திருக்குறள்
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை
831. சொந்த வீடு எதற்கு?
தன்னுடன் கல்லூரியில் படித்த ரமேஷை நீண்ட நாட்களுக்குப் பிறகுச் சந்தித்தான் சுப்பு.தன்னப் பற்றிக் கூறிய பிறகு, சுப்பு என்ன செய்கிறான், எங்கே வசிக்கிறான் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டான் ரமேஷ்.
சுப்பு தனக்குச் சொந்த வீடு இருப்பதாகச் சொன்னதும், "நான் நினைச்சிருந்தா, என் வருமானத்தில மூணு வீடு வாங்கி இருக்க முடியும். ஆனா, நான் வீடு வாங்கல!" என்றான் ரமேஷ்.
"ஏன்?" என்றான் சுப்பு, வியப்புடன்.
"முட்டாள்கள்தான் வீடு வாங்குவாங்க! ஐ ஆம் சாரி. நான் உன்னைச் சொல்லல. பொதுவாச் சொன்னேன்!"
""ஏன் அப்படிச் சொல்ற?"
"உன் வீட்டோட சந்தை மதிப்பு எவ்வளவு இருக்கும்?"
"முப்பது லட்சம் ரூபா இருக்கும்."
"உன் வீட்டை வாடகைக்கு விட்டா, எவ்வளவு வாடகை வரும்?"
"ஏழாயிரம் ரூபா வரும்னு நினைக்கிறேன்!"
"வருஷத்துக்கு எண்பத்து நாலாயிரம் ரூபாய். தொண்ணூறாயிரம் ரூபாய்னு வச்சுக்கிட்டா கூட, வருஷத்துக்கு மூணு சதவீதம் ரிடர்ன்தான் வருது. பாங்க்லேயே 10 சதவீதம் வட்டி கொடுக்கறாங்களே!"
சுப்பு மௌனமாக இருந்தான்.
"இப்ப புரியுதா, நான் ஏன் வீடு வாங்கலேன்னு? உன்னோட இடத்தில நான் இருந்தா, வீட்டை வித்துட்டு முப்பது லட்ச ரூபாயை பாங்கல போட்டு வைப்பேன். வருஷத்துக்கு 3 லட்சம் ரூபா வட்டி வரும். எட்டாயிரம் ரூபாய்க்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துப்பேன். வாடகை போக, வருஷத்துக்கு ரெண்டு லட்சம் ரூபா மிச்சமாகும்!" என்றான் ரமேஷ்.
சுப்பு குழப்பத்துடன் யோசித்தான்.
"கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா, வீட்டை விக்கறது முட்டாள்தனம். மறுபடி வீடு வாங்கணும்னா முடியுமா? விலையெல்லாம் ஏறி இருக்கும் இல்ல?" என்றார் சுப்புவின் நண்பர் ராமமூர்த்தி.
"நான்தான் எப்பவுமே வீடு வாங்கப் போறதில்லையே!" என்றான் சுப்பு.
"இங்க பாரு, சுப்பு. வீட்டு வாடகையெல்லாம் ஏறிக்கிட்டே இருக்கும். ஆனா, பாங்க்லேந்து அதே வட்டித்தொகைதான் வந்துக்கிட்டிருக்கும். ஒரு கட்டத்தில, பாங்க்லேந்து வர வட்டியை விட வீட்டு வாடகை அதிகமா இருந்தா? வீட்டு விலையும் ஏறிக்கிட்டிருக்கும். அதனால, உங்கிட்ட இருக்கிற முப்பது லட்சம் ரூபாயை வச்சு மறுபடி வீடு வாங்கவும் முடியாது."
"இன்னித் தேதியில வருஷத்துக்கு ரெண்டு லட்ச ரூபா மீதமாகுதில்ல? சொந்த வீட்டில இருந்துக்கிட்டிருந்தா, இந்தப் பணம் வருமா?" என்றான் சுப்பு.
மனைவி, ராமமூர்த்தி போன்ற நண்பர்கள் ஆகியோர் தடுத்தும் கேளாமல், வீட்டை விற்று விட்டுப் பணத்தை வங்கி வைப்புக் கணக்கில் போட்டு விட்டு, வாடகை வீட்டுக்குக் குடியேறினான் சுப்பு.
"ஏதோ உங்க நண்பர் பொருளாதார நிபுணர் சொன்னார்னு சொல்லி, நாங்கல்லாம் தடுத்தும் கேக்காம, வீட்டை வித்துட்டு வாடகை வீட்டுக்கு வந்தீங்க. இப்ப பாங்க்ல வட்டியையெல்லாம் ஏகமாக் குறைச்சுட்டாங்க. ஆறு சதவீதம்தான் கொடுக்றாங்க. வருஷத்துக்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம். மாசம் பதினைஞ்சாயிரம் ரூபாய். இவ்வளவு வருஷத்தில, வீட்டு வாடகையும் கொஞ்சம் கொஞ்சமா ஏறி, இப்ப பதினைஞ்சாயிரம் ரூபாய் ஆயிடுச்சு. இப்ப, வர வட்டி வீட்டு வாடகைக்கு சரியா இருக்கு. அடுத்த வருஷம் வாடகை ஏறும்போது, வாடகை கொடுக்க வட்டித்தொகை போதாதே! இப்ப அறுபது லட்சம் ரூபாய்க்குக் குறைஞ்சு வீடும் கிடைக்காது. உங்க நண்பர் ராமமூர்த்தி எவ்வளவோ எடுத்துச் சொன்னார். நல்லதையெல்லாம் எடுத்துக்காம, உருப்படாம போறதுக்கு உங்க நண்பர் சொன்ன யோசனையைக் கேட்டீங்க. இப்ப நாம பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டிருக்கோம்!" என்றாள் சுப்புவின் மனைவி, கோபத்துடனும், ஆற்றாமையுடனும்.
குறள் 831:
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
கேடு விளைவிப்பது எது, நன்மை தருவது எது, என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை ஆகும்.
சந்திரன் அன்று என்னைப் பார்க்க வந்தபோது, வழக்கத்தை விடச் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டான்.
சந்திரன் எனக்கு தூரத்து உறவு. என்னிடம் நட்புடன் பழகுபவன்.
எங்கள் உறவினர்களுக்குள், அவன் பொருளாராத நிலையில் சற்றுத் தாழ்ந்தவன். ஆனால், அதைப் பற்றி அவன் கவலைப்பட்டதில்லை. வசதி மிகுந்த உறவினர்களிடம் பழகும்போது, தாழ்வு மனப்பான்மை ஏதுமின்றி மிக இயல்பாகப் பழகுவான்.
சொல்லப் போனால், 'நீ பணக்காரனாக இருந்தால் என்ன? நான் ஒன்றும் உதவி கேட்டு உன் முன் நிற்கவில்லை. நீ என் உறவினன் என்பதை மதித்து உன்னிடம் பழகுகிறேன். அவ்வளவுதான்!' என்பது போன்ற ஒரு தோரணை அவன் நடத்தையில் இருக்கும்.
அதனால்தான், அன்று அவன் என்னிடம் சற்றுத் தயக்கத்துடன் நடந்து கொண்டது எனக்கு வியப்பாக இருந்தது.
