Monday, July 31, 2023

905. உதவி செய்ய நினைத்தும்...

திருச்சியிலிருந்து சென்னைக்குத் திரும்ப பஸ்ஸில் ஏறியபோது சந்திரன் தன் பள்ளி ஆசிரியர் குழந்தைவேலுவைச் சந்தித்தான்.

தன்னை அவருடைய மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டான்.சந்திரன்

அவர் மறுத்தும் கேளாமல் அவருக்கான பயணச் சீட்டையும் அவனே பணம் கொடுத்து வாங்கினான்.

பயணத்தின்போது பேசிக் கொண்டு வந்தபோது இருவரும் தங்கள் குடும்பம் பற்றியும், வாழ்க்கை நிலை பற்றியும் தகவல் பரிமாறிக் கொண்டனர்.

தான் ஒரு நல்ல வேலையில் இருப்பதையும், தனக்கு இரண்டு வருடங்கள் முன்பு திருமணமானதையும், தன் மனைவியுடன் சென்னையில் வசிப்பதையும் சந்திரன் குறிப்பிட்டான்.

தான் திருச்சியில் வசிப்பது பற்றிக் குறிப்பிட்ட குழந்தைவேலு தன் வாழ்க்கை பற்றி அதிகம் பேசாவிட்டாலும் அவர் வறுமை நிலையில் இருப்பதை சந்திரன் புரிந்து கொண்டான்.

ஒரு சிறந்த ஆசிரியராக இருந்து தனக்குக் கல்வி அளித்த ஒரு நல்ல மனிதர் வறுமை நிலையில் இருப்பது சந்திரனுக்கு வருத்தமாக இருந்தது. அவரிடம் கல்வி பெற்ற தானும் தன்னைப் போன்ற பலரும் வாழ்க்கையில் முன்னேறி நல்ல நிலையில் இருக்கும்போது அவர் வறுமையில் இருப்பது நியாயமற்றது என்ற சிந்தனையும் ஏற்பட்டது.

திருச்சியில் வசிக்கும் அவர் ஏதோ வேலையாகச் சென்னைக்குச் செல்வதாகச் சொன்னார்.

சந்திரன் தன் தொலைபேசி எண்ணை அவரிடம் கொடுத்து, அவருடைய வேலை முடிந்ததும் தன் வீட்டுக்கு வரும்படி அவரிடம் கூறினான்.

"நீங்க ஒருவேளையாவது என் வீட்டில சாப்பிடணும் சார்! எப்ப வரீங்கன்னு ஃபோன் பண்ணிட்டு வாங்க. நீங்க தங்கி இருக்கிற இடத்தைச் சொன்னா நானே வந்து உங்களை என் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன்!" என்றான் சந்திரன்

"நீ எங்கிட்ட படிச்சு எவ்வளவோ வருஷம் ஆச்சு. எங்கிட்ட இவ்வளவு அன்பு காட்டறியே அப்பா?" என்றார் குழந்தைவேலு நெகழ்ச்சியுடன்.

தன் மனைவி வாணியிடம் தான் தன் ஆசிரியரைச் சந்தித்ததையும் அவரைத் தங்கள் வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அழைத்திருப்பதையும் கூறினான் சந்திரன்.

"நம்ம வீட்டில என்ன சமையக்காரியா இருக்கா? நீங்க பாட்டுக்கு யாரையாவது சாப்பிடக் கூப்பிட்டா அவருக்கு சமைச்சுப் போடறது யாரு?" என்றாள் வாணி எரிச்சலுடன்.

"ஒரு மரியாதைக்காகத்தான் கூப்பிட்டேன்  வந்தாதான் வருவாரு!" என்று சமாளித்த  சந்தரன், 'நல்லவேளை. அவருக்கு பஸ் டிக்கட் வாங்கியதை இவளிடம் சொல்லவில்லை!' என்று நினைத்துக் கொண்டான்.

ரண்டு நாட்கள் கழித்து சந்திரன் வாணியிடம் தயங்கிக் கொண்டே, "வாணி! என் பள்ளி ஆசிரியர் குழந்தைவேலுவைப் பத்திச் சொன்னேன் இல்ல?அவர் ஃபோன் பண்ணினாரு" என்றான்.

"என்ன, சாப்பிடவராராமா?" என்றாள் வாணி சலிப்பும், எரிச்சலும் மிகுந்த குரலில்.

"இல்லை. அவருக்கு வேற பிரச்னை. அவர் மனைவியோட நகைகளை அடகு வச்சுக் கடன் வாங்கி இருக்காரு.அதெல்லாம் ஏலம் போகிற நிலைமையில இருக்காம். ஒரு லட்ச  ரூபாய் கட்டணுமாம். அதுக்குத்தான் அவரோட சொந்தக்காரங்ககிட்ட கடன் கேட்டுப் பாக்கலாம்னு சென்னைக்கு வந்திருக்காரு. ஆனா அவருக்குப் பணம் கிடைக்கல..." என்றான் சந்திரன்.

"அதுக்கு?"

"திருச்சிக்குப்  பக்கத்தில அவருக்கு ஒரு வீட்டு மனை இருக்காம். அது அஞ்சாறு லட்சத்துக்குப் போகுமாம். அதை விக்கறதுக்குப் பாத்துக்கிட்டிருக்காரு. ஆனா அதுக்குக் கொஞ்சம் டயம் ஆகுமாம். அதனால ஒரு லட்ச ரூபா கடனாக் கொடுத்தா அஞ்சாறு மாசத்தில வட்டியோட திருப்பிக் கொடுத்துடறேன்னு சொல்றாரு. அவரு ரொம்ப நல்ல மனுஷன். சொன்னபடி நடந்துப்பாரு."

"எங்கிட்ட பணம் இல்லேன்னு சொல்லிட்டீங்க இல்ல?"

"இல்லை வாணி. நம்மகிட்டதான் பணம் இருக்கே! ரெண்டு நாள் முன்னாலதான் ரெண்டு லட்ச ரூபாய்க்கு ஒரு ஃபிக்ஸட் டெபாஸிட் மெச்சூர் ஆச்சு. அந்தப் பணம் அக்கவுன்ட்லதான் இருக்கு. உன்னைக் கேட்டுக்கிட்டு அவருக்கு ஒரு லட்ச ரூபா கொடுத்து உதவலாம்னு பாக்கறேன்" என்றபடியே தயக்கத்துடன் மனைவியின் முகத்தைப் பார்த்தான் சந்திரன்.

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எங்கிட்டபணம் இல்லேன்னு சொல்லிடுங்க!" என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள் வாணி.

வாணியை மீறி என்ஆசிரியருக்குப் பணம் கொடுத்து உதவ என்னால் முடியும்தான். ஆனாலும் நான் அப்படிச் செய்யு மாட்டேன் என்பதுதானே நிலை!'

தன்னால் உதவ முடியாது என்பதைத் தன் ஆசிரியருக்குத் தெரிவிக்க அவருக்கு ஃபோன் செய்யப் போனான் சந்திரன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 91
பெண்வழிச் சேறல் (காமத்தினால் மனைவியின் விருப்பப்படி நடத்தல்)

குறள் 905:
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

பொருள்: 
தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Friday, July 28, 2023

954. நாங்கள் அப்படித்தான்!

"இந்த வேலை ரொம்ப சுலபம். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போகணும் அவ்வளவுதான்" என்றான் சக ஊழியன் குமார்.

"அட்ஜஸ்ட் பண்றதுன்னா?" என்றான் முருகேசன். அவன் சில நாட்கள் முன்புதான் அந்த அரசுத் துறையில் வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

"இங்கே பல ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பிப்பாங்க. விதிமுறைப்படிப் பார்த்தா ஒரு குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்குத்தான் வேலை கொடுக்கும்படியா இருக்கும். ஆனா மேலதிகாரிகள் வேற ஒரு ஒப்பந்ததாரருக்கு வேலை கொடுக்கணும்னு விரும்புவாங்க."

"அவங்க ஏன் அப்படி விரும்பணும்?"

"அப்பாவியா இருக்கியே!" என்று சிரித்த குமார், பணத்தை எண்ணுவது போல் விரல்களைக் கசக்கிக் காட்டி விட்டு, "விதிமுறைகளைப் பத்திக் கவலைப்படாம  மேலதிகாரிகளோட விருப்பப்படி நாம பேப்பர் தயார் பண்ணணும்!" என்றான்.

பிறகு முருகேசனிடம் குனிந்து, "எப்படியும் சராசரியா ஒரு மாசத்தில நம்ம சம்பளத்தைப் போல ரெண்டு மடங்கு கூடுதல் வருமானம் நமக்குக் கிடைக்கும்!" என்றான்.

முருகேசன் மௌனமாக இருந்தான். அவன் தந்தை அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் அவனுக்கு நினைவு வந்தது.

"திருமாலடியார்னு ஒரு புலவர் இருந்தாரு. அவரு திருமால் மேல நிறைய பாடல்களை எழுதி இருக்காரு. அவரோட பாடல்களைக் கேட்டுட்டு அந்த நாட்டு அரசர் அவரைத் தன்னோட அவைப் புலவரா நியமிக்கறதா சொன்னார். அவைப் புலவர்னா அரசரைப் புகழ்ந்து பாடல்கள் எழுதணும். நிறைய பொற்காசுகள் கிடைக்கும். ஆனா அவர் மாட்டேன்னுட்டாரு. திருமாலை மட்டும்தான் பாடறதுன்னு விரதம் எடுத்துக்கிட்டிருக்கேன், அதனால மனுஷங்ளைப் பாட முடியாதுன்னு சொல்லிட்டாரு. உண்மையில அவரு பணத்துக்காக மன்னரைப் புகழ்ந்து பாட விரும்பல. அவரோட பரம்பரையில வந்தவங்க நாம்."

தன் பரம்பரைப் பெருமையை நிலைநாட்டும் விதத்தில் குமாரின் தந்தையும் ஒரு நேர்மையான மனிதராகத்தான் வாழ்ந்து வந்தார்.

"என்னப்பா, நான் அவ்வளவு தூரம் சொன்னேன்! அப்படியும் விதிப்படிதான் நடப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிறியாமே! நம்ம அதிகாரி எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாரு. உனக்கு புத்தி சொல்லச் சொன்னாரு. உனக்கு இதில எந்த பிரச்னையும் இல்லை. அதிகமா சம்பாதிக்க சுலபமான வழி இருந்தும் ஏன் அதைப் பயன்படுத்திக்க மாட்டேங்கற?" என்றான் குமார்.

'நாங்க அப்படித்தான்!' என்று சொல்ல நினைத்த குமார் "நான் அப்படித்தான்!" என்றான் சுருக்கமாக.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 96
குடிமை

குறள் 954:
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.

பொருள்: 
கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற முடியும் என்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்ய மாட்டார்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Thursday, July 27, 2023

904. திசை மாறிய லட்சியம்!

ஜெயராமன் கல்லூரியில் படிக்கும்போது அவனுக்கு ஒரு லட்சியம் இருந்தது. ஒரு சிறந்த நிறுவனத்தில் ஒரு உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்பதுதான் அது.

அதனால் வேலை தேடும்போது கூட ஒரு நிறுவனத்தில் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளனவா என்று பார்த்துத்தான் விண்ணப்பிப்பான் அவன்.

ஜெயராமனின் விருப்பத்துக்கு ஏற்ப ஒரு நல்ல நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது.

வேலையில் சேர்ந்த மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே அவனுடைய சிறப்பான செயல்பாடு காரணமாக ஜெயராமனுக்கு முதல் பதவி உயர்வு கிடைத்தது.

"வாழ்த்துக்கள் ஜெயராமன்! இவ்வளவு வேகமா முன்னுக்கு வரக் கூடியவங்க ரொம்ப சில பேர்தான் இருப்பாங்க. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு!" என்றார் அவன் மேலதிகாரி.

அதற்குப் பிறகு அவனுக்குத் திருமணம் ஆயிற்று.

ஜெயராமன் வேலையிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு மாதங்கள் ஆகி விட்டன.

தன் பணிக்காலத்தை நினைத்துப் பார்த்தான் ஜெயராமன். 

உயர் பதவி வகிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் சுறுசுறுப்பாகத் துவங்கிய தன் ஆரம்ப நாட்களை நினைத்தபோது எதையோ இழந்து விட்ட ஏக்கம் அவனைப் பற்றிக் கொண்டது.

யாமினியைத் திருமணம் செய்து கொண்ட பின் அவன் வாழ்க்கையின் போக்கே மாறி விட்டது.

அவன் பணியாற்றிய நிறுவனத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருந்ததால் ஜெயராமன் மாலை வேளைகளில் சற்று அதிக நேரம் உழைக்க வேண்டி இருந்தது.

"என்னங்க இது? என் அக்கா புருஷன் ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடறாரு. உங்களுக்கு எட்டு ஒம்பதுன்னு ஆகுது?" என்றாள் யாமினி.

