திருக்குறள்
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி
761. பட்ஜெட் ஒதுக்கீடு
பிரதமர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், இந்த இரண்டு அமைச்சகங்கள் மற்றும் பிரதமர் அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்."பட்ஜெட்ல பாதுகாப்புத் துறைக்குக் கேட்டிருக்கிற ஒதுக்கீடு ரொம்ப அதிகமா இருக்குன்னு நிதி அமைச்சர் சொல்றாரு. அதைப் பத்திப் பேசி முடிவெடுக்கத்தான் இந்தக் கூட்டம். நிதி அமைச்சர் தன்னோட கருத்துக்களைச் சொல்லலாம்!" என்றார் பிரதமர்.
"சார்! நம் அரசாங்கம் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுது. அவசியமான விஷயங்களுக்கு மட்டுமே செலவு செய்யணுங்கறது பிரதமரோட அறிவுறுத்தல். ஆனா, புதுசா வந்திருக்கிற பாதுகாப்பு அமைச்சர் நிறைய நிதி ஒதுக்கீடு கேட்டிருக்காரு. நாம் அமைதியை விரும்பற நாடு. படைகளுக்காக நாம் அதிகமா செலவழிக்க வேண்டிய தேவை இல்லை" என்றார் நிதி அமைச்சர்.
"சார்! கடந்த காலத்தில நாம பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கல. முந்தைய பட்ஜெட்கள்ள ஏதோ தர்மகாரியங்களுக்கு நிதி ஒதுக்கற மாதிரி, பாதுகாப்புக்கு ஒப்புக்காக நிதி ஒதுக்கி இருக்காங்க. நம் தரைப்படை ஓரளவுக்கு வலுவா இருக்கு. ஆனா, விமானப்படை பெயரளவுக்குத்தான் இருக்கு. அதை நாம வலுப்படுத்தணும்!" என்றார் பாதுகாப்பு அமைச்சர்.
"நமக்கு தரைப்படை வலுவா இருந்தா போதும், விமானப்படை அந்த அளவுக்கு முக்கியமில்லை. இதை முந்தைய பாதுகாப்பு அமைச்சர் கூட ஒத்துக்கிட்டிருக்காரு!" என்றார் நிதி அமைச்சர்.
"மன்னிக்கணும் சார்!" என்று அவரை இடைமறித்த பாதுகாப்புத் துறைச் செயலர், "தரைப்படை மட்டும் வலுவா இருந்தாப் போதாது, விமானப்படையும் வலுவா இருக்கணும்னு நாங்க முந்தைய அமைச்சர்கிட்ட சொல்லி இருக்கோம். அவரும் உங்ககிட்ட சொல்லி இருக்காரு. ஆனா, நீங்க நிதி ஒதுக்காததால, அவர் அதை வற்புறுத்தல!" என்றார்.
"முந்தைய பாதுகாப்பு அமைச்சரோட செயல்பாடு சிறப்பா இல்லைங்கறதாலதான், அவரை மாத்தி இருக்கோம்!" என்றார் பிரதமர், நிதி அமைச்சரைப் பார்த்துச் சிரித்தபடி.
"தரைப்படையோட, விமானப்படையும் வலுவா இருக்கணுங்கற கருத்து சரிதான்னு நினைக்கிறேன்!" என்றார் பிரதமர், தொடர்ந்து.
"சரி சார்! விமானப்படையை வலுப்படுத்தறதுக்கான செலவுகளுக்கு பட்ஜெட்ல நிதி ஒதுக்கிடலாம்" என்ற நிதி அமைச்சர், "ஆனா, பயிற்சிக்குன்னு பெரிய தொகை கேக்கறாங்க. அது அவசியமா?" என்றார், பாதுகாப்பு அமைச்சரைப் பார்த்து.
"படை வீரர்களுக்கு உடற்பயிற்சி, ஆயுதங்களைக் கையாள்கிற பயிற்சி தவிர, இடையூறுகளை எதிர்கொள்வதற்கான உத்திகள், மனப்பயிற்சி மாதிரி பல பயிற்சிகள் தேவை. எப்போதோ வரக் கூடிய போருக்கு, போர் வீரர்கள் எப்பவுமே தயாரா இருக்கணும்னா, தொடர்ந்த பயிற்சி ரொம்ப அவசியம். இப்ப நாம கொடுக்கற பயிற்சி போதாது. அதுக்குத்தான் கூடுதல் நிதி கேட்டிருக்கோம்!" என்றார் பாதுகாப்பு அமைச்சர்.
நிதி அமைச்சர் பிரதமரைப் பார்த்து, "சார்! நம் நாட்டை செல்வம் மிகுந்த நாடாக வளப்படுத்தணுங்கற நோக்கத்தோட பட்ஜெட் போடறோம். இது மாதிரி செலவுகளுக்கு அதிகம் பணம் செலவழிச்சா, வளர்ச்சிக்குச் செலவழிக்கிற தொகை குறைஞ்சுடும்!" என்றார்.
