Tuesday, May 30, 2023

705. திலகனின் குறுக்கீடு

"நீங்க எங்களுக்கு ஆர்டர் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார். எங்களோடது ரொம்ப சின்ன நிறுவனம். உங்களை மாதிரி பெரிய நிறுவனத்துக்கிட்டேயிருந்து எங்களுக்கு இந்த ஆர்டர் கிடைச்சதை நாங்க ரொம்பப் பெருமையா நினைக்கிறோம் சார்!" என்றான் பவித்ரன். 

அவன் அருகில் அமர்ந்திருந்த அவனுடைய பார்ட்னர் திலகன் ஆமோதிப்பது போல் தலையாட்டினான்.

"பெரிய நிறுவனம் என்ன, சின்ன நிறுவனம் என்ன? எங்களுக்கு வேண்டிய பொருளை நீங்க தயாரிக்கிறீங்க. அதை நாங்க வாங்கிக்கறோம். அவ்வளவுதான்!" என்றார் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரந்தாமன்.

"சரி சார். நாங்க கிளம்பறோம்!" என்று பவித்ரன் எழுந்தபோது, "என்ன அவசரம்? இங்கே எங்க தோட்டத்தில தென்னை மரங்கள் வச்சிருக்கோம். இளநீர் சாப்பிட்டுட்டுப் போங்க. வெயிலுக்கு இதமாக இருக்கும்!" என்றார் பரந்தாமன்.

பிறகு பியூனை அழைத்து இளநீர் கொண்டு வரச் சொன்னார்.

இளநீர் வரும் வரை தொழில் நிலவரங்களைப் பற்றிப் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். திலகன் பொதுவாக அதிகம் பேசாத இயல்பு கொண்டவன்.  எனவே உரையாடல் பெரும்பாலும் பவித்ரனுக்கும் பரந்தாமனுக்கும் இடையில் மட்டுமே நடந்து கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் அரசாங்கத்தை விமரிசித்து பவித்ரன் சில கருத்துக்களைச் சொன்னான். 

"இந்த அரசாங்கம் ரொம்ப மோசமா இருக்கு. தொழில் செய்யறவங்களோட பிரச்னைகளைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காம நமக்கு எப்படி எல்லாம் தொந்தரவு கொடுக்கலாம்னு ரூம் போட்டு யோசிச்சு நம்மளை டார்ச்சர் பண்றாங்க!" என்றான் பவித்ரன்.

இவ்வளவு நேரம் மௌனமாக இருந்த திலகன் சட்டென்று குறுக்கிட்டு, "நோ, நோ! அப்படிச் சொல்ல முடியாது. சில பிரச்னைகள் இருக்குதான். ஆனா இந்த அரசாங்கத்தில நமக்கு நிறைய நன்மைகள் செஞ்சிருக்காங்க, இல்லையா சார்?" என்றான் பரந்தாமனைப் பார்த்துச் சிரித்தபடி.

பரந்தாமன் புன்னகை செய்தபடியே தலையாட்டினார்.

பரந்தாமன் அறையிலிருந்து வெளியில் வந்ததும், "திலக்! நீதானேடா இந்த அரசாங்கத்தை எப்பவும் குறை சொல்லிக்கிட்டிருப்ப? இப்ப நான் அரசாங்கத்தைக் குறை சொன்னதும் அவசரமா என்னை மறுத்துப் பேசி அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கற! என் காலை வேற அழுத்தின. எதுக்குன்னு புரியல. அதனால நான் அதுக்கு மேல பேசாம இருந்துட்டேன். என்ன விஷயம்?" என்றான் பவித்ரன்.

"நீ அரசாங்கத்தைக் குறை சொல்லிப் பேச ஆரம்பச்சதும் பரந்தாமனோட முகம் கொஞ்சம் மாறிடுச்சு. நீ சொன்னது அவருக்குப் பிடிக்கலேன்னு புரிஞ்சுக்கிட்டேன். பல பேருக்கு ஒரு அரசியல் சார்பு இருக்கும். அவரு ஆளும் கட்சியை ஆதரிக்கறவரா இருக்கலாம். அதனால நீ அரசாங்கத்தைக் குறை சொன்னது அவருக்குப் பிடிக்கலியோ என்னவோ! இப்பதான் அவர் நமக்கு ஆர்டர் கொடுத்து நமக்குள்ள ஒரு நல்ல உறவு உண்டாயிருக்கு. அதைக் கெடுத்துடக் கூடாதுன்னுதான் அரசாங்கத்தை ஆதரிச்சுப் பேசினேன். அதில அவருக்கு சந்தோஷம்தாங்கறதை அவர் வெளிக்காட்டினாரே!" என்றான் திலகன்.

"நீ கவனிச்சதை நான் கவனிக்காம விட்டுட்டேனே! கண் இருந்தும் குருடனா இருந்திருக்கேன். நல்லவேளை அதிகம் பேசாத நீ சரியான சமயத்தில பேசி  நிலைமையை சரி செஞ்சுட்டே!" என்றான் பவித்ரன் திலகனின் கையைப் பற்றியபடி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்

குறள் 705:
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.

பொருள்:
ஒருவரது முகக்குறிப்பைக் கண்ட பின்பும் அவருடைய மனக்கருத்தை அறிய முடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன பயன்?.

குறள் 706 (விரைவில்)
      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

704. என்னைப் போல் ஒருவன்!

"சார்! உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும். தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?" என்றான் கேசவன்.

"கேளுப்பா!" என்றார் கிளை மேலாளர் கண்ணன்.

"நானும் மாதவனும் ஒரே படிப்புதான் படிச்சிருக்கோம். ஒரே நேரத்திலதான் இந்த நிறுவனத்தில வேலைக்குச் சேந்தோம். ரெண்டு பேருமே ஒரே வேலைதன் செய்யறோம். ஒரே சம்பளம்!"

"இன்னும் சில ஒற்றுமைகளை விட்டுட்டியே?"

"எதை சார்?"

"ரெண்டு பேருக்குமே ரெண்டு கை, ரெண்டு கால், ரெண்டு கண், ஒரு வாய், ஒரு மூக்குதான் இருக்கு!"

"சார்!"

"விளையாட்டுக்கு சொன்னேன். சொல்லு."

"நாங்க ரெண்டு பேரும் உங்ககிட்டதான் நேரடியா வேலை செய்யறோம். ஆனா நீங்க அவன்கிட்ட நிறைய விஷயங்களை சொல்றீங்க. ஆனா எங்கிட்ட அப்படி சொல்றதில்ல."

கண்ணன் கேசவனை உற்றுப் பார்த்தார்.

"சார்! நான் கேட்டது தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க. நீங்க எங்க்கிட்ட இயல்பாப் பேசறீங்க. எதுவா இருந்தாலும் தயக்கம் இல்லாம கேக்கலாம்னு சொல்லி இருக்கீங்க. அதனாலதான் கேட்டேன்!" என்றான் கேசவன் தவறாகக் கேட்டு விட்டோமோ என்ற அச்சத்துடன்.

"நீ கேட்டது தப்புன்னு நான் சொல்லலியே! உன் கேள்விக்கு எப்படி பதில் சொல்றதுன்னு யோசிச்சேன், அவ்வளவுதான். சரி. நான் உங்ககிட்ட சொல்லாத விஷயங்களை மாதவன்கிட்ட சொன்னேன்னு எப்படிச் சொல்ற?"

"எங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி வேலைதான் நீங்க கொடுக்கறீங்க. ஆனா மாதவன் கூடுதலா சில வேலைகளைச் செய்யறான். நீங்க சொல்லித்தானே அவன் அப்படிச் செஞ்சிருப்பான். எங்கிட்ட சொல்லி இருந்தா நானும் அதையெல்லாம் செஞ்சிருப்பேனே!"

"ஒரு நிமிஷம் இரு!" என்ற கண்ணன் மணியை அடித்து பியூனை அழைத்து மாதவனை அழைத்து வரச் சொன்னார்.

மாதவன் வந்ததும், "மாதவன்! போன வருஷத்து ஆடிட் ரிபோர்ட்டை எனக்கு அனுப்பி இருக்கியே! நான் அதைக் கேக்கலையே?" என்றார்.

"இல்லை சார்.ரெண்டு மூணு நாள்ள ஆடிட்டர்கள் வருவாங்க, எல்லா ரிகார்டுகளையும் எடுத்து வைன்னு சொன்னீங்க.அவங்க வரும்போது போன வருஷம் ஆடிட்ல சொன்ன விஷயங்களை சரி பண்ணிட்டோமான்னு நீங்க பார்க்க விரும்புவீங்கன்னு நினைச்சேன். அதெல்லாம் வேண்டாமா சார்?" என்றான் மாதவன் சற்றுக் குழப்பத்துடன்.

"வேணும். நான் கேக்கறதுக்கு முன்னாலே நீயே அதையெல்லாம் எடுத்து வச்சுட்டியேன்னுதான் கேட்டேன். குட் ஜாப். சரி. நீ போகலாம்!" என்றார் கண்ணன்.

மாதவன் சென்றதும், "கேசவன்! இப்ப புரிஞ்சுதா?  அவங்கிட்ட நான் அதிகமா சொல்றேன், உங்கிட்ட சொல்லலைங்கறது இல்லை. நான் சொன்னதுக்கு மேலேயும் என் மனசில என்ன இருக்கும்னு  புரிஞ்சுக்கிட்டு மாதவன் வேலை செய்யறான். நீ அப்படிச் செய்யாததை நான் ஒரு குறையா நினைக்கலை. ஆனா நியும் முயற்சி செஞ்சா மத்தவங்க சொல்றதுக்கு மேல அவங்க மனசில என்ன இருக்கும்னு யோசிச்சுச் செயல்படலாம். இது உனக்கு வாழ்க்கையில பலவிதங்களிலும் உதவியா இருக்கும்!" என்றார் கண்ணன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்

குறள் 704:
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.

பொருள்:
ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.

குறள் 705 (விரைவில்)
      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

703. வரதுவுக்கு என்ன வேலை அங்கே?

"பூனையை மடியில கட்டிக்கிட்டு சகுனம் பாக்கற மாதிரி, சேம்பர் ஆஃப் காமர்ஸ் மீட்டிங்குக்குப் போறப்ப இந்த வரதுவை ஏன் கூட அழைச்சுக்கிட்டுப் போறாரு நம்ம எம். டி?" என்றான் சாந்தன் எரிச்சலுடன்.

"ஏன், உன்னை அழைச்சுக்கிட்டுப் போகலியேன்னு உனக்குப் பொறாமையா?" என்றாள் அவன் பக்கத்து இருக்கையில் அமைந்திருந்த சரளா.

"மானேஜர்னு ஒத்தர் இருக்காரு. அவரையே அழைச்சுக்கிட்டுப் போகல. என்னை அழைச்சுக்கிட்டுப் போகலையேன்னு நான் ஏன் வருத்தப்படப் போறேன்?" என்றான் சாந்தன்.

"மானேஜரை அழைச்சுக்கிட்டுப் போனா உங்களையெல்லாம் யார் கட்டி மேய்க்கறது? மானேஜர் அவர் அறைக்குள்ள இருக்கறப்பவே நீங்க இப்படி அரட்டை அடிக்கிறீங்க. அவரும் ஆஃபீஸ்ல இல்லேன்னா இது ஆஃபீஸ் மாதிரியா இருக்கும்?" என்றார் மூத்த ஊழியர் குமாரசாமி.

"பெரிசுக்குத் தான் மட்டும்தான் வேலை செய்யறதா நினைப்பு! இவரு மாய்ஞ்சு மாய்ஞ்சு செய்யற வேலையை விட நாம பேசிக்கிட்டே செய்யற வேலை அதிகம்!" என்று சரளாவுக்கு மட்டும் கேட்கும்படி சிரித்துக் கொண்டே முணுமுணுத்தான்  சாந்தன்.

சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூட்டம் நடந்து கொண்டிருந்த அறைக்குள் வரதராஜன் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான்.

