திருக்குறள்
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு
781. அப்பாவுக்குப் பிடிக்கவில்லை!
சிறு வயதிலிருந்தே என் அண்ணனுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. பள்ளி நாட்களிலேயே அவன் நண்பர்கள் சிலர் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். என் அப்பாவுக்கு இது பிடிப்பதில்லை.
அதற்குப் பிறகு, அவன் நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வருவது குறைந்து விட்டது. ஆனால், அவன் தன் நண்பர்கள் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தான்.
அப்போதும் அப்பா அவனைக் கடிந்து கொண்டார்.
"ஏண்டா, படிக்காம, எப்ப பார்த்தாலும் நண்பர்கள் வீட்டில போய் உக்காந்திருக்கியே!" என்பார், சில சமயம்.
"இல்லப்பா. படிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்!" என்பான் அண்ணன்.
பரீட்சைகளில் அவன் நல்ல மார்க் வாங்கி வந்ததால், அப்பா சமாதானமாகி விட்டார்.
ஆனால், பொதுவாக யாரிடமும் அதிகம் நெருங்கிப் பழகாத இயல்பு கொண்ட என் அப்பாவுக்கு, தன் மகன் பலரிடமும் நட்பு வைத்துக் கொண்டிருந்தது பிடிக்கவில்லை. அவரைப் பொருத்தவரை, நண்பர்கள் என்றால் ஊர் சுற்றுவது, நேரத்தை வீண்டிப்பது என்று பொருள்.
அத்துடன், நண்பர்கள் அதிகம் இருந்தால், அவர்களிடமிருந்து தவறான பழக்கம் எதுவும் தன் மகனுக்கு வந்து விடக் கூடும் என்ற கவலையும் அவருக்கு இருந்தது.
"இவன் பல பேரோட பழகிக்கிட்டிருக்கான். அவங்கள்ள சில பேருக்கு பீடி, சிகரெட் மாதிரி கெட்ட பழக்கம் இருக்கும். இவன் அதையெல்லாம் பழகிக்காம இருக்கணுமே!" என்பார், என் அம்மாவிடம்.
"நம்ம பையன் அப்படியெல்லாம் பழகிக்கிறவன் இல்லை!" என்பார் என் அம்மா, தன் பிள்ளையை விட்டுக் கொடுக்காத அம்மாவின் இயல்புடன்.
அப்போது என் அண்ணன் பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள் இரவு, என் அப்பா திடீரென்று மார்பைப் பிடித்துக் கொண்டு, "திடீர்னு மார் வலிக்குதே!" என்று சொல்லிப் படுத்துக் கொண்டார்.
எங்கள் யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் இருந்தது ஒரு கிராமம். எங்கள் ஊரில் மருத்துவ வசதி கிடையாது. இரண்டு மைல் தள்ளி ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தது. அது கூட இரவில் மூடப்பட்டிருக்கும். அதில் வேலை பார்க்கும் ஒரே டாக்டர் அருகிலேயே குவார்ட்டர்ஸில்தான் தங்கி இருப்பார். அவசரம் என்றால் அவரை எழுப்பலாம். ஆனால், அப்பாவை அங்கே எப்படி அழைத்துச் செல்வது? அந்தக் காலகட்டத்தில், கிராமப் பகுதிகளில் ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லை. தொலைபேசி வசதியும் கிடையாது.
"நான் போய் ஏதாவது வண்டி கிடைக்குதான்னு பாத்துட்டு வரேன்" என்று என் அண்ணன் வெளியே ஓடினான்.
அண்ணன் வெளியே சென்று நீண்ட நேரம் ஆகி விட்டது. வண்டி எதுவும் கிடைக்கவில்லை போலிருக்கிறது. அப்பா கட்டிலில் கண்ணை மூடிப் படுத்துக் கொண்டிருந்தார். வலி குறைந்து விட்டதா, அல்லது வலியைப் பொறுத்துக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. நானும் அம்மாவும் செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தோம்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து, என் அண்ணன் வந்தான் அவனுக்குப் பின்னால், தோளில் போட்டுக் கொண்டிருந்த ஸ்டெதாஸ்கோப் மூலம் தன்னை ஒரு டாக்டர் என்று அடையாளம் காட்டிய ஒரு நபர், இன்னொரு மனிதர் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.
"வாங்க டாக்டர்!" என்று டாக்டரை அவசரமாக அப்பாவிடம் அழைத்துச் சென்றான் அண்ணன்.
டாக்டர் அப்பாவைப் பரிசோதித்து விட்டு, தான் எடுத்து வந்த இஞ்ஜெக்ஷனைப் போட்டு விட்டு, சில மாத்திரைகளை அம்மாவிடம் கொடுத்து அவற்றை எப்போது கொடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.
போகும்போது, அம்மாவைப் பார்த்து, "அவருக்கு வந்தது ஹார்ட் அட்டாக்தான். ஆனா கவலைப்படாதீங்க. இப்ப ஆபத்து எதுவும் இல்ல. இஞ்ஜெக்ஷன் போட்டு மாத்திரை கொடுத்திருக்கேன். இப்ப அவர் சரி ஆயிட்டாரு. நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு வாங்க. முழுசா செக் பண்ணிப் பாத்துடலாம்" என்று சொல்லி விட்டுச் சென்றார்.
டாக்டருக்கு நன்றி சொன்ன என் அண்ணன், "நானும் சைக்கிள்ள உங்க கூடவே உங்க வீடு வரையிலும் வரேன் சார்!" என்றான்.
"அதெல்லாம் வேண்டாம்ப்பா! நான் போய்க்கறேன். இது மாதிரி அவசரத்துக்கெல்லாம் ராத்திரியில வந்துட்டுப் போறது எனக்குப் புதுசு இல்ல" என்றார் டாக்டர்.
பிறகு என் அண்ணன் அந்த இன்னொரு மனிதரைப் பார்த்து, "ரொம்ப நன்றி சார். நான் உங்களை சைக்கிள்ள உங்க வீட்டில கொண்டு விட்டுடறேன்" என்றான்.
"வேண்டாம்ப்பா! என் வீடு பக்கத்திலதானே? நான் நடந்தே போய்க்கறேன்" என்றார் அவர்.
அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்றதும், "என்னடா இது! எல்லாமே எனக்கு அதிசயமா இருக்கு! டாக்டரை எப்படிக் கூப்பிட்டுட்டு வந்தே? அவர் கூட வந்தவர் யாரு?" என்றார் என் அம்மா, பிரமிப்புடன்.
