அதிகாரம் 66 - வினைத்தூய்மை

திருக்குறள்
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை

651. வழியனுப்பு நிகழ்ச்சி

தன் நண்பன் ரவியின் அலுவலக நேரம் முடிந்ததும், அவனுடன் ஒரு திருமண வரவேற்புக்குச் செல்வதற்காக, அவன் அலுவலகத்துக்கு வந்தான் முருகன்.

முருகன் அலுவலகத்துக்கு வந்த நேரத்தில், அந்த நிறுவனத்திலிருந்து ஓய்வு பெறும் சபாபாதி என்ற ஊழியருக்கான வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அலுவலகத்தின் முன்னறையில், நிகழ்ச்சியில் அமர்ந்திருந்த ரவி, அலுவலகத்துக்குள் நுழைந்த முருகனைப் பார்த்து விட்டு, சற்று நேரம் வெளியே காத்திருக்கும்படி சைகை செய்தான். முருகன் வாயிற்படிக்கு வெளியே நின்றான். 

ஓய்வு பெறும் சபாபதியை வழியனுப்பிப் பாராட்டும் நிகழ்ச்சியின்போது,  வழக்கம்போல், நிறுவன அதிபர் ஆறுமுகம் கண்கலங்கி விட்டார்.

"உங்களை மாதிரி ஊழியர்களோட உழைப்பாலதான் இந்த நிறுவனம் இவ்வளவு நல்லா வளர்ந்திருக்கு. இப்படிப்பட்ட அருமையான ஊழியர்களைப் பெற, நான் ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சிருக்கணும். நீங்க ஒவ்வொருத்தரும் ஓய்வு பெற்றுப் போகறப்ப, இந்த நிறுவனத்தைத் தாங்கிக்கிட்டிருக்கற ஒரு தூணை யாரோ அப்புறப்படுத்தற மாதிரி இருக்கு. ஆனா, புதுசா இங்கே வேலைக்கு வரவங்களும், தூண்களைப் போல வலுவா இந்த நிறுவனத்தைத் தாங்கறதால, இந்த நிறுவனம் எப்பவுமே வலுவா இருந்துக்கிட்டிருக்கு!" என்றார் ஆறுமுகம், உணர்ச்சிப் பெருக்குடன்.

நிகழ்ச்சி முடிந்ததும், ரவி அலுவலகத்துக்கு வெளியே வந்து, முருகனை அழைத்துக் கொண்டு கிளம்பினான். 

அலுவலகத்துக்கு வெளியே வந்ததும், முருகன் ரவியிடம், "உங்க முதலாளி இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டுப் பேசறதைக் கேட்டப்ப, அவர் உண்மையாவே பேசறாரா, இல்லை டிராமா போடறாரான்னு முதல்ல எனக்கு சந்தேகம் வந்தது. ஆனா, அவர் உண்மையாவேதான் பேசினார்னு அப்புறம் புரிஞ்சுக்கிட்டேன்!" என்றான்.

"எனக்கு எப்பவுமே அது மாதிரி தோணினதில்ல! உனக்கு அவரைப் பத்தித் தெரியாது. அவர் பேச்சில மட்டும் இல்லாம, செயல்களிலேயும் உண்மையா நடந்துக்கறவரு. எங்க போட்டியாளர்கள் சில பேர் கொடுத்த பொய்யான தகவலை வச்சுக்கிட்டு, எங்க கம்பெனியிலேயும், சார் வீட்டிலேயும் வருமானவரித் துறை அதிகாரிகள் ரெண்டு மூணு தடவை சோதனை நடத்தி இருக்காங்க. ஆனா இங்கே தப்பா எதுவும் நடக்காததால, அவங்களுக்கு எதுவும் கிடைக்கல. சார் தொழிலை ரொம்ப நேர்மையா நடத்தறாரு. எந்த ஒரு சின்ன தப்பு கூடச் செய்ய மாட்டாரு. அதனாலதான், அவருக்குத் தொழில்லேயோ, சொந்த வாழ்க்கையிலேயோ எந்தப் பிரச்னையும் ஏற்படாம, எல்லாமே நல்லா நடந்துக்கிட்டிருக்குன்னு எனக்குத் தோணும்!" என்றான் ரவி.

"தன் நிறுவன வளர்ச்சிக்குத் தன்னோட ஊழியர்கள்தான் காரணம்னு உங்க முதலாளி  சொல்றாரு. அவரோட நேர்மையான செயல்பாடுகளாலதான், அவருக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாம, எல்லாம் நல்லாப் போயிட்டிருக்குன்னு நீ சொல்ற. உங்க ரெண்டு தரப்புமே ஒத்தர் மத்தவருக்கு ஏத்தவரா இருக்கீங்க!" என்றான் முருகன்.

குறள் 651;
துணைநலம் ஆக்கம் தருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.

பொருள்:
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை, ஆக்கத்தை (வளத்தை)க் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை, அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.

652. ரசாயனத் தொழிற்சாலை

கணபதி படித்தது பொருளாதாரம்தான். ஆனால், ஒரு ரசாயனத் தொழிற்சாலையைத் துவங்கும் வாய்ப்பு அவனுக்கு ஏற்பட்டது. காரணம், அவன் வேலை செய்த நிறுவனத்தில், அவனுடன் பணியாற்றிய முகுந்தனின் அண்ணன் ராமு.

ஒருமுறை முகுந்தன் வீட்டுக்குச் சென்றபோது, அங்கே முகுந்தனின் அண்ணன் ராமுவைச் சந்தித்தான் கணபதி.

ராமு ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததாகவும், அந்தத் தொழிற்சாலை மூடப்பட்டதால், அவன் வேலை இழந்து விட்டதாகவும், வேறு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்ததாகவும் கணபதி அறிந்து கொண்டான்.

சற்று நேரம் ராமுவிடம் பேசியதில், ராமு அறிவுக் கூர்மை மிகுந்தவன் என்பதும், ரசாயனப் பட்டதாரியான அவன், ரசாயனப் பொருட்கள் பற்றி  நிறையப் படித்து வருகிறான் என்பதையும் கணபதி அறிந்து கொண்டான்.

எதனாலோ, ராமுவின் மீது கணபதிக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டு விட்டது. ராமுவைப் பார்ப்பதற்காகவே, முகுந்தன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தான் கணபதி.

"ஏண்டா, நான் உன்னோட நண்பன். இத்தனை நாளா, என் வீட்டுக்கு நீ அடிக்கடி வந்ததில்ல. ஆனா இப்பல்லாம், என் அண்ணனைப் பாக்க அடிக்கடி வர. என்னை விட, அவன்தான் உனக்கு நெருக்கமான நண்பனா இருக்கான் போல இருக்கு!" என்றான் முகுந்தன், விளையாட்டாக.

"உன்னைத்தான் ஆஃபீஸ்ல தினமும் பாக்கறேனே! அப்புறம், உன் வீட்டுக்கு வேற வந்து உன்னைப் பாக்கணுமா?" என்றான் கணபதி.

"உன் அண்ணன் ராமு ஒரு ஜீனியஸ். ரசாயனப் பொருட்கள் பத்தி அவர்கிட்ட நிறைய  யோசனைகள் இருக்கு. அவரோட சேர்ந்து ஒரு ரசாயனத் தொழிற்சாலை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்" என்றான் கணபதி, முகுந்தனிடம்.

"முதலீடு செய்ய அவன்கிட்ட பணம் கிடையாதுடா!" என்றான் முகுந்தன்.

"அவர் முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். ஒர்க்கிங் பார்ட்னரா இருக்கட்டும். நான் முதலீடு போட்டுக்கறேன்" என்றான் கணபதி.

