Thursday, January 28, 2021

450. தந்தையின் நண்பர்

"இங்க பாருங்க சார்! என் அப்பா உங்களைத் தன் நண்பர்ங்கறதுக்காக ஏகப்பட்ட சம்பளம் கொடுத்து இந்த ஆஃபீஸ்ல உக்கர வச்சிருந்தாரு. இப்ப அவர் போய்ச் சேந்துட்டாரு. அதனால உங்களுக்கு இங்க வேலை இல்லை!"

சசீதரனின் கடுமையான சொற்களைக் கேட்டு அந்த அலுவலகத்திலிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

நண்டபாணி புன்னகையுடன், "ரொம்ப நன்றிப்பா!" என்று சொல்லி விட்டுத் தன் பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

ன்று மாலை அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் திருச்செல்வத்தைத் தன் அறைக்கு அழைத்த சசீதரன் நிர்வாகத்தில் தான் செய்ய விரும்பிய மாறுதல்களைப் பற்றி அவரிடம் விவரித்தான்.

"சரி சார்! நீங்க சொன்னதையெல்லாம் செஞ்சுடலாம். ஆனா நீங்க தப்பா நினைக்கலேன்னா ஒரு விஷயம்!" என்றார் திருச்செல்வம் தயக்கத்துடன்.

"சொல்லுங்க!" என்றான் சசீதரன்.

"தண்டபாணி சாரைப்பத்தி...."

"நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு தெரியும். அவர் என் அப்பா இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சதிலிருந்தே அவரோட இருந்திருக்காரு. என் அப்பா அவர்கிட்ட யோசனை கேக்காம எதையும் செஞ்சதில்ல. அந்த நிறுவனம் இவ்வளவு பெரிசா வளர்ந்ததுக்கு அவரும் ஒரு முக்கியக் காரணம்... இதெல்லாம்தானே?"

"சார்! எல்லாம் தெரிஞ்சுமா?"

"இந்தப் புராணத்தையெல்லாம் எங்கப்பாகிட்டயே நிறையக் கேட்டிருக்கேன். எஸ்! இதெல்லாம் புராணம் மாதிரி வெறும் சென்ட்டிமென்ட்தான். எங்கப்பா தன்னோட பணத்தைப் பொட்டு ஆரம்பிச்ச இந்த நிறுவனத்தில இவரு ஒட்டுண்ணி மாதிரி ஒட்டிக்கிட்டுத் தான்தான் எல்லாத்தையும் செய்யற மாதிரி ஒரு பிம்பத்தை உருவாக்கி இருக்காரு. என் அப்பாவோட அறையில அவருக்கு எதிர்ல உக்காந்து அரட்டை அடைச்சுக்கிட்டு அவர் செஞ்சதையெல்லாம் தான் சொல்லித்தான் அவர் செஞ்சதா அவரை நம்ப வச்சு இத்தனை வருஷமா அவரை ஏமாத்திக்கிட்டு வந்திருக்காரு. என் அப்பா அவர்கிட்ட ஏமாந்திருக்கலாம். நான் ஏமாறத் தயாராயில்ல" என்றான் சசீதரன் ஆவேசமாக.

"சார்! நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. தண்டபாணி சார் உங்கப்பாவுக்கு ஒரு பெரிய பலமா இருந்தாரு. நானே நிறைய சமயங்கள்ள பாத்திருக்கேன்..."

"நாம வேற விஷயத்தைப் பேசலாமா?"

"என்ன சார் நடக்குது? இந்த அஞ்சு வருஷமா நான் எத்தனையோ புது விஷயங்கள்ளாம் செஞ்சு இந்த நிறுவனத்தைப் பெரிய லெவலுக்குக் கொண்டு போக முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன். ஆனா நாம பின்னாலதான் போய்க்கிட்டிருக்கோம். நம்ம நிறுவனத்தோட சரித்திரத்திலேயே முதல் தடவையா நமக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கு. நமக்கு காம்பெடிஷன் கூட அதிகமா இல்ல. ஆடிட்டர் சிரிக்கிறாரு. 'எப்படிப்பா இவ்வளவு வேகமா கம்பெனியை சறுக்க வச்சிருக்க!'ன்னு என்னைக் கிண்டல் பண்றாரு. நீங்கள்ளாம் என்ன பண்றீங்கன்னே தெரியல!"

திருச்செல்வம் மௌனமாக இருந்தார்.

"நமக்கு அதிக காம்பெடிஷன் இல்லதான். நாங்கள்ளாம் நல்லாத்தான் வேலை செய்யறோம். நீங்களும் புதுசாப் பல விஷயங்களைச் செய்யறீங்கதான். ஆனா ஒரு நல்ல வழிகாட்டியா இருந்தவரை அலட்சியமாத் தூக்கிஎறிஞ்சுட்டீங்களே, அதோட விளைவுகள்தான் இது' என்று தன் மனதுக்குள் அவர் கூறிக்கொண்டது சசீதரனுக்குக் கேட்டிருக்காதுதான்.

அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  
குறள் 450
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

பொருள்:
நல்லவராகிய பெரியோரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக் கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

449. ராணியின் யோசனை

"இன்று சபையில் ஏதாவது வழக்கு இருக்கிறதா?" என்றார் மன்னர் தாசரதி.

"ஒரு வழக்கு இருக்கிறது அரசே!" என்றார் அமைச்சர்.

"என்ன வழக்கு?"

"ஒரு வியாபாரி பலரிடமும் கடன் வாங்கி அவற்றைத் திருப்பிக் கொடுக்கவில்லை. கடன் கொடுத்தவர்கள் அவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்."

"ஏன் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லையாம்?"

"அவர் முதல் எதுவும் போடாமல், பொருட்களைப் பெரிய வியாபாரிகளிடமிருந்துக் கடனுக்குக் கொள்முதல் செய்து வியாபாரம் செய்திருக்கிறார். அன்றாடச் செலவுகளுக்குக் கூடப் பணம் இல்லாமல் எல்லாவற்றுக்கும் கடன் வாங்கிச் செலவு செய்திருக்கிறார். 

"வட்டிச் செலவே அதிகம் ஆனதால் வியாபாரத்தில் லாபம் கிடைக்காமல் நஷ்டம் அடைந்து கொண்டே வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வியாபாரத்தை நடத்த முடியாமல் மூடி விட்டார். கடன்காரர்களுக்குக் கொடுக்கப் பணம் இல்லை. 

"அவரிடம் வேலை செய்த ஊழியர்களுக்குக் கூட மூன்று மாதங்களாக ஊதியம் கொடுக்கவில்லையாம். அவர் சொத்துக்களைப் பறிமுதல் செய்து கடன்காரர்களுக்குக் கொடுக்கலாமென்றால், அவரிடம் சொத்து எதுவும் இல்லை."

"முதல் இல்லாமல் வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்கலாமென்று நினைத்த அவன் ஒரு வடிகட்டின முட்டாளாகாத்தான் இருக்க வேண்டும்.  நீங்களே அவனை விசாரித்துக் கடுமையான தண்டனை கொடுங்கள். அவனிடம் சொத்துக்கள் இல்லாததால் கடன் கொடுத்தவர்களுக்கோ, ஊழியர்களுக்கோ நம்மால் உதவ முடியாது என்று சொல்லி விடுங்கள்."

அமைச்சருக்கு உத்தரவிட்டு விட்டு அந்தப்புரத்துக்குச் சென்று விட்டார் அரசர் தாசரதி.

"நீங்கள் வழக்கு பற்றி அமைச்சரிடம் பேசிக் கொண்டிருந்ததை உப்பரிகையிலிருந்து  கேட்டேன்" என்றாள் மகாராணி வனவாணி.

"என்ன செய்வது? முதல் இல்லாமலே வியாபாரம் நடத்தும் முட்டாள்கள் இருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம்!" என்றார் மன்னர் சலித்துக் கொண்டே.

"பல நாட்களாகவே உங்களிடம் ஒன்று கேட்க வேண்டுமென்று நினைத்தேன். உங்கள் தந்தை உங்களுக்கு ஏன் தாசரதி என்று பெயர் வைத்தார்?"

"ராமனின் தந்தையான தசரதரின் வழி வந்தவன் என்ற பொருள் படும்படி எனக்குப் பெயரிட்டிருக்கிறார் என் தந்தை. தசரத சக்கரவர்த்தியைப் போல் ஒரு பேரரசனாக நான் விளங்க வேண்டும் என்பது அவர் அவா!"

"சொல்கிறேனே என்று தவறாக நினைக்காதீர்கள். உங்கள் தந்தை காலத்தில் இருந்த நாட்டின் பரப்பு உங்கள் காலத்தில் குறுகி விட்டதே!"

"என்ன செய்வது? சில சிற்றரசர்கள் கலகம் செய்து நம் நாட்டிலிருந்து பிரிந்து தங்கள் பகுதிகளைத் தனி நாடுகளாக அறிவித்து விட்டார்கள்."

"இன்னும் சில சிற்றரசர்கள் கூடக் குழப்பம் விளைவித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்களே!"

"ஆமாம். இன்னும் சில பகுதிகள் கூட நம்மிடமிருந்து பிரிந்து தனி நாடுகளாகி விடொமோ என்று எனக்குக் கவலையாகத்தான் இருக்கிறது" என்றார் மன்னர் கவலையுடன்.

"இதற்கெல்லாம் என்ன காரணம் என்று யோசித்தீர்களா?" என்றாள் மகாராணி.

"நான் வலுவற்றவன் என்று சொல்லிக் காட்டுகிறாயா?" என்றார் மன்னர் கோபத்துடன்.

