Saturday, April 30, 2022

577. புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே!

"என்ன புலவரே! நீண்ட காலமாக உங்களைக் காணமுடியவில்லையே" என்றார் அமைச்சர்.

"உங்களுக்குக் கண் இருக்கிறது. அதனால் என்னைக் காணமுடியவில்லை என்று உணர்கிறீர்கள். கண் இல்லாவிட்டால் இந்தப் பிரச்னையே இருக்காதே!" என்றார் புலவர்..

"உங்களின் பூடகப் பேச்சைப் புரிந்து கொள்ளும் புலமை எனக்கு இல்லை. ஆனால் பழைய மன்னர் மறைந்து அவர் புதல்வர் பதவியேற்றபிறகு உங்களைக் காணவில்லை என்பது மட்டும் உண்மைதானே!"

ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்ட புலவர், "உண்மைதான். மறைந்து போன மன்னரை நீங்கள் குறிப்பிட்டதும் என் கண்கள் தானாக மூடிக் கொள்கின்றன. கண்ணுக்குள் நீர் பெருகுகிறது. எப்படிப்பட்ட மனிதர் அவர்! கண்பார்வை இல்லாதவராக இருந்தும் கண்ணோட்டம் என்ற பண்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவராயிற்றே அவர்!" என்றார் புலவர் 

"ஆனால் இப்போது அரசராக இருக்கும் அவருடைய புதல்வர் கண்ணோட்டம் என்ற குணம் அறவே இன்றி இரக்கமில்லாதவராக நடந்து கொள்கிறார் என்கிறீர்களா?" என்றார் அமைச்சர் சிரித்தபடியே.

"ஐயோ! நான் எங்கே அப்படிச் சொன்னேன்?" என்றார் புலவர் பதட்டத்துடன்.

"பயப்படாதீர்கள். இங்கே நம் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை. நாம் இருவரும் நண்பர்கள். நமக்குள் நெருக்கமாக, வெளிப்படையாகப் பேசிக் கொள்வதில் என்ன தவறு?

"அது சரிதான். ஆயினும் நீங்கள் அதிகாரம் உள்ள அமைச்சர். நான் ஒரு ஏழைப் புலவன். என்னால் எப்படி சுதந்திரமாகப் பேச முடியும்?"

"புலவர்களால் பூடகமாகப் பாடலில் பல கருத்துக்களைச் சொல்ல முடியுமே! பல புலவர்கள் அப்படிச் சொல்லி இருக்கிறார்களே!"

"அப்படிச் சொல்லி என்ன பயன்? மன்னர் தன் இயல்பை மாற்றிக் கொண்டு கருணை உள்ளம் கொண்டவராக மாறி விடப் போகிறாரா என்ன? தந்தையின் நல்ல குணம் தனயனுக்கு இல்லாமல் போவது ஒன்றும் புதிதல்லவே? திருதராஷ்டிரர் கண்ணோட்டம் உள்ளவராகத்தான் இருந்தார். ஆனால் அவர் மகன் துரியோதனனிடம் கண்ணோட்டம் என்ற குணம் அறவே இல்லையே?"

"திருதராஷ்டிரர் கண்ணோட்டம் உள்ளவராக இருந்தார் என்றா சொல்கிறீர்கள்? துரியோதனன் பாண்டவர்களை அரக்கு மாளிகைக்குள் வைத்து எரித்துக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறான் என்று தெரிந்தும் பாண்டவர்களை ஏமாற்றி அங்கே அனுப்பியவர் அவர். கண்ணோட்டம் இருந்திருந்தால் அப்படிச் செய்திருப்பாரா அவர்?"

"அப்படியானால் துரியோதனனனை விட திருதராஷ்டரன் அதிகக் கண்ணோட்டம் கொண்டிருந்தார் என்று சொல்லலாமா?"

"அப்படி வேண்டுமானால் சொல்லலாம்!" என்றார் அமைச்சர்.

"அமைச்சரே! உங்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் ஒரு பாடல் எழுத எனக்கு ஒரு யோசனை தோன்றி இருக்கிறது!" என்றார் புலவர் உற்சாகத்துடன்.

"மகிழ்ச்சி! ஆனால் நீங்கள் எழுதிய பாடலுக்கு மன்னர் பரிசளித்ததும் அதில் பாதியை எனக்குக் கொடுத்து விடுங்கள்!"

"பரிசு கொடுத்தால் சரி. கசையடிகள் கொடுத்தால்..?"

"அவற்றை நீங்களே முழுவதாகப் பெற்றுக் கொள்ளலாம். எனக்கு எந்த மறுப்பும் இல்லை! வேடிக்கை இருக்கட்டும். என்ன பாடல் எழுதப் போகிறீர்கள்? என்னிடம் சொல்லலாம் அல்லவா?"

"நிச்சயம். உங்கள் ஒப்புதலைப் பெற்ற பிறகுதானே பாடலை அரசவையில் படிக்கப் போகிறேன்!"

"சரி. சொல்லுங்கள்!" என்றார் அமைச்சர்.

"நாம் திருதராஷ்டிரர், துரியோதனனைப் பற்றிப் பேசியதும் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. கண்ணோட்டம் என்பது கண்ணின் இயல்பு. ஒருவரின் துயரத்தைக் கண் பார்க்கும்போது  கண் இரக்க உணர்வை வெளிப்படுத்தும். இதுதான் இயல்பு. அதானல்தான் இரக்க குணத்துக்குக் கண்ணோட்டம் என்ற பெயரே வந்தது என்று நினைக்கிறேன். சரி. ஒருவருக்குக் கண் இருந்தால் கண்ணோட்டம் இருக்க வேண்டும். இரக்கம் இல்லாவிட்டால் அவரைக் கண் இல்லாதவர் என்று சொல்வோம். துன்பப்படும் ஒருவர் கடவுளைப் பார்த்து, 'கடவுளே! உனக்குக் கண் இல்லையா?' என்று கேட்பதில்லையா?

"ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இப்படியா இருக்கிறது? கண் பார்வை பெற்றிருந்த துரியோதனனை விடக் கண்பார்வை இல்லாத அவன் தந்தை திருதராஷ்டிரனிடம் கண்ணோட்டம் அதிகமாக இருந்தது. இது மகாபாரதக் கதை. ராமாயணத்தில் சிரவணகுமாரனின் கதை வருகிறது, கண் பார்வை இல்லாத தன் தாய் தந்தை இருவரையும் தன் தோளில் சுமந்து சென்று காப்பாற்றியவன் அவன். அவன் ஒருமுறை ஒரு குளத்திலிருந்து குடத்தில் தண்ணீர் மொள்ளும் சத்தத்தைத் தொலைவிலிருந்து கேட்ட தசரத சக்கரவர்த்தி அந்தச் சத்தத்தை ஒரு யானை துதிக்கையால் நீரை அள்ளும் சத்தம் என்று நினைத்து அம்பு விட்டு அவனைக் கொன்று விட்டார். 

"தன் தவறை உணர்ந்த தசரதர் சிரவணகுமாரனின் பெற்றோரிடம் தான் செய்த தவறைக் கூறி மன்னிப்பு கேட்டபோது முனிவரான அவன் தந்தை சந்தனு கண்ணோட்டம் எனும் தன் குணத்தை ஒரு கணம் இழந்து தசரதரும் தன்னைப் போல் மகனை இழந்த துயரத்தைப் பெற்று மாள வேண்டும் என்று சாபம் கொடுத்து விட்டார்.

"எனவே தந்தை-மகன் என்று எடுத்துக் கொண்டால் கண்பார்வை இல்லாத தந்தை திருதராஷ்டிரன் கண்பார்வை உள்ள மகன் துரியோதனனை விட அதிகக் கண்ணோட்டம் உள்ளவர். கண்பார்வை உள்ள சிரவணகுமாரன் கண்பார்வை இல்லாத தந்தை சந்தனுவை விட அதிகக் கண்ணோட்டம் உள்ளவன். நம் நாட்டிலோ கண்பார்வை உள்ள இன்றைய மன்னரை விட கண்பார்வை இல்லாத அவருடைய தந்தை அதிகக் கண்ணோட்டம் உள்ளவர். ஆயினும் கண்ணோட்டம் என்பது கண்வழி வருவது என்றுதான் கூறப்படுகிறது. இதுதான் என் கவிதை. எப்படி இருக்கிறது?" 

"கவிதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதை மன்னர் முன்னால் துணிவாகச் சொல்லப் போகிறீர்களா?" என்றார் அமைச்சர் வியப்புடன்.

"ஏன், உண்மையைத்தானே சொல்லப் போகிறேன்? அதுவும் மன்னரைப் பற்றி நான் எதுவும் குறைவாகச் சொல்லவில்லையே! அவரை விட அவர் தந்தை அதிகக் கண்ணோட்டம் உள்ளவர் என்றுதானே சொல்லப் போகிறேன்?" என்றார் புலவர். 

அமைச்சர் மௌனமாக இருந்தார்.

"புலவரே! கடைசியில் பொய் சொல்லிப் பரிசு வாங்கி விட்டீர்களே!"என்றார் அமைச்சர் புலவரிடம், சற்றே கோபத்துடன்.

"என்ன பொய் சொன்னேன்?"

"நீங்கள் என்னிடம் சொன்ன கவிதை வேறு, மன்னர் முன்னிலையில் படித்த கவிதை வேறு. நீங்கள் படித்த கவிதையில் மன்னர் அவர் தந்தை இருவரில் தந்தையை விட மகன் அதிகக் கண்ணோட்டம் உள்ளவர் என்று மாற்றிச் சொல்லி விட்டீர்களே!"

"அது மற்றவர்கள் புரிந்து கொண்ட பொருள். நான் சொன்ன பொருள் மகனை விடத் தந்தை அதிகக் கண்ணோடம் உள்ளவர் என்பதுதான்?" என்றார் புலவர் சிரித்தபடியே!

"அது எப்படி?" என்றார் அமைச்சர் வியப்புடன்.

"அமைச்சரே! நான் ஏன் தமிழில் கவிதை பாடாமல் சம்ஸ்கிருதத்தில் பாடினேன் என்று யோசித்தீர்களா?"

"எனக்கு அது சற்று வியப்பாகத்தான் இருந்தது. ஆனால் நீங்கள் தமிழ், வடமொழி இரண்டிலும் புலமை பெற்றவர் என்பதால் அதைப் பற்றி நான் பெரிதாக நினைக்கவில்லை."

"அமைச்சரே! சம்ஸ்கிருதத்தில் தாத என்ற சொல்லுக்கு தந்தை என்றும் பொருள் உண்டு, மகன் என்றும் பொருள் உண்டு. நான் 'தாத' என்று தந்தையைத்தான் குறிப்பிட்டேன். ஆனால் அவையில் இருந்த வடமொழி அறிந்தவர்கள் மன்னருக்கு பயந்து 'தாத' என்பதற்கு மகன் என்று பொருள் கூறி மகன் அதிகக் கண்ணோட்டம் உள்ளவர் என்று நான் கூறி இருப்பதாகப் பொருள் கூறி விட்டார்கள்!" என்றார் புலவர்  புன்சிரிப்புடன்.

"நீங்கள் உண்மையாகவே இரட்டைமொழிப் புலவர்தான்!" என்றார் அமைச்சர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம், தயை, தாட்சண்யம்)

குறள் 577:
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்..

பொருள்: 
கண்ணோட்டம் (இரக்கம்) இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

576. ஒரு வாரம் அவகாசம்

சபாபதியைச் சந்திக்க குருசாமி சென்றபோது தன் வியாபாரத்தில் புதிதாக பார்ட்னராகச் சேர்ந்திருந்த கண்ணனையும் அழைத்துச் சென்றிருந்தார்.

"அதான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கேனே, அப்புறம் எதுக்கு என்னைப் பாக்க வந்தீங்க?" என்று கடுமையான குரலில் கேட்ட சபாபதி, கண்ணனைப் பார்த்து, "இவரு யாரு?" என்றார், எச்சரிக்கை உணர்வுடன்.

"இவரு கண்ணன். என்னோட பார்ட்னர்" என்றார் குருசாமி.

கண்ணன் தனக்கு வணக்கம் தெரிவித்ததைக் கண்டுகொள்ளாத சபாபதி, "புதுசா இவரை பார்ட்னரா எடுத்துக்கிட்டிருக்கீங்களா? அப்ப இவர் போடற முதலை வச்சு என் கடனை அடைக்கிறேன்னு சொல்லத்தான் வந்திருக்கீங்களா? சந்தோஷம். எப்ப பணம் கிடைக்கும்?" என்றார் குருசாமியிடம்.

"இல்ல. இவர் முதல் போடல. ஒர்க்கிங் பார்ட்னராத்தான் சேந்திருக்காரு. நிறைய அனுபவம் உள்ளவர். நிறைய யோசனைகள் வச்சிருக்காரு. அவர் யோசனைகளைப் பயன்படுத்தி சீக்கிரமே தொழிலை இன்னும் நல்ல நிலைக்குக் கொண்டு வரப் போறோம்."

"சந்தோஷம். என் கடனை அடைக்க ஏதாவது யோசனை இருக்கா இவர்கிட்ட?" என்றார் சபாபதி கேலியாக.

அவர் கேலியை அலட்சியம் செய்த குருசாமி, "சார்! உங்ககிட்ட நான் எவ்வளவோ வருஷமா வியாபாரத் தொடர்பு வச்சுக்கிட்டிருக்கேன்!" என்றார் .

"வியாபாரத் தொடர்பு இல்ல குருசாமி! நீங்க வியாபாரம் செய்யறீங்க. நான் கடன் கொடுக்கறேன். அவ்வளவுதான்!" என்றார் சபாபதி கடுமையான குரலில்.

";நான் சொல்ல வந்தது உங்ககிட்ட நான் எத்தனையோ தடவை கடன் வாங்கி தவறாம வட்டி கொடுத்துக்கிட்டு வந்திருக்கேன். அதை நேரத்தில திருப்பிக் கொடுத்திருக்கேன்..."

"இல்லை. ஒரு தடவை கூட நேரத்தில திருப்பிக் கொடுத்ததில்ல" என்று இடைமறித்தார் சபாபதி.

"தாமதமானப்ப அதுக்கு அதிக வட்டி கொடுத்திருக்கேன்."

"கடன் பத்திரத்தில அப்படித்தானே சொல்லி இருக்கு. அதன்படி நீங்க அதிக வட்டி கொடுத்துத்தானே ஆகணும். என்னவோ நீங்களா விருப்பப்பட்டுக் கொடுத்த மாதிரி பேசறீங்க!"

"சார்! நான் சொல்ல வந்தது, இத்தனை வருஷமா நமக்குள்ள இந்த வியாபாரம், அதாவது இந்தக் கொடுக்கல் வாங்கல் சரியாத்தான் நடந்திருக்கு. உங்க பணம் பாதுகாப்பாத்தான் இருந்திருக்கு. ஆனா இந்த தடவை கொஞ்சம் தாமதமானதுக்கு நான் செக்யூரிட்டியாக் கொடுத்த என்னோட வீட்டை அட்டாச் பண்றதுக்கு கோர்ட்ல கேஸ் போடப் போறதா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கீங்க. தயவு செஞ்சு அப்படி எதுவும் செஞ்சுடாதீங்க. இன்னும் ரெண்டு மாசத்தில உங்க பணத்தை நான் முழுசா செட்டில் பண்ணிடறேன்" என்றார் குருசாமி கெஞ்சும் குரலில்.

