Wednesday, November 30, 2022

844. எல்லாம் தெரிந்தவன்!

"அக்கவுன்ட்ஸ்க்கு எதுக்கு டியூஷன்? நானே சொல்லித் தருவேனே!" என்றான் கிருஷ்ணமணி.

"உங்களுக்கு அக்கவுன்ட்ஸ் தெரியுமா என்ன? நீங்க பி எஸ் சிதானே படிச்சீங்க?" என்றாள் அவன் மனைவி பூர்ணா.

"காலேஜில படிச்சாத்தான் தெரியணுமா? என் ஆஃபீஸ்ல அக்கவுன்ட்ஸ் ஸ்டேட்மென்ட்ஸ் எல்லாம் பாத்திருக்கேனே! எனக்குத் தெரியும்!"

"வேண்டாம்ப்பா! நான் டியூஷனே போய்க்கறேன்" என்றான் அவர்கள் மகன் அட்சய்.

"உன் அக்கவுன்ட்ஸ் புத்தகத்தைக் கொண்டு வா பாக்கறேன்" என்றான் கிருஷ்ணமணி விடாமல்.

"பி காம் படிச்சவங்களுக்கே சொல்லித் தரது கஷ்டமாத்தான் இருக்கும். உங்களால எப்படி முடியும்? அவன் டியூஷனுக்கே போகட்டும்!" என்றாள் பூர்ணா உறுதியாக.

"என்னால முடியும்னா கேக்க மாட்டியே!"

"அன்னிக்கு அப்படித்தான் என் மொபைல் ஸ்லோவா இருக்குன்னு சொன்னேன். நான் சரி பண்றேன்னு சொல்லி ஏதோ செஞ்சீங்க. டேட்டா எல்லாம் போயிடுச்சு. சமையலுக்கு ஐடியா கொடுக்கறேன்னீங்க. நீங்க சொன்னபடி செஞ்சதை நீங்க உட்பட யாருமே சாப்பிடல. மிக்ஸியை சரி பண்றேன்னு சொல்லி பிளேடையெல்லாம் வளைச்சுட்டீங்க. உங்களுக்குத் தெரிஞ்ச விஷயங்களை மட்டும் செய்யுங்க. எல்லாம் தெரியும்னு நினைச்சுக்காதீங்க!" என்றாள் பூர்ணா சற்றுக் கோபத்துடன்

"எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். அதைச் சொன்னா நீ ஒத்துக்க மாட்டே!"

"ஒத்துக்கறேன். உங்களுக்கு எல்லாமே தெரியும்னு ஒத்துக்கறேன். ஆனா எதையும் செய்யறேன்னு வந்துடாதீங்க!"

"சார்! " என்று வாசலில் யாரோ அழைத்தார்கள்.

அவர்கள் குடியிருப்பின் பராமரிப்பைப் பார்த்துக் கொள்ளும் ராமலிங்கம்.

"பம்ப்ல தண்ணி குறைச்சலா வருது. ஏதோ வால்வை அட்ஜஸ்ட் பண்ணினா சரியாயிடும்னீங்களே, வந்து பாக்கறீங்களா?" என்றார் ராமலிங்கம்.

கிருஷ்ணமணி ஒருமுறை மனைவியைப் பார்த்து விட்டு, "நான் சரி  செஞ்சுடுவேன். ஆனா நம்மகிட்ட டூல்ஸ் எல்லாம் சரியா இல்ல. எதுக்கும் பிளம்பரையே வந்து பாக்கச் சொல்லிடுங்க!" என்றான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)

குறள் 844:
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

பொருள்: 
ஒருவன் தன்னைத் தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்துக்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

654. கரும்பு தின்னக் கூலி!

சேதுபதி பன்னிரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த நிறுவனத்தில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்னையால் சில ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து விட்டனர். வேலையை இழந்தவர்களில் சேதுபதியும் ஒருவன்.

சேதுபதி வேறு வேலைக்குத் தீவிரமாக முயற்சி செய்தான். ஆயினும் வேலையை இழந்து மூன்று மாதங்களுக்குப் பிறகும் சேதுபதிக்கு வேறு வேலை கிடைக்கவில்லை.

ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குப் போனபோது அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சபரியைச் சந்தித்தபோது சேதுபதிக்கு வியப்பு ஏற்பட்டது.

சபரி அவனுடன் கல்லூரியில் படித்தவன். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு இருவருக்கும் தொடர்பு இல்லை.

"என்னடா சேதுபதி! நீ என் கம்பெனிக்கு இன்டர்வியூவுக்கு வருவேன்னு நான் எதிர்பார்க்கல!" என்றான் சபரி.

"நானும்தான்" என்ற சேதுபதி சற்றுத் தயங்கி விட்டு, "உங்களை ஒரு கம்பெனியோட மானேஜிங் டைரக்டராப் பாக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றான்.

"என்னடா, வாங்க, போங்கல்லாம்?. நீ என் கம்பெனியில வேலை செய்யறதா இருந்தாலும் என்னை வா, போன்னே பேசலாம்!"

"அப்படின்னா எனக்கு இங்கே வேலை உண்டா?" என்றான் சேதுபதி சிரித்தபடி.

"உனக்கு இல்லாமயா?" என்ற சபரி, "உனக்கு ஸ்பெஷலா ஒரு ஆஃபர் கொடுக்கலாம்னு பாக்கறேன். சாயந்திரம் வீட்டுக்கு வா" என்ற சபரி தன் வீட்டு முகவரி இருந்த விசிடிங் கார்டைக் கொடுத்தான்..

ன்று மாலை சபரி வீட்டுக்கு சேதுபதி சென்றதும், முதலில் சேதுபதியிடம் அவன் பார்த்த வேலை பற்றிய விவரங்களைக் கேட்டு அறிந்தபின், தன் பின்னணியைப் பற்றிக் கூறினான் சபரி.

"பிசினஸ் ரொம்ப நல்லாப் போய்க்கிட்டிருக்கு. இப்ப பிசினஸை விரிவாக்கணும்னு நினைக்கிறேன்.ஆனா வருமான வரிப் பிரச்னைதான் பெரிசா இருக்கு. ஏற்கெனவே கொஞ்ச பிசினஸைக் கணக்கில காட்டாமதான் செய்யறேன். இதுக்கு மேலயும் கணக்குல வராம பிசினஸ் பண்றது ரிஸ்க். அதனால வேற யார் பேரிலயாவது பண்ணணும்னு பாத்துக்கிட்டிருக்கேன். சரியான சமயத்திலதான் நீ வந்திருக்க" என்றான் சபரி.

"நீ என்ன சொல்ற?"

"என்னோடது பிரைவேட் லிமிடட் கம்பெனி. இப்ப உன் பேரில ஒரு புரொப்டர்ஷிப் கம்பெனி ஆரம்பிச்சு அதில கொஞ்சம் பிசினஸ் பண்ணலாம்னு பாக்கறேன்."

"அது எப்படி? முதல்ல எங்கிட்ட முதலீடு செய்யப் பணம் இல்ல. அதோட அது உனக்கு எப்படி உதவும்?" என்றான் சேதுபதி.

"நீ எந்த முதலீடும் செய்ய வேண்டாம். நான்தான் பணம் போடப் போறேன், கொஞ்சத் தொகையை உன்னோட முதலீடு மாதிரியும், மீதியைக் கடன் மாதிரியும் காட்டிக்கலாம். புரொப்ரைடர்ஷிப் கம்பெனிங்கறதால நிறைய கேஷ் டிரான்ஸாக்‌ஷன் பண்ணி விற்பனையையும், லாபத்தையும் குறைச்சுக் காட்டலாம். உனக்கு சம்பளம் கிடைக்கும். அதைத் தவிர லாபத்தில கொஞ்சம் பங்கு கொடுத்துட்டு மீதியை நான் எடுத்துப்பேன். பிராக்டிகலா நீ என் கம்பெனியில வேலை பாத்துக்கிட்டுத்தான் இருப்ப. ஆனா புரொப்ரைட்டர்னு பேர் இருக்கும். அதிகப் பணமும் கிடைக்கும். என்ன சொல்ற?" என்றான் சபரி.

"இந்த ஏற்பாடு இல்லாம எனக்கு வேலை கொடுக்க முடியுமா?"

"ஏண்டா, கரும்பையும் கொடுத்து அதைத் தின்னக் கூலியும் கொடுக்கறேன்னு சொல்றேன். உனக்குக் கசக்குதா? வேலை பாக்கப் போற. அதோட புரொப்ரைட்டர்ங்கற அந்தஸ்து. புரொப்ரைட்டர்னு விசிட்டிங் கார்டு அடிச்சுக்கிட்டு எல்லார்கிட்டேயும் பெருமையாக் காட்டலாம். உனக்கு ஆஃபீஸ்ல தனி கேபின் வேணும்னாலும் கொடுக்கறேன்."

"சாரி! இது மாதிரி தப்பான விஷயத்தில என்னால ஈடுபட முடியாது. எனக்கு வேலை மட்டும் கொடுத்தாப் போதும்" என்றான் சேதுபதி.

"சாரி. நான் வேலைக்கு ஆள் தேடல. முதலாளியா இருக்க ஒரு ஆளைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்!" என்றான் சபரி சற்று அதிருப்தியான குரலில்.

சேதுபதி எழுந்தான். எப்போது வேலை கிடைக்குமோ என்ற கவலை அவனை அழுத்த மெதுவாக வெளியே நடந்தான்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை

குறள் 654;
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.

பொருள்:
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Tuesday, November 29, 2022

843. ஏழுமலையின் திட்டங்கள்

"உனக்கு என்னடா குறைச்சல்? உங்கப்பா உனக்கு நிறைய சொத்து வச்சுட்டுப் போயிருக்காரு. நிலத்தில வர வருமானத்தை வச்சுக்கிட்டு ஆயுசுக்கும் உக்காந்தே சாப்பிடலாமே!"

ஏழுமலையைப் பார்த்து அவன் நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி சொன்னது இது.

ஏழுமலையின் அம்மா செண்பகம் மட்டும், "குந்தித் தின்னா குன்றும் கரையும்பாங்க. அதனால ஏதாவது வேலைக்குப் போ. சம்பளம் குறைவா இருந்தாலும் பரவாயில்ல. நிலத்தில வர வருமானம் குறைஞ்சா அதை வச்சு ஈடு கட்டிக்கலாம்" என்றாள்.

ஏழுமலை அதைக் கேட்கவில்லை.

ழுமலைக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்ததும், செலவுகள் அதிகமாகின. நிலத்திலிருந்து வந்த வருமானத்தை வைத்து நீண்ட காலம் சமாளிக்க முடியாது என்பதை ஏழுமலை உணர்ந்து கொண்டான். 

"அம்மா! நிலத்தில வருமானத்தை வச்சு ரொம்ப காலத்துக்கு சமாளிக்க முடியாது. அதனால நிலத்தையெல்லாம் வித்துட்டு டவுன்ல நிலம் வாங்கி வீட்டு மனைகள் போட்டு விக்கப் போறேன்!" என்றான் ஏழுமலை.

"வேண்டாண்டா. உன் அப்பா சேர்த்து வச்ச சொத்து. அதை ஒண்ணும் செய்யாதே. நீயா சம்பாதிச்சுப் பணம் சேர்த்து அதை வச்சு ஏதாவது செஞ்சுக்க!" என்றாள் செண்பகம்.

"அது இப்போதைக்கு நடக்குமா? இன்னிக்கு ரியல் எஸ்டேட் பிசினஸ் நல்லா இருக்கு. இப்பவே ஆரம்பிச்சாதான் உண்டு!"

மகன் பிடிவாதமாக இருப்பதை உணர்ந்த செண்பகம், "நமக்கு சாப்பாட்டுக்கு நெல்லு வர அளவுக்காவது நிலத்தை வச்சுக்கிட்டு மீதியை வேணும்னா வித்துக்க" என்றாள்.

அவன் மனைவி முத்துலட்சுமியும் அதை ஆமோதித்தாள்.

"பிசினஸ்லதான் வருமானம் வருமே!" என்று சொல்லி அவர்கள் யோசனையை ஏற்க மறுத்து விட்டான் ஏழுமலை.

ஏழுமலை விளைநிலங்களை விற்று அருகிலிருந்த நகரத்தில் நிலம் வாங்கி அவற்றில் வீட்டு மனைகள் போட்டு விற்பனை செய்யும் தொழிலைத் துவக்கினான்.

"நீ வீட்டு மனைகள் போட்டு ரெண்டு வருஷம் ஆச்சு. நீ போட்ட அம்பது மனைகள்ள அஞ்சு மனைதான் வித்திருக்கு. நிலத்திலிருந்த வருமானம் போச்சு. மனையை விக்க விளம்பரம், மனையைப் பாக்க வரவங்களைக் கார்ல அழைச்சுக்கிட்டுப் போறதுன்னு செலவு பண்ணிக்கிட்டிருக்க. இப்ப நமக்கு சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலைமை வந்துடுச்சு. இங்கே இருந்தா குழந்தைகள் கூடப் பட்டினி கிடக்க வேண்டியதுதான்னு நினைச்சு உன் மனைவி குழந்தைகளை அழைச்சுக்கிட்டு அவ அப்பா வீட்டுக்குப் போயிட்டா. நீயும் நானுமே அரைப்பட்டினி கிடக்கோம். உன்னைப் பாக்க முடியாம உன் குழந்தைகள் ஏங்கறாங்க. குழந்தைகளைப் பாக்க முடியாம நீ ஏங்கற. உனக்கு இந்தக் கஷ்டம் எல்லாம் தேவைதானா?" என்றாள் செண்பகம்.

