Wednesday, August 30, 2023

936. நோய் வருமோ?

இரவு பதினோரு மணிக்கு வாயிற்கதவு தட்டப்பட்டது. அப்போதுதான் வேலைகளை முடித்து விட்டுப் படுக்கைக்குச் சென்ற புவனா சோர்வுடன் நடந்து வந்து கதவைத் திறந்தாள். 

உள்ளே நுழைந்த ரகுராமனிடம் அவளை விடவும் அதிகச் சோர்வு தெரிந்தது.

"இன்னிக்கு எவ்வளவு விட்டீங்க?" என்றாள் புவனா.

"முதல்ல உள்ளே வர வழி விடு!" என்று அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான் ரகுராமன்.

"எட்டு மணிக்கு வந்து சாப்பிட்டுட்டு அப்புறம் உங்க சீட்டாட்டத்தைத் தொடர்ந்திருக்கலாம், இல்ல?"

ரகுராமன் பதில் பேசாமல் குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு நேரே படுக்கைக்குச் சென்றான்.

"சாப்பிடலையா?"

"பசிக்கல!"

"சீட்டாடற நேரம் முழுக்க வெத்தலையை மென்னுக்கிட்டே இருந்தா எப்படிப் பசிக்கும்?" என்றபடியே சமையலறைக்குச் சென்ற புவனா, "பாதி நாளைக்கு நீங்க சாப்பிடாததால அந்தச் சாப்பாட்டை மீதி வச்சு அடுத்த நாள் நான் சாப்பிட வேண்டி இருக்கு. உங்களுக்குச் சாப்பாடு எடுத்து வைக்காமலேயே இருக்கலாம். ஆனா அதுக்கு எனக்கு மனசு வரமாட்டேங்குதே!" என்று முணுமுணுத்தது ரகுராமனின் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை.

"அல்சர்!" என்ற டாக்டர், "ஏன் நேரத்துக்கு சாப்பிடறதில்லையா?" என்றார் ரகுராமனிடம்.

"சாப்பிடறேனே!" என்றான் ரகுராமன்.

"எங்கே? எப்பப் பார்த்தாலும் வெத்தலையை மென்னுட்டுப் பாதி நாளைக்கு சாப்பாடே வேண்டாம்னுடறாரு!" என்றாள் புவனா.

"சாப்பாட்டுக்கப்பறம் வெத்தலை போடலாம். வெத்தலையே சாப்பாடா இருக்க முடியாது. இனிமேலாவது ஜாக்கிரதையா இருங்க. அல்சர் முத்திப் போச்சுன்னா ஆபரேஷன் பண்ணி எடுக்க வேண்டி இருக்கும்!" என்று எச்சரித்தார் டாக்டர்.

"நான் பாத்துக்கறேன் டாக்டர்!" என்றாள் புவனா.

வீட்டுக்கு வந்ததும் "ஐ ஆம் சாரி! என்னால உனக்குக் கஷ்டம்!" என்றான் ரகுராமன்.

"என்னோட கஷ்டத்தை விடுங்க. அது எப்பவுமே இருக்கறதுதானே! நீங்களாவது சூதாடிக்கிட்டு சந்தோஷமா இருந்தீங்க. உங்களுக்கும் அல்சர் வந்திருக்கு. ஆனா அதை விடப் பெரிய .நோய் ரெண்டு பேருக்குமே வரப் போகுதுன்னு நினைக்கிறேன்!" என்றாள் புவனா.

"என்ன நோய் அது? அது ஏன் நமக்கு வரணும்?"

"பசி நோய்! அது யாருக்கு வேணும்னா வரலாமே! நீங்க வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுக்கறதில்ல. டாக்டருக்குப் பணம் கொடுக்கக் கூடப் பக்கத்து வீட்டில கடன் வாங்கிக்கிட்டுதான் வந்தேன். வீட்டுச் சாமானெல்லாம் கடையில கடனுக்குத்தான் வாங்கிக்கிட்டிருந்தேன். ரெண்டு மாசமா பணம் கொடுக்காததால கடைக்காரர் இனிமே கடனுக்குப் பொருட்கள் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. உங்களுக்காவது சீட்டாடற இடத்தில யாராவது வெத்தலை வாங்கிக் கொடுப்பாங்க. நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல!"

அதற்கு மேல் துக்கத்தை அடக்க முடியாமல் புவனா அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94
சூது

குறள் 936:
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.

பொருள்: 
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவார்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

935. வங்கிக் கடன்

"முன்னெல்லாம் ஸ்டாக் மார்க்கெட் வியாபாரம் ரொம்ப கஷ்டம். புரோக்கர்கிட்ட ஆர்டர் கொடுக்கணும். அவர் வாங்கினாரா, என்ன விலைக்கு வாங்கினார்னு அன்னிக்கு சாயந்திரம்தான் தெரியும். நாம வாங்கின பங்கோட சர்ட்டிஃபிகேட் நம்ம கைக்கு வர மூணு நாள் ஆகும். அப்புறம் அந்தப் பங்கோட விலை ஏறுதான்னு தினம் பேப்பரைப் பார்த்துக்கிட்டே இருக்கணும். விலை ஏறி இருக்குன்னு பார்த்துட்டு விக்கச் சொன்னா அன்னிக்கு விலை குறைஞ்சிருக்கும்! இது மாதிரி பல பிரச்னைகள் இருந்த அந்தக் காலத்திலேந்தே நான் ஸ்டாக் மார்க்கெட் வியாபாரத்தில ஈடுபட்டிருக்கேனாக்கும்!" என்றார் மகேசன் பெருமையுடன்.

"லாபம் சம்பாதிச்சிருக்கியா?" என்றார் அவர் நண்பம் உமாபதி.

"லாபமும் வரும், நஷ்டமும் வரும். கணக்குப் பாக்கல. கூட்டிக் கழிச்சுப் பர்த்தா நஷ்டம்தான் வந்திருக்கும்னு வச்சுக்கயேன்!"

"உனக்கு வேற தொழில் இருக்கு. அதில நல்ல வருமானம் வருது. சொத்து பத்தெல்லாம் இருக்கு. உனக்கு ஏம்ப்பா இந்த சூதாட்டம்?"

"அப்படி யோசிச்சு இதை விட்டுடலாம்னு நினைச்சப்பதான் ஆன்லைன் டிரேடிங் வந்தது. இருந்த இடத்திலேயே ஒரு கம்ப்யூட்டரையும், இன்டர்னெட் கனெக்‌ஷனையும் வச்சுக்கிட்டு அப்பப்ப மாறுகிற விலை நிலவரத்தை வச்சு எந்தப் பங்கையும் வாங்கலாம், விக்கலாம். இவ்வளவு வசதி இருக்கும்போது இதை விட மனசில்லை. இவ்வளவு வருஷ அனுபவத்தில நான் நிறையக் கத்துக்கிட்டிருக்கேனே! டெக்னிகல் அனாலிசிஸ் மாதிரி பல உத்திகளை வேற கத்துக்கிட்டிருக்கேன். முடிவெடுக்க உதவற சில சாஃப்ட்வேர் எல்லாம் வச்சிருக்கேன். அதனால லாபகரமா செயல்பட முடியுங்கற உறுதியான நம்பிக்கையில இப்ப ஆன்லைன் டிரேடிங் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"ஆன்லைன் டிரேடிங் வந்து பல வருஷமாச்சேப்பா! அதில லாபம் வருதா?" என்றார் உமாபதி.

"உமாபதி! நான் இன்னும் முயற்சி பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். ஒரு நாள் லாபம் வந்தா அடுத்த நாள் பெரிய நஷ்டம் வந்துடுது. அதைச் சரி செய்யறதுக்குள்ள பல நாள் ஆயிடுது. ஆனா நிச்சயம் பெரிய லாபம் சம்பாதிப்பேன்."

"அது சரி. இத்தனை நாளா இல்லாம வியாபாரத்துக்காக பாங்க்ல கடன் வாங்கி இருக்கியே, எதுக்கு?" என்றார் உமாபதி.

"அதுவா? வியாபாரத்திலே இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து ஸ்டாக் மார்க்கெட்ல போட்டேன். ரெண்டு மூணு வாரத்துக்குள்ள திரும்ப எடுத்துடலாம்னு பார்த்தேன். ஆனா நான் வாங்கின பங்குகளோட விலை குறைஞ்சுட்டதாலே அதையெல்லாம் விற்க முடியல. ஆனா வியாபாரம் நடக்கணுமே! அதுக்காகத்தான் பாங்க்ல கடன் வாங்கினேன். பங்குகள் விலை ஏறினதும் அதையெல்லாம் வித்துட்டு பாங்க் கடனை அடைச்சுடுவேன்!" என்றார் மகேசன்.

"மகேசா! நீ தப்புப் பண்ணிக்கிட்டிருக்கேன்னு நினைக்கிறேன். கடன் வாங்கக் கூடாதுன்னு இவ்வளவு வருஷம் உறுதியா இருந்த உன்னை, உன் ஸ்டாக்  ஸ்டாக் மார்க்கெட் ஈடுபாடு கடன் வாங்க வச்சுடுச்சு. இப்படியே போனா, கடன் அதிகமாகி நல்லா நடந்துக்கிட்டிருக்கிற உன் வியாபாரத்துக்கும் பாதிப்பு வரும். நீ உன் ஸ்டாக் மார்க்கெட் வியாபாரத்தை நிறுத்தறதுதான் நல்லதுன்னு எனக்குத் தோணுது!" என்றார் உமாபதி.

ஆனால் மகேசன் தன் அறிவுரையைக் கேட்பார் என்ற நம்பிக்கை உமாபதிக்கு இல்லை.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94
சூது

குறள் 935:
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

பொருள்: 
சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் பெருமையாகக் கருதிக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Monday, August 28, 2023

934. மூதாட்டியின் சோகம்

அந்த வீட்டுக்குள் நுழைந்த அபிராமி, "அம்மா" என்று அழைத்தாள்.

உள்ளிருந்து வெளியே வந்த மூதாட்டி, "யாரு?" என்றாள்.

"என்னைத் தெரியலியா அம்மா? நான்தான் அபிராமி. உங்க வீட்டில குடி இருந்தேனே!" என்றாள் அபிராமி.

"ஓ, அபிராமியா? வா, வா! எத்தனை வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து!" என்றுபடியே அபிராமியை அணைத்துக் கொள்ள முயன்றாள் மூதாட்டி.

அதற்குள் அபிராமி மூதாட்டியின் காலில் விழுந்து விட்டாள்.

"என்னம்மா இது? எதுக்கு என் கால்ல விழற?" என்றாள் மூதட்டி பதறியபடி.

"உங்க வீட்டில வாடகைக்குக் குடியிருந்த எங்க மேல எவ்வளவு அன்பு காட்டினீங்க! என் புருஷனுக்குச் சரியான வேலை இல்லாம கஷ்டப்பட்ட அந்தக் காலத்தில எத்தனையோ தடவை எங்களால நேரத்தில வாடகை கொடுக்க முடியாதபோது, 'பவாயில்ல, பணம் வந்தப்புறம் கொடுங்க'ன்னு எவ்வளவு பெருந்தன்மையா நடந்துக்கிட்டீங்க! அதோட எங்களுக்குச் சரியான சாப்பாடு இல்லேன்னு புரிஞ்சுக்கிட்டு எத்தனையோ தடவை எங்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுத்து உதவி இருக்கீங்க. நீங்க தெய்வம் மாதிரிம்மா!" என்றாள் அபிராமி உணர்ச்சிப் பெருக்குடன்.

"அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல உக்காரு. இப்ப எப்படி இருக்கீங்க எல்லாரும்?" என்றாள் மூதாட்டி பரிவுடன்.

"உங்க புண்ணியத்தில இப்ப நல்லா இருக்கோம்மா. அவரு ஒரு நல்ல வேலையில இருக்காரு. எங்க பையனை நல்ல ஸ்கூல்ல சேர்த்திருக்கோம்."