"ரெண்டு மாசத்துக்குள்ள கோர்ட்ல அட்டாச்மென்ட் ஆர்டர் வாங்கிடலாம்னு என் வக்கீல் சொல்லி இருக்கார். உங்களுக்கு ஒரு வாரம் டைம் கொடுக்கறேன். அதுக்குள்ள பணத்தை அன்னிவரைக்கும் வட்டியோட செட்டில் பண்ணிடுங்க. இல்லேன்னா கோர்ட்ல கேஸ் போட்டுடுவேன். உங்ககிட்ட மேற்கொண்டு பேசறதுக்கு எதுவும் இல்ல. நீங்க கிளம்பலாம்!" என்றார் சபாபதி உறுதியான குரலில்.

வெளியே வந்ததும், "நீங்க இவ்வளவு நேரம் இவர்கிட்ட பேசினதுக்கு ஒரு மரத்துக்கு முன்னால நின்னு பேசி இருந்தா அது கூட கொஞ்சம் அஞைஞ்சு கொடுத்திருக்கும்!" என்றார் கண்ணன், குருசாமியிடம்.

"அது சரி. ஆனா, நீங்க என் கூட வந்தீங்க, அவர் முகத்தையே பாத்துக்கிட்டிருந்தீங்க! ஆனா எதுவுமே பேசலையே?" என்றார் குருசாமி.

"அவரு என்னை ஒரு பொருட்டாவே மதிக்கல. அவர்கிட்ட நான் என்னத்தைப் பேசறது?  இவ்வளவு நாள் பழகி இருக்கீங்க, வாங்கின கடனையெல்லாம் வட்டியோட திருப்பிக் கொடுத்திருக்கீங்க. உங்க வீட்டை வேற செப்யூரிட்டியா கொடுத்திருக்கீங்க. உங்களுக்கு ரெண்டு மாசம் அவகாசம் கூடக் கொடுக்க மாட்டேன்னுட்டாரு. ஏன், ரெண்டு மாசம் பொறுத்துக்கறேன், அதுக்குள்ள நீங்க கடனைத் திருப்பிக் கொடுக்கலேன்னா கோர்ட்டுக்குப் போவேன்னு சொல்லி இருக்கலாமே!" என்றார் கண்ணன்.

"என்னைப் பத்தி அவருக்கு நல்லாத் தெரியும். கொஞ்சமாவது இரக்கம் காட்டுவாருன்னு நினைச்சேன்."

"அவரால அது முடியாது!" என்றார் கண்ணன்.

"முடியாதா? ஏன் அப்படிச் சொல்றீங்க?" என்றார் குருசாமி சற்று வியப்புடன்.

"ஏன்னா அவர்கிட்ட இரக்கம் என்கிற குணமே அடியோட இல்ல. அவர் முகத்தையே பாத்துக்கிட்டிருந்தேன்னு சொன்னீங்களே, அவர் கண்ணைத்தான் பாத்துக்கிட்டிருந்தேன். அவர் கண்ல இரக்கத்தோட சாயை கொஞ்சம் கூட இல்லை. அதனால அவர்கிட்ட பேசிப் பயன் இருக்காதுன்னுதான் நான் பேசாம இருந்தேன். கவலைப்படாதீங்க. ஏதாவது ஏற்பாடு செய்யலாம்" என்றார் கண்ணன். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம், தயை, தாட்சண்யம்)

குறள் 576:
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.

பொருள்: 
ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Tuesday, April 26, 2022

785. நான் அனுப்புவது கடிதம் அல்ல , உள்ளம்!

அந்த ஆங்கில வார இதழில் "பேனா நண்பர்கள் தேவை" பகுதியில் ராமு தன் பெயரைக் கொடுத்தது ஒரு ஆர்வத்தில்தான்.  

ஆனால் அதற்கு இத்தனை பதில்கள் வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

அடுத்த இரண்டு வாரங்களில் அவனுடன் பேனா நண்பராக இருக்க விரும்பி நூறுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்தன. கடிதம் எழுதியவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் தனக்கு ஏற்ற நண்பர்களாக இருக்க மாட்டார்கள் என்று கருதி சுமார் பத்து நபர்களுக்கு மட்டும் ராமு பதிலளித்தான்..

அந்த பத்து பேரில் ஏழு பேருடனான கடிதத் தொடர்பு இரண்டு மூன்று மாதங்களுக்குள் நின்று விட்டது. மீதமிருந்த மூவர் - டெல்லியைச் சேர்ந்த வீர் சிங், நாக்பூரைச் சேர்ந்த தாமோதரன், மற்றும் பெங்களூரைச் சேர்ந்த கவிதா.

அவர்களுக்குள் வீர் சிங்குடன் ராமு பல விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டி இருந்தது. தீவிரமான கருத்து வேறுபாடுகளுக்கிடையேயும், இருவரும் நட்புடனேயே விவாதித்து வந்தனர்.

தாமோதரனுடன் பல ஒத்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சி ராமுவுக்கு ஏற்பட்டது.

ஆனால் கவிதா விஷயத்தில் அவன் அனுபவம் வேறு விதமாக இருந்தது

அவர்கள் இருவரும் பொது விஷயங்கள் பற்றி விவாதிப்பதில்லை. தங்கள் குடும்ப விஷயம் பற்றியும் எழுதுவதில்லை. கவிதாவுக்குத் திருமணம் ஆகவில்லை என்பது மட்டுமே அவனுக்குத் தெரியும்.

முதல் கடிதத்திலேயே, "எனக்கு பேனா நண்பர்கள் என்று யாரும் கிடையாது. நண்பர்கள் என்றே அதிகம் இல்லை. ஆனால் உங்கள் விவரங்களைப் பார்த்ததும் உங்களுடன் பேனா நட்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. உங்களுடன் பல விஷயங்களைப் பேசும் அளவுக்கு அறிவோ, ஆர்வமோ, படிப்போ எனக்குக் கிடையாது. என்னைச் சுற்றி நடப்பவைகளை கவனிப்பது மட்டுமே என் படிப்பு, பொழுதுபோக்கு எல்லாம். என் 'போரை' சகித்துக் கொள்ள முடியுமானால் பதில் போடுங்கள். எனக்குத் தமிழ் தெரியாது. உங்களுக்குக் கன்னடம் தெரிந்திருக்காது. எனக்கு ஆங்கிலம் சுமாராகத்தான் தெரியும்!" என்று எளிமையான ஆங்கிலத்தில் அவள் எழுதி இருந்தாள்.

கவிதாவின் கடிதத்தில்  இருந்த எளிமையும், வெளிப்படைத் தன்மையும் ராமுவுக்கு உடனடியாக ஒரு ஈர்ப்பை ஏற்டுத்தின.

"நீங்கள் 'போர்' அடிப்பவரா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் என்னைப் போன்ற 'போர்' இந்த உலகத்தில் இருக்க முடியாது என்பது என் நண்பர்களின் ஒருமித்த கருத்து. நாம் இருவரும் சேர்ந்து 'போர்' அடிப்போம். தமிழில் 'போர்' அடிப்பது என்றால் அறுக்கப்பட்ட கதிர்களைக் கம்பால் அடித்து தானியமணிகளை உதிரச் செய்வது என்று பொருள். நாம் இருவரும் சேர்ந்து 'போர'டித்தாலும் அதுபோல் நன்மை எதுவம் ஏற்படலாம்!" என்று பதில் எழுதினான் ராமு.

அதற்குப் பிறகு ஒரு மாதம் கழித்துத்தான் கவிதாவிடமிருந்து கடிதம் வந்தது. "நான் எப்போதாவதுதான் எழுதுவேன். நான் ஒரு சோம்பேறி. எழுதுவதற்கே எனக்கு சோம்பலாக இருக்கும். நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்தவர்கள் தொலைபேசி வைத்துக் கொள்ளும் காலம் எப்போது வரும் என்று தெரியவில்லை" என்று எழுதி இருந்தாள்.

கவிதாவிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதே ராமுவுக்கு ஒரு மகிழ்ச்சியும், ஏக்கமும் கலந்த அனுபவமாக இருந்தது. அவளிடமிருந்து கடிதம் வந்ததும் அதற்கு உடனே பதில் எழுதி விட்டு அவள் பதில் வருவதற்காக தினமும் காத்திருப்பான்.

ராமு ஒருமுறை பெங்களூருக்குச் செல்ல வேண்டி இருந்தது. அப்போது அவளை நேரில் சந்திக்க முடியுமா என்று கேட்டு அவளுக்கு எழுதி இருந்தான். தனக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதால் அவன் அப்போது தன் வீட்டுக்கு வந்து தன்னைச் சந்திப்பது பொருத்தமாக இருக்காது என்று அவள் உடனே பதில் போட்டு விட்டாள்.

அதற்குப் பிறகு பல மாதங்கள் கவிதவிடமிருந்து கடிதமே வரவில்லை. ராமு எழுதிய இண்டு மூன்று கடிதங்களுக்கும் பதில் வரவில்லை. அவளுக்குத் திருமணம் நடந்திருக்குமோ, திருமணத்துக்குப் பிறகு ஒரு ஆணுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொள்வது சரியாக இருக்காது என்பதால்தான் அவள் தனக்குக் கடிதம் எழுதவில்லையோ என்று அவன் குழம்பிக் கொண்டிருந்தான்.

இதற்கிடையில் ராமுவுக்குத் திருமணம் நிச்சயமாகியது. தன் திருமணப் பத்திரிகையைக் கவிதாவுக்கு அனுப்பி, அதனுடன் அனுப்பிய கடிதத்தில் தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணின் பெயரும் கவிதாதான் என்ற ஒற்றுமையைக் குறிப்பிட்டு அவளைத் தன் திருமணத்துக்கு வரும்படியும் அழைத்திருந்தான் அவன்.

திருமணத்தன்று கவிதாவிடமிருந்து ஒரு வாழ்த்துத் தந்தி மட்டும் வந்தது.  

திருமணமாகி சில நாட்களுக்குப் பிறகு தன் மனைவியிடம் தனக்குக் கவிதா என்ற பேனா நண்பர் இருப்பதைச் சொல்லி அவளுடைய கடிதங்களைக் காட்டினான்.

"நீங்க எழுதின கடிதங்களைப் படிச்சசாத்தானே நீங்க எப்படியெல்லாம் வழிஞ்சிருக்கீங்கன்னு தெரியும்?" என்று அவனைச் சீண்டிய அவன் மனைவி கவிதா சில கடிதங்களை மட்டும் படித்துப் பார்த்து விட்டு, "அவங்க சொன்ன மாதிரி நீங்க ரெண்டு பேரும் சரியான 'போர்'தான். சாலையில போற ஆடுமாடையெல்லாம் பத்தி எழுதி இருக்காங்க! இதில கொஞ்சம் கூட ரொமான்ஸுக்கு ஸ்கோப்பே இல்லையே, டார்லிங்!" என்றாள் சிரித்துக் கொண்டே.

தனக்குக் கிடைத்த பண்புள்ள, நல்ல இயல்புள்ள, நட்பான மனைவியைப் போல் கவிதாவுக்கும் ஒரு கணவன் கிடைக்க வேண்டும் என்று அப்போது நினைத்தான் ராமு.

சில மாதங்களுக்குப் பிறகு கவிதாவிடமிருந்து ஒரு திருமண அழைப்பு வந்தது. அத்துடன் இணைக்கப்பட்ட துண்டுக் காகிதத்தில் 'அங்கிருந்தே வாழ்த்துங்கள்!' என்ற ஒரு வரி மட்டும் இருந்தது.

கவிதாவின் திருமணத்துக்குத் தான் வருவதை அவள் விரும்பவில்லை என்பது ராமுவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், அவளுடைய குடும்பத்தினர் பழமையான சிந்தனைகளைக் கொண்டவர்களாக இருக்கக் கூடும் என்று நினைத்துச் சமாதானமடைந்தான். 

திருமணத்துக்குப் பிறகு கவிதாவிடமிருந்து கடிதங்கள் வருவது மிகவும் குறைந்து விட்டது - ஆறேழு மாதங்களுக்கு ஒருமுறை என்று. அவற்றிலும் தன் கணவன் பற்றியோ, குடும்ப வாழ்க்கை பற்றியோ எதுவும் இல்லை. அவன் மனைவியைப் பற்றிய விசாரிப்புகளும் இல்லை. தான் பார்த்து ரசித்தவை, வியந்தவை, வருந்தியவை, கோபப்பட்டவை என்று தன் எண்ணங்களை மட்டுமே பகிர்ந்து கொண்ட கடிதங்களாகவே அவை இருந்தன. அத்தகைய தன் எண்ணங்களை இந்த உலகத்தில் அவனிடம் மட்டும்தான் தன்னால் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற அவள் உள்ளுணர்வும்  அந்தக் கடிதங்களில்  ஒளிந்திருந்ததாக அவனுக்குத் தோன்றியது.

"இந்தச் செய்தியைப் பாருங்க!" என்றாள் அவன் மனைவி கவிதா, அவனிடம் பத்திரிகையின் ஒரு பக்கத்தைப் பிரித்துக் காட்டியபடி.

இறப்புச் செய்திகளைத் தாங்கி வந்திருந்த அந்தப் பக்கத்தில் கவிதா விரல் வைத்துக் காட்டிய இடத்தில் கவிதா என்ற நபர் பெங்களூரில் இறந்து விட்டதாகச் செய்தி வெளியாகி இருந்தது. ராமு புகைப்படத்தைப் பார்த்தான். பத்து வருடங்களுக்கு முன் அவர்கள் பேனா நட்பு துவங்கிய சமயத்தில் அவள் அனுப்பியிருந்த புகைப்படம் மனதில் வந்து போனது. பத்தாண்டுகளின் மாற்றங்கள் பத்திரிகையில் வந்த புகைப்படத்தின் முகத்தில் பிரதிபலித்தாலும், அது அவள் - அவனுடைய சிநேகிதி கவிதாவின் முகம்தான் எனபதில் அவனுக்கு ஐயமில்லை.

என்ன ஆயிற்று கவிதாவுக்கு. வயது நாற்பதுக்குள்தானே இருக்கும்? என்ன உடம்பு?

தெரியவில்லை. 

அவன் கண்கள் ஓரத்தில் கண்ணீர்த் துளிகள் உற்பத்தியாகத் தொடங்கின. தொண்டையை ஏதோ அடைப்பது போல் இருந்தது.

"இவ்வளவு நல்ல சிநேகிதி கிடைச்சதுக்கு நீங்க ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும்!" என்றாள் அவன் மனைவி கவிதா, அவன் தோளில் கை வைத்து இலேசாக அழுத்தியபடி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு 

குறள் 785:
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்..

பொருள்: 
நட்பு நிலவுவதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்..
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Monday, April 25, 2022

575. 'கல்வி வள்ளல்'

'கல்வி வள்ளல்' துரைசாமியின் மணிவிழாவில் அவரை எல்லோரும் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தனர்.

"கல்வியைத் தன் கண்ணாகக் கருதிப் போற்றுபவர் துரைசாமி."

"ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் அவருக்குக் கல்விக்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை. தனக்குக் கிடைக்காத வாய்ப்பு மற்ற ஏழைக் குழந்தைக்கும் கிடைக்காமல் போகக் கூடாது என்பதற்காகவே பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார் அவர்!"

கூட்டத்தில் பின்வரிசையில் அமர்ந்திருந்த கருணாகரன்,"பொய் சொல்றத்துக்கும் ஒரு அளவு இல்ல?" என்று முணுமுணுத்தது அவர் அருகில் அமர்ந்திருந்த ரமணனுக்குக் கேட்டிருக்க வேண்டும். அவர் மெதுவாகச் சிரித்தார். பிறகு கருணாகரனிடம் திரும்பி, "சார்! வரீங்களா? கொஞ்சம் வெளியில போய் நின்னுட்டு வரலாம்" என்றார்.