நல்லசிவம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூட்டங்களுக்குத் தன் உதவியாளர் ஒருவரை அழைத்து வருவது மற்ற உறுப்பினர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், அவ்வாறு ஒரு உதவியாளரை அழைத்து வருவதற்கு விதிகளில் அனுமதி இருந்ததால் அதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

கூட்டம் முடிந்து தன் அலுவலகத்துக்கு வந்து தன் அறைக்குள் சென்ற நல்லசிவம் சில நிமிடங்களுக்குப் பிறகு வரதராஜனைத் தன் அறைக்கு அழைத்தார்.

"ரெண்டு பேரும் சேர்ந்து மீட்டிங் போயிட்டு இப்பதானே வந்தாங்க! அதுக்குள்ள எதுக்கு அவனைக் கூப்பிடறாரு எம் டி?" என்றான் சாந்தன் சரளாவிடம்.

"சேம்பர் ஆஃப் காமர்ஸ் மீட்டிங்ல நடந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்கறதுக்காக இருக்கும்!" என்றாள் சரளா கேலியாக.

"சொல்லு வரதா?" என்றார் நல்லசிவம்.

"நீங்க ஜாடை காட்டினப்பல்லாம் நீங்க ஜாடையில குறிப்பிட்டுக் காட்டின ஆட்களை கவனிச்சேன். சம்பந்தம் சார் பேசினதை நிறைய பேர் விரும்பல, கதிரேசன் சார் சொன்ன யோசனை பல பேருக்குப் பிடிச்சிருந்தது. சுந்தரேசன் சார், சண்முகம் சார் ரெண்டு பேருக்கு மட்டும் அதில விருப்பமில்லை. அப்புறம்..."

வரதராஜன் சொன்னதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த நல்லசிவம், அவன் சொல்லி முடித்ததும், "எப்படிடா! நான் பக்கத்தில உக்காந்து அவங்க முகங்களைப் பார்த்துக்கிட்டிருக்கேன். நீ தூரத்தில உக்காந்துக்கிட்டிருக்க. எனக்குப் புலப்படாத விஷயங்களெல்லாம் உனக்குப் புலப்படுதே! ஒவ்வொரு தடவையும் இதைப் பாத்து ஆச்சரியப்படறேன் நான்!" என்றார்.

"எனக்குத் தோணினதை சொல்றேன் சார். நான் சொல்றதெல்லாம் சரியாங்கறது உங்களுக்குத்தான் தெரியும்!" என்றான் வரதராஜன் சங்கடத்துடன் நெளிந்தபடி.

"அதுதான் ஒவ்வொரு தடவையும் சரியா இருக்கே! உனக்கு இருக்கற திறமை கடவுள் உனக்குக் க் கொடுத்த ஒரு கிஃப்ட். நீ எனக்குக் கிடைச்ச கிஃப்ட்!" என்ற நல்லசிவம், "மீட்டிங்குக்கெல்லாம் உன்னை ஏன் நான் அழைச்சுக்கிட்டுப் போறேன்னு ஆஃபீஸ்ல யாராவது கேட்டாங்களா?" என்றார் தொடர்ந்து.

"கேட்டாங்க. நீங்க சாப்பிட வேண்டிய மாத்திரைகளை உங்களுக்கு நேரத்துக்கு எடுத்துக் கொடுக்கறதுக்காகத்தான் என்னை அழைச்சுக்கிட்டுப் போறீங்கன்னு சொல்லி இருக்கேன்!" என்றான் வரதராஜன்.

"குட்!" என்றார் நல்லசிவம். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்

குறள் 703:
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.

பொருள்:
தான் குறிப்புச் செய்ய, அதைக் கண்டு பிறர் முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவர் மனக்கருத்தைக் கண்டு சொல்லும் திறம் மிக்கவரைத் தன்னிடம் இருக்கும் செல்வங்களுள் எதைக் கொடுத்தேனும் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, May 28, 2023

702. முதலீடு வேண்டாம்!

ரமணி, குரு இருவரும் தாங்கள் ஆரம்பிக்க இருக்கும் புதிய தொழிலுக்குப் பொருளாதார உதவி கோர, நிதி முதலீட்டாளர் சண்முகத்தைச் சந்திக்கச் சென்றனர்.

அவர்கள் சொன்ன விவரங்களைக் கேட்டுக் கொண்ட சண்முகம், "என்னைப் பொருத்தவரையிலும் உங்க பிசினஸ் பிளான் நல்லாத்தான் இருக்கு. இதில நான் முதலீடு செய்ய முடியும்னு நினைக்கறேன். ஆனா உங்க ப்ராஜக்டை என்னோட ஃபைனான்ஸ் டீம் படிச்சுப் பார்த்து அப்ரூவ் பண்ணினப்பறம்தான் என்னோட இறுதி முடிவைச் சொல்லுவேன். பொதுவா ஒரு ப்ராஜக்டை மேலோட்டமாப் பாக்கறப்பவே எனக்கு அது லாபகரமானதா இல்லையான்னு தெரிஞ்சுடும். இதுவரையிலும் என்னோட முடிவைத்தான் என் ஃபைனான்ஸ் டீமூம் சொல்லி இருக்காங்க. ஆனாலும் இப்படி ஒரு சிஸ்டம் வச்சிருக்கேன். சிஸ்டம் வேணும் இல்ல?" என்று சொல்லிச் சிரித்தார் சண்முகம்.

"சரி சார்!" என்றான் ரமணி.

"அதுக்கு முன்னால என்னோட டர்ம்ஸை சொல்லிடறேன்" என்ற சண்முகம் தன் நிபந்தனைகளைக் கூறினார்.

சண்முகம் தன் நிபந்தனைகளைக் கூறி முடித்ததும், "சரி சார்!" என்று கூறி இருவரும் எழுந்தனர்.

"ப்ராஜக்ட் ரிபோர்ட்டைக் கொடுக்காம போறீங்களே!அதைப் படிச்சுப் பார்த்துத்தானே என்னோட டீம் முடிவு செய்யணும்?" என்றார் சண்முகம்.

"இல்லை சார். இதில ஒண்ணு ரெண்டு மாறுதல்கள் செய்ய வேண்டி இருக்கு. சின்ன மாறுதல்கள்தான். ஃபினிஷிங் டச்சஸ் மாதிரி. உங்க டீம் இதைப் படிக்கறப்ப அது பர்ஃபெக்டா இருக்கணும் இல்ல? அதானால இதை ஃபைனலைஸ் பண்ணிட்டு அப்புறம் கொண்டு வந்து கொடுக்கறோம்!" என்றான் குரு.

வெளியில் வந்ததும், "ப்ராஜக்ட் ரிபோர்ட்ல என்ன மாறுதல்கள் செய்யப் போற?" என்றான் ரமணி.

"ஒரு மாறுதலும் இல்ல. இவரோட முதலீடு நமக்கு வேண்டாம்னு நினைக்கிறேன்!" என்றான் குரு.

"ஏன்? அவர் சொன்ன நிபந்தனைகள் உனக்குப் பிடிக்கலையா!" என்றான் ரமணி.

"அவர் சொன்ன நிபந்தனைகள் பொதுவா எல்லாருமே சொல்றதுதான். அதில தப்பா எதுவும் இல்ல. ஆனா அவரோட நோக்கம் சரியானது இல்லேன்னு நினைக்கிறேன்!" என்றான் குரு.

"என்ன நோக்கம்?"

குரு தன் சந்தேகத்தை விளக்கியதும், "எந்த அடிப்படையில இப்படிச் சொல்ற?" என்றான் ரமணி வியப்புடன்.

"எனக்கு அப்படித் தோணுது. நாம வேணும்னா அவர்கிட்ட ஏற்கெனவே முதலீடு வாங்கினவங்க சில பேரைத் தேடிப் பிடிச்சு அவங்ககிட்ட கேட்டுப் பாக்கலாம்!"

"சரி" என்றான் ரமணி.

"ரமணி! நான் உன்னோட ஒர்க்கிங் பார்ட்னர்தான். நீதான் முதலீடு செய்யப் போற. அதனால நான் இப்படிச் சொல்றது அதிகப்பிரசங்கித்தனமா இருந்தா...."  என்றான் குரு தயக்கத்துடன்.

"சேச்சே! என்னடா இது? உன்னோட ஆலோசனை எனக்கு வேணுங்கறதுக்காகத்தானே உன்னை ஒர்க்கிங் பார்ட்னரா இருக்கச் சொல்லிக் கேட்டுக்கிட்டேன். உன் மனசில தோணினதை நீ வெளிப்படையா சொன்னது எனக்கு சந்தோஷமா இருக்கு. நாம விசாரிச்சுப் பார்த்துடலாம்!" என்றான் ரமணி குருவின் முதுகில் தட்டியபடி.

நான்கைந்து நாட்களுக்குப் பிறகு குருவைத் தொலைபேசியில் அழைத்த ரமணி, "நீ நினைச்சது முழுக்க முழுக்க சரிதான். சண்முகம் இதுக்கு முன்னால முதலீடு செஞ்ச சில நிறுவனங்களை அவை லாபமா நடக்க ஆரம்பிச்சப்பறம் தானே எடுத்துக்க முயற்சி செஞ்சிருக்காரு. சில நிறுவனங்களை கபளீகரம் பண்ணிட்டாரு. சில பேரு இன்னும் அவரை எதிர்த்துப் போராடிக்கிட்டிருக்காங்க. ஆமாம், அவர் மனசில இப்படி ஒரு நோக்கம் இருக்கறதை நீ எப்படி தெரிஞ்சுக்கிட்ட?" என்றான்.

"எங்க வீட்டில ஒரு பூனை இருந்தது. ஒரு இரையைப் பாத்துட்டா அதை முழுங்கப் போறோங்கற ஒரு ஆனந்தமும், பெருமிதமும் அதோட கண்ணில தெரியும். சண்முகத்தோட கண்ணில அப்படி ஒரு உணர்வு இருந்த மாதிரி எனக்குத் தோணிச்சு. அதான் அப்படிச் சொன்னேன். நல்லவேளை என் சந்தேகம் தப்பா இருந்து ஒரு முதலீடு வாய்ப்பை நீ இழக்கக் காரணமா இருந்துடுவேனோன்னு பயந்துகிட்டே இருந்தேன்!" என்றான் குரு நிம்மதியுடன்.

"மத்தவங்க மனசில என்ன இருக்குங்கறது கடவுளுக்குத்தான் தெரியும்னு சொல்லுவாங்க. அது உனக்கும் தெரியுதுன்னா உங்கிட்ட இருக்கறது ஒரு தெய்வீக சக்திதான். உன்னை எனக்குத் துணையா வச்சுக்கிட்டதுதான் நான் செஞ்ச புத்திசாலித்தனமான விஷயம்!" என்றான் ரமணி உற்சாகத்துடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்

குறள் 702:
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

பொருள்:
அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

780. வல்லபனைக் காண வந்தவர்

வல்லபன் கண்விழித்தபோது தான் போர்க்க்களத்தில் அடிபட்டு விழுந்து கிடக்கிறோம் என்பதை உணர்ந்தான். 

எதிரியின் வாள் தன் மார்பில் பாய்ந்ததும், கீழே சாய்ந்தபோதே தனக்கு நினைவு தப்பி விட்டதும், சற்று நேரம் கழித்து இப்போது மீண்டும் நினைவு வந்திருப்பதும் அவனுக்குப் புரிந்தது.

மார்பில் எதிரியின் வாள் பாய்ந்த இடத்தில் வலி அதிகமாக இருப்பதை அவன் உணர்ந்தான்.'எவ்வளவு ரத்தம் கீழே போயிருக்குமோ தெரியவில்லை, ஆனால் ஏன் இன்னும் உயிர் போகவில்லை?'

தன்னைச் சுற்றிலும் பார்த்தான். பார்வை மங்கலாக இருந்தது. அரை மயக்கத்தில் இருந்தது ஒரு காரணம் என்றாலும், பொழுது சாய்ந்து விட்டதும் இன்னொரு காரணம் என்று அவனுக்குப் புரிந்தது.

பொழுது சாய்ந்து விட்டதால் போர் நிறுத்தப்பட்டிருந்தது. ஆங்காங்கே ஒரு சிலர் நடமாடிக் கொண்டிருந்தனர்.

