்  தரக் குறைவாகத் தாக்கிப் பேசியதும் அவருக்கு அருவருப்பைத் தந்தன.

அது பற்றித் தனது ஆட்சேபங்களை அவர் பேச்சாளர்களிடம் தெரிவித்தபோது, "சார்! இப்படியெல்லாம் பேசினாத்தான் நம்ம ஆதரவாளர்கள் உற்சாகமாகி நமக்கு ஓட்டுப் போடுவாங்க" என்பது போன்ற பதில்களே அவர்கள் அனைவரிடமிருந்தும் வந்தது.

கார்மேகத்திடமே தன் மனவருத்தத்தை கலியமூர்த்தி தெரிவித்தபோது, "அரசியல்ல இதெல்லாம் இயல்புதான். கொஞ்ச நாள்ள உங்களுக்கு இதெல்லாம் பழகிடும்" என்றார் அலட்சியமாக.

கலியமூர்த்திக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ட்டுப் பதிவு முடிந்து விட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஓட்டு எண்ணிக்கைக்கான நாள் குறிப்பிடப்பட்டிருந்தது.

கலியமூர்த்தியைப் பார்க்க அவருடைய நீண்ட நாள் நண்பர் சுப்பையா வந்தார்.

"என்ன கலியமூர்த்தி இது? உனக்கு ஏன் இந்த வேலை?" என்றார்.

கலியமூர்த்திக்கே தான் தேர்தலில் போட்டியிட்டது ஒரு தவறான செயலோ என்ற எண்ணம் இருந்தாலும், தன் நண்பரிடம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,"ஏன் தேர்தல்ல நிக்கக் கூடாதா என்ன?" என்றார்.

"தேர்தல்ல யார் வேணும்னா நிக்கலாம். ஆனா நீ ஒரு ஜாதிக்கட்சி வேட்பாளரா இல்ல போட்டி போடற?" 

"இங்க பாரு சுப்பையா. அந்தக் கட்சித் தலைவர் கார்மேகம் எனக்கு நல்லாத் தெரிஞ்சவர். அவர் கேட்டுக்கிட்டதால அவர் கட்சியில தேர்தல்ல நின்னேன். மத்தபடி இந்தக் கட்சிதான் வேணும்னு நான் தேர்ந்தெடுக்கல."

"நீயும் நானும் ஒரே ஜாதிதான். ஆனா நம்ப ரெண்டு பேருக்குமே ஜாதி உணர்வு கிடையாது. ஒரு தொழிலதிபர், கல்வி நிறுவனங்களை நடத்தறவர்னு உனக்கு வெளியில ஒரு நல்ல மதிப்பு இருக்கு. நீ எந்த ஜாதிங்கறதைக் கூட நிறைய பேரு நினைச்சுப் பாத்திருக்க மாட்டாங்க. இப்ப ஒரு ஜாதிக் கட்சி வேட்பாளரா நின்னு உன்னோட இமேஜையே சின்னதாக்கிக்கிட்டியே! உன் தேர்தல் பிரசாரத்தில நீ உட்கார்ந்திருந்த மேடையில பேசின சில தலைவர்கள் மத்த ஜாதித் தலைவர்களைத் தாக்கிப் பேசினது அந்த ஜாதிக்காரங்களுக்கு உன் மேல ஒரு தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி இருக்குமே! பொதுவா எல்லாருக்குமே உன் மேல இருந்த நன்மதிப்பு இப்போ குறைஞ்சிருக்குமே! இவரை ஒரு உயர்ந்த மனிதர்னு நினைச்சோம்,இவர் ஒரு ஜாதித்தலைவர்தானான்னு பல பேர் நினைக்க மாட்டாங்களா?" என்றார் சுப்பையா.

கலியமூர்த்தி மௌனமாக இருந்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. கலியமூர்த்தி தோல்வி அடைந்திருந்தார். ஆனால் அது அவருக்கு வருத்தத்தையோ ஏமாற்றத்தையோ அளிக்காமல், ஒருவித நிம்மதியையும் மகிழ்ச்சியையுமே அளித்தது.