"உன் அக்கா புருஷன் ஒரு அரசாங்க ஊழியர். அவரு அஞ்சு மணிக்கெல்லாம் ஆஃபீசை விட்டுக் கிளம்பிடலாம். என்னால அப்படி முடியாது. நானும்தான் எட்டு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடறேனே! சில நாளைக்குத்தான் ஒன்பது மணி ஆகுது" என்றான் ஜெயராமன்.

"அவ்வளவு கஷ்டப்பட்டெல்லாம் நீங்க உழைக்க வேண்டாம். ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்துடணும். அப்பதான் உங்களால வீட்டில எனக்குத் துணையா இருக்க முடியும். அந்த மாதிரி வேலையாப் பாருங்க!"

முதலில் ஜெயராமன் மனைவி கூறியதைப் பொருட்படுத்தாவிட்டாலும் அவள் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தன் வேலையை விட்டு விட்டு அதிகச் சுமை இல்லாத ஒரு வேலையைத் தேடிக் கொண்டான்.

வீட்டுக்குச் சீக்கிரம் வர முடிந்தது. ஆனால் வேலையில் சவால்களோ, முன்னேற வாய்ப்புகளோ இல்லை.

"உன்னோட திறமையை நீ வீண்டிச்சுக்கிட்டிருக்க!" என்று அவனுடைய நண்பர்கள் சிலர் கூறினர்.

அவன் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தின் மேலாளர் கூட அவனைத் திரும்ப வேலைக்கு வரும்படி அழைத்தார்.

ஆனால் மனைவியின் விருப்பத்தை மீறிச் செயல்பட ஜெயராமானால் முடியவில்லை.

முட்டாள்தனமாக நடந்து கொள்கிறோமோ என்ற சிந்தனை அடிக்கடி வந்தாலும் வேறு முடிவு எடுக்க முடியாமல் ஒரு சராசரி வேலையிலேயே வாழ்க்கையைக் கழித்து இப்போது ஓய்வும் பெற்று விட்டான் ஜெயராமன்.

'ஏன் இப்படி நடந்து கொண்டேன்? 'வேலையில் முன்னேறி உயர் பதவிக்குப் போக வேண்டும். நிறையச் சாதிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு லட்சியம் இருக்கிறது. நீ சொல்கிறபடி நடக்க முடியாது' என்று மனைவியிடம் சொல்லி இருக்கலாமே! என்ன ஆகி இருக்கும்?'

"இங்கே கொஞ்சம் வரீங்களா?"

அடுத்த அறையிலிருந்து மனைவியின் குரல் கேட்டது.

உடல் அசதியால் சற்று நேரம் ஓய்வெடுக்கலாம் என்று படுத்துக் கொண்டிருந்த ஜெயராமன் விருட்டென்று எழந்து "இதோ வரேன்" என்றபடியே மனைவி இருந்த அறைக்கு விரைந்தான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 91
பெண்வழிச் சேறல் (காமத்தினால் மனைவியின் விருப்பப்படி நடத்தல்)

குறள் 904:
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.

பொருள்: 
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன் செயல் ஆற்றும் தன்மை பெருமை பெற்று விளங்குவதில்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

903. குணா மாறி விட்டான்!

"அமெரிக்காவிலேந்து என் மாமா வந்திருக்காரு. அவரைப் பாத்துட்டு வரலாம் வரியா?" என்றான் குணளன்.

"அவசியம் அவரைப் பாக்கணுமா என்ன?" என்றாள் அவன் மனைவி கோகிலா.

"சின்ன வயசிலேந்து எங்கிட்ட ரொம்ப அன்பா இருப்பாரு. அவர் கம்பெனியில அவரை அமெரிக்காவுக்கு அனுப்பினாங்க. அப்புறம் அவரு அங்கேயே செட்டில் ஆயிட்டாரு. அஞ்சாறு வருஷத்துக்கு ஒரு தடவை இந்தியாவுக்கு வருவாரு. அப்பல்லாம் நான் அவரைப் போய்ப் பாக்காம இருந்ததில்லை. நம்ம கல்யாணத்துக்கப்பறம் இப்பதான் வந்திருக்காரு. போய்ப் பாக்கலைன்னா நல்லா இருக்காது!"

"இவதான் என் பொண்டாட்டின்னு அவர்கிட்ட என்னைக் கொண்டு போய்க் காட்டணுமாக்கும்! சரி வரேன். ஆனா அவர் காலில எல்லாம் விழ மாட்டேன்!" என்றாள் கோகிலா.

குணாளனின் மாமா கஜேந்திரன் தன் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தார்.

குணாளனைப் பார்த்ததும் அவனை அன்புடன் தழுவிக் கொண்ட கஜேந்திரன், "உன் கல்யாணத்துக்கு வர முடியல. இந்தா என்னோட கல்யாணப் பரிசு!" என்று ஒரு பார்சலை நீட்டினார்.

மாமாவின் காலில் விழுந்து வணங்கிப் பரிசை வாங்கிக் கொள்ளலாம் என்று குணாளன் நினைத்தான். பிறகு, தான் வணங்கும்போது கோகிலாவும் சேர்ந்து வணங்காவிட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்துப் பரிசை வாங்கிக் கொள்ளக் கையை நீட்டினான்.

"ரெண்டு பேரும் சேர்ந்து வாங்கிக்கங்கடா!" என்று கஜேந்திரன் சொன்னதும், குணாளன் கோகிலாவுக்கு ஜாடை காட்ட, அவள் அவன் அருகில் வந்து நிற்க, இருவரும் சேர்ந்து பரிசை வாங்கிக் கொண்டார்கள்.

கஜேந்திரன் குணாளனிடம் உற்சாகமாகப் பேசினார். ஆனால் குணாளன் தயங்கித் தயங்கித்தான் பேசினான். தான் மாமாவிடம் உற்சாகமாகப் பேசுவது மனைவிக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ என்று அவன் யோசிப்பதாகத் தோன்றியது.

கோகிலா எதுவும் பேசாமல் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தாள். கஜேந்திரன் இடையிடையே அவளிடம் ஏதாவது கேட்டபோது சில சமயம் தலையாட்டினாள், மற்ற சமயங்களில் மௌனமாக இருந்தாள்.

சற்று நேரம் சென்றதும், "என்னங்க கிளம்பலாமா?" என்றாள் கோகிலா.

"என்ன அவசரம்? இப்பதானே வந்திருக்கீங்க!" என்றார் கஜேந்திரன்.

குணாளன் மௌனமாக இருந்தான்.

"குணா! நான் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் நான் வேற ஊர்களுக்குப் போறப்ப நீயும் என்னோட வருவியே! இந்தத் தடவையும் பத்து நாள் வெளியூர்ப் பயணம் வச்சிருக்கேன். நீயும் கோகிலாவும் என் கூட வாங்க. உனக்கு கவர்ன்மென்ட் வேலைதானே? லீவு கிடைக்கிறது கஷ்டமா இருக்காதே!" என்றார் கஜேந்திரன்.

குணாளன் கோகிலாவைப் பார்த்தான். அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"இல்லை மாமா! இப்ப ஆஃபீஸ்ல ஆடிட் நடக்கற சமயம். அதனால லீவு கிடைக்காது" என்ற குணசீலன் உடனேயே "நாங்க கிளம்பறோம்!" என்றான்.

அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்றதும், "எங்கிட்ட ரொம்பப் பாசமா இருப்பான். ஜாலியாப் பேசுவான். கல்யாணம் ஆனதும் ஆளே மாறிட்டான்! எங்கிட்ட அரை மணி நேரம் உக்காந்து பேசக் கூட அவன் மனைவி அவனை அனுமதிக்கல போலருக்கு" என்றார் கஜேந்திரன் தன் உறவினரிடம் வருத்தத்துடன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 91
பெண்வழிச் சேறல் (காமத்தினால் மனைவியின் விருப்பப்படி நடத்தல்)

குறள் 903:
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்

பொருள்: 
மனைவியிடம் பணிந்து போகும் தன்மை ஒருவனிடம் இருந்தால், அது நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Tuesday, July 25, 2023

902. திருமணத்துக்குப் பின்...

ஒரு நிறுவனத்தில் சாதாரண ஊழியனாக இருந்த மதுசூதனன்  தன் வேலையை உதறி விட்டு சொந்தத் தொழில் ஆரம்பித்தான்.

சில ஆண்டுகளுக்குள்ளேயே அவன் தொழில் பெரிதாக வளர்ந்து அந்த ஊரின் குறிப்பிட்ட சில செல்வந்தர்களில் ஒருவனாக அவன் ஆகி விட்டான்.

மதுசூதனனுக்குப் பெண் கொடுக்கப் பல செல்வந்தர்கள் முன்வந்தனர். ஆனால் மதுசூதனன் தனக்குப் பிடித்த ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்து கொண்டான். 

அவனுடைய இந்தச் செயல் அவன் மீதான மதிப்பை மற்றவர்களிடையே உயர்த்தியது.

ஆயினும் திருமணத்துக்குப் பின் மதுசூதனன் மீது மற்றவர்களுக்கு இருந்த மதிப்பு  சிறிது சிறிதாகக் குறைந்து அவன் ஒரு கேலிப் பொருள் ஆனான்.

அதற்குக் காரணம் மதுசூதனன் தன் மனைவி மல்லிகாவுக்குக் கொடுத்த அளவுக்கதிகமான மதிப்பும் மரியாதையும்தான்.

அவன் தொழில் விஷயங்களில் கூட எல்லா முடிவுகளையும் தன் மனைவியைக் கேட்டுத்தான் மதுசூதனன் எடுக்கிறான் என்ற எண்ணம் பரவலாகப் பலர் மத்தியில் ஏற்பட்டது.

சில சமயம் மல்லிகாவே நிறுவனத்தின் மானேஜர் சுதாகருக்கு ஃபோன் செய்து சில உத்தரவுகளைப் பிறப்பித்தாள். அவளுடைய சில உத்தரவுகளை நிறைவேற்ற விரும்பாத சுதாகர் மதுசூதனனிடம் இது பற்றிப் பேசியபோது, மதுசூதனன் "மேடம் சொல்றபடி நடந்துக்கங்க!" என்று சொல்லி விட்டான்.

ருமுறை ஒரு அலுவலக உதவியாளரைத் தேர்ந்தெடுக்க வந்திருந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து, சிலரை இன்டர்வியூ செய்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்படி சுதாகரிடம் கூறி இருந்தான் மதுசூதனன்.

ஐந்து பேரை இன்டர்வியூ செய்து ஒருவரைத் தேர்ந்தெடுத்த சுதாகர். வேலை நியமன உத்தரவு கொடுக்குமுன் மதுசூதனனின் அனுமதியைக் கேட்டான்.

"அதுதான் உங்களையே செலக்ட் பண்ணச் சொல்லிட்டேனே? என்னை ஏன் கேக்கறீங்க?" என்றான் மதுசூதனன்.

மதுசூதனனின் அறையிலிருந்து வெளியே வந்த சுதாகர் தான் தேர்ந்தெடுத்த நபருக்கு வேலை நியமன உதரவை டைப் செய்யும்படி டைப்பிஸ்டிடம் கூறினான்.

"சார்! இப்பதான் மேடம் ஃபோன் பண்ணினாங்க. வேற ஒத்தருக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் டைப் பண்ணச் சொல்லி இருக்காங்க. அதைத்தான் அடிச்சுக்கிட்டிருக்கேன்" என்றாள் டைப்பிஸ்ட்.

சுதாகருக்கு அவமானமாகப் போய் விட்டது. 

'நான் தேர்ந்தெடுத்த நபருக்கே வேலை நியமன உத்தரவு கொடுக்கச் சொல்லி இப்பதான் முதலாளி சொன்னார். அவருக்கே தெரியாம அவர் மனைவி வேற ஒத்தரை நியமிச்சிருக்காங்க. இது எனக்கு அவமானம்னா, முதலாளிக்கு இன்னும் பெரிய அவமானம். ஆனா அவர் அப்படி நினைக்க மாட்டாரே! இப்ப நான் போய்க் கேட்டா, மேடம் சொன்ன ஆளையே நிமிச்சுடுங்கன்னுதான் சொல்லப் போறாரு!' என்று நினைத்தபோது சுதாகருக்கு மதுசூதனன் மேல் பரிதாபம் ஏற்பட்டது.

"எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன்!' என்று ஒரு திரைப்படத்தில் வரும் வசனம்தான் அவன் நினைவுக்கு வந்தது.

"எங்களுக்கு ஆர்டர் கொடுத்ததுக்கு ரொம்ப சந்தோஷம் சார்!" என்றான் சுதாகர் அந்தப் பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரிடம்.

"ஆர்டரை நீங்க ஏத்துக்கிட்டுக் கையெழுத்துப் போடணும்" என்றார் அவர்.

"அதுக்கென்ன இப்பவே கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடறேன்!" என்று பேனாவை எடுத்தான் மதுசூதனன்.