"ஒரு நல்ல வேலையில இருக்க. அதை விட்டுட்டு, முதல் போட்டுத் தொழில் ஆரம்பிக்கற. நல்லா யோசிச்சு செய்!" என்றான் கணபதி.

முகுந்தன் வேலையை விட்டு விட்டுத் தொழிற்சாலை துவங்கும் முயற்சியில் ஈடுபட்டான்.

ராமுவுடன் சேர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்தான்.

தொழிற்சாலை அமைக்க ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தனர், அதை வாடகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தம் ஓரிரு நாட்களில் கையெழுத்தாக இருந்தது.

ரவு பத்து மணிக்கு, முகுந்தனின் வீட்டு அழைப்பு மணி அடித்தது. முகுந்தன் கதவைத் திறந்தான.

"வா கணபதி! என்ன இந்த நேரத்தில?"

"ராமு இருக்காரா?"

"அவன் இப்பதான் படுத்துக்கப் போனான். கூப்பிடறேன்!" என்று சொல்லி, உள்ளே போகத் திரும்பியவன், "முக்கியமான விஷயமா?" என்றான், சற்றுக் கவலையுடன்.

"ஆமாம்!" என்றான் கணபதி.

ராமு வந்தவுடன், அவன் உட்காரும் வரை கூடக் காத்திராமல், "ஏன் ராமு, இந்த கெமிகலை போதை மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்த முடியுமா என்ன?" என்றான் முகுந்தன், அவசரமாக.

கவலையுடன் வந்த ராமுவின் முகம் மலர்ந்தது. "இதுதானா விஷயம்? நான் கூட இந்த நேரத்தில நீங்க வந்ததும், ஏதாவது பிரச்னையோன்னு பயந்துட்டேன்!" என்று பீடிகை போட்டு விட்டு, "செயற்கையான சில போதை மருந்துகள் தயாரிக்க இந்த கெமிகலைப் பயன்படுத்தறாங்க. ஆனா, அது ஃபார்மசூடிகல் கிரேட். நாம தயாரிக்கப் போறது இண்டஸ்டிரியல் கிரேட்தானே?" என்றான்.

"இல்லை, ராமு. செயற்கையான போதை மருந்துகள் தயாரிப்பே ஒரு சட்ட விரோதமான செயல். அவங்க ஃபார்மசூடிகல் கிரேடுதான் பயன்படுத்தணும்னு என்ன இருக்கு? இண்டஸ்டிரியல் கிரேடைக் கூட அவங்க பயன்படுத்தலாமே!"

"இல்லை, முகுந்தன். இண்டஸ்டிரியல் கிரேடில அந்த குவாலிடி கிடைக்காது. அப்படி இருந்தா, இண்டஸ்டிரியல் கிரேட் தயாரிக்க, அரசாங்கத்தில நிறைய கட்டுப்பாடுகள் விதிச்சிருப்பாங்களே! அது மாதிரி இல்லையே!"

"இல்லை. இண்டஸ்டிரியல் கிரேடைப் பயன்படுத்திக் கூட போதை மருந்துகளைத்  தயாரிக்கிறாங்கன்னு எனக்கு ஒரு நண்பர் சொன்னாரு. அவரோட தகவல் தப்பா இருக்காது. அதனால, நாம தயாரிக்கற பொருள் போதை மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படறதுக்கு வாய்ப்பு இருக்கு. சரிதானே?"

"என்ன பேசற, கணபதி? நீங்க தயாரிக்கற பொருளை மார்க்கெட்ல விக்கப் போறீங்க. அது கைமாறி, போதைப் பொருட்கள் தயாரிக்கறவங்க கைக்குப் போனா, நாம என்ன செய்ய முடியும்?" என்றான் முகுந்தன்.

"நாம தயாரிக்கப் போற பொருள் தவறாப் பயன்படுத்தப்படலாம்னு தெரிஞ்சப்பறம், அதை எப்படித் தயாரிக்க முடியும்?" என்றான் கணபதி.

"என்ன சொல்ல வரீங்க கணபதி?" என்றான் ராமு, அதிர்ச்சியுடன்.

"இந்த யோசனையைக் கைவிட்டுட வேண்டியதுதான், வேற ஏதாவது ஐடியா இருந்தா பாக்கலாம்!"

"டேய் கணபதி! முட்டாளாடா நீ? வேலையை விட்டுட்டு, இந்த புராஜக்டுக்காக இவ்வளவு தூரம் முயற்சி எடுத்துட்டு, இப்ப ஒரு அற்பக் காரணத்துக்காக அதைக் கைவிடறேங்கறியே! கொஞ்சம் பிராக்டிகலா யோசிச்சுப் பாரு!" என்றான் முகுந்தன், சற்றுக் கோபத்துடன்.

"ஐ ஆம் சாரி. ஒரு செயலினால தப்பான விளைவுகள் ஏற்படலாம்னு தெரிஞ்சப்பறம், அந்தச் செயல்ல இறங்கக் கூடாது. இதுதான் என்னோட நிலை!"

"முகுந்தன், இனிமே, உங்களை நம்பி நான் எதிலேயும் ஈடுபட முடியாது. இனிமே, எங்கிட்ட வேற ஐடியா பத்தியெல்லாம் பேசாதீங்க!" என்று கோபமாகக் கூறியபடியே உள்ளே சென்றான் ராமு.

"அப்ப, நான் வேலைக்கு முயற்சி செய்ய வேண்டியதுதான்!" என்றான் கணபதி.

குறள் 652;
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

பொருள்:
புகழையும், அறத்தையும் தராத (தூய்மை அற்ற) செயல்களை, எக்காலத்திலும், ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.

653. "சுறுசுறுப்புக்கு மறுபெயர் பரணி"

பரணி அந்தக் கட்சியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் அவ்வளவு வேகமாக முன்னேறுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

பொதுவாகக் கட்சியில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களும், புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களும் கட்சித் தலைவரால் அறியப்பட வாய்ப்பில்லை. ஆனால், அடிக்கடி பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, அவற்றுக்குக் கட்சியின் முக்கியத் தலைவர்களை அழைத்துப் பேசச் செய்வது போன்ற செயல்களால் கட்சித் தலைவரின் கவனத்தை ஈர்த்தான் பரணி.

பரணியைப் பார்க்க விரும்பி, கட்சித் தலைவர் அவனை அழைத்து வரச் சொன்னார். கட்சித் தலைவரைச் சந்தித்ததும், பரணியின் நிலை மேலும் உயர்ந்து விட்டது. 

'சுறுசுறுப்புக்கு மறுபெயர் பரணி' என்று கட்சித் தலைவரால் வெளிப்படையாகப் புகழப்பட்ட பரணி, புதிதாக உருவாக்கப்பட்ட, கட்சியின் 'புதிய உறுப்பினர் பயிற்சி அணி'யின் தலைவராக அறிவிக்கப்பட்டான்.

பரணிக்குப் பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, அப்படி ஒரு அணியைக் கட்சித் தலைவர் புதிதாக உருவாக்கியதாகக் கட்சியில் பலரும் கருதினர்.

கட்சியில் பொறுப்பு கிடைத்ததும், பரணியின் வளர்ச்சி வேகம் இன்னும் அதிகமாகியது.

"என்னையா செஞ்சுட்டு வந்திருக்க? நீ படிச்சவன்தானே? அறிவு வேணாம்?" என்றார் மாவட்டச் செயலாளர்.

"இல்லீங்க. நான் பாட்டுக்கு ஓட்டல்ல உக்காந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தேன். அப்ப அந்த ஆளு வந்து எங்கிட்ட தகராறு பண்ணினான். ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வார்த்தை முத்திப் போய் அவன் கடுமையாப் பேசினதால, நானும் கொஞ்சம் கடுமையாப் பேசிட்டேன்" என்றான் பரணி, சங்கடத்துடன் நெளிந்தபடி.

