திருக்குறள்
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 107
கயமை (தீய குணம்)
1071. போலீஸ் விசாரணை
முத்து அண்ட் கோவின் உரிமையாளர் முத்துசாமியின் அறையில், முத்துசாமி தன் இருக்கையில் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே இருந்த இருக்கையில், காவல் ஆய்வாளர் சிதம்பரம் அமர்ந்திருந்தார்."அந்த ஆள் பேர் என்ன, மாணிக்கம், அவன் எத்தனை நாளா உங்ககிட்ட வேலை செஞ்சுக்கிட்டிருந்தான்?" என்றார் காவல் ஆய்வாளர் சிதம்பரம்.
"ஆறு மாசமா!"
"வேலையில சேர்ந்து ஆறு மாசம்தான் ஆகி இருக்கு. அதுக்குள்ள, பாங்க்லேந்து 10 லட்சம் ரூபா பணம் எடுத்துக்கிட்டு வர பொறுப்பை அவன்கிட்ட கொடுப்பீங்களா?"
"அவனை ரொம்ப நல்லவன்னு நினைச்சேன், சார். இதுக்கு முன்னால கூட, அஞ்சாறு தடவை அவனை பாங்க்குக்கு அனுப்பி இருக்கேன்."
"ஆனா, அப்பல்லாம் அம்பதாயிரம், ஒரு லட்சம் மாதிரி சின்னத் தொகையை எடுக்கத்தான் அனுப்பி இருக்கீங்க, இல்ல?" என்றார் சிதம்பரம், இடைமறித்து.
"ஆமாம். எப்படி சரியா சொல்றீங்க?" என்றார் முத்துசாமி, வியப்புடன்.
"எடுத்த எடுப்பிலேயே ஒரு ஆளைப் பெரிய தொகை எடுத்து வரதுக்கு நம்பி அனுப்ப மாட்டீங்க இல்ல? இந்த மாதிரி ஆளுங்கல்லாம், சின்னத் தொகைகள் விஷயத்தில நாணயமா நடந்து உங்க நம்பிக்கையைச் சம்பாதிச்சுட்டுப் பெரிய தொகை வரப்ப மொத்தமா அடிச்சுடுவாங்க. நாங்க எவ்வளவு பேரைப் பாத்திருக்கோம்!"
"நீங்க சொல்றது சரிதான். இன்னிக்கு பாங்க்குக்குப் போய் பத்து லட்சம் எடுக்கணுங்கறதை அவன்கிட்ட நேத்திக்கே சொல்லி இருந்தேன். அதனால, திட்டம் போட்டு, நேத்திக்கு சாயந்திரம் சில பெரிய கஸ்டமர்கள்கிட்ட போய், மூணு லட்சம் ரூபா கேஷ் கலெக்ட் பண்ணி இருக்கான். அதையும் எடுத்துக்கிட்டு ஓடிட்டான். பாவி, எவ்வளவு நம்பினேன் அவனை!" என்றார் முத்துசாமி, பதற்றத்துடனும், சோர்வுடனும். தொடர்ந்து, "அவனைப் புடிச்சுடுவீங்க இல்ல?" என்றார், கெஞ்சும் குரலில்.
"பாக்கலாம். திட்டம் போட்டுப் பண்ணி இருக்கான். அவனைப் பத்தி எந்த விவரமும் இல்ல. அவன் தனியா ஒரு லாட்ஜில தங்கி இருக்கான். இன்னிக்குக் காலையில லாட்ஜுலேந்து கிளம்பிப் போனவன், திரும்ப ரூமுக்கு வரலை. வரவும் மாட்டான். எங்கேயாவது வெளியூர் போயிருக்கானா, இல்ல உள்ளூர்லயே தங்கி இருக்கானான்னு தெரியல. அவன் உங்ககிட்ட கொடுத்த சொந்த ஊர் அட்ரஸ் போலி. அவன் ஃபோட்டோ கூட உங்ககிட்ட இல்ல. எப்படித் தேடறது? அவனை எப்படி நம்பினீங்கன்னுதான் தெரியல. அவனைப் பத்தி எதுவுமே தெரியாம, எப்படி வேலைக்கு எடுத்தீங்கன்னும் தெரியல!" என்றார் ஆய்வாளர் சிதம்பரம்.
"சார்! எங்களை மாதிரி சின்ன கம்பெனியில எல்லாம் எப்படி வேலைக்கு ஆட்களை எடுப்பமோ, அப்படித்தான் அவனையும் எடுத்தேன். பேப்பர்ல விளம்பரம் கொடுத்து, வந்த விண்ணப்பங்களைப் பரிசீலிச்சு, பத்துப் பதினைஞ்சு பேரை இன்டர்வியூவுக்குக் கூப்பிட்டு, அதில செலக்ட் ஆனவன்தான் சார் அவன். ஆரம்பத்தில ஆஃபீஸ் வேலைதான் பாத்துக்கிட்டிருந்தான். அப்புறம் அவன் நல்லவன்னு தோணினதாலதான், கலெக்ஷன், பாங்க்குக்கெல்லாம் அனுப்ப ஆரம்பிச்சேன். இங்கே வேலை செய்யற யாரை வேணும்னாலும் கேட்டுப் பாருங்க. ஒத்தர் கூட அவனைப் பத்தித் தப்பா சொல்ல மாட்டாங்க!"
"ஆமாம், சார். அவன் எங்க எல்லார்கிட்டயும் ரொம்ப நல்லாப் பழகினான். அதோட, எல்லாருக்கும் உதவி செய்யற குணம் அவன்கிட்ட உண்டு" என்றார் ஒரு மூத்த ஊழியர்.
"இவ்வளவு நல்லவனா இருந்த ஒத்தன் ஏமாத்துவான்னு எப்படி சார் எதிரபார்க்க முடியும்?" என்றார் முத்துசாமி, விரக்தியுடன்.
