Wednesday, December 23, 2020

437. சேர்த்து வைத்த பணம்!

குப்புசாமி சிறிய அளவில் துவங்கிய கமிஷன் மண்டி வியாபரம் ஓரிரு வருடங்களுக்குள்ளேயே சூடு பிடித்து அவருக்குப் பெரிய அளவில் வியாபார வெற்றியைக் கொடுத்து விட்டது.

இளமையில் வறுமையை அனுபவித்ததால் சிக்கனம் என்பது குப்புசாமிக்கு வாழ்க்கையின் தாரக மந்திரமாக அமைந்து விட்டது. அவர் மனைவி புஷ்பா, ஒரே மகன் குமார் இருவருமே சிக்கனம் என்ற அவருடைய இறுக்கமான பிடியில் சிக்கித் தவித்தனர்.

வயிற்றுப் பசிக்கு உணவு, உடுத்திக்கொள்ள ஆடைகள் தவிர வேறு எந்த சுகத்தையும் அவர்கள் அனுபவிக்க குப்புசாமி இடம் கொடுக்கவில்லை. ஒரு சுமாரான நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் இருக்கக் கூடியவற்றை விட அதிகமான பொருட்களோ, வசதியோ அவர்கள் வீட்டில் இல்லை. 

ஒவ்வொரு ஆண்டும் குமாரின் பள்ளி விடுமுறையின் போது ஊட்டி, கொடைக்கானல் அல்லது வேறு ஊர்களுக்குச் சில நாட்களாவது சென்று வர வேண்டும் என்று புஷ்பா கூறுவாள், அவள் கோரிக்கையை ஒவ்வொரு முறையும் நிராகரித்து விடுவார் குப்புசாமி.

வியாபாரத்தை விட்டு விட்டுத் தன்னால் ஒரு நாள் கூட வர முடியாது என்பது துவக்கதில் குப்புசாமி கூறிய காரணம். இரண்டு மூன்று முறை அவர் இப்படிச் சொன்னதும், "சரி. உங்களால வர முடியாட்டா பரவாயில்ல. நானும் குமாரும் மட்டுமாவது போயிட்டு வரோம்" என்றாள் புஷ்பா.

அப்போதுதான் தன் மறுப்புக்கான உண்மையான காரணத்தைக் கூறினார் குப்புசாமி. பணம் செலவழிந்து விடுமாம்!

"நான் எவ்வளவு கஷ்டப்பட்டுப் பணம் சம்பாதிக்கிறேன்! டூர் போறேன்னு சொல்லி எல்லாத்தையும் ஒரு வாரத்தில அழிக்கணுமா?" என்றார் குப்புசாமி சற்றே கோபத்துடன். "என்னை மாதிரி பணத்துக்குக் கஷ்டப்பட்டுட்டு, அப்புறம் பணத்தைச் சம்பாதிக்கறப்பதான் பணத்தோட அருமை தெரியும்!"

புஷ்பாவுக்கு கோபப்படுவதா, வருத்தப்படுவதா என்று தெரியவில்லை.

"விடுமுறையில ஏதாவது ஊருக்குப் போறதுங்கறது ரொம்ப சாதாரண விஷயம். பணம் இல்லாதவங்க கூட எப்பவாவது இப்படி உல்லாசப் பயணம் போயிட்டுத்தான் வருவாங்க. நீங்க இவ்வளவு சம்பாதிக்கறீங்க. ஆனா, இந்தச் செலவு அதிகமாத் தெரியுது உங்களுக்கு!" என்றாள் அவள் கோபத்துடன்.

"வேணும்னா உன் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிட்டு வா. நான் தடுக்கலியே!"

புஷ்பாவுக்கு அதை மட்டும்தான் செய்ய முடிந்தது.

தான் சம்பாதித்த பணத்தில் ஒரு வீடு வாங்கியதைத் தவிர வேறு எந்தப் பெரிய செலவும் செய்யவில்லை குப்புசாமி.

குமார் பொறியல் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்கா சென்று மேல்படிப்புப் படிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தான்..

"நீ நல்லாப் படிக்கறதாலதான் உன்னை எஞ்சினீரிங் படிக்க வச்சேன். அதுக்கே நிறைய செலவாயிடுச்சு. அதான் காம்பஸ்ல வேலை கிடைக்குமே! அப்புறம் எதுக்கு ஏகப்பட்ட செலவு பண்ணி அமெரிக்கா போய்ப் படிக்கணும்?" என்றார் குப்புசாமி.

"எனக்கு எஜுகேஷன் லோன் கிடைக்கும்ப்பா. அதை வேலைக்குப் போனப்பறம் நானே அடைச்சுடுவேன். ஆரம்பத்தில மட்டும் கொஞ்சம் பணம் தேவைப்படும்" என்றான் குமார்.

குப்புசாமி அரை மனதுடன் சம்மதித்தார்.

குமார் அமெரிக்கா சென்று படித்து அங்கேயே ஒரு வேலையிலும் சேர்ந்து விட்டான். தனக்கு இந்தியாவுக்குத் திரும்பும் எண்ணம் இல்லை என்று அவர்களிடம் கூறி விட்டான், வேலைக்குப் போன ஒரு வருடத்தில் அங்கேயே ஒரு இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விட்டான்.

குப்புசாமிக்கு இதில் எந்த வருத்தமும் இல்லை. புஷ்பா மட்டும் மனமுடைந்து போய் விட்டாள். ஏற்கெனவே கணவன் பணம்தான் உலகம் என்று அலையும் நிலையில், மகனும் தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்ட பிறகு, தான் தனிமைப்படுத்தப்படதாக உணர்ந்தாள். இதனால் அவள் உடல் நலம் பாதிக்கப்பட்டு, உடல்  வலுவிழந்து வந்து கொண்டிருந்தது.

சந்தை மாற்றங்களால் குப்புசாமியின் கமிஷன் மண்டித் தொழிலும் நலிவடைந்து கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் வியாபாரத்தை மூடுவது என்ற முடிவுக்கு வந்து அவ்வாறே மூடி விட்டார்.

வியாபாரத்தை விட்டு விட்டு வீட்டிலேயே இருக்க ஆரம்பித்ததும் குப்புசாமி வயது தன் உடலில் ஏற்படுத்தி இருந்த பலவீனங்களையும் நோய்களையும் உணர ஆரம்பித்தார்.

புஷ்பாவுக்கும் உடல் சோர்வும் பற்ற பிரச்னகளும் அதிகமாகி விட்டன.

இருவரும் பல மருத்துவச் சோதனைகள் செய்து கொண்ட பின், அவர்களைப் பரிசீலனை செய்த மருத்துவர், "உங்க ரெண்டு பேருக்குமே உடம்பில நிறைய பிரச்னைகள் இருக்கு. மத்தவங்க உதவி இல்லாம நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கறது கஷ்டம். உங்களுக்கு அவ்வபோது மருத்துவ உதவியும் தேவைப்படலாம். அதனால உங்களைப் பாத்துக்க யாராவது உங்களோட எப்பவுமே இருக்கணும்!" என்றார் மருத்துவர்.

