Friday, December 28, 2018

389. விலை போன விட்டல்?

"இந்த அரசாங்கத்துக்கு இன்னும் 30 நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன். அதற்குள் இந்த அரசு ஊழல் புகார்களை விசாரிக்க அதிகாரம் பெற்ற 'மக்கள் காவல்' அமைப்பை ஏற்படுத்தாவிட்டால், நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்"

சமூகப் போராளி விட்டல் இந்த அறிவிப்பை விடுத்து 20 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால் அரசாங்கம் இதுவரை 'மக்கள் காவல்' அமைப்பை ஏற்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அது எப்படிப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றிப் பல்வேறு தரப்பு மக்களிடமும் கருத்துக் கேட்டு வருவதாகவும், இந்தக் கருத்துக் கேட்பு முடிந்து, பெரும்பாலான மக்கள் விரும்பும் வகையில், 'மக்கள் காவல்' அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவித்த பிரதமர், விட்டல் தன் உண்ணாவிரத  யோசனையைக் கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், விட்டல் இந்த பதிலை ஏற்கவில்லை. அரசாங்கம்  நேரம் கடத்துகிறது என்றும், இந்தக் கருத்துக் கேட்புகள் முடிந்து சட்டம் இயற்றப்பட்ட இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகி விடும் என்றும், அதற்குள் அடுத்த தேர்தல் வந்து விடும் என்றும் குற்றம் சாட்டிய விட்டல், திட்டமிட்டபடி தான் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறினார்.

அரசாங்கத்தின் சார்பாக சில அமைச்சர்கள் விட்டலைச் சந்தித்துப் பேசினர். ஆனால் விட்டல் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

சில பத்திரிகை ஆசிரியர்களும், தொலைக்காட்சி சானல் நிர்வாகிகளும் கூட விட்டலைச் சந்தித்துப் பேசினர். விட்டலிடம் தாங்கள் பேசியது என்ன என்பதை அவர்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். அரசாங்கம் தனக்கு வேண்டிய ஊடகவியலாளர்கள் மூலம் விட்டலுக்கு அழுத்தம் கொடுப்பதாக சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

உண்ணாவிரதம் துவங்க வேண்டிய தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பு தனக்கு உடல் நிலை சரியில்லாததால், தன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தள்ளி வைப்பதாக விட்டல் அறிவித்தார்.

'விட்டல் விலை போய் விட்டார் ' என்று சமூக ஊடகங்கள் ஒருமித்த குரலில் உரக்கக் கூவின.

"என்ன சார் இப்படிப் பண்ணிட்டீங்க?" என்றார் விட்டலின் நண்பரும் பத்திரிகை நிருபருமான சதீஷ்.

"நீங்கதான் காரணம்!" என்றார் விட்டல்.

"நானா, நான் என்ன செஞ்சேன்?"

"நீங்கன்னா, உங்க பத்திரிகைத்துறை நண்பர்களைச் சொன்னேன்"

"ஆமாம். பத்திரிகைத் துறையிலேந்து சில பேர் உங்களை சந்திச்சாங்களே! அவங்க உங்களை உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்னு சொன்னாங்களா?"

"அப்படிச் சொல்லல. ஆனா, அவங்க சொன்ன ஒரு விஷயம் என்னை யோசிக்க வச்சது."

"என்ன விஷயம் அது?" என்றார் சதீஷ்.

"சமீபகாலமா, இந்த அரசாங்கத்து மேல, குறிப்பா பிரதமர் மேல கடுமையான விமரிசனம் வருது. விமரிசனம் வரது தப்பு இல்ல. ஆனா, பிரதமரைத் தரக்குறைவாத் தாக்கி சில விமரிசனம்லாம் வருது."

"ஆமாம். நான் கூடப் பாத்திருக்கேன். எங்க பத்திரிகை கூட இந்த அரசாங்கத்தைக் கடுமையா விமரிசக்கற பத்திரிகைதான். ஆனா சில தரக்குறைவான விமரிசனங்கள் வரதை நாங்களே கண்டிச்சிருக்கோம்."

"பிரதமர் மென்மையானவர், விமரிசனங்களை சிரிச்சுக்கிட்டே ஏத்துக்கறவர்ங்கறதால சில பேரு அவரைக்  கொஞ்சம் அதிகமாவே விமர்சிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அரசாங்கத்தில் சில பேரு இப்படி விமரிசனம் செஞ்சவங்க மேல நடவடிக்கை எடுக்க வச்சிருக்காங்க. சில பேர் மேல வழக்கு, சில பேர் கைதுன்னு கொஞ்சம் கடுமையான நடவடிக்கை எல்லாம் எடுக்கப்பட்டிருக்கு. ஆனா,பிரதமருக்கு இது தெரிஞ்சதும், அந்த நடவடிக்கையை எல்லாம் ரத்து பண்ணச் சொல்லிட்டாராம். அரசாங்கத்தை யாரு எவ்வளவு கடுமையா விமரிசனம் செஞ்சாலும், அவங்களுக்கு பதில் சொல்லணுமே தவிர, அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கக் கூடாதுன்னு மற்ற அமைச்சர்கள் கிட்டயும், அதிகாரிகள்கிட்டயும் கடுமையா சொல்லி இருக்காரு."

