அதிகாரம் 55 - செங்கோன்மை

திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 55
செங்கோன்மை

541. மாறிய தீர்ப்பு!

"அரசே! இது மிகச் சாதாரண வழக்கு. திருடியவன் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறான். வழக்கை விசாரித்து நீதிபதி தண்டனை அளித்திருக்கிறார். திருட்டுப் போன பொருளும் கிடைத்து விட்டது. இதைத் தாங்கள் மறுவிசாரணை செய்யத்தான் வேண்டுமா?" என்றார் அமைச்சர்.

"பாண்டிய மன்னர் நெடுஞ்செழியனின் அவசரத் தீர்ப்பால் அப்பாவி கோவலன் கொல்லப்பட்டு, நியாயம் கேட்ட கண்ணகியின் கோபத்தால் மதுரை நகரமே பற்றி எரிந்த வரலாறு உங்களுக்குத் தெரியாதது அல்லவே! அது போன்ற தவறு நாம் நாட்டில் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த மேல்முறையீடு முறையை வைத்திருக்கிறேன். பெரும்பலோர் நீதிபதி கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு சிலர்தான் மேல்முறையீடு செய்கிறார்கள். அவர்களுக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுப்பதில் தவறில்லையே?" என்ற அரசர், "சரி. வழக்கை விசாரித்த நீதிபதி வந்திருக்கிறார் அல்லவா?" என்றார்.

"வந்திருக்கிறார் மன்னவா!" என்ற அமைச்சர் ஒரு காவலனை அழைத்து நீதிபதியை வரச் சொன்னார்.

நீதிபதி வந்ததும் அவரை அமரச் சொன்ன அரசர், "நீங்கள் ஒரு கல்வி கற்ற அனுபவமுள்ள நீதிபதி. எனவே நன்கு விசாரித்து, நன்கு சிந்தித்துத்தான் இந்தத் தீர்ப்பை வழங்கி இருப்பீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆயினும் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டிருப்பவர் மேல்முறையீடு செய்திருப்பதால், நீங்கள், அமைச்சர், நான் மூவரும் சேர்ந்து இந்த வழக்கின் விவரங்களை மீண்டும் ஒரு முறை பார்க்கப் போகிறோம்" என்றார்

"அப்படியே ஆகட்டும் அரசே!" என்றார் நீதிபதி.

"சரி. வழக்கின் விவரங்களைச் சொல்லுங்கள்."

"காந்தாமணி என்ற பெண்மணி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தெரு ஓரத்தில் எங்கோ மறைந்திருந்த ஒருவன் திடீரென்று குறுக்கே வந்து தன் கையிலிருந்த கத்தியால் அவள் கழுத்தில் அணிந்திருந்த அட்டிகையை அறுத்து எடுத்துக் கொண்டு ஓடி விட்டான். அந்தப் பெண்மணி கூச்சல் போட்டதும் அக்கம்பக்கத்திலிருந்து சிலர் அந்தத் திருடனைத் துரத்தினார்கள். அதில் ஒருவர் திருடனைப் பிடித்து அவனிடமிருந்து சங்கிலியைப் பிடுங்கி விட்டார். அதற்குள் மற்றவர்களும் அங்கே வந்து எல்லோருமாகச் சேர்ந்து திருடனைக் காவலர்களிடம் ஓப்படைத்தார்கள்" என்றார் நீதிபதி.

"ஓ! அவ்வளவு எளிமையான வழக்கா?" என்ற அரசர் ஓரிரு நிமிடங்கள் யோசித்து விட்டு, "பிடிபட்டவன் என்ன சொல்கிறான்?" என்றார்.

"பிடிபட்டவனின் பெயர் நீலவன். அவன் தெருவோரம் வசிப்பவன். சத்தம் கேட்டு என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகத் தான் ஓடி வந்ததாகவும், சிலர் தன்னைத் திருடன் என்று தவறாக நினைத்துப் பிடித்து விட்டாகவும் சொல்கிறான்."

"அப்படியானல், அட்டிகை அவனிடம் எப்படி வந்ததாம்?" என்றார் அமைச்சர், எகத்தாளமாக.

"தன்னிடம் அட்டிகை இருந்ததையோ, அதைத் தன்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டார்கள் என்பதையோ அவன் ஒப்புக் கொள்ளவே இல்லை."

"அவனைப் பிடித்தவர் அவனிடமிருந்து அட்டிகையைப் பிடுங்கியதை யாராவது பார்த்தார்களா?" என்றார் அரசர்.

"இல்லை. அவனைப் பிடித்ததைத்தான் பார்த்தார்கள். பின்னால் சற்றுத் தொலைவில் ஓடி வந்து கொண்டிருந்தவர்களால் திருடனிடமிருந்து அட்டிகை பிடுங்கப்பட்டதைப் பார்த்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்" என்றார் நீதிபதி சற்று தயக்கத்துடன்.

"சரி. திருடனைப் பிடித்தவரின் பின்னணி என்ன?" என்றார் அரசர்.

"அவர் பெயர் சோமன். அவர் சமூகத்தில் ஒரு கண்ணியமான மனிதர். ஒரு சிறிய வியாபாரி."

"சரி. நான் ஒன்று கேட்கிறேன். ஒருவேளை பிடிபட்டவர் கண்ணியமானவராக இருந்து, பிடித்தவர் தெருவோரம் வசிப்பவராக இருந்து, பிடிபட்டவர் தான் திருடவில்லை என்று சொல்லி இருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?" என்றார் மன்னர்.

"அவர் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று யோசித்திருப்பேன்!" என்றார் நீதிபதி தயக்கத்துடன்.

"பிடிபட்டவன் தெருவோரம் வசிப்பவன் என்பதால் அவன் திருடி இருப்பான் என்பதை நாம் சுலபமாக நம்பி விடுகிறோம். காவலர்களிடம் சொல்லி, திருடனைப் பிடித்ததாகச் சொன்ன சோமனின் பின்னணியை விசாரிக்கச் சொல்லுங்கள், விசாரணை முடிந்ததும் என்னை வந்து பாருங்கள்" என்றார் அரசர்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு அரசரைச் சந்தித்த நீதிபதி, "மன்னித்து விடுங்கள் அரசே! என் தீர்ப்பு தவறுதான். தங்கள் அறிவுரைப்படி சோமனின் பின்னணியை விசாரித்ததில், அவருக்குக் கடன் தொல்லைகள் இருப்பதாகத் தெரிய வந்தது. காவலர்கள் அவரை விசாரித்தபோது, அவர் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார். ஏதோ ஒரு உந்துதலில், அவர்தான் அந்தப் பெண்ணின் சங்கிலியை அறுத்ததாகவும், பின்னால் பலர் துரத்திக் கொண்டு வந்ததும், தான் அகப்பட்டுக் கொள்வோம் என்ற பயத்தில், தெருவில் குறுக்கே வந்த ஒரு நபரைப் பிடித்து, அவரிடமிருந்து சங்கிலியைப் பிடுங்கியதாகச் சொல்லித் தான் தப்பிக்க முயன்றதாகவும் ஒப்புக் கொண்டு விட்டார். தாங்கள் அனுமதி அளித்தால், நீலவனை விடுவித்து, சோமனுக்கு தண்டனை அளித்து, என் தீர்ப்பை மாற்றி எழுதி விடுகிறேன்" என்றார், பதைபதைப்புடன்.

"நல்லது. அப்படியே செய்து விடுங்கள். தவறு நேர்வது இயல்புதான். அதனால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம். எந்த ஒரு நபரையும், அவருடைய பின்னணியைக் கருத்தில் கொள்ளாமல், தீர ஆராய்ந்து, உண்மையைக் கண்டறிவதில் கவனம் செலுத்துங்கள்!" என்றார் அரசர்.

குறள் 541:
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

பொருள்:
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, விருப்பு வெறுப்பு இல்லாமல், நடு நிலைமையில் நின்று, செய்யத் தக்கதை ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

542. வளைந்த நிழல்!

"வாருங்கள் புலவரே! நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். என் தந்தை ஆண்டபோது அடிக்கடி வந்த தாங்கள், நான் முடிசூட்டிக் கொண்டு ஒரு ஆண்டு கழித்துத்தான் வந்திருக்கிறீர்கள்" என்றான் அரசன் மகிழ்மாறன்.

"ஆம் மன்னரே! தாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தங்களை வாழ்த்த வந்தேன். அப்புறம் வர சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை" என்றார் புலவர் செவ்வந்தி.

