Thursday, November 29, 2018

387. தலைவரின் சந்தேகம்

குமரன் அவன் பொறுப்பில் இருக்கும் கட்சியின் கிளை அலுவலகத்துக்குப் போனபோது, அங்கே நான்கு பேர் அவனுக்காகக் காத்திருந்தார்கள்.

"வணக்கம். வாங்க" என்றான் குமரன்.

"ஏம்ப்பா, நீ செய்யறது நல்லா இருக்கா? ரெண்டு நாள் முன்னாடி உங்க கட்சித் தலைவர் மீட்டிங்குக்காகப் போட்ட மேடையை இன்னும் பிரிக்கல. ரோட்டில போறவங்களுக்கு எவ்வளவு இடைஞ்சலா இருக்கு தெரியுமா?" என்றார் ஒருவர்.

"மன்னிச்சுக்கங்க. முந்தாநாள் ராத்திரி மீட்டிங் நடந்தது. நேத்திக்கே மேடையைப் பிரிக்கச் சொன்னேன். தலைவர்  நேத்து இங்க தங்கி இருந்ததால கட்சிக்காரங்கள்ளாம் அவர் பின்னாடியே இருந்துட்டாங்க. இன்னிக்குக் காலையிலேயே மேடையைப் பிரிக்க ஆளை அனுப்பி இருக்கேன். வேலை நடந்துக்கிட்டிருக்கும். தாமதத்துக்கு மன்னிச்சுக்கங்க" என்று கை கூப்பினான் குமரன்.

"மேடை போடத் தெரியுது. பிரிக்கத் தெரியல"என்று முணுமுணுத்தபடியே அந்த நான்கு பேரும் அங்கிருந்து சென்றனர்.

"இவங்களுக்கு நம்ம கட்சியைப் பிடிக்காது. மத்த கட்சிக்காரன்லாம் மேடை போட்டா, பத்து நாள் கழிச்சுத்தான் பிரிக்கறான். அவங்களை இவங்க எதுவும் கேக்க மாட்டாங்க. 'மெதுவாத்தான்யா பிரிப்போம். உன்னால ஆனதைப் பாத்துக்க'ன்னு சொல்றதை விட்டு இவர்களுக்கெல்லாம் நீ பொறுமையா பதில் சொல்லிக்கிட்டிருக்கே. மன்னிப்பு வேற கேக்கற. எனக்குப் பத்திக்கிட்டு வந்தது" என்றான் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சோமு

"கேட்டதுக்கு ஒழுங்கா பதில் சொல்ல வேண்டாமா? கொஞ்சம் பணிவாப் பேசறதில தப்பு இல்லையே?" என்றான் குமரன்.

"நேத்திக்கு ஒரு தமாஷ் நடந்தது. நீ இல்லையே!" என்றான் சோமு.

"என்ன தமாஷ்?"

"கொஞ்ச நாள் முன்ன வெள்ளம் வந்தப்ப, நீ உன் வீட்டிலேந்து சாப்பாடு செஞ்சு எடுத்துக்கிட்டு வந்து, அதை கட்சி அலுவலகத்தில் வச்சு பாதிக்கப்பட்டவங்களுக்கு விநியோகம் பண்ணினதை, கட்சிப் பணத்தில அரிசி, காய்கறி எல்லாம் வாங்கி, உனக்குப் பேர் வரணுங்கறதுக்காக உன் வீட்டில சமையல் செஞ்சு நீ கொடுத்த மாதிரி காட்டிக்கிட்டதா தலைவர் கிட்ட யாரோ தப்பா சொல்லிட்டாங்க. தலைவர் எங்கிட்ட தனியா விசாரிச்சார். நான் சொன்னேன்: "ஐயா! அவன் தன் சொந்தப பணத்திலதான் எல்லாம் செஞ்சான். கட்சிக்கு நல்ல பேர் வரட்டும்னு, அவன் வீட்டில செஞ்ச சாப்பாட்டை, கட்சி ஆபீஸ்ல கொண்டு வச்சு விநியோகம் பண்ணினான். இந்த மாதிரி யாரும் செய்ய மாட்டாங்க ஐயா'ன்னு சொன்னேன். தலைவர் ஆச்சரியப்பட்டாரு."

"அப்படியா? ஆனா, அவருக்கு இன்னும் சந்தேகம் தீர்ந்த மாதிரி தெரியல. அடுத்த வாரம் என்னைத் தலைமை அலுவலகத்துக்கு வரச் சொல்லி இருக்காரு. எங்கிட்ட நேரா விசாரிக்க விரும்பறாரு போலருக்கு" என்றான் குமரன்.

"வாப்பா குமரன்! உன்னைப் பத்தி நிறையக் கேள்விப்பட்டேன்" என்றார் தலைவர்.

"ஐயா! அது உண்மை இல்லைங்க..." என்று ஆரம்பித்தான் குமரன்.

"எது உண்மை இல்லை? நீ எல்லார்கிட்டேயும் பொறுமையாப் பழகி ஊர்ல நல்ல பேரு வாங்கி இருக்கறதா கேள்விப்பட்டேன். அது உண்மையில்லையா? உன் செலவில் ஊருக்கெல்லாம் உணவு கொடுத்து, அதைக் கட்சி செஞ்ச மாதிரி காட்டினதாக் கேள்விப்பட்டேன், அது உண்மை இல்லையா?" என்றார் தலைவர் சிரித்தபடி.

"ஐயா!" என்றான் குமரன்.

