Tuesday, August 30, 2022

619. தானாக வந்த வாய்ப்பு

ஐந்து வருடங்களுக்கு முன் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து 'இசைபட வாழ்தல்' என்ற இசைக்குழுவை பூபதி துவங்கினான்.

இசைக்குழுவைத் தொடங்கிய புதிதில் மிகவும் உற்சாகத்துடன் பல இசை அமைப்புகளுக்கும், இசையை வளர்ப்பதற்காகவே தங்களை அர்பணித்துக் கொண்டிருப்பதாகக் கூறிக் கொண்ட சங்கீத சபாக்களுக்கும் சென்று அவர்கள் வாய்ப்புக் கேட்டனர். ஆனால் யாரும் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க முன்வரவில்லை.

பிறகு அவர்கள் தாங்களே செலவு செய்து இசை அரங்குகளை வாடகைக்கு எடுத்து இலவச இசை நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தனர். அந்த நிகழ்ச்சிகளுக்கு சங்கீத சபாக்கள், இசை வல்லுனர்கள், ஊடகத்துறையினர், திரை இசைக்கலைஞர்கள் என்று பலருக்கும் அழைப்பு விடுத்தனர்.

ஆனால் அவர்கள் அழைப்பை ஏற்று யாரும் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்ததாகத் தெரியவில்லை.

இலவச நிகழ்ச்சி என்றாலும், அவர்களால் அதிகம் செலவு செய்து விளம்பரம் செய்ய முடியாததால் அவர்கள் நிகழ்ச்சிகளுக்குப் பார்வையாளர்கள் மிகவும் குறைவாகவே வந்தனர்.

இசை நிகழ்ச்சிகளுக்கு வந்தவர்கள் நிகழ்ச்சியை ரசித்துக் கைதட்டிப் பாராட்டியும், சிலர் நிகழ்ச்சி முடிந்ததும் மேடைக்கு வந்து அவர்களைப் பாராட்டியும் அவர்களை ஊக்குவித்தாலும் அவற்றால் பலன் ஏதும் ஏற்படவில்லை.

ஒருமுறை ஒரு சிறு பத்திரிகையில் அவர்கள் இசைக்குழுவைப் பாராட்டி ஒரு கட்டுரை வந்தது. அதை எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. கட்டுரையை எழுதியவர் ஃபோன் செய்து இவர்களுக்குத் தெரிவித்த பிறகுதான் இவர்களே தேடிப் பிடித்து அந்தப் பத்திரிகையை வாங்கிப் படித்தனர்!

ஆனால் அதிகம் பேர் படிக்காத அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இசைக்குழுவை ஆரம்பித்தபோது அவர்களுக்கு இருந்த உற்சாகமும், ஆர்வமும், இந்த ஐந்து ஆண்டுகளில் சிறிது சிறிதாகக் கரைந்து தங்கள் இசைக்குழுவைக் கலைத்து விட்டு வேறு எதிலாவது ஆர்வம் செலுத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் எதிர்பாராத அந்த வாய்ப்பு வந்தது.

நகரின் புகழ் பெற்ற சங்கீத சபாக்களில் ஒன்றான, 'தேவகான சபா'வின் செயலாளரிடமிருந்து அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 

சமீபத்தில் நடந்த அவர்கள் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவர் அவர்களுடைய திறமையைப் புரிந்து கொண்டு அவர்களுக்குத் தங்கள் சபையில் வாய்ப்புக் கொடுக்க முன் வந்தார்.

அவர் தொலைபேசியில் பேசிய அடுத்த நாளே, நிகழ்ச்சியை உறுதி செய்து அந்த சபாவிலிருந்து ஒரு மின்னஞ்சல் செய்தி வந்தது. அந்தச் செய்தியில் நிகழ்ச்சி நடக்கும் தேதி, பிற விவரங்களுடன் இசை நிகழ்ச்சிக்காக அவர்களுக்கு அளிக்கப்படும் சன்மானமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சன்மானமாகக் குறிப்பிடப்பட்டிருந்த தொகையைப் பார்த்ததும் பூபதிக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது. மூன்று மணி நேர இசை நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

"இவ்வளவு வருஷம் கழிச்சு இப்படி ஒரு அருமையான வாய்ப்பு வந்திருக்கு! இதை நாம்  சிறப்பா பயன்படுத்திக்கணும். இதை நாம சிறப்பா செஞ்சுட்டா நமக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்" என்றான் பூபதி.

"தேவகான சபாவில நம்ம நிகழ்ச்சி நடக்கிறதே நமக்கு நல்ல பப்ளிசிடிதான். எல்லோருக்கும் நம்மைப் பத்தித் தெரிஞ்சுடும்" என்றான் அவன் நண்பன் பாஸ்கர்.

"ரெண்டு மாசம் அவகாசம் இருக்கு. நல்லா ரிகர்சல் பண்ணி இதுவரைக்கும் நாம பண்ணாத அளவுக்குப் பிரமாதமா நம்ம நிகழ்ச்சியை நாம செய்யணும்" என்றான் பூபதி.

அடுத்த நாளே ரிகர்சலைத் தொடங்கி விட்டார்கள்.

நிகழ்ச்சி நடக்க வேண்டிய  நாளுக்கு ஒரு வாரம் முன்பு தேவகான சபாவிலிருந்து அவர்களுக்கு மின்னஞ்சலில் ஒரு செய்தி வந்தது. "எதிர்பாராத காரணங்களால்" அவர்கள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக அந்தச் செய்தி அறிவித்தது.

பூபதி பாஸ்கரை அழைத்துக் கொண்டு தேவகான சபா அலுவலகத்துக்குச் சென்றான். அங்கே சபாவின் தலைவரைப் பார்க்கப் பலர் காத்திருந்தனர்.  செயலாளர் அவர் அறையில் இல்லை. ஒருவேளை தலைவரின் அறையில் இருப்பார் என்று அவர்கள் நினைத்தனர்.

வரிசையாக ஒவ்வொருவராகத் தலைவர் அறைக்குச் சென்று திரும்பினர். அனைவருமே ஓரிரு நிமிடங்கள்தான் உள்ளே இருந்தனர். வெளியே வந்தவர்கள் முகத்தில் மலர்ச்சி இல்லை.

பூபதியின் முறை வந்தபோது இருவரும் தலைவரின் அறைக்குச் சென்றனர்.

"இங்கே செயலாளரா இருந்தவரு சில நிதிமுறைகேடுகள்ள ஈடுபட்டிருக்காரு. அதனால அவரை சஸ்பெண்ட் பண்ணி இருக்கோம். அதோட அவர் ஏற்பாடு செஞ்ச எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து பண்ணிட்டோம். போலீஸ்ல புகார் கொடுத்திருக்கோம். போலீஸ் விசாரணை முடிஞ்சப்பறம்தான் மறுபடி எங்க செயல்பாடுகளைத் தொடங்குவோம். அதுக்கு எத்தனை மாசம் ஆகும்னு தெரியாது. ஐ ஆம் சாரி!" என்றார் தலைவர்.

"சார்! நீங்க எங்களுக்கு ஈமெயில் மூலமா நிகழ்ச்சியை உறுதிப்படுத்தி இருக்கீங்க. இதுக்காக நாங்க ரெண்டு மாசமா ரொம்பவும் கஷ்டப்பட்டு ரிகர்சல் பண்ணி இருக்கோம். ஒவ்வொரு ரிகர்சலுக்கும் ஆர்ட்டிஸ்டுகளுக்குப் பணம் கொடுக்கணும். அவங்க தங்களோட இசைக்கருவிகளை எடுத்துக்கிட்டு வரதுக்காக டாக்சிக் கட்டணம் கொடுக்கணும். இதுக்காக எங்க பணமும், நேரமும் செலவாகி இருக்கு. இப்ப நீங்க எப்படி கான்சல் பண்ண முடியும்?" என்றன் பூபதி கோபத்துடன்.

தலைவர் சிரித்தபடியே, "எந்தக் காரணமும் குறிப்பிடாம, நிகழ்ச்சி எப்ப வேணும்னா ரத்து செய்யப்படலாம், அதற்கு இழப்பீடு எதுவும் கிடையாதுன்னு ஒரு நிபந்தனை அந்த ஈமெயில்லே இருந்ததே, அதை நீங்க கவனிக்கலியா? சாரி! உங்க இழப்பு எங்களுக்குப் புரியுது. ஆனா எங்களால எதுவும் செய்ய முடியாது. எங்க வக்கீல்  யோசனைப்படிதான் இதை செஞ்சிருக்கோம்!" என்றார் தலைவர்.

