அதிகாரம் 50 - இடமறிதல்

திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 50
இடமறிதல்

 491. போருக்குத் தயாரா?

மகுட நாட்டு மன்னன் பரகேசரி கூட்டிய ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் கண்ணபிரான், படைத்தலைவர் தடந்தோளன் ஆகிய இருவர் மட்டுமே கலந்து கொண்டனர்.

"நம் நாட்டின் வட எல்லையில் இருக்கும் முப்பது கிராமங்களை முல்லை நாடு ஆக்கிரமித்துக் கொண்டு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. அவற்றை மீட்க இப்போது நமக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இப்போது அவர்கள் தங்கள் கிழக்கு எல்லையில் இருக்கும் பாரிஜாத நாட்டுடன் போரில் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போது நாம் போய்த் தாக்கினால், அவர்களால் நம்மை எதிர்கொள்ள முடியாது. என்ன சொல்கிறீர்கள்?" என்றார் மன்னர்.

"தாக்கலாம் மன்னவா! ஆனால் நம் வட எல்லைப் பகுதி பெரும்பாலும் மலைப்பாங்கானது. நாம் கீழிருந்து மேலே ஏற வேண்டும். அவர்கள் படைகள் மேட்டில் இருப்பதால், நம் படைகளைப் பார்ப்பதும், தாக்குவதும் அவர்களுக்கு எளிதாக இருக்கும். அதனால், தாக்குதல் நடத்துவதற்குச் சரியான இடத்தை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றார் படைத்தலைவர் தடந்தோளன்.

"அப்படிப்பட்ட இடம் ஏதாவது இருக்கிறதா?" என்றார் மன்னர்.

படைத்தலைவர் அமைதியாக இருந்தார்.

அரசர் அமைச்சரைப் பார்த்தார்.

"மன்னா! நம் எல்லையிலிருந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் கடினம்" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"முடியாது என்று சொல்வதற்காகவா உங்கள் இருவரையும் கூப்பிட்டேன்?" என்றார் மன்னர் சீற்றத்துடன். 

தொடர்ந்து, "இப்போது முல்லை நாட்டின் கிழக்கு எல்லையில் போர் நடக்கும்போது, அவர்கள் படைகள் எல்லாம் அவர்கள் கிழக்கு எல்லையில்தான் இருக்கும். அவர்கள் தெற்கு எல்லையில், அதாவது அவர்கள் ஆக்கிரமித்திருக்கும் நம் நாட்டின் பகுதியில் அதிகப் படைகள் இருக்காது. இப்போது நாம் தாக்குதல் நடத்தாவிட்டால், பின் எப்போது நாம் இழந்த பகுதிகளை எப்போது மீட்பது?" என்றார் அரசர், ஆற்றாமையுடன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! எதிரியை நாம் சுலபமாக எடை போட்டு விடமுடியாது. அவர்களுடைய திட்டங்கள் என்ன என்பதை நாம் கண்டறிய வேண்டும். இந்தக் கூட்டத்துக்கு ஒரு முக்கியமான நபரைத் தாங்கள் அழைக்கவில்லை. அவரிடம் தகவல் பெறாமல் நாம் எந்த ஒரு முடிவும் எடுப்பது பொருத்தமாக இருக்காது" என்றார் அமைச்சர்.

சற்று யோசித்த அரசர், "ஒற்றர்படைத் தலைவரைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சரி, அவர் அரண்மனையில் இருந்தால் உடனே வரச் சொல்லுங்கள்!" என்றார்.

"இல்லை அரசே! எதிரி நாட்டிலுள்ள நம் ஒற்றர்களிடமிருந்து தொடர்ந்து தகவல் பெறும் பணியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவர் இப்போது அரண்மனையில் இல்லை. எல்லாத் தகவல்களையும் பெற்று, இன்னும் இரண்டு நாட்களில் அரண்மனைக்குத் திரும்புவதாக அவர் என்னிடம் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார். அவர் திரும்ப வந்ததும். நாம் மீண்டும் கூடி ஆலோசிக்கலாம் என்பது என் விண்ணப்பம்" என்றார் அமைச்சர்.

அரசர் மௌனமாகத் தலையாட்டினார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு நடந்த கூட்டத்தில், ஒற்றர்படைத் தலைவரும் இருந்தார். தனக்குக் கிடைத்த தகவல்களை, அவர் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.

"ஒற்றர்படைத் தலைவர் தெரிவித்த தகவல்களின்படி, முல்லை நாட்டு மன்னன் பாரிஜாத நாட்டுடன் சமாதானம் செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான். அத்துடன், அவன் ஆக்கிரமித்துள்ள நம் நாட்டின் பகுதிகளுக்குள் பரவலாகப் பல இடங்களில் அவன் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், நாம் நம் எல்லையிலிருந்து தாக்குதல் நடத்தினால், அவர்கள் அனைவரும் எல்லைப் பகுதிக்கு வந்து நம்மைத் தாக்குவார்கள். என்ன செய்யலாம், சொல்லுங்கள்?" என்றார் அரசர், அமைச்சரைப் பார்த்து. இப்போது அவர் குரலில் சோர்வும், இயலாமையும் தென்பட்டன.

"எனக்கு ஒரு யோசனை இருக்கிறது, அரசே! முல்லை நாட்டின் மேற்குப் பகுதியில் கோரையாறு ஓடுகிறது. அந்த ஆறு முல்லை நாட்டுக்கும் செண்பக நாட்டுக்கும் பொதுவானது. அங்கே முல்லை நாட்டின் படைகள் அதிகம் இல்லை. சில வீரர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். அதை நம் ஒற்றர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். செண்பக நாடு நம் நட்பு நாடுதான். முல்லை நாட்டுடன் அவர்களுக்குப் பகை இல்லாவிட்டாலும், நட்பும் இல்லை. எனவே, செண்பக நாட்டு மன்னரின் அனுமதியுடன், நம் படை விரர்கள் படகுகளில் சென்று, ஆக்கிரமிக்கப்பட்ட நம் நாட்டுப் பகுதிக்குள் மேற்கு எல்லை வழியே நுழைந்து, அங்கிருக்கும் முல்லை நாட்டுப் படைகளை வளைத்துக் கொண்டால், அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அதே சமயம், தெற்கிலிருந்தும் நம் படைகள் முன்னேறலாம். படைத் தலைவரிடமும் இது பற்றி ஆலோசித்தேன். அவரும் இது சாத்தியம்தான் என்றுதான் கூறுகிறார்" என்றார் அமைச்சர்.

அரசர் உற்சாகம் அடைந்தவராக, "அருமையான யோசனை அமைச்சரே! அன்று நீங்கள் சில தடைகளைச் சொல்லி விவாதத்தைத் தள்ளிப் போட்டபோது, உங்கள் மீது எனக்கு அதிருப்தி ஏற்பட்டது உண்மைதான். உங்கள் சிந்தனை இப்போதுதான் எனக்குப் புரிகிறது. தாக்குதலுக்குச் சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும், எதிரியைக் குறைத்து மதிப்பிடாமல், அவர்கள் நிலையை அறிந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் கருத்தில் கொண்டு கூறப்பட்ட உங்கள் யோசனை பாராட்டுக்குரியது" என்றார்.

குறள் 491
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

பொருள்:
செய்வதற்கு ஏற்ற இடத்தை முழுமையாகக் கண்டறிவதற்கு முன் எந்தச் செயலையும் தொடங்கக் கூடாது, பகைவரை இகழ்வாக நினைக்கவும் (குறைத்து மதிப்பிடவும்) கூடாது.

492. வளர்த்த கடா!

"என்னங்க, இவ்வளவு வருஷமா எவ்வளவோ பாடுபட்டுக் கட்சியை வளர்த்தவரு நீங்க. வளர்த்த கடா மார்ல பாய்ஞ்ச மாதிரி, நீங்க வளர்த்த அந்த இளங்கோ, உங்களையே கட்சித் தலைவர் பதிவியிலேருந்து தூக்கிட்டானே!" என்றான் சண்முகம். 

"முதுகுல குத்தறது அரசியல்ல ரொம்ப சகஜமாச்சே! கட்சிக்கு ஒரு நல்ல தலைவனா வருவான்னு நினைச்சுத்தான், பல மூத்த தலைவர்களோட எதிர்ப்பையும் மீறி, அவனை வளர்த்து விட்டேன். நீ சொன்ன மாதிரி, நான் வளர்த்த கடா என் மார்பிலேயே பாஞ்சுடுச்சு" என்றார் வேலாயுதம், விரக்தியுடன்.

"என்னங்க இது அக்கிரமம்! நம்ப கட்சிக்கு அடையாளமா இருக்கற உங்களை, பொதுக்குழுவில தீர்மானம் போட்டு நீக்கிட்டாங்கங்கறதை ஏத்துக்கவே முடியல!" என்றான் ராமு என்ற இன்னொரு விசுவாசி.

