திருக்குறள்
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல் வகை
1021. தேர்த் திருவிழா
கோவில் தேரோட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது."தேரோட்டம் ரொம்ப சிறப்பா நடந்தது. இவ்வளவு சிறப்பான தேரோட்டத்தை நான் பார்த்ததில்லை" என்றார் ரகுபதி.
"நீங்க இந்த ஊருக்குப் புதுசா வந்திருக்கீங்க. இது எப்பவுமே இப்படித்தான் நடக்கும். இந்த ஊர்ல உள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவங்க எத்தனையோ வருஷமா இதை நடத்திக்கிட்டிருக்காங்க" என்றார் அந்த ஊரைச் சேர்ந்த பசுபதி.
"ஆமாம், சொன்னாங்க. பலராமன்னு ஒத்தர்தான் இந்தத் திருவிழாவோட முழுச் செலவையும் ஏத்துக்கிட்டு நடத்தறார்னு. அவரை நான் பாக்கலியே!"
"அவர் வரலை."
"ஏன்?"
"அவருக்குத் தொழில்ல நஷ்டம் ஏற்பட்டு, ரொம்ப நெருக்கடியில இருக்காராம். அதனால, அவர் சென்னையிலேயே இருக்க வேண்டி இருக்காம். ஒரு நாள் கூட விட்டுட்டு வர முடியாத நிலைமை. அதனால, எப்படியோ பணத்தை மட்டும் ஏற்பாடு செஞ்சு அனுப்பிட்டு, 'எல்லாத்தையும் வழக்கம் போல சிறப்பாச் செய்யுங்க. என்னால வர முடிஞ்சா வந்து கலந்துக்கறேன்' னு சொல்லிட்டாரு. ஆனா, அவரால வர முடியல."
"இந்தத் திருவிழாவுக்கு நிறைய செலவாகி இருக்குமே! அவ்வளவு பணக் கஷ்டத்திலேயும் இந்தத் திருவிழாவுக்கான செலவை ஏத்துக்கிட்டிருக்காரே, பெரிய விஷயம்தான்."
"அவர் நிலைமை தெரிஞ்சு, 'இந்த வருஷம் நாங்க யாராவது பாத்துக்கறோம். அடுத்த வருஷத்திலேந்து பழையபடி நீங்களே நடத்தலாம்'னு ஊர்ல சில பேர் அவர்கிட்ட சொல்லி இருக்காங்க. அதுக்கு அவர், 'இல்லை. இந்த விழாவை நடத்தறது எங்க குடும்பத்துக்குக் காலம் காலமா இருந்துக்கிட்டு வர பெருமை. என் குடிப் பெருமையை நான் காப்பாத்த வேண்டாமா? எனக்கு எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், நான் உயிரோட இருக்கற வரை இந்தத் திருவிழாவை எப்படியோ நடத்திடறேன்'னு சொன்னாராம்" என்றார் பசுபதி.
"இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவிலேயும், தன் குடும்பத்தோட பெருமையைக் காப்பாத்தணும்னு நினைக்கிறது பெரிய விஷயம்தான். எத்தனை பேர் இப்படி இருப்பாங்க!" என்றார் ரகுபதி.
குறள் 1021:
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
பரந்தாமன் ஊரில் ஒரு கௌவமான மனிதர். அவருக்கு ஊரில் சிறிதளவு நிலம் இருந்தது. அவர் வேலை எதுவும் பார்க்கவில்லை. நிலத்திலிருந்து வந்த வருமானத்தை வைத்துத் தன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார்.
ஒருபுறம் நிலத்திலிருந்து வந்து கொண்டிருந்த வருமானம் குறைந்து கொண்டே இருக்க, மறுபுறம் செலவுகள் அதிகரித்துக் கொண்டே போவது, திலீபனின் தாய் சகுந்தலாவுக்குக் கவலை அளித்தது. தன் கவலையை அவள் பல சமயம் தன் கணவனிடம் வெளிப்படுத்தி வந்தாள். ஆனால், பரந்தாமன் அதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. "எல்லாம் பாத்துக்கலாம்!" என்பார்.
இந்தப் பேச்சுக்கள் திலீபனின் காதில் விழுந்து, அவற்றின் பொருள் அவனுக்குப் புரிந்தும், புரியாமலும் இருந்தது.
தந்தை இறந்த சில நாட்களுக்குப் பிறகுதான், தன் தாயின் கவலை எவ்வளவு தீர்க்கதரிசனமானது என்பது திலீபனுக்குப் புரிந்தது. பரந்தாமன் உயிருடன் இருந்தவரை எப்படியோ ஓடிக் கொண்டிருந்த குடும்பம், அவர் மறைவுக்குப் பிறகு தத்தளிக்கத் தொடங்கியது.
பரந்தாமன் அவ்வப்போது பலரிடம் கடன் வாங்கித்தான் குடும்பச் செலவுகளைச் சமாளித்து வந்திருக்கிறார் என்பது அவர் மரணத்துக்குப் பிறகுதான் தெரிந்தது. அவர் மறைவுக்குப் பிறகு கடன்காரர்கள் நெருக்க, நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் சகுந்தலா தடுமாறினாள்.
"அம்மா! நான் பள்ளிக் கூடத்திலேந்து நின்னுக்கறேன். தேவராஜ் ஐயா அவரோட மளிகைக் கடையில என்னை வேலைக்குச் சேத்துக்கறதா சொல்லி இருக்காரு. நான் அங்கே வேலைக்குப் போறேன்!" என்றான் திலீபன், தன் தாயிடம்.
"படிப்பு முக்கியம்டா! படிப்பை நிறுத்தினா, உன் எதிர்காலம் என்ன ஆறது?" என்றாள் சகுந்தலா.
"இப்ப, நம்ம குடும்பத்தோட எதிர்காலம்தாம்மா முக்கியம். நான் படிக்காட்டாலும், என் தம்பியும், தங்கையும் படிக்கறதுக்கு என்னால உதவ முடியுமே!" என்றான் திலீபன்.