"கொஞ்சம் கடுமையாப் பேசினியா? பச்சைப் பச்சையா, கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தி, அவனைத் திட்டியிருக்கே. தமிழ்ல இப்படியெல்லாம் கெட்ட வார்த்தை இருக்குன்னு எனக்கு இத்தனை நாளா தெரியாதுய்யா! நீ பேசினதையெல்லாம் யாரோ ஒத்தன் வீடியோ எடுத்து இன்டர்நெட்ல போட்டு, அந்த வீடியோ வைரலாயிடுச்சு. 'கண்ணியத்தைப் பத்திப் பேசற தலைவரோட கட்சியில பொறுப்பில இருக்கறவரு எவ்வளவு கண்ணியமாப் பேசி இருக்காரு பாருங்க'ன்னு எதிர்க்கட்சிக்காரங்களும், மீடியாக்காரங்களும் எகத்தாளமாப் பேசறாங்க. தலைவர் ரொம்பக் கோபமா இருக்காரு. என்ன செய்யப் போறாரோ தெரியாது. இத்தனை நாளா, இவ்வளவு நல்லா வேலை செஞ்சு வேகமா மேல வந்துக்கிட்டிருந்த நீ, இந்த ஒரு விஷயத்தால, உன் அரசியல் எதிர்காலத்தையே பாழடிச்சுக்கிட்டியேய்யா!" என்றார் மாவட்டச் செயலாளர்.

கட்சியின் கண்ணியத்தைக் குலைக்கும் விதத்தில் நடந்து கொண்டதற்காக, பரணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாகக் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து அன்று மாலை அறிவிப்பு வந்தது.

குறள் 653;
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.

பொருள்: 
மேன்மேலும் உயர வேண்டும் என்று விரும்பி முயல்கின்றவர், தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும்.

654. கரும்பு தின்னக் கூலி!

சேதுபதி பன்னிரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த நிறுவனத்தில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்னையால், சில ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து விட்டனர். வேலையை இழந்தவர்களில் சேதுபதியும் ஒருவன்.

சேதுபதி வேறு வேலைக்குத் தீவிரமாக முயற்சி செய்தான். ஆயினும், வேலையை இழந்து மூன்று மாதங்களுக்குப் பிறகும், அவனுக்கு வேறு வேலை கிடைக்கவில்லை.

ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குப் போன இடத்தில், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சபரியைச் சந்தித்தபோது, சேதுபதிக்கு வியப்பு ஏற்பட்டது.

சபரி அவனுடன் கல்லூரியில் படித்தவன். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, இருவருக்கும் தொடர்பு விட்டுப் போய் விட்டது.

"என்னடா சேதுபதி! நீ என் கம்பெனிக்கு இன்டர்வியூவுக்கு வருவேன்னு நான் எதிர்பார்க்கல!" என்றான் சபரி.

"நானும்தான்!" என்ற சேதுபதி, சற்றுத் தயங்கி விட்டு, "உங்களை ஒரு கம்பெனியோட மானேஜிங் டைரக்டராப் பாக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றான்.

"என்னடா வாங்க, போங்கல்லாம்? நீ என் கம்பெனியில வேலை செய்யறதா இருந்தாலும், என்னை வா, போன்னே பேசலாம்!"

"அப்படின்னா, எனக்கு இங்கே வேலை உண்டா?" என்றான் சேதுபதி, சிரித்தபடி.

"உனக்கு இல்லாமயா?" என்ற சபரி, "உனக்கு ஸ்பெஷலா ஒரு ஆஃபர் கொடுக்கலாம்னு பாக்கறேன். சாயந்திரம் வீட்டுக்கு வா" என்று கூறித் தன் வீட்டு முகவரி இருந்த விசிடிங் கார்டைக் கொடுத்தான்..

ன்று மாலை, சபரி வீட்டுக்கு சேதுபதி சென்றதும், முதலில் சேதுபதியிடம் அவன் பார்த்த வேலை பற்றிய விவரங்களைக் கேட்டு அறிந்தபின், தன் பின்னணியைப் பற்றிக் கூறினான் சபரி.

"பிசினஸ் ரொம்ப நல்லாப் போய்க்கிட்டிருக்கு. இப்ப பிசினஸை விரிவாக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, வருமான வரிப் பிரச்னைதான் பெரிசா இருக்கு. ஏற்கெனவே, பிசினஸ்ல ஒரு பகுதியைக் கணக்கில காட்டாமதான் செய்யறேன். இதுக்கு மேலயும் கணக்குல வராம பிசினஸ் பண்றது ரிஸ்க். அதனால, வேற யார் பேரிலயாவது பண்ணணும்னு பாத்துக்கிட்டிருக்கேன். சரியான சமயத்திலதான் நீ வந்திருக்க" என்றான் சபரி.

"நீ என்ன சொல்ற?"

"என்னோடது பிரைவேட் லிமிடட் கம்பெனி. இப்ப உன் பேரில ஒரு புரொப்டர்ஷிப் கம்பெனி ஆரம்பிச்சு, அதில கொஞ்சம் பிசினஸ் பண்ணலாம்னு பாக்கறேன்."

"அது எப்படி? முதல்ல, எங்கிட்ட முதலீடு செய்யப் பணம் இல்ல. அதோட, அது உனக்கு எப்படி உதவும்?" என்றான் சேதுபதி.

"நீ எந்த முதலீடும் செய்ய வேண்டாம். நான்தான் பணம் போடப் போறேன், ஆனா கணக்கில, கொஞ்சத் தொகையை உன்னோட முதலீடு மாதிரியும், மீதியைக் கடன் மாதிரியும் காட்டிக்கலாம். புரொப்ரைடர்ஷிப் கம்பெனிங்கறதால, நிறைய ரொக்கப் பரிவர்த்தனை பண்ணி, விற்பனையையும், லாபத்தையும் குறைச்சுக் காட்டலாம். உனக்கு சம்பளம் கிடைக்கும். அதைத் தவிர, லாபத்தில கொஞ்சம் பங்கும் கொடுக்கறேன். பிராக்டிகலா, நீ என் கம்பெனியில வேலை பாத்துக்கிட்டுத்தான் இருப்ப. ஆனா, புரொப்ரைட்டர்னு பேர் இருக்கும். அதிகப் பணமும் கிடைக்கும். என்ன சொல்ற?" என்றான் சபரி.

"இந்த ஏற்பாடு இல்லாம, எனக்கு வேலை கொடுக்க முடியுமா?"

"ஏண்டா, கரும்பையும் கொடுத்து, அதைத் தின்னக் கூலியும் கொடுக்கறேன்னு சொல்றேன். உனக்குக் கசக்குதா? வேலை பாக்கப் போற. அதோட புரொப்ரைட்டர்ங்கற அந்தஸ்து. புரொப்ரைட்டர்னு விசிட்டிங் கார்டு அடிச்சுக்கிட்டு. எல்லார்கிட்டேயும் பெருமையாக் காட்டலாம். ஆஃபீஸ்ல, உனக்குத் தனி கேபின் வேணும்னாலும் கொடுக்கறேன்."

"சாரி! இது மாதிரி தப்பான விஷயத்தில என்னால ஈடுபட முடியாது. எனக்கு வேலை மட்டும் கொடுத்தா போதும்" என்றான் சேதுபதி.

"சாரி. நான் வேலைக்கு ஆள் தேடல. முதலாளியா இருக்க ஒரு ஆளைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்!" என்றான் சபரி, சற்று அதிருப்தியான குரலில்.

சேதுபதி எழுந்தான். எப்போது வேலை கிடைக்குமோ என்ற கவலை அவனை அழுத்த, மெதுவாக வெளியே நடந்தான்.

குறள் 654;
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.

பொருள்:
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள், துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக் கூட, இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.

