திருக்குறள்
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 105
நல்குரவு
1041. தங்கையின் வருகை
"என்னங்க, அரிசி இன்னும் ரெண்டு நாளைக்குத்தான் இருக்கு" என்றாள் தனம்.பரமசிவம் மௌனமாகத் தலையாட்டினான்.
"கம்பெனியை மூடி ஆறு மாசம் ஆச்சு. அதுக்கு அஞ்சாறு மாசம் முன்னாலேந்தே உங்களுக்கு சம்பளம் வரலை. இத்தனை நாள் சமாளிச்சதே பெரிய விஷயம். பிள்ளைங்களை பிரைவேட் ஸ்கூல்லேந்து எடுத்து, கவர்ன்மென்ட் ஸ்கூல்ல போட்டுட்டோம். காலையில பட்டினியாதான் ஸ்கூலுக்குப் போறாங்க. ஸ்கூல்ல அவங்களுக்கு மதிய உணவு கிடைக்குது. இருந்தாலும், ராத்திரி அவங்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டாமா? நாம வேணும்னா பட்டினி கிடக்கலாம். குழந்தைங்க பசி தாங்குவாங்களா?"
"என்ன செய்யறது? கடன் வாங்கி இத்தனை நாள் ஓட்டியாச்சு. இனிமே, கடன் வாங்கறதுக்கும் வழியில்ல. வேற வேலையும் கிடைக்க மாட்டேங்குது. கூலி வேலை செய்யறவங்களா இருந்தாலாவது, ஏதாவது வேலை கிடைக்கும். என்னை மாதிரி ஆஃபீஸ் வேலை பாத்தவங்களுக்கு அதுக்கும் வழியில்ல."
"ஒரு வருஷம் முன்னால வரைக்கும் எவ்வளவு நல்லா இருந்தோம்! கொஞ்சம் கொஞ்சமா நிலைமை மாறி, இப்ப இவ்வளவு மோசமாயிடுச்சே!" என்றாள் தனம்.
"வறுமையோட கொடுமை இப்படித்தான் இருக்கும்!" என்றான் பரமசிவம்.
"இவ்வளவு கொடுமையாவா? வறுமையை விடக் கொடிய விஷயம் உலகத்தில எதுவுமே இல்லை போலருக்கே!"
"அண்ணே!"
வாசலிலிருந்து குரல் கேட்டதும், இருவரும் சென்று பார்த்தனர்.
பரமசிவத்தின் தங்கை மல்லிகா ஒரு கையில் ஒரு பெட்டியுடனும், தோளில் குழந்தையுடனும் நின்று கொண்டிருந்தாள்.
"வா, மல்லிகா! என்ன திடீர்னு?" என்றான் பரமசிவம்,
பெட்டியைக் கீழே வைத்து விட்டுக் குழந்தையுடன் சோஃபாவில் வந்து அமர்ந்த மல்லிகா, கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள்.
"என்னம்மா ஆச்சு? ஏன் அழற?" என்றபடியே, மல்லிகாவின் தோளில் கைவைத்து, ஆதரவுடன் கேட்டாள் தனம்.
"என்னத்தைச் சொல்றது, அண்ணி? அவங்க அப்பா அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு, அவர் என்னைக் கைக்குழந்தையோட வீட்டை விட்டு விரட்டிட்டாரு. குழந்தைக்கு அஞ்சு பவுன்ல சங்கிலி போட்டு எடுத்துக்கிட்டுத்தான் வரணுமாம்!" என்றாள் மல்லிகா, அழுகைக்கிடையே.
"சரி, கவலைப்படாதே, பார்க்கலாம்!" என்றபடியே, மனைவியின் முகத்தைப் பார்த்தான் பரமசிவம்.
"ஆமாம்மா. உன் அண்ணன் பாத்துப்பாரு. கவலைப்படாதே! மூஞ்சியைக் கழுவிக்கிட்டு வா, சாப்பிடலாம். குழந்தைக்கு என்ன பாலா, கஞ்சியா?" என்றாள் தனம்.
குழந்தையை தனம் வாங்கிக் கொள்ள, மல்லிகா முகம் கழுவிக் கொள்ளக் குளியலறைக்குச் சென்றாள்.
"வறுமையை விடக் கொடியது என்னன்னு கேட்டியே! வறுமையை விடக் கொடியது கூடுதல் வறுமைதான்! கடவுளே! என்ன செய்யப் போறேனோ!" என்றான் பரமசிவம், பொங்கி வந்த கண்ணீரை மறைக்கும் விதமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு.
குறள் 1041:
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
"போயிட்டு வாங்க" என்ற அவர் மனைவி சரஸ்வதி, 'பாவம்! வீட்டில உக்காந்துக்கிட்டு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கறதை விட, எங்கேயாவது போயிட்டு வந்தா, மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலாவாவது இருக்கும்' என்று நினைத்துக் கொண்டாள்.
சரஸ்வதி ராமமூர்த்தியைத் திருமணம் செய்து கொண்டபோது, ராமமூர்த்தி ஒரு உற்சாகமான இளைஞராக இருந்தார். வசதிக் குறைவானவர்தான். ஆனால், வாழ்க்கையுடன் போராடி வெற்றி பெற வேண்டும என்ற ஒரு வேகம் அவரிடம் இருந்தது.
வறுமையான குடும்பத்திலிருந்து வந்த சரஸ்வதி, கணவருக்கு உறுதுணையாக இருந்தாள்.
ஆனால் எவ்வளவு போராடியும், அவர்களால் வறுமையை வெற்றி கொள்ள முடியவில்லை. அதிகப் படிப்போ, குடும்பப் பின்னணியோ இல்லாத ராமமூர்த்திக்கு நிலையான வேலை இல்லை. பல வேலைகள் மாறிய பிறகு, இறுதியில் ஒரு சுமாரான வேலையில்தான் ராமமூர்த்தியால் நிலைகொள்ள முடிந்தது.
இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்துக் கரை சேர்ப்பது பெரும்பாடாகி விட்டது. எப்படியோ, பையனும் பெண்ணும் படிப்பை முடித்து, வேலைக்குப் போய், திருமணமும் செய்து கொண்டு, ஒருவிதமாக வாழ்க்கையில் நிலைபெற்று விட்டனர். ஆயினும், பெற்றோர்களுக்கு உதவும் அளவுக்கு வசதி படைத்தவர்களாக அவர்கள் இல்லை.
அதனால், ஓய்வு பெறும் வயதைத் தாண்டியும், தனக்கும் தன் மனைவிக்குமான தேவைகளுக்காக வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ராமமூர்த்திக்கு ஏற்பட்டது.
"நான் என்ன பாவம் பண்ணினேனோ தெரியல. பொறந்ததிலேந்து சாகற வரைக்கும் வறுமையை எதிர்த்துப் போராட வேண்டி இருக்கு. எவ்வளவு கஷ்டப்பட்டேன்! எவ்வளவு முயற்சி பண்ணினேன்! எதுக்குமே பலன் இல்லாம போயிடுச்சே! என்னை விடக் குறைஞ்ச படிப்பு, திறமை உள்ளவங்கள்ளாம் கூட நல்லா இருக்காங்க" என்று மனைவியிடம் அடிக்கடி சொல்லிப் புலம்புவார் ராமமூர்த்தி.
"விடுங்க. நீங்க எவ்வளவோ முயற்சி செஞ்சீங்க. பலன் கிடைக்கலேன்னா, அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? எப்படியோ, பையனையும் பெண்ணையும் கரை சேத்தாச்சு. அவங்களால நமக்கு உதவ முடியாட்டாலும், அவங்க வாழ்க்கையை அவங்க பாத்துப்பாங்க. நமக்கு மீதி இருக்கற நாட்களை நம்மால ஓட்ட முடியாதா?" என்று கணவருக்கு ஆறுதல் கூறுவாள் சரஸ்வதி. ஆயினும், ராமமூர்த்தி சமாதானமடைய மாட்டார்.
கதை கேட்கக் கோவிலுக்குச் சென்ற ராமமூர்த்தி, இரவு 9 மணிக்கு வீட்டுக்குத் திரும்பியபோது, சோர்வுடன் காணப்பட்டார்.
"என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?" என்றாள் சரஸ்வதி, படபடப்புடன்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லை" என்ற ராமமூர்த்தி, நாற்காலியில் உட்கார்ந்து ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டார்.
பிறகு, "இந்த ஜன்மம்தான் நமக்கு சரியா அமையல. அடுத்த ஜன்மத்திலேயாவது நல்ல வாழ்க்கை அமையும்னு நினைச்சேன். அதுவும் நடக்காது போலருக்கு" என்றார், சரஸ்வதியிடம்.
"ஏன் அப்படிச் சொல்றீங்க? அதுவும், அடுத்த ஜன்மத்தைப் பத்தி இப்ப என்ன? என்றாள் சஸ்வதி.
"கோவில்ல கதை சொன்னவர் ஒரு விஷயம் சொன்னாரு. அதைக் கேட்டதிலேந்து, மனசு சங்கடமா இருக்கு!"
"என்ன சொன்னார் அப்படி?"
"இந்த ஜன்மத்தில தான தர்மம் எல்லாம் செஞ்சாதான், அடுத்த ஜன்மம் நல்லதா அமையுமாம். அப்படி தான தர்மம் எல்லாம் செஞ்சு புண்ணியம் தேடிக்காட்டா, அடுத்த ஜன்மம் மோசமாத்தான் இருக்குமாம். அதைக் கேட்டப்புறம், அடுத்த ஜன்மத்திலேயாவது நமக்கு நல்ல வாழ்க்கை அமையும்கற நம்பிக்கையும் எனக்குப் போயிடுச்சு" என்றார் ராமமூர்த்தி, விரக்தியுடன்.
"என்னங்க இது? நாம என்ன, தான தர்மம் எல்லாம் செய்யக் கூடாதுன்னா இருந்தோம்? நமக்கு அதுக்கான வசதி இல்ல. அதுக்காக நமக்கு தண்டனை கிடைக்குமா என்ன? முதல்ல, அடுத்த ஜன்மம்னு ஒண்ணு இருக்கான்னே தெரியல. மீதி இருக்கற வாழ்நாளை நம்மால முடிஞ்ச அளவுக்கு நல்லா வாழ்ந்துட்டுப் போவோம். அவ்வளவுதான்" என்றாள் சரஸ்வதி.
குறள் 1042:
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
"வெளியில சொல்லாதே! சின்னதா ஒரு பிசினஸ் பண்ணிக்கிட்டிருக்கேன். அதில கொஞ்சம் பணம் வருது" என்றான் விஜயன்.
"நல்ல விஷயம்தானே! அதை ஏன் வெளியில சொல்லக் கூடாதுங்கறீங்க?"
"நான் ஒரு வேலையில இருக்கேன், இல்ல? வேலையில இருந்துக்கிட்டே தொழில் செஞ்சா, அது எந்த முதலாளிக்கும் பிடிக்காது. அதனாலதான் சொல்றேன். உன் மனசுக்குள்ளேயே வச்சுக்க. நான் பிசினஸ் பண்றதா யார்கிட்டேயும் சொல்லாதே!
"எப்படியோ, இவ்வளவு நாளா கஷ்ட ஜீவனம் நடத்தினதுக்கு, இப்ப செலவுக்கு தாராளமாப் பணம் கிடைக்கறது எனக்கு சந்தோஷமா இருக்கு" என்றாள் வசந்தி.
"என்னப்பா இது?" என்றார் விஜயனின் முதலாளி கேசவன்.
"என்ன சார்?" என்றான் விஜயன்.
