அதிகாரம் 42 - கேள்வி

திருக்குறள் 
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 42
கேள்வி

411. தேர்வு முடிவுகள்

"வருஷம் பூரா கல்லூரியில படிக்கிறோம். கடைசியில மூணு மணி நேரப் பரீட்சையில் நாம என்ன எழுதறமோ அதுதான் நம்ம விதியைத்  தீர்மானிக்குது. இந்த முறை அநியாயமாத் தோணலே?" என்றான் ஜெயந்த்.


"சில இடங்கள்ள தொடர் மதிப்பீடுன்னு ஒரு முறை இருக்கு. வருஷம் முழுக்க நாம எழுதற பல டெஸ்ட் மார்க்குகளை மொத்தமா பார்த்து நம்ம கிரேடைத் தீர்மானிக்கற முறை அது. அது பரவாயில்லையா?" என்றான் கண்ணன்.  

"ஐயையோ! வேண்டாம். வருஷத்துக்கு ஒரு தடவை பரீட்சை எழுதற முறையே பரவாயில்லை!" என்றான் நடராஜன்.

நெருங்கி வரும் ஆண்டு இறுதிப் பரீட்சை தரும் அழுத்தத்தைக் குறைக்க, அந்த நண்பர்கள் படிப்புக்கிடையே அவ்வப்போது இது போன்று பேசிச் சிரித்துத் தங்களைக் கொஞ்சம் இளக்கிக் கொள்வார்கள்.  

தேர்வில் யார் அதிக மதிப்பெண்கள் வாங்குவார்கள் என்று அவர்களுக்குள் ஒரு விவாதம் நடந்தது. 

"சந்தானம், சிவராமன் ரெண்டு பேர்ல ஒத்தர்தான். இதில என்ன சந்தேகம்?" என்றான் நடராஜன்.

"அது தெரிஞ்ச விஷயம்தான். ஆனா ரெண்டு பேர்ல யாரு?" என்றான் ஜெயந்த் .

"எனக்கென்னவோ சிவராமன்தான் வருவான்னு தோணுது. அவன்தான் விழுந்து விழுந்து படிக்கிறான். சந்தானம் நம்ம மாதிரி கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கற மாதிரி இருக்கு" என்றான் கண்ணன்.

"டேய், அவனை நம்மோட ஒப்பிடாதேடா. அவன் எங்கே, நாம எங்கே?" என்றான் ஜெயந்த்.

"இல்லை. அவங்க ரெண்டு பேர்ல சந்தானம் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கான்னு சொல்றேன்."

"இருக்கலாம். சரி, விடு. நாம படிக்கிறதை விட்டுட்டு அடுத்தவங்க எப்படிப் படிக்கறாங்கன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கோம்!" 

தேர்வுகள் நடந்து முடிந்தன. பொதுவாக அனைவருக்குமே பௌதிக கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்தது. 

பரீட்சை முடிவுகள் வந்தபோது பௌதிகத் தேர்வில் சிவராமனை விட சந்தானம் 10 மதிப்பெண்கள் கூடுதலாக வாங்கி இருந்தான்.

"எப்படிடா? நான் ரொம்பக் கஷ்டப்பட்டுப் படிச்சேன். ஆனா பரீட்சையில் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் புத்தகத்திலேயே இல்லை. நீ எப்படி இவ்வளவு மார்க் வாங்கின? வேற புத்தகம் ஏதாவது படிச்சியா?" என்றான் சிவராமன் சந்தானத்திடம்.

"வேற புத்தகம் எதுவும் படிக்கல. ஆனா இதையெல்லாம் நம்ம ப்ரொஃபஸர் வகுப்பிலே விளக்கமா சொல்லி இருக்காரு. அதெல்லாம் முக்கியம்னும் சொல்லி இருக்காரு. அதனால அதையெல்லாம் நோட்ல குறிச்சு வச்சிருந்தேன். அது உபயோகமாக இருந்தது" என்றான் சந்தானம்.

சிவராமன் மௌனமாக இருந்தான். புத்தகத்தில் படித்துக் கொள்ளலாம் என்ற அலட்சியத்துடன் தான் பல வகுப்புகளுக்குச் செல்லாமல் இருந்தது தன்னை எப்படி பாதித்திருக்கிறது என்று புரிந்தது. சந்தானம் வகுப்புகளுக்குச் சென்று ஆசிரியர் கூறியவற்றை கவனித்து உள்வாங்கிக் கொண்டதால்தான் தன் அளவுக்கு விழுந்து விழுந்து படிக்காவிட்டாலும், அவனால் பல பாடங்களில் தன் அளவுக்கும், சில பாடங்களில் தன்னை விட அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற முடிந்தது என்றும் புரிந்தது.    

குறள் 411:
செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

பொருள்:
செவியால் கேட்டு அறியும் செல்வம் செல்வங்களில் ஒன்றாகும். அந்தச் செல்வம் எல்லாச் செல்வங்களிலும் தலை சிறந்தது.

412. கான்ட்டீன்

"இன்னிக்கு ஒரு இலக்கிய விழா இருக்கு. போகலாம், வரியா?" என்றார் விட்டல்.

விட்டல் என் பக்கத்து வீட்டில் வசிப்பவர். என்னை விடப் பத்து வயது மூத்தவர். ஆயினும், எங்கள் இருவருக்கும் சில விஷயங்களில் பொதுவான ஆர்வமும், கருத்துக்களும் இருந்ததால் அவர் என்னை ஒரு நண்பனாகவே நடத்தி வந்தார். 

நான் சற்றுத் தயங்கினேன்.   

"இது வருஷத்துக்கு ஒரு தடவை நடக்கிற விழா. ரொம்ப அருமையா இருக்கும். ஒவ்வொரு பேச்சும் அற்புதமா இருக்கும். காலையிலேயே ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதுக்கு என்னால போக முடியல. மாலை நிகழ்ச்சி இன்னும் அருமையா இருக்கும். சாயந்திரம் 4 மணியிலேந்து 9 வரைக்கும். நேரம் போறதே தெரியாது. வா, போயிட்டு வரலாம்" என்றார்.

நான் இன்னும் தயங்கியதைக் கண்டு, "அந்த சபாவில விஜயா பவன்காரங்கதான் கான்ட்டீன் நடத்தறாங்க!" என்றார் விட்டல்.  

"சரி சார். வரேன்" என்றேன் நான்.

நாங்கள் நான்கு மணிக்கு அரங்கத்தில் நுழையும்போதே கான்ட்டீனிலிருந்து அருமையான மணம் வீசியது. 

"சார்! கான்ட்டீன்ல டிஃபன் சாப்பிட்டுட்டுப் போயிடலாமே!" என்றேன் நான்.

"இப்ப நிகழ்ச்சி ஆரம்பிச்சுடுமே! அப்பறம் வந்து சாப்பிட்டுக்கலாம், வா!" என்று என் கையைப் பிடித்து இழுக்காத குறையாக உள்ளே அழைத்துச் சென்றார் விட்டல்.

விட்டல் சொன்னது போல், சொற்பொழிவுகள் அருமையாகத்தான் இருந்தன. வலிந்து கூறப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளோ, அரசியல், சினிமா பற்றிய குறிப்புகளோ இல்லாமல் இலக்கியச் சுவையை மட்டுமே அறுசுவை விருந்துகளாக வழங்கி கொண்டிருந்தார்கள் பேச்சாளர்கள். 

பேச்சுக்கள் சுவையாக இருந்தாலும் என் மனதில் கான்ட்டீனிலிருந்து வந்த மணம் திரும்பத் திரும்ப வந்து போனது. 

இரண்டு மூன்று முறை விட்டலிடம், "சார்! கான்ட்டீனுக்குப்  போயிட்டு வந்துடலாமா?" என்று மெதுவாகக் கேட்டுப் பார்த்தேன். 

"இருப்பா! இவ்வளவு அருமையாப் பேசிக்கிட்டிருக்காரு. இப்ப எப்படிப் போறது?"என்று என்னை அடக்கி விட்டார். 