655. சீட்டுக்கட்டு ராஜா!

செல்வரங்கம் தன் மொபைலில் ஒரு காணொளியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அடிக்கடி வரும் அந்த விளம்பரம் மீண்டும் வந்தது.

'ரம்மி ஆடிப் பணம் வெல்லுங்கள்.'

'ஒருமுறை விளையாடிப் பார்த்தால் என்ன?' 

மனதில் அந்த எண்ணம் எழுந்ததுமே, செல்வரங்கத்தின் சிந்தனை பின்னோக்கி ஓடியது. 

செல்வரங்கம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, சீட்டாடக் கற்றுக் கொண்டு விட்டான். அவன் கல்லூரி விடுதியில் சிலர் பணம் வைத்துச் சீட்டாடியதை, அவன் அருகில் இருந்து பார்த்திருக்கிறான். 

அப்போதெல்லாம், பணம் வைத்து விளையாடினால் தன்னால் பணம் வெல்ல முடியும் என்று அவனுக்குத் தோன்றும். ஆனால் அவனிடம் அப்போது பணம் இல்லாததால், அவன் அந்த முயற்சியில் இறங்கவில்லை.

வேலைக்குப் போன பிறகு, விடுமுறை நாட்களில், சில நண்பர்களுடன் பணம் வைத்து விளையாட ஆரம்பித்தான் செல்வரங்கம். பெரும்பாலும், அவன்தான் வெற்றி பெறுவான். ஒவ்வொரு முறை சீட்டாடி விட்டு வீட்டுக்குச் செல்லும்போதும், தான் எடுத்து வந்ததை விட அதிகப் பணத்துடன்தான் செல்வான்.

ஒருநாள், உமாபதி என்ற நண்பன், சீட்டாட்டத்தில் தன் மொத்த சம்பளத்தையும் வைத்துத் தோற்று விட்டான் 

அந்த இழப்பைத் தாங்க முடியாமல், உமாபதி அழ ஆரம்பித்து விட்டான்.

"மொத்த சம்பளமும் போயிடுச்சு! என் குடும்பத்துக்கு எப்படி சாப்பாடு போடுவேன்? வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், கடன்காரங்களுக்குக் கொடுக்க வேண்டியதுன்னு எத்தனையோ செலவு இருக்கே!" என்று அவன் பதைபதைத்ததைப் பார்த்தபோது, செல்வரங்கத்துக்கு மனதைப் பிசைந்தது.

அப்போது அவன் மனதில் உடனடியாக ஒரு எண்ணம் தோன்றியது.

தான் ஜெயித்த மொத்தப் பணத்தையும் உமாபதியிடம் கொடுத்து விட்டு, "இனிமே நீ சீட்டாடக் கூடாது. நானும் ஆட மாட்டேன்!" என்றான் செல்வரங்கம், உத்தரவிடுவது போல்.

உமாபதி நம்ப முடியாமல் அவனைப் பார்க்க, மற்ற நண்பர்கள் "என்னடா இது பைத்தியக்காரத்தனம்!" என்றனர்.

அன்றிலிருந்து, செல்வரங்கம் சீட்டாடுவதையே  நிறுத்தி விட்டான். பணம் வைக்காமல் சும்மா விளையாடலாம் என்று யாராவது அழைத்தால் கூட, மறுத்து விடுவான்.

'சீட்டாடிப் பணம் சம்பாதிப்பது என்பது இன்னொருவரிடமிருந்து பணத்தைப் பறிப்பதுதானே! அதை அவர் ஒப்புதலுடன் செய்வதால் மட்டும் அது நியாயமாகி விடுமா? ஏன் இது பற்றிச் சிந்திக்காமல், இந்தச் செயலில் ஈடுபட்டேன்?' என்று நினைத்து நீண்ட காலம் வருந்தினான் செல்வரங்கம்.

ப்போது ரம்மி விளம்பரத்தைப் பார்த்ததும், விளையாடிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. 'ஆன்லைனில்தானே விளையாடப் போகிறோம்! யாருடனும் நேரடியாக விளையாடப் போவதில்லையே!' என்ற சிந்தனை எழுந்தது.

"சே! என்ன ஒரு சிந்தனை? நான் ஜெயிக்கிற பணம் யாரோ ஒருவரிடமிருந்துதானே வரப் போகிறது? ஆன்லைன் ரம்மியில் பலர் பணம் இழந்தது பற்றியும், சிலர் தற்கொலை செய்து கொண்டது பற்றியும் அடிக்கடி செய்திகள் வருகின்றனவே! ஒருமுறை அந்தத் தவறைச் செய்தேன். மீண்டும் அந்தத் தவறைச் செய்ய மாட்டேன் என்று நான் எடுத்துக் கொண்ட உறுதி என்ன ஆயிற்று?'

ஒரு கணம் தனக்கு ஏற்பட்ட சிந்தனைக்காகத் தன்னை நொந்து கொண்ட செல்வரங்கம், மீண்டும் அந்தச் சிந்தனைக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று உறுதி செய்து கொண்டான்.

குறள் 655:
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.

பொருள்:
என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று நினைத்து வருந்தும்படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாக அப்படிச் செய்து விட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.

656. கோகுலின் யோசனை

அந்த பஸ் ஸ்டாண்டில், வெளியூர் செல்லும் பஸ்களைத் தேடி நிற்கும் பயணிகளைத் தேடிப் பிடித்து, குறிப்பிட்ட பஸ்ஸில் ஏற வைப்பதுதான் ராமதாஸின் வேலை. 

அவன் மூலம் பஸ்ஸில் ஏறும் ஒவ்வொரு பயணிக்கும், ஒரு சிறிய தொகை அவனுக்குக் கமிஷனாகக் கிடைக்கும்.

 'இது ஒரு பிழைப்பா?' என்று அவன் அடிக்கடி அலுத்துக் கொள்வது உண்டு.

அதனால்தான், அவன் தாய் காந்திமதி எவ்வளவோ வற்புறுத்தியும், ராமதாஸ் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கவில்லை.

"நிரந்தரமான வருமானம் இல்லாம, எப்படிம்மா கல்யாணம் செஞ்சுக்கறது? பெண்டாட்டி பிள்ளைகளை வச்சுக் காப்பாத்த வேண்டாமா?" என்பான் ராமதாஸ்.

"தேவை ஏற்படறப்ப, அதுக்கேத்தாப்பல வருமானமும் வரும்டா. உன் பெண்டாட்டி கூட ஏதாவது வேலைக்குப் போய் சம்பாதிக்கலாம். அவளுக்கு நிரந்தர வருமானம் இருந்தா, அது உனக்கு நல்லதுதானே?" என்பாள் காந்திமதி.

ஆயினும், ராமதாஸ் அவள் வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவனுக்கும் சிலர் பெண் கொடுக்க முன்வந்ததுதான் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. 

ராமதாஸ் தன் நிலைமையை அவர்களிடம் சொன்னபோது, "அதனால என்ன மாப்பிள்ளை? சமாளிச்சுக்கலாம். நாங்கள்ளாம் என்ன பெரிய வேலை பாத்தா குடும்பதைக் காப்பாத்தறோம்?" என்ற பாணியில் சிலர் அவனிடம் பேசியபோது, அவர்கள் குருட்டு நம்பிக்கைக்குக் காரணம் அவர்களுடைய அறியாமையா, அல்லது வறுமையா என்ற கேள்வி அவனுக்குள் எழும்.

ரண்டு நாட்களாக, ராமதாஸுக்கு வருமானம் இல்லை. பல மணி நேரம் கூவியும், பலரிடம் கேட்டுக் கொண்டும், அவன் சொன்ன பஸ்ஸில் யாரும் ஏறவில்லை. சில சமயம் இப்படி ஆவதுண்டு. அப்போதெல்லாம், முந்தைய நாட்களில் சம்பாதித்ததில் மீதம் இருப்பதை வைத்துச் சமாளித்து விடுவான். 