"உன்னை மாதிரி ஆள்தான் கட்சிக்கு வேணும். கட்சிக்கு மட்டும் இல்ல, நாட்டுக்கும் வேணும். வரப்போற  சட்டமன்றத் தேர்தல்ல உன் தொகுதியில நம் கட்சி வேட்பாளர் நீதான். இதைச் சொல்லத்தான் உன்னை வரச் சொன்னேன்" என்றார் தலைவர்.
பொருட்பால்
அரசியல் இயல் 
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)
குறள் 387:
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

பொருள்:
இன்சொல் பேசி, ஈகை செய்து வாழும் அரசனை, உலகம் புகழ்ந்து, அவன்  விரும்பியவற்றை  நிறைவேற்றும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால் 

Friday, November 23, 2018

386. வெளிநாட்டுப் பயணம்

"அரசே! தாங்கள் கூறியபடியே,  அண்டை நாடுகளுக்கு தூதுவர்களை அனுப்பி, நம் இளவரசர் ஆறு அண்டை நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் சென்று வர ஏற்பாடு செய்து விட்டேன். நம் இளவரசர் தங்கள் நாட்டுக்கு வருவது பற்றி, ஆறு அண்டை நாட்டு மன்னர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி" என்றார் அமைச்சர்.

"நல்லது. இளவரசன் மாறவர்மன் நாளையே கிளம்பி, ஒவ்வொரு நாட்டிலும் ஒரு வாரம் தங்கி, அந்த நாட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு வரட்டும்" என்றார் மன்னர் ராஜவர்மர்.

"மன்னரே! எதற்கு இந்த சுற்றுப் பயணம் என்று தெரிந்து கொள்ளலாமா?"

"இளவரசனின் உலக அறிவு வளர வேண்டும் என்பதற்காகத்தான்" என்றார்  ராஜவர்மர்  சிரித்தபடி.

அமைச்சர் புரியாதவராக அரசரைப் பார்த்தார்.

று நாடுகளுக்கும் சென்று திரும்பியதும் இளவரசன் மாறவர்மன் தந்தையைச் சந்தித்தான். அப்போது அமைச்சரும் உடனிருந்தார்.

"பயணம் எப்படி இருந்தது?" என்றார் அரசர்.

"நன்றாக இருந்தது. ஆறு நாடுகளுமே நம்மை விட மிகவும் சிறிய நாடுகள் என்பதால், நான் அங்கு போனதை அவர்கள் எல்லோருமே தங்களுக்கு ஒரு கௌரவமாக நினைத்தார்கள்."

"நான் சொன்னபடி செய்தாயா?'

"செய்தேன். ஒரு நாள் அரண்மனையில் தங்கி அங்கு நடப்பவற்றை  கவனித்தேன், அதன் பிறகு நான்கைந்து நாட்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றேன். மக்கள் சிலரிடம் இயல்பாக உரையாடினேன்."

"சரி. ஆறு நாடுகளிலும் மக்கள் மன்னர்களைச் சந்திப்பது எளிதாக இருந்ததா?'

"இரண்டு நாடுகளில் மட்டும்தான் அப்படி இருந்தது. மற்ற நான்கு நாடுகளிலும் மன்னரை மக்கள் சந்திப்பது எளிதானதாக இல்லை."

"சரி. எல்லா நாட்டு மன்னர்களும் மற்றவர்களிடம் இனிமையாக நடந்து கொண்டார்களா?"

"இல்லை. ஒரு மன்னர் மட்டும்தான் எல்லோரிடமும் இனிமையாகப் பழகினார். மற்ற ஐந்து மன்னர்களும் அமைச்சர்களிடமும், மற்றவர்களிடம் அடிக்கடி கோபமாகப் பேசினார்கள்."

"சரி. நீ  சொன்ன இந்த இரண்டு விஷயங்களின் அடிப்படையிலும், மக்களிடம் நீ பேசியதன் அடிப்படையிலும் நீ உணர்ந்து கொண்டது என்ன என்று சொல்ல முடியுமா?" என்றார் அரசர்.

இளவரசன் ஓரிரு நிமிடங்கள் யோசித்து விட்டு, "நீங்கள் சொன்ன பிறகுதான் எனக்குப் புரிகிறது. கௌதம நாட்டில் மட்டும்தான் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அரசரையும், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் புகழ்ந்து பேசினர். கௌதம நாட்டு மன்னரை  மக்கள்  எளிதாகச்  சந்திக்க முடியும். அவர் அதிகம் கடிந்து பேசாத இயல்புடையவர்.

"மற்ற ஐந்து நாடுகளில், மக்களிடம் அதிருப்தி இருந்தது. அவற்றில் குசல நாட்டில் மட்டும் அதிருப்தி குறைவாக இருந்தது. குசல நாட்டு மன்னரை  மக்களால் எளிதில் சந்திக்க முடியும். ஆயினும் அவர் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் கடிந்து பேசக் கூடியவர் என்பதால், அவருக்கு ஆலோசனை சொல்ல அமைச்சர்கள் அஞ்சியதைப் பார்க்க முடிந்தது. 

"மற்ற நான்கு நாட்டு மன்னர்களிடம் இந்த இரண்டு குறைகளுமே இருந்ததால், அங்கே மக்களின் குறைகள் தீர்க்கப்படாமல் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அங்கே அதிருப்தி அதிகமாக நிலவுகிறது என்று நினைக்கிறேன்" என்றான் இளவரசன்.

"ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டாயா?" என்றார் அரசர்.