"என்ன செய்யறது? நான் நினைச்ச மாதிரி வீட்டு மனைகள் விக்கல! எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு" என்றான் ஏழுமலை வருத்தத்துடன்

"வீட்டில உக்காந்து சாப்பிடற அளவுக்கு உங்கப்பா உனக்கு சொத்து வச்சுட்டுப் போனாரு. நீ எல்லாத்தையும் வித்துட்டுத் தெரியாத தொழில்ல இறங்கின. சாப்பாட்டுக்கு அரிசி வர அளவுக்குக் கொஞ்சம் நிலத்தையாவது வச்சுக்கலாம்னு நானும் சொன்னேன், உன் மனைவியும் சொன்னா. நீ கேக்கல. இப்ப இவ்வளவு கஷ்டப்படற. உங்கப்பாவுக்கு எதிரிகள் இருந்தாங்க. அவரு அவங்களை சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனா உனக்கு எதிரிகள்னு யாரும் இல்லை. எதுக்கு? நீ ஒத்தன் இருக்கியே, போதாதா?" என்று கோபத்திலும், துக்கத்திலும் வெடித்தாள் செண்பகம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)

குறள் 843:
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

பொருள்: 
அறிவில்லாதவர் தமக்குத் தாமே விளைவித்துக் கொள்ளும் துன்பம் அவருடைய பகைவராலும் செய்ய முடியாத அளவினதாகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Sunday, November 27, 2022

653. "சுறுசுறுப்புக்கு மறுபெயர் பரணி'

பரணி அந்தக் கட்சியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் அவ்வளவு வேகமாக முன்னேறுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

பொதுவாகக் கட்சியில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களும், புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களும் கட்சித்தலைவரால் அறியப்பட வாய்ப்பில்லை என்ற போதிலும், கட்சிக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, அவற்றுக்குக் கட்சியின் முக்கியத் தலைவர்களை அழைத்துப் பேசச் செய்வது போன்ற செயல்களால் கட்சித் தலைவரின் கவனத்தை ஈர்த்தான் பரணி.

பரணியைப் பார்க்க விரும்பி கட்சித் தலைவர் அவனை அழைத்து வரச் சொன்னார். கட்சித் தலைவரைச் சந்தித்ததும் பரணியின் நிலை மேலும் உயர்ந்து விட்டது. 

'சுறுசுறுப்புக்கு மறுபெயர் பரணி' என்று கட்சித் தலைவரால் வெளிப்படையாகப் புகழப்பட்ட பரணி புதிதாக உருவாக்கப்பட்ட கட்சியின் 'புதிய உறுப்பினர் பயிற்சி அணி'யின் தலைவராக அறிவிக்கப்பட்டான்.

பரணிக்குப் பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு அணியைக் கட்சித் தலைவர் புதிதாக உருவாக்கியதாகக் கட்சியில் பலரும் கருதினர்.

கட்சியில் பொறுப்பு கிடைத்ததும் பரணியின் வளர்ச்சி வேகம் இன்னும் அதிகமாகியது.

"என்னையா செஞ்சுட்டு வந்திருக்க? நீ படிச்சவன்தானே? அறிவு வேணாம்?" என்றார் மாவட்டச் செயலாளர்.

"இல்லீங்க. நான் பாட்டுக்கு ஓட்டல்ல உக்காந்து சாப்பிட்டிக்கிட்டிருந்தேன். அப்ப அந்த ஆளு வந்து எங்கிட்ட தகராறு பண்ணினான். ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வார்த்தை முத்திப் போய் அவன் கடுமையாப் பேசினதால நானும் கொஞ்சம் கடுமையாப் பேசிட்டேன" என்றான் பரணி சங்கடத்துடன் நெளிந்தபடி.

"கொஞ்சம் கடுமையாப் பேசினியா? பச்சைப் பச்சையா கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவனைத் திட்டியிருக்கே. தமிழ்ல இப்படியெல்லாம் கெட்ட வார்த்தை இருக்குன்னு எனக்கு இத்தனை நாளா தெரியாதுய்யா! நீ பேசினதையெல்லாம் யாரோ ஒத்தன் வீடியோ எடுத்து இன்டர்நெட்ல போட்டு அந்த வீடியோ வைரலாயிடுச்சு. 'கண்ணியத்தைப் பத்திப் பேசற தலைவரோட கட்சியில பொறுப்பில இருக்கறவரு எவ்வளவு கண்ணியமாப் பேசி இருக்காரு பாருங்க'ன்னு எதிர்க்கட்சிக்காரங்களும், மீடியாக்காரங்களும் எகத்தாளமாப் பேசறாங்க. தலைவர் ரொம்பக் கோபமா இருக்காரு. என்ன செய்யப் போறாரோ தெரியாது. இத்தனை நாளா இவ்வளவு நல்லா வேலை செஞ்சு வேகமா மேல வந்துக்கிட்டிருந்த நீ இந்த ஒரு விஷயத்தால உன் அரசியல் எதிர்காலத்தையே பாழடிச்சுக்கிட்டியேய்யா!" என்றார் மாவட்டச் செயலாளர்.

கட்சியின் கண்ணியத்தைக் குலைக்கும் விதத்தில் நடந்து கொண்டதற்காக பரணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாகக் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து அன்று மாலை அறிவிப்பு வந்தது.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை

குறள் 653;
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.

பொருள்:
மேன்மேலும் உயர வேண்டும் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

842. விநாயகத்தின் மனமாற்றம்!

"விநாயகத்தோட அப்பா தன் வீட்டில நிறைய புத்தகங்கள் வச்சிருந்தாரு. வெளியில எங்கேயும் கிடைக்காத சில புத்தகங்கள் எல்லாம் அவன் வீட்டில இருக்கு, விநாயகம் அதையெல்லாம் புரட்டிக் கூடப் பாத்திருக்க மாட்டான். நான் சில புத்தகங்களைப் படிச்சுப் பார்த்துட்டுத் தரேன்னு கேட்டேன். கொடுக்க மாட்டேன்னுட்டான்" என்றார் தமிழ்ப் பேராசிரியர் பரமசிவம் வருத்தத்துடன்.

" 'முட்டாப் பசங்களையெல்லாம் தாண்டவக்கோனே,
    காசு முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே!'
என்று 'பராசக்தி' படத்தில ஒரு பாட்டு இருக்கு. இந்த வரிகள் நம் விநாயகத்துக்கு அப்படியே பொருந்தும்" என்றான் வாசு.

"என்னப்பா இது? அவன் ஏதோ தொழில் செஞ்சு நல்லா சம்பாதிக்கிறான். அவனைப் போய் முட்டாள்ங்கறியே!" என்றார் பரமசிவம்.

"அவன் அப்பா ஆரம்பிச்ச தொழில் அது. அது பாட்டுக்குத் தானே ஓடிக்கிட்டிருக்கு. இவன் ஆஃபீசுக்கே போறதில்ல. எல்லாத்தையும் ஒரு மானேஜர் பாத்துக்கறாரு. அவன் ஆஃபீஸ் போகாம இருக்கறது நல்லதுக்குத்தான். இவன் போய் நிர்வாகம் செய்யறேன்னு ஆரம்பிச்சா எல்லாத்தையும் குட்டிச்சுவராக்கிடுவான். அப்புறம் தொழிலையே இழுத்து மூட வேண்டி இருக்கும்!"

"சரி. அதெல்லாம் நமக்கு எதுக்கு?"

"வீட்டில சும்மா கிடக்கற புத்தகங்களை உங்களை மாதிரி ஒரு ஆராய்ச்சியாளருக்கு இலவசமாவே கொடுத்திருக்கலாம். ஆனா படிச்சுப் பாக்கக் கூடக் கொடுக்க மாட்டேன்னா அவன் என்ன ஆளு?" என்றான் வாசு.

சில நாட்கள் கழித்து வாசுவுக்கு ஃபோன் செய்த பரமசிவம், "வாசு! ஒரு ஆச்சரியமான விஷயம். விநாயகம் எனக்கு ஃபோன் செஞ்சான். அவன் வீட்டில இருக்கற எல்லாப் புத்தகத்தையும் சும்மாவே எடுத்துக்கிட்டுப் போகச் சொல்லிட்டான். நூறு புத்தகங்களுக்கு மேல இருக்குமாம். என்னால நம்பவே முடியல!" என்றார் மகிழ்ச்சியுடன்.

"என்னாலயும்தான். உடனே கார் எடுத்துக்கிட்டுப் போய் அள்ளிப் போட்டுக்கிட்டு வந்துடுங்க. அப்புறம் அவனுக்கு மனசு மாறிடப் போகுது!" என்றான் வாசு.

"என்னப்பா நீ! எவ்வளவு நல்ல மனசோட புத்தகங்களை எனக்குக் கொடுக்கறேன்னு சொல்லி இருக்கான். அவன் பரந்த மனசைப் பாராட்டாம,..?"

''ஒருவேளை பழைய பேப்பர்காரர் இதையெல்லாம் விலை கொடுத்து எடுத்துக்க முடியாதுன்னு சொல்லி இருப்பாரு' என்று மனதில் நினைத்துக் கொண்ட வாசு, "பரந்த மனசெல்லாம் இல்ல சார்! ஏதோ உங்களோட அதிர்ஷ்டம் அவனுக்கு திடீர்னு இப்படித் தோணி இருக்கு!" என்றான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)

குறள் 842:
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.

பொருள்: 
அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Saturday, November 26, 2022

652. ரசாயனத் தொழிற்சாலை

கணபதி படித்தது பொருளாதாரம்தான். ஆனால் ஒரு ரசாயனத் தொழிற்சாலையைத் துவங்கும் வாய்ப்பு அவனுக்கு ஏற்பட்டது. காரணம் அவன் வேலை செய்த நிறுவனத்தில் அவனுடன் பணியாற்றிய முகுந்தனின் அண்ணன் ராமு.

ஒருமுறை முகுந்தன் வீட்டுக்குச் சென்றபோது அங்கே முகுந்தனின் அண்ணன் ராமுவைச் சந்தித்தான் கணபதி.

ராமு ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததாகவும் அந்தத் தொழிற்சாலை மூடப்பட்டதால் அவன் வேலை இழந்து விட்டதாகவும், வேறு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்ததாகவும் கணபதி அறிந்து கொண்டான்.

சற்று நேரம் ராமுவிடம் பேசியதில், ராமு அறிவுக் கூர்மை மிகுந்தவன் என்பதும், ரசாயனப் பட்டதாரியான அவன், ரசாயனப் பொருட்கள் பற்றி  நிறையப் படித்து வருகிறான் என்பதையும் கணபதி அறிந்து கொண்டான்.

எதனாலோ ராமுவின் மீது கணபதிக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டு விட்டது. ராமுவைப் பார்ப்பதற்காகவே முகுந்தன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தான் கணபதி.

"ஏண்டா, நான் உன்னோட நண்பன். இத்தனை நாளா என் வீட்டுக்கு நீ அடிக்கடி வந்ததில்ல. என் அண்ணனைப் பாக்க அடிக்கடி வர. என்னை விட அவன்தான் உனக்கு நெருக்கமான நண்பனா இருக்கான் போல இருக்கு!" என்றான் முகுந்தன் விளையாட்டாக.

"உன்னைத்தான் ஆஃபீஸ்ல தினமும் பாக்கறேனே! அப்புறம் உன் வீட்டுக்கு வேற வந்து உன்னைப் பாக்கணுமா?" என்றான் கணபதி.

"உன் அண்ணன் ராமு ஒரு ஜீனியஸ். ரசாயனப் பொருட்கள் பத்தி அவர்கிட்ட நிறைய  யோசனைகள் இருக்கு. அவரோட சேர்ந்து ஒரு ரசாயனத் தொழிற்சாலை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்" என்றான் கணபதி முகுந்தனிடம்.

"முதலீடு செய்ய அவங்கிட்ட பணம் கிடையாதுடா!" என்றான் முகுந்தன்.

"அவர் முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். ஒர்க்கிங் பார்ட்னரா இருக்கட்டும். நான் முதலீடு போட்டுக்கறேன்" என்றான் கணபதி.

"ஒரு நல்ல வேலையில இருக்க. அதை விட்டுட்டு முதல் போட்டுத் தொழில் ஆரம்பிக்கற. நல்லா யோசிச்சு செய்!" என்றான் கணபதி.

முகுந்தன் வேலையை விட்டு விட்டுத் தொழிற்சாலை துவங்கும் முயற்சியில் ஈடுபட்டான்.

ராமுவுடன் சேர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்தான்.

தொழிற்சாலை அமைக்க ஒரு இடத்தையும் தேர்ந்தெடுத்து அதை வாடகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தம் ஓரிரு நாட்களில் கையெழுத்தாக இருந்தது.

ரவு பத்து மணிக்கு முகுந்தனின் வீட்டு அழைப்பு மணி அடித்தது. முகுந்தன் கதவைத் திறந்தான.

"வா கணபதி! என்ன இந்த நேரத்தில?"

"ராமு இருக்காரா?"

"அவன் இப்பதான் படுத்துக்கப் போனான். கூப்பிடறேன்!" என்று சொல்லி உள்ளே போகத் திரும்பியவன், "முக்கியமான விஷயமா?" என்றான் சற்றுக் கவலையுடன்.

"ஆமாம்!" என்றான் கணபதி.

