திருக்குறள்
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்
661. மிஸ்டர் டைனமிக்!
பரந்தாமனை அவன் அலுவலகத்தில் 'மிஸ்டர் டைனமிக்' என்றுதான் அழைப்பார்கள். அவனிடம் எப்போதும் இருக்கும் வேகம், உற்சாகம், சக்தி இவற்றைப் பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள், அவன் சொல்லுக்கு அனைவரும் தங்களை அறியாமலே தலை வணங்குவார்கள்.பரந்தாமனின் சக ஊழியனும், அவனுடைய நண்பனுமான கண்ணன், "நான் ஏதாவது சொன்னா, என் அசிஸ்டன்ட் கூடக் கேக்க மாட்டேங்கறான்! நீ ஏதாவது சொன்னா, ஜி எம் கூட பயந்து பணிவாக் கேக்கற மாதிரி கேக்கறாரே!" என்று அடிக்கடி அவனிடம் சொல்லுவான்.
அவர்கள் நிறுவனத்தில் துணைப் பொது மேலாளர் பதவி காலியானபோது, நான்கு டிபார்ட்மென்ட் மானேஜர்களில் ஒருவர்தான் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், பரந்தாமனுக்குத்தான் அந்தப் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், ராமமூர்த்தி என்ற மற்றொரு டிபார்ட்மென்ட் மானேஜருக்கு அந்தப் பதவி கிடைத்தது.
பரந்தாமனுக்குப் பெரிய அதிர்ச்சி.
"ஏண்டா இப்படிப் பண்ணினாங்க? ராமமூர்த்தி இருக்கற இடமே தெரியாம இருப்பாரு. என்னை மாதிரி துடிப்பா இருக்கற ஆளை விட்டுட்டு, அவருக்கு புரொமோஷன் கொடுத்திருக்காங்க. ஜி எம் பொதுவா நியாயமா நடந்துக்கறவராச்சே! ஒருவேளை சேர்மன் சொல்லி, இப்படி செஞ்சிருப்பாங்களோ?" என்றான் பரந்தாமன், கண்ணனிடம்.
"இல்லடா! இது ஜி எம்மோட முடிவுதான்" என்றான் கண்ணன்.
"உனக்கு எப்படித் தெரியும்?"
"ஜி எம் எங்கிட்ட சொன்னார்!" என்றான் கண்ணன், தயக்கத்துடன்.
"உங்கிட்ட சொன்னாரா? எதுக்கு? என்ன சொன்னார்?" என்றான் பரந்தாமன், வியப்புடன்.
"நேத்திக்கு ராமமூர்த்திக்கு புரொமோஷன்னு அறிவிச்ச உடனேயே, ஜி எம் என்னைக் கூப்பிட்டார். 'கண்ணன்! பரந்தாமனுக்கு புரொமோஷன் கிடைக்காதது அவர் மாதிரியே, அவரோட நண்பரான உங்களுக்கும் அதிர்ச்சியாத்தான் இருக்கும். அதுக்கு முக்கியமான காரணம், பரந்தாமனோட செயல்பாடுதான், பரந்தாமன் ரொம்ப டைனமிக்காத் தெரிஞ்சாலும், அவர்கிட்ட ஒரு குறை இருக்கு. அவர் எந்த வேலையையும் சரியா முடிக்கறதில்ல. ரொம்ப உற்சாகமா ஒரு வேலையை எடுத்துப்பாரு. ஆனா, அதை முடிக்காம டைவர்ட் ஆகிப் போயிடுவாரு. எங்களைப் பொருத்தவரையிலும், என்ன ரிசல்ட் வருதுன்னுதான் பாப்போம். அப்படிப் பாக்கறப்ப, பரந்தாமனோட பல செயல்பாடுகள் முடிவு பெறாம அந்தரத்தில தொங்கிக்கிட்டிருக்கறதைத்தான் நாங்க பாக்கறோம். இதைப் பத்தி பரந்தாமன்கிட்ட நான் பல தடவை சொல்லி இருக்கேன். அவர் 'முடிச்சுடறேன் சார்'ன்னு சொல்லுவாரு. ஆனா முடிக்க மாட்டாரு. அவர் கவனம் பல விஷயங்கள்ள சிதறி இருக்கு. அவர்கிட்ட ஃபோகஸ் இல்ல. டைனமிஸம்ங்கறது வேகம் காட்டறதில மட்டும் இருந்தா போதாது, செய்ய வேண்டிய வேலைகளை செஞ்சு முடிக்கறதிலயும் இருக்கணும். ராமமூர்த்தி அமைதியா இருந்தாலும், செய்ய வேண்டிய வேலைகள்ள கவனம் செலுத்தி செஞ்சு முடிச்சுடுவாரு. அதனாலதான், அவருக்கு புரொமோஷன் கிடைச்சது. நான் பல தடவை சொல்லியும், பரந்தாமனுக்கு அவரோட குறைபாடு புரியல. நீங்க அவர் நண்பர்ங்கறதால, நீங்க அவர்கிட்ட சொன்னா, அவர் புரிஞ்சுப்பார்னு நினைக்கிறேன். அவர் தன் பிரச்னையைப் புரிஞ்சுக்கிட்டு, செய்ய வேண்டிய வேலைகள்ள உறுதியான கவனம் வச்சு, வேலைகளை செஞ்சு முடிக்கப் பழகிக்கிட்டா, அவருக்கு இருக்கிற திறமைக்கு, அவர் நல்லா முன்னுக்கு வரலாம். செயல்பாடுகள் சரியா இல்லாட்டா, மற்ற திறமைகள் இருந்தும் பயன் இல்லாம போயிடும். அவர்கிட்ட இதைச் சொல்லிப் புரிய வையுங்க. இந்த தடவை மிஸ் ஆன புரொமோஷன் அடுத்த தடவை கிடைக்கறது அவர் கையிலதான் இருக்கு' ன்னு சொன்னார்!"
கண்ணன் சற்றுத் தயங்கி விட்டு, "அவர் சொன்னப்பறம், அவர் சொன்னதில உண்மை இருக்குன்னுதான் எனக்கும் தோணுது!" என்றான்.
குறள் 661:
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
பொருள்:
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்பட மாட்டா.
மொழி தெரியாத ஊருக்குப் போய், இரண்டு மாதங்களுக்குள் எல்லா ஏற்பாடுகளையும் செய்வது எப்படி என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்.
"இது ஆந்திராவில நாம ஆரம்பிக்கிற முதல் கிளை. நம் சேர்மன் ஆந்திராக்காரர்ங்கறதால, அவர் இதில ரொம்ப ஆர்வமா இருக்காரு. தானே வந்து கிளையைத் திறந்து வைக்கறதாச் சொல்லி இருக்காரு!" என்றார் பொது மேலாளர்.
நாகராஜனுக்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றியது.
"சார்! எனக்குத் தெலுங்கு தெரியாது. நம்ம ரங்கநாதம் சாரை என்னோட அழைச்சுக்கிட்டுப் போகலாமா சார்? பிராஞ்ச் ஆஃபீஸ் திறந்தப்பறம், அவர் இங்கே திரும்பி வந்துடலாம்!" என்றான் நாகராஜன்.
பொது மேலாளர் சற்று யோசித்து விட்டு, "உங்களுக்கு உதவியா உள்ளூர்லேந்தே ஒத்தரை நியமிச்சுக்கச் சொல்லலாம், பிராஞ்ச் திறந்தப்பறம் அவர் அங்கேயே தொடர்ந்து வேலை செய்யலாம்னு நினைச்சேன். பரவாயில்லை. ரங்கநாதம் சரின்னு சொன்னா, அழைச்சுக்கிட்டுப் போங்க. நான் ஆஃபீஸ் ஆர்டர் போட்டுடறேன்!" என்றார்.
