அதிகாரம் 54 - பொச்சாவாமை (அலட்சியத்தால் ஏற்படும் மறதி)

திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 54
பொச்சாவாமை

531. அம்மாவின் கடிதம்!

முரளி படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த ஒரு வாரத்தில், அவன் தந்தை இறந்து விட்டார்.

முரளிக்கும், அவன் தாய் சகுந்தலாவுக்கும், அது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

"உன்னை நல்லா படிக்க வச்சுப் பெரிய ஆளாக்கணுங்கறதுக்காக, உன் அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டாரு! இப்ப நீ முதல் மாசச் சம்பளம் வாங்கறதைக் கூடப் பாக்காம, போய்ச் சேர்ந்துட்டாரே!" என்று புலம்பினாள் சகுந்தலை.

ஒரு மாதப் பயிற்சிக்குப் பிறகு, முரளிக்கு நாக்பூரில் வேலை வழங்கப்பட்டது.

சகுந்தலா கிராமத்தை விட்டு வர விரும்பாததால், முரளி மட்டும் நாக்பூருக்குச் சென்றான். 

முரளி நாக்பூருக்குக் கிளம்புவதற்கு முன், "முரளி! உன் படிப்புக்காக, உன் அப்பா அவரோட நண்பர் காசிகிட்ட பத்தாயிரம் ரூபா கடன் வாங்கி இருக்காரு. வட்டி கிடையாது. நீ வேலைக்குப் போனதும், உன் சம்பளத்திலேந்து கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைக்கறதா பேச்சு. இது மாதிரி எல்லாம் யாரும் கடன் கொடுக்க மாட்டாங்க. காசி ரொம்ப நல்லவர். உன் அப்பா மேல அவருக்கு ரொம்ப மதிப்பு உண்டு. அதனாலதான், கடன் கொடுத்தாரு. அப்பாவும் யார்கிட்டேயும் போய்க் கடன் கேக்கறவர் இல்ல. காசிகிட்ட கூட வட்டிக்குத்தான் கடன் கேட்டாரு. அவருதான் வட்டி வேண்டாம்னுட்டாரு. காசி நல்லவர்னாலும், கோபக்காரர். அதனால, நீ மாசம் ஆயிரம் ரூபாய் அவருக்கு பாங்க்ல டி.டி எடுத்து அனுப்பிடு" என்றாள் சகுந்தலா.

"நிச்சயமா!" என்றான் முரளி.

முதல் மாதச் சம்பளம் வாங்கியதும், முரளி சகுந்தலாவுக்கு இருநூறு ரூபாய் மணி ஆர்டர் அனுப்பினான்.

"உன் முதல் மாதச் சம்பளத்தில், எனக்கு இருநூறு ரூபாய் அனுப்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது. காசிக்குப் பணம் அனுப்பி இருப்பாய் என்று நினைக்கிறேன்" என்று பதில் எழுதி இருந்தாள் சகுந்தலா.

கடிதத்தைப் படித்ததும், முரளிக்குக் கோபம் வந்தது.

'இப்பதான் சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கேன். மகன் கொஞ்ச நாளைக்கு இஷ்டப்படி செலவழிச்சு சந்தோஷமா இருக்கட்டுமே என்கிற எண்ணம் இல்லாம, இப்படி தொந்தரவு பண்றாங்களே! வட்டி இல்லாக் கடன்தானே! கொஞ்சம் முன்னே பின்னே கொடுத்தால் என்ன?' என்று நினைத்துக் கொண்ட முரளி, 'காசிக்கு அடுத்த மாதத்திலிருந்து பணம் அனுப்பி விடுகிறேன். நீ மறுபடி இது பற்றி எழுத வேண்டாம்!" என்று சற்றுக் கோபமாகவே பதில் எழுதினான்.

அடுத்த மாதமும், முரளி காசிக்குப் பணம் அனுப்பவில்லை. நண்பர்களுடன் உல்லாசமாகச் சுற்றியது, விலை உயர்ந்த உடைகள் வாங்கியது போன்ற செலவுகளால் சம்பளப் பணம் காலியாகி விட்டது. அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான்.

உல்லாச வாழ்க்கையும், அதிகச் செலவுகளும் தொடர்ந்ததால், அதற்கு அடுத்த மாதத்தில், காசிக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்ற சிந்தனையே அவனுக்கு எழவில்லை. அடுத்து வந்த சில மாதங்களில், அவன் அது பற்றி மறந்தே போனான். அவனுடைய சற்றே கடுமையான கடிதத்துக்குப் பிறகு, சகுந்தலாவும் அனுக்கு எழுதிய கடிதங்களில், இது பற்றி எழுதவில்லை.

ழெட்டு மாதங்களுக்குப் பிறகு, முரளிக்கு அவன் தாயிடமிருந்து வந்த கடிதத்தில் இவ்வாறு இருந்தது.

"...காசிக்குப் பணம் அனுப்புவது பற்றி நான் உனக்கு எழுத வேண்டாம் என்று நீ எழுதியதால், அப்புறம் உனக்கு நான் இது பற்றி எழுதவில்லை. நீ அவருக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருப்பாய் என்று நினைத்தேன். ஆனால், நேற்று காசி நம் வீட்டுக்கு வந்து கோபமாகப் பேசிய பிறகுதான், நீ அவருக்குப் பணம் அனுப்பவில்லை என்று தெரிந்தது. நீ எனக்கு அனுப்பியிருந்த பணத்தில் நான் சேர்த்து வைத்திருந்த ஐநூறு ரூபாயை அவரிடம் கொடுத்து, மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

"அவர் நம் வீட்டுக்கு வந்து கோபமாகப் பேசியது எனக்கு அவமானமாகத்தான் இருந்தது. அவர் இரைந்து பேசியது அக்கம்பக்கத்தாருக்குக் கூடக் கேட்டிருக்கும். ஆனால், நீ அவர் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமையையே மறந்து அலட்சியமாக இருந்தது எனக்கு அவமானமாக இருக்கும் அளவுக்கு, அவர் கோபத்தில் பேசிய வார்த்தைகள் அவமானமாக இல்லை."

குறள் 531:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

பொருள்:
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது, மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.

532. யார் அவர்?

பரத் பொறியியல் படிப்பு முடித்துப் பல மாதங்கள் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை.

ஒருநாள், அவன் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பத்மநாபன், அவனைப் பார்க்க வந்தான்.

பத்மநாபன் ஒரு தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்கிறான் என்பது மட்டும்தான் பரத்துக்குத் தெரியும். அவன் பரத்தை விட ஐந்தாறு வருடங்கள் பெரியவனாக இருப்பான்.

"என்ன பரத் உனக்கு ஏதாவது வேலை கிடைச்சிருக்கா?" என்றான் பத்மநாபன்.

"இல்லை" என்றான் பரத் எரிச்சலுடன், இவன் எதற்கு தன்னிடம் இதைப் பற்றிப் பேசுகிறான் என்று நினைத்தபடியே.

"நான் வேலை செய்யறது ஒரு சின்ன கம்பெனிதான். ஆனா, எங்க முதலாளி புதுசா ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கப் போறாரு. அதுக்கு எஞ்ஜினியர் எல்லாம் எடுக்கப் போறதாச் சொன்னாரு. அவர்கிட்ட உன்னைப் பத்தி சொன்னேன். வரச் சொல்லு பாக்கலாம்னாரு. நாளைக்கு நான் வேலைக்குப் போகறப்ப என்னோட வந்தேன்னா, உன்னை அவர்கிட்ட அறிமுகப்படுத்தி வைக்கறேன்" என்றான்.

பரத் ஒரு நிமிடம் பேச்சு வராதவனாக, பத்மநாபனைப் பார்த்தான். பிறகு, "ஓ, ரொம்ப நன்றி அண்ணே!" என்றான்.