ஆனால், இப்போது அவன் கையிருப்பு காலியாக இருந்தது. முதல் நாள் இரவு சாப்பிட்டதோடு சரி. அன்று காலையே, அவனும் அவன் அம்மாவும் எதுவும் சாப்பிடவில்லை. அவனாவது பஸ் ஸ்டாண்ட் டீக்கடையில் கடனுக்கு டீ குடித்துக் கொள்வான். அவன் அம்மாவுக்கு அதுவும் கிடைக்காது.

இன்று ஏதாவது வருமானம் கிடைத்தால்தான், அன்று இரவு அவர்கள் இருவருக்கும் சாப்பாடு. இந்த வயதான காலத்தில், அம்மாவால் எவ்வளவு நேரம் பட்டினியாக இருக்க முடியும் என்று நினைத்தபோது, அவன் வயிற்றில் இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்பட்டது.

"என்ன ராமதாஸ், கிராக்கி ஒண்ணும் கிடைக்கலையா?"

கோகுல்!

அந்த பஸ் ஸ்டாண்டில் தொழில் செய்பவன்தான் கோகுல். ஆனால் அவன் செய்யும் தொழில், வெளியில் சொல்லிக் கொள்ளக் கூடியது அல்ல!

ராமதாஸ் மௌனமாக இருந்தான்.

"இந்த பஸ் ஸ்டாண்டில எவ்வளவு பேரு இருக்காங்க பாரு! தனியா இருக்கற ஆம்பிளைகள்ள பத்து பேர் பக்கத்தில போய், அவங்க காதுகிட்ட சொன்னேன்னா, ரெண்டு பேராவது வருவாங்க. உனக்கு கமிஷன் நிச்சயம். அந்த விஷயத்துக்கு அலையறவங்க எத்தனை பேரு இருக்காங்க தெரியுமா, யாராவது வந்து கேக்க மாட்டாங்களான்னு ஏங்கிக்கிட்டு!"

கோகுல் சொல்வது சரிதான். கோகுலுக்காக வேலை செய்யும் சிலர், தனியே இருக்கும் ஆண்களிடம் அருகில் சென்று பேசுவதையும், சிலர் அவர்களுடன் செல்வதையும் ராமதாஸ் கவனித்திருக்கிறான்.

பஸ்களுக்குப் பயணிகளை அழைத்துச் செல்வதை விட, இது சுலபமாக இருக்குமே என்று அவனுக்கே சில சமயம் தோன்றி இருக்கிறது.

இப்போது கோகுல் கேட்டவுடன், இன்று ஒருநாள் முயற்சி செய்து சிறிதளவாவது சம்பாதிக்கலாமே என்ற எண்ணம் மனதில் எழுந்தது.

ஆயினும், உடனே மனதை உறுதிப்படுத்திக் கொண்டு, "வேண்டாம் அண்ணே! அது எனக்குச் சரியாக வராது!" என்றபடியே, "மதுரை, திண்டுக்கல், தேனி" என்று கூவியபடியே, அங்கிருந்து அகன்றான் ராமதாஸ்.

குறள் 656:
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

பொருள்:
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிக்கக் கூடிய இழிவான செயல்களைச் செய்யக் கூடாது.

657. கடன் வசூல் அதிகாரி

குமரனை யாராவது "எங்கே வேலை செய்யற?" என்று கேட்டால், அவன் சொல்லும் வெளிநாட்டு வங்கியின் பெயரைக் கேட்டுப் பலரும் அவனை மதிப்புடன் பார்ப்பார்கள்.

"என்ன வேலை?" என்று பெரும்பாலும் யாரும் கேட்பதில்லை. அப்படி யாராவது கேட்டால், 'கடன் வசூல் அதிகாரி' என்று சொல்வான். அதற்கு மேல் யாரும் விரிவாக அவன் வேலை பற்றிக் கேட்க மாட்டார்கள்.

குமரனுக்குப் பெற்றோர்கள் இல்லாததால், அவன் சித்தப்பா அவனுக்குப் பெண் பார்த்தார்.

பெண் பார்க்கச் சென்றபோது, பெண்ணிடம் தனியாகப் பேச விரும்பினான் குமரன். பெண்ணின் பெற்றோர்கள் சம்மதித்ததும், இருவரும் ஒரு அறைக்குள் அமர்ந்து பேசினர்.

"நான் என்ன வேலை செய்யறேன்னு உனக்குத் தெரியுமா?" என்றான் குமரன்.

"கடன் வசூல் அதிகாரின்னு சொன்னாங்களே!" என்றாள், கிரிஜா என்ற அந்தப் பெண்.

"ஆமாம். ஆனா, கடன் வசூல் அதிகாரி இல்லை, கடன் வசூல் அடியாள்!"

"என்ன சொல்றீங்க?"

"எங்க வங்கில கடன் வாங்கிட்டுத் தவணை கட்டாதவங்க, கிரடிட் கார்ட்ல பொருள் வாங்கிட்டுப் பணம் கொடுக்காதவங்க இவங்க வீட்டுக்கெல்லாம் போய் மிரட்டணும், அக்கம்பக்கத்தில இருக்கறவங்களுக்குக் கேட்கற மாதிரி அவமரியாதையாப் பேசணும், சில சமயம், வீட்டுக்குள்ள போய்க் கதவை சாத்திட்டு, கடன் வாங்கினவரை ரெண்டு தட்டு தட்டணும், கொலை மிரட்டல் விடுக்கணும். கார், பைக், டிவி மாதிரி பொருட்களைத் தூக்கிக்கிட்டு வரணும். இந்த மாதிரி வேலைதான் நான் செய்யறது!" என்றான் குமரன், வெறுப்புடன்.

"எங்க பக்கத்து வீட்டில கூட இந்த மாதிரி வந்து மிரட்டினாங்க. எங்களுக்கே பயமா இருந்தது!" என்றாள் கிரிஜா.

"ஆரம்பத்தில எனக்கு ஒண்ணும் தெரியல. ஆனா இப்பல்லாம், மத்தவங்களை மிரட்டி, அவங்களுக்கு பயத்தை வரவழைச்சு, எல்லாத்தையும் வித்தாவது பணத்தைக் கட்ட வைக்கறது எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு. நான் சம்பளத்துக்குத்தான் வேலை செய்யறேன்னாலும், பழி, பாவம் எல்லாம் எனக்குத்தானே! அவங்க என்னை எப்படி வெறுப்பாங்க, எப்படியெல்லாம் சாபம் கொடுப்பாங்க! சில பேர் 'படுபாவி, நீ நல்லா இருப்பியா?'ன்'னு நேரடியாவே எனக்கு சாபம் விடுவாங்க. மனசுக்குள்ள என்னை சபிக்கிறவங்க எத்தனையோ பேர் இருப்பாங்க. என் மிரட்டலுக்கு பயந்து, பணம் கட்டவும் வழியில்லாம, ஒத்தர் தற்கொலையே பண்ணிக்கிட்டாரு!"

"இதையெல்லாம் ஏன் எங்கிட்ட சொல்றீங்க?"

"நான் இந்த வேலையில தொடர விரும்பல. ஆனா, நான் அதிகம் படிக்கல. அதனால, எனக்கு வேற நல்ல வேலை கிடைக்காது. குறைஞ்ச சம்பளத்திலதான் வேலை கிடைக்கும். அந்த நிலையில, நீ என்னைக் கல்யாணம் செஞ்சுக்க சம்மதிப்பியா?" 