"புரிந்து கொண்டேன் தந்தையே!" என்றான் மாறவர்மன்.

"இளவரசனை எதற்கு ஆறு நாடுகளுக்கும் அனுப்பினேன் என்று இப்போது புரிகிறதா அமைச்சரே?" என்றார் அரசர்.

"புரிகிறது அரசே.அடுத்த மாதம் இளவரசுரர் முடி சூட்டிக் கொண்டு அரசாளத்  துவங்கும் முன், அவர் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் அனுப்பி இருக்கிறீர்கள். 'இளவரசர் உலக அறிவு வளரத்தான் இந்தப் பயணம்' என்று நீங்கள் சொன்னதன் பொருள் இப்போதுதான் எனக்கு விளங்குகிறது. ஆனால், இளவரசர் தங்களைப் பார்த்தே இவற்றை அறிந்து கொண்டிருக்கலாமே!" என்றார் அமைச்சர்.

"மாறுபட்ட இயல்புகளைப்  பார்த்து, அவற்றின் விளைவுகள் என்ன என்பதையும் பார்த்தால், இன்னும் சற்று ஆழமாகப் புரியும் அல்லவா?" என்றார் ராஜவர்மன். 

பொருட்பால்
அரசியல் இயல் 
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)
குறள் 386:
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

பொருள்:
மக்களால் எளிதில் காணக் கூடியவனாகவும், கடுமையான சொற்களைப்  பயன்படுத்தாதவனாகவும் இருக்கும் அரசனை உலகம் போற்றும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ.

அறத்துப்பால்                                                                         காமத்துப்பால் 

Wednesday, November 21, 2018

385. குடும்பத் தலைவி

நண்பனின் சிபாரிசின் பேரில் அந்த நிதி ஆலோசனை நிறுவனத்துக்குச் சென்றான் மதி.

"உன் குடும்பத்தில யார் யார் இருக்காங்க, அவங்க வயசு என்ன, உங்க குடும்பத்துக்கான மாதாந்தரச் செலவுகள் என்ன மாதிரி விவரங்களை முதல்ல கேட்டுப்பாங்க. அப்புறம் உன் பிள்ளை, பெண்ணை என்ன படிக்க வைக்க விரும்பற, அதுக்கு எவ்வளவு செலவாகும், அவங்களுக்குக் கல்யாணம் சுமாரா எத்தனை வயசில நடக்கும், அதுக்கு எவ்வளவு செலவாகும், அப்புறம் நீ 60 வயசில ரிடையர் ஆகறேன்னா, அதுக்கப்பறம் நூறு வயசு வரை உனக்கும் உன் மனைவிக்கும் குடும்பச் செலவுக்கு வருமானம் வர அளவுக்கு ரிடயர்மெண்ட் சமயத்தில மொத்தத்தொகை எவ்வளவு வேணும், இதையெல்லாம் கணக்குப் போட்டுச் சொல்லிடுவாங்க" என்றான் அவன் நண்பன் கிட்டு.

"அது எப்படி? இன்னும் 10 வருஷம் கழிச்சு படிப்புச் செலவு எவ்வளவு ஆகும், 20 வருஷம் கழிச்சு கல்யாணச் செலவு எவ்வளவு ஆகும், நான் ரிடையர் ஆகற சமயத்தில மாதாந்தரச் செலவு எவ்வளவு ஆகும் இதையெல்லாம் இப்ப எப்படிச் சொல்ல முடியும்?" என்றான் மதி.

"இப்ப இருக்கற அளவிலேந்து ஆண்டுக்குப் பண வீக்கம் 8% இருக்கும்னு வச்சுக் கணக்குப் போடுவாங்க. எனக்கு அப்படித்தானே போட்டுக் கொடுத்தாங்க?"

"அது சரி. இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு என்ன பிரயோசனம்?'

"இந்தச் செலவுக்கெல்லாம் நமக்குப் பணம் வேணும்னா, நாம இப்பலேந்தே மாசத்துக்கு எவ்வளவு சேமிக்கணும், எதில முதலீடு செஞ்சா, எவ்வளவு ரிடர்ன் வரும்னு சொல்லுவாங்க."

"சரி. மாசம் இவ்வளவு ரூபா சேமிக்கணும்னு கணக்குப் போட்டு சொல்றாங்க. நம்ம வருமானத்தில் அவ்வளவு தொகை சேமிக்க முடியாதுன்னா என்ன செய்யறது?" என்றான் மதி.

"என் நிலைமை அப்படித்தானே இருக்கு!" என்றான் கிட்டு, பெருமூச்சுடன்.

"இதுக்கு எவ்வளவு சார்ஜ் பண்ணுவீங்க?" என்றான் மதி.

"இது ஃப்ரீ சர்வீஸ் சார்! இந்த சாஃப்ட்வேரை உருவாக்க எங்களுக்கு ரெண்டு லட்ச ரூபாய் செலவாச்சு. ஆனா, நாங்க இந்த சேவையை, பொது மக்களோட நன்மைக்காக இலவசமா வழங்கறோம்" என்றார் நிதி ஆலோசகர்.

"இதில உங்களுக்கு என்ன லாபம்?" என்றான் மதி.

"நாங்க கொடுக்கற ரிப்போர்ட்டின் அடிப்படையில நீங்க எவ்வளவு சேமிக்கணும்னு சொல்லுவோம். நீங்க விரும்பினா, நாங்க சிபாரிசு செய்யற பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். உங்க முதலீட்டுத் தொகையில் அரை சதவீதம் எங்களுக்கு கமிஷனா கிடைக்கும். அதுதான் எங்களுக்குக் கிடைக்கிற லாபம்" என்றார் அவர்.