"என்னடா இப்படி ஆயிடுச்சு? எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நாம இவ்வளவு கஷடப்பட்டு ரிகர்சல் பண்ணினதில்ல. அத்தனை முயற்சியும் பலன் இல்லாம போயிடுச்சே!" என்றான் பாஸ்கர் ஆற்றாமையுடன்.

"என்ன செய்யறது? நம்ம அதிர்ஷ்டம் அப்படி இருக்கு! இதைத்தான் விதின்னு சொல்றாங்க போலருக்கு. நம்ம குழுவில யாருக்குமே தலையெழுத்து சரியில்ல போலருக்கு!" என்றான் பூபதி.

பூபதியின் கைபேசி ஒலித்தது.

"ஆமாம்.... சொல்லுங்க...ம்..ம்..அப்படியா? என்னிக்கு? நிச்சயமா! அது ஒரு பிரச்னை இல்லை சார். ரொம்ப நன்றி!"

"என்ன? தேவகான சபால வேற தேதியில நிகழ்ச்சியை வச்சுக்கலாங்கறாங்களா?" என்றான் பாஸ்கர் விளையாட்டாக.

"அது இல்ல. ஆனா அது மாதிரிதான்! இளைஞர் இலக்கிய மன்றத்தோட செயலாளர்தான் பேசினார். நாம தேவகான சபாவில இருந்தபோது அவரும் அங்கே இருந்திருக்காரு. அவங்க நிகழ்ச்சிக்காக தேவகான சபாவில ஹால் புக் பண்ணி கான்சல் ஆகி இருக்கு. அதுக்காக அவர் வந்திருக்காரு. இப்ப வேற ஹால் புக் பண்ணி இருக்காராம். அவங்க நிகழ்ச்சியோட முடிவில ஒரு மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்த முடியுமான்னு கேக்கறாரு. அவங்களால ஒரு சின்னத் தொகைதான் கொடுக்க முடியுமாம். இதுவரைக்கும் நாம ரிகர்சலுக்கு செலவழிச்ச பணம் வந்துடும்னு நினைக்கிறேன். ஆனா அவங்க நிகழ்ச்சிக்கு நிறைய கூட்டம் வரும். அதனால நமக்கு நல்ல பப்ளிசிடி கிடைக்கும்னு சொல்றாரு. சரின்னு சொல்லிட்டேன்!" என்றான் பூபதி.

"பரவாயில்ல. பணம் கிடைக்காட்டாலும், நாம் பண்ணின ரிகர்சல் வீண் போகல. அவரு சொல்றபடி நமக்கு பப்ளிசிடி கிடைச்சு எதிர்காலத்தில நமக்கு உதவலாம்!" என்றான் பாஸ்கர்.

அரசியல் இயல்
அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)

குறள் 619:
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

பொருள்:
விதியின் காரணத்தால் ஒரு செயலில் நமக்கு வெற்றி கிட்டாவிட்டாலும்,  உடலை வருத்திச் செயல்பட்டதற்கான கூலியை முயற்சி கிடைக்கச் செய்யும்..

      அறத்துப்பால்                           (                                  காமத்துப்பால்

Monday, August 29, 2022

618. விதியின் பிழை!

"வாடா எப்படி இருக்கே?" என்று தன் நண்பன் கண்ணனை வரவேற்றான் பிரகாஷ்.

"எப்படி இருக்க முடியும்?  படிப்பை முடிச்சு ரெண்டு வருஷம் ஆகப் போகுது. இன்னும் வேலை கிடைக்கல. ரொம்ப வெறுப்பா இருக்கு.  உன்னைப் பார்த்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னுதான் வந்தேன். நீ ஃப்ரீதானே?" என்றான் கண்ணன்.

"உன்னை மாதிரி நண்பர்கள் விஷயத்தில நான் எப்பவும் ஃப்ரீதான்.  ரெண்டு மூணு மாசத்துக்கு ஒரு தடவை என் பெரியப்பாவைப் பாத்துட்டு வருவேன். இன்னிக்குப் போகலாம்னு நினைச்சேன். பரவாயில்லே. அடுத்த வாரம் போய்க்கறேன்."

"சாரி. எனக்காக நீ உன் ப்ரொக்ராமை மாத்திக்க வேண்டாம். நான் வேணும்னா அடுத்த வாரம் வரேன்."

"ஒண்ணும் பிரச்னை இல்லை. பெரியப்பாவைப் பாக்கப் போறது ஒரு மரியாதைக்காகத்தான். அடுத்த வாரம் போயிக்கறேன். நாம எங்காவது வெளியில போகலாம்" என்றான் பிரகாஷ்.

நண்பர்கள் இருவரும் ஒரு நல்ல ஓட்டலுக்குச்  சென்று உணவுருந்தி விட்டு ஒரு சினிமாவுக்குப் போய் விட்டு மாலை மீண்டும் பிரகாஷின் அறைக்கு வந்தனர்.

சற்று நேரம் பொதுவாகப் பேசிய பின், "எல்லா வேலைக்கும் அப்ளை பண்ற இல்ல?" என்றான்பிரகாஷ்.

"நான் பார்த்தவரையில பெரிய நிறுவனங்கள்ள போட்டி அதிகமா இருக்கு. அம்பது போஸ்டுக்கு ஆயிரம் பேரு இன்டர்வியூவுக்கு வராங்க. அதனால பெரிய நிறுவனங்களுக்கு அப்ளை பண்றதை நிறுத்திட்டேன். மத்த வேலைகளுக்கெல்லாம் அப்ளை பண்றேன்" என்றான் கண்ணன்.

"அது தப்புடா! தேர்ந்தெடுக்கப்படற அம்பது பேரில நீ ஒத்தனா இருக்கலாமே! சில பெரிய நிறுவனங்கள்ள உன்னைத் தேர்ந்தெடுக்கலேங்கறதுக்காக, பெரிய நிறுவனங்களுக்கே அப்ளை பண்ணாம இருந்தா உனக்கான வாய்ப்புகளை நீ குறைச்சுக்கற மாதிரி ஆகாதா?"

"நல்ல கம்பெனியில வேலை கிடைக்கற கொடுப்பினை எனக்கு இல்லேன்னு நினைக்கிறேன், விதி எனக்கு எதிரா இருக்கறப்ப அதை எதிர்த்துப் போராடறதில என்ன பயன் இருக்கும்?"

அதற்கு மேல் நண்பனிடம் அது பற்றிப் பேச விரும்பாமல் பேச்சின்  திசையை மாற்றினான் பிரகாஷ்.

"ஆமாம், நம்ம குருமூர்த்தி எப்படி இருக்கான்? மறுபடி புது பிசினஸ் ஏதாவது ஆரம்பிச்சிருக்கானா?" என்றான் கண்ணன், சிரிப்புடன்.

"அவனும் உன்னை மாதிரி தன்னோட தலையெழுத்து சரியில்லைன்னுதான் நினைக்கிறான். ஆனா ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கான்" என்றான் பிரகாஷ்.

"எனக்குத் தெரிஞ்சு இன்ஷ்யூரன்ஸ் ஏஜன்சி எடுத்தான். அது சரியா வரலேன்னதும் நெட்வொர்க் மார்க்கெடிங்ல இறங்கினான். அதிலேயும் தோல்விதான். இப்ப என்ன பிசினஸ் செய்யறான்?" என்றான் கண்ணன் கேலியாக.

"கண்ணா! நீ அவனைக் கிண்டல் பண்றது சரியில்ல. உன்னை மாதிரி அவனுக்கும் வேலை கிடைக்கல. அதனால வேலை தேடிக்கிட்டே வேற என்ன செய்யலாம்னு யோசிச்சான். அதிக  முதல் போடாம செய்யக் கூடியது என்னன்னு பாத்து இன்ஷ்யூரன்ஸ், நெட்வொர்க்கிங் மார்க்கெடிங்னு இறங்கினான். அதில எல்லாம் அவனுக்குத் தோல்விதான். ஆனா அவன் சும்மா இருக்க மாட்டான். வேற ஏதாவது முயற்சி செஞ்சுக்கிட்டிருப்பான்" என்றான் கண்ணன்.

'விதி மேல பழி போட்டுட்டு சரியான முயற்சி கூட செய்யாத நீ, தன் முயற்சிகள்ள தோல்வி அடைஞ்சாலும் புதுசா ஏதாவது முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கற குருமூர்த்தியைக் குற்றம் சொல்லலாமா?' என்ற கேள்வி நண்பனின் பதிலில் பொதிந்திருந்தது கண்ணனுக்குத் தெரிந்தது.