என் வீட்டை விட்டுக் கிளம்பும் வரை அப்படித்தான் இருந்தான். வாசல் அருகில் வந்ததும், சட்டென்று திரும்பி, "இன்னிக்கு சாயந்திரம் என்னோட ஒரு மீட்டிங்குக்கு வர முடியுமா?" என்றான் அவசரமாக. நீண்ட நேரமாகச் சொல்ல நினைத்த ஒரு விஷயத்தைச் சொல்லி விட்ட ஒரு நிம்மதி அவனிடம் தெரிந்தது.
"என்ன மீட்டிங்? எங்கே?" என்றேன் நான்.
"நானே உன்னை வந்து அழைச்சுக்கிட்டுப் போறேன். அஞ்சு மணிக்கு வருவேன். தயாரா இரு."
அது எம் எல் எம் என்று அழைக்கப்படும் ஒரு நெட்வொர்க் மார்க்கெடிங் வியபார வாய்ப்புக்கான அறிமுகக் கூட்டம்.
அந்தத் திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேருபவர்கள் தங்களுக்குக் கீழ் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். கீழே உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப, அவர்கள் வாங்கும் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விலை மதிப்பில் குறிப்பிட்ட சதவீதம், மேலே இருப்பவருக்கு கமிஷனாகக் கிடைக்கும்.
இந்தத் திட்டம் பற்றி அறிமுக உரை நிகழ்த்தியவர், இந்தத் திட்டத்தில் சேரும் ஒவ்வொருவரும் எப்படி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை விளக்கிப் பேசினார்.
கூட்டம் முடிந்ததும், இருவரும் அருகிலிருந்த ஒரு உணவகத்துக்கு காப்பி அருந்தச் சென்றோம்.
"இதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?" என்றான் சந்திரன்.
"இந்த எம் எல் எம் பத்தி எனக்கு முன்னமே தெரியும். ஆனா எனக்கு இது ஒத்து வராது. அதனால, இதுவரையிலும் இது மாதிரி திட்டங்கள்ள நான் சேரல. உன்னால இதைச் செய்ய முடியும்னு நினைக்கிறியா?" என்றேன்.
"எனக்கு யார்கிட்டேயும் போய் எதையும் கேட்கப் பிடிக்காது. அப்படிக் கேட்காததாலதான், நான் அவ்வளவு வசதி இல்லாதவனா இருந்தும், எல்லார் முன்னாடியும் தலை நிமிர்ந்து கம்பீரமா நடக்கறேன்.
"ஆனா இவங்க 'நீங்க யார்கிட்டேயும் போய் இதில சேர்ந்துக்கங்கன்னு கேக்க வேண்டியதில்ல, ஒரு நல்ல வியாபார வாய்ப்பைப் பத்தித் தெரிஞ்சுக்க, ஒரு கூட்டத்துக்கு வாங்கன்னு அவங்களை இங்க அழைச்சுக்கிட்டு வாங்க, இந்த வாய்ப்பைப் பத்தி நாங்க விளக்கமாப் பேனதைக் கேட்டப்பறம், அவங்க இந்தத் திட்டதில சேந்துப்பாங்க'ன்னு சொன்னாங்க.
"அவங்க பேசினதைக் கேட்டுத்தான் இதில சேர்ந்தேன். ஆனா, அவங்க சொன்ன மாதிரி எனக்குத் தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி அவங்களை மீட்டிங்குக்கு அழைச்சுக்கிட்டு வர என்னால முடியல. உன்னை மட்டும்தான் கூப்பிட்டேன். அதுவும் ரொம்பத் தயக்கத்தோட!"
இதைச் சொல்லி விட்டு, ஏதோ தவறு செய்து விட்டது போல், குற்ற உணர்வுடன் என்னைப் பார்த்தான் சந்திரன்.
"சந்திரன்! இது மாதிரி பிசினஸ் எல்லாம் எல்லாருக்கும் சரியா வராது. உன்னோட இயல்புக்கும், என்னோட இயல்புக்கும் இது ஒத்து வராது. அவங்க பேச்சில மயங்கி, நீ இதில சேர்ந்துட்டே. ஆனா, உனக்கு நெருக்கமா இருக்கற எங்கிட்ட பேசறதுக்கே இவ்வளவு சங்கடப்படற நீ, மத்தவங்ககிட்ட எப்படிப் போய்ப் பேசுவ? இதில தொடரணுமான்னு நீ யோசனை செஞ்சுக்க!" என்றேன் நான்.
சந்திரனின் மௌனம் அவனே இது போன்ற சிந்தனையில்தான் இருக்கிறான் என்று காட்டியது.
குறள் 832:
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
அறியாமையுள் எல்லாம் அறியாமை ஒருவன் தன் ஒழுக்கத்துக்கு (இயல்புக்கு)ப் பொருந்தாதவற்றில் விருப்பம் கொள்வதாகும்.
'எப்படிச் சொல்லுவாங்க?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட கல்யாணி "இல்லை" என்றாள்.
"நன்றி கெட்ட ஜன்மங்க! இவங்களைப் படிக்க வச்சுக் கல்யாணம் செஞ்சு வச்சதுக்குக் கொஞ்சம் கூட நன்றி இல்லை!"
"ஏங்க, பெத்த பிள்ளைங்களைப் பத்திப் பேசற பேச்சா இது? எல்லாப் பெற்றோர்களும் செஞ்சதைத்தானே நாமும் செஞ்சோம்? இப்ப அவங்க நல்லா இருக்காங்கன்னு சந்தோஷப்படறதை விட்டுட்டு..."
"பெற்றோர்கள்னு உன்னையும் ஏன் சேத்து சொல்லிக்கற? நீ என்ன செஞ்சே? சோறு பொங்கிப் போட்ட. அதைத் தவிர வேறு என்ன செஞ்சே? செஞ்சதெல்லாம் நான்தானே!"
யோகேஷின் இது போன்ற பேச்சுக்களைக் கேட்டுப் பழகி விட்டதால், கல்யாணிக்கு இது புதிதாக இல்லை. ஆயினும், காயப்படுவது பழகி விட்டாலும், கசையடி விழும் ஒவ்வொரு முறையும் வலிக்கத்தானே செய்யும்?
மனைவியை சமைத்துப் போடும், வீட்டு வேலைகள் செய்யும் ஒரு இயந்திரமாகவும், தேவைப்படும்போதெல்லாம் உடற்பசியைப் போக்கப் பயன்படுத்தப்படக் கூடிய உணவுச்சாலையாகவுமே நினைத்து இருபத்தைந்து ஆண்டுகளாக வாழ்ந்து வருபவனிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
அன்று இரவு அமெரிக்காவில் இருக்கும் மகள் மாலாவிடமிருந்து ஃபோன் வந்தபோது, "எங்களோட இருபத்தைஞ்சாவது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடறதைப் பத்தி நீயும், சுரேஷும் பேசவே இல்லையேன்னு உங்கப்பா குறைப்பட்டுக்கறாருடி!" என்றாள் கல்யாணி.
"அம்மா! அப்பா உன்னையோ, எங்களையோ நல்லா வச்சுக்கணும்னு எப்பவுமே நினைச்சதில்ல. எங்க எதிர்காலத்துக்காகப் பணம் சேர்க்கணும்னு யோசிக்காம, குடிச்சுக்கிட்டும், கும்மாளம் போட்டுக்கிட்டும், சம்பாதிச்ச பணத்தையெல்லாம் தொலைச்சாரு.