"பாதுகாப்பு ஒரு நாட்டோட அடிப்படையான தேவை. வலுவான படை இருந்தாதான் நம் செல்வங்களை நம்மால பாதுகாக்க முடியும். அதனால, நம் படைபலம் கூட நம்மோட முக்கியமான செல்வம்தான். இதை மனசில வச்சுக்கிட்டு, பாதுகாப்பு அமைச்சரோட பேசி பட்ஜெட் ஒதுக்கீட்டை முடிவு செய்யுங்க!" என்றார் பிரதமர்.
குறள் 761:
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
"மலய நாடும் சமீபத்தில் ஒரு போரில் தோற்றிருக்கிறதே! அவர்களும் வீரர்களையும், ஆயுதங்களையும் பெருமளவில் இழந்திருப்பார்களே! அது நம்மை விடச் சிறிய நாடு. அவர்களைத் தாக்கி வெற்றி கொள்ள இதுதான் சரியான தருணம்" என்றார் அரசர் வீரபாகு.
"அது சிறிய நாடுதான். ஆனாலும், இப்போது நாம் போரில் ஈடுபடுவது நமக்கு மேலும் இழப்புகளை ஏற்படுத்தும்!"
"மலய நாட்டை நாம் போரில் வென்று விட்டால், அதற்குப் பிறகு இழப்புகளை நாம் சமாளித்துக் கொள்ளலாம். மலய நாடு போரில் தோற்றதால், பலவீனமான நிலையில் இருக்கிறது. இது போன்ற ஒரு சந்தர்ப்பம் நமக்கு மீண்டும் கிடைக்காது" என்றார் அரசர், உறுதியாக.
"நீங்கள் சொன்னபடியே நடந்து விட்டது, அமைச்சரே! போரில் மலய நாட்டை நம்மால் வெற்றி கொள்ள முடியவில்லை. இந்தப் போர் நமக்குத்தான் பெரும் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது!" என்றார் அரசர் வீரபாகு, வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும்.
அமைச்சர் மௌனமாக இருந்தார்.
"எனக்கு ஒன்று புரியவில்லை, அமைச்சரே! நம்மைப் போலவே அவர்களும் போரில் தோற்று பலவீனமான நிலையில்தான் இருந்தனர். நம்மை விடச் சிறிய நாடாக இருந்தாலும், எப்படிக் குறுகிய காலத்திலேயே தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு நம்மை வெல்ல அவர்களால் முடிந்தது?" என்றார் அரசர்.
"அரசே! நாம் நம் படைகளை வலுவாக அமைத்தது சமீபத்தில்தான். ஆனால், மலய நாட்டின் போர்ப்படை தொன்மையானது. சோழ நாடு போன்ற பெரிய நாடுகளுடன் கூட அவர்கள் போர் புரிந்திருக்கிறார்கள். நீண்ட காலமாக இருந்து வரும் படை என்பதால், அவர்களுடைய திறமை, அனுபவம், உத்தி ஆகியவை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அதனால், அவர்களால் எந்த ஒரு தோல்வி, அல்லது இடையூறு ஆகியவற்றிலிருந்தும் விரைவாக மீண்டு வர முடிகிறது. அதனால்தான், அவர்களுடன் இப்போது போர் செய்வது உசிதமல்ல என்று நான் கருத்துத் தெரிவித்தேன்!" என்றார் அமைச்சர், சற்றுத் தயக்கத்துடன்.
குறள் 762:
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.
"அரசே! பல ஆண்டுகள் தங்கள் படையில் ஒரு சாதாரணப் படைவீரனாகப் பணியாற்றி வந்த நான், இன்று தங்கள் கருணையால் படைத்தலைவனாக ஆக்கப்பட்டிருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நம் படைவீரர்களுடன் நெருங்கிப் பழகியதில், அவர்களுடைய திறமை, வீரம், போர் செய்யும் ஆற்றல் ஆகியவற்றை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஒரு தளபதி போரில் அவர்களைச் சிறந்த முறையில் வழிநடத்தினால், அவர்களால் பல அற்புதங்களைச் செய்ய முடியும். எனக்கு முன்பிருந்த படைத்தலைவர்களிடம் மேரு நாட்டின் பெரும்படையை வெல்லும் திறமை நம்மிடம் இருக்கிறது என்று நான் கூறி வந்திருக்கிறேன். ஆனால் அவர்கள் என் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு இரண்டு மாதம் அவகாசம் கொடுங்கள். நம் வீரர்களைப் போருக்குத் தயார்ப்படுத்துகிறேன். அதற்குப் பிறகு மேரு நாட்டின் மீது நாம் போர் தொடுத்தால் வெற்றி நிச்சயம்!" என்றார் படைத்தலைவர் வாயுமைந்தன்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, குவளை நாடு மேரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்றது. போர் தொடங்கிய இரண்டே நாட்களில், மேரு நாட்டின் பெரும்படை சிதறி ஓடியது. மீதமிருந்த படைவீரர்கள் சரணடைந்தனர். மேரு நாட்டு மன்னரைச் சிறைபிடித்துத் தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்தார் படைத்தலைவர் வாயுமைந்தன்.
