"எதுக்கு சும்மா வயலுக்குப் போயிட்டு வரீங்க? அதான் மழை பெய்யாம பயிர்கள் காஞ்சு கிடக்கே! அதை தினமும் போய்ப் பார்த்துட்டு வரணுமா என்ன?" என்றாள் விசாலாட்சி.
"நம்ம பிள்ளைங்க யாருக்காவது உடம்பு சரியில்லைன்னா, மனசு இருப்புக் கொள்ளாது இல்ல? அது மாதிரிதான் இருக்கு எனக்கு. அதான் தினம் போய்ப் பயிர்களைப் பார்த்துட்டு, மழை வராதான்னு மானத்தையும் பார்த்துட்டு வரேன்!" என்றார் அழகிரி.
"நாம இப்ப ரொம்ப கஷ்டமான நிலைமையில இருக்கோம். உங்க தம்பிதான் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறாரே, அவர்கிட்ட உதவி கேட்டா, செய்ய மாட்டாரு?"
"செய்வான். ஆனா, நான் கேக்கப் போறதில்ல!"
"ஏன்? கடன்தானே கேக்கப் போறீங்க? அடுத்த வருஷம் மழை பேஞ்சு விளைச்சல் நல்லா வந்தப்புறம், கடனைத் திருப்பிக் கொடுத்துடப் போறீங்க!"
"பாங்க்ல கடன் வாங்கினா, அது கடையில போய்ப் பொருள் வாங்கற மாதிரி. ஆனா, சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்ககிட்ட கடன் கேட்டா, அது உதவி கேட்டு யாசிக்கிற மாதிரிதான். உழவுத் தொழில் செய்யறவங்க உலகத்துக்கே உணவு கொடுக்கறவங்க. அவங்க மத்தவங்ககிட்ட போய் யாசகம் கேக்கக் கூடாது!"
"என்னவோ, நீங்களும் உங்க நியாயமும்! சரி, கடைக்குப் போய்க் கொஞ்சம் எண்ணெய் வாங்கிட்டு வாங்க. தாளிக்கக் கூட எண்ணெய் இல்லை"
"ஒரு நிமிஷம்" என்று அழகிரி ஏதோ சொல்ல ஆரம்பித்ததைக் காதில் வங்கிக் கொள்ளாமல் உள்ளே சென்ற விசாலாட்சி, சில நிமிடங்களில் திரும்பி வந்து, "மாடத்தில ஒரு இருநூறு ரூபா நோட்டு இருந்ததே, காணோம்! ஏதாவது செலவுக்கு எடுத்துக்கிட்டீங்களா?" என்றாள்.
"நம்ம வரதன் சாப்பாட்டுக்கு அரிசி கூட இல்லைன்னு கேட்டான். அவனுக்குக் கொடுத்துட்டேன். நம்ம வயல்ல வேலை செய்யறவன்தானே! அவனுக்கு ஒரு கஷ்டம்னா, நாம்தானே உதவணும்? இன்னிக்கு ஒரு நாளைக்குத் தாளிக்கலேன்னா, பரவாயில்லை. நாளைக்குப் பார்க்கலாம்!" என்றார் அழகிரி.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு
குறள் 1035:
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
No comments:
Post a Comment