Tuesday, March 30, 2021

468. கூட்டு முயற்சி

"ஊர் கூடித் தேர் இழுக்கறதுன்னு சொல்லுவாங்க. ஒரு கஷ்டமான காரியம்னாலும் பல பேர் சேர்ந்து செஞ்சா செஞ்சுடலாம் இல்ல?" என்றான் தணிகை.

"அது சரி. எந்த அனுபவமும் இல்லாம நம்மளால எப்படி ஒரு தொழிலை ஆரம்பிச்சு நடத்த முடியும்?" என்றான் வேலு.

"இங்க பாரு. நாம பத்து பேர் இருக்கோம். ஆளுக்குப் பத்தாயிரம் ருபா போடறோம். ஒரு லட்ச ரூபாயில ஒரு தொழில் ஆரம்பிக்கறோம்."

"என்ன தொழில் ஆரம்பிக்கப் போறோம்? ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில எவ்வளவு லாபம் கிடைக்கும்? நம்ம பத்து பேருக்கும் போதுமான அளவுக்கு வருமானம் வருமா?" என்றான் வேலு.

"வேலு! நாம பத்து பேருமே படிப்பை முடிச்சு ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு. நம்ப யாருக்குமே வேலை கிடைக்கல. 

"நேத்து நம் ஊர்ல இருக்கற பெரிய சூப்பர் மார்க்கெட் முதலாளிகிட்ட பேசினேன். அவரு சொன்ன யோசனைதான் இது. 

"அவரு மொத்த விலையில மளிகைப் பொருட்களை நமக்குக் கொடுப்பாரு. நம்ம நகரத்தைச் சுத்தி இருக்கற சின்ன ஊர்கள்ள உள்ள கடைகளுக்குப் போய் அந்தப் பொருட்களை நாம விக்கணும். குறைஞ்ச விலையில கிடைக்கறதால அவங்க வாங்கிப்பாங்க. 

"சூப்பர் மார்க்கெட்ல ஒரு லட்சம் ரூபா டெபாசிட் பண்ணினா அவங்க பத்து லட்சம் ரூபா சரக்கை நமக்கு கடன்ல கொடுப்பாங்க. நாம விக்கற கடைகள்ளேந்து பணம் வாங்கினப்பறம் அவங்களுக்குக் கொடுத்தாப் போதும்.

" நாம ஒவ்வொத்தரும் சில ஊர்களை எடுத்துக்கிட்டு, டூ வீலர்ல சரக்கைக் கொண்டு போய் வித்துடலாம். கூடிய வரையில கேஷுக்கே விப்போம்.ஒரு சில பேருக்குக் கடன்ல கொடுக்க வேண்டி இருக்கலாம். 

"ஒரு மாசத்துக்கு அம்பது லட்சம் ரூபா சுலபமா விற்பனை செய்யலாம். அஞ்சு சதவீதம் லாபம் வச்சாக் கூட ரெண்டரை லட்சம் ரூபா கிடைக்கும். ஒவ்வொத்தருக்கும் 25000 ருபா கிடைக்கும். பின்னால நாம இன்னும் அதிகமாக் கூட சம்பாதிக்க முடியும். என்ன சொல்ற?" என்றான் தணிகை.

"முதல்ல நாம எந்தெந்த ஊர்கள்ள வியாபாரம் செய்யப் போறோம், அங்கே எத்தனை கடைகள் இருக்கு,அவங்க இப்ப எங்க என்ன விலைக்கு சரக்கு வாங்கறாங்க, நம்மகிட்ட வாங்குவாங்களா மாதிரி விவரங்களையெல்லாம் சேகரிக்க வேண்டாமா?" என்றான் வேலு.

"டேய், யார்டா இவன், நாம என்னவோ ஐந்தாண்டுத் திட்டம் தயாரிக்கிற மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டு? முதல்ல இவ்வளவு குறைஞ்ச முதலீட்டில ஒரு வியாபாரம் ஆரம்பிக்கிற வாய்ப்புக் கிடைக்கிறதே கஷ்டம். நாம இவ்வளவு பேர் இருக்கோம் இல்ல? எல்லாரும் சேர்ந்து கொஞ்சம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சா இது நல்லா வரும்னுதான் நான் நினைக்கிறேன்" என்றான் குமரன்.

மற்றவர்கள் மௌனமாக இருந்தாலும், அவர்கள் இந்தத் திட்டதை ஏற்றுக் கொள்ளத் தாயாராக இருப்பது போல்தான் தோன்றியது.

"சாரிப்பா! நான் இதில சேரல. இதை நல்லா ஸ்ட்டி பண்ணாம இதில இறங்கறது சரியில்லேன்னுதான் எனக்குத் தோணுது. நான் வரேன். உங்க தொழில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் வேலு.

அவன் சென்றதும், மற்ற 9 பேரும் தலைக்கு 15,000 ரூபாய் முதலீடு செய்வது என்றும் சூப்பர் மார்க்கெட்டில் 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வது என்றும், மீதமுள்ள 35000 ரூபாயை மற்ற துவக்க காலச் செலவுகளுக்குப் பயன்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தொழில் துவங்கி ஆறு மாதங்கள் ஆகி விட்டன. ஒரு சில கடைக்காரர்கள் மட்டுமே இவர்களிடமிருந்து பொருட்களை வாங்கிக் கொள்ள முன் வந்தனர். மற்றவர்கள் வேறு சில மொத்த வியாபாரங்களிடமிருந்து தாங்கள் ஏற்கெனவே குறைந்த விலையில் பொருட்களை வாங்கி வருவதாகச் சொன்னார்கள்.

இவர்களிடம் பொருட்களை வாங்கியவர்களும் பணம் கொடுக்கப் பல நாட்கள் எடுத்துக் கொண்டனர்.ஆனால் சூப்பர் மார்க்கெட் இவர்களிடமிருந்து பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தது. 

9 பேரில் இருவர் வேலை கிடைத்துப் போய் விட்டனர். நான்கு பேர் ஆர்வம் இழந்து தொழிலில் ஈடுபடுவதை நிறுத்தி விட்டனர். 

பழனியும் இன்னும் இரண்டு பேரும் மட்டுமே தொழிலில் ஈடுபட்டு வந்தனர். மேற்கொண்டு சரக்கு வாங்க முடியாத நிலையில், கடைகளிலிருந்து பணமும் வசூலாகாத நிலையில் வியாபாரத்தை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று பழனிக்குப் புரிந்தது.

ஆனால் சூப்பர் மார்க்கெட்டுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை எப்படிக் கொடுப்பது என்று கவலைப்பட ஆரம்பித்தான் பழனி.

அரசியல் இயல்
அதிகாரம் 47 
 தெரிந்து செயல்வகை  
குறள் 468
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

பொருள்:
தக்க வழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று உதவினாலும் பாழாகி விடும்.
அறத்துப்பால்                                                       காமத்துப்பால்

Sunday, March 28, 2021

467. ஒரு மாத அவகாசம்

பத்து வருடங்கள் வேலை பார்த்த பிறகும் சண்முகத்துக்கு அவன் வேலையில் அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை. 

வருடா வருடம் கிடைக்கும் சிறிய அளவிலான சம்பள உயர்வு பண வீக்கத்துடன் போட்டி போட முடியாத அளவுக்குத்தான் இருந்தது. 

அதனால் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார ரீதியில் அவன் இன்னும் சற்று நலிந்திருந்தான் என்பதுதான் உண்மை.

வேறு வேலைக்கான அவன் முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. அவன் படிப்புக்கும் அனுபவத்துக்கும் வேறு நல்ல வேலைகளுக்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்று சண்முகம் உணர்ந்து கொண்டான்.

அப்போதுதான் சண்முகத்துக்கு அந்த யோசனை தோன்றியது. 'சொந்தத் தொழில் செய்தால் என்ன?'

அந்த எண்ணம் வந்த பிறகு வெளி உலகத்தைக் கூர்ந்து பார்த்தபோது அவன் ஒன்றை கவனித்து உணர்ந்து கொண்டான். எத்தனையோ பேர், அதிகப் படிப்போ,அனுபவமோ ஏன் புத்திசாலித்தனமோ கூட இல்லாமல் ஏதோ ஒரு தொழிலைச் செய்து கொண்டிருந்தார்கள் என்பதுதான் அது!