'சரிதான். ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி முடிந்ததும்தான் கான்ட்டீனுக்குப் போகப் போகிறோம். அப்போது கான்ட்டீனில் எல்லாம் தீர்ந்து போய் கான்ட்டீனை மூடிக் கொண்டிருப்பார்கள். நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!' என்று நினைத்துக் கொண்டேன்.  

குறிப்பிட்ட ஒரு பேச்சாளர் பேசி முடித்ததும் அடுத்த பேச்சாளரின் பெயரை அறிவித்தார்கள். விட்டல் சட்டென்று என் கையைப் பிடித்து இழுத்து, "வா, போகலாம்!" என்று எழுந்தார்.  

விறுவிறுவென்று கான்ட்டீனுக்கு நடந்தார். 

கான்ட்டீனில் போய் அமர்ந்ததும், "என்ன சார்! இவ்வளவு நேரம் வர மாட்டீன்னீங்க. இப்ப மட்டும் எப்படி எழுந்து வந்தீங்க? ரொம்பப் பசி வந்துடுச்சோ?" என்றேன் கேலியாக.

"இவ்வளவு அருமையான பேச்சுக்கள் காது வழியே உள்ளே போய்க்கிட்டிருக்கச்சே, பசி எப்படி வரும்?"

"பின்னே, இப்ப மட்டும் எப்படி வந்தீங்க?'

"இந்தப் பேச்சாளர் பேச்சை நான் முன்னால கேட்டிருக்கேன். அவர் அவ்வளவு நல்லாப்  பேச மாட்டார். அதனாலதான் இந்த சமயத்தில வயத்தையும் கொஞ்சம் கவனிச்சுக்கலாம்னு வந்தேன். இவர் இருபது முப்பது நிமிஷம் பேசுவார்னு நினைக்கிறேன். இவர் பேசி முடிச்சு அடுத்த பேச்சாளர் வரத்துக்குள்ள நாம சாப்பிட்டு முடிச்சுட்டு உள்ள போயிடணும். சீக்கிரமா ஆர்டர் பண்ணு. இப்ப கான்ட்டீன்ல கூட்டம் இல்ல. ஆனா இவர் பேச ஆரம்பிச்சதும் கொஞ்சம் கொஞ்சமா எல்லாரும் எழுந்து கான்ட்டீனுக்கு வர ஆரம்பிச்சுடுவாங்க! அப்புறம் நாம ஆர்டர் பண்ணினது வர லேட் ஆயிடும்!" என்றார் விட்டல். 

அவர் சொல்லி முடித்தபோதே, ஒரு சிலர் கான்ட்டீனுக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். 

குறள் 412:
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

பொருள்:
செவிக்கு கேள்வி என்ற உணவு இல்லாதபோது, வயிற்றுக்குச் சிறிது உணவு அளிக்கப்படும்.

413. கேள்வி என்னும் வேள்வி 

"மன்னா, நீ இந்த வேள்வியைச் செய்வது பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பல மன்னர்கள் தங்கள் அரச குடும்பத்துக்கு நன்மையை வேண்டியும், போரில் வெற்றியை வேண்டியும்தான் வேள்விகள் செய்கிறார்கள். உன் நாட்டு மக்களுக்கு நன்மையை வேண்டி நீ இந்த வேள்வியைச் செய்வது உன் உயர்ந்த சிந்தனையைக் காட்டுகிறது" என்றார் கௌதம முனிவர்.

"முனிவரே! வேள்விகள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. என் குருவின் யோசனைப்படிதான் நான் இதைச் செய்கிறேன். இந்த வேள்வியை நடத்திக் கொடுக்கத் தங்களை அணுக வேண்டும் என்று கூறியவரும் அவர்தான்" என்றான் மன்னன்.

"உன் வெளிப்படைத் தன்மையைப் பாராட்டுகிறேன். உன் வேள்வியை நானே நடத்தி வைக்கிறேன். இந்த வேள்வி நிச்சயம் உன் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும். அதனால் உனக்கும் நன்மை விளையும்."

"முனிவரே! எனக்கு ஒரு ஐயம். நான் முன்பே சொன்னபடி எனக்கு வேள்விகள் பற்றி எதுவும் தெரியாது. வேள்வி செய்வதால் எப்படி நன்மை ஏற்படும்? என் கேள்வி தவறாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்."

"உன் கேள்வியில் தவறு எதுவும் இல்லை. வேள்வி செய்யுமுன் அது பற்றி அறிந்து கொள்வது நல்லது. வேள்வி என்பது வானுலகில் உள்ள தேவர்களை மகிழ்விப்பதற்காகச் செய்யப்படுவது. 

"தேவர்களிடம் ஒரு குறிப்பிட்ட பலனை வேண்டி நாம்  செய்வது வேள்வி. வேள்வியில் உணவுகள் உட்படப் பல பொருட்களை நாம் தேவர்களுக்கு வழங்குகிறோம். அவற்றை நாம் வேள்வித் தீயில் சேர்க்கும்போது அக்னி பகவான் அவற்றை எடுத்துச் சென்று தேவர்களிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. 

"வேள்வியில் நாம் வழங்கும் பொருட்களை அவி என்று கூறுவர். வடமொழியில் ஹவிஷ் என்று  சொல்வார்கள். நாம் அளிக்கும் அவியால் மகிழ்ந்து தேவர்கள் நாம் எதை வேண்டி வேள்வி செய்கிறோமோ அதை நமக்கு அளிப்பார்கள்" என்று விளக்கினார் கௌதம முனிவர். 

வேள்வி சிறப்பாக நடந்து முடிந்தது. 

"மன்னா! வேள்வி நிறைவடைந்து விட்டது. நீ அளித்த அவி தேவர்களைச் சென்றடைந்திருக்கும். இப்போது இங்கே கூடியிருக்கும் வேத விற்பன்னர்கள், பண்டிதர்கள், அறிஞர்கள் ஆகியோருக்கு நீ பரிசுகள் வழங்க வேண்டும்" என்றார் கௌதமர்.

"தாங்கள் கூறியபடி பொற்காசுகள், பட்டாடைகள்  ஆகியவற்றைப் பரிசளிப்பதற்காகத் தயாராக வைத்திருக்கிறேன். முதலில் தங்களுக்குப் பரிசளித்து கௌரவிக்க விரும்புகிறேன்" என்றான் மன்னன்.

"இல்லை. நான் இந்த வேள்வியை நடத்திக் கொடுத்ததால் நானும் உன்னைத் சேர்ந்தவன். எனவே இந்தப் பரிசுகளை நான் பெறக் கூடாது. இங்கே குழுமி இருக்கும் மற்ற முனிவர்கள், விற்பன்னர்களுக்குக் கொடு."

"சரி, முனிவரே. முதலில் யாருக்குக் கொடுப்பது என்று தெரிவித்தீர்களானால்..."

"கொஞ்சம் இரு" என்று சுற்றுமுற்றும் பார்த்த கௌதமர், பார்வையாளர்களின் வரிசையில் இருந்த சாதாரண மனிதர் போல் தோற்றமளித்த ஒருவரை அழைத்தார்.

அந்த மனிதர் எதுவும் புரியாமல் தயக்கத்துடன் அருகில் வர, "மன்னா! இவரே முதலில் பரிசு பெறத் தகுதி உள்ளவர்" என்றார் கௌதமர்.

அரசன் சற்றுத் தயங்கி விட்டு, அவருக்குப் பரிசுகளை வழங்க, அவரும் குழப்பத்துடன் அவற்றை வாங்கிக் கொண்டு முனிவரையும், அரசனையும் வணங்கி விட்டுச் சென்றார். 

முனிவரின் சீடர்களும், மற்ற அறிஞர்களும் குழப்பத்துடனும், ஏமாற்றத்துடனும் முனிவரைப் பார்த்தனர். 

"ஒரு சாதாரண மனிதருக்கு முதல் மரியாதை  கொடுக்க வேண்டும் என்று நான் சொன்னது உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கலாம். நீங்கள் எல்லாம் கல்வியில் தேர்ந்த அறிஞர்கள். ஆனால் சாதாரண மனிதராகத் தோன்றும் அவர் கேள்வியில் தேர்ந்தவர். 