"நாங்க ரெண்டு பேருமே எஞ்சினியரிங் படிக்கணும்னு ஆசைப்பட்டோம். அதுக்கெல்லாம் எங்கிட்ட பணம் இல்லேன்னுட்டாரு. எஜுகேஷன் லோன் வாங்கிப் படிக்கறோம்னு சொன்னப்ப, அதுக்கெல்லாம் நான் காரன்டி கையெழுத்துப் போட மாட்டேன்னுட்டாரு.
"மாமாதான் பணம் கொடுத்து ரகுவை எஞ்சினியரிங் படிக்க வச்சாரு. அவன் படிச்சு, மும்பையில ஒரு நல்ல வேலை தேடிக்கிட்டுப் போயிட்டான். நான் பி.எஸ்.சிதான் படிச்சேன். நான் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டதால, என் வீட்டுக்காரரோட அமெரிக்காவில இருக்கேன்.
"இப்ப கூட, நான் உங்கிட்டதான் ஃபோன்ல பேசறேன். எப்பவாவது அப்பாகிட்ட பேசினாக்கூட, 'அமெரிக்காவில இருந்து என்ன பிரயோசனம்? பெத்து வளர்த்த அப்பாவுக்குப் பத்து காசு அனுப்பணும்னு தோணுதா?'ன்னு கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம எங்கிட்ட சண்டை போடறாரு. அதனால, நான் அவர்கிட்ட பேசறதையே விட்டுட்டேன்.
"திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடறதில உனக்கு ஆர்வம் இருந்தா சொல்லு. நான் அங்கே வந்து, சுரேஷோட சேர்ந்து அதை நல்லா நடத்தி வைக்கறேன். அப்பா குறைப்பட்டுக்கறாருங்கறதுக்காக என்னால எதையும் செய்ய முடியாது'"
பொரிந்து தள்ளி விட்டாள் மாலா.
கல்யாணி மாலாவுடன் ஃபோனில் பேசி முடித்ததும், அங்கே வந்த யோகேஷ், "என்ன சொல்றா உன் பொண்ணு, வெட்டிங் ஆனிவர்ஸரி பத்தி?" என்றான்.
"வந்து நடத்தி வைக்கிறாளாம்!" என்றாள் கல்யாணி, கேலியான குரலில், யோகேஷை முறைத்துப் பார்த்து.
'ஒரு மனுஷன் இப்படியா இருப்பாரு!' என்ற இகழ்ச்சி கல்யாணியின் பார்வையில் இருந்ததை யோகேஷ் புரிந்து கொண்டிருக்க வாய்ப்பு இல்லை!
குறள் 833:
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேட வேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்பு காட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.
"ஏற்கெனவே அஞ்சாறு நிறுவனங்களுக்குப் பொருளாதார ஆலோசகரா இருக்கீங்க. இப்படி ஊர் ஊராப் போய் செமினார்ல வேற பேசறீங்க. இதுல உங்களுக்குப் பெரிசா பணம் எதுவும் வரதில்ல. இது எதுக்கு?" என்றாள் அவர் மனைவி கமலா.
"நிறுவனங்களுக்குப் பொருளாதார ஆலோசகரா இருக்கறது என் தொழில். செமினார்கள்ள எல்லாம் பேசறது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த. என் செமினாருக்கு சிறு தொழிலதிபர்கள்ளேந்து, சாதாரண மக்கள் வரை பல பேர் வராங்க. பொருளாதாரம் பத்திப் பல அடிப்படையான விஷயங்களை நான் எளிமையா எடுத்துச் சொல்லி விளக்கறது ரொம்பப் பயனுள்ளதா இருக்கறதா பல பேர் எங்கிட்ட நேரில சொல்லி இருக்காங்க. சில பேர் கடிதம், ஈமெயில் மூலமா சொல்றாங்க. இதெல்லாம் எனக்கு ஒரு மனத் திருப்தியைக் கொடுக்குது. அதுக்குத்தான் இதையெல்லாம் செய்யறேன்."
"நீங்க சொல்றது சரிதான். இப்ப கூட, அதிக வட்டி கொடுக்கறதா சொன்ன நிறுவனங்கள்ள நிறைய பேர் முதலீடு செஞ்சு தங்களோட பணத்தை இழந்ததா அடிக்கடி செய்தி வந்துக்கிட்டிருக்கே!"
"என்ன செய்யறது? பணம் என்கிற வார்த்தைக்கே ஒரு பெரிய ஈர்ப்பு இருக்கு. அதிகமாப் பணம் கிடைக்கும்னா, மக்கள் வெளிச்சத்தைப் பார்த்து விளக்கில விழற விட்டில் பூச்சிகள் மாதிரி, சிந்திக்காம அங்கே போய் விழறாங்க. என்னால முடிஞ்சவரை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக்கிட்டிருக்கேன். அதிக வட்டி கொடுக்கறதெல்லாம் யாராலயும் தொடர்ந்து செய்ய முடியாதுங்கறதை நான் புள்ளி விவரங்கள், உதாரணங்களோட விளக்கறப்ப எல்லாரும் புரிஞ்சுக்கறாங்க. என்னால முடிஞ்ச அளவுக்கு மக்களுக்குப் பொருளாதார விஷயங்கள்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னுதான் இதையெல்லாம் செஞ்சுக்கிட்டிருக்கேன்!" என்றார் அமுதன், பெருமையுடன்.
கணவரின் பெருமித உணர்வில் பங்கு கொள்வது போல், கமலா அவரைப் பெருமையுடன் பார்த்தாள்.
"'ஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி, தான் போய் விழுமாம் கழனிப்பானையில துள்ளி' ன்னு சொல்லுவாங்க. அது மாதிரி இருக்கு நீங்க செஞ்சிருக்கறது!" என்றாள் கமலா, அதிர்ச்சியுடனும், ஆத்திரத்துடனும்.
"இல்ல. அவனோட பிசினஸ் ஐடியா நல்லதாத்தான் தெரிஞ்சது. ஆரம்பத்தில முதலீடு செஞ்சா, கம்பெனி வளர்ந்து, பப்ளிக் இஷ்யூ வெளியிட்டு, ஸ்டாக் மார்க்கெட்ல லிஸ்ட் ஆனதும், பெரிய லாபம் கிடைக்கும்னு சொன்னான். ஆனா, ஆரம்பத்திலேயே மோசடி பண்ணிட்டான்! என்னை மாதிரி ஆறு பேர் ஆளுக்கு அம்பது லட்ச ரூபாய் முதலீடு செஞ்சோம். அதில, என்னைப் பார்த்து முதலீடு செஞ்சவங்க ரெண்டு பேரு! ஒரு வருஷத்துக்குள்ளேயே மொத்தப் பணமும் போயிடுச்சு. முதலீடு செஞ்ச பணம் எல்லாம் எங்கே போச்சுன்னே தெரியல. அவனையும் காணோம். வெளிநாட்டுக்கு ஓடிட்டானோ என்னவோ தெரியல. கம்பெனி ஆஃபீஸ்ல இருக்கறவங்களுக்கு எதுவும் தெரியல. அவங்களுக்கே ரெண்டு மாசமா சம்பளம் வரலையாம். போலீஸ்ல புகார் கொடுத்திருக்கோம். 'நீங்க கூடவா சார் இப்படி ஏமாந்தீங்க?'ன்னு அசிஸ்டன்ட் கமிஷனர் என்னைப் பார்த்து சிரிக்கிறாரு!" என்றார் அமுதன், அவமானத்துடன்.