"வாயுமைந்தரே! எப்படி இதைச் சாதித்தீர்கள்? நீங்கள் கூறியதால் நான் போருக்குச் சம்மதித்தேனே தவிர, எனக்கு வெற்றி குறித்து அவ்வளவு நம்பிக்கை இல்லை. உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!" என்றார் அரசர்.
"அரசே! நான் முன்பே கூறியபடி, நம் படைவீரர்கள் வீரமும், தீரமும் நிரம்பப் பெற்றவர்கள். இத்தகைய வீரர்கள் நம்மிடம் இருக்கும்போது நாம் வெற்றி பெற்றதில் வியப்பில்லை!" என்றார் வாயுமைந்தர்.
அவையிலிருந்த அமைச்சர் சிரித்தபடி, "அரசே! படைத்தலைவர் அடக்கம் காரணமாகத் தன்னுடைய பங்கு பற்றிப் பேசாமல் இருக்கிறார். போர்க்களத்தில் நம் படைகளை வாயுமைந்தர் வழிநடத்திய விதம்தான் வெற்றிக்குக் காரணம் என்பதைப் போரில் கலந்து கொண்ட பல வீரர்களுடன் பேசி நான் அறிந்து கொண்டேன். வாயுமைந்தர் வீர முழக்கமிட்டதைக் கேட்டு, பாம்பின் சீறலைக் கண்டு எலிகள் அஞ்சி ஓடுவது போல் மேரு நாட்டின் பெரும்படை சிதறி ஓடிய அதிசயம் பற்றி எல்லா வீரர்களுமே வியந்து பேசுகிறார்கள்!" என்றார், படைத்தலைவரைப் பெருமையுடன் பார்த்தபடி.
"ஒரு திறமையான தளபதியால் ஒரு சிறிய படையையும் ஒரு பெரிய படையை எதிர்த்து வெற்றி கொள்ளச் செய்ய முடியும் என்பதை நிரூபித்து விட்டீர்கள். உங்களுக்கு இந்த நாடு என்றும் கடமைப்பட்டிருக்கும்!" என்ற அரசர், தன் அரியணையிலிருந்து இறங்கி வந்து வாயுமைந்தரைத் தழுவிக் கொண்டார்.
குறள் 763:
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
"மன்னிக்க வேண்டும், அரசே! தங்கள் உத்தரவுப்படி, நம் ஒற்றர்கள் சிலர் காவிரி நாட்டுக்குப் பயணிகள் போல் சென்று, அங்கே சிறிது காலம் தங்கிப் பலரிடமும் பேசித் திரட்டிய விவரங்களைத்தான் தங்களிடம் கூறுகிறேன்!" என்றார் ஒற்றர்படைத் தலைவர்.
"காவிரி நாட்டுப் படை போரில் தோற்றதே இல்லையா என்ன?"
"தோற்றிருக்கிறார்கள், அரசே!"
"பிறகு எப்படி அவர்கள் படைகளும், படைக்கலன்களும் முன்பிருந்த நிலையிலேயே எப்போதும் இருப்பதாகக் கூறுகிறீர்கள்?"
"அரசே! ஒரு போர் முடிந்ததும் அவர்கள் உடனே செய்வது, போரில் அதிகம் காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்து, அவர்களை ஓய்வு பெறச் செய்து விட்டு, புதிய வீரர்கள் மற்றும் புதிதாகத் தயாரிக்கப்படும் படைக்கலன்கள் மூலம் படையின் வலுவை முன்பிருந்த அளவுக்கு உயர்த்துவதுதான்!"
"சரி. அவர்களை எந்தவித வஞ்சனையின் மூலமும் பலவீனப்படுத்த முடியாது என்கிறீர்களே, அது எப்படி?"
"அரசே! என் ஒற்றர்கள் கண்டறிந்தபடி, முந்தைய போர்களில் அவர்களுக்கு எதிராகப் போரிட்டவர்கள் அவர்கள் படைகளை வஞ்சகமாகப் பிரித்தல், அவர்களை வஞ்சகமான முறையில் அபாயமான இடங்களுக்கு இட்டுச் செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுத் தோற்றிருக்கிறார்கள். படைவீரர்கள் எத்தகைய வஞ்சனைகள் மற்றும் சூழ்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும், அவற்றில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி ஆகியவை பற்றிக் காவிரி நாட்டுப் படைகளுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்படுகிறதாம்!"
