திருக்குறள்
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு
821. நகுலன் கொடுத்த விலை!
நகுலனைத் தன் நிறுவனத்தில் ஒர்க்கிங் பார்ட்னராகச் சேரும்படி சுகுமார் அழைத்தபோது, நகுலன் முதலில் தயங்கினான்.இருவரும் கல்லுரியில் இணைந்து படித்திருந்தாலும், படித்த காலத்தில் இருவருக்குமிடையே அவ்வளவு நெருக்கம் இருந்ததில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு தற்செயலாகச் சந்தித்த பிறகு, இருவருக்குமிடையே சற்று நெருக்கம் ஏற்பட்டது.
"நீ மார்க்கெடிங்ல நல்ல அனுபவம் உள்ளவன். எங்கிட்ட தொழிற்சாலை இருக்கு. ஒரு மார்க்கெடிங் மானேஜர் இருந்தா, என் கம்பெனியை என்னால இன்னும் மேலே கொண்டு வர முடியும்" என்றான் சுகுமார்.
"அதுக்கு ஒரு நல்ல மார்க்கெடிங் மானேஜரைப் போட வேண்டியதுதானே? எதுக்கு என்னை ஒர்க்கிங் பார்ட்னரா வரச் சொல்ற?" என்றான் நகுலன்
"நான் நிறைய பேரை இன்டர்வியூ பண்ணிட்டேன். யாரும் எனக்குத் திருப்தியா இல்ல. அதனால, உனக்கு இந்த வேலையை ஆஃபர் பண்ண நினைச்சேன். என் நண்பனான உன்னை எங்கிட்ட வேலை செய்யச் சொல்றது சரியா இருக்காது. அதனாலதான், உன்னை ஒர்க்கிங் பார்ட்னரா சேரச் சொல்றேன். நீ மார்க்கெடிங்கைப் பாத்துக்க. நான் ப்ரொடக்ஷனைப் பாத்துக்கறேன்!"
சில நாட்கள் யோசித்து விட்டு, சுகுமாரின் நிறுவனத்தில் ஒர்க்கிங் பார்ட்னராகச் சேர்ந்தான் நகுலன்.
தான் கூறியபடியே, மார்க்கெடிங் துறையைக் கையாள நகுலனுக்கு முழு சுதந்திரம் கொடுத்து, உற்பத்தியை மட்டும் பார்த்துக் கொண்டான் சுகுமார்.
"மும்பையிலிருந்து ஒரு என்கொயரி வந்திருக்கு. அவங்களுக்கு ராணுவத்திலேந்து சில உபகரணங்களுக்கு ஆர்டர் வந்திருக்காம். அதுக்கான சில பாகங்களை நாம தயாரிச்சுக் கொடுக்க முடியுமான்னு கேக்கறாங்க" என்றான் நகுலன், சுகுமாரிடம்.
"அதுக்கு ஏன் என்னைக் கேக்கற? நீதானே முடிவு செய்யணும்?" என்றான் சுகுமார்.
"இதுக்கு முன்னால உங்கிட்ட கேட்டப்ப, நீ முடியாதுன்னு சொல்லிட்டியாமே! என்னோட உதவியாளர் சொன்னாரு. அவர்தானே நான் வரதுக்கு முன்னாலேந்தே மார்க்கெடிங் டிபார்ட்மென்ட்ல வேலை செஞ்சுக்கிட்டிருக்காரு?"
"ஓ, அவங்களா? அப்ப மார்க்கெடிங்குக்கு சரியான ஆள் இல்லாததால, அதை நான் எடுத்துக்க விரும்பல. ஏன்னா, அது ரெகுலர் ஆர்டர். அவங்களோட தேவைகளைப் புரிஞ்சுக்கிட்டு, அவங்களுக்கு சர்வீஸ் பண்றது கஷ்டம்னு நினைச்சு அப்ப அதை ஏத்துக்கல. இப்பதான் நீ இருக்கியே!" என்றான் சுகுமார்.
"உங்க நண்பர் உங்களை திட்டம் போட்டு ஏமாத்தி இருக்காரு. சட்ட விரோதமா ஆயுதங்கள் தயாரிச்சு, அதையெல்லாம் இயந்திரப் பகுதிகள்ங்கற பெயரில வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யற ஒரு நிறுவனம், மூணு மாசம் முன்னால, சுகுமாருக்குத் தெரிஞ்சவங்க மூலமா, அவரை அப்ரோச் பண்ணி, பாகங்கள் சப்ளை பண்ணச் சொல்லிக் கேட்டிருக்காங்க. முதல்ல மாட்டேன்னு சொன்னவர், உங்களை சந்திச்சப்புறம், திட்டம் போட்டு உங்களை ஒர்க்கிங் பார்ட்னரா எடுத்துக்கிட்டு, அவங்ககிட்ட உங்களைத் தொடர்பு கொள்ளச் சொல்லி இருக்காரு. ஒருவேளை நீங்க இந்த ஆர்டரை எடுத்துக்கிட்டு சப்ளை பண்ணி, பின்னால கம்பெனி போலீஸ் விசாரணைக்குள்ள வந்திருந்தா, உங்களைக் கை காட்டிட்டு அவர் தப்பிக்கப் பாத்திருப்பாரு. உங்களுக்கு எதனால சந்தேகம் வந்தது?" என்றார் பிரைவேட் டிடெக்டிவ் சந்தர்.
"இதுக்கு முன்னால ஒரு நிறுவனத்தில நான் வேலை செஞ்சுக்கிட்டிருந்தபோது, இண்டஸ்ட்ரி அசோசியேஷன்லேந்து வந்த ஒரு சர்க்குலரைப் பார்த்தேன். ஆயுதங்களுக்கான பாகங்கள் கேட்டு ஏதாவது ஆர்டர் வந்தா, அவங்ககிட்ட அரசாங்கத்துக்கிட்டேந்து வந்த ஆர்டர் காப்பியை வாங்கி வச்சுக்கிட்டு, அப்புறம்தான் ஆர்டரே எடுத்துக்கணும்னு அதில சொல்லி இருந்தாங்க. அ ந்த சர்க்குலர் சுகுமாருக்கும் வந்திருக்கணும். ஆனா, அவன் அது பத்தி எதுவுமே தெரியாத மாதிரி, என்னை அந்த ஆர்டரை எடுத்துக்கச் சொன்னதாலதான், உங்களை அந்த மும்பை நிறுவனம் பற்றி ரகசியமா விசாரிக்கச் சொன்னேன். நீங்களும் உடனே விசாரிச்சு, அவங்க போலீஸ் வாட்ச் லிஸ்ட்ல இருக்கறதா சொல்லிட்டீங்க. ரொம்ப நன்றி!" என்றான் நகுலன்.