"இப்பவே போடறீங்களா? ஒருவேளை யார்கிட்டேயாவது கன்சல்ட் பண்ணிட்டு அப்புறம் போடுவீங்களோன்னு நினைச்சேன்!" என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

அவர் கூறியதன் பொருள் புரிந்து மதுசூனனின் முகம் அவமானத்தால் சிவந்தது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 91
பெண்வழிச் சேறல் (காமத்தினால் மனைவியின் விருப்பப்படி நடத்தல்)

குறள் 902:
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.

பொருள்: 
தன் ஆண்மையை (ஆணுக்குரிய கடமையை) எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Monday, July 24, 2023

901. ஜனவரி முதல் ஏப்ரல் வரை

ஜனவரி:
"இந்த ப்ராஜக்ட் நம்ம கம்பெனிக்கு ரொம்ப முக்கியமானது. இதைத் திட்டமிட்டு சரியான நேரத்தில எந்த ஒரு தவறும் நடக்காம பர்ஃபெக்டா செஞ்சு முடிக்கணும்.. நம்ம கம்பெனியில உங்களை விட சீனியரான எஞ்சினியர்கள் இருக்காங்க. ஆனா எல்லாரையும் விட நீங்க ரொம்பப் பொறுப்பா, டெடிகேஷனோட வேலை செய்யறதை நான் கவனிச்சிருக்கேன். அதனாலதான் உங்களை ப்ராஜக்ட் மானேஜராப் போட்டிருக்கேன். நீங்க சிறப்பா செயல்படுவீங்கன்னு நம்பறேன்" என்றார் நிர்வாக இயக்குனர் ராமநாதன்.

"ரொம்ப நன்றி சார்! நீங்க என் மேல வச்சிருக்கற நம்பிக்கையைக் காப்பாத்துவேன்!" என்றார் ப்ராஜக்ட் மானேஜராக நியமிக்கப்பட்ட சுந்தரம்.

45 வயதான சுந்தரம் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடும்பப் பொறுப்பு இல்லாததால் அவரால் தன் நிறுவனப் பணிகளில் அதிக கவனம் செலுத்த முடிந்தது. அவர் ப்ராஜக்ட் மானேஜராக நியமிக்கப்பட்டதற்கு அதுதான் முக்கிய காரணம்.

மார்ச்:
"சுந்தரம்! உங்க மேல நம்பிக்கை வச்சு இந்த ப்ராஜக்ட் மானேஜர் பொறுப்பை உங்களுக்குக் கொடுத்தேன். ஆரம்பத்தில நல்லாத்தான் செயல்பட்டுக்கிட்டிருந்தீங்க. ஆனா கொஞ்ச நாளா நீங்க உங்க வேலையிலஅதிகம் கவனம் செலுத்தாத மாதிரி தோணுது. சில நாள் நீங்க தாமதாமா வரீங்க, முக்கியமான நேரங்கள்ள நீங்க இருக்கறதில்லை, நீங்க எங்கே போயிருக்கீங்கன்னும் தெரியல, அதனால சில வேலைகள் தாமதமாகி இருக்குன்னு ப்ராஜக்ட்ல பொறுப்பில இருக்கற சில பேர் எங்கிட்ட சொல்றாங்க. என்ன ஆச்சு உங்களுக்கு?" என்றார் ராமநாதன்.

"அப்படியெல்லாம் எதுவும் இல்ல சார். உடம்பு சரியில்லேன்னு ரெண்டு நாள் கொஞ்சம் தாமதமா வந்தேன். அதை யாரோ உங்ககிட்ட மிகைப்படுத்திச் சொல்லி இருக்காங்க. ப்ராஜக்ட் வேலைகளை நான் கண்காணிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். கால அட்டவணைப்படி எல்லாமே நடக்கும். ஐ வில் டேக் கேர்!" என்றார் சுந்தரம்.

"பாத்துக்கங்க சுந்தரம்! மறுபடி இது மாதிரி புகார் வராம நடந்துக்கங்க!" என்றார் ராமநாதன் சற்றுக் கடுமையுடன்.

ஏப்ரல்:
"சுந்தரம்! உங்களை நான் எச்சரிக்கை செஞ்சு உங்களை நீங்க திருத்திக்க ஒரு வாய்ப்புக் கொடுத்தேன். ஆனா உங்களோட பிரச்னை அதிகமாகிக்கிட்டேதான் இருக்கு. நானே ரெண்டு மூணு தடவை ப்ராஜக்ட் சைட்டுக்கு வந்து பார்த்தேன். நீங்க அப்ப அங்கே இல்லை. நீங்க ரொம்ப இர்ரெகுலர்னு எல்லாருமே சொல்றாங்க. நீங்க ப்ராஜக்ட்ல கவனம் செலுத்தாததால ஏற்கெனவே ப்ராஜக்ட் கால அட்டவணையைத் தாண்டி தாமதாமாப் போய்க்கிட்டிருக்கு. இனிமேயும் உங்களை நம்பி இந்தப் பொறுப்பை ஒப்படைக்க முடியாது. அதனால மூர்த்தியை ப்ராஜக்ட் மானேஜராப் போட்டிருக்கேன். நீங்க ஃபாக்டரியில உங்க பழைய வேலையைச் செய்யலாம். உங்களைத் திருத்திக்காம தொடர்ந்து நீங்க இர்ரெகுலரா இருந்தா உங்களை வேலையை விட்டே நீக்க வேண்டி இருக்கும். நீங்க போகலாம்!" என்றார் ராமநாதன் கடுமையான குரலில்.

ஃபிப்ரவரி:
ப்ராஜக்ட் விஷயமாக ஒரு விமானப் பயணம் மேற்கொண்டபோது தன் அருகில் அமர்ந்திருந்த காஞ்சனா என்ற நடுத்தர வயதுப் பெண்ணுடன் சுந்தரத்துக்குப் பழக்கம் ஏற்பட்டது. காஞ்சனா திருமணம் ஆகாதவள் என்பதும் தனியாக வசித்து வந்தாள் என்பதும் தெரிந்தது. 

பயணத்தின்போதே இருவருக்கும் இடையே ஒரு நெருக்கம் ஏற்பட்டதை இருவருமே உணர்ந்தனர்

தன் வீட்டுக்கு வரும்படி காஞ்சனா அழைத்ததை ஏற்று, ஊர் திரும்பியதும் அவள் வீட்டுக்குச் சென்றார் சுந்தரம்.

அதன் பிறகு தினமும் அவள் வீட்டுக்குச் செல்வது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஒருநாள் போகாவிட்டால் கூடக் காஞ்சனா கோபித்துக் கொள்வாள் என்பதால், அவள் அன்பை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் தன் அலுவலக வேலைகளைக் கூடப் புறக்கணித்து விட்டுக் காஞ்சனாவுடன் நேரம் செலவழிப்பதை அவரால் தவிர்க்க முடியவில்லை,

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 91
பெண்வழிச் சேறல் (காமத்தினால் மனைவி அல்லது காதலி)யின்
விருப்பப்படி நடத்தல்)

குறள் 901:
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.

பொருள்: 
கடமையுடன் கூடிய செயல் புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள். செயல் ஆற்ற விரும்வோர் விரும்பாத இன்பம் அது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

953. மணமகன் தேவை!

சண்முகநாதன் தன் மகளுக்கு ஒரு நல்ல கணவனைத் தேடிக் கொண்டிருந்தார். எத்தனையோ வரன்கள் வந்தன, ஆனால் எதுவுமே அவருக்குத் திருப்தியாக அமையவில்லை.

சண்முகநாதனைப் பார்க்க அவருடைய அலுவலகத்துக்கு வந்த அவருடைய நண்பர் வேலாயுதம் "என்ன சண்முகநாதா, உன் மாப்பிள்ளை மன்மதன் மாதிரி அழகா இருக்கணும்னு பாக்கறியா?" என்றார் கேலியாக.

"நான் பாக்கறது குணத்தைத்தான்!" என்றார் சண்முகநாதன்.

"ஒத்தரோட குணம் எப்படி இருக்கும்னு எப்படி மதிப்பீடு செய்யறது?" என்றார் வேலாயுதம்.

"அதுதான் கஷ்டமா இருக்கு. நல்ல குடும்பத்தில பொறந்தவனா இருக்கானான்னுதான் பாக்கறேன்" என்றார் சண்முகநாதன்.

அப்போது ஒரு இளைஞன் தயங்கிக் கொண்டே சண்முகநாதனின் அறைக்குள் வந்தான்.

"வா முரளி!" என்றார் சண்முகநாதன்.

அலுவலக விஷயமாக ஒரு சந்தேகத்தை சண்முகநாதனிடம் கேட்டுத் தெளிந்து கொண்டு விட்டு அறையை விட்டு வெளியேறினான் முரளி.

"இந்தப் பையன் உன் கம்பெனியில வேலை செய்யறானா?" என்றார் வேலாயுதம்.

"ஆமாம். ஏன் இவனை உனக்குத் தெரியுமா?"

"ஒரு அனாதை இல்லத்தில நடந்த ஒரு நிகழ்ச்சியில இவனைப் பார்த்தேன். இவன் வாலன்ட்டியரா இருந்தான் போல இருக்கு. அந்த நிகழ்ச்சிக்கு வந்த முக்கியமானவங்களை வரவேற்கறது பார்வையாளர்களுக்கு வழிகாட்டி சரியா உட்கார வைக்கறதுன்னு ரொம்ப சுறுசுறுப்பா இருந்தான். அங்கே நாலைஞ்சு வாலன்ட்டியர்கள் இருந்தாங்க. இவனை நான் கவனிச்சதுக்குக் காரணம் இவன் சிரிச்ச முகத்தோட, கோபப்படமா பொறுமையா இருந்தான். குழந்தைகள்கிட்டேயும் அப்பப்ப சிரிச்சுப் பேசி அவங்களை உற்சாகப்படுத்திக்கிட்டிருந்தான். மற்ற வாலன்ட்டியர்கள் சில சமயம் கோபமா, சிடுமூஞ்சியா, எரிஞ்சு விழுந்தாங்க. இவன் வித்தியாசமா இருந்ததாலதான் இவனை கவனிச்சேன்!"

"ஓ, அப்படியா? ஏதோ ஒரு அனாதை இல்லத்துக்குத் தொடர்ந்து நன்கொடை கொடுத்துக்கிட்டிருக்கானு தெரியும். ஆனா வாலன்ட்டியரா இருந்ததெல்லாம் தெரியாது" என்ற சண்முகநாதன் யோசனை செய்வது போல் தோற்றமளித்தார்.

"என்ன யோசனை?" என்றார் வேலாயுதம்.

"என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாத்துக்கிட்டிருக்கேன், இல்ல? கையில வெண்ணெயை வச்சுக்கிட்டு நெய்க்கு அலையற மாதிரின்னு சொல்லுவாங்க. எங்கிட்ட வேலை செய்யறாங்கறதால இவனைப் பத்தி யோசிக்கல. நான் எதிர்பாக்கற நல்ல குணங்கள் எல்லாம் இவன்கிட்ட இருக்கே!"

"பையனோட குடும்பப் பின்னணியையெல்லாம் பாப்பியே?"

"சிரிச்ச முகம், இனிமையாப் பேசறது, கொடை குணம், மத்தவங்களை இகழ்ந்து பேசாத குணம் இதெல்லாம் இருக்குன்னா அவன் நல்ல குடும்பத்திலதான் பிறந்திருக்கணும். அவன்கிட்ட பேசிப் பாக்கறேன். அவனுக்கும் என் பெண்ணுக்கும் புடிச்சிருந்தா கல்யாணத்தை முடிச்சுட வேண்டியதுதான்!" என்றார் சண்முகநாதன் உற்சாகத்துடன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 96
குடிமை

குறள் 953:
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.

பொருள்: 
உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்ல பண்புகள் என்பர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

900. முதல்வரின் மறைவுக்குப் பின்...

முதலமைச்சராக இருந்த நல்லசிவம் மறைந்ததும் அவருக்கு அடுத்த இடத்திலிருந்த தயாளன்தான் முதல்வராகி இருக்க வேண்டும். 

தயாளன் கட்சிக்குள் நல்லசிவத்தை விட மூத்த தலைவர். ஆயினும் நல்லசிவம் மக்களிடையே அதிக செல்வாக்குப் பெற்றவர் என்பதால் தயாளனே முன்னின்று நல்லசிவத்தை முதல்வராக்கினார். அதனாலேயே நல்லசிவம் இறுதிவரை தயாளனைப் பெரிதும் மதித்து வந்தார்.

நல்லசிவத்தின் மறைவுக்குப் பிறகு அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. தயாளன்தான் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, ஒரு சட்டமன்ற உறுப்பினர் துரைராசனின் பெயரை முன்மொழிந்தார்.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் துரைராசனைப் போட்டியிலிருந்து விலகும்படி கேட்டுக் கொண்டும் துரைராசன் விலக மறுத்ததால் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் துரைராசன் வெற்றி பெற்று விட்டான்.

துரைராசன் முன்பே திட்டமிட்டுப் பல சட்டமன்ற உறுப்பினர்களிடம் தனித் தனியே பேசி தனக்கு ஆரவு திரட்டி இருக்கிறான் என்பது மூத்த தலைவர்களுக்கு அப்புறம்தான் புரிந்தது.