"அது சரி. அவர்கள் படைகள் தொன்று தொட்டு வரும் வீரத்துடன் விளங்குவதாகச் சொல்கிறீர்களே, அது எப்படி?" என்றார் அரசர்.
"அரசே! தக்கோலத்தில் நடந்த போரில் யானை மீது அமர்ந்து போரிட்டு வீர மரணம் எய்திய ராஜாதித்த சோழரை 'ஆனை மேல் துஞ்சிய தேவர்' என்று சோழர்கள் போற்றி வருவதை நாம் அறிவோம். அது போல், கடந்த காலத்தில் போர்களில் தீரச் செயல்கள் செய்த காவிரி நாட்டு வீரர்களின் வரலாறுகள் அங்கே பரம்பரை பரம்பரையாய் எடுத்துச் செல்லப்பட்டு வீரர்களுக்கு போதிக்கப்படுகின்றன. இந்த வரலாறுகள் வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தையும், சக்தியையும் அளிக்கின்றன."
"என்ன அமைச்சரே! ஒற்றர்படைத் தலைவர் கூறுவதைப் பார்த்தால், நம்மால் எக்காலத்திலும் காவிரி நாட்டைப் போரில் வெல்ல முடியாது போலிருக்கிறதே!" என்றார் அரசர், அமைச்சரைப் பார்த்து.
"அரசே! ஒற்றர்படைத் தலைவர் கண்டறிந்து சொன்ன விவரங்களின் அடிப்படையில், நம் படைகளை வலுப்படுத்தும் முயற்சியில் நாம் ஈடுபடுவோம். அந்த முறையில் சில ஆண்டுகள் கடுமையாக முயன்று நம் படைகளை வலுப்படுத்திய பிறகு, நம் படைகளால் எந்த நாட்டுப் படையையும் போரில் வெல்ல முடியும்!" என்றார் அமைச்சர், காவிரி நாட்டைத் தங்களால் வெல்ல முடியுமா என்ற கேள்விக்கான விடையைத் தவிர்த்து!
குறள் 764:
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
'எந்த தைரியத்தில் என் படையை எதிர்த்து நிற்கிறார்கள்? அதுவும் 'போர்க்களக் கூற்றுவன்' என்ற அச்சுறுத்தும் அடைமொழி கொண்ட என்னை எதிர்த்து!"
ஏனோ, அவருக்கு குருட்சேத்திரப் போர் நினைவுக்கு வந்தது. அந்தப் போரில் கூட கௌரவர் சேனை 11 அட்சௌகிணி என்ற எண்ணிக்கையைக் கொண்டிருந்தது.பாண்டவர் சேனையின் எண்ணிக்கை 7 அட்சௌகிணிதான்
ஆனால், பாண்டவர் சேனைதான் வெற்றி பெற்றது!
'சே! இந்தத் தருணத்தில் இந்த எண்ணம் ஏன் வருகிறது? இந்தச் சிறிய படையால் நம்மை எப்படி வெல்ல முடியும்?'
எதிரே நின்ற வருண நாட்டுப் படையின் தளபதி இந்திரசேனனைப் பார்த்தார் தேவரசன். இந்திரசேனனின் முகத்தில் ஒரு சிரிப்பு! போர் துவங்குவதற்கு முன் யாராவது சிரிப்பார்களா? ஒருவேளை இது என் கற்பனையா?
போர் துவங்கியது.
போர் துவங்கி மூன்று நாட்கள் ஆன நிலையில், இரு தரப்புக்குமே வெற்றி கிட்டவில்லை. ஆனால், வருண நாட்டுப் படையை விட சௌமிய நாட்டுப் படைக்கு இழப்பு அதிகமாக இருந்தது.
மூன்றாம் நாள் இறுதியில், போரை நிறுத்தி விட்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார் சௌமிய நாட்டு தளபதி தேவரசன்.
இரண்டு தரப்பினரும் பேசி ஒரு சமாதான உடன்பாட்டுக்கு வந்த பிறகு, இந்திரசேனனுடன் தனியே உரையாடிக் கொண்டிருந்தபோது, "போர் துவங்குமுன் உங்களைப் பார்த்தேன். உங்கள் முகத்தில் ஒரு சிரிப்பு தெரிந்தது. அது என் கற்பனை இல்லை என்று நினைக்கிறேன். எதனால் அந்தச் சிரிப்பு? என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கவில்லையே!" என்றார் தேவரசன், சிரித்துக் கொண்டே.
