Sunday, February 28, 2021

459. தந்தையின் அறிவுரை

முகுந்தன் அலுவலகத்துக்குக் கிளம்பும் முன் வழக்கம் போல் தன் தந்தையின் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்திருந்த அவரைப் பார்த்து, "ராத்திரி நல்லாத் தூங்கினீங்களாப்பா?"  என்றான்.

"ம்...ம்.." என்றார் ரத்தினசபாபதி, தூக்கம் வராமல் தான் படும் அவதியை மகனிடம் சொல்லி அவனை வருத்தப்படுத்துவானேன் என்ற எண்ணத்துடன்.

"சரி, வரேன். ஆஃபீசிலேந்து ராத்திரி வந்ததும் பாக்கறேன்" என்று சொல்லி விடை பெற்றான் முகுந்தன்.

முகுந்தன் அறையை விட்டு வெளியேறியதும், "எவ்வளவு உத்தமமான பிள்ளையைப் பெற்றிருக்கிறேன்! சிப்பியிலிருந்து முத்து பிறந்தது போல் எனக்கு இவன் வந்து பிறந்திருக்கிறனே!" என்று நெகிழ்ச்சியுடன் நினைத்துக் கொண்டார் ரத்தினசபாபதி.

ரத்தினசபாபதி வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அதுவே அவருக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு கவலையற்ற மனப்பான்மையை உருவாக்கி, அவர் மனத்தைப் பல தவறான திசைகளிலும் செலுத்தியது.

படிப்பில் அக்கறை காட்டாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதில் துவங்கிய அலட்சிய மனப்போக்கு குடி, சூதாட்டம் போன்ற பழக்கங்களுக்கும் இட்டுச் சென்றது.

ஒருபுறம் சரியான படிப்பும், வேலையும் இல்லாத நிலையில், மறுபுறம் அவருடைய தீய பழக்கங்களால் அவர் குடும்பச் சொத்து வேகமாகக் கரைந்தது.

தான் போகும் பாதை தவறென்று உணர்ந்து அவர் தன்னை மாற்றிக் கொள்ள முயன்றபோது, அவருடைய பெற்றோர்கள் மறைந்து விட்டனர். குடும்பச் சொத்தும் பெரும்பாலும் கரைந்து விட்டது.

ஒரே மகன் முகுந்தனைக் கூடச் சரியாக வளர்க்க முடியாத நிலை.

ஆயினும் முகுந்தன் சிறு வயதிலேயே தந்தையைப் பற்றியும், தன் குடும்பத்தின் நிலையையையும் நன்கு அறிந்து கொண்டவனாக மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள ஆரம்பித்தான்.

தந்தை செய்த தவறுகளை கவனமாகத் தவிர்ப்பது போல் அமைந்தன அவன் பழக்கங்களும் செயல்களும். எந்த ஒரு தீய பழக்கத்துக்கோ, ஆடம்பரச் செலவுகளுக்கோ இடம் கொடுக்காமல் மிகவும் கவனமாக இருந்து, அதிகம் படிக்க வசதியில்லாத நிலையில் தன் படிப்புக்கேற்ற ஒரு சிறிய வேலையில் சேர்ந்து தன் கடின உழைப்பாலும், நேர்மையான செயல்பாடுகளாலும் வாழ்க்கையில் ஓரளவுக்கு  நல்ல நிலைமைக்கும் வந்து விட்டான்.

தந்தையிடம் கடுமையாக ஒரு சொல் பேசியதில்லை. தாய் மறைந்த பிறகு, தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது அவரை அன்புடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொண்டான். 

'தாத்தாவோட சொத்தையெல்லாம் அழிச்சு என்னையும், அம்மாவையும் வறுமையான வாழ்க்கை வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளிட்டீங்களே!' என்று ஒரு நாள் தன்னிடம் அவன் கேட்பான் என்று அவர் பயந்து கொண்டிருந்தார். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை.

ஞாயிற்றுக்கிழமை முகுந்தன் வீட்டில் இருந்தபோது, ரத்தனசபாபதி அவனை அழைத்துத் தன் அருகில் உட்காரச் சொன்னார்.

"முகுந்தா நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேனோ தெரியாது.  உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டிருக்கேன். அதைச் சொல்லிடறேன்... நீ குணத்திலேயும், பழக்கங்களிலேயும் எனக்கு நேர்மாறா இருக்கே. நீ எல்லா விதத்திலேயும் சரியா இருக்க. ஆனா இன்னும் ஒரு விஷயத்தை நீ செஞ்சா நல்லா இருக்கும்னு எனக்குத் தோணுது" என்று சொல்லி நிறுத்தினார் ரத்தினசபாபதி.

"சொல்லுங்கப்பா!" என்றான் முகுந்தான்.

"நான் இந்த உலகத்தை விட்டுப் போனப்பறம் எனக்கு என்ன கதி கிடைக்குமோ தெரியாது. ஆனா உன்னோட நல்ல மனசுக்கும் குணத்துக்கும் உனக்கு நல்ல கதிதான் கிடைக்கும். சாவைப் பத்திப் பேசறேனேன்னு நினைக்காதே. நான் உயிரோட இருக்கறப்பதானே நான் சொல்ல நினைக்கற விஷயங்களைப் பேச முடியும்? எனக்கு இருந்த மாதிரி கெட்ட சகவாசம்லாம் உனக்கு இல்ல. அது ரொம்ப நல்ல விஷயம்தான். ஆனா நீ யாரோடயுமே சேராம ஒதுங்கி இருக்கற மாதிரி எனக்குத் தோணுது. சரிதானா?"

"ஆமாம்ப்பா. எனக்கு நண்பர்கள்னு யாரும் இல்ல. வீட்டிலேந்து வேலைக்குப் போறது, வேலை முடிஞ்சா வீடுன்னுதான் இருக்கேன். அதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு."

"நல்லதுதான். ஆனா நாம நல்லவங்களா இருக்கறதோட, நல்லவங்க சில பேரோடயாவது நெருக்கமாவும் இருக்கணும். அப்பதான் நம்மகிட்ட இருக்கற நல்லதை நிலைநிறுத்திக்க முடியும். இப்படியெல்லாம் யோசனை சொல்ல எனக்கு என்ன யோக்கியதை இருக்குன்னு நினைக்காதே. பெரியவங்க சொல்லி நான் தெரிஞ்சுக்கிட்டதைத்தான் சொல்றேன். நான் அதன்படி எல்லாம் நடக்கலைங்கறது வேற விஷயம்."

"இல்லப்பா. நான் அப்படி நினைக்கல. நீங்க சொல்லுங்க" என்றான் முகுந்தன்.

"அதனால, சமூக சேவையில ஈடுபட்டிருக்கறவங்க, ஆன்மீகத்தில இருக்கறவங்க இது மாதிரி சில நல்ல சிந்தனையும், நடத்தையும் இருக்கற சில பேர்கிட்ட நெருக்கமா இரு. அது உனக்கு நல்லதைக் கொடுக்கும்" என்றார் ரத்தினசபாபதி, மகன் தான் சொன்னதை மனதில் கொண்டு செயல்படுவான் என்ற நம்பிக்கையுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 459
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.

