அதிகாரம் 56 - கொடுங்கோன்மை

திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 56
கொடுங்கோன்மை

551. மூன்று தீர்ப்புகள்

"இந்தக் கொடுங்கோல் ஆட்சியில பத்திரிகையாளர்களைக் கைது செஞ்சு சிறையில அடைக்கிறது வழக்கமாப் போச்சு. இதுக்கு பயந்தே பல பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தை விமரிசனம் செய்யறதை நிறுத்திட்டாங்க. ஆனா இந்த மூர்த்தி இப்படி மாட்டிக்கிட்டாரேன்னு நினைச்சாதான் வருத்தமா இருக்கு!"

"என்ன செய்யறது? பெரும்பாலான பத்திரிகையாளர்கள் அரசாங்கம் செய்யற அக்கிரமங்களையெல்லாம் ஏதோ நாட்டுக்கான நல்ல திட்டங்கள் மாதிரி கூசாம புகழ்ந்து அரசாங்கத்துகிட்ட நல்ல பேரு வாங்கிக்கிட்டு தங்களுக்கு வேண்டிய சலுகைகளையும் வாங்கிக்கறாங்க. 

"உன்னை மாதிரியும், என்னை மாதிரியும் சில பேரு அரசாங்கத்துக்கு வால் பிடிக்காம, அதே சமயம் அரசாங்கத்தைக் குறையும் சொல்லாம, கம்பி மேல நடக்கற மாதிரி கவனமா எழுதி ஒரு மாதிரி சமாளிச்சுக்கிட்டிருக்கோம். 

"ஆனா மூர்த்தி மாதிரி சில பேரு இந்த அரசாங்கத்தோட தவறுகளை தைரியமா தட்டிக் கேக்கறாங்க. அவங்கள்ளாம் ஏதோ தேச விரோதிகள் மாதிரி சித்தரிக்கப்பட்டு ஏதோ ஒரு காரணத்துக்காக் கைது செய்யப்பட்டு மாசக்கணக்கா சிறையில இருந்துட்டு வராங்க.

"நம்மால என்ன செய்ய முடியும்? இப்படித் தனியா புலம்பறதைத் தவிர. அது கூட யார் காதிலேயாவது விழுந்துடுமோன்னு பயந்து பயந்து செய்ய வேண்டி இருக்கு!"

"மூர்த்தியோட ஜாமீன் மனு மேல நாளைக்கு தீர்ப்பு சொல்லப் போறாங்க. என்ன ஆகுதோ பார்க்கலாம்!"

"நாளைக்கு இன்னொரு வழக்கிலேயும் தீர்ப்பு வரப் போகுது தெரியுமா?"

"அந்த முக்கியமான மனிதர் செஞ்ச ஊழலைப் பத்தி விசாரிக்கணும்னு ஒத்தர் பொதுநல வழக்கு போட்டிருக்காரே அந்த வழக்குதானே?"

"ஆமாம்!"

"அதில என்ன தீர்ப்பு வரும்னு தெரியாதா? அநேகமா தீர்ப்பு வந்த  சில நாள் கழிச்சு அந்தப் பொதுநல வழக்கு போட்டவரே ஏதாவது ஒரு  காரணத்துக்காகக் கைது செய்யப்பபடுவார்னு நினைக்கிறேன்!"

"ஆமாம். அப்படி நடக்க வாய்ப்பு இருக்கு. பேய் அரசாட்சி செய்தால்..னு பாரதியார் பாடினதை நாம நேரடியா அனுபவிச்சுக்கிட்டிருக்கோம். அடுத்த தேர்தல்ல ஏதாவது அதிசயம் நடந்தாத்தான் உண்டு!"

"சரி. நாளைக்கு சாயந்திரம் மறுபடி சந்திக்கலாம்."

"ரெண்டு தீர்ப்புமே வந்துடுச்சே! நாம எதிர்பார்த்த மாதிரிதான் நடந்திருக்கு!"

"ஆமாம். முக்கியமான நபர் மேல ஊழல் வழக்கு தொடுக்க முகாந்தரம் எதுவும் இல்லேன்னு நீதிபதி சொல்லிட்டாரு."

"அது அப்படித்தானே வந்திருக்க முடியும்?  ஆனா மூர்த்திக்கு ஜாமீன் இல்லேன்னு சொல்லிட்டாங்களே, அதுதான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு."

"ஆமாம், மூர்த்தி ஜாமீன்ல வெளியில வந்தா நாட்டைப் பிளவு படுத்தற வேலைகள்ள ஈடுபடுவார்னு அரசாங்க வக்கீல் சொன்னதை நீதிபதி ஏத்துக்கிட்டாரு."

"இந்த ரெண்டு தீர்ப்பைத் தவிர மூணாவதா ஒரு தீர்ப்பு வந்திருக்கு பாத்தியா?"

"அது என்ன தீரப்பு?"

"கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒத்தனுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்காங்க."

"அடப்பாவமே!"

"கொலைகாரனுக்குப் போய்ப் பரிதாபப்படறியே!"

"பரிதாபப்படல. கொலையை விடக் கொடுமையான விஷயங்கள்ளாம் இங்கே நடந்துக்கிட்டிருக்கு. அதைச் செய்யறவங்களுக்கு தண்டனை இல்லை, பாதிக்கப்பட்ட மூர்த்தி போன்றவர்களுக்கும் நிவாரணம் இல்லை! அதை நினைச்சுத்தான் அப்படிச் சொன்னேன்."

குறள் 551:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

பொருள்:
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

552. கொள்ளையர்கள்!

"நான் அதிபரானால் வரிகளைப் பாதியாகக் குறைப்பேன்!" என்று அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது மக்களுக்கு வாக்குறுதி அளித்தார் நித்திய சத்தியர். 

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று அவர் அதிபர் ஆனதும் ஒரு ஆண்டுக்குள் வரி விகிதங்கள் கடுமையாக உயர்ந்தன. 

குறிப்பாக ஏழை மக்களை பாதிக்கும் மறைமுக வரிகளை அவர்  பலமுறை உயர்த்தியதால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. அடித்தட்டு மக்களுக்கு அன்றாட வாழ்க்கையே சவாலாக அமைந்தது. 

வறுமை காரணமாக நிகழும் தற்கொலைகள் அதிகரித்தன. நாட்டின் பல பகுதிகளிலும் வரி உயர்வையும் விலைவாசி உயர்வையும் எதிர்த்துப் போராட்டங்கள் வெடிப்பது ஒரு தினசரி நிகழ்வாக ஆயிற்று. ஆனால் நித்திய சத்தியர் அவற்றைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை..

டுத்த நிதிநிலை அறிக்கை பற்றி விவாதிக்க நிதித்துறைச் செயலரை அழைத்திருந்தார் அதிபர் நித்திய சத்தியர்.

சில வரி விகிதங்களை இன்னும் உயர்த்த வேண்டும் என்று அதிபர் கூறியபோது, "சார்! அதிக வரிவிதிப்பையும் விலைவாசி உயர்வையும் எதிர்த்து ஏற்கெனவே மக்கள் போராட்டங்கள் நடத்திக்கிட்டிருக்காங்க. விலைகளை இன்னும் உயர்த்தினால் போராட்டங்கள் இன்னும் அதிகமாகும்!" என்றார் செயல,ர்.

"அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். காவல்படை எதுக்கு இருக்கு? அவங்களுக்கு தடிகள், துப்பாக்கிகள் எல்லாம் எதுக்குக் கொடுத்திருக்கோம்?" என்றார் அதிபர் சிரித்தபடி.