"அவர் என் நண்பன் கோபாலோட அப்பா. டாக்டரை அவருக்கு நல்லாத் தெரியும்னு கோபால் ஒரு தடவை எங்கிட்ட சொல்லி இருக்கான். அதனால, கோபால் வீட்டுக்குப் போய் அவன்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். அவன் அவனோட அப்பாகிட்ட சொன்னதும், அவர் உடனே என்னோட கிளம்பிட்டாரு. அவரை சைக்கிள்ள வச்சு அழைச்சுக்கிட்டு டாக்டர் வீட்டுக்குப் போனேன். கோபாலோட அப்பா டாக்டரை எழுப்பி அவர்கிட்ட விஷயத்தைச் சொன்னதும், டாக்டர் தன்னோட சைக்கிளை எடுத்துக்கிட்டு எங்களோடயே கிளம்பி வந்துட்டாரு. நல்ல வேளையா, அப்பாவுக்கு உடனேயே டிரீட்மென்ட் கிடைச்சுது!" என்றான் என் அண்ணன்
"சின்னப் பசங்க சிநேகத்துக்கு இவ்வளவு சக்தி இருக்கா?" என்றார் என் அம்மா, வியப்புடன்.
கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்த அப்பா, ஒரு கணம் கண்ணைத் திறந்து அண்ணனைப் பார்த்து விட்டு, மீண்டும் கண்களை மூடிக் கொண்டார்.
குறள் 781:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
"முதல்ல, இந்த வாங்க போங்க வேண்டாம். நாம ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே வயசுக்காரங்கதான். அதனால, அரவிந்தா, உன் கேள்விக்கு பதில் என்னன்னா, ஐ லைக் கம்பெனி. தனி அறையில இருந்தா, நான் செத்துடுவேன்!" என்றான் கேசவன்.
கேசவன் தன் இயல்புக்கேற்ப பல நண்பர்களை உருவாக்கிக் கொண்டான். அவன் நண்பர்கள் பலர் அவர்கள் அறைக்கு அடிக்கடி வந்தனர். அனைவரையுமே அவன் அரவிந்தனுக்கு அறிமுகம் செய்து வைத்தான். ஆனால், அவர்களுடன் நெருக்கமாவதில் அரவிந்தன் அதிக அர்வம் காட்டவில்லை.
ஒரு மாதம் கழித்து அரவிந்தன் முதல் முறையாக ஒரு நண்பனை அறைக்கு அழைத்து வந்தான். ரவி என்ற அந்த நண்பனைக் கேசவனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
அந்த நண்பன் கிளம்பிச் சென்றதும், "உனக்கு ஒரு நண்பன் கிடைக்க ஒரு மாசம் ஆகி இருக்கு. எனக்கு அதுக்குள்ள பத்து நண்பர்கள் கிடைச்சுட்டாங்க!" என்றான் கேவன்.
"உனக்கு இருக்கிற மாதிரி நண்பர்களை ஈர்க்கிற காந்தத் தன்மை எங்கிட்ட இல்லையோ என்னவோ!" என்றான் அரவிந்தன், விளையாட்டாக.
"என்னடா, அன்னிக்கு ரவின்னு ஒரு நண்பனை அழைச்சுக்கிட்டு வநத. அப்புறம் அவன் வரவே இல்லையே!" என்றான் கேசவன்.
"ஃபோன்ல பேசிப்போம், வெளியில எங்கேயாவது சந்திச்சுப்போம்" என்ற அரவிந்தன் தொடர்ந்து, "உன் நண்பர்கள்ள கூட பல பேர் இப்பல்லாம் வரதில்லையே?" என்றான்.
"தெரியல. சில பேர்தான் வராங்க. சில பேரோட எனக்கு நெருக்கம் குறைஞ்சு போச்சு. அவங்களுக்கு எங்கிட்ட ஆர்வம் குறைஞ்சுடுச்சா, எனக்கு அவர்கள்கிட்ட ஆர்வம் குறைஞ்சுடுச்சான்னு தெரியல!" என்றான் கேசவன், சிரித்துக் கொண்டே.
"நாம இந்த பேயிங் கெஸ்ட் ஹாஸ்டலுக்கு வந்து சரியா ஒரு வருஷம் ஆச்சு!" என்றான் கேசவன்.
"ஆமாம், காலம் ஓடினதே தெரியல! யாருக்கு முதல்ல கல்யாணம் ஆகி, வீடு பாத்துக்கிட்டுப் போகப் போறோமோ, தெரியல!" என்றான் அரவிந்தன்.
"நீ சொல்றதைப் பாத்தா, உனக்கு வீட்டில பெண் பாத்துக்கிட்டிருக்கற மாதிரி தெரியுது!"
"ஆமாம், பாத்துக்கிட்டுத்தான் இருக்காங்க. உன் விஷயம் என்ன?"
"என் வீட்டில அழுத்தம் கொடுக்கறாங்க. ஆனா, நான் தள்ளிப் போட்டுக்கிட்டிருக்கேன்" என்றான் கேசவன்.
"ஏன்?"
"கொஞ்ச நாள் ஜாலியா இருக்கலாம்னு பாத்தேன்."
"ஆரம்பத்தில அப்படித்தான் இருந்த. ஆனா, இப்பல்லாம் அறையை விட்டு அதிகமா வெளியில போறதில்ல. உன் நண்பர்களும் அதிகம் வரதில்ல. என்ன ஆச்சு?" என்றான் அரவிந்தன்.
"முதல்ல எனக்கு நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. ஆனா, அவங்கள்ள பல பேர் நான் நல்லா செலவழிக்கிறவன், என்னோட இருந்தா காசு செலவழிக்காம சினிமா, ஓட்டல்னு அனுபவிக்கலாம்னுதான் எங்கிட்ட நட்பா இருக்காங்கன்னு எனக்கு அப்புறம்தான் புரிய ஆரம்பிச்சுது. அவங்க எண்ணத்தைப் புரிஞ்சுக்கிட்டு, நான் அவங்களோட சினிமா, ஓட்டலுக்கெல்லாம் போறதை நிறுத்தினவுடனே, அவங்க கொஞ்சம் கொஞ்சாமா எங்கிட்டேந்து விலகிட்டாங்க!" என்றான் கேசவன், சற்று வருத்தத்துடன்.
"ஆமாம், நான் கவனிச்சேன்."
"ஆனா, உன் விஷயத்தில தலைகீழா நடந்த மாதிரி இருக்கு. ஆரம்பத்தில உனக்கு நண்பர்களே இல்ல. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நண்பர்கள் கிடைச்சு, இப்ப ஒரு அஞ்சாறு பேரு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். சரியா?"
"சரிதான்" என்றான் அரவிந்தன்.
"அவங்களோட உன் நட்பு நல்ல வலுவா இருக்கிற மாதிரி இருக்கு. இத்தனைக்கும், நீ சினிமா, ஓட்டல்னு அதிகம் போற ஆள் இல்ல. "
"ஆமாம். என்னைப் பொருத்தவரை, நண்பர்கள்னா அவங்களோட நான் இருக்கிற நேரம் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கணும், அவங்க முகத்தைப் பார்த்தாலே மனசில மகிழ்ச்சியும், நம்பிக்கையும் வரணும். அப்படிப்படவங்களோடதான் நான் நட்பு வச்சுப்பேன். அப்படிப்பட்டவங்களோட நட்பு வலுவாகிக்கிட்டே இருக்கும்கறது என்னோட அனுபவம். சில நண்பர்கள் விஷயத்தில எனக்கும் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கு. அந்த நட்பெல்லாம் தானாகவே தேஞ்சு போய், இப்பல்லாம் தற்செயலா சந்திச்சுக்கிட்டா ஹலோன்னு மட்டும் சொல்லிக்கிற அளவுக்குக் குறைஞ்சுடுச்சு" என்றான் அரவிந்தன்.
