"வேலைக்கு முயற்சி பண்ணணும்" என்றான் முகுந்தன்.
"உன்னோட பி ஏ படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்? என் நண்பர் ராமசாமி வேலை செய்யற கம்பெனியில ஒரு வேகன்சி இருக்காம். அந்த வேலையை உனக்கு வாங்கித் தரதா ராமசாமி சொல்றாரு. அங்கேயே சேந்துக்க!"
"அப்பா, அங்கே சம்பளம் ரொம்பக் குறைச்சலாக் கொடுப்பாங்க. கேரியர் டெவலப்மென்ட்டே இருக்காது. சின்ன கம்பெனியில வேலை செஞ்சா, அந்த அனுபவத்தை வச்சு வேற நல்ல வேலைக்கும் முயற்சி பண்ண முடியாது."
"அம்பானியும், அதானியுமா உன்னைக் கூப்பிட்டு வேலை கொடுக்கப் போறாங்க? ஒத்தர் வேலை கொடுக்கறேன்னு சொல்றப்ப, அந்த வேலையை ஏத்துக்கறதுதானே புத்திசாலித்தனம்?"
"எனக்கு ஆறு மாசம் டைம் கொடுங்கப்பா. அதுக்குள்ள எனக்கு நல்ல வேலை கிடைக்கலேன்னா, அந்த வேலையில சேந்துக்கறேன்" என்றான் முகுந்தன்.
"உனக்காக அந்த வேலை காத்துக்கிட்டிருக்குமா என்ன? எப்படியோ போ!" என்றார் சுப்பிரமணியன், கோபத்துடன்.
"நீ சொன்னபடி ஆறு மாசம் ஆச்சு. உனக்கு இன்னும் வேலை எதுவும் கிடைக்கல. என்ன செய்யப் போற?" என்றார் சுப்பிரமணியன்.
"அப்பா! நீங்க கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வச்சீங்க. இனிமேயாவது, நாம வசதியா இருக்கணும், உங்களையும், அம்மாவையும் நல்லா வச்சுக்கணும்னு ஆசைப்படறேன். உங்க நண்பரோட கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தா, நம்ம வாழ்க்கையில எந்த முன்னேற்றமும் இருக்காது. ஆறு மாசத்தில எனக்கு வேலை கிடைக்கும்னு நினைச்சேன். கிடைக்கல. இன்னும் கொஞ்ச நாள் பார்க்கலாமே!" என்றான் முகுந்தன்.
"நீ சொல்றது சரிதான். ஆனா, நமக்கு வேற வழி இல்லையே! உனக்கு வேலை கிடைக்காம போயிடுமோங்கற கவலையிலதான் அப்படிச் சொன்னேன்" என்றார் சுப்பிரமணியன்.
"கவலைப்படாதீங்கப்பா! முயற்சி செஞ்சுக்கிட்டே இருந்தா, அதுக்குப் பலன் கிடைக்காம போகாது" என்றான் முகுந்தன்.
அடுத்த மாதமே, ஒரு பெரிய நிறுவனத்தில், நல்ல சம்பளத்துடனான ஒரு வேலைக்கு முகுந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக வேலை உத்தரவு வந்தது.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல் வகை
குறள் 1023:
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
No comments:
Post a Comment