"வரப்போற தேர்தல்ல, நம்ம கட்சிதான் ஜெயிக்கப் போகுது. அப்படி ஜெயிச்சா, நீங்கதான் முதல்வரா வருவீங்க. அதைத் தடுக்கறதுக்காகத்தான், சில மூத்த தலைவர்களோட சேர்ந்து சதி பண்ணி, நீங்க வெளிநாடு போயிருந்தப்ப, அவசரமாப் பொதுக்குழுவைக் கூட்டி, உங்களை நீக்கி இருக்கான் இளங்கோ. அப்படியும், கூட்டத்தில கலந்துக்கிட்ட 96 உறுப்பினர்கள்ள, 46 பேரு உங்களுக்கு ஆதரவாத்தான் ஓட்டுப் போட்டிருக்காங்க. கட்சித் தொண்டர்கள் ஆதரவு உங்களுக்குத்தான். அவனால எதுவும் செய்ய முடியாது" என்றார் அன்பு என்ற மூத்த தலைவர்.

"இல்லை அன்பு. இளங்கோ கட்சியில தன் கை ஓங்கிட்டதா ஒரு பிம்பத்தை உருவாக்கிட்டான். ஜெயிச்சவன் பின்னாலதான் பல பேர் போவாங்க. இது உலக இயற்கை. அரசியல்ல இது இன்னும் அதிகமாவே நடக்கும்! நாம கவனமா இல்லேன்னா, நம்மளை ஒண்ணுமில்லாம ஆக்கிடுவாங்க. தொண்டர்கள் நம்ம பக்கம் இருந்தாலும், கட்சி அவன் கட்டுப்பாட்டில இருந்தா, நம்மால எதுவும் செய்ய முடியாது" என்றார் வேலாயுதம்.

"இப்ப என்ன செய்யப் போறீங்க?"

"கட்சியில பிளவு ஏற்பட்டுடுச்சு. பெரும்பாலான தொண்டர்கள் நம்ம பக்கம்தான் இருக்காங்க, அதனால, கட்சியோட சின்னத்தை நமக்குத்தான் கொடுக்கணும்னு கேட்டு, நாம தேர்தல் ஆணையத்தில மனு கொடுக்கலாம். தேர்தல் ஆணையம் உடனே முடிவெடுக்காம, சின்னத்தை முடக்கி, நம்ம ரெண்டு பிரிவுகளுக்குமே வேற சின்னத்தைக் கொடுப்பாங்க. அப்ப  மக்கள் ஆதரவோட, நம்மால தேர்தல்ல வெற்றி பெற முடியும். இளங்கோவன் ஒண்ணுமில்லாம போயிடுவான்.

"ஆனா, அவனுக்கு ஒன்றியத்தில ஆளும் கட்சியோட ஆதரவு இருக்கு. அதனால, ஒருவேளை தேர்தல் ஆணையம் பொதுக்குழுவிலேயே என்னை நீக்கிட்டாங்கங்கறதை வச்சு, சின்னத்தை அவனுக்குக் கொடுக்கலாம். சின்னம் அவங்கிட்ட இருந்தா, அது அவனுக்கு சாதகமாப் போயிடும். என்னதான் மக்கள் ஆதரவு அவனை விட நமக்கு அதிகமா இருந்தாலும், சின்னத்தைப் பாத்து ஓட்டுப் போடறவங்க நிறைய பேரு இருக்கறதால, அவன் தேர்தல்ல நம்மை விட அதிக இடங்கள்ள வெற்றிபெற வாய்ப்பு இருக்கு. ஏன், ஒன்றியத்தில ஆளும் கட்சியோட ஆதரவு இருக்கறதால, தேர்தல்ல வெற்றி பெற்று, அவன் ஆட்சியைப் பிடிச்சாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல!" என்றார் வேலாயுதம்.

"அப்படின்னா, நாம என்ன செய்யப் போறோம்?" என்றான் சண்முகம், கவலையுடன்.

"பார்க்கலாம். தேர்தலுக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு. தேர்தல் ஆணையம் என்ன முடிவு செய்யுதுன்னு பார்க்கலாம். ஒருவேளை சின்னத்தை அவனுக்குக் கொடுத்துட்டாங்கன்னா, நாம பெரிய சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்."

வேலாயுதம் பயந்தபடியே, தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னத்தை இளங்கோவின் பிரிவுக்கு வழங்கி விட்டது. 

வேலாயுதம் தன் ஆதரவாளர்களின் கூட்டத்தை அழைத்தார்.

"நான் பயந்தபடியே ஆயிடுச்சு. ஒன்றியத்தில் ஆளும் கட்சியோடு இளங்கோ கூட்டணி வச்சுக்கப் போறான். ஏகப்பட்ட பணம் செலவழிச்சு, எல்லாவிதத் தில்லுமுல்லுகளையும் பண்ணி. அவன் ஜெயிக்கப் பார்ப்பான். ஒருவேளை அவன் வெற்றி பெற்று, முதல்வர் ஆயிட்டா, நம்மளை மொத்தமா ஒழிச்சுடுவான். இதைத் தடுக்க ஒரு வழிதான் இருக்கு!" என்று சொல்லி நிறுத்தினார் வேலாயுதம்.

"என்ன வழி?"

வேலாயுதம் சற்றுத் தயங்கி விட்டு, "முதல்வர் தன்னோட தூதூவர் ஒத்தர் மூலமா, எனக்கு ஒரு செய்தி அனுப்பி இருக்காரு. அவர் கட்சியோட நாம கூட்டணி வச்சுக்கிட்டா, நமக்கு 40 சதவீத இடங்கள் கொடுக்கறதாகவும், துணை முதல்வர் பதவி, மற்றும் 10 அமைச்சர் பதவிகள் நமக்குக் கொடுக்கறதாகவும் சொல்லி இருக்காரு. என்ன சொல்றீங்க? இதை ஏத்துக்கலாமா?" என்றார்.

"என்னங்க இது? நாம தனியாப் போட்டி போட்டே ஆட்சியைப் பிடிக்கிற நிலையில இருந்தோம். நாம கடுமையா எதிர்த்த கட்சியோட கூட்டணி வச்சுக்கிட்டு, அவங்களோட ஜுனியர் பார்ட்னரா சேர்ந்து, இதுக்கு முன்னால முதல்வரா இருந்த நீங்க, துணை முதல்வரா இருக்க ஒத்துக்கிட்டு... இதை எப்படிங்க ஏத்துக்க முடியும்?" என்றார் அன்பு.

"என்னதான் நமக்கு அரசியல் அனுபவம், மக்கள் செல்வாக்கு, திறமை எல்லாம் இருந்தாலும், நம்ம எதிரியை நாம குறைச்சு மதிப்பிடக் கூடாது. இளங்கோ முதல்வரானா, நாம ஒழிஞ்சோம். அதைத் தடுக்க, இது ஒண்ணுதான் வழி. முதல்வர் கட்சியோட நாம கூட்டு சேர்ந்தா, நம்ம கூட்டணி பெரிய வெற்றி பெறும். அப்புறம், இளங்கோ ஒண்ணுமில்லாம போயிடுவான். நான் துணைமுதல்வரா ஆகப் போறதில்ல. அன்புதான் துணை முதல்வர். நான் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்ங்கற முக்கிய பொறுப்பில இருப்பேன்னு சொல்லப் போறேன். முதல்வர் அதுக்கு ஒத்துப்பார். அவருக்கு வேற வழியில்லை. அதனால, கடிவாளம் நம் கையிலதான் இருக்கும். என்ன சொல்றீங்க?" என்றார் வேலாயுதம்.

அனைவரும் ஆரவாரமாகக் கைதட்டி, வேலாயுதத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 

குறள் 492
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.

பொருள்:
பகைவர்கள் உள்ளவர்கள் ஆற்றல் மிகுந்தவர்களாக இருந்தாலும், பாதுகாப்பான இடத்தில் இருப்பது பல பயன்களையும் தரும்.     

                                              493. பாதுகாப்பான ஒரு இடம்!   

"நீயும் நல்லதம்பியும் ஒரே சமயத்திலதான் இந்த நிறுவனத்தில வேலைக்குச் சேர்ந்தீங்க. ஆனா, அவன் உன்னை முந்திக்கிட்டு மேல போயிட்டானே!" என்றான் முத்து, செந்திலிடம். இருவரும் ஒரே நிறுவனத்தில், வெவ்வேறு பிரிவில் பணியாற்றுபவர்கள்.

"என்னை அவன் முறையா முந்திக்கிட்டுப் போயிருந்தா, என்னை விட அவன் திறமையானவன்னு நினைச்சு, நான் பேசாம இருந்திருப்பேன். ஒவ்வொரு தடவையும் ஒரு சூழ்ச்சி பண்ணி, என்னைக் கீழே அழுத்திட்டுல்ல, அவன் மேல போய்க்கிட்டிருக்கான்? அதுதான் எனக்கு ஆத்திரமா இருக்கு" என்றான் செந்தில்.

"அவன் சூழ்ச்சி பண்ணி உன்னை அழுத்தினான்னா, அதுக்கு நீ இடம் கொடுத்தேன்னுதானே அர்த்தம்?"