அடுத்த நாள், பத்மநாபன் தன் முதலாளிக்கு பரத்தை அறிமுகப்படுத்திய சில நிமிடங்களிலேயே, பரத்துக்கு வேலை கிடைத்து விட்டது.

"மிஸ்டர் பரத்! இன்னிக்கு நீங்க ஒரு சிறந்த தொழிலதிபரா இருக்கீங்க. நிறைய அவார்ட் எல்லாம் வாங்கி இருக்கீங்க. உங்களைப் பத்தி ஊடகங்கள்ள நிறைய செய்தி வருது. அடுத்தாப்பல நீங்க என்ன செய்யப் போறீங்கன்னு தொழில் உலகமே உங்களைப் பாத்துக்கிட்டிருக்கு. நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க?" என்றார் தொலைக்காட்சியில் அவருடன் உரையாடிய நெறியாளர்.

"ரொம்ப சந்தோஷமா இருக்கு!" என்ற பரத், இது போதுமான பதிலாக இருக்காதோ என்று நினைத்து, "நான் போக வேண்டிய பாதை இன்னும் ரொம்ப தூரம் இருக்கு!" என்றான், இது கொஞ்சம் அடக்கமான பதிலாக இருக்கும் என்று நினைத்து!

"மிஸ்டர் ராமநாதனை உங்களுக்கு நினைவு இருக்கா?" என்றார் நெறியாளர்.

"அவரை எப்படி மறக்க முடியும்? அவர்தான் எனக்கு முதல்ல வேலை கொடுத்தவர். அவர் போட்ட விதைதான் இன்னிக்கு இவ்வளவு பெரிய மரமா வளர்ந்திருக்கு." 

"பத்மநாபனை நீங்க அடிக்கடி சந்திக்கறதுண்டா?"

"யார் பத்மநாபன்?"

"அதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னால, ஒரு விஷயம் சொல்றேன். உங்களை பேட்டி காண்றதுக்கு முன்னால, உங்களுக்கு முதல்ல வேலை கொடுத்த ராமநாதன் சார்கிட்ட உங்களைப் பத்திக் கேட்டோம். அவர் பேட்டியில ஒரு பகுதியை, இப்ப நாங்க போட்டு காட்டப் போறோம்" என்றார் நெறியாளர்.

அங்கிருந்த திரையில் ஒரு காணொளி காட்டப்பட்டது. அதில் தோன்றிய ஒரு முதியவர், "பரத்தோட வளர்ச்சியைப் பார்க்க எனக்குப் பெருமையா இருக்கு. முப்பது வருஷம் முன்னால, என் தொழிற்சாலையில வேலை பார்த்த பத்மநாபன்கற தொழிலாளி எங்கிட்ட வந்து, 'சார்! என் பக்கத்து வீட்டில ஒரு பையன் எஞ்ஜினியரிங் படிச்சுட்டு வேலை தேடிக்கிட்டிருக்கான். நீங்க புதுசா ஆரம்பிக்கப் போற தொழிற்சாலையில அவனுக்கு வேலை கொடுக்க முடியமா?'ன்னு கேட்டப்ப, வரச் சொல்லுன்னு சொன்னேன். ஒரு சிறந்த வருங்காலத் தொழிலதிபருக்கு முதல் வேலை கொடுக்கப் போறேன்னு அப்ப எனக்குத் தெரியாது."

காணொளி நிறுத்தப்பட்டு, திரை கருப்பாகியது.

பரத் உறைந்து போனவனாக உட்கார்ந்திருந்தான். 'எப்படி பத்மநாபன் யாரென்று சட்டென்று நினைவு வராமல் போயிற்று?'

"இப்ப ஞாபகம் வருதா?" என்றார் நெறியாளர், இலேசாகச் சிரித்தபடி.

 'வெற்றிச் சிரிப்பு சிரிக்கிறார் போலும்!'

பரத் மௌனமாகத் தலையாட்டினான். உடனே, "சாரி! நீங்க திடீர்னு அவர் பெயரைச் சொன்னதும், சட்னு ஞாபகம் வரல" என்றான், சமாளிக்கும் விதமாக.

"கடைசியா பத்மநாபனை எப்ப பாத்தீங்க?"

"எனக்கு வேலை கிடைச்சதும், நான் வேற வீட்டுக்குப் போயிட்டேன். அப்புறம், அவரோட தொடர்பு விட்டுப் போச்சு."

"அவரையும் தேடிப் பிடிச்சு, நாங்க பேட்டி கண்டோம். அவர் ரொம்ப வறுமையிலதான் இருக்காரு. ஆனாலும், உங்களை நினைச்சுப் பெருமைப்படறாரு" என்றார் நெறியாளர், தொடர்ந்து.

இந்தப் பேட்டியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்தபோது, பரத்தின் உடல் முழுவதிலும் ஒரு அவமான உணர்ச்சி பரவியது.

குறள் 532:
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

பொருள்:
நாள்தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல், ஒருவனுடைய புகழை, அவனுடைய மறதி கொன்று விடும்.

533. கண்டுபிடித்தது எப்படி?

'சில வருஷங்களுக்கு முன்னால நடந்தது இது. ஒரு அரசியல் கட்சியில, ஒரு தலைவர் கீழ்மட்டத்திலேந்து வேகமா முன்னேறி மேல வந்துக்கிட்டிருந்தாரு. அந்தக் கட்சியோட மூத்த தலைவர் திடீர்னு இறந்ததும், அவர் கட்சித் தலைவராகவும் ஆயிட்டாரு. அப்ப, அந்தக் கட்சி ஆட்சியில இல்ல, ஆனா, அடுத்த தேர்தல்ல அவங்கதான் ஆட்சிக்கு வருவாங்கன்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க. அவர்தான் அடுத்த முதல்வர்னு எதிர்பார்க்கப்பட்ட நிலையில, தேர்தல்ல அவர் கட்சி ஜெயிச்சுடுச்சு. ஆனா, அவரால முதல்வர் ஆக முடியல!"

"ஏன்?"

"ஏன்னா, அவர் போட்டியிட்ட தொகுதியில, அவர் தோத்துட்டாரு. அதுவும், அதிக வாக்கு வித்தியாசத்தில மோசமாத் தோத்துட்டாரு."

"அப்புறம்?"

"அப்புறம் என்ன? அதோட, அவர் அரசியல் வாழ்க்கை முடிஞ்சுடுச்சு!"

"இன்டரஸ்டிங்! அவர் தோத்ததுக்கு என்ன காரணம்னு நான் கேட்க மாட்டேன், ஏன்னா, அது எனக்குத் தெரியும்!"

"உனக்கு எப்படித் தெரியும்? நான் குறிப்பிட்ட தலைவர் யார்னே உனக்குத் தெரியாதே! இது எந்த மாநிலத்தில நடந்ததுன்னும் உனக்குத் தெரியாது. உனக்கு அரசியல்ல ஆர்வமே கிடையாதே!"

"அவர் யார்னு எனக்குத் தெரியாதுதான். ஆனலும், நான் சொல்றேன். சரியான்னு பாரு. அவர் வேகமா முன்னேறி வந்ததுக்கு, அவருக்குப் பல கட்டங்கள்ள, பல பேர் உதவி செஞ்சிருப்பாங்க. ஆனா, வெற்றியோட மதர்ப்பில, அவர் அவங்களையும் மறந்திருப்பாரு. அவங்க செஞ்ச உதவிகளையும் மறந்திருப்பாரு. அதனாலதான், அவர் தேர்தல்ல போட்டி போட்டப்ப, கட்சிக்காரங்க அவருக்காக ஆர்வமா வேலை செஞ்சிருக்க மாட்டாங்க. அப்படித்தானே?"

"அடப்பாவி! நாங்கள்ளாம் களத்துக்குப் போய் ஆய்வு பண்ணிக் கண்டுபிடிச்சதைக் கண்ணால பார்த்த மாதிரி சொல்றியே! எப்படி?"