திலீபன் மளிகைக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கடைக்குப் பொருட்களை விற்பனை செய்தவர்களுடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள் பொருட்களை மொத்த வியாபாரிகளிடம் விலைக்கு வாங்கிக் கடைகளுக்கு லாபத்தில் விற்று வந்ததாக அவன் அறிந்து கொண்டான்.
தானும் அது போன்ற ஒரு தொழிலைச் செய்யலாமே என்ற ஆர்வம் திலீபனுக்கு ஏற்பட்டது.
திலீபனின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட ஒரு சில்லறை வியாபாரி, அவனை ஒரு மொத்த வியாபாரிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த மொத்த வியாபாரி அவனுக்குப் பொருட்களைக் கடனுக்குக் கொடுக்க ஒப்புக் கொண்டார்.
கடை வேலையைத் துறந்து விட்டு, மொத்த விற்பனையாளரிடம் பொருட்களை வாங்கி, அவற்றை சைக்கிளில் எடுத்துச் சென்று, அருகிலிருந்த ஊர்களில் இருந்த மளிகைக் கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கினான் திலீபன்.
"உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்குடா! உன் அப்பா திடீர்னு இறந்து போனப்பறம், எப்படிக் குடும்பத்தை நடத்தறதுன்னு நான் தவிச்சுக்கிட்டிருந்தப்ப, நீ உன்னைப் பத்தி யோசிக்காம, குடும்ப நலம்தான் முக்கியம்னு நினைச்சு, படிப்பை நிறுத்திட்டு, வேலைக்குப் போன. அப்புறம், கடை வேலையை விட்டுட்டு, மளிகைப் பொருட்களைக் கடைகளுக்கு சப்ளை செய்யற தொழிலை ஆரம்பிச்ச. இன்னிக்கு நீ ஒரு பெரிய விநியோகஸ்தரா இருக்க. உன் தம்பியையும், தங்கையையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்குக் கல்யாணமும் செஞ்சு வச்சுட்ட. உன் தொழிலைப் பெரிசாக்கினதோட, வீடு, நிலம்னு சொத்துக்கள் வாங்கி, கல்யாணம் பண்ணிக்கிட்டு சிறப்பா வாழ்க்கை நடத்தற. உன்னால நம்ம குடும்பத்துக்கே பெருமைடா!" என்றாள் சகுந்தலா.
"என்னோட சின்ன வயசில, நீ அப்பாகிட்ட நம்ம எதிர்காலத்தைப் பத்திக் கவலைப்பட்டுப் பேசிக்கிட்டிருந்ததைக் கேட்டப்ப, நம்ம குடும்பத்தை உயர்த்த ஏதாவது செய்யணுங்கற எண்ணம் என் மனசில அப்பவே உண்டாயிடுச்சு. அப்பா திடீர்னு காலமானதும், ஏதாவது செஞ்சே ஆகணுங்கற உத்வேகம் வந்து, சில முடிவுகளை எடுத்தேன். அதெல்லாம் நல்லபடியா முடிஞ்சதால, நம்ம குடும்பம் இப்ப நல்லா இருக்கு. அதுதாம்மா எனக்குத் திருப்தியா இருக்கற விஷயம்!" என்றான் திலீபன்.
குறள் 1022:
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
"வேலைக்கு முயற்சி பண்ணணும்" என்றான் முகுந்தன்.
"உன்னோட பி ஏ படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்? என் நண்பர் ராமசாமி வேலை செய்யற கம்பெனியில ஒரு வேகன்சி இருக்காம். அந்த வேலையை உனக்கு வாங்கித் தரதா ராமசாமி சொல்றாரு. அங்கேயே சேந்துக்க!"
"அப்பா, அங்கே சம்பளம் ரொம்பக் குறைச்சலாக் கொடுப்பாங்க. கேரியர் டெவலப்மென்ட்டே இருக்காது. சின்ன கம்பெனியில வேலை செஞ்சா, அந்த அனுபவத்தை வச்சு வேற நல்ல வேலைக்கும் முயற்சி பண்ண முடியாது."
"அம்பானியும், அதானியுமா உன்னைக் கூப்பிட்டு வேலை கொடுக்கப் போறாங்க? ஒத்தர் வேலை கொடுக்கறேன்னு சொல்றப்ப, அந்த வேலையை ஏத்துக்கறதுதானே புத்திசாலித்தனம்?"
"எனக்கு ஆறு மாசம் டைம் கொடுங்கப்பா. அதுக்குள்ள எனக்கு நல்ல வேலை கிடைக்கலேன்னா, அந்த வேலையில சேந்துக்கறேன்" என்றான் முகுந்தன்.
"உனக்காக அந்த வேலை காத்துக்கிட்டிருக்குமா என்ன? எப்படியோ போ!" என்றார் சுப்பிரமணியன், கோபத்துடன்.
"நீ சொன்னபடி ஆறு மாசம் ஆச்சு. உனக்கு இன்னும் வேலை எதுவும் கிடைக்கல. என்ன செய்யப் போற?" என்றார் சுப்பிரமணியன்.
"அப்பா! நீங்க கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வச்சீங்க. இனிமேயாவது, நாம வசதியா இருக்கணும், உங்களையும், அம்மாவையும் நல்லா வச்சுக்கணும்னு ஆசைப்படறேன். உங்க நண்பரோட கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தா, நம்ம வாழ்க்கையில எந்த முன்னேற்றமும் இருக்காது. ஆறு மாசத்தில எனக்கு வேலை கிடைக்கும்னு நினைச்சேன். கிடைக்கல. இன்னும் கொஞ்ச நாள் பார்க்கலாமே!" என்றான் முகுந்தன்.
"நீ சொல்றது சரிதான். ஆனா, நமக்கு வேற வழி இல்லையே! உனக்கு வேலை கிடைக்காம போயிடுமோங்கற கவலையிலதான் அப்படிச் சொன்னேன்" என்றார் சுப்பிரமணியன்.
"கவலைப்படாதீங்கப்பா! முயற்சி செஞ்சுக்கிட்டே இருந்தா, அதுக்குப் பலன் கிடைக்காம போகாது" என்றான் முகுந்தன்.