"நிச்சயமாக இல்லை. உங்களுக்கு இருந்த பெருமையை மதித்துத்தான் சிரித்தேன்" என்றார் இந்திரசேனன்.
"புரியவில்லையே!"
"உங்களுக்குப் "போர்க்களக் கூற்றுவன்" என்ற பெருமை உண்டல்லவா? எமனையே எதிர்த்துப் போர் செய்யப் போகிறோம் என்ற பெருமித்ததில்தான் சிரித்தேன்!" என்றார் இந்திரசேனன்.
எமனைக் கண்டு அஞ்சும் உலக இயல்புக்கு மாறாக, எமனைக் கண்டு சிரிக்கும் தன்மையுள்ள இந்தப் படையைத் தன்னால் வெல்ல முடியாமல் போனதில் வியப்பில்லை என்று நினைத்துக் கொண்டார் தேவரசன்.
குறள் 765:
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
"அரசே! தங்கள் தந்தையார் ஏற்படுத்திய அமைப்புதான் இது. நம் நாடு சிறியது என்பதைக் கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்ற வகையில்தான் தங்கள் தந்தை படைகளை அமைத்திருந்தார். யானைப்படை, தேர்ப்படை ஆகியவை குறைந்த அளவிலேயே அமைந்தால் போதும் என்பது அவருடைய கருத்து. நாம் செய்யக் கூடிய போர்களுக்கு ஏற்ற வகையில்தான் நம் படையை வடிவமைத்திருந்தார் தங்கள் தந்தை" என்றார் அமைச்சர்.
"நால்வகைப் படைகளும் சமமான அளவில் இருக்க வேண்டாமா?"
"சமமான அளவில் இல்லை அரசே, சரியான அளவில்!"
இதற்கு என்ன பதில் சொல்வதென்று அரசன் யோசித்துக் கொண்டிருந்தபோது, அமைச்சர், "அரசே! படைகளுக்கு நான்கு தன்மைகள் இருக்க வேண்டும் என்பதில் தங்கள் தந்தை உறுதியாக இருந்தார்!" என்றார் அமைச்சர், தொடர்ந்து.
"அவை என்ன?"
"முதலில் வீரம். இது அடிப்படையான விஷயம். இரண்டாவது, மானம். மானம் என்பது தன்மானம் மற்றும் தாய்நாட்டின் மானம் இரண்டையும் காப்பதில் உறுதி. மூன்றாவது, நேர்மையாகவும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ளுதல். நான்காவது, அரசரின் நம்பிக்கையைப் பெற்றிருத்தல்!"
"வியப்பாக இருக்கிறதே! ஒரு படைக்குத் தேவை வீரமும், வலிமையும்தான் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். சரி, இந்தத் தன்மைகளைப் படையிடம் எப்படி உருவாக்குவது?"
"படைவீரர்களைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்தல், பல நிலைகளிலும் உள்ள படைத்தலைவர்கள் தங்கள் நடத்தை மூலம் படைவீரர்களுக்கு வழிகாட்டுதல் வரை பல வழிமுறைகளைப் பின்பற்றித்தான் இவற்றை உருவாக்க முடியும்" என்ற அமைச்சர், சற்றுத் தயங்கி விட்டு, "ஒரு சிறந்த படைத்தலைவரை நியமிப்பதுதான் இந்தத் தன்மைகளை உருவாக்குவதற்கான அடிப்படை விஷயம்!" என்றார்.
"எனக்கு விசுவாசமாக இருக்கும் ஒரு வீரனைப் படைத்தலைவனாக நான் நியமித்ததில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை நான் அறிவேன். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட நான்காவது தன்மையான அரசரின் நம்பிக்கையைப் பெற்றிருத்தல் என்பது முக்கியம் அல்லவா?" என்றான் அரசன், அமைச்சரை மடக்குவது போல்.
"அரசே! அரசரின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவர் படைத்தலைவர் ஆவதை விட, படைத்தலைவராக நியமிக்கப்பட்ட ஒரு நபர் தன் செயல்பாடுகள் மூலம் அரசரின் நம்பிக்கையைப் பெறுவது சிறப்பல்லவா? தங்கள் தந்தை குறிப்பிட்ட நம்பிக்கை என்பது மொத்தப் படைக்குமானது, படைத்தலைவருக்கு மட்டுமானதல்ல. ஒரு சிறந்த படைத்தலைவரால்தான் படைவீரர்களுக்கு முதல் மூன்று தன்மைகளையும் புகட்டி, அந்தப் படையை அரசரின் நம்பிக்கைக்கு உரியதாக ஆக்க முடியும். ஒரு நாட்டைப் பாதுகாப்பது அந்த நாட்டின் படை. ஆனால், அந்தப் படையைப் பாதுகாப்பது இந்த நான்கு தன்மைகள்தான். இவைதான் படைகளைப் பாதுகாக்கும் நான்கு அரண்கள் என்று உங்கள் தந்தை கூறுவார். இதை ஒரு தத்துவம் போல் அவர் விளக்குவதைக் கேட்டு நான் புளகாங்கிதம் அடைந்திருக்கிறேன். அவர் விளக்கியதைப் போல் தெளிவாக விளக்கும் திறன் எனக்கு இல்லை!" என்றார் அமைச்சர்.