"உண்மைதான். அவன் அடுத்தவங்களைக் கீழே தள்ளிட்டு, அவங்களையே படிக்கட்டாப் பயன்படுத்தி மேலே போவான். என்னால அப்படிச் செய்ய முடியாது. அந்த விதத்தில நான் பலவீனமானவன்தான். மூணு வருஷமா, அவன் நம்ப துணை நிறுவனத்துக்கு மானேஜராப் போயிருந்தான்னு கொஞ்சம் நிம்மதியா இருந்தேன். இப்ப, அவன் திரும்பி வந்துட்டான். இப்ப, அவனுக்குக் கீழ நான் வேலை செய்யணும். இந்த நிலையில, என்னால அவனைச் சமாளிக்க முடியாது" என்றான் செந்தில் யோசனையுடன்.

"என்ன செய்யப் போற? வேற வேலைக்கு முயற்சி செய்யப் போறியா?"

"இது ஒரு நல்ல நிறுவனம். நல்லதம்பிக்கு பயந்து, இந்த நல்ல நிறுவனத்தை விட்டு நான் ஏன் போகணும்? அதுவும் என்னோட உழைப்பாலயும், திறமையாலயும், நான் நல்ல பேரு வாங்கி இருக்கறப்ப? எனக்கு வேற ஒரு யோசனை இருக்கு."

"என்ன?"

"நம்ப துணை நிறுவனத்திலேயே ஒரு பொறுப்பு காலியா இருக்கு. அங்கே போகலாம்னு பாக்கறேன்."

"நல்லதம்பி பார்த்த அதே மானேஜர் வேலைக்கா?"

"இல்லை. அங்கே துணை மானேஜரா இருந்த ரகுவையே மானேஜராப் போட்டுட்டாங்க. இப்ப, துணை மானேஜர் வேலைதான் காலியா இருக்கு. நான் முயற்சி பண்ணினா, அது எனக்குக் கிடைக்கும்."

"அது உனக்கு நல்லதா?"

"தெரியல. இப்போதைக்கு, நல்லதம்பிகிட்டேந்து என்னைக் காப்பாத்திக்கறதுக்கு வேற வழி தெரியல."

"யோசிச்சு செய்!" என்றான் காளிமுத்து.

"யோசிச்சுட்டேன்" என்றான் செந்தில்.

று மாதங்களுக்குப் பிறகு, துணை நிறுவனத்தில் நடந்த தணிக்கையில், நல்லதம்பி செய்த சில முறைகேடுகள் வெளிப்பட்டன. அதைத் தொடர்ந்து, நல்லதம்பி வேலையிலிருந்து நீக்கப்பட்டான். 

அப்போது துணை மானேஜராக இருந்து, பிறகு மானேஜராகப் பதவி உயர்த்தப்பட்ட ரகு, நல்லதம்பியின் முறைகேடுகளுக்குக் கண்மூடித்தனமாகத் துணைபோனதாகவும், தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 

ஆயினும், ரகு தெரிந்தே அந்த முறைகேடுகளில் ஈடுபடவில்லை என்பதாலும், நல்லதம்பியால் தவறாக வழிநடத்தப்பட்டான் என்பதாலும், அவனுக்கு தண்டனை அளிக்கப்படாமல், அவன் எச்சரிக்கை செய்யப்பட்டு, துணை மானேஜராகப் பதவி இறக்கம் செய்யப்பட்டான்.

தணிக்கையாளர்கள் முறைகேடுகளைக் கண்டுபிடிக்க உதவியதற்காக, செந்தில் பாராட்டுப் பெற்று, மானேஜராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டான்.

"கங்கிராட்ஸ் செந்தில்! உன் எதிரி ஒழிஞ்சான். நல்லதம்பிகிட்டேந்து தப்பிக்க, நீ துணை நிறுவனத்தில ஒரு பொறுப்பை எடுத்துக்கிட்டது, தற்செயலா உனக்கு நன்மையா முடிஞ்சுடுச்சே!" என்றான் காளிமுத்து.

"தற்செயல் இல்லை, தன் செயல், அதாவது என் செயல்தான் இது!" என்றான் செந்தில், சிரித்தபடி.

"உன் செயலா? எப்படி?"

"நல்லதம்பி அவ்வளவு கை சுத்தமானவன் இல்லேன்னு எனக்குத் தெரியும். துணை நிறுவனத்தோட மானேஜர்ங்கறது தனிக்காட்டு ராஜா மாதிரி. அங்கே அவன் முறைகேடா ஏதாவது செஞ்சிருப்பான்னு எனக்குத் தெரியும். ரகு ஒரு அப்பாவி, அதோட விஷயம் தெரியாதவன், நல்லதம்பியால அவனை சுலபமா ஆட்டி வைக்க முடியும்னு எனக்குத் தெரியும். தன் தவறுகள் வெளியில வரக்கூடாதுங்கறதுக்காகத்தான், நல்லதம்பி, தான் அந்தப் பதவியை விட்டு வரும்போதே, மானேஜ்மென்ட்ல சொல்லி, ரகுவை மானேஜரா ஆக்கிட்டு வந்தான்.

"என்னைக் காப்பாத்திக்கத்தான், நான் நல்லதம்பிகிட்டேந்து தூரமா இருக்கணும்னு நினைச்சு, அங்கே போனேன். நான் எதிர்பார்த்ததை விட நிறைய முறைகேடுகள் அங்கே நடந்திருந்தது. நான்தான் ஆடிட்டர்களுக்கு எல்லா விவரங்களையும் எடுத்துக் கொடுத்து, நல்லதம்பியை மாட்ட வச்சேன். ரகு அப்பாவிங்கறதால, ஆடிட்டர்கள்கிட்டேயும், மானேஜ்மென்ட்கிட்டேயும் சொல்லி, அவன் வேலை போகாம காப்பாத்தினேன். இத்தனை வருஷமா என்னை வேட்டையாடிக்கிட்டிருந்த ஒரு எதிரியை ஒழிச்சட்டதில, இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு" என்றான் செந்தில்.

குறள் 493
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

பொருள்:
தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக் கொண்டு, பகைவருடன் மோதினால், வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும். 

                                                          494. கௌரவ டைரக்டர்!

"எனக்கு உங்களை முன்னே பின்னே தெரியாது. நான் எப்படி உங்க கம்பெனியில டைரக்டரா இருக்க ஒத்துக்க முடியும்?" என்றார் மருதமுத்து.

"சார்! நான் அஞ்சு வருஷமா இந்த பிசினஸை நடத்திக்கிட்டு வரேன். பிரைவேட் லிமிடட் கம்பெனியாத்தான் ஆரம்பிச்சேன். இந்த அஞ்சு வருஷத்தில, மார்க்கெட்ல எனக்கு நல்ல பேரு கிடைச்சு, என் கம்பெனி பெரிசா வளர்ந்துடுச்சு. டர்ன் ஓவர் அதிகமாப் போனதால, இப்ப டீம்ட் பப்ளிக் லிமிடட் கம்பெனியா ஆயிடுச்சு. என் குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் இதில டைரக்டர்கள். வெளியாட்கள் யாரும் இதல முதலீடு செய்யல. நான் பப்ளிக் இஷ்யூ எதுக்கும் போகப் போறதில்ல. எனக்கு பாங்க் லோன் எதுவும் கிடையாது. என் பாங்க்ல நீங்க என்னைப் பத்தி விசாரிச்சுக்கலாம். மார்க்கெட்லேயும் விசாரிச்சுக்கலாம். கம்பெனியோட அஞ்சு வருஷம் பாலன்ஸ் ஷீட் கொண்டு வந்திருக்கேன். உங்க நிறுவனத்தில இருக்கற நிபுணர்களை இதைப் பாக்க சொல்லுங்க. எங்ககிட்ட தப்பா எந்த விஷயமும் கிடையாது" என்றான் அரவிந்தன்.

"அதெல்லாம் சரிதான். நான் எதுக்கு உங்க நிறுவனத்தில கௌரவ டைரக்டரா சேரணும்? இதனால உங்களுக்கு என்ன லாபம். இல்ல, எனக்குத்தான் என்ன லாபம்?"

"சார்! உங்களுக்கு எந்த லாபமும் இல்ல. உங்களால முடிஞ்சப்ப, வருஷத்துக்கு ஒரு தடவையோ ரெண்டு தடவையோ போர்டு மீட்டிங்குக்கு நீங்க வந்தா போதும். எங்களுக்காக வருஷத்தில ரெண்டு மணி நேரமோ, மூணு மணி நேரமோ நீங்க செலவழிக்க வேண்டி இருக்கும். இது உங்களுக்கு ஒரு சின்ன சுமைதான், ஆனாலும் சுமைதான். எங்களுக்கு என்ன பயன்னு கேட்டா, உங்க அசோசியேஷன்தான். நான் உங்க வளர்ச்சியைப் பல வருஷங்களா கவனிச்சுக்கிட்டே வரேன். நீங்க எனக்கு ஒரு ரோல் மாடல். நீங்க என் கம்பெனியில டைரக்டரா இருக்கணுங்கறது, முழுக்க முழுக்க என்னோட சுயநலமான விருப்பம்தான். உங்ககிட்ட வெளிப்படையா சொல்லிட்டேன். நீங்கதான் ஒரு நல்ல முடிவைச் சொல்லணும்."

"சாரி, அரவிந்தன். உங்க தொழிலுக்கும், என் தொழிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கூடுதலா ஒரு பொறுப்பை நான் ஏத்துக்க விரும்பல. ஐ ஆம் சாரி" என்றார் மருதமுத்து.