பொருள்:
மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும். 

Read 'Father's Advice' the English version of this story by the same author.
      குறள் 458      
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Saturday, February 27, 2021

458. தலைவர் தேர்தல்

'மூவர் இசைச் சங்கம்' துவங்கப்பட்டது முதல் அதன் தலைவராக இருந்த மாசிலாமணியின் மறைவுக்குப் பிறகு அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது.

சங்கத்தின் பல நிகழ்ச்சிகளுக்குப் பொருள் உதவி செய்தும் பல முன்னணிப் பாடகர்களைத் தானே நேரில் சென்று பார்த்து, அவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தும், அவ்வப்போது பலரிடமிருந்தும் நன்கொடை வசூலித்துக் கொடுத்தும் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கும், வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவி வந்த ராஜாமணிதான் அடுத்த தலைவராக வருவார் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது.

சங்கத்தின் உறுப்பினர்கள்தான் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தலைவர் பதவிக்கான தேர்தலை அறிவித்தார் சங்கத்தின் செயலர்.

துவக்கத்தில் தலைவர் பதவிக்குப் போட்டி இடுவதில் ராஜாமணி அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அவர் நண்பர்கள் அவரை வற்புறுத்தி வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தனர்.

"மாசிலாமணி தலைவரா இருந்தப்பவே, சங்கத்துக்கு அதிகமா உழைச்சவர் நீங்கதான். ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம நல்ல மனசோட, உங்களோட இசை ஆர்வத்தினால இவ்வளவு  தூரம் ஈடுபட்டு இந்தச் சங்கத்துக்கு இவ்வளவு செஞ்சிருக்கற உங்களைத் தவிர வேற ஒத்தர் தலைவரா வரதை எங்களால நினைச்சுப் பாக்கக் கூட முடியல" என்றனர் அவர்கள்.

ஆனல் மாசிலாமணியுடன் சேர்ந்து அந்தச் சங்கத்தைத் துவக்கிய மூத்த உறுப்பினரான கன்னையாவும் தலைவர் பதவிக்குத் தன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

"போட்டி எதுக்கு? நான் விலகிக்கறேன். கன்னையா ஒரு ஃபௌண்டர் மெம்பர். அவரே இருந்துட்டுப் போகட்டும்" என்றார் ராஜாமணி.

"என்னங்க நீங்க? சங்கத்தை ஆரம்பிச்ச சில பேர்ல கன்னையாவும் ஒத்தர்ங்கறது உண்மைதான். ஆனா, அவர் சங்கத்துக்கு ஒண்ணுமே செஞ்சதில்லையே! மாசிலாமணி போனதும், 'அண்ணன் எப்ப போவான், திண்ணை எப்ப காலியாகும்?'னு காத்துக்கிட்டிருந்த மாதிரி தலைவர் பதவிக்கு ஆசைப்படறாரு. நீங்க என்னன்னா அவரே இருந்துட்டுப் போகட்டும்னு சொல்றீங்க! உங்க நல்ல குணத்துக்காகவும் பெரிய மனசுக்காகவுமே நீங்கதான் தலைவரா வரணும். கன்னையாவுக்கு யாரும் ஓட்டுப் போட மாட்டாங்க. நீங்கதான் ஜெயிப்பீங்க!" என்றனர் அவருடைய ஆதரவாளர்கள்.

ஆனால் தேர்தல் முடிந்து ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது கன்னையாதான் வெற்றி பெற்றிருந்தார்!

"என்ன இப்படி ஆயிடுச்சு? நம்ம உறுப்பினர்களைப் புரிஞ்சுக்கவே முடியலியே! சங்கத்துக்காக இவ்வளவு செஞ்சிருக்கற, இவ்வளவு நல்ல மனனுஷனான நம்ம ராஜாமணி சாரை விட்டுட்டு சங்கத்துக்காக ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாத கன்னையாவுக்கு ஓட்டுப் போட்டிருக்காங்களே!" என்றார், ராஜாமணியின் ஆதரவாளர்களில் ஒருவரான மூர்த்தி.

"ராஜாமணி ரொம்ப நல்லவர்தான். சொக்கத் தங்கம்தான். ஆனா அவர் அந்த அரசியல் கட்சியில ஒரு முக்கிய உறுப்பினரா இருக்காரே! அந்தக் கட்சிக்கு அவ்வளவு நல்ல பேரு இல்லயே! அதனாலதான் பல பேரு அவருக்கு ஓட்டுப் போடலன்னு நினைக்கறேன்!" என்றார் ராஜாமணியின் நண்பரான சரவணன்.

"சார் நிக்கலேன்னுதான் சொன்னாரு. நாமதான் அவரை வற்புறுத்தி நிக்கச் சொன்னோம். இப்படி ஆச்சுன்னு தெரிஞ்சா வருத்தப்படுவாரு. சார் எங்கே இப்ப? இன்னும் அவருக்கு விஷயம் தெரியாதா?"

"ராஜாமணி அவங்க கட்சியோட பொதுக்குழுவில கலந்துக்கிட்டிருக்காரு. கூட்டம் முடிஞ்சதும் ஃபோன் பண்ணுவாரு. அவருக்கு அதிர்ச்சியாத்தான் இருக்கும். 'அந்தக் கட்சியில இருக்கறதால உங்க பேரு கெட்டுப் போகுது, வெளியில வந்துடுங்க'ன்னு எவ்வளவோ தடவை அவர்கிட்ட சொல்லி இருக்கேன். ஆனா எதனாலேயோ அவருக்கு அந்தக் கட்சி மேல ஒரு ஈடுபாடு. அதுக்கான விலையைத்தான் இப்ப கொடுத்திருக்காரு!" என்றார் சரவணன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 458
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.

பொருள்:
ஒருவர் மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும், அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே அவருக்கு வலிமை வந்து வாய்க்கும்.

Read 'Trinity Music Club' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                  காமத்துப்பால்

Tuesday, February 16, 2021

457. தொழிலதிபருடன் ஒரு பேட்டி

"எங்கள் சானலுக்குப் பேட்டி அளிக்கச் சம்மதித்ததற்கு முதலில் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். சிறிய அளவில் தொழில் தொடங்கி, அதைச் சிறிது சிறிதாக விரிவாக்கி ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இப்போது ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறீர்கள். இந்தச் சாதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"முதலில் இதை ஒரு சாதனையாக நான் நினைக்கவில்லை. என் 25 வயதில் இந்தத் தொழிலைத் தொடங்கியபோது, மற்றவர்களுக்குப் பயனளிக்கும் ஒரு சேவையை வழங்கி, அதை நேர்மையான விதத்தில் மார்க்கெடிங் செய்து பொருள் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் துவங்கினேன். அந்த நோக்கத்தில் உறுதியாக இருந்து, தரம், நியாயமான விலை, போட்டியாளர்களை எதிரிகளாக நினைக்காமல் தொழில் செய்வது போன்ற கோட்பாடுகளை உறுதியாகப் பின்பற்றி வந்ததால், எனக்கு இயல்பாகவே நன்மைகள் ஏற்பட்டன என்றுதான் நினைக்கிறேன்."