அரசன் சற்று யோசித்து விட்டு, "சரி. நம் படைகளுக்கு அரண்கள் அமைக்கும் பணியை உடனே தொடங்குவோம். முதல் பணியாக, ஒரு பொருத்தமான படைத்தலைவரை நியமிப்பது பற்றிக் கலந்தாலோசித்து முடிவு செய்வோம்!" என்றான், புன்னகையுடன்.
குறள் 766:
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
"நீ இந்த விவரங்களைச் சேகரித்து வந்திருப்பது நமக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்!" என்றான் படைத்தளபதி வல்லவராயன்.
"காண்டவ நாட்டுப் படை நம் எல்லையில் போருக்குத் தயாராக நிற்கிறது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலைத் துவக்கலாம்!"
"நம் படைகளும் போருக்குத் தயாராக அணிவகுத்து நிற்கின்றனவே!"
"ஆனால், நம் சிறிய காலாட்படையை வைத்துக் கொண்டு அவர்களுடைய பெரிய காலாட்படையை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?" என்ற மணிமாறன், சற்றுத் தயங்கி விட்டு, "எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது!" என்றான்.
"சொல்!" என்றான் வல்லவராயன்.
"நாம் குதிரைப்படையை முன்னால் நிறுத்தினால் என்ன? அப்படிச் செய்தால் அவர்கள் காலாட்படைக்கு நம்மால் பெரும் சேதத்தை விளைவிக்க முடியுமே!"
"நாம் குதிரைப்படையை முன்னே நிறுத்தினால், அவர்களும் குதிரைப்படையை முன்னே நிறுத்துவார்கள்! அவர்கள் குதிரைப்படையும் நம்முடையதை விடப் பெரியதுதானே! அதனால், நம் குதிரைப்படையை அவர்களால் எளிதாக முறியடிக்க முடியும்!" என்ற வல்லவராயன், "ஆயினும் உன் யோசனை சரியானதுதான்!" என்றான், மணிமாறனை ஊக்குவிப்பது போல்.
"சாதிக்க முடியாததைச் சாதித்து விட்டீர்கள், தளபதி! அணியாக நின்ற நம் காலாட்படை வீரர்கள் விரைவாகப் பக்கவாட்டில் நகரப் பயிற்சி அளித்து, அவர்கள் அவ்வாறு நகர்ந்ததும் ஏற்பட்ட இடைவெளி வழியே நம் குதிரைப்படையை முன்னேறிச் செல்ல வைத்து, காண்டவ நாட்டின் காலாட்படையின் மீது எதிர்பாராத விதத்தில் தாக்குதல் நடத்தி, அவர்களைச் சிதறி ஓட வைத்து விட்டீர்கள்!" என்றான் மணிமாறன், உற்சாகத்துடன்.
"நீ சொன்ன யோசனைதான், மணிமாறா! ஆனால், எதிர்ப் படைகள் எதிர்பாராத விதத்தில் இதை விரைவாக முடிக்க வேண்டும் என்று நினைத்துத் திட்டமிட்டேன். அதற்கான பயிற்சியைக் குறைந்த நேரத்திலேயே நம்மால் அளிக்க முடிந்ததால்தான் நம் படைக்கு வெற்றி கிடைத்தது!" என்றான் வல்லவராயன்.
குறள் 767:
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.
அரசரின் உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சரைச் சந்திக்க வந்தார் படைத்தலைவர்.
"அணிவகுப்பு நடத்த வேண்டும் என்ற அரசரின் உத்தரவு பற்றித் தங்களிடம் பேச வேண்டும்" என்றார் படைத்தலைவர்.
"இதில் பேச என்ன இருக்கிறது? அரசர் உத்தரவிட்டபடி அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்!" என்றார் அமைச்சர்.