"இப்ப என்ன செய்யப் போறீங்க?"
"சுகுமாரைப் பார்த்து நீங்க கண்டுபிடிச்சுச் சொன்ன விஷயங்களை அவன்கிட்ட சொல்லி, உடனே என்னைப் பொறுப்பிலேந்து விடுவிக்கச் சொல்லப் போறேன். ஏதாவது தகராறு பண்ணினான்னா, போலீசுக்குப் போவேன்னு சொல்லுவேன். அப்புறம் வேற வேலை தேடணும்! என்ன செய்யறது? அவசரப்பட்டு, நம்பக் கூடாத ஒத்தனை நண்பனா நினைச்சு ஏமாந்ததுக்கு ஏதாவது விலை கொடுத்துத்தானே ஆகணும்?" என்றான் நகுலன்.
குறள் 821:
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
மணமகளுக்கு தூரத்து உறவு என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் சேதுமாதவன்.
"சொந்தக்காரங்கங்கறதால இந்தக் கல்யாணத்துக்கு வந்தேன். இங்கே வந்து பாத்தா, எனக்குத் தெரிஞ்சவங்க யாருமே இல்ல. உங்களைப் பாத்ததும் பேசணும் போலத் தோணிச்சு!" என்று சேதுமாதவன் கூறியதை, ரகு இயல்பாக எடுத்துக் கொண்டான்.
நெருங்கிய உறவினர் திருமணம் என்பதால், ரகு இரண்டு நாட்கள் நடந்த திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டான்.
சேதுமாதவன் வெளியூரிலிருந்து வந்தவன் என்பதால், அவனும் இரண்டு நாட்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டான்.
அந்த இரண்டு நாட்களிலும், பல நாட்கள் பழகியவன் போல், தன்னிடம் அவன் மிகவும் நெருக்கமாகப் பழகியது ரகுவுக்கு வியப்பாக இருந்தது. இயல்பாகவே எல்லோரிடமும் அன்பாகப் பழகுபவன் போலிருக்கிறது என்று ரகு நினைத்துக் கொண்டான்.
இரண்டாம் நாள் மாலை திருமண வரவேற்பு முடிந்து கிளம்பும்போது, "வரேன், சார்! உங்களை சந்திச்சதில ரொம்ப சந்தோஷம்" என்றான் ரகு, சேதுமாதவனிடம்.
சேதுமாதவன் அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டது போல் தலையாட்டினான்.
"எனக்கும்தான்!" என்று கூட அவன் சொல்லாதது ரகுவுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது.
"உங்க ஃபோன் நம்பர் சொல்லுங்க!" என்ற ரகு, சேதுமாதவனின் நம்பரைக் கேட்டுப் பெற்று, அதை அழைத்து, அவன் ஃபோன் அடிப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, "என் நம்பரை சேவ் பண்ணிக்கங்க. நேரம் கிடைக்கும்போது பேசலாம்!" என்று சொல்லி விடைபெற்றான்.
சேதுமாதவன் மௌனமாகத் தலையாட்டினான்.
ஊருக்குச் சென்றதும், சேதுமாதவனைச் சந்தித்தது பற்றித் தன் மனைவி லதாவிடம் கூறினான் ரகு.
"ஆனா, என்னவோ தெரியல. முதல்ல எல்லாம் ரொம்ப நெருக்கமாப் பேசினவரு நான் கிளம்பறப்ப ரொம்ப அலட்சியமா நடந்துக்கிட்டாரு. உங்களைச் சந்திச்சதில ரொம்ப சந்தோஷம்னு சொன்னேன். ஒப்புக்குக் கூடத் தனக்கும் சந்தோஷம்தான்னு சொல்லல. நான்தான் அவர் ஃபோன் நம்பரைக் கேட்டு வாங்கினேன். அவர் என் நம்பரை சேவ் பண்ணினாரான்னு கூடத் தெரியல!" என்றான் ரகு.
"விடுங்க. அவர் உங்க நெருங்கின நண்பரா என்ன?" என்றாள் லதா.
"எதுக்கு அவ்வளவு நெருக்கமாப் பழகணும்? அப்புறம் அலட்சியமா நடந்துக்கணும்?"
"விட்டுத் தள்ளுங்க!" என்றாள் லதா.
ஓரிரு நிமிடங்கள் ஏதோ யோசனையில் இருந்த ரகு, திடீரென்று ஏதோ தோன்றயவனாக, "இப்ப நினைச்சுப் பாக்கறப்ப, அதுக்கு ஒரு காரணம் இருக்கும்னு தோணுது!" என்றான்.
"என்ன காரணம்?"
"மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கெல்லாம் மண்டபத்துக்குப் பக்கத்தில ஒரு விடுதியில ஏ சி ரூம் போட்டிருந்தாங்க. நானும் மாப்பிள்ளை வீட்டுக்காரன்தானே? அதனால, எனக்கும் ஒரு ஏ சி அறை கொடுத்திருந்தாங்க.
"முதல் நாள் மதியம், சாப்பாட்டுக்கப்பறம் நான் என் அறைக்குக் கிளம்பறப்ப, சேதுமாதவன் எங்கிட்ட வந்து, 'எனக்கு எப்பவுமே மத்தியானம் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கணும். இந்த மண்டபத்திலேயேதான் எங்கேயாவது படுத்துக்கணும். ஆனா, இங்கே ஒரே புழுக்கமா இருக்கு!'ன்னு சொன்னாரு. 'நான் தனியாதான் இருக்கேன். என் ரூமில இடம் இருக்கு. நீங்க அங்கே வந்து படுத்துக்கங்க'ன்னு சொன்னேன்.
"அன்னிக்கு மத்தியானம், அன்னி ராத்திரி, அடுத்த நாள் மத்தியானம் எல்லாம் அவர் என் அறையிலதான் படுத்துத் தூங்கினாரு. இப்பத்தான் எனக்கு ஞாபகம் வருது. ரெண்டாவது நாள் மத்தியானம் என் அறையில தூங்கிட்டுப் போனதுக்கப்பறமே, அவர் எங்கிட்ட சரியா பேசல. நான் ஊருக்குக் கிளம்பற சிந்தனையில இருந்ததால, அதை அப்ப கவனிக்கல!"