குறள் 834:
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால், அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.
"என்ன சொல்லுவா? எப்பவும் பேசற மாதிரி திமிராத்தான் பேசறா? மறுபடி இங்க வர மாட்டாளாம்!" என்றான் மணிகண்டன்.
"ஏண்டா, பொதுவா மாமியார்-மருமகளுக்குத்தான் ஒத்து வராது. இங்கே என்னடான்னு, எங்களுக்குள்ள ஒரு பிரச்னையும் இல்ல. ஆனா, உன்னால உன் மனைவியோட அனுசரிச்சுப் போக முடியல!"
"எல்லாம் என் தலையெழுத்து! அவளுக்கு சம்பாதிக்கிறோங்கற திமிரு. அதனால, என்னை நம்பி இருக்க வேண்டாங்கற மிதப்பில இப்படி நடந்துக்கிறா."
"நான் சொல்றதைக் கேளு. சாரதா நல்ல பொண்ணு. என்னை நல்லாத்தான் பாத்துக்கிட்டா. வேலைக்குப் போனாலும், குழந்தைக்கு வேண்டியதை செஞ்சுக்கிட்டிருந்தா. ஏன், உன்னைக் கூட நல்லாதான் கவனிச்சுக்கிட்டிருந்தா. நீ தேவையில்லாம அவளோட சண்டை போட்டு, அவ கோவிச்சுக்கிட்டு அவ அம்மா வீட்டுக்குப் போற அளவுக்குக் கொண்டு விட்டுட்ட."
"எல்லாத்துக்கும் நான்தான் காரணமா? அவளாலதான் என்னை அனுசரிச்சுப் போக முடியல!"
"நிறுத்துடா. நீ ஆஃபீஸ்ல உன் மேலதிகாரியோட சண்டை போட்டதால, உன் வேலை போச்சு. அது எவ்வளவு நல்ல கம்பெனி! இப்ப அந்த வேலை போனப்பறம், ஒரு சின்ன கம்பெனியில குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யற. நான் கூட உன் மேலதிகாரிதான் இதுக்குக் காரணம்னு நீ சொன்னதை நம்பினேன். ஆனா, நீ சாரதாவோட சண்டை போட்டு, அதனால அவ வீட்டை விட்டுப் போனதைப் பாத்தப்பறம், உங்கிட்டதான் தப்பு இருக்குன்னு தோணுது!"
"எங்கிட்ட என்ன தப்பு இருக்கு?"
"உங்கிட்ட என்ன தப்பு இருக்குன்னு தெரியாம இருக்கறதுதான் உன் பிரச்னைகளுக்குக் காரணம். உனக்கு மத்தவங்களை அனுசரிச்சுப் போகத் தெரியல. மத்தவங்ககிட்ட குற்றம் கண்டுபிடிக்கிறது, அவங்களைத் தூக்கி எறிஞ்சு பேசறது இதைத்தான் நீ எல்லார்கிட்டேயும் செஞ்சிக்கிட்டிருக்க. இதனால எல்லாம் என்ன விளைவுகள் ஏற்படும்னு யோசிக்காம, திரும்பத் திரும்ப அதே மாதிரி நடந்துக்கிற. அதனால உனக்கு ஏற்படுகிற பிரச்னைகள்ளேந்து பாடம் கத்துக்காம, திரும்பத் திரும்ப அதே தப்பைப் பண்ணிக்கிட்டிருக்க. அதனால, உனக்கு மறுபடியும் பிரச்னைகள் வந்துக்கிட்டிருக்கு!" என்றாள் பார்வதி.
"என்ன செய்யறது? எத்தனை ஜன்மங்கள்ள செஞ்ச பாவமோ தெரியல. என் வாழ்க்கை நரகமா அமைஞ்சுடுச்சு!" என்று தலையில் அடித்துக் கொண்டான் மணிகண்டன்.
"முன் ஜன்மங்கள்ள செஞ்ச பாவம் எல்லாம் எதுவும் இல்ல. இந்த ஜன்மத்தில நீ முட்டாள்தனமா நடந்துக்கிட்டதுதான் இதற்கெல்லாம் காரணம்! நினைச்சுப் பாரு. உனக்குக் கிடைச்ச நல்ல வேலை போகும்படி நடந்துக்கிட்டது, மனைவியையும், குழந்தையையும் பிரிஞ்சு வாழ்ந்துக்கிட்டு, வயசான என்னைத் தனியா பாத்துக்க முடியாம கஷ்டப்படறது இதெல்லாம் நீயா வரவழைச்சுக்கிட்டதுதானே?" என்றாள் பார்வதி.
தாய் கூறுவதை ஏற்றுக் கொள்ள மறுப்பது போல், மணிகண்டன் தலையைப் பக்கவாட்டில் ஆட்டினான்.
குறள் 835:
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
அறிவற்றவனாக இருப்பவன், ஏழு பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்தைத் தன் ஒரு பிறவியிலேயே ஏற்படுத்திக் கொள்வான்.
"இளைஞர், படிச்சவர்ங்கறதுக்காக முதல்வர் அவருக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்காருன்னு நினைக்கிறேன். அவர் திறமை எப்படி இருக்கும்கறதை, போகப் போகத்தான் பாக்கணும்!" என்றார் இன்னொரு அமைச்சரான முருகானந்தம்.
ஆட்சி அமைத்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒவ்வொரு அமைச்சகத்தின் செயல்பாட்டையும் முதல்வர் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அன்று, தொழில் அமைச்சகத்தின் செயல்பாடு பற்றிய ஆய்வு.
தலைமைச் செயலர் மற்றும் தன்னுடைய தனிச் செயலர் இருவரையும் அருகில் வைத்துக் கொண்ட முதல்வர், அவர்கள் இருவரும் கொடுத்திருந்த புள்ளி விவரங்களையும், குறிப்புகளையும் பார்த்துத் தொழில் அமைச்சரிடம் கேள்விகள் கேட்க, தொழில்துறை அமைச்சர் அருணகிரி, தன் அருகில் அமர்ந்திருந்த தொழில்துறைச் செயலரின் உதவியுடன், முதல்வரின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.
ஆய்வு முடிந்ததும், அதிகாரிகளை அனுப்பி விட்டு, அருணகிரியை மட்டும் இருக்கச் சொன்னார் முதல்வர்.
இருவரும் தனிமையில் இருந்தபோது, "அருணகிரி! தொழில்துறை தங்களுக்குக் கிடைக்கணும்னு சில மூத்த அமைச்சர்கள் விரும்பினாங்க. தங்களோட விருப்பத்தை எங்கிட்ட தெரிவிக்கவும் செஞ்சாங்க. ஆனா, நீங்க இளைஞர், படிச்சவர்ங்கறதால, உங்ககிட்ட இந்தத் துறையை ஒப்படைச்சேன்!" என்று ஆரம்பித்தார் முதல்வர்.