"பத்தாம் தேதி அன்னிக்கு, காருக்கு 1000 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டிருக்கு. மறுபடி பதினைஞ்சாம் தேதி, 1000 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டிருக்கு."
"டிரைவரைத்தான் சார் கேக்கணும்!"
"டிரைவரைக் கேட்டுட்டுத்தான் உன்னைக் கேக்கறேன். பத்தாம் தேதிக்கு அப்புறம் காரை அதிகமா எடுக்கலையே! மறுபடி பெட்ரோல் போட வேண்டிய அவசியம் இல்லையே! சரி, பில்லை எடுத்துக்கிட்டு வா, பாக்கலாம்."
சற்று நேரம் கழித்து வியர்த்து விறுவிறுக்க முதலாளியின் அறைக்குள் வந்த விஜயன், "சார்! பில் கிடைக்கலே. எங்கேயோ மிஸ் ஆயிடுச்சு போல இருக்கு" என்றான்.
"அது எப்படி மிஸ் ஆகும்? கணக்கை எல்லாம் விவரமாப் பாக்கணும் போல இருக்கு. நீ இப்ப வீட்டுக்குப் போ. நீ மறுபடி வேலைக்கு எப்போ வரணும்னு சொல்லி அனுப்பறேன்" என்றார் கேசவன்.
விஜயன் சடாரென்று முதலாளியின் காலில் விழுந்தான். "சார்! என்னை மன்னிச்சுடுங்க, சார்! குடும்ப வறுமையினால இப்படிப் பண்ணிட்டேன். இனிமே இப்படிப் பண்ண மாட்டேன். காஷியர் வேலை இல்லாம, வேற வேலை ஏதாவது கொடுங்க சார்!" என்றான், கெஞ்சும் குரலில்.
"எழுந்திருப்பா! உன் அப்பா ரொம்ப நல்லவர். ஊர்ல அவருக்கு நல்ல மதிப்பு உண்டு. அவர் பையன்கறதுக்காத்தான் உனக்கு வேலை கொடுத்தேன். நீயும் நல்லாதான் வேலை செஞ்சுக்கிட்டிருந்த. இப்ப உன் குடும்பப் பேரையும் கெடுத்து, உன் பேரையும் கெடுத்துக்கிட்டிருக்க. இது மாதிரி பொய்க் கணக்கு எழுதிப் பணத்தைக் கையாடினப்புறம், உன்னை எப்படி வேலைக்கு வச்சுக்க முடியும்? உன்னை போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்காம, வேலையை விட்டு அனுப்பறதோட நிறுத்திக்கறேனேன்னு சந்தோஷப்படு!" என்றார் கேசவன், கடுமையான குரலில்.
"என்னது வேலை போயிடுச்சா? நீங்க பிசினஸ் பண்றது உங்க முதலாளிக்குத் தெரிஞ்சு போச்சா?" என்றாள் வசந்தி, அதிர்ச்சியுடன்.
குறள் 1043:
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.
"பாத்தேன். பணம் வரணும், வந்ததும் கொடுத்துடறேங்கறாரு. எப்ப போனாலும் இதையேதான் சொல்றாரு" என்றான் செல்வமணி.
"அவருக்கு எப்ப பணம் வந்து, எப்ப கொடுக்கறது? ஏதோ நல்ல குடும்பத்தில பொறந்தவராச்சேன்னு கடன் கொடுத்தேன். இப்படி இழுத்தடிக்கறாரு! நானே நேர்ல போய்க் கேட்டுட்டு வரேன்" என்று கிளம்பினான் நாகநாதன்.
"வாங்க, நாகநாதன்!" என்றான் சிவராமன்.
சிவராமனின் தோற்றத்தைப் பார்த்த நாகநாதன் திடுக்கிட்டான்.
'என்ன இப்படி இளைச்சுப் போய், வயசானவர் மாதிரி ஆயிட்டாரு? வறுமையா? வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்க முடியலையே என்ற கவலையா?'
"ரொம்ப இளைச்சுட்டீங்களே! நான் உங்களைப் பாத்து ரொம்ப நாளாச்சு!" என்றான் நாகநாதன். சிவராமனைப் பார்த்துக் கடுமையாகப் பேச வேண்டும் என்ற நோக்கத்தில் வந்திருந்தாலும், சிவராமனின் தோற்றத்தைப் பார்த்ததும், நாகநாதனுக்கு அவனை அறியாமலேயே ஒரு கனிவு வந்து விட்டது.
"வாங்கின கடனுக்கு ஒழுங்கா வட்டி கட்டிக்கிட்டிருந்தா, நீங்க என்னைப் பாக்க வேண்டிய அவசியம் ஏன் வரப் போகுது?" என்று சிரித்துக் கொண்டே கூறிய சிவராமன், "செல்வமணி கூட ரெண்டு மூணு தடவை வந்துட்டுப் போனாரு. இப்ப வியாபாரத்தில கொஞ்சம் சுணக்கம். சீக்கிரமே உங்க பணத்தைக் கொடுத்துடறேன்!" என்றான்.
'கொஞ்சம் சுணக்கமா? வியாபாரமே மொத்தமாப் படுத்துடுச்சு, ஏகப்பட்ட நஷ்டம், சாப்பாட்டுக்கே கஷ்டம்கறதெல்லாம் ஊருக்கே தெரியுமே!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட நாகநாதன், அப்போதைய நிலையில் சிவராமனுக்கு அழுத்தம் கொடுக்க மனமில்லாமல், "சரி, நான் அப்புறம் வரேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.
அதற்குப் பிறகு, சில முறை நாகநாதனின் ஆள் செல்வமணி வந்து சிவராமனைப் பார்த்து விட்டுப் போனான். சிவராமன் 'சீக்கிரமே கொடுத்துடறேன்' என்ற ஒரே பதிலைக் கொடுத்துக் கொண்டு வந்தான்.
அதனால், மீண்டும் ஒருமுறை, நாகநாதனே சிவராமனைப் பார்க்க நேரே வந்தான்.
