Saturday, January 21, 2023

857. கணவனுக்கு ஆறுதல்!

"கல்யாணம் ஆகிப் பத்து வருஷம் ஆகுது. இன்னும் எங்க வீட்டு மனுஷங்ககிட்ட விரோதம் பாராட்டிக்கிட்டிருக்கீங்களே, இது உங்களுக்கே தப்பாத் தெரியலையா?" என்றாள் சுகந்தி கோபத்துடன்.

"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? உங்க வீட்டு மனுஷங்க அப்படி இருக்காங்க!" என்றான் பத்ரி.

"எப்படி இருக்காங்க?"

"உன் தங்கை கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிட்டு அவமானப்படுத்தினாங்களே, அதை நான் எப்படி மறக்க முடியும்?"

"இங்கே பாருங்க உங்களை அவமானப்படுத்தணும்னு யாரும் நினைக்கல. கல்யாணத்தில நிறைய பேரு இருக்கறப்ப உங்களை சரியா கவனிக்காம இருந்திருக்கலாம். அதுகூட சரியா கவனிக்கலேன்னு நீங்க சொல்றீங்க! அப்படி என்ன கவனிக்காம விட்டுட்டாங்கன்னு உங்களுக்குத்தான் வெளிச்சம்! அப்படியும் எங்கப்பா உங்ககிட்ட வந்து மன்னிப்புக் கேட்டாரே, அப்புறம் என்ன?"

"செய்யறதையெல்லம் செஞ்சுட்டு மன்னிப்புக் கேட்டுட்டா எல்லாம் சரியாயிடுமா? என்னை மதிக்கலேங்கறதால நான் ஒதுங்கி இருக்கேன். அதில யாருக்கு என்ன கஷ்டம்?" என்றான் பத்ரி.

"உங்க தங்கை வீட்டுக்காரர் இருக்காரே, அவரு நம்மகிட்ட எவ்வளவு இயல்பா நடந்துக்கிறாரு!"

"அவனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை நான் கொடுக்கறேன். அதோட அவனுக்கு சொரணை கிடையாது. யாராவது சாப்பாடு போடறாங்கன்னு சொன்னா முதல்ல போய் உக்காந்துடுவான்!"

"உங்க தங்கை வீட்டுக்காரரைப் பத்தி இவ்வளவு இழிவாப் பேசறீங்களே, இது அவரை அவமானப்படுத்தறது இல்லையா?"

"அவன் இல்லாதப்பதானே சொல்றேன்! அவனைப் பத்தின பேச்சு இப்ப எதுக்கு? உங்க வீட்டு விழாவுக்கு நான் வரல. நீ மட்டும் போயிட்டு வா. அவ்வளவுதான்!" என்று விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தான் பத்ரி.

"எப்படியோ போங்க! நீங்க எப்பதான் மாறப் போறீங்களோ?" என்றாள் சுகந்தி ஆயாசத்துடன். 

ரண்டு நாட்களுக்குப் பிறகு சுகந்தி தன் பெற்றோர் வீட்டு விழா முடிந்து திரும்பிய போது, பத்ரி சோர்வுடன் வீட்டில் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்.

"என்னங்க? இன்னிக்கு ஆஃபீஸ் போகலியா? ஏன் ஒரு மாதிரரி இருக்கீங்க? உடம்பு சரியில்லையா?" என்றபடியே பத்ரியின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள் சுகதி.

"உடம்புக்கு ஒண்ணுமில்ல. எனக்கு ஆஃபீஸ் போகப் பிடிக்கல. இந்த வருஷமும் எனக்கு ப்ரொமோஷன் கிடைக்கல!" என்றான் பத்ரி சோர்வுடன்.

"விடுங்க. உங்க அருமை உங்க மேலதிகாரிகளுக்குப் புரியல. அடுத்த வருஷம் கண்டிப்பாக் கிடைக்கும். கவலைப்படாதீங்க!" என்றாள் சுகந்தி அவன் தோள் மீது அறுதலுடன் தன் கையை வைத்தபடி.

'நீங்க இப்படி எல்லோர்கிட்டயும் விரோதம் பாராட்டிக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டிருந்தீங்கன்னா உங்களுக்கு எப்படி நல்லது நடக்கும்?' என்று தன் மனதில் தோன்றிய எண்ணத்தை சுகந்தி பத்ரியிடம் கூறவில்லை!

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல்

குறள் 857:
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.

பொருள்: 
பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறிய மாட்டார்கள்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Friday, January 20, 2023

856. மீண்டும் வருக!

"சார்! லக்ஷ்மி என்டர்பிரைசஸ்ல மறுபடி ஆர்டர் கொடுத்திருக்காங்க!" என்றான் கணேசன்.

"போன தடவை சப்ளை பண்ணினப்ப குவாலிடி சரியா இல்லேன்னு கம்ப்ளைன் பண்ணிட்டு இப்ப ஏன் மறுபடி கேக்கறாங்க?" என்றார் மதிவாணன் கோபத்துடன்.

"அதான் நம்ம கெமிஸ்டை அனுப்பி அவங்க கெமிஸ்ட் முன்னாலேயே டெஸ்ட் பண்ணிக் காட்டி குவாலிடி சரியாதான் இருக்குன்னு நாம நிரூபிச்சப்பறம் அவங்க கெமிஸ்ட் டெஸ்ட் பண்ணினதிலதான் ஏதோ தப்பு நடந்திருக்குன்னு ஒத்துக்கிட்டாங்களே சார்!"

"நம்மகிட்ட தப்பு இல்லேன்னு நாம போய் நிரூபிச்சுக் காட்டினதும் ஒத்துக்கிட்டாங்க. இந்தத் தடவையும் குத்தம் சொன்னா? ஒவ்வொரு தடவையும் நம்ம கெமிஸ்டை அனுப்பி நம்ம குவாலிடி சரியா இருக்குன்னு அவங்ககிட்ட நிரூபிச்சுக்கிட்டிருக்க முடியாது!"

"சார்! நானும் இதை அவங்ககிட்ட கேட்டேன். ஒரு தடவை ஏதோ தப்பு நடந்துடுச்சு, இனிமே இப்படி நடக்காதுன்னு அவங்க புரொப்ரைட்டரே எங்கிட்ட சொன்னாரு. அவங்க நல்ல பார்ட்டி. பில்லுக்கெல்லாம் சரியான நேரத்தில பணம் கொடுத்துடறாங்க. இந்த ஒரு தடவை சப்ளை பண்ணிப் பாக்கலாமே! இன்னொரு தடவை பிரச்னை பண்ணினா அப்புறம் நிறுத்திடலாம்!" என்றான்கணேசன்.