"ஏ சி ரூம்ல படுத்துக்கணுங்கறதுக்காகத்தான் உங்ககிட்ட நெருங்கிப் பழகி இருக்காரு. சரியான காரியவாதிதான்!" என்றாள் லதா.
"ஒரு பலனை எதிர்பாத்து எங்கிட்ட நட்பா இருந்ததைக் கூட நான் தப்பா நினைக்கல. ஆனா, தனக்கு ஆக வேண்டிய காரியம் முடிஞ்சப்பறம், எங்கிட்ட அலட்சியமா நடந்துக்கிட்டதை நினைச்சாதான் எனக்கு வெறுப்பா இருக்கு. இவங்கள்ளாம் காசுக்காக..."
மனைவியின் முன்பு தான் நினைத்த உதாரணத்தைக் கூற வேண்டாமென்று நினைத்து சொல்ல வந்ததைப் பாதியில் நிறுத்திக் கொண்டான் ரகு.
குறள் 822:
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
அந்தக் கூட்டத்தில் பேசிய ஒருவர் ஒரு தவறான விஷயத்தைக் குறிப்பிட்டதை கவனித்தேன். எனக்கு அறிமுகமில்லாத தேவராஜன் என்னைப் பார்த்துச் சிரித்தபடி, "தப்பா சொல்றாரு சார்!" என்றார்.
"ஆமாம். நானும் கவனிச்சேன்!" என்று நான் சொன்னதும், என்னைச் சற்று மதிப்புடனும், வியப்புடனும் பார்த்தார் அவர்.
கூட்டம் முடிந்ததும், ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
அதற்குப் பிறகு, சில நிகழ்ச்சிகளில் சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததும், எங்களுக்குள் ஒரு நெருக்கம் ஏற்பட்டது.
தேவராஜன் நிறையப் புத்தகங்கள் படித்திருக்கிறார் என்றும், நல்ல சிந்தனையாளர் என்றும் அறிந்து கொண்டதும், அவர் மீது எனக்கு அதிக மதிப்பு ஏற்பட்டது.
ஆயினும், பொது நிகழ்ச்சிகளில் சந்திப்பதைத் தாண்டி, எங்கள் நெருக்கம் வளரவில்லை.
எங்கள் இருவர் வீட்டிலும் தொலைபேசி இல்லை என்பதால், தொலைபேசியில் பேசிக் கொள்ளும் வாய்ப்பும் இல்லை.
சில வருடங்களில், தேவராஜனே ஒரு பிரபல பேச்சாளராகி விட்டார். துவக்கத்தில், ஓரிரு நிகழ்ச்சிகளில் பேச அழைக்கப்பட்டவர், விரைவிலேயே அதிகம் அழைக்கப்பட்டும் ஒரு பேச்சாளராக ஆகி விட்டார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேச வாய்ப்புக் கிடைத்ததும், அவர் மிகவும் பிரபலமாகி விட்டார்.
நிகழ்ச்சிகளில் என்னைப் பார்த்தால், ஓரிரு நிமிடங்களாவது என்னிடம் பேசாமல் இருக்க மாட்டார். பிரபலமான பிறகும், பழைய நட்பை மறக்காமல் இருக்கிறாரே என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.
ஒருமுறை என்னை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தபோது, தேவராஜன் என்னிடம் "நல்லவேளை, உங்களைப் பார்த்தேன். உங்க தொலைபேசி எண் கூட என்னிடம் இல்லை!" என்றார்.
"என்ன சார் விஷயம்?" என்றேன்.
"அடுத்த வாரம் ஒரு பட்டிமன்றம் இருக்கு. அதில புதுசா சில பேருக்கு வாய்ப்புக் கொடுக்க விரும்பறாங்க. நீங்க பேசறீங்களா?" என்றார்.
"சார்! எனக்கு இது மாதிரியெல்லாம் பேசிப் பழக்கமில்லையே!" என்றேன்.
"பரவாயில்லை. முயற்சி செஞ்சு பாருங்க. நீங்கதான் நிறையப் படிக்கறவராச்சே! நல்லா பேசினீங்கன்னா, தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்கும்" என்றார் தேவராஜன்.
அவர் தலைப்பைக் கூறியதும், முயன்று பார்க்கலாம் என்று தோன்றியது அதனால் ஒப்புக் கொண்டேன்..
"நீங்கதான் நடுவரா?" என்றேன்.
"இல்லை. நானும் பேச்சாளன்தான். உங்க எதிரணியில பேசப் போறேன்!" என்றார் தேவராஜன், சிரித்துக் கொண்டே.
பட்டிமன்றத்துக்குப் பேச நான் தயார் செய்து கொண்டு போனேன். ஆனால், என் முறை வந்தபோது, நான் தயார் செய்ததைப் பேசாமல், எனக்கு முன்னால் எதிரணியில் பேசியவர்களின் கருத்தை மறுத்துப் பேசினேன்.
தயார் செய்ததைப் பேசாமல் இயல்பாகப் பேசியதாலோ என்னவோ, என் பேச்சு நன்றாக அமைந்து விட்டது. துவக்கத்திலிருந்தே, என் கருத்துக்களுக்குப் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததால், இன்னும் அதிக உற்சாகத்துடன் பேசினேன்.
நான்தான் கடைசிப் பேச்சாளன் என்பதால், எதிரணியில் பேசிய அனைவரின் கருத்துக்களையும் மறுத்துப் பேசும் வாய்ப்பு எனக்கு இயல்பாகவே அமைந்து விட்டது.
குறிப்பாக, தேவராஜனின் கருத்துக்களுக்கு நான் பதிலளித்தபோது, பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பும் கைதட்டல்களும் கிடைத்தன. தேவராஜன் போன்ற பெரிய பேச்சாளரின் பேச்சையே மறுதளித்துப் பேசினேன் என்பதால் இருக்கலாம்!
நிகழ்ச்சி முடிந்ததும், பட்டிமன்றத் தலைவரும், மற்ற பேச்சாளர்களும் என்னைப் பாராட்டினர். பார்வையாளர்களிலும் பலர் மேடைக்கு வந்து என்னைப் பாராட்டினர்.
தேவராஜன் எதுவும் சொல்லவில்லையே என்று அப்போதுதான் நினைவு வந்தது. அவரிடம் போய், "என் கன்னிப் பேச்சு எப்படி சார் இருந்தது?" என்றேன்.
அவர் தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தபோது, பார்வையாலேயே எரித்து விடுவது போல் இருந்தது.