அவனுக்கு அருகில் சிலர் நடந்து வரும் காலடிச் சத்தம் கேட்டது. அவன் தலைமாட்டுக்கருகில் வந்ததும் காலடிச் சத்தம் நின்று விட்டது.

ஒருவர் அவன் அருகில் அமர்ந்து அவன் தலையை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டார்.

"வல்லபரே!" என்றார் அவர் மெல்லிய குரலில்,

கொஞ்சம் கொஞ்சமாக நினைவு தப்பிக் கொண்டிருந்த நிலையிலும், வல்லபனுக்கு அந்தக் குரல் பரிச்சயமானதாகத் தோன்றியது.

மிகவும் சிரமப்பட்டுக் கண்களைத் திறந்து பார்த்தான். மங்கலான மாலை வெளிச்சத்தில் பார்வை மங்கிய அவன் கண்களுக்குத் தெரிந்த அந்த முகம்! அது உண்மைதானா, இல்லை தான் ஏதாவது கனவு காண்கிறோமா என்று ஒரு கணம் குழம்பிய வல்லபன், "அரசே! நீங்களா?" என்றான் மிகவும் மெலிந்த குரலில்.

"நான்தான்!"

"அரசே! என்ன ஒரு பாக்கியம்! நான் யாருக்காகப் போர்  செய்தேனோ அந்த அரசர் முன்னிலையில் அதுவும் அவர் மடியில் தலை வைத்து உயிரை விடுவது எத்தகைய பேறு!" என்றான் வல்லபன் உணர்ச்சிப் பெருக்கில்.

"இல்லை, வல்லபரே! அரண்மனை வைத்தியர் வந்திருக்கிறார்.அவர் உங்களைப் பிழைக்க வைத்து விடுவார்!" என்றார் அரசர்.

அப்போதுதான் தன் மார்பில் ரத்தம் வழிந்த இடம் துடைக்கப்பட்டு மருந்துச் சாறு பிழியப்படுவதை வல்லபன் உணர்ந்தான். அரண்மனை வைத்தியர் தான் இருப்பதே தெரியாமல் தன் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்!

"இல்லை அரசே! நான் பிழைக்க மாட்டேன். தங்கள் கண் முன்பே, தங்கள் அன்பும், கனிவும் நிரம்பி வழியும் இந்த நிலையில் மரணம் அடைவதையே நான் விரும்புகிறேன்! தங்கள் கருணையே கருணை!" என்றான் வல்லபன் மனநிறைவுடன்.

"இல்லை, வல்லபரே! நாட்டுக்காக உங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போரில் ஈடுபட்டு காயம் பட்டு விழுந்திருக்கும் உங்களைப் போன்ற வீரர்களை நேரில் பார்த்து என் நன்றியையும், மரியாதையையும் தெரிவிப்பது எனக்குத்தான் பெருமை!" என்று அரசர் கூறிக் கொண்டிருக்கும்போதே வல்லபனின் தலை சாய்ந்தது.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு

குறள் 780:
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.

பொருள்: 
தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீர மரணம் அடைய முடியுமானால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Monday, May 22, 2023

779. காவல் தலைவருக்கு என்ன தண்டனை?

"காவல் தலைவரே! நீங்கள் செய்த குற்றத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?!" என்றார் அமைச்சர்.

காவல் தலைவர் அமைதியாக இருந்தார்.

"திருட்டுக் குற்றம் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பது அரசரின் கட்டளை. ஆனால் திருட்டுக் குற்றம் செய்து பிடிபட்ட குற்றவாளிகளில் சிலரை நீங்களே விசாரணை செய்து விட்டு அவர்களை விடுதலை செய்திருக்கிறீர்கள்!" 

"கடுமையான எச்சரிக்கை கொடுத்த பிறகுதான் அவர்களை விடுதலை செய்தேன்!" என்றார் காவல் தலைவர்.

"ஏன் அப்படிச் செய்தீர்கள் என்றுதான் கேட்கிறேன். குற்றவாளிகளைப் பிடிப்பதுதான் உங்கள் பணி. அவரகளை விசாரித்து தண்டனை வழங்குவதோ, விடுதலை செய்வதோ நீதிபதிகளின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை, அந்த அதிகாரத்தை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்ளலாம்?" என்றார் அமைச்சர் கடுமையாக.

"கைது செய்யப்பட்ட நபரிடம் ஆரம்ப கட்ட விசாரணை செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு. அப்படி விசாரித்தபோது ஒரு சிலர் வறுமையினால் திருடி இருக்கிறார்கள், அதுவும் முதல் முறையாகத் திருடி இருக்கிறார்கள் என்று தெரிந்தது. நீதிபதியிடம் அவர்களை அனுப்பினால் அவர்களுக்கு தண்டனை கிடைப்பது உறுதி. அதனால்தான் நான் அவர்களைக் கடுமையாக எச்சரித்து விட்டு விடுதலை செய்தேன்!" என்றார் காவல் தலைவர்.

"அரசே! காவல் தலைவரே தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டார். அவருக்கு உரிய தண்டனையைத் தாங்கள்தான் அளிக்க வேண்டும்!" என்றார் அமைச்சர்.

"காவல் தலைவரே! நீங்கள் செய்தது குற்றம்தான். ஆயினும் உங்களை என்னால் தண்டிக்க முடியாது!" என்றார் அரசர், காவல் தலைவரைப் பார்த்து.

"ஏன் அரசே?" என்றார் அமைச்சர் வியப்புடன்.

"அமைச்சரே! இவர் எப்படிக் காவல் தலைவர் ஆனார் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா?"

"தெரியும். சாதாரணப் படைவீரராக இருந்த இவர் போரில் எதிர்த்தரப்பு வீரர்கள் நூறு பேரையாவது கொல்வேன் என்று தன் நண்பர்களிடம் சூளுரைத்து, அதன்படி தன் உயிரைத் துச்சமாக மதித்துப் போர்க்களத்தில் அசாத்தியமான வீரத்துடன் போரிட்டார். இந்தச் செய்தியைப் படைத்தலைவர் மூலம் அறிந்து கொண்ட தாங்கள் இவருக்குக் காவல் தலைவர் என்ற உயர்ந்த பதவியைக் கொடுத்து இவரை கௌரவித்தீர்கள். ஆனால் இவர் தவறு இழைத்திருக்கும்போது..."

"இத்தகைய வீரச் செயல் புரிந்தவரை, அவர் தவறு செய்திருக்கிறார் என்றாலும், என்னால் தண்டிக்க முடியாது!" என்றார் அரசர்.

"அப்படியானால்...?"

"அவர் வழியையே பின்பற்றி அவரைக் கடுமையாக எச்சரித்து விட்டு விடுகிறேன். என்ன காவல் தலைவரே?" என்றார் அரசர் காவல் தலைவரைப் பார்த்து.

காவல் தலைவர் மௌனமாக அரசருக்குத் தலை வணங்கினார். 

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு

குறள் 779:
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

பொருள்: 
தாம் உரைத்த சூள் தவறாதபடி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்த பிழைக்காகத் தண்டிக்க வல்லவர் யார்?
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Saturday, May 20, 2023

778. அரசரின் கோபத்துக்கு ஆளானவன்!

பிரதீபன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த ஒருவர் அவனை நிறுத்தி, "பிதீபா!" என்றார்.

"வணக்கம் நீலகண்டரே! எப்படி இருக்கிறீர்கள்?" என்றான் பிரதீபன்.

"நலம்தான். உன்னைத்தான் சிறிது காலமாகத் தலைநகருக்குப் பக்கத்திலேயே காண முடியவில்லை."

"காரணம் உங்களுக்குத் தெரியுமே!" என்றான் பிரதீபன் சிரித்தபடி

"ஆமாம். எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. சிறிது காலத்தில் எல்லாம் சரியாகி விடும்!" என்ற நீலகண்டர், சட்டென்று அருகில் நடந்து சென்ற சிலரைப் பார்த்து, "இவர் யார் தெரியுமா? கருங்குழிப் போரில் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் எதிரிப் படைகளுடன் வீரமாகப் போரிட்டுப் பல சாகசங்கள் புரிந்த பிரதீபர் இவர்தான்!" என்றார்.

"பிரதீபரா? அந்த வீரரரை நேரில் பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தேன். என்ன ஒரு பேறு!" என்றார் ஒருவர்.

"பிரதீபரே! உங்கள் வீரச் செயல் பற்றி நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன். உங்களைச் சந்திப்பேன் என்று தெரிந்திருந்தால் அதை எடுத்து வந்திருப்பேன். உங்கள் முன் அதைப் படித்துக் காட்டி இருக்கலாம்!" என்றார் இன்னொருவர்.

மற்றொருவர் கைதட்டி, "எல்லோரும் வாருங்கள். போர்க்களத்தில் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் எதிரிகளின் படைகளுக்குள் புகுந்து தாக்கி வீரச் செயல்கள் புரிந்த பிரதீபன் வந்திருக்கிறார். அவரைக் காண அனைவரும் வாருங்கள்!" என்று தெருவில் சென்று கொண்டிருந்த அனைவரையும் கூவி அழைத்தார்.

சில நிமிடங்களுக்குள் அங்கே பலர் கூடி விட்டனர்.

நீலகண்டர் பிரதீபனை அருகிலிருந்த ஒரு வீட்டின் உயரமான திண்ணையில் எல்லோரும் பார்க்கும் வகையில் நிற்க வைத்தார். 

அனைவரும் உற்சாகத்துடன் பல்வேறு கோஷங்களை எழுப்பி பிரதீபனைப் போற்றினர்.

பிரதீபன் நீலகண்டரை சைகை செய்து அருகில் அழைத்தான்.

"என்ன நீலகண்டரே இது? அரசர் என் மீது கோபமாக இருக்கிறார். அதனால் நான் தலைநகரத்துக்கு வருவதைக் கூடத் தவிர்த்து வருகிறேன். இங்கே இருக்கும் என் உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று இங்கே வந்து விட்டுத் திரும்பப் போய்க் கொண்டிருக்கிறேன். என்னை எல்லோருக்கும் அடையாளம் காட்டி விட்டீர்களே! அவர்களும் என்னைச் சூழ்ந்து கொண்டு என்மீது தங்கள் அபிமானத்தைக் காட்டுகிறார்கள். இது அரசருக்குத் தெரிந்தால் அவர் கோபம் இன்னும் அதிகமாக அல்லவா ஆகும்?" என்றான் கவலையுடன். 

"அரசருக்கு உன் மேல் கோபம் இருந்தால் என்ன? அதனால் உன் வீரச் செயல் மங்கி விடுமா என்ன? உன் வீரத்தை மக்கள் எவ்வாறு போற்றுகிறார்கள் என்பதை அரசர் அறிந்து கொண்டால், அவருக்கு உன் மீது இருக்கும் கோபம் நீங்கி விடும் - அந்தக் கோபம் எந்தக் காரணத்தினால் ஏற்பட்டிருந்தாலும்!" என்றார் நீலகண்டர் உற்சாகத்துடன்.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு

குறள் 778:
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.

பொருள்: 
போர் வந்தால் உயிர் பற்றி அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவார்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Monday, May 15, 2023

777. காலிலே கழல் எதற்கு?

"வேறு மொழி பேசும் பெண்ணை எப்படிக் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிட்ட?" என்றான் இளந்திரையன் தன் நண்பன் நன்மாறனிடம்.

"காதலுக்குக் கண் இல்லேம்பாங்க. அப்ப மொழி மட்டும் எதுக்கு?" என்றான் நன்மாறன்.

சில மாதங்கள் கழித்து இளந்திரையன் நன்மாறனைச் சந்தித்தபோது நன்மாறன் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை.

"என்ன, மனைவியோட சண்டையா?" என்றான் இளந்திரையன்.

"கிட்டத்தட்ட அப்படித்தான். மொழிப் பிரச்னைதான் காரணம்" என்ற நன்மாறன் தன் பிரச்னையை நண்பனிடம் விளக்கினான்.

"அவ மொழி தெரிஞ்சவங்க யார்கிட்டேயாவது சொல்லி விளக்கச் சொல்ல வேண்டியதுதானே!"

