Tuesday, November 19, 2019

395. ஆசிரியர்!

"அக்கவுண்டண்ட் சார்! முதலாளி உங்களைக் கூப்பிடறாரு" என்று பியூன் வந்து அழைத்ததும் சற்று பயத்துடனேயே முதலாளியின் அறைக்குச் சென்றார் சச்சிதானந்தம். அவர் முதலாளி மோதிலால் கோபத்துக்குப் பெயர் போனவர்.

அறைக்குள் சென்றதும், "உக்காருங்க சச்சிதானந்தம்!" என்றார் மோதிலால். 

சச்சிதானந்தத்துக்கு வியப்பும் கவலையும் ஒருங்கே ஏற்பட்டன. மோதிலால் தன் ஊழியர்களை உட்கார வைத்துப் பேசும் வழக்கம் கொண்டவர் அல்ல. 'ஒருவேளை வேலையை விட்டு அனுப்பப் போகிறாரோ! அதற்குத்தான் உட்கார வைத்துப் பக்குவமாகப் பேசப் போகிறாரோ!'

"சொல்லுங்க சார்!" என்றார் சச்சிதானந்தம் நின்று கொண்டே.

"அட! உக்காருங்க, சொல்றேன்."

சச்சிதானந்தம் சட்டென்று உட்கார்ந்து கொண்டார்.

"எனக்கு நீங்க அக்கவுண்ட் டியூஷன் சொல்லிக் கொடுக்கணும்!" என்றார் மோதிலால்.

"என்ன சார் சொல்றீங்க?'  

"கவலைப் படாதீங்க. நான் அக்கவுண்ட்ஸ் கத்துக்கிட்டு உங்களை வேலையை விட்டு அனுப்பிட மாட்டேன்! எனக்கு வியாபாரம் தெரியுமே தவிர அக்கவுண்ட்ஸ் எல்லாம் தெரியாது. எங்கப்பா காலத்திலெல்லாம் பற்று வரவுன்னு ஒரே நோட்டில ரெண்டு கட்டத்தில மொத்தக் கணக்கையும் எழுதிடுவாங்க. அதைத்தான் அவரு எனக்கு சொல்லிக் கொடுத்தாரு. இப்ப டெபிட்ங்கறாங்க, கிரெடிட்ங்கறாங்க. கேஷ் பேலன்ஸ் டெபிட்ல இருக்கணும்கறாங்க. கடன் வாங்கினா அதை கிரேடிட்ல வைக்கணும்கறாங்க! எனக்கு ஒண்ணும் புரியல. ஆடிட்டர் எங்கிட்ட பேசறப்ப அவரு சொல்றதுல பாதி எனக்குப் புரியறதில்ல. சும்மா தலையாட்டறேன்..."

"சார்! அக்கவுண்ட்ஸ் விவரங்களையெல்லாம் நான் பாத்துக்கறேனே சார்!"

"கரெக்ட்தான். உங்க மேல நம்பிக்கை இல்லாமயோ, உங்ககிட்ட குத்தம் கண்டுபிடிக்ககறத்துக்காகவோ நான் அக்கவுண்ட்ஸ் கத்துக்கணும்னு நினைக்கல. ஒரு ஆர்வத்தாலதான் கேட்கிறேன். காலையில எட்டு மணிக்கு என் வீட்டுக்கு வந்து ஒரு மணி நேரம் சொல்லிக் கொடுங்க. நீங்க வீட்டிலேந்து சீக்கிரம் கிளம்பறதால என் வீட்டிலேயே டிஃபன் சாப்பிட்டுடலாம். அப்படியே நேரா ஆஃபீசுக்குப் போயிடுங்க. என் வீட்டுக்கு வரத்துக்கும், அங்கேந்து ஆஃபீஸ் போறதுக்கும் ஆட்டோ சார்ஜ் கொடுத்துடறேன். அதைத் தவிர மாசம் ஐயாயிரம் ரூபா டியூஷன் ஃபீஸ் கொடுத்துடறேன். ஒரு ஆறு மாசம் சொல்லிக் கொடுத்தா போதும்னு நினைக்கறேன். புத்தகம் ஏதாவது வேணும்னா சொல்லுங்க. வாங்கிக் கொடுத்துடறேன். நீங்க அதை வச்சே சொல்லிக் கொடுக்கலாம்" என்றார் மோதிலால்.

டியூஷன் துவங்கி நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் டியூஷன் முடிந்து சச்சிதானந்தம் கிளம்பிப் போனதும் மோதிலாலின் மனைவி அவரிடம் கேட்டாள்.

"ஏங்க, அவர் உங்ககிட்ட வேலை செய்யறவரு. ஆனா அவரு வந்தா நீங்க உங்க உடம்பைத் தூக்க முடியாம தூக்கிக்கிட்டு எழுந்து நின்னு மரியாதை காட்டறீங்க. அவரு கிளம்பறப்ப வாசல் வரைக்கும் போய் அவரைக் கைகூப்பி வழி அனுப்பிட்டு வரீங்க. என்னதான் அவரு உங்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கறார்னாலும், அதுக்கு நீங்க பணம் கொடுக்கறீங்க. இங்கேயும் அவர் உங்ககிட்ட சம்பளம் வாங்கிக்கிட்டு வேலை செய்யறவருதான். அவருக்கு நீங்க இவ்வளவு மரியாதை கொடுக்கறது கொஞ்சம் அதிகப்படியா இருக்கு!"

"ஆபீஸ்ல அவர் எங்கிட்ட சம்பளம் வாங்கறவருதான். என் முன்னால நின்னுக்கிட்டுதான் பேசுவாரு. இங்கேயும் அவர் எங்கிட்ட சம்பளம் வாங்கினாலும் அவர் எனக்கு வித்தை சொல்லிக் கொடுக்கறாரு. ஒத்தர் கிட்ட கல்வி கற்கும்போது, கொடுக்கறவன் கிட்ட வாங்கறவன் பணிவா நின்னு வாங்கற மாதிரித்தான் வாங்கணும். அதுதான் முறை. நான் அதிகம் படிக்காட்டாலும் இந்த முறை எனக்குத் தெரியும். அதைத்தான் நான் பின்பற்றறேன்" என்றார் மோதிலால். 
பொருட்பால்
அரசியல் இயல் 
அதிகாரம் 40
கல்வி
குறள் 395:
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் 
கடையரே கல்லா தவர்.

பொருள்:
செல்வந்தர் முன் வறியவர் போல் கற்றவர் முன் பணிந்து நின்று கல்வி கற்பவரே உயர்ந்தவர். கல்லாதவர் தாழ்ந்தவராகக் கருதப்படுவார்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

             அறத்துப்பால்                                                                           காமத்துப்பால் 

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...