"உன்னை மாதிரி நானும் ஒரு பத்திரிகையாளன்தானே! நீ அரசியல்ல கவனம் செலுத்தற. நான் தொழில், வியாபாரம் இவற்றில கவனம் செலுத்தறேன். இதே மாதிரி, ஒரு தொழிலதிபருக்கு நடந்தது. அவர் சின்னதா ஒரு தொழிலை ஆரம்பிச்சு முன்னேறி பெரிய தொழிலதிபரா ஆனவர். அவருக்கு ஆர்டர் கொடுத்து, கடனுக்குப் பொருள்கள் கொடுத்து, வங்கியில கடன் வாங்க உதவி செஞ்சு, இது மாதிரி பல பேர் பல விதங்கள்ள உதவி செஞ்சிருக்காங்க. ஆனா, அவர் அதையெல்லாம் நினைச்சுப் பாக்கல. தன்னோட வெற்றியோட மமதையில இருந்தாரு. தனக்கு உதவி செஞ்சவங்ககிட்ட அவர் நன்றியோடயும் இல்ல, அவங்களோட நெருக்கமாகவும் இல்ல. அதனால, அவருக்கு நண்பர்களே இல்லாம போயிட்டாங்க. பின்னால, அவருக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டப்ப, அவரால யார்கிட்டேயும் போய் உதவி கேட்கக் கூட முடியல. பரமபத விளையாட்டில, ஏணியில ஏறி, பாம்பில சறுக்கற மாதிரி, சறுக்கிக் கீழே விழுந்துட்டாரு. அந்த உதாரணத்தை வச்சுத்தான், நீ குறிப்பிட்ட தலைவர் விஷயத்தில என்ன நடந்திருக்கும்னு ஊகிச்சேன்."

"ஆச்சரியமா இருக்கே! துறைகள் வெவ்வேறா இருந்தாலும், நிகழ்வுகள் ஒரே மாதிரி இருக்கே!"

"வேற பல துறைகளை நெருக்கமா ஆய்வு செய்யறவங்களைக் கேட்டாலும், அவங்ககிட்டேயும் இதே மாதிரி உதாரணங்கள் கிடைக்கலாம். வாழ்க்கையோட உண்மைகள், எல்லா இடங்களிலேயும் ஒரே மாதிரிதானே இருக்கணும்!"

"பத்திரிகையாளனா இருந்து, இப்ப ஒரு தத்துவஞானியாவும் ஆயிட்ட போல இருக்கே!"

இருவரும் சிரித்தனர்,

குறள் 533:
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு..

பொருள்:
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை. இது உலகில் எல்லாத் துறைகளிலும் உள்ள அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.

534. அண்ணனும் தம்பியும்!

"வாங்கற சம்பளத்தில பாதியை, இது மாதிரி வேண்டாத விஷயங்களுக்கே செலவழிக்கறீங்க!" என்றாள் பார்க்கவி.

"எது வேண்டாத செலவு? கொசுவிரட்டியை ஆன் பண்ணி வைக்கறதா?" என்றான் மனோகர்.

"கொசுவிரட்டி மட்டும் இருந்தா பரவாயில்ல. ஏற்கெனவே, அறை ஜன்னலையெல்லாம் வலை போட்டு மூடி, காத்து வர விடாம பண்ணி இருக்கீங்க. கொசுவலைக்குள்ளதான் படுத்துத் தூங்கறீங்க. உடம்பு முழுக்க கிரீமை வேற தடவிக்கிட்டுத் தூங்கறீங்க. கொசுவுக்கு இவ்வளவு பயப்படணுமா என்ன?" என்ற பார்க்கவி, 'உங்களுக்குக் கொசுகிட்ட மட்டுமா பயம்? தெனாலி சினிமா நாயகன் மாதிரி, எல்லாத்துக்கும்தான் பயம்!' என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள்.

"என்ன செய்யறது? இவ்வளவு செஞ்சும், ஒண்ணு ரெண்டு கொசு கடிக்குது. இனிமே, கொசுவத்திச் சுருளும் ஏத்தி வைக்கலாமான்னு பாக்கறேன்."

"பேசாம, முனிவர்கள் மாதிரி, நாலு பக்கமும் நெருப்பு ஏத்தி வச்சுட்டு, நடுவில தூங்குங்க! வீடு பத்தி எரிஞ்சாலும் பரவாயில்ல. கொசு கடிக்காது!" என்றாள் பார்க்கவி, எரிச்சலுடன்.

"நீ நெருப்புன்னு சொன்னதும்தான், ஞாபகம் வருது. ஒரு ஃபயர் எக்ஸ்டிங்விஷர் வாங்கி இருக்கேன். நாளைக்கு வரும்!" 

"இந்த சினிமா தியேட்டர்ல எல்லாம் வச்சிருப்பாங்களே, அது மாதிரியா?"

"ஆமாம். சின்னதா, வீடுகளுக்குன்னு தயாரிக்கறாங்க."

"ஏன் தயாரிக்க மாட்டாங்க? உங்களை மாதிரி பயந்து சாகறவங்க இருக்கறப்ப, அவங்களுக்கு வியாபாரம் பிரமாதமா நடக்குமே! நீங்க வாங்கற சம்பளத்தையெல்லாம், இது மாதிரி பாதுகாப்புக்காகவே செலவழிச்சுக்கிட்டிருக்கீங்க. உங்க அண்ணனைப் பாருங்க. வாழ்க்கையில எவ்வளவு மேல போயிட்டாருன்னு! இன்னொரு வீடு கட்டிட்டாரு. அடுத்த வாரம் கிரகப் பிரவேசம்" என்றாள் பார்க்கவி, பெருமூச்சுடன்.

னோகரின் அண்ணன் தயாநிதியின் கிரகப் பிரவேசத்துக்குப் போய்விட்டு வந்ததும், பார்க்கவி மனோகரிடம் சொன்னாள் "உங்க அண்ணன் நல்ல வசதியா இருக்காரு, அதனால அண்ணனும் அண்ணியும் சந்தோஷமா இருப்பாங்கன்னு நினைச்சேன். அப்படி இல்ல போலருக்கு!" என்றாள்.

"ஆமாம், தயா கொஞ்சம் டல்லாத்தான் இருந்தான். கிரகப் பிரவேசத்துக்கு ரொம்ப பேர் வரல. சாப்பாடெல்லாம் நிறைய மீந்து போச்சுன்னு சொல்லி வருத்தப்பட்டான்."

"எப்படி வருவாங்க? உதவி செஞ்சவங்களை அடியோட மறந்துட்டு, தன் பெருமையைக் காட்டிக்க, இது மாதிரி விசேஷங்களுக்கு மட்டும் அவங்களைக் கூப்பிட்டா, அவங்க வருவாங்களா?"

"அப்படியா? உனக்கு யார் சொன்னது?"

"உங்க அண்ணியே இதைச் சொல்லி வருத்தப்பட்டாங்க. உங்க அண்ணனுக்கு எத்தனையோ பேர் உதவி செஞ்சுதான், அவர் இந்த அளவுக்கு முன்னேறி இருக்காராம். ஆனா, அவங்ககிட்டல்லாம் ஒரு மரியாதைக்குக் கூட அவர் தொடர்பு வச்சுக்கறது இல்லையாம். உங்க அண்ணி யாரையாவது குறிப்பிட்டு சொன்னாக் கூட, 'யார் அது? ஓ, அவரா? அவரு எப்பவோ ஒரு உதவி செஞ்சாரு. அதைக் காலம் முழுக்க நினைவு வச்சுக்கிட்டிருக்கணுமா என்ன? நீ சொன்னப்பறம்தான், அவர் ஞாபகமே எனக்கு வருது' ன்னு பதில் சொல்வாராம். அவரோட இந்த குணத்தால, அவங்களுக்கு யாருமே நெருக்கமா இல்லாம போய், வாழ்க்கையே வெறுமையா இருக்குன்னு அவங்க சொல்லி வருத்தப்பட்டாங்க... ஆமாம் நீங்க எங்க போறீங்க?"