"அவ மொழி தெரிஞ்சவங்க யாருமே இந்த ஊர்ல இல்ல. வெளியூர்ல அவளைப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அந்த ஊர்ல அவ மொழி பேசறவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா இந்த ஊர்ல யாரும் இல்ல!" என்றான் நன்மாறன்.

"ஒருவர் இருக்கிறார்!" என்றான் இளந்திரையன்.

டைத்தலைர் தங்களை விருந்துக்கு அழைத்திருப்பதாக மனைவி யசோதாவிடம் சைகையில் கூறி அவளுக்குப் புரிய வைத்து அவளுடன் படைத்தலைவர் வீட்டுக்குச் சென்றான் நன்மாறன்.

விருந்து முடிந்ததும், திடீரென்று யசோதாவிடம் அவள் மொழியில் பேச ஆரம்பித்தார் படைத்தலைவர்.

இன்ப அதிர்ச்சி அடைந்த யசோதா, "உங்களுக்கு இந்த மொழி தெரியுமா?" என்றாள் வியப்புடன்.

"உன் கணவன் கால்ல போட்டிருக்கற கழலைக் கழற்றச் சொல்றியாமே!" என்றார் படைத்தலைவர்.

"ஆமாங்க! பெண்கள் கால்ல கொலுசு போட்டுக்கற மாதிரி இவரு ஒரு வளையத்தை மாட்டிக்கிட்டுத் திரியறாரு. அதைக் கழற்றுங்கன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். கேக்க மாட்டேங்கறாரு. மொழிப் பிரச்னையால என்னால அவர்கிட்ட விளக்க முடியல!"

"உங்கிட்டதாம்மா விளக்கணும். உன் கணவன் கால்ல போட்டிருக்கறது வீரக்கழல். தங்களோட உயிரைக் கூட மதிக்காம போர்க்களத்தில வீரத்தைக் காட்டி நிலையான புகழை சம்பாதிக்கிற சில வீரர்களுக்குத்தான் அரசர் இந்த வீரக்கழலைப் பரிசாக் கொடுப்பாரு. அது மாதிரி கொடுக்கப்பட்ட ஒரு சில பேர்ல உன் கணவனும் ஒருத்தன். இது அவனுக்கு எவ்வளவு பெருமை தெரியுமா? அவன் இதை உனக்கு விளக்கிச் சொல்ல முடியாம உன் மொழி பேசறவங்க யாருன்னு தேடி என்னைக் கண்டு பிடிச்சான். 'என் மனைவியை உங்ககிட்ட அழைச்சுக்கிட்டு வரேன். நீங்க சொல்லிப் புரிய வையுங்க'ன்னு கேட்டான். அதனால, அவனை கௌரவிக்கற மாதிரி ஒரு விருந்து கொடுத்து உன்னை இங்கே வரவழைச்சு உங்கிட்ட விளக்கமா சொல்லலாம்னு தீர்மானிச்சேன்.

படைத்தலைவர் தன் மனைவியிடம் என்ன சொல்கிறார் என்று புரியாமல் நன்மாறன் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, யசோதா அவன் காலில் போட்டிருந்த கழலைத் தொட்டுத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு

குறள் 777:
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

பொருள்: 
பூமியில் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

776. வீணான நாட்கள்!

நாட்டின் படைத்தளபதி மறைந்து விட்ட செய்தியைக் கேட்டு மன்னர் மிகவும் வருத்தம் அடைந்தார்.

"இப்படிப்பட்ட ஒரு வீரரை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. எத்தனை போர்களைக் கண்டவர் அவர்! போருக்குப் போவது என்றாலே ஏதோ விழாவுக்குப் போவது போல் உற்சாகமாகக் கிளம்பி விடுவார்!" என்றார் மன்னர் அமைச்சரிடம்.

"ஆமாம் மன்னரே! படைத்தளபதி என்றாலும் போரில் முன்னணியில் நின்று ஒரு சாதாரண வீரர் போல் போரிடுவார். அவர் உடலில் எத்தனை விழுப்புண்கள்! இப்படிப்பட்ட ஒரு வீரரைக் காண்பது அரிது!" என்று ஆமோதித்தார் அமைச்சர்.

டைத்தளபதியின் இறுதிச் சடங்கு முடிந்ததும் அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றார் மன்னர்.

படைத்தளபதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி  விட்டு, அவர்களுக்குப் பொற்காசுகள் வழங்கிய பிறகு, அங்கிருந்து திரும்பும்போது வீட்டுச் சுவற்றில் ஒரு பெரிய கட்டம் வரையப்பட்டிருப்பதைப் பார்த்து அருகில் சென்றார் மன்னர்.

ஒரு பெரிய கட்டம் வரையப்பட்டு அது சதுரங்கப் பலகை போல் பல கட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது முதல் கட்டத்தில் தமிழ் வருடங்களின் பெயர்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதப்பட்டு அவற்றுக்கு நேராக இருந்த கட்டங்களில் தமிழ் மாதங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.

சில வருடங்களில் சில மாதங்களுக்கான கட்டங்களுக்குள் சில எண்கள் எழுதப்பட்டிருந்தன.

"இவை என்ன?" என்றார் மன்னர் தளபதியின் மகனிடம்.

"அவை என் தந்தை போரில் கலந்து கொண்ட நாட்களின் தேதிகள்!" என்றான் தளபதியின் மகன்.

"இவ்வளவு நாட்கள் அவர் போரில் ஈடுபட்டிருந்திருக்கிறாரா? எனக்கே வியப்பாக இருக்கிறதே!" என்றார் மன்னர் வியப்புடன்.

"தாங்கள் இவ்வளவு நாட்களா என்கிறீர்கள்! அப்பா இதைப் பார்த்து அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டே, 'இவ்வளவு நாட்கள்தானா நான் போர் செய்திருக்கிறேன்? என் வாழ்நாளின் மற்ற நாட்களையெல்லாம் வீணாக்கி இருக்கிறேனே!' என்று புலம்புவார்" என்றான் தளபதியின் மகன். 

அதைச் சொல்லும்போதே அவன் குரல் தழுதழுத்தது. தந்தை மறைந்த சோகத்தினாலா, அல்லது தந்தையை நினைத்துப் பெருமைப்பட்டதாலா என்று தெரியவில்லை!

!பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு

குறள் 776:
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.

பொருள்: 
ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அவற்றுள் தன் உடலில் விழுப்புண் படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Sunday, May 14, 2023

775. பாயாத வேல்!

கமுதி நாட்டுக்கும், மகர நாட்டுக்கும் இடையிலான போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் கமுதி நாட்டு மன்னன் வீரகேசரியும், மகர நாட்டு மன்னன் இளமாறனும் நேருக்கு நேர் போர் செய்தனர்.

முதலில் குதிரை மீது இருந்தபடி வாட்போரில் ஈடுபட்டவர்கள் பிறகு குதிரையிலிருந்து இறங்கி தரையில் நின்று போரிட்டனர்.

இருவரின் வாட்களும் முறிந்ததும் இருவரும் அருகிலிருந்த தங்கள் நாட்டு வீரரிடமிருந்து வேலை வாங்கிக் கொண்டனர்.

வேல்கள் மோதிக் கொண்டன. சில நிமிடங்களில் இளமாறன் சற்றுப் பின் வாங்கினான்.

வீரகேசரி தன் கையிலிருந்த வேலை இளமாறன் மீது வீசுவதற்காக ஓங்கினான்.

வேல் தன் மீது பாயப் போவது உறுதி என்பதை உணர்ந்த இளமாறன் தன் கண்களை மூடிக் கொண்டான்.

சில விநாடிகள் கழித்து, வேல் தன் மீது விழாததால் வியப்படைந்தவனாகக் கண்களைத் திறந்து பார்த்தான் இளமாறன்.

எதிரே கையில் வேலைப் பிடித்தபடி சிரித்துக் கொண்டே நின்றான் வீரகேசரி.

"இளமாறா! நீ ஒரு கோழை. நான் வேல் வீசப் போவது தெரிந்ததும் அச்சத்தில் கண்களை மூடிக் கொண்டாய். சுத்தமான வீரனாக இருந்தால் வேல் தன்னை நோக்கி வரும்போது கண்ணை இமைக்கக் கூட மாட்டான். உன்னைப் போன்ற கோழையைப் போர்க்களத்தில் கொன்று என் வீரத்துக்கு இழுக்கு ஏற்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. நீ போய் உன் கூடாரத்தில் ஓய்வெடுத்துக் கொள். உன் படைவீரர்கள் மட்டும் போரிடட்டும்!" என்றான் வீரகேசரி இளமாறனைப் பார்த்து இகழ்ச்சியுடன்.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு

குறள் 775:
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

பொருள்: 
பகைவரைச் சினந்து நோக்கிய கண், அவர் வேலை எறியும்போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ?
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Saturday, May 13, 2023

774. வீரனின் சிலை

குவளை நாட்டு அரண்மனைக்கு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த யாத்திரிகர் பொற்பாதர் அரண்மனை வாசலில் நிறுவப்பட்டிருந்த அந்தச் சிலையைப் பார்த்தார்.

கையில் வேலை உயர்த்திப் பிடித்தபடி வேலை யார் மீதோ எறிவது போன்ற தோற்றத்தில் நின்றிருந்த ஒரு வீரனின் சிலை அது. வேலின் நுனியில் ரத்தக்கறை படிந்திருந்தது. ஒரு கையால் வீரன் தன் மார்பை அழுத்திக் கொண்டிருந்தான். அவன் மார்பிலிருந்து பெருகிய ரத்தம் மார்பில் வழிந்தோடிக் கொண்டிருந்தது. மார்பைப் பிடித்திருந்த கையிலும் ரத்தம் படிந்திருந்தது.

"மிக அற்புதமான சிற்பம். சிற்பியன் திறமை வியப்புக்குரியது. தன் மார்பில் காயம் பட்ட நிலையிலும் எதிரியின் மீது ஈட்டியை வீசித் தாக்குதல் நடத்தும் விரனைக் கற்பனை செய்து அற்புதமாக இந்தச் சிலையை வடித்திருக்கிறார் சிற்பி. ஆனால் இந்தக் கலைப் படைப்பை அரண்மனை முகப்பில் வைத்திருப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா?" என்றார் பொற்பாதர், தன்னை அழைத்து வந்த அரசு அதிகாரியிடம்.

"பொற்பாதரே! தாங்கள் சிற்பியின் கலைத்திறனைப் பாராட்டியது சரிதான். ஆனால் இது அந்தச் சிற்பியின் கற்பனைப் படைப்பல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன் போர்க்களத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வைத்தான் சிற்பி சிலையாக வடித்திருக்கிறார்!" என்றார் அரசு அதிகாரி.

"அப்படியா? போர்க்களத்தில் ஒரு வீரரின் செயலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அதை ஒரு சிலையாக வடிக்கச் செய்து அதை அரண்மனை முகப்பில் வைக்கச் செய்த உங்கள் மன்னரின் செயல் பாராட்டத்தக்கதுதான்!" என்றார் பொற்பாதர்

பொற்பாதர் ஒப்புக்காகப் பாராட்டுகிறார் என்று புரிந்து கொண்ட அரசு அதிகாரி, "யாத்திரிகரே! வீரர் கையில் வைத்திருக்கும் வேல் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்பதை உங்களால் ஊகிக்க முடிகிறதா?"

"ஏன், வீரர் கையில் வேல் இருக்குமே!"

"அதில் ரத்தக் கறை படிந்திருப்பது ஏன்?"

"அந்த ஐயம் எனக்கும் ஏற்பட்டது. அவர் மார்பிலும் ரத்தம். அப்படியானால்..."

"நீங்கள் நினைப்பது சரிதான் பொற்பாதரே! அந்த வீரர் தன் மார்பில் பாய்ந்திருந்த வேலைப் பிடுங்கித்தான் தனக்கு எதிரே நிற்கும் யானை மீது எறிந்தார். அந்தக் காட்சியைத்தான் சிலையாக வடித்திருக்கிறார் சிற்பி!"