"சரி. நீங்க சொல்ற தொகையை சேமிக்கற அளவுக்கு என் வருமானம் இல்லேன்னா?" என்று நண்பனிடம் கேட்ட கேள்வியைக் கேட்டான் மதி.

"ரெண்டு வழிதான் சார் இருக்கு. ஒண்ணு, நீங்க விரும்புகிற விஷயங்களைக் குறைச்சுக்கணும். உதாரணமா, உங்க குழந்தைகளுக்கு பி.ஈ, எம்.பி.பி.எஸ்.   படிப்பு வேண்டாம், பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் படிப்பு போதும்னு முடிவு செய்யலாம்."

"இன்னொரு வழி?"

"உங்க வருமானத்தைப் பெருக்கிக்கறது. வேற வேலை தேடியோ, அல்லது சொந்தத் தொழில் செஞ்சோ!"

அவர்கள் கொடுத்த படிவத்தில் விபரங்களை எழுதிக் கொடுத்தான் மதி.

அவன் கொடுத்த விவரங்களை அவர் கம்ப்யூட்டரில் பதிவு செய்து முடித்த சில வினாடிகளில் கம்ப்யூட்டர் ஒரு ரிப்போர்ட்டை பிரிண்ட்டர் மூலம் அளித்தது.

ரிப்போர்ட்டைப் படித்துப் பார்த்த மதி, ஆலோசகரிடம், "ரொம்ப ஆச்சரியமா இருக்கு சார்! கிட்டத்தட்ட நீங்க சொன்ன அதே தொகையை நான் இப்ப சேமிச்சுக்கிட்டிருக்கேன்" என்றான் மதி.

"அது எப்படி சார்?" என்றார் ஆலோசகர் வியப்புடன்.

"அஞ்சு வருஷம் முன்னால எனக்குக் கல்யாணம் ஆச்சு. சில மாசங்களிலேயே என் மனைவி, எங்கிட்ட பேசி,  கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு கணக்குப் போட்டாள் - பிறக்கப் போற குழந்தைகளையும் கணக்கில எடுத்துக்கிட்டு! அவ கம்ப்யூட்டர் பயன்படுத்தல. ஒரு பேப்பர், பேனா, கால்குலேட்டர் வச்சு ரொம்ப தோராயமா ஒரு கணக்குப் போட்டா. போட்டு முடிச்சதும், 'நீங்க இப்ப வாங்கற சம்பளத்தில் இதையெல்லாம் செய்ய முடியாது. வேற வேலைக்கு முயற்சி செய்யுங்க. உங்க படிப்புக்கும், திறமைக்கும் கண்டிப்பா நல்ல வேலை கிடைக்கும்'னு சொன்னா. அது மாதிரி முயற்சி செஞ்சு, அதிக சம்பளத்தில வேலை கிடைச்சு, நீங்க கணக்குப் போட்டு சொல்ற தொகையை சேமிச்சுக்கிட்டிருக்கேன். ரெண்டு வருஷம் முன்னாடியே சேமிக்க ஆரம்பிச்சுட்டதால கொஞ்சம் குஷன் கூட இருக்கும்னு நினைக்கறேன். உங்க ரிப்போர்ட்டுக்கு நன்றி. புதுசா ஏதாவது முதலீடு பண்றப்ப கண்டிப்பா உங்க மூலமா பண்றேன்" என்று சொல்லி விடைபெற்றான் மதி.
பொருட்பால்
அரசியல் இயல் 
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)
குறள் 385:
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

பொருள்:
பொருள் வரும் வழிகளைத் திட்டமிடுதல், பொருள் ஈட்டல், ஈட்டிய பொருளைப் பாதுகாத்தல், பொருளை முறையாகப் பங்கிடுதல் ஆகியவற்றை ஒரு அரசன் திறமையாகச் செய்ய வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ.

அறத்த                                                                                  காமத்துப்பால் 

Wednesday, November 7, 2018

384. ஊர்ப் பஞ்சாயத்து

"தலையாரிங்கறவரு ஊருக்குக் காவலா இருந்து, ஊர் ஜனங்க கட்டுப்பாட்டோட இருக்கும்படி பாத்துக்கணும். அவரே தப்புப்  பண்ணினா என்ன செய்யறது?" என்றார் மாணிக்கம்.

"அவரு தப்புப் பண்ணினாரா இல்லையான்னு தீர்மானிக்கத்தானே பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கோம்? விசாரிப்போம்!" என்றார்  பஞ்சாயத்துத் தலைவர் கணேசன்.

"இந்த ஆளு என்னை அரிவாளை எடுத்து வெட்ட வந்தான் ஐயா!" என்றார் மாணிக்கம் ஆவேசத்துடன்.

"என்னய்யா? அரிவாளால வெட்டப் போனியா?" என்றார் கணேசன்.

"வெட்டப்போகல ஐயா! ஆனா அரிவாளை ஓங்கினேன்" என்றான் தலையாரி மாரிமுத்து.

"பாத்தீங்களா? அவனே ஒத்துக்கறான். முதல்ல அவனை இந்தப் பதவியிலேந்து தூக்குங்க!" என்றார் மாணிக்கம் .

"இங்க பாருங்க மாணிக்கம். பஞ்சாயத்துதான் உத்தரவு போடணும். நீங்க பஞ்சாயத்துக்கு உத்தரவு போடக் கூடாது" என்ற கணேசன், "சரி. இது நடந்தப்ப பாத்தவங்க யாராவது இருக்காங்களா?" என்றார்.