"அதோட, மக்கள் மன்ற உறுப்பினர்கள் எல்லாம் மக்களோட கோபத்தினால பயந்து போயிருக்காங்க. அதனால வரியை உயர்த்தினா மக்கள் மன்ற உறுப்பினர்கள் அதை ஆதரிக்க மாட்டாங்க. மக்கள் மன்றத்தில இதை நிறைவேற்றறது கடினமா இருக்கும்."

"அப்படி மக்கள் மன்றத்தில இது நிறைவேறலேன்னா, என்னோட சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை நிறைவேற்றுவேன். நீங்க நான் சொன்னபடி செய்யுங்க!" என்றார் அதிபர் கடுமையாக.

செயலர் அமைதியாக அங்கிருந்து கிளம்பினார்.

ள்துறைச் செயலருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார் அதிபர்.

"நாட்டில சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கு?" என்றார் அதிபர்.

"வரி உயர்வை எதிர்த்து நடக்கிற போராட்டங்கள் தினமும் அதிகரிச்சுக்கிட்டிருக்கு" என்று ஆரம்பித்தார் உள்துறைச் செயலர்.

"அதை விடுங்க. அதைப் பத்தி நான் காவலர் படைத் தலைவர் கிட்ட பேசிக்கறேன். மற்ற விஷயங்களைப் பத்திப் பேசுங்க!" என்றார் அதிபர் எரிச்சலுடன்.

"சமீபமா நாட்டில பல இடங்கள்ள வழிப்பறிக் கொள்ளைகள் நடக்க ஆரம்பிச்சிருக்கு. சாலையில நடக்கறவங்களையும், கார்ல போறவங்களையும் நிறுத்தி, கத்தியைக் காட்டி பணம், நகைகளைக் கொள்ளை அடிக்கற சம்பவங்கள் நடக்குது. இந்தச் சம்பவங்கள் ஆங்காங்கே திடீர் திடீர்னு  நடக்கறதால காவலர் படையால இதையெல்லாம் தடுக்க முடியல. ஆனா கொள்ளையடிக்கறவங்களைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை நடந்துக்கிட்டிருக்கு."

"இந்தச் சம்பவங்கள் எத்தனை நாளா நடந்துக்கிட்டிருக்கு?"

"ரெண்டு மூணு மாசமா..." என்றார் உள்துறைச் செயலர் மென்று விழுங்கியபடி. 

"ஆச்சரியமா இருக்கே! அரசாங்கம் வரி விதிச்சா அதுக்கு எதிராப் போராட்டம் நடத்தற மக்கள் ஏன் இந்தக் கொள்ளைச் சம்பவங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தல?" என்றார் நித்திய சத்தியர்.

"தெரியல!" என்ற உள்துறைச் செயலர். 'ஒருவேளை உங்க அதிகாரத்தைப் பயன்படுத்தி நீங்க மக்களைக் கசக்கிப் பிழிஞ்சு வரி வசூலிக்கிறதை விட கத்தியை வச்சு மிரட்டிக் கொள்ளையர்கள் பணம் பறிக்கறது மோசமான விஷயம் இல்லைன்னு மக்கள் நினைக்கறாங்களோ என்னவோ!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

குறள் 552:
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

பொருள்:
ஆட்சிக்கோல் ஏந்தியிருக்கும் அரசன் தன் குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரன் மிரட்டிப் பொருள் பறிப்பதைப் போன்றது.

553. அரசனின் முடிவு

"ஆறு மாதங்கள் முன் நம் தெற்கு எல்லைப்புறப் பகுதியில் சில போராட்டங்கள் நடந்தன. நாம் போராட்டத்தை அடக்க முயன்றோம். ஆனால் நம் தெற்கு எல்லையில் இருக்கும் சீவக நாட்டு மன்னன் அந்தப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டான். போராட்டம் செய்தவர்களுக்கு என்ன பரிசு கிடைத்தது பார்த்தீர்களா அமைச்சரே! அமைதியான நதியில் ஆனந்தமாகப் படகுச் சவாரி செய்து கொண்டிருந்தவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது போல் கொடுங்கோல் ஆட்சி நடக்கும் சீவக நாட்டின் கட்டுப்பாட்டில் போய் மாட்டிக் கொண்டு விட்டார்கள்" என்றான் அரசன் ஆதித்த வேளான்.

அமைச்சர் மௌனமாகத் தலையாட்டினார், தான் சொல்ல வேண்டியதை அரசரிடம் எப்படிச் சொல்வது என்று யோசித்தபடியே.

"அரசே! அதற்குப் பிறகு நாம் படைகளை அனுப்பி சீவக நாடு பிடித்துக் கொண்ட பகுதிகளை மீட்க முயற்சி செய்தபோது, அந்தப் பகுதி மக்கள் நமக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லையே!" என்றார் அமைச்சர்.

"அதுதான் எனக்கும் வியப்பாக இருக்கிறது! இதற்கு என்ன காரணம்? சீவக நாட்டு மன்னனிடம் அவர்களுக்கு அவ்வளவு பயமா, அல்லது தங்கள் சொந்த நாட்டின் மீது அவர்களுக்குப் பற்று இல்லாமல் போய் விட்டதா?"

"அரசே! அதை விவாதிக்க வேண்டிய தருணம் இதுவல்ல. இப்போது நம் நாட்டின் மையப் பகுதியிலேயே பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும்."

"இதில் யோசிக்க என்ன இருக்கிறது. பிரச்னை செய்பவர்களைப் பிடித்துச் சிறையில் அடைத்தால் மற்றவர்கள் தானே அடங்கி விடுவார்கள்!" என்றான் அரசன் கோபத்துடன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! அவர்கள் நம் மக்கள். குழந்தை அழுதால் அது ஏன் அழுகிறது என்று கண்டறிந்து அதற்கு வேண்டியதைச் செய்வதுதானே ஒரு தாயின் கடமை?"

"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அடிக்கடி அங்கே வெள்ளம் வருவதால் அதை நாம் தடுக்க வேண்டும் என்கிறார்கள்! மழையை நாம் நிறுத்த முடியுமா? வெள்ளம் வரும்போது மக்கள் வேறு ஊர்களுக்குச் சென்று தங்கி விட்டு வெள்ளம் வடிந்ததும் திரும்பி வர வேண்டியதுதான். இயற்கை விளைவிக்கும் பிரச்னைகளை அரசரால் எப்படித் தீர்க்க முடியும்?"

"சில முயற்சிகள் செய்யலாம் அரசே! வெள்ளம் வரும் பகுதிகளில் புதிதாகக் கால்வாய்கள் வெட்டி வெள்ள நீரின் ஒருபகுதியை வேறு இடங்களுக்குத் திருப்பி விடலாம், இதை முழுமையாகச் செய்யப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். ஆனால் நாம் சிறிய அளவில் பணிகளை ஆரம்பித்தால் கூட மக்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் கிடைக்கும். முக்கியமாக அவர்கள் பிரச்னையை நாம் புரிந்து கொண்டு அதற்குத் தீர்வு காண முயற்சி எடுக்கிறோம் என்ற நிகழ்வே அவர்களை அமைதிப்படுத்தும்."

அரசர் யோசிப்பது போல் மௌனமாக இருந்தார்.

"அரசே! நம் தெற்கு எல்லையில் பிரச்னை ஏற்பட்டபோதே நாம் அங்கே சில அதிகாரிகளை அனுப்பி அந்த மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்க்க நாம் முயற்சி எடுப்போம் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று நான் ஆலோசனை கூறியது தங்களுக்கு நினைவிருக்கும். ஆனால் அதை ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக நாம் அணுகியதால் அந்த மக்கள் நம்மிடம் நம்பிக்கை இழந்து விட்டனர். நம் எதிரிகள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விட்டனர்."