கருணாகரன் தலையாட்டி விட்டு அவருடன் எழுந்து வெளியில் வந்தார்.

"என்னதான் உள்ளே ஏசி இருந்தாலும் திறந்த வெளியில வர காற்றோட சுகமே தனிதான்!" என்றார் ரமணன். 

"என்ன சார் இப்படிப் புளுகறாங்க? அவரு கேக்கற நன்கொடையில ஒரு ரூபா குறைஞ்சா கூட அட்மிஷன் கொடுக்க மாட்டாரு. அவரு ஏழைகளுக்குக் கல்வி கிடைக்கணுங்கறதுக்காக கல்வி நிறுவனங்கள் தொடங்கி நடத்தறாராம்! என் பையனுக்கே டொனேஷன், கல்விக் கட்டணம் தவிர, இந்தக் கட்டணம், அந்தக் கட்டணம்னு ஏகப்பட்ட பணம் கொடுத்திருக்கேன். இந்த விழா நடத்தறதுக்குக் கூட மாணவர்களோட பெற்றோர்கள்கிட்ட பணம் வசூலிச்சதோட கூட்டம் வரணுங்கறதுக்காக பெற்றோர்கள் விழாவில கலந்துக்கணும்னு கண்டிப்பா சொல்லி இருக்காங்க!"

"உங்க பையனும், என் பையனும் நல்ல மார்க் வாங்கி இருக்காங்க. மார்க் குறைவா இருந்தா இன்னும் நிறையப் புடுங்குவாங்க. எத்தனையோ ஏழைப் பெற்றோர்கள் தங்களோட சக்திக்கு மேல கடன் வாங்கி பணம் கட்டி இருக்காங்க. மாணவர்கள்தான்னு இல்ல. ஆசிரியர்களுக்கும் இங்க கஷ்டம்தான்!" 

"அப்படியா? ஏன் சம்பளம் ஒழுங்காக் கொடுக்க மாட்டாங்களா?"

"கொடுப்பாங்க. ஆனா இவங்க பணம் வாங்கிக்கிட்டு சேத்துக்கற பையன்களை ஆசிரியர்கள் எப்படியாவது கஷ்டப்பட்டு பாஸ் பண்ண வைக்கணும். இல்லேன்னா அவங்களுக்கு வேலை போயிடும். அதுக்கு பயந்துகிட்டு ஆசிரியர்கள் எல்லாம் குறைஞ்ச மார்க் வாங்கற பையன்களுக்கு மாலை வேளையிலேயும் சனி ஞாயிறுகளிலேயும் தனியா வகுப்பு எடுத்து பரீட்சையில எப்படியோ பாஸ் மார்க் வாங்கற அளவுக்கு கோச் பண்ணணும். ஆண்டு விடுமுறையின்போதெல்லாம் கூட ஆசிரியர்களை கல்லுரிக்கு வரவழைச்சு வேலை வாங்குவாங்க. கல்லூரி வேலை மட்டும் இல்லாம இவங்களோட மத்த கம்பெனி வேலைகளையெல்லாம் கூட செய்யச் சொல்லுவாங்களாம்!"

"அட கடவுளே! நமக்குக் கொடுமை நடக்குதுன்னு நான் நினைச்சா ஆசிரியர்களுக்கு அதுக்கு மேல கொடுமை நடக்குதே! இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"இங்கே வேலை செய்யற ஒரு பேராசிரியர் எனக்குத் தெரிஞ்சவர். அவர் எங்கிட்ட அடிக்கடி இதையெல்லாம் சொல்லிப் புலம்புவாரு."

"ஈவு இரக்கம் இல்லாத இந்த மனுஷனைக் கல்வி வள்ளல், ஏழைகளுக்குக் கல்வி கொடுக்கறதுக்குன்னே அவதரிச்சவர்னுல்லாம் அநியாயமாப் புளுகறாங்களே, இது அடுக்குமா?" என்றார் கருணாகரன் ஆற்றாமையுடன்.

"...கல்வியைத் தன் கண்களாக மதித்துப் போற்றி வருவதால்தான் நம் கல்வி வள்ளலுக்கு அவருடைய 70 வயதிலும் கண்ணாடி போட்டுக் கொள்ளத் தேவை இல்லாத அளவுக்குக் கண்பார்வை கூர்மையாக இருக்கிறது..."

'கல்வி வள்ளலைப்' புகழ்ந்து பேசப்பட்ட பேச்சுக்கள் ஒலிபெருக்கியில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தன. 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம், தயை, தாட்சண்யம்)

குறள் 575:
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.

பொருள்: 
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாக இருப்பது கண்ணோட்டம் (இரக்கம், கருணை) என்னும் பண்பே, அது இல்லையானால் அது கண் என்று கருதப்படாமல் புண் என்றே கருதப்படும்.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Sunday, April 24, 2022

574. மீனாட்சியின் எஜமானி!

"என்னத்தைப் பெருக்கற? அந்த மூலையில அழுக்கு அப்படியே இருக்கு பாரு!" என்றாள் கயல்விழி.

வேலைக்காரி மீனாட்சி எஜமானி காட்டிய இடத்தைப் பார்த்தாள். அங்கே அழுக்கு எதுவும் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. ஆயினும் எஜமானி சொன்னதற்காக அந்த இடத்தை இன்னொரு முறை பெருக்கி விட்டு வந்தாள்.

பெருக்கி முடித்ததும், "அம்மா! எனக்கு முதுகுவலி ரொம்ப அதிகமா இருக்கு. அதனால நாளைக்குத் துடைச்சுடறேனே!" என்றாள்.

"பெருக்கிட்டுத் துடைக்காம இருந்தா எப்படி? தினமும் துடைச்சாதான் தரை பளபளப்பா இருக்கும்? உனக்கு முதுகுவலி எப்பவும்தான் இருக்கு. நாளைக்கு மட்டும் இருக்காதுன்னு என்ன நிச்சயம்?"

ஏன் கேட்டோம் என்று நினைத்துக் கொண்டே துடைப்பதற்காகத் தண்ணீரையும் மாப்பையும் எடுக்க ஆயத்தமானாள் மீனாட்சி.

"நான் அஞ்சாறு வீட்டில வேலை செய்யறேன். இதுக்கு முன்னாலேயும் பல வீடுகள்ள வேலை செஞ்சிருக்கேன். ஆனா இந்தக் கயல்விழி மாதிரி இரக்கம் இல்லாத ஒரு மனுஷியை நான் பார்த்தில்ல!" என்றாள் மீனாட்சி தன் தோழி ராணியுடம்.

மீனாட்சியும், ராணியும் ஒன்றாக வளர்ந்தவர்கள்தான். சிறுமியாக இருந்தபோதே தன் அம்மாவுக்குத் துணையாக வீட்டு வேலையில் இறங்கிய மீனாட்சி அம்மாவுக்கு உடம்பு முடியாமல் போனதும், படிப்பை நிறுத்தி விட்டு வீட்டு வேலை செய்வதையே தன் முழு நேர வேலையாக ஆக்கிக் கொண்டு விட்டாள். 

ஆனால் ராணி பட்டப்படிப்பு முடித்து விட்டு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தாள். இருவரும் அருகாமையில் வசிப்பதால் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வார்கள்.

"கயல்விழியா? பேரு வித்தியாசமா இருக்கே! அவங்க அப்பா ஒரு தமிழ்ப் பிரியரா இருந்திருப்பார் போலருக்கு!" என்றாள் ராணி.

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அவங்க பேரு சிவகாமி. அவங்க கண் அழகில மயங்கிதான் அவங்க கணவர் அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்! அவங்க கண்ணு மீன் மாதிரி இருக்குன்னுட்டு அவங்க கணவர் அவங்களை செல்லமா கயல்விழின்னு கூப்பிடுவாராம். அதை யாரோ கேட்டுட்டு கலாட்டா பண்றதுக்காக அவங்களை கயல்விழின்னு கூப்பிட, அந்தப் பேரு பரவி எல்லாரும் அவங்களைக் கயல்விழின்னே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்களாம். அதனால அந்தப் பேரே அவங்களுக்கு நிலைச்சுட்டுதாம். இதை அவங்க அவங்களோட சிநேகிதிகிட்ட ஒருநாள் சொல்லிக்கிட்டிருந்தாங்க. என் காதில விழுந்தது" என்றாள் மீனாட்சி.

"ஒத்தரோட அன்பு, இரக்கம் எல்லாம் அவங்க கண்லேயே தெரியும்னு சொல்லுவாங்க. கண்ணதாசன் கூட 'கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்'னு ஒரு பாட்டு எழுதி இருக்காரு. கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாத இவங்களுக்குக் கண் அழகா இருந்தா என்ன, வேற எப்படி இருந்தா என்ன?" 

"அது என்னவோ சரிதான். அவங்க கண்ணு அழகாத்தான் இருக்கும். ஆனா அவங்க இரக்கம் இல்லாம நடந்துக்கும்போது அவங்க கண்ணைப் பாத்தா, 'இவ்வளவு அழகா இருக்கற கண்ல துளி கூட ஈவு இரக்கம் இல்லையேன்னு எனக்குத் தோணும்!" என்றாள் மீனாட்சி,

"ஒண்ணு தெரியுமா மீனாட்சி! நீயும்  ஒரு கயல்விழிதான்!" என்றாள் ராணி.

"என்னடி? நானும் ஈவு இரக்கம் இல்லாதவன்னு சொல்றியா?" 

"அப்படிச் சொல்லலடி. மீனாட்சிங்கறது வடமொழிப் பேரு, அதைத் தமிழ்ல சொன்னா அதுதான் கயல்விழி!" என்று சொல்லிச் சிரித்தாள் ராணி.

"என்னவோ, எனக்கென்ன தெரியும்? நான் உன்னை மாதிரி படிச்சிருக்கேனா என்ன? படிச்சிருந்தா ஏன் இது மாதிரி ஈவு இரக்கம் இல்லாத ஜன்மங்ககிட்ட மாட்டிக்கிட்டுக் கஷ்டப்படப் போறேன்!" என்றாள் மீனாட்சி பெருமூச்சுடன்.                                                  

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம், தயை, தாட்சண்யம்)

குறள் 574:
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.

பொருள்: 
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோற்றமளிப்பதைத் தவிர வேறு என்ன பயன் உள்ளவை?
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Saturday, April 23, 2022

573. புதிய இசையமைப்பாளர்

"என்னய்யா மியூசிக் போட்டிருக்க? பாடல் வரிகள் சோகமா இருக்கு. உன் மியூசிக் சந்தோஷத்தில துள்ளிக் குதிக்கிற மாதிரி இருக்கு!" என்றார் இயக்குனர் கன்னியப்பன் கோபத்துடன்.

"இல்ல சார்.வேற டியூன் போட்டுடறேன்!" என்றான் நாதன், பதட்டத்துடன். முதல்முறையாக அவனுக்குத் திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்புக் கிடைத்து அவன் இசையமைத்த முதல் பாடல் அது.

"நீ என்னிக்கு வேற டியூன் போட்டு நான் எப்ப ஷூட் பண்றது?" என்று கோபமாகக் கத்திய கன்னியப்பன், தனக்கு அருகில் அமர்ந்திருந்த தயாரிப்பாளர் வேணுவிடம், "சார்! இவன் வேண்டாம். நீங்க சுந்தரையே போட்டுடுங்க!" என்றார்.

தயாரிப்பாளர் வேணு இயக்குநர் அருகில் குனிந்து, "பையன் புதுசு. அவங்கிட்ட நிறைய திறமை இருக்கு. ஆனா அனுபவம் இல்ல. இது அவனோட முதல் பாட்டு. வாய்ப்புக் கிடைச்ச உற்சாகத்தில நல்ல டியூன் போடணும்னு நினைச்சுப் போட்டிருக்கான். அதான் வேற டியூன் போடறேங்கறானே, இன்னொரு வாய்ப்புக் கொடுக்கலாம்!" என்றார் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில்.

"சார்! உங்களுக்கு இவன்தான் முக்கியம்னா வேற டைரக்டரை வச்சுப் படம் எடுத்துக்கங்க!" என்று கோபமாகக் கூறிய இயக்குனர் கன்னியப்பன் "பேக் அப்!" என்று இரைந்து கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.

வெலவெலத்துப் போய் நின்றிருந்த இசையமைப்பாளர் நாதனைப் பார்த்து, "நீ கவலைப்படாதே தம்பி! அவரு பெரிய டைரக்டர். அப்படித்தான் பேசுவார். நான் அப்புறம் அவர்கிட்ட பேசறேன். அப்படி அவர் ஒத்துக்கலேன்னா உனக்கு என் அடுத்த படத்தில வாய்ப்புக் கொடுக்கறேன். உங்கிட்ட திறமை இருக்கு. அதனால நீ நிச்சயம் முன்னுக்கு வருவே. எதுக்கும் இந்த லிரிக்ஸை வாங்கிக்கிட்டுப் போய் வேற டியூன் யோசிச்சு வை. உனக்கு இந்தப் படத்தில வாய்ப்பு இல்லாட்டாலும் உனக்குக் கொடுத்த அட்வான்ஸை நான் திரும்பக் கேக்க மாட்டேன். போயிட்டு வா!" என்றார் வேணு ஆதரவான குலில்.

நாதன் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு அங்கிருந்து அகன்றான்.

"என்னங்க இந்த டைரக்டர் உங்களையே மதிக்காம பேசறாரு!" என்றான் வேணுவின் உதவியாளன் சக்திவேல்.

"என்ன செய்யறது? அவருக்கு மார்க்கெட் இருக்கு. அந்தத் திமிர்ல பேசறாரு. என்னையே மதிக்காதவரு நாதன் மாதிரி புது ஆளுங்களையா மதிக்கப் போறாரு? பாவம் அந்தப் பையன் இவர் போட்ட கூச்சல வெலவெலத்துப் போயிட்டான். பாடல் வரிகளுக்கு இசை பொருத்தமா இல்லேன்னு சொல்றாரே, இது மாதிரி மத்தவங்க கிட்ட இரக்கமோ, கருணையோ, புரிதலோ இல்லாம நடந்துக்கிறது மனிதத் தன்மைக்குப் பொருத்தமா இருக்கான்னு இவர் ஒரு நிமிஷம் கூட யோசிக்க மாட்டேங்கறாரே!" என்றார் வேணு வருத்தத்துடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம், தயை, தாட்சண்யம்)

குறள் 573:
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்..

பொருள்: 
பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும்? அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்?
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Friday, April 22, 2022

572. அஞ்சலி!

சச்சிதானந்தம் இறந்து விட்டார். அவர் ஒரு பெரிய நிறுவனத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்.

சச்சிதானந்துக்கு அஞ்சலி செலுத்த பலர் வந்து போனார்கள். பெரும்பாலோர் வந்து அவர் உடல் அருகே சில விநாடிகள் நின்று விட்டு, அருகிலிருந்த அவர் உறவினர்களிடம் ஒன்றிரண்டு அனுதாப வார்த்தைகளைப் பேசி விட்டுப் போய் விட்டனர்.

அவர் அலுவலக ஊழியர்கள் சிலர் மட்டும் வெளியே வராந்தாவில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தனர். 

அவர்களில் சிலர் தங்களுக்குள் மெதுவான குரலில் பேசிக் கொண்டனர்.

"இருபது வருஷம் அவர்கிட்ட வேலை செஞ்சிருக்கேன். ஒரு தடவை கூட அவரு என் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்டதில்ல. ஏதாவது சொல்ல ஆரம்பிச்சாலே, நான் சொன்னதைச் செய், எங்கிட்ட வேற பேச்சு எதுவும் வேண்டாம்னு கடுமையா சொல்லிடுவாரு. உயிர் போகப் போகிற நிலைமைன்னா கூட, நான் சொன்னதைச் செஞ்சுட்டு அப்புறம் செத்துப் போன்னு சொல்ற ஆளு! இப்படிப்பட்ட ஒரு கல்நெஞ்சக்காரரை நான் பார்த்ததே இல்லை."