"இல்லை அரசே! இது உங்கள் வலுவைப் பற்றிய விஷயம் இல்லை. உங்களுக்கு வலிமை இருக்கிறது. ஆனால் அந்த வலிமையைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய அடித்தளம் இல்லை."

"என்ன சொல்கிறாய் வனவாணி?"

"உங்கள் தந்தை நீங்கள் தசரதரைப் போல் விளங்க வேண்டுமென்று விரும்பினார். தசரதரின் பெருமைக்குக் காரணம் அவருடைய வலிமை மட்டுமல்ல, அவருக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனை கூறி வழி நடத்த வசிஷ்டர் என்ற பெரிய அறிஞர் அவர் அவையில் இருந்ததும்தான்."

தாசரதி மௌனமாக இருந்தார்.

"உங்களுக்கும் சந்திரசூடர் என்ற ஒரு அறிஞர் அமைச்சராக இருந்தார். ஏதோ ஒரு கோபத்தில் நீங்கள் அவரைக் கடிந்து கொண்டதால் அவர் நம் நாட்டை விட்டே போய் விட்டார். சிந்தித்துப் பாருங்கள். அவர் உங்களுடன் இருந்த காலத்திலும் ஒரு சில சிற்றரசர்கள் பிரச்னை செய்யவில்லையா? அவர் அவர்களைத் திறமையாகச் சமாளித்து தொடர்ந்து உங்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல்படச் செய்யவில்லையா? இப்போதும் - வேறு சில சிற்றரசர்கள்  பிரிந்து போன பிறகும் - அவர்கள் உங்களுக்கு ஆதரவாகத்தானே இருக்கிறார்கள்? 

"சந்திரசூடர் எங்கே இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. ஒரு நல்ல தூதரை அனுப்பியோ அல்லது நீங்களே நேரில் சென்றோ அழைத்தால் அவர் நிச்சயம் திரும்பி வருவார். நீங்கள் இழந்தவற்றைக் கூட உங்களால் திரும்ப்ப் பெற முடியும்"

தாசரதி யோசனையில் ஆழ்ந்தார். 

அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  
குறள் 449
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

பொருள்:
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அது போல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாத அரசனுக்கு நிலையான அரசாட்சி இல்லை.
அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால்

Wednesday, January 27, 2021

448. முன் கூட்டியே தேர்தல்

"ஜனநாயகத்தை அழிக்கறதுக்கு ரொம்ப வலுவான கருவி எது தெரியுமா?"

"எது?"

"ஜனநாயகம்தான்!"

"எப்படிச் சொல்றே!"

"நம்ம மஹேந்திரா ஜனநாயக முறையிலதானே நம்ம நாட்டோட ஜனாதிபதி ஆனாரு? இப்ப எப்படி ஜனநாயகத்தை அழிச்சுக்கிட்டிருக்காரு பார்!"

"ஜனநாயகத்தை அழிச்சுக்கிட்டிருக்காருன்னு எப்படிச் சொல்றே? நம்ம நாட்டில மக்கள் மன்றம், பத்திரிகைகள், மத்த ஊடகங்கள் எல்லாம் இயங்கிக்கிட்டுத்தானே இருக்கு?"

"இயங்கிக்கிட்டுத்தான் இருக்கு - மஹேந்திராவோட விருப்பத்தின்படி! மக்கள் மன்றத்தில அரசாங்கத்தை எதிர்த்துக் குரல் கொடுக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பயப்படறாங்க. 

"அப்படி யாராவது பேசினா, அடுத்த நாளே அவர் வீட்டில வருமான வரி சோதனை நடக்குது. ஏகப்பட்ட பணமும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதா செய்தி வருது. அப்புறம் அவர் வழிக்கு வந்துடறாரு. வருமான வரிச் சோதனை மேல நடவடிக்கை எதுவும் எடுக்கப்படறதில்ல!

"ஊடகங்கைள்ள அரசாங்கத்துக்கு எதிரா கருத்து சொல்ற சானல்கள் கொஞ்ச நாள்ள அரசாங்கத்துக்குத் துதி பாட ஆரம்பிச்சுடறாங்க. திடீர்னு ஏன் அவங்க தங்களோட கருத்தை மாத்திக்காட்டாங்கங்கறது அவங்களுக்கும் அரசாங்கத்துக்கும்தான் வெளிச்சம்! 

"அரசாங்கத்துக்கு எதிரா கருத்து சொல்ற ஊடக ஆசிரியர்கள், செய்தியாளர்கள்ளாம் காரணமே இல்லாம நீக்கப்படறாங்க, இல்லை பதவி விலகறாங்க.

"சமூக ஊடகங்ள்ள அரசாங்கத்தை ஆதரிக்கறவங்க எழுதற அவதூறுக் கருத்துக்கள், பொய்யான தகவல்கள் மேல எந்த நடவடிக்கையும் எடுக்கப்படறதில்ல. 

"ஆனா அரசாங்கத்தோட செயல்பாடுகளைக் குறை சொல்லி யாராவது கருத்துச் சொன்னாக் கூட, அவங்க மேல அவதூறு வழக்கு, கைதுன்னெல்லாம் நடவடிக்கை பாயுது. அதோட ஆளுங்கட்சி உறுப்பினர்களோட வன்முறையையும் அவங்க எதிர்நோக்க வேண்டி இருக்கு. 

"அதனால இந்த அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களே வெளிப்படறதில்லை. நீதிமன்றங்கள் கூட இந்த அரசாங்கத்தோட தவறுகளைக் கண்டிக்கறதில்ல. 

Kஉன்னை மாதிரி பல பேர் நடக்கறது எதையும் பார்க்காம கண்ணை மூடிக்கிட்டு, 'எல்லாம் சரியாத்தானே இருக்கு?'ன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. இதுதான் நம் நாட்டோட பரிதாபமான நிலைமை."

"நீ இப்ப எங்கிட்ட இந்த அரசாங்கத்தைக் குறை சொல்லிப் பேசிக்கிட்டிருக்கியே! இது ஜனநாயகத்துக்கான அடையாளம் இல்லையா?"

"யப்பா! நீ என் நண்பன்கறதால உங்கிட்ட தைரியமா சொல்லிக்கிட்டிருக்கேன். நான் இப்படிப் பேசினேன்னு தயவு செஞ்சு நீ யார்கிட்டயும் சொல்லி வைக்காதே! அவங்க வேற யார்கிட்டயாவது சொல்லி, இந்த அரசாங்கத்தோட அடிமை சேவகர்கள் யார் காதுக்காவது இது போச்சுன்னா அவ்வளவுதான்! என்னை தேசத்துரோகின்னு சொல்லி உள்ள தள்ளிடுவாங்க."

னாதிபதி மஹேந்திரா தன் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

"அடுத்த வருஷம்தான் தேர்தல் நடக்கணும். ஆனா ஒரு வருஷம் முன்னாலேயே தேர்தலை நடத்திடலாம்னு நினைக்கிறேன். நாட்டில நிலைமை எப்படி இருக்கு?"

"மக்கள் எல்லோரும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்க. யாருக்கும் எந்தக் குறையும் இல்ல. எல்லோருமே உங்களுக்குத்தான் ஓட்டுப்போடுவாங்க" என்றார் உளவுத்துறையின் மூத்த அதிகாரி.

"அப்படின்னா, உடனே தேர்தலை வச்சுடறேன். அடுத்த வருஷம் நிலைமை எப்படி இருக்குமோ தெரியல" என்றார் மஹேந்திரா.

"என்னையா இப்படி ஆயிடுச்சு? உளவுத்துறை அதிகாரிங்கள்ளாம் சொன்னதை வச்சுத்தானே தேர்தலை வச்சேன்? இல்லேன்னா இன்னொரு வருஷம் பதவியில இருந்திருக்கலாமே!" என்றார் மஹேந்திரா தன் கட்சியின் மூத்த தலைவர்களிடம்.

"அரசாங்கத்தின் மேல இருக்கற பயத்தால மக்கள் வெளிப்படையா குறை எதுவும் சொல்லாம தங்களோட கோபத்தை வாக்குச் சீட்டு மூலமா வெளிப்படுத்திட்டாங்க. 

"அரசாங்கத்தை விமரிசனம் பண்ணினவங்களையெல்லாம் மொத்தமா ஒழிச்சுட்டீங்க. அதனால உங்ககிட்ட உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லவே  ஆள் இல்லாம போயிட்டாங்க. 

"உளவுத்துறை அதிகாரிகள் உங்ககிட்ட உண்மை நிலவரத்தைச் சொன்னாங்களோ,  இல்ல கசப்பான உண்மையைச் சொன்னா உங்களுக்குப் பிடிக்காதுங்கற பயத்தில உங்களை சந்தோஷப்படுத்தறதுக்காகப் பொய்யான தகவல்களைச் சொன்னாங்களோ! 

"உங்களோட தன்னிச்சையான செயல்பாடுகள்னால, மக்கள்  ஜனாதிபதி தேர்தல்ல, உங்களைப் படுதோல்வி அடைய வச்சதும் இல்லாம, மக்கள் மன்றத் தேர்தல்லே நம்ம கட்சிக்கு அஞ்சு இடங்களை மட்டுமே கொடுத்து நம்ம கட்சியையும் துடைச்சு எடுத்துட்டாங்க. புது அரசாங்கத்தில உங்க மேல வழக்குப் போட்டு உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கப் பார்ப்பாங்க. நம்ம கட்சிகிட்டேந்து உங்களுக்கு எந்த ஆதரவையும் எதிர்பாக்காதீங்க. கட்சியில எல்லாருமே உங்க மேல கோபமாத்தான் இருக்காங்க - என்னையும் சேர்த்து!" என்று பொரிந்து தள்ளினார் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர். 

அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  

குறள் 448:
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

பொருள்:
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாத அரசன், தன்னைக் காக்க யாரும் இல்லாதவனாக, தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
    
  அறத்துப்பால்                                                                                        காமத்துப்பால்

Monday, January 25, 2021

447.உங்களைப் போல் ஒருவர்!

"உனக்கு அறிவிருக்காடா? ஒரு சின்னப் பையன் செய்யற வேலையா இது?"

15 வயதில் நான் திருட்டு 'தம்' பிடித்ததைத் தெரிந்து கொண்டு என் தாத்தா என்னைக் கடிந்து சொன்னது இது.

"ஏதோ சின்னப்பையன் தெரியாம செஞ்சுட்டான். அப்பா அம்மா இல்லாத பிள்ளையா இப்படியா திட்டுவாங்க?" என்றாள் என் பாட்டி. சொல்லும்போதே அவர் கண்களில் துளிர்ந்த கண்ணீரை என்னால் பார்க்க முடிந்தது.

"அப்பா அம்மா இல்லாததாலதான் நான் அவனைக் கண்டிச்சு வளக்க வேண்டி இருக்கு. டேய், இன்னொரு தடவை நீ சிகரெட் குடிச்சேன்னா உனக்குச் சோறு கிடையாது. நீ சிகரெட்டையே சாப்பாடா வச்சுக்க வேண்டியதுதான்!" என்றார் தாத்தா கடுமை சற்றும் குறையாமல்.

என் சிகரெட் பழக்கம் அன்றே முளையில் கிள்ளி எறியப்பட்டது.

"என்னங்க? சின்ன வயசிலியே உங்க அப்பா அம்ம இறந்துட்டதால, உங்களை  உங்க தாத்தா பாட்டி வளத்திருக்கறதால நீங்க அவங்ககிட்ட அன்போடயும் மரியாதையோடயும் இருக்கறது சரிதான். 

"இப்ப உங்க தாத்தாவுக்கு எண்பது வயசாகுது, உங்களுக்கு முப்பது வயசாகுது. இப்பவும் எல்லா விஷயத்திலேயும் அவர்கிட்ட யோசனை கேக்கறீங்க. 

"நீங்க செய்யறது தப்புன்னு நினைச்சா ஏதோ சின்னப் பையனைத் திட்டற மாதிரி அவர் உங்களைக் கடுமையாப் பேசறாரு. நீங்க சந்தோஷமா அவர் திட்டறதைக் கேட்டுக்கிட்டிருக்கீங்க! 

"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்ம அஞ்சு வயசுப் பையன் கூட 'ஏம்மா அப்பாவோட தாத்தா அப்பாவைத் திட்டறாரு?'ன்னு கேக்கறான். நீங்க அவர்கிட்ட அதிகமாப் பேச்சு வச்சுக்காம இருக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன்." என்றாள் என் மனைவி.

"சின்ன வயசிலேந்து என் தாத்தா என்னைக் கண்டிச்சு வளத்ததாலதான் நான் வாழ்க்கையில முன்னுக்கு வந்திருக்கேன். இப்ப சொந்தமாத் தொழில் செய்யற அளவுக்கு வந்திருக்கேன். 

"என் தொழிலைப் பத்தி தாத்தாவுக்கு எதுவும் தெரியாட்டாக் கூட, முக்கியமான விஷயங்களை அவர்கிட்ட கேட்டுக்கிட்டுத்தான் செய்வேன். 

என் தொழிலைப் பத்தின நுணூக்கங்கள் தாத்தாவுக்குத் தெரியாட்டாலும் நல்லது கெட்டது அவருக்குத் தெரியும். நான் செய்யறது தப்புன்னா அவர் என்னைக் கண்டிக்கத் தயங்க மாட்டாரு. 

"ஏன், நான் கல்லூரியில படிச்சப்ப காதல்ங்ற மாயையில மாட்டிக்க இருந்தேன். தாத்தாதான் அந்த வயசில என்னால வாழ்க்கையைப் பத்தி சரியா எடுக்க முடியாதுன்னு சொல்லி என்னை வழிப்படுத்தினாரு. அதனாலதான் உன்னை மாதிரி அருமையான மனைவி எனக்குக் கிடைச்சிருக்கே! 

"தாத்தாவுக்கு வயசாயிடுச்சு, இன்னும் எத்தனை காலத்துக்கு அவரோட வழிகாட்டல் எனக்குக் கிடைக்கும்னு தெரியல, நான் தப்பு வழியில போனா, என்னைக் கண்டிச்சு வழி நடத்த வேற யார் கிடைப்பாங்கங்கறதுங்ங்கறதுதான் என் கவலை!" 

அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  
குறள் 447
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

பொருள்:
கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரைக் கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்?
அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால்

Sunday, January 24, 2021

446. அமைச்சரவைக் கூட்டம்

தேர்தல் முடிந்து முதலமைச்சராகப் பதவியேற்ற குணசீலன் அமைச்சரவை அமைப்பது பற்றி கட்சியின் தலைவர் குமரவேலுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தான்.

"இந்தத் தடவை நாம இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதுக்கு முழுக்க முழுக்க உங்களோட பிரசாரமும் வியூகங்களும்தான் காரணம். அதனால மந்திரி சபையை உங்க விருப்பபடி அமைச்சுக்கங்க. நான் யாரையும் சிபாரிசு செய்யப் போறதில்ல!" என்றார் குமரவேல்.

"நன்றி ஐயா! உங்க வழிகாட்டலும், ஊக்கமும்தான் எனக்கு உந்துதலா இருந்தது. இதை நான் மனசாரச் சொல்றேன்" என்றான் குணசீலன்.

"தெரியும் குணா. போன தடவை நீங்க முதல் தடவையா முதலமைச்சரா இருந்தபோது மற்ற தலைவர்கள் உங்களுக்குக் கொடுத்த அழுத்தங்கள், தொந்தரவுகள், அவங்க செஞ்ச தவறுகள் இதனால் எல்லாம்தான் நாம போன தடவை தோத்தோம். நானும் அவங்களைக் கட்டுப்படுத்தத் தவறிட்டேன். இந்தத் தடவை அந்த மாதிரி நடக்கக் கூடாதுங்கறதுக்காகத்தான் நீங்க முழு அளவு சுதந்திரத்தோட செயல்படணும்னு நினைக்கறேன்."

"அதுக்கு அமைச்சர்களை சரியாத் தேர்ந்தெடுத்தா மட்டும் போதாது. நான் ஒரு யோசனை வச்சிருக்கேன். அதைச் செயல்படுத்த உங்க அனுமதி வேணும்."

"சொல்லுங்க."

குணசீலன் சொல்லி முடித்ததும், "அருமையான யோசனை. அப்படியே செய்யுங்க. என்னோட முழு ஆதரவும் உங்களுக்கு உண்டு" என்றார் குமரவேல் உற்சாகமாக.

மைச்சரவையின் முதல் கூட்டம் துவங்கியது.

"என்ன தலைவரே, இப்படிப் பண்ணிட்டீங்க?" என்றார் மூத்த அமைச்சர் அரசகுமார்.

"என்ன பண்ணிட்டேன்?" என்றான் குணசீலன் சிரித்துக் கொண்டே.

"நாங்க 30 பேரு அமைச்சரா இருக்கோம். ஆனா உங்களுக்குன்னு ஆறு சிறப்புச் செயலாளர்களை நியமிச்சிருக்கீங்க. ஐந்து அமைச்சர்களுக்கு ஒத்தர்னு பிரிச்சு எல்லா ஃபைல்களையும் நாங்க அவங்களுக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கணும்னு ஒரு நடைமுறையைக் கொண்டு வந்திருக்கீங்க. இது என்ன கேபினட்டுக்கு மேல ஒரு சூப்பர் கேபினட் மாதிரி இல்ல இருக்கு?" என்றார் அரசகுமார் சற்றுக் கோபமாக.

"அதோட இது அரசில் சட்டத்துக்கு முரணானதுன்னு நினைக்கிறேன்" என்றார் கமலநாதன் என்ற அமைச்சர். அவர் படித்தவர், விவரம் அறிந்தவர் என்று கருதப்படுபவர்.

"இதில அரசியல் சட்டத்துக்கு முரணானது எதுவும் இல்ல. முதலமைச்சர் தனக்கு சிறப்புச் செயலாளர்களா யாரை வேணும்னா நியமிச்சுக்கலாம். ஃபைல்கள்ள அவங்க கையெழுத்துப் போட மாட்டாங்க. அவங்க கருத்துக்களை எழுதி எனக்கு அனுப்புவாங்க. நான்தான் ஃபைல்கள்ள  என்னோட ஒப்புதலோடயோ அல்லது வேற முடிவொடயோ திருப்பி அனுப்புவேன்" என்று கமலநாதனுக்கு முதலில் பதில் கூறிய குணசீலன், அரசகுமாரரிடம் திரும்பினார்.

"அண்ணே! போன தடவை நம்ம ஆட்சியில நிறையத் தவறுகள் நடந்துடுச்சு. அதனாலதான் நாம தோத்துட்டோம். இந்த முறை அப்படி நடக்காம, நம்ம ஆட்சி மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்யறதா, குறைகள் இல்லாததா இருக்கணும்னு கட்சித் தலைவர் எங்கிட்ட சொல்லி இருக்காரு.