"நல்லது. ஒரு தொழிலதிபராக இருப்பதுடன், ரெஸ்பான்சிபிள் பீப்பிஸ் பார்ட்டியில் ஒரு முக்கியத் தலைவராகவும் நீங்கள் செயலாற்றி வந்திருக்கிறீர்கள். ஆர் பி பி கட்சியை நீங்கள் தேர்ந்தெடுத்ததறகுக் காரணம் என்ன?"

"ஆர் பி பி மற்ற அரசியல் கட்சிகள் மாதிரி இல்லை. ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக அது இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பெயரையே கட்சிக்கு வைத்தார் கட்சியைத் துவக்கிய ராம்ராஜ் அவர்கள். ராம்ராஜ் என்று அவர் பெயர் இருந்ததும் ஒரு பொருத்தம்தான். ஏனெனில் ராமராஜ்யம் என்று சிலர் ஒரு வெற்று கோஷமாகச் சொல்லி வந்ததற்கு மாறாக, ராமராஜ்யம் என்ற ஒரு லட்சிய அமைப்பில் அரசாங்கம் எப்படிச் செயல்பட வேண்டும், மக்களின் பொறுப்புகள் என்ன என்பதெற்கெல்லாம் ஒரு ப்ளூபிரின்ட்டை உருவாக்கினார் அவர். அதனால்தான் அந்தக் கட்சியில் சேர்ந்து என்னுடைய பங்களிப்பை அளிப்பது இந்த நாட்டின் குடிமகன் என்ற வகையில் என் பொறுப்பு என்று நினைத்தேன்."

"ஆனால் கட்சி துவங்கி 40 ஆண்டுகள் ஆகியும் உங்கள் கட்சி பெரிதாக வளரவில்லையே! தேர்தல்களில் உங்களால் இரண்டு மூன்று இடங்களுக்கு மேல் வெல்ல முடியவில்லையே!"

"கட்சியைத் தொடங்கும்போதே கட்சியின் நிலை இப்படித்தான் இருக்கும் என்பது ராம்ராஜ் அவர்களுக்குத் தெரியும். தன் கட்சியில் சேர விரும்வர்களிடம், 'இந்தக் கட்சியில் சேர்வதால் நீங்கள் எம் எல் ஏ, எம் பி ஆக முடியும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தால் இதில் சேராதீர்கள். சில நல்ல விஷயங்களை வலியுறுத்தவும், அவற்றுக்காகப் போராடவும் மன உறுதி இருந்தால் மட்டும் சேருங்கள்' என்று அவர் சொல்லி விட்டு அதற்குப் பிறகும் அவர்கள் சேர விரும்பினால்தான் அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்வார்!"

"வெற்றி பெற முடியாது என்று தெரிந்தே ராம்ராஜ் அவர்கள் இந்தக் கட்சியை ஏன் துவங்கினார்?"

"ராம்ராஜ் அவர்களிடம் நான் இதே கேள்வியைக் கேட்டபோது அவர் சொன்ன பதில் இது: ராஜாஜியிடம் ஒரு நிருபர் கேட்டாராம் நேரு மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருக்கிறாரே, அவரை எதிர்த்து அரசியலில் உங்களால் வெற்றி பெற முடியுமா என்று. அதற்கு ராஜாஜி சொன்ன பதில் இது. 'நேருவை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம் என்பதை நான் அறிவேன். ஆனால் நேருவின் செயல்பாடுகள் தவறானவை என்று நான் நினைக்கும்போது அவற்றை எதிர்க்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அப்படிச் செய்யாவிட்டால், இவ்வளவு தவறுகள் நடந்திருக்கின்றன, ஆனால் அவற்றை யாரும் எதிர்க்கவில்லையே என்று சரித்திரம் நம்மைக் குற்றம் சொல்லும்.' அதுபோல்தான் அரசாங்கமும், அரசியல் கட்சிகளும் செய்யும் தவறுகளை எடுத்துக் காட்டி, சரியான வழி எது என்று மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், நம் கடமையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும். இதுதான் உங்கள் கேள்விக்கு ராம்ராஜ் அவர்களிடமிருந்தே வந்த பதில்."

"உயர்ந்த மனப்பான்மைதான் இது. சரி, உங்கள் கட்சியின் செயல்பாடுகளுக்குச் சிறிதாவது பலன் கிடைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?"

"நிறையவே கிடைத்திருக்கிறது. நாங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன் சொன்னவற்றை இன்று மற்ற கட்சியினர் கூறுகிறார்கள். இது ஒரு ஜனநாயக நாடாக இருந்தாலும், பதவியில் இருப்பவர்களின் அடக்குமுறை மனப்பான்மையால் தனி மனித சுதந்திரத்துக்கும், பேச்சுரிமை, ஊடக சுதந்திரம் ஆகியவற்றுக்கும் அவ்வப்போது அச்சுறுத்தல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றுக்கு எதிராக எப்போதுமே குரல் கொடுத்து வருபவர்கள் நாங்கள்தான். நாங்கள் ஒரு சிறிய கட்சியாக இருந்தாலும் எங்கள் உறுதியான, வலுவான நிலைப்பாடு மற்ற பலருக்கும் அநீதியை எதிர்க்கும் துணிவையும் ஊக்கத்தையும் கொடுத்து வந்திருக்கிறது. ஒரு கட்சி பதவியில் இருந்துதான் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதில்லை. மக்கள் நலனுக்காகவும், அவர்கள் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து அநீதியை எதிர்க்கும் துணிவையும், உத்வேகத்தையும் மக்களிடையே ஏற்படுத்துவதும் பெரிய சேவைதானே?"

"கடைசியாக ஒரு கேள்வி. உங்கள் தொழில்துறைச் சாதனைகள், உங்கள் அரசியல் ஈடுபாடு இவற்றில் உங்களுக்கு அதிகம் திருப்தியைக் கொடுத்திருப்பது எது?"

"நான் முன்பே குறிப்பிட்டபடி, நல்ல மனம் இருந்தாலே அது வாழ்க்கையில் வெற்றியை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். எனவே என் தொழில் வெற்றியை ஒரு பெரிய சாதனையாக நான் நினைக்கவில்லை. ஆர் பி பி என்ற ஒரு நல்ல இயக்கத்தைத் தேர்ந்தெடுத்து அதனுடன் இணைந்து என்னால் முடிந்த அளவு செயலாற்றியதைத்தான் நான் ஒரு பெருமைக்குரிய விஷயமாக நினைக்கிறேன்."

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 457
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

பொருள்:
நல்ல மனம் படைத்திருத்தல் உலகில் ஒருவர்க்கு செல்வச் செழிப்பைக் கொடுக்கும். நல்ல இனத்துடன் சேர்ந்திருப்பது எல்லாப் புகழையும் அளிக்கும்.