"என்ன ஒரு வீரம்!" என்று வியந்த பொற்பாதர், "அப்படியானால் அவர் கையில் இருந்த வேல்...?" என்றார்.

"அதை அவர் முன்பே ஒரு யானையின் மீது எறிந்து விட்டார். அதற்குள் ஒரு எதிரி வீரன் எரிந்த வேல் அவர் மார்பில் பாய்ந்து விட்டது. இன்னொரு யானை அவரைத் தாக்க வர, தன் மார்பிலிருந்த வேலைப் பிடுங்கி அந்த யானை மேல் எறிந்தார். அவருடைய வீரச் செயலை இந்த உலகம் அறிய வேண்டும் என்பதால்தான் அதைச் சிலையாக வடிக்கச் செய்து அரண்மனை முகப்பில் வைத்திருக்கிறார் எங்கள் அரசர். இந்த மொத்தக் காட்சியும் இந்த நகரத்தில் உள்ள கலைக்கூடத்தில் ஓவியமாகவும் தீட்டப்பட்டிருக்கிறது. உங்களை அங்கே அழைத்துச் செல்லும்போது அதைக் காட்டுகிறேன்!" என்றார் அரசு அதிகாரி பெருமிதத்துடன்.

பொற்பாதர் அந்த வீரனின் நிலையை ஒரு புது மரியாதையுடன் பார்த்தார்.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு

குறள் 774:
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

பொருள்: 
தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்து மகிழ்வான்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Friday, May 12, 2023

773. எதிரியிடமிருந்து வந்த ஓலை!

"கைசிகம் என்ற ஒரு சிறிய நாட்டின் மன்னனாக இருந்து கொண்டு நம்மை எதிர்க்கிறான் கதிர்வேலன். அவனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்!" என்றார் கேது நாட்டு மன்னர் கீர்த்திவளவன்.

"நாம் இரண்டு முறை அவருடன் போரிட்டு விட்டோம். இரண்டு போர்களுமே யாருக்குமே வெற்றி இல்லாமல் முடிந்து விட்டன. ஆயினும் கதிர்வேலர் நமக்குப் பணிய மறுக்கிறார்!" என்றார் அமைச்சர்.

"முதல் போரின்போது நம் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நாம் போரை நிறுத்த வேண்டி இருந்தது. இரண்டாவது முறை போர் நடந்தபோது என்னைக் கவிழ்த்து விட்டு அரியணை ஏறத் தருணம் பார்த்திருந்த என் ஒன்று விட்ட சகோதரன் வேலவரையனின் சூழ்ச்சியை முறியடிப்பதற்காக நாம் போரைக் கைவிட வேண்டி இருந்தது. அடுத்த முறை போர் நடக்கும்போது கதிர்வேலனை நாம் முழுமையாகத் தோற்கடித்து அவனை நமக்கு அடிபணிய வைக்க வேண்டும்!"

"வேலவரையர் நம் நாட்டுக்குள் தலைமறைவாக இருந்து கொண்டு இன்னும் நமக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்  அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்த பிறகுதான் நாம் மீண்டும் கதிர்வேலரின் மீது போர் தொடுக்க முடியும்!"

"அது உண்மைதான். ஆயினும் ஒரு குறுநில மன்னனான கதிர்வேலன் நம்மைப் போன்ற பேரரசை எதிர்ப்பதையும், அவனை நம்மால் பணிய வைக்க முடியவில்லை என்பதையும் நினைக்கும்போது என் நெஞ்சு கொதிக்கிறது!" என்றார் அரசர்.

அப்போது வெளியே ஏதோ அரவம் கேட்டது.

ஒரு வீரன் உள்ளே வந்து அரசரை வணங்கிய பின், "அரசே! வேலவரையரைக் கைது செய்து சில வீரர்கள் அழைத்து வந்திருக்கிறார்கள்!" என்றான்.

"சில வீரர்கள் என்றால் நம் வீரர்கள்தானே?"

"நம் வீரர்கள்தான். ஆனால் கைசிக நாட்டு வீரர்கள் சிலர் அவரை எல்லையிலிருந்த நம் வீரர்களிடம் யே ஒப்படைத்து விட்டு கைசிக நாட்டு மன்னரிடமிருந்து ஒரு ஓலையையும் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள்" என்றபடி தன் கையிலிருந்த ஓலையை அரசரிடம் பணிந்து கொடுத்தான் அந்த வீரன்.

ஓலையைப் படித்துப் பார்த்த அரசர் வியப்படைந்தவராக, அதை அமைச்சரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

"கீர்த்திவளவரே! உங்கள் ஆதிகத்தை ஏற்க மறுத்து உங்களுடன் போரிடுபவன்தான் நான். ஆனால் உங்களுக்கு எதிராகச் சிலர் சூழ்ச்சி செய்வதாக அறிந்ததும் அந்தச் சூழ்ச்சியை முறியடிக்க உங்களுக்கு உதவுவதுதான் முறையாக இருக்கும் என்று நினைத்தேன். உங்கள் ஒன்றுவிட்ட சகோதரர் வேலவரையர் என்னைச் சந்தித்து உங்கள் படையில் சிலர் அவருக்கு விசுவாசமக இருப்பதாகவும் அவர்கள் உதவியுடன் உங்களைத் தோற்கடிக்க எனக்கு உதவுவதாகவும், பதிலுக்கு அவர் அரியணை ஏற நான் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இது போன்ற வஞ்சகச் செயல்களில் ஈடுபடுவது வீரர்களுக்கு அழகல்லவே! எனவே அவரைக் கைது செய்து எல்லையில் உள்ள உங்கள் வீரர்களிடம் ஒப்படைக்கும்படி என் வீரர்களிடம் கூறி இருக்கிறேன். அவரை விசாரித்து உங்கள் படையில் உள்ள காளான்களைக் களையிடுங்கள். வாய்ப்பு அமையுமானால், மீண்டும் ஒரு போரில் சந்திப்போம்! - கதிர்வேலன்."

ஓலையைப் படித்து விட்டு அரசரின் முகத்தைப் பார்த்தார் அமைச்சர்.

"கதிர்வேலன் ஒரு சிறந்த வீரன்தான். ஐயமே இல்லை!" என்றார் அரசர்.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு

குறள் 773:
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.

பொருள்: 
பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவுதல் ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Thursday, May 11, 2023

772. வெற்றியை விஞ்சிய தோல்வி!

போர்க்களத்திலிருந்து வெற்றியுடன் திரும்பிய இளவரசன் பரகாலனை வரவேற்க தலைநகரமே கூடி இருந்தது.

மக்களின் ஆரவாரமான வரவேற்பைப் பெற்றபடி அரண்மனைக்குள் நுழைந்த இளவரசன் தன் தந்தையை வணங்கி வாழ்த்துப் பெற்றான்.

ஆயினும் மன்னரான அவன் தந்தை அவனை வாழ்த்தியதில் அவ்வளவு உற்சாகம் இல்லை. 

போரில் தான் வெற்றி பெற்றதைத் தன் தந்தைப் பெரிதும் பாராட்டுவார் என்று நினைத்த பரகாலனுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது.

ரண்டு நாட்களுக்குப் பிறகு தன் தந்தையுடன் தனியாகப் பே சந்தர்ப்பம் கிடைத்தபோது பரகாலன் அவரிடம் கேட்டான். 

"தந்தையே! இந்தப் போரில் நான் வெற்றி பெற்றதில் தங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா?"

"மகிழ்ச்சி இல்லாமல் எப்படி இருக்கும்?"

"ஆனால் போர்க்களத்திலிருந்து நான் திரும்பி வந்து தங்களை வணங்கியபோது தங்களிடம் அதிக உற்சாகம் காணப்படவில்லையே!" என்றான் பரகாலன்.

"பரகாலா! போரில் வெற்றி பெறுவது நல்ல விஷயம்தான்.ஆனால் நீ போரில் வென்றது ஒரு சிறிய நாட்டை. நம் பெரும் படையைப் பார்த்ததுமே அவர்கள் சரணடைந்து விட்டனர்.அதனால்தான் நான் இந்த வெற்றியைப் பெரிதாக நினைக்கவில்லை!" என்றார் அரசர்.

பரகாலன் மௌனமாக இருந்தான்.

"பரகாலா! நாம் நமக்குக் கிடைத்த பாராட்டுக்களை மறந்து விடுகிறோம். பாராட்டு கிடைக்காத சந்தர்ப்பங்களை மட்டும் குறைகளாக எப்போதும் மனதில் வைத்துக் கொண்டிருப்போம். இது மனித இயல்பு" என்றார் மன்னர் சிரித்தபடியே.

"தந்தையே நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

"இதற்கு முன் நீ ஒரு போருக்குத் தலைமை தாங்கினாய். அந்தப் போரில் நாம் வெற்றி பெறவில்லை. ஆயினும் நீ போர்க்களத்திலிருந்து திரும்பி வந்ததும் உன்னை வெகுவாகப் பாராட்டினேன். அரசவையில் பலர் முன்னிலையில் உன்னைப் புகழ்ந்து பரிசு கூட அளித்தேன்!"

"நான் அதை மறக்கவில்லை தந்தையே! அது நான் முதல் முறையாகப் பங்கேற்ற போர். அதனால் என்னை ஊக்குவிப்பதற்காக என்னைப் பாராட்டினீர்கள் என்று நினைத்தேன். அரசவையில் நீங்கள் என்னைப் பாராட்டியது எனக்குச் சங்கடமாகக் கூட இருந்தது!"

"இல்லை பரகாலா! அன்று நான் உன்னைப் பாராட்டியது என் மனமாரத்தான். நீ அந்தப் போரில் தோற்றது ஒரு பொருட்டே இல்லை. ஏனெனில் நீ போர் செய்தது ஒரு பெரிய நாட்டின் பெரும் படையுடன். அத்தகைய பெரும் படையை நம்மால் வெற்றி கொள்ள முடியுமா என்ற சிந்தனை கூட இல்லாமல் நீ அந்தப் போரில் உன் வீரத்தையும் துணிவையும் காட்டிப் போர் செய்தாய். அனால்தான் உன்னை நான் வெகுவாகப் பாராட்டினேன், உன் முதல் போர் என்பதால் அல்ல. இன்று ஒரு சிறிய நாட்டின் சிறு படையுடன் போர் செய்து நீ பெற்றிருக்கும் வெற்றியை விட, அன்று ஒரு பெரிய நாட்டின் பெரும் படையுடன் போரிட்டு நீ அடைந்த தோல்வியையே நான் பெருமைக்குரியதாகக் கருதுவேன்!" என்றார் அரசர்.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு

குறள் 772:
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

பொருள்: 
காட்டில் ஓடும் முயலை நோக்கி குறி தவறாமல் எய்த அம்பைக் கையில்  ஏந்துவதை விட, எதிரில் நின்ற யானை மேல் எறிந்து குறி தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Wednesday, May 10, 2023

771. யாத்திரிகர் சொன்ன செய்தி

பல நாடுகளுக்கும் சென்று வந்த யாத்திரிகர் அறிவானந்தத்தைத் தன் அரசவைக்கு அழைத்து கௌரவித்தார் நகுல நாட்டு அரசர் சிம்மவர்மர்.

"உங்களைப் போன்ற யாத்திரிகர்களிடமிருந்து பல தகவல்களை அறிந்து கொள்வதில் எனக்கு மிகவும் ஆர்வம் உண்டு. பல்வேறு நாடுகளிலும் நீங்கள் கண்டு வியந்தவற்றை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!" என்றார் சிம்மவர்மர்.

யாத்திரிகர் தான் சென்று வந்த சில இடங்களைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, "அரசே! இப்போது நான் சில நடுகற்களைப் பற்றிக் கூற விரும்புகிறேன்!" என்றார்.

"நடுகல் என்பது போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்காக நடப்படும் ஒரு நினைவுச் சின்னம். அத்தகைய இடங்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?" என்றார் சிம்மவர்மர் புருவத்தை உயர்த்தி.

"நான் சொல்லப் போவதன் முக்கியத்துவம் குறித்து நான் சொல்லி முடித்ததும் தாங்கள் புரிந்து கொள்வீர்கள்."