"ரொம்ப சந்தோஷமா இருக்கு அபிராமி!"

"அது சரி. உங்க பையன் எப்படி இருக்காரு? அவருக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? நாங்க குடியிருந்த போர்ஷன் வேற மாதிரி இருக்கே! இடிச்சுக் கட்டி இருக்கீங்களா?" என்றாள் அபிராமி.

"நீங்க வறுமையில இருந்த காலத்தைப் பத்தி சொன்னே. அதை விட மோசமான ஒரு நிலையில நாங்க இருக்கோம்மா!" என்றாள் மூதாட்டி பெருமூச்சுடன்.

"என்னம்மா சொல்றீங்க?" என்றாள் அபிராமி அதிர்ச்சியுடன்.

"என் பையனைப் பத்திக் கேட்டியே! அவன் படிச்சு முடிச்சுட்டு ஒரு நல்ல வேலைக்குப் போனான். கல்யாணமும் ஆச்சு. ஆனா அவனுக்குப் பாழாப்போன சூதாட்டப் பழக்கம் வந்ததால நிறையப் பணம் போனதோட அவன் வேலையும் போச்சு. அவன் மனைவியும் அவனை விட்டுட்டுப் போயிட்டா. இப்ப அவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கா. சூதாட்டத்தில அவனுக்கு ஏற்பட்ட கடனைத் தீர்க்க நீங்க குடியிருந்த போர்ஷனை வித்துட்டோம். அதில வந்த பணத்தில கடனைத் தீர்த்தப்புறம் மீதி இருந்த பணத்தை பாங்க்ல போட்டு அதில வர வட்டியை வச்சு குடும்பத்தை நடத்திக்கிட்டிருக்கேன். இப்ப சூதாடப் பணம் இல்லை, கடனும் வாங்க முடியலைங்கறதால என் பையன் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கான். நான் செத்துப் போனப்புறம் இந்த வீட்டை வித்தோ, அடமானம் வச்சோ சூதாடி மீதி இருக்கிற வாழ்க்கைய அழிச்சுக்கப் போறான்!"

குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள் மூதாட்டி.

"அழாதீங்கம்மா! உங்களுக்கு இருக்கற நல்ல மனசுக்கு அப்படி எதுவும் ஆகாது!" என்று கூறி மூதாட்டியின் கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினாள் அபிராமி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94
சூது

குறள் 934:
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.

பொருள்: 
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப் போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Saturday, August 26, 2023

933. மூணு சீட்டு மகேஷ்

"மூணு சீட்டில மகேஷை அடிச்சுக்கறதுக்கு ஆளே கிடையாது என் நண்பர்கள் சொல்லுவாங்க!" என்றான் மகேஷ் பெருமையுடன்.

"விளையாடறது சீட்டாட்டம். இதில பெருமை வேறயா?" என்றாள் அவன் மனைவி மங்கை.

இருவருக்கும் சமீபத்தில்தான் திருமணமாகி இருந்தது.

"பெருமை இல்லாம? சீட்டாட்டத்தில இதுவரைக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சிருக்கேன்!" என்றான் மகேஷ்.

"அடேயப்பா! அவ்வளவா? சரி. இது மட்டும் எப்படியோ! இனிமே நீங்க சீட்டாடக் கூடாது" என்றாள் மங்கை.

மகேஷுக்கு இது பிடிக்கவில்லை. ஆயினும் மனைவியின் மனம் நோகக் கூடாது என்பதால் பேசாமல் இருந்தான்.

லுவலகத்தில் சில நண்பர்கள் அவர்களுக்குத் தெரிந்த ஒரு இடத்தில் சீட்டாட்டம் நடப்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அன்று மாலை அலுவலகம் முடிந்ததும் சிலர் அந்த இடத்துக்குக் கிளம்பினர். ஒரு நண்பன் மகேஷையும் அழைத்தான். மகேஷ் தயக்கத்துடன் அவர்களுடன் சென்றான்.

சில நண்பர்கள் சீட்டாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் மகேஷ் ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தான்.

"என்ன மகேஷ்! உனக்கு சீட்டாடத் தெரியாதா?" என்றான் ஒரு நண்பன்.

"தெரியாதா? நான் ஆடினேன்னா, உங்க எல்லாருக்கும் நஷ்டம்தான் வரும்!" என்றான் மகேஷ்.

"அப்படிப்பட்ட கில்லாடி ஆட்டக்காரனா இருந்தா ஆட வேண்டியதுதானே?" என்றான் இன்னொரு நண்பன்.

"வேண்டாம். என் மனைவிக்குப் பிடிக்காது."

"எங்க வீட்டில எல்லாம் என்ன எங்களுக்கு ஆரத்தி எடுத்தா சீட்டாட அனுப்பறாங்க? எந்த ஒரு ஆணும் சில காரியங்களை மனைவிக்குத் தெரியாமதான் செய்யணும். அதில சீட்டாடறதும் ஒண்ணு. நீதான் பிரமாதமா ஆடுவேங்கற. நிறைய சம்பாதிச்சு உன் மனைவி கையில கொடுத்தா கோவிச்சுக்கவா போறாங்க?" என்றான் ஒரு நண்பன்.

மகேஷ் தயக்கத்துடன் ஆட்டத்தில் இறங்கினான். அன்று அவனுக்கு முன்னூறு ரூபாய் லாபம் கிடைத்தது.

"சும்மா ஜம்பம் அடிச்சுக்கறேன்னு நினைச்சோம். உண்மையாகவே நீ நல்லாத்தான் ஆடற!" என்றனர் அவன் நண்பர்கள்.

அதற்குப் பிறகு வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது சீட்டாடி விட்டு வீட்டுக்கு தாமதமாகச் செல்ல ஆரம்பித்தான் மகேஷ். ஆஃபீசில் வேலை அதிகம் என்று மங்கையிடம் கூறினான்.

"ஏன் இந்த மாசம் இவ்வளவு குறைச்சலாப் பணம் கொடுக்கறீங்க?" என்றாள் மங்கை.

"கொஞ்சம் கடன் வாங்கி இருக்கேன். அதை அடைக்கிற வரை இவ்வளவுதான் கொடுக்க முடியும்" என்றான் மகேஷ்.

"கடனா? எதுக்கு?" என்றாள் மங்கை அதிர்ச்சியுடன்.

மகேஷ் பதில் பேசாமல் இருந்தான்.

"சொல்லுங்க!" என்றாள் மங்கை.

"மங்கை! சாயந்தர நேரங்கள்ள உனக்குத் தெரியாம சீட்டாடிட்டு வரேன்."

"ஆஃபீஸ்ல வேலைன்னு நீங்க சொன்னபோது எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. ஏதோ தில்லுமுல்லு பண்றீங்கன்னு நினைச்சேன். சரி. நீங்கதான் சீட்டாட்டத்தில புலியாச்சே! சீட்டாட்டத்தில நீங்க நிறைய சம்பாதிச்சிருக்கணுமே!"

"கடந்த காலத்தில சீட்டாட்டத்தில நான் சம்பாதிச்சிருக்கேங்கறதால எனக்குத் திறமை இருக்குங்கற நம்பிக்கையிலதான் விளையாட ஆரம்பிச்சேன்.  ஆரம்பத்தில லாபம் வந்தது. அப்புறம் நஷ்டம் வர ஆரம்பிச்சுது. மறுபடி லாபம் வரும்னு நினைச்சுக் கடன் வாங்கி ஆடினேன். ஆனா நஷ்டம் அதிகமாகிக்கிட்டேதான் இருந்தது. ஒரு கட்டத்தில போதும்னு நிறுத்திட்டேன். ஆனா வாங்கின கடனை அடைக்கணும்."

"அந்த மட்டும் நிறுத்தினீங்களே! அதுவே பெரிய விஷயம்தான். ஆமாம் எவ்வளவு கடன் வாங்கி இருக்கீங்க?"

மகேஷ் தயங்கியபடியே, "ஒரு லட்சத்துக்கு மேல போயிடுச்சு. வட்டி வேற கட்டணும். ஐ ஆம் சாரி" என்றான்.

"சீட்டாட்டத்தில ஐம்பதயிரம் ரூபாய் சம்பாதிச்சதாப் பெருமையா சொல்லிக்கிட்டிருந்தீங்க. இப்ப அந்த ஐம்பதாயிரம் ரூபாய் போனதோட இல்லாம, அதுக்கும் மேல ஒரு லட்ச ரூபாய் நஷ்டம் ஆகி இருக்கு. இனிமேலாவது 'என்னை எல்லாரும் மூணு சீட்டு மகேஷ்னு சொல்லுவாங்க, நான் சீட்டாடியே ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சிருக்க்கேன்' அப்படின்னெல்லாம் பெருமை பேசாம இருங்க!" என்றாள் மங்கை கடுமையான குரலில்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94
சூது

குறள் 933:
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

பொருள்: 
சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் போய் விடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

932. இனிமேல் லாபம்தான்!

'சட்டபூர்வமான வழியில் ஆன்லைனில் தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதியுங்கள்!'

இந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு அதில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணுக்கு ஃபோன் செய்தான் மகேந்திரன்.

தொலைபேசியில் பேசியவர் அவன் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு, "வர சனிக்கிழமை சாயந்திரம் 6 மணிக்கு இலவச அறிமுகக் கூட்டம் நடத்தறோம். அங்கே விவரங்கள் சொல்றோம்" என்றார்.

லவச அறிமுகக் கூட்டத்துக்கு அவன் சென்றபோது கூட்டம் நடந்த ஹால் நிரம்பி வழிந்தது.

கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் திட்டம் பற்றி விளக்கினார்.

"உங்கள்ள சில பேர் ஸ்டாக் மார்க்கெட் டிரேடிங் பண்ணி இருப்பீங்க. ஸ்டாக் மார்க்கெட்ல பெரும்பாலும் லாபம் கிடைக்காது. ஒரு பங்கை வாங்கிட்டு அது விலை குறைஞ்சுட்டா மறுபடி பழைய விலை வரதுக்குப் பல மாசங்கள், பல வருஷங்கள் கூடக் காத்துக்கிட்டிருப்பாங்க. 

"சில சமயம் பழைய விலை வரவே வராது. வாங்கின பங்கை விக்க முடியாம பணம் முடங்கிப் போய், வேற பங்கை வாங்கவும் பணம் இல்லாம நொந்து போய் இருப்பதுதான் பல பேரொட கதை. 

"ஆனா கமாடிடிஸ் மார்க்கெட் அப்படி இல்லை. ஒரு டிரேடிலயே ஆயிரம் ரெண்டாயிரம்னு லாபம் பார்க்கலாம். சில சமயம் நஷ்டம் வரும். ஆனா ஒட்டுமொத்தமா நிறைய லாபம் வர வாய்ப்பு இருக்கு. 

"அதோட கமாடிடி மார்க்கெட் ராத்திரி பதினொன்றரை வரைக்கும் உண்டு. சாயந்திரம் ஆறு மணிக்கு மேலதான் மார்க்கெட் சூடு பிடிக்கும். அதனால வேலைக்குப் போறவங்க கூட டிரேட் பண்ணலாம். 

"எங்க ஆஃபீஸ்ல நிறைய டர்மினல்ஸ் வச்சிருக்கோம். எங்க ஆபரேட்டர் மூலமா ஒவ்வொரு டர்மினலிலேயும் ஏழெட்டு பேரு ஒரே நேரத்தில டிரேட் பண்ணலாம். நாங்க சில ரெகமெண்டேஷன்கள் கொடுப்போம். உங்க விருப்பபடியும் நீங்க டோரேட் பண்ணலாம். 

"ஆரம்பத்தில பத்தாயிரம் ரூபா முதலீடு இருந்தா போதும். நீங்க சம்பாதிக்கிற லாபத்தை வாராவாரம் சனிக்கிழமை உங்க பாங்க் அக்கவுன்ட்டுக்கு அனுப்பிடுவோம். 