"என்னால முடிஞ்ச அளவுக்கு சிறப்பாத்தான் செயல்பட்டுக்கிட்டிருக்கேன்!" என்றார் அருணகிரி.
முதல்வர் அருணகிரியைச் சற்று வியப்புடன் பார்த்தார்.
"இத்தனை நேரம் நடந்த ஆய்வில, நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்க சொன்ன பதில்களிலிருந்தே, உங்க அமைச்சகத்தோட செயல்பாடு எவ்வளவு மோசமா இருக்குன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கணும்! அது கூட உங்களுக்குப் புரியாம, சிறப்பா செயல்படறேன்னு நீங்க சொல்றதைக் கேட்கறப்ப, எனக்கு ஆச்சரியமா இருக்கு. உங்களுக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்தது என்னோட முட்டாள்தனம்னு இப்பதான் எனக்குப் புரியுது."
"சார்..."
"நான் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கம் சொல்றப்ப, தொழில்துறைச் செயலர் அவமானத்தில நெளிஞ்சதை என்னால பார்க்க முடிஞ்சது. அவர் என்ன செய்வாரு, பாவம்? அவர் சொன்ன யோசனைகளை நீங்க கேட்காம, உங்க மனப்போக்குப்படி செயல்பட்டிருக்கீங்க. இதைப் பத்தி அவர் தலைமைச் செயலர்கிட்ட புலம்பி இருக்காரு. தலைமைச் செயலர் இதை எங்கிட்ட சொன்னரு. சில தொழிலதிபர்கள் எங்கிட்ட வந்து, நீங்க அடிப்படைப் புரிதல் கூட இல்லாம செயல்படறதா புகார் சொன்னாங்க. இது மாதிரி புகார்கள் இருந்தும், உங்களுக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுக்கலாம்னு பொறுமையா இருந்தேன். ஆனா, உங்க செயல்பாடு சரியில்லைங்கறதையே நீங்க புரிஞ்சுக்காம, சிறப்பா செயல்படறதா சொல்றீங்க! இந்த ஆறு மாசத்தில, தொழில் வளர்ச்சிக்கு பதிலா, தொழில் வீழ்ச்சிதான் ஏற்பட்டிருக்கு."
"எங்கே தப்பு பண்ணி இருக்கேன்னு பார்த்து, இனிமே சரியா செயல்படறேன் சார்" என்றார் அருணகிரி, பதைபதைப்புடன்.
"அதுக்கு நேரம் இல்ல, அருணகிரி. உங்க மோசமான செயல்பாட்டால உங்க பேரைக் கெடுத்துக்கிட்டதோட, இந்த அரசாங்கத்துக்கும் கெட்ட பேரை வாங்கிக் கொடுத்திருக்காங்க. அதை விட முக்கியமா, இந்த மாநிலத்தோட தொழில் வளர்ச்சிக்கே ஊறு விளைவிச்சிருக்கீங்க. உங்க ராஜினாமாக் கடிதத்தை இன்னிக்கே எனக்கு அனுப்பிடுங்க. நீங்க போகலாம்!" என்றார் முதல்வர்.
குறள் 836:
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால், செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.
"நீங்க அவர் அண்ணன்னு சொல்லி, அவர் எப்ப வருவார்னு ஆஃபீஸ்ல கேக்க வேண்டியதுதானே?"
"அவனோட செகரட்டரிகிட்ட கேட்டேன். அந்தப் பொண்ணு தெரியாதுன்னு சொல்லிட்டா. எங்கே போயிருக்கான்னும் தெரியாதாம். இதில வேடிக்கை என்னன்னா, நான் அவகிட்ட பேசிட்டு வெளியில வந்தப்ப, 'சாரைப் பாக்க வரவங்க நிறைய பேர் சொந்தக்காரங்கன்னுதான் சொல்லிக்கறாங்க'ன்னு அவ யார்கிட்டயோ சொல்லிக்கிட்டிருக்கா!"
"நீங்க அவரோட சொந்த அண்ணன். அவரைப் பார்க்க நீங்க ஏன் ஆஃபீசுக்குப் போகணும்? அவர் வீட்டுக்கே போகலாமே!"
"போகலாம். அங்கே அவன் மனைவி இருப்பாளேன்னுதான் தயக்கமா இருக்கு!"
"சரளா நல்ல பொண்ணுங்க. நாங்க சந்திக்கறப்பல்லாம், எங்கிட்ட நல்லாதான் பேசுவா. என்ன, உங்க தம்பியோட பிசினஸ் வேகமா வளர்ந்து அவர் உயர்ந்த நிலைக்குப் போனப்பறம், நாம அவர்கிட்ட அதிக நெருக்கம் வச்சுக்கல. அவர் வீட்டுக்கு நீங்க போனா, சரளா உங்ககிட்ட மரியாதையாத்தான் நடந்துப்பா" என்றாள் பங்கஜம்.
"அது சரிதான். ஆனா, அவன் மனைவி பக்கத்தில இருக்கறப்ப, அவன்கிட்ட உதவி கேக்கறதுக்கு எனக்கு சங்கடமா இருக்கும்!" என்றார் சத்யம்.
"நம்ம பையனோட படிப்புக்காகப் பண உதவி கேக்கப் போறோம். அதுவும் கடனாத்தான் கேக்கப் போறோம். அவ எதுவும் நினைச்சுக்க மாட்டா!" என்றாள் பங்கஜம்.
சத்யம் தன் தம்பி முருகன் வீட்டுக்குச் சென்றபோது, அதுவும் ஒரு அலுவலகம் போல்தான் இருந்தது. முன்னறையில் மேஜை நாற்காலி போடப்பட்டு, ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். மேஜையில் இருந்த பெயர்ப்பலகையில் 'குமார் - அந்தரங்கச் செயலர்' என்று எழுதப்பட்டிருந்தது..
ஏற்கெனவே நான்கைந்து பேர் காத்திருந்ததைப் பார்த்த சத்யம், சற்றுத் தயங்கி விட்டுக் குமாரிடம் சென்றார்.
"சார்! வரிசையில வாங்க. உங்களுக்கு முன்னால நாலைஞ்சு பேர் இருக்காங்க!" என்றான் குமார்.
"நான் முருகனோட அண்ணன். அவனைப் பாக்கணும். நான் உள்ளே போகலாம் இல்ல?" என்றார் சத்யம், சற்றுக் கோபத்துடன்.
"சாரி சார்! உக்காருங்க. சார்கிட்ட கேட்டுக்கிட்டு வரேன்!" என்று எழுந்த குமார், "உங்க பேர் என்ன சொன்னீங்க?" என்றான்.
"முருகனோட அண்ணன்னு சொன்னேனே!"
"தப்பா நினைச்சுக்காதீங்க சார்! சாரைப் பார்க்க வரவங்க நிறைய பேர் தங்களை சாரோட சொந்தக்காரர்னுதான் சொல்றாங்க. அந்த மாதிரி சொல்றவங்களை சார்கிட்ட அனுப்பினா, அவங்க ஏதாவது தூரத்து சொந்தமா இருப்பாங்க. அப்புறம், சார் என்னைத் திட்டுவாரு. அதனாலதான் பேர் கேட்டேன்" என்றான் குமார், மன்னிப்புக் கேட்கும் குரலில்
"என் பேர் சத்யம். முருகனோட கூடப் பொறந்த அண்ணன்!" என்றார் சத்யம், எரிச்சலுடன்.