ரங்கநாதம் முதலில் சற்றுத் தயங்கினாலும், பிறகு ஒப்புக் கொண்டார். அவர் நாகராஜனை விட சீனியர். ஆனால், பதவி உயர்வில் அவருக்கு ஆர்வம் இல்லை. எனவே, நாகராஜன் கிளை மேலாளராகப் பதவி உயர்வு பெற்றதில் அவருக்கு வருத்தம் இல்லை.
அந்த ஊருக்குச் சென்றதும், ஒரு ஓட்டல் அறையில் தங்கிக் கொண்டு, தன் பணிகளைத் துவக்கினான் நாகராஜன். தெலுங்கு தெரிந்த ரங்கநாதத்தின் உதவியுடன், ஒரு வாரத்தில் அலுவலகத்துக்கான ஒரு கட்டிடத்தைத் தேர்ந்தெடுத்தான்.
பொது மேலாளரிடம் தகவலைத் தொலைபேசியில் தெரிவித்ததும், அவர் "சரி, கட்டட உரிமையாளர்கிட்ட லீஸ் அக்ரிமென்ட் போடணும். அதுக்கு முன்னால, உரிமையாளர் அவர்தானான்னு சரிபாக்கணும். நீங்க கட்டட உரிமையாளரோட டாகுமென்ட்ஸ் காப்பி எல்லாம் வாங்கி அனுப்புங்க. நம்ம லீகல் அட்வைசர்கிட்ட கொடுத்து அப்ரூவல் வாங்கிடலாம்!" என்றார்.
"சார்! இஃப் யூ டோன்ட் மைண்ட், இதுக்கு ரொம்ப டைம் ஆகும், சார். லீகல் அட்வைசரை இங்கே வரச் சொன்னா, ரெண்டு நாள்ள வேலை முடிஞ்சுடும்!" என்றான் நாகராஜன்.
பொது மேலாளர் அவன் யோசனையை ஒப்புக் கொண்டார்.
"நீ பெரிய ஆள்தாம்ப்பா! முதல்ல, ஜி எம்கிட்ட சொல்லி, உதவிக்கு என்னைக் கூப்பிட்டுக்கிட்ட. இப்ப, லீகல் அட்வைசரையே இங்கே அனுப்பச் சொல்லி, அதுக்கும் ஒப்புதல் வாங்கிக்கிட்டியே!" என்றார் ரங்கநாதம், சிரித்துக் கொண்டே.
"செய்யற வேலையை சரியாச் செய்ய வேண்டாமா சார்? டாகுமென்ட்டையெல்லாம் வக்கீல் நேரில பாத்துட்டார்னா, அப்புறம் பிரச்னை வராது இல்ல? வேலையைக் குறிப்பிட்ட நேரத்திலயும் முடிக்கணும், தவறுகள் நேராம, சரியாவும் செஞ்சு முடிக்கணும் இல்ல? சரி. கிளம்புங்க. ஆஃபீசுக்குள்ள பார்ட்டிஷன்ஸ், ஃபர்னிஷிங் எல்லாம் பண்ண ஆளைப் பிடிக்கணும்!" என்றான் நாகராஜன்.
அலுவலகம் திறக்க வேண்டிய நாளுக்கு ஒரு வாரம் முன்பே அலுவலக வாசலில் போர்டை மாட்டி, தெலுங்கில் ஒரு பெரிய பேனரையும் வைக்கச் செய்தான் நாகராஜன்.
"இப்பவே எதுக்குப்பா போர்டு, பேனர் எல்லாம்? ஒரு நாள் முன்னால வச்சா போதாதா?" என்றார் ரங்கநாதம்.
"தெருவில போறவங்க நிறைய பேர் பாப்பாங்க இல்ல. 'அனைவரும் வருக'ன்னு தெலுங்கில எழுதி இருக்கோம். அதனால, சில பேர் ஆர்வத்தில வரலாம். இன்னிக்கே ரெண்டு மூணு பேர் உள்ள வந்து, இது என்ன ஆஃபீஸ்னு கேட்டுட்டுப் போனாங்க!"
"அது சரி. 11.30 க்கு டீன்னு போட்டிருக்கியே. வரவங்களுக்கெல்லாம் காப்பி, டீ கொடுக்கப் போறமா என்ன? கட்டுப்படி ஆகுமா"
"ஆமாம். காப்பி, டீக்காகவே சில பேர் நிகழ்ச்சிகளுக்கு வரதை நான் பாத்திருக்கேன்! எவ்வளவு பேர் வரப் போறாங்க? நூறு பேர் வந்தா அதிகம். பக்கத்து ஓட்டல்லேந்து, நூறு காப்பி, நூறு டீ கொண்டு வரச் சொல்லி இருக்கேன். அதோட, மூணு ரூபா பிஸ்கட் பாக்கெட் முன்னூறு வாங்கி வைக்கப் போறோம். வரவங்களுக்கு காப்பி, டீ, பிஸ்கட் பாக்கெட் கொடுத்தா, அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும், நம்ம பட்ஜெட்டுக்குள்ளதான் வரும். நாம எல்லாத்தையும் பாத்துப் பாத்துத்தானே செலவழிக்கிறோம்?" என்றான் நாகராஜன்.
எல்லாவற்றையும் செய்வது நாகராஜன்தான், தான் ஒரு மொழிபெயர்ப்பாளராக மட்டுமே இருக்கிறோம் என்பதை ரங்கநாதம் உணர்ந்திருந்தாலும், நாகராஜன் ஒவ்வொரு விஷயத்திலும் 'நாம் செய்கிறோம்' என்று தன்னையும் சேர்த்துக் கூறியது, ரங்கநாதத்துக்குப் பெருமிதத்தையும், மகிழ்ச்சியும் அளித்தது.
கிளை திறப்பு பற்றி ஐயாயிரம் நோட்டீஸ் அடித்து, அவற்றை நகரின் பல இடங்களிலும் முதல்நாள் மாலை விநியோகிக்க ஏற்பாடு செய்தனர்.
அந்த ஊரின் உள்ளூர் தினப்பத்திரிகையில் இன்றைய நிகழ்ச்சிகள் என்ற பகுதியைப் பலரும் பார்ப்பார்கள் என்று அறிந்து, திறப்பு விழா நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை அதில் விளம்பரமாக வெளியிடவும், ஒரு விளம்பர ஏஜன்சி மூலம் ஏற்பாடு செய்தனர்.
திறப்பு விழா அன்று காலை உள்ளூர்ப் பத்திரிகையைப் பார்த்த நாகராஜனுக்கு அதிர்ச்சி! பத்திரிகையின் 'இன்றைய நிகழ்ச்சிகள்' பகுதியில் அவர்கள் நிறுவனக் கிளை திறப்பு விழா நிகழ்ச்சி இடம் பெறவில்லை.
ரங்கநாதம் மூலம் பத்திரிகைக்கு ஃபோன் செய்து கேட்டபோது, சில சமயம் இடப் பற்றாக்குறையால் சில நிகழ்ச்சிகள் விட்டுப் போகும் என்றும், அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திருப்பி அளித்து விடுவதாகவும் பத்திரிகையிலிருந்து பேசியவர் குறிப்பிட்டார்.