"அக்கவுன்ட் ஓபன் பண்றவங்க இங்கேயே ஃபார்ம் ஃபில் அப் பண்ணிக் கொடுத்துட்டு ஐடி புரூஃப் மத்த விவரங்களையெல்லாம் திங்கட்கிழமை அன்னிக்கு எங்க ஆஃபீஸ்ல கொண்டு கொடுத்தா உங்க அக்கவுன்ட் ஓபன் ஆயிடும். அடுத்த நாளிலேந்தே நீங்க டிரேட் பண்ணலாம்."

அவர் கூறியவற்றால் ஈர்க்கப்பட்டு மகேந்திரன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கொடுத்தான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் அலுவலகத்துக்குச் சென்று டிரேடிங்கைத் தவக்கினான். முதல்நாளே அவனுக்கு இரண்டாயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது.

"ஏங்க, ஏற்கெனவே ரெண்டு லட்சம் ரூபாய்க்கு மேல நஷ்டமாயிடுச்சு. இதோட விட்டுடுங்க. வேலைக்குப் போய் சம்பாதிக்கிறீங்க. இந்த கமாடிடி டிரேடிங் எல்லாம் எதுக்கு?" என்றாள் மகேந்திரனின் மனைவி வனிதா.  

"முதல் நாளே ரெண்டாயிரம் ரூபாய் சம்பாதிச்சேன். அது மாதிரி ஒவ்வொரு நாளும் சம்பாதிக்க முடியுமே! நடுவில சில டிரேட்ஸ் எல்லாம் நஷ்டமாயிடுச்சு. குறைஞ்ச நஷ்டத்திலேயே வெளியே வந்திருக்கணும். நஷ்டம் மாறி லாபம் வரும்னு காத்திருந்தது தப்பாப் போச்சு. இப்பதான் சில உத்திகளை எல்லாம் புரிஞ்சுக்கிட்டிருக்கேன். இனிமே நஷ்டத்தைக் குறைச்சு லாபம் வர மாதிரி செயல்படுவேன்!" என்றான் மகேந்திரன்.

'இவருக்கு எப்படிப் புரிய வைப்பது!' என்ற கவலையுடன் தன் கணவனைப் பார்த்தாள் வனிதா.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94
சூது

குறள் 932:
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

பொருள்: 
ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

931. ஆடத் தெரிந்தவர் யாரோ!

"நீ இவ்வளவு அருமையா சீட்டாடற. காசு வச்சு ஆடினா நிறைய சம்பாதிக்கலாண்டா!" என்றான் ராகவ்.

"அதெல்லாம் எனக்கு வேண்டாம். ஒரு விளையாட்டா ஆடறேன், அவ்வளவுதான். பணம் வச்சு ஆடறது சூதாட்டம் இல்லையா?" என்றான் வினோத்.

"என்னை மாதிரி ஆளுங்கள்ளாம் கிளப்புக்குப் போய் ஆடத் தெரியாம ஆடிப் பணத்தை விட்டுட்டு வரோம். ஆனா நல்லா ஆடத் தெரிஞ்ச நீ பணம் சம்பாதிக்கற வாய்ப்பை நழுவ விட்டுக்கிட்டிருக்க."

வினோத் பதில் சொல்லவில்லை.

"நான் ஒண்ணு சொல்றேன். ஒரு நாளைக்கு என்னோட கிளப்புக்கு வா. ஒரு ஆட்டம் ஆடிப் பாரு. பத்து ரூபா வச்சுக் கூட ஆடலாம். ஜெயிக்கறியான்னு பாரு. ஜெயிக்கலேன்னா அதோட விட்டுடு. ஆனா நீ கண்டிப்பா ஜெயிப்பே. ஜெயிச்சதுக்கு அப்புறம் தொடர்ந்து விளையாடறதும், விளையாடாம இருக்கறதும் உன் இஷ்டம்!"

வினோத் சற்றுத் தயங்கி விட்டு, "சரி" என்றான்.

பத்து ரூபாய் வைத்து ஆடி வினோத் ஜெயித்து விட்டான்  பிறகு நூறு ரூபாய் வைத்து ஆடி அதிலும் ஜெயித்து விட்டான்.

"எங்கே வினோத். இன்னுமா ஆஃபீஸ்லேந்து வரலே?" என்றார் ஊரிலிருந்து வந்திருந்த வினோதின் தந்தை அருணாசலம். 

அவர் இப்படிக் கேட்டதும், வினோதின் மனைவி சியாமளாவுக்கு அழுகை வெடித்து வந்தது.

"என்னத்தைச் சொல்றது? நல்லா இருந்த மனுஷன் திடீர்னு தினம் கிளப்புக்குப் போய் சீட்டாட ஆரம்பிச்சுட்டாரு. நான் வேண்டாம்னு சொன்னேன். கவலைப்படாதே, நிறையப் பணம் வரும்னு சொன்னாரு. ஆனா பணம் போய்க்கிட்டுத்தான் இருக்கு. ஒவ்வொரு மாசமும் சம்பளத்தில பாதிக்கு மேல சீட்டாட்டத்திலேயே போயிடுது. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல!" என்றாள் சியாமளா அழுகையினூடே.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94
சூது

குறள் 931:
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

பொருள்: 
வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது, பெற்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Friday, August 25, 2023

930. உணவகத்தில் ஒரு சம்பவம்.

செல்வம் தன் பெற்றோருடன் அந்த உணவகத்தில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, அவர்கள் பக்கத்து அறையிலிருந்து உரத்த குரல்கள் கேட்டன.

அந்த உணவகம் நான்கைந்து அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததால் என்ன நிகழ்ந்தது என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. ஆனால் இரண்டு மூன்று பேர் இரைந்து பேசிக் கொள்ளும் சத்தம் மட்டுமேகேட்டது.

"அடுத்த ரூம்ல ஏதோ தகறாரு போல இருக்கு"  என்றார் செல்வத்தின் தந்தை சம்பந்தம்.

"அதைப் பத்தி நமக்கு என்ன? நாம வந்தமா, சாப்பிட்டமா, போகணுமான்னு இருக்கணும்" என்றாள் செல்வத்தின் தாய் சுந்தரி.

அப்போது அங்கே வந்த அந்த உணவக ஊழியர் ஒருவர் செல்வத்திடம் வந்து, "சார் நீங்க பக்கத்துத் தெருவில இருக்கற பாங்க்லதானே வேலை செய்யறீங்க?" என்றார் தயக்கத்துடன்.

"ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றான் செல்வம்.

"எனக்கு அங்கேதான் அக்கவுன்ட் இருக்கு. பாங்க்குக்கு வரப்ப உங்களைப் பாத்திருக்கேன்" என்ற அந்த ஊழியர் மீண்டும் சற்றுத் தயங்கி விட்டு, "சார்! உங்க பாங்க்ல வேலை செய்யற ஒத்தரு பக்கத்து ரூம்ல குடிச்சுட்டு கலாட்டா பண்ணிக்கிட்டிருக்காரு. முதலாளி போலீசைக் கூப்பிடப் போறேன்னு சொல்றாரு. நீங்க அவரை சமாதானப்படுத்தி வெளியே அழைச்சுக்கிட்ப் போயிட்டீங்கன்னா, பிரச்னை இல்லாம இருக்கும்.. உங்களை மாதிரி அவரையும் நான் பாங்க்ல பார்த்திருக்கேன். எனக்கு அவரைப் பழக்கம் இல்லாட்டாலும், தெரிஞ்சவர்ங்கறதால உதவி செய்யலாம்னுட்டுதான் உங்ககிட்ட கேக்கறேன்" என்றார்.

"அப்படியா?" என்ற செல்வம் பக்கத்து அறைக்குச் சென்று பார்த்து விட்டுத் திரும்பி வந்தவன் "அப்பா! அவன் என்னோட வேலை செய்யற ராஜவேலுதான். நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு ஆட்டோவில வீட்டுக்குப் போயிடுங்க. நான் அவனை வீட்டில கொண்டு விட்டுட்டு வரேன்" என்று தன் பெற்றோர்களிடம் சொல்லி விட்டு அடுத்த அறைக்குச் சென்றான்.

ரவு செல்வம் வீட்டுக்கு வந்ததும், "என்ன செல்வம், என்ன ஆச்சு?" என்றார் சம்பந்தம்.

"என்னோட வேலை செய்யற ராஜவேலு அதிகமாக் குடிச்சுட்டு ஹோட்டல் ஊழியரோட தகராறு பண்ணி இருக்கான். சமாதானப்படுத்த வந்த ஒத்தரை அடிக்கப் போயிருக்கான். ஹோட்டல் முதலாளி போலீசுக்கு ஃபோன் செய்யறதா இருந்தாரு. நான் அவரை சமாதானப்படுத்திட்டு, நான் அவனை அவன் வீட்டில கொண்டு விட்டுட்டு வந்துட்டேன்" என்றான் செல்வம்.

"நல்ல காரியம் செஞ்சே!" என்றபடி மகனை உற்றுப் பார்த்தார் சம்பந்தம்.

"என்னப்பா பாக்கறீங்க?

"நல்லவேளை உன் நண்பன் ராஜவேலு இடத்தில நீ இல்லாமல் போனியேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன்!"

தனக்கும் குடிப்பழக்கம் இருப்பதால் ராஜவேலுவுக்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்படலாம் என்பதைத் தந்தை சுட்டிக் காட்டுவதை உணர்ந்த செல்வம் தலைகுனிந்து கொண்டான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 930:
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

பொருள்: 
ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Wednesday, August 23, 2023

929. யார் அறிவுரை சொல்வது?

"சேகருக்கு குடிப்பழக்கம் ரொம்ப முத்திப் போச்சு. நீங்களோ, நானோ சொன்னா அவன் கேக்க மாட்டான். வேற யாரையாவது விட்டுத்தான் சொல்லச் சொல்லணும்" என்றாள் அன்னம்.

"நானும் அப்படித்தான் நினைக்கிறேன். யாரை விட்டு சொல்லச் சொன்னா சரியா இருக்கும்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்" என்றார் அவள் கணவர் பரமசிவம்.

சற்று நேரம் கழித்து, "அவன் பள்ளிக்கூட வாத்தியார் சுந்தரமூர்த்தி இப்ப இந்த ஊருக்கு வந்துட்டாராம். நானே அவரைப் போய்ப் பார்த்துட்டு வரணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். அவர் சொன்னா சேகர் கண்டிப்பாக் கேப்பான். நான் போய் அவரைப் பார்த்துட்டு அவர்கிட்ட சேகரைப் பத்தி சொல்லிட்டு அப்புறம் சேகரையும் அழைச்சுக்கிட்டுப் போறேன்" என்றார் பரமசிவம் தன் மனைவியிடம்.

"அவரை நம்ம வீட்டுக்கு சாப்பிட வரச் சொல்லுங்களேன். அப்ப அவரு சேகர்கிட்ட பேசலாம் இல்ல?"

"இல்லை. அவரை இதுக்காகத்தான் நாம சாப்பிடக் கூப்பிட்ட மாதிரி இருக்கும். சாப்பிடறதுக்கு அப்புறமாக் கூப்பிடலாம்" என்றார் பரமசிவம்.

"சேகர் எப்படி இருக்கான்?" என்றார் சுந்தரமூர்த்தி.

"அவனைப் பத்தித்தான் உங்க்கிட்ட பேசணும்னு நினைச்சேன். இப்ப அவனுக்குக் குடிப்பழக்கம் வந்திருக்கு. நானும், அவன் அம்மாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம். அவன் கேக்கல. உங்ககிட்ட ஒருநாள் அழைச்சுக்கிட்டு வரேன். நீங்கதான் அவனுக்கு புத்தி சொல்லணும்" என்றார் பரமசிவம்.

"சேகர் ரொம்ப நல்ல பையன். அவனுக்கு இந்தப் பழக்கம் வந்திருக்குன்னு கேடக ரொம்ப வருத்தமா இருக்கு. ஆனா நான் சொல்லி அவன் திருந்துவான்னு எனக்குத் தோணல."

"என்னங்க இப்படி சொல்றீங்க? சேகர் உங்க மேல நிறைய மதிப்பு வச்சிருக்கான். நீங்க சொன்னா கண்டிப்பா கேப்பான்."