"சரி. நீங்கள் புனைந்த பாடலைக் கூறுங்கள். நாட்டின் தலைசிறந்த புலவர்களுள் ஒருவராக விளங்கிப் பெண் குலத்துக்குப் பெருமை சேர்க்கும் உங்கள் பாடலைக் கேட்க ஆவலாக இருக்கிறேன்."

புலவர் செவ்வந்தி தன் பாடலைக் கூறியதும் அவையில் அனைவரும் கைதட்டிப் பாராட்டினர்.

"சிறப்பான பாடல் புலவரே! ஆனால் நான் என் தந்தையைப் போல் அவ்வளவு தமிழறிவு கொண்டவனல்ல. எனவே பாடலின் பொருளை என் சிற்றறிவுக்குப் புரியும்படி விளக்கி விடுங்களேன்!" என்றான்மகிழ்மாறன் சிரித்தபடியே.

"பாடலின் பொருளை நான் விளக்குவதை விடத் தங்கள் அமைச்சர் விளக்கினால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று அமைச்சரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கூறிய செவ்வந்தி, "தாங்கள் தனிமையில் ஓய்வாக இருக்கும்போது, அமைச்சர் தங்களுக்கு இதை விளக்கினால் சிறப்பாக இருக்கும். இப்போது நான் விடைபெறுகிறேன்" என்றார்.

"இருங்கள். பரிசு வாங்காமல் போகிறீர்களே!"

"இருக்கட்டும் மன்னரே! அடுத்த முறை வாங்கிக் கொள்கிறேன்" என்றபடியே கைகூப்பி விடைபெற்றார் செவ்வந்தி.

மகிழ்மாறன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

"சொல்லுங்கள் அமைச்சரே! புலவர் பாடிய பாடலின் பொருள் என்ன?" என்றான் மகிழ்மாறன், அமைச்சருடன் தனியே இருந்தபோது.

"மழை பெய்யாததால் வாடிக் கொண்டிருக்கும் பயிர்கள், மழை எப்போது வரும் என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், வானில் தெரிபவை வெண்மேகங்கள்தான், மழை கொடுக்கும் கருமேகங்கள் அல்ல. மக்களோ, அரசரின் செங்கோலைப் பார்க்கிறார்கள். செங்கோல் நிமிர்ந்து நின்றாலும், செங்கோலின் கரிய நிழல் வளைந்து, தரையில் தவழும் கருமேகம் போல் காணப்படுகிறது. இதுதான் பாடலின் பொருள்" என்றார் அமைச்சர்.

"அது எனக்குப் புரிகிறது. ஆனால் பாடலின் உட்பொருள் என்ன? நாட்டில் மழை இல்லை. பயிர்கள் மட்டுமல்ல, மக்களும் வானத்தைப் பார்த்தபடிதான் இருக்கிறார்கள். அது நான் அறிந்ததுதான். ஆனால், அரசனின் செங்கோல் இங்கே ஏன் வந்தது? செங்கோல் நேராக இருந்தாலும், அதன் நிழல் வளைந்திருக்கிறது என்றால் என்ன பொருள்? வெயிலின் கொடுமையைச் சொல்கிறாரா? செங்கோலின் நிழல் கார்மேகம் போல் இருக்கிறது என்றால், செங்கோலின் கருணையைக் குறிப்பிடுகிறாரா, அல்லது இதில் வஞ்சப் புகழ்ச்சி ஏதேனும் இருக்கிறதா? இந்தப் பொருளை உங்களிடம் நான் தனிமையில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னதன் பொருள் என்ன?"

"அரசே! நான் கூறப் போவதை மற்றவர்கள் கேட்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அதனால்தான் தனிமையில் கேட்கும்படி கூறி இருக்கிறார் புலவர். நாட்டில் மழை இல்லை. பயிர்கள் வானத்தைப் பார்க்கின்றன. ஆனால், நாட்டு மக்கள் எப்போதுமே பார்த்துக் கொண்டிருப்பது அரசரின் செங்கோலைத்தான். ஏனென்றால், அதுதான் தங்களை எப்போதும் காக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், அப்படி  நடக்கவில்லை என்று கூறுகிறார் புலவர்!" என்று சொல்லி நிறுத்தினார் அமைச்சர்.

"என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே?" என்றான் மகிழ்மாறன், சற்றே அதிர்ச்சியுடன்.

"மன்னிக்க வேண்டும், அரசே! நான் ஏற்கெனவே சில முறை இதை உங்களிடம் தெரிவிக்க முயன்றிருக்கிறேன். ஆனால் தங்கள் மனம் புண்படக் கூடாது என்று நான் மறைமுகமாகச் சொன்னதாலோ என்னவோ, நான் சொல்ல நினைத்ததை என்னால் தங்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை."

"எதுவாக இருந்தாலும், நேரடியாகவே சொல்லுங்கள். கேட்டுக் கொள்கிறேன்."

"அரசே! நீங்கள் நல்ல உள்ளம் படைத்தவர். ஆனால் தங்களைச் சுற்றியுள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலர், அரசு அதிகாரிகளைத் தங்கள் கையில் போட்டுக் கொண்டு, சில தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். நாட்டில் பஞ்சம் நிலவும் இந்தச் சமயத்தில், அரசு அதிகாரிகள் கடுமையான வரி வசூலில் ஈடுபடுகிறார்கள். அரசு கஜானாவில் உள்ள செல்வத்தை, அரண்மனையில் சிலர், ஆடம்பரச் செலவுகளுக்குப் பயன்படுத்துகிறார்கள்..."

"இதையெல்லாம் நீங்கள் ஏன் தடுக்கவில்லை?" என்றான் அரசன், கோபத்துடன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! தங்கள் பெயரால் செயல்கள் நடைபெறும்போது, அவற்றை நான் எப்படித் தடுக்க முடியும்? தனாதிகாரியே தங்கள் உத்தரவுப்படிதான் தான் வரி வசூலிப்பதாகவும், செலவு செய்வதாகவும் என்னிடம் சொல்கிறார். தாங்கள் அப்படிச் சொல்லி இருக்க மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால், தங்களுக்கு நெருக்கமானவர்கள் இப்படிச் செய்வதாக நான் தங்களிடம் சொன்னால், தாங்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்களோ!"

"ஓ! அதுதான் புலவர் செங்கோல் நேராக இருக்கிறது, அதன் நிழல் வளைந்திருக்கிறது என்று சொன்னாரோ? நிழலைக் கார்மேகத்துடன் ஒப்பிட்டது கூட நான் கருணை உள்ளவன் என்பதைக் காட்டத்தானா?"

"அப்படித்தான் நான் புரிந்து கொள்கிறேன் அரசே!"

"நல்லது. அரண்மனையில் உள்ளவர்களைக் கண்டித்துக் கட்டுப்படுத்தி வைக்கிறேன். தனாதிகாரியிடம் சொல்லி வரி வசூலிப்பதை நிறுத்தச் சொல்கிறேன். அத்துடன் அரண்மனை தானியக் கிடங்கில் உள்ள தானியங்களை ஏழை மக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கைகளை நீங்கள் எடுங்கள். நீங்களோ நானோ உத்தரவிட்டலொழிய, அரசு அதிகாரிகள் எதையும் செய்யக் கூடாது என்று கடுமையாக எல்லா அதிகாரிகளையும் எச்சரித்து விடுகிறேன். விரைவிலேயே அரசவைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகள் பற்றிக் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்" என்றான் மகிழ்மாறன்.

"நன்றி அரசே! தங்கள் செங்கோல் சற்றும் வளையாதது என்பதை நிருபித்து விட்டீர்கள். தங்கள் தந்தையைப் போல், தாங்களும் மக்களால் நேசிக்கப்படும் மன்னராக விளங்குவீர்கள்!" என்றார் அமைச்சர் பெருமிதத்துடன்.

"ஆனால், எனக்கொரு ஐயம் அமைச்சரே!"

"என்ன அரசே?"

"புலவர் பாடலைத் தானே எழுதினாரா, அல்லது பாடலின் கருப்பொருள் பற்றி அவருக்கு யாராவது யோசனை கூறினார்களா?" என்றான் மகிழ்மாறன், குறும்பாகச் சிரித்தபடி.

"தாங்கள் இட்ட பணிகளை நிறைவேற்ற வேண்டும். விடை பெறுகிறேன் அரசே!" என்று பதில் சொல்லாமல் நழுவினார் அமைச்சர்.