அவர்களில் பலருக்கு அலுவலகம் இல்லை, மேலதிகாரிகள் இல்லை, ஊழியர்களும் இல்லை (அதனால் மாதா மாதம் சம்பளம் கொடுக்க வேண்டிய பொருளாதரச் சுமையும் இல்லை!)

அது போல் ஒரு தொழிலைத் தானும் செய்தால் என்ன?

சண்முகம் அவன் மனைவி சந்திராவிடம் தன் யோசனையைச் சொன்னபோது, "யோசனை பண்ணி முடிவெடுங்க. உங்களுக்கு என்ன தொழில் தெரியும்? முதல் வேண்டாமா? அனுபவம் வேண்டாமா? தொடர்புகள் வேண்டாமா?" என்று அவள் அவனிடம் இல்லாதவற்றைப் பட்டியலிட்டாள்.

சண்முகம் மௌனமாக இருந்தான். மனைவி சொன்னதைக் கேட்டு எரிச்சல் வந்தாலும், அவள் சொன்னதில் இருந்த உண்மை உறுத்தியது.

சில நாட்கள் கழித்து சண்முகம் தன் மனைவியிடம், "நான் வேலையை விட்டுடப் போறேன்.வேலையை விட்டாதான் அப்புறம் ஏதாவது தொழில் செஞ்சுதான் ஆகணுங்கற கட்டாயம் ஏற்பட்டு ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பிப்பேன். இல்லேன்னா இப்படியே யோசனை பண்ணிக்கிட்டே காலத்தை ஓட்டிக்கிட்டிருப்பேன்" என்றான்.

"என்னங்க நீங்க?  என்ன செய்யணும்னு யோசனை பண்ணிட்டு அப்புறம் முடிவெடுப்பீங்களா, இல்ல ஏதாவது செஞ்சுக்கலாம்னு முடிவை எடுத்துட்டு அப்புறம் யோசிப்பீங்களா?" என்றாள் சந்திரா அதிர்ச்சியுடன். 

"இல்ல. நான் முடிவு பண்ணிட்டேன்" என்றான் சண்முகம் உறுதியாக.

"அப்படின்னா, எனக்காக ஒரு மாசம் உங்க முடிவைத் தள்ளிப் போடறீங்களா?"

"எதுக்கு? ஒரு மாசத்தில என்ன ஆயிடப் போகுது?"

"அதான் நானும் சொல்றேன். ஒரு மாசத்தில என்ன ஆயிடப் போகுது? எனக்காக உங்க முடிவைக் கொஞ்ச நாள் தள்ளிப் போடுங்களேன்" என்றாள் சந்திரா.

'தான் முடிவெடுப்பதைத் தள்ளிப் போட வைத்து அதற்குள் தன் மனதை மாற்றி விடலாம் என்று நினைக்கிறாள் போலிருக்கிறது' என்று நினைத்த சண்முகம், 'சரி. இப்ப என்ன? ஒரு மாசம் வெயிட் பண்ணுவமே! அவ சொன்னதைக் கேட்ட மாதிரியும் இருக்கும்!' என்று நினைத்து, "சரி" என்றான்.

ரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் சந்திரா அவனிடம், "இப்ப நீங்க வேலையை விடறதுன்னா விடுங்க!" என்றாள்.

"ஏன், இப்ப என்ன ஆச்சு?"

"எனக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு!"

"என்ன வேலை, எவ்வளவு சம்பளம்?"

சொன்னாள்.

"இவ்வளவு குறைச்ச சம்பளத்துக்கா?" 

"என் தகுதிக்கு அவ்வளவுதான் கிடைக்கும். அதனாலதான் நான் இத்தனை நாளா வேலைக்குப் போறதைப் பத்தி யோசிக்கல. நீங்களும் என்னை வேலைக்கு முயற்சி பண்ணச் சொல்லிச் சொல்லல. ஆனா நீங்க யோசிக்காம இப்படி ஒரு அவசர முடிவை எடுத்தா? நாம ஒரு வேளை கஞ்சியாவது குடிக்க வேண்டாமா? அதனாலதான் உங்ககிட்ட ஒரு மாசம் அவகாசம் கேட்டுட்டு வேலைக்கு முயற்சி செஞ்சேன். இனிமே குழந்தைங்க பட்டினி கிடக்க வேண்டி இருக்குமோங்கற கவலை இல்லாம நான் இருக்கலாம் பாருங்க..."

பேசி முடிக்கு முன்பே சந்திராவின் குரல் கம்மி அழுகை வெடித்தது.

"இல்லை சந்திரா. நீ இந்த வேலைக்குப் போக வேண்டாம். நான் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டேன்" என்று சொல்லி மனைவியின் கைகளைப் பற்றினான் சண்முகம்.

அரசியல் இயல்
அதிகாரம் 47 
 தெரிந்து செயல்வகை  
குறள் 467
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

பொருள்:
ஒரு செயலைச் செய்யத் தொடங்குமுன் அதைப் பற்றி நன்கு சிந்தித்த பிறகே அதில் இறங்க வேண்டும். செயலில் இறங்குவது என்று முடிவு செய்தபின் அது பற்றிச் சிந்திக்கலாம் என்ற அணுகுமுறை தவறானது.
                குறள் 468                
                                   குறள் 466                                  
அறத்துப்பால்                                                               காமத்துப்பால்

Saturday, March 27, 2021

466. தலைமை அமைச்சர்

"காளிங்கராயரே! உங்களுக்கு முன்னால் சென்னியப்பர் தலைமை அமைச்சராக இருந்தபோது அரசு நிர்வாகத்தில் நான் படாமலே ஒதுங்கி இருந்தேன்.

"நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பல செயல்களைச் செய்து வருவதாக அவர் என்னிடம் சொல்லி வந்தார்.

"ஆனால் மக்கள் மிகவும் துயரத்திலும், அதிருப்தியிலும், கோபத்திலும் இருப்பதாக உள்நாட்டு ஒற்றர்களிடமிருந்து எனக்குச் செய்திகள் வந்ததால் அவரை நீக்கி விட்டு உங்களைத் தலைமை அமைச்சராக நியமித்தேன். 

"கடந்த ஒரு மாதமாக நீங்கள் அரசு அதிகாரிகளிடம், பல்வேறு வகை மக்களுடனும் பேசி வருகிறீர்கள். நீங்கள் கண்டறிந்தபடி நிலைமை என்ன என்பதை விளக்குவீர்களா?" என்றான் அரசன்.

"பல்வேறு மக்களிடம் நான் பேசி அறிந்து கொண்டது மக்களுக்குத் தேவையான பல அடிப்படை விஷயங்களை அரசு அதாவது அரசை நிர்வாகம் செய்த அமைச்சர் செய்யவில்லை என்பதுதான்" என்றார் தலைமை அமைச்சர் காளிங்கராயர்.

"எவற்றையெல்லாம் செய்யவில்லை?"

"கால்வாய்கள், குளங்கள் இரண்டு மூன்று ஆண்டுகளாகத் தூர் வாரப்படவில்லை. இதனால் விவசாய நிலங்களுக்குச் சரியான நீர்ப்பாசனம் கிடைக்கவில்லை. 

"கோவில்கள், சத்திரங்கள் போன்றவற்றுக்கான மானியம் சரியாக வழங்கப்படவில்லை. அதனால் இவற்றின் மூலம் உணவு பெற்று வந்த ஏழைகள், வயோதிகர்கள், வழிப்போக்கர்கள் ஆகியோர் பசிக்கொடுமைக்கும் பெரும் துன்பத்துக்கும் ஆளானார்கள். 

"சமீபத்தில் ஏற்பட்ட தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமான மருத்துவ வசதிகளோ,பிற உதவிகளோ வழங்கப்படவில்லை..."

"சிவ சிவா! இத்தனை விஷயங்கள் செய்யாமல் விடப்பட்டிருக்கின்றனவா? இவை என் கவனத்துக்கு வரும்படி பார்த்துக் கொள்ளாதது என் தவறுதான்."

"இன்னும்..."

"போதும் அமைச்சரே! சென்னியப்பர் செய்யத் தவறிய விஷயங்கள் இன்னும் பல இருக்கும் என்பது புரிகிறது. அவற்றை நான் கேட்க விரும்பவில்லை."