இந்த முறை, நாகநாதன் சற்று கடுமையாகப் பேசினான்.
"இங்க பாருங்க சிவராமன்! உங்க அப்பா ஒரு பெரிய மனுஷர். இந்த ஊர்ல அவருக்கு நிறைய மரியாதை உண்டு. அவரோட மகன்கறதாலதான் உங்களை நம்பிக் கடன் கொடுத்தேன். இவ்வளவு நேரம் மரியாதையாவும் பேசிக்கிடிருக்கேன். இல்லேன்னா..."
நாகநாதன் பேசி முடிப்பதற்குள், சிவராமன் ஆவேசம் வந்தவன் போல், உரத்த குரலில் கைகளை ஆட்டிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
"இல்லேன்னா என்னடா பண்ணுவ? ஏண்டா, வட்டிப் பணத்தில பொழைப்பு நடத்தற பய நீ. உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா, கௌரவமா வியாபாரம் பண்ற எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்? பிச்சைக்காரப் பயலே!..."
ஒரு கணம் நாகநாதன் அதிர்ந்து நிற்க, உள்ளிருந்து ஓடி வந்த சிவராமனின் மனைவி, "என்னங்க இது?" என்று சிவராமனை அடக்கி விட்டு, நாகநாதனைப் பார்த்துக் கைகூப்பி, "மன்னிச்சுடுங்க. அவர் என்ன பேசறதுன்னே தெரியாம பேசறாரு. கொஞ்சம் பொறுத்துக்கங்க. உங்க பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு பண்றோம்" என்றாள், கெஞ்சும் குரலில்.
ஆத்திரத்தில் தன்னை மறந்து அத்து மீறிப் பேசி விட்டுத் தன் தவறை உணர்ந்து தலைகுனிந்து நின்ற சிவராமனைப் பார்த்தபோது, நாகநாதனுக்கு முதலில் அவன் மீது ஏற்பட்ட கோபம் மறைந்து, பரிதாபம்தான் ஏற்பட்டது.
'வறுமை ஒரு மனிதனின் கண்ணியத்தைக் கூட இந்த அளவுக்கா சிதைத்து விடும்?'
மௌனமாக அங்கிருந்து கிளம்பினான் நாகநாதன்.
குறள் 1044:
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
"வீட்டுக்காரர் வந்திருக்காரு" என்றாள் அவர் மனைவி பங்கஜம்.
'நாம ரெண்டு பேரும் இங்கே இருக்கச்சே, ஹால்ல யார்கிட்ட பேசிக்கிட்டிருக்காரு?' என்று மனைவியிடம் முணுமுணுத்தபடியே, முன்னறைக்கு வந்தார் ராமகிருஷ்ணன். வீட்டுக்காரரைப் பார்த்து வணக்கம் தெரிவித்தார்.
அவர் வணக்கத்தைப் பொருட்படுத்தாத வீட்டுக்காரர் சண்முகம், "ஏன் சார், கவர்ன்மென்ட் கம்பெனியில வேலை செய்யறீங்கன்னுதானே உங்களை நம்பி வாடகைக்கு வச்சேன்? இப்படி மூணு மாசமா வாடகை கொடுக்காம இருக்கீங்களே, இது நியாயமா இருக்கா?" என்றார், கோபத்துடன்.
"கவர்ன்மென்ட் கம்பெனிதான். ஆனா, எங்க கம்பெனியில எங்களுக்கு ஆறு மாசமா சம்பளம் கொடுக்கல. பேப்பர்ல பாத்திருப்பீங்களே! சம்பளம் வந்ததும் கொடுத்துடறேன்" என்றார் ராமகிருஷ்ணன், மெல்லிய குரலில்.
"உங்க கம்பெனியில சம்பளம் கொடுக்கலேன்னா, அது உங்க பிரச்னை. நான் ஏன் வாடகை கிடைக்காம கஷ்டப்படணும்? மூணு மாச வாடகை அட்வான்ஸ் கொடுத்திருக்கீங்க. அது கூட, மூணு மாச வாடகையில கழிஞ்சு போச்சு. தயவு செஞ்சு, ஒரு வாரத்தில வாடகை பாக்கியைக் கொடுங்க, இல்லேன்னா, வீட்டைக் காலி பண்ணுங்க. அடுத்த தடவை வரச்சே, நான் தனியா வர மாட்டேன். உங்களைக் காலி பண்ண வைக்க ஆளுங்களோடதான் வருவேன்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் வீட்டுக்காரர்.
"பல் விளக்கிட்டு வாங்க. காப்பி கொடுக்கறேன்" என்றாள் பங்கஜம்.
"அதுதான் காப்பிப்பொடி நேத்தே தீர்ந்து போச்சே!"
"பக்கத்து வீட்டில கொஞ்சம் காப்பிப்பொடி கடன் வாங்கினேன். ரெண்டு நாளைக்கு வரும்."
பல் விளக்கி விட்டு வந்து, மனைவி கொடுத்த காப்பியைக் குடித்தபோது, காப்பியின் சுவை நாவுக்கு இதமாக இருந்ததை உணர்ந்தார் ராமகிருஷ்ணன்.
இவ்வளவு கஷ்டத்திலும், இது போன்று சிறிய சுகங்கள் கிடைக்கின்றனவே என்று கடவுளுக்கு நன்றி செலுத்தினார் அவர்.
அவர் காப்பி குடித்து முடிக்கும் வரை, அவர் அருகிலேயே நின்று கொண்டிருந்த பங்கஜம், அவர் காப்பி குடித்து முடித்ததும், சற்றுத் தயங்கி விட்டு, "என்னங்க, உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்" என்றாள்.
"என்ன?"
"நேத்திக்கு, ஸ்கூல் ஃபீஸ் கட்ட முரளிகிட்ட பத்தாயிரம் ரூபாய் கொடுத்திருந்தீங்க இல்ல?"