"உங்க மேலேயும், உங்க மனைவி மேலேயும் அவனுக்கு மதிப்பு இல்லையா என்ன? நீங்க சொல்லி ஏன் கேக்கல? கேக்கணும்னுதான் நினைப்பான். ஆனா அவனால இந்தப் பழக்கத்தை விட முடியாது. இந்தப் பழக்கத்தோட வலிமை அப்படி. நான் சொன்னாலும் அதுதான் நடக்கும். நீங்க அவனை அழைச்சுக்கிட்டு வாங்க. நான் சொல்றேன். ஆனா அதனால பலன் கிடைக்கும்னு எதிர்பாக்காதீங்க!" என்றார் சுந்தரமூர்த்தி. 

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 929:
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

பொருள்: 
குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவது, தண்ணீருக்குள் மூழ்கி விட்டவனைத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு போய்த் தேடுவது போன்றது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

928. நண்பனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு.

"இந்த பார்ட்டியில மது இருக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேனே!" என்றான் சத்யா.

"ஏண்டா, பார்ட்டின்னா டிரிங்க்ஸ் இல்லாமயா? ஏன், நீ குடிக்க மாட்டியா என்ன?" என்றான் சந்திரன்.

"உனக்குத் தெரியாதா? நம்ம சத்யா மகாத்மா காந்தியோட 'சத்திய சோதனை'யை முப்பது தடவைக்கு மேல படிச்சிருக்கான். தண்ணியைத் தவிர அவன் வேற எதையும் குடிக்க மாட்டான். நான் தண்ணின்னு சொல்றது கிணத்தில இருக்குமே அந்தத் தண்ணியை!" என்றான் மனோகர்.

"கிண்டல் எல்லாம் வேண்டாண்டா. நான் குடிக்கறதில்ல. அவ்வளவுதான்!" என்றான் சத்யா.

னோகர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவனுடைய கைபேசி ஒலித்தது. வண்டி ஓட்டிக் கொண்டிருந்ததால் அவன் அப்போது ஃபோனை எடுக்கவில்லை.

வீட்டுக்குச் சென்றதும் ஃபோனை எடுத்துப் பார்த்தபோது சத்யாவிடமிருந்து ஃபோன் வந்திருந்தது தெரிந்தது.

உடனே சத்யாவுக்கு ஃபோன் செய்தான்.

மறுமுனையில் ஃபோன் எடுக்கப்பட்டதும், "என்னடா? ஃபோன் பண்ணி இருந்தியே!" என்றான்.

"ஏன் மிஸ்டர், ஃபோன்ல யார் பேசறாங்கன்னு தெரியாம எடுத்தவுடனேயே வாடா போடான்னா பேசுவீங்க?" என்றார் மறுமுனையில் பேசியவர்.

"சாரி சார். என் நண்பன் சத்யாகிட்டேந்து ஃபோன் வந்திருந்தது. அவன் நம்பருக்குத்தான் ஃபோன் பண்ணினேன். அவன்தான் பேசறான்னு நினைச்சுப் பேசிட்டேன். நீங்க யார்னு தெரிஞ்சுக்கலாமா?" என்றான் மனோகர் பதட்டத்துடன்.

"நான் டிராஃபிக் போலீஸ். உங்க நண்பர் சத்யா பைக் ஓட்டிக்கிட்டிருந்தப்ப அவரை சோதிச்சதில அவரு குடிச்சிருக்கார்னு தெரிஞ்சது. ஃபைன் கட்ட அவர்கிட்ட பணம் இல்ல. கையில ஏ டி எம் கார்டும் இல்லையாம். அதான் உங்களுக்கு ஃபோன் பண்ணினாரு. நீங்க எடுக்கல. அவரோட ஃபோனை நான் வாங்கி வச்சுக்கிட்டேன். அதனாலதான் ஃபோன் வந்ததும் நான் எடுத்துப் பேசினேன். அவர் ஆயிரம் ரூபா அபராதம் கட்டணும். பணத்தை எடுத்துக்கிட்டு ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு வரீங்களா?"

"இருக்காதே! சத்யா குடிக்க மாட்டானே!" என்று சொல்ல வாயெடுத்த மனோகர், உண்மையை உணர்ந்தவனாக, "சரி சார். வரேன்" என்றான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 928:
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

பொருள்: 
கள்ளுண்பவன் தான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றம் கள்ளுண்டபோதே வெளிப்படும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Tuesday, August 22, 2023

927. குணசீலனின் 'சமூக சேவை!'

"தினம் சாயந்திரம் ஆஃபீஸ்லேந்து வீட்டுக்கு வந்ததும் சமூக சேவைன்னு போயிடறான். ராத்திரி வரச்சே சோர்வோட வரான். சாப்பிட்டுட்டுப் படுத்துடறான்" என்று தன் மகன் குணசீலனைப் பற்றித் தன் கணவர் தண்டபாணியிடம் அலுத்துக் கொண்டாள் ருக்மணி.

"நாலைஞ்சு நண்பர்கள் சேர்ந்து ஏதோ நல்ல காரியம் செய்யறாங்க. அதை நாம ஏன் குறை சொல்லணும்?" என்றார் தண்டபாணி.

"அதுக்குக் காசு வேற செலவழிக்கிறானே! நிறைய சம்பாதிச்சாலும் பரவாயில்ல. இவனுக்கு வர சுமாரான சம்பளத்தில இதெல்லாம் எதுக்கு?" என்றாள் ருக்மிணி பெருமூச்சுடன்.

"என்ன குணசீலா, நாளைக்கு மீட்டிங் யார் வீட்டில? மூர்த்தி வீட்டிலேயா?" என்றார் செல்வராஜ். அவர் தண்டபாணியின் நண்பர்.

"என்ன மீட்டிங்?" என்றான் குணசீலன்.

"அதுதான் சமூக சேவை செய்யறதுக்காக தினம் ஒத்தர் வீட்டில சந்திச்சுப் பேசறீங்களே, அதைக் கேட்டேன்!"

"அதுவா?...ஆமாம்." என்றான் குணசீலன் சற்றே தடுமாற்றத்துடன்.

"கூடிப் பேசறதால என்ன சமூக சேவை செய்ய முடியும்?"

"இல்லை. யார் யாருக்கு என்னென்ன உதவி தேவைப்படுதுன்னு பேசி, அதை யார் செய்யணும், எப்படிச் செய்யணும்னு முடிவெடுப்போம்."

"அது சரி. ஏன் உன்னோட வீட்டில மீட்டிங் போடறதில்ல?"

"அப்பா அம்மாவுக்குத் தொந்தரவா இருக்குமேன்னுட்டுதான்!"

"அதுதான் காரணமா, இல்லை அப்பா அம்மா முன்னால தண்ணி போடறது கஷ்டமா இருக்கும்னா?" 

"என்ன அங்க்கிள் சொல்றீங்க?" என்றான் குணசீலன் பதட்டத்துடன்.

"நீங்க நாலைஞ்சு பேர் தினம் ஒண்ணா சேர்ந்து தண்ணி அடிக்கிறது யாருக்கும் தெரியாதுன்னு நினைக்கிறியா? அது இந்த ஊருக்கே தெரியும். மூர்த்தியும், குருவும் தனியா இருக்கறதால அவங்க ரெண்டு பேர் வீட்டிலேயும் மாத்தி மாத்தி உங்க 'சமூக சேவை' மீட்டிங்கை வச்சுக்கறதைப் பத்தி எல்லாரும் பேசிச் சிரிக்கிறாங்க. சும்மா அரட்டை அடிக்கறதா சொல்லி இருந்தா கூட எல்லாரும் நம்பி இருப்பாங்க. சமூக சேவை செய்யறதா சொன்னா, நீங்க என்ன சமூக சேவை செய்யறீங்கன்னு எல்லாருக்கும் கேள்வி வராதா? உன் அப்பா அம்மா பாவம் நீ ஏதோ ஊருக்கு உதவறதா நினைச்சுக்கிட்டிருக்காங்க. இந்தப் பழக்கத்தை விடு. வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்குப் போறதுன்னு பழக்கப்படுத்திக்க. உன்னால இந்தப் பழக்கத்தை விட்டுட முடியும்" என்று கூறி குணசீலனின் தோளில் ஆதரவாகத் தட்டினர் செல்வராஜ். 

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 927:
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

பொருள்: 
கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Monday, August 21, 2023

926. விஷம் குடித்தவள்

"அம்மாவுக்கு வயசாயிட்டதால எப்ப இறந்துடுவாங்களோன்னு பயமாவே இருக்கு. காலையில நான் எழுந்திருச்சதும் அவங்க தூங்கிக்கிட்டிருந்தா அவங்க முகத்தைப் பார்ப்பேன். தூங்கறாங்களா, இல்லை தூக்கத்திலேயே இறந்து போயிருப்பாங்களான்னு சந்தேகமாகவே இருக்கும்" என்றான் ஆனந்த்.

"வயசானவங்க சில நாள் அதிக நேரம் தூங்கத்தான் செய்வாங்க. அதுக்காக இப்படியா நினைப்பீங்க? அவங்க காதில விழுந்தா வருத்தப்படப் போறாங்க!" என்ற அவன் மனைவி சுகந்தி, "ஏற்கெனவே அவங்களுக்கு இருக்கற வருத்தம் போதாதா?" என்றாள் சற்றுத் தணிந்த குரலில்.

மனைவி எதைக் குறிப்பிடுகிறாள் என்பதை உணர்ந்த ஆனந்த் பதில் பேசாமல் நகர்ந்தான்.

ன்று மாலை ஆனந்த் வீடு திரும்பியபோது, சுகந்தி வீட்டில் இல்லை.

"சுகந்தி எங்கே போயிருக்கா?" என்றான் ஆனந்த் தன் அம்மா சரசுவிடம்.

"இன்னிக்கும் குடிச்சுட்டுத்தானே வந்திருக்கே? நீ வீட்டுக்குள்ளே நுழையறதுக்கு முன்னாலேயே சாராய வாடை உள்ளே வந்துடுதே, யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னேங்கற மாதிரி!" என்றாள் சரசு கோபத்துடன்.

"அது சாராயம் இல்லேம்மா, விஸ்கி!" என்ற ஆனந்த், "அது இருக்கட்டும். சுகந்தி எங்கே?" என்றான்.

"பக்கத்து வீட்டு நீலா விஷத்தைக் குடிச்சுட்டளாம். அவளை ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்க. சுகந்தி கூடப் போயிருக்கா. இப்ப வந்துடுவா!"

"விஷத்தைக் குடிச்சுட்டாங்களா? அவங்களுக்கு புத்தி கெட்டுப் போச்சா என்ன?" என்றான் ஆனந்த்.

அப்போதுதான் ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பிய சுகந்தி, "நீங்க சொல்றது சரிதான். நீலா புத்தி கெட்டுப்போய்தான் விஷத்தைக் குடிச்சிருக்கா. நல்லவேளை பிழைச்சுட்டா! ஆனா நீலாவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும்போது விஷம் குடிச்சிருந்த அவளோட முகத்தில இருந்த களையைப் பார்த்தப்ப, நீங்க தினமும் சாயந்திரம் குடிச்சுட்டு வீட்டுக்கு வரச்சே உங்க முகத்தில நான் பார்க்கிற களை மாதிரியேதான் இருந்தது!" என்றாள் ஆனந்தைப் பார்த்து.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 926:
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

பொருள்: 
உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, August 20, 2023

925. அண்ணனின் ஆச்சரியம்!

வீட்டுக்குள் நுழைந்ததும், பெட்டியைக் கீழே வைப்பதற்கு முன்பே, "அப்பா எப்படி இருக்காரு?" என்றான் ராமச்சந்திரன் பதட்டத்துடன்.

"இப்ப பரவாயில்லை. இன்னிக்கு சாயந்திரம் ஐ சி யூவிலேந்து சாதாரண ரூமுக்கு மாத்தறதா சொல்லி இருக்காங்க. நாலைஞ்சு நாள்ள டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்களாம்" என்றாள் அவன் தாய் மரகதம்.