'இனியும் இது போன்ற ஒரு தவறைச் செய்யாமல், தன் தொழிலிலும்,கல்வி நிறுவனப் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு, தான் இழந்து விட்ட நன்மதிப்பை நாளடைவில் திரும்பப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் கலியமூர்த்தி.

அரசியல் இயல்
அதிகாரம் 47 
 தெரிந்து செயல்வகை  
குறள் 470
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

பொருள்:
தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Thursday, April 1, 2021

469. உறவினருக்கு ஒரு உதவி

என் அப்பா தன் ஒரே அண்ணனுடன் நெருக்கமாக இருந்தவர்தான். ஆனால் என் பெரியப்பாவின் மறைவுக்குப் பிறகு அவர் குடும்பத்துக்கும் எங்கள் குடும்பத்துக்குமான நெருக்கம் பெருமளவு குறைந்து விட்டது.

எனவே பல வருடங்கள் கழித்து என் அப்பாவைப் பார்க்க என் வீட்டுக்கு வந்த என் பெரியப்பா பையன் குமரேசனை எனக்கு முதலில் அடையாளம் கூடத் தெரியவில்லை.

என் அப்பாவிடம் அவன் சற்று நேரம் தனிமையில் பேசிக் கொண்டிருந்து விட்டு விடை பெற்றுச் சென்று விட்டான்.

அவன் சென்றதும், என் அப்பா என்னை அழைத்து, "குமரேசன் ஏதோ பிசினஸ் பண்ணிக்கிட்டிருந்தானாம். நஷ்டம் வந்து இப்ப அதை மூடிட்டானாம். இப்ப வேலை தேடிக்கிட்டிருக்கான். உன் கம்பெனியில அவனுக்கு ஏதாவது வேலை கொடுக்க முடியுமான்னு பாரு" என்றார்.

நான் ஒரு சிறிய தொழிலை நடத்திக் கொண்டிருந்தேன். வாடிக்கையாளர்களைச் சந்திக்கவும், வேறு பல பணிகளுக்காகவும் நான் அடிக்கடி வெளியே அலைய வேண்டி இருந்ததால் என் அலுவலகத்தை நிர்வகிக்க ஒரு ஆஃபீஸ் மானேஜரை நியமிப்பது பற்றிச் சிறிது காலமாகவே நான் யோசித்துக் கொண்டிருந்ததால் குமரேசனுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுப்பது பற்றிப் பரிசீலிப்பதாக என் அப்பாவிடம் கூறினேன்.

என் அப்பா குமரேசனிடம் தகவல் சொல்ல அவன் என்னை என் அலுவலகத்தில் வந்து சந்தித்தான்.

"உன் பிசினஸை ஏன் மூடினே?" என்றேன்.

"நஷ்டம் ஏற்பட்டதாலதான்" என்றான் குமரேசன்.

"ஏன் நஷ்டம் ஏற்பட்டது?"

"வியாபாரத்தில போட்டிதான் காரணம். ஒரு பக்கம் குறைச்ச விலைக்கு விற்க வேண்டி இருந்தது. இன்னொரு பக்கம் வியாபாரப் போட்டியால விற்பனை குறைஞ்சு போச்சு. என் வாடிக்கையாளர்கள் சில பேரை என் போட்டியாளர்கள் தங்க பக்கம் இழுத்துட்டாங்க." 

அவனிடம் பேசிப் பார்த்ததில் அவனால் அலுவலகத்தை நன்றாக நிர்வகிக்க முடியும் என்று தோன்றியது. அவனுக்குத் தொழில் செய்த அனுபவம் இருந்ததால் அதுவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தேன்.

"இங்க பாரு குமரேசா! என்னோடது சின்ன நிறுவனம். என்னால அதிக சம்பளம் கொடுக்க முடியாது. உனக்கு வேற நல்ல வேலை கிடைச்சா நீ போகலாம். நான் வருத்தப்பட மாட்டேன்" என்று சொல்லி சம்பளத் தொகையைக் கூறினேன்.