"சரி, சொல்லுங்கள்.

"பவளமணி நாட்டில் அந்த நாட்டு அரசன் மணிவர்மனுக்கு நடுகல் அமைத்திருக்கிறார்கள். குந்துமணி நாட்டில் போரில் மரணமடைந்த அந்த நாட்டு மன்னன் விக்கிரமசிங்கனுக்கு நடுகல் அமைத்திருக்கிறார்கள். காரக நாட்டில் அந்த நாட்டு மன்னன் சீவகனுக்கு நடுகல் அமைத்திருக்கிறார்கள். செந்தூர நாட்டில்..."

"யாத்திரிகரே! சற்று நிறுத்துங்கள். போரில் இறந்து நடுகல் அமைக்கப்பட்டுள்ள மன்னர்களின் பட்டியலை என்னிடம் சொல்வதில் என்ன பயன்?" என்றார் சிம்மவர்மர் சற்று எரிச்சலுடன்.

"இருக்கிறது மன்னரே! நடுகல்லாய் நிற்கும் இந்த மன்னர்கள் அனைவரும் குவலய நாட்டு மன்னருடன் போர் செய்து போரில் தோல்வியுற்றுத் தங்கள் உயிரையும் இழந்தவர்கள். குவலய நாட்டின் படை அவ்வளவு வலிமை வாய்ந்தது. இந்தப் படையை வெல்லக் கூடிய வேறு படை இல்லை. தாங்கள் குவலய நாட்டின் மீது போர் தொடுக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதனால்தான் குவலய நாட்டைச் சேர்ந்த யாத்திரிகனான நான் உங்கள் நாட்டில் யாத்திரை செய்து கொண்டிருக்கும்போது இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு உங்கள் நலன் கருதி இந்த உண்மையை உங்களிடம் தெரிவிக்க வந்தேன்!" என்றார் யாத்திரிகர்.

யாத்திரிகரின் கூற்றின் உண்மையை உணர்ந்து தன் திட்டத்தை மாற்றிக் கொள்வதா அல்லது குவலய நாட்டுப் படையின் சிறப்பைப் பற்றித் தன்னிடமே பேசிய அந்த நாட்டு யாத்திரிகரைத் தண்டிப்பதா என்று தீர்மானிக்க முடியாமல் கோபத்திலும், குழப்பத்திலும் ஆழ்ந்தார் சிம்மவர்மர்.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு

குறள் 771:
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.

பொருள்: 
பகைவர்களே! என் தலைவன் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு எதிர்த்து நின்ற பலர் மறைந்து இப்போது நடுகல்லாக நிற்கிறார்கள்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Tuesday, May 9, 2023

770. பெரும்படையை எதிர்த்து...

"அமைச்சரே! நம் நாட்டுப் படை சிறியது. வராளி நாட்டுப் படை பெரியது. அவர்களுடன் நம்மால் போரிட்டு வெற்றி பெற முடியுமா?" என்றார் கனக நாட்டு மன்னர் கவலையுடன்.

"அரசே! நம் படை சிறியதாக இருக்கலாம். ஆனால் நம் படைத்தலைவர் மிகுந்த திறமையுள்ளவர். அவர் தலைமையில் நம் படைகள் நிச்சயம் வெற்றி பெறும்!" என்றார் அமைச்சர் படைத்தலைவரைப் பார்த்துச் சிரித்தபடி.

படைத்தலைவர் அமைச்சரைப் பார்த்துப் பணிவுடன் தலைவணங்கினார்.

"சரி. யோசித்து முடிவெடுப்போம். படைத்தலைவரே! நீங்கள் எதற்கும் படைகளைத் தயார் நிலையில் வைத்திருங்கள்!" என்றார் அரசர்.

குறிப்பறிந்து படைத்தலைவர் வெளியேறினார்.

படைத்தலைவர் சென்றதும், "அமைச்சரே! படைத்தலைவர் முன்னிலையிலேயே நீங்கள் அவரைப் புகழ்ந்து பேசியது எனக்குப் பிடிக்கவில்லை. அவருடைய திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் ஒரு பெரிய படையை முறியடிக்கப் படைத்தலைவர் திறமையானவராக இருந்தால் மட்டும் போதுமா?" என்றார் அரசர்.

"அரசே! படைத்தலைவருக்கு ஊக்கமளிக்கத்தான் உங்கள் முன் அவர் திறமையைப் புகழ்ந்தேன். தாங்கள் கூறுவது சரிதான். நம் படைத்தலைவர் திறமையாக இருப்பது மட்டும் நாம் வெற்றி பெறப் போதுமானதல்ல!"

"பின்னே?" என்றார் அரசர் வியப்புடன்.

"நமக்குச் சாதகமாக இன்னொரு காரணமும் இருக்கிறது!" என்று கூறிய அமைச்சர் அந்தக் காரணத்தை அரசரிடம் விளக்கினார்.

"வாழ்த்துக்கள் படைத்தலைவரே! போரில் நம் படைகளுக்கு வெற்றி தேடித் தந்து விட்டீர்கள். உங்கள் திறமையைப் பற்றி நான் அரசரிடம் கூறியதை உண்மை என்று நிரூபித்து விட்டீர்கள்!" என்று படைத்தலைவரைப் பாராட்டினார் அமைச்சர்.

"தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், என் திறமை பற்றி அரசரிடம் எடுத்துக் கூறியதற்கும் நன்றி அமைச்சரே! என் திறமை பற்றித் தாங்கள் கூறியதை ஏற்று அரசர் போருக்கு ஒப்புக் கொண்டது எனக்கு மலைப்பாக இருக்கிறது!" என்றார் படைத்தலைவர்.

அமைச்சர் எதுவும் சொல்லாமல் சிரித்தார். 

எதிரி நாட்டின் படைக்கு நீண்ட காலமாகவே சரியான தலைவன் இல்லை என்றும், தற்போது தலைவனாக நியமிக்கப்பட்டிருப்பவனுக்குத் திறமையோ, அனுபவமோ இல்லை என்றும் ஒற்றர்கள் மூலம் கிடைத்த செய்தியை அரசரிடம் சொல்லி, நல்ல தலைவன் இல்லாத படை போரில் சிறப்பாகச் செயல்படாது என்பதையும் அரசரிடம் எடுத்துக் கூறியதால்தான் அரசர் போருக்குச் சம்மதித்தார் என்ற தகவலைப் படைத்தலைவரிடம் சொல்லி அவருடைய வெற்றியின் பெருமையை அமைச்சர்  குறைக்க விரும்பவில்லை.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி

குறள் 770:
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.

பொருள்: 
சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Monday, May 8, 2023

769. போர் வேண்டாம்1

"எதிரி நம் மீது போர் தொடுக்கப் போவதாக அறைகூவல் விடுத்திருக்கும்போது அவர்களிடம் சமாதானமாகப் போகலாம் என்று யோசனை தெரிவிப்பது நம் பலவீனத்தைக் காட்டுவதாக ஆகாதா?" என்றார் அரசர் கோபத்துடன்.

"உண்மைதான் அரசே! ஆனால் நம் படையின் வலிமை பற்றிச் சிந்திக்க வேண்டாமா? நம் படைகள் எண்ணிக்கையில் குறைந்தவை. இப்படி ஒரு சிறிய படையை வைத்துக் கொண்டு போரில் இறங்குவது நமக்குப் பெரும் இழப்புகளைத்தானே ஏற்படுத்தும்? நம் படைவீரர்கள் பலரை நாம் இழப்பதோடு, போரில் தோல்வி ஏற்பட்டு அதன் பிறகு எதிரிகள் கூறுவதற்குக் கட்டுப்பட்டுத்தானே நாம் நடக்க வேண்டி இருக்கும்? அதை விட, ஒரு கௌரவமான சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதுதானே நமக்கு நன்மை பயப்பதாக இருக்கும்?" என்றார் அமைச்சர்.

"என்ன படைத்தலைவரே! அமைச்சர் நம் படை சிறியது என்று கூறுகிறார். நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்றார் அரசர் படைத்தலைவரைப் பார்த்து, கோபம் தணியாமல்.

படைத்தலைவர் பதில் சொல்லத் தயங்குவது போல் மௌனமாக இருந்தார்.

"அரசே! இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. படைத்தலைவர் அதை உங்களிடம் சொல்லத் தயங்குகிறார்!" என்றார் அமைச்சர்.

"அது என்ன பிரச்னை?"

"நம் படைவீரர்களுக்கு நாம் மிகக் குறைந்த ஊதியமே வழங்குவதால் அவர்கள் வறுமை நிலையில் இருக்கிறார்கள். அதனால் ஊட்டமான உணவு உட்கொள்ள முடியாமல் அவர்கள் உடல் வலிமை குறைந்து அதனாலும் அவர்கள் போர் வலிமை குறைந்திருக்கிறது!" என்றார் அமைச்சர்.

"சரி. அப்படியானால் உங்கள் யோசனைப்படியே ஒரு சமாதானத் தூதுவரை அனுப்பலாம். சமாதானத் தூதுவரிடம் நாம் என்ன சொல்லி அனுப்ப வேண்டும் என்பதை ஆலோசித்து என்னிடம் கூறுங்கள்!" என்றார் அரசர்.

ரசவையிலிருந்து வெளியே வந்தபோது, "அமைச்சரே! நான் சொல்லத் தயங்கிய உண்மையை நீங்கள் அரசரிடம் சொல்லி விட்டீர்கள். ஆனால் இன்னொரு உண்மையை நீங்கள் அரசரிடம் சொல்ல வில்லையே!" என்றார் படைத்தலைவர்.

"நம் நாட்டு மக்களைப் போலவே நம் படைவீரர்களும் அரசரின் செயல்பாடுகளால் வெறுப்படைந்திருக்கிறார்கள், அந்த மனநிலையில் அவர்களால் தங்கள் முழு மனத்துடன் போராட முடியாது என்ற உண்மையை அரசரிடம் என்னால் எப்படிச் சொல்ல முடியும்?" என்றார் அமைச்சர் சிரித்தபடி.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி

குறள் 769:
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.

பொருள்: 
எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Saturday, May 6, 2023

768. அணிவகுப்பு

அரசரின் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அந்த நாட்டுப் படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற வேண்டும் என்று அரசர் உத்தரவிட்டிருந்தார்.

அரசரின் உத்தரவைத் தொடர்ந்து அமைச்சரைச் சந்திக்க வந்தார் படைத்தலைவர்.

"அணிவகுப்பு பற்றி அரசரின் உத்தரவு பற்றித் தங்களிடம் பேச வேண்டும்" என்றார் படைத்தலைவர்.

"இதில் பேச என்ன இருக்கிறது? அரசர் உத்தரவிட்டபடி அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் " என்றார் அமைச்சர்.

"அமைச்சர் பெருமானே! முந்தைய அரசரின் காலத்தில் நம் படை எவ்வளவு வலுவானதாகவும், திறமை வாய்ந்ததாகவும் இருந்தது என்பது தங்களுக்குத் தெரியும். இந்த அரசர் அரியணை ஏறிய பிறகு படைகளுக்காக வழங்கப்படும் நிதியைப் பெருமளவு குறைத்து விட்டார். வீரர்களுக்கு உரிய அளவில் ஊதியம் கூட வழங்க முடியவில்லை. அதனால் பல நல்ல வீரர்கள் படையிலிருந்து விலகி வேறு வேலைகளுக்குச் சென்று விட்டனர். இப்போது படையில் இருப்பவர்களின் வீரம், வலிமை, திறமை ஆகியவை நாம் பெருமைப்படும்படி இல்லை. அவர்களுக்கு முறையான பயிற்சிகளும், ஆயுதங்களும் வழங்க முடியவில்லை. போர் நடந்தால் எதிரிப் படைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் நம் படைக்கு இல்லை, அதற்கான பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை!"

"படைத்தலைவரே! படைகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று மன்னரிடம் நான் பலமுறை கூறி விட்டேன். என் யோசனையை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை!" என்றார் அமைச்சர்.