"சரி, வரேன்.நீ சொன்ன மாதிரி இனிமே பெரிய நிறுவனங்களுக்கும் அப்ளை பண்றேன்!" என்று சொல்லி நண்பனிடம் விடைபெற்றான் கண்ணன்.

அரசியல் இயல்
அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)

குறள் 618:
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

பொருள்:
நன்மை விளைவிக்கும் விதிப்பயன் இல்லாமல் இருப்பது யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழியாகும்.

      அறத்துப்பால்                           (                                  காமத்துப்பால்

Sunday, August 28, 2022

617. லக்ஷ்மியின் அக்கா!

"ஏன் தாத்தா, ஶ்ரீதேவி, மூதேவின்னு சொல்றாங்களே, அவங்க யாரு?" என்றான் சிறுவன் நிதிஷ்.

"ஶ்ரீதேவின்னா லக்ஷ்மி, மூதேவிங்கறது அவங்க அக்கா!" என்றார் ஏகாம்பரம்.

சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஏகாம்பரத்தின் மகன் குமார் - நிதிஷின் அப்பா - தொலைக்காட்சி நிகழ்ச்சியை விட இந்த உரையாடல் சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்தவன் போல் தொலைக்காட்சியின் ஒலியை அடக்கி விட்டுத் தன் தந்தையும், தன் மகனும் பேசுவதை கவனித்தான்.

"மூதேவி கெட்டவங்களா?"

"கெட்டவங்கன்னு இல்ல. கடவுள்னா நமக்கு நல்லது செய்யணும் இல்ல? லக்ஷ்மி நமக்கு எல்லாம் கொடுப்பாங்கன்னு நம்பி லக்ஷ்மியை வணங்கறோம். மூதேவி நமக்கு நல்லது செய்ய மாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கை."

"அதனாலதான் மூதேவியை யாரும் கும்படறதில்லையா?"

"ஆமாம்."

"உண்மையிலேயே ஶ்ரீதேவி, மூதேவி எல்லாம் இருக்காங்களா?"

"கோவிலுக்குப் போய்க் கடவுளைக் கும்பிடறோம். கடவுள் இருக்கார்னு நினைச்சுதானே? அது மாதிரி இதெல்லாம் ஒரு நம்பிக்கைதான்."

"எங்க பள்ளிக்கூடத்தில ஒரு சார் சரியாப் படிக்காதவங்களை மூதேவின்னு திட்டுவாரு. மூதேவிங்கறது ஒரு பொண்ணுதானே? ஆனா அவரு பையங்களைக் கூட மூதேவின்னு திட்டுவாரு!"

"உங்க வாத்தியார் மட்டுமில்ல, பல பேரு ஆம்பிளைங்களைக் கூட மூதேவின்னு திட்டுவாங்க. மூதேவிங்கறது ஒரு ஆள் இல்ல. மூதேவியை லக்ஷ்மியோட அக்கான்னு சொன்னாக் கூட அவங்களை ஒரு பெண்ணா நினைக்க வேண்டியது இல்ல. அழுக்கு, சுத்தம் இல்லாம இருக்கறது, சோம்பேறித்தனம், முயற்சி செய்யாம முடங்கிக் கிடக்கறது இதுக்கெல்லாம் சேர்த்துத்தான் மூதேவின்னு ஒரு பேரு வச்சிருக்கோம்."

"நமக்கு லக்ஷ்மிதான் வேணும், மூதேவி கூடாது, இல்ல?"

"ஆமாம். லக்ஷ்மிதானே  மங்களமானவங்க. நமக்கு நல்லது செய்யறவங்க. நமக்கு எல்லா வளங்களையும் கொடுக்கறவங்க? சரி. நமக்கு எப்படி நல்லது நடக்கும். சும்மா உக்காந்துக்கிட்டிருந்தா நடக்குமா?"

நடக்காது என்று கூறுவது போல் தலையைப் பக்கவாட்டில் ஆட்டிய நிதிஷ், "ஆமாம். நான்தானே உங்கிட்ட கேள்வி கேக்கறேன்!  நீ ஏன் அடிக்கடி அப்பாவைப் பாத்துப் பேசறே? அப்பாதான் டிவி பாத்துக்கிட்டிருக்காரு இல்ல?" என்றான்.

"இல்ல. உன் அப்பாவும் நம்ம பேச்சை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கான். அதனாலதான் அவனைப் பாத்தும் பேசறேன்!" என்றார் ஏகாம்பரம், மகன், பேரன் இருவரையும் பார்த்துச் சிரித்தபடியே.

"ஏம்ப்பா? உனக்கு இதெல்லாம் தெரியாதா? நீ சின்னப் பையனா இருக்கறப்ப தாத்தா இதையெல்லாம் உனக்குச் சொல்லலியா?" என்றான் நிதிஷ் தன் தந்தையைப் பார்த்து. 

இதற்கு குமார் பதில் சொல்வதற்குள்,"நிறைய தடவை சொல்லி இருக்கேன். ஆனா உங்கப்பாவுக்கு அதெல்லாம் மறந்திருக்கும். அதான் திரும்பவும் கேக்கறான். கேட்டா நல்லதுதான்!" என்ற ஏகாம்பரம், "என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்? லக்ஷ்மின்னா நல்லது செய்வாங்க. ஆனா சும்மா உக்காந்துக்கிட்டிருந்தா நல்லது நடக்காது. நாம முயற்சி செய்யணும், உழைக்கணும். முயற்சி, உற்சாகம், சுத்தம்  உழைப்பு. நல்ல எண்ணங்கள் இதையெல்லாம்தான் லக்ஷ்மின்னு சொல்றோம். நம்மகிட்ட இதெல்லாம் இருந்தா நமக்கு நல்லது நடக்கும். அழுக்கு, குப்பை, சோம்பேறித்தனம், மெத்தனம், அதிகம் தூங்கறது, நம்பிக்கை இல்லாம இருக்கறது இதையெல்லாம்தான் மூதேவின்னு சொல்றோம். இதெல்லாம் இருந்தா நல்லது நடக்காது. அதனால லக்ஷ்மின்னு சொல்றதும், மூதேவின்னு சொல்றதும் உடம்பு அளவிலேயும், மனசு அளவிலேயும் நாம ஆரோக்கியமா, சுறுசுறுப்பா, உற்சாகமா இருக்கறதையும், இல்லாத்தையும்தான். என்ன புரிஞ்சுதா?" என்றார்.

புரிந்தது என்பது போல்  நிதிஷ் தலையை ஆட்டினான். ஏகாம்பரம் திரும்பி மகனைப் பார்த்துச் சிரித்தார்.

தந்தை தன் முயற்சியால் ஓரளவுக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பதால், எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் சோம்பேறித்தனமாகத் தான் இருப்பதைத் தான் தந்தை சுட்டிக் காட்டுகிறார் என்று புரிந்து கொண்ட குமார் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

'அதான் எத்தனையோ தடவை என் மூஞ்சிக்கு நேரா வெளிப்படையாவே சொல்லிட்டீங்களே! இப்ப பேரனுக்கு ஏதோ கதை சொல்ற மாதிரி வேற எனக்குச் சொல்லிக் காட்டணுமாக்கும்!' என்று நினைத்துக் கொண்டான் குமார்.

'எத்தனையோ தடவை நேரடியா சொல்லியே உனக்கு உறைக்கல. இப்படி மறைமுகமா சொன்னா மட்டும் உறைக்கவா போகுது?" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் ஏகாம்பரம்.

அரசியல் இயல்
அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)

குறள் 617:
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

பொருள்:
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

      அறத்துப்பால்                           (                                  காமத்துப்பால்

616. ஓட்டல் வாசலில் ஒரு சந்திப்பு!

அந்த ஓட்டலுக்குள் நான் நுழைய முற்பட்டபோது, ஓட்டலிலிருந்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்து கொண்டிருந்த அந்த மனிதர் என்னை உற்றுப் பார்த்து விட்டு, "நீங்க சிவராமன் சாரோட பையன்தானே?" என்றார்.

"ஆமாம்" என்ற நான், "நீங்க யாருன்னு தெரியலியே!" என்றேன்.

"என்ன சந்திரா! என்னைத் தெரியலியா? நான் உங்க வீட்டில குடி இருந்தேனே? ஜம்பு!" என்றார் அவர்.