அடுத்த மாதமே, ஒரு பெரிய நிறுவனத்தில், நல்ல சம்பளத்துடனான ஒரு வேலைக்கு முகுந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக வேலை உத்தரவு வந்தது.
குறள் 1023:
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
புவனாவின் தம்பி ரவீந்திரனுக்கு வயது பன்னிரண்டு. அவனுக்குக் கீழ் பத்து வயதில் மாலதி, ஏழு வயதில் சேகர்.
புவனாவின் தந்தை கோவிந்தன் ஒரு சாதாரண வேலையில் இருந்தார். தன் சம்பளத்தை அவர் மனைவியிடம் கொடுத்து விடுவார். அவள்தான் அவர் கொடுத்த சிறு தொகையை வைத்துக் கொண்டு, எப்படியோ குடும்பச் செலவுகளைச் சமாளித்து வந்தாள்.
மனைவி இறந்ததும், குடும்பத்தை நடத்த முடியாமல் கோவிந்தன் தத்தளித்தார். தான் கொடுத்து வந்த சிறிய தொகையில் மனைவி குடும்பச் செலவுகளை எப்படிச் சமாளித்து வந்தாள் என்று அவருக்கு வியப்பாக இருந்தது.
ஒருபுறம் குடும்பப் பொருளாதாரத்தைச் சமாளிக்க வேண்டிய சவால், மறுபுறம் நான்கு குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு.
பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுதியதும், வீட்டு நிர்வாகத்தை புவனா ஏற்றுக் கொண்டாள்.
பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், புவனா தான் மேலே படிக்கப் போவதில்லை என்று தன் தந்தையிடம் கூறி விட்டாள்.
"பிளஸ் டூ வரையிலாவது படிக்க வேண்டாமா?" என்றார் கோவிந்தன்.
"வேண்டாம்பா. வீட்டைப் பாத்துக்க ஒரு ஆள் வேண்டாமா? நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்னுதான் நான் இந்த முடிவை எடுத்திருக்கேன்!" என்றாள் புவனா.
வீட்டு நிர்வாகத்தை புவனா கவனித்துக் கொண்டது, கோவிந்தனுக்குப் பெரிய சுமை குறைந்தது போல் இருந்தது.
தன் பதினெட்டாம் வயதில், தானே முயன்று ஒரு வேலை தேடிக் கொண்டாள் புவனா. ஒரு சிறிய நிறுவனத்தில் பியூன் வேலை.
"நீ சின்னப் பொண்ணு. அதுக்குள்ள வேலைக்குப் போகறேங்கற. அதுவும் பியூன் வேலைக்கு. பொதுவா, பியூன் வேலைக்கு ஆண்களைத்தான் எடுப்பாங்க. உன்னை ஏன் எடுத்திருக்காங்கன்னு தெரியல" என்றார் கோவிந்தன்.
"அப்பா! இந்த கம்பெனியோட எம்.டி ஒரு பெண்மணி. வேலை செய்யறவங்கள்ள நிறைய பேர் பெண்கள்தான். பியூன் வேலைங்கறது ஆஃபீசுக்குள்ளேயே ஃபைல்களை எடுத்துக்கிட்டுப் போறது, அடுக்கி வைக்கறது, பேப்பர்களை ஃபைல்ல போடறது மாதிரியான வேலைகள்தான். கஷ்டமான வேலை இல்லை. உக்காந்து வேலை செய்ய எனக்கு ஒரு மேஜையும் நாற்காலியும் கூடக் கொடுக்கறதா எம்.டி சொல்லி இருக்காங்க. சம்பளம் குறைச்சல்தான்னாலும், நம்ம குடும்பத்துக்கு உதவும் இல்ல?" என்றாள் புவனா.
புவனாவுக்கு முப்பது வயதானபோது, ரவீந்திரன் படிப்பை முடித்து வேலைக்குப் போய் விட்டான். மாலதிக்குத் திருமணம் ஆகி விட்டது. சேகரும் படிப்பை முடித்து, வேலைக்குப் போகத் துவங்கி இருந்தான்.
"நினைச்சுப் பார்த்தாலே எனக்கு மலைப்பா இருக்கும்மா! உங்கம்மா போனப்புறம், உங்களை எல்லாம் எப்படிக் காப்பாத்தி முன்னுக்குக் கொண்டு வரப் போறேன்னு கவலையா இருந்தது. உன் பதினைஞ்சு வயசிலேயே நீ குடும்பப் பொறுப்பை ஏத்துக்கிட்டு, பதினெட்டு வயசில வேலைக்குப் போய், தம்பி தங்கைகளைப் படிக்க வச்சு, மாலதிக்குக் கல்யாணம் செஞ்சு வச்சு... இதெல்லாம் எப்படி நடந்ததுன்னே எனக்கு ஆச்சரியமா இருக்கு!" என்றார் கோவிந்தன்.
"எனக்குக் கூட ஆச்சரியமாத்தான் இருக்குப்பா. அம்மா போனப்புறம், அம்மா இடத்தில இருந்து இந்தக் குடும்பத்தைப் பாத்துக்கணும்னு எனக்குத் தோணிச்சு. அதன்படி செயல்பட ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம், எல்லாம் தானே நடந்த மாதிரிதான் எனக்குத் தோணுது. இப்ப கூடப் பாருங்க. எனக்குப் படிப்பு இல்லாட்டாலும், பியூனா இருந்த என்னை, எங்க எம்.டி தன்னோட பி.ஏ-வா வச்சுக்கிட்டிருக்காங்க. இதெல்லாம் எனக்கே ஆச்சரியமா இருக்குப்பா!" என்றாள் புவனா.
"இனிமே, நீ கல்யாணம் செஞ்சுக்கணும்மா! 'அக்காவுக்குக் கல்யாணம் ஆனப்புறம்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்'னு ரவீந்திரன் கண்டிப்பா சொல்லிட்டான்."