"மணி அஞ்சாச்சே! எல்லா ஜன்னலையும் சாத்தணும். இல்லாட்டா, கொசு உள்ளே வந்துடும்!" என்று விரைந்தான் மனோகர்.

குறள் 534:
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

பொருள்:
உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல், மறதி உடையவர்க்கு, நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.

535. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

"ரசாயனத் தொழிற்சாலைக்குக் கழிவுக் கட்டுப்பாடு முக்கியம். கழிவுப் புகை, கழிவு நீர் ரெண்டுமே பெரிய பிரச்னையா இருக்கும். உங்க தொழிற்சாலையில புகைப் பிரச்னை இல்லை. ஆனா, கழிவு நீர் பிரச்னையா இருக்கும். அதனால, முழு அளவில கழிவு நீர் சுத்திகரிப்பு பிளான்ட் நிறுவ வேண்டியது முக்கியம்" என்றார் தொழில் ஆலோசகர்.

"அதற்கு எவ்வளவு முதலீடு செய்யணும்?" என்றான் தொழிற்சாலை அதிபரான உதயகுமார்.

ஆலோசகர் கூறிய மதிப்பீட்டுத் தொகையைக் கேட்டதும், "அவ்வளவு பெரிய தொகை முதலீடு செய்யணுமா? தொழிற்சாலைக்கான முதலீடோட, வருமானம் கொடுக்காத இந்த முதலீடு வேறயா? வேற வழி இருக்கா?" என்றான்.

ஆலோசகர் சற்றுத் தயங்கி விட்டு, "குறைஞ்ச முதலீட்டில கழிவு நீரை சுத்தம் செய்யலாம். ஆனா, அது நீண்ட காலம் சரியா செயல்படாது. ரெண்டு மூணு வருஷத்தில அதோடசெயல்திறன் குறைஞ்சுடும். அப்புறம், நீங்க வெளியேற்றுகிற கழிவு நீரோட மாசுத்தன்மை கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்கும். அதனால, ரெண்டு வருஷம் கழிச்சு, நீங்க இந்த கழிவு நீர் சுத்தகரிப்பு பிளான்ட்டை அப்கிரேட் பண்ண வேண்டி இருக்கும். ஆரம்பத்திலேயே, நான் சொன்ன மாதிரி கொஞ்சம் பெரிய முதலீட்டில பிளான்ட்டை போட்டுட்டா, அது நீண்ட காலத்துக்குப் பயனுள்ளதா இருக்கும்" என்றார்.

"வேண்டாம் சார். இப்ப பெரிய தொகையை முதலீடு செஞ்சு, அப்படி ஒரு பிளான்ட்டை அமைக்க விரும்பல. நீங்க சொன்ன மாற்று வழிப்படி, குறைஞ்ச முதலீட்டில ஒரு பிளான்ட்டைப் போட்டுக்கலாம். ரெண்டு வருஷம் கழிச்சு, அப்கிரேட் பண்ணிக்கலாம்" என்றான் உதயகுமார்.

திவுத் தபாலில் வந்திருந்த அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தான் உதயகுமார்.

அவனுடைய தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரின் மாசுத்தன்மை அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு அதிகமாக இருப்பதால், அவன் தொழிற்சாலையை அந்தக் கடிதம் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் மூட வேண்டும் என்று அரசாங்கத்தின் மாசுக் கட்டுப்பாட்டு நிறுவனத்திலிருந்து கடிதம் வந்திருந்தது.

ஆலோசகர் கூறியபடி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தாமல், பல மாதங்களாக அசட்டையாக இருந்து விட்ட தன் அலட்சியத்தை நினைத்துத் தன்னையே நொந்து கொண்டான் உதயகுமார்.

குறள் 535:
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.

பொருள்:
வரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வரும்போது தன் பிழையை நினைத்து வருந்துவான்.

536. முதல்வரின் டயரி

"முதல்வரோட காலை நிகழ்ச்சி முடிஞ்சு போச்சு. பிற்பகல்ல அரசு விருந்தினர் விடுதியில ஓய்வு. மாலையில ஒரு பொதுக்கூட்டம். அங்கேயிருந்து நேரே விமான நிலையம் வந்துடுவாரு. இதுதான் அவரோட நிகழ்ச்சி நிரல்" என்றார் முதல்வரின் தனி உதவியாளர் சண்முகம். 

பாதுகாப்பு அதிகாரி தலையாட்டி விட்டு, "பிற்பகல்ல ரெண்டு மூணு மணி நேரம் நாங்க கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கலாம்னு சொல்லுங்க!" என்றார், மெலிதாகச் சிரித்துக் கொண்டே.

"ஓய்வில்லாம வேலை செய்யற முதல்வர்கிட்ட வேலை செய்யற நமக்கு ஓய்வு கிடைக்கிறதும் அபூர்வமாத்தான் இருக்கு! என்ன செய்யறது?" என்றார் சண்முகம்.

ஆனால், அவர்கள் எதிர்பார்த்த ஓய்வு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மதிய உணவுக்குப் பிறகு, ஒரு பழைய நண்பரைப் பார்க்க வேண்டும் என்று கிளம்பி விட்டார் முதல்வர். 

அவர் போகப் போகும் இடம் எப்படிப்பட்டது என்று தெரியாததால், ஓய்வை எதிர்பார்த்திருந்த பாதுகாப்பு அதிகாரிக்குக் கூடுதல் பணிச்சுமை வந்து சேர்ந்தது. முதல்வர் செல்லப் போகும் பகுதிக்கு ஆட்களை முன்பே அனுப்பி, அங்கே பாதுகாப்பான நிலையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார் அவர்.

முதல்வர் தன் வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்காத முதல்வரின் பழைய நண்பர் சற்றுத் தடுமாறிப் போனார். அவரிடம் சற்று நேரம் தங்கள் பழைய நாட்களைப் பற்றிப் பேசி விட்டு விடைபெற்றார் முதல்வர்.

முதல்வர் விருந்தினர் விடுதிக்குத் திரும்பி வந்ததும், அவருடன் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, சண்முகம் அவரிடம் கேட்டார்: "ஐயா, இப்ப பாத்துட்டு வந்தீங்களே இந்த நண்பர் யார்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

"நான் முதல்ல வேலை பார்த்தது இந்த  ஊர்லதான், இங்கே இருந்த ஒரு சின்ன நிறுவனத்தில எனக்கு வேலை கிடைச்சது. அப்ப இங்கே எனக்குத் தங்க இடம் கிடைக்கறது கஷ்டமா இருந்தது. அவர் அந்த நிறுவனத்தில வேலை செஞ்சுக்கிட்டிருந்தாரு. முன்ன பின்ன தெரியாத எனக்கு, அவர் வீட்டில தங்க இடம் கொடுத்தார். எனக்கு வீடு கிடைக்கிறவரையில, ரெண்டு மூணு மாசம் அவர் வீட்டிலதான் தங்கி இருந்தேன். நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்ததும், அவருக்கு ஏதாவது உதவி செய்யணும்னு அப்பவே நினைச்சுக்கிட்டேன். அதுக்கு இப்பதான் சந்தர்ப்பம் கிடைச்சது. அவருக்கு என்ன உதவி வேணும்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். சட்டப்படி என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்யணும்!" என்றார் முதல்வர்.

"இதுக்கு முன்னால கூட, வேற ஊர்கள்ள சில பேரை இப்படிப் பாத்துட்டு வந்தீங்களே அவங்க கூட..."

"அவங்களும் எனக்கு உதவி செஞ்சவங்கதான். எல்லாரையும் சந்திச்சு, என்னால முடிஞ்ச பதில் உதவிகளை செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கேன்!"

"எப்பவோ உதவி செஞ்சவங்களையெல்லாம் இவ்வளவு வருஷம் கழிச்சு ஞாபகம் வச்சுக்கிட்டு பதில் உதவி செய்யறீங்களே, ஆச்சரியமா இருக்கு!"