சில விநாடிகளில், முருகனே வந்து, "வா அண்ணே!" என்று சத்யத்தின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். சத்யம் பெருமையுடன் குமாரைப் பார்த்து விட்டு, முருகனுடன் உள்ளே சென்றார்.
சத்யம் உள்ளே சென்று அமர்ந்ததும், "தப்பா நினைச்சுக்காதே, அண்ணே! நம்ம தூரத்து சொந்தக்காரங்க சில பேர் வந்து பணம் கேட்டுத் தொந்தரவு பண்றாங்க. அதனாலதான், யாருன்னு தெரியாம எல்லாரையும் உள்ளே அனுப்பாதேன்னு குமார்கிட்ட சொல்லி இருக்கேன்" என்றான் முருகன்.
தானே பண உதவி கேட்கத்தானே வந்திருக்கிறோம் என்று நினைத்து, சங்கடமாக உணர்ந்தார் சத்யம்.
"நான் நிறைய உதவி செய்யறவன்தான். வெளியில உக்காந்துக்கிட்டு இருக்கறவங்கள்ளாம் கூட ஏதாவது உதவி கேட்டுத்தான் வந்திருப்பாங்க. குமாரே அவங்ககிட்ட பேசி, அவங்களுக்கு உதவி செய்யறதா வேண்டாமா, எவ்வளவு கொடுக்கலாம் எல்லாம் முடிவு செஞ்சு எங்கிட்ட சொல்லுவான். நான் செக் போடச் சொல்லிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடுவேன். அவங்க முகத்தைக் கூட நான் பாக்கறதில்ல!" என்றான் முருகன், தொடர்ந்து.
''யார் என்னன்னு பாக்காம, உன் செகரட்டரி சொல்றதை வச்சுக்கிட்டு அவங்களுக்கு உதவி செஞ்சா, அது சரியா இருக்குமா? உன் செகரட்டரியே தகுதி இல்லாதவங்களுக்கோ, தனக்கு வேண்டியவங்களுக்கோ உதவி செஞ்சு உன் பணத்தை வீணடிக்கலாம் இல்ல?' என்று நினைத்துக் கொண்ட சத்யம், உதவி கேட்டு வந்த தான் கருத்துக் கூறுவது பொருத்தமாக இருக்காது என்று நினைத்து, "உன் ஆஃபீசுக்குப் போயிருந்தேன். அங்கேயும் நிறைய பேர் இருந்தாங்க. உதவி கேக்கறவங்க ஆஃபீசுக்கும் வருவாங்களா?" என்றார்.
"வருவாங்க. அங்கேயும் இதே மாதிரி ஏற்பாடுதான். என்னோட பி ஏதான் பாத்து முடிவு செய்வா" என்ற முருகன், "நீ ஏன் அங்கே போனே? வீட்டுக்கே வந்திருக்க வேண்டியதுதானே? ஆஃபீசுக்கு வரதுன்னா, ஃபோன் பண்ணிட்டு நான் இருக்கற நேரத்தில வந்திருக்கலாமே!" என்றான், தொடர்ந்து.
"வெளியில போய் ஃபோன் பண்ணிட்டு வரதுக்கு, நேரேயே போய்ப் பாக்கலாமேன்னு நினைச்சேன்!" என்ற சத்யம், விஷயத்தைச் சொல்ல இன்னும் தயங்கியவராக, "சரளா வீட்டில இல்லையா?" என்றார்.
"அவ லேடீஸ் கிளப் மீட்டிங்குக்குப் போயிருக்கா. மாசத்துக்கு ஒரு தடவை மீட்டிங், லஞ்ச்சோட. அநேகமா எல்லாக் கூட்டத்துக்குமே லஞ்ச் செலவை அவதான் ஏத்துப்பா!" என்றான் முருகன், பெருமையுடன்.
'எப்படியெல்லாம் பணத்தை வீண்டிக்கிறான்!' என்று நினைத்த சத்யம், அதனால், தனக்கு உதவத் தயங்க மாட்டான் என்று நினைத்து, சட்டென்று விஷயத்துக்கு வந்தார்.
தன் மகன் அருணுக்குப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்திருப்பதாகவும், கல்லூரிக் கட்டணம் செலுத்த இரண்டு லட்ச ரூபாய் வேண்டுமென்றும், வங்கியில் கல்விக் கடனுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும், ஓரிரு மாதங்களில் அது கிடைத்தவுடன், பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் முருகனிடம் தயக்கத்ததுடனும், சங்கடத்துடனும் சொல்லி முடித்தார் சத்யம்.
முருகன் இன்டர்காமில் குமாரை அழைத்து, "குமார் ஐயாயிரம் ரூபாய்க்கு ஒரு செக் போட்டு எடுத்துக்கிட்டு வா!... ஆமாம். பேரர் செக்தான்" என்று கூறி ரிசீவரை வைத்து விட்டு, சத்யத்திடம் திரும்பி, "தப்பா நினைச்சுக்காதே, அண்ணே! நான் யாருக்கும் கடன் கொடுக்கறதில்ல. ஐயாயிரம் ரூபாய்க்கு பேரர் செக் கொடுக்கறேன். இந்தப் பணத்தை நீ திருப்பிக் கொடுக்க வேண்டாம். அருணோட படிப்புக்கு நான் செய்யற சின்ன உதவியா இருக்கட்டும்!" என்றான், சிரித்தபடியே.
குறள் 837:
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடையும்போது, அந்நியர் பலர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் (அவனிடமிருந்து உதவி எதுவும் கிடைக்காமல்) துன்பத்தில் வாடுவர்.
கந்தப்பன் செல்வகுமாரின் அமைச்சரவையில் ஏதோ ஒரு துறைக்கு அமைச்சராக இருந்தார். செல்வகுமாரின் அரசில், செல்வகுமார் மட்டுமே அதிகாரமும் வல்லமையும் பெற்றவர், மற்றவர்கள் ஒன்று என்ற இலக்கத்துக்குப் பின் அணிவகுத்து நிற்கும் பூஜ்யங்கள் என்று கருதப்பட்டதால், கந்தப்பன் என்று ஒரு அமைச்சர் இருந்தது கூடப் பலருக்குத் தெரியாது.
"கட்சியில மூத்த தலைவர்கள் நாம இவ்வளவு பேர் இருக்கோம். அறிவு, அனுபவம் எதுவுமே இல்லாத இந்த ஆளை, ஐயா முதல்வர் ஆக்கிட்டுப் போயிட்டாரே!" என்று மூத்த தலைவர்கள் தங்களுக்குள் புலம்பினாலும், செல்வகுமாருக்கு அடிமைகளாக இருந்து பழகி விட்ட அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
துவக்கத்தில், தான் ஒரு சாதாரண மனிதன், ஐயாவின் கருணையால் முதல்வரானவன் என்று தன்னைப் பற்றி அடக்கமாகக் கூறிக் கொண்ட கந்தப்பன், சிறிது சிறிதாகத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்.
