Sunday, September 27, 2020

424. மாணவன் எடுத்த வகுப்பு

"சார் நேத்திக்கு கிளாஸ்ல ஃப்ரீட்மனோட மானிடரி தியரி பத்தி சொன்னீங்க. அதில எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. 

"இதில சில அம்சங்கள் பத்தி உங்க கிட்ட கொஞ்சம் விரிவா விளக்கம் பெறணும்னு நினைக்கறேன். வகுப்பில நான் என் சந்தேகங்களைக் கேட்டு அதை நீங்க விளக்கினா மத்த மாணவர்கள் நான் அவங்க நேரத்தை வீணாக்கறதா நினைக்கலாம். அதனாலதான் உங்க கிட்ட தனியா இதைக் கேக்கலாம்னு நினைச்சேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா..." என்றான் பச்சையப்பன்.

பேராசிரியர் டேவிட் அவனைக் கொஞ்சம் வியப்புடன் பார்த்து, "சொல்லு!" என்றார்.

அவன் தன் சந்தேகங்களைக் கேட்டதும், அவர் அவற்றை விளக்கினார்.

"எனக்காக அரை மணி நேரம் செலவழிச்சிருக்கீங்க. ரொம்ப நன்றி சார்!" என்றான் முடிவில்.

"மாணவர்களோட சந்தேகங்களைத் தீர்த்து வைக்கறது ஆசிரியர்களுக்கு எப்பவுமே ஒரு மன நிறைவான விஷயம்தான். ஆனா இதற்கான வாய்ப்பு அவங்களுக்கு அதிகம் கிடைக்கறதில்ல!" என்று சொல்லிச் சிரித்த டேவிட், "நீ சொன்ன மாதிரி இதை நீ வகுப்பில கேட்டு நான் இதை விளக்கி இருந்தா பல மாணவர்களுக்கு நாம வகுப்பு நேரத்தை வீணாக்கினதாத் தோணி இருக்கும்!" என்றார் தொடர்ந்து.

"ஆமாம் சார்! அதான் வகுப்புக்கு வெளியில உங்களைத் தொந்தரவு பண்ண வேண்டி இருந்தது."

"நான் சொன்ன மாதிரி, இது எனக்கு மன நிறைவைக் கொடுக்கற விஷயம். எனக்கும் ஒரு சந்தேகம் கேக்கணும் உங்கிட்ட! நீ கேட்ட சந்தேகங்கள் இந்த தியரியோட நுணுக்கமான விவரங்கள் பத்தி. உன் சிலபஸுக்கோ, பரீட்சைக்கோ இதெல்லாம் தேவையில்லை. உன் பாடப்புத்தகத்திலேயும் இதெல்லாம் இருக்காது. அதனாலதான் வகுப்பில இதையெல்லாம் தொட்டுக் காட்டினதோட நிறுத்திக்கிட்டேன். நீ ஏன் இந்த விஷயங்களைத் தெரிஞ்சுக்க விரும்பின?" என்றார் டேவிட்.

"சார்! இந்த தியரியை நீங்க விளக்கினது ரொம்ப சுவாரசியமா இருந்தது. அதனால இதை இன்னும் நுணுக்கமாத் தெரிஞ்சுக்கணும்னு விரும்பினேன். சிலபஸ்படி இந்த தியரியோட அவுட்லைன் மட்டும் தெரிஞ்சா போதும். அதனால வகுப்பில இதைப் பத்தி விவரமாக் கேக்கறது சரியா இருக்காதுன்னு நினைச்சேன். உங்க கிட்ட இதைப் பத்தி தனியாக் கேட்டதுக்கு அதுவும் ஒரு காரணம்" என்றான் பச்சையப்பன்.

அவனை மதிப்புடன் பார்த்த டேவிட்,"சரி. நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்" என்றார்.

"சொல்லுங்க சார்!" என்றான் பச்சையப்பன்.  

டுத்த நாள் வகுப்புக்கு வந்த டேவிட்,"போன வகுப்பில ஃப்ரீட்மனோட மானிடரி தியரி பத்தி விளக்கினேன். ஒரு மாணவன் அது பத்தி இன்னும் சில விவரங்கள் தெரிஞ்சுக்க விரும்பி எங்கிட்ட தனியா வந்து சில சந்தேகங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டுப் போனான். நான் அவனுக்கு விளக்கிச் சொன்ன விஷயங்களை அவன் இப்ப வகுப்பில விளக்கிச் சொல்லுவான்" என்று சொல்லி விட்டு, பச்சையப்பனைப் பார்த்தார்.

