நிறுவனத்தின் உரிமையாளர் மூர்த்தியைச் சந்தித்துப் பேசினான். அவர் அவனுக்கு ஆர்டர் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார்.
மூர்த்தியைப் பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ராகவன் மனதில் ஆர்டர் கிடைத்த மகிழ்ச்சி இல்லை. மனதை ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டிருந்தது.
தன் அலுவலகத்துக்குத் திரும்பியதும்தான், ராகவனுக்குத் தன் மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயம் என்னவென்று புரிந்தது.
மூர்த்தியை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருக்கிறோம் என்ற உணர்வுதான் அந்த உறுத்தலுக்குக் காரணம்.
மூர்த்தியின் நிறுவனம் பற்றி சமீபத்தில் யாரோ சொன்ன பிறகுதான், ராகவனுக்கு அந்த நிறுவனம் பற்றித் தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான், அவன் அவரைப் பார்க்கப் போனான். அப்படி இருக்கும்போது, அவரை இதற்கு முன் எங்கே பார்த்திருக்க முடியும்?
தன் நண்பன் பொன்ராஜுக்கு ஃபோன் செய்தான் ராகவன். பொன்ராஜ் தகவல்கள் சேகரிப்பதில் நிபுணன்.
"மூர்த்தின்னு ஒத்தர், மூர்த்தி இண்டஸ்ட்ரீஸ்னு ஒரு கம்பெனி நடத்திக்கிட்டிருக்காரு. அவரைப் பத்திக் கொஞ்சம் விசாரிச்சு சொல்லேன்!"என்றான் ராகவன்.
அன்று மாலையே, பொன்ராஜ் ராகவனுக்கு ஃபோன் செய்தான்.
"டேய்! மூர்த்தி யாரு தெரியுமா? ரெண்டு வருஷம் முன்னால ஒரு அரசு அதிகாரி ஒரு கான்டிராக்டரை ஓட்டல்ல சந்திச்சு, அஞ்சு லட்சம் ரூபா லஞ்சம் வாங்கினப்ப, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரைப் பிடிச்சாங்களே, ஞாபகம் இருக்கா?" என்றான் பொன்ராஜ்.
"ஆமாம். ஞாபகம் இருக்கு. அவர் பேர் கணேசமூர்த்தின்னு ஞாபகம்."
"அவரேதான். தன் பேர்ல ரெண்டாவது பாதியான மூர்த்திங்கறதை வச்சுக்கிட்டுத் தொழில் பண்ணிக்கிட்டிருக்காரு போலருக்கு!"
"நீ சொன்னப்புறம்தான் எனக்கு ஞாபகம் வருது. அப்ப, அவர் ஃபோட்டோ டிவியில வந்தது. அப்பதான் பாத்திருக்கேன். அடப் பாவி மனுஷா!"
"அவர் பாவியா இருந்தா உனக்கென்ன? தன்னோட சொந்த கம்பெனியில ஆர்டர் கொடுக்க, உங்கிட்ட லஞ்சம் கேக்க மாட்டார்னு நினைக்கறேன்! நீ அவரோட ஆர்டரை செஞ்சு கொடுத்துட்டுப் பணத்தை வாங்கிக்கிட்டுப் போய்க்கிட்டே இரு!" என்றான் பொன்ராஜ்.
"இல்லைடா! அப்ப அவரோட வீடியோ தமிழ்நாடு முழுக்கப் பரவிடுச்சு. கையும் களவுமா மாட்டிக்கிட்டாரு. வேலையை விட்டு நீக்கிட்டாங்க. கேஸ் கூட நடந்துக்கிட்டிருக்குன்னு நினைக்கறேன். அதுக்கப்புறமும், கொஞ்சம் கூட அவமான உணர்ச்சி இல்லாம ஒரு தொழிலை நடத்திக்கிட்டிருக்காருன்னா, அவர்கிட்ட நேர்மையோ, பண்போ இருக்காது. அப்படிப்பட்ட மனுஷனோட நான் எந்த வியாபாரத் தொடர்பும் வச்சுக்க விரும்பல" என்றான் ராகவன்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை
குறள் 1018:
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
No comments:
Post a Comment