"நிச்சயமா. அதிக வருமானத்துக்காக, என்ன பழி வந்தாலும் பரவாயில்லேன்னு  ஒரு தப்பான வேலையில இருக்கறதை விட, வறுமை வந்தாலும் பரவாயில்லைன்னு நியாயமான வேலை பாக்கறதே நல்லது" என்றாள் கிரிஜா.

"அப்படின்னா, நான் வேற வேலையில சேர்ந்துட்டு, அப்புறம் உன் வீட்டில வந்து பெண் கேக்கறேன்!" என்றான் குமரன் மன நிறைவுடன்.

குறள் 657:
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.

பொருள்:
பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல், நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.

658. மதம் பிடித்த யானை!

"நம்ம ஆசிரமத்தை விரிவாக்கணும். இப்ப இருக்கற இடம் போதாது. என்ன செய்யலாம்?" என்றார் ஆசிரமத்தை உருவாக்கியவரும், ஆசிரமத்தின் தலைவருமான ஈஸ்வர யோகி.

"வேற எங்கேயாவது நிலம் வாங்கி, அங்கே கட்டிடம் கட்டிக்கலாம்!" என்றார் அவருடைய செயலாளர் முத்துலிங்கம்.

ஈஸ்வர யோகி சிரித்தார். "முத்து! நீ படிச்சவன். முத்து முத்தான யோசனைகளைச் சொல்லுவேன்னுதான், உன்னை என்னோட செகரட்டரியா வச்சுக்கிட்டிருக்கேன். இது மாதிரி சொத்தையான யோசனைகளைச் சொல்றதுக்கு இல்ல!" என்றார்.

ஈஸ்வர யோகி இது போல் சிரித்துக் கொண்டே பேசினால், அவர் கோபத்தில் பேசுகிறார் என்று பொருள் என்பது முத்துலிங்கத்துக்குத் தெரியும் என்பதால், அவர் மௌனமாக இருந்தார்.

"பக்கத்தில காட்டு நிலம் இருக்கு இல்ல, அதில அஞ்சு ஏக்கர்ல மரங்களை வெட்டிட்டு, அங்கே ஆசிரமத்தைக் கட்டிக்கலாம்!" என்றார் ஈஸ்வர யோகி.

"சுவாமிஜி! அது காட்டு நிலம். அது அரசாங்க நிலம். அதோட, அங்கே கட்டிடங்கள் கட்ட அனுமதி இல்ல."

"அரசாங்கம் அதை சும்மாதானே விட்டு வச்சிருக்கு? அதனால, அதை நாம எடுத்துக்கலாம். அங்கே யோகா ஸ்கூல் ஆரம்பிக்கப் போறதா சொல்லி, ஓரமா ஸ்கூலுக்கு சின்னதா ஒரு கட்டிடம் கட்டிட்டு, மற்ற இடங்கள்ள நமக்கு வேண்டிய கட்டிடங்களைக் கட்டிக்கலாம். ஆர்க்கிடெக்ட்கிட்ட சொல்லி பிளான் போடச் சொல்லு. கட்டிட வேலையைச் சீக்கிரமா ஆரம்பிக்கணும்."

"பிளான் அப்ரூவல் எல்லாம் வாங்கணுமே, சுவாமிஜி!"

"கட்டினப்பறம் அப்ளை பண்ணி வாங்கிக்கலாம். எல்லா இடத்திலயும் நம்ம ஆளுங்கதானே இருக்காங்க?" என்று சொல்லிச் சிரித்தார் ஈஸ்வர யோகி. இது கோபச் சிரிப்பல்ல, அரசாங்கத்தையே தன் கையில் வைத்திருப்பதான நினைப்பின் காரணமாக எழுந்த ஆணவச் சிரிப்பு என்று முத்துலிங்கத்துக்குப் புரிந்தது.

ள்ளூர் மக்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஆகியோரின் எதிர்ப்புகளையெல்லாம் மீறி, காட்டு நிலத்தில் மரங்கள் வெட்டப்பட்டுப் பெரிய கட்டிடங்கள் எழுந்தன. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில், நான்கு பக்கமும் உயரமான சுவர்கள் கட்டப்பட்டன. அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த மான்கள் போன்ற விலங்குகள், தாங்கள் நடமாடும் பாதை அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு குழம்பி, காட்டுக்குள் வேறு இடங்களைத் தேடிச் சென்றன.

வளாகத்தின் ஒரு ஓரத்தில், ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ், ஒரு சிறிய இடம்  'ஈஸ்வர யோகி யோகா பள்ளி' என்ற பெயர்ப் பலகையுடன் அநாதையாக கவனிப்பாரற்றுக் கிடக்க, முக்கியக் கட்டிடங்களில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பக்தர்கள், ஈஸ்வர யோகியின் தர்ம உபதேசங்களைக் கேட்கவும், சிறப்பான நாட்களில் அவர் திரைப்பட நடிகைகளுடன் சேர்ந்து நடனமாடுவதைக் கண்டு களிக்கவும் குவிந்தனர். 

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, புதிதாக வந்த அரசு, காட்டு நிலத்தில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கப் போவதாகவும், நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளப் போவதாகவும் ஈஸ்வர யோகியின் ஆசிரமத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ஈஸ்வர யோகி நீதிமன்றம் சென்று, அரசாங்கத்தின் நோட்டீசுக்குத் தடை வாங்கினார். மத்திய அரசை அணுகி, யோகா பள்ளி ஒரு கல்வி நிறுவனம் என்பதால், தங்களுக்கு சுற்றுச் சூழல் விதிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு அளித்தார். ஈஸ்வர யோகிக்கு ஆதரவாக மத்திய அரசு மனு தாக்கல் செய்ததால், மாநில அரசின் நோட்டீஸை நீதிமன்றம் ரத்து செய்தது.

"பாத்தியா? என்னவோ காட்டு நிலத்தில கட்டிடம் கட்டக் கூடாதுன்னு எனக்கு தர்மோபதேசம் பண்ணினியே?" என்றார் ஈஸ்வர யோகி, முத்துலிங்கத்தைப் பார்த்து.

'நீங்கதான் மத்தவங்களுக்கு தர்மோபதேசம் பண்ணிட்டு, எல்லா அதர்மமான காரியங்களையும் செய்வீங்க. நான் எப்படி உங்களுக்கு தர்மோபதேசம் செய்ய முடியும்?' என்று நினைத்துக் கொண்டார் முத்துலிங்கம்.

"இன்று காலை ஈஸ்வர யோகியின் ஆசிரமத்துக்குள் நுழைந்த ஒரு மதம் பிடித்த யானை, ஆசிரமத்துக்குள் நடந்து சென்று கொண்டிருந்த ஈஸ்வர யோகியைத் தும்பிக்கையால் தூக்கி வீசியதில், ஈஸ்வர யோகிக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈஸ்வர யோகியின் உடலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். யானையால் தூக்கி எறியப்பட்ட ஈஸ்வர யோகியின் அலறலைக் கேட்டு, ஆசிரமத்துக்குள்ளிருந்து பலர் ஓடி வந்தததைப் பார்த்ததும், யானை பயந்து காட்டுக்குள் ஓடி விட்டது. அதனால், வேறு யாருக்கும் அந்த யானையால் பாதிப்பு ஏற்படவில்லை. இந்தச் சம்பவத்தின் அடிப்படையில், ஈஸ்வர யோகியின் ஆசிரமம் அமைந்துள்ள காட்டு நிலத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ள அனுமதி கோரி, மீண்டும் நீதிமன்றத்தை அணுப் போவதாக வனத்துறை அமைச்சர் வேழவேந்தன் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் பல செய்திகள், சிறிய இடைவேளைக்குப் பின்..." என்றார் தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண்மணி, புன்னகையுடன்.

குறள் 658:
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.

பொருள்:
தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களைச் செய்பவர்களுக்கு, ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும், துன்பமே ஏற்படும்.