புஷ்பா மகனிடம் தொலைபேசியில் பேசினாள்.

"அம்மா! உங்க ரெண்டு பேரால மட்டும் தனியா இருக்க முடியாது. சமையலுக்கு வீட்டு வேலைக்கெல்லாம் ஆள் வச்சுக்கறதோட வீட்டில எப்பவுமே ஒரு நர்ஸ் இருக்கணும். அதுவும் உனக்கு ஒரு பெண் நர்ஸ் அப்பாவுக்கு ஒரு ஆண் நர்ஸ்னு ரெண்டு பேர் இருக்கணும். இல்லேன்னா, நீங்க ரெண்டு பேரும் எல்லா வசதிகளும் உள்ள ஒரு முதியார் இல்லத்தில சேரணும். உங்க எல்லாத் தேவைகளையும் அவங்க பாத்துப்பாங்க. உடனடி மருத்துவ வசதியும் இருக்கும். ரெண்டுல எதைச் செஞ்சாலும் நிறையச் செலவாகும். அப்பாதான் நிறையப் பணத்தை சேத்து வச்சிருக்காரே!" என்றான் குமார்.

ஒப்புக்குக் கூடத் தான் பணம் கொடுப்பதாக மகன் சொல்லவில்லையே என்று நினைத்துக் கொண்ட புஷ்பா, அருகில் அமர்ந்து ஸ்பீக்கர் மூலம் வந்த மகனின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கணவரின் முகத்தைப் பார்த்தாள்.

முதல் முறையாக அவர் முகத்தில் வருத்தம் படர்வதைப் பார்த்தாள் அவள். தன் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்ற வருத்தமா, அல்லது, சம்பாதித்தபோது எதையும் அனுபவிக்காமல் சேர்த்து வைத்த பணம் இப்படியா செலவாக வேண்டும் என்ற வருத்தமா?

அவளுக்குப் புரியவில்லை. 

அரசியல் இயல்
அதிகாரம் 44 
குற்றங்கடிதல்  
குறள் 437
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.

பொருள்:
தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைச் செய்து கொள்ளாமல் சேமித்து வைக்கப்படும் செல்வம் அனுபவிக்கப்படாமல் அழிந்து போகும்.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

Saturday, December 19, 2020

436. மகனே கேள்!

"என்னடா இது புதுசா, சூயிங்கம் மெல்ற பழக்கம்?" என்றாள் அபிராமி. 

"பழக்கம்லாம் இல்ல. எப்பவாவதுதாம்மா!" என்றான் அவள் மகன் சுரேன்.

"காலேஜிலேந்து வரப்ப வாயில சூயிங்கம்மோடதான் வரே. வேற எங்கேயாவது வெளியில போயிட்டு வந்தாலும் வாயில சூயிங்கம் இருக்கறதைப் பாக்கறேன். எப்பவாவதுங்கற!"

"இல்லம்மா. கடையில ஏதாவது வாங்கினா சில சமயம் சில்லறை இல்லேன்னுட்டு சூயிங்கம்மைக் கொடுத்துடுவாங்க. அதை வாயில போட்டு மென்னுக்கிட்டு வருவேன். அதைப் பாத்துட்டு சொல்ற!" என்றான் சுரேன்.

"அப்படி அடிக்கடி கடைக்குப் போறியா என்ன?" என்று ஆரம்பித்த அபிராமி, "சரி, சரி. பழக்கமாயிடப் போகுதேன்னு சொன்னேன்" என்று சொல்லி முடித்துக் கொண்டாள்.

"என்னங்க, சுரேன் சிகரெட் குடிக்கப் பழகிக்கிட்டிருப்பானோன்னு சந்தேகமா இருக்கு!" என்றாள் அபிராமி தன் கணவனிடம்.

"எப்படிச் சொல்ற? அவங்கிட்ட சிகரெட் வாசனை வந்ததா என்ன?" என்றான் சோமு.

"வெளியிலேந்து வீட்டுக்கு வரப்பல்லாம் வாயில சூயிங்கம்மோட வரான். சிகரெட் குடிச்சுட்டு அந்த வாசனையை மறைக்கத்தான் சூயிங்கம் மெல்லறான்னு நினைக்கறேன்."

"அது எப்படி உனக்குத் தெரியும்? நீ அப்படிப் பண்ணி இருக்கியா என்ன?" என்றான் சோமு சிரித்துக் கொண்டே.

"நம்ம பையனுக்கு சிகரெட் பழக்கம் வந்துடக் கூடாதேங்கற கவலையில நான் சொல்றேன். உங்களுக்கு இது விளையாட்டா இருக்கா? அந்தக் காலத்தில என் தம்பி இப்படித்தான் பண்ணுவான். அவன் சிகரெட் பிடிக்கறான்னு  எங்க வீட்டில கண்டு பிடிக்கவே ரொம்ப காலம் ஆயிடுச்சு. அதுக்கப்பறம் அவனை அந்தப் பழக்கத்திலேந்து விடுவிக்க முடியல. ஒரு செயின் ஸ்மோக்கரா ஆகி இன்னிக்கும் அவன் நிறைய சிகரெட் பிடிச்சுக்கிட்டுத்தான் இருக்கான். அவன் கதி நம்ம பையனுக்கு வரக் கூடாது. நீங்க அவன் சிகரெட் பிடிக்கறானான்னு கண்டுபிடிச்சு, அவங்கிட்ட பேசி அவனை இந்தப் பழக்கத்திலேந்து விடுவியுங்க!" என்று பொரிந்து தள்ளினாள் அபிராமி.

தற்குப் பிறகு இரண்டு மூன்று முறை "சுரேன்கிட்ட பேசினீங்களா?" என்று கணவனிடம் கேட்டாள் அபிராமி. 

அவள் முதல்முறை கேட்டபோது, "நீ நினைச்சது சரிதான். அவனுக்கு சிகரெட் பழக்கம் இருக்கறது உண்மைதான். நான் அவங்கிட்ட பேசறேன்" என்று பதில் கூறிய சோமு, அதற்குப் பிறகு அவள் கேட்டபோதெல்லாம், "இன்னும் பேசலை. பேசறேன்" என்றே சொல்லிக் கொண்டிருந்தார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள், "அபிராமி. சுரேன்கிட்ட பேசிட்டேன். சிகரெட் பிடிக்கறதை விடச் சொல்லிப் பக்குவமாச் சொல்லி, பழக்கத்தை எப்படி விடறதுங்கறதுக்கு சில யோசனைகளும் சொல்லி இருக்கேன். விட்டுடுவான்னு நினைக்கறேன். நான் தொடர்ந்து கவனிச்சு அவனை விட வைக்கறேன்" என்றார் சோமு.

