Wednesday, November 1, 2023

1013. பேச்சில் ஒரு பிழை!

"நம்ம ஆண்டு விழாவுக்கு சிறப்புப் பேச்சாளரா புலவர் லட்சுமணனைக் கூப்பிடலாம்னு கமிட்டியில முடிவு செஞ்சிருக்கோம். உங்களுக்குத்தான் அவரை நல்லா பழக்கம் உண்டே! நீங்க என்னோட வந்தீங்கன்னா நாம ரெண்டு பேரும் சேர்ந்து போய் அவரைக் கூப்பிட்டுட்டு வரலாம்" என்றார் சங்கத்தின் தலைவர் நித்யானந்தன்.

"அவர் கொஞ்ச நாளா கூட்டங்கள்ள பேசறது இல்லையே!" என்றார் ஞானசேகரன்.

"ஏன் அப்படி?" என்றார் நித்யானந்தன் வியப்புடன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவத்தை ஞானசேகரன் விவரித்தார்.

"நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம். 'நகரேஷு காஞ்சி' என்று ஆதிசங்கரரே கூறி இருக்கிறார்." 

லட்சுமணன் பேசிக் கொண்டிருந்தபோது அவையிலிருந்து ஒருவர் கையை உயர்த்தினார்.

லட்சுமணன் பேச்சை நிறுத்தி விட்டு அவரைப் பார்த்தார்.

கையை உயர்த்தியவர் எழுந்து நின்று, "நகரேஷு காஞ்சி என்று சொன்னவர் ஆதிசங்கரர் இல்லை, காளிதாசன்.

"நகரேஷு காஞ்சி
நாரிணாம் ரம்பா
புஷ்பேஷு ஜாதி
புருஷேஷு விஷ்ணுஹு.

அதாவது நகரங்களில் சிறந்தது காஞ்சி, பெண்களில் சிறந்தவள் ரம்பை, பூக்களில் சிறந்தது ஜாதிப்பூ, புருஷர்களில் சிறந்தவர் விஷ்ணு என்பது இதன் பொருள்'" என்று ஒரு குட்டிப் பிரசங்கமே செய்து விட்டு அமர்ந்து கொண்டார்.

"மன்னிக்க வேண்டும். நான் இதைச் சொன்னவர் ஆதிசங்கரர் என்று இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். என் தவறைத் திருத்தியதற்கு நன்றி" என்றார் லட்சுமணன்.

அதற்குப் பிறகு அவர் பேச்சில் சுவாரசியம் சற்றுக் குறைந்து விட்டது. சில நிமிடங்களில் தன் பேச்சை முடித்து விட்டு அமர்ந்து கொண்டார்.

"அதுக்கப்புறம் ரெண்டு மாசமா அவர் எங்கே பேசக் கூப்பிட்டாலும் ஒப்புக் கொள்றதில்ல" என்றார் ஞானசேகரன்.

"ஏன்?" என்றார் வியப்புடன்.

"பொது மேடையில ஒரு விஷயத்தைத் தப்பா சொன்னதை வெட்கப்பட வேண்டிய விஷயமா அவர் நினைக்கிறாரு."

"இதில வெட்கப்படறதுக்கு என்ன இருக்கு? அவர் தமிழ்ப் புலவர். தமிழ்ல எதையும் அவர் தப்பா சொல்லலியே! ஒரு சம்ஸ்கிருத செய்யுளை எழுதினவர் பேரைத் தப்பா சொன்னதுக்காக அவர் வெட்கப்படணுமா என்ன?"

"நானும் அவர்கிட்ட இதைத்தான் கேட்டேன். அவர் சொன்னாரு. 'மேடையில பேசும்போது தவறான கருத்துக்களைப் பேசக் கூடாது. ஒருநாள் டிவியில ஒத்தர் இந்த வரியைச் சொல்லி அதை ஆதிசங்கர்ர் சொன்னதாச் சொன்னாரு. அதைத்தான் நான் சொன்னேன். அதை நான் பயன்படுத்தறதுக்கு முன்னால சம்ஸ்கிருதம் தெரிஞ்ச யார்கிட்டேயாவது கேட்டிருக்கணும், அல்லது ஏதாவது புத்தகத்தைப் பார்த்திருக்கணும். அப்படியெல்லாம் செய்யாம அதை மேடையில பயன்படுத்தினது தப்பு. அதைத் தப்புன்னு ஒத்தர் சுட்டிக் காட்டினபோது, இவ்வளவு படிச்சிருந்தும், யாரோ சொன்ன கருத்தைச் சரிபார்க்காம பயன்படுத்திட்டதை நினைச்சா எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு. இந்த வெட்க உணர்விலேந்து நான் மீளக் கொஞ்ச நாள் ஆகும். அது வரையிலும் நான் எங்கேயும் போய்ப் பேசப் போறதில்லை' ன்னு சொன்னாரு" என்றார் ஞானசேகரன்.

"எவ்வளவோ பேரு எவ்வளவோ தப்பான விஷயங்களைப் பேசிட்டு, யாராவது அதைத் தப்புன்னு சுட்டிக் காட்டினா, அப்படியான்னு கேட்டுட்டு கொஞ்சம் கூட சங்கடப்படாம அதைக் கடந்து போயிடறாங்க. இவரை மாதிரி ஒரு பண்பாளர் இருக்கறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு" என்றார் நித்யானந்தன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை

குறள் 1013:
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.

பொருள்: 
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்ல பண்பை இருப்பிடமாகக் கொண்டது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...