659. பறிபோன பண்ணை வீடு

நான் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி இல்லை. ஆயினும், ஒரு மூத்த அதிகாரி என்ற நிலையில் இருந்து வந்தேன். 

ஐயா முதல்வரானபோது, என்னை அவருடைய தனிச் செயலர்களில் ஒருவராக நியமித்துக் கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. (அவரை ஐயா என்றுதான் சொல்வார்கள். எனவே, நானும் அவர் பெயரைக் குறிப்பிடாமல், அவரை ஐயா என்றே குறிப்பிடுகிறேன்)

பெரும்பாலும், ஐயா தன்னைச் சுற்றித் தன் துதிபாடிகளையும், சட்டத்தையோ, விதிகளையோ பற்றிக் கவலைப்படாமல், தான் விரும்பியதைச் செய்பவர்களையும்தான் வைத்துக் கொள்வார். வளைந்து கொடுக்காதவன் என்று கருதப்பட்ட என்னை ஏன் வைத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.

ஐயா என்னைத் தன் வீட்டு அலுவலகத்தில் நியமித்துக் கொண்டார். அவர் வீட்டில் பல்வேறு சந்திப்புகள் நிகழும், பல்வேறு பரிவர்த்தனைகளும் நடக்கும். அவற்றை நான் வெளியில் சொல்ல மாட்டேன் என்ற நம்பிக்கையில்தான், என்னைத் தன் வீட்டு அலுவலகத்தில் நியமித்துக் கொண்டார் என்று நான் பிறகுதான் புரிந்து கொண்டேன்.

ஐயாவின் வீட்டில், தங்கப்பன் என்ற அவருடைய தூரத்து உறவினர் ஒருவரும் தங்கி இருந்தார். அவர்தான் பெரும்பாலான பரிவர்த்தனைகளை நிகழ்த்தியவர். பல தொழிலதிபர்களும், ஒப்பந்ததாரர்களும் பெரிய சூட்கேஸ்களைக் கொண்டு வந்து இறக்குவதும், தங்கப்பன் அவற்றைத் திறந்து பார்த்து விட்டு, அவருக்கு நம்பிக்கையான வேலையாட்கள் மூலம் அவற்றை உள்ளே கொண்டு வைக்கச் சொல்வதும், அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்.

நான் இவற்றையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்தேன்.

ஒரு விடுமுறை நாளில், நான் ஒரு பூங்காவில் அமர்ந்திருந்தபோது, என் அருகில் ஒருவர் வந்து அமர்ந்தார். என்னை ஓரிரு முறை உற்றுப் பார்த்து விட்டு, "சார்! நீங்க ஐயா வீட்டில இருக்கறவருதானே?" என்றார்.

"முதல்வரோட வீட்டு அலுவலகத்தில வேலை செய்யற ஒரு அதிகாரி நான்" என்றேன் நான்.

"உங்களைப் பாத்திருக்கேன் அங்கே. என்ன சார், இப்படிப்பட்ட அநியாயம் எல்லாம் பண்றாங்க?" என்றார் அவர், ஆத்திரத்துடன்.

"என்ன விஷயம்? ஏதாவது பிரச்னைன்னா, குறை தீர்க்கற அலுவலகத்துக்கு எழுதிப் போடுங்க."

"ஐயா செஞ்ச அக்கிரமத்தைப் பத்தி, குறை தீர்க்கற அலுவலகத்தில சொல்ல முடியுமா என்ன?"

"சார், இதையெல்லாம் எங்கிட்ட சொல்லாதீங்க!" என்று நான் கூறியதைப் பொருட்படுத்தாமல், அவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

பல வருடங்களுக்கு முன், அவர் புறநகர்ப் பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி, அதில் பண்ணை அமைத்து, ஒரு பண்ணை வீட்டையும் கட்டிக் குடி இருந்து வந்தாராம். 

ஐயாவின் வீட்டுக்கு அவரை வரவழைத்து, ஐயாவும் தங்கப்பனும் அவரை மிரட்டி, அந்த நிலத்தையும் வீட்டையும், மிகக் குறைந்த விலையில் தங்களுக்கு விற்க வைத்து விட்டார்களாம்.

"அவங்க கொடுத்த பணத்தில, என்னால ஒரு ஃபிளாட் கூட வாங்க முடியாது சார். இனிமே, நானும் என் குடும்பமும் நடுத்தெருவிலதான் நிக்கணும்" என்று கூறி, அவர் விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டார்.

"நீங்க விற்க முடியாதுன்னு சொல்லி இருக்கலாமே!" என்றேன் நான், அவரை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல்.

"எப்படி சார்? என் குழந்தையைக் கடத்திக்கிட்டுப் போய்க் கொலை செஞ்சுடுவேன்னு மிரட்டினாங்க. ஏற்கெனவே, ஒத்தரோட குழந்தையைக் கடத்திக்கிட்டுப் போய் மிரட்டி, அவர் சொத்தை எழுதி வாங்கி இருக்காங்கன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். அப்படி இருக்கறப்ப, நான் எப்படி அந்த மிரட்டலுக்குப் பணியாம இருக்க முடியும்?" என்றவர், திடீரென்று கோபத்துடன் எழுந்து, "நான் இப்ப சொல்றேன் சார்! இவங்க நல்லா இருக்க மாட்டாங்க. என்னோட கண்ணீரும், என்னை மாதிரி பாதிக்கப்பட்ட பலரோட கண்ணீரும், இவங்களை சும்மா விடாது!" என்று சாபமிடுவது போல் கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டார்.

ப்போது நான் ஓய்வு பெற்று விட்டேன்.

அன்று, என் வழக்கறிஞரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பல வருடங்கள் முன்பு, ஒரு கிராமத்தில் நான் வாங்கி இருந்த சிறிதளவு நிலத்தைச் சிலர் போலிப் பத்திரம் தயாரித்து விற்று விட்டதை எதிர்த்து நான் போட்டிருந்த வழக்கில், எனக்குச் சாதகமாக தீர்ப்பு வந்துள்ள செய்தியை அவர் தெரிவித்தார்.

"ரொம்ப நன்றி சார்!" என்றேன் நான்.

"நன்றியெல்லாம் எதுக்கு சார்? நீங்க நியாயமா சம்பாதிச்ச சொத்து உங்களை விட்டு எப்படிப் போகும்? அதான் திரும்பிக் கிடைச்சுடுச்சு!" என்றவர், தொடர்ந்து, "ஆமாம், ஐயாவோட சொத்தையெல்லாம் ஏலம் விடப் போறாங்களாமே!" என்றார்.

"ம்" என்றேன் நான். நான் ஐயா பற்றிப் பேசுவதில்லை என்றாலும், என்னிடம் பேசுபவர்கள் ஐயா பற்றிப் பேசாமல் இருப்பதில்லை!

"கொஞ்ச அக்கிரமா பண்ணினாங்க, ரெண்டு பேரும்? சொத்துக் குவிப்பு வழக்கில ரெண்டு பேருக்கும் அஞ்சு வருஷ சிறை தண்டனை கிடைச்சப்பறம், சொத்துக்களைப் பறிமுதல் செய்யறதும் ஆரம்பிச்சுடுச்சு. எத்தனை பேர் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டாங்களோ!" என்றார் வக்கீல்.

அன்று பூங்காவில் என் பக்கத்தில் அமர்ந்து புலம்பி சாபம் விட்ட அந்த மனிதரின் முகம்  என் நினைவில் நினைவு வந்தது.

குறள் 659:
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.

பொருள்:
பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம், நாம் அழ நம்மை விட்டுப் போய் விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும், அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.

660. வந்த வழியும், சென்ற வழியும்!