"ஆமாம். கடந்த பல வருடங்களாக நான் உபதேசம் செய்யும் இடங்களுக்கெல்லாம் அவர் வந்து அமர்ந்திருப்பதை நான் கவனித்திருக்கிறேன். சமீபத்தில் அவரை அழைத்து நான் உரையாடினேன். என்னைத் தவிர இன்னும் பல முனிவர்கள், அறிஞர்களின் உரைகளை அவர் பல ஆண்டுகளாகக் கேட்டு வருகிறார் என்று தெரிந்து கொண்டேன். 

"அவரிடம் பேசியதில் அவர் செய்து வரும் கேள்வி என்ற வேள்வியின் காரணமாக அவரிடம் அபரிமிதமான ஞானம் இருப்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய கேள்வி ஞானத்தை அடைந்துள்ள அவர் இந்த வேள்வியின் அவியைப் பெறும் தேவர்களுக்கு ஒப்பானவர். 

"எனவே இந்த வேள்வியில் முதல் மரியாதை அவருக்குத்தான் செய்யப்பட வேண்டும் என்று முன்பே தீர்மானித்து அவரை இந்த வேள்விக்கு வரச் சொன்னேன். கேள்வியறிவின் மேன்மையை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்" என்றார் கௌதம் முனிவர். 

குறள் 413:
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

பொருள்:
செவி உணவு என்னும் கேள்வி ஞானம் உள்ளவர்கள் இந்த உலகத்தில் வாழ்பவர்கள் என்றாலும், யாகங்களில் அளிக்கப்படும் அவியை உண்ணும்  தேவர்களுக்கு ஒப்பானவர்கள்.

414. விட்டதும் பெற்றதும் 

அந்த கிராமத்துப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக நான் மாற்றப்பட்டு அங்கே சென்றபோது எனக்கு அறிமுகம் ஆனவர்தான் சௌரிராஜன். 

சௌரிராஜனின் அப்பா அந்த ஊர் முன்சீஃபாக இருந்தவர். ஆனால் அவர் காலத்திலேயே முன்சீஃப் பதவிகள் ஒழிக்கப்பட்டு விட்டன. 

அவர் குடும்பத்துக்கு ஊரில் ஒரு மரியாதை இருந்தது, ஊரில் அதிக நிலபுலன் உள்ள, வசதி படைத்த குடும்பம் என்பதற்கும் மேல், மற்றவர்களுக்கு உதவும் குணம் அவர்கள் குடும்பத்துக்கு ஊரில் ஒரு நற்பெயரை ஈட்டிக் கொடுத்திருந்தது. 

பள்ளியில் பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஓரிரு நாட்கள் கழித்து மரியாதை நிமித்தமாக சௌரிராஜனின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தேன்.

முதல் சந்திப்பிலேயே எங்கள் இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் ஏற்பட்டு விட்டது. 

அதன் பிறகு நான் அவர் வீட்டுக்குச் செல்வதும், அவர் என் வீட்டுக்கு வருவதும் அடிக்கடி நிகழ்ந்தன. 

என் மனைவி கூட ஒருமுறை கேட்டாள், "நீங்க படிச்சுட்டு வாத்தியாரா இருக்கீங்க. அவரு படிக்காதவாரு. நீங்க ரெண்டு பேரும் எப்படி இவ்வளவு நெருக்கமானீங்க?" என்று. 

தான் படிக்கவில்லை என்பதில் சௌரிராஜனுக்கு மிகவும் வருத்தம் உண்டு. 

"சின்ன வயசில எனக்குப் படிப்பு ஏறல. வயல் வேலையிலதான் ரொம்ப ஈடுபாடு இருந்தது. அஞ்சாவது பாஸ் பண்றதுக்கே ரொம்பக் கஷ்டப்பட்டேன். ஒருவேளை முன்சீஃப் பையன்னுட்டு ஸ்கூல்ல பாஸ் போட்டுட்டாங்களோ என்னவோ தெரியல!

"அப்ப, இந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தில் அஞ்சாவதுக்கு மேல கிடையாது. ஆறாவது வகுப்பு படிக்க பக்கத்து ஊர்ல இருக்கற வேற ஊருக்குத்தான் போகணும். 'எனக்குப் படிப்பு வேண்டாம்ப்பா'ன்னு எங்க அப்பாகிட்ட சொன்னேன். அவரும் சரின்னு விட்டுட்டாரு. ஆனா படிக்காம இருந்துட்டேனேன்னு இப்ப வருத்தப்படறேன்!" என்றார் என்னிடம் ஒரு நாள். 

"படிக்காட்டாலும் நிறைய விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே!" என்றேன் நான். 

அப்போது நான் சொன்னது உபசாரத்துக்குத்தான் என்றாலும், நான் சொன்னது உண்மைதான் என்று சில நாட்களில் புரிந்து கொண்டேன். 

பல விஷயங்களையும் பற்றி ஓரளவு அவர் அறிந்து வைத்திருப்பது அவரிடம் தொடர்ந்து பழகியபோது எனக்குப் புரிந்தது.

சில சமயம், "இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று நான் ஒருமுறை வியந்து கேட்டபோது, "எல்லாம் உங்களை மாதிரி படிச்சவங்க சொல்லிக் கேட்டுத் தெரிஞ்சுக்கறதுதான்" என்றார் அவர்.

ருமுறை சதாசிவம் என்ற அவர் நண்பர் வீட்டுக்குச் சென்றபோது என்னையும் அழைத்துச் சென்றார் சொரிராஜன். "பாவம். அவருக்கு அடிக்கடி ஏதாவது உடம்புக்கு வந்துடுது. வருமானமும் சரியா இல்ல. ரொம்ப கஷ்டப்படறாரு. கொஞ்சம் ஆறுதல் சொல்லிட்டு வரலாம்" என்றார் போகும் வழியில்.

"அதுக்கு நான் எதுக்கு?" என்றேன்.

"சும்மா வாங்க. உங்களை மாதிரி புதுசா ஒருத்தர் வந்து நலம் விசாரிச்சா அவங்களுக்கு ஆறுதலா இருக்கும் இல்ல?" என்றார் சௌரிராஜன்.

அவர்கள் வீட்டுக்குச் சென்று சற்று நேரம் பேசிய பிறகு, சௌரிராஜன் அவர் கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு பழைய புத்தகத்தை  எடுத்து சதாசிவத்திடம் கொடுத்தார். "இந்தா! இது சுந்தர காண்டம். என் வீட்டில இருந்ததுதான். உனக்காகத்தான் எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்!" என்றார் 

"இது எதுக்கு?" என்றார் சதாசிவம் புத்தகத்தை வாங்கியபடியே.

"பொதுவா சுந்தர காண்டம் படிச்சா பிரச்னைகள் தீர்ந்து நல்லது நடக்கும்னு சொல்லுவாங்க. ஆனா இவ்வளவு பெரிய புஸ்தகத்தை யார் படிக்கறதுன்னு நினைச்சு ரொம்ப பேரு இதை முயற்சி செஞ்சு கூட பாக்க  மாட்டாங்க.

"அசோக வனத்திலே சீதை விரக்தி அடைஞ்சு தற்கொலை பண்ணிக்கலாம்னு யோசிக்கச்சே, அவங்களுக்கு சில நல்ல சகுனங்கள்ளாம் வருது. அதுக்கப்பறம் அனுமார் வந்து அவங்களைப் பாத்து நம்பிக்கை கொடுக்கறாரு. சுந்தர காண்டம் 29ஆவது சர்க்கத்தில அந்த சகுனங்களை விவரிச்சிருக்காரு வால்மீகி.

"இதில எட்டு சுலோகம்தான் இருக்கு. இதை சுலபமாப் படிக்கலாம். இதில சுலோகங்கள் சம்ஸ்கிருத்தத்திலேயும், தமிழ்லேயும் இருக்கு. சுலோகங்களோட அர்த்தமும் இருக்கு. நீயோ, உன் சம்சாரமோ தினம் இதைப் படிங்க. நல்லது நடக்கும்.