"ஞாபகத்தை மட்டும் நம்பி இருந்தா, சில பேர் விட்டுப் போகலாம். அதனால, எனக்கு யாராவது உதவி செஞ்சா, அதையெல்லாம் உடனே இந்த நோட்டில குறிச்சு வச்சிப்பேன். இதை அடிக்கடி பாப்பேன். அவங்களுக்கு உதவி செய்யக் கூடிய சந்தர்ப்பம், நேரம் வரும்போது உதவி செய்வேன். அவங்க இருக்கற ஊர்களுக்குப் போகும்போது, அவங்களை சந்திச்சு, அவங்க தேவை என்னன்னு கேட்டு நிறைவேற்றுவேன்" என்றபடியே, தன் கைப்பையிலிருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து சண்முகத்திடம் காட்டினார் முதல்வர்.

"ஐயா! உங்க கையில இந்த நோட்டு இருக்கறதை அடிக்கடி பாத்திருக்கேன். ஆனா, அது உங்களோட டயரின்னு நினைச்சேன்" என்றார் உதவியாளர்.

பெரிதாகச் சிரித்த முதல்வர், "நீங்க அப்படி நினைச்சதில ஆச்சரியம் இல்ல. சில வருஷங்களுக்கு முன்னால, என் வீட்டில வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினாங்க. நீங்க அப்ப இல்ல. அதனால, உங்களுக்கு அது தெரிஞ்சிருக்காது. அவங்களுக்கு எதுவும் கிடைக்கல. இந்த நோட்டு மட்டும்தான் கிடைச்சது. ஒரு ரகசிய டயரின்னு நினைச்சு, அதை எடுத்துக்கிட்டுப் போனாங்க. அதைப் படிச்சுப் பாத்துட்டு, அதில அவங்க எதிர்பார்த்த விஷயம் எதுவும் இல்லேன்னு தெரிஞ்சதும், ஒரு வாரம் கழிச்சு திருப்பிக் கொடுத்திட்டாங்க!" என்றார்.

குறள் 536:
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.

பொருள்:
யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காத தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.

537. செவ்வாயும், புதனும்!

"முத்துசாமி சாரைக் கூப்பிடு!" என்றான் ராகவ் என்ட்டர்பிரைசஸ் அதிபரான ராகவன்.

முத்துசாமி வந்ததும், "உக்காருங்க" என்ற ராகவன், அவர் இருக்கையில் அமர்ந்ததும், "பில்டர் மாரிமுத்துவைப் போன வாரம் பாத்தீங்களே, அப்ப உங்களை என்னிக்கு வரச் சொன்னாரு?" என்றான்.

"அடுத்த புதன்கிழமை வாங்கன்னு சொன்னாரு..." என்ற முத்துசாமி, அன்றுதான் புதன்கிழமை என்பதை உணர்ந்தவராக, "இன்னிக்குத்தான்!" என்றார் தாழ்ந்த குரலில்.

"இன்னிக்குப் போனீங்களா?"

"இல்ல. இப்பவே போய்ப் பாத்துட்டு வந்துடறேன்" என்று எழுந்தார் முத்துசாமி.

"உக்காருங்க!" என்று அவரை அமர்த்திய ராகவன், "காலை நேரத்திலதான் அவரைப் பார்க்க முடியும். இப்ப அவர் இருக்க மாட்டாரு. ஏன் காலையிலேயே போகல? மறந்துட்டீங்களா?" என்றான்.

முத்துசாமி சங்கடத்துடன் மௌனமாகத் தலையாட்டினார்.

சற்று நேரம் மௌனமாக இருந்த ராகவன், "நான் இந்தத் தொழிலை ஆரம்பிச்சு, ஓரளவுக்கு அதை நல்லா நடத்திக்கிட்டிருக்கறதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?" என்றான்,

"உங்களோட கடினமான உழைப்புதான்" என்றார் முத்துசாமி, இதை ஏன் இவர் தன்னிடம் கேட்கிறார் என்று புரியாதவராக.

"இருக்கலாம். ஆனா, என்னோட வெற்றிக்குக் காரணமா நான் எப்பவுமே நினைக்கிறது ஒத்தரைத்தான்!"

"உங்க அப்பாவா?"

ராகவன் சிரித்து விட்டு, "சென்ட்டிமென்ட்டலா வேணும்னா அப்படிச் சொல்லலாம். ஏதாவது பேட்டியில இப்படிச் சொன்னா, இவன் பெற்றோர் மேல எவ்வளவு மதிப்பு வச்சுருக்கான் பாருன்னு பல பேர் என்னை உயர்வா நினைக்கலாம். பெற்றோர்ங்கறது பொதுவான ஒரு பதில். எல்லார் வாழ்க்கையிலுமே பெற்றோர்கள் முக்கியமானவர்கள்தான். அதைச் சொல்ல வேண்டியதே இல்லை. ஆனா குறிப்பா சில பேரோட தாக்கம் நம் வாழ்க்கையில இருக்கும் இல்லையா? அப்படிப்பட்ட ஒத்தரைத்தான் நான் சொன்னேன். அவர் பேரு தண்டபாணி. ஆரம்ப காலத்தில, நான் வேலை கிடைக்காம திண்டாடிக்கிட்டிருந்தபோது, எனக்குத் தெரிஞ்ச ஒத்தரோட சிபாரிசில, அவரைப் போய்ப் பார்த்தேன். "

"அவர்தான் உங்களுக்கு முதல்ல வேலை கொடுத்தாரா?"

"வேலை கொடுக்கல! அதனாலதான் அவரைக் குறிப்பிட வேண்டி இருக்கு! நான் அவரைப் போய்ப் பார்த்தப்ப, இப்ப பில்டர் மாரிமுத்து உங்களை புதன்கிழமை வரச் சொன்ன மாதிரி, அவர் என்னை செவ்வாய்க்கிழமை வரச் சொன்னாரு.

"ஆனா, செவ்வாய்க்கிழமை நான் போகல. அவர் வரச் சொன்னதையே நான் மறந்துட்டேன். அன்னிக்கு ராத்திரி தூங்கறதுக்கு முன்னாலதான் ஞாபகம் வந்தது. அடுத்த நாள் காலையிலே அவரைப் போய்ப் பார்த்தேன். 'உன்னை செவ்வாய்க்கிழமை இல்ல வரச் சொன்னேன்? இன்னிக்குத்தான் செவ்வாய்க்கிழமையா?' ன்னு கேட்டாரு. 'சாரி சார், மறந்துட்டேன்' னு சொன்னேன். 'சாரி! மறதியை நான் மன்னிக்கறதில்லே' ன்னு சொல்லி, என்னை அனுப்பிட்டாரு.

"செவ்வாய்க்கிழமை நான் போயிருந்தா, ஒருவேளை அவர் எனக்கு வேலை கொடுத்திருக்கலாம். என்னோட மறதியாலேயும், அலட்சியத்தாலேயும் அந்த வாய்ப்பை இழந்துட்டேனேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். அதுவும், அப்ப வேலை கிடைக்காம கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தப்ப, கைக்குக் கிடைச்ச ஒரு வாய்ப்பை கைநழுவப் போக விட்டுட்டோமேன்னு நான் பட்ட வேதனை எவ்வளவு ஆழமானதுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். 

"அப்புறம் என் வாழ்க்கை வேற விதமா மாறிட்டாலும், அந்த அனுபவத்தை நான் மறக்கல. அதிலிருந்து நான் கத்துக்கிட்ட பாடம், அலட்சியம், மறதி இவற்றால, நாம செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாம இருந்துடக் கூடாதுங்கறது. அதனால, தண்டபாணிங்கற அந்த மனிதரை ஒரு வழிகாட்டியா நான் எப்பவுமே நினைக்கிறேன்."