ராமு வந்தவுடன், அவன் உட்காரும் வரை கூடக் காத்திராமல், "என்ன ராமு, இந்த கெமிகலை போதை மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்த முடியுமா என்ன?" என்றான் முகுந்தன் அவசரமாக.

கவலையுடன் வந்த ராமுவின் முகம் மலர்ந்தது. "இதுதானா விஷயம்? நான் கூட இந்த நேரத்தில நீங்க வந்ததும் ஏதாவது பிரச்னையோன்னு பயந்துட்டேன்!" என்று பீடிகை போட்டு விட்டு, "செயற்கையான சில போதை மருந்துகள் தயாரிக்க இந்த கெமிகலைப் பயன்படுத்தறாங்க. ஆனா, அது ஃபார்மசூடிகல் கிரேட். நாம தயாரிக்கப் போறது இண்டஸ்டிரியல் கிரேட்தானே?" என்றான்.

"இல்லை ராமு. செயறகையான போதை மருந்துகள் தயாரிப்பே ஒருசட்ட விரோதமான செயல். அவங்க ஃபார்மசூடிகல் கிரேடுதான் பயன்படுத்தணும்னு என்ன இருக்கு? இண்டஸ்டிரியல் கிரேடைக் கூட அவங்க பயன்படுத்தலாமே!"

"இல்லை முகுந்தன். இண்டஸ்டிரியல் கிரேடில அந்த குவாலிடி கிடைக்காது. அப்படி இருந்தா இண்டஸ்டிரியல் கிரேட் தயாரிக்க அரசாங்கத்தில நிறைய கட்டுப்பாடுகள் விதிச்சிருப்பாங்களே! அது மாதிரி இல்லையே!"

"இல்லை. இண்டஸ்டிரியல் கிரேடைப் பயன்படுத்திக் கூட போதை மருந்துகளைத்  தயாரிக்கிறாங்கன்னு எனக்கு ஒரு நண்பர் சொன்னாரு. அவரோட தகவல் தப்பா இருக்காது. அதனால நாம தயாரிக்கற பொருள் போதை மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படறதுக்கு வாய்ப்பு இருக்கு இல்ல?"

"என்ன பேசற கணபதி? நீங்க பொருளை மார்க்கெட்ல விக்கப் போறீங்க. அது கைமாறி போதைப் பொருட்கள் தயாரிக்கறவங்க கைக்குப் போனா நாம என்ன செய்ய முடியும்?" என்றான் முகுந்தன்.

"நாம தயாரிக்கம் போற பொருள் தவறாப் பயன்படுத்தப்படலாம்னு தெரிஞ்சப்பறம் அதை எப்படித் தயாரிக்க முடியும்?" என்றான் கணபதி.

"என்ன சொல்ல வரீங்க கணபதி?" என்றான் ராமு அதிர்ச்சியுடன்.

"இந்த யோசனையைக் கைவிட்டுட வேண்டியதுதான், வேற ஏதாவது ஐடியா இருந்தா பாக்கலாம்!"

"கணபதி! முட்டாளா நீ? வேலையை விட்டுட்டு இந்த புராஜக்டுக்காக இவ்வளவு தூரம் முயற்சி எடுத்துட்டு இப்ப ஒரு அற்பக் காரணத்துக்காக அதைக் கைவிடறேங்கறியே! கொஞ்சம் பிராக்டிகலா யோசிச்சுப் பாரு!" என்றான் முகுந்தன் சற்றுக் கோபத்துடன்.

"ஐ ஆம் சாரி. ஒரு செயலினால தப்பான விளைவுகள் ஏற்படலாம்னு தெரிஞ்சப்பறம் அந்தச் செயல்ல இறங்கக் கூடாது. இதுதான் என்னோட நிலை!"

"முகுந்தன், இனிமே உங்களை நம்பி நான் எதிலேயும் ஈடுபட முடியாது. இனிமே எங்கிட்ட வேற ஐடியா பத்தியெல்லாம் பேசாதீங்க!" என்று கோபமாகக் கூறியபடியே உள்ளே சென்றான் ராமு.

"அப்ப நான் வேலைக்கு முயற்சி செய்ய வேண்டியதுதான்!" என்றான் கணபதி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை

குறள் 652;
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

பொருள்:
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

841. கரை சேர்த்த கல்வி

சுப்பிரமணி சிறு வயதிலிருந்தே வறுமையை அனுபவித்தவன். ஆயினும் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் அவனிடம் இருந்தது.

சரியான உணவு இல்லாமல் வாடிய நிலையிலும் படிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்து பள்ளிப் படிப்பை முடித்தான்.

ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து திருமணமும் செய்து கொண்டான். ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்குக் கண்ணன் என்று பெயர் வைத்தான்.

சில ஆண்டுகளில் வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஓரளவு வசதியும் வந்தது.

படிப்புதான் தன் வாழ்க்கையில் தனக்கு அதிகம் உதவியது என்று பலரிடமும் சொல்லிக் கொண்டிருப்பான் சுப்பிரமணி.

ஆனால் அவன் நண்பன் முத்துசாமி, "படிப்பு மட்டும் இருந்தாப் போதாதுடா. புத்திக் கூர்மை இருக்கணும். அது பிறவியிலேயே இருக்கணும். என்னை எடுத்துக்க. நான் பட்டப்படிப்பு படிச்சிருக்கேன். ஆனா பள்ளிப்படிப்பு மட்டுமே படிச்ச நீ என்னை விட நல்லா முன்னுக்கு வந்திருக்க. அதுக்குக் காரணம் உனக்கு இயல்பாகவே இருக்கிற அறிவுதான். அந்த அறிவு எனக்குக் கொஞ்சம் மட்டுதான்!" என்றான் சிரித்துக் கொண்டே.

முத்துசாமி  பொறாமை உணர்வு இல்லாமல், சுப்பிரமணியை உயர்த்தியும் தன்னைத் தாழ்த்தியும் பேசியது அவன் மீது சுப்பிரமணிக்கு மதிப்பை ஏற்படுத்தினாலும், முத்துசாமியின் கூற்றை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

முத்துசாமி சரியாக முயற்சி செய்திருக்க மாட்டான் என்று நினைத்துக் கொண்டான். ஆயினும் முத்துசாமியிடம் இதைச் சொல்லி அவன் மனதைப் புண்படுத்த சுப்பிரமணி விரும்பவில்லை. 

ண்ணனைப் பள்ளியில் சேர்த்து சில ஆண்டுகள் ஆகி விட்டன. அவன் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.

"கண்ணன் சரியாவே படிக்க மாட்டேங்கறான். மூணாம் வகுப்பு படிக்கிறான். இன்னும் கூட எழுத்துக் கூட்டி சரியாப் படிக்க வரலை!" என்றாள் சுப்பிரமணியின் மனைவி சாவித்திரி.

"நாமதான் சொல்லிக் கொடுக்கணும். சரி. நான் சொல்லிக் கொடுத்துப் பாக்கறேன்!" என்றான் சுப்பிரமணி.

ஆனால் அவன் சொல்லிக் கொடுத்த பிறகும் கண்ணனிடம் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஒருவேளை முத்துசாமி சொன்னது போல் அறிவு என்பது இயல்பாகவே இருக்க வேண்டிய ஒரு விஷயமோ என்று சுப்பிரமணிக்குத் தோன்றியது. 

பள்ளிக்குச் சென்று வகுப்பாசிரியரிடம் கேட்டபோது, "கண்ணன் படிப்பில வீக்காத்தான் இருக்கான்" என்றார்.

"பாடங்களைப் புரிஞ்சுக்கற அறிவு அவனுக்கு இல்லைன்னு சொல்றீங்களா?" என்றான் சுப்பிரமணி.

"அப்படிச் சொல்ல முடியாது. குறும்புத்தனமா சில வேலைகள்ளாம் செய்யறான். அதுக்கு புத்திசாலித்தனம் வேணும், இல்ல? அறிவைச் சரியான வழியில பயன்படுத்த மாட்டேங்கறான். நான் அதை மாத்த முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன். நீங்களும் முயற்சி பண்ணுங்க!"என்றார் பள்ளி ஆசிரியர்.

கண்ணனின் பிரச்னை தான் அனுபவித்த வறுமையை விடத் தீவிரமானது என்று சுப்பிரமணிக்குத் தோன்றியது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)

குறள் 841:
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.

பொருள்: 
அறிவின்மையே இல்லாமை எல்லாவற்றிலும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

651. வழியனுப்பு நிகழ்ச்சி

தன் நண்பன் ரவியின் அலுவலக நேரம் முடிந்ததும் அவனுடன் ஒரு திருமண அழைப்புக்குச் செல்வதற்காக அவன் அலுவலகத்துக்கு வந்தான் முருகன்.

முருகன் அலுவலகத்துக்கு வந்த நேரத்தில் அந்த நிறுவனத்திலிருந்து ஓய்வு பெறும் சபாபாதி என்ற ஊழியருக்கான வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அலுவலகத்தின் முன்ன்றையில் நிகழ்ச்சியில் அமர்ந்திருந்த ரவி, அலுவலகத்துக்குள் நுழைந்த முருகனைப் பார்த்து விட்டுச் சற்று நேரம் வெளியே காத்திருக்கும்படி சைகை செய்தான். முருகன் வாயிற்படிக்கு வெளியே நின்றான். 

ஓய்வு பெறும் சபாபதியை வழியனுப்பிப் பாராட்டும் நிகழ்ச்சியின்போது,  வழக்கம்போல் நிறுவன அதிபர் ஆறுமுகம் கண்கலங்கி விட்டார்.

"உங்களை மாதிரி ஊழியர்களோட உழைப்பாலதான் இந்த நிறுவனம் இவ்வளவு நல்லா வளர்ந்திருக்கு. இப்படிப்பட்ட அருமையான ஊழியர்களைப் பெற நான் ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சிருக்கணும். நீங்க ஒவ்வொருத்தரும் ஓய்வு பெற்றுப் போகறப்ப இந்த நிறுவனத்தைத் தாங்கிக்கிட்டிருக்கற ஒரு தூணை யாரோ அப்புறப்படுத்தற மாதிரி இருக்கு. ஆனா புதுசா இங்கே வேலைக்கு வரவங்களும் தூண்களைப் போல வலுவா இந்த நிறுவனத்தைத் தாங்கறதால இந்த நிறுவனம் எப்பவுமே வலுவா இருந்துக்கிட்டிருக்கு!" என்றார் ஆறுமுகம் உணர்ச்சிப் பெருக்குடன்.

நிகழ்ச்சி முடிந்ததும், ரவி அலுவலகத்துக்கு வெளியே வந்து, முருகனை அழைத்துக் கொண்டு கிளம்பினான். 

அலுவலகத்துக்கு வெளியே வந்ததும், முருகன் ரவியிடம், "உங்க முதலாளி இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டுப் பேசறதைக் கேட்டப்ப, அவரு உண்மையாவே பேசறாரா, இல்லை டிராமா போடறாரான்னு முதல்ல எனக்கு சந்தேகம் வந்தது. ஆனா அவரு உண்மையாவேதான் பேசினார்னு அப்புறம் புரிஞ்சுக்கிட்டேன்!" என்றான்.

"எனக்கு எப்பவுமே அது மாதிரி தோணினதில்ல! உனக்கு அவரைப் பத்தித் தெரியாது. அவர் பேச்சில மட்டும் இல்லாம, செயல்களிலேயும் உண்மையா நடந்துக்கறவரு. எங்க போட்டியாளர்கள் சில பேர் கொடுத்த பொய்யான தகவலை வச்சுக்கிட்டு எங்க  கபெனியிலேயும், சார் வீட்டிலேயும் வருமானவரித் துறை அதிகாரிகள் ரெண்டு மூணு தடவை சோதனை நடத்தி இருக்காங்க. ஆனா இங்கே தப்பா எதுவும் நடக்காததால அவங்களுக்கு எதுவும் கிடைக்கல. சார் தொழிலை ரொம்ப நேர்மையா நடத்தறாரு. எந்த ஒரு சின்ன தப்பு கூடச் செய்ய மாட்டாரு. அதனாலதான் அவருக்குத் தொழில்லேயோ, சொந்த வாழ்க்கையிலேயோ எந்தப் பிரச்னையும் ஏற்படாம எல்லாமே நல்லா நடந்துக்கிட்டிருக்குன்னு எனக்குத் தோணும்!"  என்றான் ரவி.

"அவரு என்னடான்னா தன் நிறுவன வளர்ச்சிக்குத் தன்னோட ஊழியர்கள்தான் காரணம்னு சொல்றாரு. நீ என்னடான்னா அவரோட நேர்மையான செயல்பாடுகளாலதான் அவருக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாம எல்லாம் நல்லாப் போயிட்டிருக்குன்னு சொல்றாரு. உங்க ரெண்டு தரப்புமே ஒத்தர் மத்தவருக்கு ஏத்தவரா இருக்கீங்க!" என்றான் முருகன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை

குறள் 651;
துணைநலம் ஆக்கம் தருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.

பொருள்:
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தை (வளத்தை)க் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Friday, November 25, 2022

840. ஆறாவது பேச்சாளர்!

"ஆண்டு விழாவுக்கு எப்பவும் போல ஆறு பேச்சாளர்களை ஏற்பாடு செஞ்சுடுங்க. வ்வொரு வருஷமும் நடக்கற மாதிரி  இந்த வருஷமும் ஆண்டு விழா சிறப்பா நடக்கணும்!" என்றார் இலக்கிய மன்றத் தலைவர் சாரங்கபாணி.

"பேச்சாளர்களை ஏற்பாடு செஞ்சுட்டு பட்டியலை உங்ககிட்ட காட்டறேன்!" என்றார் செயலாளர் கோபி.