"நம்ம ப்ராடக்டைப் பத்தி தப்பா சொன்னவங்களுக்கு சப்ளை பண்றதில எனக்கு இஷ்டம் இல்ல!" என்றார் மதிவாணன் பிடிவாதமாக.

"ஏம்ப்பா! மதிவாணனுக்கு வலது கை மாதிரி இருந்தே! அவரும் உனக்கு நல்ல சம்பளம் கொடுத்து உன்னை நல்லாத்தானே வச்சுக்கிட்டிருந்தாரு! ஏன் அவர் கம்பெனியிலேந்து விலகிட்ட?" என்றான் கணேசனின்நண்பன் கிட்டு.

"மதிவாணனோட எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஆனா அவர் எல்லார்கிட்டேயும் விரோதம் பாராட்டறாரு. கஸ்டமர்கிட்டயோ, சப்ளையர்கிட்டயோ ஒரு சின்ன பிரச்னை வந்தா கூட அவங்களை விரோதிகளா நினைச்சு அவங்களோட வியாபாரம் வச்சுக்காம வெட்டி விட்டுடறாரு. நான் அவர்கிட்ட எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். அவர் கேக்கல. இது மாதிரி இருந்தா அவர் கம்பெனி ரொம்ப நாளைக்கு ஓடாதுன்னு எனக்குத் தோணிச்சு. அதான் வேற ஒரு நல்ல வாய்ப்பக் கிடைச்சதும் வந்துட்டேன். அவருக்கு வருத்தம்தான். ஆனா நான் என் எதிர்காலத்தைப் பாக்கணும் இல்ல?" என்றான் கணேசன்.

"ஆனா இனிமே அவர் உன்னையும் தன்னோட எதிரியா நினைக்க ஆரம்பிச்சுடுவாரு!"

"உண்மைதான். அதை நினைச்சாத்தான் எனக்கு வருத்தமா இருக்கு!" என்றான் கணேசன்.

ன்று கணேசனுக்கு மதிவாணனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பல மாதங்களுக்குப் பிறகு அவர் தன்னை அழைத்தது மணேசனுக்கு வியப்பாக இருந்தது.

"எப்படி இருக்கீங்க சார்?"என்றான் கணேசன்.

"கணேசன்! நீங்க சொன்னப்ப நான் கேக்கல. சில நல்ல கஸ்டமர்களையும், சப்ளையர்களையும் விட்டப்பறம் வியாபாரம் ரொம்பக் குறைஞ்சுடுச்சு. கம்பெனியைத் தொடர்ந்து நடத்த முடியுமான்னே தெரியல. நீங்க திரும்ப இங்கே வரணும்!" என்றார் மதிவாணன்.

"என்னால என்ன சார் செய்ய முடியும்?" என்றான் கணேசன்.

"நான் விரோதிச்சுக்கிட்டவங்களை நான் திரும்பப் போய்க் கூப்பிட்டா அவங்க வர மாட்டாங்க. ஆனா நீங்க பேசினா அவங்க சமாதானம் ஆகலாம். இனிமே நான் முழு நிர்வாகத்தையும் உங்ககிட்டயே விட்டுடறேன். நான் எதிலியுமே தலையிடப் போறதில்ல. உங்க அணுகுமுறைதான் சரியானது. உங்களால நிச்சயமா எல்லாத்தையும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும். நீங்கதான் எனக்கு உதவி செய்யணும்!" என்றார் மதிவாணன் இறைஞ்சும் குரலில்.

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று கணேசன் யோசித்தான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல்

குறள் 856:
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.

பொருள்: 
பிறருடன் மன வேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Thursday, January 19, 2023

667. பயணியின் மீது பரிதாபம்!

அந்த சொகுசு பஸ்ஸில் சீட்டின் கீழ்ப்புறத்தை மேலே மடக்கி அதில் கால்களை நீட்டியபடி வைத்துக் கொண்டு, இருக்கையின் பின்புறத்தைச் சாய்த்து அதில் சாய்ந்து கொண்டான் தினகர்.

"அப்பா! முதுகுவலி வந்துடும் போலருக்கு. இதுக்கு உக்காந்துக்கிட்டே வரலாம்!" என்று அலுத்துக் கொண்டான் தினகர்.

"அதனாலதான் நான் சீட்டைக் கூடப் பின்னால சாய்ச்சுக்காம நேரேயே உக்காந்துக்கிட்டிருக்கேன். இந்த செமி ஸ்லீப்பர் பஸ்னா இப்படித்தான். ஒண்ணு ஸ்லீப்பர்ல வரணும், இல்லேன்னா உக்காந்துக்கிட்டு வரதே உத்தமம்!" என்றான் அவன் நண்பன் அருண்.

"உனக்கும் எனக்கும்தான் இந்தப் பிரச்னை! அங்கே பாரு அண்ணன் எவ்வளவு வசதியா சொகுசா உக்காந்திருக்காருன்னு!" என்று அருணின் காதில் கூறிய தினகர் அவர்கள் இருக்கைகளுக்குப் பக்கத்தில் இருந்த வரிசையைக் காட்டினான். 

அந்த வரிசையில் ஓர இருக்கையில் அமர்ந்திருந்த நபர் தினகரனைப் போலவே காலை நீட்டவும் முடியாமல், மடக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, தினகரனால் 'அண்ணன்' என்று குறிப்பிடப்பட்ட நபர் ஜன்னலோர இருக்கையில் சுகமாக அமர்ந்திருந்தார்.

அவர் உயரம் சிறிது என்பதால் அவர் கால்கள் நீட்டப்பட்ட இருக்கைக்குள் அடங்கி விட்டன.

"அவன் காலை நீட்டினப்பறம் மீதி இருக்கிற இடத்தில ஒத்தர் உக்காரலாம் போல இருக்கே!" என்றான் அருண் மெதுவாகச் சிரித்தபடி.

"பொம்மைக்கு பேண்ட் சட்டை போட்ட மாதிரி இருக்கு. பாவம் இவனை மாதிரி ஆளுக்கெல்லாம் வாழ்க்கை ரொம்ப கஷ்டம்தான். யாரும் வேலைக்கு எடுத்துக்க மாட்டாங்க. யாரையாவது நம்பித்தான் வாழ்க்கையை நடத்தணும்!" என்றான் தினகரன்.

"நீதான் அவன் வாழ்க்கையை நினைச்சுக் கவலைப்படற. அவன் என்னடான்னா காலை நீட்டினதுமே கண்ணை மூடிக்கிட்டுத் தூங்க ஆரம்பிச்சுட்டான் பாரு!" 

"பாவம்! நல்லா தூங்கவாவது செய்யட்டுமே!"

காலையில் பேச்சுக் குரல்கள் கேட்டுக் கண்விழித்த தினகர், பஸ் நின்று கொண்டிருப்பதையும், பயணிகள் இறங்கிக் கொண்டிருப்பதையும் பார்த்து அருணை எழுப்பினான். "டேய்,  முழிச்சுக்கடா! இறங்கணும்."