"நான் உங்ககிட்ட சொல்லி பத்துப் பதினைஞ்சு நாள் ஆயிடுச்சே! இப்பதான் அவங்கிட்ட பேசினீங்களா?" என்றாள் அபிராமி.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த சோமு, "அபிராமி! எங்கிட்டயும் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் நான் என் நண்பர்களோட காசு வச்சு சீட்டாடுவேன். யாருக்கும் அதிக நஷ்டம் வரக் கூடாதுங்கறதுக்காக பத்து ரூபா, இருபது ரூபான்னு வச்சுத்தான் விளையாடுவோம். ரொம்ப நாளா அதை விட்டுடணும்னு முயற்சி பண்ணினேன். முடியல. ஞாயித்துக்கிழமை வந்தா வெறி பிடிச்ச மாதிரி அங்கே போயிடுவேன். சும்மா நண்பர்களைப் பாத்துப் பேசிட்டு வரதாத்தான் உங்கிட்ட சொல்லியிருக்கேன்.

"பையனோட தப்பைக் கண்டிச்சுத் திருத்தணும்னா முதல்ல எங்கிட்ட தப்பு இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். இந்த ரெண்டு வாரமா ஞாயித்துக்கிழமை அங்கே போகாம என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டிருந்தேன். அதனால என்னால இந்தப் பழக்கத்தை விட முடியும்னு உறுதிப்படுத்திக்கிட்டு அப்புறம்தான் சுரேன்கிட்ட பேசினேன்" என்றார், மனைவியின் முகத்தைச் சங்கடத்துடன் பார்த்தபடி. 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 44
குற்றங்கடிதல்  
குறள் 436:
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.

பொருள்:
ஒரு அரசன் முதலில் தன் குற்றத்தைக் கண்டறிந்து அதைப் போக்கி விட்டு, அதற்குப் பிறகு மற்றவர்களின் குற்றத்தைப் பார்த்தால் அவனுக்கு என்ன குற்றம் வந்து விடும்?

அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

Friday, December 18, 2020

435. தொலைபேசியில் வந்த செய்தி

"அப்பா! என் நண்பர்களோட மகாபலிபுரம் போகப் போறேன். பத்தாயிரம் ருபா வேணும்" என்றான் விக்ரம்

"அதுக்கு பத்தாயிரம் ரூபா எதுக்கு?" என்றான் சிவம்.

"இல்லப்பா! என் பிறந்த நாளுக்கு என் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கணும்."

"உன் பிறந்த நாள் வந்து மூணு மாசம் ஆச்சு. அதுக்குத்தான் முப்பதாயிரம் செலவு பண்ணி பார்ட்டி கொடுத்தியே!" என்றாள் அவன் அம்மா லீலா.

"இல்லம்மா. சில பேருக்கு அப்ப விட்டுப் போச்சு. அவங்க கேக்கறாங்க!"

"அதெல்லாம் வேண்டாம். அடுத்த பிறந்த நாளுக்குக் கொடுக்கறேன்னு சொல்லிடு" என்றாள் லீலா.

"சரி அஞ்சாயிரம் கொடுக்கறேன். அதுக்குள்ள ஏதாவது செஞ்சுக்க" என்றான் சிவம்.

தந்தை கொடுத்த பணத்தை மௌனமாக வாங்கிக் கொண்டு அங்கிருந்து அகன்றான் விக்ரம்.

"இங்க பாருங்க. விக்ரம் நிறைய செலவு பண்றான். நீங்க கொஞ்சம் ஸ்டிரிக்டா இருங்க. எங்கிட்ட வேற அடிக்கடி பணம் கேக்கறான். நான் நூறு இருநூறுக்கு மேல கொடுக்கறதில்ல" என்றாள் லீலா கணவனிடம்.

"விடு! சின்ன வயசு. நம்மகிட்ட பணம் இருக்குங்கறதால கொஞ்சம் அதிகமா செலவழிக்கறான். காலேஜில படிக்கறப்ப நண்பர்பள் கிட்ட தன் பெருமையைக் காட்ட அவங்களை ஹோட்டலுக்கு அழைச்சுக்கிட்டுப் போறது, அவங்களோட ஊர்  சுத்தறதுன்னு செய்யறான். கொஞ்சம் விட்டுப் பிடிப்போம், காலப்போக்கில அவனுக்குத் தானே பொறுப்பு வந்துடும்" என்றான் சிவம்.

ரு வாரம் கழித்து லீலா வீட்டில் இல்லாதபோது சிவத்திடம் வந்த விக்ரம், "அப்பா! போன வாரம் மஹாபலிபுரம் போனப்ப என் நண்பனோட மொபைல்ல ஃபோட்டோ எடுத்துக்கிட்டிருந்தேன். அப்ப அது கை தவறிக் கீழே விழுந்து பாறையில பட்டு உடைஞ்சு போச்சு. அது ரொம்ப விலை உயர்ந்த ஃபோன். இருபதாயிரம் ரூபா. அவனுக்கு நான் வேற ஃபோன் வாங்கிக் கொடுக்கணும். அம்மாக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க. அதான் நீ தனியா இருக்கறப்ப சொல்றேன்" என்றான்.

"உங்கம்மா சொல்றது சரியாத்தான் இருக்கு. மஹாபலிபுரம் போறேன், நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கறேன்னு சொல்லிட்டு, இன்னொத்தன் ஃபோனை உடைச்சுட்டு வந்திருக்க! அதுக்கு இருபதாயிரம் ரூபா தண்டம் அழணுமா? சரி. ஏ டி எம்ல பணம் எடுத்துக் கொடுக்கறேன். இனிமே எங்கிட்ட பணம்  கேக்காதே! கேட்டா நான் கொடுக்க மாட்டேன்!" என்றான் சிவம் கோபத்துடன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு லீலா தன் கணவனிடம், "என்னங்க, உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும். விக்ரமோட நண்பன் ஒத்தனைத் தற்செயலா ஒரு கடையில பாத்தேன். மஹாபலிபுரம் போனதைப் பத்திக் கேட்டேன். அவங்க யாரும் மஹாபலிபுரம் போகவே இல்லையாம். விக்ரம் நம்ப கிட்ட பொய் சொல்லி இருக்கான். பணத்தை வேற எதுக்கோ செலவு பண்ணி இருக்கான்!" என்றாள்.

அதிர்ச்சி அடைந்த சிவம், "சாயந்திரம் காலேஜிலேந்து வந்த்தும் கேக்கறேன்" என்றான். மஹாபலிபுரத்தில் நண்பனின் மொபைல் ஃபோனை உடைத்து விட்டதாகச் சொல்லி விக்ரம் தன்னிடம் இருபதாயிரம் ரூபாய் வாங்கிச் சென்றதை நினைத்ததும் அவனுக்கு பகீரென்றது. 