"நீங்கள் சொல்வது சரிதான் அமைச்சரே! மக்களின் குறைகளைப் புரிந்து கொண்டு செயல்படாததால்தான் நம் நாட்டின் ஒரு பகுதியை நாம் இழந்து விட்டோம். அந்தப் பகுதியை இழந்ததை விட அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் நம்பிக்கையை இழந்ததைத்தான் நான் பெரிய இழப்பாகக் கருதுகிறேன். இனி நம் மக்களின் ஒருவர் நம்பிக்கையைக் கூட நான் இழக்க விரும்பவில்லை. மையப்பகுதி மக்களின் பிரச்னையைத் தீர்க்க என்ன செய்யலாம் என்பதை நீங்களே தீர்மானித்து அதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். அதிகாரிகளை அங்கே அனுப்பி அந்த மக்களிடம் பேசி அவர்களுக்கு உறுதியையும் நம்பிக்கையையும் அளிக்கச் சொல்லுங்கள்!" என்றான் அரசன்.

குறள் 553:
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்.

பொருள்:
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

554. கருத்துக் கணிப்புகள்!

ஆளும் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்டக் குழுவின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 "நம் கட்சி ஆட்சிக்கு வந்து ரெண்டு வருஷம் ஆச்சு. அரசியல் நேர்மை, திறமையான நிர்வாகம், மக்களுக்கு அதிகாரம் என்கிற மூணு விஷயங்களை வாக்குறுதியாக் கொடுத்துத்தான் நாம் பதவிக்கு வந்தோம்" என்றார் சியாம பிரசாத்.

"யார் இல்லேன்னு சொன்னாங்க?" என்றார் கட்சித் தலைவர் அமர்நாத்.

"ஆனா நம் ஆட்சி அப்படியா நடக்குது?" என்றார் சியாம பிரசாத்.

"அவர் பிரதமரைத் தாக்கிப் பேசறாரு. இதை அனுமதிக்கக் கூடாது!" என்று உரத்த குரலில் கூறினார் பிரதமரின் ஆதரவாளர் ஒருவர்.

"இல்ல. அவர் பேசட்டும்" என்ற பிரதமர் மாகாதேவ், "சியாம பிரசாத்! நீங்க கட்சியில ஒரு மூத்த உறுப்பினர். உங்க கருத்துக்களைக் கேட்டு என்னை நான் திருத்திக்கத் தயாரா இருக்கேன். என்னோட ஆட்சியில என்ன குறைகள் இருக்குங்கறதைச் சொல்லுங்க!" என்றார் பணிவான குரலில்.

சியாம பிரசாதின் அருகில் அமர்ந்திருந்த அவர் நண்பர் காளிதாஸ், "இது ஒரு டிராப். உங்களைப் பேசவிட்டு அதையே காரணமா வச்சு உங்க மேல நடவடிக்கை எடுக்கப் பாக்கறாங்க. இதில சிக்கிக்காதீங்க!" என்றார் அவர் காதில் ரகசியமாக.

"அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை!" என்று அவரிடம் கூறிய சியாம பிரசாத், பிரதமரைப் பார்த்து, "மகாதேவ்! நீங்க என்ன செய்யறீங்கன்னு உங்களுக்குத் தெரியாதா? நம் கட்சியோட மூணு கோட்பாடுகளுக்கும் எதிராதான் உங்க ஆட்சி நடக்குது. ஊழல் அதிகமா இருக்கு, வெளிப்படைத் தன்மை இல்லை. சாதாரண மக்களை பாதிக்கற மாதிரி சட்டங்களைப் போடறீங்க.  அரசாங்கத்துக்கு எதிராப் போராட்டம் நடத்தறவங்க, உங்களை விமரிசனம் பண்றவங்க மேல எல்லாம் அடக்குமுறையை ஏவி விடறீங்க. ஒரு சில தொழிலதிபர்களுக்கு மட்டும் பலன் கிடைக்கிற மாதிரி பல விஷயங்களை நீங்க செய்யறதால நம் நாட்டுப் பொருளாதாரமே பெரிய ஆபத்தில இருக்கு" என்றார்.

"நீங்க எந்த உலகத்தில இருக்கீங்க சியாம பிரசாத்? மகாதேவ் மாதிரி ஒரு தலைவர் இதுவரையிலும் எந்த நாட்டிலேயும் இருந்ததில்லைன்னு எல்லா மீடியாவும் சொல்றாங்க. கருத்துக் கணிப்புகள் எல்லாம் 80 சதவீத மக்கள் நம் பிரதமரை ஆதரிக்கிறதா சொல்லுது. அடுத்த தேர்தல்ல மட்டும் இல்ல, அதுக்கப்பறம் வரப் போகிற எல்லாத் தேர்தல்களிலேயும் நாம்தான் வெற்றி பெறப் போறோம், மகாதேவ்தான் நம் நாட்டோட நிரந்தரப் பிரதமர்னெல்லாம் தினமும் பத்திரிகைகள்ள எழுதறாங்களே அதையெல்லாம் நீங்க படிக்கிறதில்லையா?" என்றார் கட்சித் தலைவர் அமர்நாத்.

"அரசாங்கத்தை விமரிசனம் பண்றவங்களையெல்லாம் தேசவிரோதச் செயல்கள்ள ஈடுபடறதா சொல்லிச் சிறைக்கு அனுப்பிட்டு, அரசாங்கத்துக்குத் துதி பாடற மீடியா மட்டுமே இருக்க முடியுங்கற நிலைமையை உருவாக்கி இருக்கீங்க. அவங்களோட போலியான புகழ்ச்சியில மயங்கிக் கிடக்கிறீங்க! உண்மை நிலவரம் என்னங்கறது உங்களுக்கே தெரியாது!" என்றார் சியாம பிரசாத்.

"சியாம பிரசாத்! நம் எதிரிகள் சொல்றதையெல்லாம் நீங்க சொல்றதைக் கேக்க எனக்கு வருத்தமா இருக்கு .உங்க கருத்துக்களுக்கு நான் மதிப்பளிக்கிறேன். ஆனா இந்தக்  குழுவில ஒத்தர் கூட உங்க கருத்தை ஏத்துக்காத்தால நாம மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசலாம்னு நினைக்கிறேன்!" என்றார் மகாதேவ்.

டுத்த நாள் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக சியாம பிரசாத் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவுப்பு வெளியானது. அன்றே அவர் வீட்டில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது. ஆனால் சோதனையில் எதுவும் சிக்கவில்லை. 

சியாம பிரசாத் சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்தை விமரிசித்து வந்தார். பதிலுக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர் மீது பல அவதூறுகளைக் கூறி அவரைத் தரக் குறைவாக விமரிசித்தனர்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் சரிந்து கொண்டே வந்தது. ஆயினும் அரசாங்கத்தின் வருடாந்தர நிதிநிலை அறிக்கைகளில் நாட்டின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி பெற்று வருவதான தோற்றம் தொடர்ந்து காட்டப்பட்டு வந்தது.

டுத்த தேர்தல் நெருங்கி வந்தது. கருத்துக் கணிப்புகள் பிரதமர் மகாதேவின் மக்கள் ஜனநாயகக் கட்சி முந்தைய தேர்தலில் பெற்ற வெற்றியை விடப் பெரிய வெற்றியைப் பெறும் என்று கூறின.

தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளும் ஆளும் கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று அடித்துக் கூறின.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது, யாருமே எதிர்பாராத வகையில் மக்கள் ஜனநாயகக் கட்சி பெரும் தோல்வி அடைந்திருந்தது. பிரதமர் மகாதேவே அவருடைய தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

தேர்தலுக்குப் பின் பதவிக்கு வந்த புதிய அரசாங்கம், நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருப்பதையும் முந்தைய அரசு பொருளாதார நிலை பற்றிப் பொய்யான தகவல்களைக் கொடுத்திருப்பதையும் புள்ளி விவரங்களுடன் வெளிப்படுத்தியது.

குறள் 554:
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.

பொருள்:
(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒருசேர இழந்து விடுவான்.

555. எதற்கு இந்த தண்டனை?

"எப்படி சார் இப்படி ஒரு தீர்ப்பைக் கொடுத்தாங்க? என்னோட இத்தனை வருஷ அரசியல் வாழ்க்கையில என் பேரில ஒரு ஊழல் புகார் கூட இருந்ததில்லை சார். நான் முதல்வரா இருந்தப்ப என் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் வந்தப்ப அவங்க மேல நடவடிக்கை எடுத்திருக்கேன். என் மேல சொத்துக் குவிப்பு வழக்கு போட்டு நான் குற்றவாளின்னு தீர்ப்பளிச்சு எனக்கு பத்து கோடி ருபா அபராதம் விதிச்சிருக்காங்க. எங்கிட்ட அந்த அளவுக்கு சொத்து கூட இல்லையே சார்!" என்று பொருமினார் முன்னாள் முதல்வர் மணிமாறன். 

 "உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு பண்ணி ஜாமீன் மனுவும் போட்டிருக்கோம். ஒரு வாரத்தில உங்களுக்கு ஜாமீன் கிடைச்சுடும். உச்ச நீதிமன்றத்தில உங்க மேல்முறையீட்டை சீக்கிரம் விசாரிக்கணும்னு கோரிக்கை வச்சிருக்கோம்!" என்றார் சிறையில் அவரைப் பார்க்க வந்த அவருடைய வக்கீல்.

"ஜாமீன் இருக்கட்டும் சார்! இது அடிப்படையிலேயே ஒரு தப்பான தீர்ப்பு இல்லையா? முதல்ல இந்த வழக்கை நான் சீரியஸா எடுத்துக்கல. நான்தான் தப்பு பண்ணலியேன்னு தைரியமா இருந்தேன். ஆனா என் அரசியல் எதிரிகள் என் தம்பி சொத்தையும் என் பினாமி சொத்துன்னு சொல்லி வழக்குப் போட்டாங்க. கீழ் நீதிமன்றத்தில அதை ஏத்துக்கிட்டு, என் தம்பியோட சொத்துக்களை என் சொத்துக்களோட சேர்த்து நான் குற்றவாளின்னு சொல்லித் தீர்ப்பு வந்தப்ப கூட, உயர் நீதிமன்றத்தில எனக்கு நியாயம் கிடைக்கும்னு நினைச்சேன்!"

"சார்! இதைப் பத்தியெல்லாம் நாம் விவரமாப் பேசி இருக்கோம். உங்க தம்பி கல்யாணம் செஞ்சுக்காம உங்க வீட்டில உங்களோடயே இருந்திருக்காரு. அவர் செஞ்ச ரியல் எஸ்டேட் பிஸினஸ்ல அவருக்கு நிறைய லாபம் வந்திருக்கு. அவர் அதுக்கெல்லாம் சரியா கணக்கு வச்சுக்கல. வருமான வரி குறைச்சுக் கட்டணுங்கறதுக்காக வருமானத்தையும் கொஞ்சமாக் காட்டி இருக்காரு. அவருக்கு வாரிசு இல்லாததால அவர் தன் சொத்தையெல்லாம் உங்க பையன்களுக்கு உயில் எழுதி வச்சுட்டு இறந்தும் போயிட்டாரு. நீங்க தேர்தல்ல தோத்தப்பறம் பதவிக்கு வந்த உங்க அரசியல் எதிரிகள் இதையெல்லாம் ரொம்ப புத்திசாலித்தனமாப் பயன்படுத்தி உங்களைச் சிக்க வைக்கற மாதிரி வலுவான ஆதரங்களோட வழக்குப் போட்டுட்டாங்க" என்றார் வக்கீல்.

"அப்படி இருக்கறப்ப, உச்ச நீதிமன்றத்தில எனக்கு சாதகமாத் தீர்ப்பு கிடைக்கும்னு எப்படி சொல்றீங்க?" என்று சீறினார் மணிமாறன்.

'நான் எப்ப அப்படிச் சொன்னேன்?' என்று தனக்குள் சொல்லிக் கொண்ட வக்கீல், "நாம முயற்சி பண்ணலாம். உச்ச நீதிமன்றத்தில வாதாடற சில பெரிய வக்கீல்கள் தங்கள் வாதத் திறமையால சில வழக்குகள்ள உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை உடைச்சிருக்காங்களே!" என்றார் சமாளிக்கும் விதத்தில்.

"எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்க அப்பீலுக்கு ஏற்பாடு பண்ணுங்க. ஜாமீனுக்கும் சீக்கிரமா ஏற்பாடு பண்ணுங்க."

டுத்த நாள் மணிமாறனின் மனைவி குமரி அவரைப் பார்க்கச் சிறைக்கு வந்தாள்.

"குமரி! உனக்கே தெரியும். நான் யார்கிட்டேயும் லஞ்சம் வாங்கல. எனக்கு ஏன் இப்படி நடக்கணும்?" என்றார் மணிமாறன் தன் மனைவியுடம்.

அவர் சற்றும் எதிர்பாராமல் அவர் மனைவி கோபமாகச் சீறினாள்: "ஏன்னா, நீங்க முதல்வரா இருக்கச்சே கொஞ்சம் அக்கிரமமா பண்ணினீங்க? நீங்க லஞ்சம் வாங்காம இருந்திருக்கலாம். ஆனா நீங்க பண்ணின அடக்குமுறையும், சர்வாதிகாரமும் கொஞ்சமா என்ன? நானே உங்க கிட்ட எத்தனையோ தடவை சொல்லி இருக்கேன், இப்படியெல்லாம் நடந்துக்காதீங்கன்னு!"

"என்ன உளறர குமரி? ஆட்சி செய்யறப்ப அதிகாரத்தைப் பயன்படுத்தத்தான் வேணும். என்னைப் பிடிக்காதவங்க என்னை சர்வாதிகாரி, கொடுங்கோலன் எல்லாம் சொன்னாங்க. ஆனா நான் செய்ய நினைச்சதைத் தடுக்க முயற்சி செஞ்சவங்ககிட்ட கடுமையா நடந்துக்கிட்டேன். அது ஒரு தப்பா?"

"தப்பு இல்ல, அக்கிரமம்! எத்தனை பேரை சிறையில தள்ளினீங்க! எத்தனை பேர் மேல தடியடி நடத்தினீங்க. ஏன் துப்பாக்கிச் சூடு கூட நடத்தினீங்களே!"

"கலவரம் பண்றவங்க கிட்ட கடுமையா நடந்துக்கத்தான் வேணும்!"