அநேகமாக எல்லோருமே இறங்கி விட்ட பிறகு, இருவரும் இருக்கையை விட்டு எழுந்தனர்.

அப்போதுதான் பக்கத்து வரிசை இருக்கையில் அந்த நபர் இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதையும், அவருக்கு அருகே இருவர் நின்று கொண்டு, "சார்1 சார்!" என்று அழைத்து அவரை எழுப்பிக் கொண்டிருப்பதையும் கவனித்தான் தினகர்.

"அசந்து தூங்கறார் போல இருக்கு. நீங்க கூப்பிடறது அவருக்குக் காதில விழல. நீங்க வேற ரொம்ப மெதுவாப் பேசறீங்க! தட்டி எழுப்புங்க. அப்பதான் எழுந்திருப்பாரு!" என்றான் தினகர்.

"அப்படிச் செய்ய முடியாது சார்! அவர் எங்க எம் டி!" என்றார் அந்த இருவரில் ஒருவர்.

"எம் டி.யா?"

"ஆமாம் சார்! ரம்யா டெக்ஸ்டைல்ஸ்னு இந்த ஊர்லேயே பெரிய கம்பெனி இவரோடதுதான்!" என்று அவர் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தபோதே கண் விழித்த எம் டி, "ஓ! ஊர் வந்துடுச்சா! மேல என் பிரீஃப்கேஸ் இருக்கு. எடுத்துக்கங்க!" என்று அதிகாரமாகக் கூறியபடியே பஸ்ஸை விட்டு இறங்கினார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்

குறள் 667:
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

பொருள்:
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Wednesday, January 11, 2023

666. சின்ன நோட்டு, பெரிய நோட்டு!

கல்லூரி ஆண்டுவிழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தொழிலதிபர் சச்சிதானந்தம், "நான் ஏதோ வாழ்க்கையில பெரிசா சாதிச்சுட்டதா நினைச்சு என்னை இங்கே பேசக் கூப்பிட்டிருக்கீங்க! ஆனா நான் ஒண்ணும் பெரிசா சாதிக்கல!" என்று ஆரம்பித்தார்.

அடுத்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை மாணவர்கள் ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தனர்.

சச்சிதானந்தம் தான் மேஜை மீது வைத்திருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பிரித்துக் காட்டினார்.

"இதெல்லாம் நான் செய்ய வேண்டுமென்று நினைத்த விஷயங்கள். ஆனால் இவற்றில் தொண்ணூற்றொன்பது சதவீதத்தை என்னால் செய்ய முடியவில்லை,"

இப்போது அவர் தன் சட்டைப்பையிலிருந்து ஒரு பாக்கெட் நோட்டை எடுத்தார்.

 "ஆனால் இதில் எழுதி இருக்கிற விஷயங்களில் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே செய்து முடித்து விட்டேன். நீங்கள் என்னை இங்கே அழைத்துப் பேச வைத்திருப்பதற்குக் கராணம் இந்த பாக்கெட் நோட்புக்தான்!" என்று சொல்லி நிறுத்தினார் சச்சிதானந்தம்.

"இரண்டு நோட்டுகளுக்கும் என்ன வித்தியாசம்? நான் முதலில் காட்டிய பெரிய நோட்டில் நான் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று நினைத்தேனோ அத்தனையையும் எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அவற்றைச் செய்ய நான் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை! ஆனால் அந்தப் பட்டியலிலிருக்கும் சிலவற்றை  முக்கியமானவையாக நினைத்து இந்த பாக்கெட் நோட்டில் எழுதினேன். அவற்றைச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். அதனால்தான் அவற்றில் பெரும்பாலானவற்றை என்னால் நிறைவேற்ற முடிந்தது."

மாணவர்களின் முகங்களைப் பார்த்தார் சச்சிதானந்தம். அவர்கள் ஆர்வமாக கவனிப்பதைக் கண்டதும், மேலும் தொடர்ந்தார்.

"எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை, நீங்கள் எவற்றையெல்லாம் நினைக்கிறீர்களோ அவை எல்லாம் நிறைவேறும் என்று சிலர் சொல்வார்கள். நாம் நினைப்பவை எல்லாமே நிறைவேற மாட்டா. ஆனால் நாம் நினைப்பவற்றைச் செயல்படுத்த நினைத்து அவற்றுக்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நாம் நினைப்பவற்றில் பலவற்றை நிறைவேற்ற முடியும். நீங்கள் நினைப்பவை இந்தப் பெரிய நோட்டில் இருப்பவை போல. அவை வெறும் எண்ணங்களாகத்தான் இருக்கும். எந்த எண்ணங்களை நிறைவற்ற நாம் உறுதியுடன் செயல்படுகிறோமோ அவை இந்த சின்ன நோட்டில் இருப்பவை போல. அவைதான் நிறைவேறும்."

சச்சிதானந்தம் பேசி முடித்ததும் மாணவர்கள் உற்சாகமாகக் கைதட்டினர்.

"என்னங்க பால் கணக்கு எழுதி வச்சிருந்தேனே ஒரு பாக்கெட் நோட்டு அதைப் பாத்தீங்களா?" என்றாள் பார்க்கவி.

"நான்தான் எடுத்துட்டுப் போனேன். இந்தா!" என்று தன் கைப்பையிலிருந்த நோட்டை எடுத்து மனைவியிடம் கொடுத்த சச்சிதானந்தம், ஒரு பெரிய நோட்டை எடுத்து, "இந்தா! இது ரமேஷ் கதை எழுதறதுக்கான ஐடியா எல்லாம் குறிச்சு வச்சிருக்கற நோட்டு. அவன் மேஜையிலேந்து எடுத்தேன். அங்கேயே வச்சுடு!" என்று சொல்லி மனைவியிடம் கொடுத்தார்.

"காலேஜில பேசப் போறதுக்கு இந்த ரெண்டு நோட்டையும் எதுக்கு எடுத்துக்கிட்டுப் போனீங்க? இதில ஏதாவது குறிப்பு எழுதிக்கிட்டுப் போனீங்களா என்ன?" என்றபடியே தன் பால் கணக்கு நோட்டைப் பிரித்துப் பார்த்தாள் பார்க்கவி.