அதை மனைவியிடம் சொல்லலாமா என்று ஒரு நிமிடம் யோசித்து விட்டு, எப்படியும் மாலை விக்ரமை விசாரிக்கும்போது, அது மனைவிக்குத் தெரிந்து விடும் என்று நினைத்துப் பேசாமல் இருந்தான்.

ஆனால் மாலையில் மகனிடம் பேசும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. விக்ரம் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் போதை மருந்து விற்கும் ஒருவனிடம் போதை மருந்து வாங்கிக் கொண்டிருந்தபோது, போதை மருந்து விற்கப்படுவது பற்றித் தகவல் கிடைத்து அங்கே வந்த போலீஸால் அவன் கைது செய்யப்பட்டதாகக் காவல் நிலையத்திலிருந்து சிவத்துக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது.   

அரசியல் இயல்
அதிகாரம் 44 
குற்றங்கடிதல்  
குறள் 435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

பொருள்:
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்..
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

Thursday, December 17, 2020

434. உதவியாளர்

சுகந்தி அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததும் முதலில் பணி புரிந்தது அஷோக்கின் உதவியாளராகத்தான். 

அந்த நிறுவனத்தில் ஒரு இளநிலை அதிகாரியாக இருந்த அஷோக்கின் துடிப்பான செயல்பாடும், சுகந்திக்கு வேலையில் இருந்த ஆர்வமும், திறமையும் விரைவிலேயே இருவருக்கும் இடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தின.

சில மாதங்களுக்குப் பிறகு அதிகாரி-உதவியாளர் என்ற நிலையைத் தாண்டி தாங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாகி விட்டது இருவருக்குமே புரிந்தது. ஒருமுறை இருவரும் வெளியூருக்குச் சென்று ஒரு ஹோட்டலில் தங்கி விட்டு வரும் அளவுக்கு இருவருக்குள்ளும் புரிதலும் நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டது.

ஆயினும் அலுவலகத்தில் மற்ற யாருக்கும் தங்கள் நெருக்கம் தெரியாத அளவுக்கு இருவரும் கவனமாக நடந்து கொண்டனர்.

சுகந்தியைத் திருமணம் செய்து கொள்வதாக அஷோக் தன் பெற்றோர்களிடம் தெரிவித்தபோது, அவள் வேறு ஜாதி என்பதால் அவர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. 

தன் விருப்பத்துக்கு விரோதமாக அஷோக் சுகந்தியைத் திருமணம் செய்து கொண்டால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவன் அம்மா மிரட்டியபோது அஷோக் பெற்றோர்களிடம் பணிந்து விட்டான். 

தான் சுகந்தியிடம் எல்லை மீறிப் பழகி விட்டதைத் தன் பெற்றோர்களிடம் சொல்லும் துணிவு அவனுக்கு இல்லை.

தயக்கத்துடன் தன் பெற்றோரின் எதிர்ப்பை அஷோக் சுகந்தியிடம் கூறியபோது, "நீங்க என்ன முடிவு செஞ்சிருக்கீங்க?" என்றாள் சுகந்தி அமைதியாக.

"என்னை மன்னிச்சுடு சுகந்தி. என் அம்மாவை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது" என்றான் அஷோக் குரல் எழும்பாமல்.

சுகந்தி அவன் முகத்தை ஒரு முறை உற்றுப் பார்த்து விட்டு அங்கிருந்து அகன்றாள்.

அதற்குப் பிறகு அவள் ஆர்வம் இல்லாத, கடமைக்காக வேலை செய்யும் ஒரு ஊழியராக மட்டும் நடந்து கொண்டாள். தானே முனைப்பு எடுத்து பல வேலைகளைச் செய்தவள் அவன் சொல்வதை மட்டும் செய்வது என்று தன் வழக்கத்தை மாற்றிக் கொண்டாள்.

சில மாதங்களுக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் பொது மேலாளரின் உதவியாளர் வேலையை விட்டுப் போய் விட்டதால் அவருக்கு ஒரு அனுபவம் உள்ள உதவியாளர் தேவைப்பட்டபோது, அஷோக் பர்சனல் மானேஜரிடம் சுகந்தி திறமையானவள் என்று கூறி அவளைப் பொது மேலாளரின் உதவியாளராக நியமிக்க வைத்தான். 

புதிய பொறுப்புக்குச் சென்றபோது சுகந்தி அஷோக்கிடம் சொல்லிக் கொள்ளக் கூட இல்லை சுகந்தி. அவன்தான் அவள் நியமனத்துக்குக் காரணம் என்பது அவளுக்குத் தெரிந்திருக்குமா என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவள் தன்னிடம் பணி செய்வதை விட்டு விட்டு  வேறு பொறுப்புக்குப் போனது அஷோக்குக்கு நிம்மதியாக இருந்தது. 

இனி காலப்போக்கில் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தான் அஷோக். 

அதிர்ஷ்ட வசமாக சுகந்திக்கு விரைவிலேயே திருமணம் நிச்சயமாகி விட்டது. அலுவலகத்தில் எல்லோருக்கும் திருமண அழைப்புக் கொடுத்தது போல் அவனுக்கும் கொடுத்தாள் சுகந்தி. அவனும் மற்ற ஊழியர்களுடன் அவள் திருமணத்துக்குச் சென்று கூட்டத்தோடு நின்று விட்டு வந்தான்.

அதற்குப் பிறகு அவனுக்குத் திருமணம் நிச்சயமாகியது. அவன் திருமணம் வெளியூரில் நடந்ததால், அலுவலகத்தில் அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் சிலரைத் தவிர வேறு யாரும் அவன் திருமணத்துக்கு வரவில்லை. சுகந்தியும் வரவில்லை.

அதற்குப் பிறகு சுகந்தியும் அஷோக்கும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் ஏற்படவில்லை. அவன் ஒரு இளநிலை அதிகாரி என்பதால் பொது மேலாளரின் அறைக்குச் சென்று அவரைப் பார்க்க வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை.

எப்போதாவது அலுவலகத்தில் எங்காவது இருவரும் சந்தித்துக் கொள்ள நேர்ந்தால், இருவரும் எதுவும் பேசிக் கொண்டதில்லை. சில சமயம் அவர்கள் பார்வை ஒரு சில விநாடிகள் சந்தித்தால், அஷோக் அவள் முகத்தை நேரே பார்க்க முடியாமல் பார்வையைத் திருப்பிக் கொள்வான்.

சில ஆண்டுகள் கடந்து விட்டன. குற்ற உணர்விலிருந்து தான் பெருமளவு விடுபட்டு விட்டதாக அஷோக்குக்குத் தோன்றியது..

பொது மேலாளர்கள் இரண்டு மூன்று பேர் மாறி விட்டாலும், பொது மேலாளரின் உதவியாளராக சுகந்தி தொடர்ந்தாள். தன் திறமையாலும், உழைப்பாலும் எல்லாப் பொது மேலாளர்களிடமும் அவள் நல்ல பெயர் வாங்கி இருந்தாள் என்று அவன் அறிந்து கொண்டான். ஏதோ ஒரு விதத்தில் அவளுக்குத் தான் நன்மை செய்து விட்டதாக அவன் நினைத்துக் கொண்டான்.