"என் காரை விக்கறதுக்காக, ஆன்லைன்ல விளம்பரம் கொடுத்திருந்தேன். அதைப் பாத்துட்டு, ஒத்தர் ஃபோன் பண்ணினாரு. விலையெல்லாம் பேசி முடிச்சுட்டோம். மொபைல்ல ஏதோ கட்டம் கட்டமா படம் மாதிரி ஒண்ணு அனுப்பினாரு. அந்த க்யூ ஆர் கோடை நான் ஸ்கேன் பண்ணினா, என் பாங்க் விவரங்கள் அவருக்குத் தெரிய வருமாம். அப்புறம், என் கணக்குக்குப் பணம் வந்துடும். அடுத்த நாள் வந்து, காரை டெலிவரி எடுத்துக்கறேன்னு சொன்னாரு" என்றான் மகாதேவன்.

அவன் புகாரைக் கேட்டுக் கொண்டிருந்த சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சிரித்துக் கொண்டே, "அவன் சொன்னது சரிதான். நீங்க அந்த கோட்-ஐ ஸ்கேன் பண்ணினதும், உங்க பாங்க் விவங்கள் அவனுக்குத் தெரிய வந்திருக்கும் - உங்க பாஸ்வேர்ட் உட்பட. அதான், உங்க அக்கவுட்ல இருந்த மொத்தப் பணத்தையும் எடுத்துட்டான். எவ்வளவு போச்சு? என்றார்.

"இருபத்தெட்டு லட்ச ரூபாய்!"

"அவ்வளவு பணத்தை ஏன் அக்கவுன்ட்ல வச்சிருந்தீங்க?"

"எப்பவுமே, பிசினஸுக்காக ரெண்டு மூணு லட்ச ரூபா அக்கவுன்ட்ல இருக்கும். அதைத் தவிர, இருபது லட்ச ரூபாய் ஃபிக்சட் டெபாசிட் மெச்சூர் ஆகிப் பணம் அக்கவுன்ட்டுக்கு வந்தது. ரெண்டு மூணு நாள்ள அதை எங்கேயாவது முதலீடு செய்யலாம்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, கண்மூடித் திறக்கறதுக்குள்ள அடிச்சுக்கிட்டுப் போயிட்டானே! எப்படி சார் இது சாத்தியம்?  நான் ஓ.டி.பி. கொடுக்காம, என் அக்கவுன்ட்லேந்து எப்படிப் பணம் போகும்? பாங்க்ல கேட்டா, ஓ.டி.பி. கொடுத்தப்பறம்தான், கணக்கிலேந்து பணம் போயிருக்குன்னு சொல்றாங்க!" என்றான் மகாதேவன்.

"இது க்யூ ஆர் கோட் மோசடின்னு புதுசா வந்திருக்கு. இது எப்படி நடக்குதுன்னு நாங்க ஆய்வு செஞ்சுக்கிட்டிருக்கோம். அந்த க்யூ ஆர் கோட் மூலமா, உங்க வங்கி பேரு, கணக்கு எண், பாஸ்வேர்ட், இருப்பு எல்லாம் அவனுக்குத் தெரிஞ்சிருக்கும். அவன் உங்க கணக்கிலேந்து பணத்தைத் தன்னோட கணக்குக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிடுவான். உங்களுக்கு ஓ.டி.பி. வந்திருக்கும். உங்க மொபைலைப் பாத்தா தெரியும். அதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க. ஆனா, அது உங்க மொபைல்லேந்து அவனோட மொபைலுக்குத் தானாகவே ஃபார்வர்ட் ஆகிப் போயிருக்கும். அதை வச்சு, அவன் டிரான்ஸ்ஃபரை கன்ஃபர்ம் பண்ணிப் பணத்தைத் தன் கணக்குக்கு மாத்தி இருப்பான்" என்று விளக்கினார் இன்ஸ்பெக்டர்.

"பணம் எந்த அக்கவுன்ட்டுக்குப் போயிருக்குங்கறதை வச்சு, அவனைக் கண்டுபிடிக்க முடியாதா சார்?"

"பொதுவா, இந்த மாதிரி மோசடி பண்றவங்க, பொய்யான விவரங்களைக் கொடுத்துத்தான் பாங்க்ல கணக்குளைத் துவக்குவாங்க. ஒரு நாள்ள எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏமாத்தி சம்பாதிச்சுட்டு, பணத்தை .வேற கணக்குக்கு பாத்திடுவாங்க. நாங்க அவனை டிரேஸ் பண்ணி கண்டுபிடிக்கறதுக்குள்ள, அவன் வேற எங்கேயாவது போய், வேற யாரையாவது ஏமாத்திக்கிட்டிருப்பான். என்னிக்காவது ஒருநாள் பிடிபடுவான். புத்திசலியா இருந்தா, ஓரளவு சம்பாதிச்சதும், இந்த மோசடியை நிறுத்திட்டு, எல்லாத் தடயங்களையும் அழிச்சுட்டு, மறைஞ்சு போயிடுவான். ஒருவேளை அவனைப் பிடிச்சாலும், உங்க பணம் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கறது கஷ்டம்தான். இது மாதிரி மோசடிகளையெல்லாம் குறிப்பிட்டு, யாரும் ஏமாறாதீங்கன்னு நாங்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கோம். ஆனா, அதையெல்லாம் கவனிக்காம, உங்களை மாதிரி நிறைய பேர் ஏமாந்துக்கிட்டுத்தான் இருக்கீங்க. ஆமாம்,  நீங்க என்ன பிசினஸ் செய்யறீங்க?" என்றார் இன்ஸ்பெக்டர்.

"கமிஷன் ஏஜன்ட்" என்றான் மகாதேவன், சற்றுத் தயக்கத்துடன்.

"அதை ஏன் தயங்கிக்கிட்டே சொல்றீங்க? .இவங்களை மாதிரி மத்தவங்களை ஏமாத்திப் பிழைக்காம, நேர்மையா ஒரு பிசினஸ் செஞ்சு பணம் சம்பாதிக்கறதைப் பத்தி நீங்க பெருமை இல்ல படணும்!"

'நான் அப்படிச் சம்பாதிக்கலையே! பல சின்ன ஊர்கள்ள போய்க் கொஞ்ச நாள் தங்கி, அங்கே இருக்கிற சின்ன வியாபாரிகள்கிட்ட அவங்க வியாபாரத்துக்கு சில தனிநபர்கள்கிட்டேயிருந்து குறைஞ்ச வட்டியில கடன் வாங்கித் தரதாச் சொல்லி, அவங்ககிட்ட அஞ்சாயிரம், பத்தாயிரம்னு முன்பணமா வாங்கிக்கிட்டு, கொஞ்ச நாள்ள அந்த ஊரை விட்டு ஓடி வந்து, வேற ஊருக்குப் போய், அங்கேயும் இது மாதிரி செஞ்சு சம்பாதிச்ச பணம்தானே இது! அஞ்சாயிரம், பத்தாயிரம் என்பதால, யாரும் போலீசுக்குப் போக மாட்டாங்கங்கற தைரியத்தில, பல பேரைத் தொடர்ந்து ஏமாத்தி, அப்புறம், அதையெல்லாம் கமிஷன் வியாபாரத்தில கிடைச்ச பணம் மாதிரி கணக்குக் காட்டி... இப்படி அநியாயமா சம்பாதிச்சதாலதான், மொத்தப் பணமும் ஒரே நாளில் இது மாதிரி போயிடுச்சோ!' என்று தனக்குள் புலம்பினான் மகாதேவன்.

குறள் 660:
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

பொருள்:
வஞ்சனையான வழியால் பொருளைச் சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு, அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.

அதிகாரம் 67 - வினைத்திட்பம்

                                                                                                                                            அறத்துப்பால்                                               காமத்துப்பால்   

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...