"என் சம்சாரம் படுத்த படுக்கையாக் கிடந்தப்ப நானே கஷ்டப்பட்டு எழுத்துக் கூட்டி இதைப் படிச்சேன். ஒரு வாரத்தில அவ எழுந்து உக்காந்துட்டா. உனக்கும் அது மாதிரி நல்லது நடக்கும்" என்று விளக்கினார் சௌந்தரராஜன். 

தாசிவத்தின் வீட்டிலிருந்து வெளியே வந்து தெருவில் இறங்கியதும், "இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் படிச்சவன்னு பேரு. எனக்கே இந்த விவரம் எல்லாம் தெரியாதே! ஏன், ஆன்மீக விஷயங்கள்ள ஈடுபாடு உள்ளவங்க பல பேருக்குக் கூட இது தெரியாதே!" என்றான் நான் வியப்புடன்.

"எனக்கு இந்த ஊர்ல ராமுன்னு ஒரு சிநேகிதன் இருந்தான். படிச்சவன், நிறைய விஷயம் தெரிஞ்சவன். அவன்கிட்டதான் நான் நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன். அவன் இப்ப இங்க இல்ல. பம்பாய்க்குப் போய் அங்கேயே செட்டில் ஆயிட்டான். ஆனா அவனுக்கு பதிலா உங்களை மாதிரி புதுசா சில சிநேகிதர்கள் எனக்குக் கிடைச்சுக்கிட்டுத்தானே இருக்கீங்க? உங்ககிட்டேருந்தெல்லாம் நான் நிறையக் கத்துக்கலாமே!" என்றார் சௌரிராஜன் சிரித்தபடி.

சௌரிராஜன் அதிகம் படிக்கவில்லை என்பது அவருக்கு ஒரு குறையே இல்லை என்று நினைத்துக் கொண்டேன் நான். 

குறள் 414:
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

பொருள்:
கல்வி கற்காதவனாக இருந்தாலும் கற்றவர்களிடம் விஷயங்களைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அது வாழ்க்கையில் தளர்ச்சி அடைந்த நேரத்தில் ஊன்றுகோல் போல் துணையாக இருக்கும்.

415. நண்பரிடம் கேட்ட ஆலோசனை

"இவ்வளவு வருஷமா உங்ககிட்ட நம்பிக்கையா வேலை செஞ்ச சங்கர் இப்படிப் பண்ணிட்டானே!" என்றாள் சாந்தா அங்கலாய்ப்புடன். 

"பணத்தாசை யாரை விட்டது? ரெண்டு லட்சம் ரூபாயைப் பார்த்ததும் சபலம் வந்துடுச்சு போலருக்கு. பாங்க்ல கட்டச் சொல்லிக் கொடுத்த பணத்தை எடுத்துக்கிட்டுக் கம்பி நீட்டிட்டான்" என்றார் செல்வரங்கம்.

"இதுக்கு முன்னால எவ்வளவோ தடவை பாங்க்ல பணத்தைக் கட்டிட்டு வந்திருக்கானே!"

"அதெல்லாம் சின்னத் தொகை. அம்பதாயிரம் ரூபாய்க்குள்ளதான் இருக்கும். நேத்திக்கு ஒரு பெரிய வியாபாரம் நடந்ததால இவ்வளவு கேஷ் சேர்ந்து போச்சு. ரெண்டு லட்ச ரூபாயைப் பாத்ததும் சபலம் வந்துடுச்சு. எடுத்துட்டு ஓடிட்டான். இது அவனுக்கு எவ்வளவு நாளைக்குத் தாங்கும்? பெண்டாட்டி பிள்ளைங்களைக் கூட விட்டுட்டு ஓடி இருக்கானே!" என்று புலம்பினார் செல்வரங்கம்.

"ஆமாம். அவன் வீட்டில விசாரிச்சீங்களா?"

"அவன் வீட்டுக்குப் போய் விசாரிச்சுட்டேன். 'என்னையும் புள்ளைங்களையும் விட்டுட்டுப் போயிட்டாரே, நான் என்ன பண்ணுவேன்'னு அவன் பெண்டாட்டி கதறி அழறா!"

"சரி. போலீஸ்ல சொல்லிட்டீங்களா?"

"இனிமேதான் சொல்லணும்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்  செல்வரங்கம்.

ற்று நேரம் கழித்து  செல்வரங்கம் வீட்டுக்குத் திரும்பி வந்ததும், "என்ன போலீஸ்ல புகார் கொடுத்தீட்டிங்களா?" என்றாள் சாந்தா.

"இல்ல. இனிமேதான் போகணும்."

"இப்ப எங்கே போயிட்டு வந்தீங்க?'

"சிவராமனைப் பாத்துட்டு வந்தேன்."

"அவரை எதுக்குப் பாக்கணும்? அவரு என்ன போலீசா, இல்ல ஓடிப்போனவன் எங்க இருக்கான்னு மை போட்டு சொல்றவரா?" என்றாள் சாந்தா, சற்று எரிச்சலுடன்.

"இங்க பாரு சாந்தா! சிவராமன் என் நண்பன் மட்டும் இல்ல. எனக்கு ஒரு வழிகாட்டியும் கூட."

"ஏங்க, அவரு ஒரு சாதாரண மனுஷன். ஏதோ கொஞ்சம் படிச்சிருக்காரு, விஷயம் தெரிஞ்சவரு. அதுக்காக, இதுக்கெல்லாம் கூட அவர் கிட்ட யோசனை கேட்கணுமா?"

"சாந்தா! சிவராமனை மாதிரி ஒழுக்கமா, நேர்மையா இருக்கறவங்க கிட்ட யோசனை கேட்டு நடந்துக்கிட்டா, நான் செய்யற காரியத்தில் தப்பு நடக்காம பாத்துக்க முடியுங்கறது என்னோட அனுபவம். மகாபாரதத்தில வர விதுரர் நேர்மையும் ஒழுக்கமும் கொண்டவர். திருதராஷ்டிரனோட தம்பிதான் அவர், ஆனாலும் திருதராஷ்டிரன் அவர்கிட்ட யோசனை கேப்பாரு. ஆனா அவர் சொன்னபடி திருதராஷ்டிரர் நடந்துக்கல. துரியோதனன் அவரை மதிக்கவே இல்ல. ஆனா பாண்டவர்கள் எப்பவுமே அவர் கிட்ட யோசனை கேட்டு நடந்தாங்க. மகாபாரதக் கதையில யாருக்கு என்ன ஆச்சுன்னுதான் உனக்குத் தெரியுமே!"

"அதெல்லாம் புராணக் கதைங்க. நடைமுறை வாழ்க்கை இல்லை."

'சரி, நம்ப காலத்துக்கே வருவோம். மகாத்மா காந்தி எவ்வளவு பெரிய மனுஷன்! அவரு ஒரு தடவை உண்ணாவிரதம் இருக்கச்சே, உண்ணாவிரதம் இருக்கும்போது எலுமிச்சம்பழச் சாறு குடிக்கலாமான்னு ராஜாஜி கிட்ட கேட்டாராம். அதுக்கு ராஜாஜி, எலுமிச்சம்பழத்தில ஊட்டச்சத்து இருக்கு, அதனால உண்ணாவிரதம் இருக்கறப்ப எலுமிச்சம்பழச் சாறு குடிக்கிறது சரியா இருக்காதுன்னு சொன்னாராம்! அதன்படியே காந்தியும் உண்ணாவிரதம் இருக்கறப்ப தண்ணியை மட்டும் குடிச்சாரு. தனக்குச் சரியா வழி காட்டினதால ராஜாஜியை தன்னோட 'மனச்சாட்சியோட காவலர்'னு காந்தி சொல்லுவாரு!" 

"சரி. உங்க நண்பர் என்ன சொன்னாரு?"