"பாக்கலாம்ப்பா! இவ்வளவு விஷயங்கள் தானா நடந்தப்ப, அதுவும் நடக்கலாம்!" என்றாள் புவனா, சிரித்தபடி.
குறள் 1024:
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.
"பண்ணிக்கறேன், பாட்டி. எனக்கு இன்னும் ஒரு கடமை இருக்கு. அதை முடிச்சுட்டுப் பண்ணிக்கறேன்" என்றான் சண்முகம்.
"வேற என்ன கடமை?"
"சித்தி பொண்ணு கமலாவுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டாமா?"
"உங்கப்பா விவஸ்தை இல்லாம, உன் அம்மாவுக்கு துரோகம் பண்ணிட்டு இன்னொரு பொண்ணோட சகவாசம் வச்சுக்கிட்டான். அவளை நீ சித்தின்னு சொந்தம் கொண்டாடற! உன் அப்பாவே போய்ச் சேர்ந்துட்டான். அவளோட பொண்ணுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டியது உன் பொறுப்பு இல்லை. தேவையில்லாம அதையெல்லாம் இழுத்து விட்டுக்காதே!" என்றாள் தனலட்சுமி.
"இல்லை, பாட்டி. அப்பா இருந்திருந்தா, அவரோட பொண்ணுக்கு அவர் கல்யாணம் செஞ்ச வச்சிருக்க மாட்டாரா? அவர் இல்லாதப்ப, அவரோட கடமையை நான் நிறைவேற்ற வேண்டாமா?" என்றான் சண்முகம்.
அப்போது அவர்கள் தெருவில் இருந்த ஒரு வீட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து, "அண்ணா! அம்மா ஸ்வீட் பண்ணினாங்க. உங்களுக்குக் கொஞ்சம் கொடுத்து அனுப்பி இருக்காங்க" என்றபடியே, சண்முகத்திடம் ஒரு டப்பாவை நீட்டினாள்.
'ஊர்ல இருக்கறவங்கல்லாம் என் பேரனை சொந்தக்காரனா நினைச்சு அன்பு செலுத்தறாங்கன்னா, அவன் அவங்ககிட்ட அந்த அளவுக்கு அன்பு காட்டிக்கிட்டிருக்கான்னு அர்த்தம். அப்படி இருக்கறவன், சொந்தக் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாம இருப்பானா என்ன?' என்று தன் பேரனைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொண்டாள் தனலட்சுமி.
குறள் 1025:
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
"இரைஞ்சு பேசாதேடா. பவித்ரா காதில விழுந்துடப் போகுது!" என்றாள் அவன் தாய் திலகவதி.
"விழுந்தா என்ன? அவகிட்ட எனக்கு என்ன பயம்? அவ என் தங்கைதானே?"
"உன் தங்கைதான். ஆனா, நீ அல்லி ராஜ்யம்னெல்லாம் சொன்னா, அவ சும்மா இருப்பாளா? எனக்கே கோவம் வருதே!"
"உனக்கு ஏன் கோபம் வரணும்?"
"அது என்ன அல்லி ராஜ்யம்? பெண்கள் ஆளக் கூடாதா? இந்தக் காலத்தில கூட, இப்படியெல்லாம் பேசுவாங்களா?"
"சரிம்மா! நான் அல்லி ராஜ்யம்னு சொன்னது தப்புதான். ஆனா, பொதுவா ஒரு குடும்பத்தில, மூத்த பையனுக்கோ, மூத்த பொண்ணுக்கோதானே அதிக மதிப்பு இருக்கணும்? ஆனா, இந்த வீட்டில எல்லாரும் என்னை ஒதுக்கிட்டு, என் தங்கைக்குத்தானே முக்கியத்துவம் கொடுக்கறீங்க?"
"உன்னை யாரும் ஒதுக்கி வைக்கலடா! உன் தங்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கறோம்னா, அவ இந்தக் குடும்பப் பொறுப்பைத் தானே முன்வந்து ஏத்துக்கிட்டா. நீ அப்படிச் செய்யலியே!"
சரவணன் மௌனமாக இருந்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் அவன் மனதில் வந்து போயின.
அப்போது சரவணன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். பவித்ரா பள்ளி இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். சரவணனின் தந்தை பரமசிவம் தினமும் குடித்து விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சம்பளப் பணத்தைத் திலகவதியிடம் கொடுத்தாலும், குடிப்பதற்கு அவளிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பணத்தைக் கேட்டு வாங்கிக் கொள்வார்.
ஒருநாள், பவித்ரா, திலகவதியிடமிருந்து மொத்தப் பணத்தையும் வாங்கி வைத்துக் கொண்டாள். "இனிமே யாருக்கு என்ன செலவுன்னாலும், எங்கிட்டதான் கேட்டு வாங்கிக்கணும்!" என்றாள்.
குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்ட பரமசிவம், பணம் தன் பெண்ணிடம் போய் விட்டது என்று தெரிந்ததும், அவளிடம் சென்று கேட்டார்.
"குடிக்கறதுக்குப் பணம் கிடையாது, அப்பா! அதோட இல்ல, இனிமே நீ குடிச்சுட்டு வந்தா, நான் உன்னோட பேச மாட்டேன்!" என்றாள் பவித்ரா.
"என்னம்மா, குழந்தை மாதிரி பேசற?" என்றார் பரமசிவம்.
ஆனால், மனைவியிடம் காட்டிய அதிகாரத்தையும், கடுமையையும் அவரால் மகளிடம் காட்ட முடியவில்லை..
அதற்குப் பிறகு, பரமசிவம், சில சமயம் நண்பர்களிடம் கடன் வாங்கிக் குடித்து வந்தார். ஆனால், பவித்ரா தான் சொன்னபடியே அவரிடம் பேசாமல் இருந்தது, நாளடைவில் அவரைக் குடிப் பழக்கத்தைக் கைவிட வைத்தது.
"அவ ஒரு பொண்ணுங்கறதால, அப்பா அவ சொன்னதையெல்லாம் கேட்டுக்கிட்டார். அதையே நான் சொல்லி இருந்தா, கேட்டிருப்பாரா? என்னை அடிச்சுப் பணத்தைப் பிடுங்கிக்கிட்டுப் போயிருக்க மாட்டாரா" என்றான் சரவணன்.