சில நாட்கள் கழித்து, செயலாளர் காட்டிய பட்டியலைக் காட்டியதும், "பூவரசன்னு ஒத்தரைப் போட்டிருக்கீங்களே, அவர் யாரு? நான் கேள்விப்பட்டதில்லையே!" என்றார் சாரங்கபாணி.

"என்ன சார், இப்படிச் சொல்றீங்க? பத்திரிகைகள்ள நிறையத் தொடர்கதைகள் எழுதறாரே! இன்னிக்கு இளைஞர்கள் மத்தியில அவருதான் ரொம்ப பிரபலம்!" என்றார் கோபி.

"அப்படியா? எனக்குத் தெரியாது. நான் பத்திரிகைகள் படிக்கறதில்ல. அவற்றில் வர கதைகளைப் பத்தியும் எனக்கு எதுவும் தெரியாது. நல்லாப் பேசுவார் இல்ல?"

"பிரமாதமாப் பேசுவார் சார்!" என்றார் கோபி.

ன்று மலை சாரங்கபாணி பத்திரிகைகள் படிக்கும் பழக்கமுள்ள தன் மனைவி சுந்தரியிடம், "பூவரசன்ங்கற எழுத்தாளரைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கியா?" என்றார்.

"கேள்விப்படாம என்ன? எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் அவர் கதைதான் இருக்கும். எழுத்தாளரகளிலேயே இன்னிக்கு அவர்தான் ரொம்ப பிரபலம். எதுக்குக் கேக்கறீங்க?" என்றாள் சுந்தரி.

"அவரை எங்க இலக்கிய மன்றத்தில பேசறதுக்குக் கூப்பிட்டிருக்கோம். கோபிதான் ஏற்பாடு செஞ்சாரு. எனக்கு அவரைப் பத்தித் தெரியாது. அதுதான் உன்னைக் கேட்டேன்!"

"நீங்களும் அவரைக் கூப்பிட ஆரம்பிச்சுட்டீங்களா?" என்றாள் சுந்தரி.

சுந்தரி சொன்னதன் பொருள் சாரங்கபாணிக்கு அப்போது விளவ்கவில்லை!

"ஆமாம். அன்னிக்கு நான் பூவரசனைப் பத்திக் கேட்டப்ப, அவர் ரொம்ப நல்ல எழுத்தாளர்னு சொன்னியே!" என்றார் சாரங்கபாணி..

"நல்ல எழுத்தாளர்னு சொல்ல, ரொம்ப பிரபலமானவர்னு சொன்னேன். ஏன் என்ன ஆச்சு? நல்லாத்தானே பேசினாரு?" என்றாள் சுந்தரி.

"என்னத்தைச் சொல்ல? திருஷ்டிப் பரிகாரம் மாதிரி ஆயிடுச்சு. மற்ற அஞ்சு பேச்சாளர்களும் அறிஞர்கள். அவங்க  தங்களுக்குக் கொடுத்த தலைப்புகளைப் பத்தி ஆழமா, அருமையா பேசினாங்க. ஆனா இவரு  தலைப்போட தன்மையைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காம, கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லாம, ஏதோ விளையாட்டுத்தனமாப் பேசினாரு. ரொம்ப தரக்குறைவாகவும் இருந்தது. அவர் பேசறப்ப,  உறுப்பினர்கள் எல்லாரும் விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி முகத்தை வச்சுக்கிட்டிருந்தாங்க. கூட்டம் முடிஞ்சதும், இவரை எதுக்கு சார் கூப்பிட்டடீங்கன்னு என்னை வறுத்து எடுத்துட்டாங்க. கோபியைக் கேட்டா, அவரு எனக்குத் தெரியாது சார், அவர் பிரபலமானவராச்சேன்னு கூப்பிட்டேங்கறாரு. நல்ல பாலோட அழுக்குத் தண்ணியைக் கலந்த மாதிரி ஆயிடுச்சு!" என்றார் சாரங்கபாணி வருத்தத்துடன்.

"அவரோட இயல்பு அப்படித்தங்க. அவர் எழுதறதும் அப்படித்தான். ஆனா அதை ரசிக்க ஒரு கூட்டம் இருக்கு. ஆனா உங்க இலக்கிய மன்றக் கூட்டங்கள்ள பேசறதுக்கு அவரு பொருத்தமா இருக்க மாட்டாருன்னு அன்னிக்கு நீங்க சொன்னப்பவே எனக்குத் தோணிச்சு. நீங்க அவரை ஏற்பாடு செஞ்சப்பறம் அவரைப் பத்தித் தப்பா சொல்லி உங்களைக் கவலைப்பட வைக்க வேண்டாம்னுதான் நான் எதுவும் சொல்லல!" என்றாள் சுந்தரி.

"பேச்சாளர்களைத் தேர்ந்தெடுக்கறதில எவ்வளவு கவனமா இருக்கணுங்கறதுக்கு எனக்கு இது ஒரு பாடம்!" என்றார் சாரங்கபாணி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை

குறள் 840:
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.

பொருள்: 
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாத காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Thursday, November 24, 2022

650. பேராசிரியருக்குக் கூடுதல் ஓய்வு!

"சார்! இன்னொரு நூல் எழுதி இருக்கேன்!" என்றபடி தன் கையிலிருந்த புத்தகத்தைக் கல்லூரி முதல்வர் கணேசனிடம் காட்டினார் தமிழ்ப் பேராசிரியர் முத்துக்கண்ணன்.

"பத்தகத்தை வாங்கிப் பார்த்த கணேசன் 'புறநானூறு - சில புதிய சிந்தனைகள்'  என்ற தலைப்பைப் பார்த்து விட்டு, "இது மட்டும் எத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கீங்க?" என்றார்.

""முப்பத்தேழு நூல்கள்!" என்றார் முத்துக்கண்ணன் பெருமையுடன்.

"வாழ்த்துக்கள்!" என்றபடியே புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்த கணேசன், தொண்டையைச் செருமிக் கொண்டே, "பி ஏ முதல் ஆண்டுக்கு வகுப்பு எடுக்கறீங்க இல்ல, அது இனிமே வேண்டாம்!" என்றார்.

"ஏன் சார்?" என்றார் முத்துக்கண்ணன் ஏமாற்றத்துடன்.

"புதுசா வேலைக்கு எடுத்திருக்கமே அருணாசலம், அவருக்கு இன்னும் கொஞ்சம் பயிற்சி கொடுக்கலாம்னு நினைக்கிறேன். அதனால நீங்க எடுக்கற பி ஏ வகுப்பை அவருக்குக் கொடுத்திருக்கேன்."

"ஏற்கெனவே அவருக்கு நிறைய வகுப்புகள் இருக்கே!"

"பரவாயில்லை. அவரு அதிக வகுப்புகள் எடுக்கத் தயாராத்தான் இருக்காரு. நான் என்ன நினைச்சேன்னா, நீங்க சீனியர்ங்கறதால நீங்க எம் ஏ, பி ஏ ரெண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு வகுப்புகள் மட்டும் எடுங்க. பி ஏ தமிழ் முதல் ஆண்டு,  மற்ற பி ஏ, பி எஸ் சி, பி காம் வகுப்புகள் எல்லாம் அருணாசலமே பாத்துக்கட்டும்!" என்றார் கணேசன்.

முத்துக்கண்ணன் ஏதோ சொல்ல வாயெடுத்து, பிறகு ஏதும் சொல்லாமல், "சரி சார்! உங்க விருப்பம். எனக்குக் கிடைக்கிற கூடுதல் நேரத்தை படிக்கறதுக்குப் பயன்படுத்திக்கறேன்" என்று கூறி விடைபெற்றார்.

'படியுங்க, படியுங்க! எத்தனை புத்தகம் படிச்சு என்ன? மாணவர்களுக்குப் புரியற மாதிரி உங்களால விளக்க முடியாது! பி ஏ மாணவர்கள் வந்து புகார் செய்யறாங்க. எம் ஏ மாணவர்கள்னா லட்சியம் பண்ண மாட்டாங்க. நீங்க நடத்தறது புரியலேன்னா வகுப்பை கட் பண்ணிட்டு, தாங்களே படிச்சுப்பாங்க. நீங்க ஓய்வு பெறுகிற வரையில உங்களை வச்சுத்தானே சமாளிக்கணும்!" என்று நினைத்துக் கொண்டார் கணேசன். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 65
சொல்வன்மை

குறள் 650:
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

பொருள்:
கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

839. பிரிவு நேர்ந்தாலும்...

"சின்ன வெண்ணிலான்னு ஒரு நடிகை இருக்காளே, அவ ரொம்ப திமிர் பிடிச்சவ. புரொட்யூஸர் பல்லவராயன்கிட்டயே தன் திமிரைக் காட்டி இருக்கா. அவரு சாதாரண ஆளா? வெண்ணிலாவைப் படத்திலேந்து தூக்கிட்டு ஒரு புதுமுகத்தை கதாநாயகியாப் போட்டுட்டாரு! என்றான் ராம்பிரசாத் உற்சாகமான குரலில்.

"அப்படியா?" என்றான் கண்ணபிரான்.

இன்னும் சிறிது நேரம் தான் கேள்விப்பட்ட திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய 'சுவையான' தகவல்கள் பற்றிப் பேசி விட்டு ராம்பிரசாத் கிளம்பினான்.

ராம்பிரசாத் கிளம்பிச் சென்றதும், "நீங்க நல்லா படிச்சவரு, அறிவாளி. சீரியஸான விஷயங்கள்ள ஆர்வம் உள்ளவரு. இது மாதிரி உருப்படி இல்லாத விஷயங்களைப் பேசற இவரு எப்படி உங்களுக்கு நண்பரா அமைஞ்சாரு?" என்றாள் கண்ணபிரானின் மனைவி கிருத்திகா சிரித்துக் கொண்டே.

"நண்பர்கள் பலவிதமா இருப்பாங்க. இவன் ஒரு விதம். அவ்வளவுதான். அவனுக்கு எது தெரியுமோ, எதில ஆர்வம் இருக்கோ அதைப் பத்திதானே அவனால பேச முடியும்?" என்றான் கண்ணபிரான்.

"உங்க நண்பர்கள்ள பல பேர் தத்துவம், இலக்கியம் மாதிரி விஷயங்களைப் பேசறவங்க. மத்தங்க அப்படி இல்லாட்டாலும் புத்திசாலிகள். அவங்களோட பழகிட்டு இவரோட பழகறது உங்களுக்குக் கடினமா இல்லையா?"

சற்று யோசித்த கண்ணபிரான், "ராஜன்னு எனக்கு ஒரு நண்பன் இருந்தானே, உனக்கு நினைவிருக்கா?" என்றான்.

"ஏன் நினைவில்லாம? உங்களோட ரொம்ப நெருங்கின நண்பராச்சே அவரு! நீங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சா மணிக்கணக்காப் பேசிக்கிட்டிருப்பீங்க. கல்யாணம் ஆன புதுசில, 'என்ன இவரு தனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு, மனைவின்னு ஒருத்தி இருக்காங்கற நினைவே இல்லாம இவரோட மணிக்கணக்காப் பேசிக்கிட்டிருக்காரே' ன்னு வருத்தப்பட்டிருக்கேன். ஏன், உங்ககிட்ட சொல்லி சண்டை கூடப் போட்டிருக்கேன். ஏன் திடீர்னு அவரைப் பத்திக் கேக்கறீங்க?"

"ஏதோ ஒரு விஷயத்தில என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு அவன் என்னோட நட்பை முறிச்சுக்கிட்டுப் போனதைப் பத்தி நான் எவ்வளவு வருத்தப்பட்டிருக்கேன்னு உனக்குத் தெரியும், இல்ல?"

"ஆமாம். இன்னி வரைக்கும் அவர் பிரிஞ்சு போனதைப் பத்தி நீங்க வருத்துப்பட்டுக்கிட்டுத்தான் இருக்கீங்க. இப்ப கூட அவரைப் பத்திப் பேச்சை எடுக்கறப்ப உங்க முகம் வாடிடுச்சே!"

"ஒருவேளை ராம்பிரசாத் அது மாதிரி என்னோட சண்டை போட்டுட்டு என் நட்பை முறிச்சுக்கிட்டுப் போனான்னு வச்சுக்கயேன், அது எனக்கு ஒரு இழப்பாகவே தெரியாது. ஏன்னா அவன் எங்கிட்ட பேசறதெல்லாம் அர்த்தம் இல்லாத, உருப்படி இல்லாத விஷயங்களைப் பத்தித்தானே? அவனோட நட்பு முறிஞ்சாலும், அது எனக்கு எந்தத் துன்பத்தையும் கொடுக்காதுங்கறதால அவனோட நட்பு ரொம்ப இனிமையானதுன்னு வச்சுக்கலாம் இல்ல?"

சற்று முன்பு வாடி இருந்த கண்ணபிரானின் முகத்தில் இப்போது சிரிப்பு இருந்தது. அவன் சிரிப்பில் கிருத்திகாவும் கலந்து கொண்டாள்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை

குறள் 839:
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.

பொருள்: 
பேதைகளுடன் (அறிவற்றவர்களுடன்) கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து பிரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

649. பேச்சாளர் கேட்ட நேரம்

"பொதுவா நம்ம கிளப்ல பேச்சாளர்களுக்கு முக்கால் மணி நேரத்துக்கு மேல கொடுக்கறதில்லையே! அழகர்சாமிக்கு மட்டும் எப்படி ரெண்டு மணி நேரம் கொடுக்க முடியும்?" என்றார் கிளப் செயலாளர் தங்கதுரை.