"என்னோட ஆளுங்க பத்து பேரு இருந்தாங்க. அவங்க இருக்கறப்பவே என்னை வெட்ட வந்தான் அவன். எவ்வளவு திமிரு இருக்கணும்?" என்றார் மாணிக்கம்.

"சரி. மாரிமுத்து, மாணிக்கம் ரெண்டு பேரும் தெருக்கோடியில் போய் நில்லுங்க. சாட்சிகளை விசாரிச்சுட்டு, உங்களைக் கூப்பிடறோம்" என்றார் கணேசன்.

"ஐயா! அவங்க பத்து பேரும் அவரோட ஆளுங்க. அவங்க அவருக்கு சாதகமாத்தான் பேசுவாங்க" என்றான் மாரிமுத்து.

"அதுக்கு என்ன செய்யறது? பக்கத்தில இருந்து பாத்தவங்களைத்தானே சாட்சிக்கு கூப்பிட முடியும்? யாரு உண்மை பேசறாங்க, யாரு பொய் பேசறாங்கன்னு எங்களால கண்டுபிடிக்க முடியும்" என்றார் கணேசன்.

அரை மணி நேரம் கழித்து அவர்கள் இருவரையும் அழைத்து வரச்  சொன்னார்.கணேசன்.

"பத்து பேரையும் தனித்தனியா விசாரிச்சோம். அவங்க மாணிக்கத்தோட ஆளுங்கங்கறதால அவருக்கு சாதகமாத்தான் பேசினாங்க. ஆனா ஒவ்வொத்தர்கிட்டயும் தனித்தனியாப் பேசினதில என்ன நடந்ததுங்கறதை நாங்க தெளிவாப் புரிஞ்சுக்கிட்டோம்.

"நேத்து ராத்திரி, ஊர்க் கண்மாயிலேந்து ஆளுங்களை வச்சு சின்ன கால்வாய் வெட்டி தன்  வயலுக்குத் தண்ணி பாய்ச்சி இருக்காரு மாணிக்கம். அப்ப ரோந்து வந்த தலையாரி மாரிமுத்து அதைப் பாத்துட்டு அதைத் தடுத்திருக்கான். மாணிக்கத்தோட ஆளுங்க தாங்க வெட்டின இடத்தை மண் போட்டு மூடிட்டு  வீட்டுக்குப் போயிட்டாங்க.   

"இன்னிக்குக் காலையில, மாணிக்கம் தன் ஆட்களோட மாரிமுத்துவைத் தேடித் போயிருக்காரு. ஊர்ப் பஞ்சாயத்தில புகார் கொடுக்காதேன்னு அவன்கிட்ட சொல்லி இருக்காரு. ஆனா புகார் கொடுக்கப் போறதா மாரிமுத்து சொல்லி இருக்கான். மாணிக்கம் அவனுக்குப் பணம் கொடுத்து அவன் வாயை மூடப் பாத்திருக்காரு. ஆனா மாரிமுத்து அதுக்கு மசியலை. அதனால மாணிக்கம் கோபப்பட்டு அவனை ரொம்ப மோசமாத் திட்டி இருக்காரு. தன் குடும்பத்தைப் பத்தி மாணிக்கம் தப்பாப் பேசினதால மாரிமுத்துவுக்குக் கோபம் வந்து அரிவாளை ஓங்கி இருக்கான். இப்ப நாங்க என்ன செய்யணும்னு சொல்லுங்க" என்றார் கணேசன்.

யாரும் பதில் சொல்லவில்லை.

"இதில எனக்கு நாலு விஷயம் தெரியுது. முதல்ல. மாரிமுத்து நியாயமா நடந்துக்கிட்டிருக்கான். ரெண்டாவது, பணம் கொடுத்தப்ப வாங்காம இருந்து தான் நியாயத்துக்கு விரோதமா நடந்துக்க மாட்டேன்னு காட்டி இருக்கான். மூணாவதா, தன்  குடும்பத்தைப் பத்தித் தப்பாப் பேசினதும் அவனுக்குக் கோபம் வந்திருக்கு. மானம் உள்ள எந்த மனுஷனுக்கும் வரக் கூடியதுதான் இது. கடைசியா, மாணிக்கம் தன் ஆட்கள் பத்து பேரோட இருந்தப்பவும் தைரியமா அரிவாளை ஓங்கி இருக்கான். ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய வீரம் அவன்கிட்ட இருக்கு. அதைப் பாராட்டணும். அவன் அரிவாளால வெட்டல. அரிவாளை ஓங்கினது அவனோட கோபத்தைக் காட்டத்தான். அதனால, தலையாரியா இருக்க மாரிமுத்து எல்லா விதத்திலேயும் தகுதி படைச்சவன்னு நாங்க நினைக்கறோம். கண்மாயிலேந்து கால்வாய் வெட்டித் தண்ணி இழுத்ததா மாணிக்கத்து மேல யாராவது புகார் கொடுத்தா அதைத் தனியா இன்னொரு நாளைக்கு விசாரிப்போம்" என்றார் கணேசன்.

பொருட்பால்
அரசியல் இயல் 
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)
குறள் 384:
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

பொருள்:
அறத்திலிருந்து வழுவாமல், அறம் அல்லாதவற்றை விலக்கி, வீரத்துடனும், மானத்துடனும் செயல்படுபவனே நல்ல அரசன்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ.