"ஆமாம். ஃபீஸ் கட்டிட்டான் இல்ல?"
"பணத்தை ஒரு கவர்ல போட்டு, பேன்ட் பாக்கெட்ல வச்சுக்கிட்டு, பஸ்ல போயிருக்கான். பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் பாக்கறச்சே, பேன்ட் பாக்கெட்ல பணத்தைக் காணோம். பஸ்ல யாரோ பிக்பாக்கெட் பண்ணிட்டாங்க போலருக்கு!"
"என்னது?" என்று அதிர்ச்சியுடன் நாற்காலியிலிருந்து எழுந்தார் ராமகிருஷ்ணன். "என் ஃபிரண்ட்கிட்ட கடன் வாங்கிக் கொடுத்தேன். அதைத் தொலைச்சுட்டான்னு சாதாரணமா சொல்ற! அதுவும் நேத்திக்கு நடந்ததை இன்னிக்கு சொல்ற! இப்ப எங்கே அவன்?"
"நீங்க திட்டப் போறீங்களேன்னு பயந்து உள்ளே உக்காந்துக்கிட்டிருக்கான். நேத்திக்கு நீங்க வீட்டுக்கு வரப்ப, ரொம்ப சோர்வோட வந்தீங்க. அதனாலதான் நான் காலையில சொல்லிக்கலாம்னுட்டு..."
தலையைப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தார் ராமகிருஷ்ணன்.
"நான் என்ன செய்யறது? குடும்பத்தை நடத்தறதுக்காகக் கடன் வாங்கறதா, வீட்டு வாடகை கொடுக்கறதுக்காகக் கடன் வாங்கறதா, இல்லை ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்காக மறுபடி கடன் வாங்கறதா? கையில காசு இல்லாதப்ப, எல்லாக் கஷ்டமும் சேர்ந்தா வரணும்?" என்றார் விரக்தியுடன்.
அவர் தலையை மென்மையாகத் தொட்ட பங்கஜம், "கவலைப்படாதீங்க. எல்லாமே சீக்கிரம் சரியாயிடும்" என்றாள்.
குறள் 1045:
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
"இந்த கேஸ்ல சட்டம் உங்களுக்கு சாதகமா இல்ல" என்றார் சேகரின் வக்கீல் ரமணி.
"என்ன சார், இப்படிச் சொல்லிட்டீங்க?" என்றான் சேகர், ஏமாற்றத்துடன்.
"சட்டம் அப்படி இருக்கு. நான் என்ன செய்யட்டும்? பேசாம, உங்க பார்ட்னரோட காம்ப்ரமைஸ்க்குப் போயிடுங்க. அதுதான் நல்லது."
சேகர் ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பினான்.
"வக்கீல் என்ன சொன்னாரு?" என்றாள் அவன் மனைவி சுந்தரி.
"சட்டம் நமக்கு சாதகமா இல்லையாம். அவனோட காம்ப்ரமைஸுக்குப் போகச் சொல்றாரு!"
"என்னங்க இது? பார்ட்னரா இருந்து உங்களை ஏமாத்தி இருக்காரு. அவர் மேல நடவடிக்கை எடுக்கறதுக்கு வக்கீல்கிட்ட போனா, வக்கீல் உங்களை காம்ப்ரமைஸ் பண்ணிக்க சொல்றாரு!"
"பார்ட்னர்ஷிப் ஒப்பந்தப்படி அவனுக்கு இருக்கற உரிமைகளின்படிதான் அவன் நடந்துக்கிட்டிருக்கானாம். அதனால, அவனைக் கேள்வி கேக்க முடியாதாம்!"
"என்ன செய்யப் போறீங்க?"
"என்ன செய்யறது? வக்கீல் சொல்றபடி காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டு, அவனுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணிட்டு, அவனை வெட்டி விட வேண்டியதுதான்" என்றான் சேகர், விரக்தியுடன்.
"ஏங்க, என்னோட சித்தப்பாகிட்ட கேட்டுப் பாக்கலாமா?" என்றாள் சுந்தரி, தயக்கத்துடன்.
"என்ன சுந்தரி இது? ரமணி எவ்வளவு பெரிய வக்கீல்! அவரே சொல்லிட்டாரு. உங்க சித்தப்பா பேருக்குத்தான் வக்கீல். அவருக்கு பிராக்டீஸும் கிடையாது, வருமானமும் கிடையாது. நூறு ரூபா, இருநூறு வாங்கிக்கிட்டு லீகல் ஒபினியன் கொடுத்துக்கிட்டு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருக்காரு. அவர்கிட்ட போய் அபிப்பிராயம் கேட்கச் சொல்றியே!" என்றான் சேகர், சற்று எரிச்சலுடன்.
"அவர் விஷயம் தெரிஞ்சவர்னு எங்க அப்பா சொல்லுவாரு. அதோட, அவர் நீதிமன்றத் தீர்ப்புகளையெல்லாம் கூர்ந்து படிக்கிறவராம். நீங்க பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தைக் கொடுத்தீங்கன்னா, அவர்கிட்ட காட்டி அவர் அபிப்பிராயத்தைக் கேட்டுட்டு வரேன்" என்றாள் சுந்தரி.
"உன் திருப்திக்கு வேணும்னா செஞ்சுக்க. அவரோட ஒபினியனுக்கு ஃபீஸ் வேணும்னா கொடுத்துடறேன். ஆனா, அவர் சொல்றதை வச்சு நான் எதுவும் செய்ய மாட்டேன்" என்றான் சேகர்.
"உங்க பார்ட்னர் மேல நிச்சயமா நடவடிக்கை எடுக்க முடியும்னு எங்க சித்தப்பா அடிச்சு சொல்றாரு. இது சம்பந்தமா ஒரு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இருக்காம், அந்தத் தீர்ப்பு பற்றின விவரங்களை எழுதிக் கொடுத்திருக்காரு, பாருங்க!" என்றாள் சுந்தரி, சேகரிடம் ஒரு பேப்பரைக் காட்டி.