"என்ன பேசறீங்க? உங்க கையில அதிகாரம் இருந்ததுங்கறதுக்காக சட்டத்தைக் கையில எடுத்துக்கிட்டீங்க. அந்த ரசாயனத் தொழிற்சாலையோட புகையினால அந்தச் சுற்று வட்டாரமே பாதிக்கப்படுது, குழந்தைகளுக்கு நோய்கள் வருதுன்னு சொல்லி போராட்டம் நடத்தினவங்க மேல துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரைக் கொன்னீங்க. அதில ஒரு டீ வித்துக்கிட்டிருந்த பையனையும் சுட்டுட்டாங்க. அவனோட அம்மா கதறினதை டிவியில பாத்தப்ப எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? 'என் பையனை சுட்டுக் கொன்னவங்களுக்குக் கடவுள் தண்டனை கொடுப்பாரு'ன்னு அந்த அம்மா சாபம் போட்டபோதே நமக்கு இப்படி ஏதாவது நடக்கும்னு நான் பயந்தேன். இப்ப நம்ம சொத்தெல்லாம் போய் நீங்களும் ஜெயிலுக்குப் போகப் போறீங்க. நானும் நம்ம ரெண்டு பையன்களும் நடுத்தெருவுக்குத்தான் வரப் போறோம்!" என்றாள் குமரி, துக்கமும், ஆத்திரமும் சேர.

குறள் 555:
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

பொருள்:
தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.

556. அதிர்ஷ்டசாலி!

"மன்னா! நீண்ட நாட்கள் கழித்து என்னைப் பார்க்க விரும்பி அழைத்திருக்கிறாய். என்ன விஷயம்?" என்றார் ராஜகுரு.

"மன்னிக்க வேண்டும் குருவே! நாட்டில் பல பிரச்னைகள் இருந்ததால் தங்களைச் சந்திக்க என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. தவறாக நினைக்காதீர்கள்" என்றான் மன்னன்.

'பிரச்னைகள் இருக்கும்போது என்னிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்று உனக்கு ஏன் தோன்றவில்லை? என் ஆலோசனைகள் உனக்கு உகப்பாக இருக்க மாட்டா என்பதால்தானே?' என்று மனதில் நினைத்துக் கொண்ட ராஜகுரு, "இப்போது என்னைச் சந்திக்க உனக்கு நேரம் கிடைத்திருப்பதால்   நாட்டில் இருந்த பிரச்னைகள் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்!" என்றார்.

அடிபட்டவன் போல் ராஜகுருவைப் பார்த்த மன்னன், "குருவே! நாட்டில் இப்போது பிரச்னைகள் அதிகமாகிக் கொண்டிருப்பதைத் தாங்கள் அறியாமல் இருக்க முடியாது. எல்லாமே என் கையை விட்டுப் போவது போல் இருக்கிறது. உண்மையில் தங்கள் ஆலோசனையையும் உதவியையும் பெறத்தான் உங்களை அழைத்தேன்" என்றான்.

"சொல்! நான் என்ன செய்ய வேண்டும்?"

"குருவே! சில ஆண்டுகளாகவே நாட்டில் அதிகக் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. முதலில் என்னிடம் அன்பு காட்டி வந்த மக்கள் இப்போது என் மீது கோபத்துடனும் வெறுப்புடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. நாட்டில் உணவுப் பற்றாக்குறை போன்ற சில பிரச்னைகள் இருப்பது உண்மைதான். அதற்காக மக்கள் என் மீது கோபம் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது?"

"மன்னா! என் ஆலோசனையைக் கேட்பதற்காகவே என்னை அழைத்தாய் என்பது உண்மைதானே?"

"உங்களுக்கு ஏன் இந்தச் சந்தேகம்?"

"அப்படியானால் சில உண்மைகளை நான் உன்னிடம் சொல்ல வேண்டும். துவக்கத்தில் மக்கள் உன்னிடம் அன்பு காட்டியதாக நீயே சொன்னாய்"

"ஆமாம்! நான் அதை நேரடியாக அனுபவித்திருக்கிறேன்."

"அது உண்மைதான். நானும் அதைப் பார்த்திருக்கிறேன். உன்னிடம் அன்பு செலுத்திய மக்கள் மனம் மாறி உன் மீது கோபம் கொள்வதற்குக் காரணம் இல்லாமல் இருக்குமா?"

மன்னன் மௌனமாக இருந்தான்.

"மன்னா! உன் உள்ளுணர்வுக்கு அந்தக் காரணம் தெரியும்! ஆனால் அதை ஏற்றுக் கொள்ள உனக்குத் தயக்கமாக இருக்கிறது. நான் வெளிப்படையாகச் சொல்லி விடுகிறேன். ஆரம்பத்தில் நீ மக்களிடம் நிறைய அக்கறை காட்டி செங்கோல் தவறாமல் ஆண்டு வந்தாய். அதனால்தான் மக்களும் உன்னிடம் அன்பு காட்டினார்கள். ஆனால் நாட்டில் உணவுப் பிரச்னை ஏற்பட்டபோது, மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக நீ அவர்கள் மீது அதிக வரிகளை விதித்தாய். அவர்கள் எதிர்ப்புக் காட்டியபோது அவர்களைப் போர் வீரர்களைக் கொண்டு அடக்கினாய். பலரைச் சிறையில் தள்ளினாய். இவையெல்லாம் சிலரின் தவறான ஆலோசனையேக் கேட்டு நீ செய்தவை. நான் இவற்றை ஆதரிக்க மாட்டேன் என்பதை நீ அறிந்ததால்தான் என்னைச் சந்திப்பதையே தவிர்த்து வந்தாய் என்பதை நான் அறிவேன்! மக்கள் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தங்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியதும் நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விட்டதை உணர்ந்து என்னை அழைத்திருக்கிறாய். சரிதானா?" என்றார் ராஜகுரு அரசனின் கண்களை நேரே பார்த்து.

அவர் கண்களைச் சந்திக்க முடியாமல் பார்வையைத் திருப்பிக் கொண்ட மன்னன், "நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் என் அதிகாரத்தை மக்கள் மதிக்காதது எனக்கு வியப்பாக இருக்கிறது" என்றான்.

"மன்னா! மக்கள் உன் கையில் இருக்கும் செங்கோலைத்தான் மதிப்பார்கள். அந்தச் செங்கோல் வழுவாதபோது அவர்கள் உன்னை நேசிப்பார்கள். அந்தச் செங்கோல் வழுவி விட்டால் மன்னன் என்ற மதிப்பே உனக்கு இருக்காது. ஆயினும் நீ அதிர்ஷ்டசாலிதான்!"

"அதிர்ஷ்டசாலியா? எப்படிச் சொல்கிறீர்கள்?" என்றான் மன்னன் வியப்புடன்.

"ஏனென்றால் மக்கள் உன்மிது அதிருப்தியாக இருக்கும்போதும் நீ மன்னனாகத் தொடர்கிறாய்! சில நாடுகளில் ஜனநாயகம் என்று ஒரு புதிய அரசு முறை வந்திருக்கிறதாம். அதில் தங்களுக்கு மன்னராக இருப்பது யார் என்பதை மக்களே வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கிறார்களாம். அதிக மக்களின் வாக்கைப் பெற்றவர் ஐந்தாண்டுகளுக்கு மன்னராக இருப்பாராம். அவர் ஆட்சி சரியாக இல்லை என்றால் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அடுத்த வாக்கெடுப்பில் மக்கள் அவரைத் தூக்கி எறிந்து விட்டு வேறொருவரைத் தேர்ந்தெடுப்பார்களாம். இங்கே அது போன்ற நிலை இல்லையே! அதனால்தான் உன்னை அதிர்ஷ்டசாலி என்று சொன்னேன்!" என்றார் ராஜகுரு சிரித்தபடி.

அரசன் வியப்புடனும் சற்றே பதட்டத்துடனும் ராஜகுருவைப் பார்த்தான்.

குறள் 556:
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.

பொருள்:
ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அத்தகைய செங்கோல் ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.

557. நாடு விட்டு நாடு வந்து...

"குருவே! இந்த மரகத நாட்டில் மக்கள் படும் துயரத்தைப் பார்த்து என் மனம் துடிக்கிறது" என்றான் சீடன்.