Read 'An Interview With An Entrepreneur' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                        காமத்துப்பால்

Monday, February 15, 2021

456. 'அணில்கள்'

"இது ஒரு பெரிய நிறுவனம். சென்னையிலேயே நமக்கு அஞ்சு கிளைகள் இருக்கு. அஞ்சு கிளையிலேயும் சேர்ந்து மொத்தமா ஆயிரம் பேருக்கு மேல வேலை செய்யறாங்க. இங்கே நிறைய குழுக்கள் இருக்கு. இசை, இலக்கியம், நாடகம், கவிதை, ஆன்மீகம்னு பல விஷயங்கள்ள ஆர்வம் உள்ளவங்க ஒண்ணா சேர்ந்து செயல்படறாங்க. சனி ஞாயிறுல ஒண்ணு கூடி தங்களுக்கு ஆர்வமான விஷயங்கள்ள ஈடுபடுவாங்க. உனக்கு எதில ஆர்வம் இருக்கோ அதில நீ சேர்ந்துக்கலாம்" என்றான் முரளிதரன்.

"நீங்க எதில இருக்கீங்க?" என்றான் ரகு. அவன் அப்போதுதான் அந்த நிறுவனத்தில் சேர்ந்திருந்தான்.

"சொல்றேன். ஆனா ஒரு நிபந்தனை. நான் உங்கிட்ட பேசற மாதிரி நீயும் என்னை வா போன்னுதான் கூப்பிடணும் - வாடா போடான்னு கூப்பிட்டாலும் சரிதான். நானும் உன்னை மாதிரிதான், உனக்கு ஒரு வருஷம் சீனியர், அவ்வளவுதான்."

"சரி. சொல்லுடா!" என்றான் ரகு.

"அப்படி வா வழிக்கு!" என்று சிரித்துக் கொண்டே கூறிய முரளிதரன், "நான் இது மாதிரி எதிலுமே இல்லை. நானும் ஒரு அஞ்சாறு பேரும் மட்டும் வேற ஒரு விஷயத்தில ஈடுபட்டிருக்கோம். ஆனா இதில ரொம்ப பேருக்கு ஆர்வம் இருக்காது!" என்றான்.

"பீடிகையெல்லாம் வேண்டாமே!" என்றான் ரகு.

"வர சனிக்கிழமை சாயந்திரம் ஆறு மணிக்கு நான் சொல்ற இடத்துக்கு வா. நாங்க என்ன செய்யறோம்கறதைப் பாரு. உனக்குப் பிடிச்சா அப்புறம் நீயும் எங்களோட  சேர்ந்துக்கலாம்" என்ற முரளிதரன், சற்றுத் தயங்கி விட்டு, "எனக்கென்னவோ நீ எங்களோட இணைஞ்சுப்பேன்னுதான் தோணுது!" என்றான்.

னிக்கிழமை மாலை அவர்கள் அந்த நிறுவன ஊழியர் ஒருவர் வீட்டில் கூடினர். ரகுவையும் சேர்த்து எட்டு பேர் அங்கே இருந்தனர். 

அவர்கள் பேச்சை கவனித்ததிலிருந்து ரகு புரிந்து கொண்டது இது;

'அணில்கள்' என்ற சிறிய அமைப்பை நடத்தி வந்த அவர்களுடைய நோக்கம் தங்கள் ஓய்வு நேரத்தை எளிய மக்களுக்கு உதவிகள் செய்யப் பயன்படுத்த வேண்டும் என்பது. உதவிக்கு யாரும் இல்லாத முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதிலிருந்து, படிப்பறிவோ, உயர் மட்டத் தொடர்புகளோ இல்லாத அடித்தட்டு மக்களுக்கு அரசாங்கத்திலிருந்தும் பிற அமைப்புகளிலிருந்தும் உதவிகள் பெற ஆலோசனை சொல்வது வரை பல்வேறு உதவிகளை அவர்கள் செய்து வந்தார்கள்.

சட்டத்துக்கு உட்பட்ட, விதிமீறல்கள் இல்லாத எல்லா உதவிகளையும் தங்களால் இயன்ற அளவுக்கு ஆதரவற்ற எளிய மக்களுக்குச் செய்வது என்ற நோக்கத்துடன் அவர்கள் செயல்பட்டு வந்ததையும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கூடி உதவி கேட்டுத் தங்களுக்கு வந்த கோரிக்கைகளைப் பகிர்ந்து கொண்டு யார் எந்த வேலைகளைச் செய்வது என்று பொறுப்பேற்றுக் கொண்டதையும் ரகு கவனித்தான். 

சிறிது நேரத்துக்குப் பிறகு அனைவரும் விடை பெற்றுச் சென்றதும், "என்ன நினைக்கற?" என்றான் முரளிதரன் ரகுவிடம்.

"நானும் ஒரு அணிலா இருந்து என்னால் முடிஞ்ச மண்ணைச் சுமக்க விரும்பறேன்!" என்றான் ரகு.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனக்கு நடந்த பிரிவு உபசார விழாவில் பேசிய ரகு, "இந்த நிறுவனத்தில் எனக்குப் பதவி உயர்வுகள், பல விதமான வேலைகளில் ஈடுபட வாய்ப்புகள், சிறந்த நண்பர்கள்னு நிறைய நன்மைகள் கிடைச்சிருக்கு. அதுக்காக இந்த நிறுவனத்துக்கும், அதன் நிர்வாகத்துக்கும், நான் இணைந்து பணியாற்றிய ஊழியர்களுக்கும் என் நன்றி!" என்றான்.

'ஆனா இந்த நிறுவனத்தில் சேர்ந்ததால எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய நன்மை 'அணில்கள்'  இயக்கத்தில் நான் பணி செய்ய எனக்குக் கிடைச்ச வாய்ப்புதான். அதில எனக்கு ரிடயர்மென்ட் கிடையாது, அதில் இருக்கற நண்பர்கள்கிட்டேந்து நான் பிரிய வேண்டாம், அதில பணி செய்யறதால கிடைக்கற சந்தோஷத்தை நான் எப்பவும் இழக்கவும் வேண்டாம்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 456
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

பொருள்:
மனம் தூய்மையாக உள்ளவர்களுக்கு, அவர்களுக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையானவையாக இருக்கும். இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல்கள் எதுவும் இல்லை.

Read 'The Squirrels' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால்

455. மகனிடம் ஒரு மாற்றம்!

சிறு வயதிலிருந்தே தன் மகன் பாபுவுக்குப் பல நல்ல விஷயங்களைச் சொல்லி வளர்த்து வந்தார் சச்சிதானந்தம். 

குறிப்பாக அனைவரிடமும் அன்பு பாராட்ட வேண்டும், மற்றவர்களுக்குச் சிறு துன்பம் ஏற்பட்டால் கூட அந்த வலியை நாம் உணர வேண்டும் போன்ற கருத்துக்களை அவனிடம் அதிகம் வலியுறுத்தி வந்தார்.

சச்சிதானந்தமே எதிர்பார்க்காத அளவுக்கு அவர் வலியுறுத்திய அந்தக் கருத்துக்கள் பாபுவின் மனதில் ஆழப் பதிந்து அவனை அன்பும் அருளும் நிறைந்த ஒரு மனிதனாக உருவாக்கி விட்டதை நினைத்து அவருக்குப் பெருமையாக இருந்தது.

பாபு வேலைக்குச் சென்று திருமணம் ஆகி வாழ்க்கையில் நிலைபெற்று விட்டான்.