"அப்படிப் பாத்தா, என்னோட உனக்கு இருக்கற நட்பு ரெண்டாவது வகைதானே? ஏன்னா, என்னோட உனக்குப் பழக்கம் ஏற்பட்டது நாம ஒரே அறையில இருக்கறதாலதானே? நீயா தேடிக்கிட்ட நட்பு இல்லையே!" என்றான் கேசவன்.
"நானா தேடிக்கிறேனா, தானா வந்ததாங்கறது முக்கியம் இல்ல. அந்த நட்பு வளருதா, தேயுதாங்றதுதான் கேள்வி. என்னோட சிறந்த நண்பர்கள்ள ஒத்தனாத்தான் உன்னை நினைக்கிறேன், எப்பவுமே அப்படித்தான் நினைப்பேன்!" என்றான் அரவிந்தன், கேசவனின் கைகளைப் பற்றியபடி.
குறள் 782:
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
தன்னை விட உயர்ந்த பதவியில் இருப்பவர் என்பதால், துவக்கத்தில் வேணுகோபாலிடம் பழகுவதில் தண்டபாணிக்குச் சற்றுத் தயக்கம் இருந்தது. எவ்வளவுதான் வேணுகோபால் இயல்பாகப் பழகினாலும், தண்டபாணியின் தயக்கம் நீங்கவில்லை.
ஒருநாள், எதிர்பாராத விதமாக, தண்டபாணியின் வீட்டுக்கு வந்து விட்டார் வேணுகோபால்.
"உங்களுக்கு எப்படி சார் என் விலாசம் தெரியும்?" என்றார் தண்டபாணி, வியப்புடன்.
"முதலில், என் பேர் சார் இல்லை, வேணுகோபால். என் நண்பர்கள் என்னை வேணுன்னுதானு கூப்பிடுவாங்க. நீங்களும் என்னை அப்படியே கூப்பிடலாம், தண்டபாணி! அதுக்காக உங்க பேரைச் சுருக்கி தண்டம்னு நான் கூப்பிட மாட்டேன்!" என்று வேணுகோபால் கூறியதும், தண்டபாணியும் அவருடன் சேர்ந்து சிரித்துத் தன் இறுக்கத்தைப் போக்கிக் கொண்டார்.
"நம்மோட வேலை செய்யறவங்க விலாசத்தைக் கண்டுபிடிக்கிறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. அது எப்படின்னு கொஞ்ச நாள்ள நீங்களே தெரிஞ்சுப்பீங்க!" என்றார் வேணுகோபால்.
அதற்குப் பிறகு, முப்பது வருடங்களுக்கு மேல் அவர்கள் நட்பு தொடர்ந்தது.
வேணுகோபால் அதிகம் படிக்கும் பழக்கம் உடையவர். அவர் வீட்டில் நிறையப் புத்தகங்கள் இருக்கும்.
தண்டபாணிக்குப் புத்தகங்கள் படிப்பதிலோ, அல்லது கலை, இலக்கியம் போன்றவற்றிலோ ஆர்வம் இல்லை. அலுவலக வேலை முடிந்ததும், வீட்டில் சும்மாதான் உட்கார்ந்திருப்பார். குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவது, வீட்டு வேலைகளைச் செய்வது என்று தன் நேரத்தைச் செலவிடுவார்.
தண்டபாணிக்கு நண்பர்கள் அதிகம் இல்லை. நெருங்கிய நண்பர் என்றால், அது வேணுகோபால் ஒருவர்தான். அதுவும் அவரே இவரிடம் ஏற்படுத்திக் கொண்ட நட்பு!
"உனக்கும் எனக்கும் பொதுவான விஷயம் எதுவும் கிடையாது. எங்கிட்ட என்ன இருக்குன்னு என்னோட இவ்வளவு நட்பா இருக்க நீ?" என்று தண்டபாணி வேணுகோபாலிடம் சிலமுறை கேட்டிருக்கிறார். (நட்பு சற்று வளர்ந்ததும், அவர்கள் தங்களுக்குள் ஒருமையில் பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்!)
"பொதுவான விஷயம் இருக்கணும்னு அவசியம் இல்லையே! உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. உன்னோட பேசிக்கிட்டிருந்தா, எனக்கு சந்தோஷமா இருக்கு. அது போதாதா?" என்பார் வேணுகோபால்.
சிறிது காலத்தில் தன் நட்பு வேணுகோபாலுக்கு அலுத்து விடும், அவர் கொஞ்சம் கொஞ்சாமாகத் தன்னிடமிருந்து விலகிப் போய் விடுவார் என்று ஆரம்பத்தில் தண்டபாணி நினைத்தார்.
ஆனால் தண்டபாணி நினைத்ததற்கு மாறாக, வேணுகோபாலின் நட்பு இன்னும் நெருக்கமாகவும், ஆழமாகவும்தான் ஆகிக் கொண்டிருந்தது.
வாரத்துக்கு இரண்டு மூன்று முறையாவது, இருவரும் அலுவலகத்துக்கு வெளியே - இருவரில் ஒருவர் வீட்டிலோ, அல்லது வேறு இடத்திலோ - சந்தித்துப் பேசுவது என்ற வழக்கம் ஏற்பட்டது.
அலுவலக விஷயங்கள் பற்றிப் பேசுவதில்லை என்று இருவருக்குமிடையே ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருந்தது. எனவே, அதைத் தவிர்த்து, தங்கள் குடும்ப விஷயங்கள், உலக நடப்புக்கள் ஆகியவை பற்றிப் பேசிக் கொள்வார்கள்.
வேணுகோபால் தான் படித்த சுவையான விஷயங்களை தண்டபாணியிடம் பகிர்ந்து கொள்வார். தண்டபாணி அவற்றை கவனமாகக் கேட்டு ரசிப்பார்.
"நீ படிச்ச விஷயங்களை எங்கிட்ட சொல்லும்போது, எனக்குக் கேக்க நல்லாயிருக்கு. ஆனா எனக்கென்னவோ புத்தகங்களைப் படிக்கிறதில ஆர்வம் இல்ல. நீ எப்படித்தான் இவ்வளவு புத்தகங்களைப் படிக்கிறியோ!" என்பார் தண்டபாணி.
தான் படித்தவற்றை வேணுகோபால் தண்டபாணியிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அவற்றைக் கேட்டு விட்டு தண்டபாணி சில சமயம் தன் கருத்துக்களைக் கூறுவார். சில சமயம் தண்டபாணியின் கருத்துக்களைக் கேட்டு வேணுகோபால் அவரை வியந்து பாராட்டுவார்.