"என்ன, கிண்டல் பண்றீங்களா? பழகினவராச்சேன்னு வாய்ப்புக் கொடுத்தா, தீட்டின மரத்திலேயே கூர் பாத்துட்டீங்களே!" என்றார் தேவராஜன், கோபத்துடன்.
"பட்டிமன்றத்தில பேசறதெல்லாம் ஒரு விளையாட்டு மாதிரிதானே சார்?" என்றேன் நான், அதிர்ச்சியுடன்.
"எந்த நிகழ்ச்சியிலும், எத்தனை பேர் பேசினாலும் என் பேச்சைத்தான் அதிகம் பாராட்டுவாங்க. இன்னிக்கு ஒத்தன் கூட எங்கிட்ட வந்து நீங்க நல்லாப் பேசினாங்கன்னு சொல்லலே!" என்று சொல்லி விட்டு, அங்கிருந்து எழுந்து சென்றார் தேவராஜன்.
அதற்குப் பிறகு, அவரை நான் சந்தித்தபோதெல்லாம், அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு, என்னுடன் பேசுவதையே தவிர்த்தார்.
ஒருவர் எவ்வளவுதான் நூல்களைப் படித்திருந்தாலும், அவரிடம் நற்பண்புகள் நிலவுவது அவருடைய மன இயல்பைப் பொருத்துத்தான் என்று எனக்குப் புரிந்தது.
குறள் 823:
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
சாமிநாதன் வாயிற்கதவைத் திறந்தபோது, சோமு கையில் ஒரு பெரிய பார்சலுடன் நின்று கொண்டிருந்தான்.
"அடேடே! வாங்க சோமு!" என்று வரவேற்றான் சாமிநாதன்.
"தீபாவளி வாழ்த்துக்கள்!" என்றபடியே, கையில் இருந்த பார்சலை சாமிநாதனிடம் நீட்டினான் சோமு.
"என்ன இது?" என்றான் சாமிநாதன், பார்சலை வாங்காமல்.
"என் நண்பர்களுக்கு சின்னதா தீபாவளிப் பரிசு கொடுக்கறது என்னோட வழக்கம் - இனிப்புகள், குழந்தைகளுக்கு பட்டாஸ் இது மாதிரி" என்ற சோமு, சாமிநாதனின் மனைவி தேவியைப் பார்த்து, "நீங்க வாங்கிக்கங்க. உங்க கையில கொடுத்தா, மகாலட்சுமிக்கு நைவேத்தியம் செய்யற மாதிரி!" என்றான்.
தேவி சாமிநாதனைப் பார்த்து விட்டு, தயக்கத்துடன் பார்சலை வாங்கிக் கொண்டாள்.
சோமு சென்ற பிறகு, பார்சலைத் திறந்து பார்த்த தேவி, "என்னங்க இது? இனிப்பு, பட்டாசுன்னு சொன்னாரு. ஆனா, உங்களுக்கு பேண்ட், சட்டை, எனக்குப் புடவை...ஐயோ, பட்டுப்புடவை மாதிரியில்ல இருக்கு!" என்றாள்.
சாமிநாதன் பதட்டத்துடன் பார்சலை அவள் கையிலிருந்து அவசரமாக வாங்கியபோது, அதிலிருந்து ஒரு கவர் விழுந்தது. பிரித்துப் பார்த்தான். 2000 ரூபாய் நோட்டுக்கள்! எண்ணிப் பார்த்தான். ஐம்பதாயிரம் ரூபாய் இருந்தது.
"எதுக்குங்க இவ்வளவு பணம்?" என்றாள் தேவி, குழப்பத்துடன்.
"தெரியலியே!" என்றான் சாமிநாதன், யோசித்தபடி.
சோமு சாமிநாதனுக்கு அறிமுகமானது சமீபத்தில்தான். ஆயினும், அவன் வீட்டுக்கு அடிக்கடி வருவது, அவனிடம் பல விஷயங்கள் பற்றி நீண்ட நேரம் பேசுவது என்று சாமிநாதனிடம் மிக நெருக்கமாகப் பழகினான் அவன்.
சாமிநாதனுக்கே சில சமயம் இந்த நெருக்கம் சற்று அதிகமாகத் தோன்றியதுண்டு. ஆனால், சோமுவின் இனிமையான குணமும், பழகும் தன்மையும் அவனுக்குப் பிடித்திருந்தன.
ஆனால், இப்போது தீபாவளிப் பரிசு என்று பேண்ட், சட்டை, பட்டுப் புடவை, பணம் என்றெல்லாம் கொடுத்திருப்பது...
"இப்பவே அவன் வீட்டுக்குப் போய் இதைத் திருப்பிக் கொடுத்துட்டு வரேன்!" என்ற சாமிநாதன், பணம் இருந்த கவர் உட்பட எல்லாவற்றையும் பார்சலுக்குள் வைத்து மூடி, டேப் வைத்து ஒட்டி எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
சாமிநாதன் திரும்பி வந்ததும், "என்ன சொன்னார் உங்க நண்பர்?" என்றாள் தேவி.
"என்ன சொல்லுவான்? முதல்ல மழுப்பினான். அப்புறம் உண்மையைச் சொல்லிட்டான். மசாலாதான் காரணம்!" என்றான் சாமிநாதன்
"என்னது, மசாலாவா?"
"மசாலாப் பொடி தயாரிக்கிற நிறுவனத்தில நான் வேலை செய்யறதுதான் சோமு என்கிட்ட நட்பு பாராட்டினதுக்குக் காரணம்! அவனோட உறவினர் ஒத்தர் மசாலாப் பொடி தயாரிக்கிற தொழில் ஆரம்பிக்கப் போறாராம். அதுக்கு நான் என் கம்பெனி மசாலாப் பொடியோட ஃபார்முலாவைக் கொடுக்கணுமாம். அதுக்கு அட்வான்ஸ்தான் அம்பதாயிரம் ரூபா, பேண்ட் சட்டை, பட்டுப் புடவை எல்லாம்!" என்றான் சாமிநாதன், ஆத்திரத்துடன்.
"அடப்பாவி! இப்படியெல்லாம் திட்டம் போட்டு நட்பு வச்சுப்பாங்களா என்ன?" என்றாள் தேவி, திகைப்புடன்.
அப்போது தொலைக்காட்சியில் ஒலித்த பாடலை கவனித்தான் சாமிநாதன்.
"கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்."
அருமையான பாட்டு!" என்றான் சாமிநாதன்.
"உங்களுக்கு இந்தப் பாட்டு பிடிக்காதே! இந்திப் பாட்டோட காப்பின்னு திட்டுவீங்களே!" என்றாள் தேவி,
"பாட்டோட வரிகள்ள எவ்வளவு உண்மை இருக்குன்னு இப்பத்தான் புரியுது!"