"அதான் அப்பவே சொன்னேனே, உன் திருப்திக்கு வேணும்னா அவர்கிட்ட அபிப்பிராயம் கேளு, நான் அதை எடுத்துக்க மாட்டேன்னு!" என்றான் சேகர், எரிச்சலுடன்.
"இந்த பேப்பரை நம்ம வக்கீல்கிட்ட காட்டி, அவர் என்ன சொல்றாருன்னு கேட்டுப் பாருங்களேன்!"
"'பிராக்டீஸ் இல்லாத ஒரு வக்கீல்கிட்ட கேட்டேன், அவர் வேற மாதிரி சொல்றாரு'ன்னு நம்ம வக்கீல்கிட்ட சொல்ல முடியுமா? நம்ம வக்கீல் சொன்ன மாதிரி காம்ப்ரமைசுக்குத்தான் போகப் போறேன்!" என்றான் சேகர்.
அடுத்த சில நாட்களில், சேகர் தன் பார்ட்னருக்கு ஒரு பெரும் தொகையைக் கொடுத்து, அவரை பார்ட்னர்ஷிப்பிலிருந்து விலக வைத்தான்.
"சுந்தரி, உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!" என்றான் சேகர், தயங்கியபடி.
"சொல்லுங்க."
"எங்க கிளப்ல, ஒரு பிரபல வக்கீல் புதுசா உறுப்பினரா சேர்ந்திருக்காரு. நேத்திக்கு கிளப்பில அவரோட பேசிக்கிட்டிருந்தேன். என் பார்ட்னரோட ஏற்பட்ட பிரச்னையைப் பத்தியும், அவருக்குப் பணம் கொடுத்து செட்டில் பண்ணினதையும் சொன்னேன். 'தப்புப் பண்ணிட்டீங்களே! உங்க பார்ட்னர்கிட்டேந்து நஷ்ட ஈடு கேட்டு நீங்க வழக்குப் போட்டிருந்தீங்கன்னா, உங்களுக்கு சாதகமா தீர்ப்பு வந்திருக்கும். ஏன்னா, இது மாதிரி ஒரு வழக்குல, ஏற்கெனவே வந்த ஒரு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உங்களுக்கு சாதகமா இருக்கு'ன்னு சொன்னாரு. உன்னோட சித்தப்பா இதே மாதிரி சொன்னதை அவர்கிட்ட சொன்னேன். 'அந்தத் தீர்ப்பைப் பத்தி ரொம்ப பேருக்குத் தெரிஞ்சிருக்காது, உங்க மனைவியோட சித்தப்பா எப்படி அதை சரியா எடுத்துக் காட்டினாரு!'ன்னு அவர் ஆச்சரியப்பட்டாரு. நான்தான் உன் சித்தப்பா சொன்னதை எடுத்துக்காம, அவசரப்பட்டு, நம்ம வக்கீல் சொன்னபடி காம்ப்ரமைசுக்குப் போயிட்டேன். உன் சித்தப்பா சொன்னதைப் பரிசீலனை பண்ணி இருந்தா, நமக்கு இவ்வளவு பெரிய தொகை நஷ்டம் ஆகி இருக்காது!" என்றான் சேகர், வருத்தத்துடன்.
"சும்மாவா சொன்னாங்க, 'ஏழை சொல் அம்பலம் ஏறாது'ன்னு!" என்றாள் சுந்தரி, பெருமூச்சுடன்.
குறள் 1046:
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
அவன் மனைவி கௌரி, அவனைக் கேள்விக்குறியுடன் பார்த்தாள். பரமேஸ்வரன் தலையைப் பக்கவாட்டில் அசைத்தான்.
"என்ன செய்யப் போறீங்க? நாளைக்குள்ள வாடகையைக் கொடுக்கலேன்னா, வீட்டைக் காலி பண்ணணும்னு வீட்டுக்காரர் சொல்லி இருக்காரே!"
"என்ன செய்யறது? நிறைய இடத்தில கேட்டுப் பாத்துட்டேன். எங்கேயும் பணம் கிடைக்கல."
"ஏங்க, நாம எப்படி இருந்தோம்? சொந்த வீடு, நிறைய வருமானம்னு வசதியோட இருந்த நமக்கு இந்த நிலைமை வரணுமா?"
பரமேஸ்வரன் மௌனமாக இருந்தான்.
"நான் ஒண்ணு சொல்றேன். கேக்கறீங்களா?" என்றாள் கௌரி.
"நீ என்ன சொல்லப் போறேன்னு தெரியும். எங்கம்மாகிட்ட கேக்கறதில எந்தப் பயனும் இல்ல. எங்கிட்ட கோவிச்சுக்கிட்டுத் தன்னோட தங்கை வீட்டில போய் உக்காந்துக்கிட்டிருக்காங்க. அவங்களா எனக்கு உதவப் போறாங்க?" என்றான் பரமேஸ்வரன்.
"என்னதான் அவங்களுக்கு உங்க மேல கோபம் இருந்தாலும், இந்த மாதிரி சமயத்தில உதவாம இருக்க மாட்டாங்க. அவங்களோட நகைகளைக் கேட்டுப் பாருங்க. அடகு வச்சுப் பணம் வாங்கி, வாடகை பாக்கியைக் கட்டிட்டு, அப்புறம் உங்களுக்குப் பணம் வரப்ப, நகைகளை மீட்டு, அவங்ககிட்ட திருப்பிக் கொடுத்துடலாம்!"
சற்று யோசித்த பரமேஸ்வரன், "சரி. கேட்டுப் பாக்கறேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.
"என்னோட நகையெல்லாம் உனக்குத்தாண்டா! ஆனா, இப்ப என்னால கொடுக்க முடியாது!" என்றாள் மரகதம்.