"நான் புத்தகங்கள்ளப் படிச்சு விஷயங்களை உங்கிட்ட பகிர்ந்துக்கறேன். ஆனா, அதையெல்லாம் படிக்காமலேயே நீ சொல்ற கருத்துக்கள் ரொம்ப ஆச்சரியமா இருக்கு. உனக்கு மட்டும் படிக்கிற பழக்கம் இருந்திருந்தா, நீ ஒரு பெரிய ஸ்காலர் ஆகி இருப்பே!" என்பார் தண்டபாணி.
"அட நீ வேற! வீட்டைக் கட்டறதுதான் கஷ்டம். கட்டின வீட்டைப் பாத்துட்டு, இது நல்லா இருக்கு, இது நல்லா இல்ல, இது இப்படி இருந்திருக்கலாம்னு சொல்றதுக்குப் பெரிசா அறிவு வேணுமா என்ன?" என்பார் தண்டபாணி.
"அப்பா! வேணு மாமா இறந்துட்டாராம்!" என்றான் தண்டபாணியின் மகன்.
தண்டபாணி சிலை போல் அமர்ந்திருந்தார். அவர் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது.
'கடவுளே! இப்படி ஒரு நண்பனை எனக்கு ஏன் கொடுத்தே? அவன் இல்லாம என் மீதி வாழ்நாளை எப்படிக் கழிக்கப் போறேன்?' என்று மௌனமாகப் புலம்பினார் தண்டபாணி.
குறள் 783:
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
"அவனுக்கு என் மேல கோபம்!" என்றான் கோபால்.
"ஏன்? என்ன ஆச்சு?" என்றாள் கல்பனா, வியப்புடன்.
"அவன் செய்ய நினைக்கிறது எனக்குப் பிடிக்கல. அது தப்புன்னு சொன்னேன். அதனால கொஞ்சம் கோபமா இருக்கான் போலருக்கு. கொஞ்ச நாள்ள சரியாயிடும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்!"
"அவருக்குப் பிடிச்சதை அவர் செஞ்சுட்டுப் போறாரு. அது உங்களுக்கு எதுக்குப் பிடிக்கணும்? நீங்க வாயை மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே?"
"நீயா இருந்தா, வாயை மூடிக்கிட்டு இருந்திருப்பேன்! அப்படித்தானே இருந்துக்கிட்டிருக்கேன்? என் நண்பன் விஷயத்தில அப்படி இருக்க முடியாது. அவன் செய்யறது தப்புன்னு நான் நினைச்சா, அப்படித்தான் சொல்லுவேன். அது மாதிரி, நான் தப்பு செஞ்சாலும், அது தப்புன்னு அவன் அடிச்சு சொல்லலாம், சொல்லணும்!"
"அப்படிச் சொல்ற உரிமை உங்களுக்கு இல்லேன்னு அவர் நினைச்சா, அதை நீங்க ஏத்துக்க வேண்டியதுதானே?"
"அது உரிமை இல்ல, கல்பனா, கடமை! என் கடமையைச் செய்யக் கூடாதுன்னு சொல்ல அவனுக்கு உரிமை இல்லை!"
"நீங்க சொல்றது வேடிக்கையா இருக்கு! மத்தவங்ளைக் குத்தம் சொல்றதுக்கு உங்களுக்கு உரிமையும் இல்ல, அது உங்க கடமையும் இல்ல!" என்றாள் கல்பனா
"குத்தம் சொல்றது இல்ல, கல்பனா. ஒத்தர் தப்பு செய்யறப்ப அது தப்பு, அதை செய்யக் கூடாதுன்னு சொல்றதுக்குப் பேரு குத்தம் சொல்றது இல்ல, அவரைத் தப்பு செய்யாம தடுத்து நிறுத்தறது!" என்றான் கோபால்.
"நீங்க சொல்றது எனக்குப் புரியல. அப்படிச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லைன்னு நான் நினைக்கிறேன். ஆனா, அதை நீங்க கடமைன்னு சொல்றீங்க! அது சரி, அவர் அப்படி என்ன தப்பு செஞ்சாரு?"
"உன் அண்ணன் செஞ்ச தப்பைத்தான்!" என்ற கோபால், கல்பனாவின் முகம் சட்டென்று வாடுவதைப் பார்த்து, "சாரி! உனக்கு வருத்தமா இருக்கும்னு யோசிக்காம சொல்லிட்டேன்" என்றான்.
"பரவாயில்ல. நடந்ததைத்தானே சொன்னீங்க? ஆமாம், எங்க அப்பா அம்மாவை என் அண்ணன் முதியோர் இல்லத்தில சேர்த்தப்ப, அவங்கிட்ட சொல்லித் தடுங்கன்னு நான் உங்ககிட்ட எவ்வளவோ தடவை சொன்னேன். ஆனா, நீங்க ஒரு தடவை சொல்லிட்டு, அப்புறம் அதில தலையிடாம ஒதுங்கி இருந்துட்டீங்க. ஆனா, உங்க நண்பர்கிட்ட சண்டை போட்டுட்டு அவர் உங்ககிட்ட பேசாத அளவுக்கு செஞ்சிருக்கீங்களே!"
"உன் அண்ணன்கிட்ட நான் ஒரு அளவுக்குத்தான் சொல்ல முடியும். அந்த அளவுக்கு சொன்னேன். அவர் என் பேச்சைக் கேக்கல. என் குடும்ப விஷயத்தில தலையிடாதீங்கன்னு சொல்லிட்டாரு. அதுக்கப்பறம், அவர்கிட்ட நான் எப்படிப் பேச முடியும்? ஆனா, இதையே என் நண்பன் சீதாராம் சொன்னப்ப, 'அப்படித்தான் தலையிடுவேன். ஏன்னா, நீ தப்பு செய்யாம தடுக்கிற பொறுப்பு எனக்கு இருக்கு'ன்னு சொன்னேன். அதுக்கப்பறம்தான், அவன் எங்கிட்ட கோவிச்சுக்கிட்டுப் பேசாம இருக்கான்!" என்றான் கோபால், வருத்தத்துடன்.
"கோபம் தணிஞ்சு, மறுபடி அவரு உங்ககிட்ட நெருக்கமா நடந்துப்பாரா?" என்றாள் கல்பனா.
"தெரியல. ஆனா நான் செஞ்சது சரிதான்னு மட்டும் எனக்குத் தெரியும்" என்றான் கோபால், உறுதியாக.
குறள் 784:
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக (மட்டும்) அல்ல; ஒரு நண்பன் வழி தவறிச் செல்லும்போது அவனை இடித்துரைத்துத் திருத்துவதற்கும் ஆகும்.
ஆனால் அதற்கு இத்தனை பதில்கள் வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
அடுத்த இரண்டு வாரங்களில், அவனுடன் பேனா நண்பராக இருக்க விரும்பி நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்தன. கடிதம் எழுதியவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் தனக்கு ஏற்ற நண்பர்களாக இருக்க மாட்டார்கள் என்று கருதி, சுமார் பத்து நபர்களுக்கு மட்டும் ராமு பதிலளித்தான்..