"இந்த நிலையில் படைகளின் அணிவகுப்பு நடத்தி என்ன பயன்? அப்படி ஒரு அணிவகுப்பை நடத்துவதில் எனக்கு ஆர்வமே இல்லை. ஆர்வம் இல்லாதபோது என்னால் அதை எப்படிச் சிறப்பாக நடத்த முடியும்? அணிவகுப்பு சிறப்பாக அமையாவிட்டால் மன்னர் என் மீது கோபம் கொள்வாரோ என்ற அச்சமும் எனக்கு இருக்கிறது!"

"படைத்தலைவரே படை இன்று இருக்கும் நிலைக்கு நீங்கள் பொறுப்பல்ல. நம் படையின் நிலை எப்படி இருந்தாலும், அது கட்டுப்பாட்டுடன் அணிவகுத்துச் சென்றால் அது எப்படிப்பட்ட கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அரசரை விடுங்கள்! அத்தகைய அணிவகுப்பைப் பார்க்கும் மக்கள் கூட எவ்வளவு பெருமிதம் அடைவார்கள்! ஒருவேளை அரசர் கூட அந்த அணிவகுப்பைப் பார்த்து மனம் மகிழ்ந்து படைக்காக அதிக நிதி ஒதுக்கலாம். உங்களால் இயன்ற அளவுக்கு அணிவகுப்பைச் சிறப்பாகச் செய்யுங்கள்!" என்றார் அமைச்சர் படைத்தலைவரின் தோளில் தட்டியபடி.

"நீங்கள் கூறியதைக் கேட்ட பிறகு அணிவகுப்பை நடத்துவதில் எனக்கும் உற்சாகம் பிறந்திருக்கிறது. நீங்களும், மன்னரும், மற்ற பார்வையாளர்களும் வியக்கும் வகையில் அணிவகுப்பைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறேன்!" என்றார் படைத்தலைவர் உற்சாகத்துடன்.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி

குறள் 768:
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.

பொருள்: 
பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

767. மணிமாறனின் யோசனை!

"காண்டவ நாட்டின் காலாட்படை மிகவும் பெரியது.  எந்தப் போரிலுமே அவர்கள் காலாட்படை முன்னே வந்து உக்கிரமாகப் போராடி எதிரிப் படைகளின் காலாட்படைக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடும். அதற்குப் பிறகு பின்னிருந்து வரும் யானை, குதிரைப் படைகளைச் சமாளிக்க முடியாமல் எதிரிப் படைகள் சிதறி ஓடி விடும். இந்த முறையைப் பயன்படுத்தித்தான் அவர்கள் பல போர்களை வென்றிருக்கிறார்கள். தங்கள் நாட்டின் பெரும் மக்கள் தொகையையும், மக்களின் ஏழ்மையையும் பயன்படுத்தி அவர்கள் ஒரு மாபெரும் காலாட்படையை உருவாக்கி இருக்கிறார்கள். மற்ற நாடுகளால் அவ்வளவு பெரிய காலாட்படையை உருவாக்க முடியாது!" என்றான் சீவக நாட்டின் துணைத்தளபதி மணிமாறன்..

"நீ இந்த விவரங்களைச் சேகரித்து வந்திருப்பது  நமக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்!" என்றான் படைத்தளபதி வல்லவராயன்.

"காண்டவ நாட்டுப் படை நம் எல்லையில் போருக்குத் தயாராக நிற்கிறது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலைத் துவக்கலாம்!"

"நம் படைகளும் போருக்குத் தயாராக அணிவகுத்து நிற்கின்றனவே!"

"ஆனால் நம் சிறிய காலாட்படையை வைத்துக் கொண்டு அவர்களுடைய பெரிய காலாட்படையை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?" என்ற மணிமாறன், சற்றுத் தயங்கி விட்டு, "எனக்குஒரு யோசனை தோன்றுகிறது!" என்றான்.

"சொல்!" என்றான் வல்லவராயன்.

"நாம் குதிரைப்படையை முன்னால் நிறுத்தினால் என்ன? அப்படிச் செய்தால் அவர்கள் காலாட்படைக்கு நம்மால் பெரும் சேதத்தை விளைவிக்க முடியுமே!"

"நாம் குதிரைப்படையை முன்னே நிறுத்தினால் அவர்களும் குதிரைப்படையை முன்னே நிறுத்துவார்கள்! அவர்கள் குதிரைப்படையும் நம்முடையதை விடப் பெரியதுதானே! அதனால் நம் குதிரைப்படையை அவர்களால் எளிதாக முறியடிக்க முடியும்!" என்ற வல்லவராயன், "ஆயினும் உன் யோசனை சரியானதுதான்" என்றான், மணிமாறனை ஊக்குவிப்பது போல்

"சாதிக்க முடியாததைச் சாதித்து விட்டீர்கள் தளபதி! அணியாக நின்ற நம் காலாட்படை வீரர்கள் விரைவாகப் பக்கவாட்டில் நகரப் பயிற்சி அளித்து, அவர்கள் அவ்வாறு நகர்ந்ததும ஏற்பட்ட இடைவெளி வழியே நம் குதிரைப்படையை வர வைத்து காண்டவ நாட்டின் காலாட்படையின் மீது எதிர்பாராத விதத்தில் தாக்குதல் நடத்தி அவர்களைச் சிதறி ஓட வைத்து விட்டீர்கள்!" என்றான் மணிமாறன் உற்சாகத்துடன்.

"நீ சொன்ன யோசனைதான் மணிமாறா! ஆனால் எதிர்ப் படைகள் எதிர்பாராத விதத்தில் இதை விரைவாக முடிக்க வேண்டும். அதற்கான பயிற்சியைக் குறைந்த நேரத்திலேயே நம்மால் அளிக்க முடிந்ததால்  நம் படைக்கு வெற்றி கிடைத்தது!" என்றான் வல்லவராயன்.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி

குறள் 767:
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.

பொருள்: 
தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை ( தூசிப்படை) தன் மீது வராமல் தடுப்பதே படை.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Wednesday, May 3, 2023

766. படைகளுக்குப் பாதுகாப்பு!

"அமைச்சரே! என் தந்தை காலத்தில் நம் போர்ப்படையில் இருந்த நான்கு பிரிவுகளும் சீராக இல்லை. யனைப்படை, தேர்ப்படை இவற்றின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அவற்றைச் சீரமைக்க விரும்புகிறேன். உங்கள் ஆலோசனைகளைக் கூறுங்கள்!" என்றான் அரசன் ராஜதிலகன். தன் தந்தையின் மரணத்துக்குப் பிறகு அவன் அரசனாகப் பதவியேற்றுச் சில மாதங்களே ஆகி இருந்தன.

"அரசே! நம்மைப் போன்ற சிறிய நாட்டுக்கு ஏற்ற வகையில்தான் தங்கள் தந்தை படைகளை அமைத்திருந்தார். யானைப்படை, தேர்ப்படை ஆகியவை குறைந்த அளவிலேயே அமைந்தால் போதும் என்பது அவருடைய கருத்து. நாம் செய்யக் கூடிய போர்களுக்கு ஏற்ற வகையில்தான் நம் படையை வடிவமைத்திருந்தார் தங்கள் தந்தை" என்றார் அமைச்சர்.

"நால்வகைப் படைகளும் சமமான அளவில் இருக்க வேண்டாமா?"

"சமமான அளவில் இல்லை அரசே, சரியான அளவில்!"

இதற்கு என்ன பதில் சொல்வதென்று அரசன் யோசித்துக் கொண்டிருந்தபோது, அமைச்சர், "அரசே! படைகளுக்கு நான்கு தன்மைகள் இருக்க வேண்டும் என்பதில் தங்கள் தந்தை உறுதியாக இருந்தார்!" என்றார் அமைச்சர் தொடர்ந்து.

"அவை என்ன?"

"முதலில் வீரம். இது அடிப்படையான விஷயம். இரண்டாவது, மானம். மானம் என்பது தன்மானம் மற்றும் தாய்நாட்டின் மானம் இரண்டையும் காப்பதில் உறுதி. மூன்றாவது, நேர்மையாகவும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ளுதல். நான்காவது அரசரின் நம்பிக்கையைப் பெற்றிருத்தல்!"

"வியப்பாக இருக்கிறதே! ஒரு படைக்குத் தேவை வீரமும், வலிமையும்தான் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். சரி, இந்தத் தன்மைகளைப் படையிடம் எப்படி உருவாக்குவது?"

"படைவீரர்களைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்தல், பல நிலைகளிலும் உள்ள படைத்தலைவர்கள் தங்கள் நடத்தை மூலம் படைவீரர்களுக்கு வழிகாட்டுதல் வரை பல வழிமுறைகளைப் பின்பற்றித்தான் இவற்றை உருவாக்க முடியும்" என்ற அமைச்சர் சற்றுத் தயங்கி விட்டு, "ஒரு சிறந்த படைத்தலைவரை நியமிப்பதுதான் இந்தத் தன்மைகளை உருவாக்குவதற்கான அடிப்படை விஷயம்!" என்றார்.

"எனக்கு விசுவாசமாக இருந்த ஒரு வீரனைப் படைத்தலைவனாக நியமித்ததில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை நான் அறிவேன். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட நான்காவது தன்மையான அரசரின் நம்பிக்கையைப் பெற்றிருத்தல் என்பது முக்கியம் அல்லவா?" என்றான் அரசன், அமைச்சரை மடக்குவது போல்.

"அரசே! அரசரின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவர் படைத்தலைவர் ஆவதை விட, படைத்தலைவராக நியமிக்கப்பட்ட ஒரு நபர் தன் செயல்பாடுகள் மூலம் அரசரின் நம்பிக்கையைப் பெறுவது சிறப்பல்லவா? தங்கள் தந்தை குறிப்பிட்ட நம்பிக்கை என்பது மொத்தப் படைக்குமானது, படைத்தலைவருக்கு மட்டுமானதல்ல. ஒரு சிறந்த படைத்தலைவரால்தான் படைவீரர்களுக்கு முதல் மூன்று தன்மைகளையும் புகட்டி, அந்தப் படையை அரசரின் நம்பிக்கைக்கு உரியதாக ஆக்க முடியும். ஒரு நாட்டைப் பாதுகாப்பது அந்த நாட்டின் படை. ஆனால் அந்தப் படையைப் பாதுகாப்பது இந்த நான்கு தன்மைகள்தான். இவைதான் படைகளைப் பாதுகாக்கும் நான்கு அரண்கள் என்று உங்கள் தந்தை கூறுவார். இதை ஒரு தத்துவம் போல் விளக்குவதைக் கேட்டு நான் புளகாங்கிதம் அடைந்திருக்கிறேன். அவர் விளக்கியதைப் போல் தெளிவாக விளக்கும் திறன் எனக்கு இல்லை!" என்றார் அமைச்சர்.

அரசன் சற்று யோசித்து விட்டு, "சரி. நம் படைகளுக்கு அரண்கள் அமைக்கும் பணியை உடனே தொடங்குவோம். முதல் பணியாக ஒரு பொருத்தமான படைத்தலைவரை நியமிப்பது பற்றிக் கலந்தாலோசித்து முடிவு செய்வோம்!" என்றான் புன்னகையுடன்.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி

குறள் 766:
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.

பொருள்: 
வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன் நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்குக் காவல் அரண்களாகும்
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

765. போர்க்களக் கூற்றுவன்!

சௌமிய நாட்டுப் படைத் தளபதி தேவரசன் தனக்கு முன்னால் நின்ற வருண நாட்டின் சிறு படையைப் பார்த்தார். அதன் எண்ணிக்கை சௌமிய  நாட்டுப் படையின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாகத்தான் இருக்கும்.

'எந்த தைரியத்தில் என் படையை எதிர்த்து நிற்கிறார்கள்? அதுவும் 'போர்க்களக் கூற்றுவன்' என்ற அச்சுறுத்தும் அடைமொழி கொண்ட என்னை எதிர்த்து!"

ஏனோ அவருக்கு குருட்சேத்திரப் போர் நினைவுக்கு வந்தது. அந்தப் போரில் கூட கௌரவர் சேனை 11 அட்சௌகிணி என்ற எண்ணிக்கையைக் கொண்டிருந்தது., பாண்டவர் சேனையின் எண்ணிக்கை 7 அட்சௌகிணிதான் 

ஆனால் பாண்டவர் சேனைதான் வெற்றி பெற்றது!