ஆனால் அரவிந்தன் விடவில்லை. இன்னும் இரண்டு முறை அவரைச் சென்று பார்த்தான். ஒவ்வொரு முறையும், தன் நிறுவனத்தின் பொது மேலாளர் செல்வாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.

 ஆனால், மருதமுத்து தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

"சாரி சார்! இனிமேல் உங்களை நான் தொந்தரவு செய்ய மாட்டேன்!" என்றான் அரவிந்தன், மூன்றாவது முறை அவரைப் பார்த்தபோது.

"பரவாயில்லை. உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நீங்க எனக்கு அறிமுகம் ஆயிட்டதால, நீங்க எப்ப வேணும்னா என்னை வந்து பார்க்கலாம். ஆனா இந்த டாபிக் மட்டும் வேண்டாம்!" என்றார் மருதமுத்து, சிரித்தபடி.

"நிச்சயமா இதைப் பத்தி இனிமே நான் பேச மாட்டேன். உங்க அறிமுகம் எனக்குக் கிடைச்சதே எனக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம்தான்!" என்று சொல்லி விடைபெற்றான் அரவிந்தன்.

ருதமுத்துவைப் பார்த்து விட்டுத் திரும்பியதும், அரவிந்தனின் அறைக்கு வந்த செல்வா, "சார்! உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்" என்றார்.

"நீங்க என்ன கேக்கப் போறீங்கன்னு தெரியும். அதுக்கு முன்னால, நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும். நம்மகிட்ட வேலை செஞ்ச எஞ்சினியர் சுகுமார் எப்படி இருக்கான்?"

"தெரியலியே சார்! ஏன் கேக்கறீங்க? அவன் மோசடி பண்ணினான்னுதானே, நாம வேலையை விட்டுத் தூக்கினோம்? அவனுக்கு வேற எங்கேயும் வேலை கிடைக்கலேன்னு நினைக்கிறேன்" என்றார் செல்வா, ஏன் அரவிந்தன் இதைப் பற்றிக் கேட்கிறான் என்று புரியாமல்.

"இல்லை. நம்ம போட்டியாளர் சபேசன் இண்டஸ்ட்ரீஸ், அவனை வச்சுக்கிட்டு, நம்ம தொழில்நுட்பத்தைத் திருட்டுத்தனமாப் பயன்படுத்தத் திட்டம் போட்டுக்கிட்டிருக்கறதா, நீங்கதானே எங்கிட்ட சொன்னீங்க?"

"ஆமாம் சார்! சுகுமாரே இதை நம்ம ஊழியர்கள்ள ஒத்தர்கிட்ட சொல்லி, நம்மைப் பழி வாங்கப் போறதா சொல்லிக்கிட்டிருந்தான். சபேசன் இண்டஸ்ட்ரீஸ் இப்ப அந்த எண்ணத்தைக் கைவிட்டுட்டாங்கன்னு தோணுது. சுகுமார் மறுபடி அவங்களைப் பாக்கப் போனப்ப, அவங்க எம் டி சபேசன் அவனைப் பாக்கவே இல்லையாம். அவனை இனிமே அங்கே வர வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். என்ன ஆச்சுன்னே தெரியலேன்னு சுகுமார் புலம்பிக்கிட்டே இருக்கானாம். ஆமாம். இதையெல்லாம் எதுக்குக் கேக்கறீங்க?"

அரவிந்தன் உற்சாகமாகச் சிரித்தபடி, "சரி, இப்ப நீங்க கேக்க வந்ததைக் கேளுங்க!" என்றான்.

இவர் ஏன் தலைப்பை மாற்றிக்கொண்டே இருக்கிறார் என்று குழம்பிய செல்வா, "இல்ல, மருதமுத்து நம்ப கம்பெனியில டைரக்டரா இருக்க ஒத்துக்க மாட்டாரு, அவரு டைரக்டரா இருக்கறதால நமக்கு எந்தப் பிரயோசனமும் இல்லேங்கறப்ப ஏன் அவர்கிட்ட திரும்பத் திரும்ப டைரக்டரா இருக்கச் சொல்லிக் கேட்டீங்கன்னு எனக்குப் புரியல" என்றார்.

"சுகுமாரைச் சேத்துக்கிட்டு, சபேசன் நமக்கு எதிரா செயல்படறாருன்னு நீங்க சொன்னதும், அதை எப்படி சமாளிக்கறதுன்னு யோசிச்சேன். அவங்க திருட்டுத்தனமா நம்ம தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தறதை நம்மால தடுக்கவும் முடியாது. அதை நிரூபிச்சு, அவங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடியாது. அப்பதான், சபேசன் ஆரம்பக் காலத்தில மருதமுத்துகிட்ட வேலை செஞ்சிருக்கார்னும், மருதமுத்து அவருக்கு வழிகாட்டின்னும், அவர் தொழில் ஆரம்பிக்கக் கூட மருதமுத்து உதவி இருக்கார்னும் தெரிய வந்தது. அதனால, மருதமுத்து நமக்கு நெருக்கமானவர்னு காட்டிக்கிட்டா, சபேசன் நம்மகிட்ட வாலாட்ட மாட்டார்னு நினைச்சுத்தான், மருதமுத்துவை மூணு தடவை பாத்து மருதமுத்து நமக்கு நெருக்கமானவர்னு காட்டிக்கிட்டேன். சபேசன் நம்மை எப்பவும் கவனிச்சுக்கிட்டிருக்கிறதால, இந்தத் தகவல் அவருக்குப் போகும்னு எனக்குத் தெரியும். ஆனா, மருதமுத்துகிட்ட நாம என்ன பேசினோம்னு சபேசனுக்குத் தெரியாது. அவரால இதைப் பத்தி மருதமுத்துகிட்ட நேரடியா கேக்கவும் முடியாது. நான் எதிர்பார்த்த மாதிரியே, மருதமுத்து நமக்கு நெருக்கமானவர்னு நினைச்சு, சபேசன் பின்வாங்கிட்டாரு. மருதமுத்து நம்ம கம்பெனியில டைரக்டர் ஆக ஒத்துக்க மாட்டார்னு தெரிஞ்சும், அவரைத் திரும்பத் திரும்பப் பாத்து கேட்டது இதுக்காகத்தான்" என்றான் அரவிந்தன். 

"ரொம்ப எளிமையான, ஆனா அற்புதமான ஸ்ட்ராஜடி சார்! ஒரு கட்டத்தில கௌரவ டைரக்டரா ஆக அவர் ஒத்துப்பாரோன்னு கூட நான் நினைச்சேன்" என்றார் செல்வா.

"ஒரு விதத்தில, மூணு மாசத்துக்கு மருதமுத்து நம்ம கம்பெனியோட கௌரவ டைரக்டரா இருந்து நமக்குப் பெரிய உதவி செஞ்சிருக்காருன்னுதான் சொல்லணும்!" என்றான் அரவிந்தன் சிரித்தபடி.

குறள் 494
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

பொருள்:
ஒருவர் தக்க இடத்தை அறிந்து, பொருத்தமான விதத்தில் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர், தம் எண்ணத்தை இழந்து விடுவர்.

495. தலைமை அமைச்சர்!

கஜேந்திர வர்மா வியாச நாட்டின் தலைமை அமைச்சராக ஆனபோது, நாட்டின் நிர்வாகத்திலேயே பெரிய புரட்சி ஏற்பட்டு, அந்த நாடு ஒரு வல்லரசாக உருவாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டது.

ஆனால், அவர் அரசாங்கத்தின் செயல்பாடு எல்லாத் துறைகளிலும் மிக மோசமாக இருந்தது. அதுவரை ஓரளவு சிறப்பாகவே இருந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்து, மிக வேகமாகக் கீழ் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

ஆயினும், நாட்டின் பல மாகாணங்களிலும் நடைபெற்ற தேர்தல்களில் வர்மாவின் வியாச மக்கள் கட்சி (வி.ம.க.) தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. இதற்குக் காரணம், வர்மாவும், அவருடைய வலதுகரமாக இருந்த அமர்நாத் என்ற அமைச்சரும் மக்களிடையே இருந்த சமுதாய வேறுபாடுகளைப் பயன்படுத்தி, அவர்களைப் பிளவுபடுத்தியதுதான் என்று பொதுவாகக் கருதப்பட்டது.

ஆயினும், பொன்னிநாடு என்ற மாகாணத்தில் மட்டும் வி.ம.க.வால் சிறிதளவு கூட மக்கள் ஆதரவைப் பெற முடியவில்லை. பல்வேறு வேறுபாடுகளுக்கிடையேயும், பொன்னிநாட்டு மக்களிடையே இருந்த சமுதாய நல்லிணக்கம், வர்மாவின் கட்சியினர் நாட்டின் பிற பகுதிகளில் செயல்படுத்திய பிரித்தாளும் உத்திகளை அங்கே எடுபடாமல் செய்து விட்டது.