"ஆச்சரியமா இருக்கே! இது உண்மையா? உங்களுக்கு இது எப்படித் தெரியும்?"

"என்னைச் சந்திச்ச பத்திரிகைக்காரங்க சொன்னதுதான்! சில ஊடகங்கள்ள எழுதின மாதிரி, அவங்க அரசாங்கம் அனுப்பி எங்கிட்ட வரல. அவங்களாகவேதான் வந்து எங்கிட்ட இதைச் சொன்னாங்க. தன்னைப் பத்தின கடுமையான விமர்சனத்தைப் பொறுத்துக்கற பிரதமர் நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கறவராத்தான் இருப்பார்னு எனக்குத் தோணிச்சு. அதனாலதான் இந்த அரசாங்கத்துக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுக்கலாம்னு என் உண்ணாவிரதத்தை ஒத்தி வச்சேன்" என்றார் விட்டல்.

"அது சரி. ஆனா இப்ப எல்லோரும் நீங்க விலை போயிட்டதா உங்களை இல்ல தப்பாப் பேசறாங்க?" என்றார் சதீஷ்.

"பரவாயில்ல.தன்னைப் பத்தின கடுமையான விமரிசனங்களைத் தாங்கிக்கற ஒரு அரசாங்கத்துக்காக நான் இந்த அவதூறைக் கொஞ்ச நாளைக்குத் தாங்கிக்கறேன்" என்றார் விட்டல்.
'
அரசியல் இயல் 
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)
குறள் 389:
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

பொருள்:
காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்குப்  பிறர் தன்னைக் கடிந்து பேசுவதையும் பொறுத்துக்கொள்ளும் பண்புடைய அரசனின் ஆட்சியில் நாடு நலம் பெறும்.

Monday, December 24, 2018

388. இன்று போய் நாளை வா!

செல்லமுத்து அந்த கிராமத்துக்கு ஒட்டு கேட்கச் சென்றபோது, அவன் உடன் வந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சொன்னார் "அண்ணே!  இந்த ஊர்ல ஒருத்தர் இருக்கார். அவர் சொல்ற ஆளுக்குத்தான் எல்லாரும் ஒட்டுப் போடுவாங்க."

"ஓ! அப்ப நம்ம வேலை சுலபமாப்  போச்சு. அவரைப் பாத்துப் பேசி, அவருக்கு செய்ய வேண்டியதை செஞ்சு, மொத்த ஓட்டையும் நாம அள்ளிடலாமே. அவரு பேரு என்ன? அவர் வீடு எங்கேன்னு தெரியுமா உங்களுக்கு?"

குழந்தைசாமி என்ற அந்த நபரின் வீடு என்று ஒரு சிறிய ஒட்டு வீட்டைக் காட்டினார்கள்.

வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த இளைஞனைப் பார்த்து, "ஏம்ப்பா, குழந்தைசாமி இருக்காரா?" என்றான் செல்லமுத்து அதிகாரமாக.

"என்னங்க, இவருதாங்க குழந்தைசாமி" என்றார் அவன் கூட வந்தவர்.

"ஓ! நீதானா அது?  பேருக்கு ஏத்தாப்பல குழந்தை மாதிரிதான்  இருக்கே! இவ்வளவு செல்வாக்கு இருக்கற நீ நம்ப கட்சியில சேந்துடலாமே! தலைவர் கிட்ட சொல்லி உனக்கு இளைஞர் அணியில ஏதாவது பதவி வாங்கித் தரேன்" என்றான் செல்லமுத்து.

"உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க? உங்களை உக்கார வைக்க இங்க இடம் இல்லை. வெளியில இருக்கிற மரத்தடியில் உக்காந்து பேசலாமா?" என்ற குழந்தைசாமி, உள்ளே திரும்பி,"பொன்னம்மா! வந்திருக்கிறவங்களுக்குக் கொஞ்சம் மோர் கொண்டு வா" என்றான்.

வெளியில் வந்து மரத்தடியில் உட்கார்ந்ததும், செல்லமுத்து, "தம்பி! நான் சட்டமன்றத் தேர்தல்ல ஆளுங்கட்சி வேட்பாளரா நிக்கறேன். உனக்கு இந்த ஊர்ல செல்வாக்கு இருக்கறதா சொன்னாங்க. இந்த ஊர்ல இருக்கற மொத்த ஓட்டையும் நீ எனக்கு வாங்கிக் கொடு. உனக்கு என்ன செய்யணுமோ செய்யறேன்." என்றான் செல்லமுத்து.

குழந்தைசாமி பதில் சொல்வதற்குள், நான்கைந்து பேர் அங்கே வந்தனர். குழந்தைசாமியுடன் புதிதாகச் சிலர் இருப்பதைக் கண்டு தயங்கினர்.