"நான் அவர்கிட்ட டைப்பிஸ்டா இருந்தேன். நான் வேலையில ரொம்ப ஸ்லோன்னு சொல்லி என்னை வேற ஊருக்கு மாத்திட்டாரு. இந்த ஆஃபீஸ்லேயே வேற எங்கேயாவது போடுங்க சார்னு கெஞ்சினேன். கஷ்டப்பட்டாதான் நீ உன்னை இம்ப்ரூவ் பண்ணிப்பேன்னு இரக்கமில்லாம சொல்லிட்டாரு. ஒரு பெண் ஊழியரை வெளியூருக்கு மாத்த வேண்டாம்னு ஆஃபீஸ்ல சில பேர் சொல்லிப் பாத்தாங்க, மத்த விஷயங்களிலெல்லாம் சமத்துவம் கேக்கறாங்க இல்ல, இதில மட்டும் என்ன சலுகைன்னு கிண்டலா பதில் சொன்னாரு. ஆறு மாசம் என் குடும்பத்தை விட்டுட்டு வெளியூர்ல போய் வேலை செஞ்சுட்டு அப்புறம் ஹெட் ஆஃபீஸ்ல கேட்டுத் திரும்பவும் இங்கே மாத்திக்கிட்டு வந்தேன். எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்! அப்ப என் குழந்தைங்க ரெண்டு பேரும் சின்னவங்க. வேலையை விடவும் முடியல. அப்பப்பா! இப்படியா ஒத்தர் இரக்கம் இல்லாம நடந்துப்பாரு!"

"நான் அவர்கிட்ட உதவியாளராவே இருந்திருக்கேன். எவ்வளவு பேருக்கு இன்கிரிமென்ட் கட் பண்ணி இருப்பாரு, எத்தனை பேரோட புரோமஷனைத் தடுத்திருப்பாரு. எத்தனை பேரை வேற ஊருக்கு மாத்தி இருப்பாரு! அத்தனை ஆர்டரையும் நான்தானே டைப் பண்ணி இருக்கேன்! எனக்கே பரிதாபமா இருக்கும். ஆனா அவரு ஈவு இரக்கமே பாக்க மாட்டாரு. எத்தனையோ பேரு அவர்கிட்ட வந்து கெஞ்சி இருக்காங்க. இந்த ஒரு தடவை மன்னிச்சுடுங்க சார், இன்கிரிமென்ட் கட் பண்ணினீங்கன்னா என் ஃபைல்ல ரிகார்ட் ஆகி என் எதிர்காலமே கெட்டுப் போயிடும்னு கெஞ்சுவாங்க. கொஞ்சமாவது இரக்கம் காட்டணுமே! மனுஷனோட இதயத்தைக் கடவுள் கல்லால செஞ்சிருப்பார் போலருக்கு."

இது போல் இன்னும் சிலர் அவருடனான தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

சற்றுத் தள்ளி அமர்ந்து அவற்றை கவனித்துக் கொண்டிருந்த ஒரு நபர், தன் அருகில் அமர்ந்திருந்தவரிடம், "என்ன இது? ஒத்தர் இறந்து போயிருக்காரு. இன்னும் அவர் உடலைக் கூட எடுக்கல. அவரைப் பத்தி நல்லதா நாலு வார்த்தை சொல்லாட்டாக் கூடப் பரவாயில்ல. இப்படியா மோசமாப் பேசறது?" என்றார் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில்

"அவங்கள்ளாம் அவர்கிட்ட வேலை செஞ்சவங்க. நான் அவரோட அலுவலகத்துக்குப் பல தடவை போயிருக்கேன். அவர் கொஞ்சம் கூட இரக்கமில்லாம நடந்துக்கறதைப் பாத்திருக்கேன். அதனால அவர் உயிரோட இருந்தப்பவே அவரை இவங்கள்ளாம் வேற வழியில்லாம சகிச்சுக்கிட்டுத்தான் இருந்திருக்காங்க. அவர் இறந்து போனதால ஒரு மரியாதைக்கு அவங்கள்ளாம் வந்திருக்காங்க. ஆனா அவங்களுக்கு அவர் மேல மதிப்பு எப்படி இருக்கும்?" என்றார் அவர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம், தயை, தாட்சண்யம்)

குறள் 572:
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.

பொருள்: 
கண்ணோட்டத்தினால் (கருணையினால்) உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

571. கருணை மனுக்கள்

அதிபர் ராம்தயாளை உள்துறைச் செயலர் கிருஷ்ண பிரசாத் சந்திக்கச் சென்றபோது அதிபர் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.

கிருஷ்ண பிரசாத் உள்ளே நுழைந்ததும் தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்த ராம் தயாள், கிருஷ்ண பிரசாதை அமரச் சொல்லி விட்டு அவர் கூறப் போவதைக் கேட்கத் தயாரானார்.

மாதம் ஒருமுறை நாட்டின் சட்ட ஒழுங்கு நிலை பற்றி உள்துறைச் செயலர் அதிபருக்குத் தெரிவிக்கும் வழிமுறை இருந்தது.

தன் கையிலிருந்த அறிக்கையைப் பார்த்து அதன் முக்கியமான அம்சங்களை அதிபரிடம் விளக்கி விட்டு அறிக்கையை அவரிடம் கொடுத்தார் கிருஷ்ண பிரசாத்.

கிருஷ்ண பிரசாத் தன்னிடம் ஏதோ சொல்ல விரும்பி ஆனால் அதைச் சொல்லத் தயக்கத்துடன் இருப்பதை கவனித்த ராம்தயாள் "சொல்லுங்க கிருஷ்ண பிரசாத்!" என்றார்.

"சார்! தண்டனை பெற்ற குற்றவாளிகள் தங்களோட தண்டனையைக் குறைக்கச் சொல்லி, அல்லது தங்களை விடுதலை செய்யச் சொல்லி கேட்கிற கருணை மனுக்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கிட்டே இருக்கு!" என்றார் கிருஷ்ண பிரசாத்.

"ஆமாம். நானும் கவனிச்சேன்."

"இந்தக் கருணை மனுக்கள் விஷயத்தில நாம ரொம்ப தாராள மனப்பான்மையோட இருக்கோம்னு எனக்குத் தோணுது!"

"புரியுது. பெரும்பாலான மனுக்களை நிராகரிக்கணும்னு குறிப்பு எழுதித்தான் நீங்க எங்கிட்ட அனுப்பறீங்க. ஆனா நான் உங்க சிபாரிசை மீறி நிறைய மனுக்களை ஏத்துக்கறேன். அதுதானே?" என்றார் அதிபர் சிரித்துக்கொண்டே.

"சார்! என்னோட, அதாவது என் துறை அதிகாரிகளோட சிபாரிசை நீங்க ஏத்துக்கணும்னு நான் சொல்ல வரல. முடிவு எடுக்கற அதிகாரம் உங்களோடதுதான். ஆனா குற்றம் செஞ்சு தண்டனை கொடுக்கப்பட்டவங்கள்ள நிறைய பேருக்குக் கருணை காட்டினா அது குற்றம் செய்ய நினைக்கறவங்களுக்கு தைரியத்தைக் கொடுக்காதா? தண்டனை கொடுக்கறதோட ஒரு நோக்கம் குற்றம் செஞ்சவங்களை தண்டிக்கறதா இருந்தாலும், குற்றம் செய்ய நினைக்கிறவங்களுக்கு எச்சரிக்கையாகவும், பயமாகவும் இருக்கணுங்கற நோக்கமும் இருக்கே! அந்த நோக்கம் பலவீனப்படக் கூடாது இல்ல?" என்றார் கிருஷ்ண பிரசாத்.

"உண்மைதான்! அதனாலதான் மனுக்களைப் பரிசீலனை செஞ்சு முடிவெடுக்கறோம். நீங்க பாக்கறதை விட நான் கொஞ்சம் இன்னும் அதிகக் கருணையோட பாக்கறேன். அவ்வளவுதான் வித்தியாசம்! ஒத்தருக்கு பத்து வருஷம் சிறை தண்டனை கொடுக்கறோம். அஞ்சு வருஷம் ஆனதும் அவரு கருணை அடிப்படையில விடுதலை செய்யச் சொல்லி மனுக் கொடுக்கறாரு. குற்றம் கடுமையானது, அதானால அவருக்கு அஞ்சு வருஷம் தண்டனை போதாதுன்னு நீங்க நினைக்கலாம். அஞ்சு வருஷம் தண்டனை அனுபவிச்சுட்டாரே, அது போதாதான்னு நான் நினைக்கறேன். அவரை விடுதலை செய்யறதால அவரு மறுபடியும் குற்றம் செய்யணும்னு அவசியம் இல்லையே! அப்படி செஞ்சு மாட்டிக்கிட்டா தண்டனை இன்னும் கடுமையா இருக்கும்னு அவருக்குத் தெரியாதா? இதையெல்லாம் பார்த்து, தண்டனை பெற்றவரோட குடும்ப சூழ்நிலையையும் பார்த்து சில பேருக்கு நான் கருணை காட்டறேன்."

உள்துறைச் செயலர் மௌனமாக இருந்தார்.

"கிருஷ்ண பிரசாத்! உலகத்தில எவ்வளவு தப்புகள் நடந்தாலும் உலகம் ஏதோ ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு நடந்துக்கிட்டிருக்குன்னா அதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?" என்றார் ராம்தயாள்.

"என்னைக் கேட்டா, சட்டதிட்டங்கள் இருக்கறதாலதான் ஒழுங்கு இருக்குன்னு சொல்லுவேன், சட்டதிட்டங்கள் இல்லேன்னா குழப்பம்தான் இருக்கும்!" என்றார் கிருஷ்ண பிரசாத்.

"நீங்க சொல்றது சரிதான். ஆனா இது நாணயத்தோட ஒரு பக்கம்தான். இன்னொரு பக்கம் கருணை அல்லது அன்பு. நெருக்கமானவங்க கிட்ட காட்டறதை அன்புன்னு சொல்லலாம். ஆனா உலகத்தில பல பேருக்கு மத்தவங்க மேல ஒரு கருணை இருக்கு. அதனாலதான் மத்தவங்களோட துன்பம் நமக்கு வருத்தத்தைக் கொடுக்குது. அதனாலதான் முகம் தெரியாத அனாதைக் குழந்தைகளுக்கும், இன்னும் கஷ்டப்படற பலருக்கும் பல பேர் உதவி செய்யறாங்க. ஒரு நாட்டில தலைமைப் பொறுப்புல இருக்கறவங்களுக்கு கருணை கொஞ்சம் அதிகமாவே இருக்கணும்னு நான் நினைக்கிறேன்."

"சரி சார்!" என்றார் கிருஷ்ண பிரசாத்.

"நான் சொல்றதை நீங்க முழுசா ஏத்துக்கலேன்னு நினைக்கறேன். நீங்க கடவுள் நம்பிக்கை உள்ளவர்தானே?" 

"ஆமாம். கடவுள் கருணையானவர்தான். ஆனா..."

"கடவுள் கருணையானவர் இல்ல, கிருஷ்ண பிரசாத்!" என்றார் ராம்தயாள்.

"என்ன சார் சொல்றீங்க?" 

அதிபர் தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எடுத்து கிருஷ்ண பிரசாதிடம் காட்டினார்.

"இது தயா சதகம் என்கிற புத்தகம், வேதாந்த தேசிகர்ங்கற வைஷ்ணவ குரு எழுதினது. இது திருப்பதி வெங்கடாசலபதியைப் பத்தி 108 சுலோகங்கள் கொண்டது. இதில வெங்கடாசலபதிக்கு தயைன்னு ஒரு மனைவி இருக்கறதா அவர் சொல்றாரு. மனிதர்கள் தப்பு செய்யும்போது வெங்கடாசலபதி அவங்களை தண்டிக்கறப்ப, இந்த தயாதேவி தன்னோட கருணையினால அவங்களைக் காப்பாத்தறாங்களாம். தயான்னா கருணைதானே!"

"நீங்க சொல்றது சுவாரசியமா இருக்கு சார்!"

"நல்ல வேளை எனக்கு இயல்பாகவே கருணை இருக்கு, இல்லேன்னா நான் கூட தயை உள்ள ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டி இருக்கும். நான் இப்படிச் சொன்னேன்னு என் மனைவி கிட்ட சொல்லிடாதீங்க. அப்புறம் அவங்க என் மேல கொஞ்சம் கூடக் கருணை காட்ட மாட்டாங்க!" என்றார் ராம்தயாள் சிரித்தபடியே.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம், தயை, தாட்சண்யம்)

குறள் 571:
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.

பொருள்: 
கண்ணோட்டம் (கருணை) என்று சொல்லப்படும் மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது..
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Thursday, April 21, 2022

570. படிக்காதவர்கள்!

"இந்த அரசங்கம் வந்ததிலேந்து நிறைய விஷயங்களைத் தலைகீழா மாத்திக்கிட்டிருக்காங்க" என்றார் பொன்னையா.

"மாற்றங்கள் நல்லதுதானே! மாற்றங்கள்னாலே முன்னேற்றம்தானே?" என்றார் சின்னையா.

"அப்படியா? இப்ப நான் ஒரு வேலையில இருக்கேன். இதை விட்டுட்டு இதை விட கஷ்டமான, இன்னும் குறைவான சம்பளத்துக்கு வேற ஒரு வேலைக்குப் போனா, அது மாற்றம்தான். ஆனா அது முன்னேற்றமா?"

"நீ சொல்ற உதாரணம் இந்த அரசாங்கம் செய்யற மாற்றங்களுக்குப் பொருந்தாது. அவங்க எல்லா மாற்றங்களையும் ஆலோசகர்களோட யோசனைகளைக் கேட்டு அல்லது கமிட்டிகளைப் போட்டு அவற்றோட அறிக்கைகள் அடிப்படையிலதானே செய்யறாங்க?"

"ஆலோசகர்கள்கள் இருந்தா எல்லாம் சரியா இருக்கணுமா என்ன? ஹிட்லருக்குக் கூட ஆலோசகர்கள் இருந்திருப்பாங்க! ஒரு ஜனநாயக நாட்டில கொடுங்கோல் ஆட்சி செய்யறவங்க தாங்க ரொம்ப சரியா செயல்படறதாக் காட்டிக்கறதுக்காக இது மாதிரி ஆலோசகர்கள் கமிட்டிகள் இவங்களோட ஆலோசனையைக் கேட்டுச் செயல்படற மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்குவாங்க! நம் அரசாங்கம் போட்டிருக்கிற கமிட்டிகள்ள இருக்கறவங்க பெரும்பாலும் ஆளுங்கட்சிக்காரங்க, மீதிப்பேரு இந்த அரசாங்கத்தோட அத்துமீறல்களையெல்லாம் ஆதரிச்சுக் குரல் கொடுக்கறவங்க!"

"எப்படி இருந்தா என்ன? இந்த மாற்றங்களால நாட்டில முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு இல்ல?"

"முன்னேற்றம் ஏற்பட்டிருக்கா? இந்த மாற்றங்களால நிறையப் பின்னடைவுகள்தான் ஏற்பட்டிருக்குன்னு புள்ளி விவரங்கள் சொல்லுது. ஆனா அதையெல்லாம் முன்னேற்றம்னு இந்த அரசாங்கமும் அவங்க கட்டுப்படுத்தி வச்சிருக்கிற ஊடகங்களும் சொல்லிக்கிட்டிருக்காங்க!"