"பாதிக்கப்பட்டது நான் மட்டும்தான் நான் நினைச்சுக்கிட்டிருந்தேன். சங்கரோட குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்குங்கறதை நினைவில் வச்சுக்கிட்டு நடந்துக்கச் சொல்லி சிவராமன் சொன்னான். ஒரு தப்பும் பண்ணாத அவங்களுக்கு இன்னும் அதிக பாதிப்பு வராம பாத்துக்கணும்னு சொன்னான். போலீஸ்காரங்க சங்கர் குடும்பத்தைதான் முதல்ல விசாரிப்பாங்க. அதனால அவங்க மேல தப்பு இல்லேன்னு போலீஸ்ல நான் சொல்லி அவங்களுக்குக் கஷ்டம் வராம பாத்துக்கறதோட, இந்த நிலைமையிலேந்து அவங்க மீண்டு வரதுக்கு என்னால ஆன உதவியை அவங்களுக்கு செய்யணும்னு சொன்னான். அவன் சொன்னப்பறம்தான் எனக்கு இது தோணலியேன்னு உறைச்சுது. அதனால போலீஸ் ஸ்டேஷனுக்குப் போறப்பவே சங்கரோட மனைவியையும் அழைச்சுக்கிட்டுப் போய் எல்லாத்தையும் விவரமா சொன்னா, போலீஸ்காரங்க புரிஞ்சுப்பாங்கன்னு நினைக்கிறேன்."

செல்வரங்கம் சாந்தாவின் முகத்தைப் பார்த்தார்.

அவள் எதுவும் சொல்லவில்லை.     

குறள் 415:
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

பொருள்:
வழுக்கல் மிகுந்த பாதையில் உதவும் ஊன்றுகோல் போல் ஒழுக்கம் உடையவர்களின் சொற்கள் ஒருவருக்கு உதவும்.

416. நண்பர்கள்

தனராஜ் அதிகம் படிக்கவில்லை. அவன் குறைந்த படிப்புக்கு ஏற்ற வகையில் ஒரு சிறிய நிறுவனத்தில் ஒரு சுமாரான வேலைதான் அவனுக்குக் கிடைத்தது. அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தனராஜும், சுதாகர், கணேஷ் என்ற அவனுடைய இரு நண்பர்களும் சேர்ந்து ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் இருந்து வந்தனர். 

மூன்று நண்பர்களுக்கிடையே நல்ல புரிதல் இருந்தது. அதனால் சமையல் செய்தல், பாத்திரங்களைக் கழுவுதல், வீட்டைச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை அவரவர்கள்  வீட்டில் இருக்கும் நேரத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டனர். 

மூவரில் சுதாகர் நல்ல வேலையில் இருந்தான். அவன் ஒரு மடிக்கணினி வைத்திருந்தான். இன்டர்நெட் இணைப்பும் வைத்திருந்தான். அதற்கான மாதாந்தரக் கட்டணத்தை அவன் தனிப்பட்ட முறையில் கட்டி வந்தான். ஆயினும் அவன் பயன்படுத்தாதபோது கணினியை மற்ற இருவரும் பயன்படுத்தலாம் என்று கூறி இருந்தான்.

திரைப்படங்களை ஒளிபரப்பும் சில சேவைகளுக்கும் அவன் சந்தா கட்டி இருந்ததால் விடுமுறை நாட்களில் சில சமயம் மூன்று பேரும் சேர்ந்து கணினியில் புதிய திரைப்படங்கள் பார்ப்பதுண்டு.  

கணேஷுக்குத் திரைப்படங்கள் பார்ப்பதில் ஒரு வெறியே உண்டு. எனவே கணினியை அதிகம் பயன்படுத்துபவன் அவன்தான். பொதுவாக வீட்டில் அதிக நேரம் இருப்பவன் அவன்தான் என்பதால் அவனுக்கு இது வசதியாக இருந்தது.

மூவரில் வீட்டில் குறைந்த நேரம் இருப்பவன் தனராஜ்தான். தினமும் இரவில் அலுவலகத்திலிருந்து அவன் வீடு திரும்ப தாமதமாகி விடும். பெரும்பாலும் அவன் வீட்டுக்குத் திரும்பும் நேரத்தில் மற்ற இருவரும் உறங்கப் போயிருப்பார்கள். அவனுக்கான இரவு உணவை எடுத்து வைத்திருப்பார்கள். 

" டேய், சுதாகர்! தனராஜ் தினமும் வீட்டுக்கு வரதுக்கே லேட் ஆயிடுது. சாப்பிட்டுட்டுப் பாத்திரங்களைக் கழுவி வச்சுட்டு, கிச்சனை சுத்தம் பண்ணிட்டுக் கொஞ்ச நேரம் கம்ப்யூட்டர்ல சினிமா வேற பாக்கறான் போலருக்கு. எனக்குத்தான் சினிமாப் பைத்தியம்னு நினைச்சேன். அவன் எனக்கு மேல இருப்பான் போலருக்கு. தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு சினிமா பாக்கறான்!" என்றான் கணேஷ்.

"என்னிக்காவது தூக்கம் வராம இருந்தப்ப பாத்திருப்பான்" என்றான் சுதாகர்.

"இல்லடா. நிறைய தடவை பாத்திருக்கேன். பன்னண்டு மணிக்கு மேல கூட உக்காந்து பாத்துக்கிட்டிருக்கான்" என்றான் கணேஷ்.

"சரி விடு. அவனுக்கு அது பிடிச்சிருக்கு போல இருக்கு!" என்றான் சுதாகர்.

ன்று இரவு சுதாகர் தற்செயலாகக் கண் விழித்தபோது பக்கத்து அறையில் விளக்கு எரிந்தது. அறைக்கு வெளியே நின்று பார்த்தபோது தனராஜ் காதுகளில் ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு கணினியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். 

கணேஷ் சொன்னது சரிதான் போலிருக்கிறது. மணியைப் பார்த்தான். பன்னிரண்டரை!

அப்படி என்ன பார்த்துக் கொண்டிருக்கிறான் இந்த நேரத்தில்?

சந்தடி செய்யாமல் தனராஜ் அருகே சென்று, அவன் பின்னே நின்று பார்த்தான் சுதாகர் .

தனராஜ் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு சுய முன்னேற்றப் பேச்சாளரின் வீடியோ!

பார்த்துக் கொண்டிருந்தான் என்பதை விட, கேட்டுக் கொண்டிருந்தான் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

"எதுக்குடா இதை பாத்துக்கிட்டிருக்க, இவ்வளவு லேட்டா, தூங்காம?" என்றான் சுதாகர்.

தனராஜ் திடுக்கிட்டுத் திரும்பினான். "ஒண்ணுமில்ல சும்மாதான்!" என்றான் ஹெட்ஃபோனைக் கழற்றியபடியே. 

"நாள் முழுக்க வேலை செஞ்சுட்டு, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கறதுக்காக ஏதோ ஜாலியா சினிமா பாத்துக்கிட்டிருக்கேன்னு நினைச்சா, இது மாதிரி சீரியஸான பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்க!" என்றான் சுதாகர்.

"ஒண்ணும் இல்ல. நான் அதிகமாப் படிக்கல. முடிஞ்ச வரைக்கும் தினம் ஒரு அரை மணி நேரம் ஏதாவது உருப்படியான விஷயங்களைக் கேக்கலாமேன்னுதான் இது மாதிரி பேச்சையெல்லாம் கேட்டுப் பாக்கறேன்" என்றான் தனராஜ் சங்கடத்துடன்.

"என்னென்ன டாபிக் எல்லாம் கேக்கற?"

"மோட்டிவேஷன், பொது அறிவு, விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்,  சில சமயம் ஆன்மிகம் கூட!" என்றான் தனராஜ் கொஞ்சம் தயக்கத்துடன். 