"குறிப்பெல்லாம் எதுவும் எழுதல. மாணவர்கள்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன். அதை வெறும் பேச்சில சொன்னா சும்மா கேட்டுக்கிட்டுப் போயிடுவாங்க. கொஞ்சம் டிராமாடிக்கா ஏதாவது செஞ்சா அது அவங்க மனசில பதியும்னு நினைச்சேன். இந்த ரெண்டு நோட்டையும் மேஜையில பார்த்தப்ப ஒரு யோசனை தோணிச்சு. அதான் டக்குனு ரெண்டையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டேன்!" என்று சொல்லிச் சிரித்தார் சச்சிதானந்தம்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்

குறள் 666:
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

பொருள்:
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Tuesday, January 10, 2023

665. குடியரசுத் தலைவரிடமிருந்து ஒரு கடிதம்

"ஏம்ப்பா உங்கிட்ட நிறையத் திறமை இருக்கு. உனக்கு நான் நல்ல சம்பளம் கொடுக்கறேன். இன்னும் அதிகமா வேணும்னாலும் கொடுக்கறேன். வேலையை விட்டுப் போகாதே!" என்றார் பொன்னம்பலம்.

"இல்லை சார்! சம்பளத்துக்காக இல்லை. நீங்க என் திறமையை அங்கீகரிச்சு எனக்கு அதிக சம்பளம் கொடுத்து ஊக்கப்படுத்தறீங்க. அதுக்காக நான் உங்ககிட்ட எப்பவும் நன்றியோட இருப்பேன். ஆனா, நான் சொந்தமாத் தொழில் செய்யலாம்னு பாக்கறேன்" என்றான் அன்பரசன்.

"சொந்தத் தொழில் செய்யறது ரொம்ப கஷ்டம்ப்பா. என் அனுபவத்தில இருந்து சொல்றேன். ஆரம்பத்தில முதலீடு செய்யறதைத் தவிர, கையில நிறையப் பணம் இருந்தாத்தான் தொழில்ல ஏற்படற நெருக்கடிகளை சமாளிக்க முடியும்!"

"புரியுது சார். ஒரு சின்ன லேத் பட்டறை விலைக்கு வருது. மெஷின் எல்லாம் நல்ல கண்டிஷன்ல இருக்கு. நான் செக் பண்ணிப் பாத்துட்டேன். ரொம்ப குறைஞ்ச விலைக்கு வருது. நான் கொஞ்சம் பணம் சேத்து வச்சிருக்கேன். அதை வச்சு அந்தப் பட்டறையை வாங்கி, முதல்ல ஜாப் ஒர்க் எடுத்துக்கிட்டு ஓட்டலாம்னு இருக்கேன். நீங்க கூட எனக்கு ஏதாவது வேலை கொடுத்து உதவலாம் சார்!" என்றான் அன்பரசன்.

"வாழ்த்துக்கள்! நீ நல்லா வருவே!" என்றார் வாழ்த்தினார் பொன்னம்பலம்.

று மாதங்களுக்குப் பிறகு, அன்பரசனைத் தொலைபேசியில் அழைத்த பொன்னம்பலம், "என்னப்பா! தொழில் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?" என்றார்.

"நீங்க சொன்னது சரிதான் சார். கஷ்டமாத்தான் இருக்கு. ஜாப் ஒர்க்ல அதிக வருமானம் வரல. பெரிய கம்பெனிகளுக்கு ஏதாவது காம்பொனன்ட் தயாரிச்சுக் கொடுத்தாதான் ஓரளவு வருமானம் வரும்னு தோணுது. ஆனா அதுக்கு முதலீடு வேணும். அதான் எப்படிச் செய்யறதுன்னு யோசிக்கறேன்!" என்றான் அன்பரசன்.

"நீ எப்ப வந்தாலும் உன்னை நான் திரும்பவும் வேலையில சேத்துக்கத் தயாரா இருக்கேன். உனக்கு மறுபடி இங்கே வந்து வேலையில சேரத் தயக்கம் இருந்தா சொல்லு. நான் எனக்குத் தெரிஞ்ச வேற ஏதாவது நிறுவனத்தில உனக்கு வேலை வாங்கித் தரேன்!"

"நீங்க என் மேல வச்சிருக்கற அன்புக்கு நான் உங்களுக்கு ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன் சார்! ஆனா நான் எப்படியாவது கஷ்டப்பட்டுத் தொழிலைத் தொடர்ந்து நடத்தறதில உறுதியா இருக்கேன்!" என்றான் அன்பரசன்.

சில மாதங்களுக்குப் பிறகு பொன்னம்பலத்தைத் தொலைபேசியில் அழைத்த அன்பரசன், "சார்! தைரியமா போய் ஒரு பெரிய கம்பெனியிலேந்து ஒரு காம்பொனன்ட்டுக்கு ஆர்டர் வாங்கிட்டேன். அப்புறம் அதை ஒரு சப்ளையர்கிட்ட காட்டிக் கடனுக்கு மெடீரியல்ஸ் வாங்கி அந்த காம்பொனன்ட்டைத் தயாரிச்சு ஆர்டரை நிறைவேத்திட்டேன். ஒரு மாசத்தில பணம் வந்துடும். அதுக்கப்பறம் சப்ளையருக்குப் பணத்தைக் கொடுத்துடுவேன். அவர் தொடர்ந்து எனக்குக் கடன்ல மெடீரியல்ஸ் சப்ளை பண்றதாச் சொல்லி இருக்காரு!" என்றான் அன்பரசன் உற்சாகத்துடன்.

"ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. நீ நிச்சயமா பெரிய தொழிலதிபரா வருவே!" என்று வாழ்த்தினார் பொன்னம்பலம்.

அதற்குப் பிறகும் பலமுறை பொன்னம்பலத்தைத் தொலைபேசியில் அழைத்து தான் சந்தித்து வரும் பிரச்னைகளைப் பற்றியும், வேறு சமயங்களில் தன்னுடைய முன்னேற்றங்களையும் பற்றிக் கூறி வந்தான் அன்பரசன்.

ப்போது அன்பரசன் ஒரு பெரிய தொழிலதிபராகி விட்டான். பல வருடங்கள் ஆகியும் தன் முன்னேற்றங்களைப் பற்றியும், தனக்கு ஏற்படும் பிரச்னைகள், தான் அவற்றைச் சமாளித்த விதம் ஆகியவை பற்றியும் அவ்வப்போது பொன்னம்பலத்திடம் பகிர்ந்து கொண்டிருந்தான் அவன்.

குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வந்த அந்தக் கடித்ததைச் சற்று வியப்புடனும், பதட்டத்துடனும் பிரித்தான் அன்பரசன். நாடு முழுவதிலுமிருந்தும் தொழில்துறையில் சாதித்தவர்கள் ஐம்பது பேரை குடியரசுத் தலைவர் கௌரவித்து விருது அளிக்கப் போவதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் அன்பரசனும் ஒருவன் என்றும் அந்தக் கடிதம் அறிவித்தது.

இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பொன்னம்பலத்திடம் பகிர்ந்து கொள்ள நினைத்து அவரைத் தொலைபேசியில் அழைத்தான் அன்பரசன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்

குறள் 665:
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.