"சார்! அழகர்சாமி பெரிய தமிழறிஞர். பொதுவா இலக்கிய மன்றங்கள்ள எல்லாம் அவர் மூணு மணி நேரம் பேசுவாரு. எல்லாரும் சுவாரசியமா கேட்டுக்கிட்டிருப்பாங்க. இது கிளப் மீட்டிங் என்பதால ரெண்டு மணி நேரமா சுருக்கிக்கறேன்னு சொல்றாரு!" என்றார் சீதாராமன். அவர்தான் அழகர்சாமியை கிளப் கூட்டத்தில் பேச அழைத்தவர்.

"சார்! நம் கிளப் உறுப்பினர்கள் அவ்வளவு நேரம் பேச்சைக் கேக்க மாட்டாங்க. அதோட பேச்சாளர் வரதுக்கு முன்னால நம் கிளப் விஷயங்களைப் பத்தின விவாதங்கள் இருக்கும். அதுக்கே ஒரு மணி நேரம் வேணும். அதனாலதான் பேச்சாளர்களுக்கு 45 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கறதுன்னு வச்சிருக்கோம். இவருக்கு வேணும்னா ஒரு மணி நேரம் ஒதுக்கலாம். அதுக்கு ஒத்துக்கிட்டார்னா அவரைக் கூப்பிடலாம்" என்றார் செயலாளர் உறுதியாக.

"என்ன சார், அழகர்சாமி பேச்சைப் பத்தி நம் உறுப்பினர்கள் என்ன சொல்றாங்க?" என்றார் சீதாராமன்.

"நீங்க என்ன நினைக்கிறீங்க? அதைச் சொல்லுங்க!" என்றார் தங்கதுரை..

"ம்..எதிர்பார்த்த அளவுக்கு இல்ல!" என்றார் சீதாராமன் தர்மசங்கடத்துடன்.

"எதிர்பார்த்த அளவுக்கு இல்லையா? மோசமா இருந்ததுன்னு சொல்ல ஏன் தயங்கறீங்க?"

"அப்படிச் சொல்ல முடியாது. அவரு நல்ல பேச்சாளர்தான். ஆனா பேச்சு கொஞ்சம் நீளமா இருந்ததுன்னு நினைக்கறேன். இன்னும் கொஞ்சம் சுருக்கமாப் பேசி இருந்தா நல்லா இருந்திருக்கும்!"

"அதான் சார் விஷயம். அவர் ரெண்டு மணி நேரம் கேட்டாரு. நாம ஒரு மணி நேரம் கொடுத்தோம். ஆனா அவர் பேசின விஷயத்தை இருபது நிமிஷத்திலேயே சொல்லி முடிச்சிருக்கலாம். நீட்டி மடக்கிப் பேசறது, சொன்ன விஷயங்களையே திரும்பத் திரும்ப வேற வார்த்தைகள்ள சொல்றது, பொருத்தமில்லாத நகைச்சுவை, குட்டிக்கதைகள்னு மசாலா சேர்க்கறது இதெல்லாம் இல்லாம பேசி இருக்கலாமே!" என்றார் தங்கதுரை.

"ஆனா அவர் நல்ல பேச்சாளர்னு பெயர் வாங்கினவராச்சே சார்!"

"இருக்கலாம். என்னோட பார்வையில அவருக்கு ஒரு விஷயத்தை சுருக்கமா நேரடியா சொல்லத் தெரியல. அதனலதான் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் நீட்டி முழக்கறாரு. அதனாலதான் அவருக்கு அதிக நேரம் தேவைப்படுது. நல்ல வேளை நாம அவருக்கு ஒரு மணி நேரம்தான் கொடுத்தோம். ரெண்டு மணி நேரம் கொடுத்திருந்தா மனுஷன் நம்மையெல்லாம் போரடிச்சே கொன்னிருப்பாரு!"

அரசியல் இயல்
அதிகாரம் 65
சொல்வன்மை

குறள் 649:
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.

பொருள்:
குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவாகப் பேச இயலாதவர்கள் பல சொற்களைப் பயன்படுத்திப் பேச விரும்புவர்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Wednesday, November 23, 2022

838. செல்வகுமாரின் தேர்வு

மக்கள் நல்வாழ்வுக் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான செல்வகுமார் ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்குச் செல்ல நேர்ந்தபோது, தான் வகித்து வந்த முதல்வர் பதவிக்கு அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் கந்தப்பன்.

கந்தப்பன் செல்வகுமாரின் அமைச்சரவையில் ஏதோ ஒரு துறைக்கு அமைச்சராக இருந்தார். செல்வகுமாரின் அரசில் அவர் மட்டுமே அதிகாரமும் வல்லமையும் பெற்றவர் மற்றவர்கள் ஒன்று என்ற இலக்கத்துக்குப் பின் அணிவகுத்து நிற்கும் பூஜ்யங்கள் என்று கருதப்பட்டதால் கந்தப்பன் என்று ஒரு அமைச்சர் இருந்தது கூடப் பலருக்குத் தெரியாது.

"கட்சியில மூத்த தலைவர்கள் நாம இவ்வளவு பேரு இருக்கோம், அறிவு, அனுபவம் எதுவுமே இல்லாத இந்த ஆளை ஐயா முதல்வர் ஆக்கிட்டுப் போயிட்டாரே!" என்று மூத்த தலைவர்கள் தங்களுக்குள் புலம்பினாலும் செல்வகுமாருக்கு அடிமைகளாக இருந்து பழகி விட்ட அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

துவக்கத்தில் தான் ஒரு சாதாரணமனிதன் ஐயாவின் கருணையால் முதல்வரானவன் என்று தன்னைப் பற்றி அடக்கமாகக் கூறிக் கொண்ட கந்தப்பன் சிறிது சிறிதாகத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.

ஒருமுறை சிறைக்குச் சென்று செல்வகுமாரைச் சந்தித்து வந்தவர் அதற்குப் பிறகு அவரைச் சந்திக்கச் செல்லவில்லை. மற்ற அமைச்சர்களும் செல்லக் கூடாது என்று அவர்களுக்கு ரகசியமாக உத்தரவு போட்டு விட்டார். அ

ப்படி எந்த அமைச்சராவது சென்று பார்த்தால் அவர் அமைச்சர்வையிலிருந்து நீக்கப்படுவார் என்று கந்தப்பன் எச்சரித்திருந்ததால் மூத்த அமைச்சர்கள் கூடச் சிறைக்குச் சென்று செல்வகுமாரைச் சந்திக்க முயலவில்லை.

சில சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைக்குச் சென்று செல்வகுமாரைச் சந்தித்து கந்தப்பனின் செயல்பாடு பற்றிக் கூறினர். 

"கொஞ்ச நாள் காத்திருங்க. சிறையிலிருந்துக்கிட்டே அவனைத் தூக்கி அடிக்கிறேன்1" என்று வீரமாகச் சூளுரைத்தார் செல்வகுமார்.

ந்தப்பனின் அதிகார மமதை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. கட்சியின் மூத்த நிர்வாகிகளைக் கையில் போட்டுக் கொண்டு, கட்சியின் உயர்மட்டக் கூழுவைக் கூட்டிக் கட்சியின் நிரந்தரத் தலைவராக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த செல்வகுமாரை நீக்கி விட்டுத் தன்னைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கச் செய்தார்.

முதல்வராக இருந்ததுடன், கட்சித் தலைவராகவும் ஆகி விட்டதால் கந்தப்பனை எதிர்ப்பது கடினம் என்று புரிந்து கொண்டு எல்லா அமைச்சர்களும், கட்சியின் மூதத தலைவர்களும் கந்தப்பனின் அதிகாரத்துக்குப் பணிந்தனர்.

அறிவும், அனுபவமும் இல்லாத நிலையில், கந்தப்பனின் ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகள் மிகுந்திருந்தன. ஊழல் புகார்களும் நிறைய எழுந்தன.

மக்கள் கந்தப்பனின் ஆட்சியின் மீது வெறுப்படைந்தாலும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வரப் போகும் தேர்தல் வரை அவரை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அனைவரும் உணர்ந்திருந்தனர்.

சிறையில் செல்வகுமாரைச் சந்தித்த அவருடைய விசுவாசியான கருணாகரன் கந்தப்பனின் அத்துமீறல்களையும், தவறான செயல்பாடுகளையும் பற்றி அவரிடம் விரிவாகப் பேசினார்.

"தெரியும். ஜெயில்ல எனக்குச் செய்திப் ப் பத்திரிகைகள் கொடுக்கறாங்க!" என்றார் செல்வகுமார் விரக்தியுடன்.

"என்ன ஐயா இது! கந்தப்பனோட அட்டகாசம் தாங்க முடியல. சட்டமன்ற உறுப்பினர்கள் பல பேர் அவனுக்கு எதிராத்தான் இருக்காங்க. நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க. அவனைக் கவுத்துடலாம்" என்றார் 

"கவுத்துட்டு? நமக்கு ரொம்ப குறுகிய பெரும்பான்மைதான் இருக்கு. பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அவன் பின்னால போனாலும் நமக்குப் பெரும்பான்மை போயிடும். அப்புறம் இன்னொத்தரை வச்சு எப்படி ஆட்சி அமைக்க முடியும்? இப்போதைக்கு நம்ம கட்சி ஆட்சி நடக்குதுன்னு திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான்!"

"என்னங்க இப்படிச் சொல்றீங்க? அப்ப அவனை எதுவும் செய்ய முடியாதா?"

"எனக்கு விசுவாசமா இருப்பான்னுதான் அவனைப் போட்டேன். அவன் ஒரு முட்டாளா இருக்கறது நமக்கு வசதியா இருக்கும்னு நினைச்சேன். ஆனா குரங்குக்குக் கள்ளு ஊத்திக் கொடுத்த மாதிரி ஆயிடுச்சு. இன்னும் ரெண்டு வருஷத்தில நான் வெளியில வருவேன். அதுக்கப்பறம் தேர்தலுக்கு ஒரு வருஷம் இருக்கு. அதுக்குள்ள ஏதாவது செய்ய முடியுமானு அப்புறம்தான் பாக்கணும்!" என்றார் செல்வகுமார்.

"அதுக்குள்ள அவன் ஆட்சியையும், கட்சியையும் எந்த அளவுக்குச் சீரழிக்கப் போறானோ!" என்றார்  கருணாகரன் கவலையுடன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை

குறள் 838:
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.

பொருள்: 
பேதையின் (அறிவற்றவனின்)  கையில் ஒரு பொருள் கிடைத்தால், (அவன் நிலைமை) பித்துப் பிடித்த ஒருவன் கள் குடித்து மயங்கியது போன்று ஆகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

648. ஒட்டுக் கேட்டு அறிந்தது!

"எனக்குக் கீழே இருக்கற ரெண்டு டீம் லீடர்ஸ்ல நீதான் சீனியர். எனக்கு புரொமோஷன் கீடைச்சா என் இடத்துக்கு நான் உன்னைத்தான் பரிந்துரைப்பேன்னும் எல்லாருக்கும் தெரியும். ஆனா உன்னோட டீம் செயல்பாடு அவ்வளவு திருப்திகரமா இல்லையே! மனோகரோட டீம் செயல்பாடு சிறப்பா இருக்கு. இப்படியே தொடர்ந்தா நான் மனோகரைத்தான் என் இடத்துக்குப் பரிந்துரைக்க வேண்டி இருக்கும்!" என்றார் புராஜக்ட் மானேஜர் அறிவழகன்.

"என்னவோ தெரியல சார்! என் டீம் உறுப்பினர்கள் நான் சொல்றபடி நடந்துக்க மாட்டேங்கறாங்க. கேட்டா, நீங்க அப்படித்தானே சார் சொன்னீங்கன்னு தப்பை என் மேல போடறாங்க. சில சமயம் எங்கிட்ட ஏதோ விரோத பாவத்தோட நடந்துக்கற மாதிரி இருக்கு. எஎன் டீம் உறுப்பினர்கள்கிட்ட ஏதோ தப்பு இருக்கு. ஆனா அது என்னு எனக்குப் புரியல" என்றான் சிவராஜ்.

ரண்டு நாட்கள் கழித்து சிவராஜை அழைத்த அறிவழகன், "சிவராஜ்! நேத்து நீ உன் டீம் உறுப்பினர்கள்கிட்ட பேசினப்ப நான் பக்கத்து அறையிலே இருந்து கேட்டேன்!" என்றார்.

"என்ன சார் இது?" என்றான் சிவராஜ் சற்று சங்கடத்துடன்.

"இதில ரகசியம் எதுவும் இல்ல. நீ பேசறப்ப நான் உன் பக்கத்தில உக்காந்து கூட கவனிச்சிருக்கலாம். ஆனா அதனால நீ நர்வஸ் ஆகலாங்கறதாலதான் உங்கிட்ட சொல்லாம அடுத்த அறையிலிருந்து கவனிச்சேன். அது கூட உனக்கு உதவத்தான்!"

"சார்! என் டீம் உறுப்பினர்களை மாத்ததினாத்தான் சரியா வரும். அவங்க ஆட்டிட்யூடே சரியா இல்லை!" என்றன் சிவராஜ்.

"உன் டீம் உறுப்பினர்கள்கிட்ட சில குறைகள் இருக்கலாம். ஆனா அவங்க எப்படி இருந்தாலும், அவங்களை வச்சுக்கிட்டுத்தான் நாம நம்ம வேலைகளைச் செய்யணும்."