பச்சையப்பன் சற்றுத் தயக்கத்துடன் எழுந்து முன்னே வந்து வகுப்பைப் பாரத்தபடி நின்றான். டேவிட் மாணவர்களின் இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டார்.

சில நிமிடங்கள் மேடைக் கூச்சத்தால் தடுமாறிய பிறகு தெளிவாகப் பேச ஆரம்பித்தான் பச்சையப்பன். 

பச்சையப்பன் விளக்கி முடித்ததும், அவனை இருக்கையில் அமரச் சொல்லி விட்டு டேவிட் எழுந்து வந்தார்.

"எந்த ஒரு விஷயத்தையும் நுணுக்கமாப் புரிஞ்சுக்கற மனப்பான்மையை நீங்க வளத்துக்கணும். மனப்பான்மையை முதல்ல வளத்துக்கிட்டா புரிஞ்சுக்கற திறமையும் தன்னால வளரும். அது போல நமக்குத் தெரிஞ்ச விஷயங்களை மத்தவங்களுக்குத் தெளிவா எடுத்துச் சொல்லணும். இந்தத் திறமைக்கும் முதல் தேவை மனப்பான்மைதான். 

"இது படிப்புக்கு மட்டும் இல்ல, எல்லா விஷயங்களுக்குமே வேணும். அதனால இது ஆசிரியர்களுக்கு மட்டும் இல்லாம, எல்லாருக்குமே இருக்க வேண்டிய திறமை. பச்சையப்பன் கிட்ட விஷயங்களை நுணுக்கமாப் புரிஞ்சுக்கணும்கற ஆர்வம் இருந்த்தைப் பார்த்தேன். 

"அதே போல விஷயங்களைத் தெளிவா எடுத்துச் சொல்ற திறமையையும் வளத்துக்கணும்கறதை அவனுக்கும், அவன் முலமா உங்க எல்லாருக்கும் புரிய வைக்கத்தான் நேத்திக்கு எங்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களை வகுப்பில விளக்கச் சொல்லி அவன் கிட்ட சொன்னேன். 

"இது சுலபம் இல்லேன்னு எனக்குத் தெரியும். பச்சையப்பன்! உனக்கு இது நல்ல ஆரம்பம். இன்னும் நீ உன் திறமையை வளத்துக்க இன்றைய அனுபவம் உதவும். இனிமே மத்தவங்களுக்கும் இது மாதிரி வாய்ப்பகளைக் கொடுப்பேன்" என்றார் டேவிட்.  

பொருட்பால் 
அரசியல் இயல்
அதிகாரம் 43
அறிவுடைமை 
குறள் 424:
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

பொருள்:
தான் சொல்பவற்றை மற்றவர்களுக்குப் பொருள் விளங்கும் வகையில் எடுத்துச் சொல்வதும், மற்றவர்கள் கூறுபவற்றின் நுட்பமான பொருளை அறிந்து உணர்வதும் அறிவாகும்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

Thursday, September 24, 2020

423. தொழிற்சாலை விரிவாக்கம்

சசி இண்டஸ்ட்ரீஸ்தொழிற்சாலை விரிவாக்கம் பெரிய அளவில் திட்டமிடப்பட்டு நடந்து கொண்டிருந்தது. 

ஒரு புகழ் பெற்ற தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தால் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சசி இண்டஸ்ட்ரீஸின் உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவால் செயலாக்கம் செய்யப்பட்டு வந்தது.

விரிவாக்கத் தொழில்கூடத்துக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு இயந்திரங்கள் வாங்கப்பட்டு அவை நிறுவப்பட்டுக் கொண்டிருந்தன. இன்னும் சில வாரங்களில் பணிகள் முடிந்து தொழில்கூடம் உற்பத்தியைத் துவக்கத் தயாராகி விடும்.

நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சசிசேகர் தலைமைப் பொறியாளர் சாமுவேலைத் தன்அறைக்கு அழைத்தார்.

"நாம இறுதிக் கட்டத்தில இருக்கோம். ஆனா ஒரு சின்ன மாறுதலுக்கான யோசனை வந்திருக்கு. மெஷின் லே-அவுட்ல ஒரு சின்ன மாறுதல் செஞ்சா ப்ரொடக்‌ஷன் லைன் இன்னும் ஸ்மூத்தா இருக்கும்னு ஒரு சஜஷன் வந்திருக்கு. அதை நீங்க பரிசீலிக்கணும்" என்றார் சசிசேகர்.

"நிச்சயமா சார்! யாரோட யோசனை சார் இது?" என்றார் சாமுவேல்.