துரைராசன் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை தயாளன் இயல்பாக எடுத்துக் கொண்டு துரைராசனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

தன் அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருக்கச் சொல்லி ஒரு மரியாதைக்காகக் கூட துரைராசன் தயாளனைக் கேட்கவில்லை. 

தயாளன் ஒதுங்கி இருந்தார்.

சில மாதங்களில் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட துரைராசன் தயாளனைக் கட்சியிலிருந்து நீக்கி விட்டான்.

துரைராசனுக்கு நெருக்கமாக இருந்த ஒரு மூத்த தலைவர், "தம்பி! தயாளன் மக்கள்கிட்ட செல்வாக்குப் பெற்றவர். அவருக்குக் கிடைக்க வேண்டிய முதல்வர் பதவி அவருக்குக் கிடைக்கலைங்கறதாலே ஏற்கெனவே மக்களுக்கு அவர் மேல அனுதாபம் இருக்கு. ஆனா அவர் அமைதியா ஒதுங்கி இருக்காரு. இது அவர் வளர்த்த கட்சி. கட்சியை விட்டு அவரை நீக்கினா அவர் அதை எளிதா எடுத்துக்க மாட்டாரு. அவர் கோபம் என்ன விளைவுகளை ஏற்படுத்த முடியும்னு சொல்ல முடியாது. இது வேண்டாம்"  என்று துரைராசனை எச்சரித்தார்.

ஆனால் துரைராசன் அதைச் செவிமடுக்கவில்லை.

தயாளனுக்கு வயதாகி விட்டதால், கட்சியிலிருந்து தயாளன் நீக்கப்பட்டதும் அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் தயாளன் புதிதாக ஒரு கட்சியைத் துவங்கினார். மக்களிடையே அவருக்கு அனுதாபம் இருந்ததால் புதிதாகத் துவக்கப்பட்ட அவர் கட்சி மக்கள் ஆதரவு பெற்று வேகமாக வளர்ந்தது.

சில மாதங்கள் கழித்து நடந்த ஒரு இடைத் தேர்தலில் தயாளன் கட்சி பெரிய வெற்றி பெற்றதுடன், துரைராசனின் கட்சி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தது.

இதனால் ஆளும் கட்சிக்குள் ஒரு போராட்டம் வெடிக்க ஆரம்பித்தது. துரைராசன் பதவி விலக வேண்டும் என்று குரல்கள் எழுந்து வலுவடையத் தொடங்கின.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை

குறள் 900:
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.

பொருள்: 
வலிமையான துணைகளை உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, July 23, 2023

899. பொருளாதார ஆலோசகர்

அந்த நாட்டின் மக்கள் மன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சி (தே.ஜ.க.) மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் தேசியக் கட்சி (ம.தே.க.) இரண்டுக்குமிடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உலக அளவில் புகழ் பெற்ற பொருளதார நிபுணர் மகேஷ் குமார் தங்கள் அரசின் பொருளாதார ஆலோசகராக இருப்பார் என்று ம.தே.க. அறிவித்தது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மக்களின் வறுமையைப் போக்கும் விதத்தில் அமைய வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தவர் மகேஷ் குமார். அவருடைய கருத்துக்கள் உலக அளவில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்த தே.ஜ.க  அவருடைய கருத்துக்களைப் பொருட்படுத்தவில்லை.

மகேஷ் குமார் தங்கள் அரசின் பொருளாதார ஆலோசகராக இருப்பார் என்ற ம.தே.க.வின் அறிவிப்பு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனால் தேர்தலில் ம.தே.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

மகேஷ் குமார் அரசின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

.தே.க. ஆட்சி அமைந்து சுமார் ஒரு வருடம் கழித்துப் பிரதமரைச் சந்தித்தார் மகேஷ் குமார்.

"ரெண்டு மூணு மாசமா உங்களைப் பாக்க நேரம் கேட்டுக்கிட்டிருக்கேன். இப்பதான் என்னைப் பார்க்க நேரம் கொடுத்திருக்கீங்க!" என்றார் மகேஷ் குமார் குற்றம் சாட்டும் தொனியில்.

"சொல்லுங்க!" என்றார் பிரதமர்.

"என்னோட பொருளாதாரக் கொள்கைகள் வறுமையில இருக்கறவங்களை மேம்படுத்தற நோக்கத்தைக் கொண்டவைன்னு உங்களுக்குத் தெரியும். நீங்க என்னைப் பொருளாதார ஆலோகராக நியமிச்சப்ப என்னோட ஆலோசனைகள்படி செயல்படுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா இந்த ஒரு வருஷமா நீங்க கார்ப்பரேட்களுக்கு ஆதரவான கொள்கைகளைத்தான் செயல்படுத்தறீங்க. அதனால நாட்டில வறுமை அதிகமாத்தான் ஆகி இருக்கு."

"உங்களை ஆலோசகரா வச்சுக்கப் போறோம்னு நாங்க சொன்னது எங்களோட தேர்தல் வெற்றிக்காகத்தான். இதை நாங்க ஜூம்லான்னு சொல்லுவோம். அப்படிச் சொன்னதாலதான் கடுமையான போட்டியில நாங்க வெற்றி பெற முடிஞ்சுது. சொன்னபடியே உங்களை ஆலோசகரா வச்சுக்கிட்டிருக்கோம். உங்க ஆலோசனைகளை  நாங்க செயல்படுத்தாட்டா என்ன? உங்களுக்கு சம்பளம் வந்துக்கிட்டிருக்கு இல்ல?" என்றார் பிரதமர் சிரித்தபடி.

"அப்படின்னா உங்க தேர்தல் வெற்றிக்காக என்னை நீங்க பயன்படுத்திக்கிட்டிருக்கீங்க. நீங்க செய்யறதெல்லம் என்னோட ஆலோசனைப்படிதாங்கற தவறான எண்ணம் எல்லார் மனசிலேயும் உண்டாகி இருக்குமே! உங்க அரசியலுக்காக என்னோட நல்ல பேரைக் கெடுத்துட்டீங்களே!" என்றார் மகேஷ் குமார் கோபத்துடன்.

"ராஜினாமான்னு ஒண்ணு இருக்கே, தெரியுமா?" என்றார் பிரதமர் சிரித்தபடி.

மகேஷ் குமார் கோபத்துடன் வெளியேறினார்.

அன்றே தன் பொருளாதார ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்த மகேஷ் குமார், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக்காகவே ம.தே.க. தன்னைப் பயன்படுத்திக் கொண்டதையும், தன் யோசனைகள் எதையுமே அரசு செயல்படுத்தவில்லை என்பதையும், தான் ஏமாற்றப்பட்டிருப்பதால் தனக்கு ஏற்பட்டிருக்கும் கோபத்தையும் குறிப்பிட்டு ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டார்.

ம.தே.க. அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் தங்கள் வாழ்க்கை இன்னும் கடினமாகி விட்டதாக சாதாரண மக்கள் வருந்திக் கொண்டிருந்த நிலையில் மகேஷ் குமாரின் ஆலோசனைகள் மூலம் வரும் காலத்தில் தங்களுக்குச் சில நன்மைகள் நடக்கும் என்று அவர்களுக்கு இருந்த மெலிதான நம்பிக்கை இழையையும் மகேஷ் குமாரின் ராஜினாமா அறுத்து விட்டது.

இன்னும் நான்கு ஆண்டுகள் இந்தப் கொடுமையான ஆட்சியில் வருந்த வேண்டி இருக்குமே என்ற கவலை மக்களைப் பீடித்தது.

ஆயினும், யாருமே எதிர்பாராத விதத்தில், ம.தே.க. கட்சியில் ஏற்பட்ட பிளவால் அவர்கள் ஆட்சி அடுத்த ஆறு மாதங்களில் கவிழ்ந்தது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாதெல்லாம் ரம் 90
பெரியாரைப் பிழையாமை

குறள் 899:
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

பொருள்: 
உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும் கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Saturday, July 22, 2023

898. ஒரு தாயின் கவலை!

"அஞ்சு வருஷம் சக்ரபாணி ஐயா கம்பெனியில வேலை செஞ்சிருக்க. நீயாதான் வேலையை விட்டு வந்த. அவரு உன்னைப் போகச் சொல்லல. அப்படி இருக்கச்சே அவரோட போட்டி கம்பெனியோட சேர்ந்துக்கிட்டு அவருக்கு எதிரா வேலை செய்யறியே, இது நல்லா இருக்கா?" என்றாள் காவேரி தன் மகன் மோகனிடம்.

"வேலை செஞ்சேன், சம்பளம் கொடுத்தாரு. அதோட சரியாப் போச்சு. இப்ப என்னோட முன்னேற்றத்துக்காக அவர் போட்டி கம்பெனியோட சேர்ந்து வேலை செய்யறேன். அதில என்ன தப்பு இருக்கு?" என்றான் மோகன். 

"தப்புதாண்டா! அவரு ரொம்ப நல்ல மனுஷன்னு நீயே சொல்லி இருக்கே. எனக்கு உடம்பு சரியில்லாம இருந்தப்ப அவரு தானாவே உனக்கு லீவு கொடுத்து எனக்கு மருத்துவச் செலவுக்காகப் பணமும் கொடுத்தாரு. என்னை ஆஸ்பத்திரியில வந்து பார்த்து நலம் விசாரிச்சாரு. அவ்வளவு உயர்ந்த மனுஷன் அவரு! இப்படிப்பட்ட நல்ல மனுஷனுக்குக் கெடுதல் செய்ய நினைச்சா அது உனக்கு நல்லதில்லடா!"

"என்னம்மா பத்தாம் பசலித்தனமாப் பேசிக்கிட்டிருக்க? வாழ்க்கையில முன்னேறணும்னா வர வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கணும். அவரோட போட்டி கம்பெனியில எங்கிட்ட வந்து உதவி கேட்டாங்க. நான் செய்யறேன். நான் வாங்கிக்கிட்டிருந்த சம்பளத்தைப் போல ரெண்டு மடங்கு வருமானம் இப்ப கிடைக்குது. எனக்கு ஏதாவது பிரச்னைன்னா இந்த கம்பெனிக்காரங்க எனக்கு உதவுவாங்க. இந்த கம்பெனி வளர்ச்சி அடையறப்ப சக்ரபாணிக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்! அதுக்கு நான் என்ன செய்ய முடியும்" என்று சொல்லி விவாதத்தை முடித்து விட்டான் மோகன்.

"வாங்கம்மா! என்ன விஷயம்? மோகன் நல்லா இருக்கானா?" என்றார் சக்ரபாணி தன்னைப் பார்க்க வந்த காவேரியைப் பார்த்து.

"ஐயா! நீங்க ரொம்ப உயர்ந்த மனிதர். மோகன் உங்களுக்கு எதிரா வேலை செய்யறான். ஆனா நீங்க அவன் நல்லா இருக்கானான்னு கேக்கறீங்க!" என்றாள் காவேரி.

"மோகன் செய்யற விஷயங்கள் பற்றி எனக்குக் காதில விழுந்துக்கிட்டுத்தான் இருக்கு" என்றார் சக்ரபாணி சுருக்கமாக.

"ஐயா! உங்களை மாதிரி ஒரு உயர்ந்த மனுஷருக்குக் கேடு நினைச்சா அதனால அவனுக்கு என்ன கெடுதல் வந்து சேருமோன்னு எனக்கு பயமா இருக்கு. வெளியில போன பையன் வீட்டுக்கு நல்லபடியா வந்து சேரணுமேன்னு தினமும் கவலைப்பட்டுக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்கேன். சில நாள் அவன் வர தாமதமானா ஆக்சிடென்ட் ஏதாவது ஆகி இருக்குமோன்னு ஒரே படபடப்பா இருக்கு. அவன் வீட்டுக்குத் திரும்பினப்பறம்தான் பதட்டம் அடங்குது. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. அதனாலதான் உங்களைப் பார்த்து என் மனசில இருக்கறதை சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்!" என்றாள் காவேரி. பேச்சின் முடிவில் அவளுக்கு அழுகை வந்து விட்டது.

"கவலைப்படாதீங்கம்மா. மோகன் நல்லா இருக்கணும்னுதான் நான் எப்பவும் நினைக்கறேன். உங்களுக்கும் இவ்வளவு நல்ல மனசு இருக்கு. அதனால உங்க மனசுக்குக் கஷ்டம் வர மாதிரி எதுவும் நடக்காது, மோகனுக்கு எதுவும் ஆகாது. கவலைப்படாம போயிட்டு வாங்க. இருங்க. உங்களைக் காரில கொண்டு விடச் சொல்றேன்!" என்ற சக்ரபாணி, "டிரைவர்!" என்று தனது டிரைவரை அழைத்தார்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை

குறள் 898:
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.