அறத்துப்பால்                                                                        காமத்துப்பால் 


Sunday, November 4, 2018

383. முன்னாள் முதல்வர்

"இவர் 'நாம்' பத்திரிகையிலேந்து வந்திருக்காரு" என்று என்னை அறிமுகப்படுத்தினார் ஆறுமுகத்தின் செயலர்.

"வாங்க" என்று என்னை வரவேற்ற ஆறுமுகம், "ஆறு மணிக்கே வந்துட்டீங்களே!" என்றார்.

"நீங்க சொன்ன நேரம்தானே!" என்றேன் நான்.

"என்னோட ஒரு நாள் முழுக்க இருந்து பாக்க வந்திருக்கீங்க. என் நாள் ஆறு மணிக்கே ஆரம்பிச்சுடும். அதனாலதான் ஆறு மணிக்கு வரச் சொன்னேன். ஆனா உங்க பத்திரிகை வேலை ஒன்பது மணிக்கு மேலதானே?"

"இல்லை சார். இப்பல்லாம் எங்க வேலையும் 24 மணி நேரம்னு ஆயிடுச்சு" என்றேன் நான்.

"உங்க கட்டுரைக்கு 'ஆறுமுகம் - ஆறு முதல் ஆறு வரை'ன்னு தலைப்பு  வச்சுக்கலாம். ஆனா என் நாள் முடிய இரவு மணி பதினொண்ணு ஆயிடும்" என்றார் ஆறுமுகம்.

"உங்களுக்கு மறுப்பு இல்லேன்னா, நீங்க தூங்கப் போற வரை உங்களோட இருக்கேன்" என்றேன்.

"இருங்க. என் கனவிலே கூட இருந்து பாருங்க. அப்பத்தான் கனவில கூட நான் மக்களைப் பத்தித்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன்னு உங்களுக்குத் தெரியும்" என்றார் ஆறுமுகம் சிரித்தபடி.

ஆறுமுகம் எதிர்க்கட்சியின் தலைவர். அவர் ஆட்சியை இழந்து  ஒன்பது வருடங்கள் ஆகி விட்டன. ஆயினும் இந்த ஒன்பது ஆண்டுகளில் அவரைப் பற்றிய செய்தி இல்லாமல் ஒரு நாள் கூட செய்திப் பத்திரிகைகள் வெளிவந்ததில்லை.

அடுத்த ஆண்டு நடக்கப் போகும் தேர்தலில் அவர் கட்சி பெரும் வெற்றி பெற்று அவர் மீண்டும் முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் ஊடகங்கள் அவர் மீது இன்னும் அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சத் தொடங்கின.

எங்கள் பத்திரிகையில் 'முன்னாள் முதல்வருடன் ஒருநாள்' என்ற தலைப்பில் அவருடன் ஒருநாள் முழுவதும் இருந்து அவரைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட முடிவு செய்தோம்.

ஆறுமுகம் தன் செயலரை அழைத்து தன் அன்றைய பணிகளைப் பற்றிக் கேட்டுக் கொண்டார். பிறகு அவரது பணிகள் சுறுசுறுப்பாகத் தொடங்கின. பிற்பகலில் ஒரு மணி நேரம் உறங்கியதைத் தவிர, தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டுதான் இருந்தார்.

அவர் சொன்னது போலவே அவர் பணிகள் முடிய இரவு மணி 11 ஆகி விட்டது.

நான் விடைபெறும்போது, "நீங்க என்ன எழுதப் போறீங்கன்னு தெரியாது. ஆனா, ஒருநாள் இருந்து பாத்ததில என்னைப் பத்தி என்ன நினைக்கறீங்கன்னு சுருக்கமா சொல்லுங்க. என் தூங்கும் நேரம் 10 நிமிஷம் தள்ளிப் போகும். பரவாயில்ல" என்றார் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி.

"சார்! நீங்க முதல்வரா இருந்தப்ப உங்க செயல்பாடுகளை நான் கவனிச்சதில்ல. அப்ப நான் சின்னவன். ஆனா இன்னிக்கு நான் உங்களைப்  பாத்ததில, ஒரு நாட்டின் தலைவருக்குத் தேவையான ஒரு முக்கியமான குணம் உங்ககிட்ட இருக்கறதை கவனிச்சேன்."

"என்ன அது?"

"செய்ய வேண்டியவற்றை உடனே செய்யறது. இன்னிக்கு பல முறை உங்க நிகழ்ச்சி நிரலைத் தள்ளி வச்சுட்டு சில முக்கியமான வேலைகளை கவனிச்சீங்க. உதாரணமா, உங்களோட கூட்டணி வச்சுக்க விருப்பம் தெரிவிச்சு 'தமிழ் அரசு'க் கட்சி'யின்  தலைவர் ஒரு பேட்டியில சொன்னதும், உடனே அவருக்கு ஃபோன் பண்ணி அவரை வரவழைச்சுப் பேசி அவரை கமிட் பண்ண வச்சீங்க. ஆளும் கட்சி கூட அவரைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி பண்றாங்கங்கற நிலையில உங்க உடனடி நடவடிக்கை உங்களுக்கு பலம் சேர்த்திருக்கு. இது மாதிரி இன்னும் சில விஷயங்கள்ள உடனே நீங்க செயல்பட்டதை நான் பாத்தேன். ஏன், இப்ப கூட, நான் எழுதப் போறதை என் கட்டுரை வந்தப்பறம் படிச்சுக்கலாம்னு நினைக்காம உங்க தூக்கத்தைத் தள்ளிப் போட்டுட்டு நான் என்ன நினைக்கிறேன்னு தெரிஞ்சுக்க விரும்பறீங்க. இதனால உங்களுக்கு எந்தப் பயனும் இருக்காதுன்னாலும், என் கருத்தைத் தெரிஞ்சுக்க விரும்பறீங்க."