பொருள்:
செயல் திறனால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனையும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Saturday, January 7, 2023

855. மனக்கசப்பு நீங்கியது

"அனந்தமூர்த்தின்னு உங்களுக்கு ஒரு நண்பர் இருக்காரா என்ன? இத்தனை நாளா நீங்க அவரைப் பத்திச் சொன்னதே இல்லையே!" என்றாள் மல்லிகா.

"நெருங்கின நண்பர் இல்ல. என்னோட வேலை செய்யறவர்" என்றான் பரமசிவம்.

"குழந்தை பொறந்து மூணு மாசமாச்சுன்னு சொல்றீங்க. முன்னாடியே போய்ப் பாத்திருக்கலாமே!"

"குழந்தை பொறந்த உடனேயே எல்லோரும் போய்ப் பார்ப்பாங்க. நாம கொஞ்சம் நிதானமாப் போய்ப் பாக்கலாமேன்னுதான் போகல. கிளம்பு. போய்ப் பார்த்துட்டு வந்துடலாம்."

"போகும்போது குழந்தைக்கு ஒரு டிரஸ் வாங்கிக்கிட்டுப் போயிடலாம்!" என்றாள் மல்லிகா.

"குழந்தையைப் பார்த்து விட்டு வந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. உங்க நண்பரோட மனைவி எங்கிட்ட ரொம்ப நல்லாப் பழகினாங்க. உங்க நண்பருக்கும் ரொம்ப சந்தோஷம்னு நினைக்கிறேன். குழந்தையைப் பார்க்க நாம வருவோம்னு அவர் எதிர்பார்க்கல போல இருக்கு!" என்றாள் மல்லிகா.

"ஆமாம். நாங்க ரொம்ப நெருக்கமான நண்பர்கள் இல்லேன்னு சொன்னேனே! உண்மையில அவர் குழந்தையைப் பார்க்கப் போகணும்னு நான் திடீர்னுதான் முடிவெடுத்தேன்!" என்றான் பரமசிவம்.

"ஏன் அப்படி?" என்றாள் மல்லிகா வியப்புடன்.

"கொஞ்ச நாள் முன்னால அலுவலகத்தில எனக்கும் அனந்தமூர்த்திக்கும் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அது முடிஞ்சு போனப்பறம் கூட எங்களுக்குள்ள ஒரு மனக்கசப்பு இருந்துக்கிட்டே இருந்தது. இதைச் சரி செய்ய என்ன செய்யலாம்னு யோசிச்சேன். அலுவலகத்திலேயே அவரோட சுமுகமா இருக்க முயற்சி செஞ்சேன். ஆனா அதுக்கும் மேலே ஏதாவது செய்யணும்னு தோணிச்சு. அப்பதான் ரெண்டு மூணு மாசம் முன்னால அவருக்குக் குழந்தை பிறந்திருந்த விஷயம் நினைவு வந்தது. அதனால அவர் குழந்தையைப் பார்த்துட்டு வந்தா அதன் மூலமா அவரோட நல்லுறவு ஏற்பட்டு எங்களுக்குள்ள இருக்கற மனக்கசப்பைப் போக்கிக்கலாம்னு நினைச்சேன். நான் நினைச்ச மாதிரியே எங்களுக்குள்ள இருந்த மன வேறுபாடு இப்போ நீங்கிடுச்சு!" என்றான் பரமசிவம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல்

குறள் 855:
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.

பொருள்: 
தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Monday, January 2, 2023

854. ரகுவுக்கு ஏன் கோபம் வரவில்லை?

"புரிஞ்சுதா? இதையெல்லாம் சரியா ஃபாலோ பண்ணணும். இல்லேன்னா உங்களுக்கும் பிரச்னை, மற்றவங்களுக்கும் பிரச்னை!" என்று அதிகார தொனியில் கூறி விட்டு அகன்றார் குடியிருப்பு சங்கத்தின் செயலாளர் ராமநாதன்.

வாசற்படியிலிருந்து உள்ளே திரும்பிய மணிகண்டன் "எப்படிப் பேசிட்டுப் போறாரு பாரு! ஏதோ நாம இவர்கிட்ட சம்பளத்துக்கு வேலை செய்யற ஆட்கள் மாதிரி. அவங்களைக் கூட அவங்க முதலாளியால இப்படியெல்லாம் பேச முடியாது! இவரு அசோசியேஷன் செகரட்டரி, நான் இங்கே வாடகை கொடுத்துக் குடியிருக்கறவன். எங்கிட்ட இப்படியெல்லாம் பேச இவருக்கு என்ன அதிகாரம் இருக்குழ. ஹவுஸ் ஓனர்கிட்ட சொல்லி அசோசியேஷன்ல புகார் கொடுத்து இவரை மாத்தச் சொல்றேன் பாரு!" என்றான் மனைவியிடம் கோபத்துடன்.

சில நாட்கள் கழித்து வாசலில் செயலாளர் யாரிடமோ கோபமாகப் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. மணிகண்டன் வாசலில் எட்டிப் பார்த்தபோது அடுத்த ஃபிளாட்டில் வசிக்கும் ரகுவிடம்தான் அவர் ஏதோ கத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. ரகு மெதுவான குரலில் அவருக்கு ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

செயலாளர் சென்றதும் மணிகண்டன் தன் வீட்டுக்கு வெளியே வந்தான். தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ரகு அவனைப் பார்த்துச் சிரித்தார்.

"என்ன சார் இவரு இப்படிக் கூச்சல் போடறாரு? செகரட்டரின்னா என்ன வேணும்னாலும் பேசலாமா? நானாவது வாடகைக்குக் குடி இருக்கறவன். நீங்க வீட்டுச் சொந்தக்காரர் ஆச்சே!அதுக்காகவாவது ஒரு மதிப்புக் கொடுக்க வேண்டாம?" என்றான் மணிகண்டன் ரகுவிடம்.

"வீட்டுச் சொந்தக்காரரா இருந்தா என்ன, வாடகைக்குக் குடி இருப்பவரா இருந்தா என்ன? அவரைப் பொருத்தவரையில இந்தக் கட்டிடப் பராமரிப்பு அவர் பொறுப்பு. எங்கே தப்பு நடந்தாலும் கேக்கத்தான் செய்வாரு. என் வீட்டில ஒரு சின்ன லீக் இருக்கு. நானே அதை கவனிக்கல. என் வீட்டிலேந்து வெளியே போற தண்ணிக் குழாயில ரொம்ப நேரமா தண்ணி போய்க்கிட்டிருக்கறதைப் பாத்துட்டு வந்து கேட்டாரு. அப்பதான் நான் லீக் இருக்கறதை கவனிச்சேன். உடனே சரி பண்ணிடறேன்னு சொன்னேன். சரின்னுட்டுப் போயிட்டாரு!" என்றார் ரகு.