அந்தப் பத்து பேரில், ஏழு பேருடனான கடிதத் தொடர்பு இரண்டு மூன்று மாதங்களுக்குள் நின்று விட்டது. மீதமிருந்த மூவர் - டெல்லியைச் சேர்ந்த வீர் சிங், நாக்பூரைச் சேர்ந்த தாமோதரன், மற்றும் பெங்களூரைச் சேர்ந்த கவிதா.
அவர்களுக்குள், வீர் சிங்குடன் ராமு பல விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டி இருந்தது. தீவிரமான கருத்து வேறுபாடுகளுக்கிடையேயும், இருவரும் நட்புடனேயே விவாதித்து வந்தனர்.
தாமோதரனுடன் பல ஒத்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சி ராமுவுக்கு ஏற்பட்டது.
ஆனால், கவிதா விஷயத்தில், அவன் அனுபவம் வேறு விதமாக இருந்தது.
அவர்கள் இருவரும் பொது விஷயங்கள் பற்றி விவாதிப்பதில்லை. தங்கள் குடும்ப விஷயம் பற்றியும் எழுதுவதில்லை. கவிதாவுக்குத் திருமணம் ஆகவில்லை என்பது மட்டுமே அவனுக்குத் தெரியும்.
முதல் கடிதத்திலேயே, "எனக்குப் பேனா நண்பர்கள் என்று யாரும் கிடையாது. நண்பர்கள் என்றே அதிகம் இல்லை. ஆனால் உங்கள் விவரங்களைப் பார்த்ததும், உங்களுடன் பேனா நட்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. உங்களுடன் பல விஷயங்களைப் பேசும் அளவுக்கு அறிவோ, ஆர்வமோ, படிப்போ எனக்குக் கிடையாது. என்னைச் சுற்றி நடப்பவைகளை கவனிப்பது மட்டுமே என் படிப்பு, பொழுதுபோக்கு எல்லாம். என் 'போரை' சகித்துக் கொள்ள முடியுமானால் பதில் போடுங்கள். எனக்குத் தமிழ் தெரியாது. உங்களுக்குக் கன்னடம் தெரிந்திருக்காது. எனக்கு ஆங்கிலம் சுமாராகத்தான் தெரியும்!" என்று எளிமையான ஆங்கிலத்தில் அவள் எழுதி இருந்தாள்.
கவிதாவின் கடிதத்தில் இருந்த எளிமையும், வெளிப்படைத் தன்மையும் ராமுவுக்கு உடனடியாக ஒரு ஈர்ப்பை ஏற்டுத்தின.
"நீங்கள் 'போர்' அடிப்பவரா என்பது எனக்குத் தெரியாது, ஆனால், என்னைப் போன்ற 'போர்' இந்த உலகத்தில் இருக்க முடியாது என்பது என் நண்பர்களின் ஒருமித்த கருத்து. நாம் இருவரும் சேர்ந்து 'போர்' அடிப்போம். தமிழில் 'போர்' அடிப்பது என்றால் அறுக்கப்பட்ட கதிர்களைக் கம்பால் அடித்து, தானிய மணிகளை உதிரச் செய்வது என்று பொருள். நாம் இருவரும் சேர்ந்து 'போர'டித்தாலும் அதே போன்ற நன்மை ஏதாவது ஏற்படலாம்!" என்று பதில் எழுதினான் ராமு.
அதற்குப் பிறகு ஒரு மாதம் கழித்துத்தான் கவிதாவிடமிருந்து கடிதம் வந்தது. "நான் எப்போதாவதுதான் எழுதுவேன். நான் ஒரு சோம்பேறி. எழுதுவதற்கே எனக்கு சோம்பலாக இருக்கும். நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்தவர்கள் தொலைபேசி வைத்துக் கொள்ளும் காலம் எப்போது வரும் என்று தெரியவில்லை" என்று எழுதி இருந்தாள்.
கவிதாவிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதே ராமுவுக்கு ஒரு மகிழ்ச்சியும், ஏக்கமும் கலந்த அனுபவமாக இருந்தது. அவளிடமிருந்து கடிதம் வந்ததும், அதற்கு உடனே பதில் எழுதி விட்டு, அவள் பதில் வருவதற்காக தினமும் காத்திருப்பான் ராமு.
ராமு ஒருமுறை பெங்களூருக்குச் செல்ல வேண்டி இருந்தது. அப்போது கவிதாவை நேரில் சந்திக்க முடியுமா என்று கேட்டு அவளுக்கு எழுதி இருந்தான். தனக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதால், அவன் அப்போது தன் வீட்டுக்கு வந்து தன்னைச் சந்திப்பது பொருத்தமாக இருக்காது என்று அவள் உடனே பதில் போட்டு விட்டாள்.
அதற்குப் பிறகு பல மாதங்கள் கவிதாவிடமிருந்து கடிதமே வரவில்லை. ராமு எழுதிய இரண்டு மூன்று கடிதங்களுக்கும் பதில் வரவில்லை. அவளுக்குத் திருமணம் நடந்திருக்குமோ, திருமணத்துக்குப் பிறகு, ஒரு ஆணுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொள்வது சரியாக இருக்காது என்பதால்தான் அவள் தனக்குக் கடிதம் எழுதவில்லையோ என்று அவன் குழம்பிக் கொண்டிருந்தான்.
இதற்கிடையில், ராமுவுக்குத் திருமணம் நிச்சயமாகியது. தன் திருமணப் பத்திரிகையைக் கவிதாவுக்கு அனுப்பி, அதனுடன் அனுப்பிய கடிதத்தில், தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணின் பெயரும் கவிதாதான் என்ற ஒற்றுமையைக் குறிப்பிட்டு, அவளைத் தன் திருமணத்துக்கு வரும்படியும் அழைத்திருந்தான் அவன்.
திருமணத்தன்று, கவிதாவிடமிருந்து ஒரு வாழ்த்துத் தந்தி மட்டும் வந்தது.
திருமணமாகிச் சில நாட்களுக்குப் பிறகு, தன் மனைவியிடம் தனக்குக் கவிதா என்ற பேனா நண்பர் இருப்பதைச் சொல்லி, அவளுடைய கடிதங்களைக் காட்டினான் ராமு.
"நீங்க அவங்களுக்கு எழுதின கடிதங்களைப் படிச்சசாத்தானே நீங்க எப்படியெல்லாம் வழிஞ்சிருக்கீங்கன்னு தெரியும்?" என்று அவனைச் சீண்டிய அவன் மனைவி கவிதா, சில கடிதங்களை மட்டும் படித்துப் பார்த்து விட்டு, "அவங்க சொன்ன மாதிரி, நீங்க ரெண்டு பேரும் சரியான 'போர்'தான். சாலையில போற ஆடுமாடையெல்லாம் பத்தி எழுதி இருக்காங்க! இதில கொஞ்சம் கூட ரொமான்ஸுக்கு ஸ்கோப்பே இல்லையே, டார்லிங்!" என்றாள், சிரித்துக் கொண்டே.