"என்னடா இப்படி ஆயிடுச்சு? ப்ரொமோஷன் லிஸ்டில உன் பெயர் இல்லாததைப் பாத்து ஆஃபீஸ்ல எல்லாரும் ஆச்சரியப்படறாங்க!" என்றான் அஷோக்கின் அலுவலக நண்பன் ரமேஷ்

"என்ன செய்யறது? எம் டி யோட விருப்பம்தானே! அவர்தானே லிஸ்டை ஃபைனலைஸ் பண்ணி இருக்காரு?" என்றான் அஷோக் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு.

"ஜி எம்தான் உன்னை ரெகமண்ட் பண்ணி இருக்க மாட்டார்னு நினைக்கறேன், அவர் வந்து கொஞ்ச நாள்தானே ஆகுது?  உன்னைப் பத்தி அவருக்கு சரியாத் தெரியல. அவரைச் சுத்தி வந்து காக்கா பிடிக்கற ஆளுங்களை ரெகமண்ட் பண்ணிட்டு உன்னை விட்டுட்டாரு!"

"சேச்சே! எம் டிக்கே நம்ம ஒவ்வொத்தரைப் பத்தியும் நல்லாத் தெரியுமே! ஜி எம் சொல்றபடி அவரு ஏன் செய்யப் போறாரு?" 

"அப்படிச் சொல்லாதே! உயர் பதவியில இருக்கறவங்க யாருமே தங்களுக்கு அடுத்தாப்பல இருக்கறவங்க பேச்சுக்கு மதிப்பு கொடுப்பாங்க ..."

தங்களுக்கு அடுத்தாப்பல இருக்கறவங்க பேச்சுக்கு மதிப்பு கொடுப்பாங்க! அப்படின்னா... ? அஷோக்குக்கு ஏதோ பொறி தட்டியது. புதிதாக வந்திருக்கும் பொது மேலாளர் ஒரு வேளை தன் உதவியளர் சுகந்தியின் பேச்சைக் கேட்டுத் தன்னை ஒதுக்கி இருப்பரோ?

'தன்னை ஏமாற்றியதற்கு அவனைப் பழி வாங்குவதற்காக சுகந்தி ஜி எம்மிடம் என்னைப் பற்றி ஏதாவது தவறாகச் சொல்லி என் வாய்ப்பைப் பறித்திருப்பாளோ?'

தன் மனதில் எழுந்த கேள்விக்கு அஷோக்குக்கு விடை தெரியவில்லை.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 44
குற்றங்கடிதல்  
குறள் 434:
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை.

பொருள்:
குற்றம் அழிவை உண்டாக்கும் பகையாக அமைந்து விடும் என்பதால் ஒருவன் குற்றம் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்வதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்..
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

Tuesday, December 15, 2020

433. ஹோட்டல் அறை

"செமினாருக்கான ஏற்பாடெல்லாம் எப்படி நடந்துக்கிட்டிருக்கு?" என்றார் டைரக்டர் சுதர்சனம்.

"எல்லா ஏற்பாடுகளும் செஞ்சுட்டோம் சார்!" என்றார் நிர்வாக அதிகாரி கணேசன்..

"நல்லது. டெலிகேட்கள், சிறப்பு விருந்தாளிகள் எல்லாரும் வந்ததும் எங்கிட்ட சொல்லுங்க. நான் அவங்களையெல்லாம் அவங்க அறையில போய்ப் பாத்துட்டு வரேன்."

"சார்! நீங்க போக வேண்டிய அவசியம் இல்ல சார். நான் அவங்களைப் பாத்து அவங்க சௌகரியங்களை கவனிச்சுக்கறேன். நீங்க அவங்களை நாளைக்கு செமினார் ஹால்ல சந்திச்சாப் போதும்."

"பரவாயில்ல. இது ஒரு கர்ட்டிஸி. நமக்கு புரோட்டோகால் எல்லாம் எதுவும் கிடையாதே! நாம இந்த செமினாருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறோம், இதில கலந்துக்கிறவங்களை எந்த அளவுக்கு மதிக்கிறோம்கறதை அவங்களுக்குத் தெரிவிக்கிற மாதிரி இருக்கும்" என்றார் சுதர்சனம்.

ன்று மாலை டெலிகேட்களும், சிறப்பு விருந்தினர்களும் தங்கி இருந்த ஹோட்டல் அறைகளுக்கு கணேசனுடன் சென்று அனைவரையும் சந்தித்து விட்டு வந்தார் சுதர்சனம்.

சந்திப்பு முடிந்து வெளியில் வந்து இருவரும் காரில் ஏறிக் கொண்டதும், "கணேசன்! ஏன் ஒரு ரூமில மட்டும் ரெண்டு பேர் தங்கி இருக்காங்க?" என்றார் சுதர்சனம்.

கணேசன் சற்றுத் தயங்கி விட்டு, "இல்லை சார். பொதுவா இந்த மாதிரி செமினார்களுக்கு வரதா சொல்றவங்கள்ள ஒண்ணு ரெண்டு பேரு வர மாட்டாங்க. அதனால எப்பவுமே ரெண்டு ரூம் குறைவாத்தான் போடுவோம். அப்படி எல்லாரும் வந்துட்டா, அப்புறம் ரூம் எடுத்துப்போம். 

"இந்தத் தடவை எல்லாரும் வந்துட்டாங்க. இந்த ஹோட்டல்ல அறை காலியா இல்ல. வேற ஹோட்டல்ல போட்டா ரொம்ப தூரமாயிடும். அதோட ஒத்தரை மட்டும் அங்கே தனியாத் தங்க வைக்கணும். அதனால ஒரு ரூம்ல மட்டும் ரெண்டு பேரைத் தங்க வச்சிருக்கோம். 

"இந்த ஹோட்டல்ல அறை இல்ல, வேற ஹோட்டல்ல அறை கொடுக்கறோம்னு அவங்க கிட்ட சொன்னேன். அவங்க ரெண்டு பேரும் 'வேண்டாம், இங்கேயே ஒரே ரூம்ல இருந்துக்கறோம்'னு சொல்லிட்டாங்க" என்றார்.

"இது ரொம்ப மோசம் கணேசன். எனக்கு முன்னாலேயே தெரிஞ்சிருந்தா இதை நான் அனுமதிச்சிருக்க மாட்டேன்" என்றார் சுதர்சனம் சற்றுக் கோபத்துடன்.

"சார்! தப்பா நினைக்காதீங்க. நாம ஒரு புரொடக்டிவிடி கவுன்சில் நடத்தறோம். செலவுகளைக் குறைச்சு உற்பத்தித் திறனை அதிகரிக்கறதுதான் நம்ம நோக்கம். அதனால செலவுகளைக் குறைக்கறதில நாம முன்னோடியா இருக்கணும்னு பழைய டைரக்டர் சொல்லுவாரு. இது கூட அவரோட யோசனைதான்."