தொலைக்காட்சியின் ஒலி அளவை அதிகமாக்கினான் சாமிநாதன்.
"நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்!"
பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
குறள் 824:
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
முகத்தளவில் இனிமையாகச் சிரித்துப் பழகி, அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.
குறள் 825:
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
மனத்தால் தம்மோடு பொருந்தாமல் பழகுகின்றவரை, அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு, எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக் கூடாது.
"கருணாகரனா அப்படிச் சொன்னாரு? ஆச்சரியமா இருக்கே! டெபுடி ஜெனரால் மானேஜரா இருக்கற மூணு பேர்ல நீதான் சீனியர். உனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தது சரிதான். ஆனா, நீ அவருக்கு அவ்வளவு நெருக்கமானவர் இல்லேன்னு நினைச்சேன்!" என்றான் தனபால்.
"ஆமாம். அவர் எங்கிட்ட தனிப்பட்ட முறையில நெருக்கமா இருந்ததில்லதான். மத்த ரெண்டு டி.ஜி.எம்.களான முத்துவும், மனோகரும்தான் அவருக்கு நெருக்கமானவங்கன்னு நம்ம ஆஃபீஸ்ல எல்லாருக்குமே தெரியும். ஆனா, இன்னிக்கு என்னோட வேலையைப் பத்தி ரொம்பப் புகழ்ந்து பேசினாரு. அவர் எங்கிட்ட பேசினதைக் கேட்டப்ப, அவருக்கு எப்பவுமே என் பேர்ல ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்திருக்குன்னு தெரிஞ்சுது. ஆனா, அவர் அதை வெளிக்காட்டிக்கல. அவ்வளவுதான்!"
"நல்ல விஷயம்தான். நீ சப்சிடியரிக்கு ஜி.எம்னாலும், இந்த ஜி.எம்கிட்டதான் ரிப்போர்ட் பண்ணணும். அது ஒரு சின்ன கம்பெனிதான். பத்து பேர்தான் வேலை பாக்கறாங்க. ஆனாலும், எலி வளைன்னாலும் தனி வளைங்கற மாதிரி, அங்கே நீதான் ராஜா! எப்படியும் இவர் இன்னும் பத்து வருஷத்துக்கப்பறம்தான் ரிடயர் ஆவாரு. அதுக்கப்பறம்தான் நீ ஜி.எம். ஆக முடியும். ஆனா, இப்பவே ஜி.எம். ஆக உனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. போயிட்டு வா."
"இப்படி ஒரு திட்டம் வச்சிருப்பார்னு நான் எதிர்பார்க்கலடா!" என்றான் முரளி, தனபாலிடம், தொலைபேசியில்.
"ஆமாம். சி.ஈ.ஓ. ஏதோ பிரச்னையில மாட்டி இருக்காரு, அதனால அவர் பதவி விலக வேண்டி இருக்கும், அந்த இடத்துக்கு அநேகமா தான்தான் வருவோம்னு கருணாகரனுக்குத் தெரிஞ்சிருக்கு. அப்படி அவர் சி.ஈ.ஓ. ஆனதும், நீதான் அவர் இடத்துக்கு வந்திருப்ப. அதைத் தடுத்து, அவரோட ஆள் முத்துவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கணுங்கறதுக்காக, உனக்கு நல்லது செய்யற மாதிரி, உன்னை சப்சிடியரி கம்பெனிக்கு பேக் பண்ணி அனுப்பிட்டாரு. இப்ப நீ இங்கே இல்லாததால, சீனியாரிடியில உனக்கு அடுத்தபடியா இருக்கற முத்துவுக்கு ஜி.எம். போஸ்டை வாங்கிக் கொடுத்துட்டாரு. சீனியாரிடிப்படி உனக்குத்தான் கொடுக்கணும்னு சேர்மன் சொன்னப்ப, அவர் இப்பதான் போயிருக்காரு, சப்சிடியரியை நல்லா பாத்துக்கறாரு, அவரை இப்ப டிஸ்டர்ப் பண்ணினா சப்சிடியரியோட செயல்பாடு பாதிக்கப்படும்னு சொல்லி, சேர்மனை இவர் சமாதானப்படுத்திட்டாருன்னு பேசிக்கறாங்க!" என்றான் தனபால்.
"அடப்பாவி! எனக்கு நல்லது செய்யற மாதிரி நடிச்சு, எனக்கு வர வேண்டிய நல்ல வாய்ப்பைக் கெடுத்துட்டாரே! எவ்வளவு மோசமானவர் இந்த ஆள்!" என்றான் முரளி, ஆற்றாமையுடன்.
குறள் 826:
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும், பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.
"குமரேசனா?" என்று புருவத்தை நெரித்த வையாபுரி, "சரி. ஃபோனைக் கொடு" என்று சங்கரிடமிருந்து கைபேசியை வாங்கிக் கொண்டார்.
"எப்படி இருக்கீங்க குமரேசன்?" என்றார் வையாபுரி.
"உங்க ஆசியினால நல்லா இருக்கேன் ஐயா! நீங்க எங்கிட்ட ஃபோன்ல பேசுவீங்கன்னு நான் எதிர்பாக்கவே இல்லை!" என்றார் குமரேசன்.
"நான் பேசுவேன்னு எதிர்பாக்கலேன்னா, அப்புறம் எதுக்கு ஃபோன் பண்ணினீங்க? ஏதோ நான் ஃபோன் பண்ணி உங்ககிட்ட பேசின மாதிரி பேசறீங்க!"
"என்னையா இவ்வளவு கோபமாப் பேசறீங்க! நீங்க எங்கிட்ட பேசுவீங்களோ பேச மாட்டீங்களோன்னு பயந்துகிட்டேதான் ஃபோன் பண்ணினேன்னு சொல்ல வந்தேன்!"
"சரி. என்ன விஷயம் சொல்லுங்க?" என்றார் வையாபுரி.
"நீங்க என்மேல கோபமாத்தான் இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா, கட்சியில உங்களுக்குன்னு ஒரு இடம் அப்படியேதான் இருக்கு. அது தலைமைப் பீடம்! நீங்க எப்ப வந்தாலும், அந்த இடம் உங்களுக்கு இருக்கும்!" என்றார் குமரேசன்.
வையாபுரி பெரிதாகச் சிரித்தார்.