"நிச்சயமா என்னோடது இல்ல!" என்று சொல்லிச் சிரித்த சசிசேகர் அந்த யோசனையை விளக்கினார்.

"சரி சார்! என் டீம்ல இதைப் பத்தி விவாதிக்கறேன்" என்றார் சாமுவேல்.

அடுத்த நாள் சசிசேகரின் அறைக்கு வந்த சாமுவேல், "சார்! டீம்ல இதை டிஸ்கஸ் பண்ணினோம். அது சரியா வராதுன்னு நினைக்கிறோம். இப்ப இருக்கற லே-அவுட்தான் சார் பெஸ்ட்!" என்றார்.

"சரி!" என்றார் சசிசேகர்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு சசிசேகர் சாமுவேலை மீண்டும் தன் அறைக்கு அழைத்தார்.

"மிஸ்டர் சாமுவேல்! நான் உங்ககிட்ட சொன்ன சஜஷன் பத்தி நம்ப கன்சல்டன்ட் கிட்ட கேட்டேன். அவங்க இது ரொம்ப நல்ல யோசனைன்னு சொல்றாங்க. அந்த மாறுதல் ரொம்பவும் பயனுள்ளதா இருக்கும்னு சொன்னதோட எங்களுக்கு இது தோணாம போச்சேன்னு சொன்னாங்க! இந்த மாறுதலைப் பண்ணி புது லே-அவுட்டை அவங்க ரெண்டு மூணு நாள்ள அனுப்புவாங்க. அது வரையிலேயும் வெயிட் பண்ணுங்க!" என்றார்.

"சாரி சார்!" என்றார் சாமுவேல்..

"நீங்க சாரி சொல்ல வேண்டியது எங்கிட்ட இல்ல, நம்ப மெஷின் ஆபரேட்டர் குமாரசாமி கிட்டதான்!"

"என்ன சார் சொல்றீங்க?" என்றார் சாமுவேல்.

"ஆமாம், இந்த யோசனையைச் சொன்னது குமாரசாமிதான். உங்க டீம்ல இருக்கற ஒரு எஞ்சினியர் கிட்ட அவர் இதைச் சொல்ல முயற்சி செஞ்சருக்காரு. அவரு அதைக் காது கொடுத்துக் கேக்கவே இல்லை. அதனால அவரு எங்கிட்ட வந்து சொன்னாரு. ஒரு வேளை இது என்னோட யோசனைன்னு நான் உங்க கிட்ட சொல்லி இருந்தா நீங்க இதை ஏத்துக்கிட்டிருப்பீங்களோ என்னவோ!" என்று சொல்லிச் சிரித்தார் சசிசேகர். 

பொருட்பால் 
அரசியல் இயல்
அதிகாரம் 43
அறிவுடைமை 
குறள் 423:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பொருள்:
எந்த விஷயத்தை யார் சொல்லக் கேட்டாலும் அந்த விஷயத்தின் உண்மைத்தன்மையைக் கண்டறிவதே அறிவாகும்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

Tuesday, September 8, 2020

422. கண் போன போக்கிலே!

"நாளைக்கு ஒரு இன்டர்வியூ இருக்கு. அதுக்குத் தயார் செய்யணும்!" என்றான் ஆதித்தன்.

"நீங்க என்ன புதுசாவா வேலைக்குப் போறீங்க? ஏற்கெனவே ஒரு நல்ல வேலையில இருக்கீங்க. இப்ப இன்னும் சிறப்பான வேலைக்கு முயற்சி பண்றீங்க. இதுக்குக் கூடவா தயார் செய்யணும்?" என்றாள் அவன் மனைவி ரேணுகா.

"பதுசா வேலைக்கு முயற்சி பண்றப்ப படிச்ச படிப்பையும், பொது அறிவையும் தவிர வேற எதுவும் தெரிஞ்சுருக்கணும்னு எதிர்பார்க்க மாட்டாங்க. என்னை மாதிரி நிறைய அனுபவத்தோட ஒரு உயர்ந்த பதவிக்கு முயற்சி பண்றவங்க கிட்ட நிறைய எதிர்பார்ப்பாங்க. என்னோட நிறுவனம் ஈடுபட்டிருக்கிற தொழில் துறை சம்பந்தமா நிறையத் தெரியணும். நல்லவேளை இன்டர்நெட்னு ஒண்ணு இருக்கு. அதில நிறைய விஷயங்களுக்கும் இருக்கு!"

"மணி பத்து ஆயிடுச்சே! நாளைக்குக் காலையில பத்து மணிக்கு இன்டர்வியூ.. எவ்வளவு நேரம் இன்டர்நெட் பாக்கப்போறீங்க?"