பொருள்: 
மலை போன்ற பெரியவருக்குக் கேடு நினைத்தால் உலகில் அழியாமல் நிலைபெற்றாற்போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

குறிப்பு;  'மலை போன்ற ஒரு பெரியவர் ஒரு மனிதன் கெட வேண்டுமென்று நினைத்தால், அந்த மனிதன் எவ்வளவு வலுவான நிலையில் இருந்தாலும் அழிந்து போவான்' என்று இன்னொரு விதத்திலும் இந்தக் குறளுக்குப் பொருள் கூறப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பொருட்களில் எதை எடுத்துக் கொள்வது என்று முதலில் ஒரு குழப்பம் இருந்தது. கதையை வடிவமைக்கும்போது இந்த இரண்டு பொருட்களுமே வரும்படி அமைக்க முடிந்ததில் எனக்குத் திருப்தியே!
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Friday, July 21, 2023

897. பார்த்திபனின் மாமனார்

"எவ்வளவோ பணக்கார இடத்திலேந்தெல்லாம் எனக்குப் பெண் கொடுக்க வந்தாங்க. ஆனா எங்கப்பா தன்னோட நண்பர் பொண்ணுங்கறதுக்காக உன்னை எனக்குக் கட்டி வச்சுட்டாரு!"

திருமணம் ஆன புதிதில் பார்த்திபன் தன் மனைவி வாசுகியிடம் சொல்ல ஆரம்பித்த இந்த வாக்கியத்தைத் திருமணம் ஆகப் பல வருடங்கள் ஆன பிறகும் சொல்லி வந்தான்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த வாசுகி துவக்கத்தில் இதற்கு பதில் சொல்லாமல் இருந்தாள்.

ஆனால் சில வருடங்கள் கழித்து வாசுகி பார்த்திபனுக்குப் பல விதங்களிலும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தாள்.

"அதுதான் ஏழைக் குடும்பம்னும் பாக்காம கல்யாணத்துகு முன்னாலேயும் சரி, கல்யாணத்துக்கு அப்புறமும் சரி, வரதட்சணை, சீர்னு கறந்துட்டீங்களே! ஏழையா இருந்த எங்கப்பா உங்களுக்கு சீர் செஞ்சே பரம ஏழையா ஆயிட்டாரு!" 

"பொதுவா பிள்ளையோட அப்பா அம்மாதான் வரதட்சணை, சீர்னு கேப்பாங்க. ஆனா உங்க அப்பா அம்மா அப்படி எதுவும் கேக்கல. நீங்கதான் சீர், செனத்தின்னு ஏகப்பட்டதைக் கேட்டு எங்கப்பாவைக் கொடுமைப்படுத்தினீங்க. உங்களை மாதிரி உலகத்தில யாரும் இருக்க மாட்டாங்க!"

"நீங்க ஒண்ணும் பெரிய பணக்காரர் இல்ல. சுமாரான வசதி உள்ள குடும்பம்தான் உங்க குடும்பம். எங்கப்பா தன் வசதிக்கு மீறி நீங்க கேட்ட சீரையெல்லாம் உங்களுக்கு செஞ்சிருக்காருன்னு நன்றியா இருங்க!"

ஆயினும் பார்த்திபன் வாசுகியின் தந்தையை இழித்துப் பேசுவதை நிறுத்தவில்லை.

"ஆஃபீஸ்ல எனக்குக் கொஞ்சம் பிரச்னை இருக்கு. என்னால இந்த வேலையில தொடர முடியாது. நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு நினைக்கறேன். முதலீடு செய்யப் பணம் வேணும். உங்கப்பாகிட்ட கேட்டுக் கொஞ்சம் பணம் வாங்கிக்கிட்டு வா. நான் தொழில் நடத்த அவர் பணம் கொடுக்கலேன்னா அவரோட பொண்ணோட குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துடும்னு சொல்லி அவருக்குப் பரிய வை!" என்று வாசுகியிடம் சொல்லி அவள் அப்பாவிடமிருந்து பணம் வாங்கி வரச் சொன்னான் பார்த்திபன்.

வாசுகியின் தந்தை எப்படியோ கஷ்டப்பட்டுப் புரட்டிக் கொடுத்த பணத்தை முதலாக வைத்துப் பார்த்திபன் தொடங்கிய தொழில் விரைவிலேயே வேகமாக வளர்ந்து அவன் பெரும் செல்வந்தனாகி விட்டான்.

அதற்குப் பிறகும் பார்த்திபன் வாசுகியின் தந்தையிடம் நன்றி பாரட்டவில்லை, என்பதுடன், அவரை இகழ்ந்து பேசுவதையும் நிறுத்தவில்லை.

"பொண்ணுக்குச் செய்ய வேண்டியது அவரோட கடமை, செஞ்சாரு. தொழில்ல வெற்றி பெற்றது என்னோட திறமை. உங்கப்பாவுக்கு இதில என்ன பங்கு இருக்கு?" என்றான் வாசுகியிடம்.

வாசுகியின் பெற்றோர் ஏழைகள் என்பதால் அவர்களைத் தன் வீட்டுக்கு வருவதைப் பார்த்திபன் அனுமதிக்கவில்லை. வாசுகிதான் எப்போதாவது போய் அவர்ளைப் பார்த்து விட்டு வருவாள்.

வாசுகியின் பெற்றோருக்குப் பொருளாதாரப் பிரச்னைகள் வந்தபோது பார்த்திபன் அவர்களுக்கு உதவ மறுத்து விட்டான். "அவங்க அவங்க பிரச்னையை அவங்தான் பாத்துக்கணும்!" என்றான்.

"எங்கப்பா உங்களுக்கு எவ்வளவோ செஞ்சிருக்காரு. இன்னிக்கு நீங்க நல்ல நிலைமையில இருப்பதற்குக் காரணமே அவர்தான். அவர் விஷயத்தில நீங்க இவ்வளவு அநியாயமா நடந்துக்கிறீங்க. நீங்க நடந்துக்கறதைப் பார்த்து அவர் ரொம்ப வருத்தப்படறாரு. வெளிப்படையாக் காட்டிக்கிட்டாலும் அவர் மனசில நிச்சயமா உங்க மேல கோபம் இருக்கும். அந்தக் கோபத்தினால நம்ம குடும்பத்துக்கு தப்பா எதுவும் நடந்துடக் கூடாதேன்னு எனக்கு பயமா இருக்கு!" என்றாள் வாசுகி.

பார்த்திபனின் அலுவலகத்திலிருந்து வாசுகிக்குத் தொலைபேசி வந்தது. "அம்மா! இன்னிக்கு திடீர்னு அரசாங்க அதிகாரிகள் நம்ம தொழிற்சாலைக்கு வந்து சோதனை போட்டாங்க. நாம தயாரிக்கற இரும்புப் பொருட்களை சில தீவிரவாதிகள் வாங்கி ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தறாங்களாம். 'எங்ககிட்ட பொருள் வாங்றவங்க அதை எதுக்குப் பயன்படுத்தறாங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?'னு சார் கேட்டாரு. ஆனா அதிகாரிங்க அதை ஒத்துக்காம சாரைக் கைது செஞ்சுட்டாங்க" என்றார் தொலைபேசியில் பேசிய நிறுவன ஊழியர்.

"என்னது? கைது செஞ்சுட்டாங்களா?" என்றாள் வாசுகி அதிர்ச்சியுடன்.

"ஆமாம்மா! அதுவும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில. ஜாமீன் கூடக் கிடைக்காதுன்னு சொல்றாங்க!"

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை

குறள் 897:
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.

பொருள்: 
குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங் கொள்வார் என்றால், பல்வகையிலும் சிறந்த வாழ்க்கையும், பெரும் பொருளும் எதற்கு ஆகும்?.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Thursday, July 20, 2023

896. பெரியப்பா அனுப்பிய நோட்டீஸ்

பதிவுத் தபாலில் அந்த வக்கீல் நோட்டீஸ் வந்திருந்தது.

பவித்ரனின் பெரியப்பாதான் அனுப்பி இருந்தார்.

நோட்டீஸை எடுத்துக் கொண்டு தனக்குத் தெரிந்த ஒரு வக்கீலிடம் போனான் பவித்ரன்.

"சார்! என் பெரியப்பா சின்ன வயசிலேய வேற ஒரு ஊர்ல போய் செட்டில் ஆயிட்டாரு. என் அப்பா, பெரியப்பா ரெண்டு பேருக்கும் சொந்தமான நிலத்தை என் அப்பாதான் பார்த்துக்கிட்டிருந்தார். என் அப்பா காலத்துக்கப்புறம் நான்தான் நிலத்தைப் பார்த்துக்கிட்டிருந்தேன். அப்பப்ப அவருக்குப் பணம் அனுப்பிக்கிட்டுத்தான் இருந்தேன். நிலத்திலேந்து வந்த வருமானத்தில அவரோட பங்கை சரியாக் கொடுக்கலேன்னு பல லட்ச ரூபாய் கேட்டு இப்ப நோட்டீஸ் அனுப்பி இருக்காரு!" என்றான் பவித்ரன்.

"அப்பப்ப பணம் அனுப்பிச்சதா சொல்றீங்க. அப்படின்னா? எங்கிட்ட முழு உண்மையையும் சொன்னாத்தான் என்னால உங்களுக்கு உதவ முடியும்!"

"சார்! நிலத்தைப் பாத்துக்கிட்டது நான். அவரு வயசானவரு. வெளியூர்ல இருந்தாரு. ஊர் நிலவரம் அவருக்குத் தெரியாது. நிலத்தோட வருமானத்தில அவரோட பங்கா கொஞ்சம் பணம்தான் கொடுத்துக்கிட்டிருந்தேன்!" என்றன் பவித்ரன் சற்றுத் தயக்கத்துடன்.

"சரி. ஒவ்வொரு வருஷமும் நிலத்திலிருந்து மொத்த வருமானம் எவ்வளவு வந்தது, செலவுகள் எவ்வளவு, நிலத்தைப் பார்த்துக்கிட்டதாக நீங்க எவ்வளவு எடுத்துக்கிட்டீங்க, அவருக்கு எவ்வளவு கொடுத்தீங்க இதுக்கெல்லாம் கணக்கு எழுதி வச்சிருக்கீங்களா?" என்றார் வக்கீல்.

"இல்லை சார். பெரியப்பாதானேன்னு நினைச்சேன். அவர் கணக்குக் கேப்பார்னு தெரியாது!"

"நீங்க கொடுத்த பணம் அவருக்குச் சேர வேண்டிய பங்கை விடக் குறைவா இருக்குன்னு அவர் உங்களுக்குக் கடிதம் எழுதி இருக்காரா?"

"வருஷா வருஷம் எழுதிக்கிட்டுத்தான் இருப்பாரு. நான் அதுக்கெல்லாம் பதில் போடறதில்லை. அந்தக் கடிதங்களையெல்லாம் கிழிச்சுப் போட்டுடுவேன்!"

"உங்ககிட்ட எந்தக் கணக்கு வழக்கும் இல்லை. அவர் நீங்க அனுப்பின பணத்துக்கெல்லாம் கணக்கு வச்சிருப்பார்னு நினைக்கிறேன். ஏன்னா அவரோட நோட்டீஸ்ல இந்தத் தொகையெல்லாம் குறிப்பிட்டிருக்காரு. அவர் எழுதின கடிதத்துக்கெல்லாம் காப்பி வச்சிருப்பாருன்னு நினைக்கறேன். உங்ககிட்ட கணக்கு வழக்கு இல்லாததால சில வருஷங்கள் நிலத்திலேந்து வருமானம் குறைச்சலா இருந்தாலும் அதையெல்லாம் உங்களால நிரூபிக்க முடியாது. உங்க கேஸ் ரொம்ப வீக்கா இருக்கு. அவரைப் பாத்துப் பேசி ஏதவது காம்ப்ரமைஸ் பண்ணிக்கறதுதான் ஒரே வழி!" என்றார் வக்கீல்.

'அந்தக் கிழவன் எந்த காம்ப்ரமைஸுக்கும் வர மாட்டானே! சின்ன வயசில நான் ஒரு தீ விபத்தில மாட்டிக்கிட்டு அதிசயமா உயிர் பிழைச்சுட்டேன்னு சொல்லுவாங்க. ஆனா இப்ப இந்தக் கிழவன்கிட்டேந்து தப்பிக்க முடியாது போல இருக்கே! வெளியூர்ல இருந்துக்கிட்டு இந்தக் கிழவனால என்ன செய்ய முடியும்னு நினைச்சது தப்பாப் போச்சே!'  என்று நொந்து கொண்டான் பவித்ரன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை

குறள் 896:
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

பொருள்: 
தீயால் சுடப்பட்டாலும் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பிப் பிழைக்க முடியாது.
குறள் 897 (விரைவில்)
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Wednesday, July 19, 2023

952. பத்தாயிரம் ரூபாய்!

ரமேஷ் அந்த நிறுவனத்தில் சேர்ந்து சில மாதங்கள்தான் ஆகி இருந்தன.

அந்த நிறுவனத்துக்கான ஒரு பணிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 

வரும் விண்ணப்பங்களை ஒரு பதிவேட்டில் குறித்துக் கொண்டு அவற்றை ஒரு பெட்டியில் போட்டு வைக்க வேண்டியது அவன் வேலை. 