"பணத்தைத் திருப்பிக் கொடுத்து என்ன பிரயோசனம்? பத்திரிகையில வர அறிவிப்பைப் பார்த்து நிறைய பேர் வருவாங்கன்னு நம்பிக்கையா இருந்தோமே! சேர்மன் வரப்ப கூட்டம் இல்லாம இருந்தா நல்லா இருக்காதே!" என்றான் நாகராஜன்.
"விடுப்பா. நீ எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துத்தான் செஞ்சே. உன்னையும் மீறி நடந்த விஷயம் இது. இந்தத் தப்புக்கு, நீயோ நானோ பொறுப்பு இல்ல. நாம ஏற்கெனவே நிறைய பேருக்கு இந்தத் தகவல் போகும்படி செஞ்சிருக்கோம். எத்தனை பேர் வராங்களோ வரட்டும்! நாம என்ன செய்ய முடியும்?" என்றார் ரங்கநாதம்.
"இப்ப மணி ஒன்பது. சேர்மன் பதினோரு மணிக்கு மேலதான் வருவாரு. நல்ல வேளை, அவர் தன் சொந்த ஊருக்குப் போயிட்டு, அங்கேந்து கார்ல வரதா சொல்லிட்டாரு. அதனால, அவரை வரவேற்க நாம எங்கேயும் போக வேண்டாம். கூட்டத்தை எப்படிக் கூட்டறதுன்னு யோசிக்கலாம்!" என்றான் நாகராஜன்.
"தெருவில போய் நின்னு, ஒவ்வொத்தரையா வாங்க வாங்கன்னு கூப்பிடப் போறமா என்ன?"
"கரெக்ட். அப்படியே செய்யலாம்! நாம அடிச்ச நோட்டீஸ் கொஞ்சம் மீதி இருக்கு இல்ல?"
"ஆமாம், ஒரு ஐநூறு, அறுநூறு நோட்டீஸ் மீதி இருக்கும்."
"அதை எங்கிட்ட கொடுங்க. பத்து மணிக்கு மேல மெயின் ரோடில நின்னுக்கிட்டு, இந்த நிகழ்ச்சிக்கு வரக் கூடியவங்க யாருன்னு பாத்துக் கொடுக்கறேன். அதில கொஞ்சம் பேராவது வராமலா போவாங்க?"
"என்னப்பா இது? நீ பிராஞ்ச் மானேஜர். நீ போய்த் தெருவில நின்னு நோட்டீஸ் கொடுக்கறேங்கற?" என்றார் ரங்கநாதம், தயக்கத்துடன்.
"முதல்ல பிராஞ்ச் திறக்கணும். அப்புறம்தானே பிராஞ்ச் மானேஜர்? நீங்க இங்கேயே இருந்து பாத்துக்கங்க. நான் போய் நோட்டீஸ் கொடுத்துட்டு வரேன்!" என்றான் நாகராஜன், சிரித்துக் கொண்டே.
"திறப்பு விழா ரொம்ப பிரம்மாண்டமா நடந்துடுச்சு. பிரமாதமா செஞ்சுட்டப்பா! நீ கஷ்டப்பட்டது வீண் போகல. நூறு பேருக்கு மேலயே வந்துட்டாங்க. சேர்மனுக்கு ரொம்ப சந்தோஷம். இனிமே, நீ இந்த பிராஞ்ச்சை பிரமாதமா நடத்தப் போற பார்!" என்றார் ரங்கநாதம், உணர்ச்சிப் பெருக்குடன்
குறள் 662:
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
பொருள்:
செய்யும் செயல்களில் தவறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, தவறு ஏற்பட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.
663. சொல்லாதது ஏன்?
குறள் 663:
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.
பொருள்:
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப் பற்றி வெளிப்படுத்தாமல் இருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்து விட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக் கூடும்.
664. வழிகாட்டி
"எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்குப்பா!" என்றார் சுந்தரம்.
'சுந்தரம் விஷயம் தெரிந்தவர். எந்த ஒரு செயலையும் எப்படிச் செய்வது என்பதை நன்றாக அறிந்தவர். அவரிடம் ஆலோசனை கேட்டால், அவர் சரியாக வழிகாட்டுவார்' என்று என் அப்பா என்னிடம் சொல்லி இருந்ததால், என் நண்பன் செல்வத்தின் சொத்து பிரச்னை தொடர்பாக ஆலோசனை கேட்க, அவனை அவரிடம் அழைத்துச் சென்றேன்.
செல்வம் தன் பிரச்னையைக் கூறி, அதற்குத் தீர்வு உண்டா என்று அவரிடம் கேட்டபோதுதான், அவர் இப்படிச் சொன்னார்.
"நாம ஒரு செயலைச் செய்ய நினைக்கிறது, ஒரு உயரமான இடத்துக்குப் போற மாதிரி. ஒரு கட்டிடத்தோட எந்த ஒரு மேல் தளத்துக்குப் போகணும்னாலும், படியேறிப் போகலாம். முதல் மாடின்னா, படிகள் குறைவா இருக்கும். சுலபமா, சீக்கிரமாப் போயிடலாம். பத்தாவது மாடின்னா, அதிகப் படிகள் ஏறணும். கடினமா இருக்கும். அதிக நேரம் ஆகும். ஆனா போக முடியும். படியேற முடியலேன்னா, லிஃப்ட் மாதிரி வசதிகள் சில சமயம் கிடைக்கும். அதுக்கு அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும்! படிகளே இல்லேன்னா, கயிறு போட்டு மேல ஏறுகிறது மாதிரி குறுக்கு வழிகளைப் பயன்படுத்தணும். இது எல்லாராலும் முடியாது. முடியும்னாலும், எல்லாருமே செய்யவும் மாட்டாங்க. இதெல்லாம் சட்ட விரோதமான வழிகள் மாதிரி. அதனால, ஒரு வேலையைச் செஞ்சு முடிக்க என்னென்ன படிகள் இருக்கு, அந்தப் படிகள்ள ஏறிப் போக என்னென்ன செய்யணுங்கற ஒரு புளூபிரின்ட்டை முதல்ல தயாரிச்சுக்கிட்டா, அப்புறம் வேலையை செஞ்சு முடிச்சுடலாம்!"
இந்த நீண்ட விளக்கத்துக்குப் பிறகு, சுந்தரம் செல்வத்தின் சொத்து விஷயத்துக்கு வந்தார்.
"உன்னோட பிரச்னை கொஞ்சம் சிக்கலானதுதான். பாகம் பிரிக்காத குடும்பச் சொத்து, நிறைய வாரிசுகள், வாரிசுகள்ள சில பேர் இறந்து போயிட்டது - இது மாதிரி பிரச்னை எல்லாம் இருக்கு. வரிசையா என்னென்ன செய்யணும்னு சொல்றேன், எழுதிக்க!" என்ற சுந்தரம், செல்வம் செய்ய வேண்டியவற்றைப் படிப்படியாகக் குறிப்பிட்டார்.
"அவ்வளவுதான். செஞ்சு முடிக்க நேரம் ஆகும். நிறைய அலைச்சல், பணச்செலவு எல்லாம் ஏற்படும். ஆனா, ஒவ்வொண்ணா செஞ்சுக்கிட்டு வந்தா, செஞ்சு முடிச்சுடலாம். எல்லாத்தையும் செஞ்சு முடிக்க அஞ்சாறு மாசம் ஆகலாம். ஆனா, செஞ்சு முடிச்சப்பறம், எவ்வளவு பெரிய வேலையை எப்படி அழகா செஞ்சு முடிச்சுட்டோம்னு உனக்கே பெருமையா இருக்கும்!" என்றார் சுந்தரம்.