"இல்லை மன்னரே! செய்ய வேண்டிய பல விஷயங்களை அவர் செய்யவில்லை என்று குறிப்பிட்டேன். செய்யக் கூடாத சில விஷயங்களை அவர் செய்திருக்கிறார். அவற்றையும் நான் குறிப்பிட வேண்டும் அல்லவா?"

"செய்யக் கூடாத விஷயங்கள் என்றால்?"

"முதலில் குறிப்பிட வேண்டுமானால், அரசுப் பணிகளை ஒப்பந்ததாரர்களுக்குக் கொடுக்கும்போது,அவற்றை அவர் தம் உறவினர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் கொடுத்திருக்கிறார். 

"பலரிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பணிகளைக் கொடுத்திருக்கிறார். இதனால் அரசு கஜானாவுக்கு ஏராளமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தவிர பொது மக்களுக்கு இன்னல் ஏற்படுத்தக் கூடிய பல செயல்களை அவர் செய்திருக்கிறார். 

"விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அவர்களிடம் எப்போதும் அவற்றை வாங்கும் சிறு வியாபாரிகளிடம் விற்கக் கூடாது என்று சொல்லி ஒரு சில மொத்த வியாபாரிகளிடம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டிய நிலையை உருவாக்கி இருக்கிறார். 

"இதனால் சிறு வியாபாரிகள் பலர் தொழில் செய்ய முடியாமல் தங்கள் பிழைப்பை இழந்ததுடன், விவசாயிகளும் ஒரு சில மொத்த வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் சிக்கிக் கொண்டு அல்லல் படுகிறார்கள் 

"மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடம் விளைபொருட்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி பொது மக்களுக்கு அதிக லாபத்துக்கு விற்பதால் சாதாரண மக்களுக்கு உணவு என்பதே ஒரு சவாலான விஷயமாக ஆகி விட்டது..."

"போதும். ஒரு புறம் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமலும், மறுபுறம் செய்யக் கூடாதவற்றைச் செய்தும் நடைபெற்ற சென்னியப்பரின் நிர்வாகத்தின் கீழ் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை நினைத்து என் உள்ளம் பதறுகிறது. 

"அவரை நம்பிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருந்தது நான் செய்த மிகப் பெரிய தவறு. 

"இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டிய பொறுப்பையும் அதிகாரத்தையும் உங்களுக்கு வழங்குகிறேன். ஆனால் முன்பு போல் இல்லாமல் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கப் போகிறேன்!" என்றான் மன்னன்.

"நல்லது அரசே! அதைத்தான் நானும் விரும்புகிறேன்" என்றார் தலைமை அமைச்சர்.  

அரசியல் இயல்
அதிகாரம் 47 
 தெரிந்து செயல்வகை  
குறள் 466
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

பொருள்:
செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் இருந்தாலும் தீமை விளையும், செய்யக் கூடாதவற்றைச் செய்வதாலும் தீமை விளையும்.
அறத்துப்பால்                                                              காமத்துப்பால்

Friday, March 26, 2021

465. எதிரிகள் ஜாக்கிரதை!

போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் கூட்டத்தில் நிர்வாக இயக்குனர் பாபு தங்கள் நிறுவனத்தின் தொழில் எதிரிகளிடமிருந்து தங்களுக்கு ஏற்பட்டு வரும் பிரச்னைகளையும் அவற்றைச் சமாளிக்கத் தான் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் விளக்கிப் பேசினார்.

"நம்மை அழிக்க அவங்க எவ்வளவோ முயற்சி செஞ்சாங்க. முதல்ல நம்ப ப்ராடக்ட் பத்திப் பல தவறான செய்திகளை வதந்திகளைப் பரப்பினாங்க. ஆனா அதெல்லாம் எடுபடல. நாம உண்மைகளை விளக்கி விளம்பரம் கொடுத்தப்பறம் நம்ம விற்பனை இன்னும் அதிகமாச்சு. 

"அப்புறம் தொழிற்சங்கத் தலைவர்களைத் தூண்டி விட்டு நம்ப தொழிற்சாலையில வேலை நிறுத்தம் செய்ய வச்சாங்க. நாம வேலை நிறுத்தத்தைத் தூண்டி விட்ட தலைவர்களை வேலையை விட்டு நீக்கிட்டு தொழிலாளர்களோட சம்பளத்தை உயர்த்தினோம். நமக்கு விசுவாசமா இருந்தா பலன்கள் கிடைக்கும், போராட்டத்தில இறங்கினா வேலையே போயிடும்னு நம்ம தொழிலாளர்கள் புரிஞ்சுக்கிட்டாங்க. இனிமே அவங்க தூண்டுதல்களுக்கு பலியாக மாட்டாங்க."

"எக்ஸலன்ட் மிஸ்டர் பாபு! உங்களுக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு" என்று ஒரு மூத்த டைரக்டர் கூறியதை மற்றவர்கள் ஆமோதிக்கும் விதமாகக் கைதட்டினர்.

"ஆனா அவங்க சும்மா இருக்க மாட்டாங்க. வேற ஏதாவது முயற்சி செய்வாங்க. அதனால நாம தற்காப்பு முயற்சிகள்ள மட்டும் ஈடுபடாம தாக்குதலிலேயும் ஈடுபடணும்னு நினைக்கிறேன்" என்றார் பாபு.

"என்ன செய்யலாம்னு இருக்கீங்க?"

"அவங்களோட ப்ராடக்ட் ஒண்ணை நாமும் தயாரிச்சு அவங்களுக்குக் கொஞ்சம் போட்டியை ஏற்படுத்தினா அவங்க தங்களைப் பாதுகாத்துக்கறதில கவனம் செலுத்துவாங்க. நம்ப வம்புக்கு வர மாட்டாங்க." 

"எந்த ப்ராடக்ட் தயாரிக்கலாம்னு சொல்றீங்க? அதுக்கான திட்டம் என்ன?" என்று வினவினார் ஒரு டைரக்டர்.

பாபு தன் திட்டத்தை விளக்கியதும், "சரி. அதுக்கு முதலீடு செய்யணுமே! அதுக்கு என்ன செய்யப் போறோம்?" என்றார் ஒருவர்.

"முதலீடு அதிகம் தேவைப்படாது. இந்த வருஷம் டிவிடெண்ட் கொடுக்காம அந்தப் பணத்தை முதலீடு செஞ்சா போதும்! விவரங்களை உங்க எல்லோருக்கும் சுருக்கமா ஒரு பக்கக் குறிப்பாக் கொடுத்திருக்கேன் பாருங்க."

அனைவரும் சில நிமிடங்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட குறிப்பைப் படித்தனர். பெரும்பாலானோர் ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினர்.

ஒருவர் மட்டும், "டிவிடெண்ட் இல்லேன்னு சொன்னா ஷேர் விலை இறங்குமே!" என்றார்.

"அது தற்காலிகமானதுதானே? இந்த வருஷம் டிவிடெண்ட் கொடுக்காம அந்தத் தொகையை  கூடுதலா ஒரு ப்ராடக்ட் தயாரிப்பதற்கான முதலீட்டுக்காக பயன்படுத்தப் போறோம், இதனால அடுத்த வருஷம் லாபம் இன்னும் அதிகமாக் கிடைக்கும், அப்ப அதிகமான டிவிடெண்டும் கொடுக்க முடியும்னு ஒரு பிரஸ் ரிலீஸ் கொடுத்துடப் போறோம். அதனால தற்காலிகமா ஷேர் விலை கொஞ்சம் குறைஞ்சாலும் சீக்கிரமே அது சரியாயிடும்" என்றார் பாபு.

"டிவிடெண்டை ஸ்கிப் பண்றது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்னு பாத்து செய்யுங்க" என்றார் சந்தேகம் எழுப்பிய உறுப்பினர்.

ஆயினும், போர்டு உறுப்பினர்கள் அந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ரு வாரம் கழித்து  பாபுவின் அறைக்கு வந்த கம்பெனி செகரெட்டரி, "சார்! அஞ்சு நாளா நம்ம ஷேர் விலை விழுந்துக்கிட்டே இருக்கு. நாம டிவிடெண்ட் ஸ்கிப் பண்ணினதைப் பத்தி மார்க்கெட்ல யாரோ தப்பான வதந்திகளைப் பரப்பிக்கிட்டிருக்காங்கன்னு நினைக்கறேன்" என்றார் படபடப்புடன்.