தனக்குக் கிடைத்த பண்புள்ள, நல்ல இயல்புள்ள, நட்பான மனைவியைப் போல், கவிதாவுக்கும் ஒரு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று அப்போது நினைத்தான் ராமு.
சில மாதங்களுக்குப் பிறகு, கவிதாவிடமிருந்து ஒரு திருமண அழைப்பு வந்தது. அத்துடன் இணைக்கப்பட்ட துண்டுக் காகிதத்தில், 'அங்கிருந்தே வாழ்த்துங்கள்!' என்ற ஒரு வரி மட்டும் இருந்தது.
கவிதாவின் திருமணத்துக்குத் தான் வருவதை அவள் விரும்பவில்லை என்பது ராமுவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், அவளுடைய குடும்பத்தினர் பழமையான சிந்தனைகளைக் கொண்டவர்களாக இருக்கக் கூடும் என்று நினைத்துச் சமாதானமடைந்தான்.
திருமணத்துக்குப் பிறகு, கவிதாவிடமிருந்து கடிதங்கள் வருவது மிகவும் குறைந்து விட்டது - ஆறேழு மாதங்களுக்கு ஒருமுறை என்று. அவற்றிலும், அவள் கணவன் பற்றியோ, குடும்ப வாழ்க்கை பற்றியோ எதுவும் இல்லை. அவன் மனைவியைப் பற்றிய விசாரிப்புகளும் இல்லை. தான் பார்த்து ரசித்தவை, வியந்தவை, வருந்தியவை, கோபப்பட்டவை என்று தன் எண்ணங்களை மட்டுமே பகிர்ந்து கொண்ட கடிதங்களாகவே அவை இருந்தன. அத்தகைய தன் எண்ணங்களை இந்த உலகத்தில் அவனிடம் மட்டும்தான் தன்னால் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற அவள் உள்ளுணர்வும் அந்தக் கடிதங்களில் ஒளிந்திருந்ததாக அவனுக்குத் தோன்றியது.
"இந்தச் செய்தியைப் பாருங்க!" என்றாள் அவன் மனைவி கவிதா, அவனிடம் பத்திரிகையின் ஒரு பக்கத்தைப் பிரித்துக் காட்டியபடி.
இறப்புச் செய்திகளைத் தாங்கி வந்திருந்த அந்தப் பக்கத்தில், கவிதா விரல் வைத்துக் காட்டிய இடத்தில், கவிதா என்ற நபர் பெங்களூரில் இறந்து விட்டதாகச் செய்தி வெளியாகி இருந்தது. ராமு புகைப்படத்தைப் பார்த்தான். பத்து வருடங்களுக்கு முன் அவர்கள் பேனா நட்பு துவங்கிய சமயத்தில் அவள் அனுப்பியிருந்த புகைப்படம் மனதில் வந்து போனது. பத்தாண்டுகளின் மாற்றங்கள் பத்திரிகையில் வந்த புகைப்படத்தின் முகத்தில் பிரதிபலித்தாலும், அது அவள் - அவனுடைய சிநேகிதி கவிதாவின் முகம்தான் என்பதில் அவனுக்கு ஐயமில்லை.
என்ன ஆயிற்று கவிதாவுக்கு? வயது நாற்பதுக்குள்தானே இருக்கும்? இறப்புக்குக் காரணம் என்ன?
தெரியவில்லை.
அவன் கண்கள் ஓரத்தில் கண்ணீர்த் துளிகள் உற்பத்தியாகத் தொடங்கின. தொண்டையை ஏதோ அடைப்பது போல் இருந்தது.
"இவ்வளவு நல்ல சிநேகிதி கிடைச்சதுக்கு நீங்க ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும்!" என்றாள் அவன் மனைவி கவிதா, அவன் தோளில் கை வைத்து இலேசாக அழுத்தியபடி.
குறள் 785:
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்..
குறள் 786:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
இரவில் தாமதமாக வந்ததால், காலையில் தாமதமாக எழுந்து, உணவு விடுதிக்குப் போய்க் காலை உணவு அருந்தக் கூட நேரமில்லாமல், அவசர அவசரமாக வகுப்புக்குச் சென்றான் பாஸ்கர்.
அவர்கள் கல்லூரியில், வகுப்புக்கு வராததைக் கடும் குற்றமாகக் கருதி தண்டனை அளிப்பதுடன், பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை செய்யும் நடைமுறை உண்டு என்பதால், வகுப்பைத் தவற விட மாணவர்கள் அஞ்சுவார்கள்.
அன்று மாலை வகுப்புகள் முடிந்து விடுதி அறைக்கு வந்ததும், "ரெண்டு நாளா ராத்திரி லேட்டா வந்தியே, என்ன விஷயம்?" என்று பாஸ்கரிடம் கேட்டான் கிரி.
பாஸ்கர் சற்றுத் தயங்கி விட்டு, "ராஜேஷ் ரூமுக்குப் போயிருந்தேன்" என்றான்.
"அவ்வளவு நேரம் அங்கே என்ன செய்யற?"
"அங்கே நாலஞ்சு பேர் வருவாங்க. சும்மா பேசிக்கிட்டிருப்போம். பேசிக்கிட்டே இருந்ததில நேரம் போறதே தெரியல. அதனால லேட் ஆயிடுச்சு!" என்றான் பாஸ்கர்.
பாஸ்கர் எதையோ மறைக்கிறான் என்று கிரிக்குத் தோன்றியது.
"ராத்திரி லேட்டா வரதனால, காலையில லேட்டா எழுந்து, பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடக் கூட நேரமில்லாம போயிடுச்சு பாரு!" என்றான் கிரி.
"இனிமேல் சீக்கிரம் வந்துடறேன்!" என்று பாஸ்கர் கூறியபோது, அவன் ராஜேஷின் அறைக்குத் தொடர்ந்து போகப் போகிறான் என்று கிரிக்குப் புரிந்தது. 'அரட்டை அடிப்பதற்காக அங்கே தினமும் போக வேண்டுமா என்ன?' என்று நினைத்துக் கொண்டான் கிரி.
ஓரிரு நாட்களில், வேறு சில நண்பர்கள் மூலம் கிரிக்கு ஒரு உண்மை தெரிந்தது. ராஜேஷின் அறையில், சில மாணவர்கள் தினமும் பணம் வைத்துச் சீட்டாடுவதாகவும், யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக, அறையை உள்ளே தாளிட்டுக் கொள்வதாகவும் சிலர் பேசிக் கொண்டனர்.
பாஸ்கரிடம் கிரி இதைப் பற்றிக் கேட்டபோது, பாஸ்கர் அதை ஒப்புக் கொண்டான். "யார்கிட்டேயும் சொல்லிடாதே!" என்றான்.
"பாஸ்கர்! இது ஒரு கெட்ட பழக்கம், அதோட, சட்ட விரோதம். வார்டனுக்குத் தெரிஞ்சா ஹாஸ்டலை விட்டு மட்டுமல்ல, காலேஜை விட்டே அனுப்பிடுவாங்க!" என்றான் கிரி.