குறள் 542:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.

பொருள்:
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.  

543. நாடு விட்டு நாடு சென்று...

"குருவே, நாம் ஏன் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வேறு நாட்டில் சென்று குடியேறுகிறோம்?" என்று வினவினான் வினயன்

"என் குருவின் சித்தாந்தத்தை இந்த வையம் முழுவதும் பரப்ப வேண்டும் என்பதுதான் என் லட்சியம் என்பதை நீ அறிவாய். அதனால்தான், ஒவ்வொரு நாடாகச் சென்று, அங்கு என் குருவின் சித்தாந்தத்தைப் பரப்பி, இந்தப் பணி தொடர்ந்து நடைபெற, ஒவ்வொரு நாட்டிலும் சில மடங்களை உருவாக்கி, மடங்களை நிர்வகித்து நம் சித்தாந்தத்தைத் தொடர்ந்து பரப்பும் பொறுப்பை, நம் சித்தாந்தத்தை நன்கு கற்றறிந்த ஞானிகளிடம்  ஒப்படைத்த பிறகு, இன்னொரு நாட்டுக்கு உன்னுடன் செல்கிறேன். என் ஆயுள் முடிந்த பிறகு, இந்தப் பணியை நீ தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதால்தான், உன்னை என்னுடனேயே எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார் குரு.

"அதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது என்று நம்புகிறேன் குருவே!" என்றான் வினயன்.

"இருக்கட்டும். இப்போது இந்த மாளவி நாட்டுக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். நான் இந்த மரத்தடியில் அமர்ந்திருக்கிறேன். நீ ஊருக்குள் சென்று, இங்கு வேதபாடசாலைகள் எத்தனை இருக்கின்றன, அவற்றுள் ஒன்றில் நாம் தங்க முடியுமா என்று பார். அதுபோல், கல்விக் கூடங்கள் எத்தனை இருக்கின்றன, அன்னசத்திரங்கள் எத்தனை இருக்கின்றன என்று பார்த்து வா. நம் இருவருக்கும் கொஞ்சம் உணவும் சேகரித்துக் கொண்டு வா."

"கல்விக் கூடங்கள், அன்னசத்திரங்கள் எதற்கு குருவே? அங்கெல்லாம் கூடவா நாம் பிரசாரம் செய்யப் போகிறோம்?"

"நீ பார்த்து விட்டு வா. அப்புறம் சொல்கிறேன்" என்றார் குரு.

ற்று நேரம் கழித்துத் திரும்பி வந்த வினயன், "குருவே! இந்த ஊரில் ஒரு சில வேதபாடசாலைகள் இருக்கின்றன. ஆனால், அவை வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஆங்காங்கே, ஓரிரு மாணவர்கள் மட்டும் அமர்ந்து குருவிடம் பாடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் விசாரித்தபோது, வேதங்களைக் கற்கவோ, கற்பிக்கவோ ஆர்வம் உள்ளவர்கள் அதிகம் இல்லை என்று சொன்னார்கள். ஒரே ஒரு கல்விச்சாலை இருக்கிறது. அதுவும் இப்போது இயங்கவில்லையாம். கட்டிடம் பாழடைந்து கிடக்கிறது. அது போல், அன்னசத்திரங்களும் இந்த ஊரில் இல்லையாம். யாரோ ஒருவர் மட்டும், தன்னால் இயன்ற அளவுக்கு, வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு உணவு வழங்குவதாகச் சொன்னார்கள். அவரிடம் போய்தான் நம் இருவருக்கும் சிறிது உணவு வாங்கி வந்தேன்" என்றான்.

"நல்லது. அப்படியானால், உணவருந்தி விட்டு, சற்று நேரம் இந்த மர நிழலிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு விட்டு, வேறு ஊருக்குச் சென்று பார்க்கலாம்" என்றார் குரு.

மூன்று நாட்களுக்குப் பிறகு, "இந்த நாடு நமக்கு ஏற்றதல்ல. இங்குள்ள மக்கள் எவரும் ஆன்மீகத்தைப் பற்றிச் சிந்திக்கும் மனநிலையில் இல்லை என்று நினைக்கிறேன். நாம் வேறொரு நாட்டுக்குச் சென்று, நம் பணியைத் தொடரலாம்" என்றார் குரு.

"எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்த நாட்டின் அரசரைச் சந்திப்பீர்களே! இந்த நாட்டு அரசரைச் சந்திக்காமலேயே போகிறோமே!"

"இந்த நாட்டில் செங்கோல் ஆட்சி நடக்கவில்லை. எனவே, அரசரைப் பார்ப்பதில் பயனில்லை."

"செங்கோல் ஆட்சி நடக்கவில்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள், குருவே? அரசரைப் பற்றி நம்மிடம் யாரும் குறை கூறவில்லையே!"

"இந்த மூன்று நாட்களில், நாம் சென்ற எல்லா ஊர்களிலும், நாம் பார்த்தது என்ன? வேதநூல்கள் ஓதப்படுவதோ, கற்பிக்கப்படுவதோ இல்லை, கல்வி அளித்தல், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், பயணிகளுக்கும் உணவளித்தல் போன்ற அறச் செயல்கள் எதுவும் நடக்கவில்லை. அரசனின் செங்கோல் வளையாமல் இருந்தால்தான், அறிவு நூல்கள் கற்கப்படுவதும், அறச் செயல்கள் செய்யப்படுவதும் நடக்கும். ஆட்சி பற்றி மக்கள் யாரும் குறை கூறாததில் வியப்பில்லை. கொடுங்கோல் ஆட்சி பற்றிக் குறை கூற மக்கள் அஞ்சுவது இயல்புதானே?" என்றார் குரு.

"அதனால்தான், வழக்கமாக ஒரு நாட்டில் மூன்று ஆண்டுகள் தங்கும் நாம், இந்த நாட்டை விட்டு மூன்று நாட்களில் வெளியேற வேண்டி இருக்கிறது!" என்றான் வினயன்.

குறள் 543:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

பொருள்:
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.    

544. முனிவர்களின் செயல்!

"இந்த ஆவணி விசாகத்தன்று, நான் முடிசூடிப் பத்து ஆண்டுகள் நிறைவானதற்காக, என்னை வாழ்த்தப் பல நாடுகளிலிருந்தும், தங்களைப் போன்ற முனிவர்களும், அறிஞர்களும் இங்கே வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளித்தாலும், எனக்குச் சிறிது சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது. 

"என் வாழ்வில் இது ஒரு முக்கியமான நாளாக இருக்கலாம். ஆனால், உங்களைப் போன்ற சான்றோர்களும், அறிஞர்களும், முனிவர்களும், ஏன் பல்வேறு நாடுகளின் ராஜகுருக்களும் கூட இங்கே வந்திருப்பது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. என்னிடம் கூறாமல். என் அமைச்சர் ஆமருவியார் இந்த ஏற்பாட்டைச் செய்து விட்டார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், அநேகமாக அவரைப் பதவி நீக்கம் செய்து விடுவேன்!" என்றான் அரசன் திரிலோகசந்திரன், அமைச்சரைப் பார்த்துச் சிரித்தபடியே.

"மன்னா! இது உங்கள் அமைச்சரின் ஏற்பாடு அல்ல. உன் குடிமக்களை அரவணைத்துச் சென்று, ஒரு தாயைப் போல் அவர்களிடம் அன்பு காட்டி, ஒரு தந்தையைப் போல் அவர்களைக் காக்கும் உன் மாண்பை, இந்த உலகமே போற்றுகிறது. ஏன், பிற நாட்டு மன்னர்களே உன்னை வியந்து, உன்னைப் பாராட்டி வாழ்த்தத் தங்கள் குருமார்களை அனுப்பி இருக்கிறார்கள். எங்கள் விருப்பத்தின் பேரில்தான், உங்கள் அமைச்சர் இந்த ஏற்பாட்டைச் செய்தார்" என்றார் அங்கே வந்திருந்த முனிவர்களில் மூத்தவரான புங்கவர்.

"என்னைப் பெருமைப்படுத்த வந்திருக்கும் பெருமக்களாகிய உங்கள் திருவடிகளில் விழுந்து வணங்க விரும்புகிறேன். அன்பு கூர்ந்து, அனைவரும் சேர்ந்து நின்று, தங்கள் திருவடிகளில் நான் பணிந்து வணங்குவதை ஏற்று, என்னை வாழ்த்த வேண்டுமென்று வேண்டுகிறேன்" என்று அவர்களை வணங்க முன்வந்தான் அரசன்.