"பயன் இருக்காதுன்னு சொல்லாதீங்க. நான் என்ன செய்யறேங்கறதை விட, நான் செய்யறதை மத்தவங்க எப்படிப் பாக்கறாங்கங்கறதுதான் என் அரசியல் வெற்றியைத் தீர்மானிக்கும். உங்களை மாதிரி படிச்ச இளைஞர்களோட பார்வை எப்படின்னு தெரிஞ்சுக்கறதுல எனக்கு எப்பவுமே ஆர்வம் உண்டு."

"நீங்க இப்படிச் சொன்னதும் உங்களோட இன்னொரு குணத்தைக்  குறிப்பிடணும்னு நினைக்கறேன். விஷயங்களைத் தெரிஞ்சுக்கற ஆர்வம். கல்லூரியில படிக்காட்டாலும் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை மாதிரி பல விஷயங்களைப் பத்தி நீங்க நுணுக்கமா கருத்து சொல்றதை நான் பல தடவை கவனிச்சிருக்கேன். இன்னிக்கு ஒத்தர் வந்து பொருளாதாரம், தொழில்நுட்பம், வெளிநாட்டு அரசியல் மாதிரி விஷயங்களைப் பத்தி ஒரு மணி நேரம் உங்களுக்கு பிரீஃப் பண்ணினாரு. நீங்க அவர்கிட்ட பல நுணுக்கமான கேள்விகளைக் கேட்டு தெளிவுபடுத்திக்கிட்டீங்க."

"ஆமாம். வாரம் ஒருமுறை அவர் வருவார். அவர் நிறையப் படிக்கிறவர். பல வருஷமா நான் அவர்கிட்ட இந்த டியூஷன் எடுத்துக்கறேன்" என்று சொல்லிச் சிரித்தார் ஆறுமுகம்.

"இன்னொரு விஷயம் நான் சொல்லியே ஆகணும். உங்க துணிவு பத்தி எல்லாருக்கும் தெரியும். இன்னிக்கு அதை நான் பாத்தேன். பிரதமர் சென்னைக்கு வரச்சே உங்க கட்சி கறுப்புக் கொடி காட்டும்னு அறிவிச்சிருந்தீங்க. அப்படிக் காட்டறவங்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வோம்னு இன்னிக்கு முதல்வர் சொன்னாரு. அவர் அறிக்கை வந்து அஞ்சு நிமிஷத்துக்கெல்லாம் நீங்களே கறுப்புக் கொடிப் போராட்டத்துக்குத் தலைமை ஏற்கப் போவதா அறிவிச்சுட்டீங்க. உங்க துணிவு உங்க கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகம் கொடுக்கும்."

"ரொம்ப நன்றி நண்பரே. உங்க கட்டுரையில என்னைப் பத்தின நெகட்டிவ் விஷயங்களும் வரும்னு நினைக்கறேன். அதை கட்டுரை வரும்போது படிச்சுக்கறேன்! காலம் தாழ்த்தாம செயல்பட வேண்டியதைப் பத்தி நீங்க சொன்னீங்க. என் தூக்கத்தையும் இன்னும் காலம் தாழ்த்தாம செய்ய விரும்பறேன். போயிட்டு வாங்க. மறுபடி சந்திப்போம். வாழ்த்துக்கள்" என்று எனக்கு விடை கொடுத்தார் ஆறுமுகம்.

பொருட்பால்
அரசியல் இயல் 
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)
குறள் 383:
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு

பொருள்:
காலம் தாழ்த்தாமை, கல்வியறிவு, துணிவு இந்த மூன்று குணங்களும் ஒரு நாட்டை ஆள்பவருக்கு எப்போதும் இருக்க வேண்டிய குணங்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


      அறத்துப்பால்                                                                     காமத்துப்பால் 

Thursday, November 1, 2018

382. படையெடுப்பு

"முல்லைவன நாட்டுக்குச் சென்ற நம் ஒற்றர்கள் என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறார்கள்?" என்றான் மன்னன்மணிவர்மன்.

"நல்ல செய்திதான் மன்னா! அவர்கள் படைபலம் நம்மில் பாதி அளவுக்குக் கூட இல்லையாம்!" என்றார் அமைச்சர்.

"அப்படியானால் போரில் அவர்களை வீழ்த்துவது சுலபம், இல்லையா?" என்றான் மணிவர்மன் மகிழ்ச்சியுடன்.

"இருக்கலாம்" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"ஏன் தயங்குகிறீர்கள்? அண்டை நாட்டு அரசர் யாராவது அவர்கள் உதவிக்கு வருவார்களா?"

"அப்படியெல்லாம் இல்லை. தங்களைப் பகைத்துக் கொள்ளும் துணிவுள்ள அரசர்கள் யார் இருக்கிறார்கள்?"

"பின் ஏன் இந்தத் தயக்கம்?"

"முல்லைவன அரசர் சிங்கவர்மருக்கு வேறு சில பலங்கள் இருப்பதாக நம் ஒற்றர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்."

"வேறு என்ன பலம்? புஜபலமா? நான் என்ன சிங்கவர்மனுடன் மல்யுத்தமா செய்யப் போகிறேன்?"