"சார்! அயோக்கியர்களுக்குன்னு தனி அடையாளம் எதுவும் கிடையாது. அவங்களும் மத்தவங்க மாதிரிதான் இருப்பாங்க. ஒத்தன் அயோக்கியன்னு அவன் மூஞ்சியில எழுதி ஒட்டி இருக்காது! ஒத்தனோட அயோக்கியத்தனம் வெளிப்பட்டப்புறம்தான், இவனா இப்படிப் பண்ணினான்னு தோணும். எங்க தொழில்ல நாங்க தினமும் பாக்கற விஷயம்தான் இது. பாக்கலாம், அவன் கிடைக்கறானான்னு. கிடைச்சா, உங்க அதிர்ஷ்டம்!" என்றார் சிதம்பரம்.
குறள் 1071:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
"பரவாயில்லை, டாக்டர்!" என்றார் சுந்தரம், பலவீனமான புன்முறுவலுடன்.
"நீங்கதான் டாக்டர் அவரைக் காப்பாத்தினீங்க. ரொம்ப நன்றி!" என்றாள் சுந்தரத்தின் மனைவி சுமதி, கைகளைக் கூப்பியபடி.
"சார் ரொம்பக் கவலைப்படுவார் போல இருக்கு. அதனாலதான், அவர் பி.பி. எப்பவுமே அதிக இருக்கு. இப்ப ஹார்ட் அட்டாக்கும் வந்திருக்கு. அவரைக் கொஞ்சம் கவலைப்படாம இருக்கச் சொல்லுங்க!" என்று கூறி விட்டுச் சென்றார் டாக்டர்.
"டாக்டர் என்ன சொன்னார்னு கேட்டீங்க இல்ல? இனிமேயாவது, தேவையில்லாம கவலைப்படாதீங்க!" என்றாள் சுமதி, தன் கணவரிடம்.
"ஒரு பிசினஸை நேர்மையா நடத்தறப்ப, நிறைய கவலைகள் வரத்தான் செய்யும். மாசம் பொறந்தா, கம்பெனி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கணுங்கறணுமேங்கற கவலை, பொருட்களை சப்ளை பண்ணினவங்களுக்கு சரியான நேரத்தில பணம் கொடுக்கணுமேங்கற கவலை, தொழிற்சாலையை நடத்தறதிலேயோ, அரசாங்கத்துக்கு வரி கட்டறதிலேயோ, கணக்கு வழக்குகளிலேயோ எந்தத் தவறும் நடந்துடக் கூடாதேங்கற கவலை..."
"போதும், போதும். தெனாலி படத்தில, கமலஹாசன் தன்னோட பயங்களை அடுக்கற மாதிரி கவலைகளை அடுக்கிக்கிட்டே போறீங்களே! இதையெல்லாம் நினைச்சுக்கிட்டே இருந்தா, கவலை அதிகமா இருக்கத்தான் செய்யும். அப்பப்ப மனசை வேற எதிலேயாவது செலுத்துங்க!" என்றபடியே டிவியை ஆன் செய்தாள் சுமதி.
போலீசால் கைது செய்யப்பட்ட ஒருவர் சிரித்துக் கொண்டே அங்கே கூடியிருந்த ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கையசைத்தபடியே, ஜீப்பில் ஏறிய காட்சி டிவியில் ஓடிக் கொண்டிருந்தது.
"யாருங்க இவரு? போலீஸ்காரங்க கைது செஞ்சுக்கிட்டுப் போறப்ப கூடக் கொஞ்சம் கூடக் கவலைப்படாம, சிரிச்சுக்கிட்டே கையை ஆட்டிக்கிட்டுப் போறாரு!" என்றாள் சுமதி, வியப்புடன்.
"வாசன் ஃபைனான்ஸ்னு நிதி நிறுவனம் நடத்தி ஐயாயிரம் ரூபா மோசடி பண்ணினானே, அந்த சீனிவாசன்தான் இவன். பல லட்சம் பேர்கிட்ட டெபாசிட் வாங்கி மோசம் பண்ணிட்டு, இப்ப போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டப்ப கூட, எப்படிக் கவலையில்லாம சிரிச்சுக்கிட்டே போறான் பாரு! அவனுக்குக் கவலைகள் கிடையாது. அதனால வரக் கூடிய பி.பி, ஹார்ட் அட்டாக் மாதிரி பிரச்னைகளும் வராது. கொடுத்து வச்சவன்! நம்மை மாதிரி நல்லவங்களா இருந்தாதான், கவலைப்பட்டுக்கிட்டும், பயந்துக்கிட்டும் வியாதியை வரவழைச்சுக்கணும்!" என்றார் சுந்தரம், பெருமூச்சு விட்டபடி.
குறள் 1072:
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.
குறள் 1073:
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
"முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன், சார். போஸ்கோ கேஸ்ங்கறதால, உடனே பெயில் கிடைக்கறது கஷ்டம்தான்" என்றார் தண்டபாணி.
"போஸ்கோ கேஸ்னா?"
"பெண்கள்கிட்ட தப்பா நடந்துக்கறது, பாலியல் குற்றங்கள் இதெல்லாம் போஸ்கோவில வரும். அது கொஞ்சம் கடுமையான சட்டம்."
"என் மேல ஒரு பொண்ணு குற்றம் சாட்டினா, நான் குற்றவாளி ஆயிடுவேனா? ஆதாரம் வேண்டாமா?"
"ஆதாரம் இருக்காங்கற கேள்வியெல்லாம் வழக்கு விசாரணையின்போதுதான் வரும். ஆரம்பக் கட்டத்தில, ஆதாரங்களையெல்லாம் விரிவாப் பாக்க மாட்டாங்க" என்ற வக்கீல் சற்றுத் தயங்கி விட்டு, "அதோட, உங்க மேல ஒரு பொண்ணு குற்றம் சாட்டினதைத் தொடர்ந்து, இன்னும் சில பெண்கள், தாங்களும் பாதிக்கப்பட்டதா குற்றம் சாட்டி இருக்காங்க. அதனால, இப்ப நிலைமை இன்னும் கடுமையா ஆயிடுச்சு" என்றார்.