"ஏம்மா? ஒரு அவசரத்துக்குத்தானே கேக்கறேன்? மகன் கஷ்டப்படறப்ப, அம்மா உதவக் கூடாதா?" என்றான் பரமேஸ்வரன்.
"எனக்கு உபதேசம் பண்ணாதேடா!" என்றாள் மரகதம், கோபமாக. "உனக்கு ஒரு கஷ்டம் வந்தா, நீ கேக்காமயே நான் உதவி இருப்பேன். ஆனா, இப்ப உனக்கு வந்திருக்கிற வறுமை இயல்பா வந்தது இல்ல. நீயா வரவழைச்சுக்கிட்டது. உன் அப்பா உனக்கு நிறைய சொத்தை வச்சுட்டுப் போனாரு. நீ அத்தனையையும் சூதாடித் தோத்துட்டுத் தெருவில நிக்கற நிலைமைக்கு வந்திருக்க. இப்ப நான் உனக்கு உதவி செஞ்சா, நீ பண்ணின அக்கிரமத்துக்குத் துணை போன மாதிரிதான் ஆகும். இப்ப, நீ கஷ்டப்படத்தான் வேணும். உன் வீட்டில இருக்கக் கூடாதுன்னுதானே, என் தங்கை வீட்டில வந்து இருக்கேன்? நீ செஞ்ச தப்பை உணர்ந்து திருந்திட்டேன்னு எனக்கு எப்ப தோணுதோ, அப்ப உதவி செய்யறேன். இப்ப நீ போகலாம்."
பரமேஸ்வரன் சோர்வுடன் அங்கிருந்து கிளம்பினான்.
குறள் 1047:
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
"என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?" என்றாள் அவன் மனைவி திலகா.
"ஒண்ணுமில்லை" என்றான் தினகரன்.
ஆனால், அவனிடம் ஒரு சோர்வு இருந்ததை திலகா கவனித்தாள்.
இரவு உணவு முடிந்ததும், "என்ன ஆச்சு? எங்கிட்ட சொல்லலாம் இல்ல?" என்றாள் திலகா.
"எங்க கம்பெனியை ஒரு பெரிய குரூப் வாங்கி இருக்கு. அவங்க நிறைய மாற்றங்களைச் செய்வாங்க. இப்ப வேலை செய்யற பல பேரை வேலையை விட்டு அனுப்பிட்டு, வேற ஆளுங்களைப் போடுவாங்கன்னு ஆஃபீஸ்ல எல்லாரும் பேசிக்கறாங்க. இதுக்கு முன்னால சில கம்பெனிகளை வாங்கினப்ப, அவங்க இப்படி செஞ்சிருக்காங்க. அதனால, நாங்க எல்லாருமே எங்க வேலை போயிடுமோங்கற பயத்தில இருக்கோம்" என்றான் தினகரன்.
"அப்படி நடந்தா பாத்துக்கலாம். அதுக்கு, இப்பவே ஏன் கவலைப்படறீங்க? போய் நல்லாத் தூங்குங்க. காலையில எழுந்ததும் மனசு தெளிஞ்சுடும்" என்றாள் திலகா.
நள்ளிரவில் திடீரென்று ஏதோ அலறல் சத்தம் கேட்டுத் திலகா திடுக்கிட்டு எழுந்தாள். தினகரன் இரண்டு கைகளாலும் தலையை அழுத்திப் பிடித்தபடி அமர்ந்திருந்தான்.
"என்ன ஆச்சு? நீங்களா கத்தினீங்க? கனவு ஏதாவது கண்டீங்களா?" என்றாள் திலகா.
"கனவு இல்லை திலகா, நினைவு. நமக்குக் கல்யாணம் ஆன சில மாசங்கள்ள, எனக்கு வேலை போச்சே, அது நினைவுக்கு வந்தது" என்றான் தினகரன், பதட்டத்துடன்.
"அதுதான், அப்புறம் வேற நல்ல வேலை கிடைச்சுடுச்சே! அதை இப்ப ஏன் நினைக்கிறீங்க?" என்றாள் திலகா, ஆதரவுடன் அவன் கைகளைப் பற்றியபடி.
"அப்ப நீ கர்ப்பமா இருந்த. கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஒழுங்கா சாப்பாடு போட முடியுமோன்னு பயந்து, உன்னை உன் அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டேன். குழந்தை பொறந்து ஆறு மாசம் கழிச்சு, எனக்கு வேற வேலை கிடைச்சப்பறம்தான், உன்னை அழைச்சுக்கிட்டு வந்தேன். அந்த ஒரு வருஷத்தில நான் பட்ட கஷ்டங்களை உங்கிட்ட சொல்லல. அதுவும் குழந்தை பிறந்து சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்தில, கஷ்ட காலத்தைப் பத்திப் பேச வேண்டாம்னு நினைச்சேன். அப்ப நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் இல்ல. எவ்வளவோ நாள் சாப்பிடாம இருந்திருக்கேன். டீ குடிக்கக் கூட காசு இல்லாம இருந்திருக்கேன். இப்ப எனக்கு வேலை போச்சுன்னா, மறுபடி அந்த வறுமையான நிலை வந்துடுமோன்னு நினைச்சப்பதான், என்னை அறியாமயே கத்திட்டேன். அப்ப, வறுமையை நான் தனியா அனுபவிச்சேன். இப்ப, நீயும், நம்ம பொண்ணும் சேர்ந்து இல்ல கஷ்டப்படணும்?" என்றான் தினகரன், உணர்ச்சிப் பெருக்குடன்.
"கவலைப்படாதீங்க. அப்படியெல்லாம் நடக்காது" என்றாள் திலகா, கணவனின் தோளில் ஆறுதலாகத் தன் கையை வைத்து.
குறள் 1048:
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு..
"அருமையாப் பேசினாரு. பெரிய யோகியாச்சே!"
"ஆமாம். யோகின்னா யாரு, யோகா பண்றவரா? எத்தனையோ பேர் யோகா பண்றாங்களே!"