"ஓ, நீங்களா? அது எத்தனையோ வருஷம் முன்னால இல்ல? அதான் டக்னு நினைவுக்கு வரல. சௌக்கியம்தானே? வரேன்" என்றபடி ஓட்டலுக்குள் செல்ல முயன்றேன் நான்.

"இருப்பா! என்ன அவசரம்?" என்று என் கையைப் பிடித்துத் தடுத்த ஜம்பு, "அப்ப நீ சின்னப் பையன். ஸ்கூல்ல படிச்சுக்கிட்டிருந்த. உங்க வீட்டில உங்களுக்கு பக்கத்து போர்ஷன்ல குடியிருந்த எங்களோட நீ அதிகம் பழகினதில்ல. ஆனா, உங்கப்பா எப்படிப்பட்ட மனுஷர்! அவரை என்னால  எப்படி மறக்க முடியும்? எப்படி இருக்காரு?"

"அப்பா காலமாகிப் பல வருஷங்கள் ஆயிடுச்சு!" 

"கடவுளே! அவருக்கு வயசு ஆகியிருக்கும். ஆனாலும் வருத்தமாத்தான் இருக்கு. அவரை மாதிரி ஆத்மாக்கள் இந்த உலகத்துக்குத் தேவை. நீ அப்ப சின்னப் பையன்கறதால உனக்குத் தெரிஞ்சிருக்காது. நான் ஒரு கம்பெனியில சேல்ஸ்மேனா இருந்தேன். குறைஞ்ச சம்பளம். ரொம்ப கஷ்டமன வேலை. டார்கெட்டை ரீச் பண்ணலேன்னா சம்பளமே கொடுக்க மாட்டாங்க.  

"குடும்பத்தைக் காப்பாத்த ரொம்ப கஷ்டப்பட்டேன். சில மாசம் வாடகை கொடுக்க ரொம்ப லேட் ஆயிடும். ஆனா உங்க அப்பா அதுக்காக கோவிச்சுக்க மாட்டாரு. 'சம்பளம் வரலேன்னா நீங்க என்ன செய்வீங்க? சம்பளம் வந்ததும் கொடுங்க'ம்பாரு. நான் விரக்தியா இருக்கறப்பல்லாம், 'நீங்க கடுமையாத்தான் உழைக்கறீங்க. மனசைத் தளர விடம முயற்சி செஞ்சுக்கிட்டே இருங்க தம்பி! முயற்சிகளுக்கு நிச்சயமாப் பலன் கிடைக்கும்!'னு அவர் சொல்றப்பல்லாம் சும்மா ஆறுதலுக்காக சொல்றாருன்னு நினைச்சுப்பேன்.

"ஆனா, தொடர்ந்து முயற்சி செஞ்சுக்கிட்டே இருந்ததால, அவர் சொன்னபடி பலன் கிடைச்சது. நானே சொந்தத்தில ஒரு சின்ன ஏஜன்சி எடுத்து இப்ப அது பெரிசா வளர்ந்து நல்ல வசதியா இருக்கேன். உங்கப்பாவை வந்து பாக்கணும்னு நினைச்சுப்பேன். ஆனா வர முடியாமலே போயிடுச்ச! இப்ப அவரே இல்லேங்கற. அதே வீட்டிலதானே இருக்கீங்க?" என்றார் ஜம்பு.

"இல்லை."

"ஓ, வீட்டை இடிச்சு ஃபிளாட் கட்டிட்டீங்களா? இப்ப எல்லாரும் அப்படித்தானே செய்யறாங்க? அப்பாவோட வியபாரத்தை நீதானே பாத்துக்கற?"

இதற்கு என்ன பதில் சொல்வதென்று நான் யோசிப்பதற்கள், அவர்  தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு, "நான் வரேன். ஒரு இடத்துக்குப் போகணும்!" என்று சொல்லி விடைபெற்றார்.

நான் ஓட்டலுக்குள் காலடி எடுத்து வைத்ததுமே, கல்லாவில் அமர்ந்திருந்த முதலாளி, "ஏம்ப்பா! வேலைக்கு வந்தா நேரே உள்ள வரணும். வாசல்ல நின்னு யார்கிட்டேயோ மணிக்கணக்காப் கேசிக்கிட்டிருக்க?" என்றார் கடுமையான குரலில்.

அவருக்கு முன் மாட்டப்பட்டிருந்த சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தேன். என் வேலை துவங்குவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. ஆனால் நான் ஓட்டல் வாசலில் யாரிடமோ நீண்ட நேரம் பேசி விட்டு தாமதமாக வேலைக்கு வந்ததைப் போல் பேசுகிறார்!

என்ன செய்வது? அவர் ஓட்டல் முதலாளி. நான் சர்வர்தானே!  அவர் கூறியது தவறு என்று நான் சுட்டிக் காட்ட முடியுமா என்ன?

என் வீட்டில் குடியிருந்த ஜம்பு என் அப்பாவின் பேச்சால் உந்தப்பட்டு முயற்சி செய்து வாழ்க்கையில் முன்னேறி விட்டார்.

'நல்ல நிலையில இருக்கறவங்க கூட  இன்னும் முன்னேறுவதற்கு முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும். முயற்சி இல்லாம இருந்தா அவங்க இருந்த நிலையிலேந்து கீழே போயிடுவாங்க' என்று என் அப்பா என்னிடமும் பலமுறை கூறி இருக்கிறார்.

ஆனல் அவர் அறிவுரையைக் கேட்டுச் செயல்படாத நான், மெத்தனமாக இருந்ததால், அவர் நடத்தி வந்த வியாபாரத்தைத் தொடர்ந்து லாபகரமாக நடத்த முடியாமல் வியாபாரத்தை இழுத்து மூடி விட்டு, வீட்டையும் இழந்து விட்டு, வருமானத்துக்கு இந்த ஓட்டலில் சர்வராகப் பணியாற்ற வேண்டி நிலைக்கு வந்திருக்கிறேன்!

முதலாளியின் பேச்சுக்கு பதில் கூறாமல் என் வேலையைத் தொடங்க ஓட்டலுக்குள் நுழைந்தேன். 

அரசியல் இயல்
அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)

குறள் 616:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

பொருள்:
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Saturday, August 27, 2022

615. கற்பகத்தின் மதிப்பீடு

"என்ன இன்னிக்காவது வேலை முடிஞ்சுதா?" என்றாள் கற்பகம், வீட்டுக்குள் நுழைந்த  தாமோதரனைப் பார்த்து.

""முடிஞ்சுது. ஒரு வழியா ஒரு நல்ல காலேஜில சீட் கிடைச்சது. வள்ளி வீட்டுக்காருக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப நன்றி மச்சான்னு அவர் திரும்பத் திரும்பச் சொன்னப்ப எனக்கு ஒரு மாதிரி சங்கடமா ஆயிடுச்சு."

"நீங்க ஆஃபீசுக்கு லீவ் போட்டுட்டு அஞ்சாறு நாள் அலைஞ்சு திரிஞ்சு எத்தனையோ காலேஜ் படியேறி ஒரு நல்ல காலேஜில சீட் வாங்கிக் கொடுத்திருக்கீங்க. அந்த நன்றி அவருக்கு இருக்காதா?"

"என்ன செய்யறது. குணா மார்க் சுமாராத்தான் வாங்கி இருக்கான். அவனுக்கு நல்ல காலேஜ்ல அட்மிஷன் வாங்கணும், அதுவும் டொனேஷன் கேக்காம, ஃபீஸ் அதிகம் வாங்காத காலேஜா இருக்கணும். அப்படிப்பட்ட காலேஜை தேடிப் பிடிக்கணும். அவங்க நமக்கு சீட் கொடுக்கணும். வள்ளி புருஷன் வெளியுலகப் பழக்கம் அதிகம் இல்லாதவரு. நீதான் அண்ணே குணாவுக்கு ஒரு நல்ல காலேஜ்ல சீட் வாங்கிக் கொடுக்கணும்னு வள்ளி எங்கிட்ட கேட்டப்ப நான் எப்படி அவளுக்கு உதவி செய்யாம இருக்க முடியும்?"

"ஆனா உங்களை மாதிரி ஆஃபிசுக்கு லீவ் போட்டுட்டு, வேளைக்கு சோறு கூடத் திங்காம அலைஞ்சு திரிஞ்சு மத்தவங்களுக்கு உதவி செய்யறவங்க எத்தனை பேரு இருப்பாங்க?" என்றாள் கற்பகம்.