"ஊர்ல யாரும் செய்யாததையா நான் செஞ்சுட்டேன்? நான் அப்படிச் செய்யவே இல்லைன்னு அடிச்சு வாதாடுங்க. செஞ்சதுக்கு ஆதாரம் ஏதாவது இருந்தா, அந்தப் பொண்களோட சம்மதத்தோடதான் நான் அவங்ககிட்ட உறவு வச்சுக்கிட்டேன்னு வலுவா வாதாடுங்க!" என்றான் சச்சிதானந்தம்.
'எப்படி வாதாடணும்னு எனக்கே வகுப்பு எடுக்கறியா?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட வக்கீல் தண்டபாணி, "வழக்கு விசாரணைக்கு வரட்டும். நாம வலுவான வாதங்களை எடுத்து வைப்போம்" என்றார்.
"இங்கே ஒரு கைதியைப் பார்த்தேன். அவன் பல பெண்கள்கிட்ட தப்பா நடந்துக்கிட்டு, அதை வீடியோ வேற எடுத்து வச்சிருந்தானாம். அந்த வீடியோ வெளியாகி, அவனைக் கைது பண்ணி இருக்காங்க. இப்ப அவன் வக்கீல் எப்படி வாதாடறாரு தெரியுமா?"
"எப்படி?"
"அந்தப் பெண்களோட சம்மதத்தோடதான் அவன் அவங்களோட உறவு வச்சுக்கிட்டதா வாதாடறாராம்!"
"இது ஒரு வழக்கமான வாதம்தானே?"
"அதோட இல்ல. அந்தப் பெண்கள்தான் வீடியோ எடுக்கச் சொன்னாங்க, வீடியோவைத் தங்களுக்கு அனுப்பச் சொன்னாங்கன்னு வாதாடப் போறாராம்!"
"அடப் பாவிங்களா!" என்றார் தண்டபாணி.
"பாருங்க, உலகத்தில எவ்வளவு மோசமான மனுஷங்கல்லாம் இருக்காங்கன்னு! நான் அப்படியெல்லாம் இல்லையே! எனக்கு ஏன் ஜாமீன் கொடுக்கக் கூடாது?" என்றான் சச்சிதானந்தம், நியாயத்தை வலியுறுத்துவது போன்ற தொனியில்.
குறள் 1074:
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
மதனகோபால் தனஞ்சயனை அடிக்கடித் தன் அறைக்கு அழைத்துப் பேசுவார். அப்போது, மற்ற அதிகாரிகள் யாரும் உடன் இருக்க மாட்டார்கள்.
அதனால், சில விஷயங்களில் தனஞ்சயன் தன்னிச்சையாக முடிவெடுக்கும்போது, அவனுடைய மேலதிகாரிகள் அவனைக் கேள்வி கேட்க மாட்டார்கள்.
மதனகோபால் தனஞ்சயனைத் தன் அறைக்கு அழைத்தார்.
"தனஞ்சயன்! இனிமே, சபரி கெம்கிட்டேருந்து நாம மருந்துகளை வாங்க வேண்டாம்" என்றார் மதனகோபால்.
"ஏன் சார்?" என்றார் தனஞ்சயன்.
"நமக்கு இருக்கற மத்த பிசினஸ் போதும். அதோட, இப்ப நாம கொஞ்சம் கவனமா இருக்க வேண்டிய நேரம்!"
"புரியுது, சார்!" என்றார் தனஞ்சயன்.
தனஞ்சயன் தன் இருக்கைக்குத் திரும்பியதும், "எம்.டி. என்ன சார் சொன்னார்?" என்றாள் அவனுடைய உதவியாளர் வாணி.
"இனிமே சபரி கெம்கிட்டேந்து மருந்துகள் வாங்க வேண்டாம்னுட்டார்" என்ற தனஞ்சயன், "என்னோட மேலதிகாரிகளுக்குக் கூடத் தெரியாத விஷயத்தை உங்கிட்ட சொல்றேன் பார்!" என்றான், சிரித்துக் கொண்டே.
தன்னுடன் தனஞ்சயனுக்கு இருக்கும் நெருக்கத்தை அவன் மறைமுகமாக வெளிப்படுத்தியதைக் கேட்டு சற்றே நெளிந்த வாணி, "ஏன் சார் அப்படி? அவங்ககிட்ட நாம ரொம்ப நாளா வாங்கிக்கிட்டிருக்கமே!" என்றாள்.
"நாம அவங்ககிட்ட வாங்கற மருந்துகள் எப்படிப்பட்டவைன்னு உனக்குத் தெரியுமே! மருந்துகள்ங்கற பேரில அவங்க போதை மருந்துகளை சப்ளை பண்றாங்க. நாம அவற்றை வாங்கி, சில டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மூலமா வித்துக் கொள்ளை லாபம் சம்பாதிச்சுக்கிட்டிருக்கோம். "
"அதான் சார் கேக்கறேன். இப்படிப்பட்ட ஒரு லாபகரமான பிசினஸை ஏன் திடீர்னு நிறுத்தச் சொல்றாரு?"
"பக்கத்தில வா, சொல்றேன்!"
அருகில் வந்த வாணியிடமிருந்து வந்த பர்ஃப்யூயூமின் மணம் தனஞ்சயனை மயக்கியது.