பொன்னிநாட்டில் மட்டும், பொன்னி மக்கள் கட்சி (பொ.ம.க.), அனைத்துலக பொன்னி மக்கள் கட்சி (அ.பொ.ம.க.) என்ற இரண்டு வலுவான மாநிலக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. அங்கே ஆளும் கட்சியாக இருந்த அ.பொ.ம.க. செய்த முறைகேடுகளை வைத்து, அந்தக் கட்சியை மிரட்டித் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வைத்திருந்தது வி.ம.க 

டுத்த தேர்தலுக்கான நேரம் வந்து விட்டது. வி.ம.க. பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ஊடகங்கள் கணித்திருந்தன. 

தேர்தல் உத்தி பற்றி விவாதிக்க, வி.ம.க. வின் உயர்மட்டக் குழு கூடியது.

"நாம வெற்றி பெறப் போறது உறுதி. ஆனா, பொன்னிநாடு மட்டும் நமக்கு எதிராகத்தான் இருக்கு. அதை மாத்த முடிஞ்சா, நல்லா இருக்கும்!" என்றார் கட்சித் தலைவர் விஜய் நாயக்.

"அதுதான் எனக்கும் ஒரு குறையா இருக்கு" என்றார் கஜேந்திர வர்மா.

"எனக்கு ஒரு யோசனை தோணுது" என்றார் விஜய் நாயக்.

அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் அவரைப் பார்த்தனர்.

"நீங்க பொன்னிநாட்டில ஒரு தொகுதியிலேந்து போட்டி போட்டா. அது நம்ம கட்சிக்கு ஒரு பெரிய எழுச்சியைக் கொடுக்கும். அந்த மாகாணத்தில இருக்கற 40 தொகுதிகள்ள, நாலஞ்சு தொகுதிகள்ள நாம வெற்றி பெறலாம்."

"அது ரிஸ்க். தலைமை அமைச்சரை இது மாதிரி ரிஸ்க்குகளுக்கு உட்படுத்தக் கூடாது" என்றார் அமர்நாத்.

"என்ன பேசறீங்க அமர்நாத்? வியாச நாட்டில எந்தத் தொகுதியில நின்னாலும், வெற்றி பெறக் கூடிய ஒரே தலைவர் நம்ம தலைவர்தான். சாணக்கியர் நீங்க வேற இருக்கீங்க! அ.பொ.ம.க. ஆதரவோடதானே நாம நிக்கப் போறோம்?" என்றார் விஜய்.

"பொன்னிநாட்டு மக்கள் அ.பொ.ம.க வுக்கு எதிரான மனநிலையிலதானே இருக்காங்க?" என்றார் அமர்நாத்.

"நம்ம தலைவர் அங்கே நின்னா, அவங்களுக்கும் கூடுதல் பலமாத்தான் இருக்கும்."

"அப்ப அவரோட பழைய தொகுதியைத் தவிர, பொன்னிநாட்டில ஒரு தொகுதியிலேயும் போட்டி போட்டடும்" என்றார் அமர்நாத்.

"தப்பு அமர்நாத். இப்பல்லாம், ரெண்டு தொகுதியில போட்டி போட்டா, மக்கள் அதை ஒரு பலவீனமாகத்தான் நினைப்பாங்க. பொன்னிநாட்டில ஒரு தொகுதியில மட்டும் போட்டி போட்டு, வெற்றியை அள்றதுதான் தலைவருக்குப் புகழைச் சேர்க்கும்" என்றார் விஜய் நாயக்.

சற்றுநேர விவாதத்துக்குப் பின், விஜய்நாயக்கின் யோசனை ஏற்கப்பட்டு, கஜேந்திர வர்மா பொன்னி நாட்டில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டம் முடிந்ததும், விஜய் நாயக் கட்சி அலுவலகத்துக்குத் திரும்பினார். கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, விஜய் நாயக்குடன் அதே காரில் வந்த கட்சியின் துணைத்தலைவர் வசந்த் மெஹ்ரா, "நீங்க எப்படி இவ்வளவு நம்பிக்கையா இருக்கீங்கன்னு தெரியல. எனக்கு இது சரியான முடிவுதானான்னு சந்தேகமாத்தான் இருக்கு!" என்றார்.

"நான் நினைக்கறது நிச்சயமா நடக்கும். நீங்க வேணும்னா பாருங்க" என்றார் விஜய் நாயக், உற்சாகமாக.

தேர்தலில் வி.ம.க பெரும்பான்மை இடங்களைப் பெற்றது. ஆனால், கஜேந்திர வர்மா பொன்னி நாட்டில் அவர் போட்டியிட்ட தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதனால், வி.ம.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறொரு நபரைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் தலைமை அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

கஜேந்திர வர்மாவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டாதாக ஊடகங்கள் கருத்துக் கூறின.

வி.ம.க.வின் தலைமை அலுவலகத்தில், வசந்த் மெஹ்ரா, விஜய் நாயக்குடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

"அவ்வளவு நம்பிக்கையா சொன்னீங்களே! என்ன ஆச்சு பாத்தீங்களா?" என்றார் வசந்த் மெஹ்ரா.

"நான் நினைக்கறது நடக்கும்னு சொன்னேன். அதான் நடந்திருக்கு!" என்றார் விஜய் நாயக், சிரித்தபடி.

"என்ன சொல்றீங்க?"

"கஜேந்திர வர்மாவோட ஆட்சி சரியாயில்லேன்னு நம்ம எல்லோருக்குமே தெரியும். ஆனா, அவரும் அமர்நாத்தும் சில உத்திகளைப் பயன்படுத்தி ஜெயிச்சுக்கிட்டே வந்தாங்க. அவருக்கு பதிலா, நல்லா ஆட்சி செய்யக் கூடிய ஒத்தர் பதவிக்கு வந்தாதான், நாட்டுக்கும் நல்லது, நம்ம கட்சிக்கும் நல்லது.

"ஆனா, பலமா இருந்த அவரை மாத்த, நம்மால முயற்சியே எடுக்க முடியாத நிலை இருந்தது. நாட்டில பல பகுதிகள்ள, சில உத்திகளைப் பயன்படுத்தி, அவரால ஜெயிக்க முடிஞ்சது. ஆனா, பொன்னி நாடு மாதிரி சில பகுதிகள்ள அவரோட உத்தி எடுபடல. 

"தான் பலவீனமா இருக்கற ஒரு இடத்தில, எந்தத் தலைவரும் நின்னு தனக்கே அழிவைத் தேடிக்க மாட்டாரு. வர்மாவுக்கு அது அவசியமும் இல்ல. ஆனா, தொடர்ந்து கிடைச்ச வெற்றிகளால வர்மாவுக்கு ஏற்பட்டிருந்த ஆணவமும், பொன்னி நாட்டில அவர் உத்திகள் பலிக்கலேங்கற ஆத்திரமும் சேர்ந்து, அவரை இந்த அடிப்படையால விஷயத்தைப் புரிஞ்சுக்க முடியாம செஞ்சுடுச்சு.

"அவரோட வியூக வகுப்பாளர் அமர்நாத்துக்கு இது ஓரளவுக்குப் புரிஞ்சுது. ஆனா, வர்மாகிட்ட உண்மையை தைரியமா பேசற தைரியம் அவருக்குக் கிடையாது. அதனால, முதல்ல கொஞ்சம் ஆட்சேபிச்சுட்டு, அப்புறம் பேசாம இருந்துட்டாரு.

" வர்மா நான் விரிச்ச வலையில விழுந்திட்டாரு. முதலையைக் கரையில ஏற வச்சு, அதை அழிக்கிற மாதிரி, வர்மாவோட ஈகோவைப் பயன்படுத்தி, அவரை ஒரு ஆபத்தை ஏத்துக்க வச்சு, அவர் கதையை முடிச்சுட்டேன். இப்ப ஒரு நல்ல தலைவர் நமக்குக் கிடைச்சிருக்காரு. இது நம்ம கட்சிக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது!" 

விஜய் நாயக்கின் விளக்கத்தைக் கேட்ட வசந்த் மெஹ்ரா, 'வர்மாவுக்கு ஆதரவா இருக்கற மாதிரி காட்டிக்கிட்டே, அவரைக் கவுத்துட்டாரே! என்ன இருந்தாலும் பழம் தின்னுக் கொட்டை போட்ட அனுபவசாலியாச்சே! இவர்கிட்ட நான் நிறைய கத்துக்கணும். கவனமாவும் இருக்கணும்!" என்று நினைத்துக் கொண்டார். 

குறள் 495 
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

பொருள்:
ஆழமுள்ள நீரில், முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால், நீரிலிருந்து விலகி வந்தால், அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்று விடும்.

496. பெரிய வக்கீல், சின்ன வக்கீல்!

"ஊருக்குப் போன இடத்தில ஒழுங்கா இருந்துட்டு வராம, எதுக்கு அங்கே போய் கார் ஓட்டணும் இவன்? இப்பதான் ஓட்டக் கத்துக்கிட்டு, லைசன்ஸ் வாங்கி இருக்கான். அதை உடனே டெஸ்ட் பண்ணிப் பாக்கணுமா?" என்றார் வைத்திலிங்கம், கோபத்துடன்.

"அவனைக் கைது பண்ணி இருக்காங்க. அவனை ஜாமீன்ல வெளியில கொண்டு வர வழியைப் பாக்காம, அவன் மேல குத்தம் சொல்லிக்கிட்டிருக்கீங்க!" என்றாள் அவர் மனைவி ரோகிணி.