"நீங்கள்ளாம் தப்பு பண்ணக் கூடியவங்கன்னு நான் சொல்லல. தெரியாம கூடத் தவறுகள் நடக்காலாம். நான் நியமிச்சிருக்கறவங்க விஷயம் தெரிஞ்சவங்க, நேர்மையானவங்க, சமூக அக்கறை உள்ளவங்க. அவங்க ஆலோசனை உங்களுக்குக் கூட உபயோகமாத்தான் இருக்கும். அமைச்சர்ங்கறத்துக்கான உங்க அந்தஸ்து, கௌரவம் இதுக்கெல்லாம் எந்தக் குறையும் வராம இருக்கற அளவுக்குத்தான் நான் இந்த ஏற்பாட்டை செஞ்சிருக்கேன். கொஞ்ச நாள் ஆனா, அவங்க ஆலோசனைகளும், வழிகாட்டலும் நமக்கு எவ்வளவு பயனுள்ளதா இருக்கும்னு நீங்ளே புரிஞ்சுப்பீங்க."

அனைவரும் அமைதியாக இருந்தனர்.

அனைவரையும் ஒருமுறை கண்களைச் சுற்றிப் பார்த்த குணசீலன், "உங்கள்ள யாருக்காவது இந்த ஏற்பாடு பிடிக்கலேன்னா, நீங்க அமைச்சரவையிலேந்து விலகிக்கலாம்!" என்றான் சிரித்தபடி.

அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  

குறள் 446:
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

பொருள்:
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு, அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.
  அறத்துப்பால்                                                                                        காமத்துப்பால்

Saturday, January 23, 2021

445. முதல்வருடன் ஒரு சந்திப்பு

பத்திரிகையாளர் கிளப்பில் குழுக்களாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்த ஒரே தலைப்பு நடந்து முடிந்திருந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றியும், கதிர்வேலன் புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டது பற்றியும்தான்.

சங்கரமணியும் அவருடைய பத்திரிகை உலக நண்பர் குழந்தைசாமியும் மட்டும் ஒரு மேஜையில் எதிரெதிரே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

"யாரைத் தீவிரமா எதிர்த்தீங்களோ அவரு தேர்தல்ல ஜெயிச்சு பதவிக்கு வந்துட்டாரு. இன்னும் அஞ்சு வருஷத்துக்கு அவர்தான் முதலமைச்சர். மத்தியில ஆள்ற கட்சியோடயும் அவரு நட்பா இருக்காரு. நீங்க என்ன செய்யப் போறீங்க?" என்றார் குழந்தைசாமி.

"செய்யறதுக்கு என்ன இருக்கு? தொடர்ந்து என் கருத்துக்களைச் சொல்லிக்கிட்டிருப்பேன். அரசாங்கத்திலேந்து எனக்கு நிறையத் தொந்தரவுகள் வரலாம். நாட்டு நலனுக்கு எதிரா எழுதினேன்னு சொல்லி வழக்குப் போடலாம், சிறையில அடைக்கலாம். எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கேன்!" என்றார் சங்கரமணி.

"எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசிங்க. ஆட்சியில இருக்கறவங்களைப் பகைச்சுக்கிட்டு வாழறது ரொம்பக் கஷ்டம்" என்று குழந்தைசாமி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு அருகே வந்த செந்தில் என்ற பத்திரிகையாளர், சங்கரமணியிடம் குனிந்து, "சார்! உங்ககிட்ட ஒரு நிமிஷம் தனியாப் பேசணும்!" என்றார்.

இது காதில் விழுந்ததும் குழந்தைசாமி, "சரி. நாம அப்புறம் பாக்கலாம்" என்றபடியே எழுந்து நின்றார்.

"நீங்க இருங்க. சார் கிட்ட ஒரு சேதி சொல்லணும். அதைச் சொல்லிட்டுப் போயிடறேன். அப்புறம் நீங்க தொடர்ந்து பேசலாம்" என்று செந்தில் கூறியதும், சங்கரமணி எழுந்து சற்றுத் தள்ளிச் சென்று நின்றார். 

செந்தில் அவர் அருகில் சென்று ஏதோ சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

சங்கரமணி மீண்டும் மேஜைக்கு வந்து குழந்தைசாமிக்கு எதிரே அமர்ந்தார்.

"இவரு கதிர்வேலனோட ஆளாச்சே! என்ன சொல்றாரு? எங்க ஆளு பதவிக்கு வந்துட்டாரு, ஜாக்கிரதைன்னு எச்சரிக்கறாரா?" என்றார் குழந்தைசாமி.

"இல்ல. முதல்வர் என்னைப் பார்க்க விரும்பறாராம்!" என்றார் சங்கரமணி யோசனையுடன்.

"பாத்துட்டு வாங்க. நேரில கூப்பிட்டு எச்சரிக்க விரும்பறாரோ என்னவோ!ஜாக்கிரதையாப் பேசுங்க. ரொம்ப மோசமான ஆளு அவரு. உங்களுக்குத் தெரியாதது இல்ல!" என்றார் குழந்தைசாமி சற்றே கவலையான குரலில்.

முதல்வர் கதிர்வேலனை அவர் அலுவலகத்தில் சங்கரமணி சந்தித்தபோது, அறையில் வேறு யாரும் இல்லை.

"சொன்னா நம்புவீங்களோ என்னவோ, நீங்க எழுதறது அத்தனையும் உன்னிப்பாப் படிக்கறவன் நான்!" என்றார் கதிர்வேலன்.

'தெரியுமே! அதுக்கு பதிலா என்னைத் தரக்குறைவாத் தாக்கி உங்க கட்சிப் பத்திரிகையில உங்க ஆட்கள் எழுதறதையெல்லாம் நானும் படிப்பேன்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சங்கரமணி, "நன்றி" என்றார் சுருக்கமாக.

"இப்ப நான் பதவிக்கு வந்திருக்கேன். நான் பதவியில இருக்கறதால என்னைச் சுத்தி இருக்கறவங்கல்லாம் நான் எதை விரும்பறேனோ அதைத்தான் எங்கிட்ட சொல்லுவாங்க. உண்மைகளைச் சொல்ல மாட்டாங்க. ஆனா நீங்க நாட்டில நடக்கற விஷயங்களை உன்னிப்பா கவனிச்சு எழுதறீங்க. சும்மா குத்தம் சொல்லணுங்கறத்துக்காக இல்லாம, உண்மைகளை மட்டும்தான் எழுதறீங்க.

"அரசியல் ரீதியா நீங்க என்னைக் குறை சொல்லி எழுதினப்ப எங்க கட்சிக்காரங்க உங்களைக் கடுமையா விமரிசனம் செஞ்சிருக்கலாம். ஆனா இப்ப நான் ஆட்சியில இருக்கறப்ப, நாட்டில என்ன நடக்குது, மக்கள் என்ன நினைக்கறாங்க மாதிரு உண்மைகளை அறிஞ்சுக்கணும்னு நினைக்கறேன். 

"என்னைச் சுத்தி இருக்கறவங்க, என்னை ஆதரிக்கிற பத்திரிகையாளர்கள் எல்லாம் எனக்கு பாதகமான விஷயங்களை என் பார்வைக்கே கொண்டு வர மாட்டாங்க. அதனால, நடக்கறதை உன்னிப்பா கவனிச்சு உண்மைகளைத் தயங்காம சொல்ற உங்களை என் ஊடக ஆலோசகரா வச்சுக்கணும்னு நினைக்கறேன்.

"நீங்க இப்ப எழுதற மாதிரியே சுதந்திரமா பத்திரிகைகள்ள எழுதிக்கிட்டிருக்கலாம். ஆனா எனக்குத் தெரிய வேண்டிய கசப்பான உண்மைகளை, மத்தவங்க எங்கிட்ட சொல்லத் தயங்கக் கூடிய விஷயங்களை நீங்க எனக்கு சொல்லிக்கிட்டிருக்கணும். இந்தப் பொறுப்பை நீங்க ஏத்துக்கணும்னு உங்களை க் கேட்டுக்கறேன்."

சங்கரமணி கதிர்வேலனை வியப்புடனும், ஒரு புதிய மரியாதையுடனும் பார்த்தார்.

அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  
குறள் 445
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

பொருள்:
நம்மைச் சுற்றி இருந்து கொண்டு நடப்பவற்றைக் கண்டு எடுத்துரைக்கும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடப்பதால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும்.
அறத்துப்பால்                                                                                        காமத்துப்பால்

Thursday, January 21, 2021

444. விழா நாயகன்

"சார்! நமக்குப் பரிசு வழங்கற விழா அடுத்த வாரம் இருக்கு. அது விஷயமா அரசாங்கத்திலேந்து அதிகாரி ஃபோன் பண்ணினாரு. எல்லா ஏற்பாடுகளும் தயாரா இருக்காம்" என்றார் நிறுவனத்தின் மானேஜர்  ரகுபதி.

"சரி. விழாவை வெப்காஸ்ட் பண்ணணும். அதுக்கு அவங்ககிட்ட அனுமதி கேட்டு ஈமெயில் அனுப்பிடுங்க" என்றான் நிர்வாக இயக்குநர் கஜேந்திரன்.

"சார்! இது அரசாங்கம் ஏற்பாடு செஞ்சிருக்கற விழா. வெப்காஸ்டுக்கெல்லாம் அவங்க ஒத்துக்க மாட்டாங்க."

"நீங்க மெயில் அனுப்பிட்டு உங்ககிட்ட பேசின அதிகாரிக்கு ஃபோன் பண்ணிச் சொல்லுங்க. அவர் ஒத்துக்கலேன்னா ஃபோனை எங்கிட்ட கொடுங்க"

சில நிமிடங்கள் கழித்து கஜேந்திரனின் அறைக்கு வந்த ரகுபதி, "சார்! வெப்காஸ்டுக்கு ஒத்துக்க மாட்டாங்களாம். அதிகாரி லைன்ல இருக்காரு" என்றார்.