"போதை மருந்து ஒழிப்புக்குப் பொறுப்பாப் புதுசா வந்திருக்கிற டி.ஐ.ஜி, போதை மருந்து விக்கிறவங்களைப் பிடிக்கறதில ரொம்பத் தீவிரமா ஈடுபட்டிருக்காராம். அதனாலதான், எம்.டி கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்னு பாக்கறாரு. இல்லேன்னா, இப்படி ஒரு லாபகரமான பிசினசை விட்டுடுவாரா?" என்றான் தனஞ்சயன், சிரித்துக் கொண்டே.
"சார், இப்பதான் அந்த டி.ஐ.ஜியை மாத்திட்டாங்களே! போலீஸ் நடவடிக்கையெல்லாம் ரொம்பக் குறைஞ்சுடுச்சு. நாம மறுபடி சபரி கெம்கிட்டேந்து மருந்துகளை வாங்கலாமா?" என்றான் தனஞ்சயன்.
"வேண்டாம், தனஞ்சயன்!" என்றார் மதனகோபால்.
"ஏன் சார்? இப்ப ரிஸ்க் எதுவும் இல்லையே! நம்மகிட்ட மாமூல் வாங்கிக்கிட்டிருந்த அதிகாரிங்க 'நீங்க மறுபடி ஆரம்பிங்க, சார். பிரச்னை எதுவும் வராது' ன்னு சொல்றாங்க!"
"இந்தியாவிலேயே பெரிய மருந்துத் தயாரிப்பு நிறுவனத்துக்கிட்டேயிருந்து நமக்குப் புதுசா கிடைச்சிருக்கற டீலர்ஷிப்னால, நம்ம லாபம் ரெண்டு மடங்காப் பெருகும். அதனால, இனிமே இந்த சபரி கெம் பிசினஸ் வேண்டாம். நிறுத்தினது நிறுத்தினதாகவே இருக்கட்டும்!" என்றார் மதனகோபால், உறுதியாக.
குறள் 1075:
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
"அப்படின்னா?" என்றார் மன்ற உறுப்பினர் கண்ணப்பன்.
"ஓ.டி.எஃப்-னா ஓபன் டெஃபகேஷன் ஃப்ரீ. அதாவது. நம்ம ஊரில யாரும் திறந்த வெளியைக் கழிவறையாப் பயன்படுத்தக் கூடாதுன்னு அர்த்தம்!" என்று விளக்கினார் கலியமூர்த்தி என்ற மற்றொரு உறுப்பினர்.
"ஆனாலும், அதிகாலை வேளையில, சில பேர், சில இடங்களை அசுத்தப்படுத்திக்கிட்டுத்தான் இருக்காங்க!" என்றார் சோமசுந்தரம்.
"அதான் நம்ம ஊர்ல அஞ்சு பொதுக் கழிப்பறைகள் கட்டிக் கொடுத்திருக்கமே!" என்றார் சரஸ்வதி என்ற பெண் உறுப்பினர்.
"கழிப்பறை வரையிலும் நடந்து போக சோம்பல்பட்டோ, அல்லது அரசாங்கமோ, பஞ்சாயத்தோ சொன்னா, நாம ஏன் அதுக்குக் கட்டுப்படணுங்கற எண்ணத்தினாலேயோ, சில பேர் தொடர்ந்து இப்படி செஞ்சுக்கிட்டுதான் இருக்காங்க" என்றார் கண்ணப்பன் என்ற உறுப்பினர்.
"இதை எப்படித் தடுக்கறது?" என்றார் சுப்பு என்ற உறுப்பினர்.
"அதுக்கு நான் ஒரு யோசனை வச்சிருக்கேன். அதிகாலை வேளையிலதான் இது நடக்குது. அதுவும், குறிப்பிட்ட சில இடங்கள்ளதான் நடக்குது. நாம பன்னண்டு பேர் உறுப்பினர்களா இருக்கோம். நம்மள்ள நாலு பேர், நாளைக்கு அதிகாலை நேரத்தில, ரகசியமா ரோந்து போற மாதிரி சில இடங்களுக்குப் போய்ப் பார்ப்போம். தப்புப் பண்றவங்க கண்டிப்பா மாட்டிப்பாங்க!" என்றார் சோமசுந்தரம்.
அதை நல்ல யோசனை என்று எல்லா உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்ள, அடுத்த நாள் ரோந்துக்குச் செல்ல வேண்டிய நான்கு பேர் யார் என்று முடிவு செய்யப்பட்டது.
"ஒரு முக்கியமான விஷயம். நாம ரோந்து போகப்போற விஷயம் நம்ம பன்னண்டு பேரைத் தவிர வேற யாருக்கும் தெரியக் கூடாது. நம்ம வீட்டில இருக்கறவங்களுக்குக் கூடத் தெரியக் கூடாது. இந்தத் திட்டத்தை ரகசியமா வச்சுக்கிட்டாதான், நம்மால தப்பு பண்றவங்களைப் பிடிக்க முடியும். அவங்களைப் பிடிக்காம தவற விட்டோம்னா, இந்தப் பழக்கத்தை நிறுத்தறது ரொம்ப கஷ்டமா ஆயிடும். நாளைக்கு சாயந்திரம் நாம மறுபடி கூடுவோம்" என்று கூறிக் கூட்டத்தை முடித்தார் சோமசுந்தரம்.
"என்னங்க, இப்படி ஆயிடுச்சு?" என்றார் கலியமூர்த்தி, மறுநாள் நடந்த கூட்டத்தில்.
"என்ன ஆயிடுச்சு? யாரும் மாட்டல. அவ்வளவுதானே! தற்செயலா இன்னிக்கு யாரும் வெளியே வராம இருந்திருப்பாங்க. இன்னிக்கு மாட்டலேன்னா, இன்னொரு நாளைக்கு மாட்டறாங்க!" என்றார் நடராஜன் என்ற உறுப்பினர்.
"அப்படி இல்லை, நடராஜன். தப்புப் பண்றவங்களை இன்னிக்கு நாம பிடிச்சிருந்தா, அவங்களை அம்பலப்படுத்தி, இந்தத் தப்பு மறுபடியும் நடக்க விடாம செஞ்சிருக்கலாம்!" என்றார் சோமசுந்தரம், ஏமாற்றத்துடன்.