"இருக்கட்டும் மன்னா! அதற்கு முன், நாங்கள் செய்ய வேண்டிய பணி ஒன்று இருக்கிறது. எங்கள் அனைவரின் சார்பாக, இங்கே வந்திருக்கும் முனிவர்களில் வயதில் மூத்த பன்னிருவர் உனக்கு அளிக்கப் போகும் ஒரு காணிக்கையை, நீ ஏற்க வேண்டும். அதற்குப் பிறகு, நீ எங்களை வணங்கலாம்" என்றார் புங்கவர்.

புங்கவர் உட்படப் பன்னிரண்டு முனிவர்கள் அரசன் முன் வந்து நின்றனர். சட்டென்று, அனைவரும் ஒரு சேர அரசனின் காலில் விழுந்து வணங்கினர்.

"இதென்ன அபசாரம்!" என்று கூவியபடியே பின்வாங்கினான் அரசன். "அறிவிலும், வயதிலும் மூத்தவர்களான, அனைவராலும் வணங்கப்பட வேண்டிய முனிவர்கள் என் காலில் விழுகிறீர்களே!"

"அரசே! உன்னைப் போல் செங்கோல் வழுவாத மன்னனை உலகமே வணங்க வேண்டும். இந்த உலகத்தின் சார்பாக, நாங்கள் பன்னிருவர் உங்களை வணங்கினோம். அவ்வளவுதான்!" என்றார் புங்கவர்.

"அரசே! 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே' என்பது தொல்காப்பிய வாக்கியம். இந்த உயர்ந்த முனிவர்கள் தங்களை வணங்கியது, இந்த உலகமே தங்கள் செங்கோலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, உங்களை வணங்கியதாகத்தான் ஆகும்!" என்றார் அமைச்சர் ஆமருவியார்.

குறள் 544:
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

பொருள்:
குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு, செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப் பொருந்தி, உலகம் நிலை பெறும். 

545. நகர்வலம்   

"மன்னர் சில நாட்களாக இரவில் எங்கோ சென்று வருகிறாராமே!"

"ஆமாம்! நானும் கேள்விப்பட்டேன். அவருடைய பாதுகாப்புப் படையினருக்குக் கூடத் தெரியாமல், எங்கோ போய் விடுகிறாராம். அவர் திரும்பி வந்த பிறகுதான், அவர் வெளியே சென்ற விஷயமே அவருடைய பாதுகாப்புப் படையினருக்குத் தெரிகிறதாம். மன்னர் எப்போது போவார், எப்படிப் போவார் என்று கண்டறிய முடியாமல், பாதுகாப்புப் படை விரர்கள் திணறுகிறார்களாம்! மன்னரிடம் இது பற்றிக் கேட்கவும் முடியாமல் தவிக்கிறார்களாம்!"

"சரி, சரி. இது பற்றி நாம் அதிகம் பேசுவது ஆபத்து. யார் காதிலாவது விழுந்து விடப் போகிறது. நம் வேலையைப் பார்ப்போம்!"

வழியில் சந்தித்தபோது, ஓரிரு நிமிடங்கள் இவ்வாறு உரையாடிய இரண்டு அரண்மனைக் காவலர்களும் பிரிந்து, தங்கள் வழிகளில் சென்றனர்.

"ஒரு முக்கியமான காரணத்துக்காக, இந்த ஆலோசனை அவையைக் கூட்டி இருக்கிறேன். நான் கேட்கும் கேள்விகளுக்கு, நீங்கள் அனைவரும் உண்மையான பதிலைக் கூற வேண்டும். என்னைக் குறை கூறுவதாக இருந்தாலும்  சரி, உங்கள் உண்மையான பதில் வேண்டும்" என்றார் அரசர்.

"கேளுங்கள் அரசே!" என்ற அமைச்சர், "அதற்கு முன், நான் தங்களை ஒரு கேள்வி கேட்கலாமா?" என்றார்.

"நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று தெரியும், அமைச்சரே! நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விக்கும், நான் கேட்க நினக்கும் கேள்விகளுக்கும் தொடர்பு இருக்கிறது. என் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும்போதே, உங்கள் கேள்விக்கான பதிலும் உங்களுக்குத் தானே கிடைத்து விடும்!" என்று சிரித்துக் கொண்டே கூறிய அரசர், தொடர்ந்து, "என் ஆட்சியைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?" என்றார்.

"தங்கள் ஆட்சியில், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் இருக்கிறார்கள். இது அனைவரும் அறிந்ததுதானே?" என்றார் அமைச்சர்.

"இது என் கேள்விக்கான பதில் இல்லையே, அமைச்சரே!" என்று சிரித்தபடியே கூறிய அரசர், "இந்தக் கேள்விக்கு ஒற்றர்படைத் தலைவர் பதிலளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்" என்றார், ஒற்றர்படைத் தலைவரைப் பார்த்து.

அரசர் குறிப்பாகத் தன்னைப் பார்த்துக் கேட்பார் என்பதை எதிர்பார்க்காத ஒற்றர்படைத் தலைவர், சற்றே திடுக்கிட்டவராகத் தன் இருக்கையிலிருந்து எழுந்து, "ஒரு சிலரைத் தவிர, எல்லோரும் தங்கள் ஆட்சியைப் புகழ்ந்துதான் பேசுகிறார்கள்" என்றார்.

"அந்த ஒரு சிலர் என்ன சொல்கிறார்கள் என்பதைத்தான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்."

"அரசே! குறை கூறிக் கொண்டிருக்கும் பழக்கம் உள்ள சிலர், எப்போதும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். ராமபிரானைக் கூடச் சிலர் குறை கூறிப் பேசவில்லையா?" என்றார் அமைச்சர்.

"ஆனால், ராமபிரான் அதைப் புறக்கணிக்கவில்லையே! அந்தக் குறையைப் போக்கும் வகையில்தானே நடந்து கொண்டார்?" என்று அமைச்சருக்கு பதிலளித்த அரசர், ஒற்றர்படைத் தலைவரிடம் திரும்பி, "சொல்லுங்கள்! என்னென்ன குறைகளைக் கூறுகிறார்கள்?" என்றார்.

"குறிப்பாக ஏதுமில்லை, அரசே! உங்கள் ஆட்சியில் அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், தவறு செய்பவர்கள் மீது சரியானபடி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை, அதனால், தீயவர்கள் சிலர் அச்சமின்றிக் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று சிலர் பேசிக் கொள்வதாக ஒற்றர்கள் என்னிடம் கூறினர். ஆனால், அமைச்சர் சொன்னது போல், இது போல் சிலர் எப்போதும்..."

"இதைச் சொல்ல நீங்கள் தயங்க வேண்டியதில்லை. உங்கள் ஒற்றர்கள் உங்களிடம் தெரிவித்ததைப் போல், ஆங்காங்கே சிலர் பேசிக் கொள்வதை நானே கேட்டேன்" என்றார் அரசர், அவரை இடைமறித்து. 

"தாங்களே கேட்டீர்களா?" என்றார் அமைச்சர், அதிர்ச்சியுடன்.

"ஆமாம். அமைச்சரே. சில நாட்களாக, நான் இரவு வேளைகளில் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றபோதுதான் கேட்டேன்" என்ற அரசர், அமைச்சரைப் பார்த்துப் புன்னகைத்து, "நான் இரவில் வெளியே சென்று வருவதைப் பற்றித்தானே நீங்கள் கேட்க விரும்பினீர்கள்? உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விட்டதல்லவா?" என்றார்.

"மன்னிக்க வேண்டும், அரசே! இது ஒரு சிலர் கூறும் குறைதான். இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்றார் அமைச்சர்.

"இல்லை, அமைச்சரே! நான் அப்படி நினைக்கவில்லை. அரசன் ஆட்சி சிறப்பாக இருந்தால், நாட்டில் மழை பெய்து, பயிர்கள் செழிக்கும் என்பதுதானே நம்பிக்கை? கடந்த ஆண்டில், நம் நாட்டில் மழை பொய்த்து விட்டது. அதன் காரணமாக விளைச்சல் குறைந்து விட்டது. அதனால், என் ஆட்சியில் குறை ஏதும் இருக்கலாம் என்று நினைத்து, அதை அறிந்து கொள்ளத்தான் நகர்வலம் செல்லத் தீர்மானித்தேன்."