"நான் துபாய்க்குப் போன சமயத்திலேயா இப்படி நடக்கணும்! லட்சுமணன் ஃபோன் பண்ணினதும் பதறிப் போயிட்டேன். உடனே கிளம்பி வர முடியல. அங்கே சில ஏற்பாடுகள் பண்ணிட்டுக் கிளம்பி வரதுக்குள்ள நாலைஞ்சு நாள் ஆயிடுச்சு."

"திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாரு. நான் உள்ளே இருந்தேன். லட்சுமணன் பக்கத்திலேயே இருந்திருக்கான். உடனே ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணி ஆஸ்பத்திரியில கொண்டு சேர்த்துட்டான். உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்ததால காப்பாத்த முடிஞ்சுது, கொஞ்சம் தாமதமாயிருந்தா கஷ்டமா இருந்திருக்கும்னு டாக்டர் சொன்னாரு" என்றாள் மரகதம்.

"அப்பாவைப் பார்த்துக்க ஆஸ்பத்திரியில யார் இருக்காங்க?" என்றான் ராமச்சந்திரன்.

"ஐசியூ- வில இருக்கறப்ப யாரும் துணைக்கு இருக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சாயந்திரம் அவரை சாதாரண ரூமுக்கு மாத்தினப்பறம் நாம போய்ப் பார்த்தாப் போதும்"

"அப்ப, லட்சுமணன் எங்கே?"

மரகதம் தலையை நிமிர்த்திப் பக்கத்திலிருந்த அறையைக் காட்டினாள்.

ராமச்சந்திரன் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினான்.

ராமச்சந்திரன் குளித்து. உணவருந்தி விட்டுத் தன் அறைக்குள் இருந்தபோது அங்கே லட்சுமணன் வந்தான்.

"எப்ப வந்தே?" என்றான் ராமச்சந்திரனைப் பார்த்து.

"ரெண்டு மணி நேரம் ஆகி இருக்கும். நீதான் அப்பாவை ஆஸ்பத்திரியில கொண்டு சேர்த்தியாமே! உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனதாலதான் அவரைக் காப்பாத்த முடிஞ்சுதுன்னு டாக்டர் சொன்னதா அம்மா சொன்னாங்க. நல்ல வேளை, நீ பக்கத்தில இருந்து உடனே செயல்பட்டதால அப்பாவைக் காப்பாத்த முடிஞ்சுது" என்றான் ராமச்சந்திரன்

"அப்பா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்ததும் ஒரு நிமிஷம் எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. அப்புறம்தான் உடனே ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணணும்னு தோணிச்சு!"

"ஆனா, நீ இப்படி செஞ்சது எனக்கு ஆச்சரியமா இருக்கு."

"என்ன ஆச்சரியம்?" என்றான் லட்சுமணன் புரியாமல்.

"நல்ல நினைவோட இருக்கறப்ப மயக்கம் வரணுங்கறதுக்காகக் காசு கொடுத்து மதுவை வாங்கிக் குடிக்கறவன் நீ! நான் ஊர்லேந்து வந்தப்ப நீ குடிச்சுட்டு போதையில மயங்கிப் படுத்துக்கிட்டுத்தான் இருந்த. அப்படி இருக்கறப்ப  மயக்கம் போட்டு விழுந்த அப்பா மயக்கத்திலேந்து விடுபடணுங்கறதுக்காக அவரை ஆம்பலன்ஸ்ல ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போனியே, அது ஆச்சரியம் இல்லையா?" என்றபடியே தம்பியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான் ராமச்சந்தரன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 925:
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

பொருள்: 
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காக போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Saturday, August 19, 2023

924. சென்ஸிடிவ் சதா!

"சட்டை போட்டுக்காம உடம்பைக் காட்டிக்கிட்டு  வீட்டு வாசல்ல உக்காந்துக்கிட்டிருக்கறவங்க, தெருவில நடந்து போறவங்க இவங்களையெல்லாம் பாத்தா எனக்கு அருவருப்பா இருக்கு!" என்றான் சதா.

"அவங்க எப்படியோ இருந்துட்டுப் போறாங்க. உனக்கென்னடா?" என்றேன் நான்.

"பொது இடத்தில உடம்பைக் காட்டிக்கிட்டிருக்கமேன்னு ஒரு வெட்க உணர்வு இருக்க வேண்டாமா?" என்றான் சதா கோபத்துடன், ஏதோ நானே சட்டை அணிந்து கொள்ளாமல் அவன் முன் நின்றது போல்!

"நீ ரொம்ப சென்ஸிடிவா இருக்கடா!" என்றேன் நான்.

நான் அலுவலகத்தில் இருந்தபோது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

சதாதான்!

"என்னடா சதா?" என்றேன் நான்.

ஆனால் தொலைபேசியில் கேட்ட குரல் வேறொருவருடையது.

"சார்! இங்கே ஒருத்தர் சாலை ஓரமா மயக்கம் போட்டு விழுந்திருக்காரு. குடிச்சிருப்பாருன்னு நினைக்கிறேன். அவர் ஃபோன்ல இருந்த கால் லிஸ்ட்ல உங்க பேரு முதல்ல இருந்ததால உங்களுக்கு கால் பண்றேன்" என்றார் .

அலுவலகத்தில் அனுமதி பெற்று அவர் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்தேன்.

சாலை ஓரத்தில் சதா படுத்திருந்தான். அப்போதுதான் மயக்கம் நீங்கியவனாக உடலை அசைத்துக் கொண்டிருந்தான்.

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் ஒரு சில விநாடிகள் நின்று அவனைப் பார்த்து விட்டுச் சென்றனர்.

நான் அவன் அருகில் சென்று பார்த்தபோது அவனுடைய வேட்டி அவிழ்ந்து பரந்து கிடக்க உள்ளாடை தெரிய மல்லாந்து படுத்துக் கிடந்தான்.

நான் அருகில் சென்றதும் என்னைப் பார்த்து, "என்னைக் கொஞ்சம் கையைப் பிடிச்சுத் தூக்கி விடுடா!" என்றான்.

தன் வேட்டி அவிழ்ந்திருப்பதை அறியாமலோ, அல்லது அதைப் பொருட்படுத்தாமலோ அவன் இருந்தது எனக்கு வேதனை அளித்தது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 924:
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

பொருள்: 
நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் திரும்பிக் கொள்வாள்..
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, August 13, 2023

923. மேகலா சொன்ன பொய்

செந்தில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பியதும் அவன் தாய் மேகலா எப்போதும் செய்வது போல் முன்னறையிலிருந்து உள்ளே சென்று விட்டாள்.

அரை மணி நேரம் கழித்து முன்னறைக்கு வந்த மேகலா, அங்கே அமர்ந்திருந்த செந்திலைப் பார்த்து, "சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். போட்டுக்கிட்டு சாப்பிடு!" என்றாள்.

செந்தில் மௌனமாகத் தலையாட்டினான்.

செந்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கே வந்த மேகலா, "இன்னிக்கு மாமா வந்திருந்தாரு!" என்றாள்.

மேகலா மாமா என்று குறிப்பிட்ட நபர் அவளுடைய சகோதரர் அல்ல. செந்திலின் தந்தை பூபதியின் நண்பர். பூபதி இறந்த பிறகு அவர்கள் குடும்பத்துக்கு உறுதுணையாக இருந்தவர். செந்தில் அவரை மாமா என்றுதான் அழைப்பான். மேகலா, செந்தில் இருவருக்குமே அவர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. 

"மாமாவா?" என்றான் செந்தில் வியப்புடன். "போயிட்டாரா? என்னைப் பாக்காம போக மாட்டாரே!"

"அவர் இருந்து உன்னைப் பார்த்துட்டுப் போறேன்னுதான் சொன்னாரு. நான்தான் நீ நைட் ஷிப்ட் பாத்துட்டுக் காலையிலதான் வருவேன்னு பொய் சொல்லி அவரை அனுப்பிட்டேன்."

"ஏம்மா அப்படிச் சொன்னே?"

"ஏண்டா, தினமும் நீ வீட்டுக்கு வரச்சே குடிச்சுட்டு  வர. குடிபோதையில உன்னைப் பார்க்க முடியாமதான், ஒரு அம்மாவா உனக்கு சோறு கூடப் பரிமாறாம, மேஜை மேல சாப்பாடு எடுத்து வச்சுட்டு உன்னையே போட்டுக்கிட்டு சாப்பிடச் சொல்றேன். அந்த நல்ல மனுஷன்  உன் அப்பா போனப்புறம் ஒரு அப்பாவா இருந்து உன்னைக் கனிவோடயும், கண்டிப்பாவும் வளர்த்தாரு. நீ ஒரு சின்னத் தப்பு பண்ணினாக் கூட உரிமையோட உன்னைக் கண்டிப்பாரு. உன் மேல அவ்வளவு அக்கறை அவருக்கு! நீ வீட்டுக்கு வரப்ப குடிபோதையில இருக்கறதை என்னாலேயே பார்க்க முடியலையே, அவர் பார்த்தா அவர் மனசு உடைஞ்சு போயிடாது? இந்த நிலைமையில உன்னை அவர் பார்க்கக் கூடாதுன்னுதான் அந்த நல்ல மனுஷனை சாப்பிட்டுட்டுப் போங்கன்னு கூடச் சொல்லாம சீக்கிரமே அனுப்பி வச்சுட்டேன்."

பேசி முடிக்கும்போதே வெடித்து வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், விம்மிக் கொண்டே உள்ளே சென்றாள் மேகலா.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 923:
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

பொருள்: 
பெற்ற தாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது என்னவாகும்?
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Friday, August 11, 2023

922. தனியே ஒருவன்

பரணிதரன் அந்த நிறுவனத்தில் ஒரு இளம் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நிறுவனத்தின் பயிற்சிக் கல்லூரியில் ஒரு மாதம் பயிற்சிக்கு அனுப்பப்பட்டான். 

அவனுடன் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது இளம் அதிகாரிகள் அந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

பயிற்சி முடியும் தறுவாயல் பயிற்சிக் கல்லூரியின் முதல்வர் அவர்களிடம் பேசினார்.

"ஒரு மாசமா எல்லாரும் பயிற்சியில கலந்துக்கிட்டீங்க. இங்கேயே தங்கி மெஸ்ஸில சாப்பிட்டீங்க. இந்த சாப்பாடு உங்களுக்கு அலுத்துப் போயிருக்கும். அதனால உங்க எல்லாருக்கும் நாளைக்கு ஹோட்டல் ரத்னாவில டின்னர் ஏற்பாடு செஞ்சிருக்கோம். இந்தப் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில மது அருந்த அனுமதி இல்ல. ஆனா நாளைக்கு நடக்கப் போற பார்ட்டியில டிரிங்கஸ் உண்டு!" என்று கூறி அவர்களைப் பார்த்துக் கண் சிமிட்டினார்.

பலரும் 'ஓ' என்று கூவி அவர் கூறியதை வரவேற்றனர்.

"என்னப்பா! எல்லாரும் பெக் மேல பெக்னு வெளுத்துக்கட்டிக்கிட்டிருக்காங்க. நீ மட்டும் கூல் டிரிங்க்கை வச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்க! பழக்கம் இல்லையா?"என்றார் பயிற்சிக் கல்லூரி முதல்வர் பணிதரனிடம் வந்து.

"இல்லை சார்!" என்றான் பரணிதரன் பணிவுடன்.

"பல பேர் இந்தப் பழக்கம் இல்லாதவங்களாத்தான் இருப்பாங்க. இங்கேதான் ஆரம்பிப்பாங்க. இந்த மாதிரி ஒரு நல்ல ஹோட்டல்ல உயர்தமான சரக்கு கிடைக்கறப்ப சும்மா விடுவாங்களா? இதையே இந்த ஹோட்டல்ல தனியா வந்து பணம் கொடுத்து சாப்பிட முடியுமா? பரவாயில்ல. கொஞ்சம் குடி" என்று ஒரு கோப்பையை அவனிடம் நீட்டினார் அவர்.