"கவலைப்படாதீங்க! இது எதிர்பார்த்ததுதான். ரெண்டு மூணு நாள்ள விலை ஏற ஆரம்பிச்சுடும்" என்றார் பாபு.

"இல்லை சார். வால்யூம் ரொம்ப அதிகமா இருக்கு. நாம டிவிடெண்ட் ஸ்கிப் பண்ணினதைப் பயன்படுத்தி நம்ம எதிரிகள்தான் நம்மைப் பத்தித் தப்பான வதந்திகளைப் பரப்பி பேனிக் செல்லிங்கை உருவாக்கி விலை குறையறப்ப அவங்க ஷேர்களை வாங்கிக்கிட்டிருக்காங்கன்னு செய்தி வருது.  நம்மகிட்ட மெஜாரிட்டி ஹோல்டிங் இல்லாதப்ப அவங்க டேக் ஓவர் பண்ண முயற்சி செய்யறாங்கன்னு நிலைக்கிறேன்!" என்றார் கம்பெனி செகரெட்டரி கவலையுடன்.

பாபுவின் முகத்தில் கலவரம் படர்ந்தது. போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் உறுப்பினர் ஒருவர்  பாதிப்புகளைச் சிந்தித்து முடிவெடுக்கும்படி எச்சரித்தது அவர் நினவுக்கு வந்தது.

அரசியல் இயல்
அதிகாரம் 47 
 தெரிந்து செயல்வகை  
குறள் 465
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.

பொருள்:
முறையாகத் திட்டமிடாமல் ஒரு செயலைச் செய்யத் தொடங்குதல், வளரும் பாத்தியில் பகைவரை நிலைபெறச் செய்வதற்கு வழி வகுக்கும்.
     குறள் 464    
அறத்துப்பால்                                                                காமத்துப்பால்

Wednesday, March 10, 2021

464. வேண்டாம் இந்த வாய்ப்பு!

"இது ஒரு புது வியாபார வாய்ப்பு. நல்ல லாபம் தரக் கூடியது. இதில நாம இறங்கறது நல்லதுன்னு நினைக்கிறேன்" என்றான் பொன்ராஜ்.

"நம்ம தொழில் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு? நமக்கு எதுக்கு இந்தப் புதுத் தொழில்?" என்றார் சக்ரபாணி. 

"இல்லை சார்! இந்த டெக்ஸ்டைல் பிசினஸ் நல்லா எஸ்டாப்ளிஷ் ஆயிடுச்சு. இதில இனிமே விரிவு படுத்த அதிக வாய்ப்பு இல்ல. வருஷா வருஷம் வியாபாரம் தானாவே பெருகிக்கிட்டிருக்கு. அதனால புதுசா என்ன செய்யலாம்னு நான் கொஞ்ச நாளா யோசிச்சுக்கிட்டிருந்தேன். அப்பதான் இந்த வாய்ப்பு என் நண்பன் ஒத்தன் மூலமா எனக்கு வந்தது. இது நல்லா வரும்னு தோணினதால உங்ககிட்ட சொல்றேன்."

"பொன்ராஜ்! உங்களை ஜெனரல் மானேஜராப் போட்டப்பறம் நான் பிசினஸையே மறந்துட்டு ஹாய்யா இருக்கேன். இப்ப என்னன்னா புதுசா இன்னொரு தொழில்ல இறங்கச் சொல்றீங்க, அதுவும் எனக்கு சம்பந்தமே இல்லாத கல்வித் துறையில! இது எதுக்கு நமக்கு?"

"சார்! பணம் சம்பாதிக்கறதுக்காக இதில இறங்கலாம்னு நான் சொல்லல. கல்வித்துறையில ஈடுபட்டா உங்களுக்கு ஒரு பெரிய கௌரவம், நல்ல பேரு, மதிப்பு எல்லாம் கிடைக்கும். கல்வி நிறுவனங்களை நடத்தறவங்கள்ள பெரும்பாலானவங்க கல்வியாளர்கள் இல்ல, வேற தொழில் செய்யறவங்கதான். அவங்கள்ள சில பேரு கல்வித்தந்தைன்னு பேர் வாங்கலியா? தொழிலை வெறும் வியாபாரமா நினைக்காம ஒரு சேவையா நினைக்கிற உங்களைப் போன்றவங்க கல்வித்துறையில ஈடுபடறது இந்த சமுதாயத்துக்கு நல்லதுன்னு நான் நினைக்கிறேன். அதனாலதான் நான் இதில ஆர்வம் காட்டினேன்."

"சரி. இதைப் பத்தி விவரமா சொல்லுங்க."

"சார்! மும்பையில இருக்கிற ஒரு பெரிய கல்வி நிறுவனத்தோட ஃபிராஞ்சைஸா நாம ஒரு பள்ளிக்கூடம் நடத்தறதுதான் இந்த பிசினஸ். உங்க நிலம் ஒண்ணு சும்மாக் கிடக்குதுன்னும், அதைப் பயனுள்ள வழியில பயன்படுத்தணும்னும் நீங்க ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருக்கீங்களே, அந்த நிலத்தில கட்டிடம் கட்டி அஞ்சாறு மாசத்தில நாம ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிச்சுடலாம். இப்ப புதுக் கல்விக்கொள்கைன்னு வந்திருக்கே, அதுக்கு ஏத்த மாதிரி ஒரு கல்வித்திட்டத்தை டிசைன் பண்ணி இருக்காங்க அவங்க. ஐஐடி என்ட்ரன்ஸ், கேட், நீட் மாதிரி நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை சின்ன வகுப்பிலேந்தே தயார் பண்றது, விளையாட்டுகள், பாட்டு, நடனம், மற்ற கலைகள், கைத்தொழில்கள்ள பயிற்சி அளிக்கறதுங்கற மாதிரி பரவலா பல விஷயங்களைக் கற்பிக்கிற ஒரு கல்வித்திட்டத்தை அவங்க உருவாக்கி இருக்காங்க, மாணவர்களை எந்தச் சவாலுக்கும் தயாரானவங்களாப் பண்றது மாதிரி பல அருமையான விஷயங்கள் கொண்ட கல்வித்திட்டம் அவங்களோடது. இங்கே இருக்கிற சில பெரிய பள்ளிக்கூடங்கள் கூட இந்த ஃபிராஞ்சைஸுக்கு முயற்சி செய்யறாங்க. ஆனா உங்களுக்கு இருக்கிற மதிப்பு, நல்ல பேருக்காக உங்களுக்கு இந்த ஃபிராஞ்சைஸைக் கொடுக்கறதை அவங்க விரும்பறாங்க" என்று விளக்கினான் பொன்ராஜ்.

"நீங்க சொல்றதைக் கேக்கறப்ப நல்லா இருக்கும் போலத்தான் தோணுது. இந்த ஃபிராஞ்சைஸ் விவரங்களை எங்கிட்ட கொடுங்க. படிச்சுப் பாக்கறேன்" என்று சொல்லி பொன்ராஜிடமிருந்து விவரங்கள் அடங்கிய தாள்களைப் பெற்றுக் கொண்டார் சக்ரபாணி.

ரண்டு நாட்கள் கழித்து பொன்ராஜை அழைத்த சக்ரபாணி, "என்ன பொன்ராஜ் இது? பிரின்சிபால் உள்ளிட்ட எல்லா ஆசிரியர்களையும் அவங்கதான் நியமிப்பாங்களாம். அதோட அவங்க நியமிக்கிற நிர்வாக அதிகாரிதான் எல்லாரையும், எல்லாத்தையும் கன்ட்ரோல் பண்ணுவாராம். அப்புறம் நமக்கென்ன வேலை?" என்றார்.