"பழைய டைரக்டர் காட்டின வழிப்படி நீங்க நடந்துக்கிட்டீங்கன்னா அதுக்கு நான் உங்களைக் குத்தம் சொல்லல. ஆனா இது தவறான அணுகுமுறை. இது சிக்கனம் இல்ல, ஒருவகை அலட்சியம்னுதான் நான் சொல்லுவேன்."

"சார்! இது ரொம்ப சின்ன விஷயம். வரவங்க யாரும் அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க!"

"சின்ன விஷயம்னு நினைக்காதீங்க. இது நமக்குப் பெரிய அளவில கெட்ட பேரை உண்டாக்கலாம். இப்ப அட்ஜஸ்ட் பண்ணிக்கறவங்க நாளைக்கு  மத்தவங்க கிட்ட இதை ஒரு குறையாச் சொல்லலாம். 

"ஆங்கிலத்தில ஒரு கவிதை இருக்கு. ஒரு ஆணி குறைவா இருந்ததால, ஒரு சேனையோட குதிரைப்படையில ஒரு குதிரைக்கு லாடம் அடிக்க முடியலையாம், அந்த ஒரு குதிரை குறைஞ்சதால, அந்தச் சேனை போர்ல வெற்றியை இழந்துடுச்சாம். 

"பாரதியாரோட 'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்'கற கவிதையைப் படிச்சிருப்பீங்க. நெருப்பில குஞ்சு, பெரிசுன்னு உண்டான்னு கேட்டு முடிச்சிருப்பார் பாரதியார். 

"அது மாதிரி தவறுல பெரிய தவறு சிறிய தவறுன்னு பாக்காம எந்தத் தவறும் நடக்காம பாத்துக்கறதுதான் புத்தியாலித்தனம். 

"என் மேலேயும் தப்பு இருக்கு. எத்தனை பேர் வராங்க, எத்தனை ரும் போட்டிருக்கீங்கன்னு நான் கேட்டிருந்தா இந்தத் தவறு நடந்திருக்காது. இனிமே இப்படிப்பட்ட தவறு நடக்காம பாத்துக்கங்க. நானும் இனிமே அதிக கவனமா இருக்கேன்" என்றார் சுதர்சனம்.

அரசியல் இயல்
அதிகாரம் 44 
குற்றங்கடிதல்  
குறள் 433:
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

பொருள்:
பழிக்கு அஞ்சுபவர்கள் தினையளவு குற்றம் ஏற்பட்டாலும் அதைப் பனையளாவானதாகக் கருதிக் குற்றம் ஏற்படாமல் காத்துக் கொள்வார்கள்.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

Monday, December 14, 2020

432. முதல்வர் நாற்காலி

எழில்மலை முதலமைச்சராகப் பதவியேற்று ஒரு ஆண்டு முடிந்ததைக் கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட விழா முடிந்ததும் கட்சித் தலைவர் ருத்ரமூர்த்தி கட்சி அலுவலகத்துக்குச் சென்றார்.

எழில்மலை தன் அலுவலகத்துக்குச் சென்று விட மற்ற தலைவர்களும் கலைந்து சென்று விட்டனர்.

கட்சி அலுவலகத்துக்குச் சென்று தன் அறையில் அமர்ந்து சற்று நேரம் சிந்தனையில் ஈடுபட்ட ருத்ரமூர்த்தி முன்னாள் முதல்வர் பாண்டியனைத் தொலைபேசியில் அழைத்தார்.

"இப்ப உங்க உடம்பு எப்படி இருக்கு?" என்றார் ருத்ரமூர்த்தி.

"பரவாயில்லை. பைபாஸ் பண்ணினப்பறம் இப்ப உடம்பு ஓரளவுக்கு நல்லாவே இருக்கு. பழையபடி செயல்பட முடியுது" என்றார் பாண்டியன்.

"ரொம்ப சந்தோஷமா இருக்கு. வர ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கு என் குடும்பத்தோட ஈ சி ஆர்ல இருக்கற நான் வழக்கமாப் போற ரிசார்ட்டுக்குப் போறேன். நீங்க என்னை அங்கே வந்து சந்திக்க முடியுமா? நாம சந்திக்கறது யாருக்கும் தெரிய வேண்டாம். உங்க மனைவியையும் அழைச்சுக்கிட்டு லஞ்ச்சுக்கு வந்துடுங்க. நம்ம சந்திப்பு யாருக்காவது தெரிஞ்சாலும் குடும்ப ரீதியான சந்திப்புன்னுதான் தோணும்!" என்றார் ருத்ரமூர்த்தி.

திய உணவுக்குப் பிறகு ருத்ரமூர்த்தி ஒரு அறையில் அமர்ந்து பாண்டியனுடன் தனிமையில் உரையாடினார்.

"போன தடவை நீங்க முதல்வரா இருந்தப்ப நல்லாதான் ஆட்சி நடத்தினீங்க. ஆனா நம்ம மக்களுக்கு அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை ஆட்சியை மாத்தற பழக்கம் இருக்கறதால நாம தோத்துட்டோமந்தநமக்கு அப்புறம் பதவிக்கு வந்தவங்க ரொம்ப மோசமா ஆட்சி நடத்தினாங்க. போன வருஷம் நடந்த தேர்தல்ல நாம பெரிய வெற்றி பெற்றோம். ஆனா உங்களுக்கு உடல்நிலை சரியில்லாததால எழில்மலையை முதல்வர் ஆக்கும்படி ஆயிடுச்சு!" என்ற பீடிகையுடன் தொடங்கினார் ருத்ரமூர்த்தி.

"அதனால என்ன? எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு?" 

"அப்படியா சொல்றீங்க? எழில்மலையோட நிர்வாகத்தைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?" 

"எனக்குத் தெரிஞ்ச வரையில மக்களுக்கு நம்ம ஆட்சி மேல வெறுப்பு எதுவும் இல்ல" என்றார் பாண்டியன் எச்சரிக்கை உணர்வுடன்.

ருத்ரமூர்த்தி சிரித்துக் கொண்டே, "உங்க தயக்கம் எனக்குப் புரியுது. சரி. என்னோட கருத்தைச் சொல்றேன். எழில்மலையோட நிர்வாகத்தில எனக்குத் திருப்தி இல்ல" என்றார்.

பாண்டியன் மௌனமாக இருந்தார்.