'சே! இந்தத் தருணத்தில் இந்த எண்ணம் ஏன் வருகிறது? இந்தச் சிறிய படையால் நம்மை எப்படி வெல்ல முடியும்?'

எதிரே நின்ற வருண நாட்டுப் படையின் தளபதி இந்திரசேனனைப் பார்த்தார் தேவரசன். இந்திரசேனனின் முகத்தில் ஒரு சிரிப்பு! போர் துவங்குவதற்கு முன் யாராவது சிரிப்பார்களா? ஒருவேளை இது என் கற்பனையா?

போர் துவங்கியது.

போர் துவங்கி மூன்று நாட்கள்  ஆன நிலையில் இரு தரப்புக்குமே வெற்றி கிட்டவில்லை. ஆனால் வருண நாட்டுப் படையை விடசௌமிய நாட்டுப் படைக்கு இழப்பு அதிகமாக இருந்தது.

மூன்றாம் நாள் இறுதியில், போரை நிறுத்தி விட்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார் சௌமிய நாட்டு தளபதி தேவரசன்

இரண்டு தரப்பினரும் பேசி ஒரு சமாதான உடன்பாட்டுக்கு வந்த பிறகு, இந்திரசேனனைத் தனியே அழைத்த தேவரசன், "போர் துவங்குமுன் உங்களைப் பார்த்தேன். உங்கள் முகத்தில் ஒரு சிரிப்பு தெரிந்தது. அது என் கற்பனை இல்லை என்று நினைக்கிறேன். எதனால் அந்தச் சிரிப்பு? என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கவில்லையே!" என்றார் சிரித்தபடி.

"நிச்சயமாக இல்லை. உங்களுக்கு இருந்த பெருமையை மதித்துத்தான் சிரித்தேன்" என்றார் இந்திரசேனன்.

"புரியவில்லையே!"

"உங்களுக்குப் போர்க்களக் கூற்றுவன் என்ற பெருமை உண்டல்லவா? எமனையே எதிர்த்துப் போர் செய்யப் போகிறோம் என்ற பெருமித்ததில்தான் சிரித்தேன்!" என்றார் இந்திரசேனன்.

எமனைக் கண்டு அஞ்சும் உலக இயல்புக்கு மாறாக, எமனைக் கண்டு சிரிக்கும் தன்மையுள்ள இந்தப் படையைத் தன்னால் வெல்ல முடியாமல் போனதில் வியப்பில்லை என்று நினைத்துக் கொண்டார் தேவரசன்.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி

குறள் 765:
 கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.

பொருள்: 
எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

764. வெல்ல முடியுமா?

"ஒற்றர்படைத் தலைவரே! நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது நீங்கள் காவிரி நாட்டின் குடிமகனோ என்று தோன்றுகிறது!" என்றார் அரசர் சுக்ரகேது சற்று எரிந்நலுடன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! தங்கள் உத்தரவுப்படி நம் ஒற்றர்கள் சிலர் காவிரி நாட்டுக்குப் பயணிகள் போல் சென்று அங்கே சிறிது காலம் தங்கிப் பலரிடமும் பேசித் திரட்டிய விவரங்களைத்தான் தங்களிடம் கூறுகிறேன் !" என்றார் ஒற்றர்படைத் தலைவர்.

"காவிரி நாட்டுப் படை போரில் தோற்றதே இல்லையா என்ன?"

"தோற்றிருக்கிறார்கள் அரசே!"

"பிறகு எப்படி அவர்கள் படைகளும், படைக்கலன்களும் முன்பிருந்த நிலையிலேயே எப்போதும் இருப்பதாகக் கூறுகிறீர்கள்?"

"அரசே! ஒரு போர் முடிந்ததும் அவர்கள் உடனே செய்வது, போரில் அதிகம் காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்து, அவர்களை ஓய்வு பெறச் செய்து விட்டு, புதிய வீரர்கள் மற்றும் புதிதாகத் தயாரிக்கப்படும் படைக்கலன்கள் மூலம் படையின் வலுவை முன்பிருந்த அளவுக்கு உயர்த்துவதுதான்!"

"சரி. அவர்களை எந்தவித வஞ்சனையின் மூலமும் பலவீனப்படுத்த முடியாது என்கிறீர்களே, அது எப்படி?"

"அரசே! என் ஒற்றர்கள் கண்டறிந்தபடி முந்தைய போர்களில் அவர்களுக்கு எதிராகப் போரிட்டவர்கள் அவர்கள் படைகளை வஞ்சகமாகப் பிரித்தல், அவர்களை வஞ்சகமான முறையில் அபாயமான இடங்களுக்கு இட்டுச் செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுத் தோற்றிருக்கிறார்கள். படைவீரர்கள் எத்தகைய வஞ்சனைகள் மற்றும் சூழ்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும், அவற்றில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி ஆகியவை பற்றிக் காவிரி நாட்டுப் படைகளுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டுகிறதாம்!"

"அது சரி. அவர்கள் படைகள் தொன்று தொட்டு வரும் வீரத்துடன் விளங்குவதாகச் சொல்கிறீர்களே, அது எப்படி?" என்றார் அரசர்.

"அரசே! தக்கோலத்தில் நடந்த போரில் யானை மீது அமர்ந்து போரிட்டு வீர மரணம் எய்திய ராஜாதித்த சோழரை 'ஆனை மேல் துஞ்சிய தேவர்' என்று சோழர்கள் போற்றி வருவதை நாம் அறிவோம். அது போல் கடந்த காலத்தில் போர்களில் தீரச் செயல்கள் செய்த காவிரி நாட்டு வீரர்களின் வரலாறுகள் அங்கே பரம்பரை பரம்பரையாய் எடுத்துச் செல்லப்பட்டு வீரர்களுக்கு போதிக்கப்படுகின்றன. இந்த வரலாறுகள் வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தையும், சக்தியையும் அளிக்கின்றன."

"என்ன அமைச்சரே! ஒற்றர்படைத் தலைவர் கூறுவதைப் பார்த்தால் நம்மால் எக்காலத்திலும் காவிரி நாட்டைப் போரில் வெல்ல முடியாது போலிருக்கிறதே!" என்றார் அரசர் அமைச்சரைப் பார்த்து.

"அரசே! ஒற்றர்படைத் தலைவர் கண்டறிந்து சொன்ன விவரங்களின் அடிப்படையில் நம் படைகளை வலுப்படுத்தும் முயற்சியில் நாம் ஈடுபடுவோம். சில ஆண்டுகளில் படைகளை வலுப்படுத்திய பிறகு, நம் படைகளால் எந்த நாட்டுப் படையையும் போரில் வெல்ல முடியும்!" என்றார் அமைச்சர், காவிரி நாட்டைத் தங்களால் வெல்ல முடியுமா என்ற கேள்விக்கான விடையைத் தவிர்த்து!

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி

குறள் 764:
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

பொருள்: 
(போர் முனையில்) அழிவு இல்லாததாய், பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டு வந்த வீரம் உள்ளதாய் இருப்பதே (சிறப்பான( படையாகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Monday, May 1, 2023

763. புதிய தளபதி

"படைத்தலைவரே! மேரு நாடு நமக்கு எப்போதுமே எதிரியாக இருந்திருக்கிறது. அவர்களுடைய படைபலம் மிகவும் பெரியது. அவர்களுடன் போரிடுவதைத் தவிர்த்து சில சமரசங்கள் செய்து கொண்டு அவர்களுடன் சமாதானமாக இருந்து வருகிறோம். 'அவர்களை எதிர்த்துப் போரிட்டால் நமக்குப் பெரும் தோல்வி ஏற்படும். அத்துடன் நம் படை வீரர்கள் பலரும் கொல்லப்படுவார்கள்' என்றுதான் உங்களுக்கு முன் படைத்தலைவர்களாக இருந்தவர்கள் கூறி வந்திருக்கிறீர்கள். இப்போதுதான் படைத்தலைவராகப் பொறுப்பேற்ற நீங்கள் மேரு நாட்டை நாம் போரில் வெல்லலாம் என்று கூறுவது விந்தையாக இருக்கிறது!" என்றார் குவளை நாட்டின்அரசர்.

"அரசே! பல வருடங்கள் ஒரு சாதாரணப் படை வீரனாக இருந்த நான் இன்று தங்கள் கருணையால் படைத்தலைவனாக ஆக்கப்பட்டிருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நம் படை வீரர்களுடன் நெருங்கிப் பழகியதில் அவர்களுடைய திறமை, வீரம், போர் செய்யும் ஆற்றல் ஆகியவற்றை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஒரு தளபதி போரில் அவர்களை வழிநடத்தினால் அவர்களால் பல அற்புதங்களைச் செய்ய முடியும். எனக்கு முன்பிருந்த படைத்தலைவர்களிடம் மேரு நாட்டின் பெரும்படையை வெல்லும் திறமை நம்மிடம் இருக்கிறது என்று கூறி இருக்கிறேன். ஆனால் அவர்கள் என் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு இரண்டு மாதம் அவகாசம் கொடுங்கள். நம் வீரர்களைப் போருக்குத் தயார்ப்படுத்துகிறேன். அதற்குப் பிறகு மேரு நாட்டின் மீது நாம் போர் தொடுத்தால் வெற்றி நிச்சயம்!" என்றார் படைத்தலைவர் வாயுமைந்தன்.

ரண்டு மாதங்களுக்குப் பிறகு குவளை நாடு மேரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்றது. போர் தொடங்கிய இரண்டே நாட்களில் மேரு நாட்டின் பெரும்படை சிதறி ஓடியது. மீதமிருந்த படைவீரர்கள் சரணடைந்தனர். மேரு நாட்டு மன்னரைச் சிறைபிடித்துத் தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்தார் வாயுமைந்தன்.

"வாயுமைந்தரே! எப்படி இதைச் சாதித்தீர்கள்? நீங்கள் கூறியதால் நான் போருக்குச் சம்மதித்தேனே தவிர, எனக்கு வெற்றி பற்றி அவ்வளவு நம்பிக்கை இல்லை. பாராட்டுக்கள்!" என்றார் அரசர்.

"அரசே! நான் முன்பே கூறியபடி நம் படைவீரர்கள் வீரமும், தீரமும் நிரம்பப் பெற்றவர்கள். இத்தகைய வீரர்கள் நம்மிடம் இருக்கும்போது நாம் வெற்றி பெற்றதில் வியப்பில்லை!" என்றார் வாயுமைந்தர்.

அவையிலிருந்த அமைச்சர் சிரித்தபடி, "அரசே! படைத்தலைவர் அடக்கம் காரணமாகத் தன்னுடைய பங்கு பற்றிப் பேசாமல் இருக்கிறார். போர்க்களத்தில் நம் படைகளை வாயுமைந்தர் வழிநடத்திய விதம்தான் வெற்றிக்குக் காரணம் என்பதைப் போரில் கலந்து கொண்ட பல வீரர்களுடன் பேசி நான் அறிந்து கொண்டேன். வாயுமைந்தர் வீரமுழக்கமிட்டதைக் கேட்டு பாம்பின் சீறலைக் கண்டு எலிகள் அஞ்சி ஓடுவது போல் மேரு நாட்டின் பெரும்படை சிதறி ஓடிய அதிசயம் பற்றி எல்லா வீரர்களுமே வியந்து பேசுகிறார்கள்!" என்றார் படைத்தலைவரைப் பெருமையுடன் பார்த்தபடி.

"ஒரு வலுவான தளபதியால் ஒரு சிறிய படையையும் பெரிய படையை எதிர்த்து வெற்றி கொள்ளச் செய்ய முடியும் என்பதை நிரூபித்து விட்டீர்கள். உங்களுக்கு இந்த நாடு என்றும் கடமைப்பட்டிருக்கும்!" என்ற அரசர் தன் அரியணையிலிருந்து இறங்கி வந்து வாயுமைந்தரைத் தழுவிக் கொண்டார்.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி

குறள் 763:
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.

பொருள்: 
பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...