"சும்மா சாக்கு சொல்லாதேடா! நீ அதற்கான முயற்சியே செய்யல. ஆனா, இப்படியே போனா, நம்ம குடும்பம் சீரழிஞ்சுடும்னு நினைச்சு, பவித்ரா துணிச்சலாச் செயல்பட்டா. அதனாலதான், நானும் அப்பாவும் அவ பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கறோம். அதுக்காக, உனக்கு முக்கியத்துவம் கொடுக்காம இல்ல. ஏன், பவித்ராவே உனக்கு நிறைய மதிப்புக் கொடுத்துக்கிட்டுத்தான் இருக்கா" என்றாள் திலகவதி.
அப்போது உள்ளிருந்து வந்த பவித்ரா, சரவணனிடம், "அண்ணா! நாளைக்கு காலேஜ் லீவு. என் நண்பர்கள் என்னை சினிமாவுக்குக் கூப்பிடறாங்க. போயிட்டு வரட்டுமா?" என்றாள்.
"என்னை ஏன் கேக்கற?" என்றான் சரவணன்.
"என்ன அண்ணா இது? அப்பா ஊர்ல இல்ல. நீதானே பெரியவன்? உன்னைத்தானே கேட்கணும்?"
"சரி, போயிட்டு வா. என்ன சினிமா?" என்றான் சரவணன்.
"அல்லி அர்ஜுனா" என்றாள் பவித்ரா.
அதைக் கேட்டு, அம்மாவும், அண்ணனும் ஏன் சிரித்தார்கள் என்று அவளுக்குப் புரியவில்லை.
குறள் 1026:
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
காலை ஆறு மணிக்கு வாசல் கதவு தட்டப்பட்டது. சங்கரனின் மனைவி கல்யாணி கதவைத் திறந்தாள்
வாசலில் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், "சார் இருக்காரா?" என்றான், ஒரு மாதிரியாகச் சிரித்துக் கொண்டே
"நீங்க யாரு?"
"சாருக்கு ரொம்ப வேண்டியவங்க. நாகராஜ்னு சொல்லுங்க, தெரியும்!" என்றான் அவன்.
"உள்ளே வாங்க" என்ற கல்யாணி, அவர்களை முன்னறையில் உட்காரச் சொல்லி விட்டு, தூங்கிக் கொண்டிருந்த சங்கரனை எழுப்ப, உள்ளே சென்றாள்.
தன்னை நாகராஜ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன் மட்டும் சோஃபாவில் உட்கார, மற்றவன் நின்று கொண்டிருந்தான்..
முன்னறையில் அமர்ந்திருந்தவர்களைக் கண்டதும், தூக்கத்திலிருந்து எழுந்து வந்த சங்கரனின் முகம் வெளிறியது.
"ஏன் வீட்டுக்கு வந்தீங்க?" என்றார் சங்கரன், பலவீனமான குரலில்.
"பின்னே? கடன் வாஙு்கி சீட்டாடிட்டுக் கடனைத் திருப்பிக் கொடுக்காம, வீட்டுக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டிருந்தா, நான் சும்மா உக்காந்துக்கிட்டிருக்கணுமா? பணத்தை எப்ப திருப்பிக் கொடுக்கப் போற?" என்றான் நாகராஜ்.
"கொடுத்துடறேன். நீங்க முதல்ல கிளம்புங்க, என் மனைவி மகன்களுக்குத் தெரிஞ்சா, என்னைக் கேவலமா நினைப்பாங்க."
"நீ கேவலமானவன்தானேடா? நானே அவங்களைக் கூப்பிட்டுச் சொல்றேன். உள்ளே யாரு? எல்லாரும் வெளியில வாங்க!" என்று உரத்த குரலில் கூவினான் நாகராஜ்.
உள்ளிருந்து கல்யாணியும், சங்கரனின் மூன்று மகன்களும் முன்னறைக்கு வந்தனர்.
"இந்தப் பெரிய மனுஷன் எங்கிட்ட கடன் வாங்கி சீட்டாடி இருக்கான். எனக்கு மொத்தம் அம்பதாயிரம் ரூபா தரணும். அதை உடனே கொடுக்கலேன்னா என்ன ஆகும் தெரியுமா?" என்றான் நாகராஜ்.
சங்கரன் தலைகுனிந்து நிற்க, மற்ற நான்கு பேரும், பயத்துடன் நாகராஜின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நாகராஜ் தன் அருகில் நின்று கொண்டிருந்த ஆளைக் காட்டி, "இவன் இந்த ஊரிலேயே பெரிய ரௌடி. கடனை வசூலிக்கிறதில கில்லாடி. சில பாங்க்ல கூட இவனைப் பயன்படுத்தறாங்க. இவன்கிட்ட பொறுப்பைக் கொடுத்துட்டேன்னா, இவன் என்ன செய்வான்னு எனக்குத் தெரியாது. உங்க வீடு இப்ப இருக்கற மாதிரி இருக்காது. நீங்களும் இப்ப இருக்கற மாதிரி இருக்க மாட்டீங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும். உங்களுக்கு ஒரு வாரம் டயம். வர திங்கட்கிழமைக்குள்ள எனக்குப் பணம் வந்து சேராட்டா, செவ்வாய்க்கிழமை காலையில, இவன் உங்க வீட்டுக்கு வருவான்" என்ற நாகராஜ், "வாடா போகலாம்" என்று தன்னுடன் வந்தவனைப் பார்த்துக் கூறி விட்டு எழுந்தான்.
"ஒரு நிமிஷம்!"
நாகராஜ் திரும்பிப் பார்த்தான்.
சங்கரனின் மூன்று மகன்களில் இளையவனாக இருந்தவன்தான் பேசினான்.
"இன்னும் ஒரு வாரத்தில நானே உங்க வீட்டுக்கு வந்து பணத்தைக் கொடுக்கறேன். எங்க வீட்டுக்கு வரது, ரௌடியை வச்சு மிரட்டறது இதெல்லாம் வேண்டாம்!" என்றான் அவன்.