ஒரு முறை சிறைக்குச் சென்று செல்வகுமாரைச் சந்தித்து விட்டு வந்தவர், அதற்குப் பிறகு அவரைச் சந்திக்கச் செல்லவில்லை. மற்ற அமைச்சர்களும் செல்லக் கூடாது என்று அவர்களுக்கு ரகசியமாக உத்தரவு போட்டு விட்டார்.
அப்படி எந்த அமைச்சராவது சென்று பார்த்தால், அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார் என்று கந்தப்பன் எச்சரித்திருந்ததால், மூத்த அமைச்சர்கள் கூடச் சிறைக்குச் சென்று செல்வகுமாரைச் சந்திக்க முயலவில்லை.
சில சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைக்குச் சென்று செல்வகுமாரைச் சந்தித்து, கந்தப்பனின் செயல்பாடு பற்றிக் கூறினர்.
"கொஞ்ச நாள் காத்திருங்க. சிறையிலிருந்துக்கிட்டே அவனைத் தூக்கி அடிக்கிறேன்!" என்று வீரமாகச் சூளுரைத்தார் செல்வகுமார்.
கந்தப்பனின் அதிகார மமதை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. கட்சியின் மூத்த நிர்வாகிகளைக் கையில் போட்டுக் கொண்டு, கட்சியின் உயர்மட்டக் கூழுவைக் கூட்டிக் கட்சியின் நிரந்தரத் தலைவராக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த செல்வகுமாரை நீக்கி விட்டுத் தன்னைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கச் செய்தார்.
கந்தப்பன் முதல்வராக இருந்ததுடன், கட்சித் தலைவராகவும் ஆகி விட்டதால், கந்தப்பனை எதிர்ப்பது கடினம் என்று புரிந்து கொண்டு, எல்லா அமைச்சர்களும், கட்சியின் மூத்த தலைவர்களும் கந்தப்பனின் அதிகாரத்துக்குப் பணிந்தனர்.
அறிவும், அனுபவமும் இல்லாத நிலையில், கந்தப்பனின் ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகள் மிகுந்திருந்தன. ஊழல் புகார்களும் நிறைய எழுந்தன.
மக்கள் கந்தப்பனின் ஆட்சியின் மீது வெறுப்படைந்திருந்தாலும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வரப் போகும் தேர்தல் வரை அவரை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அனைவரும் உணர்ந்திருந்தனர்.
சிறையில் செல்வகுமாரைச் சந்தித்த அவருடைய விசுவாசியான கருணாகரன், கந்தப்பனின் அத்துமீறல்களையும், தவறான செயல்பாடுகளையும் பற்றி அவரிடம் விரிவாகப் பேசினார்.
"தெரியும். ஜெயில்ல எனக்குச் செய்திப் பத்திரிகைகள் கொடுக்கறாங்க!" என்றார் செல்வகுமார், விரக்தியுடன்.
"என்ன ஐயா இது! கந்தப்பனோட அட்டகாசம் தாங்க முடியல. சட்டமன்ற உறுப்பினர்கள் பல பேர் அவனுக்கு எதிராத்தான் இருக்காங்க. நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க. அவனைக் கவுத்துடலாம்" என்றார்
"கவுத்துட்டு? நமக்கு ரொம்ப குறுகிய பெரும்பான்மைதான் இருக்கு. பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அவன் பின்னால போனாலும், நமக்குப் பெரும்பான்மை போயிடும். அப்புறம், இன்னொத்தரை வச்சு எப்படி ஆட்சி அமைக்க முடியும்? இப்போதைக்கு நம்ம கட்சி ஆட்சி நடக்குதுன்னு திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான்!"
"என்னங்க, இப்படிச் சொல்றீங்க? அப்ப, அவனை எதுவும் செய்ய முடியாதா?"
"எனக்கு விசுவாசமா இருப்பான்னுதான் அவனைப் போட்டேன். அவன் ஒரு முட்டாளா இருக்கறது நமக்கு வசதியா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, குரங்குக்குக் கள்ளு ஊத்திக் கொடுத்த மாதிரி ஆயிடுச்சு. இன்னும் ரெண்டு வருஷத்தில நான் வெளியில வருவேன். அதுக்கப்பறம் தேர்தலுக்கு ஒரு வருஷம் இருக்கு. அதுக்குள்ள ஏதாவது செய்ய முடியுமான்னு அப்புறம்தான் பாக்கணும்!" என்றார் செல்வகுமார்.
"அதுக்குள்ள, அவன் ஆட்சியையும், கட்சியையும் எந்த அளவுக்குச் சீரழிக்கப் போறானோ!" என்றார் கருணாகரன், கவலையுடன்.
குறள் 838:
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
பேதையின் (அறிவற்றவனின்) கையில் ஒரு பொருள் கிடைத்தால், (அவன் நிலைமை) பித்துப் பிடித்த ஒருவன் கள் குடித்து மயங்கியது போன்று ஆகும்.
"அப்படியா?" என்றான் கண்ணபிரான்.
இன்னும் சிறிது நேரம், தான் கேள்விப்பட்ட திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய 'சுவையான' தகவல்கள் பற்றிப் பேசி விட்டு, ராம்பிரசாத் கிளம்பினான்.
ராம்பிரசாத் கிளம்பிச் சென்றதும், "நீங்க நல்லாப் படிச்சவர், அறிவாளி. சீரியஸான விஷயங்கள்ள ஆர்வம் உள்ளவர். இது மாதிரி உருப்படி இல்லாத விஷயங்களைப் பேசற இவர் எப்படி உங்களுக்கு நண்பரா அமைஞ்சாரு?" என்றாள் கண்ணபிரானின் மனைவி கிருத்திகா, சிரித்துக் கொண்டே.
"நண்பர்கள் பலவிதமா இருப்பாங்க. இவன் ஒரு விதம். அவ்வளவுதான். அவனுக்கு எது தெரியுமோ, எதில ஆர்வம் இருக்கோ, அதைப் பத்திதானே அவனால பேச முடியும்?" என்றான் கண்ணபிரான்.
"உங்க நண்பர்கள்ள பல பேர் தத்துவம், இலக்கியம் மாதிரி விஷயங்களைப் பேசறவங்க. மத்தவங்க அப்படி இல்லாட்டாலும், புத்திசாலிகள். அவங்களோட பழகிட்டு, இவரோட பழகறது உங்களுக்குக் கடினமா இல்லையா?"
சற்று யோசித்த கண்ணபிரான், "ராஜன்னு எனக்கு ஒரு நண்பன் இருந்தானே, உனக்கு நினைவிருக்கா?" என்றான்.
"ஏன் நினைவில்லாம? உங்களோட ரொம்ப நெருங்கின நண்பராச்சே அவர்! நீங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சா, மணிக்கணக்காப் பேசிக்கிட்டிருப்பீங்க. கல்யாணம் ஆன புதுசில, 'என்ன இவரு, தனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு, மனைவின்னு ஒருத்தி இருக்காங்கற நினைவே இல்லாம, தன் நண்பரோட மணிக்கணக்காப் பேசிக்கிட்டிருக்காரே'ன்னு வருத்தப்பட்டிருக்கேன். ஏன், உங்ககிட்ட சொல்லி சண்டை கூடப் போட்டிருக்கேன். ஏன் திடீர்னு அவரைப் பத்திக் கேக்கறீங்க?"