"சாரி சார்! இன்னிக்குப் போக மறந்தது என்னோட தப்புதான். இனிமே இப்படி நடக்காம பாத்துக்கறேன்" என்றார் முத்துசாமி.

"என்னோட அனுபவத்தை உங்ககிட்ட பகிர்ந்துகிட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு. நம்ம ஆஃபீஸ் சின்னது. இங்கே வேலை செய்யறவங்க பெரும்பாலும் இளைஞர்கள். வயசிலேயும் அனுபவத்திலேயும் மூத்தவரா இருக்கறவரு நீங்க ஒத்தர்தான்.

"நான் அவங்ககிட்ட ஏதாவது சொன்னா, ஏதோ முதலாளி சொல்றாருன்னு கேட்டுப்பாங்களே தவிர, அதை மனசில வாங்கிக்கிட்டு, தங்களை மாத்திக்க மாட்டாங்க. ஆனா, அவங்களோட நெருங்கிப் பழகற நீங்க சொன்னா, அவங்க கேட்டுப்பாங்க. செய்ய வேண்டிய எதையும் மறக்காம, செய்ய வேண்டிய நேரத்தில செய்யற பழக்கத்தை அவங்ககிட்ட உருவாக்குங்க. அவங்க அப்படிச் செய்ய ஆரம்பிச்சாங்கன்னா, அதனால நம்ம கம்பெனிக்கு நன்மைகள் ஏற்படும்கறதை விட, அவங்களோட தனிப்பட்ட வாழ்க்கையில அவங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். என் அனுபவத்திலேந்து இதை என்னால உறுதியாச் சொல்ல முடியும்" என்றான் ராகவன்.

குறள் 537:
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.

பொருள்:
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், ஒருவரால் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

538. துறவியுடன் ஒரு உரையாடல்!

"சாமி! எனக்கு ஆன்மீகத்தில நம்பிக்கை இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா என்னோட பிஸியான வாழ்க்கையில, அதுக்கெல்லாம் நான் நேரம் ஒதுக்கல!" என்றார் பச்சையப்பன்.

"பின்னே, என்னை ஏன் உங்க வீட்டில தங்க வச்சிருக்கீங்க?" என்றார் துறவி அருட்செல்வம், சிரித்துக் கொண்டே!

"உண்மையைச் சொல்லணும்னா, என் நண்பர் மாணிக்கம்தான் இந்த ஏற்பாட்டைப் பண்ணினாரு. ஏன்னா, இந்த ஊர்லேயே பெரிய வீடு என்னோடதுதான். நீங்க தங்கறதுக்காக, என் வீட்டு மாடி முழுக்க ஒதுக்கி இருக்கேன். நீங்க தங்க வசதியான அறை. அறைக்கு வெளியில நீங்க இப்ப உட்கார்ந்து இருக்கிற பெரிய லவுஞ்ஜ். நிறைய பக்தர்கள் உக்காந்து உங்க பேச்சைக் கேக்கலாம். நீங்க இங்கே தங்கி இருக்கிற மூணு நாளும் வசதியாத் தங்கி இருக்கவும், உங்களைப் பாக்க வரவங்க சௌகரியமா வந்து உங்களைப் பார்க்கவும், உங்க பேச்சைக் கேக்கவும், இவ்வளவு வசதியான இடம் இந்த ஊர்லேயே என் வீட்டில மட்டும்தான் இருக்கு!" என்றார் பச்சையப்பன், பெருமையுடன்.

"உங்க வாழ்க்கையைப் பத்தி சுருக்கமா சொல்லுங்களேன்!" 

"சொல்றேன்!" என்று உற்சாகமாக ஆரம்பித்த பச்சையப்பன், வீடு வீடாகப் போய்ப் பழைய பொருட்களை வாங்கி விற்கும் மிகச் சிறிய தொழிலைத் துவங்கிய தான், இன்று ஒரு இரும்பு உருக்காலை, பாத்திரங்கள் தயாரித்தல் என்று பல்வேறு தொழிற்சாலைகளை நடத்தி வரும் பெரிய தொழிலதிபராக வளர்ந்ததைப் பெருமை பொங்க விவரித்தார்.

"நல்லது!" என்ற அருட்செல்வம், "உங்க குடும்பத்தை நல்லாப் பாத்துக்கறீங்களா?" என்றார்.

"பாத்துக்காம? என் மனைவிக்கும், பையன்களுக்கும் மாசா மாசம் சம்பளம் மாதிரி ஒரு பெரிய தொகையைக் கொடுத்துடறேன். அவங்க எங்கே வேணும்னாலும் போகலாம், எதை வேணும்னாலும் வாங்கலாம்!"

"அவங்களோட சுற்றுப்பயணம் எல்லாம் போறதுண்டா?"

"அதுக்கெல்லாம் எனக்கு ஏதுங்க நேரம்? அதான் காசு கொடுத்தடறேன் இல்ல? அவங்க எங்கே வேணும்னா போயிக்கலாம்."

"சினிமா, டிராமான்னு ஏதாவது?"

"அவங்க எங்கே வேணும்னாலும் போயிக்கலாம். என்னைக் கட்டி இழுக்காதீங்கன்னு சொல்லிட்டேன், ஏன், வீட்டில அவங்களோட உக்காந்து டிவி கூடப் பாக்கறது இல்ல."

"கோவிலுக்கெல்லாம் போவீங்களா?"

"அதான் சொன்னேனே சாமி! கடவுள், ஆன்மீகம் இதையெல்லாம் பத்தி நான் நினைச்சுப் பாக்கறதில்லேன்னு. கடவுள்னு ஒத்தர் இருக்காரா, இல்லையான்னு கூட நான் யோசிச்சதில்ல."

"உங்க பெற்றோர்கள் இருக்காங்களா?"

"இல்லை. ரெண்டு பேருமே போய்ச் சேந்துட்டாங்க."

"அவங்களுக்கு சடங்குகள் எதுவும் செய்யறதுண்டா?"

"அவங்களுக்கு ஈமச் சடங்குகள் செஞ்சதுக்கப்பறம், எந்தச் சடங்கையும் செய்யல. அவங்க இறந்த நாளைக் கூட நான் நினைச்சுப் பாக்கறதில்ல. எப்பவாவது தோணும், ஓ இன்னிக்கு ஆகஸ்டு 17 ஆச்சே, இன்னிக்குத்தானே அப்பா காலமானார்னு. ஆனா அந்த நினைப்பை அதோட விட்டுடுவேன்."

"ஏழைகளுக்கு உதவறது, அது மாதிரி எதுவும் செய்யறீங்களா?"

"சாமி! ஒவ்வொத்தரும் அவங்க வாழ்க்கையை அவங்களேதான் பாத்துக்கணும். மத்தவங்களுக்கு உதவறதுங்கற எண்ணமே தப்பானதுன்னுதான் நான் நினைக்கிறேன்."

ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்ட அருட்செல்வம், "சரி. மாணிக்கத்தை வரச் சொல்லுங்க!" என்றார்.

"எதுக்கு சாமி? ஏதாவது வேணும்னா கேளுங்க, நான் செஞ்சு தரேன்!" என்றார் பச்சையப்பன்.

"பெரியவங்க சொன்ன எந்த விஷயத்தையும் நீங்க செய்யல. உங்க குடும்பத்தினர்கிட்ட அன்பா இருக்கறதைக் கூடச் செய்யல. உங்க வீட்டில தங்கறது சரின்னு எனக்குத் தோணல. மாணிக்கத்துக்கிட்ட சொல்லி, வேற எங்கேயாவது இடம் பார்க்கச் சொல்லணும். மரத்தடியா இருந்தாக் கூடப் பரவாயில்ல!" என்றார் அருட்செல்வம்.

குறள் 538:
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

பொருள்:
சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களைப் போற்றிச் செய்ய வேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.

539. கதையும், காரணமும்

"சார்! முராட் நாட்டைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!" என்றார் தேர்தல் ஆலோசகர் பூஷன்.