"ஜாமீன்ல வெளியில கொண்டு வரது பெரிசுல்ல. இவன் காரை மோதினது உள்ளூர்ல ஒரு பெரிய மனுஷனோட பையனோட பைக் மேல. அவன் அடிபட்டு ஆஸ்பத்திரியில இருக்கான். போலீஸ்ல கேஸ் புக் பண்ணி இருக்காங்க. அது விசாரணைக்கு வந்து தீர்ப்பு வர வருஷக்கணக்கா ஆகும். முரளி அமெரிக்கா போய்ப் படிக்கணும்னு திட்டம் போட்டுக்கிட்டிருக்கான். அதுக்கெல்லாம் பெரிய தடங்கலா இருக்குமே இது! பார்க்கலாம். நான் உடனே கிளம்பி வரேன்" என்றார் வைத்திலிங்கம்.

முரளி தன் காரை சங்கர் ஓட்டிய மோட்டார் சைக்கிளின் மீது மோதிய வழக்கு விசாரணைக்கு வந்தது. ஒரு மாதம் தொடர்ந்து விசாரணை நடந்து, முரளியின் மீது தவறு இல்லையென்றும், சங்கரின் அஜாக்கிரதைதான் விபத்துக்குக் காரணம் என்றும் தீர்ப்பாகியது.

முரளிக்காக வாதிட்ட வழக்கறிஞர் சாந்தனின் கையைக் குலுக்கி, அவருக்கு நன்றி தெரிவித்தார் வைத்திலிங்கம்.

"என்ன சார் இது! நீங்க ஒரு சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர். நீங்களே உங்க பையனுக்காக வாதாடாம, இந்த ஊர்ல இருக்கிற ஒரு சாதாரண வக்கீலான எங்கிட்ட இந்த வழக்கைக் கொடுத்ததே பெரிய விஷயம். நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்" என்றார் சாந்தன்.

"ஆமாம். நானே உங்ககிட்ட கேட்டேன் நீங்க பதில் சொல்லல. ஏன் நீங்களே வாதாடமா, வழக்கை இந்த ஊர்ல இருக்கற ஒரு சின்ன வக்கீல் கிட்ட கொடுத்தீங்க?" என்றாள் ரோகிணி.

"நான் சுப்ரீம் கோர்ட் வக்கீல்தான். ஆனா, இது மாதிரி சின்ன கோர்ட்ல எல்லாம் வழக்கை நடத்தறது ஒரு கலை. சங்கரோட அப்பா ஒரு பெரிய மனுஷன் வேற. அதனால, தன் பையன் மேல தப்பு இல்லைன்னு நிரூபிக்க, அவர் எல்லாத்தையும் செய்வாரு. அதோட வழக்கு சீக்கிரம் முடியாம, வருஷக்கணக்கா இழுத்தடிக்கறதுக்கான வேலைகளையும் அவரால செய்ய முடியும். இதையெல்லாம் சமாளிக்க, ஒரு அனுபவமுள்ள உள்ளூர் ஆளாலதான் முடியும். நான் வழக்கை நடத்தி இருந்தா, என்னால எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்க முடியும்னு தெரியல!" என்று விளக்கினார் வைத்திலிங்கம்.

"என்னவோ, நீங்க சொல்றது எனக்குப் புரியல. ஒரு சின்ன வக்கீல் செஞ்சதை ஒரு பெரிய வக்கீல் செய்ய முடியாதா?" என்றாள் ரோகிணி விடாமல்.

"உனக்குப் புரியணும்னா, இப்படிச் சொல்றேன். கோர்ட்ல நான் பெரிய வக்கீல்களோடல்லாம் வாதாடி ஜெயிச்சிருக்கேன். ஆனா, வீட்டில உன்னோட வாதாடி என்னிக்காவது ஜெயிச்சிருக்கேனா?"

ரோகிணி பெருமை பொங்கப் புன்னகை செய்தாள்  

குறள் 496
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

பொருள்:
வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒட மாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓட மாட்டா.

497. பொதுநல வழக்கு!

"நீங்க இது மட்டும் எத்தனையோ பொதுநல வழக்குகள் போட்டிருக்கீங்க. எத்தனையோ ஊழல்களை வெளியில கொண்டு வந்திருக்கீங்க. ஆனா இப்ப நீங்க இறங்கி இருக்கிறது ஒரு ஆபத்தான வேலை" என்றார் சகாயம்.

"எந்த விதத்தில?" என்றார் ராமசாமி.

"என்னங்க இப்படிக் கேக்கறீங்க? தொழிலதிபர் வேலுச்சாமியைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? அவருக்கு அரசியல் செல்வாக்கு நிறைய இருக்கு. அதனாலதான் நேர்மையான அதிகாரிகள் கூட அவர் அவர் மேல நடவடிக்கை எடுக்காம இருக்காங்க. வேலுச்சாமி கொலை செய்யக் கூடத் தயங்க மாட்டார்ங்கறது உங்களுக்குத் தெரியாதா? அவர் தொடங்கப்போற தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கக் கூடாதுன்னு பொதுநல வழக்குப் போடப் போறேன்னு சொல்றீங்களே! உங்களை அவர் சும்மா விட்டுடுவாரா?"

"எதிர்க்கட்சிக்காரங்க அவர் மேல பல குற்றச்சாட்டுக்களைச் சொல்லி இருக்காங்களே! அவங்களை அவர் எதுவும் செய்யலியே?"

"எதிர்க்கட்சிக்காரங்க பொதுப்படையாப் பேசுவாங்க. உங்களை மாதிரி ஆதாரங்களையெல்லாம் சேகரிச்சு வச்சுக்கிட்டு அவங்க பேசறது இல்ல. அதனால பெரும்பாலும் அதை யாருமே பெரிசு படுத்த மாட்டாங்க. வேலுச்சாமியும், இதெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கள், எனக்குக் கெட்ட பெயர் உண்டாக்கணுங்கறதுக்காக சில பேர் பரப்புகிற பொய்னு சொல்லிட்டு அதோட விட்டுடுவாரு. அந்த அரசியல்வாதிகளும் அந்தக் குற்றச்சாட்டைப் பத்தி அப்புறம் பேச மாட்டாங்க. ஆனா உங்க விஷயம் வேற. நீங்க ஒரு வழக்குப் போட்டீங்கன்னா, அதுக்கு எல்லாருமே பயப்படுவாங்க. அதனால உங்க விஷயத்தில வேலுச்சாமி  சும்மா இருக்க மாட்டாரு. இன்னொரு விஷயத்தையும் நீங்க ஞாபகம் வச்சுக்கணும்." 

"என்ன அது?" என்றார் ராமசாமி.

சகாயம் கூறிய பதிலைக் கேட்டு சற்று நேரம் யோசனை செய்த ராமசாமி, "சரி. நீங்க சொல்றதை நான் சோசிச்சுப் பாக்கறேன். வழக்குப் போடறதை இப்போதைக்குத் தள்ளிப் போடறேன்" என்றார்.

தான் சொன்னதை ராமசாமி ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி அடைந்த சகாயம், 'சில விஷயங்களுக்கு எல்லாருமே பயந்துதானே ஆகணும்!" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு, ராமசாமியைச் சந்தித்த சகாயம், "என்ன இப்படிப் பண்ணிட்டீங்க?" என்றார்.

"இவ்வளவு வலுவான ஆதாரம் இருக்கும்போது, வழக்குப் போடாம இருக்கறது தப்புன்னு தோணிச்சு. அதனால வழக்குப் போட்டுட்டேன். எப்படியும், இந்த வழக்கில, வேலுச்சாமிக்கு எதிராத்தான் தீர்ப்பு வருங்கறதில எனக்கு எந்த சந்தேகமும் இல்ல!" என்றார் ராமசாமி.

"அதில்ல. திடீர்னு, எதிர்க் கட்சியா இருக்கற த.ந.க.வில போய்ச் சேர்ந்திருக்கீங்களே, அதைக் கேட்டேன்" என்றார் சகாயம்.

"நீங்கதானே அன்னிக்கு சொன்னீங்க, அரசியல் கட்சியில இருக்கறவங்களுக்கு ஒருவிதப் பாதுகாப்பு உண்டு, அவங்களைத் தாக்கறதுக்கு வேலுச்சாமி மாதிரி ஆட்கள் கூடத் தயங்குவாங்க, அதனாலதான், அரசியல் கட்சிக்காரங்க தைரியமா அவர் மேல குற்றச்சாட்டுக்களைச் சொல்லுவாங்கன்னு? அதனாலதான், ஒரு கட்சியில சேர்ந்துட்டு, அப்புறம் அவர் மேல வழக்குப் போட்டிருக்கேன். அரசியல் கட்சியில இருக்கற பாதுகாப்பை, என் நோக்கத்தை நிறைவேத்திக்கப் பயன்படுத்திக்கறேன் அவ்வளவுதான்!" என்றார் ராமசாமி.

"ஆனா, எல்லாக் கட்சிகளுமே மோசம்னுதானே நீங்க எங்கிட்ட அடிக்கடி சொல்லுவீங்க?"