"ஓ, அதுக்குத்தான் 'உங்களை மாதிரி'யானவங்களே பொறுப்பு இல்லாம இருந்தா எப்படி சார், எவ்வளவு தண்ணி வீணாகுது? ன்னு கத்தினாரா?"

ரகு மௌனமாகத் தலையசைத்தார். 

"அன்னிக்கு அவர் எங்கிட்ட வந்து இப்படித்தான் எதுக்கோ கத்தினப்ப எனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா! அதுக்கப்பறம் அவர் முகத்தைப் பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கல. நீங்க என்னடான்னா கொஞ்சம் கூடக் கோபப்படாம அமைதியா இருக்கீங்க!" என்றான் மணிகண்டன் வியப்புடன்.

"அவர் தன்னோட கடமையைச் செய்யறாரு. ஆனா கொஞ்சம் கடுமையாப் பேசறாரு. அதுக்காக அவர் மேல கோபப்பட்டா அவரைப் பிடிக்காம போய் விரோத மனப்பான்மை ஏற்படும். யார்கிட்டயும் விரோத மனப்பான்மை வளர்த்துக்கறது நமக்கு நல்லதில்ல. அப்படி வளர்த்துக்கிட்டா அது நம்ம மனசுக்குள்ள ஒரு உறுத்தலாவே இருந்துக்கிட்டிருக்கும். நம்மால சந்தோஷமாவே இருக்க முடியாது.அதனாலதான் அவர் கோபமாப் பேசறதை நான் பொருட்படுத்தறதில்ல" என்றார் ரகு.

பொருட்பால்
நட்பியல் 
அதிகாரம் 86
இகல்

குறள் 854:
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

பொருள்: 
துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

740. பாருக்குள்ளே நல்ல நாடு!

"வாருங்கள் புலவரே! எங்கே நீண்ட காலமாகத் தங்களைக் காணவில்லை?" என்று புலவர்  அரிமேயரை வரவேற்றான் அரசன் இடும்பவர்மன்.

"ஒரு பயணக்குழுவுடன் சேர்ந்து நாடு முழுவதும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதனால்தான் தங்களைக் காண வர முடியவில்லை. இப்போது கூட இன்னொரு பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். தாங்கள் என்னை அழைத்து வர ஆள் அனுப்பியதால் பயணத்தைத் தள்ளி வைத்து விட்டு வந்தேன்" என்றார் அரிமேயர்.

"என்ன திடீரென்று தகங்களுக்குப் பயண வேட்கை ஏற்பட்டு விட்டது?" என்றான் அரசன் சிரித்தபடியே.

"இரண்டு காரணங்கள் அரசே! ஒன்று எல்லா வளங்களும் நிறைந்த இந்த நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று பார்த்து, சிறந்த மனிதர்களாக விளங்கும் நம் மக்களைச் சந்தித்து உரையாடுவதில் எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி. இரண்டாவது காரணம் நான் வியாபாரத்தில் இறங்கி இருக்கிறேன். அதன் காரணமாகவும் பல இடங்களுக்கும் செல்ல வேண்டி இருக்கிறது!" என்றார் அரிமேயர்.

"ஓ, பாடல் எழுதும் புலவர் இப்போது பண்டம் விற்கும் வணிகராகவும் மாறி விட்டாரா? நல்லது! நான் தங்களை அழைத்ததற்குக் காரணம் தங்கள் பாடலைக் கேட்கத்தான். தாங்கள் எழுதும் பாடல்களைக் கேட்பதில் எனக்குப் பெரிதும் விருப்பம் என்பது தாங்கள் அறிந்ததுதானே! பாடல் ஏதாவது எழுதிக் கொண்டு வந்திருக்கிறீர்களா? இல்லாவிட்டால் சற்று நேரம் எடுத்துக் கொண்டு எழுதுங்கள். நான் காத்திருக்கிறேன்" என்றான் இடும்பவர்மன்.

பலவர் சற்றுத் தயங்கி விட்டு, "அரசே! இந்த நாடு எல்லா வளங்ளையும், சிறப்புகளையும் பெற்று எவ்வாறு பாருக்குள்ளேயே சிறந்த நாடாக விளங்குகிறது என்பது பற்றியும், அதற்கு அரசராக விளங்கும் உங்களைப் பற்றியும் நான் எத்தனையோ பாடல்கள் எழுதி இருக்கிறேனே!" என்றார்.

"ஆமாம். அவற்றையெல்லாம் ரசித்ததால்தானே மேலும் பாடல்களை உங்களிடம் கேட்க விரும்புகிறான். நீங்கள் ஓரிரண்டு ஆண்டுகளாக அரண்மனைப் பக்கம் வராதது எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்ததால்தான் உங்களை அழைத்து வர ஆள் அனுப்பினேன். நீங்கள் விரும்பினால் அரண்மனையில் சில நாட்கள் தங்கி இருந்து கூடப் பாடல்கள் எழுதலாம்."

"மன்னிக்க வேண்டும் அரசே! என்னால் இப்போதெல்லாம் பாடல் எழுத முடியவில்லை. பாடல் எழுதும் திறமை என்னை விட்டுப் போய் விட்டது என்று நினைக்கிறேன்!" என்றார் புலவர் தடுமாற்றம் நிரம்பிய குரலில்.

"என்ன சொல்கிறீர்கள் புலவரே? திறமை எப்படி மறையும்? கற்பனை வறண்டு போகுமா என்ன?" என்றான் இடும்பவர்மன் வியப்புடன்.

"வறண்டுதான் போய் விட்டது மன்னரே! நான் கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டு வியாபாரத்தில் இறங்கியதற்குக் காரணமே இதுதான்!"

அரசன் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு, "சரி புலவரே! நீங்கள் இப்படிச் சொல்வது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. பரவாயில்லை. சென்று வாருங்கள். உங்கள் கற்பனை வளம் மீண்டும் பெருக்கெடுத்து வரும்போது பாடலுடன் வாருங்கள். உங்களுக்காக இந்த அரண்மனைக் கதவுகள் திறந்தே இருக்கும். உங்களை வெறும் கையுடன் அனுப்ப விரும்பவில்லை. நான் கொடுக்கும் பொற்காசுகளைப் பெற்றுச் செல்லுங்கள்!" என்றபடியே தனாதிகாரியைப் பார்த்தான் அரசன்.

தனாதிகாரி பொற்காசுகளை எடுத்து வர எழுந்தபோதே, "மன்னிக்க வேண்டும் மன்னரே! பாடல் புனையாமல் பரிசு பெற விரும்பவில்லை. தாங்கள் கூறியபடி என் கற்பனை மீண்டும் வளமடைந்தால் அப்போது பாடலுடன் வந்து பரிசு வாங்கிக் கொள்கிறேன்!" என்று சொல்லி அரசனிடம் விடைபெற்றர் அரிமேயர்.