"மன்னிச்சுக்கங்க சார்! எனக்கு வேண்டாம்" என்றான் பரணிதரன் சங்கடத்துடன்.

"என்னப்பா நீ? நாளைக்கே நீ பெரிய அதிகாரியா ஆனப்பறம் நிறைய மீட்டிங் எல்லாம் அட்டெண்ட் பண்ண வேண்டி இருக்கும். மது இல்லாத மீட்டிங்கே கிடையாது. மரியாதைக்காகவாவது கொஞ்சம் குடிக்க வேண்டி இருக்கும். அதனால பழகிக்க. அளவோட குடிச்சா ஒண்ணும் ஆகாது."

"இல்லை சார். என்னோட கிராமத்தில யாரும் குடிக்கறதில்லேன்னு உறுதியா இருக்காங்க. கிராமத்தலேந்து நகரங்களுக்கு வேலைக்காகப் போனப்பறமும் நாங்க அப்படித்தான் இருக்கணும்னு எங்க ஊர்ப் பெரியவங்க எதிர்பார்ப்பாங்க. அப்படி நகரங்களுக்குப் போய் குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக்கிட்டவங்க எங்க் ஊர்ப் பெரியவங்க முகத்தல முழிக்க பயந்துகிட்டு கிராமத்துக்கே வரதில்லை."

"என்னப்பா நீ சொல்றது? நீயும் அது மாதிரி கிராமத்துக்குப் போகாம இருந்துட்டுப் போ. அப்படியே போனாலும் எனக்குக் குடிப்பழக்கம் இல்லேன்னு சொல்லிடு. அவங்களுக்குத் தெரியவா போகுது? உன் கிராமத்தில இருக்கற பெரியவங்களுக்காக நீ ஏன் பயப்படணும்?"

"மன்னிச்சுடுங்க சார்! எங்க ஊர்ப் பெரியவங்களை நான் ரொம்ப மதிக்கிறேன். நான் குடிக்காம இருந்தாதான் அவங்களுக்கு என் மேல ஒரு மதிப்பு இருக்கும். அந்த மதிப்பைநான் இழக்க விரும்பல!" என்றான் பரணிதரன் பணிவும் உறுதியும் கலந்த குரலில்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 922:
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.

பொருள்: 
மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

921. யாருடன் போட்டி?

"இந்தத் துறையில எதிரிகளை வீழ்த்தினாதான் முன்னுக்கு வர முடியும்" என்றார் முன்னணி நடிகர் வினோதின் ஆலோசகர் வசந்தன்.

"எதிரிகளை எப்படி வீழ்த்த முடியும்? எனக்குன்னு ரசிகர்கள் இருக்கிற மாதிரி மற்ற நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பாங்க. யாருக்கு அதிக பாபுலாரிடி இருக்கசுணும்கறதை நம்மால எப்படி முடிவு செய்ய முடியும்?" என்றார் வினோத்.

"சார்! இது பழைய காலம் இல்ல. ஒரு கட்சியையோ, தலைவரையோ தேர்தல்ல ஜெயிக்க வைக்கக் கூட உத்திகளைப் பயன்படுத்தற காலம். உங்க பாபுலாரிடி உங்களுக்கு எத்தனை ரசிகர்கள் இருக்காங்கங்கறதை மட்டும் பொருத்தது இல்ல. பொதுமக்கள் கிட்ட உங்களுக்கு எப்படிப்பட்ட இமேஜ் இருக்குங்கறதையும் பொருத்தது. டெக்னாலஜி, சோஷியல் மீடியா இதெல்லாம் வளர்ந்திருக்கிற இந்தக் காலத்தில ஒத்தரோட இமேஜைத் தூக்கி நிறுத்தவும் முடியும், கீழே போட்டு உடைக்கவும் முடியும்!"

"எனக்குப் புரியல. என்னவோ செய்யுங்க. ஆனா என்னோட எதிரிகள் என்னோட இமேஜை உடைக்கிற மாதிரி ஏதாவது செஞ்சுடப் போறாங்க!" என்றார் வினோத் சிரித்துக் கொண்டே.

"கவலைப்படாதீங்க. உங்களைப் பாதுகாக்கத்தான் நான் இருக்கேனே! சரி. நான் ஒரு பிளான் போட்டுக்கிட்டு வரேன். அதை நீங்க பார்த்துட்டு அப்ரூவ் பண்ணுங்க!" என்றார் வசந்தன்.

"உங்க பிளான் நல்லாத்தான் இருக்கு. ஆனா இதில நீங்க ரஞ்சித்தை இல்ல டார்கெட் பண்றீங்க? ரஞ்சித் வளர்ந்து வர ஒரு நடிகர். ஆனா எனக்கு முக்கியப் போட்டியா இருக்கறவரு விசித்ரன் தானே?" என்றார் வினோத்.

"இல்லை சார். விசித்ரன் உங்களுக்குப் போட்டி இல்லை. உங்களுக்கு மட்டும் இல்ல, வேற எந்த நடிகருக்கும் அவர் போட்டியா இருக்க மாட்டாரு!"

"என்ன சார் சொல்றீங்க? நானும் விசித்ரனும் கிட்டத்தட்ட ஒரே லெவல்ல இருக்கோம். எங்க ரெண்டு பேருக்குள்ளதான் போட்டின்னு சின்னக்  குழந்தைக்குக் கூடத் தெரியுமே!" என்றான் வினோத் சற்றே கோபத்துடன்.

"சார்! அது கடந்த காலத்தில. விசித்ரனுக்கு குடிப்பழக்கம் இருக்கு. அது வெளியில தெரியாது. ஆனா அது இப்ப அதிகமாயிடுச்சு. அவரால இனிமே ஃபீல்டில நிலைச்சு நிக்க முடியாது!"

"எப்படி அவ்வளவு நிச்சயமாச் சொல்றீங்க? விசித்ரன் ஒரு கடும் உழைப்பாளிங்கறது எனக்குத் தெரியும்!"

"எப்படிப்பட்ட உழைப்பாளியா இருந்தாலும் குடிப்பழக்கம் அவரை அழிச்சுடும். இப்பவே கொஞ்ச நாளா அவருக்குப் புதுப் படம் எதுவும் புக் ஆகல. நீங்க வேணும்னா ரெண்டு மூணு மாசம் பார்த்துட்டு அப்புறம் என்னைக் கூப்பிடுங்க. அதுக்கப்பறம் இந்த பிளானை நாம செயல்படுத்தலாம்!" என்று சொல்லி விடைபெற்றார் வசந்தன்.

அடுத்த சில வாரங்களிலேயே விசித்ரன் புக் செய்யப்பட்டிருந்த சில படங்கள்  கைவிடப்பட்டன என்ற செய்தி விநோதுக்குக் கிடைத்தது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

பொருள்: 
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

920. செல்வரத்தினத்தின் கவலை

"என்னோட ரெண்டு பையன்களுக்கும் சொத்துக்களைப் பிரிச்சுக் கொடுத்துட்டேன். என் பெரிய பையன் வேலைக்குப் போய் சம்பாதிக்கறான். ஆனா சின்னப் பையன் சொந்தமாத் தொழில் பண்றேன்னு இறங்கி இருக்கான். தொழில்ல நஷ்டம் வந்தா அவனோட சொத்துக்கள் அழிஞ்சுடுமோன்னு கவலையா இருக்கு" என்றார் செல்வரத்தினம்.

" நஷ்டம் வரும்னு ஏன் நினைக்கறே? அவன் தொழில் நல்லா நடக்கும். கவலைப்படாதே!" என்றார் அவருடைய நண்பர் காந்திராமன்.

"நான் பயந்தபடியே நடந்துடுச்சு. என் பெரிய பையன் சொத்துக்களை அடமானம் வச்சு தொழில் செய்யக் கடன் வாங்கி இருக்கான்" என்றார் செல்வரத்தினம் கவலையுடன்.

"தொழில் செய்யறவங்க கடன் வாங்கறது நடக்கறதுதானே! சொத்துக்களை அடமானம் வச்சதுக்காக நீ கவலைப்பட வேண்டியதில்லை. அது சரி. உன் ரெண்டாவது பையன் எப்படி இருக்கான்?"என்றார் காந்திராமன்.

"இருக்கான்" என்ற காந்திராமன், "அவன்தான் வேலைக்குப் போறானே! சமாளிச்சுப்பான்" என்றார் செல்வரத்தினம்.

தன் இரண்டாவது மகனைப் பற்றிப் பேசும்போதும் செல்வரத்தினம் ஏன் சுரத்தில்லாமல் பேசுகிறார் என்ற வியப்பு காந்திராமனுக்கு ஏற்பட்டது.

"போச்சு. எல்லாமே போச்சு. எவ்வளவு கஷ்டப்பட்டுச் சேர்த்த சொத்து! இப்படி அழிச்சுட்டானே!" என்றார் செல்வரத்தினம்.

"என்ன ஆச்சு? உன் பெரிய பையனுக்குத் தொழில்ல நஷ்டமா? அடமானம் வச்ச  சொத்து போயிடும் போல இருக்கா?" என்றார் காந்திராமன்.

"அவன் தொழில் நல்லாத்தான் நடந்துக்கிட்டிருக்கு. சொத்து அடமானத்திலதான் இருக்கு. ஆனா அதுக்கு ஒண்ணும் ஆபத்து இல்ல. ரெண்டாவது மகனுக்கு நான் கொடுத்த சொத்துக்கள்தான் போயிடுச்சு."

"ஏன்? அவன் வேலைக்குத்தானே போய்க்கிட்டிருக்கான்?"

"வேலைக்குத்தான் போய்க்கிட்டிருந்தான். ஆனா அவங்கிட்ட குடிப்பழக்கமும், சூதாடற பழக்கமும் இருந்தது. அப்பவே கவலைப்பட்டேன். போதாததுக்கு ஒரு விலைமாதுவோட சகவாசம் வேற ஏற்பட்டுடுச்சு. அதுக்கப்பறம்தான் நிலைமை மோசமாப் போச்சு. அவளுக்குக் கொடுத்த பணம், சூதாட்டத்தில இழந்த பணம், குடிக்கான செலவுன்னு பல வழிகள்ள பணம் போய், வருமானம் போதாம, கடன் வாங்கி, கடனை அடைக்க சொத்தையெல்லாம் வித்து, இந்தப் பழக்கங்களினால வேலையும் போயி இப்ப குடிக்கவோ, சூதாடவோ காசு இல்லை, காசு இல்லேன்னதும் அவளும் இவனை விரட்டி விட்டுட்டா. இப்ப பைத்தியம் பிடிச்சவன் மாதிரி வீட்டில உட்காந்திருக்கான், அவனோட சாப்பாட்டுச் செலவுக்கே நான்தான் பணம் கொடுக்கணும் போல இருக்கு. மூதேவியைத் தேடிப் போனான். மூதேவி இருக்கற இடத்தில லட்சுமி எப்படி இருப்பா? அதான் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயட்டா!"

குலுங்கக் குலுங்க அழ ஆரம்பித்தார் செல்வரத்தினம்.

காந்திராமன் ஆதரவுடன் அவர் தோளை அணைத்துக் கொண்டார். 

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)

குறள் 920:
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

பொருள்: 
உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பொது மகளிர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Thursday, August 10, 2023

919. நரகம் என்று ஒன்று இருக்கிறதா?

தன்னைப் பார்க்க வந்த அந்த மனிதரைத் தன் அறைக்குள் அழைத்தார் சுவாமிஜி.

"சாமி, உங்ககிட்ட தனியாப் பேசணும்" என்றார் வந்தவர்.

சுவாமிஜி தன் அறையிலிருந்த உதவியாளரை வெளியே போகச் சொல்லி சைகை காட்டினார்.

"இப்ப சொல்லுங்க!" என்றார் சுவாமிஜி.

"சாமி! என் பெயர் புருஷோத்தமன். நேத்து உங்க பேச்சைக் கேட்டேன். ரொம்ப நல்லா இருந்தது."