"அதெல்லாம் நடக்காது. எத்தனையோ ரூம்ல இது மாதிரி நடக்குது. யாராவது கதவைத் தட்டினாலே, சீட்டுகளையெல்லாம் கலைச்சு உள்ள வச்சுட்டுத்தான் கதவைத் திறப்போம். அதோட, காசு வச்சு ஆடினோம்னு நிரூபிக்க முடியாது" என்றான் பாஸ்கர்.
"சரி. இதை எதுக்கு நீ விளையாடணும்?"
"சும்மா ஒரு திரில்லுக்குத்தான்!" என்றான் பாஸ்கர்.
நாளாக ஆக, சீட்டாட்டத்தில் பாஸ்கரின் ஈடுபாடு அதிகமாகிக் கொண்டிருந்தது. இரவு நெடுநேரம் கண்விழித்ததால், மாலை வேளைகளில் தூங்கினான். பாடப் புத்தகங்களைப் படிக்கவே அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை.
அவ்வப்போது வைக்கப்படும் வகுப்புத் தேர்வுகளில், பாஸ்கரின் மதிப்பெண்கள் குறைந்தன.
"எப்பவும் நீ அதிக மார்க் வாங்கறவன், இப்ப ஃபெயில் மார்க் வாங்கிக்கிட்டிருக்கே. இந்த சீட்டாட்டத்தை விட்டுடு. பழையபடி ஒழுங்கா இரு!" என்றான் கிரி.
"இதெல்லாம் கிளாஸ் டெஸ்ட்தானே! ஆனுவல் எக்ஸாமுக்கு நல்லாப் படிச்சு, நல்ல மார்க் வாங்கிடுவேன்!" என்றார் பாஸ்கர்.
ஆனால், ஆண்டுத் தேர்விலும், மூன்று பாடங்களில் ஃபெயில் ஆகி விட்டான் பாஸ்கர்.
தோல்வியுற்ற பாடத் தேர்வுகளை செப்டம்பரில் மீண்டும் எழுதுவதற்காக, இரவில் கண் விழித்துப் படித்துக் கொண்டிருந்தான் பாஸ்கர், கிரி அவனுடன் இருந்து அவனுக்கு உதவிக் கொண்டிருந்தான்.
"நான்தான் சீட்டாட்ட வெறியில புத்தி கெட்டுப் போய், சரியாப் படிக்காம ஃபெயில் ஆயிட்டு, செப்டம்பர் பரீட்சைக்குத் தயார் பண்ணிக்கிட்டிருக்கேன். நீ எதுக்குக் கண் முழிச்சுக்கிட்டு என்னோட உக்காந்திருக்க? உனக்கென்ன தலையெழுத்தா?" என்றான் பாஸ்கர், கிரியிடம்.
"என்னால முடிஞ்ச அளவுக்கு உனக்கு உதவி செய்யத்தான்!" என்றான் கிரி.
குறள் 787:
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
குறள் 788:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
"தெரியும். ஆனா, அதுக்கு அஞ்சு லட்சம் ரூபாய் செக்யூரிடி டெபாசிட் கட்டணும். நம்மகிட்ட பணம் இல்ல. பாங்க் ஓவர்டிராஃப்ட் லிமிட்டை ஏற்கெனவே தாண்டிட்டோம். அதனால, பாங்க்லயும் பணம் கிடைக்காது. பணத்துக்கு எங்கே போறது?" என்றான் ராஜவேல், பெருமூச்சுடன்.
"நாம அப்ளை பண்ணினா, கண்டிப்பா நமக்குத்தான் சார் கிடைக்கும். நம்மை விடக் குறைச்சலா யாராலயும் கோட் பண்ண முடியாது."
"அது எனக்குத் தெரியாதா? அதான் பணம் இல்லேன்னு சொல்றேனே? உங்களால ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா?" என்றான் ராஜவேல், எரிச்சலுடன்.
"சார்! நான் மாசச் சம்பளம் வாங்கறவன். என்னால அஞ்சாயிரம் ரூபா கூடப் புரட்ட முடியாது!"
"அப்ப, வாயை மூடிக்கிட்டுப் பேசாம இருங்க!"
மாலை ஐந்து மணிக்கு அலுவலகத்துக்கு வந்த ராஜவேலிடம், "சார்! உங்களுக்கு நிறைய தடவை ஃபோன் பண்ணினேன். ஆனா, நீங்க எடுக்கல!" என்றார் சுப்பையா.
"நீங்க டெண்டர் விஷயமாத்தான் ஃபோன் பண்றீங்கன்னு தெரியும். பணம் புரட்ட முடியாதுன்னு காலையிலேயே சொல்லிட்டேனே? அதனாலதான், ஃபோனை எடுக்கல."
"இல்லை, சார். பணம் கிடைச்சுடுச்சு. அதைச் சொல்லத்தான் உங்களுக்கு ஃபோன் பண்ணினேன். ஆனா, நீங்க எடுக்கல. டெண்டர் அப்ளிகேஷனை நேரிலேயே கொண்டு போய்க் கொடுத்துட்டேன்."
"ஓ! பணம் எப்படிக் கிடைச்சுது? நம்ம மேல இரக்கப்பட்டு பாங்க்ல கொடுத்தாங்களா?"
"பாங்க்ல கொடுக்கல சார்! உங்க நண்பர் பாலுதான் கொடுத்தார்."
"பாலுவா? அவனுக்கு எப்படித் தெரியும்?"
"மன்னிச்சுக்கங்க, சார்! என்னால ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு நீங்க கேட்டது எனக்கு உறுத்திக்கிட்டே இருந்தது. உங்க நண்பர் பாலு இதுக்கு முன்னால சில தடவை உதவினது எனக்கு நினைவு வந்தது. அதனால, அவர்கிட்ட ஃபோன் பண்ணிக் கேட்டேன். அவர் கொஞ்சம் கூட யோசிக்கல. எந்த பேர்ல டிடி எடுக்கணும்னு கேட்டு, அஞ்சு லட்சம் ரூபாய்க்கு டிடி எடுத்து, அதை அவர் ஆஃபீஸ் பியூன் மூலமா கொடுத்தனுப்பிட்டாரு. டெண்டர் அப்ளிகேஷன் ரெடியா இருந்ததால, அதில டிடி விவரங்களை எழுதி இணைச்சு, டெண்டரை நானே நேரில போய்க் கொடுத்துட்டேன். நான் செஞ்சது தப்பா இருந்தா, மன்னிச்சுக்கங்க" என்றார் சுப்பையா.
"தப்புதான். நான் பாலுவோட பேசியே ரெண்டு மூணு மாசம் ஆச்சு. ஆனா, நீங்க செஞ்சது பெரிய நன்மையாச்சே! உங்களை எப்படி நான் குத்தம் சொல்ல முடியும்? சரி, நான் வரேன்" என்றபடியே கிளம்பினான் ராஜவேல்.
"சார்! சில லெட்டர்கள்ள கையெழுத்துப் போட வேண்டி இருக்கு."