"அமைச்சர் பெருமானே! முந்தைய அரசரின் காலத்தில், நம் படை எவ்வளவு வலுவானதாகவும், திறமை வாய்ந்ததாகவும் இருந்தது என்பது தங்களுக்குத் தெரியும். இந்த அரசர் அரியணை ஏறிய பிறகு, படைகளுக்காக வழங்கப்படும் நிதியைப் பெருமளவு குறைத்து விட்டார். வீரர்களுக்கு உரிய அளவில் ஊதியம் கூட வழங்க முடியவில்லை. அதனால், பல நல்ல வீரர்கள் படையிலிருந்து விலகி வேறு வேலைகளுக்குச் சென்று விட்டனர். இப்போது படையில் இருப்பவர்களின் வீரம், வலிமை, திறமை ஆகியவை நாம் பெருமைப்படும்படி இல்லை. அவர்களுக்கு முறையான பயிற்சிகளும், ஆயுதங்களும் வழங்க முடியவில்லை. போர் நடந்தால், எதிரிப் படைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் நம் படைக்கு இல்லை, அதற்கான பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை!"
"படைத்தலைவரே! படைகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று மன்னரிடம் நான் பலமுறை கூறி விட்டேன். என் யோசனையை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை!" என்றார் அமைச்சர்.
"இந்த நிலையில், படைகளின் அணிவகுப்பு நடத்தி என்ன பயன்? அப்படி ஒரு அணிவகுப்பை நடத்துவதில் எனக்கு ஆர்வமே இல்லை. ஆர்வம் இல்லாதபோது, என்னால் அதை எப்படிச் சிறப்பாக நடத்த முடியும்? அணிவகுப்பு சிறப்பாக அமையாவிட்டால், மன்னர் என் மீது கோபம் கொள்வாரோ என்ற அச்சமும் எனக்கு இருக்கிறது!"
"படைத்தலைவரே! படை இன்று இருக்கும் நிலைக்கு நீங்கள் பொறுப்பல்ல. நம் படையின் நிலை எப்படி இருந்தாலும், அது கட்டுப்பாட்டுடன் அணிவகுத்துச் சென்றால், அது எப்படிப்பட்ட கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அரசரை விடுங்கள்! அத்தகைய அணிவகுப்பைப் பார்க்கும் மக்கள் கூட எவ்வளவு பெருமிதம் அடைவார்கள்! ஒருவேளை, அரசர் கூட அந்த அணிவகுப்பைப் பார்த்து மனம் மகிழ்ந்து, படைக்காக அதிக நிதி ஒதுக்கலாம். உங்களால் இயன்ற அளவுக்கு அணிவகுப்பைச் சிறப்பாகச் செய்யுங்கள்!" என்றார் அமைச்சர், படைத்தலைவரின் தோளில் தட்டியபடி.
"நீங்கள் கூறியதைக் கேட்ட பிறகு, அணிவகுப்பை நடத்துவதில் எனக்கும் உற்சாகம் பிறந்திருக்கிறது. நீங்களும், மன்னரும், மற்ற பார்வையாளர்களும் வியக்கும் வகையில் அணிவகுப்பைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறேன்!" என்றார் படைத்தலைவர், உற்சாகத்துடன்.
குறள் 768:
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.
"உண்மைதான், அரசே! ஆனால், நம் படையின் வலிமை பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா? நம் படைகள் எண்ணிக்கையில் குறைந்தவை. இப்படி ஒரு சிறிய படையை வைத்துக் கொண்டு போரில் இறங்குவது நமக்குப் பெரும் இழப்புகளைத்தானே ஏற்படுத்தும்? நம் படைவீரர்கள் பலரை நாம் இழப்பதோடு, போரில் தோல்வியைச் சந்தித்தால், அதன் பிறகு எதிரிகள் கூறுவதற்குக் கட்டுப்பட்டுத்தானே நாம் நடக்க வேண்டி இருக்கும்? அதை விட, ஒரு கௌரவமான சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதுதானே நமக்கு நன்மை பயப்பதாக இருக்கும்?" என்றார் அமைச்சர்.
"என்ன படைத்தலைவரே! அமைச்சர் நம் படை சிறியது என்று கூறுகிறார். நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்றார் அரசர், படைத்தலைவரைப் பார்த்து, கோபம் தணியாமல்.
படைத்தலைவர் பதில் சொல்லத் தயங்குவது போல் மௌனமாக இருந்தார்.
"அரசே! இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. படைத்தலைவர் அதை உங்களிடம் சொல்லத் தயங்குகிறார்!" என்றார் அமைச்சர்.
"அது என்ன பிரச்னை?"
"நம் படைவீரர்களுக்கு நாம் மிகக் குறைந்த ஊதியமே வழங்குவதால் அவர்கள் வறுமை நிலையில் இருக்கிறார்கள். அதனால் ஊட்டமான உணவு உட்கொள்ள முடியாமல், அவர்கள் உடல் வலிமை குறைந்து, அதனாலும் அவர்கள் போர் வலிமை குறைந்திருக்கிறது!" என்றார் அமைச்சர்.