"அதனால என்ன? நாளைக்குக் காலையில வேற நாலு பேர் போய்ப் பாப்போம்!" என்றார் சரஸ்வதி.
"இல்லை. ஏதோ தப்பு நடந்திருக்கு. தினமும் நடக்கற விஷயம் இன்னிக்கு எப்படி நடக்காமப் போகும்?" என்றார் சோமசுந்தரம்.
"நீங்க என்ன சொல்ல வரீங்க?"
"தலைவர் சொல்லத் தயங்கறதை நான் சொல்றேன். இதை ரகசியமா வச்சுக்கணும்னு நேத்து தலைவர் சொன்னாரு. ஆனா நம்மள்ள யாரோ ஒத்தர் இந்த ரகசியத்தை வெளியில சொல்லி இருக்காங்க. அது தப்புப் பண்றவங்க காதுகளுக்கும் போயிருக்கு. அதனாலதான், தப்புப் பண்றவங்க உஷாராயிட்டாங்க!" என்றார் கலியமூர்த்தி.
"இதை யார் வெளியில சொல்லி இருக்கப் போறாங்க? அதனால, அவங்களுக்கு என்ன லாபம்?" என்றார் சரஸ்வதி.
"ஒரு விஷயத்தை ரகசியமா வச்சுக்கச் சொன்னா, அதைக் கண்டிப்பா யார்கிட்டேயாவது சொல்ற கெட்ட குணம் சில பேருக்கு உண்டு. அதனால வர கெடுதலைப் பத்தி அவங்களுக்குக் கவலை இல்ல. இந்த குணம் உள்ளவங்களைத் தீயவர்கள்னுதான் சொல்லணும்!" என்றார் கலியமூர்த்தி, கோபத்துடன்.
அவர் சொன்னதை ஆமோதிப்பது போல், சோமசுந்தரம் மௌனமாகத் தலையாட்டினார்.
குறள் 1076:
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
"ஆமாம். புதுசா ஆரம்பிச்ச கம்பெனியில வேலைக்கு சேர்ந்தேன். முதல் மாசம் முடிஞ்சதும், இன்னும் பிசினஸ்ல வருமானம் வரலை, அதனால அடுத்த மாசச் சம்பளத்தோட சேர்த்துக் கொடுக்கறோம்னு சொன்னாங்க. அப்புறம், ரெண்டு மாசம் முடிஞ்சப்புறமும் கொடுக்கல. மூணு மாசம் முடிஞ்சதும், நானே வேலையை விட்டு வந்துட்டேன்! அதுக்கப்புறம் கொஞ்ச நாள்ள, கம்பெனியையே மூடிட்டாங்க. அது ஒரு மோசடி நிறுவனமாம். பேப்பர்ல கூட வந்தது" என்றான் ராம்குமார்.
"அந்த முதலாளியோட பேரு?"
"மாசிலாமணி."
அழகேசன் ராம்குமாரிடமிருந்து அந்த நிறுவனம் பற்றிய பிற விவரங்களைக் கேட்டுக் கொண்டார்.
"சரி. நான் விசாரிக்கறேன். உனக்கு வர வேண்டிய சம்பளத்தை வாங்கிக் கொடுத்துடறேன்" என்றார் அழகேசன்.
"அது எப்படி அங்க்கிள் முடியும்? மாசிலாமணி பல பேரை ஏமாத்தி இருக்கறதா சொல்றாங்க. அவர்கிட்ட ஏமாந்தவங்கள்ள தொழிலதிபர்கள் கூட இருக்காங்க. என்னோட வேலை செஞ்சவங்களே அஞ்சாறு பேர் இருப்பாங்க. போலீஸ்ல அவரைக் கைது செஞ்சாங்க. ஆனா, இப்ப அவர் ஜாமீன்ல இருக்காரு. அவர் மேல நிறைய கேஸ் இருக்கு. ஆனா, அவரை ஒண்ணும் செய்ய முடியாதுன்னு சொல்றாங்க."
"மத்தவங்களைப் பத்தி எனக்குக் கவலையில்லை. உங்கப்பா எனக்கு அந்தக் காலத்தில நிறைய உதவி செஞ்சிருக்காரு. அவரோட பையனுக்கு உதவ வேண்டியது என் கடமை" என்றார் அழகேசன்.
சில நாட்கள் கழித்து, ராம்குமாருக்கு வர வேண்டிய மூன்று மாதச் சம்பளத் தொகைக்கான காசோலை தபாலில் வந்தது.
அழகேசனுக்கு ஃபோன் செய்து நன்றி தெரிவித்தான் ராம்குமார்.
"எப்படி சார் இதை வாங்கிக் கொடுத்தீங்க?" என்றான் ராம்குமார், வியப்புடன்.
"உன் அப்பாகிட்ட கேளு!" என்று கூறி ஃபோனை வைத்து விட்டார் அழகேசன்.
ராம்குமார் தன் தந்தையிடம் இது பற்றிக் கேட்டபோது, அவர், "பாஷா படம் பாத்திருக்க இல்ல?" என்றார்.
"பாத்திருக்கேன்."
"அதில ரஜினிகாந்த் தன் ஆள்காட்டி விரலைக் காட்டினதும், மத்தவங்க பயந்து போய் அவர் கேட்டதை செஞ்சு கொடுத்துடுவாங்க இல்ல, அது எதனால?"
"ஏன்னா, பாஷா ஒரு தாதாவா இருந்தவர். அப்படின்னா, அழகேசன் அங்க்கிள்?"