"இல்லை மன்னா. நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையுடன் கேட்டு, பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள்."

"சொல்லுங்கள் அமைச்சரே! உங்கள் கருத்தை நான் எப்போதுமே மதிப்பவனாயிற்றே?"

"அவருடைய பலங்கள் என்று நான் குறிப்பிடுவது அவருடைய குணங்களை. முதலில் அவரது துணிவு. நம்மைச் சுற்றியுள்ள எல்லா மன்னர்களும் தங்களுக்கு அஞ்சி நம் நாட்டுக்கு கப்பம் கட்டி வருகிறார்கள். ஆனால் சிங்கவர்மர் மட்டும் நமக்கு அடிபணிய மறுத்து வருகிறார். படையெடுத்து வந்து அவருடைய நாட்டைப் பிடித்து விடுவோம் என்று நாம் எச்சரித்தபோதும் அவர் சற்றும் அஞ்சவில்லை.

"இரண்டாவது, அவருடைய கொடைக்குணம். தான் அரண்மனையில் மிக எளிமையாக வாழ்ந்து கொண்டு, குடிமக்களுக்கு வாரி வழங்கி வருகிறார் அவர். தன் குடிமக்கள் யார் வீட்டிலாவது அடுப்பு எரியாவிட்டால் தன் அரண்மனையிலும் அடுப்பு எரியக் கூடாது என்று அவர் உத்தரவே போட்டிருக்கிறார். அதனால் அவருடைய குடிமக்கள் அவரை தெய்வமாக நினைத்து வணங்குகிறார்கள்.

"மூன்றாவதாக, அவர் மிகவும் அறிவுடையவர் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன்."

"அந்த விஷயத்தில் நானும் சிங்கவர்மனுக்குக் குறைந்தவன் இல்லை!" என்று குறுக்கிட்டுச் சொன்னான் மணிவர்மன்.

"மன்னா..."

"ஆமாம். அமைச்சரே! எனக்கு அறிவு இருக்கிறதோ இல்லையோ, உங்களைப் போன்ற ஒரு அறிவார்ந்த அமைச்சரின் ஆலோசனை எனக்கு அறிவாக அமைந்திருக்கிறதே!" என்றான் மன்னன் சிரித்தபடி.

"மன்னரே! அடக்கத்தில் தங்களை மிஞ்சக்கூடிய மன்னர் இவ்வையகத்தில் இல்லை. பல நாடுகளைப் பணிய வைத்து சக்கரவர்த்தியாகத் திகழும் தாங்கள் என் போன்ற எளிய மனிதனின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்பதே என் பாக்கியம்!" என்றார் அமைச்சர் உணர்ச்சிப் பெருக்குடன்.

"மேலே சொல்லுங்கள். இன்னும் எத்தனை குணங்கள் இருக்கின்றன சிங்கவர்மனுக்கு? அவை எப்படி அவனுக்குப் போரில் உதவப் போகின்றன?"

"நான்கு முக்கியமான குணங்களைத்தான் குறிப்பிட்ட விரும்பினேன். இந்த குணங்கள் இருப்பவரை வீழ்த்துவது கடினம் என்று அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். தங்களிடமும் இந்த குணம் இருப்பதால்தான் தாங்கள் ஒரு சிறிய நாட்டுக்கு அரசராக இருந்தாலும் ஒரு பேரரசராக விளங்குகிறீர்கள்."

"என்னைப் புகழ்வது இருக்கட்டும். நான்காவது குணம் என்ன என்று இன்னும் நீங்கள் இன்னும் கூறவே இல்லையே!"

"நான்காவது குணம் ஊக்கம் அல்லது விடாமுயற்சி. சிங்கவர்மர் சிறுவனாக இருந்தபோதே அவருடைய தந்தை இறந்து விட்டார். அவரை நாடு கடத்தி விட்டு அவருடைய உறவினர்கள் நாட்டை ஆண்டு கொண்டிருந்தனர். சிங்கவர்மர் வாலிபராக வளர்ந்ததும் பலமுறை முயன்று தோற்ற பின் அவர்களை வென்று ஆட்சியைப் பிடித்தார்."

"ஒரு மண்டபத்தை நான்கு வலிய தூண்கள் தாங்குவதுபோல் இந்த நான்கு குணங்களும் சிங்கவர்மனைக் காக்கின்றன. அதனால், சிங்கவர்மனின் படைபலம் குறைவாக இருந்தாலும் அவனைத் தோற்கடிக்க முடியாது என்று சொல்ல வருகிறீர்கள். அப்படித்தானே?" என்றான் மணிவர்மன்.

"அரசே! தங்கள் அறிவுக்கூர்மை பற்றி நான் சொன்னது வெறும் புகழ்ச்சியல்ல என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்."

"இல்லை அமைச்சரே. இனிமேல்தான் நிரூபிக்கப் போகிறேன். இத்தகைய அரிய குணங்கள் கொண்ட சிங்கவர்மன் ஆளும் நாட்டை நம் நட்பு நாடாக ஆக்கிக் கொள்ளப் போகிறேன்" என்றான் மணிவர்மன்.

பொருட்பால்
அரசியல் இயல் 
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)
குறள் 382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

பொருள்:
துணிவு, கொடைக்குணம்,சிந்தித்துச் செயல்படுதல், விடாமுயற்சி ஆகிய நான்கு குணங்கள் ஒரு அரசனுக்கு இயல்பாக இருக்க வேண்டியவை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


       அறத்துப்பால்                                                                      காமத்துப்பால் 

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...