"இதுக்கு ஏண்டா இவ்வளவு சங்கடப்படற? நீ செய்யறது ரொம்ப நல்ல விஷயம். உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு. தொடர்ந்து கேளு. ஆனா உடம்பைப் பாத்துக்க. தூக்கத்தைக் கெடுத்துக்காமப் பாத்துக்க!" என்று சொல்லி விட்டு அவன் முதுகில் தட்டி விட்டுத் தன் தூக்கத்தைத் தொடர்வதற்காகப் படுக்கைக்குச் சென்றான் சுதாகர்.  

குறள் 416:
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

பொருள்:
சிறிய அளவுக்காவது நல்ல விஷயங்களைக் கேட்டறிய வேண்டும். எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்கு அது நமக்குப் பெருமையை அளிக்கும்.

417. கருணாகரனின் தயக்கம்
கருணாகரன் சுவாமி தன்மயானந்தாவின் பேச்சினால் கவரப்பட்டு அவர் சொற்பொழிவுகளுக்கு அதிகம் செல்ல ஆரம்பித்தான். ஒரு கட்டத்தில் அவருடன் அவனுக்கு அறிமுகமும் ஏற்பட்டது.

அப்போதுதான் ஒருமுறை தன்மயானந்தா அவனிடம் சொன்னார்: 

"உனக்கு ஆன்மீக விஷயங்களில் நிறைய ஆர்வம் இருக்கிறது. ஓரளவுக்குத் தேர்ச்சியும் இருக்கிறது. நீ எங்கள் மிஷனில் சேர்ந்து பயிற்சி பெற்று எங்கள் ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்பும் சொற்பொழிவாளர் ஆகலாமே!"

"நான் திருமணம் ஆனவன். ஒரு தொழில் செய்து வருகிறேன். எனக்குத் துறவியாக விருப்பம் இல்லை சுவாமிஜி!" என்றான் கருணாகரன்.

"இவையெல்லாம் ஒரு தடை இல்லை. பயிற்சி வகுப்புகள் மாலையில் மட்டும்தான் நடக்கும். 6 மாதம் பயிற்சி பெற்ற பிறகு நீ சொற்பொழிவுகள் செய்ய ஆரம்பிக்கலாம். எங்கள் மிஷனில் எல்லா ஏற்பாடுகளும் செய்வார்கள். நீ தலைப்புக்கேற்றவாறு தயார் செய்து கொண்டு பேசினால் போதும். உன் தொழிலுக்கு எந்த பாதிப்பும் வராது" என்றார் தன்மயானந்தர். 

சிறிது யோசனைக்குப் பிறகு கருணாகரன் அவர் யோசனைக்கு ஒப்புக் கொண்டான்.

று மாதங்களுக்குப் பிறகு கருணாகரன் தன்மயானந்தரைத் தனியாகச் சந்தித்தான்.

"பயிற்சியைச் சிறப்பாக முடித்து விட்டாய். பாராட்டுக்கள்!" என்றார் தன்மயானந்தர்.

"சுவாமிஜி! ஒரு சந்தேகம்."

"கேள்!"

"ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருப்பவர்கள் திருமண வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது என்று உங்கள் குரு கூறியிருப்பதாகப் பயிற்சியின்போது நீங்கள் கூறினீர்கள்."

"ஆமாம். அதற்கென்ன?"

"பிறகு, நான் எப்படி ஆன்மீக விஷயங்கள் பற்றிப் பேச முடியும்?"

"உனக்கு ஒருவர் வேலை கொடுப்பதாகச் சொல்கிறார். அப்போது அதற்கான தகுதி உனக்கு இல்லை என்று நீ சொல்வாயா?"

தன் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் அவர் தவிர்க்கிறார் என்பது கருணாகரனுக்குப் புரிந்தது.

"மன்னிக்க வேண்டும் சுவாமிஜி. உங்கள் குருவின் பேச்சுக்கள் சிலவற்றின் பதிவுகளைப் போட்டுக் காட்டினீர்கள். அவை எல்லாவற்றிலும் வாழ்க்கையைக் கடவுள் நமக்கு அளித்த ஒரு பரிசாக நினைத்து நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் அவர் சொல்கிறார். பிரம்மச்சரியம் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. இது முரண்பாடாக இருப்பதாகத் தோன்றுகிறதே!"

"நீ என்ன சொல்ல வருகிறாய்? என் குரு சொல்லாத விஷயத்தை நான் சொல்வதாகவா? அவருடைய இறுதிக் காலத்தில் அவரால் பேச முடியாதபோது அவர் சில கருத்துக்களை சுருக்கமாக எழுதி என்னிடம் கொடுத்தார். அவருடைய கருத்துக்களைப் பரப்ப வேண்டிய என் கடமையைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். அவர் கருத்துக்களில் முரண்பாடு இருக்கிறதா என்று ஆராய நான் எப்போதும் துணிந்ததில்லை."

தன்மயானந்தரின் பேச்சில் கோபம் இருப்பது தெரிந்தது.

"நான் அதிகப் பிரசிங்கித்தனமாகப் பேசி இருந்தால் என்னை மன்னிக்க வேண்டும் சுவாமிஜி. எனக்குச் சிறிது குழப்பமாக இருக்கிறது. எனவே தெளிவு பெற்ற பிறகு நீங்கள் குறிப்பிட்ட பணியில் ஈடுபடுவது பற்றி முடிவு செய்கிறேன். தவறாக நினைக்காதீர்கள்" என்று சொல்லி அவரிடமிருந்து விடை பெற்றான் கருணாகரன்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு தன்மயானந்தர் அவனைச் சந்திக்க விரும்புவதாக தன்மயானந்தரின் அலுவலகத்திலிருந்து அவனுக்குத் தொலைபேசியில் ஒரு செய்தி வந்தது.

சற்றுத் தயக்கத்துடன் தன்மயானந்தரைச் சந்திக்கச் சென்றான் கருணாகரன்.

அவனை உற்சாகமாக வரவேற்ற தன்மயானந்தர், "வா கருணகரா! நான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும்!" என்றார்.

"என்ன சொல்கிறீர்கள் சுவாமிஜி?"

"உனக்கு ஏற்பட்ட சந்தேகம் என் மனதிலும் நீண்ட நாட்களாக உறுத்திக் கொண்டிருந்த விஷயம்தான். ஆனால் அதைப் பற்றி நான் பெரிதாக ஆராயவில்லை. ஆனால் உன்னிடம் அன்று பேசிய பிறகு என் குரு எழுதிய குறிப்பை எடுத்துப் படித்தேன். அவர் ஆங்கிலத்தில் எழுதி இருந்தார். ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் celebate செய்ய வேண்டும் என்று அவர் எழுதி இருந்தார். celebate என்றால் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது என்றுதானே பொருள்? 

"ஆனால் உன்னிடம் பேசிய பிறகு என் குரு தன் கைப்பட எழுதிய குறிப்புத் தாளை எடுத்துப் பார்த்தேன். அப்போதுதான் ஒரு விஷயம் உறைத்தது. அவர் எழுதி இருந்தது celebrate என்று! அவர் கையெழுத்து தெளிவாக இல்லாததால், நான் ஒரு துறவியாக  இருந்ததால் அதை celebate என்று படித்து விட்டேன். 

"வாழ்க்கையைக் கொண்டாடுவதுதான் ஆன்மீகம் என்றுதான் அவர் சொல்லி இருக்கிறார். எனவே அவர் கூறியதில் முரண்பாடு எதுவும் இல்லை. நீ தெளிவாகச் சிந்தித்ததால் எனக்கும் தெளிவைக் கொடுத்து விட்டாய். என் குருவின் கருத்துக்களைப் பரப்ப என்னை விடவும் அதிகத் தகுதி உனக்குத்தான் இருக்கிறது!" என்றார் தன்மயானந்தர். 

குறள் 417:
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

பொருள்:
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவு உடையவர்கள் ஒருவேளை எதையாவது தவறாகப் புரிந்து கொண்டாலும், அறிவற்ற விதத்தில் பேச மாட்டார்கள்.

418. வியக்க வைக்கும் திறமை!