"நீ என்னைப் பாராட்டறியா, குத்தம் சொல்றியான்னே தெரியலையே!" என்றான் தாமோதரன் குழப்பத்துடன்.

"நான் ஏன்உங்களைக் குத்தம் சொல்லப் போறேன்? உங்களுக்காக எந்த அளவுக்கு முயற்சி செய்வீங்களோ, அதே அளவு மத்தவல்களுக்காகவும் செய்யறீங்கன்னுதான் சொல்ல வரேன். என்னோட குடும்பத்துக்கும்தானே நீங்க உதவி செஞ்சிருக்கீங்க? என் தம்பிக்கு  வேலை போனப்ப அவன் கம்பெனி யூனியன் கூட அவனுக்கு உதவி செய்யல. நீங்கதானே ஒரு வக்கீலைத் தேடிப் பிடிச்சு அவர் மூலமா லேபர் கமிஷனருக்கு பெடிஷன் கொடுத்து அவனுக்கு மறுபடி வேலை கிடைக்க வழி செஞ்சீங்க? வக்கீலுக்கு நீங்க கொடுத்த ஃபீஸைக் கூட அவன்கிட்டேந்து வாங்கிக்கல. வக்கீலுக்கு நீங்க எவ்வளவு ஃபீஸ் கொடுத்தீங்கன்னு எங்கிட்ட கூட சொல்லல. உங்க மேல நான் குத்தம் சொன்னா என் பிறந்த வீட்டிலேயே எல்லாரும் என்னை ஒதுக்கி வச்சுடுவாங்க!" என்றாள் கற்பகம் கணவனைப் பார்த்துப் பெருமையுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)

குறள் 615:
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.

பொருள்:
தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Wednesday, August 24, 2022

614. முருகன் துணை!


"எங்க ரெண்டு பேரையும் தவிக்க விட்டுட்டு அவரு திடீர்னு போயிட்டாரு. இந்தப் பொண்ணை நான் எப்படிக் காப்பாத்துவேன். அவளுக்கு எப்படிக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்?" என்று புலம்பினாள் பார்வதி.

"கவலைப்படாதே, பார்வதி! கடவுள் ஏதாவது வழி காட்டுவாரு. உங்க சொந்தக்காரங்க யாராவது உதவுவாங்க" என்றாள் அவள் பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவி. 

பார்வதியின் கணவர் மறைந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டன. பார்வதி எப்படியோ கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.

அப்போது ஒருநாள் பார்வதியைப் பார்க்க அவளுடைய ஒன்று விட்ட சகோதரியின் மகன் முருகன் வந்தான்.

"எனக்கு இப்பதான் விஷயம் தெரிஞ்சது பெரியம்மா. அதான் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்!" என்றான் முருகன்.

"நெருங்கின சொந்தக்காரங்களே நாங்க இருக்கமா, போயிட்டமான்னு தெரிஞ்சுக்கற அக்கறை கூட இல்லாம இருக்காங்க. நீ எங்க மேல அக்கறை எடுத்துக்கிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கியேப்பா, ரொம்ப ஆறுதலா இருக்கு!" என்றாள் பார்வதி.

பார்வதியின் நிலைமையைப் பற்றிக் கேட்டறிந்த பிறகு, "கவலைப்படாதீங்க பெரியம்மா! உங்க பொண்ணைப் பத்தின கவலையை விடுங்க. அவ என்னோட தங்கச்சி! அவளுக்கு ஒரு நல்ல வேலை வாங்கித் தர வேண்டியது என்னோட பொறுப்பு. கொஞ்சநாள் வேலைக்குப் போகட்டும். ரெண்டு மூணு வருஷத்தில ஒரு நல்ல மாப்பிள்ளையையும் பாத்துக் கல்யாணத்தையும் நடத்தி வச்சுடறேன்!" என்றான் முருகன்.

"நீ மவராசனா இருப்ப!" என்று மகிழ்ச்சியுடன் வாழ்த்தினாள் பார்வதி.

முருகன் வந்து போனது பற்றியும், தன் மகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியது பற்றியும் தேவியிடம் கூறினாள் பார்வதி.

"இந்தக் காலத்தில இப்படி ஒரு பிள்ளையா!" என்று வியந்தாள் தேவி

முருகன் வந்து போய்ப் பல மாதங்கள் ஆகி விட்டன. அதற்குப் பிறகு அவன் மீண்டும் வரவில்லை, வேறு எந்தத் தகவலும் இல்லை.

"அவ்வளவு நம்பிக்கையாப் பேசினான், அப்புறம்  ஆளையே காணுமே?" என்றாள் பார்வதி, தேவியிடம்.

"வேலை அதிகமா இருந்திருக்கும். அதனால நேரம் கிடைக்கலையோ என்னவோ! வீட்டு விலாசமோ, வேலை செய்யற இடத்தோட விலாசமோ, ஃபோன் நம்பரோ கொடுத்தானா? என் வீட்டுக்காரரை விட்டு விசாரிக்கச் சொல்றேன்" என்றாள் தேவி.

"அதெல்லாம் எதுவும் கொடுக்கல. ஏதாவது அவசரம்னா கூப்பிடறதுக்காக ஒரு ஃபோன் நம்பர் கொடுத்தான். அது அவன் ஃபிரண்டோட ஃபோன் நம்பர்னு நினைக்கிறேன்."

"சரி. அந்த நம்பரைக் கொடு. அவரை ஃபோன் பண்ணி விசாரிக்கச் சொல்றேன்"

தேவியின் கணவர் பார்வதி கொடுத்த தொலைபேசி எண்ணை அழைத்து, "உங்க நண்பர் முருகன் இந்த நம்பரைக் கொடுத்தாரு" என்று ஆரம்பித்தார்.

"முருகன் கொடுத்தானா? உங்க்கிட்ட கடன் ஏதாவது வாங்கி இருக்கானா?" என்றான் அவன் நண்பன்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. அவரோட பெரியம்மா பார்வதிங்கறவங்களோட பொண்ணுக்கு ஏதோ வேலை வாங்கித் தரதா சொல்லி இருந்தாராம். நான் பார்வதியம்மாவோட பக்கத்து வீட்டில இருக்கறவன். அவங்க அது பத்தி கேக்கச் சொன்னாங்க."

முருகனின் நண்பன் பெரிதாகச் சிரித்து விட்டு, "வேலை வாங்கிக் கொடுக்கப் போறானா? அவனே வேலை வெட்டி இல்லாம சுத்திக்கிட்டிருக்கான். நான் எவ்வளவோசொல்லிட்டேன். வேலை தேடிக்க முயற்சி கூட பண்ண மாட்டேங்கறான். அவன் எங்க இன்னொத்தருக்கு வேலை வாங்கித் தரது? தன்னைப் பெரிய பரோபகாரின்னு காட்டிக்கறத்துக்காக எதையோ சொல்லிட்டு வந்திருக்கான்னு நினைக்கிறேன்!" என்றான்.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)

குறள் 614:
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.

பொருள்:
முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Tuesday, August 23, 2022

807. மீண்டும் சந்தித்தபோது....

திருமண நிகழ்ச்சியில் மனைவியுடன் அமர்ந்திருந்த சுந்தரம்  தனக்கு முன்னால் நான்கைந்து வரிசைகள் தள்ளி அமர்ந்திருந்த ஒரு நபரைப் பார்த்து விட்டு, "அட! செல்வராஜ் வந்திருக்கான் போல இருக்கே! பார்த்துப் பேசி விட்டு வந்துடறேன்!" என்றார்.

"இப்ப எதுக்குங்க? முகூர்த்தம் முடிஞ்சதும் தனியா எங்கேயாவது அழைச்சுக்கிட்டுப் போய்ப் பேசுங்க!" என்றாள் அவர் மனைவி. சற்றுப் பதட்டத்துடன்.

ஆனால் மனைவி சொன்னதைக் காதில் வாங்காதவர் போல் சுந்தரம் எழுந்து செல்வராஜ் அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்றார்.

சுந்தரமும், செல்வராஜும் கல்லூரியில் சேர்ந்து படித்ததுடன் ஒரே நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றியவர்கள். 

இருவரும் ஒரே நேரத்தில் ஒரே நிலையில் வேலைக்குச் சேர்ந்தாலும், சுந்தரம் வேகமாகப் பதவி உயர்வுகள் பெற்று செல்வராஜை விட மூன்று படிகள் மேலே போய் டெபுடி ஜெனரல் மானேஜர் என்ற நிலைக்குச் சென்று விட்டார்.