"இது போதும் எனக்கு. நான் அதிகம் எதிர்பார்க்கல" என்றான் குமரேசன்.

குமரேசன் வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. அவன் அலுவலகத்தை நன்றாக நிர்வகித்துக் கொண்டிருப்பதாகத்தான் தோன்றியது.

ஒரு முறை என் வாடிக்கையாளர் ஒருவரைச் சந்தித்தபோது, அவர் என்னிடம், "உங்க ஆஃபீஸ்ல புதுசா ஒரு மானேஜரைப் போட்டிருக்கீங்களே, அவரு ரொம்ப அலட்சியமாப் பேசறாரு. ரெண்டு நாள் முன்னாடி உங்க ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணி அர்ஜென்ட்டா சரக்கு வேணும்னு கேட்டேன். 'உங்க அவசரத்துக்கெல்லாம் அனுப்ப முடியாது, நாளைக்குத்தான் அனுப்ப முடியும்'னு சொல்லிட்டாரு. அப்புறம் நான் வேற இடத்தில வாங்கிட்டேன். முன்னெல்லாம் சரக்கு கேட்டா உடனே அனுப்பிடுவாங்க. உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். அதனாலதான் உங்ககிட்ட சொல்றேன். மத்த வாடிக்கையாளர்கள்கிட்டல்லாம் இப்படிப் பேசினா அவங்க உங்ககிட்ட வியாபாரமே வச்சுக்க மாட்டாங்க" என்றார் வருத்தமும், கோபமும் கலந்த குரலில்.

நான் பதறிப்போய், "அவர் அப்படிப் பேசினதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். இன்னொரு தடவை இப்படி நடக்காம நான் பாத்துக்கறேன். உங்க பெருந்தன்மைக்கும் ஆதரவுக்கும் என்னோட நன்றி" என்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டு கூறினேன்.

லுவலகத்துக்கு வந்ததும் குமரேசனை என் அறைக்கு அழைத்து விசாரித்தேன்.

"பின்னே? சாயந்திரம் அஞ்சு மணிக்கு ஃபோன் பண்ணி சரக்கு வேணும்னு கேட்டா, எப்படி சரக்கை அனுப்ப முடியும்? அதான் அப்படிச் சொன்னேன்" என்றான் குமரேசன் சாதாரணமாக.

பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, "குமரேசா! வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்தினாதான் பிசினஸ் நடத்த முடியும். உன் வாடிக்கையாளர்கள் உன்னை விட்டுப் போனது ஏன்னு இப்பதான் எனக்குப் புரியுது. ஆனா அது இன்னும் உனக்குப் புரியல. புரிஞ்சிருந்தா உன்னை மாத்திக்கிட்டிருப்பியே! என் பெரியப்பா பையன்கறதால இந்தப் பொறுப்பை உனக்குக் கொடுத்தேன். உன் இயல்பைப் புரிஞ்சுக்காம உனக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்தது என் தப்புதான்.

"நீ இனிமே  இங்கே வர வேண்டாம். வேற ஏதாவது நிறுவனத்தில அலுவலக உதவியாளர் வேலை ஏதாவது உனக்கு வாங்கிக் கொடுக்க முடியுமான்னு பாக்கறேன். நீயும் வேற எங்கேயாவது முயற்சி பண்ணு. அதுவரையிலும் ரெண்டு மாசம் உனக்கு சம்பளம் கொடுத்துடறேன்" என்றேன் நான். 

அரசியல் இயல்
அதிகாரம் 47 
 தெரிந்து செயல்வகை  
குறள் 469
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

பொருள்:
ஒருவருக்கு நன்மை செய்யும்போது, அவருடைய இயல்புகளை அறிந்து அவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
  குறள் 470             
   குறள் 468              
அறத்துப்பால்                                                              காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...