"சொல்லுங்க!" என்றான் குழந்தைசாமி அவர்களைப் பார்த்து.

"இங்க பாரு குழந்தை, நேத்துதான் ஊர்ல வாய்க்கால்லேந்து முறை வச்சுத் தண்ணி பாய்ச்சிக்க ஒரு ஏற்பாடு சொல்லி எல்லாரையும் ஒத்துக்க வச்சே. இன்னிக்கு என்னோட முறை. ஆனா தங்கப்பன் அவன் வயலுக்குத் தண்ணி பாச்சிக்கிட்டிருக்கான்" என்றார் அவர்.

"அப்படியா?" என்ற குழந்தைசாமி, "ஐயா, மன்னிச்சுக்கங்க! இதோ போய்ப் பாத்துட்டு வரேன். கொஞ்ச நேரம் இங்கியே  உக்காந்திருங்க" என்றான்.

"நாங்க சொல்றதைக் கேட்டுட்டுப்  போயேன் அப்பா!" என்றான் செல்லமுத்து.

"இல்லீங்க. ஊர்ப் பிரச்னையைத் தீக்கறதுதான் முக்கியம். நீங்க வேணும்னா நீங்க சொல்ல வேண்டியதைச் சொல்லிக்கிட்டு என் கூடவே வாங்களேன்" என்று சொல்லி எழுந்து நடக்க ஆரம்பித்தான் குழந்தைசாமி.

குழந்தைசாமி சென்றவுடன், செல்லமுத்து கோபத்துடன், அருகில் இருந்தவர்களிடம், "என்ன, இந்த ஆளு என்னை மதிக்கவே மாட்டேங்கறான். ரொம்பத் திமிர் பிடிச்சவன் போல இருப்பான் போலருக்கே!" என்றான்.

"அவனுக்கு ஊர்ப் பிரச்னைதாங்க முக்கியம்"

"அப்படி என்ன செல்வாக்கு இவனுக்கு இந்த ஊர்ல? பணக்காரன் மாதிரியும் தெரியல. இவ்வளவு சின்ன வீட்டில இருக்கான்!" என்றான் செல்லமுத்து.
"ஊர்ப் பிரச்னைகளைத் தலையில போட்டுக்கிட்டு செய்வாங்க. அதனால்தான் ஊர்ல இவன் பேச்சுக்கு இவ்வளவு மரியாதை. ஊர்ல இருக்கற பணக்காரங்க, பெரிய மனுஷங்கல்லாம் கூட இவன் பேச்சுக்கு கட்டுப்படுவாங்க. இத்தனைக்கும் ஊர்க்காரங்க எவ்வளவோ கேட்டும், இவன் பஞ்சாயத்து தலைவர் போஸ்டுக்குக்கூட நிக்க மாட்டேன்னுட்டான். ஊர்க்காரங்க இவனை தெய்வமா நினைக்கறாங்க. யாருக்காவது ஏதாவது சொந்த பிரச்னைன்னா  கூட இவன்கிட்ட வந்து மொதல்ல சொல்லி அழுதுட்டுத்தான் கோவில்ல போய் வேண்டிப்பாங்கன்னா பாத்துக்கங்களேன்"

"அப்படிப்பட்ட ஆளா இருந்தா, நமக்கு ஒத்துவர மாட்டானே!" என்றான் செல்லமுத்து கவலையுடன்.

"இந்த ஊருக்குத் தேவையான எதையாவது செய்யறதா வாக்கு கொடுத்தீங்கன்னா, உங்களுக்கு ஓட்டு போடச் சொன்னாலும் சொல்லுவான்."

"சரி,பாக்கலாம். வந்ததுக்கு அவனைப் பாத்துட்டாவது போகலாம்" என்றான் செல்லமுத்து அவநம்பிக்கையுடன்.

அரை மணி நேரம் கழித்து அங்கே வந்த ஒரு ஆள், "ஐயா! ஊர்ல ஒரு பெண்ணுக்குப் பிரசவ வலி வந்துருச்சு. வண்டி ஓட்ட ஆள் யாரும் இல்லேன்னு குழந்தையே வண்டியில அவங்களை அழைச்சுக்கிட்டு பக்கத்து ஊர்ல இருக்கற ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கான். உங்களை இன்னொரு நாள் வரச்  சொன்னான். உங்க கிட்ட மன்னிப்புக் கேக்கச் சொன்னான்" என்றான்.
"
 அரசியல் இயல் 
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)
குறள் 388:
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

பொருள்:
நீதி தவறாமல் ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும் அரசன் மக்களுக்கு கடவுள் போல் கருதப்பட்டு போற்றப்படுவான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ!


459. தந்தையின் அறிவுரை.

முகுந்தன் அலுவலகத்துக்குக் கிளம்பும் முன் வழக்கம் போல் தன் தந்தையின் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்திருந்த அவரைப் பார்த்து, "ராத்தி...