தான் உயர்ந்த நிலைக்குச் சென்றபோதும் சுந்தரம் செல்வராஜிடம் எப்போதும் போலவே நட்பு பாராட்டி வந்தார்.

சுந்தரத்துக்கு ஜெனரல் மானேஜராகப் பதவி உயர்வு கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிறுவனத்துக்கான மூலப் பொருட்கள் கொள்முதல் செய்யும் பொறுப்பிலிருந்த அவர்  குறைந்த விலைக்கு கோட் செய்த நிறுவனத்திடம் வாங்காமல், அதிக விலை கோட் செய்த நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அதிக விலைக்குப் பொருட்களை வாங்கி நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டார் என்று தலைமை அலுவலகத்துக்கு ஒரு புகார் சென்றது.

தலைமை அலுவலகம் அந்தப் புகாரை விசாரிக்க முடிவு செய்தது. அதற்குள் ஜெனரல் மானேஜர் பதவி காலியானதால், சுந்தரத்தின் மீது புகார் இருந்த நிலையில், சுந்தரத்தின் ஜூனியர் ஒருவரை ஜெனரல் மானேஜராக நியமித்து விட்டனர்.

விசாரணை முடிய ஆறு மாதங்கள் ஆகி விட்டன. குறைவாக கோட் செய்ததாக அளிக்கப்பட்ட கடிதம் போலி என்றும், அது போன்ற கோட் எதுவும் வரவில்லை என்றும், சுந்தரத்தின் மீது பழி சுமத்தி அவருடைய பதவி உயர்வைத் தடுப்பதற்காக யாரோ வேண்டுமென்றே அவ்வாறு ஒரு போலிக் கடிதத்தைத் தயாரித்திருப்பதாகவும் விசாரணை முடிவில் தெரிந்தது. 

மேலும் விசாரணை செய்ததில் அந்தப் போலிக் கடிதத்தைத் தயாரித்து அனுப்பியது செல்வராஜ்தான் என்று தெரிந்தது. 

இந்த விஷயம் வெளியே தெரிந்ததும் செல்வராஜ் விடுமுறையில் சென்று விட்டார். சுந்தரம் செல்வராஜைச் சந்திக்க முயன்றபோது, அவர் தன் குடும்பத்துடன் வெளியூருக்குச் சென்று விட்டதாகத் தெரிந்தது.

அதற்குப் பிறகு ஓரிரு மாதங்களில் சுந்தரம் ஓய்வு பெற்று விட்டார். உடல்நலக் குறைவைக் காரணம் காட்டித் தன் விடுப்பை நீடித்த செல்வராஜ் விடுப்பிலிருந்தபடியே ஓய்வு பெற்று விட்டதாக சுந்தரம் தெரிந்து கொண்டார்.

செல்வராஜ் போலிக் கடிதத்தைத் தயாரித்துத் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியதை நிரூபிக்க முடியாது என்பதாலும், அவர் ஓய்வு பெறும் நேரம் என்பதாலும், நிறுவனம் செல்வராஜின் மீது நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.

ஆனால் அதைச் செய்தவர் செல்வராஜ்தான் என்பது நிறுவனத்தில் அனைவருக்கும் சந்தேகமின்றித் தெரிந்தது.

ஓய்வுக்குப் பின் சந்தரம் தன் சொந்த ஊரில் குடியேறி விட்டதால் அவரால் அதற்குப் பிறகு செல்வராஜைச் சந்திக்க முடியவில்லை. 

செல்வராஜிடம் பேசி விட்டு சுந்தரம் திரும்பி வந்து தன் மனைவியின் அருகில் அமர்ந்ததும், "கல்யாண விட்டில அவரோட சண்டை போடப் போறீங்களேன்னுதான் முகூர்த்தம் முடிஞ்சப்பறம் வெளியில போய்ப் பேசுங்கன்னு சொன்னேன். நீங்க என்னன்னா அவரோட சிரிச்சுப் பேசிட்டு வரீங்க! ஏன் எனக்கு இப்படி ஒரு கெடுதல் பண்ணினேன்னு அவர்கிட்ட நீங்க கேக்கலியா?" என்றாள் அவர் மனைவி.

"அது எப்பவோ நடந்தது. தனக்குப் பதவி உயர்வி கிடைக்காதப்ப, எனக்கு மட்டும் வேகமா பதவி உயர்வு கிடைக்குதேங்கற ஆதங்கத்தில, ஆத்திரப்பட்டு  ஏதோ செஞ்சுட்டான். அதுக்காக அத்தனை வருஷமா அவன் என் நண்பனா இருந்தது இல்லேன்னு ஆயிடுமா? பழையபடி ஒரு நண்பனாத்தான் அவங்கிட்டபேசிட்டு வந்தேன்!" என்றார் சுந்தரம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு) 

குறள் 807:
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

பொருள்: 
தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர் நண்பர்மீது தாம் கொண்ட அன்பை விட்டு விடமாட்டார்.
குறள் 808 (விரைவில்)
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Thursday, August 11, 2022

806. சேதுவின் முடிவு

"இது ஒரு பெரிய கௌரவம். அரசாங்கத்துக்கு என்னோட மனமார்ந்த நன்றி!" என்றார் சேது.

"உங்களை மாதிரி விஞ்ஞானிகளை கௌரவிக்கிறதில இந்த அரசாங்கம் எப்பவுமே முனைப்போட இருக்கு" என்றார் ஆளும் கட்சிப் பிரமுகர் குபேரன்.

அப்போது நாகராஜன் உள்ளே நுழைந்தார். சேதுவுடன் இன்னொருவர் இருப்பதைப் பார்த்ததும், "சாரி, நான் அப்புறம் வரேன்!" என்று திரும்ப எத்தனித்தார்.

"வா, வா! பரவாயில்ல. சார் ஒரு நல்ல சேதி சொல்லத்தான் வந்திருக்காரு. என்னை ராஜ்ய சபா உறுப்பினரா நியமிக்கப் போறாங்களாம். அதைச் சொல்லத்தான் வந்திருக்காரு. நீ வந்து உக்காரு!" என்றார் சேது.

"கங்கிராசுலேஷன்ஸ்!" என்று தான் நின்ற இடத்திலிருந்தே கையை உயர்த்தி வாழ்த்திய நாகராஜன், "எனக்கு ஒரு ஃபோன் வருது. பேசிட்டு வரேன்" என்று கூறி விட்டு அங்கிருந்து அகன்றார்.

"நாகராஜனை உங்களுக்குத் தெரியுமா?" என்றார் குபேரன் சற்றே அதிர்ச்சியுடன். அவர் முகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்ததை சேது கவனித்தார்.

"அவன் என்னோட நீண்ட நாள் நண்பன். உங்களுக்கு நாகராஜனைத் தெரியுமா?" என்றார் சேது வியப்புடன்.

"அவர் சமூக ஊடகங்கள்ள இந்த அரசாங்கத்துக்கு எதிரா பல கருத்துக்களை சொல்லிக்கிட்டு இருக்காரு. நாங்க அவரைக் கண்காணிச்சுக்கிட்டு இருக்கோம்."

"ஏன், ஜனநாயக நாட்டில கருத்து சுதந்திரம் இருக்கு இல்ல?"

"நாங்க அவரை ஒரு அர்பன் நக்சலைட்னு கிளாசிஃபை பண்ணி இருக்கோம். அவர் எப்ப வேணும்னா பயங்கரவாதத் தடைச் சட்டத்தில கைது செய்யப்படலாம்! நான் வெளிப்படையா சொல்லிடறேன். நாகராஜன் உங்க நண்பர்னு தெரிஞ்சா அரசாங்கத்தில இந்த ராஜ்யசபா சீட்டை உங்களுக்குக் கொடுக்க மாட்டாங்க. அதோட இல்லாம, அவரோட நெருக்கமா இருக்கறதால உங்களுக்கும் சில பிரச்னைகள் வரலாம். நீங்க உடனே அவரோட தொடர்பை முறிச்சுக்கங்க" என்றார் குபேரன்.