"ஆமாம். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் நிலையை அடைந்து விட்டதாகக் கருதப்படும் எனக்குக் கூட மக்கள் படும் துயரத்தைப் பார்க்கும்போது மனச்சோர்வு ஏற்படுகிறது. உலகில் எல்லாக் கொடுமைகளையும் விட மழை பொய்ப்பதால் ஏற்படும் கொடுமைதான் மிகவும் கொடியது என்று நினைக்கிறேன்" என்றார் குரு.

"ஏன் இப்படி நடக்கிறது குருவே? கடவுள் ஏன் இந்த நாட்டு மக்களிடம் இப்படி இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்?" 

ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கொண்ட குரு, பிறகு, "கடவுளின் மனத்தை நம்மால் புரிந்து கொள்ளவோ மதிப்பிடவோ முடிந்தால் அப்புறம் அவரைக் கடவுள் என்று குறிப்பிடுவதே பொருளற்றதாக ஆகி விடும்!" என்றார்.

பிறகு ஒரு புன்னகையுடன், "இப்போதைக்கு என்னால் இந்த விடையைத்தான் கூற முடியும். ஒருவேளை நான் இன்னும் சற்று முதிர்ச்சி அடைந்தால் இதை விடச் சிறப்பான ஒரு விடையைக் கூறலாம்!" என்றார் தொடர்ந்து.

சற்று நேரம் கழித்து குரு சீடனிடம், "மழை பொய்த்ததால் இந்த நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் நிலவுகிறது. ஆயினும் நாம் துறவிகள் என்பதால் சிலர் தங்களுக்குப் போதிய உணவில்லாத நிலையிலும் நமக்கு உணவளிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் இந்த நாட்டை விட்டு வேறு நாட்டுக்குச் செல்வதுதான் உகந்தது. வேறு நாட்டுக்குச் சென்ற பிறகும், இந்த மரகத நாட்டு மக்களுக்காக நாம் தொடர்ந்து பிரார்த்திப்போம். நம்மால் செய்யக் கூடியவை இந்த இரண்டும்தான்" என்றார்.

"இந்த கோமேதக நாட்டில் பயிர்கள் செழித்து வளர்ந்திருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது!" என்றான் சீடன்.

"ஆம். இந்தச் செழுமை  மரகத நாட்டுக்கும் கிடைக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்" என்றார் குரு.

சில நாட்கள் கழித்து, சீடன் குருவிடம் "குருவே! இந்த நாடு செழிப்பாக இருக்கிறது, எல்லா வளங்களும் கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லையே! மழை பொய்த்ததால் போதிய உணவு கிடைக்காததால் ஏற்பட்ட துன்பத்தை அனுபவித்த மரகத நாட்டு மக்களின் முகத்தில் தெரிந்த அதே சோகத்தை நான் இந்த கோமேதக நாட்டு மக்களிடமும் பார்க்கிறேன்" என்றான்.

"இந்த நாட்டு மக்களிடம் அதே சோகம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதை விட அதிகமான சோகம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது!" என்றார் குரு.

"ஏன் குருவே அப்படி? இவ்வளவு வளம் இருந்தும் மக்கள் ஏன் சோகமாக இருக்கிறார்கள்?"

"எவ்வளவு வளம் இருந்து என்ன? நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நடக்கும்போது மக்களால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?"

"என்ன சொல்கிறீர்கள் குருவே?"

"இந்த கோமேதக நாட்டு மன்னன் ஒரு கொடுங்கோலன். மழை இல்லாவிட்டால் பயிர்கள் எப்படி வாடுமோ, அதுபோல் இந்த நாட்டு மக்கள் இந்த மன்னனின் அடக்குமுறை ஆட்சியின் கீழ் வாடி வதங்கிக் கொண்டிருக்கிறார்கள்."

"ஆனால் மக்கள் மன்னரைப் புகழ்ந்து பேசுகிறார்களே!"

"இரண்டு விதமான மனிதர்கள் அப்படிப் புகழ்வார்கள். கண்மூடித்தனமாக இந்த அரசனை ஆதரிப்போர் ஒருவகை. அரசனைப் புகழ்ந்து பேசாவிட்டால் தங்களை ராஜத்துரோகி என்று சொல்லிப் பாதாளச் சிறையில் அடைத்து விடுவார்களோ என்ற அச்சத்தினால் அரசனைப் புகழ்வோர் ஒருவகை. இந்த இரண்டிலும் சேராமல் அரசனின் கொடுங்கோலைப் பார்த்து மனம் வருந்தி இது முடியும் நாள் எப்போது வரும் என்று மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விவசாயி போல் காத்திருக்கும் மூன்றாவது வகை மனிதர்களும் இருப்பார்கள். அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாததால் அவர்களை நம்மால் இனம் காண முடியாது" என்றார் குரு பெருமூச்சு விட்டபடி.

"இப்போது நாம் என்ன செய்வது குருவே!"

"மரகத நாட்டில் மழை பெய்ய வேண்டும் என்று பிரார்த்திப்பது போல் இந்த கோமேதக நாட்டில் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்து நல்லாட்சி மலர வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். நம்மால் வேறென்ன செய்ய முடியும்?" என்றார் குரு.

குறள் 557:
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.

பொருள்:
மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.

558.  கீப் தி சேஞ்ஜ்!

வாடகைக்கார் விமான நிலையத்திலிருந்து கிளம்பி வெளியே வந்து வெளிப்புறச் சாலையில் ஓடத் தொடங்கிய பிறகுதான் விவேக் கார் ஓட்டுநரிடம் கேட்டான். 

"வண்டியைக் கிளப்பறத்துக்கு முன்னே ஒரு படத்தைத் தொட்டுக் கண்ணில ஒத்திக்கிட்டீங்களே அது காந்தியோட படமா?"

"ஆமாம்" என்ற காரோட்டி செந்தில், சற்றுத் தயங்கி விட்டு, "நீங்க பார்த்தீங்களா?" என்றான்.

"ஆமாம். நீங்க என்னவோ யாரும் பாத்துடக் கூடாதுன்னு ரகசியமா கும்பிட்ட மாதிரி தெரிஞ்சுது!" என்றான் விவேக் சிரித்தபடி.

"ஆமாம் சார். சில பேர் பாத்துட்டு என்னைக் கேலி செஞ்சிருக்காங்க. அதனாலதான் கூடிய வரையில யாரும் பாக்காத மாதிரி கும்பிடுவேன்."

"நான் அதைக் கேலியா நினைக்க மாட்டேன். நீங்க காந்தியை ஏன் கடவுளா நினைச்சுக் கும்பிடறீங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா இந்த நாட்டைக் காப்பாத்த காந்தி மாதிரி ஒத்தர் மறுபடியும் வரணும்னு நினைக்கறவன் நான்."

செந்தில் ஒரு கணம் வியப்புடன் பின்புறம் திரும்பிப் பயணியைப் பாத்தான்.

"இந்த நாட்டைக் காப்பாத்துங்கன்னு வேண்டிக்கிட்டுத்தான் நான் காந்தியைக் கும்படறேன். ஆனா உங்களை மாதிரி வசதியானவங்க இப்படி நினைக்கிறது ஆச்சரியமா இருக்கு சார்!" என்றான் தொடர்ந்து.