"தலைமைப் பதவிக்கு நான் வரக் கூடாதுன்னுதானே, கட்சியில தீர்மானம் போட்டு என்னை நீக்கினீங்க? இப்ப, தலைமைப் பதவிக்கு நீங்க வந்துட்டீங்க. அப்புறம், தலைமையிடம் எப்படிக் காலியா இருக்கும்?" என்றார் வையாபுரி.
"ஐயா! கட்சியில சில பேர் தீர்மானம் கொண்டு வந்தாங்க. நான் அதை ஆதரிக்கல. ஆனா, தீர்மானம் ஒருமனதா இருக்கணும்னு மூத்த தலைவர்கள் சொன்னதுக்காக, நான் எதிர்த்து ஓட்டுப் போடாம, நடுநிலையா இருந்தேன். அதுக்கப்புறம் கட்சியில எல்லோரும் சேர்ந்து என்னைப் பொதுச் செயலாளர் ஆக்கினாங்க. வேற வழியில்லாம, அதை ஏத்துக்கிட்டேன். நான் பொதுச் செயலாளர்தான். நீங்க வந்தா, தலைவர்னு ஒரு பதவியை உருவாக்கி, அதில உங்களை உட்கார வைப்பேன். உங்க கட்டளைப்படி கட்சியை வழிநடத்துவேன்!"
"போதும், குமரேசன். வில்லை ரொம்ப வளைக்காதீங்க. ஒடிஞ்சுடப் போகுது!" என்று சொல்லி ஃபோனை வைத்தார் வையாபுரி.
ஃபோனை வைத்ததும், சங்கரைப் பார்த்துச் சிரித்த வையாபுரி, "கேட்ட இல்ல? உனக்குத் தெரியணும்னுதான் ஃபோனை ஸ்பீக்கர்ல போட்டேன். நீ என்ன நினைக்கற?" என்றார்.
"ஐயா! உங்களுக்கு யோசனை சொல்ற அளவுக்கு எனக்கு அறிவோ, அனுபவமோ இல்லை. ஆனா, கட்சியிலேந்து உங்களை நீக்கினப்பறம், நீங்க பலவீனமாகிட்டதா ஊடகங்கள்ள சொல்றாங்க. நாம புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சு, அதை வளர்க்கறது ரொம்ப கஷ்டம். குமரேசன் இவ்வளவு தூரம் இறங்கி வரப்ப, அவரோட யோசனையை நீங்க பரிசீலிக்கலாமே!" என்றார் சங்கர், தயக்கத்துடன்.
"சங்கர்! தான் தலைமையிடத்துக்கு வரணுங்கறதுக்காக, குமரேசன் எப்படி திட்டம் போட்டு என்னைக் கவிழ்த்தார்ங்கறது உனக்குத் தெரியும், ஏன், உலகத்துக்கே தெரியும். ஆனா, என்னை வெளியில தள்ளினதால, கட்சியோட ஓட்டு வங்கி பிரிஞ்சுடுச்சுங்கறது இப்ப அவருக்குத் தெரிஞ்சு போச்சு. அதனாலதான், என்னை மறுபடி கட்சியில சேத்துக்கிட்டு, பெயரளவுக்கு என்னைத் தலைவராக்கிட்டு, கட்சியில தான் அதிகாரம் செலுத்தலாம், ஓட்டு வங்கியையும் மீட்டு எடுத்துடலாம்னு கணக்குப் போட்டு, எங்கிட்ட ரொம்ப மதிப்பும் மரியாதையும் இருக்கற மாதிரி நடிக்கறாரு. அவர் அழைப்பை ஏத்துக்கிட்டு நான் மறுபடியும் கட்சியில சேர்ந்தா, இதுக்கு முன்னாடி நடந்த அவமானத்தை விட மோசமான அவமானம் எனக்கு நடக்கும். எனக்கு அரசியல்ல எதிர்காலம் இல்லாம போனாலும் போகட்டும். ஆனா, குமரேசனோட போலிப் பணிவைப் பாத்து நான் ஏமாறத் தயாராயில்ல!" என்றார் வையாபுரி, உறுதியுடன்.
குறள் 827:
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.
"அவங்க எதுக்கு என்னைப் பார்க்க...." என்று சந்தானம் கேட்டுக் கொண்டிருந்தபோதே, அவர் அறைக் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே வந்த செல்வகுமாரின் மனைவி வசந்தா, சந்தானத்தின் காலில் விழுவது போல், அவருடைய பெரிய மேஜையின் முன்னால் விழுந்தாள்.
"ஐயா! என் வீட்டுக்காரர் செஞ்ச தப்புக்கு மன்னிப்பே கிடையாது. ஆனாலும், நீங்கதான் பெரிய மனசு பண்ணி, அவரை மன்னிக்கணும்!" என்று உரத்த குரலில் கதறினாள் வசந்தா.
பதைபதைப்புடன் தன் இருக்கையிலிருந்து எழுந்த சந்தானம், "என்னம்மா இதெல்லாம்? எழுந்திருங்க!" என்றார்.
செந்திலும் அவள் அருகில் வந்து, "எழுந்திருங்கம்மா! இதென்ன ஆஃபீஸ்ல வந்து இப்படியெல்லாம் செய்யறீங்க?" என்றான், அதட்டலான குரலில்.
வசந்தா எழுந்து கொண்டு, மேஜைக்கு முன்னால் நின்று விம்மிக் கொண்டிருந்தாள்.
"இங்க பாருங்க! செல்வகுமாரை சார் எவ்வளவோ நம்பித்தான் அக்கவுன்டன்ட்டா வச்சிருந்தாரு. ஆனா, அவர் பொய்க்கணக்கு எழுதிப் பணத்தைக் கையாடி இருக்காரு. ஆடிட்டிங்ல இதைக் கண்டு பிடிச்சப்பறம், முந்தைய வருஷங்களோட கணக்கை எடுத்துப் பார்த்தா, அஞ்சாறு வருஷமா இப்படி செஞ்சுக்கிட்டு வந்திருக்காருன்னு தெரியுது. அதுக்கு முன்னால கூட செஞ்சிருக்கலாம். அந்தக் கணக்கையெல்லாம் தேடி எடுக்கணும்! இந்த அஞ்சு வருஷத்திலேயே அவரு மூணு லட்சம் ரூபா மோசடி பண்ணி இருக்காருன்னு தெரிய வந்திருக்கு. இப்ப நீங்க வந்து அழுது என்ன பிரயோசனம்?" என்றான் செந்தில்.