"இங்க பாருங்க மிஸ்டர் குபேரன்! நாகராஜனோட கருத்துக்கள்ள எனக்கு உடன்பாடு இல்ல. சொல்லப்போன, நாங்க பல விஷயங்கள்ள எதிர் எதிர் கருத்துக்கள் உள்ளவங்க. ஆனா எங்க கருத்து வேறுபாடுகளை ஒரு எல்லைக்கு வெளியில நிறுத்தி அவை எங்க நட்பை பாதிக்காம நாங்க பாத்துக்கிட்டிருக்கோம். நாகராஜனோட நட்பை முறிச்சுக்கிட்டாத்தான் எனக்கு இந்த ராஜ்யசபா சீட் கிடைக்கும்னா அது எனக்குத் தேவையில்லை! அவனோட நட்பா இருக்கறதால எனக்கு வேற பிரச்னைகள் ஏற்படும்னாலும் அவற்றை நான் சந்திக்கத் தயாரா இருக்கேன். எங்க நட்புதான் எனக்கு முக்கியம்" என்றார் சேது கடுமையான குலில்.

குபேரன் மௌனமாக எழுந்து வெளியேறினார்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு) 

குறள் 806:
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

பொருள்: 
நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் நேரும் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Wednesday, August 3, 2022

805. வேலை வேண்டுமா?

"மிஸ்டர் தினேஷ்! நான் ஹியூமன் காபிடல் டேப்பர்ஸ்லேந்து வர்மா பேசறேன். உங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல ஓபனிங் இருக்கு. ரெப்யூடட் கம்பெனி. சம்பளத்தில உங்களுக்குப் பெரிய ஜம்ப் கிடைக்கும். "

"நான் உங்ககிட ரிஜிஸ்டர் பண்ணிக்கவே இல்லையே! .எப்படி எனக்கு கால் பண்றீங்க?" என்றான் தினேஷ் சற்று எரிச்சலுடன்.

"சாரி சார்! எங்ககிட்ட பதிவு பண்ணிக்காதவங்களை நாங்க கூப்பிட மாட்டோம், உங்க ரெஸ்யூமே எங்க வெப்சைட்ல அப்லோட் ஆகி இருக்கு. அதனாலதான் உங்களைக் கூப்பிட்டேன்."

"சாரி. யாரோ எனக்குத் தெரியாம அப்லோட் பண்ணி இருக்காங்க. அதை நான் எடுத்துடறேன். நீங்க தயவு செஞ்சு அதை எந்த கம்பெனிக்கும் அனுப்பாதீங்க."

"சாரி சார். ஏற்கெனவே சில கம்பெனிகளுக்கு அனுப்பிட்டோம். இனிமே வேணும்னா அனுப்பாம இருக்கோம்" என்று சொல்லி ஃபோனை வைத்தார் வர்மா.

'எனக்குத் தெரியாமல் யார் என் ரெஸ்யூமேயை  அப்லோட் செய்திருப்பார்கள்?' என்று யோசித்தான் தினேஷ்.

அடுத்த இரண்டு நாட்களில் இரண்டு மூன்று நிறுவனங்களிலிருந்து தினேஷுக்குத் தொலேபேசி அழைப்புகள் வந்தன. அவனுக்கு வேலை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் நேரில் அவர்கள் அலுவலகத்துக்கு வந்தால் மற்ற விவரங்களைப் பேசிக் கொள்ளலாம் என்றும் கூறினர்.

தினேஷ் தனக்கு வேலை மாறும் உத்தேசம் இல்லை என்று சொல்லி அவற்றை மறுத்து விட்டான்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு அலுவலக வேலை  தொடர்பாகப் பொது மேலாளரைப் பார்க்கச் சென்றான். பேசி விட்டு அவன் கிளம்ப யத்தனித்தபோது, "என்ன தினேஷ், வேற வேலை தேடறீங்களா?" என்றார் பொது மேலாளர்.

தினேஷ் அதிர்ச்சியுடன், "இல்லை சார்! ஏன் கேக்கறீங்க?" என்றான்.

"உங்க ரெஸ்யூமே  பல நிறுவனங்களுக்குப் போயிருக்கு போல இருக்கே!"

"இல்லை சார்! யாரோ ஒரு ஹெட் ஹன்ஃட்டர்கிட்ட என் ரெஸ்யூமே எப்படியோ போயிருக்கு. அவங்க அதை சில கம்பெனிகளுக்கு அனுப்பி இருக்காங்க. யாருக்கும் அனுப்பாதீங்கன்னு நான் அவங்ககிட்ட சொல்லிட்டேன். ரெண்டு மூணு கம்பெனிகள்ளேந்து எனக்கு கால் வந்தது. அவங்ககிட்டேயும் நான் வேற வேலைக்கு முயற்சி பண்ணலேன்னு சொல்லிட்டேன். நீங்க தப்பா எதுவும் நினைக்காதீங்க சார்!" என்றான் தினேஷ் பதட்டத்துடன்.

"இட் இஸ் ஓகே!" என்றார் பொது மேலாளர்.

"'யாரோ என் ரெஸ்யூமேயை ஒரு ஹெட் ஹன்ட்டரோட சைட்ல அப்லோட் பண்ணிட்டாங்க. அதனால பெரிய பிரச்னை ஆயிடுச்சு!" என்றான் தினேஷ் தன் நண்பன் முரளியிடம்.

"என்ன பிரச்னை?"

"அவங்க என் ரெஸ்யூமேயை சில கம்பெனிகளுக்கு அனுப்பி இருக்காங்க. அங்கேந்தெல்லாம் எனக்கு ஃபோன் வந்தது. என் கம்பெனி ஜெனரல் மானேஜருக்கு வேற இது தெரிஞ்சு போயிடுச்சு. அவரு என்னைக் கேட்டாரு. நான் வேற வேலைக்கு முயற்சி செய்யலேன்னு அவர்கிட்ட அழுத்தமா சொல்லி அவரை கன்வின்ஸ் பண்ணி இருக்கேன்!" என்றான் சதீஷ்.

"ஏன், வேற நல்ல வேலை கிடைச்சா போக வேண்டியதுதானே?"

"என்னடா முட்டாள்தனமா பேசறே? இந்த ஃபீல்டிலேயே நம்பர் ஒன் கம்பெனி எங்களோடதுதான். இதை விட்டு யாராவது போவாங்களா? மத்த கம்பெனிகள்ளேந்து பல பேர் இங்கே ஒரு சின்ன வேலையாவது கிடைக்குமான்னு முயற்சி பண்ணிக்கிட்டிருக்காங்க!"

"பின்னே, வேலை ரொம்ப போர் அடிக்குது, பிரஷர் அதிகமா இருக்கு, வேற வேலை கிடைச்சா போயிடலாம் போல இருக்குன்னு எங்கிட்ட சொன்னியே?"

"எப்ப சொன்னேன்? எப்பவாவது ஒரு அலுப்பில அப்படிச் சொல்லி இருப்பேன். ஆமாம், ஏன் இப்படிக் கேக்கற?" என்றான் தினேஷ் சட்டென்று ஏதோ புரிந்தவனாக.

"சாரி. நான்தான் உன் ரெஸ்யூமேயை அப்லோட் பண்ணினேன். உனக்கு வேற வேலை கிடைச்சா சர்ப்ரைஸா இருக்கும்னு நினைச்சு அப்படிப் பண்ணினேன். நான் அதிகம் படிக்காதவன். உன் வேலையோட முக்கியத்துவம், விவரங்கள் எல்லாம் தெரியாம அப்படி செஞ்சுட்டேன். உனக்கு பிரச்னையாகும்னு தெரியாது. என்னை மன்னிச்சுடு!" என்றான் முரளி.

"ஒரு பிரச்னையும் இல்ல. நீ எனக்கு நல்லது நினைச்சுதானே செஞ்சிருக்க? எதுக்கு மன்னிப்பெல்லாம்? ஆமாம். என் ரெஸ்யூமே உனக்கு எப்படிக் கிடைச்சது?"

"உன் வீட்டுக்கு வரப்ப உன் ரூம்ல மேஜை மேல ரெண்டு காப்பி இருந்தது. சும்மா படிச்சுப் பாக்கலாம்னுதான் ஒரு காப்பியை எடுத்து வச்சுக்கிட்டேன்."

"ஹார்ட் காப்பி இருக்கட்டுமேன்னு பிரின்ட் அவுட் எடுத்து வச்சேன். ரெண்டு எடுத்தேன். அப்புறம் பாத்தா ஒண்ணுதான் இருந்தது. நீதான் அதை எடுத்துக்கிட்டுப் போனியா?" என்றான் தினேஷ் சிரித்துக் கொண்டே.

"என்னடா சிரிக்கறே? என் மேல ரொம்ப கோபப்படுவேன்னு நினைச்சேன்.

"உன் மேல நான் எப்படிடா கோபப்பட முடியும்? ஒரு நண்பனா நீ எங்கிட்ட உரிமை எடுத்துக்க முடியாதா என்ன?" என்றான் தினேஷ் முரளியின் முதுகில் தட்டியபடி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு) 

குறள் 805:
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.