செய்ய வேண்டியவற்றை அவர் எளிமையாக, படிப்படியாக விளக்கிச் சொன்னதைக் கேட்டதும், வேலையைச் செய்து முடித்து விடலாம் என்ற நம்பிக்கை செல்வத்துக்கு ஏற்பட்டது
"ரொம்ப நன்றி சார்!" என்று விடைபெற்றான் செல்வம். நானும் எழுந்தேன்.
"இருங்க. நம்ம வீட்டுக்கு வந்தவங்க காப்பி சாப்பிடாம போகக் கூடாது. காப்பி வந்துக்கிட்டிருக்கு. சாப்பிட்டுட்டுப் போங்க!" என்றவர் கைக்கடியாரத்தைப் பார்த்து விட்டு, "நான் ஒரு இடத்துக்குப் போகணும். அதனால கிளம்பறேன். நீங்க இருந்து காப்பி குடிச்சுட்டுப் போங்க!" என்று எங்கள் இருவரையும் பார்த்துச் சொல்லி விட்டு எழுந்தார். பிறகு செல்வத்திடம் திரும்பி, "ஏதாவது சந்தேகம் இருந்தா, நீ எப்ப வேணும்னாலும் எங்கிட்ட வந்து கேக்கலாம்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.
சில நிமிடங்களில் காப்பியுடன் வந்த சுந்தரத்தின் மனைவி, என்னைப் பார்த்து, "என்ன தம்பி! நல்லா இருக்கியா? அப்பா அம்மா எப்படி இருக்காங்க?" என்று விசாரித்தாள்.
அனைவரும் நலம் என்று கூறி விட்டு, "இவன் என் நண்பன் செல்வம். இவன் குடும்ப சொத்துல ஒரு பிரச்னை. அதை எப்படிச் செய்யறதுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கத்தான், சாரைப் பாக்க வந்தோம். செய்ய வேண்டிய விஷயங்களை சார் ரொம்பத் தெளிவா விளக்கினாரு" என்றேன் நான்.
"ஆமாம், ஆன்ட்டி!" என்றான் செல்வம்.
"அதெல்லாம் வக்கணையா சொல்லுவாரு. ஆனா, அவரால எந்த வேலையையும் உருப்படியா செய்ய முடியாது!" என்றாள் அவள், அலுத்துக் கொண்டே.
"ஏன் ஆன்ட்டி இப்படிச் சொல்றீங்க?" என்றேன் நான், புரியாமல்.
"பின்னே என்ன? இவரோட அம்மா பேரில ஒரு சொத்து இருக்கு. அதை அவங்க இவருக்குக் கொடுக்கப் போறதா சொல்லி இருக்காங்க. இவரோட கூடப் பிறந்தவங்களுக்கு அது தெரியும். அவங்களும் இதுக்கு சம்மதிச்சுட்டாங்க. ஆனா, இவரோட அம்மா உயில் ஏதும் எழுதி வைக்காம இறந்துட்டாங்க. சொத்தை இவர் பேருக்கு மாத்திக்கிட்டாத்தான், எங்களால அதில உரிமை கொண்டாடவோ, விக்கவோ முடியும். 'லீகல் ஹேர் சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டு, என்னோட கூடப் பிறந்தவங்க நாலு பேரும் அந்த சொத்தை எனக்கு விட்டுக் கொடுக்கறதா பத்திரம் எழுதி ரிஜிஸ்டர் பண்ணிட்டா, சொத்தை என் பேர்ல மாத்திக்கலாம்'னு இவரு சொன்னாரு. இவர் கூடப் பிறந்தவங்களும் பத்திரத்தில கையெழுத்துப் போட்டு ரிஜிஸ்டர் பண்ணிக் கொடுக்கத் தயாரா இருக்காங்க. இவர் அம்மா போய் மூணு வருஷம் ஆயிடுச்சு. செஞ்சுடலாம், செஞ்சுடலாம்னு இவர் காலத்தை ஓட்டிக்கிட்டே இருக்காரு. இவர் அதை செஞ்சு முடிப்பார்ங்கற நம்பிக்கையே எனக்குப் போயிடுச்சு. பத்து லட்சம் ரூபா மதிப்புள்ள சொத்து அம்போன்னு போயிடப் போகுதோன்னு எனக்கு பயமா இருக்கு!" என்று புலம்பினாள் சுந்தரத்தின் மனைவி.
குறள் 664:
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
பொருள்:
ஒரு செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது, சொல்லியபடி செய்து முடித்தல் அரியது.
665. குடியரசுத் தலைவரிடமிருந்து ஒரு கடிதம்
"ஏம்ப்பா, உங்கிட்ட நிறையத் திறமை இருக்கு. உனக்கு நான் நல்ல சம்பளம் கொடுக்கறேன். இன்னும் அதிகமா வேணும்னாலும் கொடுக்கறேன். வேலையை விட்டுப் போகாதே!" என்றார் பொன்னம்பலம்.
"இல்லை சார்! சம்பளத்துக்காக இல்லை. நீங்க என் திறமையை அங்கீகரிச்சு, எனக்கு அதிக சம்பளம் கொடுத்து ஊக்கப்படுத்தறீங்க. அதுக்காக, நான் உங்ககிட்ட எப்பவும் நன்றியோட இருப்பேன். ஆனா, நான் சொந்தமாத் தொழில் செய்யலாம்னு பாக்கறேன்" என்றான் அன்பரசன்.
"சொந்தத் தொழில் செய்யறது ரொம்ப கஷ்டம்ப்பா. என் அனுபவத்திலேந்து சொல்றேன். ஆரம்பத்தில முதலீடு செய்யறதைத் தவிர, கையில நிறையப் பணம் இருந்தாத்தான், தொழில்ல அப்பப்ப ஏற்படற நெருக்கடிகளை சமாளிக்க முடியும்!"
"புரியுது, சார். ஒரு சின்ன லேத் பட்டறை விலைக்கு வருது. மெஷின் எல்லாம் நல்ல கண்டிஷன்ல இருக்கு. நான் செக் பண்ணிப் பாத்துட்டேன். ரொம்பக் குறைஞ்ச விலைக்கு வருது. நான் கொஞ்சம் பணம் சேத்து வச்சிருக்கேன். அதை வச்சு அந்தப் பட்டறையை வாங்கி, முதல்ல ஜாப் ஒர்க் எடுத்துக்கிட்டு ஓட்டலாம்னு இருக்கேன். நீங்க கூட எனக்கு ஏதாவது வேலை கொடுத்து உதவலாம் சார்!" என்றான் அன்பரசன்.
"வாழ்த்துக்கள்! நீ நல்லா வருவே!" என்று வாழ்த்தினார் பொன்னம்பலம்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, அன்பரசனைத் தொலைபேசியில் அழைத்த பொன்னம்பலம், "என்னப்பா! தொழில் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?" என்றார்.
"நீங்க சொன்னது சரிதான் சார். கஷ்டமாத்தான் இருக்கு. ஜாப் ஒர்க்ல அதிக வருமானம் வரல. பெரிய கம்பெனிகளுக்கு ஏதாவது காம்பொனன்ட் தயாரிச்சுக் கொடுத்தாதான், ஓரளவு வருமானம் வரும்னு தோணுது. ஆனா, அதுக்கு முதலீடு வேணும். அதான் எப்படிச் செய்யறதுன்னு யோசிக்கறேன்!" என்றான் அன்பரசன்.
"நீ எப்ப வந்தாலும், உன்னை நான் திரும்பவும் வேலையில சேத்துக்கத் தயாரா இருக்கேன். உனக்கு மறுபடி இங்கே வந்து வேலையில சேரத் தயக்கம் இருந்தா சொல்லு. நான் எனக்குத் தெரிஞ்ச வேற ஏதாவது நிறுவனத்தில, உனக்கு வேலை வாங்கித் தரேன்!"