"குறிப்பா ரெண்டு மூணு விஷயங்கள்ள எனக்கு ரொம்ப அதிருப்தி இருக்கு. முதல்ல அவரு மக்களைப் பத்திக் கவலைப்படல. சில மாதங்கள் முன்னே பெரிய வெள்ளம் வந்து ரெண்டு மூணு மாவட்டங்கள்ள மொத்தப் பயிரும் அழிஞ்சு போயிடுச்சு. விவசாயிங்கள்ளாம் நடுத்தெருவில நின்னாங்க. விவசாயிகளுக்குக் கொஞ்சமாவது நிவாரணத் தொகை கொடுக்கச் சொல்லி நான் வற்புறுத்தினேன். ஆனா அவரு பிடிவாதமா மறுத்துட்டாரு. அரசாங்கத்துக்கிட்ட பணம் இல்லேன்னு சொன்னாரு. ஆனா புதிய தலைமைச் செயலகம் கட்டறதுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருக்காரு!"

"கட்சித் தலைவர்ங்கற முறையில நீங்க கட்சியில தீர்மானங்கள் போட்டு அவரை ஒழுங்கா செயல்பட வச்சிருக்கலாமே!"

"அவரு தன் முடிவுகளை அறிவிச்சப்பறம் நாம கட்சியில தீர்மானம் போட்டா கட்சி அவருக்கு எதிரா இருக்கற மாதிரி தெரியாதா? அதனால அவர் கிட்ட தனிப்பட்ட முறையில பேசிப் பாத்தேன். என் பேச்சை அவரு மதிக்கல"

"உங்களையே மதிக்காம நடந்துக்கிட்டாரா?" என்றார் பாண்டியன்.

"என்னை மதிக்காதது பத்தி நான் கவலைப்படல. அவரோட செயல்களை நினைச்சுத்தான் நான் வருத்தப்படறேன். அவரை விட வயசிலயும் அனுபவத்திலயும் மூத்த அமைச்சர்களைக் கூட அவரு மதிக்காம நடந்துக்கறாரு. பேச்சில கூட மரியாதை இல்லாம ''வா' 'போ' ன்னு பேசறாருன்னு எங்கிட்ட அவங்க வந்து புலம்பறாங்க!"

"எங்கிட்ட கூட சில பேர் சொல்லி வருத்தப்பட்டாங்க" என்றார் பாண்டியன்.

"இதை விடக் கொடுமையானதா நான் நினைக்கறது அவருடைய கொடூர குணத்தை. ரசாயன் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலையில தொழிலாளர்கள் போராடினப்ப அவரு தேவையில்லாம துப்பாக்கிச் சூடு நடத்தி பத்து பேரைக் கொன்னுட்டு, தொழிலாளர்கள் தொழிற்சாலையை வெடிகுண்டு வச்சுத் தகர்க்கப் பாத்தாங்கன்னு பொய்யான குற்றச்சாட்டைச் சொல்லி சில தொழிலாளர்களை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில கைது செஞ்சு மத்த தொழிலாளர்கள் கிட்ட அச்சத்தை ஏற்படுத்தி அவங்க நிர்வாகத்துக்கிட்ட சரணடையும்படி செஞ்சுட்டாரு. முதலாளிங்க கிட்ட பணம் வாங்கிக்கிட்டுத் தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்கிட்டாருன்னு எதிர்க்கட்சிக்காரங்க சொல்லலாம். நாமே எப்படிச் சொல்ல முடியும்?" என்றார் ருத்ரமூர்த்தி கொந்தளிப்புடன்.

"அதெல்லாம்தான் இப்ப அடங்கிப் போச்சே! மக்களும் இதை மறந்திருப்பாங்களே!"

"உண்மைதான். ஆனா ஒரு மோசமான அரசாங்கத்தைத் தொடர அனுமதிக்கிறது தப்பு இல்லையா? எழில்மலையை மாத்தணும்னு நான் முடிவு செஞ்சு ரொம்ப நாள் ஆச்சு. ஆனா முதலமைச்சரா இருக்கத் தகுதி வாய்ந்த ஒரு பலமான ஆளு எனக்குக் கிடைக்கல."

"நீங்களே பொறுப்பேத்துக்கங்க. அதுதான் நாட்டுக்கும் நல்லது, கட்சிக்கும் நல்லது" என்றார் பாண்டியன்.

"இந்தக் கட்சியை ஆரம்பிக்கறப்பவே நான் முதலமைச்சராவோ, வேற எந்த அமைச்சராவோ ஆக மாட்டேன்னு வெளிப்படையா அறிவிச்சு அதன்படி நடந்துக்கிட்டிருக்கேன். ஆனா நான் சொல்ற ஆளைத்தான் நம்ம கட்சியோட சட்ட மன்ற உறுப்பினர்கள் முதல்வராத் தேர்ந்தெடுப்பாங்க. ரெண்டு நாள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்கப் போகுது. அதில புதுசா ஒத்தரை முதல்வராத் தேர்ந்தெடுக்கச் சொல்லி நான் உறுப்பினர்களைக் கேட்டுக்கப் போறேன். அதுக்கு முன்னால எழில்மலை கிட்ட பேசி அவரைப் பதவி விலகச் சொல்லப் போறேன். அவருக்கு அதைச் செய்யறதைத் தவிர வேற வழி இல்ல!"

"நீங்க முதல்வர் பதவிக்கு வர மாட்டேன்னு சொல்றீங்க. அப்ப வேற யாரை முதல்வராத் தேர்ந்தெடுக்கணும்னு சொல்லப் போறீங்க?"

"உங்களைத்தான். உங்களுக்குத்தான் இப்ப உடம்பு குணமாயிடுச்சே!" என்றார் ருத்ரமூர்த்தி. 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 44
குற்றங்கடிதல்  
குறள் 432:
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

பொருள்:
தேவைப்படுவோர்க்குப் பொருள் கொடுக்காமல் இருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாகும்.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

Sunday, December 13, 2020

431. நால்வர்

"என்னோட எம் பி ஏ பிராஜக்டுக்காக ஒரு வித்தியாசமான தலைப்பை எடுத்துக்கிட்டிருக்கேன் அப்பா!" என்றான் மனோகர்.

"அப்படியா? என்ன அது?" என்றார் அவன் தந்தை குணசீலன். அவர் அதிகம் படித்திருக்காவிட்டாலும், அறிவுக் கூர்மை மிகுந்தவர், வாழ்க்கையின் உண்மைகளை அனுபவம் மூலம் நன்கு கற்றவர் என்பதால், மனோகர் அவரிடம் தன் படிப்பு தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது உண்டு.

"வாழ்க்கையில வெற்றி பெற்ற நாலு பேரோட வாழ்க்கையை எடுத்துக்கிட்டு அவங்க வெற்றி அடைஞ்சதுக்கான காரணங்கள் என்னென்னங்கறதைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதப் போறேன்."

"நல்ல யோசனையாத்தான் படுது. உன் கைடு இதுக்கு ஒத்துக்கிட்டாரா?"