"இல்ல சார். மாணவர்கள்கிட்ட ஃபீஸ் வாங்கறது, எல்லாருக்கும் சம்பளம் கொடுக்கறது, மத்த செலவுகள் எல்லாத்தையும் நாமதான் செய்யப் போறோம். வசூலிக்கிற மொத்தக் கட்டணத்தில அவங்களுக்குக் குறிப்பிட்ட சதவீதத்தைக் கொடுத்தப்பறம் மீதி லாபம் நமக்குத்தான்..." என்று பொன்ராஜ் சொல்லிக் கொண்டிருந்தபோதே அவனை இடைமறித்த சக்ரபாணி, "நான் லாபத்தைப் பத்திப் பேசல. முதல்ல இந்தத் தொழில் நம்ம பேரில நடக்குமே தவிர, இதில நமக்கு இந்த கன்ட்ரோலும் இல்ல. ஆனா ஏதாவது தவறு நடந்தா பொறுப்பு நமக்குத்தான் வரும்! ரெண்டாவது இவங்க கல்வித் திட்டதில சொல்லி இருக்கிற பல விஷயங்கள் எனக்குப் புரியல. மாணவர்களை எல்லாவிதத்திலேயும் தயார் பண்றதா சொல்லி அவங்க மேல நிறைய சுமையைத் திணிக்கற மாதிரி ஆயிடுமோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு. பள்ளி நேரம் முடிஞ்சப்பறம் மாலை வேளைகளிலேயும், சனி ஞாயிறுகளிலேயும் கூட மாணவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டி இருக்கும்னு சொல்லி இருக்காங்க. இதெல்லாம் மாணவர்களுக்கு நல்லதா அல்லது அவங்களை உடல் ரிதியாவோ, மன ரீதியாவோ பாதிக்குமாங்கறதெல்லாம் எனக்குத் தெரியல. இதனால ஏதாவது பாதிப்புகள் வந்தால் அது நமக்குத்தானே கெட்ட பேரு? இதையெல்லாம் யோசிச்சுப் பாத்தப்ப, நமக்குத் தெரியாத ஒரு துறையில இறங்க வேண்டாம்னு தோணுது!" என்றார்.

அரசியல் இயல்
அதிகாரம் 47 
 தெரிந்து செயல்வகை  
குறள் 464
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.

பொருள்:
தனக்கு ஒரு களங்கம் வந்து விடக் கூடாது என்று அஞ்சிச் செயல்படுபவர்கள் தங்களுக்குத் தெளிவான புரிதல் இல்லாத ஒரு செயலைத் தொடங்க மாட்டார்கள். 
அறத்துப்பால்                                                                      காமத்துப்பால்

Tuesday, March 9, 2021

463. வருமானத்துக்காக ஒரு முதலீடு

"ரிடயர் ஆயிட்டீங்க. இனிமே சம்பளம் கிடையாது. உங்களுக்கு பென்ஷனும் இல்ல. என்ன செய்யப் போறீங்க?" என்றாள் தனம்.

"என்ன செய்யறது? பி எஃப் கிராச்சுவிடி எல்லாம் சேர்ந்து முப்பது லட்சம் ரூபா வரும். அதை பாங்க்ல போட்டு வர வட்டியை வச்சுத்தான் காலத்தை ஓட்டணும்" என்றார் பிரபாகரன்.

"அது போதுமா? அதோட வருஷா வருஷம் செலவெல்லாம் ஏறிக்கிட்டே இருக்கும். ஆனா வட்டித்தோகை அதேதான் வரும். குறையக் கூடச் செய்யலாம். வேற எங்கேயாவது முதலீடு செஞ்சா அதிக வட்டி வருமான்னு பாருங்களேன்."

"அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு எங்கேயாவது முதலீடு செஞ்சா அப்புறம் முதலே திரும்பி வராம போயிடும்."

"ஏதாவது செய்ய முடியுமான்னு பாருங்க. இல்லேன்னா நீங்க வேற ஏதாவது வேலைக்குப் போகணும்."

"எனக்கு என்ன வேலை கிடைக்கும்? யாரு வேலை கொடுப்பாங்க?" என்றார் பிரபாகரன். 

சில நாட்கள் கழித்து பிரபாகரன் தன் பழைய நண்பர் கோபுவைச் சந்தித்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் ஒரு ஸ்டாக் ப்ரோக்கிங் நிறுவனத்துக்குச் சென்று அதே நாள் வர்த்தகம் என்ற முறையில் பங்குகளை அன்றாடம் வாங்கி அன்றே விற்று லாபம் பெறும் தொழிலைச் செய்வதாகச் சொன்னார்.

"லாபம் வருதா?" என்றார் பிரபாகரன்.

"லாபம் நஷ்டம் இரண்டும் மாறி மாறித்தான் வரும். ஆனா மொத்தமா பாக்கறப்ப நல்ல லாபம்தான் கிடைக்கும். உனக்கு ஆர்வம் இருந்தா சொல்லு. உன்னை அழைச்சுக்கிட்டுப் போயி உனக்கு ஒரு கணக்கு ஆரம்பிச்சு வைக்கறேன்" என்றார் கோபு.

"எனக்கு ஸ்டாக் மார்க்கெட்டைப் பத்தி எதுவமே தெரியாதே!" என்றார் பிரபாகரன்.

"தெரியாட்டா பரவாயில்ல. அவங்களே மார்க்கெட்டைப் பாத்து அப்பப்ப சில டிப்ஸ் கொடுப்பாங்க. அவங்க சொல்ற பங்குகளை அவங்க சொல்ற நேரத்தில அவங்க சொல்ற விலைக்கு வாங்கி அவங்க சொல்ற விலைக்கு வித்தாப் போறும். நாம இந்த  கம்பெனி ஷேர் இவ்வளவு இந்த விலைக்கு வாங்குங்கன்னு சொன்னாப் போதும். அவங்க ஆபரேட்டரே வாங்கிடுவாரு. நம்ம பங்குகளை வாங்கினது வித்தது பத்தி நம்ம மொபைலுக்கு உடனுக்குடன் செய்தி வரும். விலை எப்படிப் போகுதுன்னு நாம ஆபரேட்டர் பக்கத்தில உக்காந்து கம்ப்யூட்டர்ல பாத்துக்கிட்டு எப்ப விக்கறதுன்னு முடிவு செய்யலாம். ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும். வருமானமும் வரும். நாம வேலை செஞ்சப்ப சலிப்போட செஞ்ச மாதிரி இல்லாம உற்சாகமா இருக்கலாம்" என்றார் கோபி.

முயன்று பார்க்கலாமே என்று கோபியுடன் அந்த அலுவலகத்துக்கு அடுத்த நாளே சென்றார் பிரபாகரன். ஒவ்வொரு கணினியின் அருகிலும் அவர் வயதுக்காரர்கள் ஐந்தாறு பேர் அமர்ந்து கணினித்திரையில் பங்குகளின் விலை கணத்துக்குக் கணம் மாறிக் கொண்டிருப்பதை கவனித்துக் கொண்டும், அவ்வப்போது சிலர் "கங்கா ஃபார்மா 200 ஷேர் 157.20க்கு வாங்குங்க" என்பது போன்ற அவசர உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டும் இருந்தார்கள்.

அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரி சுரேஷிடம் பிரபாகரனை கோபி அறிமுகப்படுத்தியதும், "வாங்க சார்! இலவசமா கணக்கு ஆரம்பிக்கலாம், கட்டணம் எதுவும் இல்லை. ஒரு லட்சம் ரூபா டெபாசிட் பண்ணினீங்கன்னா இன்னிக்கே எல்லா ஃபார்மாலிட்டியையும் முடிச்சுட்டு, நாளைக்கே டிரேடிங் ஆரம்பிச்சுடலாம்" என்றார் அவர்.

"ஒரு லட்சம் ரூபாயா? பத்தாயிரம் ரூபாயில ஆரம்பிக்க முடியாதா?" என்றார் பிரபாகரன் சற்றுத் தயக்கத்துடன்.

"இல்ல சார். எங்க அனுபவத்தில ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறைவான முதலீட்டில இந்தத் தொழிலைச் செய்ய முடியாது. அதனாலதான் நாங்க சமீபத்திலதான் குறைஞ்ச பட்ச முதலீட்டை அம்பதாயிரத்திலேந்து ஒரு லட்சமா உயர்த்தி இருக்கோம். இது ஒரு டெபாசிட்தான். உங்க பணத்தை நீங்க எப்ப வேணும்னா திரும்பி எடுத்துக்கலாம். ஆனா ஒரு லட்சம் ரூபா முதலீட்டில வாரா வாரம் ஆயிரம் ரெண்டாயிரம்னு உங்க லாபத்தை நீங்க வித்டிரா பண்ண முடியுமே! இது மாதிரி எந்த பிசினஸ்ல நடக்கும்?" என்றார் சுரேஷ்.