"நீங்க என் மேல வச்சிருக்கற அன்புக்கு நான் உங்களுக்கு ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன் சார்! ஆனா, நான் எப்படியாவது கஷ்டப்பட்டுத் தொழிலைத் தொடர்ந்து நடத்தறதில உறுதியா இருக்கேன்!" என்றான் அன்பரசன்.
சில மாதங்களுக்குப் பிறகு, பொன்னம்பலத்தைத் தொலைபேசியில் அழைத்த அன்பரசன், "சார்! தைரியமாப் போய், ஒரு பெரிய கம்பெனியிலேந்து ஒரு காம்பொனன்ட்டுக்கு ஆர்டர் வாங்கிட்டேன். அதை ஒரு சப்ளையர்கிட்ட காட்டிக் கடனுக்கு மெடீரியல்ஸ் வாங்கி, அந்த காம்பொனன்ட்டைத் தயாரிச்சு, ஆர்டரை நிறைவேத்திட்டேன். ஒரு மாசத்தில பணம் வந்துடும். அதுக்கப்பறம், சப்ளையருக்குப் பணத்தைக் கொடுத்துடுவேன். அவர் தொடர்ந்து எனக்குக் கடன்ல மெடீரியல்ஸ் சப்ளை பண்றதாச் சொல்லி இருக்காரு!" என்றான் அன்பரசன், உற்சாகத்துடன்.
"ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. நீ நிச்சயமா பெரிய தொழிலதிபரா வருவே!" என்று வாழ்த்தினார் பொன்னம்பலம்.
அதற்குப் பிறகும், பலமுறை பொன்னம்பலத்தைத் தொலைபேசியில் அழைத்து, தான் சந்தித்து வரும் பிரச்னைகளைப் பற்றியும், வேறு சமயங்களில் தன்னுடைய முன்னேற்றங்களையும் பற்றிக் கூறி வந்தான் அன்பரசன்.
இப்போது, அன்பரசன் ஒரு பெரிய தொழிலதிபராகி விட்டான். பல வருடங்கள் ஆகியும், தன் முன்னேற்றங்களைப் பற்றியும், தனக்கு ஏற்படும் பிரச்னைகள், தான் அவற்றைச் சமாளித்த விதம் ஆகியவை பற்றியும், அவ்வப்போது பொன்னம்பலத்திடம் பகிர்ந்து கொண்டிருந்தான் அவன்.
குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வந்த அந்தக் கடிதத்தைச் சற்று வியப்புடனும், பதட்டத்துடனும் பிரித்தான் அன்பரசன். நாடு முழுவதிலுமிருந்தும் தொழில்துறையில் சாதித்தவர்கள் ஐம்பது பேரை குடியரசுத் தலைவர் கௌரவித்து விருது அளிக்கப் போவதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் அன்பரசனும் ஒருவன் என்றும் அந்தக் கடிதம் அறிவித்தது.
இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பொன்னம்பலத்திடம் பகிர்ந்து கொள்ள நினைத்து, அவரைத் தொலைபேசியில் அழைத்தான் அன்பரசன்.
குறள் 665:
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
பொருள்:
செயல்திறனால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத்திட்பமானது நாட்டை ஆளும் அரசனையும் எட்டி, மதிக்கப்பட்டு விளங்கும்.
666. சின்ன நோட்டு, பெரிய நோட்டு!
கல்லூரி ஆண்டு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தொழிலதிபர் சச்சிதானந்தம், "நான் ஏதோ வாழ்க்கையில பெரிசா சாதிச்சுட்டதா நினைச்சு, என்னை இங்கே பேசக் கூப்பிட்டிருக்கீங்க! ஆனா, நான் ஒண்ணும் பெரிசா சாதிக்கல!" என்று ஆரம்பித்தார்.
அடுத்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை மாணவர்கள் ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தனர்.
சச்சிதானந்தம் தான் மேஜை மீது வைத்திருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பிரித்துக் காட்டினார்.
"இதெல்லாம் நான் செய்ய வேண்டுமென்று நினைத்த விஷயங்கள். ஆனால், இவற்றில் தொண்ணூற்றொன்பது சதவீதத்தை என்னால் செய்ய முடியவில்லை,"
பிறகு, அவர் தன் சட்டைப்பையிலிருந்து ஒரு பாக்கெட் நோட்டை எடுத்தார்.
"ஆனால், இதில் எழுதி இருக்கிற விஷயங்களில் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே செய்து முடித்து விட்டேன். நீங்கள் என்னை இங்கே அழைத்துப் பேச வைத்திருப்பதற்குக் காரணம், இந்த பாக்கெட் நோட்புக்தான்!" என்று சொல்லி நிறுத்தினார் சச்சிதானந்தம்.
"இரண்டு நோட்டுகளுக்கும் என்ன வித்தியாசம்? நான் முதலில் காட்டிய பெரிய நோட்டில், நான் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று நினைத்தேனோ, அத்தனையையும் எழுதி வைத்திருக்கிறேன். ஆனால், அவற்றைச் செய்ய நான் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை! ஆனால், அந்தப் பட்டியலில் இருந்த சிலவற்றை முக்கியமானவையாக நினைத்து, இந்த பாக்கெட் நோட்டில் எழுதினேன். அவற்றைச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். அதனால்தான், அவற்றில் பெரும்பாலானவற்றை என்னால் நிறைவேற்ற முடிந்தது."
மாணவர்களின் முகங்களைப் பார்த்தார் சச்சிதானந்தம். அவர்கள் ஆர்வமாக கவனிப்பதைக் கண்டதும், மேலும் தொடர்ந்தார்.
"எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை, நீங்கள் எவற்றையெல்லாம் நினைக்கிறீர்களோ, அவை எல்லாம் நிறைவேறும் என்று சிலர் சொல்வார்கள். நாம் நினைப்பவை எல்லாமே நிறைவேற மாட்டா. ஆனால், நாம் நினைப்பவற்றைச் செயல்படுத்த நினைத்து, அவற்றுக்கான முயற்சிகளில் ஈடுபட்டால், நாம் நினைப்பவற்றில் பலவற்றை நிறைவேற்ற முடியும். நீங்கள் நினைப்பவை இந்தப் பெரிய நோட்டில் இருப்பவை போல. அவை வெறும் எண்ணங்களாகத்தான் இருக்கும். எந்த எண்ணங்களை நிறைவற்ற நாம் உறுதியுடன் செயல்படுகிறோமோ, அவை இந்த சின்ன நோட்டில் இருப்பவை போல. அவைதான் நிறைவேறும்."
சச்சிதானந்தம் பேசி முடித்ததும், மாணவர்கள் உற்சாகமாகக் கைதட்டினர்.
"என்னங்க, பால் கணக்கு எழுதி வச்சிருந்தேனே ஒரு சின்ன நோட்டு, அதைப் பாத்தீங்களா?" என்றாள் பார்க்கவி.
"நான்தான் எடுத்துட்டுப் போனேன். இந்தா!" என்று தன் கைப்பையிலிருந்த நோட்டை எடுத்து மனைவியிடம் கொடுத்த சச்சிதானந்தம், ஒரு பெரிய நோட்டை எடுத்து, "இந்தா! இது ரமேஷ் கதை எழுதறதுக்கான ஐடியா எல்லாம் குறிச்சு வச்சிருக்கற நோட்டு. அவன் மேஜையிலேந்து எடுத்தேன். அங்கேயே வச்சுடு!" என்று சொல்லி, மனைவியிடம் கொடுத்தார்.