விண்ணப்பங்களுக்கான கடைசி நாள் முடிந்ததும் சில அதிகாரிகள் அவற்றைப் பிரித்துப் பார்த்து எந்த நிறுவனம் குறைவான தொகையைக் குறிப்பிட்டிருக்கிறதோ, அந்த நிறுவனத்துக்கு அந்தப் பணியைக் கொடுப்பார்கள்.

அது ஒரு தனியார் நிறுவனம் என்பதால் விண்ணப்பங்கள் வைக்கப்படும் கவர்களில் அரக்கு வைத்து சீல் செய்யும் வழக்கம் இல்லை. ஒட்டப்பட்ட கவர்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்.

அன்றுதான் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள். 

ஒரு நிறுவனத்திலிருந்து ஒரு விண்ணப்பம் அடங்கிய கவருடன் ஒருவர் வந்தார். அதை ரமேஷிடம் கொடுத்து விட்டு, "நீங்க இங்கே புதுசா வேலைக்கு வந்திருக்கீங்களா?" என்றார்.

"ஆமாம்" என்றான் ரமேஷ்.

"இதுக்கு முன்னால இங்கே இருந்த கார்த்திக்கை எனக்குத் தெரியும்."

"அவர் வேலையை விட்டுப் போயிட்டாரு."

"எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?" என்றார் அவர்.

"சொல்லுங்க!"

"நான் கொடுத்த கவரைக் கொஞ்சம் கொடுக்கிறீங்களா?"

ரமேஷ் தயக்கத்துடன் அவர் கொடுத்த கவரை அவரிடம் கொடுத்தான்.

தன் பையிலிருந்த ஒரு டியூபை எடுத்து அதை கவர் ஒட்டப்பட்டிருந்த இடத்தில் பிதுக்கினார் அவர்.

டியூபிலிருந்து மெலிதாக ஒரு திரவம் வெளி வந்து ஒட்டிய கவரைத் திறந்து கொள்ள வைத்தது. உடனே அந்த திரவம் ஆவியாகிச் சுவடில்லாமல் மறைந்து விட்டது.

"பாத்தீங்களா? பிரிச்சதே தெரியல" என்றார் அவர்.

ரமேஷ் மௌனமாகத் தலையசைத்தான்.

"சஞ்சய் என்டர்பிரைசஸ்தான்  குறைவா கோட் பண்ணி இருப்பாங்கன்னு எனக்குத் தெரியும். நான் மத்தியானம் லஞ்ச் டைம்ல இங்கே வரேன். அப்ப ஆஃபீஸ்ல யாரும் இருக்க மாட்டாங்க. அப்ப நீங்க சஞ்சய் என்டர்பிரைசஸ் கவரை எடுத்துக் கொடுத்தீங்கன்னா அதை இதே மாதிரி பிரிச்சு அவங்க எவ்வளவு கோட் பண்ணி இருக்காங்கன்னு பாத்துட்டு திரும்பவும் சரியா ஒட்டிக் கொடுத்துடுவேன். அப்புறம் அதை விடக் குறைச்சலா கோட் பண்ணிக் கொண்டு வந்து விண்ணப்பம் கொடுப்பேன். இப்ப நான் கொண்டு வந்தது உங்களுக்கு இதை செஞ்சு காட்டத்தான்" என்றார் அவர்.

"அப்படியெல்லாம் செய்ய முடியாது சார்!" என்றான் ரமேஷ்.

"உங்ளுக்குப் பத்தாயிரம் ரூபா கொடுத்துடுறேன். இதில எந்த ரிஸ்க்கும் இல்லை. உங்களுக்கு முன்னால இந்த சீட்ல இருந்த கார்த்திக் எனக்கு இது மாதிரி நிறைய தடவை செஞ்சு கொடுத்திருக்கார்!"

ரமேஷ் சற்று யோசிப்பது போல் தோன்றவே, "நான் சரியா ஒண்ணு இருபதுக்கு வரேன். அப்பதான் ஆஃபீஸ் காலியா இருக்கும்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் அவர்.

'அவர் சொன்ன படிசெய்தால் என்ன? இதில் எந்த ரிஸ்க்கும் இல்லையே! குறைவான தொகையை விட இன்னும் குறைவாக இவர் கோட் செய்தால் அது  நிறுவனத்துக்கு லாபம்தானே! பத்தாயிரம் ரூபாய் சுளையாகக் கிடைத்தால் குடும்பத்துக்கு உதவுமே!' என்ற சிந்தனை ரமேஷின் மனிதில் ஒரு கணம் தோன்றியது.

உடனே அவன் அப்பாவின் முகம் மனதில் வந்தது. அவர் இப்போது உயிருடன் இல்லை. ஆனால் வாழ்ந்த நாளில் அவருடைய நேர்மைக்காக மதிக்கப்பட்டவர். நேர்மைதான் நம் குடும்பச் சொத்து என்று அவர் அடிக்கடி சொல்வாரே!

'அவருக்கு மகனாகப் பிறந்து விட்டு, இப்படி ஒரு செயலைச் செய்யலாமா? இந்தச் சபலம் எனக்கு ஏன் தோன்றியது? ஒருவேளை மாட்டிக் கொண்டால் நம் குடும்பத்துக்கு எத்தகைய அவமானம்! மாட்டிக் கொள்ள மாட்டேன் என்றாலும் இப்படிச் செய்வது தவறுதானே?'

உடனே அவன் மனதில் ஒரு தெளிவு பிறந்தது.

மேஷ் தான் சொன்னபடி செய்யத் தயாராக இருப்பான் என்ற நம்பிக்கையுடன் உணவு இடைவேளையின்போது வந்த அந்த மனிதர் ரமேஷின் பிடிவாதமான மனப்போக்கைக் கண்டு ஏமாற்றம் அடைந்தார்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 96
குடிமை

குறள் 952:
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.

பொருள்: 
நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலக மாட்டார்.
குறள் 953 (விரைவில்)
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

951. அரசரின் தேர்வு

"அரசே! காவல் துறைத் தலைவராக நியமிக்க இரண்டு பேரை நான் தேர்வு செய்திருக்கிறேன். இருவரில் ஒருவரைத் தாங்கள் நியமிக வேண்டும்" என்றார் அமைச்சர்.

"இருவர் பற்றிய விவரங்களை என்னிடம் கொடுங்கள். நான் பார்த்து விட்டுச் சொல்கிறேன்" என்றார் அரசர்.

"அவர்களைத் தாங்கள் நேரில் பார்த்து விசாரிக்க வேண்டாமா?"

"தேவைப்பட்டால் பார்க்கிறேன்" என்றார் அரசர்.

ரு வாரம் கழித்து, அரசர் அமைச்சரிடம், "நீங்கள் தேர்ந்தெடுத்த இருவரில் சந்திரசூடனையே காவல் துறைத் தலைவராக நிமித்து விடுங்கள்" என்றார் அரசர்.

"சரி, அரசே! ஆனால் தாங்கள் அவர்கள் இருவரையும் நேரில் பார்கவில்லையே?" என்றார் அமைச்சர்.

"அவசியமில்லை. நீங்கள் பார்த்து விசாரித்திருப்பீர்களே! நீங்கள் தேர்ந்தெடுத்த இருவருமே இந்தப் பதவிக்குத் தகுதி உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை!"

"தாங்கள் எந்த அடிப்படையில் இந்த ஒருண்டு பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று நான் அறிந்து கொள்ளலாமா?"

"நீங்கள் கொடுத்த விவரங்களை ஒற்றர்படைத் தலைவரிடம் கொடுத்து இருவரின் குடும்பப் பின்னணி பற்றி விசாரிக்கச் சொன்னேன். சந்திரசூடன் நல்ல குடும்பத்தில் பிறந்தவர். மற்றொருவரின் தந்தை நேர்மையானவர் அல்ல என்று தெரிந்தது. அதனால்தான் சந்திரசூடனைத் தேர்ந்தெடுத்தேன்."

"மன்னிக்க வேண்டும் அரசே! நான் இருவரையும் தேர்வு செய்தது அவர்கள் கல்வி, அறிவு, அனுபவம், கடந்தகாலச் செயல்பாடு இவற்றை வைத்துத்தான். அவர்கள் எந்தக் குடியில் பிறந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டுமா?" என்றார் அமைச்சர்.

"நிச்சயமாக அமைச்சரே! காவல் துறைத் தலைவராக இருப்பவர் நேர்மையானவராக, நடுநிலையுடன் செயல்படுபவராக இருக்க வேண்டும். இந்த குணம் பலரிடமும் இருக்கும். ஆனால் இன்னொரு முக்கியமான குணமும் அவருக்கு வேண்டும். அது தவறு செய்தால் அதற்காக வெட்கப்படுதல். இந்த குணம் இருப்பவர்கள்தான் தவறு செய்யாமல் இருப்பார்கள். ஒருவேளை தவறு செய்தாலும் அதற்காக வெட்கப்பட்டு மீண்டும் அத்தகைய தவறைச் செய்யாமல் இருப்பார்கள். இந்த குணம் நல்ல குடியில் பிறந்தவர்களிடம் மட்டுமே இருக்கும் என்பது என் கருத்து. ஏன் நீங்களே அத்தகைய குடிப்பெருமை உள்ளவராக இருப்பதால்தான் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள்!" என்றார் அரசர் சிரித்துக் கொண்டே.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 96
குடிமை

குறள் 951:
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.

பொருள்: 
நடுவு நிலைமையும், நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

895. அடைக்கலம் தருபவர்

விசாக நாட்டு மன்னருக்கு எதிராக அவருடைய ராணுவ வீரர்கள் சிலர் புரட்சி செய்தபோது, அவர்களுடன் சேர்ந்து புரட்சியில் ஈடுபட்டதுதான் மாறன் செய்த தவறு.

தனக்கு விசுவாசமாக இருந்த வீரர்களைக் கொண்டு புரட்சியை முறியடித்த மன்னர் அதிவிரதன் புரட்சியில் ஈடுபட்டவர்களைப் பிடித்து தண்டனை வழங்குவதில் தீவிரம் காட்டினர்.

அகப்பட்டுக் கொண்டவர்களில் சிலருக்கு மரண தண்டனையும், வேறு சிலருக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட்டன.

மாறன் தப்பித்துத் தலைநகரத்தை விட்டுத் தொலைதூரம் ஓடி அங்கே இருந்த தன் தந்தையின் நண்பர் காலபைரவர் வீட்டில் ஒளிந்து கொண்டான்.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு, "மாறா! நீ இங்கே நீண்ட நாள் இருப்பது ஆபத்து. மன்னரின் வீரர்கள் உன்னை எப்படியும் தேடிப் பிடித்து விடுவார்கள். நீ நம் நாட்டை விட்டு வெளியேறுவதுதான் நல்லது" என்றார் காலபைவர்.

"எங்கே செல்வது? நம் அண்டை நாட்டு மன்னர்கள் எல்லோரும் நம் மன்னரைக் கண்டு அஞ்சுகிறார்களே! நான் அங்கு சென்றால் அவர்களே என்னைப் பிடித்து நம் மன்னரிடம் ஒப்படைத்து விடுவார்களே!" என்றான் மாறன்.

"மாண்டவ நாட்டுக்குச் சென்றால் நீ பிழைத்துக் கொள்ளலாம்."

"எப்படி? மாண்டவ நாடும் நமக்கு நட்பு நாடுதானே?"

"ராமரைப் பத்தி ஒன்று சொல்வார்கள். அவரிடம் யாராவது அடைக்கலம் புகுந்தால் அவர்களை அவர் நிச்சயம் காப்பாற்றி விடுவாராம். மாண்டவ நாட்டு அரசர் பெருவழுதியும் அப்படித்தான். அதனால் எப்படியாவது மாண்டவ நாட்டுக்குப் போய் மன்னரைப் பார்த்து அவரிடம் அடைக்கலம் கேள். அவர் உனக்கு அடைக்கலம் கொடுத்து விட்டால், அதற்குப் பிறகு நம் நாட்டு மன்னரிடம் நீ பயப்பட வேண்டாம்!" என்றார் காலபைரவர்.

காலபைரவரின் யோசனையை ஏற்றுப் பல இன்னல்களுக்கிடையே எப்படியோ மாண்டவ நாட்டை அடைந்து விட்டான் மாறன்.

மாண்டவ நாட்டு மன்னர் பெருவழுதி எளிமையானவர் என்பதால் அரண்மனைக்குச் சென்று அவரைச் சந்திப்பதில் மாறனுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.

மாறன் தன் நிலை பற்றி மன்னரிடம் விளக்கித் தனக்கு அடைக்கலம் கொடுக்கும்படி கேட்டான்.

"அடைக்கலம் என்று கேட்டு வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிப்பதுதான் என் கொள்கை. மனிதாபிமான அடிப்படையில் நான் இதைச் செய்து வருகிறேன். ஆனால்..." என்று இழுத்தார் பெருவழுதி.