"அது எப்படிசார்?" என்றான் சிவராஜ்.

"எப்படின்னு சொல்றேன். அதுக்கு முன்னால, நீயும் நானும் சேர்ந்து மனோகர் தன் டீம் உறுப்பினர்கள்கிட்ட எப்படிப் பேசறான்னு பாக்கலாம், அதாவது கேக்கலாம்!" என்றார் அறிவழகன்.

"பக்கத்து ரூம்ல இருந்தா சார்?" என்றான் சிவராஜ் சிரித்துக் கொண்டே.

"தேறிட்ட!" என்றார் அறிவழகன் சிவராஜின் முதுகில் தட்டி.

"நீ என்ன கவனிச்ச?" என்றார் அறிவழகன்.

"ஒரு விஷயத்தை நான் ஒத்துக்கணும் சார்! மனோகர்  ரொம்பத் தெளிவா கோர்வையாப் பேசறான். நான் அந்த அளவுக்கு இல்ல. சொல்லப் போனா சில பாயின்ட்களை நொல்ல வேண்டிய இடத்தில சொல்ல மறந்துட்டு அப்புறம் சொல்வேன். நானே இதை மாத்திக்கணும்னு நினைக்கிறேன்!" என்றான் சிவராஜ்.

"நீ உன் குறையை வெளிப்படையா ஒத்துக்கிட்டது நல்ல விஷயம். இது எல்லாருக்கும் ஏற்படறதுதான். பேசறதுக்கு முன்னால என்ன பேசணும்னு யோசிச்சு பாயின்ட்களை வரிசையாக் குறிச்சு வச்சுக்கிட்டா இந்த பிரச்னை வராது. ஆரம்பத்தில குறிப்புகளைப் பாத்துப் பேசினாலும், கொஞ்ச நாள்ள குறிப்புகளைப் பாக்காமயே கோர்வையாப் பேச வந்துடும். இதற்கு முயற்சியும் பொறுமையும் வணும்." என்றார் அறிவழகன்.

"சரி சார்! அது ஒண்ணுதான் எனக்குத் தெரிஞ்சது. மத்தபடி நான் பேசறதுக்கும் மனோகர் பேசறதுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்ல. இன் ஃபேக்ட், என்னோட லாங்க்வேஜ் அவனோடதை விட இன்னும் சிறப்பா இருக்கும்!"

"ஆமாம். அதை நான் கவனிச்சேன். லாங்கவேஜ் வலுவா இருக்கறது ஒரு அட்வான்டேஜ்தான். ஆனா இன்னொரு விஷயத்தை நீ கவனிக்கல."

"என்ன சார் அது?"

"மனோகர் பேச்சில ஒரு இனிமை இருக்கு. அவன் பயன்படுத்தற வார்த்தைகள், குரலோட தொனி எல்லாமே ஒரு நண்பன்கிட்ட பேசற மாதிரி இருக்கு. உன்னோட பேச்சு  கட்டளையிடற தொனியில இருக்கு. அது கட்டளைதான். ஆனா கேக்கறவங்களுக்கு அப்படித் தெரியக் கூடாது. இன்னும் கொஞ்சம் இனிமையா, மென்மையாப் பேச நீ பழகிக்கணும். இந்த ரெண்டு விஷயங்களிலேயும் நீ கவனம் செலுத்தினா உன் டீம் உறுப்பினர்களை இந்த ஏழாவது மாடியிலேந்து குதிக்கச் சொல்லி நீ சொன்னா கூட அவங்க கேள்வி கேக்காம குதிச்சுடுவாங்க!" என்றார் அறிவழகன்.

சிவராஜின் முகத்தில் விரிந்த புன்னகையிலிருந்து தான் சொன்னதை அவன் சரியாக எடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அறிவழகன் புரிந்து கொண்டார்.

அரசியல் இயல்
அதிகாரம் 65
சொல்வன்மை

குறள் 648:
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

பொருள்:
சொல்ல வேண்டியவற்றைக் கோர்வையாகவும், இனிமையாகவும் சொல்லும் ஆற்றலை ஒருவர் பெற்றிருந்தால், அவர் சொல்பவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

647. புதிய போர்முறைகள்

"இப்பல்லாம் காலம் மாறிப் போச்சுங்க. சமூக ஊடகங்கள்தான் இப்ப போர்க்களம். போர்ல அதிக ஆயுதங்கள் உள்ள படை வெற்றி பெறுகிற மாதிரி, சமூக ஊடகங்கள்ள அதிக பலம் உள்ளவங்கதான் அரசியல் பிரசாரத்தில வெற்றி பெற முடியும்!" என்றான் கண்ணன்.

"சமூக ஊடகங்கள்ள அதிக பலம் பெற என்ன செய்யணும்?" என்றார் சண்முகம்.

"அதுக்கெல்லாம் சில நிபுணர்கள் இருக்காங்க. அவங்க நிறைய வாட்ஸ் ஆப் குழுக்கள், யூடியூப் வீடியோக்கள், டிவிட்டர், ஃபேஸ்புக் பதிவுகள்னு உருவாக்கி அதையெல்லாம் நிறைய பேருக்குப் போய்ச் சேருகிற மாதிரி பரவச் செஞ்சுடுவாங்க கொஞ்சம் பணம் செலவழியும், அவ்வளவுதான்!"

"பணம் செலவழிக்கறதைப் பத்திக் கவலை இல்லை. இளங்கோவோட இமேஜைக் கெடுத்துத் தேர்தல்ல அவன் கட்சி நமக்கு ஒரு சவாலா இல்லாத மாதிரி பாத்துக்கணும். அவ்வளவுதான்!"

"ரெண்டு மாசத்தில பாருங்க. தன்னோட இமேஜ் டேமேஜ் ஆறதைப் பார்த்து இளங்கோ எப்படி அலறப் போறாரு பாருங்க!" என்றான் கண்ணன் உற்சாகத்துடன்.

"என்னப்பா சமூக ஊடகங்களை வச்சு இளங்கோவோட பேரைக் கெடுத்துடலாம்னு சொன்ன! நாம எவ்வளவோ பணம் செலவழிச்சு அவனுக்கு எதிரா நிறைய விஷயங்களைப் பரப்பினோம். ஆனா அவன் முன்னை விட இன்னும் வலுவா இல்ல ஆகிக்கிட்டிருக்கான்?" என்றார் சண்முகம்.

"அவரோட பேச்சுத் திறமையால எல்லாத்தையும் சமாளிச்சுடறாருங்க. அவரைப் பத்தி தப்பா  ஏதாவது வந்தா, ரொம்ப சுருக்கமா புத்திசாலித்தனமாவோ, நகைச்சுவையாகவோ அதுக்கு பதில் சொல்லி, அதை ஒண்ணுமில்லாம ஆக்கிடறாருங்க. இத்தனைக்கும் அவருக்கு சமூக ஊடக பலம் அதிகமா இல்ல. ஆனா அவரு பேச்சு சுவாரசியமா இருக்கறதால அவர் சொல்றதை சமூக ஊடகங்கள்ள இருக்கற பல பேரு பரப்பி அவர் பேச்சு எல்லாருக்கும் போய்ச் சேர வச்சுடறாங்க. சொல்லப் போனா, இளங்கோவைப் பத்தி நாம ஏதாவது தப்பான விஷயத்தைப் பரப்பினா, மக்கள் அந்த விஷயத்தை விட அவரு அதுக்கு எப்படி பதில் சொல்றாருங்கறதைத் தெரிஞ்சுக்கத்தான் ஆவலா இருக்காங்க. அதனால களம் இளங்கோவுக்குச் சாதகமாத்தான் போய்க்கிட்டிருக்கு!" என்றான் கண்ணன்.

"சரி. இதையெல்லாம் குறைச்சுடு. ஒரேயடியா நிறுத்தினா நாம தோத்துட்ட மாதிரி இருக்கும். நான் அவனை வேற வழியில சமாளிக்கிறேன்!" என்றார் சண்முகம்.

டுத்த சில மாதங்களுக்கு சண்முகத்தின் மறைமுகமான தூண்டுதலின் பேரில் இளங்கோவின் மீது பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு, ஊழல் போன்ற  குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வழக்குகள் போடப்பட்டன. பல்வேறு ஊர்களில் உள்ள காவல் நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டன.

ஆனால் இளங்கோ அயரவில்லை. தன் மீது போடப்பட்ட வழக்குகளை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றங்களில் மனுப் போட்டான். 

தன் மீது புகார் அளிக்கப்பட்ட காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று தன் மீதுள்ள புகார்களை உடனே விசாரித்து அவற்றின் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினான்.

இதனால் புகார் கொடுத்த பலர் பயந்து தங்கள் புகார்களையும் மனுக்களையும் திரும்பப் பெற்றனர்.

இளங்கோ எதற்கும் அஞ்ச மாட்டான், தன் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை எதிர்கொள்வதில் சிறிதும் சோர்வடைய மாட்டான் என்பதை உணர்ந்து இளங்கோவை இது போன்ற போர்முறைகளால் வெல்ல முடியாது, அரசியல் ரீதியாகத்தான் அவனை எதிர்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு சண்முகம் வந்தார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 65
சொல்வன்மை

குறள் 647:
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

பொருள்:
சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சம் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Tuesday, November 22, 2022

837. தம்பியிடம் உதவி கேட்டு...

"என்ன, உங்க தம்பியைப் பாத்தீங்களா?" என்றாள் பங்கஜம்.

"ஆபீஸ்ல ஒரே கூட்டம். வேலை செய்யறவங்க யாரு, பார்வையாளர்கள் யாருன்னு தெரியல. யாராரோ வரதும் போகறதுமா இருக்காங்க. அவன் ஆஃபீஸ்ல இல்ல.  கொஞ்ச நேரம் பாத்துட்டு வந்துட்டேன்" என்றார் சத்யம்.

"நீங்க அவர் அண்ணன்னு சொல்லி எப்ப வருவாருன்னு ஆஃபீஸ்ல கேக்க வேண்டியதுதானே?"

"அவனோட செகரட்டரி கிட்ட கேட்டேன்.  அந்தப் பொண்ணு தெரியாதுன்னு சொல்லிட்டா. எங்கே  போயிருக்கான்னும் தெரியாதாம். இதில வேடிக்கை என்னன்னா, நான் கேட்டுட்டு வெளியில வந்தப்ப, 'சாரைப் பாக்க வரவங்க நிறைய பேரு சொந்தக்ககாரங்கன்னுதான் சொல்லிக்கறாங்க'ன்னு அவ யார்கிட்டயோ சொல்லிக்கிட்டிருக்கா!"

"நீங்க அவரோட சொந்த அண்ணன். அவரைப் பார்க்க நீங்க ஏன் ஆஃபீசுக்குப் போகணும்? அவர் வீட்டுக்கே போகலாமே!"

"போகலாம். அங்கே அவன் மனைவி இருப்பாளேன்னுதான் தயக்கமா இருக்கு!"

"சரளா நல்ல பொண்ணுங்க. நாங்க சந்திக்கறப்பல்லாம் எங்கிட்ட நல்லாதான் பேசுவா. என்ன, உங்க தம்பியோட பிசினஸ்  வேகமா வளர்ந்து அவர் உயர்ந்த நிலைக்குப் போனப்பறம் நாம அவர்கிட்ட அதிக நெருக்கம் வச்சுக்கல. அவர் வீட்டுக்கு நீங்க போன சரளா உங்ககிட்ட மரியாதையாத்தான் நடந்துப்பா" என்றாள் பங்கஜம்.

"அது சரிதான். ஆனா அவன் மனைவி பக்கத்தில இருக்கறப்ப அவங்கிட்ட உதவி கேக்கறதுக்கு எனக்கு சங்கடமா இருக்கு!" என்றார் சத்யம்.

"நம்ம பையனோட படிப்புக்காகப் பண உதவி கேக்கப் போறோம். அதுவும் கடனாத்தான் கேக்கப் போறோம். அவ எதுவும் நினைச்சுக்க மாட்டா!" என்றாள் பங்கஜம்.

த்யம் தன் தம்பி முருகன் வீட்டுக்குச் சென்றபோது அதுவும் ஒரு அலுவலகம் போல்தான் இருந்தது. முன்னறையில் மேஜை நாற்காலி போடப்பட்டு ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். மேஜையில் இருந்த பெயர்ப்பலகையில் 'குமார் - அந்தரங்கச் செயலர்' என்று எழுதப்பட்டிருந்தது..

ஏற்கெனவே நான்கைந்து பேர் காத்திருந்ததைப் பார்த்த சத்யம் சற்றுத் தயங்கி விட்டுக் குமாரிடம் சென்றார்.

"சார்! வரிசையில வாங்க. உங்களுக்கு முன்னால நாலைஞ்சு பேர் இருக்காங்க!" என்றான குமார்.

"நான் முருகனோட அண்ணன். அவனைப் பாக்கணும். நான் உள்ளே போகலாம் இல்ல?" என்றார் சத்யம் சற்றுக் கோபத்துடன்.

"சாரி சார்! உக்காருங்க. சார்கிட்ட கேட்டுக்கிட்டு வரேன்!" என்று எழுந்த குமார், "உங்க பேர் என்ன சொன்னீங்க?" என்றான்.

"முருகனோட அண்ணன்னு சொன்னேனே!"