"அவனும் அந்த மாதிரிதான். சின்ன வயசில அவன் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கான். அப்ப, நான் அவனுக்கு உதவி செஞ்சிருக்கேன். பின்னால, அவன் பாதை மாறிப் போயிட்டான். ஆனா, எங்கிட்ட நன்றியோடயும், நட்போடயும்தான் இருந்துக்கிட்டிருக்கான். 'உனக்கு ஏதாவது உதவி வேணும்னா சொல்லு'ன்னு அவன் அடிக்கடி எங்கிட்ட சொல்லுவான். ஆனா, இத்தனை நாளா நான் எதுவும் கேட்டதில்ல. மூணு மாசச் சம்பளம்கறது நமக்கு ஒரு பெரிய தொகை. அதனாலதான், அவன் உதவியைக் கேட்டேன்" என்றார் ராம்குமாரின் தந்தை.
"அப்படின்னா, அழகேசன் அங்க்கிள் மாசிலாமணியை மிரட்டித்தான் இந்தப் பணத்தை வாங்கிக் கொடுத்திருக்காரா? இது தப்பு இல்லையா?"
"தப்புதான். என்ன செய்யறது? மாசிலாமணி மாதிரி ஆட்களைக் கழுத்தில கத்தியை வச்சு மிரட்டினாத்தான், அவங்ககிட்டேந்து நமக்கு நியாயமாக் கிடைக்கறதை வாங்க முடியும்னா, அப்படித்தானே செஞ்சாகணும்?"
குறள் 1077:
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், தேர்தலின்போது, அந்தச் சாலையை அமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
அந்த ஊரின் பிரதிநிதிகள் சிலர் ஐந்தாறு முறை சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்துப் பேசினர். ஆனால், அவர் அவர்களுக்கு உறுதியான பதில் எதையும் அளிக்கவில்லை.
முதல்முறை சந்தித்தபோது, "தேர்தல்போது சொல்றதையெல்லாம் செய்யணும்னு எதிர்பாக்க முடியாது. நீங்க மனுக் கொடுங்க. நான் பரிசீலிக்கறேன்" என்று அலட்சியமாக பதிலளித்தார்.
மனு அளித்து விட்டு, இரண்டு மூன்று முறை அவரைச் சந்தித்தபோதும், அவர் சரியாக பதிலளிக்கவில்லை.
"சட்டமன்ற உறுப்பினர் நிதி இன்னும் அரசாங்கத்திலேந்து வரலை" என்று ஒருமுறை கூறினார். ஆயினும், அவருடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து வேறு சில பணிகள் நடப்பது தெரிந்தது.
அந்த ஊரிலிருந்து இருநூறு பேர் முக்கிய சாலைக்குச் சென்று சாலை மறியல் செய்வதென்று தீர்மானித்தனர்.
சாலை மறியல் கவனம் பெற்று, ஊடகங்களில் செய்தியாக வெளியாகியது. ஒரு தொலைக்காட்சி சேனலிலிருந்து சிலர் வந்து, ஊர்மக்களிடம் பேட்டி எடுத்துத் தங்கள் சேனலில் ஒலிபரப்பினார்கள்.
அதற்குப் பிறகும் எதுவும் நடக்கவில்லை.
பிறகு ஒருநாள், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, அந்த ஊரிலிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட ஐநூறு பேர் கிளம்பிச் சென்று, சட்டமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, சட்டமன்றக் கட்டிடம் அருகே சென்று முழக்கம் எழுப்பினர்.
முழக்கம் எழுப்பியவர்கள் உடனே கைது செய்யப்பட்டாலும், போராட்டம் பற்றிய செய்தி, ஊடகங்களில் பெரிதாக ஒளிபரப்பப்பட்டது.
முதலமைச்சர் அந்தச் சட்டமன்ற உறுப்பினரை அழைத்து விசாரித்து, அந்தச் சாலையை உடனே அமைத்துத் தரும்படி உத்தரவிட்டார்.
சாலைப் பணிகள் துவங்கிய பிறகு ஒருநாள், கட்டுப்பட்டி கிராமத் தலைவர் கூத்தன், தன் நண்பரும் பள்ளி ஆசிரியருமான கார்மேகத்திடம் பேசிக் கொண்டிருந்தார்.
"இந்தச் சாலையைப் போட வைக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது! இதுக்கு முன்னால இருந்த எம்.எல்.ஏ-கிட்ட ஏதாவது கோரிக்கை வச்சா, அவர் அதை உடனே பரிசீலிப்பாரு. இந்த எம்.எல் ஏ-ஐச் செயல்பட வைக்க இத்தனை போராட்டங்கள் நடத்த வேண்டி இருந்தது!" என்றார் கூத்தன்.
"திராட்சைப் பழத்தைக் கையால அழுத்தினாலே ஜூஸ் வரும். கரும்பை மெஷின்ல போட்டு அழுத்திப் பிழிஞ்சாதானே சாறு வரும்? அது மாதிரிதான், ஒத்தர் நல்லவரா இருந்தா, மத்தவங்க கஷ்டங்களைக் காது கொடுத்துக் கேப்பாரு, தீர்க்க முயற்சி செய்வாரு. ஆனா, ஒத்தர் மோசமானவரா இருந்தா, அவரோட போராடித்தான் நம்ம கோரிக்கையை நிறைவேத்திக்க முடியும்!" என்றார் கார்மேகம்.
குறள் 1078:
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
"ஏன் அப்படி?" என்றார் அவருடைய நண்பர் சண்முகம்.
"என் பிளாட்டுக்குப் பக்கத்தில இருக்கற ரோடில ஒரு அடியை ஆக்கிரமிச்சு நான் காம்பவுண்ட் சுவர் கட்டியிருக்கேன்னு என் மேல யாரோ புகார் கொடுத்திருக்காங்க."
"அப்புறம்?"
"முனிசிபாலிடியிலேந்து எனக்கு நோட்டீஸ் வந்திருக்கு."
"என்னன்னு?"