"ஏன் உங்கள் கற்பனை வற்றி விட்டதாக மன்னரிடம் பொய் கூறினீர்கள்?" என்றாள் புலவரின் மனைவி, அரண்மனையில் நடந்ததை அவர் அவளிடம் கூறியதைக் கேட்டபின்

"கொடுங்கோல் ஆட்சி நடத்தும் இந்த மன்னனைப் புகழ்ந்து பாட நான் விரும்பவில்லை!" என்றார் அரிமேயர்.

"முன்பு பாடி இருக்கிறீர்களே! அதனால்தானே மன்னர் உங்களைக் கூப்பிட்டு அனுப்பினார்?"

"உண்மைதான். அப்போது அவன் பட்டத்ததுக்கு வந்த புதிது. தந்தையைப் போல் மகனும் நன்றாக ஆட்சி செய்வான் என்று நினைத்துப் பாடினேன். இப்போது அவன் செய்யும் மோசமான ஆட்சியில் நாட்டு மக்கள் அனைவரும் பரிதவித்துக் கொண்டிருக்கும்போது என்னால் எப்படி அவனைப் புகழ்ந்து பாட முடியும்?" என்றார் அரிமேயர் கோபத்துடன்.

"பாருக்குள்ளே நல்ல நாடு என்று இந்த நாட்டைப் புகழ்வீர்களே, இந்த நாட்டைப் புகழ்ந்தாவது ஒரு பாடல் எழுதிப் பரிசு வாங்கிக் கொண்டு வந்திருக்கலாம்!" என்றாள் மனைவி வருத்தத்துடன்.

"இந்த நாடு எல்லா வளங்களும் கொண்டதுதான். ஆனால் ஒரு மோசமான அரசனைக் கொண்டிருப்பதால் அந்த வளங்கள் இருப்பது கூடப் பயன்ற்றதாகி விட்டதே!" என்றார் அரிமேயர் வருத்தத்துடன்.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு

குறள் 740:
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

பொருள்: 
ஒரு நாடு நல்ல அரசனைக் கொண்டிராவிட்டால்,முன்பு குறிப்பிட்ட எல்லா நன்மைகளும் அமைதிருந்தாலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Sunday, January 1, 2023

739. விக்கிரமசிங்கனின் வருத்தம்!

"என்ன மன்னா, மேகல நாட்டுக்குச் சென்று வந்தாயே! உன் வெளிநாட்டுப் பயணம் எப்படி இருந்தது?" என்றார் ராஜகுரு.

"நன்றாக இருந்தது குருவே!" என்றான் மன்னன் விக்கிரமசிங்கன்.

"உன்னிடம் ஒரு சோர்வு தெரிகிறதே! பயணக் களைப்பா? அல்லது உன்னை அவர்கள் சரியாக நடத்தவில்லையா?"

"இல்லை குருவே! உபசாரமெல்லாம் மிகச் சிறப்பாகத்தான் இருந்தது. மன்னர் பரகாலர் என்னிடம் மிக அன்பாகப் பழகினார். பயணக் களைப்பும் இல்லை!"

"பின்னே உன் சோர்வுக்குக் காரணம்?"

"ஒன்றுமில்லை அரசே! மேகல நாட்டின் இயற்கை வளங்களைப் பார்த்து நான் பிரமிப்படைந்தேன்.மலைகள், காடுகள், ஆறுகள், குளங்கள் என்று நாட்டில் எத்தனை வளங்கள்! எங்கு பார்த்தாலும் பசுமை! 

"நம் நாடோ வறண்ட பூமி. மலைகள் காடுகள் ஏதும் இல்லாத சமவெளி. மழை பெய்வதும் குறைவு.ஒரே ஒரு ஆறுதான் ஓடுகிறது. மழை பெய்தால்தான் அதில் நீரோட்டம் இருக்கும் 

"நாம் மிகவும் சிரப்பட்டு நீர்நிலைகளை உருவாக்கி இருக்கிறோம். நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தும் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே சென்று விடாமல் பாதுகாக்கப் பல திட்டங்களை வகுத்திருக்கிறோம். வறண்ட நிலத்தில் வளரும் பயிர்களை அதிகம் பயிர் செய்து உண்கிறோம். அதிக அளவில் கைத்தொழில் செய்து பல பொருட்களை உருவாக்கிப் பிற நாடுகளுக்கு விற்றுப் பொருள் ஈட்டுகிறோம். 

மமேகல நாட்டைப் போல் நமக்கு இயற்கை வளங்கள் வாய்க்கவில்லையே, நாம் இவ்வளவு முயற்சிகள் செய்து வளங்களை உருவாக்க வேண்டி இருந்ததே என்பதை நினைத்தபோது மனதில் வருத்தமும் ஏக்கமும் ஏற்பட்டது. அதன் காரணமாக என் முகத்தில் வெளிப்பட்ட சோர்வுதான் அது!"

"மன்னா! இத்தகைய சிந்தனை வருவது இயற்கைதான். ஆனால் இப்படி நினைத்துப் பார். ஒருவன் பிறக்கும்போதே செல்வந்தனாகப் பிறக்கிறான். இன்னொருவன் வறியவனாகப் பிறந்து, தன் முயற்சியால் செல்வந்தனாகிறான். அவன் தன்னை நினைத்துப் பெருமைப்பட அல்லவா வேண்டும்?" என்றார் ராஜகுரு.

"தாங்கள் சொல்வது சரிதான். ஆயினும் வறியவனாகப் பிறந்து தன் முயற்சியால் செல்வம் சேர்த்த ஒருவனுக்கு செல்வந்தவனாகப் பிறந்தவனைப் பார்க்கும்போது, 'இவனைப் போல் நான் ஒரு செல்வந்தனாகப் பிறந்திருந்தால் இவ்வளவு கடினமாக உழைத்துச் செல்வம் சேர்க்க வேண்டி இருக்க வேண்டி இருந்திருக்காதே!' என்ற சிந்தனை ஏற்படுவது இயல்புதானே!" என்றான் விக்கிரமசிங்கன் வறண்ட  புன்னகையுடன். 

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு

குறள் 739:
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

பொருள்: 
முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

738. ஐந்து கேள்விகள்

புருஷோத்தமன் அந்த நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தன் நான்காண்டுப் பதவிக்காலம் முடியும் தறுவாயில், அடுத்து வரப்போகும் தேர்தலிலும் தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார். 