"நம்ப கணபதி இருக்கானே அவனுக்குக் காது ரொம்ப கூர்மை. தூரத்திலேந்து யாராவது பேசினா கூட அதைத் துல்லியமாக் கேட்டுடுவான்!" என்றான் கிருஷ்ணன்

"அப்ப, அவன் வீட்டுக்குப் பக்கத்து வீடுகள்ள இருக்கறவங்க ரொம்ப கவனமாத்தான் பேசணும்!" என்றான் சுரேஷ்.

"பக்கத்து வீட்டில இருக்கறவங்களை விடு, இவன் வீட்டில இருக்கறவங்களே அவன் இருக்கறப்ப கவனமாத்தான் பேசுவாங்களாம்! ஒரு நாளக்கு நான் அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். நானும் அவனும் ஹால்ல உக்காந்து பேசிக்கிட்டிருந்தோம். அப்ப, அறைக்குள்ள இருந்த அவன் தம்பிக்கு ஃபோன் வந்திருக்கும் போலருக்கு. அவன் ஃபோனை எடுத்துக்கிட்டு வெளியில போயிட்டான். அறைக்குள்ளேந்து பேசினா கூட கணபதிக்குக் காதில விழுந்துடும்னு பயம் போலருக்கு!"

"இது கொஞ்சம் ஓவரா இல்ல? சும்மா கதை விடாதே!"

"கதை இல்லடா, உண்மைதான். அது மட்டும் இல்ல. அவன் ஒரு விஷயத்தைக் கேட்டா, அது அப்படியே அவன் மனசில பதிஞ்சுடுமாம்."

"அப்படி இருந்தா, அது ஒரு பெரிய கிஃப்ட்தான்!" என்றான் சுரேஷ்.

கிருஷ்ணன் கூறியது உண்மைதான் என்று சுரேஷ் உணர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

அவர்கள் கல்லூரி ஆண்டு விழாவில் ஒரு போட்டி நடந்தது. ஒரு திரைப்படப் பாடலின் துவக்க இசை ஒலிபரப்பப்படும். அது எந்தப் பாடல் என்று கண்டுபிடித்து அந்தப் பாடலின் முதல் வரியைக் கூற வேண்டும் என்பது போட்டி.

எல்லோரும் வியக்கும் வகையில் அநேகமாக எல்லாப் பாடல்களுக்குமே ஆரம்ப இசை ஒலிக்கத் துவங்கிய ஒரு சில விநாடிகளுக்குள்ளேயே பாடல் வரியைச் சொல்லி முதல் பரிசை வென்று விட்டான் கணபதி.

"எப்படிடா? இத்தனைக்கும் நீ சினிமாப் பாட்டெல்லாம் அதிகம் கேக்கறதில்லையே!" என்றான் சுரேஷ்.

"ஒண்ணு ரெண்டு தடவை கேட்டிருப்பேன்ல? அதை வச்சுதான் சொன்னேன்!" என்றான் கணபதி, அது ஏதோ எளிதான விஷயம் போல்.

கல்லூரியில் ஒரு சயன்ஸ் க்விஸ் வைத்திருந்தார்கள். அதில் சுரேஷ் கணபதியைத் தன் பார்ட்னராக வைத்துக் கொண்டான். ஆனால் அவர்கள் இருவரும் அடங்கிய குழுவால் பெரும்பாலான கேள்விகளுக்கு விடை சொல்ல முடியவில்லை. அவர்கள் குழுவுக்கு மிகக் குறைந்த மதிப்பெண்களே கிடைத்தன.

"கணபதிக்கு நிறைய கேள்விகளுக்கு விடை தெரிஞ்சிருக்கும்னு நினைச்சு அவனை என் பார்ட்னரா வச்சுக்கிட்டேன். ஆனா எனக்குத் தெரிஞ்சது கூட அவனுக்குத் தெரியல!" என்றான் சுரேஷ் கிருஷ்ணனிடம்.

"அவனை நீ பார்ட்னராத் தேர்ந்தெடுத்தது தப்பான சாய்ஸ்!" என்றான் கிருஷ்ணன்.

"நீதானே சொன்னே, அவன் எதையாவது கேட்டா அவன் மனசில ஆழமாப் பதிஞ்சுடும், மறக்காதுன்னு?"

"ஆமாம். ஆனா, கேட்டாதானே? அவன்தான் கிளாசுக்கே வரதில்லையே! அப்புறம் எங்கே லெக்சரைக் கேக்கறது, ஞாபகம் வச்சுக்கறது? பரீட்சைக்கு முன்னால புத்தகத்தைப் படிச்சுப் பரீட்சை எழுதி பாஸ் மார்க் வாங்கப் பாக்கற ஆளு அவன்!" என்றான் கிருஷ்ணன்.

"இப்படி ஒரு திறமை இருந்து என்ன பிரயோசனம்? அதைப் பயன்படுத்திக்காம இருக்கானே!" என்றான் சுரேஷ். 

குறள் 418:
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

பொருள்:
கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள் கேட்கும் சக்தி கொண்டிருந்தாலும் அவை கேளாத செவிகள் என்றே கருதப்பட வேண்டும்.

419. பேராசிரியரின் பேச்சு!

பேராசிரியர் குருமூர்த்தியின் வகுப்பு என்றால் மாணவர்களுக்கு உற்சாகம்தான். 

ஏனெனில், அவர் வகுப்பில் பாடம் நடத்துவதோடு வேறு சில விஷயங்களையும் பேசுவார். 

குறிப்பாக, கல்லூரி நிர்வாகத்தைக் கிண்டல் செய்வார். கல்லூரி முதல்வரின் திறமையின்மை பற்றிப் பேசுவார். 

சில சமயம் அரசியல் தலைவர்கள் பற்றியும் பேசுவார். ஆனால் எல்லமே மறைமுகமாகப் பெயர் குறிப்பிடப்படாமல்தான் இருக்கும். 

பல மாணவர்களுக்கு இது சுவாரசியமாக இருந்தாலும் மகேஷுக்கு இது மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

"என்னடா இது, காலேஜுக்குப் படிக்க வரோமா, வம்புப் பேச்சு கேக்க வரோமா?" என்று தன் நண்பன் கேசவனிடம் அலுத்துக் கொண்டான் மகேஷ்.

"போடா! வகுப்பு ஜாலியாப் போகுதுன்னு எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க! வகுப்புல லெக்சரர் சொல்லிக் கொடுத்தா நாம கத்துக்கப் போறோம்? இது பள்ளிக் கூடம் இல்லை, காலேஜ்!" என்றான் கேசவன்.

கல்லூரிக் கையேட்டை எடுத்து குருமூர்த்தியின் கல்வித் தகுதியைப் பார்த்தான் மகேஷ். அவர் முதுநிலைப் பட்டதாரி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முனைவர் பட்டம் பெற்றவர் இல்லை. அவரே ஒருமுறை இதைப் பற்றி வகுப்பில் குறிப்பிட்டார்.

"நான் பி எச் டி எல்லாம் பண்ணல. எதுக்கு? பி ஜி படிச்சவனை விட பி எச் டி படிச்சவனுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் அதிகமாக் கிடைக்கும். இதுக்காக கைடுன்னு ஒத்தனைப் புடிச்சு மூணு வருஷம் அவனுக்குக் கால் புடிச்சு விட்டு பி எச் டி வாங்கணுமா? மேல போக முடியாதேன்னு கேக்கலாம். நம்ம ஊர்ல பி எச் டி பண்ணாம வைஸ் சான்ஸ்லராவே ஆகி இருக்காங்க. அதனால மேல வரதுக்குத் தேவை மேல் படிப்பு இல்லை, கால் பிடிப்புதான்!" என்று சொல்லிச் சிரித்தார் அவர்.

ஒருமுறை வேறொரு செக்‌ஷனில் படித்த ஒரு மாணவனைச் சந்தித்தபோது அவர்களுக்கு வகுப்பு எடுக்கும் பேராசிரியரைப் பற்றிக் கேட்டான் மகேஷ்.