"யோகாசனம் பண்றவங்கல்லாம் யோகி இல்லை. யோகின்னா, விசேஷமான சக்தி உள்ளவங்க."
"விசேஷ சக்தின்னா?"
"விசேஷ சக்தின்னா...தண்ணிக்குள்ள ரொம்ப நேரம் இருக்கறது, ஆணிப் படுக்கையில படுத்துக்கிட்டு இருக்கறது, நெருப்புக்கு நடுவில நின்னு தவம் பண்றது இது மாதிரி எல்லாம்."
"நெருப்புக்கு நடுவில நின்னு தவம் பண்ண முடியுமா என்ன?"
"நீ கேள்விப்பட்டதில்ல, அந்தக் காலத்தில முனிவர்கள் எல்லாம் நாலு பக்கமும் நெருப்பு, மேலே சூரியன்னு அஞ்சு நெருப்புகளுக்கு நடுவில நின்னு தவம் பண்ணுவாங்கன்னு?"
"ராஜஸ்தான்ல ஒரு யோகி இருக்காராம். அவர் நெருப்பு மேலேயே படுத்துத் தூங்குவாராம்!"
"உடன்கட்டை ஏறுவது மாதிரியா?"
"உடன்கட்டை ஏறுவதுன்னா, நெருப்பில விழுந்து சாகறது. இவர் நெருப்பு மேல படுத்துத் தூங்கிட்டு, உடம்பில ஒரு தீக்காயம் கூடப் படாம எழுந்து வந்துடுவாரு."
இதைக் கேட்டதும், கூட்டத்தில் நடந்து வந்து கொண்டிருந்த சந்திரன், தன்னை அறியாமல் களுக்கென்று சிரித்து விட்டான்.
பேசிக் கொண்டு சென்றவர்களில் ஒருவர், சந்திரனைத் திரும்பிப் பார்த்து முறைத்து, "எதுக்கு சிரிக்கிறீங்க? நான் சொல்றது உண்மை!" என்றார்.
"இருக்கலாம். ஆனா நெருப்பு மேல படுத்துத் தூங்கற அந்த யோகியால, பட்டினியோட தூங்க முடியுமான்னு நினைச்சுப் பார்த்தேன். சிரிப்பு வந்தது" என்றான் சந்திரன்.
காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் உடலும் மனமும் சோர்ந்திருந்ததால், மனதைத் திசை திருப்புவதற்காக, அந்தச் சொற்பொழிவுக்கு வந்து விட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த சந்திரனுக்குப் பட்டினியால் உடல் சோர்ந்திருந்த நிலையிலும், தன்னால் எப்படிச் சிரிக்க முடிந்தது என்று நினைத்தபோது, வியப்பாக இருந்தது.
குறள் 1049:
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
"சியாமளாவாத்தான் இருக்கும்" என்று தன் கணவன் குமரேசனிடம் கூறியபடியே கதவைத் திறந்தாள் சிந்து.
சியாமளாதான்! பக்கத்து வீட்டில் வசிப்பவள். கையில் ஒரு மூடப்பட்ட பாத்திரத்துடன் நின்று கொண்டிருந்தாள்.
"கேழ்வரகு தோசை செஞ்சேன். உன் குழந்தைக்காக ரெண்டு எடுத்துக்கிட்டு வந்தேன்!" என்றாள் சியாமளா, பாத்திரத்தை சிந்துவிடம் நீட்டியபடியே.
"எதுக்கு அக்கா இதெல்லாம்?" என்றாள் சிந்து, சங்கடத்துடன்.
சியாமளா பதில் சொல்லாமல் சிரித்து விட்டுப் பாத்திரத்தை சிந்நுவிடம் கொடுத்து விட்டுக் கிளம்பினாள்.
"எவ்வளவு தோசை வச்சிருக்காங்க?" என்றான் குமரேசன்.
சிந்து பாத்திரத்துக்குள் விரலை விட்டு எண்ணிப் பார்த்து விட்டு, "ஆறு தோசை இருக்கு" என்றாள்.
"குழந்தை ஆறு தோசை சாப்பிடுமா?" என்றான் குமரேசன், இலேசாகச் சிரித்தபடி.
"நம்ம மூணு பேருக்கும் சேர்த்துத்தான் கொடுத்திருக்காங்க. நம்ம நிலைமை தெரிஞ்சு, அடிக்கடி இப்படி ஏதாவது கொடுத்துக்கிட்டுத்தான் இருக்காங்க!"
"முன்னெல்லாம், வயசான காலத்தில, பல பேர் எல்லாத்தையும் துறந்துட்டு, காட்டுக்குப் போயிடுவாங்களாம். அங்கே கிடைக்கிற பழத்தையோ, காயையோ சாப்பிட்டுட்டுக் காலத்தைக் கழிச்சுடுவாங்களாம். அது மாதிரி நம்மால போக முடியல. அதனால, சியாமளா மாதிரி நல்லவங்க, அவங்க குடிக்கற கஞ்சியையோ, கூழையோ கூட நம்மகிட்ட பகிர்ந்துக்க வேண்டி இருக்கு. நாமும் வேண்டாம்னு சொல்ற நிலையில இல்ல!" என்றான் குமரேசன், இயலாமையுடன்.
"அப்படியே காட்டுக்குப் போக முடிஞ்சாலும், நம்ம குழந்தையை விட்டுட்டு எப்படிப் போறது?"
"ஒரு பேச்சுக்குச் சொன்னேன். வறுமையை விட்டு அவ்வளவு சுலபமா விலகிட முடியுமா? நாம கஷ்டப்படறதோட, மத்தவங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு வாழறதுதான் நம்ம வாழ்க்கைன்னு ஆகிப் போச்சு!" என்றான் குமரேசன், ஒரு தோசையை விண்டு வாயில் போட்டுக் கொண்டபடியே.
குறள் 1050:
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
No comments:
Post a Comment