"காலேஜில பேசப் போறதுக்கு இந்த ரெண்டு நோட்டையும் எதுக்கு எடுத்துக்கிட்டுப் போனீங்க? இதில ஏதாவது குறிப்பு எழுதிக்கிட்டுப் போனீங்களா என்ன?" என்றபடியே, தன் பால் கணக்கு நோட்டைப் பிரித்துப் பார்த்தாள் பார்க்கவி.
"குறிப்பெல்லாம் எதுவும் எழுதல. மாணவர்கள்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன். அதை வெறும் பேச்சில சொன்னா, சும்மா கேட்டுக்கிட்டுப் போயிடுவாங்க. கொஞ்சம் டிராமாடிக்கா ஏதாவது செஞ்சா, அது அவங்க மனசில பதியும்னு நினைச்சேன். இந்த ரெண்டு நோட்டையும் மேஜையில பார்த்தப்ப, ஒரு யோசனை தோணிச்சு. அதான், டக்குனு ரெண்டையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டேன்!" என்று சொல்லிச் சிரித்தார் சச்சிதானந்தம்.
குறள் 666:
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
பொருள்:
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
667. பயணியின் மீது பரிதாபம்!
அந்த சொகுசு பஸ்ஸில் சீட்டின் கீழ்ப்புறத்தை மேலே மடக்கி, அதில் கால்களை நீட்டியபடி வைத்துக் கொண்டு, இருக்கையின் பின்புறத்தைச் சாய்த்து, அதில் சாய்ந்து கொண்டான் தினகர்.
"அப்பா! முதுகுவலி வந்துடும் போல இருக்கு. இதுக்கு உக்காந்துக்கிட்டே வரலாம்!" என்று அலுத்துக் கொண்டான் தினகர்.
"அதனாலதான், நான் சீட்டைக் கூடப் பின்னால சாய்ச்சுக்காம, நேரேயே உக்காந்துக்கிட்டிருக்கேன். இந்த செமி ஸ்லீப்பர் பஸ்னா இப்படித்தான். ஒண்ணு ஸ்லீப்பர்ல வரணும், இல்லேன்னா உக்காந்துக்கிட்டு வரதே உத்தமம்!" என்றான் அவன் நண்பன் அருண்.
"உனக்கும் எனக்கும்தான் இந்தப் பிரச்னை! அங்கே பாரு, அண்ணன் எவ்வளவு வசதியா, சொகுசா உக்காந்திருக்காருன்னு!" என்று அருணின் காதில் கூறிய தினகர், அவர்கள் இருக்கைகளுக்குப் பக்கத்தில் இருந்த இருக்கை வரிசையைக் காட்டினான்.
அந்த வரிசையில், ஓர இருக்கையில் அமர்ந்திருந்த நபர், தினகரனைப் போலவே, காலை நீட்டவும் முடியாமல், மடக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, தினகரனால் 'அண்ணன்' என்று குறிப்பிடப்பட்ட நபர், ஜன்னலோர இருக்கையில் சுகமாக அமர்ந்திருந்தார்.
அவர் உருவம் சிறியது என்பதால், அவரது குட்டைக் கால்கள், நீட்டப்பட்ட இருக்கைக்குள் அடங்கி விட்டன.
"அவன் காலை நீட்டினப்பறம் மீதி இருக்கிற இடத்தில, ஒத்தர் உக்காரலாம் போல இருக்கே!" என்றான் அருண், மெதுவாகச் சிரித்தபடி.
"பொம்மைக்கு பேண்ட் சட்டை போட்ட மாதிரி இருக்கு. பாவம், இவனை மாதிரி ஆளுக்கெல்லாம் வாழ்க்கை ரொம்ப கஷ்டம்தான். யாரும் வேலைக்கு எடுத்துக்க மாட்டாங்க. யாரையாவது நம்பித்தான் வாழ்க்கையை நடத்தணும்!" என்றான் தினகரன்.
"நீதான் அவன் வாழ்க்கையை நினைச்சுக் கவலைப்படற. அவன் என்னடான்னா, காலை நீட்டினதுமே கண்ணை மூடிக்கிட்டுத் தூங்க ஆரம்பிச்சுட்டான் பாரு!"
"பாவம்! நல்லா தூங்கவாவது செய்யட்டுமே!"
காலையில் பேச்சுக் குரல்கள் கேட்டுக் கண்விழித்த தினகர், பஸ் நின்று கொண்டிருப்பதையும், பயணிகள் இறங்கிக் கொண்டிருப்பதையும் பார்த்து, அருணை எழுப்பினான். "டேய், முழிச்சுக்கடா! இறங்கணும்."
அநேகமாக எல்லோருமே இறங்கி விட்ட பிறகு, இருவரும் இருக்கையை விட்டு எழுந்தனர்.
அப்போதுதான், பக்கத்து வரிசை இருக்கையில் அந்த நபர் இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதையும், அவருக்கு அருகே இருவர் நின்று கொண்டு, "சார்! சார்!" என்று அழைத்தபடி, அவரை எழுப்பிக் கொண்டிருப்பதையும் கவனித்தான் தினகர்.
"அசந்து தூங்கறார் போல இருக்கு. நீங்க கூப்பிடறது அவருக்குக் காதில விழல. நீங்க வேற ரொம்ப மெதுவாப் பேசறீங்க! தட்டி எழுப்புங்க. அப்பதான் எழுந்திருப்பாரு!" என்றான் தினகர்.
"அப்படிச் செய்ய முடியாது, சார்! அவர் எங்க எம்.டி.!" என்றார், அந்த இருவரில் ஒருவர்.
"எம்.டி.யா?"
"ஆமாம் சார்! ரம்யா டெக்ஸ்டைல்ஸ்னு இந்த ஊர்லேயே பெரிய கம்பெனி இவரோடதுதான்!" என்று அவர் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, கண் விழித்த எம்.டி, "ஓ! ஊர் வந்துடுச்சா! மேல என் பிரீஃப்கேஸ் இருக்கு. எடுத்துக்கங்க!" என்று அதிகாரமாகக் கூறியபடியே, பஸ்ஸை விட்டு இறங்கினார்.
குறள் 667:
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
பொருள்:
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி, உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.
668. தோல்வியில் ஒரு வெற்றி!
"தலைவர் அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டாருன்னு நினைக்கிறேன்!"
"இப்பதான் கட்சிக்குத் தலைவரா வந்திருக்காரு. அதனால, நம்ம கெத்தைக் காட்டலாம்னு நினைக்கிறாரு போல இருக்கு. ஆனா, கள எதார்த்தம் தெரியாம இருக்காரே!"
"ஆமாம். இடைத் தேர்தல்கள்ள, ஆளும் கட்சிதான் ஜெயிக்கும். அதுவும், நாம இப்பதான் ஒரு பெரிய தோல்வியைச் சந்திச்சிருக்கோம். இந்த இடைத் தேர்தல்ல போட்டி போடாம தவிர்த்திருக்கலாம்."
"ஒருவேளை போட்டியிடற மாதிரி களத்தில இறங்கிட்டு, 'ஆளும் கட்சி பணம் கொடுத்து வெற்றி பெறப் பாக்குது, இதைத் தேர்தல் ஆணையம் கண்டுக்காம இருக்கு, அதனால, நாங்க போட்டியிலேந்து விலகிக்கப் போறோம்'னு சொல்லிப் பின் வாங்கப் போறாரோ என்னவோ?"