"ஒத்துக்கிட்டாரு. அவரும் இது ஒரு நல்ல யோசனைன்னுதான் சொன்னாரு. அந்த நாலு பேர் யாருங்கறதைத் தேர்ந்தெடுத்து அவர் கிட்ட சொல்லி அவரோட ஒப்புதலையும் வாங்கிட்டேன். அவரே அந்த நாலு பேர்கிட்டயும் பேசி அவங்க சம்மதத்தையும் வாங்கிட்டாரு. அவங்க எனக்கு நேரம் ஒதுக்கி நான் கேட்கிற விவரங்களைக் கொடுக்க ஒத்துக்கிட்டாங்க" என்றான் மனோகர் உற்சாகத்துடன்.

"நல்லது. நல்லாப் பண்ணு!" என்றார் குணசீலன்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு மனோகர் தந்தையிடம், "அப்பா! என் பிராஜக்டை முடிச்சுட்டேன். கைடும் அப்ரூவ் பண்ணிட்டாரு" என்றான்.

"ரொம்ப நல்லது. அந்த நாலு பேரு யாருன்னு எங்கிட்ட சொல்லலாம்னா சொல்லு" என்றார் குணசீலன்.

"முதல்ல நான் உங்கிட்ட பிராஜக்டைப் பத்தி சொன்னப்பவே, அந்த நாலு பேரு யாருன்னு கேப்பேன்னு நினைச்சேன்."

"வேணும்னுதான் கேக்கல. அவங்க யாருன்னு தெரிஞ்சா அவங்களைப் பத்தி என்னோட கருத்து எதையாவது நான் சொல்லி அது உன்னோட அணுகுமுறையை பாதிக்கக் கூடாதுன்னுதான் கேக்கல. இப்ப சொல்லு. தெரிஞ்சுக்கறேன்."

"விஞ்ஞானி தாமோதரன், தொழிலதிபர் முத்து, தன் படிப்பாலயும், அறிவுத்திறனாலயும் ஒரு பெரிய நிறுவனத்தோட தலைமைப் பொறுப்புக்கு வந்த மணிவண்ணன், அதிகம் படிக்காம, கீழ் நிலையில வேலைக்குச் சேர்ந்து உயர் பதவிக்கு வந்த முருகையன் இவங்கதான் அந்த நாலு பேரு."

"நல்ல தேர்வுதான். வெவ்வேறு பின்னணியிலேந்து வெவ்வேறு விதங்கள்ள உயர்ந்த நிலையை அடைஞ்சவங்க."

"அவங்களைச் சந்தித்துப் பேசி அவங்க அனுபவங்களைக் கேட்டு அவங்களோட சிறப்புகள், முயற்சிகள், அவங்க எடுத்த முக்கியமான முடிவுகள், வாழ்க்கையைப் பத்தின அவங்க சிந்தனை, அணுகுமுறை, அவங்களோட வெற்றிகள், தோல்விகள், அவங்க செஞ்ச தவறுகள், சந்திச்ச சவால்கள், எடுத்த ரிஸ்க்குகள், அவங்களோட மதிப்பீடுகள், மத்தவங்களோட செயல்படும்போது அவங்க பின்பற்றின அணுகுமுறைகள்னு பல அருமையான, பயனுள்ள விஷயங்களை நான் தெரிஞ்சுக்கிட்டது எனக்கு நிறைய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுத்திருக்கு, நான் நிறையக் கத்துக்கிட்டிருக்கேன். எதிர்காலத்தில இது எனக்கு நிறைய உதவும்னு நினைக்கறேன்!" என்றான்  மனோகர் பெருமிதத்துடன்.

"உன்னோட கல்வியை உன் வாழ்க்கைக்குப் பயனுள்ளதா ஆக்கிக்கிட்டது நல்ல விஷயம். சரி. அவங்ககிட்ட கத்துக்கிட்டது உனக்கு வாழ்க்கையில பயன்படும்னு நீ சொன்னதால கேக்கறேன். இந்த நாலு பேர்ல யாரையாவது ஒரு ரோல் மாடலா எடுத்துக்கணும்னா யாரை எடுத்துப்ப?" என்றார் குணசீலன்.

"அப்பா! உண்மையில, நானே இதைப் பத்தி யோசிச்சிருக்கேன். வெவ்வேறு சமயங்கள்ள இந்த நாலு பேரையுமே பின்பத்தணும்னு தோணி இருக்கு. ஆனா நான் அவங்ககிட்ட நெருக்கமாப் பழகினதாலயும், அவங்ககிட்ட வேலை செய்யறவங்ககிட்ட பேசினதிலேயும் எனக்கு சில நெகடிவான விஷயங்கள் தெரிய வந்தது. என்  ரிப்போர்ட்ல இது வராது, வரவும் முடியாது. ஆனா என் மனசில அது உறுத்திக்கிட்டிருந்தது. அதுவும் நீ இந்தக் கேள்வியைக் கேட்டதால சொல்றேன்.

"தாமோதரன் பெண்கள் கிட்ட தவறா நடந்துக்கறவர்னு ஒரு கருத்து இருக்கு. அதில ஓரளவுக்காவது உண்மை இருக்கும்னுதான் எனக்குப் படுது. 

"மணிவண்ணன் ரொம்ப கோபக்காரர்.அவருகிட்ட எல்லாருமே பயந்து பயந்துதான் பேசறாங்க. எங்கிட்ட கூட சில சமயம் எரிஞ்சு விழுந்தாரு. அவரு கிட்ட கேள்வி கேக்கறப்ப நான் பயந்துகிட்டேதான் கேட்டேன். 

"முருகையன் கீழ்நிலையிலேந்து உயர்ந்து மேல வந்ததால தன்னைப் பத்தி அவருக்கு ஒரு ஆணவம் இருந்ததைப் பாத்தேன். 

"இந்தக் குறைகள் எதுவுமே இல்லாதவர் முத்துதான். அதனால அவரைத்தான் நான் ரோல் மாடலா  எடுத்துப்பேன்.  அவரை மாதிரி தொழிலதிபரா வரணும்னு நான் நினைக்காட்டலும் எந்த விதமான வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்தாலும் அவரை ரோல்  மாடலா வச்சுக்கிட்டா நிச்சயமா மேன்மை அடையலாம்கறது  என்னோட கருத்து" என்றான் மனோகர்.

"நாலு பேரைப் பாத்துக் கத்துக்கணும்னு சொல்லுவாங்க. அந்த நாலு பேர்லயும் யார் உயர்ந்தவங்கன்னு பாத்து அவங்ககிட்டேந்து கத்துக்கறதுதான் சிறப்பு" என்றார் குணசிலன் மகனின் கருத்தை ஆதரித்தவராக.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 44
குற்றங்கடிதல்  
குறள் 431:
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

பொருள்:
செருக்கு, சினம், காமம் ஆகியவை இல்லாதவனுடைய வாழ்வில் ஏற்படும் மேன்மை பெருமைக்குரியது.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

459. தந்தையின் அறிவுரை.

முகுந்தன் அலுவலகத்துக்குக் கிளம்பும் முன் வழக்கம் போல் தன் தந்தையின் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்திருந்த அவரைப் பார்த்து, "ராத்தி...