தன் அறையில் இருந்த தொலைபேசியை எடுத்துப் பேசிய கஜேந்திரன்,"சார்! வெப்காஸ்டை எங்க செலவில நாங்களே ஏற்பாடு செஞ்சுக்கறோம். உங்ககிட்ட அனுமதி மட்டும்தான் கேக்கறோம்... பாலிசி இஷ்யூவா? சார்! வெப்காஸ்டுக்கு அனுமதி கொடுத்தீங்கன்னாதான் நான் விழாவில வந்து பரிசு வாங்கிப்பேன். நீங்க செகரெட்டரி கிட்ட பேசி அனுமதி வாங்கப் பாருங்க" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான்.

வெப்காஸ்டுக்கு அனுமதி கொடுப்பதாக இரண்டு நாட்கள் கழித்து மின்னஞ்சல் மூலம் செய்தி வந்தது.

சிறந்த தொழிலதிபர் என்ற விருதைப்பெற்றுக்கொண்டு கஜேந்திரன் பேசினான்:

"இந்த விருது எனக்குக் கிடைச்சிருக்கறதை நான் ஒரு கௌரவமா நினைக்கறேன். இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த அரசாங்கத்துக்கும் தேர்வுக்குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றி.

"பொதுவா இது மாதிரி விருதுகளை வாங்கும்போது 'இதற்கு நான் தகுதியானவன் இல்லை. ஆயினும் அடக்கத்தோட இதை வாங்கிக்கறேன்'னு சொல்லுவாங்க. பொதுவா இது ஒரு மரியாதைக்காக அல்லது பண்பாட்டுக்காகச் சொல்றதுதான். ஆனா என் விஷயத்தில நான் உண்மையாவே அப்படித்தான் சொல்லணும். ஏன்னா இந்த விருதைப் பெறுகிற அளவுக்கு என் நிறுவனம் வளர்ச்சி அடைஞ்சதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு.

"இந்த நிறுவனத்தை நான் ஆரம்பிக்கல. இந்தத் தொழிலை ஆரம்பிச்சு நடத்தின திருமுருகன் என்பவர் கிட்டேந்து பத்து வருஷம் முன்னால நான் இதை வாங்கினேன்.  ஒரு புதிய பொருளைத் தன்னோட உழைப்பாலயும் திறமையாலயும் உருவாக்கி அதைத் தயாரிச்சு விற்பனை செஞ்சுக்கிட்டிருந்தார் அவர்.

"பொருளாதாரப் பிரச்னைகளால அவரால இதைத் தொடர்ந்து நடத்த முடியல. பல பேர் மிக்க் குறைவான விலைக்கு அந்த நிறுவனத்தை வாங்க முயற்சி செஞ்சபோது, அதோட மதிப்பை உணர்ந்த நான் அதை ஒரு நல்ல விலை கொடுத்து வாங்கிக்கிட்டேன்.

"நிறுவனத்தை நான் வாங்கினப்பறம், தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை மட்டும் தன் வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போக திருமுருகன் விரும்பினார். நான் சொன்னேன். 'உங்க நாற்காலி மட்டுமில்ல, உங்களோட அறையையும் நீங்க எடுத்துக்கணும். அதாவது நீங்க உங்க அறையில உங்க நாற்காலியிலேயே உக்காந்துக்கிட்டு இந்த நிறுவனத்துக்கு ஆலோசகரா எனக்கு வழிகாட்டியா இருக்கணும்!'.

"அவரு என் வேண்டுகோளை ஏத்துக்கிட்டு பத்து வருஷமா என்னையும் என் நிறுவனத்தையும் வழி நடத்திக்கிட்டிருக்காரு. என் நிறுவனத்தோட வளர்ச்சிக்கு அவரோட ஆலோசனைகளாலும், வழிகாட்டுதலும்தான் காரணம். இந்த விருது அவருக்குத்தான் சேரணும். நிறுவனம் என் பேரில இருக்கறாதால எனக்குக் கிடைச்சிருக்கு!

"கொஞ்ச நாளா அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில இருக்காரு. அதனால அவரால இந்த விழாவில கலந்துக்க முடியல. ஆனாலும் அவர் இந்த விழாவைப் பாக்கணுங்கறதுக்காகத்தான் இதை வெப்காஸ்ட் பண்ண அரசாங்கத்துக்கிட்ட அனுமதி வாங்கினேன். 

"இப்ப இந்த விருதை நான் என்னோட வழிகாட்டியான திருமுருகன் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். தன் வீட்டில் இருந்தபடி இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவருடைய வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வேண்டுகிறேன்."

கஜேந்திரனின் பேச்சையும் அதைத் தொடர்ந்து எழுந்த பெரிய கரவொலியையும் படுக்கையில் படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்த திருமுருகனின் கண்களில் நீர் துளிர்த்தது.

அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  

குறள் 444:
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

பொருள்:
அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியோர்களைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மையானதாகும்..
  அறத்துப்பால்                                                                                        காமத்துப்பால்

443. துணை

"எல்லாரும் குழந்தைகள் இல்லையேன்னு ஏங்குவாங்க. நீ பெரியவங்க இல்லையேன்னு வருத்தப்படறியே!" என்றான் பிரபாகர்.

"என் அப்பா பல வருஷங்களுக்கு முன்னேயே இறந்துட்டாரு. நமக்குக் கல்யாணம் ஆகிக் கொஞ்ச நாள்ள என் அம்மாவும் இறந்துட்டாங்க. உங்க அப்பா அம்மாவும் ரொம்ப நாள் முன்னாலேயே போய்ச் சேந்துட்டாங்க. 

"கடவுள் புண்ணியத்தில நமக்கு ஒரு பையன் பிறந்திருக்கான். நீங்க நல்ல வேலையில இருக்கீங்க. நமக்கு எந்தக் குறையும் இல்லதான். 

"ஆனா வீட்டில பெரியவங்க யாராவது இருந்தா நல்லா இருக்கும்னு எனக்குத் தோணுது" என்றாள் சியாமளா.

"குழந்தையைப் பாத்துக்கறது உனக்குக் கஷ்டமா இருந்தா ஒரு ஆயாவை வச்சுக்கலாம்."

"நான் விரும்பறது அது இல்ல. நமக்கு வழி காட்டவும், ஆலோசனை சொல்லவும் வீட்டில பெரியவங்க யாராவது இருந்தா நல்லா இருக்கும்னுதான் நினைச்சேன். சில குடும்பங்கள்ள பெரியவங்க இருக்கறதைப் பாத்தா எனக்கு நம்ம வீட்டில அது மாதிரி இல்லையேன்னு ஏமாத்தமா இருக்கு."

"நீ சொல்றது ஆச்சரியமா இருக்கு. பல குடும்பங்கள்ள பெரியவங்களை ஒரு சுமையா நினைக்கறாங்க. பெரியவங்களை முதியோர் விடுதியில கொண்டு விட்டுட்டு, தாங்க, தங்க பிள்ளைங்கன்னு இருக்கணும்னு நினைக்கறவங்கதான் அதிகம்."

"அது உண்மைதான். பெரியவங்களோட அருமை அவங்களுக்குப் புரியலேன்னுதான் நினைக்கறேன்."

"நீ நினைக்கறது சரியா இருக்கலாம். ஆனா குழந்தைகளைத் தத்து எடுக்கற மாதிரி பெரியவங்களைத் தத்து எடுக்க முடியாதே!"  என்றான் பிரபாகர்.

"அது சரிதான்!" என்றாள் சியாமளா.

ரண்டு நாட்கள் கழித்து பிரபாகர் சியாமளாவிடம் சொன்னான்:
"சியாமளா! நீ சொன்னதைப் பத்தி யோசிச்சுக்கிட்டிருந்தேன். வீட்டில பெரியவங்க யாராவது இருக்கறது நல்லதுதான்னு எனக்கும் தோணுது. 

"என் நண்பன் சேகர் இப்ப அமெரிக்கால இருக்கான். அவன் அங்கேயே செட்டில் ஆயிட்டான். அவன் அப்பா இந்த ஊர்ல தனியாத்தான் இருக்காரு. அவருக்கு சும்மா அமெரிக்காவுக்குப் போயிட்டு வரதில கூட விருப்பமில்ல. அவரு ரொம்ப நல்ல மனுஷன். படிச்சவரு. அனுபவசாலி. அவர்கிட்ட நான் நிறைய தடவை பேசி இருக்கேன். அவரை எல்லாருக்குமே பிடிக்கும்.

"நாம அவரைப் போய்ப் பாப்போம். உனக்கு அவரைப் பிடிச்சிருந்தா, அவரும் சேகரும் சம்மதிச்சா அவரை நமக்குத் துணையா நம்ம வீட்டில வச்சுக்கலாம். என்ன சொல்ற?"

"நிச்சயமா. எனக்கு அவரைப் பிடிக்காம போகாது. அவரும், உங்க நண்பரும் சம்மதிச்சா அதை நம்ம அதிர்ஷ்டம்னுதான் நினைப்பேன்!" என்றாள் சியாமளா மகிழ்ச்சியுடன். 

அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  
குறள் 443
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

பொருள்:
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
அறத்துப்பால்                                                                                        காமத்துப்பால்

Wednesday, January 20, 2021

442. கௌரவ ஆலோசகர்

ராஜகோபால் மாநில முதல்வர் என்றாலும் அவரை யாரும் முதல்வர் என்று அழைப்பதில்லை, பெரியவர் என்றுதான் அழைப்பார்கள் - அவருடைய கட்சிக்காரர்கள், பொதுமக்கள், ஊடகங்கள், பிற கட்சித் தலைவர்கள் என்று எல்லோருமே.