வசந்தா செந்திலை முறைத்து விட்டு, சந்தானத்திடம் திரும்பி, "சார்! அவர் உங்களுக்கு செஞ்சது பெரிய துரோகம்தான். அவரை இனிமே வேலையில வச்சுக்க மாட்டீங்க. ஆனா, போலீஸ் கேஸ் எல்லாம் வேண்டாம்யா! அவரை போலீஸ்ல கூட்டிக்கிட்டுப் போனா, நான் தூக்குல தொங்குவேன். அவர் இவ்வளவு வருஷம் வேலை செஞ்சதை மனசில வச்சுக்கிட்டு, அதை மட்டும் செய்யாம இருங்க. அவ்வளவுதான் நான் கேக்கறது" என்று கூறிக் கைகூப்பினாள்.
"போலீஸ்ல புகார் கொடுக்கலேன்னா, அவன் எடுத்த பணத்தை எப்படித் திருப்பி வாங்கறது?" என்றார் சந்தானம்.
"சார்! அதுக்கு நான் உத்தரவாதம். அவர் எல்லாப் பணத்தையும் சூதாட்டத்தில இழந்துட்டாரு. ஆனா, நான் பணத்தை எப்படியாவது கொடுத்துடறேன். எங்க பையன் இப்பதான் வேலைக்குப் போக ஆரம்பிச்சுருக்கான். அவன் சம்பளத்திலேந்து மாசம் பத்தாயிரம் ரூபா கட்டி, மூணு வருஷத்தில மொத்தப் பணத்தையும் கொடுத்திடறேன்!"
"அதெல்லாம் சரியா வராதும்மா!" என்றார் சந்தானம்.
வசந்தா மீண்டும் விம்மி அழ ஆரம்பித்தாள்.
"அவர் மேல போலீஸ் கேஸ் இருக்கறது தெரிஞ்சா, என் பையனோட வேலையும் போயிடும். அப்புறம் நாங்க எல்லாருமே விஷம் குடிச்சு சாக வேண்டியதுதான். கடவுளே! என் புருஷனுக்கு ஏன் இப்படி ஒரு புத்தியைக் கொடுத்தே!" என்று கூறியபடியே, தலையில் வேகமாக அடித்துக் கொண்டு, இன்னும் பெரிதாக அழுதாள் வசந்தா.
"நீங்க வீட்டுக்குப் போங்கம்மா! நான் யோசிச்சு சொல்றேன்" என்றார் சந்தானம், வசந்தா அழுது புலம்பியதைச் சகிக்க முடியாமல்.
வசந்தா சென்றதும், "சார்! இவங்க அழறதைப் பார்த்து இரக்கம் காட்டாதீங்க. போலீஸ்ல புகார் கொடுத்தாதான் பணம் திரும்பக் கிடைக்கும்" என்றான் செந்தில்
"இல்லை, செந்தில்! எனக்கு அவங்களைப் பார்த்தா பாவமா இருக்கு. அவங்க சொல்றபடி மாசம் பத்தாயிரம் ரூபான்னு கொடுக்கட்டும். செல்வகுமாருக்கு வேலை போன தண்டனை போதும். மாசம் பத்தாயிரம் ரூபாய்னு முப்பது மாசம் கொடுக்க ஒப்புத்துக்கிட்டு, செல்வகுமார், வசந்தா ரெண்டு பேரும் கையெழுத்து போட்டு ஒரு அக்ரிமென்ட் வாங்கிக்கங்க. மாசா மாசம் அஞ்சாம் தேதக்குள்ள பத்தாயிரம் ரூபாயை ஆஃபீஸ்ல கொண்டு வந்து கட்டிடணும், ஒரு மாசம் தவறினாலும், அக்ரிமென்ட்படி சட்ட நடவடிக்கை எடுப்போம்னு கண்டிப்பா சொல்லிடுங்க!" என்றார் சந்தானம்.
"என்ன செந்தில், பத்து தேதி ஆச்சு. வசந்தா இன்னும் பத்தாயிரம் ரூபா கட்டலியே! முதல் மாசமே இப்படிப் பண்றாங்களே! ஃபோன் பண்ணிக் கேட்டீங்களா?" என்றார் சந்தானம்.
"நேரிலேயே போய்க் கேட்டுட்டு வந்துட்டேன் சார்! அந்த அம்மா பேசற தோரணையைப் பாத்தா, அவங்க பணம் கட்டுவாங்கன்னு எனக்குத் தோணல!" என்றான் செந்தில்.
"அன்னிக்கு அவ்வளவு தூரம் அழுது கெஞ்சினாங்க?"
"எல்லாம் வேஷம் சார்! நான் விசாரிச்சதில, செல்வகுமார் கையாடின பணத்தில தன் மனைவிக்கு நகைகள் வாங்கிப் போட்டிருக்கான். அவன் சூதாட்டத்தில பணத்தை விட்டுட்டான்னு அவன் மனைவி சொன்னது பொய். மாட்டிக்கிட்டான், வேலை போச்சு. ஆனா, ஜெயிலுக்குப் போகக் கூடாதுங்கறதுக்காக, அந்த வசந்தா உங்ககிட்ட அழுது கெஞ்சற மாதிரி வேஷம் போட்டிருக்காங்க. கையாடின பணத்தைத் திருப்பிக் கொடுக்கற எண்ணம் அவங்களுக்கு இல்லை!"
"பணம் கட்டலேன்னா, அக்ரிமென்ட்படி நடவடிக்கை எடுப்போம்னு சொன்னியா?"
"சொன்னேன். அவங்க அதுக்கெல்லாம் பயப்படற மாதிரி தெரியல. கோர்ட்ல கேஸ் போட்டா, அது வருஷக்கணக்கா இழுத்துக்கிட்டுப் போகும்னு அவங்களுக்குத் தெரியும். தன் புருஷன் ஜெயிலுக்குப் போகாம காப்பாத்தணும்னு நினைச்சாங்க. அதுக்காக நல்லா நடிச்சு, உங்க அனுதாபத்தைத் தேடிக்கிட்டாங்க. அதோட அவங்க நோக்கம் நிறைவேறிடிச்சு. அவ்வளவுதான்!" என்றான் செந்தில்.
குறள் 828:
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுது சொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.
"இதில என்ன சந்தேகம்? சந்துருதான் என்னோட சிறந்த நண்பன்னு இந்த அலுவலகத்தில எல்லாருக்கும் தெரியுமே!" என்றான் ரமணி.
பக்கத்தில் இருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த சந்துரு, சிரித்துக் கொண்டே, "நண்பேன்டா!" என்றபடி, ரமணியின் தோளை அணைத்துக் கொண்டான்.