"அரசே! தாங்கள் அறியாததல்ல. அரசர் நல்லாட்சி செய்தால், நாட்டில் மழை பெய்யும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், சில சமயம் அப்படி நடப்பதில்லை. அதனால், ஆட்சியின் மீது குறை என்று பொருளல்ல. விஸ்வாமித்திரர் மன்னராக இருந்தபோது, அவர் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. ஆனால், அவர் ஒரு சிறந்த அரசராகத்தானே இருந்தார்?"

"நீங்கள் சொல்வது உண்மைதான். ஆயினும், சில குறைகள் இருப்பதாக நமக்குத் தெரிய வரும்போது, அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியது நமது கடமை இல்லையா? தவறுகள் எங்கே நடந்தாலும், தவறு செய்தவர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எல்லா அதிகாரிகளுக்கும் கடுமையாக உத்தரவிடுங்கள். மக்கள் நம் ஆட்சியின் மீது சொல்லும் எல்லாக் குறைகளையும், அவை சிறு குறைகளாக இருந்தாலும், ஒற்றர்படைத் தலைவர் அமைச்சருக்குத் தெரிவிக்க வேண்டும். அமைச்சர் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது என் கண்டிப்பான உத்தரவு" என்றார் அரசர்.

அமைச்சரும், ஒற்றர்படைத் தலைவரும் மௌனமாகத் தலையாட்டினார்கள்.

அப்போது காற்று பெரிதாக வீச, அரண்மனையில் பல சாளரங்கள் அடித்துக் கொள்ளும் சத்தம் கேட்டது.

"அரசே! பெருமழை பொழியப் போகிறது என்று நினைக்கிறேன்" என்றார் அமைச்சர், மகிழ்ச்சியுடன்.

குறள் 545:
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

பொருள்:
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில், பருவ மழையும், நிறைந்த விளைவும், ஒருசேர ஏற்படும்.

546. வேலை வென்ற கோல்!

"படைபலம் இல்லாத ஒரு சிறிய நாட்டை நம்மால் வெற்றி கொள்ள முடியவில்லை. மூன்று மாதம் முற்றுகைக்குப் பிறகும் கோட்டைக்குள் நுழையாமல் திரும்பி வந்திருக்கிறோம். இப்படி ஒரு அவமானத்தை நாம் இதுவரை சந்தித்ததில்லை!"

மன்னன் விரகேசரியின் கோபமான பேச்சைக் கேட்டு அரசவையில் அனைவரும் தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தனர்.

"சொல்லுங்கள் அமைச்சரே! எப்படி ஒரு சிறிய நாடான கமுதி நாட்டிடம் நாம் தோற்றோம்? நாம் சரியாகத் திட்டமிடவில்லையா?"

"மன்னிக்க வேண்டும் அரசே! இந்தப் படையெடுப்பு வேண்டாம், கமுதி நாட்டுடன் நமக்குள்ள பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்று நான் துவக்கத்திலேயே சொன்னது தங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"எந்தப் போரைத்தான் நீங்கள் ஆதரித்திருக்கிறீர்கள்? நீங்கள் ஒரு அஹிம்சைவாதி என்பதால் அப்படிச் சொன்னீர்களே தவிர, கமுதி நாட்டின் மீது நாம் போர் தொடுத்தால் நாம் தோற்று விடுவோம் என்ற கருத்திலா அப்படிச் சொன்னீர்கள்?" என்றான் அரசன் கோபம் குறையாமல்.

"அதுவும் ஒரு காரணம்தான்!" என்று அமைச்சர் மெல்லிய குரலில் கூறியது அரசன் காதில் விழவில்லை.

வீரகேசரி இப்போது ஒற்றர்படைத் தலைவரிடம் திரும்பினான். "கமுதி நாட்டின் படைபலம் மிகக் குறைவு. அவர்களிடம் ஆயுதங்கள் கூட அதிகம் இல்லை என்று ஒற்றர்கள் கூறியதாகச் சொன்னீர்களே?"

"அது உண்மைதான் அரசே! போர் நடந்திருந்தால் அவர்கள் தோற்றிருப்பார்கள். ஆனால் நம்மால் கோட்டைக்குள்ளேயே நுழைய முடியவில்லையே!"  என்றார் ஒற்றர்படைத் தலைவர் தயக்கத்துடன்.

"அது உண்மைதான். மூன்று மாத முற்றுகைக்குப் பிறகும் அவர்கள் கோட்டைக் கதவைத் திறக்கவில்லை. கோட்டைக்குள் இருந்த தலைநகரத்தில் வசித்த மக்களுக்குப் போதுமான உணவு கூட இருந்திருக்காது. அது போல் கோட்டைக்கு வெளியில் இருந்த நாட்டு மக்களும் நம் படைகளுக்கு அஞ்சாமல் நமக்கு எந்த உதவியும் செய்ய மறுத்தார்கள். அவர்களுடைய ராஜ விசுவாசம் என்னை வியக்க வைக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். அமைச்சரே!" என்றான் வீரகேசரி அமைச்சரைப் பார்த்து.

அரசனின் குரலில் கடுமை குறைந்திருந்ததைக் கண்ட அமைச்சர், "ஒரு உண்மையை நாம் உணர வேண்டும் அரசே! கமுதி நாட்டு மன்னர் செங்கோல் வழுவாமல் தன் நாட்டு மக்களின் நலனைப் பாதுகாத்து வருகிறார். இது எல்லோரும் அறிந்த உண்மை. தாங்களே பலமுறை இது பற்றி வியந்து கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட அரசரிடம் குடிமக்களுக்கு அளவில்லாத விசுவாசம் இருப்பது இயல்புதான். அதனால்தான் படைபலமோ, ஆயுதபலமோ இல்லாத அவரை வலிமை மிகுந்த நம் படைகளால் வெல்ல முடியவில்லை. படைகளிடம் இருக்கும் வேலை விட அரசனின் செங்கோல் வலியது என்று நம் ஆன்றோர்கள் கூறி இருக்கிறார்கள். அதனால்தான் இந்தப் படையெடுப்பைத் தவிர்க்க வேண்டும் என்று நான் தங்களிடம் கேட்டுக் கொண்டேன்" என்று சொல்லி விட்டு அரசனின் முகத்தைத் தயக்கத்துடன் பார்த்தார். 

வீரகேசரியின் மௌனம் அமைச்சரின் பேச்சில் இருந்த உண்மையை அவன் உணர்ந்து கொண்டதைக் காட்டியது.

குறள் 546:
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

பொருள்:
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.

547. காப்பாற்றியது யார்?

"வாருங்கள் வல்லபராயரே!" என்றார் அரசர் சம்புதேவர்.

அரசர் தன்னை அழைத்த காரணத்தை அரசன் சொல்வதை எதிர்பார்த்து மௌனமாக இருந்தார் வேளைக்காரப் படைத் தலைவர் வல்லபராயர்.

"நான் மாறுவேடத்தில் நகர்வலம் போகும்போது உங்கள் படைவீரர்கள் சிலரும் மாறுவேடமிட்டு மற்றவர்கள் அறியாதவாறு என்னைப் பின்தொடரும் வழக்கத்தை இன்று முதல் நிறுத்த விரும்புகிறேன்" என்றார் சம்புதேவர்.

"மன்னிக்க வேண்டும் அரசே! தங்கள் பாதுகாப்புக்காக சில வீரர்கள் தங்கள் பின்னால் வருவது கட்டாயம்!"

"இன்று முதல் யாரும் வரக் கூடாது என்பது கட்டாயம்!" 

தயக்கத்துடன் கிளம்பிய வல்லபராயரை அழைத்த அரசர், "ஒரு விஷயம் வல்லபரே! எனக்குத் தெரியாமல் வீரர் எவரையும் ரகசியமாக என்னைப் பின்தொடரச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் அதை ஒரு குற்றமாகக் கருதுவேன்!" என்றார் சம்புதேவர்.

ம்புதேவர் பாதுகாப்பு இல்லாமல் நகர்வலம் செல்லத் தொடங்கிச் சில நாட்கள் ஆகி விட்டன. விஷயம் அறிந்து அமைச்சர் அரசரை வற்புறுத்தியபோதும் அவர் கேட்கவில்லை. 