"நீ யாருடா சின்னப்பய? உன் பேச்சை நான் நம்பணுமா?" என்றான் நாகராஜ்.
"மரியாதை வேணும், தம்பி. அப்பதான் உனக்கு மரியாதை கிடைக்கும். இப்பவே என்ன ஆச்சு பாரு. உங்கிட்ட மரியாதையாப் பேசிக்கிட்டிருந்த என்னையே வா, போன்னு பேச வச்சுட்ட. முதல்ல இடத்தைக் காலி பண்ணு!" என்றான் சங்கரனின் இளைய மகன்.
நாகராஜ் பேசாமல் அங்கிருந்து அகன்றான்.
நாகராஜ் சென்றதும், கல்யாணி தன் இளைய மகனைப் பார்த்து, "ஏண்டா மணி, உன்னோட ரெண்டு அண்ணன்களும் சும்மா இருக்காங்க. நீ பாட்டுக்குப் பணம் தரேன்னு சொல்லிட்ட. எப்படிக் கொடுக்கப் போற!" என்றாள்.
"ஆமாம். இவர் பெரிய வேலையில இருக்காரு இல்ல? இவருக்கு பாங்க்ல பர்சனல் லோன் கொடுப்பாங்க. அதை வாங்கி அந்த ரௌடிகிட்ட கொடுத்துக் கடனை அடைச்சுடுவாரு!" என்றான் சங்கரனின் இரண்டாவது மகன் சுதாகர்.
"நீங்க ரெண்டு பேரும் நல்ல வேலையில இருக்கீங்க. எனக்குப் படிப்பு வராததால, ஒரு மெகானிக் ஷாப்ல வேலை செய்யறேன். நான் ரொம்ப நல்லா வேலை செய்யறதைப் பார்த்துட்டு, என் முதலாளி, 'உனக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளு, செய்யறேன். ஆனா, வேலையை விட்டுப் போயிடாதே'ன்னு எங்கிட்ட அடிக்கடி சொல்லுவாரு. அதனால, அவர்கிட்ட அம்பதாயிரம் ரூபா அட்வான்ஸ் கேட்டா, கண்டிப்பாக் கொடுப்பாரு. என் சம்பளத்திலேந்து மாசம் அஞ்சாயிரம் பிடிச்சுக்கச் சொல்லி, ஒரு வருஷத்துக்குள்ள அந்தக் கடனை அடைச்சுடுவேன்" என்றான் மணி.
அனைவரும் மௌனமாக இருந்தனர்.
மணி தன் அப்பாவிடம், "அப்பா! இந்த சீட்டாடறதையெல்லாம் இனிமே விட்டுடுங்க. இன்னிக்கு நடந்த மாதிரி இன்னொரு தடவை நடக்கக் கூடாது" என்றான், சற்றுக் கடுமையான குரலில்.
"ஆமாம்ப்பா! மணி சொல்றதைக் கேளுங்க. அவன் நம்ம குடும்பத்தோட மானத்தைக் காப்பாத்தி இருக்கான். அவன் கடைக்குட்டியா இருந்தாலும், உங்ககிட்ட இப்படிச் சொல்ல எங்க ரெண்டு பேரை விட அவனுக்குத்தான் அதிக உரிமை இருக்கு!" என்றான் சங்கரனின் மூத்த மகன் தனசேகர், தம்பியைப் பெருமையுடன் பார்த்தபடி.
குறள் 1027:
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
"வேலைக்கு!" என்றாள் அவர் மனைவி தங்கம்.
"வேலைக்கா? அவன் கம்பெனியில நைட் ஷிஃப்ட் இருக்கா என்ன?"
"இல்லை. இது வேற வேலை. ஒரு கால் சென்ட்டர்ல, பார்ட் டைம் வேலை. ராத்திரி 8 மணியிலேந்து 12 மணி வரைக்கும்."
"அவனுக்கு புத்தி கெட்டுப் போச்சா என்ன? பகல்ல வேலை பார்த்துட்டு, ராத்திரியிலேயும் வேலை பாக்க முடியுமா என்ன?"
"அவன் வேலை காலையில ஒன்பது மணியிலேந்து சாயந்திரம் அஞ்சு மணி வரைக்கும்தானே? ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்துடறான். ஏழரை மணிக்கு, கால் சென்ட்டர்லேந்து கார் வந்து அழைச்சுக்கிட்டுப் போயிடும். பன்னிரண்டரை மணிக்கு வீட்டில கொண்டு விட்டுடுவாங்க. அதுக்கப்புறம், ஏழு மணி நேரம் தூங்கலாமே, அது போதாதான்னு கேக்கறான்."
"அவன் ஒரு கம்பெனியில மானேஜரா இருக்கான். அப்படி ஒரு பதவியில இருந்துக்கிட்டு, கால் சென்ட்டர்ல பார்ட் டைம் வேலை பாக்கறது கௌரவமாவா இருக்கு?"
"கௌரவத்தைப் பார்த்தா காசு வராது. ஆனா, இதில கௌரவக் குறைச்சலா எதுவும் இல்லை. அந்த கால் சென்ட்டர்ல, ஃபிரெஞ்ச் தெரிஞ்சவங்க வேணும்னு விளம்பரம் கொடுத்திருந்தாங்க. இவன் காலேஜில ஃபிரெஞ்ச் படிச்சதால, அந்த வேலைக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கான். அவங்க இன்டர்வியூவுக்குக் கூப்பிட்டாங்க. இன்டர்வியூவில, என்னால ராத்திரி 8 மணியிலேந்து 12 மணி வரையிலேயும்தான் வேலை செய்ய முடியும்னு சொல்லி இருக்கான். அவங்களும் ஒத்துக்கிட்டு வேலை கொடுத்திருக்காங்க."