"ஏதோ ஒரு விஷயத்தில என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு, அவன் என்னோட நட்பை முறிச்சுக்கிட்டுப் போனதைப் பத்தி நான் எவ்வளவு வருத்தப்பட்டிருக்கேன்னு உனக்குத் தெரியும், இல்ல?"
"ஆமாம். இன்னிவரைக்கும், அவர் பிரிஞ்சு போனதைப் பத்தி நீங்க வருத்தப்பட்டுக்கிட்டுத்தான் இருக்கீங்க. இப்ப கூட, அவரைப் பத்திப் பேச்சை எடுக்கறப்ப, உங்க முகம் வாடிடுச்சே!"
"ஒருவேளை, இந்த ராம்பிரசாத் என்னோட சண்டை போட்டுட்டு என் நட்பை முறிச்சுக்கிட்டுப் போனான்னு வச்சுக்கயேன், அது எனக்கு ஒரு இழப்பாகவே தெரியாது. ஏன்னா, அவன் எங்கிட்ட பேசறதெல்லாம் அர்த்தம் இல்லாத, உருப்படி இல்லாத விஷயங்களைப் பத்தித்தானே? அவனோட நட்பு முறிஞ்சாலும், அது எனக்கு எந்தத் துன்பத்தையும் கொடுக்காதுங்கறதால, அவனோட நட்பு ரொம்ப இனிமையானதுன்னு வச்சுக்கலாம் இல்ல?"
சற்று முன்பு வாடி இருந்த கண்ணபிரானின் முகத்தில், இப்போது சிரிப்பு இருந்தது. அவன் சிரிப்பில் கிருத்திகாவும் கலந்து கொண்டாள்.
குறள் 839:
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.
பேதைகளுடன் (அறிவற்றவர்களுடன்) கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால், அவர்களிடமிருந்து பிரியும்போது, எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை.
"பேச்சாளர்களை ஏற்பாடு செஞ்சுட்டு, பட்டியலை உங்ககிட்ட காட்டறேன்!" என்றார் செயலாளர் கோபி.
சில நாட்கள் கழித்து, செயலாளர் காட்டிய பட்டியலைக் காட்டியதும், "பூவரசன்னு ஒத்தரைப் போட்டிருக்கீங்களே, அவர் யாரு? நான் கேள்விப்பட்டதில்லையே!" என்றார் சாரங்கபாணி.
"என்ன சார், இப்படிச் சொல்றீங்க? பத்திரிகைகள்ள நிறையத் தொடர்கதைகள் எழுதறாரே! இன்னிக்கு இளைஞர்கள் மத்தியில அவர்தான் ரொம்பப் பிரபலம்!" என்றார் கோபி.
"அப்படியா? எனக்குத் தெரியாது. நான் பத்திரிகைகள் படிக்கறதில்ல. அவற்றில் வர கதைகளைப் பத்தியும் எனக்கு எதுவும் தெரியாது. நல்லாப் பேசுவார் இல்ல?"
"பிரமாதமாப் பேசுவார் சார்!" என்றார் கோபி.
பத்திரிகைகள் படிக்கும் பழக்கமுள்ள தன் மனைவி சுந்தரியிடம், "பூவரசன்ங்கற எழுத்தாளரைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கியா?" என்றார் சாரங்கபாணி.
"கேள்விப்படாம என்ன? எந்தப் பத்திரிகையை எடுத்தாலும், அவர் கதைதான் இருக்கும். எழுத்தாளர்களிலேயே இன்னிக்கு அவர்தான் ரொம்பப் பிரபலம். எதுக்குக் கேக்கறீங்க?" என்றாள் சுந்தரி.
"அவரை எங்க இலக்கிய மன்றத்தில பேசறதுக்குக் கூப்பிட்டிருக்கோம். கோபிதான் ஏற்பாடு செஞ்சாரு. எனக்கு அவரைப் பத்தித் தெரியாது. அதுதான் உன்னைக் கேட்டேன்!"
"நீங்களும் அவரைக் கூப்பிட ஆரம்பிச்சுட்டீங்களா?" என்றாள் சுந்தரி.
சுந்தரி சொன்னதன் பொருள் சாரங்கபாணிக்கு அப்போது விளவ்கவில்லை!
"ஆமாம், அன்னிக்கு நான் பூவரசனைப் பத்திக் கேட்டப்ப, அவர் ரொம்ப நல்ல எழுத்தாளர்னு சொன்னியே!" என்றார் சாரங்கபாணி..
"நல்ல எழுத்தாளர்னு சொல்லல, ரொம்பப் பிரபலமானவர்னு சொன்னேன். ஏன், என்ன ஆச்சு? நல்லாப் பேசினார் இல்ல?" என்றாள் சுந்தரி.
"என்னத்தைச் சொல்ல? திருஷ்டிப் பரிகாரம் மாதிரி ஆயிடுச்சு. மற்ற அஞ்சு பேச்சாளர்களும் அறிஞர்கள். அவங்க தங்களுக்குக் கொடுத்த தலைப்புகளைப் பத்தி ஆழமா, அருமையா பேசினாங்க. ஆனா பூவரசன், தலைப்போட தன்மையைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காம, கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லாம, விளையாட்டுத்தனமாப் பேசினாரு. ரொம்ப தரக்குறைவாகவும் இருந்தது. அவர் பேசறப்ப, உறுப்பினர்கள் எல்லாரும் விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி முகத்தை வச்சுக்கிட்டிருந்தாங்க. கூட்டம் முடிஞ்சதும், இவரை எதுக்கு சார் கூப்பிட்டீங்கன்னு என்னை வறுத்து எடுத்துட்டாங்க. கோபியைக் கேட்டா, அவர் 'எனக்குத் தெரியாது சார், அவர் பிரபலமானவராச்சேன்னு கூப்பிட்டேன்'னு சொல்றாரு. நல்ல பாலோட, அழுக்குத் தண்ணியைக் கலந்த மாதிரி ஆயிடுச்சு!" என்றார் சாரங்கபாணி, வருத்தத்துடன்.
"அவரோட இயல்பு அப்படித்தாங்க. அவர் எழுதறதும் அப்படித்தான். ஆனா, அதை ரசிக்க ஒரு கூட்டம் இருக்கு. உங்க இலக்கிய மன்றக் கூட்டங்கள்ள பேசறதுக்கு அவர் பொருத்தமா இருக்க மாட்டாருன்னு அன்னிக்கு நீங்க சொன்னப்பவே எனக்குத் தோணிச்சு. நீங்க அவரை ஏற்பாடு செஞ்சப்பறம், அவரைப் பத்தித் தப்பா சொல்லி, உங்களைக் கவலைப்பட வைக்க வேண்டாம்னுதான் நான் எதுவும் சொல்லல!" என்றாள் சுந்தரி.
"பேச்சாளர்களைத் தேர்ந்தெடுக்கறதில எவ்வளவு கவனமா இருக்கணுங்கறதுக்கு எனக்கு இது ஒரு பாடம்!" என்றார் சாரங்கபாணி.
குறள் 840:
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாத காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.
No comments:
Post a Comment