"இல்லையே! பிரச்னைகள் இருக்கு, ஆனா அதெல்லாம் காலப்போக்கில சரியாயிடும், மக்கள் கொஞ்ச காலம் காத்திருக்கணும்னு சில ஆலோசகர்கள் சொல்றாங்களே!"

"எவ்வளவு காலம்? நூறு வருஷமா? இதெல்லாம் ஏமாத்து வேலைன்னு உனக்குப் புரியல?"

"ஒரு அரசாங்கம் படிச்சவங்களையும், விஷயம் தெரிஞ்சவங்களையும், நிபுணர்களையும் வச்சு கமிட்டிகள் போட்டு அவர்களோட ஆலோசனைகள்படி சில மாற்றங்களைச் செய்யுது. இதில எங்க தப்பு இருக்கு?"

"முதல்ல நீ சொல்ற கமிட்டியில இருக்கிற பல பேர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள். படிப்புக்கும் இவர்களுக்கும் அதிக தொடர்பு இல்ல. அவங்கள்ள சில பேரு பட்டப் படிப்போ வேற படிப்போ படிச்சிருந்தாலும், இவங்க பேசறதை, செய்யறதை எல்லாம் பார்க்கும்போது இவங்களைப் படிச்சவங்களா ஏத்துக்க முடியாது. விஷயம் தெரிஞ்சவங்களா, நிபுணர்களா இருக்கிற சில பேரும் இந்த அரசாங்கம் செய்யற அட்டூழியங்களைக் கண்ணை மூடிக்கிட்டு ஆதரிக்கிறவங்களா இருக்காங்க. சாதாரண மக்கள் படற கஷ்டங்களைப் புரிஞ்சுக்க இவங்க மறுக்கறாங்க. அதாவது தங்கள் கல்வியையும் அறிவையும் பயன்படுத்தவே மறுக்கறாங்க. அதனால இவங்களையும் படிக்காதவங்களாத்தான் கருதணும்!"

"அதாவது இது ஏற்கெனவே ஒரு கொடுங்கோல் ஆட்சி. இவங்க படிக்காதவங்களைத் தங்களுக்குத் துணையா வச்சுக்கிட்டு செயல்படறது இன்னும் கொடுமை. இதானே நீ சொல்ல வரது?" என்றார் சின்னையா கேலியான குரலில்.

"ரொம்ப சரியா சொன்ன! திருவள்ளுவரால கூட இவ்வளவு சுருக்கமாவும், தெளிவாகவும் சொல்லி இருக்க முடியாது!" என்றார் பொன்னையா, பாதி உண்மையாகவும், பாதி கேலியாகவும்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை (மக்கள் அஞ்சம் செயல்களைச் செய்யாமை)

குறள் 570:
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.

பொருள்: 
கொடுங்கோல் அரசு கல்லாதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும். அதைப் போல பூமிக்கு பாரம் வேறு எதுவுமில்லை.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Wednesday, April 20, 2022

784. சொன்னது சரிதானா?

"என்னங்க இப்பல்லாம் உங்க நண்பர் சீதாராம் நம்ம வீட்டுக்கே வரதில்ல?" என்றாள் கல்பனா.

"அவனுக்கு என் மேல கோபம்!" என்றான் கோபால்.

"ஏன்? என்ன ஆச்சு?" என்றாள் கல்பனா வியப்புடன்.

"அவன் செய்ய நினைக்கிறது எனக்குப் பிடிக்கல. அது தப்புன்னு சொன்னேன். அதனால கொஞ்சம் கோபமா இருக்கான்னு நினைக்கிறேன்.ரெண்டு நாள்ள சரியாயிடும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்!"

"அவருக்குப் பிடிச்சதை அவர் செஞ்சுட்டுப் போறாரு. அது உங்களுக்கு எதுக்குப் பிடிக்கணும்? நீங்க வாயை மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே?"

"நீயா இருந்தா வாயை மூடிக்கிட்டு இருந்திருப்பேன்! அப்படித்தானே இருந்துக்கிட்டிருக்கேன்? என் நண்பன் விஷயத்தில அப்படி இருக்க முடியாது. அவன் செய்யறது தப்புன்னு நான் நினைச்சா அப்படித்தான் சொல்லுவேன். அது மாதிரி நான் தப்பு செஞ்சாலும் அது தப்புன்னு அவன் அடிச்சு சொல்லலாம், சொல்லணும்!"

"அப்படிச் சொல்ற உரிமை உங்களுக்கு இல்லேன்னு அவர் நினைச்சா அதை நீங்க ஏத்துக்க வேண்டியதுதானே?"

"அது உரிமை இல்ல கல்பனா, கடமை! என் கடமையைச் செய்யக் கூடாதுன்னு சொல்ல அவனுக்கு உரிமை இல்லை!"

"நீங்க சொல்றது வேடிக்கையா இருக்கு! மத்தவங்ளைக் குத்தம் சொல்றதுக்கு உங்களுக்கு உரிமையும் இல்ல, அது உங்க கடமையும் இல்ல!" என்றாள் கல்பனா 

"குத்தம் சொல்றது இல்ல கல்பனா. ஒத்தர் தப்பு செய்யறப்ப அது தப்பு, அதை செய்யக் கூடாதுன்னு சொல்றதுக்குப் பேரு குத்தம் சொல்றது இல்ல, ஒத்தரைத் தப்பு செய்யாம தடுத்து நிறுத்தறது!" என்றான் கோபால்.

"நீங்க சொல்றது எனக்குப் புரியல. அப்படிச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லைன்னு நான் நினைக்கிறேன. ஆனா அதை நீங்க கடமைன்னு சொல்றீங்க! அது சரி, அவரு அப்படி என்ன தப்பு செஞ்சாரு?"

"உன் அண்ணன் செஞ்ச தப்பைத்தான்!" என்ற கோபால், கல்பனாவின் முகம் சட்டென்று வாடுவதைப் பார்த்து, "சாரி!  உனக்கு வருத்தமா இருக்கும்னு யோசிக்காம சொல்லிட்டேன்" என்றான்.

"பரவாயில்ல. நடந்ததைத்தானே சொன்னீங்க? ஆமாம், எங்க அப்பா அம்மாவை என் அண்ணன் முதியோர் இல்லத்தில சேர்த்தப்ப அவங்கிட்ட சொல்லித் தடுங்கன்னு நான் உங்ககிட்ட எவ்வளவோ தடவை சொன்னேன். ஆனா நீங்க ஒரு தடவை சொல்லிட்டு ஒதுக்கிட்டீங்க. ஆனா உங்க நண்பர்கிட்ட சண்டை போட்டுட்டு அவர் உங்ககிட்ட பேசாத அளவுக்கு செஞ்சிருக்கீங்களே!"

"உன் அண்ணன்கிட்ட நான் ஒரு அளவுக்குத்தான் சொல்ல முடியும். அந்த அளவுக்கு சொன்னேன். அவர் என் பேச்சைக் கேக்கல. என் குடும்ப விஷயத்தில தலையிடாதீங்கன்னு சொல்லிட்டாரு. அதுக்கப்பறம் அவர்கிட்ட நான் எப்படிப் பேச முடியும்? ஆனா இதையே என் நண்பன் சீதாராம் சொன்னப்ப, 'அப்படித்தான் தலையிடுவேன். ஏன்னா நீ தப்பு செய்யாம தடுக்கிற பொறுப்பு எனக்கு இருக்கு'ன்னு சொன்னேன். அதுக்கப்பறம்தான் அவன் எங்கிட்ட கோவிச்சுக்கிட்டு பேசாம இருக்கான்!" என்றான் கோபால் வருத்தத்துடன். 

"கோபம் தணிஞ்சு மறுபடி அவரு உங்ககிட்ட நெருக்கமா நடந்துப்பாரா?" என்றாள் கல்பனா.

"தெரியல. ஆனா நான் செஞ்சது சரிதான்னு மட்டும் எனக்குத் தெரியும்" என்றான் கோபால் உறுதியாக.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு

குறள் 784:
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

பொருள்: 
நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக (மட்டும்) அல்ல; ஒரு நண்பன் வழி தவறிச் செல்லும்பொழுது அவனை இடித்துரைத்துத் திருத்துவதற்கும் ஆகும்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Tuesday, April 19, 2022

569. கூட்டணிக் கணக்குகள்!

"ம.ந.க. கட்சித் தலைவர் உங்களை சந்திக்கணும்னு தூது அனுப்பிக்கிட்டே இருக்காரு" என்றார் விகாஸ்.

"இத்தனை வருஷமா நம்ம எதிரிகளோட சேந்துக்கிட்டு நமக்கு எதிரா எல்லா வேலையும் பண்ணிக்கிட்டிருந்தவரு இன்னிக்கு அவங்களோட உறவு முறிஞ்சதும் இப்ப நம்மகிட்ட வராரா? நான் அவரை சந்திக்கப் போறதில்ல!" என்றார் கட்சித் தலைவரும் அந்த நாட்டின் அதிபருமான சுரேந்தர்.

"அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே?" என்றார் விகாஸ்.

"தேர்தலுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கே! இப்ப அவரால நமக்கு எந்தப் பயனும் இல்ல. இப்போதைக்கு அவருக்கு எந்த பதிலும் சொல்லாம நாம புறக்கணிப்போம். கொஞ்ச நாளைக்கு அவரைத் தவிக்க விடுவோம்!"

"தலைவரே! எதிர்க்கட்சித் தலைவர் பல கட்சிகளைச் சேத்துக்கிட்டு ஒரு பலமான கூட்டணியை அமைக்க முயற்சி செஞ்சுக்கிட்டிருக்காரு. நாமும் நம்மை பலப்படுத்திக்க வேண்டாமா?"

"நாம ஆட்சியில இருக்கோம். பலமா இருக்கோம். அவங்க பலவீனமா இருக்காங்க. அஞ்சாறு கட்சிகளோட கூட்டணி வச்சுக்கிட்டா சில இடங்களிலாவது ஜெயிக்க முடியுமான்னு பாக்கறாங்க! பலம் இல்லாதவங்க செய்யறதை நாம எதுக்கு செய்யணும்?" என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சுரேந்தர்.

"தேர்தலுக்கு ரெண்டு மாசம்தான் இருக்கு. நிலைமை எப்படி இருக்கு?" என்றார் சுரேந்தர்.

"கருத்துக் கணிப்புகள் எல்லாம் கடுமையான போட்டி இருக்கும்னு சொல்லுது. உண்மையில நம் உளவுத்துறையோட அறிக்கைப்படி நமக்கு வெற்றி வாய்ப்பே இல்லை. ஊடகங்கள் நமக்கு பயந்துகிட்டு நாம தோத்துடுவோம்னு சொல்லாம கடுமையான போட்டின்னு கருத்துக் கணிப்பை கொஞ்சம் மாத்தி வெளியிட்டுக்கிட்டிருக்காங்க!" என்றார் விகாஸ் கவலையுடன்.

"கடுமையான போட்டின்னாலும் நாம ஜெயிச்சுடலாம். அதிகாரம் நம்ம கையிலதானே இருக்கு? எதுக்கும் நம்ம கூட்டணியை வலுப்படுத்திக்கலாம். ம.ந.க. கட்சி ரொம்ப நாளா நமக்கு தூது விட்டுக்கிட்டிருக்காங்களே! அவங்களுக்கு என்னை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கொடுங்க. அவங்களை சேத்துக்கிட்டா தராசு நம்ம பக்கம் சாஞ்சுடும்!" 

"சார்! ம.ந.க. கட்சியை நாம ரொம்ப நாளா புறக்கணிச்சதால அவங்க விரக்தியில இருக்காங்க. நம்ம மேல கோபமாவும் இருக்காங்க. இதைப் பயன்படுத்திக்கிட்டு எதிர்க்கட்சித் தலைவர் அவங்களை சமாதானப்படுத்தி மறுபடியும் தங்களோட கூட்டணியில சேர்க்க முயற்சி செஞ்சுக்கிட்டிருக்காருன்னு தகவல் வருது. ரெண்டு மூணு சீட் அதிகமாக் கொடுத்தா ம ந க அவங்களோட போயிடும்!"

"அப்படியா?" என்றார் சுரேந்தர் சற்றுக் கவலையுடன்.

"அதோட, ரொம்ப நாளா நம்மோட இருக்கற ம.வி.மு. கட்சி கூட எதிர் அணிக்குப் போக முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கு. கொஞ்ச நாளா அவங்க தலைவர் என் ஃபோனையே எடுக்கறதில்ல. அவரை நேரில பாக்கவும் முடியல!" என்றார் விகாஸ் சற்றுத் தயக்கத்துடன்.

"அப்படியா?" என்றார் சுரேந்தர் சற்றே அதிர்ச்சியுடன். "ம.வி.மு. நமக்கு ரொம்ப பயனுள்ள கூட்டணிக் கட்சியாச்சே! நம்மோட ரொம்ப நாளா இருக்காங்க. அவங்க நம்மை விட்டுப் போனா அது வாக்காளர் மத்தியில நாம பலவீனம் அடைஞ்சுக்கிட்டு வர மாதிரி பிம்பத்தை உருவாக்கும். அதை நாம தடுத்தாகணும்."

"சார்! ம.வி.ம. தலைவருக்கு நீங்க அவரை மதிக்கறதில்லன்னு ரொம்ப நாளா ஒரு குறை இருக்கு. அவரைக் கூப்பிட்டுப் பேசச் சொல்லி நான் கூட பல தடவை உங்ககிட்ட சொல்லி இருக்கேன். அவரும் உங்களைச் சந்திக்க சில முறை முயற்சி செஞ்சாரு. ஆனா அவரால உங்களைச் சந்திக்க முடியல. அதனால அவரும் வருத்தத்தில இருந்துக்கிட்டிருக்காரு. அதைப் பயன்படுத்திக்கிட்டு, அவரையும் எதிர்க்கட்சித் தலைவர் வளைச்சுப் போட்டுட்டார்னு நினைக்கிறேன்."

"அப்படின்னா நாம ஜெயிக்கறது ரொம்ப கஷ்டம்தான்" என்றார் சுரேந்தர் கவலையுடன், நிலைமையை அப்போதுதான் புரிந்து கொண்டவராக.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை (மக்கள் அஞ்சம் செயல்களைச் செய்யாமை)

குறள் 569:
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.

பொருள்: 
முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Wednesday, April 13, 2022

783. தண்டபாணியின் நண்பர்

தண்டபாணி அந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது அவருக்கு அறிமுகமானவர்தான் வேணுகோபால்.

அலுவலகத்தில் தண்டபாணிக்கு அடுத்த உயர் நிலையில் இருந்தவர் என்றபோதும் வேணுகோபால் தானே வந்து தண்டபாணியிடம் நட்புக் கொண்டார்.

தன்னை விட உயர்ந்த பதவியில் இருப்பவர் என்பதால் துவக்கத்தில் வேணுகோபாலிடம் பழகுவதில் தண்டபாணிக்குச் சற்றுத் தயக்கம் இருந்தது. எவ்வளவுதான் வேணுகோபால் இயல்பாகப் பழகினாலும், தண்டபாணியின் தயக்கம் நீங்கவில்லை.

அப்போது ஒருநாள் எதிர்பாராத விதமாக தண்டபாணியின் வீட்டுக்கு வந்து விட்டார் வேணுகோபால்.

"உங்களுக்கு எப்படி சார் என் விலாசம் தெரியும்?" என்றார் தண்டபாணி வியப்புடன்.