"தப்பா நினைச்சுக்காதீங்க சார்! சாரைப் பார்க்க வரவங்க நிறைய பேரு தங்களை சாரோட சொந்தக்காரர்னுதான் சொல்றாங்க. அந்த மாதிரி சொல்றவங்களை சார்கிட்ட அனுப்பினா அவங்க ஏதாவது தூரத்து சொந்தமா இருப்பாங்க. அப்புறம் சார் என்னைத் திட்டுவாரு. அதனாலதான் பேர் கேட்டேன்" என்றான் குமார் மன்னிப்புக் கேட்கும் குரலில்  

"என் பேரு சத்யம். முருகனோட கூடப் பொறந்த அண்ணன்! என்றார் சத்யம் எரிச்சலுடன்.

சில விநாடிகளில், முருகனே வந்து, "வா அண்ணே!" என்று சத்யத்தின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். சத்யம் பெருமையுடன் குமாரைப் பார்த்து விட்டு முருகனுடன் உள்ளே சென்றார்.

சத்யம் உள்ளே சென்று அமர்ந்ததும், "த:ப்பா நினைச்சுக்காதே அண்ணே! நம்ம தூரத்து சொந்தக்காரங்க சில பேரு வந்து பணம் கேட்டுத் தொந்தரவு பண்றாங்க. அதனாலதான் யாருன்னு தெரியாம எல்லாரையும் உள்ளே அனுப்பாதேன்னு குமார்கிட்ட சொல்லி இருக்கேன்" என்றான் முருகன்.

தானே பண உதவி கேட்கத்தானே வந்திருக்கிறோம் என்று நினைத்து சங்கடமாக உணர்ந்தார் சத்யம்.

"நான் நிறைய உதவி செய்யறவன்தான். வெளியில உக்காந்துக்கிட்டு இருக்கறவங்கள்ளாம் கூட ஏதாவது உதவி கேட்டுத்தான் வந்திருப்பாங்க. குமாரே அவங்ககிட்ட பேசி அவங்களுக்கு உதவி செய்யறதா வேண்டாமா, எவ்வளவு கொடுக்கலாம் எல்லாம் முடிவு செஞ்சு எங்கிட்ட சொல்லுவான். நான் செக் போடச் சொல்லிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடுவேன். அவங்க முகத்தைக் கூட நான் பாக்கறதில்ல!" என்றான் முருகன் தொடர்ந்து.

''யார் என்னன்னு பாக்காம  உன் செகரட்டரி சொல்றதை வச்சுக்கிட்டு அவங்களுக்கு உதவி செஞ்சா அது சரியா இருக்குமா? உன் செகரட்டரியே தகுதி இல்லாதவங்களுக்கோ, தனக்கு வேண்டியவல்களுக்கோ உதவி செஞ்சு உன் பணத்தை வீண்டிக்கலாம் இல்ல?' என்று நினைத்துக் கொண்ட சத்யம், உதவி கேட்டு வந்த தான் கருத்துக் கூறுவது பொருத்தமாக இருக்காது என்று நினைத்து, "உன் ஆஃபீசுக்குப் போயிருந்தேன். அங்கேயும் நிறைய பேர் இருந்தாங்க. உதவி கேக்கறவங்க ஆஃபீசுக்கும் வருவாங்களா?" என்றார்.

"வருவாங்க. அங்கேயும் இதே மாதிரி ஏற்பாடுதான். என்னோட பி ஏதான் பாத்து முடிவு செய்வா" என்ற முருகன்,"நீ ஏன் அங்கே போனே? வீட்டுக்கே வந்திருக்க வேண்டியதுதானே? ஆஃபீசுக்கு வரதுன்னா ஃபோன் பண்ணிட்டு நான் இருக்கற நேரத்தில வந்திருக்கலாமே!" என்றான் தொடர்ந்து.

"வெளியில போய் ஃபோன் பண்ணிட்டு வரதுக்கு நேரேயே போய்ப் பாக்கலாமேன்னு நினைச்சேன்!" என்ற சத்யம் விஷயத்தைச் சொல்ல இன்னும் தயங்கியவராக, "சரளா வீட்டில இல்லையா?" என்றார்.

"அவ லேடீஸ் கிளப் மீட்டிங்குக்குப் போயிருக்கா. மாசத்துக்கு ஒரு தடவை மீட்டிங், லஞ்ச்சோட. அநேகமா எல்லாக் கூட்டத்துக்குமே லஞ்ச் செலவை அவதான் ஏத்துப்பா!" என்றான் முருகன் பெருமையுடன்.

'எப்படியெல்லாம் பணத்தை வீண்டிக்கிறான்!' என்று நினைத்த சத்யம், அதனால் தனக்கு உதவத் தயங்க மாட்டான் என்று நினைத்து சட்டென்று விஷயத்துக்கு வந்தார்.

தன் மகன் அருணுக்குப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்திருப்பதாகவும், கல்லூரிக் கட்டணம் செலுத்த இரண்டு லட்ச ரூபாய் வேண்டுமென்றும், வங்கியில் கல்விக் கடனுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும், ஓரிரு மாதங்களில் அது கிடைத்தவுடன் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் முருகனிடம் தயக்கத்ததுடனும், சங்கடத்துடனும் சொல்லி முடித்தார் சத்யம்.

முருகன் இன்டர்காமில் குமாரை அழைத்து, "குமார் ஐயாயிரம் ரூபாய்க்கு ஒரு செக் போட்டு எடுத்துக்கிட்டு வா!... ஆமாம். பேரர் செக்தான்" என்று கூறி ரிசீவரை வைத்து விட்டு, சத்யத்திடம் திரும்பி, "தப்பா நினைச்சுக்காதே அண்ணே! நான் யாருக்கும் கடன் கொடுக்கறதில்ல. ஐயாயிரம் ரூபாய்க்கு பேரர் செக் கொடுக்கறேன். இந்தப் பணத்தை நீ திருப்பிக் கொடுக்க வேண்டாம். அருணோட படிப்புக்கு நான் செய்யற சின்ன உதவியா இருக்கட்டும்!" என்றான் சிரித்தபடியே.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை

குறள் 837:
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

பொருள்: 
அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடையும்போது அந்நியர் பலர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் (அவனிடமிருந்து உதவி எதுவும் கிடைக்காமல்) துன்பத்தில் வாடுவர்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Sunday, November 20, 2022

646. என் பேச்சை யாரும் கேட்பதில்லை!

"ஆஃபீஸ் மீட்டிங்கிலேயும் சரி, நான் யார்கிட்டயாவது தனியாப் பேசினாலும் சரி, நான் பேசறதை யாரும் காது கொடுத்துக் கேக்க மாட்டேங்கறாங்க!" என்று அலுத்துக் கொண்டான் அரவிந்தன்.

"எல்லாருக்கும் சில சமயம் இப்படித் தோணும்!" என்றான் அவன் நண்பன் சாரதி.

"நேத்திக்கு ஆஃபீஸ்ல ஒரு மீட்டிங். நான் அருமையா ஒரு யோசனை சொன்னேன். ஜி எம் உட்பட யாரும் அதை கவனிச்ச மாதிரி கூடத் தெரியல. ஆனா பரந்தாமன் சொன்ன யோசனையைப் பிரமாதம்னு எல்லாரும் பாராட்டினாங்க. இத்தனைக்கும் பரந்தாமனுக்கு சரியா ஆங்கிலம் பேச வராது. தப்ப்த் தப்பாப் பேசுவான். நிறைய பேர் அதைக் கேட்டு சிரிப்பாங்க, அப்புறமா தங்களுக்குள்ள கிண்டல் பண்ணிப் பேசிப்பாங்க. ஆனா அவன் ஏதாவது சொன்னா வாயைப் பொளந்துக்கிட்டு கேட்டுக்கறாங்க!"

"இங்கிலீஷ் தெரியாட்டா என்ன? அவர் சொன்ன யோசனை மத்தவங்களுக்குப் பிடிச்சிருந்தா அதை ஏத்துக்கறது இயல்புதானே?"

"முட்டாள் மாதிரி பேசாதேடா! நான் சொன்னதுக்கும் அவன் சொன்னதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல. நான் பேசினப்ப எருமை மாடு மேல மழை பேஞ்ச மாதிரி உக்காந்திருந்தவங்க அவன் பேசறப்ப மட்டும் கவனிச்சுக் கேக்கறாங்களே அது எப்படி?" என்றான் அரவிந்தன் கோபத்துடன்.

'அது ஏன்னு உனக்குப் புரியலேன்னா நீதான் பெரிய முட்டாள்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சாரதி, "சரி, நான் வரேன்!" என்று கிளம்பினான்.

"என்னடா கிளம்பிட்டேழ நான் முட்டாள்னு சொன்னதில கோபமா?" என்றான் அரவிந்தன் சமாதானமாக.

"நீ என்னை முட்டாள்னு சொன்னா நான் ஏன் கோவிச்சுக்கப் போறேன்? நீ என் நண்பன்தானே! அதனால கேட்டு சிரிச்சுட்டுத்தான் போவேன்.  ஆனா எனக்கு ஒரு சந்தேகம். உன் ஆஃபீஸ்ல யாராவது  வேற கருத்தைச் சொன்னா அவங்களையும் முட்டாள்னுதான் திட்டுவியா?" என்றான் சாரதி.

"எனனோட மேலதிகாரிகளை அப்படிச் சொல்ல முடியுமா?"

"அப்படின்னா  உன் சக ஊழியர்களையும், கீழே வேலை செய்யறவங்களையும் அப்படிச் சொல்லுவ!" என்றான் சாரதி சிரித்தபடி.

"இல்லை" என்று ஆரம்பித்த அரவிந்தன் சற்று தயக்கத்துக்குப் பின், "சில சமயம் அப்படிச் சொல்லி இருக்கேன்!" என்றான்.

"அரவிந்தா! நான் கம்யூனிகேஷன் ஸ்பெஷலிஸ்ட் இல்ல. எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன். நான் கவனிச்ச வரையில. நீ எதையாவது சொல்றப்ப ஒருவித அவசரத்தோடயும், அழுத்தத்தோடயும் சொல்ற. நீ சொல்றதை மத்தவங்க ஏத்துக்கணுமேங்கற கவலையோடயும் பயத்தோடயும் அப்படிப் பேசற மாதிரி எனக்குத் தோணுது. ஆனா நீ அப்படிப் பேசினா கேக்கறவங்களுக்கு அது பிடிக்காது. அதனால தங்களை அறியாமலே அவங்க உன் பேச்சில கவனம் செலுத்த மாட்டாங்க. அதனால நீ சொல்லி முடிச்சதும் நீ என சொன்னேன்னே அவங்களுக்குத் தெரிஞ்சிருக்காது. 

"ரெண்டாவது, மத்தவங்க பேசறபோது நீ அதைக் காது கொடுத்துக் கேக்கறதில்ல. குறுக்கே பேசி அவங்களை கட் பண்ணுவ. இல்லைன்னா பொறுமையில்லாம அதை முட்டாள்தனமா இருக்கு, சரியா வராதுன்னு சொல்லுவ. நீ இப்படி நடந்துக்கிறதால உன் மேல அவங்களுக்கு ஒரு எதிர்ப்பு உணர்வு வரும். அதானல, நீ பேசறதை கவனிக்கறதில அவங்க ஆர்வம் காட்ட மாட்டாங்க!"

"கம்யூனிகேஷன் எக்ஸ்பர்ட் இல்லைன்னு சொன்ன. இதையெல்லாம் எப்படிச் சொல்ற? ஏதாவது புத்தகத்தில படிச்சியா?" என்றான் அரவிந்தன். கோபப்படாமல் பொறுமையாக அவன் இப்படிக் கேட்டது சாரதி கூறியதில் உண்மை இருக்குமோ என்று அவன் யோசிப்பது போல் இருந்தது.

"புத்தகத்தில படிக்கல. உன்னோட பழகி, உன்னை கவனிச்சதில நான் புரிஞ்சுக்கிட்டது இது. இன்னொண்ணும் சொல்றேன். பரந்தாமன் பேசினா எல்லாரும் கேட்டுக்கறாங்கன்னு சொன்னியே, அவரு பொறுமையா, இனிமையாப் பேசறவரா, மத்தவங்க பேசறதை கவனமாக் கேக்கறவரா இருப்பாரு. நீ கவனிச்சுப் பாத்தா இது உனக்குப் புரியும்" என்றான் சாரதி.

அரவிந்தன் பதில் சொல்லாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 65
சொல்வன்மை

குறள் 646:
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.

பொருள்:
மற்றவர்கள் விரும்பிக் கேட்கும்படியாகப் பேசுவதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

836. முதலமைச்சரின் ஆய்வு

"முக்கியமான இலாகாவை அருணகிரிக்குக் கொடுத்திருக்காரே முதலமைச்சர்! அவரு அவ்வளவு திறமையானவரா என்ன?" என்றார் அமைச்சர் நீலமேகம்.

"இளைஞர், படிச்சவர்ங்கறதுக்காக முதல்வர் அவருக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்காருன்னு நினைக்கிறேன். அவரு திறமை எப்படி இருக்குங்கறதைப் போகப் போகத்தான் பாக்கணும்!" என்றார் இன்னொரு அமைச்சரான முருகானந்தம்.

ட்சி அமைத்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒவ்வொரு அமைச்சகத்தின் செயல்பாட்டையும் முதல்வர் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

அன்று தொழில் அமைச்சகத்தின் செயல்பாடு பற்றிய ஆய்வு.