"முனிசிபாலிடிக்குச் சொந்தமான சாலையில ஒரு அடி அகல நிலத்தை நான் ஆக்கிரமிச்சிருக்கேனாம். அதனால, என் காம்பவுண்ட் சுவரை இடிச்சு ஒரு அடி உள்ளே தள்ளிக் கட்டிக்கிட்டு, அந்த நிலத்தை முனிசிபாலிடிகிட்ட ஒப்படைக்கணுமாம்!"
"அப்படி ஒரு நோட்டீஸை எப்படி அனுப்ப முடியும்? யாராவது வந்து நிலத்தை அளந்து பாத்தாங்களா என்ன?"
"அதெல்லாம் எதுவும் இல்லை. யாரோ புகார் கொடுத்திருக்காங்கன்னு சொல்லி, நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க."
"சரி. அப்புறம் என்ன ஆச்சு?"
"முனிசிபாலிடியில போய் விசாரிச்சேன். இது மாதிரி நிறைய பேர் ஆக்கிரமிப்பு பண்ணி இருக்கறதால, என் மேல வந்த புகாரின் அடிப்படையில, எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்காங்களாம். சர்வேயரை அனுப்பி அளந்து பார்த்து, அப்புறம் முடிவு செய்வாங்களாம்!"
"சர்வேயர் வந்து அளந்து பாக்கறதுக்கு முன்னாடியே, உன்னோட காம்பவுண்ட் சுவரை இடிச்சு ஒரு அடி உள்ளே தள்ளிக் கட்டிக்கச் சொல்லி எப்படி நோட்டீஸ் அனுப்பலாம்?"
"அதைத்தான் நானும் கேட்டேன். அதுக்கு பதில் சொல்லாம மழுப்பறாங்க. யாரோ ஒத்தர் ஒரு அதிகாரியை இன்ஃப்ளூயன்ஸ் பண்ணி, இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்ப வச்சிருக்காங்கன்னு தெரியுது."
"சரி. அப்ப சர்வேயரை அனுப்பி அளந்து பாக்கச் சொல்ல வேண்டியதுதானே?"
"நான் இந்த நிலத்தை வாங்கினப்ப, இந்த ஊர் ஒரு பஞ்சாயத்தா இருந்தது. இப்ப பல பஞ்சாயத்துகளைச் சேர்த்து ஒரு முனிசிபாலிட்டி ஆக்கிட்டாங்க. அதனால, பழைய பஞ்சாயத்து ரிகார்டுகளையெல்லாம் எடுத்துப் பாக்கணுமாம். அதுக்கு அஞ்சாறு மாசம் ஆகும்கறாங்க. நோட்டீஸ் மேல இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்னு சொல்றாங்க. ஆனா, இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தாதான் எனக்கு நிம்மதியா இருக்கும். நீ ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரிங்கறதாலதான் உங்கிட்ட சொல்றேன். உன்னால ஏதாவது செய்ய முடியுமா?" என்றார் ரத்தினசாமி, கெஞ்சும் குரலில்.
"கவலைப்படாதே! நான் விசாரிச்சுப் பாக்கறேன்" என்றார் சண்முகம்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ரத்தினசாமிக்கு ஃபோன் செய்த சண்முகம், "ரத்தினசாமி, கவலைப்படாதே! உன் பிரச்னை தீர்ந்து போச்சு. முனிசிபாலிடிகிட்டேந்து அவங்க அனுப்பின நோட்டீஸைத் திரும்பப் பெற்றுட்டதா உனக்கு ஒரு கடிதம் வரும். இன்னிக்கே அதை அனுப்பி இருப்பாங்க. உனக்கு ரெண்ணு மூணு நாள்ள வந்து சேரும்!" என்றார் சண்முகம்.
"ரொம்ப தாங்க்ஸ்ப்பா! என்ன ஆச்சு? விவரம் தெரிஞ்சுதா?"
"உனக்கு வேண்டாதவங்க யாரோ, உன்னைப் பத்தி ஒரு பொய்யான புகாரைக் கொடுத்து, முனிசிபாலிடியில அவருக்குத் தெரிஞ்ச ஒரு அதிகாரி மூலமா, உனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்ப வச்சிருக்காங்க. ஒரு நண்பர் மூலமா, அந்த முனிசிபாலிடி கமிஷனரைப் பார்த்துப் பேசினேன். அவர் ரிகார்ட்களை எல்லாம் எடுத்துப் பாத்துட்டாரு. அந்த ரோடை ஏற்கெனவே சர்வேயர் அளந்து பாத்திருக்காரு. அதில ஆக்கிரமிப்பு எதுவும் இல்ல. நோட்டீஸ் அனுப்பின அதிகாரியை, கமிஷனர் கூப்பிட்டு வார்ன் பண்ணிட்டாரு. இனிமே உனக்குப் பிரச்னை இல்லை!"
"அது சரி. என் மேல புகார் கொடுத்தது யாருன்னு தெரியுமா?"
"அதையும் விசாரிச்சுட்டேன். யாரோ சிகாமணியாம்!"
"அடப்பாவி! அவனா?"
"உனக்கு அவனைத் தெரியுமா?"
"தெரியும். என் ஆஃபீஸ்ல வேலை செய்யறவன்தான். என் வீட்டுக்குக் கூட ரெண்டு மூணு தடவை வந்திருக்கான்."
"அவனுக்கும், உனக்கும் விரோதமா என்ன?"
"விரோதம் எதுவும் இல்ல. அலுவலகத்தில, நானும் அவனும் ஒரே லெவல்லதான் இருக்கோம். ஆனா, அவன் கொஞ்சம் கஷ்டப்படறான். வாடகை வீட்டிலதான் இருக்கான். கடன் தொல்லை எல்லாம் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, எனக்கும் அவனுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லையே!"