பெருவழுதி என்ன சொல்லப் போகிறாரோ என்று பதட்டத்துடன் காத்திருந்தான் மாறன்.

"விசாக நாட்டு மன்னர் அதிவிரதரை என்னால் விரோதித்துக் கொள்ள முடியாது. அதனால் உன் விஷயத்தில் என் கொளகைப்படி நான் செயல்பட முடியாது!"

"அரசே! என் மீது கருணை காட்டுங்கள்!" என்றான் மாறன் கெஞ்சும் குரலில்.

"நான் உன் மீது கருணை காட்டினால் அதிவிரதர் என் மீது கருணை காட்ட மாட்டார்.  உனக்கு நான் அடைக்கலம் கொடுத்தால் நான் அதிவிரதரின் கோபத்தக்கு ஆளாவேன். அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியாது. சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். நானும் என் நாடும் பிழைத்திருந்தால்தான் நான் மற்றவர்களிடம் கருணை காட்டி உதவ முடியும். எனவே நீ இங்கு வந்திருப்பதை நான் அதிவீரருக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்குப் பிறகு அவர் உன்னைத் தன் நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி கோரினால் அனுப்பி வைக்கத்தான் வேண்டும். அதுவரையில் உன்னை எங்கள் நாட்டுச் சிறையில் வைத்திருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை!" என்ற பெருவழுதி காவலர்களுக்குச் சைகை காட்ட அவர்கள் மாறனை நெருங்கி வந்தனர்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை

குறள் 895:
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.

பொருள்: 
மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, July 16, 2023

894. நம்பிக்கையில்லாத் தீர்மானம்

செங்கல்வராயன் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தபோது, யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தீர்மானம் கொண்டு வந்த உறுப்பினர் ஒரு சிறிய கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், எதிர்க்கட்சித் தலைவர் கூடத் துவக்கத்தில் அதை விமரிசனம் செய்து பேசினார். 

"ஆளும் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கும் நிலையில், இந்தத் தீர்மானத்தை அவர்கள் முறியடித்து விடுவார்கள்.அதை ஒரு செயற்கை வெற்றியாக அவர்கள் காட்டிக் கொள்ளத்தான் இது உதவும்!" என்றார் அவர். 

ஆயினும், ஆளும் கட்சியைச் சேர்ந்த 23 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தததால் யாரும் எதிர்பாராத வகையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்று, செங்கல்வராயன் பதவி இழந்தார். 

ஆளும் கட்சியைச் சேர்ந்த கதிரவன் என்ற சட்டமன்ற உறுப்பினர்தான் அதிருப்தியில் இருந்த 22 உறுப்பினர்களை ஒன்று திரட்டி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்ற பெறச் செய்தான் என்பது பிறகுதான் தெரிந்தது.

அரசியலில் நீண்ட அனுபவம் மிகுந்த செங்கல்வராயனை அனுபவமில்லாத ஒரு இளைஞன் வீழ்த்தியது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்புக்கு முந்தைய இரவில் கதிரவன் எதிர்க்கட்சியினருடன் பேசிச் செய்து கொண்ட ரகசிய உடன்பாட்டின்படி, எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டாக அமைக்கப் போகும் அரசில் கதிவனுக்குத் துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இதுவரை அமைச்சர் பதவி கூட வகிக்காத, முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆகி இருந்த ஒருவருக்கு எடுத்த எடுப்பிலேயே துணை முதல்வர் பதவியா என்ற வியப்பு பலரிடமும் ஏற்பட்டது.

தவி ஏற்பு விழாவில், முதலமைச்சர் பதவி ஏற்ற பிறகு, இரண்டாவதாகத் தான் அழைக்கப்படுவோம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான் கதிரவன்.

ஆனால் இரண்டாவதாக வேறொரு பெயர் அழைக்கப்பட்டது. இறுதி வரை அவன் பெயர் அழைக்கப்படவில்லை.

பதவி ஏற்பு விழா முடிந்ததும், முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டவரிடம் சென்று 'நியாயம்' கேட்டான் கதிரவன்.

அவர் சிரித்துக் கொண்டே, "சொந்தக் கட்சியோட அரசாங்கத்தையே திட்டம் போட்டுக் கவுத்தவன் நீ. உன்னை எப்படி அமைச்சரவையில சேத்துக்க முடியும்?" என்றார்.

"அப்படீன்னா எனக்குக் கொடுத்த வாக்குறுதி?"

"துரோகிகள் எல்லாம் வாக்குறுதி பத்திப் பேசக் கூடாது!" என்றார் முதலமைச்சர் சிரித்தபடியே.

"எங்க கட்சியிலேந்து 22 பேரை அழைச்சுக்கிட்டு வந்தவன் நான்தான். நாங்க அத்தனை பேரும் உங்களுக்கு எதிரா ஓட்டுப் போடுவோம். அப்ப உங்க ஆட்சி எப்படி நீடிக்கும்னு பாக்கறேன்!" என்றான் கதிரவன் கோபத்துடன்.

ஆனால் அந்த 22 பேரில் சிலருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருந்ததாலும், மற்றவர்களுக்கு வேறு வகை நன்மைகள் வழங்கப்பட்டிருந்ததாலும் அவர்களில் ஒருவர் கூடக் கதிரவன் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை.

ன் ஆட்சி கவிழ்ந்ததுமே, தன் கட்சியின் ஒரு முக்கியத் தலைவரை எதிர்க்கட்சித் தலைவரிடம் தூதாக அனுப்பிய செங்கல்வராயன் கட்சி மாறிய சட்டமன்ற உறுப்பிர்களில் யாருக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும், கதிரவனுக்கு மட்டும் எந்தப் பதவியும் கொடுக்கக் கூடாது என்று அவரிடம் பேசி அவரை ஒப்புக் கொள்ள வைத்து விட்டார் என்பது கதிரவனுக்குத் தெரியாது.

ஆனால் கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தான் மட்டும் பதவி இழக்க நேரிடலாம் என்பதும், எதிர்காலத்தில் எந்தக் கட்சியிலும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தனக்குக் கிடைக்காது என்பதும் கதிரவனுக்குத் தெரிந்தது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை

குறள் 894:
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.

பொருள்: 
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

893. போட்டி போட முடியுமா?

"தொழிலதிபர் நிர்மல் குமார் இறங்காத துறையே இல்லைங்கற மாதிரி எல்லாத் துறைகளிலேயும் கால் பதிச்சிருக்காரு. அவரு புதுசா ஒரு தொழில்ல இறங்கினா, அந்தத் தொழில்ல ஏற்கெனவே இருக்கறவங்க அத்தனை பேரும் பயந்து நடுங்குவாங்க. ஏன்னா, யாராலேயும் அவரோட போட்டி போட்டு நிலைச்சு நிக்க முடியாது."

இதுதான் நிர்மல் குமார் பற்றிப் பொதுவாக அனைவருமே பேசிக் கொள்வது.

நிர்மல் குமார் அடியெடுத்து வைக்காத தொழில்துறைகளில் இருந்தவர்கள் 'நல்ல வேளை அவர் நம்ம தொழிலுக்கு வரலை!' என்று சற்று நிம்மதியுடன் இருந்தாலும், எப்போது அவர் தங்கள் தொழிலுக்குள் நுழைவாரோ என்ற அச்சத்துடனும் இருந்தனர்.

"இந்தத் தொழில்ல நான்தான் ஜாம்பவான். என்னை எந்தக் கொம்பனாலும் ஜெயிக்க முடியாது!" என்று பலரிடமும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பரார் தணிகாசலம்.

"நீங்க செய்யறது ஒரு சின்னத் தொழில். இதுக்கு மார்க்கெட்டே ரொம்பக் கொஞ்சம். உங்களை மாதிரி ஒண்ணு ரெண்டு பேர்தான் இந்தத் தொழில்ல இருக்கீங்க. அந்த ஒண்ணு ரெண்டு பேரில நீங்க முதல் ஆளா இருக்கலாம். அவ்வளவுதான். இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்து யாரும் புதுசா உள்ளே வரப் போறதில்ல. அதனால என்னை யாரும்ஜெயிக்க முடியாதுன்னு  நீங்க சொல்லிக்கிட்டிருக்கலாம்!" என்று கேலி செய்தார் அவருடைய நண்பர் முத்துசாமி.

"நான் சும்மா சொல்லல முத்துசாமி. நிர்மல் குமார் எல்லாத் தொழில்லேயும் இறங்கறாரே, என்னோட தொழில்ல இறங்கச் சொல்லுங்க பாக்கலாம்!"

"நிர்மல் குமார் பெரிய தொழில்கள்ளதான் இறங்குவாரு. உங்க தொழிலக்கு அவர் ஏன் வரப் போறாரு?"

"நிர்மல் குமார் பத்தி ஒரு விஷயம் சொல்றேன், கேட்டுகங்க. வலுவான போட்டி இருக்கற இடத்தில நிர்மல் குமார் இறங்க மாட்டாரு. எங்கே போட்டி இல்லையோ, அல்லது, எங்கே ஒரு தொழில்ல ஈடுபட்டு இருக்கறவங்க பலவீனமா இருக்காங்களோ அங்கேதான் நிர்மல் குமார் நுழைவார். ஒரு உதரரணம் சொல்லணும்னா, ஒரு அரசன் தன்னை விட பலமான அரசர்கள் பக்கமே போக மாட்டான், ஆனா.தன்ன விடச் சின்ன அரசர்களோட போர் செஞ்சு ஜெயிச்சுத் தன்னை ஒரு பெரிய வீரன் மாதிரி காட்டிப்பான். அப்படிப்பட்டவர்தான் நிர்மல் குமார்!" என்றார் தணிகாசலம் இகழ்ச்சி ததும்பும் குரலில்.

சற்றும் எதிர்பாராத விதமாக, அடுத்த சில மாதங்களிலேயே நிர்மல் குமார் தணிகாசலம் ஈடுபட்டிருக்கும் தொழிலில் காலடி எடுத்து வைத்தார். அதற்கு அடுத்த சில மாதங்களில் தணிகாசலம் தன் தொழிலை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

"எதுக்குங்க இந்தச் சின்னத் தொழில்ல போய் முதலீடு செஞ்சிருக்கீங்க? நமக்கு முக்கியமான வேற தொழில்கள் நிறைய இருக்கே!" என்றார் தொழில் ஆலோசகர் சந்தோஷ்..

"செஞ்சிருக்க மாட்டேன். இந்தத் தொழில்ல ஈடுபட்டிருந்த தணிகாசலம்னு ஒரு ஆளு நான் பலவீனமான தொழிலதிபர்களோடதான் போட்டி போடுவேன், அவனை மாதிரி ஆட்களோடல்லாம் போட்டி போடவே நான் பயப்படுவேன்னு யார்கிட்டயோ பேசிக்கிட்டிருந்திருக்கான். நம்ம ஆளு ஒத்தரு தற்செயலா அப்ப அங்கே இருந்ததால அது அவர் காதில இது விழுந்திருக்கு. அவர் எங்கிட்ட வந்து இதைச் சொன்னதும் எனக்கு ரொம்பக் கோபம் வந்துடுச்சு. நான் எவ்வவு கஷ்டப்பட்டு முன்னேறிக்கிட்டிருக்கேன்! என்னால எதுவும் முடியாதுன்னு ஒத்தன் பேசினா, கேட்டுக்கிட்டு சும்மா இருக்க முடியுமா? அதனாலதான் என்னோட மானேஜர்கள்ள ஒத்தரை அந்தத் தொழில்ல இறக்கினேன். இப்ப அந்தத் தணிகாசலம் காணாமலே போயிட்டான்!"

சொல்லி முடித்தபோது நிர்மல் குமாரின் முகத்தில் கோபம் மறைந்து  சிரிப்புப் படர்ந்திருந்தது.. 

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை

குறள் 893:
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.

பொருள்: 
ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமல் இழித்துப் பேசலாம்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

892. கிடைக்க வேண்டிய ஆர்டர்!

"அருணா அண்ட் கருணா எவ்வளவு பெரிய நிறுவனம்! அவங்ககிட்டேந்து நமக்கு ஆர்டர் கிடைச்சிருக்கு. இது ஒரு தொடர்ச்சியான ஆர்டர். அடுத்த அஞ்சு வருஷத்துக்கு நம்ம பிசினஸைப் பத்தி நாம கவலைப்பட வேண்டாம்" என்றான் சங்கர் இண்டஸ்டிரீஸின் நிர்வாக இயக்குனர் சிவசங்கர்.

"ஆர்டரை கன்ஃபர்ம் பண்ணிட்டாங்களா சார்?" என்றான் பொது மேலாளர் குமார்.

"அதுக்குத்தான் நம்மை வரச் சொல்லி இருக்காங்க. அவங்க எம் டி அருணாசலத்தோட நமக்கு ரெண்டு மணிக்கு அப்பாயின்ட்மென்ட் இருக்கு. அப்ப ஆர்டரை நேரிலேயே கொடுக்கறதாச் சொல்லி இருக்காங்க!" என்றான் சிவசங்கர்.