பொருள்: 
வருந்தத்தக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றோ மிகுந்த உரிமை என்றோ உணர வேண்டும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Tuesday, August 2, 2022

804. அழைக்காமல் வந்தவர்?

"இந்த நற்பணி மன்றத்தின் ஆரம்பக் கூட்டத்துக்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். நாம் எல்லோரும் ஓய்வு பெற்றவர்கள். ஓரளவுக்கு வசதியாகவும், நல்ல உடல்நலத்துடனும், மன அமைதியுடனும் இருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் இந்தக் கூட்டத்துக்கு அழைத்திருக்கிறேன்!"

வெங்கடேசன் தன் பேச்சை நிறுத்தி விட்டு இலேசாகச் சிரித்தார். மற்றவர்களும் இலேசாகச் சிரித்தனர்.

"திருஷ்டி பட்டுடப் போகுது!" என்று ஒரு குரல் வந்தது.

வெங்கடேசன் குரல் வந்த திசையைப் பார்த்தார். 

பூங்காவனம்1

 எதிர்மறையாகப் பேசுவது, குற்றம் கண்டுபிடிப்பது, மற்றவர்கள் மனம் புண்படும்படி எகத்தாளமாகப் பேசுவது போன்ற விஷயங்களுக்குப் பெயர் பெற்றவர்!

'இவன் எப்படி இந்தக் கூட்டத்துக்கு வந்தான்? நான் இவனைக் கூப்பிடவே இல்லையே!' என்று நினைத்த வெங்கடேசன் தான் அழைத்தவர்களுள் ஒருவர்தான் அவரை அழைத்திருக்க வேண்டும் என்று நினைத்தார். 

இந்த ஆளை அழைத்து வந்த 'புத்திசாலி' யாராக இருக்கும் என்று யோசித்தார்.

யார் அழைத்திருப்பார்கள் என்று உடனே அவருக்குப் புரிந்து விட்டது.

சிலர் பூங்காவனத்தை அதிருப்தியுடன் பார்த்தனர்.

"ஒண்ணுமில்ல. நாளைக்கு நான் மெடிகல் செக்-அப்புக்குப் போறேன். நீங்க பாட்டுக்கு நாம எல்லாரும் நல்ல உடல்நலத்தோட இருக்கறதா சொல்லிட்டீங்க. திருஷ்டி பட்டு மெடிகல் செக்-அப்ல எனக்கு ஏதாவது உடல்நலக் கோளாறு இருக்கறதா சொல்லிடப் போறாங்களேங்கறதுக்காக அப்படிச் சொன்னேன்!" என்றார் பூங்காவனம், தான் சொன்னதை மற்றவர்கள் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தது போல்.

ஆனால் யாரும் புன்னகை கூடச் சொல்லவில்லை.

"இங்கே நாம மட்டும்தானே இருக்கோம்? திருஷ்டி ஏற்பட வெளி ஆளுங்க யாராவது இருக்காங்களா என்ன?" என்றார் ஒருவர் பூங்காவனத்தைப் பார்த்து.

பிறகு,நற்பணி மன்றம் என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி உடல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் நலிந்த பிரிவினருக்கு என்னென்னஉதவிகள்  செய்யலாம் என்று பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

பூங்காவனம் அவ்வபோது குறுக்கிட்டு கேலியாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கூறியவற்றை யாரும் ரசிக்கவில்லை.

தாம் அழைக்காத ஒரு நபர் இங்கே வந்து அனைவரின் உற்சாகத்தையும் கலைத்துக் கொண்டிருக்கிறாரே என்று வெங்கடேசன் வருத்தமும் குற்ற உணர்ச்சியும் அடைந்தார்.

"பூங்காவனம்! உங்களுக்கு இந்த நற்பணி மன்றத்தில ஆர்வம் இல்லேன்னு தெரியுது. நீங்க போயிடலாமே! ஆர்வம் உள்ளவங்க மட்டும் இதை நடத்திக்கறோம்!" என்றார் ஒருவர் சற்றுக் கடுமையாக.

"போறேன். ஆனா என்னோட கருத்துக்களைச் சொல்ல விரும்பறேன். சொல்லலாமா?" என்றார் பூங்காவனம் வெங்கடேசனைப் பார்த்து.

"அதான் அப்பப்ப சொல்லிக்கிட்டே இருக்கீங்களே!" என்று ஒருவர் முணுமுணுத்தார்.

"சரி, சொல்லுங்க. சுருக்கமா சொல்லுங்க. நெகடிவா எதுவும் சொல்லாம இருக்கப் பாருங்க" என்றார் வெங்கடேசன்.

"நான் வெளிப்படையாப் பேசறவன். அதனால பல பேருக்கு நான் பேசறது பிடிக்காது. இது மாதிரி நற்பணி மன்றம் அமைக்கறது, சமூக சேவை செய்யறேன்னு கிளம்பறது இது எல்லாமே வசதியா இருக்கறவங்க தங்களோட குற்ற உணர்ச்சியைப் போக்கிக்கறதுக்காக செய்யற காரியங்கள்" என்று ஆரம்பித்தார் வெங்கடேசன்.

ஒரு சிலர் கோபத்துடன் எழுந்து இதை ஆட்சேபித்தனர்.

"இதில குற்ற உணர்ச்சி எங்கே வந்தது?" என்றார் வெங்கடேசன்.

"சமூகத்தில மேல இருக்கறவங்க எல்லாருமே பல பேரைக் கீழே தள்ளிட்டுத்தானே மேலே வந்திருக்கோம்! அந்தக் குற்ற உணர்ச்சி இருக்காதா?" என்றார் பூங்காவனம்.

பலர் கோபமாக எழுந்து இதை ஆட்சேபித்தனர்.

அப்போது வெங்கடேசனின் தண்பர் தாமோதரன் எழுந்து பூங்காவனத்தின் அருகில் வந்து அவர் காதில் ஏதோ சொன்னார். 

பூங்காவனம் எதுவும் பேசாமல் எழுந்து வெளியே சென்றார்.

"எப்படி சார் அவரை வெளியில அனுப்பினீங்க? ரொம்ப நன்றி!" என்றார் ஒருவர் தாமோதரனைப் பார்த்து.

தாமோதரன் எதுவும் சொல்லவில்லை. 

அதற்குப் பிறகு ஒரு மணி நேரம் அனைவரும் உற்சாகமாக விவாதித்துச் சில முடிவுகளை எடுத்தனர்.

கூட்டம் முடிந்து ஒவ்வொருவராகக் கிளம்பினர்.

அனைவரும் சென்றதும், தாமோதரன் வெங்கடேசனிடம் வந்து,"சாரிடா! பூங்காவனத்தைப் பத்தி சரியாத் தெரிஞ்சுக்காம அவரைக் கூப்பிட்டுட்டேன், எங்கிட்ட பேசும்போது பெரிய பரோபகாரி மாதிரி பேசுவாரு. அதனால ஏமாந்துட்டேன். கூட்டத்தையே கெடுத்துட்டாரு!" என்றார்.

"அதுதான் நீயே அவர்கிட்ட பேசி அவரை வெளியே அனுப்பிட்டியே. நீ செஞ்சது ரொம்ப நல்ல விஷயம்!" என்றார் வெங்கடேசன்.

"ஆமாம். அவர் அப்பப்ப நெகடிவாப் பேசினப்ப பல பேரு அதை ஆட்சேபிச்சாங்க. நீதான் இந்தக் கூட்டதைக் கூட்டி நடத்தினவன். நீ அவரைப் பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்கலாம், இல்லேன்னா வெளியில அனுப்பி இருக்கலாம். ஆனா கடைசி வரைக்கும் நீ அவரை எதுவுமே சொல்லலியே, ஏன்?"

"உனக்கு அவர்கிட்ட நல்ல பழக்கம் உண்டு. அதனால நீதான் அவரைக் கூப்பிட்டிருப்பேன்னு எனக்குத் தெரியும். நீ என்னோட நண்பன். நீ உரிமையோட ஒத்தரை இந்த மீட்டிங்குக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்க .நீ அவரை அழைச்சதை மதிச்சு நான் அவருக்கு உரிய மதிப்பு கொடுத்து நடத்த வேண்டாமா?" என்றார் வெங்கடேசன் சிரித்தபடி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு) 

குறள் 804:
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.

பொருள்: 
உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச்செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...