"முதலில் என் பேர் சார் இல்லை, வேணுகோபால். என் நண்பர்கள் என்னை வேணுன்னுதானு கூப்பிடுவாங்க. நீங்களும் என்னை அப்படியே கூப்பிடலாம், தண்டபாணி! அதுக்காக உங்க பேரைச் சுருக்கி தண்டம்னு நான் கூப்பிட மாட்டேன்!" என்று வேணுகோபால் கூறியதும் தண்டபாணியும் அவருடன் சேர்ந்து சிரித்துத் தன் இறுக்கத்தைப் போக்கிக் கொண்டார்.

"நம்மோட வேலை செய்யறவங்க விலாசத்தைக் கண்டுபிடிக்கிறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. அது எப்படின்னு கொஞ்ச நாள்ள நீங்களே தெரிஞ்சுப்பீங்க!" என்றார் வேணுகோபால்.

தற்குப் பிறகு முப்பது வருடங்களுக்கு மேல் அவர்கள் நட்பு தொடர்ந்தது.

வேணுகோபால் அதிகம் படிக்கும் பழக்கம் உடையவர். அவர் வீட்டில் நிறையப் புத்தகங்கள் இருக்கும்.

தண்டபாணிக்குப் புத்தகங்கள் படிப்பதிலோ அல்லது கலை, இலக்கியம் போன்றவற்றிலோ ஆர்வம் இல்லை. அலுவலக வேலை முடிந்ததும், வீட்டில் சும்மாதான் உட்கார்ந்திருப்பார். குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவது, வீட்டு வேலைகளைச் செய்வது என்று தன் நேரத்தைச் செலவிடுவார். 

தண்டபாணிக்கு நண்பர்கள் அதிகம் இல்லை. நெருங்கிய நண்பர் என்றால் அது வேணுகோபால் ஒருவர்தான். அதுவும் அவரே இவரிடம் ஏற்படுத்திக் கொண்ட நட்பு!

"உனக்கும் எனக்கும் பொதுவான விஷயம் எதுவும் கிடையாது. எங்கிட்ட என்ன இருக்குன்னு என்னோட இவ்வளவு நட்பா இருக்க நீ?" என்று தண்டபாணி வேணுகோபாலிடம் சிலமுறை கேட்டிருக்கிறார். (நட்பு சற்று வளர்ந்ததும் அவர்கள் தங்களுக்குள் ஒருமையில் பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டரர்கள்!).

"பொதுவான விஷயம் இருக்கணும்னு அவசியம் இல்லையே! உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. உன்னோட பேசிக்கிட்டிருந்தா எனக்கு சந்தோஈமா இருக்கு. அது போதாதா?" என்பார் வேணுகோபால்.

சிறிது காலத்தில் தன் நட்பு வேணுகோபாலுக்கு அலுத்து விடும், அவர் கொஞ்சம் கொஞ்சாமாகத் தன்னிடமிருந்து விலகிப் போய் விடுவார் என்று ஆரம்பத்தில் தண்டபாணி நீனைத்தார்.

ஆனால் தண்டபாணி நினைத்ததற்கு மாறாக வேணுகோபாலின் நட்பு இன்னும் நெருக்கமாகவும், ஆழமாகவும்தான் ஆகிக் கொண்டிருந்தது.

வாரத்துக்கு இரண்டு மூன்று முறையாவது இருவரும் அலுவலகத்துக்கு வெளியே - இருவரில் ஒருவர் வீட்டிலோ, அல்லது வேறு  இடத்திலோ - சந்தித்துப் பேசுவது என்ற வழக்கம் ஏற்பட்டது. 

அலுவலக விஷயங்கள் பற்றி வம்பு பேசுவதில்லை என்று இருவருக்குமிடையே ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருந்தது. தங்கள் குடும்ப விஷயங்கள், உலக நடப்புக்கள் பற்றிப் பேசிக் கொள்வார்கள்.

வேணுகோபால் தான் படித்த சுவையான விஷயங்களை தண்டபாணியிடம் பகிர்ந்து கொள்வார். தண்டபாணி அவற்றை கவனமாகக் கேட்டு ரசிப்பார்.

"நீ படிச்ச விஷயங்களை எங்கிட்ட சொல்லும்போது எனக்கு கேக்க நல்லாயிருக்கு. ஆனா என்னவோ எனக்கு புத்தகங்களைப் படிக்கிறதில ஈடுபாடு இல்ல. நீ எப்படித்தான் இவ்வளவு புத்தகங்களைப் படிக்கிறியோ!" என்பார் தண்டபாணி.

தான் படித்தவற்றை வேணுகோபால் தண்டபாணியிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அவற்றைக் கேட்டு விட்டு தண்டபாணி சில சமயம் தன் கருத்துக்களைக் கூறுவார். சில சமயம் தண்டபாணியின் கருத்துக்களைக் கேட்டு வேணுகோபால் அவரை வியந்து பாராட்டுவார்.

"நான் புத்தகங்கள்ள படிச்சு விஷயங்களை உங்கிட்ட பகிர்ந்துக்கறேன். ஆனா அதையெல்லாம் படிக்காமலேயே நீ சொல்ற கருத்துக்கள் ரொம்ப ஆச்சரியமா இருக்கு. உனக்கு மட்டும் படிக்கிற பழக்கம் இருந்திருந்தா நீ ஒரு பெரிய ஸ்காலர் ஆகி இருப்பே!" என்பார் தண்டபாணி.

"அட நீ வேற! வீட்டைக் கட்டறதுதான் கஷ்டம். கட்டின வீட்டைப் பாத்துட்டு இது நல்லா இருக்கு, இது நல்லா இல்ல, இது இப்படி இருந்திருக்கலாம்னு சொல்றதுக்குப் பெரிசா அறிவு வேணுமா என்ன?" என்பார் தண்டபாணி.

"அப்பா! வேணு மாமா இறந்துட்டாராம்!" என்றான் தண்டபாணியின் மகன்.

தண்டபாணி சிலை போல் அமர்ந்திருந்தார். அவர் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது.

'கடவுளே! இப்படி ஒரு நண்பனை எனக்கு ஏன் கொடுத்தே? அவன் இல்லாம என் மீதி வாழ்நாளை எப்படிக் கழிக்கப் போறேன்?' என்று மௌனமாகப் புலம்பினார் தண்டபாணி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு

குறள் 783:
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

பொருள்: 
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Tuesday, April 12, 2022

568. தயாளனின் கோபம்!

தன் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் மூவரையும் தன் அறைக்கு அழைத்தார் நிர்வாக இயக்குனர் தயாளன். .

"ரெண்டு வருஷமா நம்ம லாபம் குறைஞ்சுக்கிட்டே வருது. இதைப் பத்தி சண்முகசுந்தரம் நேத்திக்குத்தான் எங்கிட்ட சொன்னாரு. ரெண்டு வருஷமா என்ன பண்ணிக்கிட்டிருந்தார்னு தெரியல..." என்று தயாளன் ஆரம்பித்தபோது, "சார்! நான் ஏற்கெனவே உங்ககிட்ட..." என்று ஆரம்பித்த அக்கவுண்ட்ஸ் மானேஜர் சண்முகசுந்தரத்தை இடைமறித்தார் தயாளன்.

"குறுக்கே பேசாதீங்க. ஏற்கெனவே எங்கிட்ட சொல்லி இருக்கிறதா சொல்லி நீங்க பொறுப்பிலேந்து தப்பிக்க முடியாது. செல்வம்! நீங்கதான் சேல்ஸ் மானேஜர். இதுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?"

"சார்! லாபம் வராத ஆர்டர்களை எடுக்க வேண்டாம்னு நான் சொன்னேன். ஆனா நீங்க உங்க நண்பரோட நிறுவனத்துக்குக் குறைஞ்ச விலைக்கு சப்ளை பண்ணச் சொன்னீங்க. அவங்ககிட்டேந்து பணம் கூட முழுசா வரலை!" என்றார் சேல்ஸ் மானேஜர் செல்வம் சற்றுத் தயக்கத்துடன்.

"செல்வம்! இது என்னோட கம்பெனி. நான் யாருக்கு வேணும்னா கொடுப்பேன், என்ன விலைக்கு வேணும்னா கொடுப்பேன், அதைக் கேக்க நீங்க யாரு?" என்றார் தயாளன் கோபத்துடன்.

"அதில்ல சார்! லாபம் குறைஞ்சுடுச்சுன்னு நீங்க கேட்டதால சொன்னேன்" என்றார் செல்வம் மன்னிப்புக் கேட்கும் குரலில்.

"உங்க எல்லோருக்கும் சொல்றேன். இது என் கம்பெனி. நான் எனக்குத் தோணினதைச் செய்வேன். உங்ககிட்ட கலந்தாலோசிக்கணுங்கற அவசியம் எனக்கு இல்ல. ஆனா உங்களை நிச்சயமா கேள்வி கேட்பேன். நீங்க பொறுப்பிலேந்து தப்பிக்க முடியாது. இப்ப எல்லாரும் எழுந்து வெளியில போங்க!" என்றார் தயாளன் கோபம் குறையாமல்.

மூவரும் தயாளன் அறையிலிருந்து வெளியில் வந்ததும், மற்ற இருவரையும் ஒரு ஓரமாக அழைத்துச் சென்ற சண்முகசுந்தரம், "ஒரு விஷயம் சொல்றேன்.ரெண்டு வருஷமா லாபம் குறைஞ்சுக்கிட்டே வந்தது. இந்த வருஷம் நிச்சயமா நஷ்டம்தான் வரும். வரவு செலவுகளைப் பாக்கறப்ப எனக்கு அப்படித்தான் தெரியுது. அவரு நம்மகிட்ட எதையும் கேக்க மாட்டாரு, நாம ஏதாவது சொன்னாலும், கோபமாக் கத்துவாரே தவிர, நாம சொல்ற விஷயத்தைக் கேட்டுக்க மாட்டாரு. அவரா ஏதாவது செய்வாரு, ஆனா நாமதான் பொறுப்புன்னு சொல்லுவாரு! இப்படியே போனா கம்பெனியால தாக்குப் பிடிக்க முடியாது. அடுத்த வருஷம் கம்பெனி இருக்குமாங்கறதே சந்தேகம்தான். நாம வேற வேலை பாத்துக்கிட்டுப் போறதுதான் நல்லது" என்றார் ரகசியமாக.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை (மக்கள் அஞ்சம் செயல்களைச் செய்யாமை)

குறள் 568:
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு..

பொருள்: 
அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து பேசி சிந்தித்துச் செயல்படாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Saturday, April 9, 2022

567. கூர் மழுங்கிய ஆயுதம்

"சந்திரபிரகாஷ் நம்ம கட்சியில ஒரு மூத்த உறுப்பினர். எந்தப் பதவியையும் எதிர்பாக்காம பல வருஷங்களா நம்ம கட்சிக்காக உழைக்கறவரு. உன் அப்பாவுக்கு வலது கையா இருந்தவரு. அவரோட ஆலோசனைகளுக்கு உன் அப்பா ரொம்ப மதிப்பு கொடுப்பாரு. தன்னோட அரசியல் வெற்றிகள் எல்லாத்திலேயும் சந்திரபிரகாஷுக்கு ஒரு முக்கியமான பங்கு உண்டுன்னு உன் அப்பா வெளிப்படையா பல தடவை சொல்லி இருக்காரு. அப்படிப்பட்ட ஒத்தரை கடுமையா கண்டிச்சு நீ அறிக்கை விட்டது ரொம்ப தப்பு!" என்றார் ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் சர்மா.

வயது, அனுபவம் காரணமாக சர்மாவுக்கு அந்தக் கட்சியில் ஒரு தனி மரியாதை உண்டு. கட்சியின் பொதுச் செயலாளரும், கட்சியில் எல்லா அதிகாரமும் படைத்தவருமான ராகவ் உட்பட அனைவரையும் சர்மா ஒருமையில்தான் பேசுவார், உரிமையுடன் கண்டிப்பார்.

"அவரு நான் கட்சியை சரியா வழிநடத்தலேன்னு தொலைக்காட்சியில வெளிப்படையா பேட்டி கொடுக்கறாரு. நான் அவரை கண்டிக்கக் கூடாதா?" என்றார் கட்சியின் பொதுச் செயலாளர் ராகவ். அவர் தந்தை இறந்த பிறகு அவர் வகித்த பொதுச் செயலாளர் பதவிக்குக் கட்சியால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகவ் 

."அவரு அப்படிச் சொல்லல. சமீபத்தில நடந்த இடைத்தேர்தல்கள்ள கட்சி தோத்ததுக்கு தலைமைதான் காரணமான்னு பேட்டி எடுத்தவர் கேட்டதுக்கு, 'தோல்விக்குப் பல காரணங்கள் இருக்கு' ன்னு பொதுவா சொல்லி மழுப்பிட்டாரு.  உனக்கு சாதகமான பதில்தான் அது!"

"ஆளும் கட்சியோட அதிகார துஷ்பிரயோகத்தாலதான் அவங்க இடைத்தேர்தல்கள்ள வெற்றி அடைஞ்சாங்கன்னு நான் சொல்லிக்கிட்டிருக்கச்சே, அவரும் அதையேதானே சொல்லி இருக்கணும்? குறைஞ்சது தலைமை காரணம் இல்லைன்னு எனக்கு ஆதரவாப் பேசி இருக்கணும் இல்ல? பல காரணங்கள் இருக்குன்னு சொன்னா என்ன அர்த்தம்?" என்றார் ராகவ் கோபமாக.

"ராகவ்! அடுத்த தேர்தல்ல நாம ஜெயிக்கணும். அதுக்கு நீ கட்சியை வலுப்படுத்தணும். சந்திரபிரகாஷ் தேர்தல் உத்திகளை வகுக்கறதில பெரிய சாணக்கியர். உன் அப்பா பொதுச் செயலாளரா இருந்தப்ப சந்திரபிரகாஷ்தான் அவருக்கு அடுத்த இடத்தில இருந்தாரு. ஆனாலும் உன் அப்பாவுக்குப் பிறகு நீதான் கட்சியைத் தலைமை தாங்கி நடத்தணும்னு உன்னை உறுதியா ஆதரிச்சவர் அவர். அவரோட உதவி உனக்கு கண்டிப்பா வேணும். நீ அவரை அவமதிக்கிற மாதிரி அறிக்கை விட்டா அவரு ஒதுங்கிப் போயிடுவாரு. அது கட்சிக்குத்தான் நஷ்டம்."

"அவர்கிட்ட நான் மன்னிப்புக் கேக்கணும்னு சொல்றீங்களா?"

"மன்னிப்பு கேட்க வேண்டாம். அவர் ரொம்ப பெருந்தன்மை உள்ளவர். அதையெல்லாம் எதிர்பார்க்க மாட்டாரு. இனிமே நீ அவரை மதிச்சு நடந்துகிட்டா போதும். நீ வருத்தப்பட்டதா நான் அவர்கிட்ட சொல்றேன்" என்றார் சர்மா.

"அதெல்லாம் வேண்டாம். இனிமே இது மாதிரி நடக்காது!" என்றார் ராகவ்.

ஆயினும் பல மூத்த தலைவர்கள் ராகவ் மற்றும் அவருக்கு நெருக்கமாக இருப்பவர்களால் அவமானப்படுத்தப்படுவதும், கடுமையாக விமரிசிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்தது.

டுத்த தேர்தலில் ராகவின் ஜனநாயக மக்கள் கட்சிதான் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஒரு தேர்தல் வியூக நிபுணர் ராகவின் கட்சிக்கு உத்திகளை வகுத்துக் கொடுத்தார். கடந்த காலத்தில் அந்த நிபுணரின் ஆலோசனை பெற்ற கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றிருந்ததால் அவருடைய ஆலோசனை ஜனநாயக மக்கள் கட்சியின் வெற்றிக்குப் பெரிதும் உதவும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத விதத்தில் அமைந்தன. ஜனநாயக மக்கள் கட்சி தோல்வியைத் தழுவியது. தோல்வியின் விளிம்பில் இருந்த ஆளும் கட்சி எப்படியோ கரையேறி மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட்டது.

"தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் சொல்றாரு உன் ஆலோசகர்?" என்றார் சர்மா.

"அவர் என்னோட ஆலோசகர் இல்ல, கட்சியோட ஆலோசகர். கட்சியோட செயற்குழு அனுமதி கொடுத்துத்தான் அவரை நியமிச்சோம். ரெண்டு சதவீதத்தில நாம வெற்றியை இழந்துட்டோம்! இது ஒரு பெரிய இழப்பு இல்லை" என்றார் ராகவ்.

"குதிரைப் பந்தயத்தில ஜெயிக்க, குதிரை மூக்கை மட்டும் நீட்டி இருந்தாக் கூடப் போதும்! தேர்தலும் அப்படித்தான். ஆனா இந்த ரெண்டு சதவீதத்தை நாம இழந்ததுக்கு ரெண்டு காரணம் இருக்கு."

"என்ன ரெண்டு காரணம்?"

"கட்சிக்கு உண்மையா உழைச்சவங்களை அற்பக் காரணங்களுக்காகக் குத்தம் சுமத்தி கட்சியை விட்டு வெளியேத்தினது, சந்திரபிரகாஷ் மாதிரி மூத்த தலைவர்களைக் கடுமையாப் பேசி அவங்களை ஒதுங்கிப் போக வச்சது. இதெல்லாம் நம் ஆயுதங்களைக் கூர் மழுங்க வச்சுடுச்சு கூர் மழுங்கின ஆயுதங்களோட ஒரு அரசன் போர்ல  இறங்கினா, பலம் இல்லாத எதிரி கூட அவனைத் தோக்க அடிச்சுடுவானே!" என்றார் சர்மா.  

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை (மக்கள் அஞ்சம் செயல்களைச் செய்யாமை)

குறள் 567:
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.

பொருள்: 
கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Monday, April 4, 2022

566. தடுப்புச் சுவர்

"சார்! கிராமத்துக்காரங்க உங்களைப் பாக்க வந்திருக்காங்க!" என்றார் தொழிலதிபர் செல்லையாவின் உதவியளர் ஜீவா.

"என்னை எதுக்கு அவங்க பாக்கணும்? அதான் ஜி எம்மைப் பாத்துப் பேசிட்டாங்களே!" என்றார் செல்லையா கடுகடுப்புடன்.

"அவர்கிட்ட பேசினதில அவங்களுக்குத் திருப்தி இல்லையாம். உங்களைப் பாக்காம போக மாட்டோம்னு தொழிற்சாலை கேட் வாசல்ல உக்காந்துக்கிட்டுப் போராட்டம் பண்றாங்க.

"பிச்சைக்காரப் பசங்க! தலைவர் சொன்ன மாதிரி நாட்டில போராட்டம் பண்ணியே பிழைப்பு நடத்தறவங்களோட எண்ணிக்கை அதிகம் ஆகிக்கிட்டே இருக்கு. சரி. அவங்க தலைவனை வரச்சொல்லு. எங்கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டாத்தான் அவனுக்கு சோறு இறங்கும்னா அப்படியே நடக்கட்டும்!"  என்றார் செல்லையா.

ந்து கிராமவாசிகள் செல்லையாவின் அறைக்குள் நுழைய அவர்களுடன் கலவரமடைந்த முகத்துடன் ஜீவாவும் உள்ளே நுழைந்தார். உள்ளே வந்த ஐந்து பேரில் ஒரு பெண்ணும் இருந்தாள்.

"ஒத்தரைத்தானே வரச் சொன்னேன்! எதுக்கு அஞ்சாறு பேர் உள்ள வரீங்க?" என்றார் செல்லையா சீற்றத்துடன்.

"ஒரு ஆளா வந்து பேச முடியாது ஐயா. கிராமம் முழுக்க பாதிக்கப்பட்டிருக்கு. எல்லோரும் உள்ளே வந்து உங்ககிட்ட பேசணும்னு துடிக்கிறாங்க. நாங்கதான் அவங்களைக் கட்டுப்படுத்திட்டு ஒரு அஞ்சு பேர் வந்திருக்கோம்" என்றார் உள்ளே வந்த ஐந்து பேரில் ஒருவர்.

"என்ன வேணும் உங்களுக்கு?" என்றார் செல்லையா கோபம் குறையாத தொனியில்.

"ஏற்கெனவே உங்க தொழிற்சாலைக்காக ஆத்திலேந்து தண்ணி எடுத்துக்கறதுக்காகக் கால்வாய் வெட்டி இருக்கீங்க. நாங்க அதை எதிர்த்தே போராடிக்கிட்டிருக்கோம். இப்ப என்னன்னா எங்க கிராமத்திலேந்து ஆத்துக்குப் போற பாதையை அடைச்சு ஒரு தடுப்புச் சுவர் எழுப்பி இருக்கீங்க.நாங்க எப்படி ஆத்துக்குப் போறது?"

"ஆத்துக்கு ஏன் போறீங்க? ஊருக்குள்ள குளம் இருக்குல்ல?"

"நாங்க குளிக்கிறது, குடிக்கிறது, பாசனத்துக்குத் தண்ணி எடுக்கறது எல்லாமே இந்த ஆத்துத் தண்ணியைத்தான். இப்ப ஆத்துக்குப் போக நாங்க அஞ்சு மைல் நடக்கணும். எங்க ஊருல வந்து நாங்க ஆத்துக்குப் போற பாதையை அடைக்கிற மாதிரி சுவர் கட்டி இருக்கீங்களே இது அக்கிரமம் இல்லையா?"

"இந்த ஆத்துத் தண்ணியை நம்பிதான் இங்கே தொழிற்சாலை அமைச்சிருக்கோம். எங்களுக்கு அரசாங்கத்தோட ஆதரவு இருக்கு. தொழிற்சாலை ஆரம்பிச்சப்பறம் கழிவுத் தண்ணியை ஆத்திலதான் விடுவோம். அதனால உங்களால ஆத்துத் தண்ணியை எப்படியும் பயன்படுத்த முடியாது. ஊருக்குள்ள குளம் இருக்கு. அந்தத் தண்ணி பத்தாதுன்னா, கிணறுகள் வெட்டிக்கங்க. மறுபடி இங்கே வராதீங்க. ஊரில ஏதாவது திருவிழா மாதிரி விசேஷம்னா தொழிற்சாலை மானேஜர் கிட்ட கேட்டீங்கன்னா ஆயிரம் ரெண்டாயிரம் கொடுப்பாரு. இன்னொரு தடவை என்னைப் பாக்க வந்து என் நேரத்தை வீணாக்காதீங்க!" என்றார் செல்லையா கடுமையாக.

"கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாம பேசறீங்க. உங்க்கிட்ட பணம் இருக்குங்கற திமிர்தானே! அதெல்லாம் அழிஞ்சு போயிடும். நாங்க பாக்கத்தானே போறோம்!" என்றாள் ஐந்து பேரில் ஒருவரான அந்தப் பெண் அடக்க முடியாத கோபத்துடன்.

"ஜீவா! எங்க போயிட்ட? செக்யூரிட்டியைக் கூப்பிட்டு இவங்களை வெளியில தள்ளச் சொல்லு!" என்று கத்தினார் செல்லையா.

டுப்புச் சுவர் இடிக்கப்பட வேண்டுமென்று கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வழக்குப் போட்டனர். கீழ்நீதி மன்றமும் உயர்நீதி மன்றமும்  தொழிற்சாலைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தன.  

அரசாங்கமும் தொழிற்சாலைக்கு ஆதரவாக இருந்தது. "இப்படி எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் நாட்டில் எந்த வளர்ச்சியும் ஏற்படாது" என்று ஒரு அமைச்சர் கூறினார்.

ரண்டு வருடங்களுக்குப் பிறகு வந்த தேர்தலில் வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், கிராம மக்களுக்கு இடையூறாகக் கட்டப்பட்ட சுற்றுச் சுவர் இடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றம் அந்த உத்தரவுக்குத் தடை பிறப்பிக்க மறுத்து விட்டதால் சுவர் இடிக்கப்பட்டது.

செல்லையா தன் வேறு தொழில்களுக்காக வாங்கிய கடன் தொகை கட்டப்படாததால் சில வங்கிகள் அவருடைய சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கையைத் தொடங்கின. 

செல்லையா வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்வார் என்ற சந்தேகத்தால் அரசாங்கம் விரைவாகச் செயல்பட்டு செல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கியது.

சீட்டுக்கட்டு அடுக்கிலிருந்து ஒரு சீட்டு விழுந்தால் அதைத் தொடர்ந்து எல்லா சீட்டுக்களும் சரிவது போல் செல்லையாவின் எல்லா நிறுவனங்களும் சரியத் தொடங்கின. அவருடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 

செல்லையா விரைவிலேயே கைது செய்யப்படுவார் என்றும் பல மாதங்களுக்கு அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை (மக்கள் அஞ்சம் செயல்களைச் செய்யாமை)

குறள் 566:
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.

பொருள்: 
கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் (முக தாட்சண்யம்) இல்லாதவனாய் உள்ளவனுடைய பெருஞ்செல்வம் நிலைத்து நிற்காமல் விரைவிலேயே கெடும்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

782. அறை நண்பர்கள்!

"நீங்க ஏன் ரெண்டு பேர் இருக்கற இந்த அறையைத் தேர்ந்தெடுத்தீங்க? நீங்க நல்ல வேலையில இருக்கீங்க, தனி அறையையே எடுத்திருக்கலாமே!" என்றான் அரவிந்தன்

"முதல்ல இந்த வாங்க போங்க வேண்டாம். நம்ம ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே வயசுக்காரங்கதான். அதனால, அரவிந்தா, உன் கேள்விக்கு பதில் என்னன்னா, ஐ லைக் கம்பெனி. தனி அறையில இருந்தா நான் செத்துடுவேன்!" என்றான் கேசவன்.

கேசவன் தன் இயல்புக்கேற்ப பல நண்பர்களை உருவாக்கிக் கொண்டான். அவன் நண்பர்கள் பலர் அவர்கள் அறைக்கு அடிக்கடி வந்தனர். அனைவரையுமே அவன் அரவிந்தனுக்கு அறிமுகம் செய்து வைத்தான். ஆனால் அவர்களுடன் நெருக்கமாவதில் அரவிந்தன் அதிக அர்வம் காட்டவில்லை.

ஒரு மாதம் கழித்து அரவிந்தன் அறைக்கு வந்தபோது தன்னுடன் ஒரு நண்பனை அழைத்து வந்தான். ரவி என்ற அந்த நண்பனை கேசவனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

அந்த நண்பன் கிளம்பிச் சென்றதும்,  கேசவன் அரவிந்தனிடம் "உனக்கு ஒரு நண்பன் கிடைக்க ஒரு மாசம் ஆகி இருக்கு. எனக்கு அதுக்குள்ள பத்து நண்பர்கள் கிடைச்சுட்டாங்க!" என்றான்.

"உனக்கு இருக்கிற மாதிரி நண்பர்களை ஈர்க்கிற காந்தத் தன்மை எங்கிட்ட இல்லையோ என்னவோ!" என்றான் அரவிந்தன் விளையாட்டாக.

"என்ன அன்னிக்கு ரவின்னு ஒரு நண்பனை அழைச்சுக்கிட்டு வநத. அப்புறம் அவன் வரவே இல்லையே!" என்றான் கேசவன்.

"ஃபோன்ல பேசிப்போம், வெளியில எங்கேயாவது சந்திச்சுப்போம்" என்ற அரவிந்தன் தொடர்ந்து, "உன் நண்பர்கள்ள கூட பல பேர் இப்பல்லாம் வரதில்லையே?" என்றான்.

"தெரியல.சில பேர்தான் வராங்க. சில பேரோட எனக்கு நெருக்கம் குறைஞ்சு போச்சு. அவங்களுக்கு எங்கிட்ட ஆர்வம் குறைஞ்சுடுச்சா, எனக்கு அவர்கள் கிட்ட ஆர்வம் குறைஞ்சுடுச்சான்னு தெரியல!" என்றான் கேசவன் சிரித்துக் கொண்டே.

"நாம இந்த பேயிங் கெஸ்ட் ஹாஸ்டலுக்கு வந்து சரியா ஒரு வருஷம் ஆச்சு!" என்றான் கேசவன்.

"ஆமாம் காலம் ஓடினதே தெரியல! யாருக்கு முதல்ல கல்யாணம் ஆகி வீடு பாத்துக்கிட்டுப் போகப் போறமோ தெரியல!" என்றான் அரவிந்தன்.

"நீ சொல்றதைப் பாத்தா உனக்கு வீட்டில பெண் பாத்துக்கிட்டிருக்கற மாதிரி தெரியுது!"

"ஆமாம். பாத்துக்கிட்டுத்தான் இருக்காங்க. ஆமாம் உன் விஷயம் என்ன?"

"என் வீட்டில அழுத்தம் கொடுக்கறாங்க. ஆனா நான் தள்ளிப் போட்டுக்கிட்டிருக்கேன்" என்றான் கேசவன்.

"ஏன்?"

"கொஞ்ச நாள் ஜாலியா இருக்கலாம்னு பாத்தேன்."

"முதல்ல அப்படித்தான் இருந்த. ஆனா இப்பல்லாம் அறையை விட்டு அதிகமா வெளியிலபோறதில்ல. உன் நண்பர்களும் அதிகம் வரதில்ல. என்ன ஆச்சு?" என்றான் அரவிந்தன்.

"முதல்ல எனக்கு நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. ஆனா அவங்கள்ள நான் நல்லா செலவழிக்கிறவன், என்னோட இருந்தா காசு செலவழிக்காம சினிமா, ஓட்டல்னு அனுபவிக்கலாம்னு வந்தவங்கதான் அதிகம். அவங்க எண்ணத்தைப் புரிஞ்சுக்கிட்டு நான் அவங்களோட சினிமா, ஓட்டலுக்கெல்லாம் போறதை நிறுத்தினவுடனே அவங்க கொஞ்சம் கொஞ்சாமா எங்கிட்டேந்து விலகிட்டாங்க!" என்றான் கேசவன் சற்று வருத்தத்துடன்.

"ஆமாம்  நான் கவனிச்சேன்." 

"ஆனா உன் விஷயத்தில தலைகீழா நடந்ததை நான் கவனிச்சேன். ஆரம்பத்தில உனக்கு நண்பர்களே இல்ல. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நண்பர்கள் கிடைச்சு இப்ப ஒரு அஞ்சாறு பேரு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். சரியா?"

"சரிதான்" என்றான் அரவிந்தன்.

"ஆனா அவங்களோட உன் நட்பு நல்ல வலுவா இருக்கிற மாதிரி இருக்கு. இத்தனைக்கும் நீ சினிமா, ஓட்டல்னு அதிகம் போற ஆள் இல்ல. "

"ஆமாம். என்னைப் பொருத்தவரை நண்பர்கள்னா அவங்களோட நான் இருக்கிற நேரம் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கணும், அவங்க முகத்தைப் பார்த்தாலே மனசில மகிழ்ச்சியும், நம்பிக்கையும் வரணும். அப்படிப்படவங்களோடதான் நான் நட்பு வச்சுப்பேன். அப்படிப்பட்டவங்களோட நட்பு வலுவாகிக்கிட்டே இருக்குங்கறது என்னோட அனுபவம். சில நண்பர்கள் விஷயத்தில எனக்கும் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கு. அந்த நட்பெல்லாம் தானாவே தேஞ்சு போய், இப்பல்லாம் தற்செயலா சந்திச்சுக்கிட்டா ஹலோன்னு மட்டும் சொல்லிக்கிற அளவுக்குக் குறைஞ்சுடுச்சு" என்றான் அரவிந்தன்.