பிரபாகரனுக்கு முதல் நாளே ஐந்நூறு ரூபாய் லாபம் கிடைத்தது. அவருக்கே வியப்பாக இருந்தது. அவ்வப்போது அவருடைய கைபேசிக்கு வந்த டிப்ஸைப் படித்து விட்டு அவற்றின்படி அவர் செய்த மூன்று வணிகங்களுமே லாபமளித்தன. ப்ரோக்கர் கமிஷன் வரிகள் எல்லாம் போக அவருடைய நிகர லாபம் 382 ரூபாய் அவர் கணக்கில் ஏறி இருந்தது.

"முதல் நாள்ங்கறதால இன்னிக்கு நீங்க பயந்து பயந்து மூணு டிரேட்தான் அதுவும் 50 பங்குகள் வாங்கித்தான் பண்ணினீங்க. இன்னும் கொஞ்சம் தைரியமா 200, 300 பங்குகள்னு வாங்கி அதிகமான டிரேடிங்கும் பண்ணினா ஒரு நாளைக்கு ஆயிரம், ரெண்டாயிரம் சம்பாதிக்கலாம்" என்றார் சுரேஷ்.

இரண்டாம் நாள் அவருக்கு 200 ரூபாய் நஷ்டத்தில் முடிந்தது. "லாபம் நஷ்டம் மாறி மாறித்தான் வரும். நாளைக்கு லாபம் வரும் பாருங்க" என்றார் சுரேஷ்.

அடுத்த நாள் 100 ரூபாய் லாபம் வந்தது.

"நீங்க ரொம்ப பயந்து பயந்து பண்றீங்க. இந்த பிசினஸ்ல கொஞ்சம் அக்ரஸிவா பண்ணினால்தான் நல்ல லாபம் கிடைக்கும்" என்றார் சுரேஷ்.

அடுத்த நாள் பிரபாகரன் "அக்ரஸிவாக"" ஈடுபட்டதில் அவருக்கு 5000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இது அவருக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. 'இதோடு போதும், கணக்கை மூடி விட்டுப் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்' என்று முதலில் தோன்றினாலும், பதட்டமடையக் கூடாது என்று நினைத்து அடுத்த நாளும் வணிகத்தைத் தொடர்ந்தார்.

அடுத்த நாள் 50 ரூபாய் லாபம் கிடைத்தபோது தனக்கு ஏற்பட்டது ஏமாற்றமா நம்பிக்கையா என்று அவருக்கே புரியவில்லை.

ஒரு மாத முடிவில் அவருடைய முலதனம் 30,000 ரூபாயாகக் குறைந்திருந்தது. 70,0000 ரூபாய் நஷ்டம் - ஒரு மாதத்தில்! தான் வேலை செய்தபோது இந்தத் தொகையைச் சம்பாதிக்கத் தான் எத்தனை மாதங்கள் உழைத்திருக்க வேண்டும் மனத்துக்குள் கணக்குப் போட்டுப் பார்த்தார்.

"நான் ஒண்ணு சொல்றேன். நீங்க கமாடிடீஸ் டிரேடிங் பண்ணினா நிறைய லாபம் கிடைக்கும். அதை ஒரு மாசம் கூட கேரி ஃபார்வர்ட் பண்ணலாம். இன்னிக்கு விலை இறங்கினா கூட ரெண்டு மூணு நாள் கழிச்சு விலை ஏறுகிறப்ப வித்துடலாம். ஆனா அதுக்கு அஞ்சு லட்சம் ரூபா முதலீடு பண்ணணும்" என்றார் சுரேஷ்.

ஏதோ ஒரு துணிவில் பிரபாகரன் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். முதல் வணிகத்தில் அன்று விலை குறைந்தாலும் அதிகாரி சொன்னது போல் மூன்று நாட்கள் கழித்து விலை ஏறியபோது அதை விற்று நஷ்டத்தைத் தவிர்க்க முடிந்தது. 

ஆயினும் மீண்டும் விலை குறைந்து விடுமோ என்ற பயத்தில் நஷ்டம் இல்லாமல் இருந்தால் போதும் என்ற கவலையில் அவர் அதை சீக்கிரமே விற்றதால் அதில் லாபம் கிடைக்கவில்லை, நஷ்டத்தைத் தவிர்க்க மட்டுமே முடிந்தது.

அடுத்த வணிகத்தில் ஓரளவு லாபம் கிடைத்தது. அதற்கும் அடுத்த வணிகத்தில் விலை ஏறும் என்று காத்திருந்தபோது நாளுக்கு நாள் விலை இறங்க, இரண்டு லட்சம் ருபாய் நஷ்டத்தில் விற்க வேண்டி இருந்தது. 

இவ்வளவு நஷ்டம் வருமென்றால் இவ்வளவு லாபமும் வருமே என்று நினைத்து இன்னும் ஐந்து லட்சம் முதலீடு செய்தார் பிரபாகரன்.

மூன்று மாதங்கள் கழித்து மொத்தம் 9 லட்சம் ரூபாய் நஷ்டத்துடன் தன் பங்கு வர்த்தக முயற்சியை முடித்துக் கொண்டார் பிரபாகரன்.

அரசியல் இயல்
அதிகாரம் 47 
 தெரிந்து செயல்வகை  
குறள் 463
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

பொருள்:
கிடைக்கப் போகும் வருமானத்தைக் கருதி முதலை இழக்கக் காரணமாகும் செயலை அறிவுடையோர் செய்ய மாட்டார்கள். 
               குறள் 462               
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Thursday, March 4, 2021

462. நாமே செய்யலாமே?

"சார்! இப்ப நாம பண்ணப் போற ப்ராஜக்ட் ஏற்கெனவே நாம பண்ணிக்கிட்டிருக்கற லைனோட தொடர்புடையதுதானே?  ப்,ராஜக்ட் ரிப்போர்ட், டிசைன், கட்டுமானங்கள், இயந்திரங்கள் வாங்கறது, நிறுவறது வரையில எல்லாத்தையும் நம்ப எஞ்சினியர்களை வச்சுக்கிட்டே செய்யலாமே? எதுக்கு வெளியிலேந்து ஒரு கன்சல்டன்ட்டை வச்சுப் பண்ணணும்?" என்றார் தலைமைப் பொறியாளர் ராஜ்மோகன்.

"செய்யலாம். நாம இப்ப தயாரிக்கிற பொருள் தயாரிக்கப் போற பொருள் ரெண்டும் தொடர்புடையவைன்னாலும், தயாரிப்புத் தொழில் நுட்பங்கள் வேற. இதுக்கான தொழில் நுட்பத் திறமை நம்மகிட்ட இருக்குன்னாலும், ஒரு அனுபவம் உள்ள கன்சல்டன்ட்டை வச்சு செயல்படறது பிரச்னைகள் வராம, எல்லாம் ஸ்மூத்தா, வேகமா நடக்க உதவியா இருக்கும். அதனாலதான் செலவு கொஞ்சம் அதிகமா ஆனாலும் கன்சல்டன்ட்டை வச்சுக்கறது நல்லதுன்னு நினைச்சேன்" என்றார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாண்டியன்.

ராஜ்மோகன் மௌனமாக இருந்தார்.

"நீங்க கன்வின்ஸ் ஆகலேன்னு நினைக்கறேன். கன்சல்டன்ட் வச்சுக்கிட்டு செய்யறதால, உங்க மேலேயோ மத்த எஞ்சினியர்கள் மேலயோ எனக்கு நம்பிக்கை இல்லைன்னு அர்த்தமில்ல. இப்ப நானே ஒரு எஞ்சினியர்தான். இப்ப நீங்க செய்யற வேலையை முன்னால நான்தான் செஞ்சுக்கிட்டிருந்தேன். நிறுவனம் கொஞ்சம் பெரிசானதும், நிர்வாகத்தை கவனிக்கறதில அதிக கவனம் செலுத்தணுங்கறதுக்காக உங்களை சீஃப் எஞ்சினியராப் போட்டுட்டு அன்றாட வேலைகளை உங்ககிட்ட விட்டுட்டு நான் ஒட்டுமொத்த நிர்வாகத்தை மட்டும் கவனிக்கறேன். அது மாதிரி, நாம இப்ப இருக்கற வேலைகளை கவனிக்கணுங்கறதாலதான் நம்ம புது யூனிட்டை ஆரம்பிக்கற வேலையை கன்சல்டன்ட்டை வச்சு செய்யறது சிறப்பா இருக்கும்னு நினைக்கறேன்."