"ரொம்ப அதிர்ச்சியாவும் ஏமாற்றமாவும் இருக்கு. ஆர்டர் இல்லைன்னு சொல்றதுக்காகவா நேர்ல வரச் சொன்னாங்க?" என்றான் சிவசங்கர் ஏமாற்றத்துடனும், ஆத்திரத்துடனும்.

"உங்ககிட்ட ஃபோன்ல பேசறப்ப ஆர்டர் கொடுக்கறதா உறுதியாச் சொன்னாங்களா சார்?" என்றான் குமார்.

"ஆமாம் போன்ல பேசறப்ப அருணாசலம் அவ்வளவு உறுதியாச் சொன்னாரே! அதுக்குள்ள என்ன ஆச்சுன்னு தெரியல. நம்ம போட்டியாளர்களான ரத்னா என்டர்பிரைசஸ் ஏதோ இன்ஃப்ளூயன்ஸை யூஸ் பண்ணி நமக்குக் கிடைக்க வேண்டிய ஆர்டரைக் கெடுத்துட்டாங்கன்னு நினைக்கறேன்."

"சார்! எனக்கு வேற ஒண்ணு தோணுது!" என்றான் குமார், சற்றுத் தயக்கத்துடன்

"சொல்லுங்க!"

"நம்மகிட்ட பெருமாள்னு ஒத்தர் வேலை பாத்தார் இல்ல?"

"ஆமாம். ஒரு வயசான ஆளு. யூஸ்லெஸ் ஃபெலோ! அவனைப் பத்தி என்ன இப்ப?"

வயதில் பெரிய ஒருவரை 'அவன்' 'இவன்' என்று மரியாதை இல்லாமல் பேசுகிறாரே என்று யோசித்தபடியே, "நான் இங்கே வேலைக்குச் சேரறதுக்குக் கொஞ்ச நாள் முன்னாடியே அவர் இங்கேந்து போயிட்டார். ஆனா கடைசி மாசச் சம்பளம் வாங்கிட்டுப் போக ஒருநாள் நம்ம ஆபீசுக்கு வந்திருந்தாரு. அப்பதான் அவர் இங்கே வேலை செஞ்சவர்னு யாரோ எங்கிட்ட சொன்னாங்க. அவர் இப்ப அருணா அண்ட் கருணாவில வேலை செய்யறாருன்னு நினைக்கறேன். அவரை அங்கே பாத்தேன். எங்கேயோ பாத்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். அஞ்சாறு வருஷம் முன்னால ஒரு தடவைதான் அவரைப் பாத்திருக்கேங்கறதால அவர் யாருன்னு உடனே ஞாபகம் வரலை. இப்பதான் ஞாபகம் வருது" என்றான் குமார்.

"அவன் அங்கே வேலை செஞ்சா என்ன? அதுக்கும் நமக்கு ஆர்டர் கிடைக்காம போனதுக்கும் என்ன சம்பந்தம்?" என்றான் சிவசங்கர் எரிச்சலுடன்.

 "இல்லை சார். நாம அருணாசத்தைப் பாக்கறதுக்குக் கொஞ்ச நேரம் முன்னால அவர் அருணாசலத்தோட அறைக்குப் போயிட்டு வந்தாரு. பத்து நிமிஷம் உள்ளே இருந்துட்டு வந்திருப்பாருன்னு நினைக்கறேன். வரும்போது ஒரு மாதிரி சிரிச்சக்கிட்டே வந்தாரு. உங்க பக்கம் கூடத் திரும்பிப் பார்த்த மாதிரி இருந்தது. அப்ப அதை நான் பெரிசா நினைக்கல.ஆனா இப்ப நினைச்சுப் பாக்கறப்ப அவர் உங்களைப் பத்தி அருணாசலத்துக்கிட்ட தப்பா ஏதாவது சொல்லி இருப்பாரோன்னு தோணிச்சு. நம்ம கம்பெனியில அவர் வேலை செய்யறப்ப ஏதாவது பிரச்னை இருந்ததா சார்?"

சிவசங்கருக்கு ஒரு கணம் உடலில் ஒரு பதட்டம் ஏற்பட்டது.

பெருமாள் தன் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, அவர் வயதுக்குக் கூட மதிப்பளிக்காமல் அவரை ஒருமையில் பேசியதும், காரணமில்லாமல் அவர் மேல் ஏற்பட்ட வெறுப்பால் அவரை அதிகம் கடிந்து பேசியதும், மற்ற ஊழியர்கள் முன்னால் அவரை அவமானப்படுத்தியதும், அதனால் அவர் மனம் வெறுத்து வேலையை விட்டு விலகியதும் சிவசங்கரின் மனிதில் வந்து போயின.

அதனால் என்ன? 'அருணா அண்ட் கருணா'வில் பெருமாள் ஒரு சாதாரண ஊழியராகத்தானே இருப்பார்? அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு, தனக்கு ஆர்டர் கொடுக்கும் முடிவை அருணாசலம் மாற்றிக் கொண்டிருப்பாரா என்ன?

ஒருவேளை பெருமாள் அருணாசலத்தின் நம்பிக்கையும், மதிப்பையும் பெற்றவராக இருந்து, பெருமாள் தன்னைப் பற்றி அவரிம் தவறாக ஏதாவது கூறி, அதை அவர் நம்பி தன்னுடன் வியாபாரத் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருப்பாரோ?

நிறுவனத்தின் உரிமையாளர் என்ற அகந்தையில் பெருமாளை ஒரு ஊழியர்தானே என்று நினைத்து மரியாதை இல்லாமல் பேசியது, அவமானப்படுத்தியது இவற்றின் விளைவாகத்தான் இந்தப் பெரிய ஆர்டரை இழந்து விட்டோமோ?

பெருமாளைத் தான் நடத்திய விதம் பற்றிய குற்ற உணர்ச்சி முதல் முறையாக சிவசங்கரின் மனதில் ஏற்பட்டது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை

குறள் 892:
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.

பொருள்: 
பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் அப்பெரியாரால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Saturday, July 15, 2023

891. நட்பு நாடி வந்தவர்

விசாக நாட்டுக்குச் சொந்தமான மாருதத் தீவை அசுவினி நாடு போர் செய்து கைப்பற்றிய பிறகு, இரு நாடுகளுக்குமிடையே பகை நிலவி வந்தது.

இரண்டு தலைமுறைகளாக இருந்து வந்த பகையை முடிவுக்குக் கொண்டு வந்து, இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் விசாக நாட்டு மன்னர் வைகுந்தர் அசுவினி நாட்டுக்கு வந்திருந்தார்.

"வாருங்கள் வைகுந்தரே! பல ஆண்டுகளாக நமக்கிடையே இருந்த பகையை மறந்து என்னுடன் நட்பு பாராட்டி இங்கே வந்திருக்கும் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார் அசுவினி நாட்டு மன்னர் மகுடபதி.

இரண்டு நாட்கள் அசுவினி நாட்டில் தங்கிய பின் தன் நாட்டுக்குத் திரும்புகையில் மகுடபதியைத் தங்கள் நாட்டுக்கு வரும்படி அழைத்தார் வைகுந்தர்.

"கண்டிப்பாக வருகிறேன், வைகுந்தரே!" என்ற மகுடபதி, "உங்கள் தந்தை, பாட்டனார் இருவருமே மாருதத் தீவை மீட்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்ததால் நம் இரு நாடுகளுக்கு இடையே விரோதம் நீடித்தது. ஆனால் தங்களுக்கு அந்த நோக்கம் இல்லாததால் நம்மிடையே நல்லுறவு ஏற்பட்டுள்ளது!" என்றார் மகுடபதி.

வைகுந்தர் மௌனமாக இருந்தார்.

"தாங்கள் அறிவாற்றல் மிகுந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தான் உங்கள் முன்னோர்களைப் போல் அல்லாமல் தாங்கள் இயலாத முயற்சிகளில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள். உங்கள் விவேகத்தைப் பாராட்டுகிறேன்!" என்றார் மகுடபதி தொடர்ந்து.

வைகுந்தர் பதில் பேசாமல் கிளம்பினார்.

"அரசே! மாருத்தீவை விசாக நாட்டுப் படை கைப்பற்றி விட்டது. அத்துடன் மட்டுமல்ல. போரில் தோற்ற நம் வீரர்களை அவர்கள் நம் எல்லை தாண்டியும் துரத்தி வந்து நம் எல்லையில் உள்ள மலைப் பகுதியையும் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டனர்" என்றார் அமைச்சர்.

"இது எப்படி நடந்தது?" என்றார் மகுடபதி அதிர்ச்சியுடனும், கோபத்துடனும்.

"அரசே! விசாக நாட்டு மன்னர் வைகுந்தரை அறிவாற்றல் மிகுந்தவர் என்று தாங்கள் குறிப்பிட்டீர்கள். அவர் போர் ஆற்றலும் மிகுந்தவர் என்றும் கேள்விப்படுகிறேன். நம்மிடம் நட்பு நாடி அவர் வந்தபோது, மாருதத் தீவைத் தன்னால் மீட்க முடியாது என்று அவர் உணர்ந்திருப்பதாகத் தாங்கள் கூறியது அவரைக் காயப்படுத்தி இருக்க வேண்டும். அதனால்தான் மாருதத் தீவை மீட்பதை ஒரு சவாலாக ஏற்றுத் தன்னால் முடியும் என்று காட்டி விட்டார் அவர். நாம் மாருதத் தீவை இழந்ததுடன், நம் எல்லைப் பகுதியையும் இழந்து விட்டோம். மலைப் பகுதியான அதை நாம் மீட்பதும் கடினம்!" என்றார் அமைச்சர்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை

குறள் 891:
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

பொருள்: 
ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Monday, July 10, 2023

890. தொடர முடியாத கூட்டணி!

"சயாமிய ரெட்டையர்னு கேள்விப்பட்டிருக்கியா?" என்றான் பழனி தன் நண்பன் மோகனிடம்.

"ஆமாம். ஒட்டிக்கிட்டே பிறந்தவங்க. அது மாதிரி ஒட்டிக்கிட்ட உடம்புகளோட அவங்க அத்தனை வருஷம் எப்படி வாழ்ந்தாங்கன்னு நான் ஆச்சரியப்பட்டிருக்கேன்" என்றான் மோகன்

"அப்படின்னா என்னையும் பார்த்து ஆச்சரியப்படு. நான் என் பார்ட்னர் வீரமணியோட சேர்ந்து தொழில் நடத்திக்கிட்டிருக்கேனே அதுவும் சயாமிய ரெட்டையர் வாழ்க்கைதான். சேர்ந்து இருக்கறதும் கஷ்டமா இருக்கு. பிரிஞ்சு போகவும் முடியல!"

"ஏன் பார்ட்னரா இருக்கீங்க? ஏன் பிரிஞ்சு போக முடியல?"

"என்னோட அப்பாவும், வீரமணியோட அப்பாவும் நண்பர்கள். அவங்க சேர்ந்து இந்தத் தொழிலை ஆம்பிச்சு அதை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்துட்டாங்க. அவங்க காலத்துக்கப்பறம் நானும் வீரமணியும் பார்ட்னரா இருக்கோம். எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகலை, ஒத்தர் மேல ஒத்தருக்கு நம்பிக்கையும் இல்லை. அதனால பல விஷயங்கள்ள முடிவும் எடுக்க முடியலை, எடுக்காம இருக்கவும் முடியல!"

"அப்ப ஏன் சேர்ந்து தொழில் பண்றீங்க?"

"எங்க பிசினஸை ரெண்டாப் பிரிக்க முடியாது. ஒரு பார்ட்னரை விலக்கணும்னா அவரோட பங்கோட மதிப்பை  இன்னொரு பார்ட்னர் அவருக்குக் கொடுக்கணும். அது பல லட்ச ரூபா வரும். அவ்வளவு பணத்தை எங்க ரெண்டு பேராலேயுமே புரட்ட முடியாது."

"சரி. என்ன செய்யப் போறீங்க? இப்படியே தொடரப் போறீங்களா?"

"இல்லை. இப்பதான் ஒரு முடிவு எடுத்திருக்கோம்."

"என்ன முடிவு?"

"எங்க பிசினஸை யாருக்காவது வித்துட்டு நாங்க  ரெண்டு பேரும் தனித்தனியா வேற தொழில் ஆரம்பிக்கலாம்னு!"

"நல்ல முடிவுதான். இந்த முடிவையாவது ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்தீங்களே, ஆச்சரியம்தான்!"

"ஆனா, வாங்கறதுக்கு ஆள் வரணுமே! அதுவரையிலேயும் கஷ்டம்தான். ஒவ்வொரு நாளும் பாம்போட ஒரே வீட்டில குடித்தனம் நடத்தற மாதிரிதான் போயிக்கிட்டிருக்கு!"

"ரெண்டு பேர்ல யாரு பாம்பு?" என்றான் மோகன்.

பழனி தன் நண்பனை முறைத்தான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 89
உட்பகை

குறள் 890:
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.

பொருள்: 
மனப் பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...