தீபாவளிக்காக உடைகள் வாங்க நாங்கள் அந்தக் கடைக்குப் போனபோது, அங்கே கூட்டம் அதிகமாக இருந்தது. கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள், விற்பனையாளரின் கவனத்தைப் பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.
தன் மனைவியுடன் வந்திருந்த ஒரு மனிதர் மட்டும் கடை ஊழியர்களை அதிகாரம் செய்து கொண்டு, தன்னை முதலில் கவனிக்க வேண்டும் என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு வழியாக, உடைகளை வாங்கிக் கொண்டு காருக்கு வந்தோம்.
காரில் வரும்போது என் கணவரிடம், "நாம இவ்வளவு பேர் பொறுமையாக் காத்துக்கிட்டிருந்தோம். ஒத்தர் மட்டும் அதிகாரம் பண்ணி, சண்டை போட்டுக்கிட்டிருந்தாரே! இப்படியா நடந்துப்பாங்க?" என்றேன்.
"அவன் அப்படித்தான் நடந்துப்பான்!" என்றார் என் கணவர்.
"அவரை உங்களுக்குத் தெரியுமா?"
"எனக்கு மட்டும் இல்ல, இந்த ஊர்ல பல பேருக்குத் தெரியும். ஊர் முழுக்கக் கடன் வாங்கிட்டு, இன்சால்வன்சி கொடுத்து எல்லாரையும் ஏமாத்தினவனாச்சே அவன்!"
"அப்படியா? இன்சால்வன்சி கொடுத்தவர்னா, எப்படி இந்த மாதிரி கடைக்கு வந்து, ஆயிரக்கணக்கா பணம் கொடுத்து, உடைகள் வாங்கிக்கிட்டுப் போறாரு?"
"அவன்தான் இன்சால்வன்ட். அவன் மனைவிகிட்ட நிறையப் பணம் இருக்கே!"
"அப்படின்னா, அந்தப் பணத்தை வச்சு அவர் தன்னோட கடன்களைத் தீர்த்திருக்கலாமே!"
"இவ்வளவு அப்பாவியாவா இருப்ப? திட்டம் போட்டுத்தான் பணம், சொத்து எல்லாம் மனைவி பேர்ல இருக்கற மாதிரி செஞ்சு, தன்கிட்ட பணமோ, சொத்தோ இல்லைன்னு சொல்லிக் கடன்காரன்களை ஏமாத்தி இன்சால்வன்ட் கொடுத்தான் அவன்!"
"அடப் பாவி! இப்படி எல்லாமா பண்ணுவாங்க! வாங்கின கடனைக் கொடுக்க முடியலையேங்கற அவமான உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாம, இப்படி நடமாடிக்கிட்டிருக்காரு. இதில, தன்னைத்தான் முதல்ல கவனிக்கணும்னு அதிகாரம் வேற!" என்றேன் நான், வெறுப்புடன்.
"இந்த கார்ல ஒரு பொம்மை கட்டி வச்சிருக்கு இல்ல? கார் ஓடறப்ப அது ஆடுதே, அதுக்கு உயிர் இருக்குன்னு அர்த்தமா என்ன? இவனை மாதிரி ஆட்கள் எல்லாம் உலகத்தில நடமாடறதும் அப்படித்தான்! ஒரு மனுஷனுக்கு மானம் போனப்புறம், அவன் வாழ்க்கையில என்ன மீதி இருக்கும்?" என்றார் என் கணவர்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை
குறள் 1020:
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
No comments:
Post a Comment