"இதைச் சொல்லத்தான் எங்கிட்ட தனியாப் பேசணும்னீங்களா?" என்றார் சுவாமிஜி சிரித்துக் கொண்டே.

"உங்க பேச்சில நீங்க சொர்க்கம், நரகம் பற்றிப் பேசினீங்க. நரகம்னு ஒண்ணு உண்மையவே இருக்கா?" என்றார் புருஷோத்தமன்.

"சொர்க்கம்னு ஒண்ணு உண்மையாவே இருக்கான்னு கேக்காம நரகத்தைப் பத்தி மட்டும் கேக்கறீங்களே!"

"சொர்க்கத்துக்குப் போகிற மாதிரி நல்ல காரியங்கள் செஞ்சிருந்தாதானே சாமி, சொர்க்கம்னு ஒண்ணு இருக்கான்னு கவலைப்படணும்?" என்றார் புருஷோத்தமன் பெருமூச்சுடன்.

"அப்படின்னா, நரகத்துக்குப் போகிற மாதிரியான காரியங்ளை செஞ்சிருக்கறதா நினைக்கறீங்க போல இருக்கு!"

புருஷோத்தமன் மௌனமாக இருந்தார்.

"நீங்க எங்கிட்ட எதையோ கேக்க வந்தீங்க. அதைக் கேக்க விரும்பினா கேக்கலாம்!" என்றார் சுவாமிஜி.

"சாமி! எனக்குக் கல்யாணம் ஆகிக் குடும்பம் இருக்கு. அப்படி இருந்தும் ஒரு விலைமகள் மேல ஆசைப்பட்டுக் கொஞ்ச காலம் அவ மயக்கத்திலேயே இருந்தேன்."

சுவாமிஜி கண்களை மூடிக் கொண்டார்.

"இதை நான் செஞ்சதுக்கு நான் நிச்சயம் நரகத்துக்குப் போவேன் இல்ல?"

"போக மாட்டீங்க!" என்றார் சுவாமிஜி.

"என்ன சாமி சொல்றீங்க? எப்படி இது? என் தப்பை உணர்ந்ததால எனக்குப் பாவத்திலேந்து விடுதலை கொடுத்திட்டீங்களா?" என்றார் புருஷோத்தமன் வியப்புடன்.

"பாவத்திலேந்து உங்களை விடுவிக்க நான் யார்? நீங்க நரகத்துக்குப் போக மாட்டீங்கன்னு ஏன் சொல்றேன்னா, நீங்க ஏற்கெனவே நரகத்தில இருந்துட்டு வந்துட்டீங்க!"

"எனக்குப் புரியலையே சாமி!"

"நீங்க விலைமகளோட இருந்தீங்களே, அதுவே நரகம்தான். நீங்க அதை சொர்க்கம்னு நினைச்சுப் போயிருந்தாலும் உண்மையில அது நரகம்தான். அப்புறம் இன்னொரு நரகம் எதுக்கு உங்களுக்கு?" என்றார் சுவாமிஜி கண்களைத் திறக்காமலே.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)

குறள் 919:
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

பொருள்: 
ஒழுக்க வரையரை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

918. ஒரே வழி!

"ஆறு மாசமா அந்த மயக்கு மோகினி வீடே கதின்னு கிடக்கறாரு. எப்பவாவதுதான் வீட்டுக்கு வராரு. குடும்பச் செலவுக்கு ஒழுங்காப் பணம் கொடுக்கறதில்லை. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல" என்று மீனாட்சி தன் தந்தை  மாணிக்கத்திடம் புலம்பினாள்.

"யாரு அந்த மயக்கு மோகினி?" என்றார் மாணிக்கம்

"அவதாம்ப்பா, ஊர்ல நிறைய பேரை மயக்கி வச்சிருக்காளே, அந்த நீலாதான்!"

"நான் போய் உன் புருஷனைப் பார்த்துப் பேசி வழிக்குக் கொண்டு வரேன்" என்றார் மாணிக்கம்.

இரண்டு நாட்கள் கழித்து மீனாட்சியின் வீட்டுக்கு வந்த மாணிக்கம், "நான் மாப்பிள்ளைகிட்ட பேசிட்டேன். அவரு தன் தப்பை உணர்ந்துட்டாரு. இனிமே எல்லாம் சரியாயிடும்!!" என்று சொல்லி விட்டுப் போனார்.

அதற்குப் பிறகு மீனாட்சியின் கணவன் கதிர் சில நாட்கள் வீட்டில் இருந்தான்.

'பரவாயில்லையே! மாமனார் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்துத் தன்னை மாத்திக்கிட்டாரே!' என்று நினைத்தாள் மீனாட்சி.

ஆனால் சில நாட்களுக்குப் பிறகு கதிர் மீண்டும் நீலாவின் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தான்.

மீனாட்சி மீண்டும் தன் தந்தையிடம் சென்று முறையிட்டாள்.

"நான் உன் புருஷன்கிட்ட பேசினப்ப அவரு எங்கிட்ட நல்லாத்தான் பேசினாரு. ஆனா திரும்பவும் அதே மாதிரி செய்யறாருன்னா அவரு அறிவு அவர் வசம் இல்லேன்னு அர்த்தம். அவரு பெண் மயக்கத்தில இருக்காரு. அவரா மனசு மாற மாட்டாரு. அதனால அந்த நீலாவே அவரை விரட்டி விட்டாதான் அவர் திரும்பி வருவாரு. நான் யார் மூலமாவது அந்த நீலாகிட்ட பேசிப் பாக்கறேன். பணம் கொடுத்தோ, மிரட்டியோ அவளை வழிக்குக் கொண்டு வரணும். அது ஒண்ணுதான் வழி!" என்றார் மாணிக்கம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)

குறள் 918:
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.

பொருள்: 
வஞ்சக எண்ணம் கொண்ட பொதுமகள் ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட மோகினி மயக்கம் என்று கூறுவார்கள்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

916. அதிர்ஷ்டக்காரன்!

அழகான தோற்றம், அதை எடுத்துக் காட்டும் உடை, பிற ஒப்பனைகள் ஆகியவற்றால் அந்த பார்ட்டியில் அந்தப் பெண் சற்றுத் தனியாகத் தெரிந்தாள். 

அவள் கவனத்தைக் கவரவும் அவளுடன் பேசவும் வயது வித்தியாசமின்றிப் பல ஆண்களும் ஆரவம் காட்டினர். 

ஆனால் அவள் ஒரு சிலரை மட்டுமே மதித்துப் பேசினாள். அவளைப் பார்த்துச் சிரித்த, அவளிடம் பேச முயன்ற பலரை அவள் லட்சியம் செய்யவில்லை.

"யாருடா அந்தப் பொண்ணு? ஏன் எல்லாரும் அவளை மொய்க்கறாங்க?" என்றான் விஜய் தன் நண்பன் காமேஷிடம்.

"அவளை நிறைய பார்ட்டியில பார்க்கலாம். பார்ட்டி முடிஞ்சதும் அவளைத் தனியாப் பார்க்கப் பல பேர் விரும்புவாங்க. ஆனா யாருக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கறதுன்னு அவதான் முடிவு செய்வா!" என்றான் காமேஷ் மெல்லிய குரலில்.

"கால் கேர்ளா?" என்றான் விஜய் அதிர்ச்சியுடன்.

"அவ தன்னை ஒரு ஈவன்ட் ஃபெசிலிடேடர்னு சொல்லிப்பா!"

"ஓ, நிகழ்ச்சிகளை அமைக்கிறவர்! புது மாதிரி பெயர்தான்!" என்றான் விஜய்.

றுநாள் விஜயைத் தொலைபேசியில் அழைத்தான் காமேஷ்.

"நேத்து ஒரு பொண்ணைப் பார்த்தோம் இல்ல?"

"ஆமாம். ஈவன்ட் ஃபெசிலிடேடர்!"

"தப்பா நினைக்காதே. அவகிட்ட எனக்கு ஒரு டேட் கிடைச்சது."

"கங்கிராசுலேஷன்ஸ்" என்றான் விஜய்.

"நல்ல வேளை! திட்டுவியோன்னு நினைச்சேன்... நேத்து அவ உன்னை கவனிச்சிருப்பா போலருக்கு. 'உங்களோட ஒத்தர் இருந்தாரே, அவர் யாரு?' ன்னு கேட்டா. அவளுக்கு உன் மேல ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கு போலருக்கு!" என்றான் காமேஷ் தயக்கத்துடன்.

"எப்படிப்பட்ட அதிர்ஷ்டக்காரன் நான்!" என்றான் விஜய்.

"இங்க பாரு விஜய். உன்னோட பிரின்சிபிள்ஸ் பத்தி எனக்குத் தெரியும். நாம பேச்சிலர்ஸ். இதெல்லாம் ஒரு இனிமையான  அனுபவம்தானே? அவகிட்ட அப்ளிகேஷன் போட்டுட்டு எத்தனையோ பேரு காத்துக்கிட்டிருக்காங்க. ஆனா அவளுக்கு உன் மேல இன்ட்ரஸ்ட் இருக்கு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கறதில என்ன தப்பு?"

"காமேஷ்! தேடி வந்த அதிர்ஷ்டத்தைப் புறம் தள்ற முட்டாள்னு வேணும்னா என்னை நினைச்சுக்க. பட் ஐ ஆம் நாட் இன்ட்ரஸ்டட்!" என்று கூறி ஃபோனை வைத்தான் விஜய்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)

குறள் 916:
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.

பொருள்: 
தன் அழகு மற்றும் முதலியவற்றால் செருக்குக் கொண்டு தம் புன்மையான இன்பத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

917 "அன்பின்" விலை

 தன் கணவன் துரையைப் பற்றி ஒரு விஷயத்தைச் சிலர் பூடகமாகச் சொன்னபோது மரகதம் துவக்கத்தில் அதை நம்பவில்லை.

பிறகு ஒருநாள் துரையிடமே கேட்டு விட்டாள்.

"ராத்திரி சாப்பாட்டுக்கப்புறம் வெளியே எங்கேயோ போயிட்டு லேட்டா வரீங்க. இது மாதிரி அடிக்கடி நடக்குது. எங்கே போறீங்கன்னு கேட்டா சொல்ல மாட்டேங்கறீங்க! ஊரில கண்டபடி பேசிக்கறாங்க."

"என்ன பேசிக்கறாங்க?" என்றான் துரை.

"அதை என் வாயால சொல்லணுமா?"

"மரகதம்! நான் சொல்றதைப் பொறுமையாக் கேளு. உன் மேல எனக்கு அன்பு இருக்கு. ஒருநாள் ஏதோ ஒரு ஆசையில அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போனேன். அவ தப்பான தொழில் பண்றவதான். ஆனா எங்கிட்ட ரொம்ப அன்பா இருக்கா. அதனாலதான் அவளைப் பார்க்க சில சமயம் போறேன்" என்றான் துரை சங்கடத்துடன்.

"இதைச் சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல?" என்றாள் மரகதம் கோபத்துடனும், அழுகையுடனும்.

"அதான் சொன்னேனே! முதல் தடவை போனு ஒரு சபலத்தினாலதான். ஆனா இப்ப போறதுக்குக் காரணம் அவ என் மேல அன்பு வச்சிருக்கறதுதான்."

"நான் உங்க மேல அன்பு வைக்கலையா, இல்லை என்னோட அன்பு உங்களுக்குப் பத்தலையா?"

"உன்னோடதானே குடித்தனம் நடத்தறேன். இதெல்லாம் வீட்டுச் சாப்பாடு சாப்பிடறவங்க சில சமயம் ஓட்டல்ல சாப்பிடற மாதிரிதான்" என்று சொல்லி விவாதத்தை முடித்தான் துரை.

"இப்ப எதுக்குடா உனக்கு ஒரு லட்ச ரூபாய்?" என்றான் துரையின் நண்பன் விமல்.