"தெரியும். சிறிய நாடு என்றாலும், ஜனநாயக முறையைப் பின்பற்றும் நாடு. இங்கே நாடாளுமன்ற முறை என்றால், அங்கே அதிபர் முறை. ஏன் கேட்கிறீர்கள்?" என்றார் பிரதமர் காளிசரண்.

"சில வருடங்களுக்கு முன்பு, அங்கே காட்ஸே என்று ஒருவர் அதிபராக இருந்தார்,"

"பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போது, சர்வதேச அரசியலில் நான் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. சொல்லுங்கள்!"

"காட்ஸே மிகப் பெரும் மக்கள் ஆதரவுடன் தேர்தலில் வென்று அதிபர் ஆனார். அவருக்குக் கிடைத்த பெரிய வெற்றிக்கு முக்கியமான காரணம், அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகள். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை வெளிக் கொணர்ந்து, அதை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவேன், எல்லா நிலைகளிலும் ஊழலை ஒழிப்பேன், ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன், வெளிப்படையான நிர்வாகத்தை அளிப்பேன் என்றெல்லாம் அவர் அளித்த வாக்குறுதிகள் மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ஆனால் பதவிக்கு வந்ததும், அவர் பதவி சுகத்தை அனுபவிப்பதில்தான் அதிகம் ஆர்வம் காட்டினார். உலகம் முழுக்கச் சுற்றி வந்தார்."

"நம் நாட்டுக்கு அவர் வந்தது எனக்கு நினைவுக்கு இருக்கிறது."

"ஆமாம். பதவியில் இருக்கும்போதே, உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் சென்று வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைந்தது போல் இருந்தன அவருடைய பயணங்கள். ஏராளமான செலவில், தனக்கென்று ஒரு தனி விமானம் வாங்கினார். விலை உயர்ந்த உடைகளை வாங்கி உடுத்திக் கொண்டார்."

"அது சரி. அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா இல்லையா?" என்றார் காளிசரண், குறுக்கிட்டு.

"அதற்குத்தான் வருகிறேன். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதுடன், தன் வாக்குறுதிகளுக்கு விரோதமாகச் செயல்பட்டார்."

"எப்படி?"

"பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளை மதிக்காமல், தான்தோன்றித்தனமாக அவர் எடுத்த சில நடவடிக்கைகளால், பொருளாதரம் வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக அவர் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக, கோடிக்கணக்கானோர் வேலை இழந்தனர். அவருக்கு நெருக்கமான சில தொழிலதிபர்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்து வந்தனர். வெளிப்படையான நிர்வாகம் என்று அவர் அறிவித்ததற்கு மாறாக, கேள்வி கேட்டவர்கள் அனைவரையும் தேசநலனுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் என்று குற்றம் சாட்டி, அவர்கள் மீது கடுமையான சட்டங்களைப் பயன்படுத்திச் சிறையில் அடைத்தார். இதனால், பெரும்பாலானோர் பணிந்தனர். பணியாத சிலர், சிறைகளில் வாடினர்."

"அவர் இப்படியெல்லாம் செய்திருந்தால், மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருக்காதா?" என்றார் பிரதமர் காளிசரண்.

"காட்ஸே அடிக்கடி ஒன்று சொல்லுவார். 'என் கண்ணுக்கு எட்டியவரை எனக்கு எதிரிகளே இல்லை. மக்கள் என் பின்னால் இருக்கிறார்கள்' என்று! எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருந்ததால், அவர் கூறியது உண்மை என்பது போன்ற பிம்பம் நிலவியது. அடுத்த தேர்தலில், முன்பு பெற்ற வெற்றியை விடப் பெரிய வெற்றியைப் பெறுவார் என்று அவருக்கு அடிபணிந்து நடந்த ஊடகங்கள் கூறி வந்தன. அவரை எதிர்த்தவர்கள் கூட அவர் மீண்டும் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது என்பதை உணர்ந்து, மனச்சோர்வுடன் இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, அடுத்த தேர்தலில் அவர் தோற்று விட்டார்."

"எப்படி?" என்றார் காளிசரண், வியப்புடன்.

"அவரை எதிர்த்துப் போட்டியிடக் கூடிய வலிமை பெற்ற தலைவர் யாருமே இல்லை என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தபோது, அரசியலுக்குப் புதிதாக வந்த ஒரு இளைஞர் அவரை எதிர்த்துப் போட்டி இட்டார். பலம் இல்லாமல் இருந்த எல்லா எதிர்க்கட்சிகளும் வேறு வழி இல்லாமல், அந்த இளைஞரை ஆதரிப்பதாக அறிவித்தன. ஆனால் அந்த இளைஞர் வெற்றி பெறுவார் என்று யாரும் நினைக்கவில்லை. ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டதும், எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி. அந்த இளைஞர் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் காட்ஸேயை வீழ்த்தி இருந்தார்!"

"ஓ, இப்போது ஞாபகம் வருகிறது. அவர் பெயர் காருண்தானே? அவர் ஆட்சி சிறப்பாக இருந்தது என்று படித்திருக்கிறேன். ஆனால், இது எப்படி நடந்தது?"

"வெற்றியின் மமதையால், தன் கடமையைச் செய்யாமல், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றிக் கவலைப்படாமல், அலட்சியமாக இருந்த காட்ஸே மீது மக்களுக்கு இருந்த கோபத்தின் வெளிப்பாடுதான் அது. எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட மக்களின் கோபத்தைப் புரிந்து கொள்ளாமல், காட்ஸே உருவாக்கிய மாயையில் மயங்கி இருந்தார்கள். ஆனால் காட்ஸேக்கு எதிராக யார் நின்றாலும், அவருக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருந்தார்கள் என்பதுதான் உண்மை" என்று முடித்தார் பூஷன்.

சில விநாடிகள் மௌனமாக இருந்த காளிசரண், "நீங்கள் இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது!" என்றார், இலேசாகச் சிரித்தபடி.

"நான் உங்கள் அரசியல் ஆலோசகன். உங்களுக்குச் சரியான விதத்தில் வழி காட்டி, உங்களைத் தொடர்ந்து வெற்றி அடையச் செய்ய வேண்டியது என் பணி. ஆனால், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களைப் புகழ்ந்து கொண்டு, உங்கள் எதிரிகள் பலம் இழந்து விட்டதாகச் சொல்லி, உங்களை மயக்கத்தில் ஆழ்த்தும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆகி விட்டது. உங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை நீங்கள் இன்னும் எடுக்கவில்லை. நீங்கள் விரைந்து செயல்பட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றும் முயற்சியை உடனே துவங்க வேண்டும். மக்களுக்கான உங்கள் கடமைகளைச் செய்தால்தான், அரசியலில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற முடியும்" என்றபடியே பிரதமரின் முகத்தைப் பார்த்தார் பூஷன்.

காளிசரண் மௌனமாகத் தலையை ஆட்டினார்.

குறள் 539:
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

பொருள்:
மமதையால் பூரித்துப் போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்து போய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

540. தேவை: புதிய உதவியாளர்

 "சார்! இன்னிக்கு 11 மணிக்கு சேம்பர் ஆஃப் காமர்ஸ் மீட்டிங்ல பேசறீங்க, சாயந்திரம் 6 மணிக்கு இலக்கிய மன்ற விழாவில தலைமை ஏற்றுப் பேசறீங்க" என்று, கோவிந்தராஜனின் அன்றைய முக்கிய நிகழ்ச்சிகளை அவருக்கு நினைவுபடுத்தினான் அவருடைய உதவியாளன் சபாபதி.

"சரி" என்று தலையாட்டிய கோவிந்தராஜன், தன் மேஜை இழுப்பறையிலிருந்த நோட்டை வெளியே எடுத்தார்.

"சார்! ஒண்ணு கேட்டா, தப்பா நினைக்க மாட்டீங்களே!" 