"என்ன இருந்தாலும், ஒரு கம்பெனியில மானேஜரா இருந்துக்கிட்டு, இது மாதிரி கால் சென்ட்டர்ல பார்ட் டைம் வேலை செய்யறது கௌரவமானது இல்லை. பணம் கிடைக்குதுங்கறதுக்காக இப்படிச் செய்யலாமா? அதோட, அவன் முதலாளிக்கு இது தெரிஞ்சா, அவர் அவனை வேலையை விட்டு அனுப்பிடுவாரு."
"அவன் வேலை பாக்கறது ஒரு சின்ன கம்பெனி. மானேஜர்னுதான் பேரு. ஆனா, சம்பளம் குறைச்சல். அதனால, கூடுதல் வருமானத்துக்காக இதைச் செய்யறான். அவன் முதலாளிகிட்ட அனுமதி வாங்கிக்கிட்டுத்தான் இந்த வேலைக்குப் போறான். அதனால, அவன் வேலைக்கு ஒண்ணும் ஆபத்து வராது. அது சரி. நீங்க போயிட்டு வந்த விஷயம் என்ன ஆச்சு?"
"வேலை கிடைக்கல" என்றார் பாலகிருஷ்ணன், சோர்வுடன்.
"உங்க மேலதிகாரியோட சண்டை போட்டுட்டு, ஒரு நல்ல வேலையை விட்டுட்டு வந்துட்டீங்க. வேற வேலை கிடைக்க மாட்டேங்குது. வருமானம் இல்லாம குடும்பம் எப்படி ஓடும்? அதனாலதான், முகுந்தன், தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல, குடும்பம் நல்லா இருக்கணுங்கறதுக்காக, ராத்திரியிலேயும் வேலைக்குப் போறான். நீங்க அதில குற்றம் கண்டுபிடிக்கறீங்க!" என்றாள் தங்கம், ஆற்றாமையுடன்.
குறள் 1028:
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
சீதாராமன் மௌனமாக இருந்தான்.
"வீட்டை அடமானம் வச்சு எதுக்குடா பணம் வாங்கின?" என்றாள் ருக்மிணி, கோபத்துடன்.
"பிசினசுக்காக வாங்கினேன். பிசினஸ்ல நஷ்டம் வந்துடுச்சு. அதுக்கு என்ன செய்ய முடியும்?" என்றான் சீதாராமன், அலட்சியமாக.
"எத்தனையோ தலைமுறையா வாழ்ந்த வீட்டை ஏலம் போக விடறது பெரிய பாவம்டா!"
"ஏங்க, அத்தை இவ்வளவு வருத்தப்படறாங்க. வீடு ஏலம் போகாம இருக்க எதுவும் செய்ய முடியாதா?" என்றாள் சீதாராமனின் மனைவி ரமா.
"எங்கேயாவது அஞ்சு லட்ச ரூபா புரட்டிக் கொடு. வீட்டை மீட்டுடலாம்" என்ற சீதாராமன், "அது சரி, இந்த சிவாவை எங்க காணோம்?" என்றான், பேச்சை மாற்றும் விதமாக
"அவனுக்கு ஜுரம்னு படுத்துக்கிட்டிருக்கான். உனக்குத்தான் வீட்டில என்ன நடக்குதுன்னே தெரியாதே!" என்றாள் ருக்மிணி.
"இல்லை, அத்தை. ஜுரத்தோடயே எங்கேயோ வெளியில போயிருக்கான்" என்றாள் ரமா.
"நானும் பத்து நாளாப் பாத்துக்கிட்டிருக்கேன். வேலைக்குப் போயிட்டு வந்ததும், எங்கேயாவது வெளியில போயிடறான். இன்னிக்கு வேலைக்குப் போகாம, வெளியில எங்கேயோ சுத்தப் போயிருக்கான். பொறுப்பு இல்லாத பய!" என்றான் சீதாராமன், கோபத்துடன்.
"பரம்பரையா வந்த வீட்டை அடமானம் வச்சுட்டு, அது ஏலம் போகிற நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிற நீ, பொறுப்பைப் பத்திப் பேசற! இந்த வீடு மட்டும் ஏலத்துக்குப் போச்சு, நான் விஷத்தைக் குடிச்சு செத்துடுவேன்" என்றாள் ருக்மிணி.
"வீடு ஏலம் போறதைத் தடுக்க முடியாதும்மா!"
"அப்படின்னா, என்னை இப்பவே விஷத்தைக் குடிக்கச் சொல்றியா?"
அப்போது அவர்கள் வீட்டுத் தொலைபேசி அடித்தது.
தொலைபேசியை எடுத்துப் பேசிய சீதாராமன், பேசி முடித்து ரிசீவரை வைத்தபின், "சிவா ரோட்டில மயக்கம் போட்டு விழுந்துட்டானாம். ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்களாம்" என்றான், பதற்றத்துடன்.
மூவரும் உடனே மருத்துவமனைக்கு விரைந்தனர்.
"ரொம்ப வீக்கா இருக்காரும்மா. ஜுரம் இருக்கு. அதோட, ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்கிட்டிருப்பாரு போல இருக்கு. டீஹைட்ரேட் ஆகி, மயக்கம் போட்டு விழுந்திருக்காரு. டிரிப்ஸ் ஏத்தி இருக்கோம். நாளைக்கு வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போகலாம். உடம்பைக் கொஞ்சம் நல்லாப் பாத்துக்கங்க. இந்தச் சின்ன வயசில, இவ்வளவு பலவீனமா இருக்கக் கூடாது!" என்றார் மருத்துவர்.
"அவன் குழந்தையா இருந்ததிலிருந்தே ரொம்ப பலவீனமா இருக்கான், டாக்டர். அடிக்கடி உடம்புக்கு ஏதாவது வந்துடுது" என்றாள் ரமா.
"ரெண்டு மூணு நாள் நல்ல ஓய்வு எடுத்துக்கட்டும். அப்புறமா, செக் அப்புக்கு அழைச்சுக்கிட்டு வாங்க. என்னன்னு பார்த்து சரி பண்ணிடலாம்" என்றார் மருத்துவர்.
கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த சிவாவின் அருகில் மூவரும் சென்றனர்.