"அந்தப் பொண்ணு தொழிலை விட்டுட்டு என்னோட மட்டும் வாழறதாச் சொல்றா. ஆனா அவ தொழிலை வடணும்னா அவளோட ஏஜன்ட்டுக்கு ஒரு லட்ச ரூபா பணம் கொடுக்கணுமாம். நான் அவளுக்கு உதவறது என் மனைவிக்குத் தெரியக் கூடாது. அதனால ஆஃபீஸ்ல பி எஃப் லோன் போடிருக்கேன். அந்தப் பணம் வந்ததும் உன் பணத்தைக் கொடுத்துடறேன்" என்றான் துரை.

"பி எஃப் லோனை எப்படி அடைப்ப?"

"அதை அடைக்க வேண்டாம். நான் ரிடயர் ஆகறப்ப வர பணத்தில அதைக் கழிச்சுப்பாங்க. அதனால இது என் மனைவிக்கு எப்பவுமே தெரிய வராது."

"நல்லாத்தான் திட்டம் போடற. சரி. அவளை நீ எப்படிப் பராமரிப்ப? வீட்டு வாடகை, குடும்பச் செலவு எல்லாம் இருக்கே!"

"அவ இருக்கற குடிசை வீடு அவ சொந்த வீடுதான். அவ சாப்பாட்டுச் செலவுக்குத்தான் பணம் வேணும். அதைக் கூட 'ஏதாவது வேலைக்குப் போய் சம்பாதிச்சுக்கறேன், உங்களைக் கஷ்டப்படுத்த விரும்பல, உங்க அன்பு மட்டும்தான் வேணும்'னு சொல்றாடா அவ!" என்றான் துரை பெருமையுடன்.

"எனக்கென்னவோ இது சரியாப் படல. நீ கேக்கறதால பணம் கொடுக்கறேன். ஆனா நீ சொன்னபடி லோன் வந்ததும் பணத்தைத் திருப்பிக் கொடுத்துடணும்!" என்றான் விமல்.

"இந்தாடா நீ கொடுத்த பணம்" என்று பணத்தை விமலிடம் கொடுத்தான் துரை.

"என்ன புதுப் பொண்டாட்டியோட தனிக்குடித்தனம் ஆரமிச்சாச்சா? அவளை புதுப் பொண்டாட்டின்னு சொல்லலாம் இல்ல?" என்றான் விமல் சிரித்துக் கொண்டே.

சில விநாடிகள் மௌனமாக இருந்த துரை, "நான் ஏமாந்துட்டேண்டா. எங்கிட்ட ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக்கிட்டு அவ வேற ஒத்தனோட இந்த ஊரை விட்டே ஓடிட்டா" என்றான் ஏமாற்றத்துடன்.

"அடிப்பாவி! சொந்த வீட்டில இருக்கான்னு சொன்னியே!"

"அது பொய். அது வாடகை வீடுதானாம். வேற ஒத்தனோட ஊரை விட்டு ஓடறதுக்காக எங்கிட்ட பொய் சொல்லி ஒரு லட்ச ரூபாய் வாங்கிட்டா. ஏஜன்ட்டுக்குக் கொடுக்கணும்னு சொன்னதெல்லாம் பொய். ஏஜன்ட்னெல்லாம் யாருமே இல்லையாம். அவ எங்கிட்ட அன்பாப் பேசினதைக் கேட்டு ஏமாந்துட்டேன்."

"சரி போ. இந்த அளவோட விட்டாளே! இனிமேயாவது  உன் மனைவிக்கு உண்மையா நடந்துக்க!" என்றான் விமல்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)

குறள் 917:
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.

பொருள்: 
நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறு பொருளை விரும்பிக் கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

915. பட்டியலைத் திருத்துக!

"அமைச்சரே! சில அறிஞர்களை கௌரவிக்க முடிவு செய்து ஒரு பட்டியல் தயாரித்திருக்கிறோம் அல்லவா?" என்றார் அரசர்.

'தயாரித்தோமா? நீங்கள் தயாரித்த பட்டியல் அல்லவா அது?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட அமைச்சர், "ஆம் அரசே!" என்றார்.

"அவர்களை கௌரவித்துச் சிறப்பிக்க ஒரு நாள் குறித்து அவர்களை அவைக்கு வரச் சொல்லி அழைப்பு அனுப்பி விடுங்கள்!"

ஏதோ சொல்ல வாயெடுத்த அமைச்சர் தன் மனதை மாற்றிக் கொண்டு, "அப்படியே ஆகட்டும் அரசே!" என்றார்.

"வாருங்கள் ராஜகுருவே!" என்று ராஜகுருவை வரவேற்றார் அரசர்.

"சில அறிஞர்களை கௌரவித்துப் பரிசளிக்கத் தீர்மானித்திருக்கிறாயாமே! பாராட்டுக்கள்!" என்றார் ராஜகுரு.

"ஆமாம். ராஜகுருவே! இது என் நீண்ட நாள் விருப்பம்."

"நல்ல நோக்கம்தான். இந்தச் செய்தி அறிந்ததும் கௌரவிக்கப்படப் போகும் அறிஞர்களின் பட்டியலை அமைச்சரிடமிருந்து வாங்கிப் பார்த்தேன்."

"மன்னிக்க வேண்டும் ராஜகுருவே! நிகழ்ச்சிக்குத் தங்களை நேரில் வந்து அழைக்கும்போது பட்டியலைத் தங்களிடம் காட்டலாம் என்றிருந்தேன்" என்றார் அரசர் சங்கடத்துடன்.

"அதில் தவறில்லை. ஆனால் பட்டியலில்தான் ஒரு தவறு இருக்கிறது!"

"என்ன தவறு ராஜகுருவே?" 

"கௌரவிக்கப்படுபவர்கள் பட்டியலில் இரும்புருக்கிக் கவிஞரும் இருக்கிறார்.

"ஆம் ராஜகுருவே! அவர் பெரும் புலவர் அல்லவா? அவர் பாடலைக் கேட்டால் இரும்பு கூட உருகும் என்பதால்தானே, அவர் இரும்புருக்கிக் கவிஞர் என்று அழைக்கப்பட்டு அவருடைய இயற்பெயரே மறந்து விடும் அளவுக்கு அந்தப் பெயர் நிலைத்து விட்டது! அவர் ஒரு பெரிய அறிஞர் என்றும் அறியப்படுபவர் அல்லவா?"

"ஆனால் அவர் விலைமகளை நாடும் பழக்கம் உள்ளவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றல்லவா?"

"ராஜகுருவே! அது அவருடைய ஒழுக்கக் குறைவாக இருக்கலாம். ஆனால் நாம் அவரை கௌரவிப்பது அவருடைய புலமைக்காகத்தானே தவிர அவருடைய ஒழுக்கத்துக்காக இல்லையே!" என்றார் அரசர்.

"அரசே! நல்லறிவு உடையவர் விலைமகள் மூலம் கிடைக்கும் தவறான இன்பத்தை நாட மாட்டார். அப்படி நாடுபவரை நல்லறிவு உள்ளவர் என்று கூற முடியாது. அவருடைய பெயரைப் பட்டியலிலிருந்து நீக்குவதுதான் உனக்கு கௌரவம்!" என்றார் ராஜகுரு.

அரசர் மௌனமாக இருந்தார்.

"அரசே! ஒழுக்கமற்ற ஒருவருக்கு உயர்ந்த பரிசு கொடுத்தால் அந்தப் பரிசே மதிப்பிழந்து போவதுடன், உன்னையும் நாட்டு மக்கள் தூற்றுவார்கள். அமைச்சரே இதை உன்னிடம் சொல்லி நிறுத்த விரும்பினார். ஆனால் நீ தயாரித்த பட்டியலிலிருந்து ஒரு பெயரை நீக்க வேண்டும் என்று உன்னிடம் சொல்லத் தயங்கி அவர் என்னை அணுகினார். அமைச்சர் சொல்வது எப்போதும் சரியாக இருக்கும் என்பது நீ அறிந்ததுதானே?" என்றார் ராஜகுரு சிரித்தபடி.

"ராஜகுருவே! அமைச்சர் சொல்வது மட்டுமல்ல தாங்கள் சொல்வதும் சரியாகத்தான் இருக்கும் என்பது நான் அறியாததா? இப்படி ஒரு தவறை எப்படிச் செய்தேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். தாங்கள் கூறியபடி அவர் பெயரைப் பட்டியலிலுருந்து நீக்கி விடுகிறேன்" என்றார் அரசர்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)

குறள் 915:
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.

பொருள்: 
இயற்கையறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொதுமகளிர் மூலம் கிடைக்கும் புன்மையான நலத்தை (இன்பத்தை) நாட மாட்டார்..
குறள் 916 (விரைவில்)
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Wednesday, August 9, 2023

914. ஆக்டிவிஸ்ட் கோபால்

"அந்த ஆக்டிவிஸ்ட் கோபாலைப் பத்தித் தகவல் சேகரிக்கச் சொன்னேனே, சேகரிச்சீங்களா?" என்றார் தொழிலதிபர் முருகவேல்.

"சேகரிச்சேன் சார். ரொம்ப எளிமையான மனுஷன். வக்கீல் தொழில் செய்யறாரு. மனைவியோட சின்னதா ஒரு வாடகை வீட்டில குடி இருக்காரு. பணவசதி இல்லாதவங்களுக்கு இலவச சட்ட உதவி செய்யறாரு. அதைத் தவிர சுற்றுச் சூழல் மாசு படறதை எதிர்த்து வழக்குப் போடறது, போராட்டம் நடத்தறது, இன்னும் பல சமூக சேவைகள்ள ஈடுபட்டிருக்காரு. சுமாரான வருமானம்தான். ஆனா ரொம்ப நேர்மையானவரு. பணத்தால விலைக்கு வாங்க முடியாது" என்றார் டிடெக்டிவ் ஏஜன்சி உரிமையாளர் சரண்ராஜ்.

"எங்க தொழிற்சாலைக்கு எதிரா நிறைய போராட்டம் பண்றான். அவனை எப்படியாவது வழிக்குக் கொண்டு வணும். பணத்தால முடியாதுன்னு சொல்றீங்களே!" என்றார் முருகவேல் ஏமாற்றத்துடன்.

"வேற ஏதாவது வழி இருக்கான்னு பாக்கறேன்" என்றார் சரண்ராஜ், யோசித்தபடியே.

ன்னுடன் போராட்டத்தில் ஈடுபட வந்திருந்த சரளாவை ஆரம்பத்தில் கோபால் பொருட்படுத்தாவிட்டாலும் அவளுடைய உற்சாகம், ஈடுபாடு இவற்றால் ஈர்க்கப்பட்டு அவளுடன் சற்று நெருக்கமாகப் பழகினான்.

அடுத்த நாள் நடக்க வேண்டிய போராட்டம் பற்றி ஒருநாள் இரவு இருவரும் கோபாலின் அலுவலகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, சரளா திடீரென்று எழுந்து கதவைச் சாத்தி விட்டு கோபாலை அணைத்துக் கொண்டாள்.

"என்ன இது? விடுங்க!" என்று சரளாவிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான் கோபால்.

"ஒரு பக்கம் வேலை, மறுபக்கம் போராட்டம்னு கஷ்டப்பட்டு உழைக்கிறீங்க. உங்களுக்கு ஒரு ரிலாக்சேஷன் வேணாமா?" என்றாள் சரளா அவன் கைகளைப் பற்றியபடி.

அவள் கையை விலக்கிய கோபால், "உங்க மேல எனக்கு ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தது. இப்ப நீங்க நடந்துக்கறது அதை உறுதிப்படுத்தற மாதிரி இருக்கு. நான் அப்படிப்பட்ட ஆளு இல்ல. நீங்க போகலாம்!" என்று கூறி அறைக் கதவைத் திறந்தான்.

"சாரி சார். நான் எத்தனையோ பேரை மயக்கி இருக்கேன். ஆனா கோபால் விஷயத்தில நான் தோத்துட்டேன்!" என்றாள் சரளா, சரண்ராஜிடம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)

குறள் 914:
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.

பொருள்: 
அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...