"சில பேர் அப்படித்தான். அடுத்தவன் சாப்பாட்டுக்கும், துணிக்கும் கஷ்டப்படாம வாழ்ந்தா, அதுக்கே அவன் மேல பொறாமைப்பட்டு, அவனுக்கு ஏதாவது கெடுதல் பண்ணலாமான்னு நினைப்பாங்க. விட்டுத் தள்ளு. உன் பிரச்னை தீர்ந்துடுச்சு இல்ல? இனிமே, அவன்கிட்டேயிருந்து கொஞ்சம் விலகியே இரு!" என்று கூறி ஃபோனை வைத்தார் சண்முகம்.
குறள் 1079:
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
தனிக்கட்சி துவங்கியது பற்றிப் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானாலும், சாந்தகுமார் அது பற்றிக் கவலைப்படாமல், மன உறுதியுடன் தன் கட்சியை நடத்தியதால், மக்கள் உரிமைக் கட்சிக்கு மக்களிடையே ஓரளவு செல்வாக்குக் கிடைத்தது.
சாந்தகுமார் தன்மானம் உள்ளவர் என்று மதிக்கப்பட்டு, 'தன்மானத் தலைவர்' என்று அழைக்கப்பட்டார்.
கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் உரிமைக் கட்சி பத்து சதவீத வாக்குகளைப் பெற்று, அனைவரையும் வியக்க வைத்தது. அடுத்த தேர்தலில் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் பெரிய கட்சிகள் விரும்பும் என்று ஊடகங்களும், அரசியல் பார்வையாளர்களும் கணித்தனர்.
சாந்தகுமாரின் அரசியல் வளர்ச்சிக்கு இணையாக, அவர் மீது சில புகார்களும், குற்றச்சாட்டுகளும் நிலவி வந்தன. கட்டைப் பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பு, மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற புகார்கள் பரவலாக எழ ஆரம்பித்தன.
அத்தகைய புகார்கள் பற்றி சாந்தகுமாரிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, அவை தன் கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிற அரசியல் கட்சிகளால் பரப்பப்படும் பொய்ப் புகார்கள் என்று அவர் பதிலளித்தார்.
சாந்தகுமார் குறி வைக்கப்படுவதாகவும், தேர்தலுக்கு முன், அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும்படி வற்புறுத்தப்படுவார் என்றும் 'குருவி' என்ற அரசில் விமர்சகர் கருத்துத் தெரிவித்தார். ஆனால், தன்மானத்தை முக்கியமாகக் கருதும் சாந்தகுமார் அவ்வாறு செய்ய மாட்டார் என்று மற்ற விமர்சகர்கள் கூறினர்.
தேர்தலுக்கு ஆறு மாதங்கள் இருந்தபோது, திடீரென்று சாந்தகுமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமானவரிச் சோதனைகள் நடத்தப்பட்டன. கோடிக்கணக்கான ருபாய்களும், பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
அவற்றை மறுத்த சாந்தகுமார், ஒரு ரூபாய் கூடக் கைப்பற்றப்படவில்லை என்று சாதித்தார். ஆயினும், வருமானவரித் துறை தாங்கள் கைப்பற்றிய தகவல்களையும் ஆவணங்களையும் பிற புலனாய்வு அமைப்புகளிடம் பகிர்ந்து கொண்டதாகத் தவல்கள் வெளியாகின.
விரைவிலேயே, வருமனவரித் துறை மற்றும் பிற புலனாய்வுத் துறைகளால் சாந்தகுமார் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். பல்வேறு துறைகளால் திரும்பத் திரும்ப விசாரணைக்கு அழைக்கப்பட்டதால், விசாரணைக்குச் செல்வது என்பது சாந்தகுமாருக்கு ஒரு தினசரி நிகழ்வாகவே ஆகியது.
ஆரம்பத்தில், விசாரணைக்குச் சென்று விட்டுச் சிரித்த முகத்துடன் வெளியே வந்து ஊடகவியலாளர்களுக்குப் பேட்டி அளித்த சாந்தகுமார், சில நாட்களுக்குப் பிறகு, ஊடகவியலாளர்களைப் பார்ப்பதையே தவிர்த்தார். ஆரம்பத்தில், அவர் முகத்தில் இருந்த மலர்ச்சி அடியோடு மறைந்து விட்டது.
ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும்படி சாந்தகுமாருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன.
திடீரென்று ஒருநாள், சாந்தகுமார் தன் கட்சியை ஆளும் கட்சியுடன் இணைப்பதாக அறிவித்தார். கட்சியின் நிர்வாகக் குழுவைக் கூட்டாமலும், எந்தவொரு கட்சி நிர்வாகியுடனும் கலந்து பேசாமலும், அவர் இவ்வாறு அறிவித்தது, அவர் கட்சித் தலைவர்களிடமும், தொண்டர்களிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஆயினும், சாந்தகுமார் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார். நாட்டு நலன் கருதியே, தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், எந்த ஒரு நிபந்தனையுமின்றி, ஆளும் கட்சியுடன் தன் கட்சியை இணைப்பதாகவும் அவர் கூறினார்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த 'குருவி', "இப்படி நடக்கும் என்று நான் பல மாதங்கள் முன்பே எழுதினேன். இதை நான் எப்படிக் கணித்தேன் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இது மிகவும் எளிமையான விஷயம். தவறான செயல்களில் ஈடுபடுபவர்கள், எப்போதும் ஒருவித அச்சத்திலேயே இருப்பார்கள். தாங்கள் செய்த தவறுகளின் விளைவாகத் தங்களுக்கு ஏதும் துன்பம் வரும் என்ற நிலை வந்தால், அதிலிருந்து தப்பிக்க, அவர்கள் தங்களையே விற்கவும் தயங்க மாட்டார்கள். இதை நான் கூறவில்லை. திருவள்ளுவரே கூறி இருக்கிறார்!" என்று எழுதினார்.
குறள் 1080:
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
No comments:
Post a Comment