தான் சொன்னதையும் மீறித் தனக்குப் பாதுகாப்பு அளிக்க அமைச்சரோ, வேளைக்காரப் படைத்தலைவரோ முயற்சி செய்யக் கூடாது என்பதற்காக அரசர் தான் அரண்மனையை விட்டு வெளியேறுவது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்.

ன்று சம்புவராயர் நகர்வலம் சென்று கொண்டிருந்தபோது, அவர் பின்னால் ஏதோ சலசலப்பு ஏற்பட்டது. சம்புவராயர் திரும்பிப் பார்த்தபோது கையில் கத்தியுடன் இருந்த ஒருவனை அவர் பின்னாலிருந்த ஒருவர் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.

சம்புதேவரைப் பார்த்ததும் அந்த நபர், "இவன் உன்னைக் கொல்லப் பார்த்தான். நான் பிடிச்சுட்டேன். போய் ரெண்டு மூணு பேரைக் கூட்டி வா. இவனைக் காவலர்கள் கிட்ட ஒப்படைக்கணும். சீக்கிரம்!" என்றார்.

என்ன செய்வதென்று தெரியாமல் சம்புதேவர் குழப்பத்துடன் நின்றபோது, அந்த நபர், "யாராவது வாங்களேன்! இங்கே ஒரு கொலைகாரன் சிக்கி இருக்கான்" என்று கூவ, உடனே அக்கம்பக்கத்திலிருந்து சிலர் ஓடி வந்தனர். அனைவருமாகச் சேர்ந்து கத்தியுடன் இருந்தவனை அருகில் இருந்த ஒரு வீட்டு வாசலில் இருந்த தூணில் கட்டினர். ஒருவர் காவலர்களை அழைத்து வருவதாகச் சொல்லி விட்டுப் போனார்.

"எப்படி நீங்க இவனைப் பிடிச்சீங்க?" என்றார் சம்புதேவர் அந்த நபரைப் பார்த்து.

"இந்த ஆளு ரெண்டு மூணு நாளாவே இங்கே சுத்திக்கிட்டிருக்கான். ஆளைப் பாத்தா வேற நாட்டைச் சேர்ந்தவன் மாதிரி தெரிஞ்சுது. நான் என் வீட்டுத் திண்ணையில படுத்துத் தூங்கிக்கிட்டு இருந்தேன். தெருவில யாரோ நடக்கற சத்தம் கேட்டு முழிச்சுக்கிட்டுப் பார்த்தேன். அது நீதான். சரி, தெருவில யாரோ நடந்து போறங்கன்னு நினைச்சு மறுபடி தூங்கலாம்னு கண்ணை மூடினேன்.

"மறுபடி ஏதோ சத்தம் கேட்டது. பார்த்தா இந்த ஆளு திருட்டுத்தனமா உனக்குப் பின்னால வந்துக்கிட்டிருந்தான்! சந்தேகப்பட்டு நான் தெருவில இறங்கி அவன் பின்னால சத்தம் இல்லாம போனேன். அவன் கையில இருந்த கத்தியோட பளபளப்பு எனக்குத் தெரிஞ்சது. அப்புறம் வேகமா அவன்கிட்ட போனேன். அப்ப அவனும் உன்கிட்ட வந்துட்டான். உன்னைக் குத்தப் போறான்னு நினைச்சு ஓடிப் போய் அவனைப்  புடிச்சுட்டேன். அப்புறம்தான் அவன் நான் ஏற்கெனவே சந்தேகப்பட்ட ஆள்னு தெரிஞ்சுது. அவன் ஏன் உன்னைக் குத்த வந்தான்? உனக்கும் அவனுக்கும் விரோதமா?" என்றார் அந்த நபர்.

"எனக்கு இந்த நாட்டில எதிரிகள் யாரும் இல்ல. ஆனா நீங்க அவனை வெளிநாட்டு ஆசாமியா இருக்கலாம்னு சொல்றீங்களே! வெளிநாட்டில எனக்கு எதிரிகள் இருக்கலாம்!" என்றார் சம்புதேவர் சிரித்தபடி.

"வெளிநாட்டில எதிரிகள் இருக்கற அளவுக்கு அவ்வளவு பெரிய ஆளா நீ? அது சரி, உன்னை ஒத்தன் கொல்லப் பாத்திருக்கான். நீ சிரிக்கற! நீ உயிர் பிழைச்சது பெரிய அதிசயம். உன்னைக் காப்பாத்தினது யார் தெரியுமா?"

"நீங்கதான்!"

"நான் இல்லப்பா! இந்த நாட்டை நம்ம அரசர் செங்கோல் வழுவாம ஆண்டுக்கிட்டிருக்காரே, அந்தச் செங்கோல்தான் உன்னைக் காப்பாற்றி இருக்கு!" என்றார், தான் காப்பாற்றியது அரசரை என்று அறியாத அந்த நபர். 

குறள் 547:
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

பொருள்:
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.

548. எதிர்க்க யாருமில்லை!

பத்திரிகையாளர்கள் கதிர், சுந்தர் இருவரும் தாங்கள் வழக்கமாகச் சந்தித்து உரையாடும் அந்தச் சிறிய ஓட்டலில் அவர்கள் எப்போதும் அமர்ந்து உரையாடும் அந்த ஓரமான இடத்தில் அமர்ந்து உரையாடி கொண்டிருந்தனர். 

பொது இடத்தில், தனிமையாக, மற்றவர்கள் காதில் விழாமலும், யாரும் ஒட்டுக் கேட்க முடியாமலும் பேசுவதற்கு அதை விடச் சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது. 

அவர்கள் காரசாரமாக அரசியலை விவாதிக்கும்போதும், அவர்கள் சிரித்துக் கொண்டே பேசுவதை சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கும் எவருக்கும் இரண்டு நண்பர்கள் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்பது போல்தான் தோன்றும்!

"தேவராஜ் அதிபராத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாலு வருஷம் ஆச்சு. இந்த நாலு வருஷத்தில நாடு நாசமாப் போனதுதான் மிச்சம். பொருளாதாரச் சீரழிவு, பல லட்சம் பேர் வேலை இழப்பு, ரெண்டு மூணு பெரிய தொழில் அதிபர்களோட ஆதிக்கம், ஆயிரக் கணக்கான சிறிய, நடுத்தரத் தொழில்கள் முடக்கம், அதிகரிக்கும் ஏழ்மை, அதனால் அதிகரிக்கும் தற்கொலைகள், எல்லையில் நம் அண்டை நாடுகள் தைரியமா ஊடுருவல் செய்யறது இதெல்லாம்தான் நாம் கண்ட லாபம்!" என்றான் கதிர்.

"உன்னை மாதிரி சில பேர் இப்படிச் சொல்லிக்கிட்டுத் திரியறீங்களே தவிர, தேவராஜுக்கு மக்கள் ஆதரவு இருக்கே! அடுத்த வருஷம் நடக்கப் போற தேர்தல்ல அவரை எதிர்த்து நிற்க ஆளே இல்லையே!" என்றான் சுந்தர்.

"அது என்னவோ உண்மைதான்! போன தேர்தல்ல அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரகுவீர் இப்ப சோர்ந்து போய் உக்காந்திருக்காரு. அப்பப்ப காட்டமா ஏதாவது பேசறாரு. அப்புறம் காணாம போயிடறாரு. ஆனா தேவராஜுக்கு மக்கள் ஆதரவு இருக்கறதா சொல்றதை நான் ஏத்துக்க மாட்டேன். போன தடவையே மக்களைப் பிளவு படுத்தித்தான் அவரு வெற்றி பெற்றார்ங்கறது எல்லாருக்கும் தெரியும். அவர் ஆட்சி சாதாரண மக்களுக்கு எதிரானதுங்கறதும் எல்லாருக்கும் தெரியும்!"

"அவரு நல்லது செஞ்சா கூட உன்னை மாதிரி ஆளுங்க தப்பு சொல்றீங்க. இப்ப கூட பாரு! குறைஞ்ச பட்ச ஊதிய சட்டத்தை ரத்து செஞ்சிருக்காரு! குறைஞ்ச பட்ச ஊதியம்னு ஒண்ணு இருக்கறதால தொழிலாளர்களுக்கு யாரும் அதுக்கு மேல ஊதியம் கொடுக்க மாட்டேங்கறாங்க. இப்ப அதை எடுத்துட்டதால, தொழிலாளர்களுக்கு ஊதியம் அதிகமாக் கிடைக்கும். இதைப் புரிஞ்சுக்காம சில தொழிலாளர்கள் தேசவிரோத சக்திகளோடயும், அந்நிய நாட்டு சக்திகளோடயும் சேர்ந்து இந்தச் சட்டத்துக்கு எதிரா போராட்டம் பண்றாங்க!"