ஒருநாள் பாபு தந்தையிடம் வந்து, "அப்பா! நான் நம்ம ஜாதிச்சங்கத்தில சேரலாம்னு இருக்கேன்" என்றான்.

"அதெல்லாம் நமக்கு எதுக்குடா? நம்ம வேலையைப் பாத்துக்கிட்டு முடிஞ்ச அளவுக்கு மத்தங்களுக்கு உதவி செஞ்சுக்கிட்டு இருக்கறதுதான் நல்லது" என்றார் சச்சிதானந்தம்.

"மத்தவங்களுக்கு உதவறதுக்காகத்தான் நானும் ஜாதிச்சங்கத்தில சேரணும்னு சொல்றேன். நாம ஓரளவுக்கு நல்லா இருக்கோம். ஆனா நம்ம ஜாதிச் சனங்க நல்லா இருக்க வேண்டாமா? அதுக்குத்தான் ஜாதிச்சங்கத்தில சேர விரும்பறேன்" என்றான் பாபு.

'எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கறதுதானே சரியா இருக்கும்?' என்று தன் மனதில் எழுந்த கேள்வியை சச்சிதானந்தம் மகனிடம் கேட்கவில்லை. அவன் தன் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டான் என்று அவருக்குத் தோன்றியதால், மேலே ஏதும் சொல்லாமல் பேசாமலிருந்து விட்டார்.

ஜாதிச்சங்கத்தில் சேர்ந்த பிறகு சங்கத்தின் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கெடுக்க ஆரம்பித்து விட்டான் பாபு. தங்கள் ஜாதிக்கு எதிரானவர்கள் என்று கருதப்படும் இன்னொரு ஜாதியைச் சேர்ந்தவர்களைப் பற்றி அடிக்கடி கடுமையாகப் பேசத் தொடங்கினான்.

"பாபு! நம்ம ஜாதிக்காரங்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கறதில தப்பு இல்ல.அதுக்காக இன்னொரு ஜாதி மேல ஏன் வெறுப்பைக் காட்டணும்?" என்றார் சச்சிதானந்தம்.

"நம்ம ஜாதிக்காரங்களோட முன்னேற்றத்தை அவங்க தடுக்கும்போது, அவங்க மேல கோப்பபடாம எப்படி இருக்க முடியும்?" என்றான் பாபு.

அன்பு, அருள் என்ற பண்புகளைக் கொண்டிருந்த தன் மகனின் மனநிலை மாறி வருவதை சச்சிதானந்தம் உணர்ந்தார். ஆனால் அவனை எப்படி வழிப்படுத்துவது என்று அவருக்குத் தெரியவில்லை. 

ஒருமுறை அவர்கள் ஜாதிக்கும், அவர்களுக்கு எதிரிகளாகக் கருதப்பட்ட இன்னொரு ஜாதிக்கும் இடையே ஒரு கலவரம் மூண்டது. இரண்டு தரப்பிலும் சில உயிர்கள் பலியாயின.

கலவரம் துவங்கியபோது பாபு வெளியில் சென்றிருந்ததால் சச்சிதானந்தம் கவலைப்பட்டார். ஆனால் பாபு விரைவிலேயே  வீட்டுக்கு வந்து விட்டான்.

அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் அவன் வெளியில் எங்கும் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்து கொண்டு கலவரம் பற்றியும், அதைத் தொடர்ந்து நடந்த கைதுகள், பேச்சு வார்த்தைகள் பற்றியும் தொலைக்காட்சியில் வந்த செய்திகளைப் பார்த்து வந்தான்.

பொதுவாக அந்த இன்னொரு ஜாதியைக் குறை கூறி அடிக்கடி பேசுபவன் கலவரத்துக்குப் பிறகு எதுவுமே பேசாமல் இருந்தது சச்சிதானந்தத்துக்குச் சற்று வியப்பாக இருந்தாலும், ஆறுதலாகவும் இருந்தது. 

கலவரம், கொலை என்றெல்லாம் நடந்ததும் இத்தகைய விரோதங்கள் விபரீதங்களை விளைவிக்கும் என்பதை மகன் புரிந்து கொண்டிருப்பான் என்று நினைத்துச் சச்சிதானந்தம் நிம்மதி அடைந்தார்.

ஆனால் ஓரிரு நாட்களுக்குப் பிறகு அவர்கள் வீட்டுக்கு வந்த போலீசார் பாபுவைக் கைது செய்து கொண்டு போனார்கள். 

கலவரம் ஆரம்பித்த சமயம் இன்னொரு ஜாதியைச் சேர்ந்த இரண்டு பேரைக் கத்தியால் குத்தி விட்டு பாபு வீட்டுக்கு வந்து பதுங்கி விட்டதாகவும், குத்துப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து பாபுவைக் கைது செய்வதாகவும் கைது செய்ய வந்த போலீசார் சச்சிதானந்தத்திடம் கூறினர். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 455
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.

பொருள்:
மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் ஒருவர் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.

Read 'After the Change in Babu's Outlook' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால்

Sunday, February 14, 2021

454. "சுய" சிந்தனை

"நீங்கள் எந்த மதத்தை வேண்டுமானால் பின்பற்றுங்கள். எந்த அரசியல் கொள்கையை வேண்டுமானாலும் ஆதரியுங்கள். ஆனால் சதந்திரமாகச் சிந்தியுங்கள். யார் சொல்வதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்."

ரவீந்திரநாத்தின் இந்தப் பேச்சுதான் ராம்குமாரை அவருடைய இயக்கத்தில் ஆர்வம் கொள்ளச் செய்தது.

ரவீந்திரநாத்தின் 'சிந்தனையே செல்வம்' இயக்கத்தில் உறுப்பினனாகச் சேர்ந்தான் ராம்குமார்.

"சுதந்திரமாச் சிந்திக்கணும்னு சொல்லிட்டு, அதுக்கு ஒரு அமைப்பு, உறுப்பினர்கள் எல்லாம் எதுக்கு? இந்த மாதிரி இயக்கங்கள் எல்லாமே மனுஷங்களை அடிமையாக்கி அவங்களை மூளைச் சலவை செய்யறதுக்குத்தான்!" என்றான் ராம்குமாரின் நண்பன் சந்தோஷ்.

"அப்படி இல்லடா. இவங்க வேற மாதிரி. அவங்க எந்தக் கொள்கையையும் உறுப்பினர்கள் மேல திணிக்கறதில்ல. மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், தத்துவ ஞானிகள் சொல்றதையெல்லாம் அப்படியே ஏத்துக்காம, நாமே சிந்திச்சு முடிவெடுக்கணும்னுதான் அவங்க சொல்றாங்க. இந்தச் சிந்தனையை எல்லார்கிட்டயும் பரப்பறதுக்குத்தான் உறுப்பினர்களைச் சேர்த்து அவங்களுக்கு பயிற்சி எல்லாம் கொடுக்கறாங்க. நீ கூட இதில உறுப்பினரா சேர்ந்துக்கயேன்" என்றான் ராம்குமார்.

"ஆளை விடுப்பா! சிந்தனை செய்யறது மாதிரி கஷ்டமான வேலையையெல்லாம் நான் என் மூளைக்குக் கொடுக்கறதில்ல!" என்றான் சந்தோஷ், சிரித்தபடி.