எதிர்க்கட்சித் தலைவர் செல்லக்கண்ணு கூட அரசாங்கத்தைத் தாக்கிப் பேசும்போது, 'பெரியவர் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது,' 'பெரியவரின்  ஆட்சியில் மக்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள்' என்றுதான் பேசுவார்.

பெரியவர் என்ற அடைமொழி ராஜகோபாலின் வயதுக்காக மட்டும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. 

அவரது ஐம்பதாவது வயதிலேயே 'பெரியவர்' என்று அவர் அழைக்கப்படத் துவங்கி சிறிது காலத்தில் அது அவரது பெயராகவே நிலை பெற்று விட்டது. இதற்குக் காரணம் அவருடைய கண்ணியமான நடத்தை, நாகரிகமான பேச்சு, அறிவுக் கூர்மை மற்றும் பணிவான அணுகுமுறை.

அவரை அரசியல் ரீதியாக எதிர்த்தவர்களும் அவரைப் பெரியவர் என்று குறிப்பிடத் தயங்கியதில்லை. 'ஒரு மனிதராகப் பெரியவரை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். ஆனால் அரசியல் ரீதியாக அவரை எதிர்க்கிறோம்' என்றுதான் மாற்றுக் கட்சியினர் கூறுவார்கள்.

மற்ற பல அரசியல் தலைவர்களைப் போலவே ராஜகோபாலும் அரசியலில் வெற்றி தோல்விகளைச் சந்தித்து வந்தார்.

திடீரென்று மாநில முதல்வராக இருந்த ராஜகோபாலின் உடல்நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். சிகிச்சைக்குப் பின் அவர் உடல்நிலை தேறிய பிறகும் அவர் மீண்டும் பதவிக்கு வர விரும்பவில்லை. தீவிர அரசியலில் ஈடுபடாமல், வீட்டிலேயே இருந்தபடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

முக்கியமான பிரச்னைகள் குறித்துக் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர அரசியலில் அவர் அதிகம் பங்கு கொள்ளவில்லை. 

அவருக்குப் பின் முதல்வரான அவர் கட்சியைச் சேர்ந்த நம்பி ராஜகோபாலைச் சந்திப்பதிலோ, அவரிடம் ஆலோசனை பெறுவதிலோ ஆர்வம் காட்டவில்லை.

மாநலச் சட்டமன்றத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று ராஜகோபால் அறிவித்து விட்டார். ஆயினும், தேர்தலில் அவர் கட்சி வெற்றி பெற்றால் ராஜகோபாலை முதல்வராகும்படி அவர் கட்சி கேட்டுக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது. 

ஆனால் தேர்தலில் அவர் கட்சி வெற்றி பெறவில்லை. செல்லக்கண்ணு தலைமையிலான கட்சிதான் வெற்றி பெற்றது.

செல்லக்கண்ணு முதல்வராகப் பதவி ஏற்றதும் ராஜகோபாலின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார். சந்தித்து விட்டு வந்ததும் ராஜகோபாலின் வீட்டு வாசலில் ஊடகங்களைச் சந்தித்தார்.

"எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெரியவரை நீங்கள் சந்தித்ததற்கு அரசியல் ரீதியான காரணங்கள் உண்டா?" என்று கேட்டார் ஒரு நிருபர்.

"அரசியல் ரீதியான காரணங்கள் இல்லை, ஆனால் அரசு ரீதியான காரணம் உண்டு!" என்றார் செல்லக்கண்ணு புன்னகையுடன்.

"அப்படியென்றால்...?"

"எங்கள் அரசுக்கு ஒரு கௌரவ ஆலோசகராக இருக்கும்படி பெரியவரைக் கேட்டுக் கொண்டேன். அவரும் சம்மதித்திருக்கிறார். "

"எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரான பெரியவரை நீங்கள் ஆலோசகராக வைத்துக் கொள்ளக் காரணம் என்ன? கடந்த காலங்களில் அவரை நீங்கள் கடுமையாக விமரிசித்திருக்கிறீர்களே!"

"அவரை விமர்சிக்கவில்லை. அவர் அரசியலைத்தான் விமர்சித்திருக்கிறோம். அவர் இப்போது தீவிர அரசியலில் இல்லை. பெரியவரின் அறிவும் அனுபவமும் ஆற்றலும் நம் மாநில நலனுக்குப் பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துக்காகத்தான் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அவரது துணையை நாடி இருக்கிறோம். இது எங்கள் ஆட்சிக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் நன்மை தரும் என்று நம்புகிறேன்" என்றார் செல்லக்கண்ணு.

அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  

குறள் 442:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். 

பொருள்:
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
அறத்துப்பால்                                                                                        காமத்துப்பால்

441. தூரத்து உறவு

ஒரு திருமணத்தில்தான் ராஜீவ் முதலில் சுப்புவைச் சந்தித்தான்.

அவன் அப்பாவுடன் அவர் பேசிக் கொண்டிருந்ததை கவனித்தான். அவர் அகன்றதும் தந்தையிடம் "அவர் யாருப்பா?" என்றான்.

"அவன் சுப்பு. என்னோட தூரத்து உறவு. அவன் அப்பாவும் என் அப்பாவும் கஸின்கள்" என்றார் அவர்.

அதற்குப் பிறகு திருமண மண்டபத்தில் ராஜீவ் அமர்ந்திருந்தபோது பக்கத்தில் அவர் அமர்ந்திருந்ததை கவனித்து அவன் அவருக்கு வணக்கம் சொன்னான். அவர் அவனைத் தெரியும் என்ற பாவனையில் புன்னகை செய்தார்.

சாப்பாட்டுக்குப் பிறகு சற்று நடந்து விட்டு வரலாம் என்று ராஜீவ் மண்டபத்துக்கு வெளியே வந்தபோது அவர் வாசலில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவர் அருகில் போய் நின்றான்.

"சாப்பிட்டாச்சா?" என்றார் சுப்பு.

"ஆச்சு" என்ற ராஜீவ், "நீங்க?" என்றான்.

"பொதுவா, கல்யாணங்கள்ள, நான் கடைசியாத்தான் சாப்பிடுவேன்" என்றார் சுப்பு.

"ஏன் அப்படி?"

"எனக்கு முக்கியமான வேலை எதுவும் இல்லை. அவசரமாக் கிளம்பணும்னு நினைக்கக்கறவங்க, பசி பொறுக்காதவங்க, லேட்டா சாப்பிட்டா விருந்தில சில அயிட்டங்கள் தீர்ந்து போயட்டுமோன்னு பயந்து முதலிலேயே சாப்பிடணும்னு அவசரப்படறவங்க இவங்கள்ளாம் சாப்பிட்டப்பறம் மெதுவா சாப்பிட்டுக்கலாம்னுதான்" என்றார் அவர் சிரித்தபடி.

அவர் சொன்னதைக் கேட்டபோது, அவர் உண்மையாகவே அத்தகைய மனப்பான்மை கொண்டவர் என்றும், ஒப்புக்காகப் பேசுபவர் இல்லை என்றும் ராஜீவுக்குத் தோன்றியது.

சற்று நேரம் அவரிடம் ராஜீவ் பொதுவாகப் பேசி விட்டு, "போய் சாப்பிடுங்க சார்! லேட் ஆயிடுச்சு" என்றான் உண்மையான அக்கறையுடன்.

"பொதுவா நான் சாப்பிடப் போறப்ப பந்தி முடிஞ்சு சமையல் வேலை செய்யறவங்களும், பரிமாறவறங்களும்தான் சாப்பிட்டுக்கிட்டிருப்பாங்க. போய் சாப்பிடறேன்" என்று கிளம்பியவர், திரும்பி, "நான் சார் இல்ல. உனக்கு சித்தப்பா முறை!" என்றார் சிரித்தபடி. 

அவர் சென்றதும், அங்கு வந்த அவன் தந்தை, "அவங்கிட்ட என்ன பேசிக்கிட்டிருந்த?" என்றார்.

"சும்மாத்தான்."

"அவன் ஒரு உதவாக்கரை. சரியான வேலை கூடக் கிடையாது. எங்க குடும்பத்திலேயே அவன் ஒரு மிஸ்ஃபிட்!" என்றார் அவன் தந்தை.

ஆயினும் சுப்புவிடம் சற்று நேரம் பேசியதிலேயே, அவர் ஒரு நல்ல மனிதர், அறிவுள்ளவர் என்ற எண்ணம் ராஜீவுக்கு ஏற்பட்டது. அதனால் திருமண வீட்டிலிருந்து கிளம்பு முன் சுப்புவின் விலாசத்தை வாங்கிக் கொண்டான் ராஜீவ், அவரும் அவனிடம், "நேரம் கிடைக்கறப்ப வீட்டுக்கு வா!" என்று அழைப்பு விடுத்தார்.

அதற்குப் பிறகு மாதம் ஒருமுறையாவது சுப்புவின் வீட்டுக்குச் சென்று அவருடன் சற்று நேரம் பேசி விட்டு வருவது என்ற பழக்கத்தை ராஜீவ் ஏற்படுத்திக் கொண்டான். அவன் அப்பா கூட, "அவங்கிட்ட என்ன இருக்குன்னு அவனைப் போய்ப் பாத்துட்டு வர?" என்று ஓரிரு முறை அவனிடம் கேட்டார்.

"அவர் கிட்ட பேசிக்கிட்டிருந்தா எனக்கு சந்தோஷமா இருக்கு. அவர் பேச்சைக் கேட்டா அவருக்குத் தெரியாத விஷயமே இல்லையோன்னு தோணும். அவரோட கருத்துக்களும் ரொம்ப ஆழமாகவும், நியாயமாகவும் இருக்கு" என்றான் ராஜீவ்.