கதிர் பெரிதாகச் சிரித்தான்.

"ஏண்டா, முட்டாளா நீ? குறைந்தபட்ச ஊதியச் சட்டம்னு ஒண்ணு இருக்கறதாலதான் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாவது கிடைக்குது. அதையும் எடுத்துட்டா என்ன ஆகும்? ஊதியம் அதிகமாக் கிடைக்கும்னு உன்னை மாதிரி அதிபரோட ஆதரவாளர்கள் எப்படிச் சொல்றீங்க? தொழிலாளர்களோட ஊதியம் அதிகரிக்கணும்னா குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்கணும்! அதை எடுக்கறது எப்படி நன்மை பயக்கும்?

"அதிபர் தொழிலாளர்களை சந்திச்சுப் பேச மாட்டேங்கறாரு. அதிகாரிகளை விட்டு தினமும் போரடற தொழிலாளர்களை தேச விரோதிகள், அந்நிய நாட்டிலேந்து பணம் வாங்கிக்கிட்டுப் போறாடறவங்கன்னெல்லாம் அவதூறாப் பேச வைக்கறாரு. 

"அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்காரு. தன் குடும்பத்தோட உலகம் முழுக்க சுத்திக்கிட்டு வராரு. தனக்குன்னு அரசாங்க செலவில விமானம் வாங்கி இருக்காரு. காரைப் பயன்படுத்தற மாதிரி அவர் குடும்ப உறுப்பினர்கள் அதை தினமும் பயன்படுத்தறாங்க. இப்ப ஒரு சொகுசுக் கப்பல் வேற வாங்கப் போறாராம்! இப்ப இருக்கற அதிபர் மாளிகை சின்னதா இருக்குன்னு ஏகப்பட்ட செலவில புதுசா ஒரு மாளிகை கட்டறாரு. இப்படியே போனா என்ன ஆறது?" 

"எப்படி இருந்தா என்ன? மறுபடி அவருதான் ஜெயிக்கப் போறாரு. உன்னை மாதிரி ஆளுங்க இப்படியே பொருமிக்கிட்டிருக்க வேண்டியதுதான்!" என்றான் சுந்தர் பெருமிதத்துடன்.

"பார்க்கலாம். எனக்கென்னவோ நம்பிக்கை இருக்கு. இது மாதிரி ஆடம்பரமா, மக்களுக்கு எதிரா கொடுங்கோல் ஆட்சி நடத்தின அரசர்களே இருந்த இடம் தெரியாம போயிருக்காங்க. ஜனநாயக அமைப்பில இது நடக்காதா என்ன?" என்றான் கதிர்.

"நடக்கும், நடக்கும்! முதல்ல தேவராஜை எதிர்க்க ஆளே இல்ல. ரகுவீர் தூங்கிக் கிட்டிருக்காரு. இப்பதான் கொஞ்ச நாளா ஏதோ ஒரு மூலையிலேந்து டார்வின்னு ஒரு சின்னப்பையன் அதிபருக்கு எதிராப் பேசிக்கிட்டிருக்கான். அவன்தான் வந்து தேவராஜைத் தோக்கடிக்கப் போறான்!" என்றான் சுந்தர் கேலியாக.

"அப்படிக் கூட நடக்கலாம்! கோலியாத்னு ஒரு கொடுங்கோலனை டேவிட்னு ஒரு சின்னப்பையன் வீழ்த்தினதா ஒரு கதை இருக்கே! அது இங்கேயும் நடக்கலாம். டார்வின் என்கிற பேரே எனக்கு ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததாத் தெரியுது. பரிணாம வளர்ச்சி, மாறுதல் இதையெல்லாம் குறிக்கிற பெயராச்சே இது!" என்றான் கதிர்.

டுத்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பாராத விதத்தில் தேவராஜ் டார்வினிடம் தோல்வி அடைந்தார்!

குறள் 548:
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

பொருள்:
எளிமையானவானாக இல்லாமலும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் கோலோச்சும் அரசன் தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடுவான்.

549. இரண்டு விடுதிகள்

கிரேக்க நாட்டிலிருந்து வந்திருந்த அந்த யாத்திரிகர் சமர நாடு முழுவதிலும் பல இடங்களுக்கும் பயணம் செய்தபோது அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் தங்கள் மன்னரைப் பற்றிச் சொன்ன ஒரே செய்தி, "இப்படி ஒரு அரசரைப் பார்க்கவே முடியாது!" என்பதுதான். 

சமர நாட்டு அரசர் மகரபூபதி தன் நாட்டு மக்களை ஒரு தாய் தன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது போல் பார்த்துக் கொள்கிறார் என்பதுதான் அந்த யாத்திரிகருக்குக் கிடைத்த செய்திகளின் சுருக்கம்.

தலைநகருக்குச் சென்றபோது அரசரைப் பார்க்க விரும்பினார் யாத்திரிகர். ஆனால் அரசர் அரண்மனையில் இல்லை. நாட்டின் எல்லையில் தொல்லை கொடுத்து வரும் கொள்ளையர்களை அடக்க ஒரு சிறிய படையுடன் அந்தப் பகுதிக்குச் சென்றிருக்கிறார் என்று கூறினார்கள்!

"கொள்ளையர்களைப் பிடிக்க மன்னரே நேரில் செல்ல வேண்டுமா?" என்றார் யாத்திரிகர் வியப்புடன்.

"தன் குடிமக்களின் பாதுகாப்பு மன்னருக்கு மிகவும் முக்கியம். கடந்த சில மாதங்களாகவே கொள்ளையர்கள் எல்லைப்புறத்தில் தொல்லை கொடுத்து வருகிறார்கள். நம் வீரர்கள் அவர்களை எல்லை தாண்டி விரட்டி அடித்தாலும் மீண்டும் எப்படியோ நம் நாட்டுக்குள் ஊடுருவி விடுகிறார்கள். நம் அண்டை நாட்டு அரசர்தான் கொள்ளையர்களைத் தூண்டி விடுகிறார். அதனால் அவருக்கு ஒரு பாடம் புகட்டத்தான் மன்னரே நேரில் படையுடன் சென்றிருக்கிறார். மன்னரே படையுடன் வருகிறார் என்று தெரிந்ததும் கொள்ளையர்கள் ஓடி விட்டார்கள். அண்டை நாட்டு அரசர் மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுட்டால் நம் அரசர் படையுடன் அவர்கள் நாட்டுக்குள்ளேயே நுழைந்து தாக்கத் தயங்க மாட்டார் என்பதை அவர் உணர்ந்திருப்பார். இனி இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட மாட்டார் என்று நினைக்கிறோம். ஆயினும் எல்லைப்புறத்தில் வாழும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக மன்னர் சிறிது காலம் எல்லைப்புறத்திலேயே தங்கி விட்டுப் பிறகுதான் தலைநகருக்குத் திரும்புவார்" என்றார் ஒரு அரண்மனை அதிகாரி.

மன்னரைப் பார்க்க முடியாததால் தலைநகரைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார் யாத்திரிகர். அப்படி அவர் சென்ற ஒரு இடம்தான் முதுமக்கள் விடுதி.

கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத முதியவர்கள் அதில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கு வசதியாகத் தங்கவும், அவர்களுக்கு நல்ல உணவு வழங்கவும், மருத்துவ வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

"இது போல் நாடு முழுவதும் பல விடுதிகள் இருக்கின்றன" என்றார் யாத்திரிகருக்கு வழிகாட்டியாக அனுப்பி வைக்கப்பட்ட அரண்மனை ஊழியர்.

"ஆமாம், இந்த விடுதி இரண்டு கட்டிடங்களைக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டிடத்துக்குள்தான் நீங்கள் என்னை அழைத்துச் சென்றீர்கள். இன்னொரு கட்டிடம் என்ன?" என்றார் யாத்திரிகர்.

அரண்மனை ஊழியர் சற்றுத் தயங்கி விட்டு, "அதுவும் ஒரு விடுதிதான். குற்றங்களுக்காக தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பத்தினர் அங்கே தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்" என்றார்.