"முன்னெல்லாம் ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்குப் போவியே, இப்ப ஏன் போறதில்ல? சுயமாச் சிந்திச்சு, கடவுள் இல்லைங்கற முடிவுக்கு வந்துட்டியா?" என்றான் சந்தோஷ்.

"அப்படி இல்ல. ஞாயிற்றுக்கிழமை 'சிந்தனையே செல்வம்' பிரசாரக் கூட்டங்கள் இருக்கும். அதுக்கு நான் வாலன்ட்டியராப் போறேன். அதனால கோவிலுக்குப் போக முடியல" என்றான் ராம்குமார்.

"ஏண்டா, முன்னெல்லாம் ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்குப் போறதை ஒரு விரதம் மாதிரி செஞ்சுக்கிட்டிருந்தே. நான் எங்கேயாவது கூப்பிட்டாக் கூட வர மாட்டே. இப்ப கோவிலுக்குப் போறதை விட அவங்க கூட்டங்களுக்கு வாலன்ட்டியராப் போறதுதான் முக்கியம்னு உன்னை நம்ப வச்சிருக்காங்க.  வாலன்ட்டியர்னா  விருப்பப்பட்டுப் போறதுன்னு அர்த்தம், ஆனா நீ ஒரு கம்பல்ஷனால வாலன்ட்டியராப் போற!"

"சேச்சே, அப்படி இல்லை. அவங்க என்னை எந்த விதத்திலேயும் வற்புறுத்தல. கோவிலுக்குப் போய் இயந்திரம் மாதிரி கடவுளை வழிபடறது முக்கியமா, நம்ம கூட்டத்துக்கு வாலன்ட்டியரா வந்து பல பேர் சுயமா சிந்திக்கறதுக்கு உதவறது முக்கியமான்னு தீர்மானிச்சுக்கன்னுதான் சொன்னாங்க. வாலன்ட்டியராப் போறதுதான் முக்கியம்னு நான்தான் முடிவு செஞ்சேன்!" என்றான் ரம்குமார்.

சந்தோஷ் பெரிதாகச் சிரித்து விட்டு, "ஒரு கணவன் சொன்னானாம், என் வீட்டில நான்தான் எஜமானன், அப்படிச் சொல்லிக்க என் மனைவி எனக்கு அனுமதி கொடுத்திருக்கான்னு, அது மாதிரி இருக்கு நீ சொல்றது!" என்றான்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 454
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.

பொருள்:
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்துள்ள இனத்தின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.

Read 'Think Independently' the English version of this story by the same author.
  அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

Saturday, February 13, 2021

453. லதாவின் தயக்கம்

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்ட சேகரை அவன் சிற்றப்பாதான் வளர்த்தார்.

சேகரின் தந்தை இறந்த பிறகு, அவருடைய சொத்து சேகரின் பெயருக்கு வந்து விட்டது.

 ஆயினும், அவனுக்குப் பதினெட்டு வயதாகும் வரை, அவனை வளர்ப்பவர் என்ற முறையில், அந்தச் சொத்து அவன் சிற்றப்பாவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. 

சேகர் பெரியவனான பிறகு தன் மீது எந்தக் குற்றமும் கூறி விடக் கூடாது என்பதற்காக, அவர் அவனிடம் கடுமை காட்டாமல் அவனை வளர்த்து வந்தார்.

சிற்றப்பா கொடுத்த சுதந்திரத்தால், சேகர் மகிழ்ச்சியாகவும், தன் விருப்பத்துக்கு ஏற்பவும் நடந்து கொண்டான். ஆயினும், தவறான வழிகளில் செல்லாமல், பொறுப்புடன் நடந்து கொண்டு, படிப்பில் கவனம் செலுத்தினான்.

படிப்பை முடித்ததும், ஒரு நல்ல வேலையில் சேர்ந்து, சில வருடங்களில் வேலையை விட்டு விட்டுச் சிறிய அளவில் சொந்தத் தொழிலையும் துவங்கி விட்டான் சேகர்.

பள்ளியில் அவனுடைய நெருங்கிய நண்பனாக இருந்த அண்ணாமலை, பள்ளிப் படிப்பை முடித்த பின், ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து விரைவிலேயே ஒரு பிரபலமான தலைவராகவும் ஆகி விட்டான். 

பள்ளி நாட்களில் சேகருக்கும் அண்ணாமலைக்கும் இருந்த நட்பு, அண்ணாமலை அரசியலில் பிரபலமடைந்த பிறகும் தொடர்ந்தது.

சேகருக்குத் திருமணமாகிப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான், அவனுக்குக் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை. 

தன் பெண் சுமதியின் ஓராண்டு நிறைவைப் பெரிய அளவில் கொண்டாட விரும்பினான் சேகர்.

"எதுக்குங்க? எளிமையாக் கொண்டாடலாமே!" என்றாள் அவன் மனைவி லதா.

"இல்லை. நமக்குக் கல்யாணம் ஆகிப் பத்து வருஷம் கழிச்சுப் பொறந்திருக்கா நம்ம பொண்ணு. அதோட, என் பிசினஸ் பெரிசா வளர்ந்து, நாம இப்ப ரொம்ப நல்ல நிலைமையில இருக்கோம். ஏன் எளிமையாக் கொண்டாடணுங்கற?"

லதா சற்றுத் தயங்கி விட்டு, "பிறந்த நாள் விழாவுக்கு உங்க நண்பர் அமைச்சர் அண்ணாமலையைக் கூப்பிடுவீங்க இல்ல?"

"நிச்சயமா! நான் கூப்பிட்டா, அன்னிக்கு அமைச்சரவைக் கூட்டம் இருந்தா அதுக்குக் கூடப் போகாம நம்ம விழாவுக்கு வந்துடுவானே அவன்!"

"அவரைப் பத்திப் பல பேருக்கு நல்ல அபிப்பிராயம் இல்ல. அவர் நிறைய ஊழல் பண்றதாச் சொல்றாங்க."

"அதைப் பத்தி நமக்கு என்ன?"

"உங்களுக்குப் புரியல. நீங்க ரொம்ப நல்லவரு. உங்க திறமையால உங்க தொழில்ல முன்னுக்கு வந்தவரு. ஆனா, நீங்க அண்ணாமலைகிட்ட நெருக்கமா இருக்கறதால, அவரோட அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித்தான் நீங்க முன்னுக்கு வந்ததா பல பேர் நினைக்கறாங்க. நமக்கு நெருக்கமானவங்க சில பேர் கூட என் காதுபட இப்படிப் பேசி நான் கேட்டிருக்கேன். நீங்க எவ்வளவுதான் நல்லவரா இருந்தாலும், அண்ணாமலைகிட்ட நீங்க நெருக்கமா இருக்கறது உங்களுக்கு ஒரு கெட்ட பேரை உருவாக்கி இருக்கு. நீங்க அவர்கிட்டேயிருந்து விலகி இருக்கறதுதான் உங்களுக்கு நல்லதுன்னு நான் நினைக்கிறேன்" என்றாள் லதா.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 453
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.