அவருடைய நான்காண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம். சீரழிந்தது. புருஷோத்தமனுக்கு நெருக்கமான சில தொழிலதிபர்களின் அசுர வளர்ச்சியைத் தவிர நாட்டில் வேறெந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.

ஆயினும் புருஷோத்தமன்தான் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாம் முறையும் அதிபராவார் என்று ஊடகங்கள் கணித்தன. பெரும்பாலான ஊடகங்கள் பருஷோத்தமனின் கட்டுப்பாட்டில் இருந்தன என்பது வேறு விஷயம்!

புருஷோத்தமனுக்கு எதிராகக் களமிறங்கினார் கேசவ்!

'கேசவ் ஒரு விளையாட்டுப் பிள்ளை. ஐந்து வயதுக் குழந்தைக்கு இருக்கும் அறிவு கூட அவருக்கு இல்லை. அவரால் எப்படிப் புருஷோத்தமனை வெல்ல முடியும்?' என்று ஊடகங்கள் எள்ளி நகையாடின.

கேசவ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை அறிவித்தார்.

"ஒரு ஐந்து வயதுச் சிறுவனின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு இத்தனை ஊடகவியலாளர்கள் வந்திருப்பதற்கு நன்றி!" என்று துவங்கினார் கேசவ்.

"மக்கள் செல்வாக்குப் பெற்றிருக்கும் புருஷோத்தமனை எதிர்க்க உங்களிடம் என்ன ஆயுதம் இருக்கிறது?" என்றார் ஒரு ஊடகவியலாளர்.

"என்னிடம் ஆயுதங்கள் இல்லை. அரசின் பாதுகாப்புப் படையினர் என்னைப் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தித்தான் இந்த அரங்குக்குள் அனுமதித்தார்கள்!" என்று இரண்டு கைகளையும் தூக்கிக் காட்டினார் கேசவ்.

இலேசான சிரிப்பு எழுந்தது.

"ஊடகவியலாளர்களே! நீங்கள் என்னிடம் பல கேள்விகளைக் கேட்கக் காத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்கள் கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு நீங்கள் சில கேள்விகளுக்கு எனக்கு பதில் சொல்ல வேண்டும்.. இப்போது நீங்கள் என்னிடம் கேள்விகள் கேட்கலாம்!" என்றார் கேசவ்.

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ஊடகவியலாளர்கள் கேசவைக் கேள்விகளால் துடைத்தெடுத்தனர். பல கேள்விகள் அவரைக் கேலி செய்வதாகவும், அவமானப்படுத்துவதாகவும் இருந்தன. ஆனால் அத்தனை கேள்விகளுக்கும் அவர் அமைதியாகப் புன்னகை மாறாமல் பதில் கூறினார்.

மேலும் கேட்க ஏதும் கேள்விகள் இல்லாத நிலை ஏற்பட்டபோது ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்பதை நிறுத்திக் கொண்டனர்.

"நீங்கள் என்னிடம் ஏதோ கேள்விகள் கேட்கப் போவதாகச் சொன்னீர்களே!" என்றார் ஒரு ஊடகவியலாளர்.

"ஆமாம். ஆனால் கேள்விகள் உங்களுக்கல்ல. இந்த நாட்டை நான்கு ஆண்டுகளாக ஆண்டு வரும் அதிபருக்கு! இந்தக் கேள்விகளை நான் பலமுறை எழுப்பியும் அவர் இதற்கு பதில் சொல்லவில்லை. என்னை விளையாட்டுப் பிள்ளை என்று எள்ளி நகையாடினார். உங்களில் பலரும் கூட என்னை எள்ளி நகையாடி மகிழ்ந்தீர்கள். இப்போது உங்கள் மூலம் நம் நாட்டு அதிபரிடம் நான் ஐந்து கேள்விகள் கேட்கப் போகிறேன்.

"1. கடந்த நான்கு ஆண்டுகளாக நம் நாட்டின் வளர்ச்சி குன்றி, வேலையின்மை அதிகரித்து லட்சக் கணக்கான மக்கள் ஏழ்மைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு உங்கள் ஆட்சிதான் பொறுப்பு. இதைச் சரி செய்ய என்ன செய்யப் போகிறீர்கள்?

"2. நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு சரியாகப் பராமரிக்கப்படவில்லை. நோய்கள் அதிகரித்து விட்டன. நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் போதுமான மருத்துவமனைகள் இல்லை. இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன? இதற்கு உங்கள் தீர்வு என்ன?

"3. விவசாயிகள் ஏழைகளாகி வருகிறார்கள். விளைபொருளுக்குச் சரியான விலை கிடைக்காததால் விவசாயம் சீரழிந்து வருகிறது. விவசாயிகளின் வருமானம் குறைந்து, அவர்கள் கடனாளிகளாகி, அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னையை நீங்கள் ஏன் கண்டு கொள்ளாமலேயே இருக்கிறீர்கள்?"

"4. நாட்டின் பாதுகாப்பில் நீங்கள் அக்கறை காட்டவில்லை. அதனால் நம் அண்டை நாடுகள் துணிவு பெற்று நம் எல்லைப் பகுதிகளில் அடிக்கடி ஊடுருவி நம் வீரர்களைத் தாக்குகிறார்கள். அந்தத் தாக்குதல்களில் சில வீரர்கள் உயிரிழந்து விட்டார்கள். நாட்டின் பாதுகாப்பில் நீங்கள் கவனம் செலுத்தாதது ஏன்?

"5. இது போன்ற பல பிரச்னைகளால் மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக ழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையை ஏற்படுத்திய நீங்கள் எந்த அடிப்படையில் மீண்டும் நான்காண்டுகளுக்குப் பதிவியில் தொடர விரும்புகிறீர்கள்?"

சில கணங்கள் மௌனத்துக்குப் பின், ஒரு ஊடகவியலாளர், "குற்றம் சொல்வதும், குறை காண்பதும் எல்லோருக்கும் எளிது. இந்தப் பரச்னைகளுக்கு உங்களிடம் தீர்வு இருக்கிறதா?" என்றார் 

"இருக்கிறது. என் தேர்தல் அறிக்கையே இந்த ஐந்து பிரச்னைகள் பற்றியும் அவற்றுக்கு நான் எவ்வாறு தீர்வு காணப் போகிறேன் என்பதை மையப்படுத்தித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. உங்கள் முன் என் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன்!" என்ற கேசவ் மேஜை மீதிருந்த அட்டைப் பெட்டியைக் கத்தரிக் கோலால் வெட்டித் திறந்து அதற்குள் இருந்த  தேர்தல் அறிக்கைப் புத்தகங்களை வெளியே எடுத்து அனைவருக்கும் விநியோகித்தார்.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு

குறள் 738:
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

பொருள்: 
நோயில்லாமை, செல்வம், நல்ல விளைச்சல், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...