"அப்படிப் பாத்தா, என்னோட நட்பு ரெண்டாவது வகைதானே? ஏன்னா என்னோட உனக்குப் பழக்கம் ஏற்பட்டது நாம ஒரே அறையில இருக்கறதாலதானே? நீயா தேடிக்கிட்ட நட்பு இல்லையே!" என்றான் கேசவன்.

"நானா தேடிக்கிறேனா, தானா வந்ததாங்கறது முக்கியம் இல்ல. அந்த நட்பு வளருதா,தேயுதாங்றதுதான் கேள்வி. என்னோட சிறந்த நண்பர்கள்ள ஒத்தனாத்தான் உன்னை நினைக்கிறேன், எப்பவுமே அப்படித்தான் நினைப்பேன்!" என்றான் அரவிந்தன் கேசவனின் கைகளைப் பற்றியபடி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு

குறள் 782:
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

பொருள்: 
அறிவுடையவரின் நட்பு வளர்பிறை போல் வளரும் தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு தேய்பிறை போல் தேய்ந்து வரும் தன்மையுடையது.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Sunday, April 3, 2022

565. அண்ணனிடம் கேட்ட உதவி

"ஏங்க, உங்க அண்ணன்கிட்ட நீங்க இதுவரையிலும் எந்த உதவியும் கேட்டதில்லை. இந்த ஒரு தடவை கேட்டுப் பாருங்களேன். நம்ம பையனோட படிப்புக்காகத்தானே கேக்கப் போறோம்?" என்றாள் சரளா.

"ஒரே வீட்டில என்னோட சிரிச்சுப் பேசி, விளையாடி சண்டை போட்டு நெருக்கமா இருந்த அண்ணன்தானா இவன்னு எனக்கே சந்தேகமா இருக்கு. அந்த அளவுக்கு மாறிட்டான். அவன் வீட்டுக்குப் போறதுக்கே எனக்குத் தயக்கமா இருக்கு!" என்றான் குமரன்.

"சின்ன வயசில இருந்த மாதிரியே எப்பவுமே இருப்பாங்களா? என்ன இருந்தாலும் தம்பிங்கற பாசம் அவருக்கு இல்லாம இருக்காது. நீங்க போய் கேட்டுத்தான் பாருங்களேன்" என்றாள் சரளா.

"பாசமா, அவனுக்கா? அதெல்லாம் பணம் வரத்துக்கு முன்னாடி. கையில நாலு காசு வந்ததும் பணத்தைப் பாதுகாக்கிற பூதம் மாதிரி ஆயிட்டான் அவன்! அம்மான்னு நான் ஒருத்தி இருக்கறதையே அவன் மறந்துட்டான். அம்மா தம்பி வீட்டில இருக்காளே, நம்ம வீட்டில கொஞ்ச நாள் வந்து இருக்கச் சொல்லணுங்கற எண்ணம் கூட அவனுக்கு இல்ல. நானா அங்கே போன கூட ஏதோ வேண்டாத விருந்தாளி வந்துட்ட மாதிரி முகத்தை கடுகடுன்னு வச்சுப்பான். எங்கிட்ட ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டான். அவன் பொண்டாட்டிதான் என்னை மதிச்சு சோறாவது போடுவா! அதனாலதான் நான் அங்கே போறதையே நிறுத்திட்டேன். அவன் உனக்கு உதவி செய்யப் போறானா என்ன?" என்றாள் குமரனின் தாய் காந்திமதி, ஆற்றாமையுடன்.

"எதுக்கும் நான் ஒரு தடவை அவனைப் பார்த்து உதவி கேட்டுட்டு வரேன். சின்ன வயசில என்கிட்ட எவ்வளவோ பாசமா இருந்தவன்தானே! அதில கொஞ்சம் கூடவா மீதி இல்லாம போயிடும்?" என்றான் குமரன்

"ரமேஷுக்கு எஞ்சினீரிங் காலேஜ்ல அட்மிஷன் கிடைச்சிருக்கு. ஆரம்பத்தில நிறைய பணம் கட்ட வேண்டி இருக்கு. அதுக்கு மட்டும்  பணம் தேவைப்படுது. அடுத்த செமிஸ்டர் எல்லாம் நானே பாத்துப்பேன். ஆஃபீஸ்ல பி எஃப் லோன் போட்டிருக்கேன். அடுத்த மாசம் வந்துடும். வந்ததும் உன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துடறேன்!" என்றான் குமரன்.

"குமரா! பிசினஸ்காரங்கன்னா கட்டு கட்டா கையில பணம் வச்சுக்கிட்டிருக்கறதா எல்லாரும் நினைக்கிறாங்க. அது தப்பு. நானே பாங்க்ல கடன் வாங்கித்தான் பிசினஸை நடத்திக்கிட்டிருக்கேன். உன் அண்ணி வீட்டுச் செலவுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கேட்டா கூட சில சமயம் எங்கிட்ட இருக்காது. சில சமயம் பிசினஸ்ல நான் பணம் கொடுக்க வேண்டியவங்களுக்கு செக் கொடுத்துட்டு அந்த செக் பாங்க்குக்கு வரப்ப என் மானேஜர் பாங்க்குக்குப் போய் அந்த செக்கை பாஸ் பண்ணச் சொல்லி பாங்க் மானேஜர்கிட்ட கெஞ்ச வேண்டி இருக்கும், நீ பையனை எஞ்சினியரிங் காலேஜில சேர்த்துட்டு ஃபீஸ் கட்ட பணம் தேடிக்கிட்டிருக்கியே அந்த மாதிரி!" என்றான் குமரனின் அண்ணன் ஆதி.

குமரனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அப்போது ஒரு வேலையாள் தயக்கத்துடன் அங்கே வந்து, "ஐயா! அந்த அனாதை இல்லத்திலேந்து மறுபடியும் வந்திருக்காங்க!" என்றான்.

"போன தடவை வந்தப்பவே முடியாதுன்னு சொல்லி அனுப்பி இருக்கணும்! அடுத்த மாசம் வாங்கன்னு ஒரு பேச்சுக்குச் சொன்னதைப் பிடிச்சுக்கிட்டு கரெக்டா வந்துட்டாங்க! நான் வெளியூருக்குக் கிளம்பிக்கிட்டிருக்கேன், இப்ப பாக்க முடியாதுன்னு சொல்லிடு" என்று வேலைக்காரனிடம் கூறிய ஆதி, குமரனிடம் திரும்பி  "அப்புறம், குமரா! வீட்டில எல்லாரும் சௌக்கியம்தானே! அம்மாவை நல்லாப் பாத்துக்க. நான் கொஞ்சம் வெளியல போகணும். அப்புறம் பாக்கலாம்" என்று சொல்லி விட்டு எழுந்தான்.

'புதையலைக் காக்கிற பூதம் மாதிரி என்று தன் அம்மா சொன்னது எவ்வளவு பொருத்தம்!' என்று நினைத்துக் கொண்டே எழுந்தான் குமரன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை (மக்கள் அஞ்சம் செயல்களைச் செய்யாமை)

குறள் 565:
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.

பொருள்: 
எளிதில் காணமுடியாத தன்மையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்ணில் பட்ட செல்வத்தைப் போன்றது.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

781. அப்பாவுக்குப் பிடிக்கவில்லை!

சிறு வயதிலிருந்தே என் அண்ணனுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. பள்ளி நாட்களிலேயே அவன் நண்பர்கள் சிலர் வீட்டுக்கு வருவார்கள்.

என் அப்பாவுக்கு இது பிடிப்பதில்லை. "பள்ளிக்கூடம் போனா படிச்சோம், வீட்டுக்கு வந்தோம்னு இல்லாம, நண்பர்களை எல்லாம் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வரதுன்னு என்ன பழக்கம்?" என்று ஒருமுறை அவர் அவனைக் கடிந்து கொண்டார்.

அதற்குப் பிறகு அவன் நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வருவது குறைந்து விட்டது. ஆனால் அவன் தன் நண்பர்கள் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தான்.

அப்போதும் அப்பா அவனைக் கடிந்து கொண்டார். "ஏண்டா, படிக்காம எப்ப பார்த்தாலும் நண்பர்கள் வீட்டில போய் உக்காந்திருக்கியே!" என்பார் சில சமயம்.

"இல்லப்பா. படிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்!" என்பான் அண்ணன். 

பரீட்சைகளில் அவன் நல்ல மார்க் வாங்கி வந்ததால் அப்பா சமாதானமாகி விட்டார். 

ஆனால் பொதுவாக யாரிடமும் அதிகம் நெருங்கிப் பழகாத இயல்பு கொண்ட என் அப்பாவுக்கு, தன் மகன் பலரிடமும் நட்பு வைத்துக் கொள்வது பிடிக்கவில்லை. அவரைப் பொருத்தவரை நண்பர்கள் என்றால் ஊர் சுற்றுவது, நேலத்தை வீண்டிப்பது என்று பொருள்.

அத்துடன் நண்பர்கள் அதிகம் இருந்தால் அவர்களிடமிருந்து தவறான பழக்கம் எதுவும் தன் மகனுக்கு வந்து விடக் கூடும் என்ற கவலையும் அவருக்கு இருந்தது.

"இவன் பல பேரோட பழகிக்கிட்டிருக்கான். அவங்கள்ள சில பேருக்கு பீடி, சிகரெட் மாதிரி கெட்ட பழக்கம் இருக்கும். இவன் அதையெல்லாம் பழகிக்காம இருக்கணுமே!" என்பார் என் அம்மாவிடம்.

"நம்ம பையன் அப்படியெல்லாம் பழகிக்கிறவன் இல்லை!" என்பார் என் அம்மா, தன் பிள்ளையை விட்டுக் கொடுக்காத அம்மாவின் இயல்புடன்.

ப்போது என் அண்ணன் பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் இரவு என் அப்பா திடீரென்று மார்பைப் பிடித்துக் கொண்டு "திடீர்னு மார் வலிக்குதே!" என்று சொல்லிப் படுத்துக் கொண்டார்.

எங்கள் யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் இருந்தது ஒரு கிராமம். எங்கள் ஊரில் மருத்துவ வசதி கிடையாது. இரண்டு மைல் தள்ளி ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தது. அது கூட இரவில் மூடப்பட்டிருக்கும் என்றாலும் அதில் வேலை பார்க்கும் ஒரே டாக்டர் அருகிலேயே குவார்ட்டர்ஸில்தான் தங்கி இருப்பார். அவசரம் என்றால் அவரை எழுப்பலாம். ஆனால் அப்பாவை அங்கே எப்படி அழைத்துச் செல்வது? அந்தக் காலகட்டத்தில் ஆம்புலன்ஸ் வசதிகள் அதிகம் இல்லை. தொலைபேசி வசதியும் கிடையாது.

"நான் போய் ஏதாவது வண்டி கிடைக்குதான்னு பாத்துட்டு வரேன்" என்று என் அண்ணன் வெளியே ஓடினான்.

அண்ணன் வெளியே சென்று நீண்ட நேரம் ஆகி விட்டது. வண்டி எதுவும் கிடைக்கவில்லை போலிருக்கிறது. அப்பா கட்டிலில் கண்ணை மூடிப் படுத்துக் கொண்டிருந்தார்.வலி குறைந்து விட்டதா அல்லது வலியைப் பொறுத்துக் கொண்டு படுத்துக் கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. நானும் அம்மாவும் செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தோம்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து என் அண்ணன் வந்தான், அவனுக்குப் பின்னால் தோளில் போட்டுக் கொண்டிருந்த ஸ்டெதாஸ்கோப் மூலம் தன்னை ஒரு டாக்டர் என்று அடையாளம் காட்டிய டாக்டர், இன்னொரு மனிதர் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.

"வாங்க டாக்டர்!" என்று டாக்டரை அவசரமாக அப்பாவிடம் அழைத்துச் சென்றான் அண்ணன்.

டாக்டர் அப்பாவைப் பரிசோதித்து விட்டு, தான் எடுத்து வந்த இஞ்ஜெக்‌ஷனைப் போட்டு விட்டு, சில மாத்திரைகளை அம்மாவிடம் கொடுத்து அவற்றை எப்போது கொடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.

போகும்போது அம்மாவைப் பார்த்து, "அவருக்கு வந்தது ஹார்ட் அட்டாக்தான். ஆனா கவலைப்படாதீங்க. இப்ப ஆபத்து எதுவும் இல்ல. இஞ்ஜெக்‌ஷன் போட்டு மாத்திரை கொடுத்திருக்கேன். இப்ப அவர் சரி ஆயிட்டாரு. நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு வாங்க. முழுசா செக் பண்ணிப் பாத்துடலாம்" என்று சொல்லி விட்டுச் சென்றார். 

டாக்டருக்கு நன்றி சொன்ன என் அண்ணன், "நானும் சைக்கிள்ள உங்க கூடவே உங்க வீடு வரையிலும் வரேன் சார்!" என்றான்.

"அதெல்லாம் வேண்டாம்ப்பா! நான் போய்க்கறேன். இது மாதிரி அவசரத்துக்கெல்லாம் ராத்திரியில  வந்துட்டுப் போறது எனக்குப் புதுசு இல்ல" என்றார் டாக்டர்.

பிறகு என் அண்ணன் அந்த இன்னொரு மனிதரைப் பார்த்து "ரொம்ப நன்றி சார். நான் உங்களை சைக்கிள்ள உங்க வீட்டில கொண்டு விட்டுடறேன்" என்றான்.

"வேண்டாம்ப்பா! பக்கத்திலதானே? நான் நடந்தே போய்க்கறேன்" என்றார் அவர்.

அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்றதும், "என்னடா இது! எல்லாமே எனக்கு அதிசயமா இருக்கு! டாக்டரை எப்படிக் கூப்பிட்டுட்டு வந்தே? அவர் கூட வந்தவர் யாரு?" என்றார் என் அம்மா பிரமிப்புடன்.

"அவர் என் நண்பன் கோபாலோட அப்பா. டாக்டரை அவருக்கு நல்லாத் தெரியும்னு கோபால் ஒரு தடவை  எங்கிட்ட சொல்லி இருக்கான். அதனால கோபால் வீட்டுக்குப் போய் அவன்கிட்ட விஷயத்தைச் சொன்னேன்.அவன் அவனோட அப்பாகிட்ட சொன்னதும், அவர் உடனே என்னோட கிளம்பிட்டாரு.அவரை சைக்கிள்ள வச்சு அழைச்சுக்கிட்டு டாக்டர் வீட்டுக்குப் போனேன். கோபாலோட அப்பா டாக்டரை எழுப்பி அவர்கிட்ட விஷயத்தைச் சொன்னதும், டாக்டர் தன்னோட சைக்கிளை எடுத்துக்கிட்டு எங்களோடயே கிளம்பி வந்துட்டாரு. நல்ல வேளையா அப்பாவுக்கு உடனேயே டிரீட்மென்ட் கிடைச்சுது!" என்றான் என் அண்ணன்  

"சின்னப் பசங்க சிநேகத்துக்கு இவ்வளவு சக்தி இருக்கா?" என்றார் என் அம்மா வியப்புடன்.

கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்த அப்பா ஒரு கணம் கண்ணைத் திறந்து அண்ணனைப் பார்த்து வீட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டார்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு

குறள் 781:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

பொருள்: 
நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானது வேறு என்ன இருக்கிறது? அதுபோல் நமக்கு ஏற்படும் இன்னல்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதாக விளங்குவது வேறு எது?

அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...