பொருள்:
மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனத்தால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.

Read 'Latha's Concern' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால்

Thursday, February 11, 2021

452. என் மகன்

நாங்கள் பள்ளி இறுதியாண்டை முடித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதத்தில், என்னுடன் படித்த சிலர் பள்ளியில் ஒரு ஒன்றுசேர்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்போதுதான் பள்ளியில் படிக்கும்போது எனக்கு நெருக்கமாக இருந்த ஜகதீசனை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்தித்தேன்.

ஜகதீசன் ஒரு நிறுவனத்தில் நல்ல பதவி வகித்து ஓய்வு பெற்று விட்டதாகவும், அவனுடைய மூன்று மகன்களும் நல்ல நிலையில் இருப்பதாகவும் என்னிடம் கூறினான்.

குறிப்பாகத் தன் மூன்றாவது மகன் பற்றி அவன் மிகவும் பெருமையாகக் கூறினான்.

"என் முதல் ரெண்டு மகன்களும் எஞ்சினீரிங் படிச்சுட்டு நல்ல வேலையில இருக்கறது பெரிசில்ல. ஆனா என் மூணாவது பையன் பி காம்தான் படிச்சான். சி ஏ படின்னு சொன்னேன். கேக்காம ஒரு நிறுவனத்தில ஒரு சாதாரண வேலைக்குத்தான் போனான். 

"ரெண்டு மூணு வருஷத்திலேயே கம்பெனி எம் டிக்கு நெருக்கமா ஆயிட்டான். அஞ்சு வருஷத்தில அவங்களோட ஒரு புது நிறுவனத்துக்கு ஜெனரல் மானேஜர் ஆயிட்டான். 

"அப்புறம் அஞ்சு வருஷம் கழிச்சு, அந்த வேலையையும் விட்டுட்டு தானே சொந்தமா ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி நடத்திக்கிட்டிருக்கான். கொஞ்சம் முதல் போட்டு பாங்க்ல கடன் வாங்கி நல்லா நடத்திக்கிட்டிருக்கான். 35 வயசுதான் ஆகுது. எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு!" என்றான் என்னிடம்.

"ஓ, பெரிய விஷயம்தான்!" என்றேன் நான்.

"நீ வக்கீலா பிராக்டீஸ் பண்றதா சொன்னியே, எப்ப ரிடயர் ஆகப் போறே?" என்றான் ஜகதீசன்.

"எப்ப எனக்கு கேஸ் கிடைக்கறது நின்னு போகுதோ அப்பதான் எனக்கு ரிடயர்மென்ட்!" என்றேன் நான், சிரித்துக் கொண்டே.

இருவரும் எங்கள் தொலைபேசி எண்களையும், முகவரிகளையும்  ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டாலும், அதற்குப் பிறகு அதிகம் தொடர்பு கொள்ளவில்லை. எப்போதாவது தொலைபேசியில் பேசிக் கொள்வதோடு சரி. 

ஒரு நாள் ஜகதீசனிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. நான் ஃபோனை எடுத்ததுமே, ஜகதீசன் பதட்டத்துடன், "என் பையனை போலீஸ்ல கைது பண்ணிட்டாங்கடா! நீதான் அவனை ஜாமீன்ல எடுத்து அவன் கேசையும் நடத்தணும்" என்றான்.

"பதட்டப்படாம சொல்லு. எந்தப் பையன்? என்ன கேஸ்?"

"என் மூணாவது பையன்தான். பாங்க்ல கடன் வாங்க ஏதோ போலி ஆவணங்கள்ளாம் கொடுத்துட்டதாச் சொல்றாங்க."

"அப்படியா? தப்பா நினைச்சுக்காதே. வக்கீல்கிட்ட உண்மையைச் சொல்லணும். உன் பையன் போலி ஆவணங்கள் கொடுத்திருப்பான்னு நீ நினைக்கறியா?"

"நினைக்கறதென்ன? கொடுத்ததா அவனே எங்கிட்ட ஒப்புத்துக்கறான். ஆனா நீதான் அவனை எப்படியாவது காப்பாத்தணும். அவனைப் பத்தி எவ்வளவு பெருமைப் பட்டுக்கிட்டிருந்தேன்! இப்படிப் பண்ணிட்டானே!" என்று புலம்ப ஆரம்பித்தான் ஜகதீசன்.

"சரி. நான் கேஸ் விவரங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் என்ன செய்யலாம்னு பாக்கறேன். இன்னொண்ணு கேக்கணும்.... உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். உன் பையன் இப்படி ஒரு காரியத்தைச் செஞ்சிருந்தா, அதுக்குத் தூண்டுகோலா யாராவது இருந்திருக்கணும். அதைப்பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?"

"சகவாச தோஷம்தான் காரணம்."

"அப்படின்னா?"

"அவனோட பழைய முதலாளி ஒரு ஃபிராடு. அவன்கிட்ட நெருக்கமா இருந்ததாலதான் இவனுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்கணும்."

"யார் அவனோட பழைய முதலாளி?"

"எம் என் ஓ பி தான்."

"எம் என் ஓ பாண்டேயா? பல பாங்க்குகள்ள கோடிக்கணக்கா கடன் வாங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடிட்டானே அவனா?" என்றேன் நான், அதிர்ச்சியுடன்.

"அவனேதான். அவன்கிட்ட நெருக்கமா இருந்ததாலதான் இவனுக்கும் அவனை மாதிரி சிந்தனை வந்திருக்கு!" என்றான் ஜகதீசன், விரக்தியுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 452
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

பொருள்:
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறி விடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகி விடும்.

Read 'My Son' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால்

Wednesday, February 10, 2021

451. தலை தப்பியது!

கோபு அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது அவனுக்கு முதலில் நெருக்கமானவன் தாமோதரன்தான். 

தாமோதரன் இரண்டு வருடம் முன்பே அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்ததால் கோபுவுக்கு சீனியர் என்றாலும், கோபுவைத் தனக்குச் சமமானவன் போலவே கருதி அவனிடம் நெருங்கிப் பழகினான்.

ஒரு நாள் தாமோதரன் கோபுவிடம், "நீ சஞ்சய்கிட்ட ரொம்ப நெருக்கமாப் பழகற போல இருக்கு. அவன் அவ்வளவு நல்லவன் இல்ல. கொஞ்சம் விலகியே இரு!" என்றான்.

"நல்லவன் இல்லேன்னு எப்படிச் சொல்றே?" என்றான் கோபு.

"என்னால விவரமாச் சொல்ல முடியாது. அவன் எல்லார்கிட்டேயும் ரொம்ப நட்பா இருக்கற மாதிரி காட்டிப்பான். ஆனா அவன்கிட்ட நெருங்கிப் பழகினா, நம்மகிட்ட அட்வான்ட்டேஜ் எடுத்துப்பான்."

"அட்வான்ட்டேஜ்னா? கடன் கேப்பானா?" என்றான் கோபு சிரித்தபடி.