"எங்களுக்கு ப்ரொஃபசர் தனபால்தான் எடுக்கறார்" என்றான் அவன்

"அவர் கிளாஸ் எப்படி இருக்கும்?" என்றான் மகேஷ்

"ஓ! ரொம்ப நல்லா இருக்கும். வகுப்பில சப்ஜெக்டைத் தவிர வேற எதையும் பேச மாட்டாரு. ஆனாலும் அவர் கிளாஸ் ரொம்ப இன்ட்டரஸ்டிங்கா இருக்கும். ஏன்னா அவருக்கு ரொம்ப டீப் நாலட்ஜ் உண்டு. சிலபஸ்ல இருக்கறதுக்கு மேலயும் சில விஷயங்களைப் பத்திப் பேசுவாரு. அவர் கிளாஸை யாருமே மிஸ் பண்ண மாட்டாங்க. 

"சில சமயம் அவரைப் பாக்க ஸ்டாஃப் ரூமுக்குப் போயிருக்கேன். அங்கே மத்தவங்கள்ளாம் அரட்டை அடிச்சுக்கிட்டிருப்பாங்க. இவர் மட்டும் ஏதாவது புத்தகத்தைப் படிச்சுக்கிட்டிருப்பாரு!

"ஒரு தடவை அவர் ஏதோ பத்திரிகை படிச்சுக்கிட்டிருந்தார். அது என்ன பத்திரிகைன்னு கேட்டேன். 'நம்ப சப்ஜெக்ட்ல புதுசா என்னென்ன டெவலப்மென்ட் நடக்குதுன்னு தெரிஞ்சுக்க இது மாதிரி டெக்னிகல் ஜேர்னல்ஸைப் படிக்கறது என் வழக்கம்'னு சொன்னார். 

"இப்ப கூட மும்பையில ஒரு செமினார்னு போயிருக்காரு. காலேஜ்ல கூட அனுப்பல. காலேஜுக்கு லீவ் போட்டுட்டு அவர் சொந்த செலவில போயிருக்காரு!" என்றான் அவன்.

குருமூர்த்தி போன்றவர்கள் இருக்கும் இதே கல்லூரியில் தனபால் போன்றவர்களும் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டான் மகேஷ்.

அடுத்த நாள் வகுப்பில், "இந்த காலேஜ்லேருந்து சில பேரு லீவ் போட்டுட்டு, செமினார்ல கலந்துக்கறேன்னு சொந்தச் செலவில மும்பாய், கொல்கத்தான்னு போறாங்க. இதைத்தான் சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கறதுன்னு சொல்றது!" என்று சொல்லிச் சிரித்தார் குருமூர்த்தி.

வகுப்பில் சிரிப்பலை எழுந்தது. 

குறள் 419:
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

பொருள்:
நுட்பமான கேள்வி அறிவு இல்லாதவர்கள் பணிவான சொற்களைப் பேசுபவர்களாக இருக்க மாட்டார்கள்.

420. நினைவில்லை!

"நாளைக்கு ஜெயலக்ஷ்மி சபாவில ஒரு கச்சேரி இருக்கு. எனக்கு ரெண்டு டிக்கட் கிடைச்சது. நீயும் வரியா?" என்றான் சேதுபதி, தொலைபேசியில்.

"சாரிடா! நாளைக்கு ஒரு ஆன்மீகச் சொற்பொழிவுக்குப் போகணும்" என்றான் பத்மநாபன்.

"பரவாயில்லையே! ஆன்மீகத்தில உனக்கு இவ்வளவு ஈடுபாடு இருக்குன்னு எனக்குத் தெரியாது."

"நல்ல விஷயங்கள் கொஞ்சமாவது காதில விழணும் இல்ல?".

"சரி. போயிட்டு வா. அப்புறம் பாக்கலாம்."

சில நாட்கள் கழித்து சேதுபதி பத்மநாபனின் வீட்டுக்கு வந்தான்.

சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த பிறகு, திடீரென்று நினைவு வந்தவனாக, "ஆமாம், போன வாரம் ஏதோ ஆன்மீகச் சொற்பொழிவுக்குப் போயிருந்தியே, எப்படி இருந்தது? என்றான் சேதுபதி

"நல்லா இருந்தது!" என்றான் பத்மநாபன்.

"யாரோட சொற்பொழிவு?"

"ஏதோ பேரு சொன்னங்க. ஞாபகம் இல்ல" என்றான் பத்மநாபன்.

"என்னடா இது, நான் கச்சேரிக்குக் கூப்பிட்டப்ப வர மாட்டேன்னுட்டு அந்த சொற்பொழிவுக்குப் போன! இப்ப அவர் பேர் கூட ஞாபகம் இல்லைங்கற?" என்றான் சேதுபதி.

"சாந்தகுமார்" என்றாள் பத்மநாபனின் மனைவி, சமையற்கட்டில் இருந்தபடியே.

"அவர் ரொம்ப பிரபலமானவராச்சே! அவரு பேரு ஞாபகம் இல்லைங்கற!" என்றான் சேதுபதி வியப்புடன்.

'இதுக்கு முன்னால இது மாதிரி சொற்பொழிவுக்கெல்லாம் போனதில்லையே! அதனாலதான் பேரை மறந்துட்டேன்."

"எதைப் பத்திப் பேசினாரு?"

"ஏதோ ராமாயணக் கதைன்னு நினைக்கறேன்." 

"அவரு எப்பவுமே கீதையைப் பத்தித்தானே பேசுவாரு?"

"கீதையைப் பத்திப் பேசினா என்ன, சீதையைப் பத்திப் பேசினா என்ன, எல்லாமே ஆன்மீகம்தானே? அதை விடு!" என்று பேச்சை மாற்றினான் பத்மநாதன்.

பத்மநாபன் கிளம்பிச் சென்றதும், "ஏங்க, ரெண்டு மணி நேரம் பேச்சைக் கேட்டிருக்கீங்க. பேசினவர் பேரு ஞாபகம் இல்லை, என்ன பேசினார்னும் ஞாபகம் இல்ல! ஏன் இப்படி?" என்றாள் அவர் மனைவி.

"அங்கே பேச்சு முடிஞ்சதும் அருமையான சக்கரைப் பொங்கல் கொடுக்கறாங்க, நிறையவே கொடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டுதான் நீ கூப்பிட்டதும் உன்னோட அங்கே வந்தேன். அவர் பேசினதை யார் கேட்டா? கொஞ்ச நேரம் மொபைல்ல மெஸ்ஸேஜ் எல்லாம் பாத்துக்கிட்டிருந்தேன். அப்புறம் தூக்கம் கண்ணைச் சுத்திச்சு. உக்காந்துகிட்டே நல்லா தூங்கினேன். பேச்சு முடியறப்பதான் தூக்கம் கலைஞ்சுது. ஃபிரஷ்ஷா இருந்தது. பிரசாதமும் அருமையா இருந்தது!" என்றான் பத்மநாபன்.

"நல்ல ஆளு நீங்க! அதுக்கு நீங்க உங்க நண்பரோட, கச்சேரிக்கே போயிருக்கலாமே! உங்களுக்குத்தான் சங்கீதம் கேக்கறது பிடிக்குமே! அங்கே கான்ட்டீன் கூட இருந்திருக்குமே!"

"போயிருக்கலாம்தான். ஆனா நான் மட்டும் போயிருந்தா முதல்ல கான்ட்டீன்ல போய் எனக்குப் பிடிச்ச அயிட்டங்களை  சூடா சாப்பிட்டுட்டு அப்புறம்தான் கச்சேரி கேட்டிருப்பேன்! ஆனா சேதுபதி கச்சேரி முடியறவரையில கான்ட்டீனுக்குப் போகவே விட மாட்டான். அதனாலதான் அவன் கூப்பிட்டப்ப போகல!" என்றான் பத்மநாபன்.

குறள் 420:
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

பொருள்:
செவியால் நல்ல விஷயங்களைக் கேட்கும் சுவையை உணராமல் உண்ணும் சுவையில் மட்டும் ஈடுபாடுள்ள மனிதர்கள்  உயிரோடு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன?

அதிகாரம் 43 - அறிவுடைமை 

அதிகாரம் 41 - கல்லாமை

அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...