தலைமைச் செயலர் மற்றும் தன் தனிச் செயலர் இருவரையும் அருகில் வைத்துக் கொண்ட முதல்வர், அவர்கள் இருவரும் கொடுத்திருந்த புள்ளி விவரங்களையும், குறிப்புகளையும் பார்த்துத் தொழில் அமைச்சரிடம் கேள்விகள் கேட்க, தொழில்துறை அமைச்சர் அருணகிரி, தன் அருகில் அமர்ந்திருந்த தொழில்துறைச் செயலரின் உதவியுடன் முதல்வரின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

ஆய்வு முடிந்ததும், அதிகாரிகளை அனுப்பி விட்டு, அருணகிரியை மட்டும் இருக்கச் சொன்னார் முதல்வர்.

இருவரும் தனிமையில் இருந்தபோது, "அருணகிரி! தொழில்துறை தங்களுக்குக் கிடைக்கணும்னு சில மூத்த அமைச்சர்கள் விரும்பினாங்க. தங்களோட விருப்பத்தை எங்கிட்ட தெரிவிக்கவும் செஞ்சாங்க. ஆனா நீங்க இளைஞர், படிச்சவர்ங்கறதால உங்ககிட்ட இந்தத் துறையை ஒப்படைச்சேன்!" என்று ஆரம்பித்தார் முதல்வர்.

"என்னால முடிஞ்ச அளவுக்கு சிறப்பாத்தான் செயல்பட்டுக்கிட்டிருக்கேன்!" என்றார் அருணகிரி.

முதல்வர் அருணகிரியைச் சற்று வியப்புடன் பார்த்தார்.

"இத்தனை நேரம் நடந்த ஆய்வில நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்க சொன்ன பதில்களிலிருந்தே உங்க அமைச்சகத்தோட செயல்பாடு எவ்வளவு மோசமா இருக்குன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கணும்! அது கூட உங்களுக்குப் புரியாம சிறப்பா செயல்படறேன்னு நீங்க சொல்றதைக் கேட்கறப்ப எனக்கு ஆச்சரியமா இருக்கு. உங்களுக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்தது என்னோட முட்டாள்தனம்னு இப்பதான் எனக்குப் புரியுது."

"சார்..."

"நான் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கம் சொல்றப்ப தொழில்துறைச் செயலர் அவமானத்தில நெளிஞ்சதை என்னால பார்க்க முடிஞ்சது. அவர் என்ன செய்வாரு பாவம்? அவர் சொன்ன யோசனைகளை நீங்க கேட்காம உங்க மனப்போக்குப்படி செயல்பட்டிருக்கீங்க. இதைப் பத்தி அவர் தலைமைச் செயலர்கிட்ட புலம்பி இருக்காரு. தலைமைச் செயலர் இதை எங்கிட்ட சொன்னரு. சில தொழிலதிபர்கள் எங்கிட்ட வந்து அடிப்படைப் புரிதல் கூட இல்லாம நீங்க செயல்படறதா புகார் சொன்னாங்க. இது மாதிரி புகார்கள் இருந்தும், உங்களுக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுக்கலாம்னு பொறுமையா இருந்தேன். ஆனா உங்க செயல்பாடு சரியில்லங்கறதையே நீங்க புரிஞ்சுக்காம சிறப்பா செயல்படறதா சொல்றீங்க! இந்த ஆறு மாசத்தில தொழில் வளர்ச்சிக்கு பதிலா தொழில் வீழ்ச்சிதான் ஏற்பட்டிருக்கு."

"எங்கே தப்பு பண்ணி இருக்கேன்னு பார்த்து இனிமே சரியா செயல்படறேன் சார்" என்றார் அருணகிரி, பதைபதைப்புடன்.

"அதுக்கு நேரம் இல்ல அருணகிரி. உங்க மோசமான செயல்பாட்டால உங்க பேரைக் கெடுத்துக்கிட்டதோட இந்த அரசாங்கத்துக்கும் கெட்ட பேரை வாங்கிக் கொடுத்திருக்காங்க. அதை விட முக்கியமா இந்த மாநிலத்தோட தொழில் வளர்ச்சிக்கே ஊறு விளைவிச்சிருக்கீங்க. உங்க ராஜினாமாக் கடிதத்தை இன்னிக்கே எனக்கு அனுப்பிடுங்க. நீங்க போகலாம்!" என்றார் முதல்வர்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை

குறள் 836:
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

பொருள்: 
செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Saturday, November 19, 2022

645. என்ன என்ன வார்த்தைகளோ!

"என்னங்க இவ்வளவு நேரமா பேச்சைத் தயார் பண்ணிக்கிட்டிருக்கீங்க? எப்பவும் உங்களுக்கு இவ்வளவு நேரம் ஆகாதே?" என்றாள் லட்சுமி..

அடித்து அடித்து எழுதி ஐந்தாறு தாள்களைக் கிழித்துப் போட்டிருந்த ரங்கராஜன்  "சரியா வர மாட்டேங்குதே!" என்றார்.

"எவ்வளவோ மேடைகள்ள தயாரிச்சு வச்சுக்காம நேரடியாப் பேசி இருக்கீங்க. இன்னிக்கு மட்டும் ஏன் இப்படி?"

"நான் படிச்ச விஷயங்களைப் பத்திப் பேசணும்னா கொஞ்சம் நினைவு படுத்திக்கிட்டாப் போதும். புது விஷயங்களைப் பேசணும்னா தயார் செஞ்சுதான் பேசணும்."

"சரி. எனக்கென்ன தெரியும்! ஆனா அதுக்கு ஏன் இவ்வளவு சிரமப்படறீங்க? பாயின்ட் கிடைக்கலையா?"

"வார்த்தைகள் கிடைக்கல!"

"என்ன வார்த்தை கிடைக்கலையா? உங்களுக்கு சொல்வீச்சுச் செம்மல்னு ஒரு பட்டம் உண்டே!"

"பட்டம் இருக்குதான். ஆனா, யாரா இருந்தாலும் சரியான சொற்களைப் பயன்படுத்தணும் இல்ல? சரியான சொல்லைப் பயன்படுத்தலேன்னா தப்பா ஆயிடுமே!" 

"நீங்க சொல்றது எனக்குப் புரியல. ஏதோ நீதிமன்றத்தில வாக்குமூலம் கொடுக்கற மாதிரி வார்த்தைகள் எல்லாம் ரொம்பச் சரியா இருக்கணும்னு சொல்றீங்களே! அப்படி எதைப் பத்திப் பேசப் போறீங்க?"

"ஒத்தரைப் பாராட்டிப் பேசணும்!" என்றார் ரங்கராஜன்.

"அவ்வளவுதானே! கொஞ்சம் தாராளமாவே பாராட்டற மாதிரி வார்த்தைகளைப் போட்டுட்டா சரியாப் போச்சு!" என்றாள் லட்சுமி சிரித்தபடி.

"ஏது? பேச்சாளர்களுக்கு நீயே பயிற்சி கொடுப்ப போல இருக்கே! நீ சொல்றது சரிதான். ஆனா, அது போலியான பேச்சா இருக்கும். உண்மையான பாராட்டுன்னா சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி அளவாப் பேசணும். நாம யாரைப் பாராட்டறமோ அவங்களும் சரி, கேக்கறவங்களும் சரி பாராட்டு உண்மையா, பொருத்தமா இருக்குன்னு நினைக்கணும். போதுமான அளவு பாராட்டாட்டாலும் ஏதோ பாராட்டணுங்கறதுக்காக பாராட்டற மாதிரி இருக்கும். மிகையான வார்த்தைகளைப் பயன்படுத்தினா போலின்னு தெரிஞ்சுடும். அதனாலதான் சரியான வார்த்தைகளைத் தேடிக்கிட்டிருக்கேன்."

"அடேயப்பா! பாராட்டறதில இவ்வளவு விஷயம் இருக்கா? மத்த வகைப் பேச்சக்களுக்கும் இது மாதிரி நியதிகள் இருக்கா?" என்றாள் லட்சுமி வியப்புடன்.

"எல்லா பேச்சுக்குமே இது முக்கியம். உங்கிட்ட பேசறப்ப கூட சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தணும். இல்லாட்டா நான் ஏதோ ஒப்புக்கு உனக்கு பதில் சொல்றதாகவோ இல்லை அல்லது உனக்குப் புரியாதுன்னு நினைச்சு நான் அலட்சியமாப் பேசறதாகவோ உனக்குத் தோணும்!" என்றார் ரங்கராஜன் சிரித்துக் கொண்டே.

"எனக்கு அப்படித் தோணல!" என்ற லட்சுமி தொடர்ந்து, "ஏன்னா நீங்கதான் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தறவராச்சே!" என்றாள் சிரித்துக் கொண்டே.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 65
சொல்வன்மை

குறள் 645:
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

பொருள்:
இந்தச் சொல்லை விடப் பொருத்தமான இன்னொரு சொல் இருக்காது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Friday, November 18, 2022

835. முன் செய்த வினை?

"என்னடா, சாரதா என்ன சொல்றா?" என்றாள் பார்வதி.

"என்ன சொல்லுவா? எப்பவும் பேசற மாதிரி திமிராத்தான் பேசறா? மறுபடி இங்க வர மாட்டாளாம்!" என்றான் மணிகண்டன்.

"ஏண்டா, பொதுவா மாமியார்-மருமகளுக்குத்தான் ஒத்து வராது. இங்கே என்னடான்னு எங்களுக்குள்ள ஒரு பிரச்னையும் இல்ல. ஆனா உன்னால உன் மனைவியோட அனுசரிச்சுப் போக முடியல!"

"எல்லாம் என் தலையெழுத்து! அவளுக்கு சம்பாதிக்கிறோங்கற திமிரு. அதனால என்னை நம்பி இருக்க வேண்டாங்கற மிதப்பில இப்படி நடந்துக்கிறா."

"நான் சொல்றதைக் கேளு. சாரதா நல்ல பொண்ணு. என்னை நல்லாத்தான் பாத்துக்கிட்டா. வேலைக்குப் போனாலும் குழந்தைக்கு வேண்டியதை செஞ்சுக்கிட்டிருந்தா. ஏன் உன்னைக் கூட நல்லாதான் கவனிச்சுக்கிட்டிருந்தா. நீ தேவையில்லாம அவளோட சண்டை போட்டு அவ கோவிச்சுக்கிட்டு அவ அம்மா வீட்டுக்குப் போற அளவுக்குக் கொண்டு விட்டுட்ட."

"எல்லாத்துக்கும் நான்தான் காரணமா? அவளாலதான் என்னை அனுசரிச்சுப் போக முடியல!"

";நிறுத்துடா. நீ ஆஃபீஸ்ல உன் மேலதிகாரியோட சண்டை போட்டதால உன் வேலை போச்சு. அது எவ்வளவு நல்ல கம்பெனி! இப்ப அந்த வேலை போனப்பறம் ஒரு சின்ன கம்பெனியில குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யற. நான் கூட உன் மேலதிகாரிதான் இதுக்குக் காரணம்னு நீ சொன்னதை நம்பினேன். ஆனா நீ சாரதாவோட சண்டை போட்டு அவ வீட்டை விட்டுப் போனதைப் பாத்தப்பறம் உங்கிட்டதான் தப்பு இருக்குன்னு தோணுது!"

"எங்கிட்ட என்ன தப்பு இருக்கு?"

"உங்கிட்ட என்ன தப்பு இருக்குன்னு தெரியாம இருக்கறதுதான் உன் பிரச்னைகளுக்குக் காரணம். உனக்கு மத்தவங்களை அனுசரிச்சுப் போகத் தெரியல. மத்தவங்ககிட்ட குற்றம் கண்டுபிடிக்கிறது, அவங்களைத் தூக்கி எறிஞ்சு பேசறது இதைத்தான் நீ எல்லார்கிட்டேயும் செஞ்சிக்கிட்டிருக்க. இதனால எல்லாம் என்ன விளைவுகள் ஏற்படும்னு யோசிக்காம திரும்பத் திரும்ப அதே மாதிரி நடந்துக்கிற. அதனால உனக்கு ஏற்படுகிற பிரச்னைகள்ளேந்து பாடம் கத்துக்காம  திரும்பத் திரும்ப அதே தப்பைப் பண்ணிக்கிட்டிருக்க. அதனால உனக்கு மறுபடியும் பிரச்னைகள் வந்துக்கிட்டிருக்கு!" என்றாள் பார்வதி.

"என்ன செய்யறது? எத்தனை ஜன்மங்கள்ள செஞ்ச பாவமோ தெரியல. என் வாழ்க்கை நரகமா அமைஞ்சுடுச்சு!" என்று தலையில் அடித்துக் கொண்டான் மணிகண்டன்.

"முன் ஜன்மங்கள்ள செஞ்ச பாவம் எல்லாம் எதுவும் இல்ல. இந்த ஜன்மத்தில நீ முட்டாள்தனமா நடந்துக்கிட்டதுதான் இதற்கெல்லாம் காரணம்! நினைச்சுப் பாரு. உனக்குக் கிடைச்ச நல்ல வேலை போகும்படி நடந்துக்கிட்டது, மனைவியையும், குழந்தையையும் பிரிஞ்சு வாழ்ந்துக்கிட்டு வயசான என்னைத் தனியா பாத்துக்க முடியாம கஷ்டப்படறது இதெல்லாம் நீயா வரவழைச்சுக்கிட்டதுதானே?" என்றாள் பார்வதி.

தாய் கூறுவதை ஏற்றுக் கொள்ள மறுப்பது போல் மணிகண்டன் தலையைப் பக்கவாட்டில் ஆட்டினான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை

குறள் 835:
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.

பொருள்: 
அறிவற்றவனாக இருப்பவன் ஏழு பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்தைத் தன் ஒரு பிறவியிலேயே ஏற்படுத்திக் கொள்வான்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...