நாகராஜன் சற்று வியப்புடன் இருவரையும் பார்த்தான்.
"நீதான் ரமணியோட நெருக்கமான நண்பன்னு அவன் சொன்னான். நீயும் அப்படி நினைக்கறியா?" என்றான் நாகராஜன், சந்துருவிடம், இருவரும் தனிமையில் இருந்தபோது.
"நாங்க ரெண்டு பேருமே அப்படி நினைக்கலியே!" என்றான் சந்துரு.
"பின்னே, அவன் அப்படிச் சொன்னான். நீயும் அதை ஏத்துக்கற மாதிரி நடந்துக்கிட்டே!"
"இப்ப, நீயும் நானும் நெருக்கமான நண்பர்கள்தான். இது உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும், அலுவலகத்தில மத்தவங்களுக்கும் தெரியும். ஆனா, நீயும் நானும் நாம நெருக்கமானங்கன்னு சொல்லிக்கிட்டுத் திரியறமா என்ன?"
"நீ என்ன சொல்ல வர?"
"பொதுவாகவே, அதிக நெருக்கம் இல்லாதப்பதான், அதிக வெளிப்பாடுகள் இருக்கும். ரமணி என்னைத் தன்னோட நெருக்கமான நண்பன்னு வெளியில காட்டிப்பான், பேசுவான். ஆனா, எனக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டா, எனக்கு ஏதாவது அவமானம் ஏற்பட்டா, அதுக்காக மனசுக்குள்ள சந்தோஷப்படுவான். அதை அவன் வெளியில காட்டிக்க மாட்டான். ஆனாலும், அது எனக்குப் புரியும்!" என்றான் சந்துரு.
"அப்படின்னா, நீ அவனை விட்டு விலகிப் போக வேண்டியதுதானே? நீ ஏன் அவங்கிட்ட நெருக்கமா நடந்துக்கற?"
"என்ன செய்யறது? முள்ளை முள்ளாலதானே எடுக்கணும்! வெளியில அவனுக்கு நெருக்கமா இருந்தாலும், மனசளவில நான் அவனுக்கு நெருக்கமா இல்ல. இதை அவனும் புரிஞ்சுக்கிட்டிருக்கான். கொஞ்ச நாள்ள பாரு, அவன் தானாகவே எங்கிட்டேந்து விலகிப் போயிடுவான்!" என்றான் சந்துரு.
குறள் 829:
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை, நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி நடந்து கொள்ளலாம்.
ஒரு ரயில் பயணத்தின்போது, தற்செயலாக இருவரும் ஒரே பெட்டியில் பயணம் செய்தனர்.
முகுந்தன்தான் முதலில் பேசினான், "எப்படி இருக்கே?" என்ற பொதுவான விசாரிப்புடன்.
ரகு ஒப்புக்கு பதில் கூறினான்.
நீண்ட நேரப் பயணம் என்பதால், இன்னும் சில முறைகள் முகுந்தன் பேச யத்தனித்தபோது, ரகுவும் தன் இறுக்கத்தைத் தளர்த்தி உரையாடினான்.
ரயிலிலிருந்து இறங்குவதற்கு முன், முகுந்தன் ரகுவின் தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டான்.
"வீ வில் பீ இன் டச்!" என்றான் முகுந்தன்.
ரகுவும், முகுந்தனும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, ரகுவுக்குப் பல இடையூறுகளைச் செய்தவன் முகுந்தன். நிறுவனத்தில் தன்னை மிஞ்சி ரகு மேலே போய்விடக் கூடாது என்பதற்காக, நேரடியாகவும், மறைமுகமாகவும் பல முயற்சிகளை முகுந்தன் செய்து வந்தான்.
ஒருமுறை, நிறுவனத்துக்கான சரக்குக் கொள்முதலில் ரகு கமிஷன் வாங்குவதாக ரகுவின் மீது புகார் தெரிவித்துத் தலைமை அலுவலகத்துக்கு ஒரு மொட்டைக் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த மொட்டைக் கடிதத்தை அனுப்பியது முகுந்தன்தான் என்பதில் அந்த அலுவலகத்தில் இருந்த எவருக்கும் சந்தேகம் இல்லை..
ரகுவின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, புகாரில் உண்மை இல்லை என்று கண்டறியப்பட்டது. ஆயினும், புகார் விசாரணையில் இருந்த காலத்தில் நடந்த பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வுக்கு ரகு அழைக்கப்படவில்லை.
ஒரு பொய்யான புகாரினால் தனக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு மறுக்கப்பட்டதால் வருத்தமடைந்த ரகு, அந்த நிறுவனத்தில் தொடர்ந்து பணி செய்ய விருப்பமின்றி, விரைவிலேயே வேறு நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டான்.
அதற்குப் பிறகு, ரகு முகுந்தனைச் சந்தித்தது இப்போதுதான்.
முகுந்தன் அடிக்கடி ரகுவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினான். இருவரும் சேர்ந்து பணியாற்றிய காலத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து, மற்ற விஷயங்களைப் பேசினான்.
ரகு அதிகம் பேசாமல், முகுந்தன் பேசுவதற்கு பதிலளிக்கும் அளவுக்கு அளவாகப் பேசினான். ரகுவைத் தன் வீட்டுக்கு வரும்படி முகுந்தன் பலமுறை அழைத்தும், ரகு போகவில்லை. பதிலுக்கு, முகுந்தனைத் தன் வீட்டுக்கு வரும்படி ரகு அழைக்கவும் இல்லை.
முகுந்தன் பலமுறை ரகுவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினானே தவிர, ரகு ஒருமுறை கூட முகுந்தனை அழைத்துப் பேசவில்லை.
''எவ்வளவு காலம் இது நடக்கும்? எனக்கு அவனுடன் நட்பாக இருப்பதில் ஆர்வம் இல்லை என்பதைத் தொடர்ந்து வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால், அவன் விடாமல் என்னை அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறான். ஒருநாள் அவனுக்கே வெறுத்துப் போய்ப் பேசுவதை விட்டு விடுவான். அதுவரையில் காத்திருப்போம்!' என்று நினைத்துக் கொண்டான் ரகு.
குறள் 830:
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
பகைவர் நண்பராகும் காலம் வரும்போது, மனதளவில் நட்பு கொள்ளாமல், முகத்தளவில் மட்டும் நட்புக் கொண்டு, வாய்ப்புக் கிடைக்கும்போது அதையும் விட வேண்டும்.
No comments:
Post a Comment