"உண்மைதான். ஆனா, இப்ப பதவியில இருக்கறவங்க ரொம்ப மோசமா இருக்காங்க. த.ந.க. அந்த அளவுக்கு மோசமா இருந்ததில்ல. அதனால, என் நோக்கத்தை நிறைவேத்திக்கறதுக்காக, என் கருத்துக்களைக் கொஞ்சம் சமரசம் செஞ்சுக்கிட்டிருக்கேங்கறது உண்மைதான். ஒருவேளை, இவங்க பதவிக்கு வந்தப்பறம், ஏதாவது முறைகேடுகள்ள ஈடுபட்டா, அப்ப இந்தக் கட்சியிலேந்து விலகிட வேண்டியதுதான்" என்றார் ராமசாமி.

தன் உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதில், தனக்குப் பாதுகாப்புத் தேடிக் கொள்ள, ராமசாமி செய்து கொண்ட சமரசம் சரிதானா என்று சகாயத்தால் தீர்மானிக்க முடியவில்லை.

குறள் 497 
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.

பொருள்:
(செய்யும் வழிவகைகளைக்) குறைவில்லாமல் சிந்தித்துத் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், ஒருவருக்கு அஞ்சாமை தவிர வேறு துணை வேண்டியதில்லை.

498. பாம்பு வேட்டை!

"பாம்பை அடித்தால், அதை அடித்துக் கொல்ல வேண்டும். தப்ப விட்டால் நமக்கு என்றுமே ஆபத்துதான்!" என்றான் அரசன் விக்ரமசிங்கன்.

"பிங்கள நாட்டுப் படைகள் நம்மிடம் தோற்றதும்,  பிங்கள நாட்டு மன்னர் வீரவர்மர், தன் சிறிய படையுடன் நாட்டை விட்டே ஓடி விட்டதைத்தான் தாங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அவர் எதிர்ப்புக் காட்டாமல், நாட்டை விட்டு விட்டு, தன் படைதான் முக்கியம் என்று ஓடுவார் என்று நாம் எதிர்பார்க்கவில்லையே!"

"அதைத்தான் பாம்பை உயிரோடு தப்ப விடுவது என்று நான் குறிப்பிட்டேன். இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்று தகவல் கிடைத்ததா?"

"இப்போதுதான் நம் ஒற்றர்படைத் தலைவர் புதுத் தகவலுடன் வந்திருக்கிறார். அதைத் தங்களிடம் சொல்லத்தான் நான் தங்களைக் காண வந்தேன்" என்றார் அமைச்சர்.

"சொல்லுங்கள்!" என்றான் மன்னன், ஆர்வத்துடன்.

"பரகால நாட்டுக்குச் சொந்தமான பனிமலர்த் தீவு என்ற சிறிய தீவில்தான் பிங்கள நாட்டு அரசரும், அவருடைய படைகளும் தஞ்சமடைந்திருக்கிறார்கள்."

"அப்படியா?" என்று சற்று யோசித்த மன்னன் விக்ரமசிங்கன், "பனிமலர்த்தீவில் பரகால நாட்டுப் படைகள் இருக்கின்றனவா?" என்றான்.

"இல்லை மன்னா! அங்கு குறைந்த எண்ணிக்கையில்தான் மக்கள் வசிக்கிறார்கள். பாதுகாப்புக்காக ஒரு சில படை விரர்கள்தான் இருக்கிறார்கள். அதனால்தான், பிங்கள நாட்டு மன்னரையும் அவர் படைகளையும் அங்கே தங்கி இருக்கப் பரகால நாட்டு மன்னர் அனுமதித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்" என்றார் அமைச்சர்.

"அப்படியானால், நாம் பனிமலர்த்தீவைத் தாக்கினால் வீரவர்மனையும் அவன் படைகளையும் எளிதாகச் சிறைப்படுத்தி விடலாமே!" என்றான் விக்ரமசிங்கன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! அந்தத் தீவு பரகால நாட்டுக்குச் சொந்தமானது. நாம் அங்கு சென்று தாக்கினால், பரகால நாட்டின் மீது போர் தொடுத்ததாக ஆகாதா?" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"நாம் என்ன பனிமலர்த்தீவை ஆக்கிரமிக்கவா போகிறோம்? வீரவர்மனையும், அவன் படைகளையும் தாக்கி, சிலரைக் கொன்று, மற்றவர்களைச் சிறைப்படுத்தி, நம் நாட்டுக்கு அழைத்து வரப் போகிறோம். அவ்வளவுதானே?"

"என்ன இருந்தாலும், அந்த இடம் பரகால நாட்டைச் சேர்ந்ததாயிற்றே!"

"நான் சொல்வதைக் கேளுங்கள். நம் நாட்டின் கிழக்குக் கடற்கரையிலிருந்து, பனிமலர்த்தீவு சிறிது தூரத்தில்தான் இருக்கிறது. அருகில், மலைகளும், காடுகளும் நிறைந்த சிறு தீவுகள் இருப்பதால், நாம் சில படகுகளில் நம் வீரர்களை அனுப்பினால், அதை யாரும் கவனிக்க மாட்டார்கள். சில மணி நேரங்களில், நம் வேலையை முடித்து விடலாம். தேவைப்பட்டால், பின்னர் பரகால நாட்டுக்கு நம் தூதரை அனுப்பி, நிலைமையை விளக்கலாம். என்ன சொல்கிறீர்கள்?"

அமைச்சர் அரை மனத்துடன் தலையசைத்தார்.

"அரசே! நமக்குப் பெரிய ஆபத்து நிகழ்ந்து விட்டது" என்றார் அமைச்சர்.

"என்ன ஆயிற்று? அதுதான் நம் வீரர்கள் வீரவர்மனைச் சிறைப்பிடித்து அழைத்து வருவதாக நமக்குத் தகவல் வந்ததே!" என்றான் விக்ரமசிங்கன், படபடப்புடன்.

"திட்டமிட்டபடி, நம் வீரர்கள் படகுகளில் சென்று, பனிமலர்த்தீவை அடைந்து, வீரவர்மரையும் அவர் படைவீரர்கள் பலரையும் சுலபமாகச் சிறைப்பிடித்து விட்டனர். அவர்களைப் படகுகளில் அழைத்து வந்தபோது, எதிர்பாராத வகையில், பரகால நாட்டுப் படைகள் நம்மைத் தாக்கி, வீரவர்மனை மீட்டு அழைத்துச் சென்று விட்டனர். அத்துடன், பரகால நாடு நம் மீது போர் தொடுக்கும் விதமாக, நம் எல்லையில் தாக்குதலைத் துவக்கி இருக்கிறது!" என்றார் அமைச்சர், கவலையுடன்.

அமைச்சரின் பேச்சைக் கேட்காமல், யோசிக்காமல், அவசரமாகச் செயல்பட்டு விட்டோமே என்று வருந்தினான் விக்ரமசிங்கன். 

குறள் 498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.

பொருள்:
பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் இருக்கும் இடத்தைத் தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.

499. பீட்டரின் தோல்வி

"எவ்வளவோ பெரிய ஆளையெல்லாம் போட்டிருக்கோம்? இவன் ஒரு சாதரணமான ஆளு. இவனை ஒண்ணும் செய்ய முடியலேன்னு வந்து நிக்கறியே?" என்றான் மாசிலாமணி, கோபத்துடன்.

"நானும் அப்படித்தான் நினைச்சேன். எதுக்கு இவ்வளவு பேரை அழைச்சுக்கிட்டு போகச் சொல்றீங்கன்னு கூட நினைச்சேன். ஆனா என்ன செய்யறது? அவனை நெருங்கக் கூட முடியலையே!"

"என்ன பேச்சுடா இது? அதிரடியாப் போய்த் தாக்கிட்டு, அவன் கதையை முடிச்சுட்டு வர வேண்டியதுதானே? அவன் என்ன கோட்டையில இருக்கானா, இல்லை, அவனைப் பாதுகாக்க அடியாளுங்க இருக்காங்களா?" என்றான் மாசிலாமணி.

அதெல்லாம் இருந்தா, அடிச்சுத் தள்ளிக்கிட்டுப் போயிருப்பமே! தனக்குன்னு தனி பாதுகாப்புப் படையே வச்சிருந்தானே பால்ராஜ், அவன் படையை அடிச்சு விரட்டிட்டு அவனைப் போடலியா? 

"இவன் அப்படி இல்லீங்க. ஒரு சின்ன வீட்டிலதான் இருக்கான். நாங்க அந்தத் தெருவுக்குள்ள நுழைஞ்சதுமே, எதையோ மோப்பம் பிடிச்ச மாதிரி ஊர்க்காரங்க பல பேரு அவன் வீட்டு முன்னால வந்து நின்னுட்டாங்க. 

"அவங்க கையில ஆயுதம் எதுவும் இல்லைதான். அவங்க சண்டை போடற ஆளுங்களும் இல்ல. ஒரு தட்டு தட்டினா, கீழே விழுந்துடக் கூடியவங்கதான். ஆனா, அவங்க நின்ன உறுதியைப் பாத்தா, ஒவ்வொத்தரும் 'என் பொணத்தை மிதிச்சிக்கிட்டுத்தான் இந்த வீட்டுக்குள்ள போக முடியும்'னு சவால் விட்டுட்டு நிக்கற மாதிரி இருந்தது. 