"தெரியல. இன்டர்நெட் ஒரு வரம்தான். ஆனா அதில தேட ஆரம்பிச்சா முடிவில்லாம போய்க்கிட்டே இருக்கும். இது இன்டர்நெட்டோட சாபக்கேடு!. என்ன செய்யறது? ஒரு மணி ரெண்டு மணி கூட ஆகும். நீ போய்த் தூங்கு" என்று மனைவியை அனுப்பி விட்டு கூகிள் கதவைத் தட்டினான் ஆதித்தன்.

டுத்த நாள் இன்டர்வியூ முடிந்து வீட்டுக்கு வந்த ஆதித்தனிடம் "எப்படி இருந்தது இன்டர்வியூ?" என்றாள் ரேணுகா.

"நல்லாப் போகல!" என்றான் ஆதித்தன் ஏமாற்றத்துடன்.

"ராத்திரி அவ்வளவு நேரம் கண் முழிச்சு இன்டர்நெட்ல படிச்சு தயார் பண்ணிக்கிட்டுப் போனீங்களே, அது கை கொடுக்கலியா?" என்றாள் ரேணுகா.

சில விநாடிகள் மௌனமாக இருந்த ஆதித்தன், "இன்டர்நெட்ல என் நேரத்தை சரியாப் பயன்படுத்தி இருந்தா, இன்டர்வியூவில கேட்ட பல கேள்விகளுக்கு என்னால நல்லா பதில் சொல்லி இருக்க முடியும். வேலையும் எனக்குக் கிடைச்சிருக்கலாம்!" என்றான் ஆதித்தன்.

"நேரத்தை சரியா பயன்படுத்தலையா? அப்படின்னா அவ்வளவு நேரம் என்ன பாத்துக்கிட்டிருந்தீங்க?"

"இன்டர்நெட் பாத்துக்கிட்டிருந்தப்ப வீட்டிலிருந்தே தொழில் செஞ்சு பணம் சம்பாதிக்கலாம்னு ஒரு விளம்பரத்தைப் பாத்துட்டு அது என்னன்னு பாக்கலாம்னு கிளிக் பண்ணி அதைப் பத்திப் படிச்சுப் பாத்தேன். படிச்சப்பறம்தான் அது எனக்கு ஒத்து வரதுன்னு புரிஞ்சது. அப்புறம் அது மாதிரி இன்னும் சில விளம்பரங்கள் வந்தது. அதில சிலதெல்லாம் ரொம்ப கவர்ச்சியாத் தெரிஞ்சதால, அதையெல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். இதிலேயே ரெண்டு மணி நேரம் ஓடிடுச்சு. ஆனா எதுவுமே எனக்குப் பயன்படாததா இருந்தது. நேரத்தை வீணாக்கிட்டமேன்னு என் பேரிலேயே எரிச்சல் வந்தது. அப்புறம் படிக்க மூட் இல்ல. படுத்துத் தூங்கிட்டேன்."

"ஏங்க, நீங்க இவ்வளவு படிச்சவரு, அனுபவம் உள்ளவரு, விஷயம் தெரிஞ்சவரு. ஏன் இப்படிப் பண்ணினீங்க?"

"என்ன செய்யறது? மனசை அது போற போக்கில விட்டா அப்படித்தான். இது ஒரு பாடம்! விடு, வேற நல்ல சந்தர்ப்பம் வரும். பாக்கலாம்" என்றான் ஆதித்தன், வலுவில் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்.

"பாருங்க உங்களுக்கு ஏத்த மாதிரி டிவியில ஒரு பாட்டு போடறாங்க!" என்றாள் மனைவி சிரித்தபடி.

'கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போனபோக்கிலே மனிதன் போகலாமா'

என்ற பாடல் தொலைக்காட்சியில் ஒலித்தது.

"உங்களுக்காகவே கண்ணதாசன் எழுதின மாதிரி இல்ல?" என்றாள் ரேணுகா கேலி ததும்பிய குரலில்.

"இல்லை"

"இல்லையா?"

"இல்லை! இதை எழுதினவர் கண்ணதாசன் இல்லை, வாலி!" என்றான் ஆதித்தன் சிரித்தபடி. 

பொருட்பால் 
அரசியல் இயல்
அதிகாரம் 43
அறிவுடைமை 
குறள் 422:
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

பொருள்:
மனம் போகும் வழியில் எல்லாம் அதைப் போக விடாமல், தீயவற்றிலிருந்து  விலக்கி, அதை நல்ல வழியில் நடத்துவதே அறிவு.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம். தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்ம...