"அதையெல்லாம் நாளைக்குப் பாத்துக்கலாம். முதல்ல, நான் பாலுவைப் போய்ப் பார்க்கணும்!" என்று எழுந்தான் ராஜவேல்.
"சாரிடா, பாலு! உங்கிட்ட கோவிச்சுக்கிட்டு, நான் ரெண்டு மூணு மாசமா உங்கிட்ட பேசவே இல்லை. ஆனா, நீ எனக்கு இவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்க!" என்றான் ராஜவேல்.
"முட்டாள்தனமாப் பேசாதேடா! ஒரு நண்பனுக்கு உதவி செய்யறது எப்பவுமே செய்ய வேண்டிய விஷயம். நண்பர்களுக்குள்ள சண்டை போட்டுக்கறது, பேசாம இருக்கறது எல்லாம் தற்காலிகமான விஷயங்கள்தானே!" என்றான் பாலு.
"இனிமே நமக்குள்ள அதெல்லாம் தற்காலிகமாக் கூட நடக்காது. என்னை விட, என் மானேஜர் உன்னை நல்லா புரிஞ்சு வச்சுக்கிட்டிருக்காரு போல இருக்கு. அது சரி. உன் பிசினஸ்ல கூட நிறைய பிரச்னை இருக்குன்னு கேள்விப்பட்டேனே! எப்படி உடனே அஞ்ச லட்சம் ரூபா ரெடி பண்ணினே? உன் நிலைமை இப்ப சரியாயிடுச்சா?
"என் நிலைமை இன்னும் சரியாகல. இன்னும் மோசமாத்தான் போய்க்கிட்டிருக்கு. உன் மானேஜர் ஃபோன் பண்ணினதும், எப்படியாவது உனக்கு உதவி செய்யணும்னு தோணிச்சு. என் மனைவி அக்கவுன்ட்ல கொஞ்சம் பணம் இருந்தது. அதுவும் ஃபிக்ஸட் டெபாசிட்லதான் இருந்தது. அதை கான்சல் பண்ணித்தான் டிடி எடுத்துக் கொடுத்தேன். அது வேற பாங்க். அது என்னோட பாங்க்கா இருந்தா, நான் கொடுக்க வேண்டிய பணத்துக்காக அதை எடுத்துக்கிட்டிருப்பாங்க!" என்றான் பாலு, சிரித்தபடி.
நண்பனுக்கு நன்றி சொன்னால் ,அது வெறும் சம்பிரதாயமாக ஆகி விடுமே என்று நினைத்தபடி, நண்பனை பிரமிப்புடன் பார்த்தான் ராஜவேல்.
குறள் 789:
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
தலைவர் பேசியதும், கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்துக் குதூகலித்தது.
தொலைக்காட்சியில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கர், "என்ன இது? நட்புங்கறது ரொம்ப பர்சனாலான விஷயம். அதை இப்படியா கொச்சைப்படுத்தறது?" என்றான், தன் மனைவி வசந்தியிடம்.
"அவர் உங்களுக்குப் பிடிச்ச தலைவராச்சே! அவர் பேச்சையே தப்புன்னு சொல்றீங்க!" என்றாள் வசந்தி.
"அதுக்காக, அவர் சொல்ற எல்லாத்தையும் நான் சரின்னு ஒத்துக்க முடியாது."
"ஏன், ஒத்தர் தன் நண்பர்கிட்ட தனக்கு எவ்வளவு அன்பு இருக்கு, தன்கிட்ட தன் நண்பருக்கு எவ்வளவு அன்பு இருக்குன்னு சொல்லக் கூடாதா?"
"ஒத்தரை தன் நெருங்கிய நண்பர்னு சொன்னா போதாதா? எவ்வளவு நெருக்கம்கறதை விவரமா சொன்னா, அது அந்த நட்போட சிறப்பையே குறைக்கிற மாதிரி எனக்குப் படுது!"
"இருக்கறதைச் சொன்னா, அது எப்படித் தப்பாகும்?" என்றாள் வசந்தி.
"எங்கிட்ட ஏதாவது நல்ல விஷயம் இருந்தா, அதை இன்னொருத்தர் சொன்னா, அது நல்லா இருக்கும். என்னோட சிறப்பைப் பத்தி நானே சொன்னா, கேக்கறவங்களுக்கு அது அருவருப்பாத்தானே இருக்கும்? அது மாதிரிதான் இதுன்னு நினைக்கிறேன்" என்ற சங்கர், சற்றுத் தயங்கி விட்டு, "கணவன் மனைவி உறவுக்கும் இது பொருந்தும்னு நினைக்கிறேன். தன் கணவன் தனக்காக என்னவெல்லாம் செய்வான்னு ஒரு மனைவியோ, தன் மனைவி தனக்கு என்னவெல்லாம் செய்வான்னு ஒரு கணவனோ சொல்றதைக் கேக்கறப்ப, இவங்களுக்குள்ள உண்மையான அன்பு இல்லையோ, அப்படி இருக்கிற மாதிரி காட்டிக்கத்தான் இப்படியெல்லாம் பேசறாங்களோன்னு எனக்குத் தோணும்!" என்றான்.
"நீங்க சொல்றது சரிதாங்க. எனக்குக் கூட அப்படித் தோணி இருக்கு!" என்றாள் வசந்தி.
அந்தத் திருமண நிகழ்ச்சியில், பலர் ஒன்று கூடி இருந்தனர். சங்கர் தன் நண்பர்கள் சிலருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். வசந்தி சற்றுத் தள்ளி அமர்ந்து, வேறு சிலருடன் பேசிக் கொண்டிருந்தாள்.
சங்கரின் நண்பன் மணி, தங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
"சங்கரும் நானும் சின்ன வயசிலேந்தே ரொம்ப நெருக்கம். எனக்கு பம்பாயில வேலை கிடைச்சப்ப, சங்கரை விட்டுப் பிரியணுமேங்கறதுக்காக அந்த வேலைக்குப் போக வேண்டாம்னே முதல்ல முடிவு செஞ்சுட்டேன். அப்புறம், என் அப்பா வற்புறுத்திச் சொன்னதாலதான் போனேன். இப்பவும், அவனை அடிக்கடி பாக்க முடியலியேன்னு எனக்கு வருத்தம் உண்டு. வீட்டில அடிக்கடி அவனைப் பத்திப் பேசுவேன். என் மனைவி கூட அலுத்துப்பா. சங்கரும் என்னை மிஸ் பண்ணி இருப்பான்னு நினைக்கிறேன். இல்லையாடா, சங்கர்?" என்றபடியே சங்கரைப் பார்த்தான் மணி.
சங்கர் சிரிக்காமல் இலேசாகத் தலையாட்டினான்.
இந்தப் பேச்சு காதில் விழுந்ததும், வசந்தி புன்னகையுடன் சங்கரைத் திரும்பிப் பார்த்தாள். சங்கரும் அவளைத் திரும்பிப் பார்த்து, இலேசாகப் புன்னகை செய்தான்.
குறள் 790:
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
No comments:
Post a Comment