கட்சித் தொண்டர்களிடையே நிலவிய இந்தப் பேச்சுக்கள் கட்சித்தலைவர் துரைராசன் காதிலும் விழுந்தன.
"என்ன தலைவரே! அவசரப்பட்டு முடிவு எடுத்திட்டீங்க போல இருக்கு. நமக்கு டெபாசிட் கூடக் கிடைக்காதுன்னு தோணுது. பேசாம, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிப் போட்டியிலிருந்து விலகிடலாம்!" என்றார் மூத்த தலைவர் தாமோதரன்.
"அவசரப்பட்டு முடிவெடுக்கலையே! உங்க எல்லாரையும் கலந்து ஆலோசிச்சுத்தானே முடிவெடுத்தேன்?" என்றார் துரைராசன்.
"போட்டி போட்டு பலத்தைக் காட்டலாம்னுதான் நினைச்சோம். ஆனா, நம்ம நிலைமை இவ்வளவு மோசமா இருக்கும்னு எதிர்பாக்கலையே!"
"நிலைமை மோசம்னு அதுக்குள்ள ஏன் முடிவு பண்றீங்க? நாம இன்னும் பிரசாரத்தையே ஆரம்பிக்கலையே! ஜெயிக்கறோமோ, தோக்கறோமோ, கடுமையா உழைச்சு, ஒரு வலுவான போட்டியைக் கொடுக்கணும்!" என்றார் துரைராசன்.
தாமோதரன் நம்பிக்கை இல்லாமல் தலைவரைப் பார்த்தார்.
அடுத்த பல நாட்களில், துரைராசன் தொகுதி முழுவதும் சுழன்று வந்தார். ஒவ்வொரு பகுதியிலும், கட்சிக்காரர்களைச் சந்தித்துப் பேசி, அவர்களுக்கு யோசனைகள் கூறி, அவர்கள் கடுமையாக உழைக்கும் விதத்தில், உந்துதல் அளித்தார்.
அதிக நம்பிக்கையுடன் பிரசாரத்தைத் தொடங்கிய ஆளும் கட்சி, துரைராசனின் சுறுசுறுப்பான, உற்சாகமான செயல்பாடுகளைப் பார்த்துக் கவலை கொண்டது.
ஆளும் கட்சித் தலைவர், தங்கள் கட்சி உறுப்பினர்களிடம் பேசும்போது, 'துரைராசன் இதுபோல் செயல்படுவதைப் பார்த்தால், நமக்கு வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது என்று தோன்றுகிறது. எச்சரிக்கையாகப் பணியாற்றுங்கள்!" என்றார்.
ஆளும் கட்சி எளிதாக வெற்றி பெறும் என்று துவக்கத்தில் கணித்த ஊடகங்கள், துரைராசனின் கடின உழைப்பைப் பார்த்து, 'துரைராசன் ஒரு ஆச்சரியத்தை நிகழ்த்திக் காட்டுவாரா?' என்று எழுதவும் பேசவும் தொடங்கின.
தேர்தல் முடிந்து, முடிவு அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆயினும், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையில், துரைராசன் ஒரு சாதனையை நிகழ்த்தி விட்டார் என்ற கருத்துதான் நிலவியது.
"நாமதான் தோத்துட்டமே! எனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய மாலையைப் போடறீங்க?" என்றார் துரைராசன்.
"தலைவரே! எல்லாருமே நீங்க வெற்றி பெற்றதாகத்தான் கருதறாங்க. டெபாசிட் கூடக் கிடைக்காதுங்கற நிலைமையிலேந்து, வெற்றிக்கு இவ்வளவு நெருக்கமா கட்சியைக் கொண்டு வந்துட்டீங்களே! உங்களோட தெளிவான முடிவும், உறுதியான செயல்பாடும்தான் இதுக்குக் காரணம்!" என்றார் தாமோதரன்.
குறள் 668:
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
பொருள்:
மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல், விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
669. பட்ட அவமானம் போதாதா?
'கலியுக வள்ளல்' என்று அழைக்கப்பட்ட சுந்தரமூர்த்தியின் வீட்டிலிருந்து கண்ணன் ஏமாற்றத்துடன் வெளியே வந்த பிறகுதான், தமிழறிஞர் கந்தப்பனைப் பற்றித் தான் தயாரித்திருந்த தகவல் புத்தகத்தை, சுந்தரமூர்த்தி வீட்டின் வரவேற்பறையிலிருந்த மேசை மீதே விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வந்தது.
அதை எடுத்து வர உள்ளே நுழைந்தபோது, "யாரோ ஒரு தமிழறிஞராம் அவர் எழுதின புத்தகங்களைப் பத்தி யாருக்குமே தெரியாதாம். அதையெல்லாம் வெளியிடப் போறேன், அதுக்குப் பணம் கொடுங்கன்னு கேட்டுக்கிட்டு வரான், பணம் சம்பாதிக்கறதுக்கு எப்படிப்பட்ட குறுக்கு வழியெல்லாம் யோசிக்கறாங்க பாரு!" என்று 'வள்ளல்' தன் மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தது கண்ணன் காதில் விழுந்தது.
கண்ணனைப் பார்த்ததும், சுந்தரமூர்த்தியின் முகம் சற்று மாறியது. "என்னப்பா! அதான் என்னால இதுக்கெல்லாம் பணம் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேனே! மறுபடி என்ன?" என்றார் அவர், எரிச்சலுடன்.
தான் பேசியதைக் கண்ணன் கேட்டு விட்டதால் ஏற்பட்ட தர்மசங்கடத்தை மறைக்கவே, சுந்தரமூர்த்தி இப்படிக் கடுமையாகப் பேசுகிறார் என்பது கண்ணனுக்குப் புரிந்தது.
'தாக்குதல்தான் தற்காப்புக்குச் சிறந்த வழி (Offense is the best form of defense)' என்ற ஆங்கிலப் பழமொழியை உருவாக்கியவர் ஒரு மேதைதான் என்று நினைத்துக் கொண்டான் கண்ணன்.
"இல்லை, சார். தகவல் புத்தகத்தை எடுத்துக்க மறந்துட்டேன். தொந்தரவுக்கு மன்னிச்சுக்கங்க!" என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டு, அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினான் கண்ணன்.
வெளியே வந்ததும், அவனுடன் வந்த அறிவழகன், "என்ன இப்படிப் பேசறாரு!" என்றான், கோபத்துடன்.
"விடு. ஒரு 'வள்ளலா' இருந்தும், தான் இந்த முயற்சிக்கு உதவலியேங்கற தன் குற்ற உணர்ச்சியை மறைச்சுக்கத்தான் இப்படிப் பேசறாரு!" என்றான் கண்ணன்.
"நீ என்ன சைகாலஜி படிச்சிருக்கியா என்ன? அவர் உன்னை அவமானப்படுத்திப் பேசினதுக்கு இப்படியெல்லாம் காரணம் கற்பிக்கற!" என்றான் அறிவழகன், வியப்புடன்.
"அடுத்தாப்பல, யார் வீட்டுக்குப் போய் அவமானப்படப் போறோம்?" என்றான் அறிவழகன் தொடர்ந்து.
"பத்து பேர் இல்லைன்னு சொல்லி கதவைச் சாத்தினாலும், ஒத்தர் உதவி செய்ய மாட்டாரா? பார்க்கலாம்!" என்றான் கண்ணன்.