"சரி. உங்கள் யோசனைப்படியே ஒரு சமாதானத் தூதுவரை அனுப்பலாம். சமாதானத் தூதுவரிடம் நாம் என்ன சொல்லி அனுப்ப வேண்டும் என்பதை ஆலோசித்து என்னிடம் கூறுங்கள்!" என்றார் அரசர்.
அரசவையிலிருந்து வெளியே வந்தபோது, "அமைச்சரே! நான் சொல்லத் தயங்கிய உண்மையை நீங்கள் அரசரிடம் சொல்லி விட்டீர்கள். ஆனால், இன்னொரு உண்மையை நீங்கள் அரசரிடம் சொல்ல வில்லையே!" என்றார் படைத்தலைவர்.
"நம் நாட்டு மக்களைப் போலவே, நம் படைவீரர்களும் அரசரின் செயல்பாடுகளால் வெறுப்படைந்திருக்கிறார்கள், அந்த மனநிலையில், அவர்களால் தங்கள் முழு மனத்துடன் போராட முடியாது என்ற உண்மையை அரசரிடம் என்னால் எப்படிச் சொல்ல முடியும்?" என்றார் அமைச்சர், சிரித்தபடி.
குறள் 769:
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
"அரசே! நம் படை சிறியதாக இருக்கலாம். ஆனால், நம் படைத்தலைவர் மிகுந்த திறமையுள்ளவர். அவர் தலைமையில் நம் படைகள் நிச்சயம் வெற்றி பெறும்!" என்றார் அமைச்சர், படைத்தலைவரைப் பார்த்துச் சிரித்தபடி.
படைத்தலைவர் அமைச்சரைப் பார்த்துப் பணிவுடன் தலைவணங்கினார்.
"சரி. யோசித்து முடிவெடுப்போம். படைத்தலைவரே! நீங்கள் எதற்கும் படைகளைத் தயார் நிலையில் வைத்திருங்கள்!" என்றார் அரசர்.
குறிப்பறிந்து, படைத்தலைவர் வெளியேறினார்.
படைத்தலைவர் சென்றதும், "அமைச்சரே! படைத்தலைவர் முன்னிலையிலேயே நீங்கள் அவரைப் புகழ்ந்து பேசியது எனக்குப் பிடிக்கவில்லை. அவருடைய திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், ஒரு பெரிய படையை முறியடிக்கப் படைத்தலைவர் திறமையானவராக இருந்தால் மட்டும் போதுமா?" என்றார் அரசர்.
"அரசே! படைத்தலைவருக்கு ஊக்கமளிக்கத்தான் உங்கள் முன் அவர் திறமையைப் புகழ்ந்தேன். தாங்கள் கூறுவது சரிதான். நம் படைத்தலைவர் திறமையாக இருப்பது மட்டும் நாம் வெற்றி பெறப் போதுமானதல்ல!"
"பின்னே?" என்றார் அரசர், வியப்புடன்.
"நமக்குச் சாதகமாக இன்னொரு காரணமும் இருக்கிறது!" என்று கூறிய அமைச்சர், அந்தக் காரணத்தை அரசரிடம் விளக்கினார்.
"வாழ்த்துக்கள், படைத்தலைவரே! போரில் நம் படைகளுக்கு வெற்றி தேடித் தந்து விட்டீர்கள். உங்கள் திறமையைப் பற்றி நான் அரசரிடம் கூறியதை உண்மை என்று நிரூபித்து விட்டீர்கள்!" என்று படைத்தலைவரைப் பாராட்டினார் அமைச்சர்.
"தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், என் திறமை பற்றி அரசரிடம் எடுத்துக் கூறியதற்கும் நன்றி, அமைச்சரே! என் திறமை பற்றித் தாங்கள் கூறியதை ஏற்று அரசர் போருக்கு ஒப்புக் கொண்டது எனக்கு மலைப்பாக இருக்கிறது!" என்றார் படைத்தலைவர்.
அமைச்சர் எதுவும் சொல்லாமல் சிரித்தார்.
எதிரி நாட்டின் படைக்கு நீண்ட காலமாகவே சரியான தலைவன் இல்லை என்றும், தற்போது தலைவனாக நியமிக்கப்பட்டிருப்பவனுக்குத் திறமையோ, அனுபவமோ இல்லை என்றும் ஒற்றர்கள் மூலம் கிடைத்த செய்தியை அரசரிடம் சொல்லி, நல்ல தலைவன் இல்லாத படை போரில் சிறப்பாகச் செயல்படாது என்பதையும் அரசரிடம் எடுத்துக் கூறியதால்தான் அரசர் போருக்குச் சம்மதித்தார் என்ற தகவலைப் படைத்தலைவரிடம் சொல்லி, அவருடைய வெற்றியின் பெருமையைக் குறைக்க அமைச்சர் விரும்பவில்லை.
குறள் 770:
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
No comments:
Post a Comment