"ஏழைகள் ஓட்டுப் போட்டாதான் யாருமே ஆட்சிக்கு வர முடியும். இப்ப ஆட்சியில இருக்கறவங்க ஏழைகள் ஓட்டுப் போட்டதாலதான் பதவிக்கு வந்திருக்காங்க. ஆனா என்னை மாதிரி ஒரு தொழிலதிபர் இந்த அரசாங்கத்தைக் குறை சொன்னா எங்களைப் பாத்து 'நீங்க வசதியானவங்க, மேட்டுக்குடி, உங்களுக்கு என்ன கஷ்டம்'னு உங்களை மாதிரி சில பேர் கேக்கறீங்க!"

"சார்! தப்பா நினைக்காதீங்க. உங்களைப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனா இந்த அரசாங்கத்தோட நடவடிக்கைகளால ஏழைகள் அதிகம் பாதிக்கப்படறாங்கங்கறது உண்மைதானே? எல்லா விலைகளையும் ஏத்திட்டாங்க. தொழிலாளர்கள் உரிமைகளைப் பறிச்சுட்டாங்க. அரசாங்கத்தைக் குறை சொல்ற பத்திரிகைக்காரங்களைக் கைது பண்ணி மாசக்கணக்கா சிறையில வைக்கறாங்க. அதனால ஏழைகளுக்காகப் பேச ஆளே இல்லாம போயிடுச்சு. தேர்தல்ல எப்படியோ ஏழைகளோட ஓட்டை வாங்கி ஜெயிச்சுடறாங்க. அதுக்காக ஏழைகள் சந்தோஷமா இருக்கறதா அர்த்தம் இல்லையே!" என்றான் செந்தில்.

"உண்மைதான். ஆனா என்னை மாதிரி தொழிலதிபர்கள், வியாபாரிகள், சின்ன அளவில சொந்தத் தொழில் பண்றவங்க எல்லாம் படற கஷ்டம் பலருக்குத் தெரியாது. பெரிய தொழிலதிபர்கள் ரெண்டு மூணு பேரைத் தவிர எல்லாருக்கும் இதே நிலைமைதான். இந்த அரசாங்கத்தோட பொருளாதாரக் கொள்கைகள், வரிவிதிப்பு எல்லாமே இந்த ரெண்டு மூணு பெரிய தொழிலதிபர்களுக்குச் சாதகமாத்தான் இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ள நாங்கள்ளாம் எங்க தொழில்களை மூடிட்டு இந்த ரெண்டு மூணு பேருக்கு சப் கான்ட்ராக்டரா ஆகிற நிலைமை வந்துடும் போலருக்கு. ஏற்கெனவே பல பேர் தங்க தொழில்களை மூடிட்டு தொழிலுக்காக வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாம நடுத்தெருவுக்கு வந்துட்டாங்க. இதைப் பத்தி யாரும் எழுதவோ பேசவோ மாட்டாங்க. தொழிலாளர்களா இருந்தா போராட்டமாவது பண்ணலாம். எங்களால அதுவும் பண்ண முடியாது!" 

"சாரி சார்! இந்த ஆட்சியில ஏழைகள் மட்டும்தான் கஷ்டப்படறாங்கன்னு நினைச்சேன். வசதியா இருக்கறதா நான் நினைச்சுக்கிட்டிருக்கறவங்க இன்னும் அதிகமாவே கஷ்டப்படற மாதிரி இருக்கு!" என்றான் செந்தில்.

"சாரி! நீங்க காந்தி படத்தைத் தொட்டுக் கும்பிட்டதும் ஏதோ சட்னு ஒரு உணர்ச்சி வேகத்தில உங்ககிட்ட இதையெல்லாம் சொன்னேன். பொதுவா என் நண்பர்களகிட்ட தவிர வேற யார்கிட்டேயும் நான் இதைப்பத்தியெல்லாம் பேசறதில்ல!" என்றான் விவேக்.

அதற்குப் பிறகு இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

இறங்குமிடம் வந்தது. கார் வாடகை 550 ரூபாய் என்று விவேக்கின் கைபேசி காட்டியது. விவேக் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை செந்திலிடம் கொடுத்தான்.

"அம்பது ரூபாய் இல்லையா சார்?" என்றான் விவேக், பணத்தை வாங்காமல்

"இல்லையே!" என்றான் விவேக்.

"பரவாயில்லை சார்! ஐநூறு ரூபாய் கொடுங்க போதும்!" என்று ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை மட்டும் வாங்கிக் கொண்டான் செந்தில்.

"அம்பது ரூபய் குறைவா இருக்கே! உங்களுக்கு நஷ்டம் ஆகாதா?"

"பரவாயில்லை சார்!" என்றான் செந்தில். 

'என்னை விட நீங்கள் அதிகம் கஷ்டப்படறவர் போலருக்கே! பரவாயில்லை. கீப் தி சேஞ்ஜ்' என்று செந்தில் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருப்பானோ என்று விவேக் யோசித்தான்.

குறள் 558:
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.

பொருள்: 
முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், செல்வ நிலையில் இருப்பது வறுமை நிலையை விடத் துன்பமானதாகும்.

559. பொய்த்த மழையும் பெய்த மழையும்!

"மூணு வருஷமா மழை இல்லை. இதுவரையிலேயும் இப்படி நடந்ததே இல்லை."

"கடுமையான தண்ணிர்ப் பஞ்சம். ஆனா அரசாங்கம் மக்களுக்கு உதவ எந்த முயற்சியும் எடுக்கல. சில தொழிலதிபர்கள் லாபம் சம்பாதிக்கணுங்கறதுக்காக அவங்க காடுகளை அழிக்க அனுமதி கொடுத்திருக்காங்க. அவங்க காடுகளை அழிக்கறதால மழை பெய்யறது இன்னும் குறைஞ்சுடும்னு சுற்றுச் சூழல் ஆதரவாளர்கள் சொல்றாங்க. காடுகளில் வசிக்கிற பழங்குடி மக்கள் விரட்டப்பட்டு இருக்க இடம் இல்லாம தவிக்கிறாங்க. இவ்வளவு மோசமான அரசாங்கத்தை நான் இதுவரையிலேயும் பாரர்த்ததில்ல."

"இப்படி ஒரு மோசமான ஆட்சி நடந்துக்கிட்டிருக்கறதாலதான் மூணு வருஷமா நாட்டில மழையே பெய்யல."

"உளறாதே! மழை பெய்யறதுக்கும் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்? அரசன் நல்லா ஆண்டா மழை பெய்யும், அரசன் முறை தவறினால் மழை பெய்யாதுங்கறதெல்லாம் அரசர்கள் பயத்தினாலேயாவது ஓரளவுக்கு முறையான ஆட்சியைக் கொடுக்கணுங்கறதுக்காக அந்தக் காலத்தில சொல்லி வச்சது. வேப்ப மரத்தடியிலே பேய் இருக்குங்கற மாதிரி இது ஒரு மூட நம்பிக்கை. மழை பெய்யாததுக்கு விஞ்ஞானரீதியான காரணங்கள் இருக்கும். அரசாங்கம் மோசமா இருக்கறதுக்கும் மழை பெய்யாததுக்கும் சம்பந்தம் இல்ல."

"உன்னை மாதிரி ஆளுங்கள்ளெல்லாம் எவ்வளவு ஆதாரங்கள் கொடுத்தாலும் ஒத்துக்க மாட்டீங்க! நீ வேணும்னா பாரு. கொஞ்ச நாள்ள தேர்தல் வரப் போகுது. எப்படியும் இந்த ஆட்சி போய் வேற ஆட்சி வரப் போகுது. அப்ப நிச்சயமா மழை பெய்யும். அப்பவாவது நீ இதை ஒத்துக்கறியான்னு பாக்கறேன்!"

