"வேலைக்கு!" என்றாள் அவர் மனைவி தங்கம்.
"வேலைக்கா? அவன் கம்பெனியில நைட் ஷிஃப்ட் இருக்கா என்ன?"
"இல்லை. இது வேற வேலை. ஒரு கால் சென்ட்டர்ல, பார்ட் டைம் வேலை. ராத்திரி 8 மணியிலேந்து 12 மணி வரைக்கும்."
"அவனுக்கு புத்தி கெட்டுப் போச்சா என்ன? பகல்ல வேலை பார்த்துட்டு, ராத்திரியிலேயும் வேலை பாக்க முடியுமா என்ன?"
"அவன் வேலை காலையில ஒன்பது மணியிலேந்து சாயந்திரம் அஞ்சு மணி வரைக்கும்தானே? ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்துடறான். ஏழரை மணிக்கு, கால் சென்ட்டர்லேந்து கார் வந்து அழைச்சுக்கிட்டுப் போயிடும். பன்னிரண்டரை மணிக்கு வீட்டில கொண்டு விட்டுடுவாங்க. அதுக்கப்புறம், ஏழு மணி நேரம் தூங்கலாமே, அது போதாதான்னு கேக்கறான்."
"அவன் ஒரு கம்பெனியில மானேஜரா இருக்கான். அப்படி ஒரு பதவியில இருந்துக்கிட்டு, கால் சென்ட்டர்ல பார்ட் டைம் வேலை பாக்கறது கௌரவமாவா இருக்கு?"
"கௌரவத்தைப் பார்த்தா காசு வராது. ஆனா, இதில கௌரவக் குறைச்சலா எதுவும் இல்லை. அந்த கால் சென்ட்டர்ல, ஃபிரெஞ்ச் தெரிஞ்சவங்க வேணும்னு விளம்பரம் கொடுத்திருந்தாங்க. இவன் காலேஜில ஃபிரெஞ்ச் படிச்சதால, அந்த வேலைக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கான். அவங்க இன்டர்வியூவுக்குக் கூப்பிட்டாங்க. இன்டர்வியூவில, என்னால ராத்திரி 8 மணியிலேந்து 12 மணி வரையிலேயும்தான் வேலை செய்ய முடியும்னு சொல்லி இருக்கான். அவங்களும் ஒத்துக்கிட்டு வேலை கொடுத்திருக்காங்க."
"என்ன இருந்தாலும், ஒரு கம்பெனியில மானேஜரா இருந்துக்கிட்டு, இது மாதிரி கால் சென்ட்டர்ல பார்ட் டைம் வேலை செய்யறது கௌரவமானது இல்லை. பணம் கிடைக்குதுங்கறதுக்காக இப்படிச் செய்யலாமா? அதோட, அவன் முதலாளிக்கு இது தெரிஞ்சா, அவர் அவனை வேலையை விட்டு அனுப்பிடுவாரு."
"அவன் வேலை பாக்கறது ஒரு சின்ன கம்பெனி. மானேஜர்னுதான் பேரு. ஆனா, சம்பளம் குறைச்சல். அதனால, கூடுதல் வருமானத்துக்காக இதைச் செய்யறான். அவன் முதலாளிகிட்ட அனுமதி வாங்கிக்கிட்டுத்தான் இந்த வேலைக்குப் போறான். அதனால, அவன் வேலைக்கு ஒண்ணும் ஆபத்து வராது. அது சரி. நீங்க போயிட்டு வந்த விஷயம் என்ன ஆச்சு?"
"வேலை கிடைக்கல" என்றார் பாலகிருஷ்ணன், சோர்வுடன்.
"உங்க மேலதிகாரியோட சண்டை போட்டுட்டு, ஒரு நல்ல வேலையை விட்டுட்டு வந்துட்டீங்க. வேற வேலை கிடைக்க மாட்டேங்குது. வருமானம் இல்லாம குடும்பம் எப்படி ஓடும்? அதனாலதான், முகுந்தன், தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல, குடும்பம் நல்லா இருக்கணுங்கறதுக்காக, ராத்திரியிலேயும் வேலைக்குப் போறான். நீங்க அதில குற்றம் கண்டுபிடிக்கறீங்க!" என்றாள் தங்கம், ஆற்றாமையுடன்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல் வகை
குறள் 1028:
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
No comments:
Post a Comment