பாண்டியனின் பதிலால் ராஜ்மோகன் முழுவதுமாகத் திருப்தி அடையாவிட்டாலும் மௌனமாகத் தலையாட்டினார்.

ன்சல்டன்ட் தங்கள் பணிகளைத் துவங்கி விரிவான திட்ட அறிக்கையைக் கொடுத்த பிறகு பாண்டியன் ராஜ்மோகனைத் தன் அறைக்கு அழைத்தார்.

"கன்சல்டன்ட் ப்ராஜக்ட் ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க. பத்து காப்பி பிரின்ட் போட்டு உங்ககிட்ட கொடுக்கச் சொல்லி இருக்கேன். நீங்களும் மத்த எஞ்சினியர்களும் அதைப் படிச்சு ஏதாவது மாறுதல்கள், மேம்பாடுகள் செய்யணுமாங்கறதை விவாதிச்சு உங்க யோசனைகளைத் தயாரிச்சு வையுங்க. கன்சல்டன்டோட ஒரு ஜாயின்ட் மீட்டிங் போட்டு விவாதிச்சு இதை இறுதி செய்யலாம்."

ராஜ்மோகன் வியப்புடன் நிர்வாக இயக்குனரைப் பார்த்தார்.

"என்ன பாக்கறீங்க? இது ஒரு டர்ன்கீ பிராஜக்ட்தான். முதல்லேந்து கடைசி வரைக்கும் கன்சல்டன்ட்தான் செய்யப் போறாங்க. அவங்களோட தொழில் நுட்ப அறிவையும், திறமையையும் பயன்படுத்திக்கறோங்கறதுக்காக, நம்மோட அறிவையும், அனுபவத்தையும் ஒதுக்கி வைக்கணுங்கறது இல்ல. நம்ம பங்களிப்பும் எல்லா நிலைகளிலேயும் இருக்கும். உங்க எல்லாரோட அறிவு, அனுபவம், சிந்தனை இந்த ப்ராஜக்ட்ல இருக்கும். இது எதுவுமே இல்லாத என்னோட  யோசனைகளையும் நான் தெரிவிக்கப் போறேன்னா பாத்துக்கங்களேன்!" என்றார் பாண்டியன் சிரித்தபடி.

ராஜ்மோகன் அவருடன் சேர்ந்து சிரித்ததில், நிர்வாக இயக்குனரின் நகைச்சுவையை ரசித்ததோடு, அவருடைய மனத் திருப்தியும் வெளிப்பட்டது. 

அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 462
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.

பொருள்:
ஒரு செயல் குறித்துத் தேர்ந்த அறிவுடையோருடன் சேர்ந்து, தானும் சிந்தித்துச் செயல்படுபவனுக்குச் செய்ய அரிதானது எதுவும் இல்லை.
அறத்துப்பால்                                                                                காமத்துப்பால்

Wednesday, March 3, 2021

461. கனவுத் திட்டம்

"இந்த ஆறு வழிச்சாலைங்கறது முதல்வரோட கனவுத் திட்டம். அதை எப்படி நிறைவேத்தறதுங்கறதைப் பத்தி விவாதிச்சு முடிவெடுக்கத்தான் இந்தக் கூட்டம்" என்றார் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்

"திட்டத்துக்கான முதலீடு, கால அட்டவணை, இதனால் ஏற்படக் கூடிய நன்மைகள் எல்லாத்தையும் ஒரு அறிக்கையா தயார் செஞ்சு உங்க எல்லாருக்கும் கொடுத்திருக்கோம். எல்லாரும் அதைப் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன். உங்க கருத்துக்களை நீங்க சொல்லலாம்" என்றார் துறையின் செயலர்.

"இது ரொம்பச் சிறப்பான திட்டம். இதனால இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் பாதியாகக் குறையும். இதனால பயணிகளுக்கு நேரம், எரிபொருள் செலவெல்லாம் மிச்சம். அதோட, வணிகப் போக்குவரத்து அதிகமாகும். அதனால மாநிலத்தோட பொருளாதரம் கணிசமா முன்னேறும்" என்றார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் பிரதிநிதியாக அழைக்கப்பட்டிருந்த நபர்.

அவரைத் தொடர்ந்து இன்னும் சிலர் வேறு பல நன்மைகளைப் பட்டியலிட்டனர். 

"இவங்கள்ளாம் பேசறப்பதான் இவ்வளவு நன்மைகள் இருக்குன்னு எனக்கே தெரியுது!" என்றார் ஒரு இளநிலை அதிகாரி, தன் அருகில் அமர்ந்திருந்த இன்னொரு இளநிலை அதிகாரியின் காதுக்கு மட்டும் கேட்கும்படி.

"இதையெல்லாம் தவிர இன்னும் சில லாபங்கள் இருக்கு. அதையெல்லாம் பத்தி யாருமே பேசமாட்டாங்க!" என்றார் அவர்.

என்னவென்று புரியாமல் அவர் நண்பர் விழிக்க, "சில அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கிடைக்கப்போற லாபங்களைச் சொன்னேன்" என்றார் அவர் சிரித்தபடி.

அதற்குள் அவர்களுக்குச் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த இன்னோரு இளநிலை அதிகாரி, தான் பேச விரும்புவதாகக் கையை உயர்த்திக் காட்ட, அவரிடம் மைக் கொடுக்கப்பட்டது.

தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்ற அவர், "இந்தத் திட்டத்துக்கான முதலீடு, இழப்பு விவரங்கள் இந்த அறிக்கையில் இல்லையே?" என்றார் சற்றே தயக்கத்துடன்.

பலரும் திட்டத்தின் பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்ததை முகமலர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சரின் முகம், இதைக் கேட்டதும் சற்றே மாற, துறைச் செயலாளர் அவசரமாக எழுந்து, "முதலீடு எவ்வளவுன்னு சொல்லி இருக்கோம். இதுக்கான ஃபண்டிங்கை மத்திய அரசு கொடுக்கறாதாச் சொல்லி இருக்காங்க" என்றார்.

"சார்! இது மாநில அரசோட திட்டம்..." என்றார் கேள்வி எழுப்பிய அதிகாரி.

இப்போது தலைமைச் செயலாளர் எழுந்து, "ஐ கெட் யுவர் பாயின்ட். இது மாநில அரசோட திட்டம்தான். ஆனா இதுக்கான நிதியை மத்திய அரசு வெளிநாட்டிலேந்து நீண்ட காலக் கடனா ஏற்பாடு செஞ்சு கொடுப்பாங்க. அது குறைஞ்ச வட்டியில, 50 வருஷத்தில திருப்பித் தரக் கூடிய கடனா இருக்கும். அதனால அது ஒரு பெரிய சுமையா இருக்காது. இது ஒரு பிரிலிமினரி ரிப்போர்ட்தான். அதனால அந்த விவரங்கள் எல்லாம் இதில இல்ல. டீடெயில்ட் பிராஜக்ட் ரிப்போர்ட் தயார் பண்றப்ப எல்லா விவரங்களும் வரும். ஆமாம் நீங்க எந்த டிபார்ட்மென்ட்?" என்றார் தலைமைச் செயலர், 'உங்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?' என்று வினவுவது போல்.

"பிளானிங் டிபார்ட்மென்ட்" என்றார் அவர்.

'இவரையெல்லாம் எதற்கு இந்தக் கூட்டத்துக்கு அழைத்தீர்கள்?' என்று கேட்பது போல் துறைச் செயலரை முறைத்துப் பார்த்த தலைமைச் செயலர், கேள்வி கேட்ட அதிகாரியைப் பார்த்துச் சிரித்தபடி, "நாம் பிளானிங் ஸ்டேஜையைல்லாம் தாண்டி வந்துட்டோம். இப்ப இம்ப்ளிமென்டேஷன் ஸ்டேஜ்ல இருக்கோம். அதனால உங்க டிபார்ட்மென்ட்டுக்கு இதில அதிக ரோல் இருக்காது" என்றார் சிரித்துக் கொண்டே, 'இதில் நீ தலையிட வேண்டாம்!' என்று அறிவுறுத்துவது போல்.

"இழப்புகளைப் பத்திக் கேட்டேனே!" என்றார் அந்த அதிகாரி, விடாமல்.