"ஏண்டா ஜுரத்தோட இப்படி அலைஞ்சு உடம்பை இன்னும் கெடுத்துக்கிட்ட?" என்றாள் ரமா, ஆதங்கத்துடன்.
சிவா மூவரையும் பார்த்து, "உங்க எல்லாருக்கும் ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி இருக்கு. எதை முதல்ல சொல்லட்டும்?" என்றான்.
"கெட்ட செய்திதான் வந்துக்கிட்டே இருக்கே! நல்ல செய்தி என்ன? அதைச் சொல்லு, முதல்ல" என்றாள் ரமா.
"பத்து நாளா அலைஞ்சு, என்னோடநண்பர்கள் பல பேரைப் பார்த்து, ஒவ்வொருத்தர்கிட்டயும் கொஞ்சம் கடன் வாங்கி அஞ்சு லட்ச ரூபா சேத்துட்டேன். அந்தப் பணத்தை பாங்க்ல கட்டி, நம்ம வீட்டை மீட்டுட்டேன். எல்லாம் முடிஞ்சப்புறம், உங்ககிட்ட சொல்லலாம்னு நினைச்சேன். பாங்க்லேந்து வீட்டுக்கு வரப்பதான் மயங்கி விழுந்துட்டேன். அப்பா! நாளைக்கு நீங்க பாங்க்குக்குப் போய், வீட்டுப் பத்திரத்தை வாங்கிக்கிட்டு வந்துடுங்க" என்றான் சிவா.
"இவ்வளவு பொறுப்பா இருந்து, குடும்ப மானத்தைக் காப்பாத்தின பிள்ளைக்கு ஏன் உடம்பு இப்படிப் படுத்துதுன்னு தெரியல. கடவுள் புண்ணியத்தில, இனிமே உன் உடம்பும் சரியாயிடணும்" என்று கூறிப் பேரனின் கரங்களை அன்புடன் பற்றிக் கொண்டாள் ருக்மிணி.
"அது சரி. கெட்ட செய்தின்னு சொன்னியே, அது என்ன?" என்றாள் ரமா, கவலையுடன்.
"இனிமே, என்னால வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுக்க முடியாது. என் சம்பளப் பணம் பூராவும் கடனை அடைக்கத்தான் போகும்!"
"கெட்ட செய்தி என்னவா இருக்குமோன்னு பயந்துக்கிட்டிருந்தேன். என் வயத்தில பாலை வார்த்த. உன் அப்பா கொடுக்கற பணத்திலேயே, குடும்பத்தை நடத்திக்கறேன். அவரால பணம் கொடுக்க முடியாம போனா, நான் ஏதாவது வேலை செஞ்சு, குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்கறேன்! நீ கடனை அடைச்சு, வீட்டை ஏலம் போகாம தடுத்ததே பெரிய விஷயம். உன் உடம்பு சரியாகி, நீ நல்ல தென்போட இருக்கணுங்கறதுதான் இப்ப என்னோட ஒரே கவலை" என்றாள் ரமா.
குறள் 1029:
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.
"வாப்பா! நீ எப்படி இருக்க?" என்றாள் முத்துலட்சுமி.
"நல்லா இருக்கேம்மா" என்ற சீனு, சற்றுத் தயங்கி விட்டு, "பெரியப்பா போய் ஆறு மாசம் ஆயிடுச்சு இல்ல?" என்றான்.
"ஆமாம். எனக்கு ஆறு வருஷம் ஆன மாதிரி இருக்கு. ஒவ்வொரு நாளும் போகறதுக்குள்ள, ஒரு யுகமே போற மாதிரி இருக்கு."
"முருகன், பிரபாகர் எல்லாம் எங்கே?"
"அவங்க எப்ப வீட்டில இருந்திருக்காங்க? எங்கேயாவது ஊர் சுத்திக்கிட்டிருப்பாங்க!" என்றாள் முத்துலட்சுமி, சலிப்புடன்.
"வேலைக்குப் போறாங்க இல்ல?"
"எங்கே? எங்க மேல இரக்கப்பட்டு, ஒத்தர் முருகனுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தாரு. ரெண்டே மாசத்தில, அதை விட்டுட்டு வந்துட்டான். பிரபாகர்கிட்ட ஏதாவது வேலைக்குப் போடான்னா, நல்ல வேலை கிடைச்சாதான் போவானாம். பிளஸ் டூ கூட பாஸ் பண்ணாதவனுக்கு, நல்ல வேலை எங்கே கிடைக்கும்?"
"எப்படிப் பெரியம்மா சமாளிக்கிறீங்க?"
"இருக்கறதை வச்சு, ஏதோ ஓட்டிக்கிட்டிருக்கேன். இது எத்தனை நாளைக்கு ஓடும்னு தெரியல. இப்படியே போனா, நடுத்தெருவுக்கு வந்துடுவோமோன்னு பயமா இருக்கு. ஆனா, என் ரெண்டு பிள்ளைகளுக்கும் இந்தக் கவலை கொஞ்சம் கூட இல்லையே!" என்றாள் முத்துலட்சுமி, பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு.
"பெரியம்மா! தப்பா நினைச்சுக்காதீங்க. இதைச் செலவுக்கு வச்சுக்கங்க. என்னால முடிஞ்ச சின்னத் தொகை இது" என்றபடியே, சில ரூபாய் நோட்டுக்களை முத்துலட்சுமியிடம் நீட்டினான் சீனு.
"உங்கப்பா சின்ன வயசிலேயே போய்ச் சேர்ந்துட்டாரு. ஆனா, சின்னப் பையங்களா இருந்த நீயும், தனராஜும் எவ்வளவு பொறுப்பா குடும்பத்தைப் பாத்துக்கறீங்க! கஷ்டப்படற எனக்குக் கூட உதவி செய்யற! என்னோட பிள்ளைகளுக்கு அந்தப் பொறுப்பு இல்லையே! நீ நல்லா இருக்கணும்ப்பா!" என்று கூறியபடியே, சீனு கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டாள் முத்துலட்சுமி.
குறள் 1030:
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி
No comments:
Post a Comment