"பாத்தியா? நான் சொன்னப்ப நீ ஒத்துக்கல. இந்த ஆட்சி வந்ததும் முந்தைய ஆட்சியில நடந்த தப்பான விஷயங்களையெல்லாம் சரி செஞ்சுக்கிட்டிருக்காங்க. இவங்க நல்ல ஆட்சி கொடுக்க ஆரம்பச்சதுமே மழை வந்துடுச்சு பாரு. அதுவும் இது கோடைக்காலம். மழை பெய்யற சீசனே இல்ல. எப்படி மழை கொட்டுது பாரு!"

"அட போடா! ரெண்டு மூணு வருஷமா மழை பெய்யலேன்னா, அதுக்கப்பறம் நல்ல மழை பெய்யறதுதான் இயல்பு. இதை லா ஆஃப் ஆவரேஜஸ்னு சொல்லுவாங்க. ஆட்சிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. இவங்க தொடர்ந்து நல்ல ஆட்சி கொடுத்தா, அப்ப கூட சில வருஷங்கள்ள மழை பெய்யாம போகலாம். இல்லை, இவங்க ஆட்சியும் மோசமாப் போச்சுன்னா, அப்ப நல்ல மழை பேஞ்சா இவங்க ஆட்சி நல்ல ஆட்சின்னு சொல்லுவமா? சம்பந்தமில்லாத விஷயங்களை முடிச்சுப் போடறது முட்டாள்தனம், மூடநம்பிக்கை!"

"போடா! நீ எதையுமே ஒத்துக்க மாட்டே! நீ சொல்ற சராசரி விதி மாதிரி இயற்கை விதின்னு ஒண்ணு இருக்கு. இதெல்லாம் உனக்குப் புரியப் போறதில்ல. உங்கிட்டபோய்ப் பேசிக்கிட்டிருக்கேன் பாரு, என்னைச் சொல்லணும்!"

குறள் 559:
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

பொருள்: 
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை கொடுக்காமல் போகும்.

560.  மன்னரின் விசுவாசி! 

"நம் அரசருக்கு எவ்வளவு கருணை உள்ளம் பார்த்தாயா? கால்நடைகளை யாராவது சரியாகப் பராமரிக்காவிட்டால் அவர்களைப் பிடித்துக் கடுமையாக தண்டிக்கும்படி உத்தரவு போட்டிருக்கிறார்!"

"மக்களைப் பலவிதங்களிலும் கொடுமைப்படுத்துபவர் கால்நடைகளிடமாவது கருணை காட்டுகிறாரே என்று மகிழ்ச்சி அடையலாம்தான். ஆனால் இதனால் கால்நடைகளுக்கு நன்மை ஏற்படப் போவதில்லை, அப்பாவி மக்களுக்கு இன்னல்தான் ஏற்படப் போகிறது!"

"நம் அரசர் என்ன நன்மை செய்தாலும் அவர்மீது குறை கூறுவதையே உன்னைப் போன்ற சில அறிவுஜீவிகள் பழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் அறிவுஜீவிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று மன்னர் அடிக்கடி மக்களை எச்சரிக்கிறார் போலிருக்கிறது!"

"நீ என் நண்பன் என்பதால் உன்னிடம் நான் இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து என்னை அறிவுஜீவி என்று சொல்லாதே! காவலர்கள் யார் காதிலாவது விழுந்தால் என்னைப் பிடித்து காராகிருகத்தில் அடைத்து விடுவார்கள்! நம் அரசருக்கு அறிவைப் பயன்படுத்துபவர்களைக் கண்டாலே பிடிக்காது. அதனால்தான் அறிவுஜீவிகள் என்று அடிக்கடி புலம்பிக் கொண்டிருக்கிறார். அவர் செய்யும் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் உன்னைப் போன்ற விசுவாசக் குடிமக்கள் மட்டும்தான் நாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் மன்னர்!"

"நான் கண்ணை மூடிக்கொண்டு மன்னரை ஆதரிக்கிறேன் என்றால், நீ கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கிறாய்!"

"சரி, சிறிது காலம் கழித்துப் பார்க்கலாம். நீ நினைப்பது சரியா என்று உனக்கே புரியும்."

"என்னப்பா இது! நாட்டில் பாலுக்கு இவ்வளவு பஞ்சம் வந்து விட்டது!"

"கால்நடைகளைச் சரியாகப் பராமரிக்காவிட்டால் தண்டனை என்று மன்னர் சட்டம் போட்டபோது நீ அதைப் பாராட்டினாயே, இப்போது என்ன ஆயிற்று?"

"கால்நடைகள் மீது உள்ள கருணையினால்தான் மன்னர் சட்டம் போட்டார். ஆனால் காவலர்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி கால்நடைகள் வைத்திருந்த பலரை அவர்கள் தங்கள் கால்நடைகளைச் சரியாகப் பராமரிக்கவில்லை என்று சொல்லிச் சிறையில் அடைத்து விட்டனர். அதனால் அவர்கள் வைத்திருந்த கால்நடைகளைப் பராமரிக்க ஆள் இல்லாமல் போய் விட்டது. இன்னும் பலர் காவலர்கள் தங்களைக் கைது செய்து விடுவார்களோ என்று பயந்து தங்கள் கால்நடைகளை விற்கப் பார்த்தார்கள். ஆனால் வாங்குவதற்கு ஆள் இல்லாததால் அவர்கள் தங்கள் கால்நடைகளை வெளியே விட்டு விட்டார்கள், இப்போது நாட்டில் பல இடங்களிலும் ஆடுகளும் மாடுகளும் திரிந்து கொண்டும், பயிர்களை மேய்ந்து கொண்டும் இருக்கின்றன. இதனால் ஒருபுறம் பால் கிடைக்காமல் போய் மறுபுறம் பயிர்களைக் கால்நடைகள் மேய்வதால் தானியப் பஞ்சமும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மன்னர் என்ன செய்வார்?"

"ஆமாம், மன்னர் என்ன செய்வார் பாவம்! அவர் நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டு தனக்குப் புதிய அரண்மனை கட்டிக் கொண்டிருக்கிறார்! அது இருக்கட்டும், உன் மகனைக் கலாசாலையில் சேர்க்கப் போவதாகச் சொன்னாயே, என்ன ஆயிற்று?"

"அதை ஏன் கேட்கிறாய்? மன்னரின் ஆட்கள் படித்தவர்களை எல்லாம் அறிவுஜீவிகள் என்று கேலி செய்கிறார்கள். நாட்டில் ஏதாவது குற்றம் நடந்தால் அதை அறிவுஜீவிகள்தான் தூண்டி விடுவதாகச் சொல்லிக் காவலர்கள் அவர்களைச் சிறையில் அடைக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து என் மகன் பயந்து போய்த் தனக்குப் படிப்பே வேண்டாம் என்கிறான், படித்தால் அறிவுஜீவி என்று சொல்லி அவனைச் சிறையில் அடைத்து விடுவார்களாம்! நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டேன் என்கிறான். நீயாவது அவனுக்கு புத்தி சொல்லேன்!"

"உன் மகன் மட்டும் இல்லையப்பா, இன்று நாட்டில் பலரும் படிக்கவே பயப்படுகிறார்கள், கலாசாலைகள் மாணவர்கள் இல்லாமல் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன."

"அடப்பாவமே! நாடு இவ்வளவு மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறதே! இதை மாற்ற மன்னர்தான் ஏதாவது செய்ய வேண்டும்,"

"இதற்கெல்லாம் காரணமே மன்னரின் கொடுங்கோல்தான். உன்னைப் போன்றவர்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் மன்னருக்குச் சிந்து பாடிக் கொண்டே இருங்கள்!"

குறள் 560:
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

பொருள்: 
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...