"இழப்புகளா? இந்தமாதிரி ஒரு திட்டத்தில என்ன இழப்பு இருக்க முடியும்?" என்றார் தலைமைச் செயலர் சற்றுக் கடுமையான குரலில்.

"இந்தத் திட்டத்துக்காக நிறைய விவசாய நிலங்கள், வீடுகள், கடைகள் மாதிரி சொத்துக்களை எடுத்துக்க வேண்டி இருக்கும். இப்ப இருக்கற சாலையில போக்குவரத்துக் குறையறதால அங்கே இருக்கற பல கடைகள், ஹோட்டல்கள் வியாபாரத்தை இழக்கும். அப்புறம் சுற்றுச் சூழல் பாதிப்புகள்..."

தலைமைச் செயலர் கோபத்துடன் தன் அருகில் அமர்ந்திருந்த துறைச் செயலரின் காதில், "ஏன் சார்? இந்த மாதிரி கேள்வியெல்லாம் வரக் கூடாதுங்கறதுக்காகத்தானே விவசாயிகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இவங்களையெல்லாம் கூப்பிட வேண்டாம்னு சொன்னேன். எல்லாருக்கும் சேத்து வச்ச மாதிரி இப்படி ஒரு ஆளைக் கூப்பிட்டிருக்கீங்களே! யூ டீல் வித் ஹிம்!" என்றார்.

துறைச் செயலர் எழுந்து, "நீங்கள் குறிப்பிட்டுச் சொன்ன விஷயங்களுக்கு நன்றி. அவை ஏற்கெனவே எங்கள் கவனத்தில் இருக்கின்றன. தலைமைச் செயலாளர் சொன்னது போல் இந்த விவரங்கள் எல்லாம் பிராஜ்ட் ரிப்போர்ட்டில் வரும்" என்று சொல்லி விட்டு பியூனைப் பார்த்து சைகை செய்ய, பியூன் அந்த அதிகாரியின் கையிலிருந்த மைக்கைத் திரும்ப வாங்கிக் கொண்டார்.

அரசியல் இயல்
அதிகாரம் 47 
 தெரிந்து செயல்வகை  
குறள் 461
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

பொருள்:
ஒரு செலைச் செய்யும்போது அதனால் ஏற்படும் இழப்பையையும், நன்மையையும், அதைத் தொடர்ந்து கிடைக்கக் கூடிய லாபத்தையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். 
          குறள் 460          
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Tuesday, March 2, 2021

460. பள்ளி நண்பன்

"என்ன குமரன் எப்படி இருக்கீங்க?" என்றார் டாக்டர்.

"பரவாயில்லை, டாக்டர். இப்ப வலி குறைஞ்சிருக்கு" என்றான் குமரன்.

"மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சீங்கன்னா அப்புறம் ரொம்ப கஷ்டம். இப்பவே குடல் பாதிக்கப்பட ஆரம்பிச்சுடுச்சு. ஆரம்ப நிலைங்கறதால குணப்படுத்திட்டோம். கவனமா இருந்துக்கங்க" என்று சொன்ன டாக்டர், குமரனின் மனைவி லீலாவைப் பார்த்து, "பாத்துக்கங்கம்மா!" என்றார்.

"இத்தனை நாள் நான் சொல்லிக் கேக்கல. இப்ப குடல் புண்ணாகி நல்ல வேளையா உங்க புண்ணியத்தில அவரை குணப்படுத்திட்டீங்க. இப்ப நீங்க சொன்னப்பறமாவது அவரு கேக்கறாரான்னு பாக்கலாம்" என்றாள் லீலா கோபத்துடனும், விரக்தியுடனும்.

டாக்டர் சென்ற சிறிது நேரத்துக்குப் பிறகு, லீலாவும் வீட்டுக்குச் சென்று வருவதாகக் குமரனிடம் சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

சற்று நேரம் கழித்து உள்ளே வந்த வார்டு பாய், "என்ன சார், ஏதாவது வேணுமா?" என்றான்.

வேண்டாம் என்று கூறுவது போல் குமரன் பக்கவாட்டில் தலையை ஆட்டினான்.

வெளியே செல்லத் திரும்பிய வார்டு பாய், சற்றுத் தயங்கி விட்டுக் குமரனிடம் திரும்பி வந்து, "உங்களுக்கு என்னை அடையாளம் தெரியுதா?" என்றான்.

"எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு. ஆனா சரியாத் தெரியல" என்றான் குமரன்.

"என் பேர் தங்கராஜ். உங்களோட பள்ளிக் கூடத்தில படிச்சவன்" என்றான் அவன்.

"ஓ, தங்கராஜ்! சாரி. உடனே கண்டுபிடிக்க முடியல. நான் ஒரு வாரமா இங்க இருக்கேன். உன்னை இன்னிக்குத்தான் பாக்கறேன். நீ இங்கதான் வேலை செய்யறியா?" என்றான் குமரன் உற்சாகத்துடன்.

"ஆமாம். ஒரு வாரமா நான் லீவ்ல இருந்தேன். இன்னிக்குத்தான் மறுபடி வரேன். உங்களைப் பாத்ததில ரொம்ப ஆச்சரியம்."

"டேய் என்னடா, நீங்கன்னுல்லாம் சொல்ற! பள்ளிக்கூடத்தில பேசற மாதிரியே வாடா போடான்னு பேசு. பள்ளிக்கூடப் படிப்பு முடிஞ்சப்பறம் உன்னை நான் பாக்கவே இல்லை. எத்தனை வருஷமாச்சு! நீ எப்படி இருக்க?"

"என்னத்தைச் சொல்றது! உனக்குத்தான் தெரியுமே! பள்ளிக்கூடத்தில படிச்சப்ப நீ, சுப்ரமணி, கதிரேசன் மாதிரி ஒரு ஏழெட்டு பேரு எப்பவும் ஒண்ணா இருந்துக்கிட்டு படிப்பிலேயே கவனமா இருந்தீங்க  நான், நாராயணன் மாதிரி அஞ்சாறு பேரு படிப்பில அக்கறை இல்லாம, உங்களையெல்லாம் புத்தகங்களைத் திங்கற கழுதைகள்னெல்லாம் சொல்லி கலாட்டா பண்ணிக்கிட்டு, வாத்தியார்கள் இல்லாதப்ப அவங்களைக் கிண்டல் பண்ணிக்கிட்டு, பள்ளிக்கூடம் விட்டப்பறம் ஊரைச் சுத்திக்கிட்டு, அந்தச் சின்ன வயசிலேயே சிகரெட் பிடிக்கல்லாம் பழகிக்கிட்டு ரொம்ப ஜாலியா இருக்கறதா நினைச்சு எங்க வாழ்க்கையைப் பாழாக்கிக்கிட்டோம். நாங்க யாருமே உருப்படல. நான் எஸ் எஸ் எல் ஸியில ஃபெயில் ஆகி மேல படிக்க வசதி இருந்தும் காலேஜுக்குப் போக முடியாம எவ்வளவோ கஷ்டப்பட்டு கடைசியில இந்த வார்டு பாய் வேலைக்கு வந்து ஏதோ காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கேன். உங்க க்ரூப்ல எல்லாருமே நல்லா முன்னுக்கு வந்திருப்பீங்கன்னு நினைக்கறேன். நல்ல இனத்தோட சேர்ந்திருந்தா நல்லது நடக்கும், உருப்படாதவங்களோட சேர்ந்தா உருப்படாமதான் போவோங்கறதுக்கு நீயும் நானுமே நல்ல உதாரணம்" என்றான் தங்கராஜ் விரக்தியான குரலில்.

'பள்ளிக் கூடத்தில நல்ல க்ருப்ல சேர்ந்து இருந்ததால நல்லாப் படிச்சு முன்னுக்கு வந்த நான் வேலையில சேர்ந்தப்பறம் சில மோசமானவங்களோட சேர்ந்து குடிப்பழக்கத்தக்கு ஆளாகி குடல் புண்ணாகி ஆஸ்பத்தியியில வந்து படுத்துக்கிட்டிருக்கேனே, நான் கூட நீ சொல்றதுக்கு நல்ல உதாரணம்தான்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் குமரன்.

அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 460
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

பொருள்:
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
அறத்துப்பால்                                                               காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...