"கேளு!" என்றார் கோவிந்தராஜன், சிரித்தபடி.

"நீங்க ஒரு சிறந்த பேச்சாளர். எத்தனையோ கூட்டங்கள்ள, தயார் பண்ணிக்காமயே நீண்ட நேரம் சுவாரசியமாப் பேசறீங்க. ஆனா சில கூட்டங்களுக்கு மட்டும், தயார் பண்ணி வச்சுக்கிட்டு, அதையும் பல தடவை பாத்துக்கறீங்களே, அது ஏன்?"

"அது பேச வேண்டிய விஷயத்தைப் பொருத்தது. பொதுவான விஷயங்கள் இருக்கு. அதையெல்லாம் பத்தி, என்ன வேணும்னா சொல்லலாம், எவ்வளவு வேணும்னா சொல்லலாம். அந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ள, தயார் பண்ணிக்காம, அப்ப எனக்குத் தோணற சில விஷயங்களைப் பேசுவேன். நான் அதிகம் கூட்டங்கள்ள பேசிக் கிடைச்ச அனுபவத்தால, சில பேச்சுகள் நல்லா அமைஞ்சிருக்கலாம். குறிப்பான விஷயங்களைப் பத்திப் பேசணும்னா, நிச்சயமா தயார் பண்ணிக்கிட்டுத்தான் பேசணும்."

"ஆனா இன்னிக்கு சேம்பர் ஆஃப் காமர்ஸ்ல நீங்க பேசப் போற சப்ஜெக்ட் உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சதாச்சே!"

"இருக்கலாம். ஆனா, நான் சொல்ல வேண்டிய விஷயங்கள் எதுவும் விட்டுப் போகக் கூடாது இல்லியா? அதுதான், முன்கூட்டியே யோசிச்சு, பேச வேண்டிய பாயின்ட்களைக் குறிச்சு வச்சுக்கறேன். எதுவும் விட்டுப் போயிடக் கூடாதுங்கறதுக்காக, எத்தனை பாயின்ட்னு கணக்கு வச்சுப்பேன். அப்படியும் விட்டுப் போச்சுன்னா பாத்துக்கறதுக்காக, பாயின்ட்களை சுருக்கமா ஒண்ணு ரெண்டு வார்த்தையில நம்பர் வாரியா ஒரு துண்டுக் காகிதத்தில எழுதி சட்டைப்பையில வச்சுப்பேன். ஆனா பொதுவா, அதைப் பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு வரதில்ல" என்றார் கோவிந்தராஜன்.

"இலக்கிய மன்றக் கூட்டத்தில பேசவும் தயார் பண்ணியிருக்கீங்களா?"

"ஆமாம். அது எனக்கு அதிகம் தெரியாத சப்ஜெக்ட் ஆச்சே! என்னை மதிச்சுக் கூப்பிட்டிருக்காங்க. அதுக்காக, உருப்படியா ஒண்ணு ரெண்டு விஷயம் சொல்லணும் இல்லையா?"

"சார்! எனக்கு ஒண்ணு தோணுது. இது மாதிரி கூட்டங்கள்ள பேசறதுக்கே இந்த அளவுக்குத் தயார் பண்றீங்களே, உங்க வாழ்க்கைக்கு எந்த அளவுக்குத் திட்டமிட்டிருப்பீங்க?" என்ற சபாபதி, சற்று அதிக உரிமை எடுத்துக் கொண்டு பேசி விட்டோமா என்று நினைத்து, "சாரி சார்! ஏதோ ஒரு ஆர்வத்தில கேட்டுட்டேன்!" என்றான்.

"நீ கேட்டதில தப்பு எதுவம் இல்ல. சொல்றேன். அதுக்கு முன்னால உங்கிட்ட ஒண்ணு கேக்கறேன். சில விஷயங்களைச் செய்யணும்னு நினைச்சு, அப்புறம் மறதியாலேயோ, சோம்பேறித்தனத்தாலேயோ அதைச் செய்யாம விட்டு, அப்புறம் அதுக்காக வருத்தப்பட்டிருக்கியா?" என்றார் கோவிந்தராஜன்.

"எத்தனையோ தடவை!"

"இது மாதிரி செய்ய வேண்டியவைகளச் செய்யாம விட்டதனால  வாழ்க்கையில எவ்வளவு இழக்கறோம்கறதை, சின்ன வயசிலேயே நான் புரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்பறம் ஒண்ணு செஞ்சேன்" என்ற கோவிந்தராஜன், தன் மேஜை இழுப்பறையிலிருந்து இன்னொரு நோட்டை எடுத்து அவனிடம் காட்டினார்.

அதில், 'செய்ய வேண்டியவை' என்ற தலைப்பில், பல பணிகள் வரிசையாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை அடிக்கப்பட்டிருந்தன.

"ஒரு விஷயத்தைச் செய்யணும்னு எனக்குத் தோணின உடனேயே, அதை ஒரு துண்டுச் சீட்டில குறிச்சுப்பேன். இதுக்காகவே, சட்டைப்பையில ஒரு துண்டுக் காகிதம் வச்சிருப்பேன். பல எண்ணங்கள் நம் மனசில தோணி, உடனே எவாபரேட் ஆயிடும். அந்த எண்ணம் திரும்ப வரும்னு கூடச் சொல்ல முடியாது அதனாலதான், அதை உடனே பிடிச்சு வச்சுக்கற மாதிரி, எழுதி வச்சுக்கறது முக்கியம்.

"ராத்திரி தூங்கறத்துக்கு முன்னால, துண்டுச் சீட்டில குறிச்ச விஷயங்களை இந்த நோட்டில எழுதி வைப்பேன். தினமும் இந்த நோட்டைப் பார்த்து, நான் செய்ய நினைச்ச சில விஷயங்களை அன்னிக்கு செய்ய முடியுமான்னு பார்த்து, அன்றைய திட்டங்கள்ள எழுதிப்பேன். 

"சில விஷயங்களை வேண்டாம்னு பின்னால கைவிடலாம். சில விஷயங்களை செய்ய முடியாம போகலாம். ஆனா முக்கியமான பல விஷயங்களை செஞ்சு முடிக்க முடியும். செஞ்சு முடிச்சதையெல்லாம் அடிச்சுடுவேன். 

"தினமும் இந்த நோட்டுப் புத்தகத்தைப் பாக்கறப்ப, இவ்வளவு விஷயங்களை செஞ்சிருக்கோமேன்னு நினைச்சு சந்தோஷமாகவும், உற்சாகமாவும் இருக்கும். இன்னும் பல விஷயங்களைச் செய்ய உந்துதலாகவும் இருக்கும். வாழ்க்கையில என்னால பல விஷயங்களை சாதிக்க முடிஞ்சதுக்கு, நான் இந்த முறையைப் பின்பற்றினது ஒரு முக்கியக் காரணம்னு நினைக்கறேன். நீயும் இதை முயற்சி செஞ்சு பாக்கலாமே!" என்றார் கோவிந்தராஜன்.

"நிச்சயமா சார்!" என்றான் சபாபதி, உற்சாகத்துடன்.

"அப்ப, நான் சீக்கிரமே வேற உதவியாளரைத் தேட வேண்டி இருக்கும்னு சொல்லு!" 

"ஏன் சார்?" என்றான் சபாபதி, அதிர்ச்சியுடன்.

"இது மாதிரி செய்ய ஆரம்பிச்சா, கொஞ்ச காலத்திலேயே, நீ முன்னேறி மேல போயிடுவியே! அப்ப, நான் புதுசா வேற ஒத்தரைத்தானே உதவியாளரா வச்சுக்கணும்?" என்றார் கோவிந்தராஜன், சிரித்தபடியே.

குறள் 540:
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.

பொருள்:
ஒருவன் தான் எண்ணியதை, விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.      
                                                    அதிகாரம் 53 -  சுற்றந்தழால்

அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்   

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...