"அத்தனை பேரையும் கொன்னு போட்டுட்டா, வீட்டுக்குள்ள போய் அவனைப் போட முடியும்? 'நிலம் வாங்கற விஷயமா ஒத்தரைப் பாக்க வந்தோம், தப்பான ஊருக்கு வந்துட்டோம் போலருக்கு'ன்னு சொல்லிச் சமாளிச்சுட்டுத் திரும்பி வந்துட்டோம்" என்றான் பீட்டர்.

"எனக்கு அவமானமா இருக்கு பீட்டர். சரி விடு. நானே போய் முடிச்சுட்டு வரேன்" என்றான் மாசிலாமணி, கோபம் குறையாமல்.

'நீங்க போனாலும் இதேதான் நடக்கப் போகுது! போயிட்டு வாங்க. அப்பதான் நான் சொன்னதோட உண்மை உங்களுக்குப் புரியும்!' என்று பீட்டர் முணுமுணுத்தது மாசிலாமணியின் காதில் விழவில்லை.

குறள் 499 
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

பொருள்:
ஒருவருக்குப் பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.

500. பராந்தகனின் முடிவு      

அண்டை நாட்டுடனான போருக்குத் தலைமை தாங்கி நடத்தி வெற்றி கண்ட இளவரசன் பராந்தகனை நாடு முழுவதும் கொண்டாடியது.

"மன்னருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் இளவரசரே படைகளுக்குத் தலைமையேற்றுச் சென்று போரை நடத்தி இருக்கிறார். போரில் அவருடைய வீரச் செயல்கள் பற்றிப் படைவீரர்கள் பலரும் அலுக்காமல் திரும்பத் திரும்ப்ப் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்."

"அவருடைய குதிரை மீது அம்பு பாய்ந்து, அது கீழே விழ்ந்ததும், இளவரசர் இன்னொரு குதிரைக்குக் கடக் காத்திருக்காமல், தரையில் நின்றபடியே,  குதிரை மீது அமர்ந்திருந்த எதிரி நாட்டு மன்னனுடன் போரிட்டு, அவனை வெட்டி வீழ்த்தினாராம். எதிரி நாட்டு மன்னன் வீழ்ந்ததும், எதிரிப்படைகள் சரணடைந்து விட்டனராம். எத்தனையோ போர்களைக் கண்ட நம் மன்னரின் சாதனையையே நம் இளவரசர் மிஞ்சி விட்டதாகப் படைத் தளபதிகள் வெளிப்படையாகவே கூறுகிறார்களாம்!"

"மன்னர் கோபித்துக் கொள்ளப் போகிறார்!"

"தன் மகன் தன்னை மிஞ்சும் வகையில் பெருமை அடைவது, ஒரு தந்தைக்குப் பெருமை அளிக்கக் கூடிய விஷயம் என்று வள்ளுவப் பெருந்தகை கூறி இருக்கிறரே!"

"அது சரிதான். மன்னர் நோய்வாய்ப்பட்டிருக்கிற நிலையில், அவருக்குப் பிறகு நம் நாட்டைக் காப்பாற்ற பொருத்தமும், தகுதியும் உள்ளவராக நம் இளவரசர் இருப்பது பற்றி மக்களாகிய நாமும் பெருமை கொள்ளலாமே!"

"நம் நாட்டின் கிழக்கு எல்லைப் பகுதியில், புரட்சிக்காரர்களின் அட்டூழியங்கள் எல்லை மீறி விட்டன. அவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லாவிட்டாலும், வன்முறை மூலம் மக்களை மிரட்டி, அந்தப் பகுதியைத் தனி நாடு போல் அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். படைகளை அனுப்பி, ஓரிரு நாட்களில் அவர்களை அழித்து விடலாம்தான். ஆனால், அப்பாவி மக்கள் பலரும் கொல்லப்படுவார்களே என்பதால் மன்னர் பொறுமையாக இருக்கிறார்" என்றார் அமைச்சர்.

"இதை எப்படிச் சகித்துக் கொண்டிருக்கிறீர்கள் அமைச்சரே? புரட்சிக்காரர்களை உடனே அடக்காவிட்டால், அவர்கள் அதிக வலுப்பெற்று விடுவார்கள். அங்கிருக்கும் மக்களுக்கும் நம் மீது நம்பிக்கை போய் விடும்" என்றான் இளவரசன் பராந்தகன்.

"நீங்கள் கூறுவது சரிதான். புரட்சிக்காரர்களை அடக்க ஒரு சரியான உத்தியைத்தான் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். ஐம்பது பேர் கொண்ட ஒரு  ரகசியப் படையை உருவாக்கி இருக்கிறோம். அவர்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சாதாரண மனிதர்கள் போல் அந்தப் பகுதிக்குள் ஊடுருவி புரட்சிப்படையின் தலைவர்களைத் தந்திரமாகக் கொன்று விடுவார்கள். தலைவர்கள் கொல்லப்பட்டதும், மற்றவர்கள் பயந்து அடங்கி விடுவார்கள்" என்றார் அமைச்சர்.

"நல்ல யோசனைதான். அந்த ரகசியப்படைக்கு நானே தலைமை தாங்கிச் செல்கிறேன்" என்றான் இளவரசன்.

"வேண்டாம் இளவரசே! இது மிகவும் ஆபத்தான செயல். அந்த ஐம்பது பேரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துத்தான் இந்தப் பணியில் இறங்குகிறார்கள். நீங்கள் இந்த நாட்டின் இளவரசர். அடுத்த மன்னராகப் போகிறவர். போர்க்களத்தில் நீங்கள் காட்டிய வீரத்தால், உங்கள் புகழ் அண்டை நாடுகளில் கூடப் பரவி இருக்கிறது. ஆனால், இது வழக்கமான போர் அல்ல. ஆபத்து நிறைந்த இந்தச் செயலில் தாங்கள் ஈடுபடக் கூடாது. மன்னர் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார். நானும் இதில் ஈடுபட வேண்டாமென்று உங்களை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார் அமைச்சர், கெஞ்சும் குரலில்.

ஆனால், பராந்தகன் அமைச்சரின் பேச்சைக் கேட்கவில்லை. அவன் தந்தை முதலில் ஆட்சேபித்தபோதும், அவரிடம் வற்புறுத்தி அனுமதி வாங்கி ஐம்பது பேருடன் ரகசியமாகக் கிளம்பி விட்டான்.

ராந்தகன் தலைமையிலான சிறிய படை புரட்சிக்காரர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்த பகுதிக்குள் ஊடுருவிப் பத்து நாட்கள் ஆகி விட்டன. இந்தப் பத்து நாட்களில், புரட்சிப்படையின் முக்கியத் தலைவர்கள் இருவரை அவர்கள் கொன்று விட்டனர். 

தங்கள் தலைவர்கள் இருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டது புரட்சிப் படையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருந்தாலும், எல்லோருக்கும் தலைவராக இருந்த தண்டபாணி, இரண்டாம் நிலைத் தலைவர்களை ஊக்கப்படுத்தி வைத்திருந்தார்.

"இது நிச்சயமா நம் மன்னரோட சதி வேலைதான். நம்மைக் கொல்ல ரகசியமா யாரையோ அனுப்பி இருக்காங்க. நாம ஜாக்கிரதையா இருக்கணும். நம்ம பகுதிக்குப் புதுசா வந்திருக்கறவங்க யாருன்னு பாத்து அவங்களைக் கண்காணிக்கணும். உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் வந்தா, எங்கிட்ட சொல்லுங்க. அவங்களை எப்படி விசாரிக்கணுமோ, அப்படி விசாரிப்போம்" என்று இரண்டாம் நிலைத் தலைவர்களிடம் ரகசியமாகக் கூறினார் தண்டபாணி.

ரவு நேரத்தில், மரங்கள் அடர்ந்திருந்த அந்தச் சாலை வழியே நடந்து சென்று கொண்டிருந்தான் பராந்தகன். அவனுக்குப் பாதுகாப்பாக, சற்றுப் பின்னால் இரண்டு வீரர்கள் வந்து கொண்டிருந்தனர்.

ஒரு மரத்துக்குக் கீழே பராந்தகன் நடந்து கொண்டிருந்தபோது, இருட்டில் மறைந்தபடி மரத்தின் மேல் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் பராந்தகனின் கழுத்தில் குதித்தான். இருவரும் கீழே விழுந்தனர்.

என்ன நடந்தது என்று உணர்ந்து இளவரசன் சமாளித்துக் கொள்வதற்குள், "நீதானேடா எங்கப்பாவைக் கொன்றது?" என்றபடியே, இளவரசனின் கழுத்தில் தன் கையிலிருந்த கத்தியை ஆழமாகப் பாய்ச்சினான் அந்தச் சிறுவன்.

இளவரசனுக்குப் பாதுகாவலாக வந்து கொண்டிருந்த இரண்டு வீரர்களும் அருகே வந்து பார்ப்பதற்குள், இளவரசனின் உயிர் பிரிந்திருந்தது. சிறுவன் விரைந்து ஓடி மறைந்து விட்டான்.  

குறள் 500
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

பொருள்:
பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்று விடும்.
                           அதிகாரம் 49- காலமறிதல்                               
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...