திருமணம் ஆன பிறகு அவன் மனைவியும் அடிக்கடி அவனிடம் கேட்பாள்: "என்னங்க, அவரை நீங்க அடிக்கடி பாத்துட்டு வரது நம்ம வசதிக்கும் அந்தஸ்துக்கும்  பொருத்தமாவா இருக்கு?" 

"நம்மகிட்ட இருக்கற வசதியும் அந்தஸ்தும் அவர் கிட்ட இல்லாம இருக்கலாம். ஆனா அவரை மாதிரி ஒரு பெரியவர் கிட்ட எனக்குக் கிடைக்கிற அறிவுக்கும், அருளுக்கும் நம்மால மதிப்புப் போடக் கூட முடியாது!" என்றான் ராஜீவ் ஒருமுறை.

"என்னவோ! அவர் கிட்ட என்ன இருக்குன்னு நீங்க அவரைத் தேடிப் போறீங்கன்னு எனக்குப் புரியலை."

'என் அப்பா சொன்ன அதே வார்த்தைகள்! அந்த உயர்ந்த மனிதருடைய கருத்துக்களையும் ஆலோசனையையும் பின்பற்றி என் வாழ்க்கையில் நான் பல முக்கியமான முடிவுகளை எடுத்ததையும் அவை என் வாழ்க்கையைச் செம்மைப் படுத்தியதையும் அப்பாவிடமும், இவளிடமும் சொன்னால் இவர்கள் புரிந்து கொள்ளவா போகிறார்கள்?" என்று நினைத்துக் கொண்டான் ராஜீவ்.

அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  
குறள் 441
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

பொருள்:
அறன் அறிந்தவர்களாக உள்ள அறிவிற் சிறந்தவர்களின் நட்பின் பெருமையை உணர்ந்து அதைத் தேர்வு செய்ய வேண்டும்.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

Sunday, January 17, 2021

440. ராஜ(சேகரின்) தந்திரம்!

செந்தில்குமாரின் வளர்ச்சி அவனை அறிந்தவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது என்றால், அவனைப் போன்ற சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அதிபர்களிடையே பொறாமையையும் அதனால் விளைந்த ஒரு வகை விரோத மனப்பான்மையையும் வளர்த்து விட்டிருந்தது.

தொழிலதிபர் தன் நண்பர் சோமசுந்தரத்துடன் கிளப்பில் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார்.

"இந்தத் தொழிற்பேட்டை ஆரம்பிச்சதிலேந்தே நாம இங்கே நம்ம தொழில்களை நடத்திக்கிட்டு வரோம். 

"மின் தட்டுப்பாடு, மூலப்பொருள் கிடைக்காதது, தொழிலாளர் பிரச்னை, பெரிய நிறுவனங்களோட போட்டி, கடன் கொடுத்த வங்கிகள் கொடுக்கற தொல்லை, முன்னே விற்பனை வரி, இப்ப ஜி எஸ் டி ன்னு கழுத்தை நெறிக்கிற தொல்லைகள் இத்தனையோடயும் போராடிக்கிட்டு நாம எப்படியோ நம்ம தொழில்களை நடத்திக்கிட்டு வரோம். 

"இவன் திடீர்னு வந்து நஷ்டத்தில நடக்கற ஒரு தொழிற்சாலையைக் குறைஞ்ச விலைக்கு வாங்கி,ரெண்டு வருஷத்தில அதை லாபம் ஈட்டற நிறுவனமா மாத்திட்டானே, அது எப்படிய்யா?" 

"அதான் எனக்கும் புரியல. அம்பானி மாதிரி இல்ல வளந்துக்கிட்டிருக்கான்! விட்டா நம்மளை எல்லாம் கபளீகரம் பண்ணிடுவான் போல இருக்கே!" என்றார் சோமசுந்தரம்.

"அவனை நெருக்கமா கவனிக்கச் சொல்லி நம்ம அசோசியேஷன் உறுப்பினர்கள் எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கேன். அவன் புதுசா ஏதோ தொழில் ஆரம்பிக்கப் போறான் போல இருக்கு. 

"அரசாங்கத்தில புதுசாத் துவங்கி இருக்கற தொழில் பேட்டையில நிலம் வாங்க அப்ளை பண்ணி இருக்கானாம். அங்கே நிலம் வாங்க நிறையப் போட்டி இருக்கு.

" சில நண்பர்களோட அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி அங்கே அரசாங்கம் அவனுக்கு நிலம் அலாட் பண்ணாம இருக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்" என்றார் ராஜசேகர், சற்று ரகசியமான குரலில்.

"அப்படி ஏதாவது செஞ்சுதான் அவனை அடக்கி வைக்கணும்!" என்றார் சோமசுந்தரம் மகிழ்ச்சியுடன்.

சில நாட்களுக்குப் பிறகு சோமசுந்தரத்தைத் தொலைபேசியில் அழைத்த ராஜசேகர், "செந்தில் குமார் விஷயத்தில என் முயற்சி வெற்றி அடைஞ்சுடுச்சு. புதுத் தொழில் பேட்டையில நிலம் அலாட் ஆனவங்க பட்டியலை அரசாங்கம் வெளியிட்டிருக்கு. அவனுக்கு நிலம் அலாட். ஆகல!" என்றார் உற்சாகத்துடன்.

"நீங்க வேற! அவன் புதுத் தொழில் பேட்டையில நிலம் வாங்கப் போற மாதிரி நமக்குப் போக்குக் காட்டிட்டு, தன்னோட தொழிற்சாலைக்கு அடுத்தாப்பல இருக்கற நியூ எரா ப்ராடக்ட்ஸை விலைக்கு வாங்கிட்டான். உங்களுக்கு விஷயம் தெரியாதா?" என்றார் சோமசுந்தரம்.

"அது எப்படி? அது சுந்தரமூர்த்தியோட நிறுவனம். அது நஷ்டத்திலதான் போய்க்கிட்டிருக்கு. ஆனா செந்தில் கிட்ட விக்காதீங்கன்னு எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கமே! சுந்தரமூர்த்தி எப்படி வித்தாரு?" என்றார் ராஜசேகர் அதிர்ச்சியுடன்.

"நீங்க சொன்னா? அது பிரைவேட் லிமிடட் கம்பெனிங்கறதால அவன் புத்திசாலித்தனமா அதில 60% பங்கை மட்டும் வாங்கி இருக்கான். 'நீங்க வீட்டிலேயே ஓய்வா இருங்க, தொழிற்சாலையை நான் நடத்தறேன். நிறுவனத்தை லாபமா இயங்க வச்சப்பறம், உங்க பங்கா லாபத்தில 40% கிடைக்கும்'னு சொல்லி சுந்தரமூர்த்தியைச் சம்மதிக்க வச்சுட்டான். புதுத் தொழிற்பேட்டையில நிலம் கேட்டு அப்ளை பண்ணினது நம்ம கவனத்தைத் திசை திருப்பத்தான்!"

ராஜசேகரிடமிருந்து பதில் வரவில்லை. ஃபோன் ரிசீவரில் அவர் பெருமூச்சு மட்டும் உரக்கக் கேட்டது."

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 44
குற்றங்கடிதல்  
குறள் 440:
காதல் காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.  

பொருள்:
தன் விருப்பம் பிறர்க்குத் தெரியாதபடி அதை நிறைவேற்றிக் கொள்ள வல்லவனாக ஒருவன்  இருந்தால் அவனை வஞ்சிக்கப் பகைவர்கள் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.
அறத்துப்பால்                                                                                        காமத்துப்பால்

Friday, January 15, 2021

439. மூத்த அதிகாரி

"எதுக்குப்பா என் கேபின்ல இன்னொரு மேஜை போடறே?" என்றார் சர்மா.

"ஏ ஓ தான் சார் போடச் சொன்னாரு. புதுசா ஒரு அதிகாரி வேலையில சேர்ந்திருக்காரு. அவருக்குத்தான்னு நினைக்கிறேன்" என்றான் பியூன் சபாபதி.

"அதுக்கு என் கேபின்தான் கிடைச்சுதா? நான் ஒரு சீனியர் ஆஃபீசர்ங்கற மரியாதை கூடத் தெரியலியே உங்க ஏ ஓ வுக்கு?" என்றார் சர்மா கோபத்துடன்.

"சார்! ஏ ஓ சொன்னதை நான் செய்யறேன். எனக்கென்ன தெரியும்? ஆனா எல்லா கேபின்லேயும் ரெண்டு பேர் உக்காந்திருக்காங்களே!" என்றான் சபாபதி.

"இருந்தா? நான் எவ்வளவு சீனியர்? உங்க ஏ ஓவை விட சீனியர் நான். அவன் தனி கேபின்லதானே உக்காந்திருக்கான்?"

"சார்! அவர் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆஃபீசர்" என்றான் சபாபதி.

"இப்பவே அவனை இன்டர்காம்ல கூட்டுக் கிழி கிழின்னு கிழிக்கறேன் பார்!" என்ற சர்மா உடனே இன்டர்காமில் சில எண்களை அழுத்தி ஏ ஓ விடம் ஆங்கிலத்தில் கோபமாகப் பேசினார்.  

சபாபதிக்கு அவர் ஆங்கிலத்தில் பேசியது புரியவில்லை. பேசி முடித்ததும் சர்மா ஃபோனை அவனிடம் கொடுத்தார். 