"கண்ணா! உன்னை நினைச்சா, எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அதுவரைக்கும், நாம ஏழெட்டு பேரைப் பாத்துட்டோம். யாருமே உன்னோட இந்த ப்ராஜக்டுக்கு உதவத் தயாராயில்ல. எத்தனையோ அறிஞர்களோட நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கிற அரசாங்கம் கூட, உன்னோட கோரிக்கைக்குச் செவி சாய்க்கல. ஆனா, நீ விடாம இன்னும் முயற்சி பண்ணிக்கிட்டிருக்கியே! இப்படிக் கஷ்டப்படறது, அவமானப்படறது இதெல்லாம் உன்னைக் காயப்படுத்தலையா?"
நடந்து கொண்டிருந்த கண்ணன் சட்டென்று நின்றான். கண்களை மூடிக் கொண்டான்.
தான் சொன்னதைக் கேட்டு நண்பன் மனம் தளர்ந்து விட்டானோ என்ற அச்சம் அறிவழகனுக்கு ஏற்பட்டது.
கண்ணை மூடிக் கொண்டு ஒரு நிமிடம் மௌனமாக இருந்த கண்ணன், சட்டென்று கண்ணைத் திறந்து அறிவழகனைப் பார்த்தான்.
"அறிவு! எனக்கு மனசில ஒரு சிந்தனைதான் இருக்கு. என் முயற்சி வெற்றி அடைஞ்சு, அந்த அறிஞரோட ஆறு நூல்களையும் வெளியிட்டப்பறம் என் மனநிலை எப்படி இருக்கும்னு நினைச்சுப் பாக்கறேன். ஆகா! என்ன ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி! என்ன ஒரு மனநிறைவு! இந்த உணர்வை அனுபவிக்கும்போது, நான் படற கஷ்டம், அவமானம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டா தெரியல. நீ என்னோட வரது எனக்கு ஒரு பலமா இருக்கு. ஆனா, உனக்கு இது கஷ்டமா இருந்தா..."
சட்டென்று அவனை இடைமறித்த அறிவழகன், "சேச்சே! உனக்கு இருக்கிற உணர்வில பத்தில ஒரு பங்காவது எனக்கு இருக்காதா? உன் முயற்சியில நான் எப்பவுமே துணையா இருப்பேன். நீ நிச்சயமா வெற்றி அடைஞ்சு, இப்ப கற்பனையில பாக்கற மகிழ்ச்சியையும், திருப்தியையும் உண்மையாகவே அனுபவிக்கத்தான் போற!" என்றான் கண்ணனின், கைகளைப் பற்றியபடி.
குறள் 669:
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
பொருள்:
(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும்போது, துன்பம் மிக வந்தபோதிலும், துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.
670. உறுதியாகத் தேடுவோம்!
பொது மேலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போகும் நிலையில், தன் இடத்துக்கு இன்னொருவரை நியமிப்பதில் நிறுவனத் தலைவருக்கு உதவும் விதத்தில், பொது மேலாளர் பதவிக்கு வந்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, பொருத்தமான நபர்களின் விண்ணப்பங்களைத் தெரிவு செய்து கொண்டிருந்தார் மாசிலாமணி.
"இவரைப் பாருங்க. நிறையப் படிச்சிருக்காரு. நிறைய அனுபவம் இருக்கு. இவர் பொருத்தமானவரா இருப்பாருன்னு நினைக்கிறேன்!" என்றார் மாசிலாமணி.
விண்ணப்பத்தை விரைவாகப் பார்த்த நிறுவனத் தலைவர் மாரிமுத்து, "சரி, வரச் சொல்லுங்க. இன்டர்வியூ பண்றப்ப நீங்களும் இருக்கணும்!" என்றார்.
மாசிலாமணியால் தெரிவு செய்யப்பட்ட பரத்வாஜ் என்ற நபர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு, அவரை மாரிமுத்துவும், மாசிலாமணியும் இன்டர்வியூ செய்தனர்.
இன்டர்வியூ முடிந்து பரத்வாஜ் சென்றதும், "என்ன நினைக்கறீங்க?" என்றார் மாரிமுத்து.
"நீங்க நினைக்கறதைத்தான் நானும் நினைக்கிறேன்!" என்றார் மாசிலாமணி, சிரித்தபடி.
"நான் என்ன நினைக்கறேங்கறதைச் சரியாப் புரிஞ்சு வச்சிருக்கறதாலதானே, இத்தனை வருஷம் என் எண்ணங்களுக்கு ஏற்ற விதத்தில இந்த நிறுவனத்தைச் சிறப்பா நிர்வகிச்சிருக்கீங்க! நீங்க ஓய்வு பெறப் போறது எனக்கு ஒரு பெரிய இழப்புதான்" என்ற மாரிமுத்து, "சரி, சொல்லுங்க!" என்றார், தொடர்ந்து.
"பத்து வருஷம் ரெண்டு பெரிய நிறுவனங்களில வேலை செஞ்சிருக்காரு. அதுல நல்ல அனுபவம் கிடைச்சிருக்கு. நல்லாவும் செயல்பட்டிருக்காருன்னுதான் தோணுது. அதுவரைக்கும் சரிதான். அதுக்கப்பறம், வேலையை விட்டுட்டு, பத்து வருஷம் சொந்தத் தொழில் செஞ்சிருக்காரு. அங்கேதான் பிரச்னை!"
"வேலையை விட்டுட்டு சொந்தத் தொழில் ஆரம்பிச்சது தப்புங்கறீங்களா?" என்றார் மாரிமுத்து, சிரித்தபடி.
"நான் சொல்லப் போறது உங்களுக்குத் தெரியும். உங்க மனசிலேயும் அதுதான் இருக்கு!" என்றார் மாசிலாமணி, சிரித்தபடி.
"சொல்லுங்க. நீங்க சொல்ற விதம்தான் நல்லா இருக்கும்!"
"பத்து வருஷத்தில, அஞ்சு தொழில் செஞ்சிருக்காரு! ஒரு தொழிலை ஆரம்பிச்சு, அது சரியா வரலேன்னு இன்னொண்ணு, இது மாதிரி அஞ்சு தடவை முயற்சி செஞ்சுட்டு, அஞ்சாவது முயற்சியையும் கைவிட்டுட்டு, இப்ப வேலைக்கு முயற்சி செய்யறாரு."
"ஒரு தொழில் சரியா வரலைன்னா, அதை விட்டுட்டு இன்னொண்ணை முயற்சி செய்யறதில என்ன தப்பு?"
"தப்பு இல்லை. ஒவ்வொரு தடவையும் அவருக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். ஆனா, இது அவர் தன்னோட செயல்பாட்டில உறுதியா இல்லாம இருந்திருக்காருங்கற எண்ணத்தை ஏற்படுத்துதே! இந்த நிறுவனத்தை வழி நடத்தற உயர்ந்த பதவியை அவருக்குக் கொடுக்கலாம்கற நம்பிக்கையை அவர் செயல்பாடு ஏற்படுத்தலையே!"
"நீங்க சொல்ற மாதிரிதான் நானும் நினைக்கறேன். பேசாம, உங்க ஓய்வு பெறுகிற முடிவைக் கைவிட்டுட்டு, நீங்க வேலையில தொடருங்களேன்!" என்றார் மாரிமுத்து.
"அது எப்படி சார்? ஒத்தர் தன் செயல்பாட்டில உறுதியா இருக்கணும்னு இப்பதானே பேசிக்கிட்டோம்? அதனால, புது ஜி.எம்மைத் தேர்ந்தெடுக்கற நம் முயற்சியில தொடர்ந்து ஈடுபடுவோம்!" என்றார் மாசிலாமணி, சிரித்தபடி.
குறள் 670:
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
பொருள்:
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.
No comments:
Post a Comment