"ஏன் அவர்களுக்குத் தனி விடுதி? அது வசதிக்குறைவாக இருக்குமா, அல்லது சிறை போல் இருக்குமா?" என்றார் யாத்திரிகர் சற்றே ஏளனத்துடன்.

"அப்படி நினைக்காதீர்கள். ஒரு குடும்பத் தலைவர் குற்றம் செய்து விட்டுச் சிறைக்குச் செல்வதால், அவரை நம்பி இருந்த, எந்தக் குற்றமும் செய்யாத அவர் குடும்பத்தினர் துன்பப்படக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தின் காரணமாகத்தான் அவர்களை விடுதிகளில் தங்க வைத்துக் காப்பாற்றுகிறார் எங்கள் அரசர். அவர்கள் தங்கி இருக்கும் விடுதியும் மற்ற முதியவர்கள் தங்கி இருக்கும் விடுதியைப் போல் எல்லா வசதிகளும் கொண்டதுதான்" என்றார் அந்த ஊழியர் சற்றுக் கோபத்துடன்.

"அப்படியானால் அவர்களுக்கு ஏன் தனி விடுதி? மற்ற முதியோர் தங்கும் விடுதியிலேயே அவர்களையும் தங்க வைத்திருக்கலாமே!" 

"இரண்டு காரணங்கள். குற்றம் செய்த நபரின் குடும்பத்தினர் என்பதால் தங்களைப் பற்றி மற்றவர்கள் குறைவாக நினைப்பார்களோ என்ற அவமான உணர்ச்சி அவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பது ஒன்று. இரண்டாவது காரணம் சிறைக்குச் சென்றவர்களின் குடும்பத்தில் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் இருப்பார்களே! அதனால் அவர்கள் குடும்பம் குடும்பமாகத் தனியே தங்க வைக்கப்படுவதுதானே சரியாக இருக்கும்? அத்துடன் சிறைக்குச் சென்றாவர்களின் குழந்தைகளுக்கான கல்வி வசதிகளும் அங்கே இருக்கின்றன!"

"குற்றம் செய்தவரின் குடும்பத்தினரிடம் கூட அக்கறை காட்டிச் செயல்படும் உங்கள் மன்னரின் கருணை என்னை வியக்க வைக்கிறது. இவ்வளவு கருணை உள்ள உங்கள் அரசர் குற்றம் செய்தவர்களைச் சிறையில் அடைக்காமல் அவர்களை மன்னித்து விட்டு விடலாமே!" என்றார் யாத்திரிகர்.

"அது எப்படி ஐயா? குற்றம் செய்தவர்களை மன்னித்து விட்டு விட்டால், அது மற்றவர்களுக்கும் குற்றம் செய்வதற்கான துணிவை அளிக்கும் அல்லவா? குற்றம் செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் எங்கள் அரசர். குற்றம் செய்பவர்களை தண்டிப்பதில் அவர் காட்டும் இந்த உறுதியையும் அவருடைய இன்னொரு சிறப்பாகவே மக்கள் பார்க்கிறார்கள்!" என்றார் அரண்மனை ஊழியர் பெருமிதத்துடன்.

குறள் 549:
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

பொருள்:
குடிகளைப் பிறர் துன்புறுத்தாமல் காத்து, தானும் அவர்களைத் துன்புறுத்தாமல் காத்து, தகுந்த தண்டனைகள் மூலம் அவர்களுடைய குற்றங்களை ஒழித்தல், அரசனுடைய தொழில், பழி அன்று.

550. ராஜகுருவின் கோபம்!

"அரசே! கொலைக் குற்றம் என்பது தண்டனைக்குரிய குற்றம் என்னும்போது அரசரே அந்தக் குற்றத்தைச் செய்யலாமா?" என்றார் ராஜகுரு பரிமள அரங்கர்.

"தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் குருவே?" என்றார் அரசர் சிம்மேந்திரர்.

"கொலைக் குற்றம் புரிந்த ஒருவனுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறாயே, அதைச் சொல்கிறேன்!"

"குருவே! தாங்கள் அறியாததல்ல. சமுதாயத்துக்கே கேடாக இருக்கும் ஒரு கொடிய கொலைகாரனுக்கு மரண தண்டனை விதிப்பது தவறா?  மரண தண்டனை அளிப்பது என்பது காலம் காலமாக நடந்து வருவதுதானே?"

"மனிதன் நாகரிகத்தில் முன்னேறும்போது காலம் காலமாகச் செய்யப்பட்டு வந்த கொடிய செயல்களைக் கைவிடுவதுதானே பரிணாம வளர்ச்சியின் அடையாளம்?" 

"குருவே! குற்றத்துக்கு ஏற்ற தண்டனை என்பதுதானே தண்டனை முறையின் அடிப்படை?"

"குற்றத்துக்கு ஏற்ற தண்டனை! கொலை செய்தவனுக்குக் கொலை தண்டனை! அப்படியானால், ஒருவன் திருட்டுக் குற்றம் செய்தால் அரண்மனை ஊழியர்கள் அந்தத் திருடன் வீட்டில் போய்த் திருடி விட்டு வர வேண்டும் என்று தண்டனை விதிப்பாயா?" 

அரசருக்கு சுருக்கென்று கோபம் வந்தது. ஆயினும் குருவைக் கடிந்து பேசக் கூடாது என்பதால், கோபத்தை அடக்கிக் கொண்டு, "அப்படி இல்லை குருவே! எல்லக் கொலைகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை. உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் கொலைகளுக்கு சிறை தண்டனைதானே வழங்குகிறோம்? கொடுமையான கொலைகளைச் செய்தவர்களுக்குத்தானே மரண தண்டனை வழங்குகிறோம்?" என்றார் அரசர் பொறுமையுடன்.

"மரண தண்டனை விதிக்கும் அரசனுக்கு குருவாக இருக்க நான் விரும்பவில்லை. நான் இனி இந்த அரண்மனைக்குள் வர மாட்டேன். என்றாவது ஒருநாள் நீ மரண தண்டனையையே அறவே ஒழித்து விடுவதாக முடிவு செய்தால், எனக்குச் சொல்லி அனுப்பு. அப்போது வந்து உன்னை வாழ்த்தி விட்டுப் போகிறேன்!" என்றபடியே அவையை விட்டு வெளியேறினார் பரிமள அரங்கர்.

சில வாரங்களுக்குப் பிறகு பரிமள அரங்கரின் வீட்டுக்குச் சென்றார் அரசர்.

அரசரை வரவேற்று உபசரித்த பரிமள அரங்கர் சற்று நேரம் பொதுவாக உரையாடியபின், "மன்னா! என்னை அவைக்கு வரச் சொல்லி அழைப்பதற்காக நீ வந்திருந்தால், என்னை மன்னித்து விடு. என் முடிவை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை!" என்றார் உறுதியுடன்.

"இல்லை குருவே! தங்கள் மனதை மாற்ற நான் முயலப் போவதில்லை. மரியாதை நிமித்தமே தங்களைச் சந்திக்க வந்தேன். விடைபெறுகிறேன்!" என்று சொல்லி விடை பெற்றார் அரசர் சிம்மேந்திரர்.

 வீட்டுக்கு வெளியில் வரும்போது, வீட்டின் முன்பக்கத்திலிருந்த தோட்டத்தைப் பார்த்தபடியே வந்த அரசர், சட்டென்று நின்று, "குருவே! இதென்ன, உங்கள் தோட்டக்காரர் செடிகளை வெட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்?" என்றார்.

"அவர் வெட்டிப் போடுவது செடிகளை அல்ல மன்னா, களைகளை!" என்றார் குரு.

"களைகளை அவர் ஏன் வெட்டுகிறார்?  நமக்கு வேண்டிய செடிகளை மட்டும் பராமரித்துக் கொண்டு களைகளை அப்படியே விட்டு விடலாமே!"

"களைகளை வெட்டாமல் அப்படியே விட்டு வைத்தால் அவை செடிகளையே அழித்து விடாதா?" என்று பரிமள அரங்கர், தான் ஏதோ தவறாகச் சொல்லி விட்டது போல் சட்டென்று பேச்சை நிறுத்தினார்.

சிம்மேந்திரர் ஒரு மெல்லிய புன்சிரிப்புடன் பரிமள அரங்கரின் வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

குறள் 550:
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

பொருள்:
கொடியவர் சிலரைக் கொலை தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயலாகும்

                                            அதிகாரம் 56 - கொடுங்கோன்மை                                     அதிகாரம் 54 - பொச்சாவாமை

அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்   

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...