"நீ மேஜையை வெளியில எடுத்துட்டு வந்து அங்கேயே வராண்டாவில ஒரு ஓரமா வச்சுடு. எங்கே போடறதுன்னு அப்புறம் சொல்றேன்" என்றார் ஏ ஓ பலவீனமான குரலில்.

சபாபதி தன்னுடன் வந்த ஆளுடன் மேஜையைத் தூக்கிக்கொண்டு வெளியில் சென்ற போது, "பாத்த இல்ல, என் பவரை? நான் போட்ட சத்தத்தில ஏ ஓ எப்படி பயந்துட்டான் பாரு!" என்றார் சர்மா முகத்தில் ஒரு வெற்றிப் பெருமிதத்துடன்.

டுத்த நாள் காலையில் சர்மா அலுவலகத்துக்கு வந்தபோது, அவர் மேஜை மீது  ஒரு அலுவலக உத்தரவு இருந்தது. அன்றிலிருந்து அவர் கோவிந்த் என்ற மூத்த அதிகாரி'sன் கட்டுப்பாட்டில் பணி செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த அலுவலகத்தில் இது போன்ற மாறுதல்கள் அவ்வபோது நடப்பதுண்டு. அவை அந்த அலுவலகத்தின் தலைமை அதிகாரியின் ஒப்புதலோடு செய்யப்படுபவை.

இன்டர்காமில் ஏ ஒவை அழைத்த சர்மா, "எதுக்கு ஐயா என்னை இந்த கோவிந்த் கீழ போட்டிருக்கீங்க? யார் அவரு? அந்தப் பெயரையே நான் கேள்விப்பட்டதில்லையே! வேற எங்கேயிருந்தாவது மாற்றலாகி வந்திருக்காரா?" என்றார்.

"இந்த மாறுதல் எல்லாம் டைரக்டரோட அப்ருவல்படிதான் நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமே சர்மா!" என்றார் ஏ ஒ.

"நீதானே இந்த மாறுதலையெல்லாம் செய்யற? நீ கொடுக்கற லிஸ்டை டைரக்டர் அப்படியே அப்ருவ் பண்றாரு. இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே! அது சரி கோவிந்த் யாருன்னு கேட்டேனே?"

"அவரு நம்ம ஆஃபீஸ்ல புதுசா சேர்ந்திருக்கற இளைஞர். யூ பி எஸ் சியில தேர்வாகி நேரடியா உயர் பதவிக்கு வந்திருக்காரு. நேத்திக்குத்தான் ஜாயின் பண்ணினாரு. நம்ம ஆஃபீஸ்ல கேபின்கள் குறைவா இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமே! அவருக்கு உடனே கேபின் கொடுக்க முடியல. அதனாலதான் சீனியர் ஆஃபீசரான உங்க ரூம்ல அவருக்கு சீட் கொடுக்கலாம்னு பாத்தேன். நீங்க பெரிசா கத்தினதால வேற ரூம்ல அவருக்கு மேஜை போட்டுட்டேன். நீங்க எங்கிட்ட ஃபோன்ல கத்தறப்ப அவரு எனக்கு முன்னாலதான் உக்காந்திருந்தாரு!" என்றார் ஏ ஒ சிரித்துக்கொண்டே.

அரசியல் இயல்
அதிகாரம் 44 
குற்றங்கடிதல்  
குறள் 439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

பொருள்:
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைச் செய்ய விரும்பவும் கூடாது.

அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

Saturday, January 2, 2021

438. கம்பளிப் பின்னல் வேலை!

"நன்கொடை கேட்பவர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அனுமதி இல்லை."

ஒரு குடியிருப்பின் வெளிப்புறச் சுவரில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையைக் காரில்சென்று கொண்டிருக்கும்போது பார்த்த செல்வநாயகம், டிரைவரிடம் சொல்லிக் காரை நிறுத்தச் சொல்லி விட்டு, காரில் தன் அருகில் அமர்ந்திருந்த தன் நிறுவனத்தின் நிர்வாகியிடம் அதைக் காட்டி, "நாளைக்கே நம்ம ஆஃபீசுக்கு வெளியில இப்படி ஒரு போர்டு வச்சுடுங்க. நன்கொடை, உதவின்னு கேட்டு வரவங்க தொல்லை தாங்கல. நம்ம ஆஃபீஸ் இருக்கற காம்பவுண்டுக்குள்ள நிறைய ஆஃபீஸ் இருக்கறதால கண்டவங்க உள்ள வந்துடறாங்க!" என்றார்.

யாருக்கும் எந்தப் பொருள் உதவியும் செய்யக் கூடாது என்ற கொள்கையை(!) உறுதியாகக் கடைப்பிடிப்பவர் செல்வரங்கம். தன் உறவினர்கள், நண்பர்கள், மனைவியின் உறவினர்கள் ஆகிய யாரும் தன்னிடம் எந்த உதவியும் கேட்பதை அவர் ஊக்குவிப்பதில்லை.

"அவங்க அவங்க அவங்களோட தேவைகளுக்கு சம்பாதிச்சு அதுக்குள்ள வாழ்ந்துக்கணும். மத்தவங்க கிட்ட உதவி கேக்கறதுங்கறது என்ன வழக்கம்?" என்பார் தன் மனைவியிடம்.

"போதுமான வருமானம் இல்லாதவங்க என்ன செய்வாங்க? கஷ்டப்படறவங்களுக்கு உதவி செய்யறதுதானே மனிதாபிமானம்?" என்று அவர் மனைவி விசாலாட்சி பலமுறை அவரிடம் வாதாடி இருக்கிறாள். ஆனால் செல்வநாயகம் தன் கருத்தை மாற்றிக் கொள்வதாக இல்லை.

"உங்க மனைவிங்கற முறையில உங்க பணத்தைச் செலவழிக்க எனக்கு உரிமை இல்லாயா?" என்று ஒருமுறை விசாலாட்சி அவரிடம் கேட்டாள்.

"செலவழிக்க வேண்டாம்னு சொல்லல.ஆனா தானம் கொடுக்கறத்துக்கு அனுமதிக்க மாட்டேன்!" என்றார் செல்வநாயகம்.

ன்று செல்வரங்கம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். விசாலாட்சி எங்கோ வெளியே போயிருந்தாள்.

விசாலாட்சியைத் தேடிக்கொண்டு ஒரு சிறுவன் வந்தான்.

"அம்மா இல்லீங்களா ஐயா?" என்றான் அவரைப் பார்த்து. 

"யாருப்பா நீ?" என்றார் செல்வநாயகம், அவன் ஏழ்மைத் தோற்றத்தை கவனித்தவாறு.

"இல்ல.. பள்ளிக்கூடப் புத்தகம் வாங்கப் பணம் கொடுக்கறதா அம்மா சொல்லி இருந்தாங்க!" என்றான் அவன் தயக்கத்துடன்.

"எவ்வளவு?"

"இருநூறு ரூபாய்."

அதற்குள்  வெளியே போயிருந்த விசாலாட்சி வந்து விட்டாள். தன் கைப்பையிலிருந்து இருநூறு ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளே வந்தாள்.

சிறுவன் சென்ற பிறகு, "இது மாதிரி தான தர்மமெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல?" என்றார் செல்வநாயகம் கோபத்துடன்.

அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்த விசாலாட்சி, "உங்க பணத்திலேந்து கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கீங்க. இது நான் சம்பாதிச்ச பணம்!" என்றாள்.

"நீ சம்பாதிச்சதா? எப்படி?"

"ஒரு கம்பெனிக்கு ஸ்வெட்டர் பின்னிக் கொடுக்கறேன். நூல் அவங்களே கொடுத்துடுவாங்க. ஊசி நூலை வச்சுக்கிட்டுக் கையாலயே பின்றதுதான் வேலை. ஒரு ஸ்வெட்டருக்கு இவ்வளவுன்னு கூலி மட்டும் கொடுப்பாங்க. நீங்க வீட்டில இல்லாத நேரத்தில முடிஞ்ச அளவுக்குப் பின்னுவேன். அதிகமா சம்பாதிக்க முடியாது. மாசத்துக்கு ஆயிரம் ரெண்டாயிரம் வரும். அதிலேந்து பக்கத்தில இருக்கற ஏழைப் பையங்க சில பேருக்குச் சிறிய அளவில உதவி செஞ்சுக்கிட்டு வரேன்."

"நான் வியாபாரம் பண்ணி லட்சக்கணக்கில சம்பாதிக்கறேன்.ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு நீ கூலிக்கு வேலை செய்யணும்னு உனக்கென்ன தலையெழுத்தா?" என்றார் செல்வநாயகம் அதிர்ச்சியுடனும் கோபத்துடனும்.

"ஒத்தருக்கு ஒரு பைசாக் கொடுக்காம சுயநலமா வாழறது எனக்குப் பிடிக்கல. அதனால என்னால முடிஞ்ச இந்தச் சின்ன உதவிகளை செஞ்சுக்கிட்டு வரேன். தயவு செஞ்சு இதையும் செய்யக் கூடாதுன்னு என்னைத் தடுத்துடாதீங்க!" என்றாள் விசாலாட்சி செல்வநாயகத்தைப் பார்த்துக் கை கூப்பியபடி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 44
குற்றங்கடிதல்  
குறள் 438:
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.    

பொருள்:
பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வது எல்லாக் குற்றங்களையும் விடத் தனிப் பெருங் குற்றமாகக் கருதப்படும்.
அறத்துப்பால்                                                                                            காமத்துப்பால்

459. தந்தையின் அறிவுரை.

முகுந்தன் அலுவலகத்துக்குக் கிளம்பும் முன் வழக்கம் போல் தன் தந்தையின் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்திருந்த அவரைப் பார்த்து, "ராத்தி...