"இது சிரிக்கிற விஷயம் இல்ல. நான் உன் நன்மைக்காகத்தான் சொல்றேன். கடன் வாங்கிட்டுத் திருப்பிக் கொடுக்கலைன்னா பொருள் நஷ்டம் மட்டும்தான் ஆகும். ஆனா அவனால பெரிய கேடுகள்ளாம் விளையும். அவனால பாதிக்கப்பட்ட சில பேர் எங்கிட்ட சொல்லி இருக்காங்க. 

"அவனைப் பாத்ததிலேந்தே எனக்கு அவன் மேல நல்ல அபிப்பிராயம் இல்ல. அதனால நான் அவங்கிட்டேந்து ஒதுங்கியே இருக்கேன். 

"மேலதிகாரிகள் கிட்டல்லாம் தனக்குச் செல்வாக்கு இருக்கற மாதிரி பேசுவான். அதை நம்பி இந்த ஆஃபீஸ்ல சில பேர் அவன்கிட்ட பயந்து நடந்துக்கறாங்க. அதைத் தனக்கு சாதகமாப் பயன்படுத்திக்கிட்டு தான் ஒரு சக்தி வாய்ந்த நபர்ங்கற மாதிரி ஆட்டம் போட்டுக்கிட்டிருக்கான். 

"என்னை மாதிரி சில பேர் அவனைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டு அவன்கிட்டேந்து விலகி இருக்கோம். நீயும் அப்படி இருக்கறதுதான் உனக்கு நல்லது" என்றான் தாமோதரன்.

கோபு தனக்குள் சிரித்துக் கொண்டு மௌனமாக இருந்தான். தாமோதரன் பற்றி சஞ்சய் தன்னிடம் கூறி இருந்தது உண்மைதான் என்பது போல்தான் தாமோதரனின் பேச்சு இருந்ததாக கோபுவுக்குத் தோன்றியது.

தான் எச்சரித்த பிறகும் கோபு சஞ்சயுடன் நெருக்கமாக இருப்பதை தாமோதரன் கவனித்தான். ஆயினும் அதற்குப் பிறகு கோபுவிடம் அவன் இது பற்றிப் பேசவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள், கோபு தாமோதரனிடம் வந்து, "தாமோதரா! உங்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்!" என்றான்.

அலுவலகம் முடிந்ததும் இருவரும் ஒரு ஓட்டலுக்குச் சென்று ஓரமாக இருந்த ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டனர்.

"தாமோதரா! நீ ஆரம்பத்திலேயே சஞ்சயைப் பத்தி எங்கிட்ட எச்சரிச்சே. ஆனா நான் அதை அலட்சியம் பண்ணினேன். அதுக்காக நீ என்னை மன்னிக்கணும். இப்பதான் அவனைப் பத்தி எனக்கு நல்லாப் புரிஞ்சது" என்றான் கோபு.

"என்ன நடந்தது?" என்றான் தாமோதரன்.

"நேத்து ஆஃபீஸ் முடிஞ்சதும் சஞ்சய் சினிமாவுக்குப் போகலாம்னு கூப்பிட்டான். போற வழியில அவன் தங்கை வீட்டுக்குப் போய் அவளைப் பாத்துட்டுப் போகலாம்னு சொன்னான். அவளுக்கு உடம்பு சரியால்லாம இருந்ததாம். 

"அவ வீட்டுக்குப் போனப்ப அவ சாதாரணமாத்தான் இருந்தா. அவ காப்பி போட்டுட்டு வரேன்னு சொல்லிட்டு உள்ளே போனா. சஞ்சய் யாருக்கோ ஃபோன் பண்ணிப் பாத்துட்டு சிக்னல் கிடைக்கலேன்னு வெளியே போனான். 

"அவன் வெளியில போனதும் அந்தப் பொண்ணு உள்ளேந்து வந்து என்னைக் கட்டிப் பிடிச்சுக்கப் பாத்தா. நான் திமிறிக்கிட்டு வெளியில ஓடினேன். அப்ப விட்டு வாசல்ல ஃபோனை வச்சுக்கிட்டு ஃபோட்டோ எடுக்கற மாதிரி சஞ்சய் நின்னுக்கிட்டிருந்தான். 

"அப்பதான் எனக்குப் புரிஞ்சுது. அவ அவன் தங்கையே இல்ல. அவளை எங்கிட்ட நெருக்கமா நடந்துக்க வச்சு வன் அதை வெளியிலேந்து வீடியோ எடுத்து என்னை பிளாக்மெயில் பண்ண முயற்சி பண்ணி இருக்கான். நல்லவேளையா நான் தப்பிச்சு ஓடி வந்துட்டேன்!" என்றான் கோபு படபடப்புடன்.

"இது மாதிரி நம்ம ஆஃபீஸ்ல வேற சிலருக்கு நடந்திருக்கு. அதையெல்லாம் உங்கிட்ட விளக்கமாச் சொல்ல வேண்டாம்னு நினைச்சுத்தான் உனக்கு ஒரு கோடி காட்டிட்டுப் பொதுவா உன்னை எச்சரிக்கை செஞ்சேன். ஆனா அப்ப நான் சொன்னதை நீ நம்பல!" என்றான் தாமோதரன், குற்றம் சாட்டுவது போல்.

"என் முட்டாள்தனம்தான்! நீ எங்கிட்ட அவனைப்பத்தி அப்படிச் சொல்லுவேன்னு அவன் எங்கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தான். அவன் சொன்ன மாதிரியே நீ சொன்னதும் நான் அவன் சொன்னது சரியா இருக்குன்னு நினைச்சேன்!"

"நான் எதுக்கு அவனைப் பத்தி உங்கிட்ட தப்பா சொல்லணும்னு நீ யோசிக்கலியா?" என்றான் தாமோதரன், சற்றே கோபத்துடன்.

"தாமோதரா! மறுபடி நீ என்னை மன்னிக்கணும். நீ இந்த ஆபீஸ்ல வேலைக்குச் சேர்ந்த புதுசில ஒரு லேடி ஸ்டாஃப்கிட்ட தப்பா ஏதோ பேசிட்டதாகவும், அவங்க அதை எம் டிகிட்ட புகார் செய்யப் போனப்ப, சஞ்சய் அவங்களைச் சமாதானப்படுத்தி உன்னை அவங்ககிட்ட மன்னிப்புக் கேக்க வச்சதாகவும், அவன் உனக்கு நல்லதுதான் செஞ்சான்னாலும், உன்னை அந்தப் பெண்கிட்ட மன்னிப்புக் கேக்க வச்சதுக்காக நீ அவன்கிட்ட கோபமா இருக்கறதாகவும் அவன் எங்கிட்ட சொன்னான்."

"அடப்பாவி! கதையை மாத்திட்டானே! லேடி ஸ்டாஃப்கிட்ட தப்பாப் பேசினவன் அவன். அவனை மன்னிப்புக் கேக்க வச்சு அந்தப் பொண்ணை எம் டிகிட்ட போகாம தடுத்து அவன் வேலையைக் காப்பாத்தினவன் நான். அவனை அப்ப காப்பத்தினதுதான் அவன் விஷயத்தில நான் செஞ்ச ஒரே தப்பு!" என்றான் தாமோதரன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 451
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

பொருள்:
தீய குணம் உள்ளோரொடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதிப் பழகுவர்.

Read 'A Friend Indeed!' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால்

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...